பார்த்திபன் கனவு 34 - புதினம் -இரண்டாம் பாகம்- அத்தியாயம் 24- மாரப்பனின் மனக் கலக்கம்.






பொன்னனையும் வள்ளியையும் நள்ளிரவில் மாரப்பபூபதி தொடர்ந்துபோன காரணம் என்ன? இதை அறிந்து கொள்வதற்கு நாம் மறுபடியும் அன்று சாயங்கால நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்.

சக்கரவர்த்தியின் சந்நிதியிலிருந்து வெளியேறியபோது மாரப்பன் அளவில்லாத மனச்சோர்வு கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்திற்காகத் தான் செய்த சேவையெல்லாம் இவ்விதம் பிரதிபலன் இல்லாமற் போகும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. பார்த்திபன் போர்க்களத்தில் மாண்டு ஏறக்குறைய ஏழு வருஷமாயிற்று. அந்தப் போரில் தான் கலந்து கொள்ள மறுத்ததற்காகவே உறையூர்ச் சிம்மாசனம் தனக்குக் கிடைக்குமென்று மாரப்பன் எதிர்பார்த்தான். அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால் அதிருப்தியோ, வெறுப்போ கொண்டதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை.

பல்லவ சாம்ராஜ்யத்தில் அவனுடைய பக்தி குன்றியதாகவும் தெரியப்படுத்தவில்லை. தன்னுடைய உண்மையான சாம்ராஜ்ய சேவைக்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அவன் வருஷக்கணக்காகக் காத்திருந்தான். கடைசியாக, விக்கிரமனுடைய சதியாலோசனையைப்பற்றி அவனுக்குச் செய்தி தெரிந்தபோது, தளபதி அச்சுதவர்மரிடம் உடனே சென்று தெரியப்படுத்தினான். அதன் பலனாக அச்சதியாலோசனையை முளையிலேயே கிள்ளி எறிவது சாத்தியமாயிற்று. இதன் பிறகாவது, தன்னுடைய சேவைக்குத் தகுந்த சன்மானம் கிடைக்குமென்று அவன் நிச்சயமாக நம்பியிருந்தான். அவன் ஆசைப்பட்டது பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு உறையூரை ஆளும் பதவிதான். இது உடனே கிடைக்காவிட்டாலும், தான் முன்னர் வகித்து வந்த சேனாதிபதி பதவியாவது கிடைக்குமென்று நினைத்தான். ஆனால், நடந்தது என்ன? சக்கரவர்த்தி தன் பேரிலேயே சந்தேகம் கொள்ளலாயிற்று. கேவலம் ஒரு ஓடக்காரன் - அவன் பெண்டாட்டி - இவர்கள் முன்னிலையில் சோழ நாட்டுப் பட்டத்துக்கு உரியவனான தான் அவமானப்பட நேர்ந்தது.

இதை நினைத்தபோது மாரப்பனுடைய நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. "இது என்ன உலகம்? இது என்ன வாழ்வு?" என்று உலகத்தையே வெறுக்கும் வழியில் மனம் திரும்பிற்று. எங்கே போகிறோமென்ற சிந்தனையே இல்லாதவனாய்க் குதிரைபோன வழியே போக விட்டுக் கொண்டிருந்தான். அறிவுமிக்கப் பிராணியான குதிரை நம் எஜமானனுடைய மனநிலையை உணர்ந்து மந்த நடையுடன் யதேச்சையாகப் போய்க் கொண்டிருந்தது. உறையூரின் வீதிகளில் அங்குமிங்குமாக அது சிறிது நேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் காவேரிக் கரையை அடைந்தது. பிறகு காவேரிக்கரைச் சாலையோடு கிழக்குத் திக்கை நோக்கிச் செல்லலாயிற்று.

