பெண்ணுக்குள் என்ன உண்டு -சிறுகதை -தமிழ்க்கவி.



எல்லையற்றுப் பரந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பெண்ணே உயர்ந்தவள் எனப் பறை சாற்றிய போதும்,

அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன்.

“ பெண் எனப்பட்டதே பெருமாயம்”

இன்றுவரை எந்தப் பெண்ணும் தன் மனதைத்திறந்ததில்லை. அதை ஒரு ஆண்தான் திறந்துபார்க்கிறான். காதலனாகவோ கணவனாகவோ உள்ள ஒருவரிடம் தன் அந்தரங்கத்தை வெளிவிட்டுவிடும் பெண்ணை, அவர்களது வாக்குமூலங்களை வைத்தே தானே அதுவாக எழுதியோ பேசியோ விடுகிறார்கள். யாரா?…ஆண்கள்தான்“
நான்தான் சொல்கிறேனே ஒரு பெண்ணாகப்பட்டவள் ஆசாபாசங்களும் கோப தாபங்களும்இச்சை கிரியை யோகம் ஞானம் எல்லாம் வாய்க்கப்பட்டவள்தான். .அதை அவள் வெளியே சொல்லவோ காட்டவோ முடிவதில்லை .அப்படி எக்குத்தப்பாக காட்ட முயன்றாலும் ஊரே அவளைத் தள்ளி வைத்துவிடும்.

முதலில் பெற்றோரே அவளைத் துாற்ற ஆரம்பிக்கிறார்கள். இப்ப எதுக்கு இந்தப் புராண மெல்லாம் என்றா கேட்டீங்க பின்ன சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை யென்று எந்தக்கதையச் சொன்னாலும் காது கொடுத்துக் கேக்கிறீங்களா? இல்ல சொல்லத்தான் விடுறீங்களா? எத்தின நாளுக்கென்று தான் நாங்களும் அடக்கி வைக்கிறது. நானப்ப நாலாம் வேப்புக்கு வந்திட்டன் . பக்கத்துக் கடையில என்ன பொருள் வாங்கிற தெண்டாலும் நான்தான் ஓட வேணும். இதைத்தான் சொல்லுறது “எளிய பிள்ளையாப் பிறந்தாலும் இளைய பிள்ளையாப்பிறக்கக் கூடாதெண்டு“

அப்பு கொட்டப்பெட்டியத் திறந்து ரெண்டு மூன்று பாக்குப்பிளகை வாயில போட்டுக்கொண்டு வெத்திலையக் கையில எடுத்துக்கொண்டு கொட்டப்பெட்டிச் சயிற்றுக்குள்ள துளாவிப்பாத்தார் பொயிலை இல்லை. அடுத்த பக்கத்தை துளாவி ஒரு இருபத்தைந்து சதக்குத்தியை எடுத்தவர் “ சைக் ….நீ துலைச்சுப் போடுவாய்” எண்டிட்டு அஞ்சு சதக்குத்தியொண்டை எடுத்து என்னிடம் தந்து “ ஓடிப்போய் அருணாசலங்கடையில ஒரு பொயிலத்துண்டு வாங்கிக் கொண்டோடிவா” என்றார்.

ஆனா…அருணாசலங்கடையில சாமான் வாங்கிறதில எனக்கு நல்ல புளுகம் அந்தப் புளுகத்துக்கு என்ன காரணமெண்டு அப்ப கேட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டன். இப்ப அது பிரச்சனையில்ல .

அருணாசலத்தாருக்கு ரெண்டு மகன்மார் பெரியவன் விசரன் எப்பவும் கம்பிக் கதவுக்கு அங்கால அடைச்சே வச்சிருப்பினம். மற்றவன் பதினைஞ்சு பதினாறு வயதிருக்கும் எங்கயோ பட்டணத்தில படிக்கிறானாம். பின்நேரத்தில அவன்தான் கடையில நிப்பான்.நான் போறவாற நேரம் கைநிறைய பல்லிமிட்டாய் அள்ளித்தருவான்.இப்ப மாலை நேரம் அவன்தான் கடையில் நிற்பான். பல்லிமிட்டாய் ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு நற்சீரகம் இருக்கும். நறபுறவெனக் கடிக்காமல் சூப்பித் தின்றால் கடைசியில் வாய்க்குள் நற்சீரகம் நாக்கில் தட்டுப்படும்.ப்ச்ச… என்னசுவை..சூப்பிச்சூப்பி இறுதியாக சீரகத்தைச் சுவைப்பது ஆனந்தமானது.

