தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 20 -ஆட்டிஸம் எனும் குறைபாடு.


faces-550786_1280

ஐக்கிய நாட்டு சபை 2007-ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கோடிக்கணக்கானோரைப் பாதிக்கும் இந்தக் குறைபாட்டைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும், இந்தக் குறைபாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படியும் உலக நாடுகளை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.

அன்றைய தினம் சிகாகோ, நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களின் சரித்திரப் புகழ் பெற்ற கட்டடங்கள், புராதனச் சின்னங்களில் நீல நிற விளக்குகள் ஏற்றப்படுகின்றன. தில்லியில் ஹுமாயூன் கல்லறை, குதுப்மினார் போன்ற இடங்களில் நீல நிற விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் ஆட்டிஸத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன.

ஆட்டிஸம் என்பது பிறவியிலேயே தோன்றி, பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மூளை சம்பந்தப்பட்ட குறைபாடு. ஆட்டிஸத்தின் அறிகுறிகள் பிறந்த உடனேயே காணப்படலாம் அல்லது சிறிது காலம் சாதாரண வளர்ச்சிக்குப் பிறகு தோன்ற ஆரம்பிக்கலாம்.

ஆனால், குழந்தைக்கு இரண்டு அல்லது இரண்டரை வயதுக்குள் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தாங்கள் கேட்பதையும், காண்பதையும் சரிவரப் புரிந்து கொள்ளும் சக்தியையும், பெறும் தகவல்களை மூளை ஜீரணிக்கும் விதத்தையும் பாதிக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு இது. ஆட்டிஸத்தை spectrum disorder என்கிறார்கள்.

தீவிர கற்கும் பிரச்னைகள் உள்ளவர்களிலிருந்து, நல்ல அறிவாற்றல் உள்ளவர்கள் வரையில் ஆட்டிஸத்தின் பாதிப்பு காணப்படலாம். பாதிப்பின் தீவிரத்திலும் வேறுபாடுகள் இருக்கலாம். சிலர் அறவே பேசமாட்டார்கள். சிலர் ஓரிரு வார்த்தைகளை அதுவும் தங்களது தேவைகளைத் தெரிவிக்க மட்டுமே பேசுவார்கள்.

சில குழந்தைகள் சாத்வீகமாகவும், சிலர் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல், முரட்டுத்தனமாகச் செயல்படுதல் போன்ற இயல்பு உடையவர்களாகவும் காணப்படுவார்கள். ஆட்டிஸத்தால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் எண்பது விழுக்காடு ஆண்களே.

ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே உள்ள பொதுவான பிரச்னைகள் மூன்று. மொழி மற்றும் பேசும் திறன், மற்றவர்களுடன் பேசிப் பழகி சமூக உறவுகளை வளர்த்துக் கொள்வது, சிந்தனை மற்றும் செயல்களில் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு கஷ்டம் இருக்கும்.

ஆட்டிஸம் உள்ளவர்களில் முக்கால்வாசி பேருக்கு நிச்சயமாக கல்வி கற்பது பிரச்னையாக இருக்கும். ஆட்டிஸத்துக்கு நரம்பியல், உயிரியல் சம்பந்தப்பட்ட காரணங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட காரணங்கள் என்று இன்னமும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆட்டிஸம் என்ற குறைபாடு தனியாகவோ அல்லது குன்றிய மன வளர்ச்சி, cerebral palsy போன்ற மற்ற குறைகளுடன் இணைந்தோ காணப்படலாம். ஆட்டிஸம் உள்ள பெரும்பாலானோருக்கு காக்காய் வலிப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நமது நாட்டில் குழந்தைக்கு ஆட்டிஸம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்குள் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது. குழந்தையின் வினோதமான நடவடிக்கைகளையும், மொழி வளர்ச்சி இல்லாமையையும், மற்ற குழந்தைகளுடன் விளையாடாததையும் கண்டு, தன் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் பலர்.

பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைவதற்குள்ளேயே ஆட்டிஸத்தின் பாதிப்பைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆட்டிஸம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்கான வசதிகள் நமது நாட்டில் பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன.

நமது நாட்டில் எத்தனை பேருக்கு ஆட்டிஸத்தின் பாதிப்பு உள்ளது என்று துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. நோய்களை கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பதற்காகவும் அமெரிக்காவில் இயங்கும் Centre For Disease Control and Prevention (CDC) என்ற மையம் 68 பேரில் ஒருவருக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருக்கலாம் என்று கணித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் சுமார் 1.5 கோடி பேர் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆட்டிஸம் உள்ளது என்று தெரிந்த உடனேயே அக்குழந்தைக்கு பயிற்சியளிக்கத் தொடங்க வேண்டும்.

இளம் வயதிலேயே பயிற்சியளிக்கத் தொடங்கினால் நல்ல பலனை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆட்டிஸத்தின் பாதிப்பின் தீவிரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், பயிற்சியின் மூலம் எல்லா குழந்தைகளிடமும் முன்னேற்றம் காண முடியும்.