சூரியன் அஸ்தமித்தது, அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தியாதலால் மேற்குத் திசையில் நாலாம் பிறை தோன்றிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றி மினுக்கத் தொடங்கின. சற்று நேரத்துக்கெல்லாம் வானவெளி முழுவதிலும் கோடிக்கணக்கான வைரங்களை வாரி இறைத்ததுபோல் நட்சத்திரங்கள் பொறிந்து கிடந்தன. மாரப்பன் இந்த வான விசித்திரம் ஒன்றையும் கவனியாமல் ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அரைக்காத வழி இவ்விதம் போனபிறகு அவன் திடுக்கிட்டுச் சுயநினைவு வந்தவனாய் எங்கே போகிறோமென்று ஆராய்ந்தான். இதற்குள் நாலாம்பிறைச் சந்திரன் மேற்கு வானத்தின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டது. குதிரையைத் திருப்பி உறையூர்ப் பக்கம் செலுத்தினான்.

உறையூர்க் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே சிறிது தூரம் அவன் சென்றபோது, எதிரே அநேக தீவர்த்திகளுடனும், சங்கம் முதலிய வாத்திய முழக்கங்களுடனும் ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். கூட்டத்தின் மத்தியில் சிங்கக்கொடி பறந்ததைப் பார்த்தபோது, ஒருவேளை சக்கரவர்த்தி தன் பரிவாரங்களுடன் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்துக்குப் போகிறாரோ என்று நினைத்துச் சட்டென்று குதிரையிலிருந்து இறங்கிச் சாலை ஓரமாக அடக்க ஒடுக்கத்துடன் நின்றான். கூட்டம் அருகில் வந்தபோது அதில் சக்கரவர்த்தி இல்லையென்பது தெரிந்தது. தளபதி அச்சுதவர்மரும், அவருக்குப் பக்கத்தில் தலை மொட்டையடித்த ஒரு சாமியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சாமியார் திடகாத்திர தேகமுடையவராயும் முகத்தில் நல்ல தேஜஸ் உடையவராயுமிருந்தார். மாரப்பனுடைய மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் உதித்தது. "ஒரு வேளை இவர் தான் அந்த ஜடா மகுடதாரியான கபட சந்நியாசியோ?" என்று நினைத்தான். அதே சமயத்தில் தளபதி அச்சுதவர்மரின் பார்வை மாரப்ப பூபதியின் மீது விழுந்தது. அவர் பூபதியைச் சமிக்ஞையினால் அருகில் அழைத்து, பக்கத்திலிருந்த சிறுத்தொண்டரை நோக்கி, "அடிகளே! இவன் யார் தெரிகிறதா? பார்த்திப மகாராஜாவின் சகோதரன் மாரப்ப பூபதி!" என்றார்.

சிறுத்தொண்டர் மாரப்பனை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், "அப்படியா? வெகு காலத்துக்கு முன்னால், மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் இவனைப் பார்த்திருக்கிறேன். இப்போது அடையாளம் தெரியவில்லை" என்றார்.

"விக்கிரமனுடைய சதியாலோசனையைக் கண்டுபிடித்துச் சொன்னது பூபதிதான். ஆனாலும் சக்கரவர்த்திக்கு ஏனோ இவன் பேரில் தயவு பிறக்கவில்லை!" என்றார் அச்சுதவர்மர்.

சிறுத்தொண்டர் இதற்கு ஒன்றும் சொல்லாமல் மறுபடியும் ஒரு தடவை மாரப்பனை ஏற இறங்கப் பார்த்து விட்டு மேலே போகத் தொடங்கினார்.

அவர்கள் இருவரும் அப்பால் சென்றதும், சேடிகள் சூழ்ந்த பல்லக்கு பின்னால் வருவதைப் பார்த்து, சக்கரவர்த்தியின் திருமகளாயிருக்கலாம் என்று மாரப்பன் ஊகித்துக் கொண்டு அவசரமாய் விலகிச் செல்லத் தொடங்கினான். ஆனால் என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் பல்லக்கு நின்றது.