கடையில் வழமைக்கு மாறாக அருணாசலத்தாரின் மனைவி நின்றாள்.எனக்குச் சப்பென்று போய்விட்டது..பொயில” என்றபடி எட்டிக் காசை நீட்டினேன். மாலை நேரமாதலால் பெரியவா்களும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். எட்டிக் காசை நீட்டினாலும், என் தலைகூட கடைக்காரிக்குத் தெரியவில்லை. பொழுது கருகிக் கொண்டு வந்தது. குப்பிலாம்பை வைத்துக்கொண்டு உருட்டிஉருட்டிக் கணக்குப்பார்தாள் அவள்.

நான் மீண்டும் எட்டி “பொஜலை“ என்றேன். அந்த ஐந்து சதக் குற்றியை வாங்கிக் கொண்டு பொயிலைத் துண்டொன்றைத் தந்தாள். வாங்கிக் கொண்டு திரும்ப. கடையின் இருண்டதொரு மூலையில் அவன் நின்றான்.ஈயென்று பல்லை இளித்தபடி. என்னை நோக்கி ஏதோ சைகை செய்தான். நான் விறுவிறுவென்று ஓடியே வந்துவிட்டேன்.

இரண்டொருநாளில் நான் தம்பிக்கு சூப்பி வாங்க கடைக்குப்போனேன். அவன் “இஞ்சே கடைக்குள்ள வாவன்” என்றான் அதற்குள் நான் மட்டுமல்ல யாரும் போவதில்லை கடையின் முன்புறம் வலையடைத்து சிறு கண்டாயம் வழியாகத்தான் சாமான்கள் வாங்குவோம். அப்படியென்ன உள்ளே நான் தாமதிக்காமல் உள்ளே சென்றேன். கடையில் யாருமில்லை அவன்மட்டுமே நின்றான். நான் உள்ளே போனதும் ,

“வாறியா? ”

எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல “அதுதான் வந்திட்டனே
பிறகென்ன? ” என்றேன்.

அட கடவுளே அவன் எட்டி என்னைக் கட்டிப்பிடித்தான்.அப்படியே தன் கவட்டுக்குள் என்னை வைத்து இறுக்க…அவன்ர கவட்டுக்க ஏதோ பொல்லுக் கொட்டான் போல வச்சிருக்கிறான். நான் திமிறிக்கொண்டு என்னை விடுவித்துக் கொண்டு வெளியே ஓடினேன். வெளியே வந்து “சூப்பியத்தா” என்றேன்.எனக்கு ஏதோ அவமானமாக் கிடக்கு என்னை வெக்கங் கெடுத்திப்போட்டான். அப்புவத்தவிர என்னையாரும் இப்படி கட்டிப்பிடிச்சதில்ல.அப்புவும் நெஞ்சோடதான் அணைப்பார்“
.சூப்பியத்தா?”

“உள்ளுக்கு வா தாறன்” என்றான் நான் ஓடி விட்டுக்கே வந்திட்டன்.

“ எங்கடி சூப்பி?”அம்மா அதட்டினாள்.

“அவை தரமாட்டினமாம்”

“காசெங்கையடி?”

“அங்க குடுத்திட்டன்”

குடுத்தா ஏன்ரி சூப்பி தரயில்ல?” அம்மா அதட்டிக்கொண்டிருக்க அங்கெவந்த சின்னையாக் கிழவன் “இவள் காசை எங்கயோ போட்டிட்டாள்போல ” என்றது.
“இல்ல…நான் குடுத்திட்டன்.” நான் அவசரமா மறுத்தன். சின்னையா தன் மகனை அழைத்தார் “டேய்…சேனாதி இஞ்ச வாடா! கடைக்கொருக்காப் போய் இவள் கடைக்கு வந்தவளோ எண்டு கேட்டுக்கொண்டாடா.” என்றனுப்பினார்.
போய்க்கேக்கட்டன் எனக்கென்ன? என்னால ஒண்டும் சொல்ல முடியேல்ல அவன் கடைக்குள்ள கூப்பிட்டதையோ கவட்டுக்க பொல்லு வச்சிருந்ததையோ…எப்பிடி ச்சீக் ..ஆரெட்டச் சொல்லுறது….அதற்குள் சேனாதியண்ணை வந்திட்டார் ”இந்தாக்கா சூப்பி காசை மேசையில போட்டிட்டு ஓடிவந்திட்டாளாம்“



அதற்குப்பிறகு அந்தக்கடையைக்கடந்து அப்பாலிருந்த கடையிலேதான் பொருட்களை வாங்கினேன்.அதைஒருநாள் கடைக்கார சின்னம்மா பார்த்துவிட்டாள்.