இந்தியாவில் ஆட்டிஸம் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்று தில்லி, சென்னை, கோயம்புத்தூர், கொல்கத்தா, மும்பை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், லக்னெள போன்ற நகரங்களில் சிறப்புப் பள்ளிகள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில், சென்னையில், வீ கேன், சங்கல்ப், ஸ்வபோதினி போன்ற மையங்களும், கோவையில் ஆட்டிஸம் கேர், யூ கேன் போன்றவையும், திருச்சியில் ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி போன்றவையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் பணியாற்றுகின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக தில்லியில் இயங்கி வரும் ஆக்ஷன் ஃபார் ஆட்டிஸம் (Action For Autism) என்ற அமைப்பு தேசிய மையமாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி, இளம் வயதினருக்காகத் தொழில் பயிற்சி, சிறப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆட்டிஸம் உள்ளதா என்று கண்டுபிடித்தல், பெற்றோர்களுக்குப் பயிற்சி போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

இந்த மையத்தின் நிபுணர்கள் உள்நாட்டில் மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளுக்கும் சென்று பெற்றோர்களுக்கும், சிறப்பு ஆசிரியர்களுக்கும் பயிலரங்குகள் நடத்துகிறார்கள்.

பயிற்சிகளின் மூலம் ஆட்டிஸத்தின் தீவிரத்தை ஓரளவு குறைக்கலாம் என்றாலும், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாகக் குணப்படுத்தவோ, அவர்களை அதிலிருந்து முழுமையாக மீட்கவோ முடியாது.

ஆட்டிஸம் உள்ளவர்களால் ஒரு நாளும் பிறர் தயவில்லாமல் தனியாக வாழ முடியாது. தொழில் கல்வி பெற்றாலும், பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் கூடிய சூழ்நிலையில் மட்டுமே இவர்களால் வேலை செய்ய முடியும். தங்கள் வாழ்நாள் முழுவதும் பிறரைச் சார்ந்து வாழ வேண்டியச் சூழ்நிலையில் இவர்கள் உள்ளனர்.

நமக்குப் பிறகு நமது பிள்ளைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்பது பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்னை. டேராடூன், ஹைதராபாத் போன்ற நகரங்களில் பெற்றோர், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சியால், ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புடன் கவனித்துக் கொள்ளும் இல்லங்கள் உருவாகி உள்ளன.

தில்லியில் ஆக்ஷன் ஃபார் ஆட்டிஸம், ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வதற்கான குழு இல்லங்களையும், அவர்கள் பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான பணி மையத்தையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆட்டிஸம் குறைபாட்டை ஏனைய குறைபாடுகளில் ஒன்றாக, இந்திய அரசை ஏற்றுக்கொள்ள வைக்க ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், ஆர்வலர்களும் பெரிதும் போராட வேண்டியிருந்தது.

1999-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்டிஸம், cerebral Palsy, குன்றிய மன வளர்ச்சி மற்றும் பல்வேறு குறைபாடுள்ளவர்களின் நலனுக்கான தேசிய அறக்கட்டளை மசோதாவில்தான், இந்திய அரசு முதல்முதலாக ஆட்டிஸத்தை தனிப்பட்ட ஒரு குறைபாடாக அங்கீகரித்தது.

இந்திய அரசின் இந்த தேசிய அறக்கட்டளை நாடு முழுவதும் ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு குழு இல்லங்கள் அமைப்பது, மருத்துவக் காப்பீடு வழங்குவது, ஆட்டிஸம் உள்ளவர்களை கவனித்துக் கொள்வோர்களுக்குப் பயிற்சி போன்ற சேவைகளை அளித்து வருகிறது.

1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குறைபாடுள்ளவர்களுக்கு சம வாய்ப்பு, உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு அளிக்கும் சட்டத்தில் (PWD Act, 1995) ஆட்டிஸம் தனியானதொரு குறைபாடாகக் குறிப்பிடப்படவில்லை. அதனால், ஆட்டிஸம் உள்ளவர்கள் தங்களுக்கான சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதில் பிரச்னைகள் உள்ளன.

கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்துக்கு மாறாக, குறைபாடுள்ளவர்களின் உரிமைகளுக்கான மசோதா மாநிலங்களவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆட்டிஸம் குறைபாடு பிரத்யேகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு வழி பிறக்கும்.

கட்டுரையாளர்: நிர்வாகக் குழு உறுப்பினர், ஆக்ஷன் ஃபார் ஆட்டிஸம்

(நன்றி:- தினமணி நாளிதழ் ஏப்ரல் 2ம் தேதி, சென்னை பதிப்பு)

படம் நன்றி:- http://pixabay.com/

நன்றி : http://blog.balabharathi.net/?p=1588


Comments