"பூபதி!" என்று மதுரமான பெண் குரலில் அழைப்பது கேட்டது. மாரப்பன் திரும்பிப் பார்த்தபோது, பல்லக்கில் பூரண சந்திரனை ஒத்த முககாந்தியுடைய குந்தவி தேவியும், அவளருகே சிவபக்தியே உருவங்கொண்டது போன்ற மூதாட்டி ஒருவரும் இருக்கக் கண்டான். குந்தவி தேவிதான் தன்னை அழைக்கிறாள் என்று அறிந்ததும், மாரப்பனுடைய உள்ளத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கின. ஒரு பக்கம் சங்கோசம் பிடுங்கித் தின்றது. பல்லக்கின் அருகில் சென்று, குந்தவியைப் பார்க்க விரும்பினானாயினும் கூச்சத்தினால் நிமிர்ந்து பார்க்க முடியாதவனாய்த் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

"பூபதி! இன்று என் தந்தை உன்னிடம் ரொம்பக் கடுமையாயிருந்துவிட்டார். அதற்காக நீ வருத்தப்பட வேண்டாம். உன் பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது அந்தப் போலி வேஷதாரிச் சிவனடியாரை மட்டும் நீ கண்டுபிடித்துவிடு. அப்புறம் உன்னுடைய கட்சியில் நான் இருப்பேன்!" என்று குந்தவிதேவி அனுதாபம் நிறைந்த குரலில் கூறியபோது, மாரப்பனுக்கு ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை வர்ணிக்கத் தரமன்று, அதல பாதாளத்திலிருந்து ஒரே அடியாகச் சொர்க்கத்துக்கு வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. சிறிது தலைநிமிர்ந்து, "அம்மணி! தங்களுடைய சித்தம் என்னுடைய பாக்கியம். அந்தப் போலிச் சிவனடியாரைக் கண்டுபிடிக்காமல் இனி மேல் நான் ஊணுறக்கம் கொள்ள மாட்டேன்" என்றான்.

"சந்தோஷம், கண்டுபிடித்ததும் எனக்கு உடனே தெரியப்படுத்து" என்று சொல்லிவிட்டு, குந்தவி தேவி பல்லக்கை மேலே செல்லும்படி கட்டளையிட்டாள்.

பல்லக்கும் பரிவாரங்களும் போன பிறகு மாரப்பன் சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றான். தான் இப்போது கண்டதும் கேட்டதும் கனவல்ல என்று நிச்சயம் செய்து கொண்டபின், பக்கத்தில் வந்து நின்ற புரவியின் மீது மறுபடியும் ஏறிக்கொண்டான். அச்சுதவர்மருடன் சென்ற மொட்டைச் சாமியாரின் நினைவு வந்தது. வாதாபிப் போரில் வென்ற தளபதி பரஞ்சோதியைப் பற்றியும் மாரப்பன் கேள்விப்பட்டதுண்டு. அந்நாளில் அவர் பார்த்திப மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என்றும் கேட்டிருந்தான். எனவே, அவர் தான் அவ்வப்போது ஜடாமகுட வேஷம் பூண்ட சிவனடியாராய்த் தோன்றி நடித்து வந்தாரோ, என்னவோ? ஏன் இருக்கக்கூடாது? - இதன் உண்மையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால், எப்படி? பொன்னனையும் வள்ளியையும் சிநேகம் செய்து கொண்டு அவர்கள் மூலமாகத்தான் இதை நிறைவேற்ற வேண்டும். உடனே மாரப்ப பூபதிக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. தான் அன்று தோணித் துறைக்குப் போகும் காவேரிக் கரைச் சாலையில் வெகு தூரம் போய் விட்டுத் திரும்பியிருந்தும், போகும்போதோ, வரும் போதோ பொன்னனையும் வள்ளியையும் சந்திக்கவில்லை. ஆகவே, அவர்கள் இன்றிரவு உறையூரில் தான் இருப்பார்கள். எங்கே தங்கியிருப்பார்கள்? வள்ளியின் பாட்டன் வீட்டில் ஒரு வேளை இருக்கலாமல்லவா!...

