எங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் லூசு..” என்றான். நேரடியாக இப்படி ஒர் அழைப்பை எதிர்கொண்டபோதில் அத்தனை தயாரிப்புகளையும் தாண்டி கொஞ்சம் மனம்கலங்கித்தான் போனோம்.
அவன் தனது சொற்களின் பொருள் அறிந்ததுதான் சொல்லி இருப்பானா? அச்சொற்களின் வரையரை தெரிந்துகொண்டு, எங்கள் மகனின் செயல்களை எடை போட்டு அதை வைத்து அவனாகவே, அப்படி அழைத்திருக்க முடியாதென்பது நிச்சயம். பெரியவர்களின் பேச்சில் தெரித்த ஒரு சிறுதுளியே அவன்வாயிலும் புழங்கியது என்பதும் வெளிப்படை. எனவே அவனை ஒன்றும் சொல்லவோ அவனது பெற்றோரிடம் இது குறித்துப் பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மனதுள் நெருடிக் கொண்டே இருந்தது.
என் சிறுவயதில் இதுபோன்ற மாற்றுத்திறனுடைய சக குழந்தைகளை எப்படி எனக்கு அறிமுகப்படுதினார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். நடக்கமுடியாதவனை ’நொண்டி’ என்றும், காது கேளாதவனை ’செவிடன்’ என்றும் தான் குறிப்பிட்டார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனால் அதே சமயம் அந்தச் சொற்பிரயோகத்தில் எள்ளல் இருந்ததில்லை. வயதும், சமூகப்புரிதலும் ஏற ஏற அவர்களை மாற்றுத்திறனுடையவர்களாக அடையாளம் கண்டுகொண்டேன். மாற்றம் என்பது நேரடியாகக் குழந்தைகளிடமிருந்து வருவதில்லை, அது பெற்றவர்களிடமிருந்து துவங்க வேண்டும் என்றுதெளிவானது.
எனது உடன்பிறவாச் சகோதரியும், மருத்துவருமாகிய தேவகி அவர்களிடம் இச்சம்பவம் குறித்துப் பேசினேன். ” பெத்தவங்களுக்கே புரிதல் இல்லாதபோது,குழந்தைகளுக்கு மட்டும் எப்படி வரும்? இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை குழந்தைகளுக்குப் புரியற மாதிரி பக்குவமாக சொல்லித் தரும்முயற்சியைப் பெற்றோர்கள் செய்வதில்லை” என்று சொன்னார்.
”நான் எப்படிப் பொறந்தேன்மா” என்று கேட்கும் எந்தக் குழந்தையிடமும் அதன் பெற்றோர் பிறப்பின் ரகசியத்தை அப்படியே சொல்லி விடுவதில்லை.”சாமி, உன்னைப் பாப்பாவாக அம்மா வயிற்றுக்குள் வைத்தார்” என்பதுமாதிரி ஏதாவது கதை சொல்லி அவர்களைச் சமாளிக்கிறோம். தகுந்த வயதும்,புரிதலும் வரும்போது அவர்களுக்கே உண்மைகள் விளங்கும். இந்தச் சமாளிப்பைத்தான் வள்ளுவரும் கூட, “பொய்மையும் வாய்மை யிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்றாரோ என்னவோ!
குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச்சொல்லி அறிமுகப்படுத்துவதைக்காட்டிலும், எப்படி நாகரீகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை. அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க ‘நொண்டி’ ’லூசு’, ‘ஊமை’, ‘குருடன்’ போன்றகடுமையான வார்த்தைகளைக் குழந்தைகள் முன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித்திட்டம் பரவலாக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் மாற்றுத்திறனுடைய சகமாணவர்களைப்பற்றி, பிற மாணவர்கள்ஏளனமாகப் பேசாமலிருக்கவும், அவர்களின் நிலை உணரவும் ஆசிரியர்களும் கூட இதுபோன்றதொரு உத்தியைக் கையாளலாம். பள்ளியில் இருந்துகிடைக்கும் அனுபவங்கள் சிறார்களை இன்னும் பக்குவப்படுத்த உதவும்.
இக்கதையினைத் தொடக்க நிலையிலையே படித்து, மெருகேருவதற்கு உதவிய, அண்ணன்கள் வாசுபாலாஜி, ஆசிப் மீரான், எழுத்தாளர்கள் கரு.ஆறுமுகத்தமிழன், ஜெயந்திசங்கர் மற்றும் தம்பி நரேஷுக்கும் அன்பு! எப்போதும் சமூக எழுத்திற்குத் துணை நிற்கும் பாரதி புத்தகாலயத்திற்கும், தோழர் க.நாகராஜனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(சந்துருவுக்கு என்னாச்சு? – நூலுக்கான முன்னுரை)
நன்றி : http://blog.balabharathi.net/?p=1629
உபயோகமான பதிவு
ReplyDeleteவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாகேந்திரா பாரதி .தொடருடன் தொடர்ந்து இருங்கள்.
Delete