தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 17- நம்பிக்கை தரும் மனிதர்கள் 03.



பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.

ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.

வீணாகும் திறமைகள் (Wasted Talent – Musings of an Autistic) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிருஷ்ணா நாராயணன் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெற்றோரின் மகனாக 1971ல் பாஸ்டனில் பிறந்தார்.


கிருஷ்ணா எழுதிய “wasted talent” நூலில் முகப்பு

பொதுவாக இன்று குழந்தை நல மருத்துவர்களிடம் போய், பேச்சும் வரவில்லை, அழைப்புக்கு திரும்பாமல் குழந்தை இருக்கிறது என்றால் காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கலாம் என்று காது மருத்துவர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரும் நன்கு பரிசோதனைகள் செய்துவிட்டு, ஒன்றுமில்லை என்றோ அல்லது ஏதேனும் மிஷின் மாட்டியோ அனுப்பி வைத்து விடுவார். ஒன்றுமில்லை என அனுப்பி விட்டால்; ஏன் குழந்தை திரும்புவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடவேண்டியதிருக்கும். காதுகேட்கும் கருவியை பொருத்திவிட்டால் கேட்கும் காதுக்குமேல் இன்னொரு கருவி. அடுத்த தெருவில் பேசிக்கொள்வது தொடங்கி அடுத்த ஊரில் பேசிக்கொள்வது வரை எல்லாம் கேட்கத்தொடங்கிவிடும் என்று எண்ணவேண்டாம். மண்டைக்குள் குடைச்சல் அதிகமாகி தலைவலி ஏற்படுத்தும்; குழந்தையின் காது+மனநிலை மேலும் பாதிக்கப்படலாம்.

கிருஷ்ணா நாராயணன்


இன்றைய நிலையே இப்படி என்றால் நாற்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒன்னரை வயது வரை பேசாத கிருஷ்ணாவை ஆரம்பத்தில் சோதித்த மருத்துவர்கள் அவர் காது கேட்கும் திறனற்றவர் என்றே நினைத்தனர். ஆனால் தொலைபேசி மணி போன்ற சத்தங்களைக் கேட்டு குழந்தை திரும்புவதைக் கண்டிருந்த அவரது அம்மா இக்கூற்றை நம்பாமல் தன் தேடலைத் தொடர்ந்தார்.

நான்காவது வயதில் பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கிருஷ்ணாவுக்கு ஆட்டிசம் என்பது உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணாவின் இசை ஆர்வத்தை கண்டுகொண்ட அவரது அம்மா இசையை அவருக்கான முக்கிய நிவாரணியாக பயன்படுத்த ஆரம்பித்தார். அதே போல மகனது இலக்கிய ஆர்வத்தையும் புரிந்து கொண்டு தொடர்ந்து புத்தகங்களை வாசித்துக் காண்பிப்பதையும் பழக்கமாக்கினார். தனது தாயின் இடையறாத முயற்சிகள், ஆயுர்வேத சிகிச்சைகள், கணித ஆர்வம் போன்றவற்றின் மூலம் ஆட்டிசத்தின் பாதிப்பில் முழுமையாக மூழ்கி விடாமல் மீண்டு வந்த கிருஷ்ணா தனது 24வது வயதில் தன் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ந்து எழுதியும் வருகிறார். கிருஷ்ணாவின் அடுத்த நூல் வரும் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் வைத்து வெளியிடப்பட உள்ளது.

தொடர்புடைய சுட்டிகள்:-

கிருஷ்ணாவின் நூலின் கொஞ்சம் இங்கே இருக்கிறது



தொடரும் 

நன்றி : http://blog.balabharathi.net/?page_id=25

Comments