உடனே மாரப்பன் விரைவாகக் குதிரையை விட்டுக் கொண்டு சென்று தன் மாளிகையை அடைந்தான். வாசலில் நின்ற ஏவலாளர்களிடம் குதிரையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து கால்நடையாகக் கிளம்பினான். இரவு சாப்பாட்டைப் பற்றிய நினைவே அவனுக்கில்லை. பசிதாகமெல்லாம் மறந்து போய்விட்டது. பொன்னனையும் வள்ளியையும் இன்றிரவு சந்திக்க வேண்டுமென்னும் ஆவலினால் உறையூர்க் கம்மாளத்தெருவை நோக்கி நடக்கலுற்றான்.

அப்போது அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். உறையூரின் வீதிகளில் ஜனங்களின் நடமாட்டம் பெரிதும் குறைந்திருந்தது. சந்தடி அநேகமாக அடங்கிவிட்டது. ஆலயங்களுக்குப் போய்விட்டுத் திரும்புவோர், தெருக்கூத்துப் பார்க்கச் செல்வோர், இராப் பிச்சைக்காரர் ஆகியவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாய்க் காணப்பட்டனர். எங்கேயோ வெகுதூரத்தில், "அகோ வாரும் பிள்ளாய்! அரிச்சந்திர மகாராஜனே!" என்று விசுவாமித்திர முனிவர் அலறிக் கொண்டிருந்தார்!

மாரப்பன் வீதிகளின் ஓரமாகத் தன்னை யாரும் கவனிக்காதபடி நடந்து விரைந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கம்மாளத் தெருவை நெருங்கிய போது திடீரென்று பேய் பிசாசைக் கண்டவன் போல் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டான். ஏனென்றால் கம்மாளத்தெரு திரும்பும் முனையில் அப்போதுதான் அணைந்து கொண்டிருந்த அகல்விளக்கின் வெளிச்சத்தில் அவன் ஒரு உருவத்தைக் கண்டான். அது, அவனுடைய உள்ளத்தில் நிலை பெற்றிருந்த சிவனடியாரின் உருவந்தான். அந்த உருவத்தை அவன் பார்த்த அதே சமயத்தில் விளக்கு அணைந்து போய்விட்டது. திகைத்து நின்ற மாரப்ப பூபதி மறுகணம் அந்த உருவம் நின்ற இடத்தை நோக்கி விரைந்து ஓடினான். ஆகா! அந்தப் பொல்லாத வஞ்சக வேஷதாரியை அன்றிரவு கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தித் திருமகளின் முன்னால் நிறுத்தினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அந்த ஆவலுடனே அவன் ஓடினான். ஆனால், விளக்குத் தூணின் அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒருவரையும் காணவில்லை. அந்த இடத்திலிருந்த நான்கு திசையிலும் நாலு வீதிகள் போய்க் கொண்டிருந்தன. அவற்றுள் எந்த வீதி வழியாகச் சிவனடியார் போயிருக்கக்கூடுமென்று தீர்மானிக்க முடியவில்லை.

மாரப்ப பூபதியின் உள்ளத்தில் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. ஆம்; தான் பார்த்த உருவம் அந்தச் சிவனடியாராயிருக்கும் பட்சத்தில், அவர் பொன்னனையும் வள்ளியையும் பார்ப்பதற்குத்தான் அங்கு வந்திருக்க வேண்டும். வீரபத்திர ஆச்சாரியின் வீட்டுக்குத்தான் போயிருப்பார். இன்னும் என்ன சதியாலோசனைக்காக அவர்கள் அங்கே கூடுகிறார்களோ, என்னவோ தெரியவில்லை. நரசிம்மவர்ம சக்கரவர்த்தி உறையூருக்கு வந்திருக்கும் சமயத்தில் இந்தச் சதியாலோசனை நடக்கிறது! ஆகா! குற்றம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் போதே மூன்று பேரையும் கையும் மெய்யுமாய்ப் பிடித்துவிட முடியுமானால்? சக்கரவர்த்திக்குத் தன் பேரில் அகாரணமாக ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடலாமல்லவா? பிறகு....