“என்னடி கடனுக்கு சாமான் வாங்கிறதென்றால் இஞ்ச. காசெண்டா கொச்சியானெட்டப்போறியோ ஙா…காணட்டும் கொப்பர..” என்றாள் .

“கண்டா என்ன? அவவட லுாசுப் பொடியனும் மற்றவனும் கவட்டுக்க பொல்லு வச்சுக்கொண்டு என்னப் பயமுறுத்தின கதைய அப்புவுக்கு சொல்ல வேண்டியதுதான்“ நான் எனக்குள் முடிவெடுத்தேன்.

எப்பவும் வீட்டுக்கு வந்து புத்தி சொல்லுற சின்னையாக்கிழவனை மட்டும் நல்லவனெண்டு சொல்லுறியளே… கிழவன்தான் எனக்கு பிள்ளை எப்பிடிப் பிறக்கிறதெண்டு சொல்லித்தந்தது. நான் இதைப்போய் அம்மாவிட்டயே கேட்டன் “மெய்யேம்மா பிள்ளையள் இப்பிடித்தான் பிறக்குமா? ” சமையல்செய்து கொண்டிருந்த அம்மா அகப்பைக் காம்பாலயே என்னை அடிஅடியெண்டு அடிச்சதுமில்லாம அண்டைக்கு பட்டினியும் போட்டிட்டாள்.

“ஆரடி சொல்லித்தந்தது?”

நானெப்பிடி சொல்லுறது சின்னையாக் கிழவன் மட்டக்களப்பு மாந்திரீகம் அறிஞசவன்் மந்திரிச்சு விட்டானெண்டா எனக்கு கால் வளைஞ்சு நாக்கும் சுருண்டு போகுமாம். ஆர் கேட்டாலும் தன்ர பேர மட்டும் சொல்லக்கூடாதெண்டு சத்தியம் வாங்கிப் போட்டானே… ஆனால் எப்பிடியோ சின்னையாக் கிழவனிட்ட உலக ரகசியங்கள் இருக்கிறதை நான் நம்பீட்டன் வீட்டில ஆருமில்லாத நேரத்தில அவன் இது போல பல கதைகளை சொல்லியிருக்கிறான். அப்பவெல்லாம் என்னை மடியில வச்சுக்கொண்டு என்னைத் தடவித்தடவித்தான் கதை சொல்லுவான். அவன் தடவுறபோது எனக்குள்ள இனம்புரியாத உணர்வுகள் உண்டாகும்.அதை நான் விரும்பினன் எண்டே சொல்லலாம் அனா இது கன நாள் நீடிக்கயில்ல. நாங்கள் வீடு மாற வேண்டியதாயிற்று.

புதிய இடம் புதிய மனிதர்கள். எனக்குமட்டும் சின்னையாக் கிழவனைப்போல யாரும் கிடைக்கமாட்டார்களா என்ற ஏக்கம் வெகு நாட்களிருந்தது.

அம்மாகூட அடிக்கடி சொல்வாள் “சின்னையாண்ணை குடும்பம் போல ஒரு நல்ல சனம் இல்லை. எங்க போறதெண்டாலும் பிள்ளையள நம்பி விட்டிட்டுப் போகலாம். பழக்கவழக்கமும் நல்லாப் பாத்துக்கொள்ளுவார் பிள்ளையள்ள கவனமும் கூட…”
ஆனா அந்தளவில எங்கட உலக அறிவு நின்று போகாமல் காப்பாற்ற மேலும் பலர் வந்தனர் என்றாலும் நான் இதுபற்றி என் சக தோழிகளிடம் கூட வாய் திறப்பதில்லை அம்மாவின் அகப்பைக்காம்பு அடி என்னைத் தடுத்தே வந்துள்ளது.

நன்றி : http://eathuvarai.net/?p=4923

Comments