கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி தமிழனா?-கட்டுரை.







தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் செய்யப்பட்ட பல அகழ்வாய்வுகளிலிருந்து வெளி வந்த செய்திகள் இக்கால அளவுகளின் முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளன. இப்பணியில் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். முதலில் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் களஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். புரூஸ்புட், பர்கிட், எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற பலர் இப்பணியில் ஈடுபட்டனர். 1916ல் புரூஸ்புட் தருமபுரி பகுதியிலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளை கண்டெடுத்தார். இதன் பின்னர் வந்தவர்கள் இவற்றைக் கல்லாயுதங்கள் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது இவற்றைப் போன்ற கல்லாயுதங்கள் வரட்டனபள்ளி அருகிலும் கப்பல்வாடியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பழைய கற்காலத்தைச் சார்ந்தவை என்பது தெரியவருகின்றன. இதற்கு முன்னர் குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

பழங்கற்காலக் கருவிகள்:



சென்னைக்கு அருகில் இருக்கும் கொற்றலையாற்றின் சமவெளியிலும், வட மதுரையிலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கிடைத்துள்ளன. பின்னர் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட்டன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. மேலும் இப்பகுதிகளில் பண்டைய மக்களின் கல்திட்டைகள், கல்வட்டங்கள் முதலியன கண்டு பிடிக்கப்பட்டன. இத்தகைய கண்டுபிடிப்புகளினால், தமிழ்நாட்டில் பழைய கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். மேலும் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் கற்காலம் - காலக்கோடு :

சுமார் கிமு. 15,10,000க்கு முன் - 50,000 - தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்.

சுமார் கி.மு. 50,000 - 20,000 - தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்.

சுமார் கி.மு. 20,000 - 10,000 - தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்

சுமார் கி.மு. 10,000 - 2,000 - தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம்.

சுமார் கி.மு. 3000-1,000 - தமிழகத்தில் புதிய கற்காலம்.

பழங்கற்காலம்:

பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்குப் பழைய கற்காலம் என்று பெயரிடப்பட்டது. பழைய கற்காலம் சுமார் கி.மு .பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது என்று கருதலாம். தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போதென இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை. அதன் காரணம் அத்திரம்பாக்கத்தில் கி.மு. 15,10,000 காலம் மதிக்கத்தக்க பழமையான தழும்பழி ஆயுதங்கள் கிடைத்துள்ளது தான். தழும்பழி என்பது கீழைப்பழங்கற்கால ஆயுதங்களில் தழும்புரி ஆயுதங்களுக்கு மிகவும் பிந்தியவை. தமிழகத்தில் கிடைத்த தழும்பழி ஆயுதங்களின் பழமையே கி.மு. 15,10,000 காலம் மதிக்கத்தக்க பழமையானதாக இருப்பின் அதற்கு முந்திய தழும்புரி ஆயுதங்கள் அதனினும் பழமையானதாகவே இருக்கும். அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால ஆரம்பம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் செல்லலாம். ஆனால் அதில் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. கற்காலத்தின் கடைசிக்கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு.2000 வரை நிலவியது. அதன் பிறகு பெருங்கற்களை கொண்டு வழிபடுதல், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம் தமிழகத்தில் வழக்கொழிந்தது.

கீழைப் பழங்கற்காலம்:

தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து .கி.மு. 50,000 வரை நிலைத்திருந்தது. சென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எலும்பின் கால்துண்டுகள் கிடைத்தது, தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது. முதலில் பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றிச் சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளைப் பிளந்து இவர்கள் ஆயுதங்களைச் செய்ததாகத் தெரிகிறது. காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாளப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சிக் காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களாலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களிலிருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை தழும்புரியில் இருந்து தழும்பழி என்று கூறுவர்.

தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன. இந்த இடங்களைப் பார்க்கும் போது வடதமிழகத்திலேயே கீழைப்பழங்கற்கால மனிதர்களின் பரவல் அடர்ந்து காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

தமிழகத்தில் மத்திய பழங்கற்கால ஆயுதங்கள் :


தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம் என்பது கிமு. 50,000 - கி.மு.20,000 வரை நிலவியது. இக்காலம் தொழில்நுட்பத்திலும் வேட்டையாடுதலிலும் பெரியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இக்கால மக்கள் கீழைப்பழங்கற்கால மக்களிடமிருந்து பெரியதோர் தொழில்நுட்ப மாற்றங்களைப் பெற்றிருந்தனர். கடினக்கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களிலிருந்து செதிற்கல்லாக வளர்ந்தது. கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. கீழைப்பழங்கற்காலத்தவர் செதிற்கல் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால் இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர். சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை தமிழக்ததின் கற்காலத்தவர் செய்துள்ளதாகத் தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தியது தெரிகிறது. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்.

தமிழகத்தில் மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள்:


தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரை நிலைத்திருந்தது. தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம் செழித்திருந்த அளவு மேலைப் பழங்கற்காலம் வளரவில்லை என்றாலும் திருவள்ளூர் மாவட்டம் குடியம் குகையில் இவைக் காணப்படுகின்றன. ஆனால் மற்ற தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படும் அளவுக்குச் சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த இக்கால மனிதர்கள் ஒரே கல்லில் பல சமாந்தரமான பக்கங்களையுடைய சிறிய நீள்சதுரங்கள் வரும் ஆயுதங்களை அமைக்கக் கற்றுக் கொண்டார்கள். இவை வட தென்னிந்தியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் அளவு செழித்திருக்கவில்லை என்றிருந்தாலும் இதில் மேலாய்வுகள் செய்யப்பட வேண்டியுளது. அதுவரைக்கும் தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் தொடர்ந்து இடைக்கற்காலம் திடீரென முளைத்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் கொண்டிருப்பர்.

தமிழகத்தில் கிடைத்த குறுனிக்கற்காலக் கருவிகள்:


தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது. தற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன. இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன. இவர்களின் ஆயுதங்கள் அழுதகன்னி ஆற்றுப் படுகை போன்ற சிறு ஓடைகளிலும் காணப்படுவதால் இவர்கள் தமிழகம் முழுவதுமே பரந்திருந்தனரெனக் கொள்ளலாம். இக்காலத்திலேயே உலகத்தின் அனைத்துப் பகுதிகளைப் போலவும் தமிழகத்திலும் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டது மாந்தரினம்.

தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் :


தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 1000 வரை நிலவியது. இக்காலத்தில் மேம்பட்ட தொழிலாய் மட்பாண்டம் செய்தல் இருந்தது. கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர். இக்காலத்திலும் மக்கள் தமிழகம் முழுதும் பரந்து வாழ்ந்ததாகவே தெரிகிறது.

கால வாரியாகக் கற்காலக் கருவிகள் அதிகம் காணப்படும் முக்கியத்தளங்கள்:

கீழைப் பழங்கற்காலம் – அத்திரம்பாக்கம்

மத்திய பழங்கற்காலம் :

கோர்த்தலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா, குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர்.

மேலைப் பழங்கற்காலம் - குடியம் குகை

இடைக்கற்காலம் :

தேரி (திருநெல்வேலி), அழுதகன்னி ஆற்றுப்படுகை, மதுரை மாவட்டம் (மதுரை, திருமங்கலம், போடிநாயக்கனூர், கொல்லம்பட்டறை, தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.)

புதிய கற்காலம் - பையம்பள்ளி

நன்றி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D


Comments

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete

Post a Comment