இப்படி சிந்தித்துக் கொண்டே மரப்பன் வீரபத்திர ஆச்சாரியின் வீட்டை நெருங்கியபோது, இன்னொரு அதிசயம் அவனுக்கு அங்கே காத்திருந்தது. அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு இருவர் வெளியில் வந்தார்கள். மாரப்பன் ஒரு வீட்டுத் திண்ணை ஓரத்தில் தூண் மறைவில் நின்றபடி உற்றுக் கவனித்தான். வெளியே வந்தவர்கள் பொன்னனும் வள்ளியுந்தான். வள்ளி இடையில் வைத்திருந்த விளக்கைச் சேலைத் தலைப்பினால் மறைத்து எடுத்துக் கொண்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரும் வீரபத்திர ஆச்சாரி வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சந்தின் வழியாக வடக்கு நோக்கிச் சென்றார்கள்.

"இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; இவர்கள் ஏதோ பெரிய சதித்தொழில் இன்று செய்யப்போகிறார்கள். இதில் அந்தச் சிவனடியாரும் சேர்ந்திருக்கிறார். அவர் முன்னால் போயிருக்கும் இடத்துக்கு இவர்கள் பின்தொடர்ந்து போகிறார்கள்" என்று மாரப்பன் தீர்மானித்துக் கொண்டான். சொல்ல முடியாத பரபரப்பும் உற்சாகமும் அவனை ஒரு புது மனிதனாகச் செய்துவிட்டன. பொன்னனும் வள்ளியும் போன வழியே, அவர்கள் கண்ணுக்கு மறையாத தூரத்தில் மாரப்பன் சிறிதும் ஓசை கேட்காதபடி நடந்து போனான்.

அந்தச் சந்து வழியே பொன்னனும் வள்ளியும் சென்று காவேரிக் கரையை அடைந்தார்கள். அங்கே ஒரு மரத்தின் வேரில் கட்டிப் போட்டிருந்த படகில் வள்ளி ஏறி உட்கார்ந்து கொண்டாள். கூடையைப் படகின் அடியில் வைத்துப் பத்திரமாய் மூடிக்கொண்டாள். சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தபடியே பொன்னன் படகை இழுத்துக்கொண்டு போய் அரண்மனைத் தோட்டத்தின் மதிலை அடைந்ததும் படகை அங்கேயே கட்டிப் போட்டுவிட்டு, வள்ளியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தான்.

அந்த தோட்டம், பார்த்திப மகாராஜா வாழ்ந்த பழைய சோழ வம்சத்து அரண்மனைத் தோட்டம் என்பதை மாரப்பன் அறிந்திருந்தான். அந்த அரண்மனையில் அச்சமயம் யாருமில்லை. அது சக்கரவர்த்தியின் கட்டளையினால் பூட்டிக் கிடந்தது - என்பதும் அவனுக்குத் தெரிந்ததுதான். ஆகவே, பொன்னனும் வள்ளியும் அந்த அரண்மனைக்குள் கொல்லைப்புரத்தின் வழியாக நுழைவது ஏதோ கெட்ட காரியத்திற்காகத்தான் என்றும், அநேகமாக அந்த அரண்மனைக்குள் அச்சமயம் சிவனடியார் இருக்கலாமென்றும் மாரப்பபூபதி ஊகித்தான். இன்னும் ஒரு பயங்கரமான - விபரீதமான சந்தேகம் அச்சமயம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது. பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்த செய்தியே ஒருசமயம் பொய்யாயிருக்குமோ? அவர் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி, பிறகு இப்படிச் சிவனடியாரின் வேஷத்தில் வந்து விபரீதமான காரியங்களையெல்லாம் செய்து வருகிறாரோ? - என்று நினைத்தான். எப்படியிருந்தாலும் இன்று இரவு எல்லா மர்மங்களும் வெளியாகி விடப் போகின்றன! இந்த நம்பிக்கையுடன் அவன் மதிற்கதவின் வெளிப்புற நாதாங்கியைப் போட்டுவிட்டு, பொன்னன் திரும்பி வருவதற்குள் தன்னுடைய ஆட்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அங்கே வந்து விடுவது என்ற தீர்மானத்துடன் விரைந்து சென்றான்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html

Comments