Skip to main content

கடைசிச் சடலம் -கதையல்ல-சிறுகதை.எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது-ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாளை. எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை இராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டு வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்கு கொண்டு வந்திருந்தனர். அவரது வயிறு பிளந்திருந்தது. பெரிய உடம்புக்காரனான அவர் ஒரு விலங்கைப்போல துடித்துக் கொண்டிருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனை கொண்டு போகும் போது வழியிலேயே இறந்து போனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதும்,பிளந்த வயிறும்,மரண ஓலமும், அவரிலிருந்து பெருகிய இரத்தத்தையும் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. நான் வளரவளர நாட்டில் யுத்தமும் இனச் சிக்கலும் என்னைவிட வேகமாக வளர்ந்தன.

அவை மரணங்களை வளர்த்தபடியேயிருந்தன. மரணத்தின் சுவடுகள் என்னுடன் பயணித்தபடியேயிருந்தன. இதற்கு இரண்டு வருடங்களின் பின்னொருநாள் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த இந்தியன் ஆமி செக் பொயின்றுக்கு போராளிகள் குண்டெறிந்துவிட்டனர்.காலையிலிருந்து மாலைவரை ஊரை சல்லடை போட்டும் ஒருவரும் அகப்படவில்லை. இறுதியில் போராளிகளிற்கு சாப்பாடு கொடுத்தாரென கிளியண்ணையை பிடித்துவந்து கண்ணைக் கட்டி சந்தியில் இருத்தினார்கள். நாங்கள் வீதிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்தோம். தன்னை சுட வேண்டாமென அவர் கும்பிட்டுக்கதறிக்கொண்டிருந்தார். ஒரு இந்தியன் அவருக்கு முன் நின்று சப்பாத்து காலினால் நிலத்தில் தட்டிச் சப்தமெழுப்பி அவரைப் போக்குக்காட்டிக் கொண்டிருக்க இன்னொருவன் இரகசியமாக பின்னால் வந்து அவரது உச்சந்தலையில் வெடிவைத்தான். அந்தக் கோரத்தை நான் பார்க்கக் கூடாதென அம்மா நினைத்திருக்க வேண்டும். என் கண்ணைப் பொத்த முயன்றார். நான் அவரது கையை உதறிவிட்டுப் பார்த்தேன். அப்போது நான் மரணத்துள் வாழத் தொடங்கியிருந்தேன். மரணம் ஒரு விளையாட்டாக ஆகத் தொடங்கியிருந்தது. பின்னாட்களில் நான் இயக்கத்திலிருந்த போது மரணத்தின் கணங்களை இலகுவாக கடந்து கொண்டிருந்தேன். தலை பிளந்து கிடந்த கீதன்,பாதி உடம்பு மட்டும் எஞ்சியிருந்த இராகவேந்திரன், சில சதைத்துண்டுகளாக மட்டும் எஞ்சியிருந்த நிலாவினி அக்கா என மரணங்களை ஒரு சம்பவமாக மட்டுமே எதிர்கொள்ளப் பழகியிருந்தேன். முல்லைத்தீவுச் சண்டையின் முதல் நாள் இரவு ஒரு நண்பனென நினைத்து இராணுவச் சடலம் ஒன்றுடனும், இறுதி யுத்த நாளில் வேறு வழியில்லாமல் பதுங்கு குழிக்குள் ஒரு குழந்தையின் சடலத்துடனும் படுத்திருந்தேன். துப்பாக்கியிலிருந்து ஒரு ரவை புறப்படுவது போல.. பீரங்கியிலிருந்து குண்டு புறப்படுவது போல.. மரணமென்பது உடலிலிருந்து உயிர் புறப்படும் ஒன்றாகவேயிருந்தது. ஒரு நாள் மரணம் தன் வலிமையை எனக்கு காட்டியது. கொல்லப்படுவதைவிடவும் மரணம் நெருங்கும் கணங்களின் கொடூரத்தை உணர வைத்தது. நான் முழுவதுமாக அதனிடம் தோற்றுப் போயிருந்தேன். வன்னியின் பெருங்காடுகளில் ஒன்றான அம்பகாமத்தில் இலங்கைப் படைகளிற்கெதிரான நடவடிக்கை ஒன்றில் இராணுவத்தின் நிலைகளிற்குள் நான் தனியாக தவறிவிட்டேன். அன்று நான் திசைகாட்டி வைத்திருந்தமையினால் துப்பாக்கி கூட இருக்கவில்லை. அந்தப் பெருங்காட்டில் மரணத்தை அன்று முழுவதும் உணர்ந்தேன். ஆனாலும் அதிர்ஸ்டத்தினால் மட்டுமே பின் மாலைப் பொழுதில் அங்கிருந்து தப்பித்து விட்டேன்.மரணங்களை வெறுக்கத் தொடங்கிய சம்பவங்கள் கோர்வையாக அதன் பின் தொடர்ச்சியாக இடம்பெற்றன. அவற்றில் இது முதன்மையானதாக இருந்தது. இதன் பின் மிக நெருங்கிய நண்பர்கள் தவிர்ந்த வேறு எவரதும் மரணச்சடங்கில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தேன்.சில வருடங்களின் முன் இன்னொரு நண்பனுடன் புதுக்குடியிருப்பு போய்க்கொண்டிருந்த போது செஞ்சோலை மீது கிபீர் விமானங்கள்
தாக்குதல் நடத்தியிருந்தன. சம்பவ இடத்திற்கு உடனே போய்விட்டோம். வெடிமருந்து மணம்,இரத்த நெடில், அழுகுரல்,சதைத் துண்டங்கள் என அது மரணத்தின் குடியிருப்பாக இருந்தது. அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் எடுத்தன. இதன் பின்பு மரணமே வாழ்க்கையாகிவிட்டது. குறிப்பாக யுத்தத்தின் இறுதி நாட்கள். தினமும் எண்ணிலடங்காத மரணங்களை கடந்து கொண்டிருந்தேன்.சரியாக இரண்டு வருடங்களும் ஒரு நாளும் முன்பு. மாத்தளன் பிரதேசத்தை இராணுவம் முற்றுகையிட்டுவிட்டது. குடிமனைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி மக்களை தமது பக்கம் வரவழைத்துக் கொண்டிருந்தது. இராணுவத்திடம் போக மனமில்லாத நானும் இன்னொரு நண்பனும் பதுங்குகுழி ஒன்றில் இருந்து கொண்டோம். அந்த சம்பவத்தில் ஒரு இலட்சத்து பதின்னாலாயிரம் மக்கள் தமது பக்கம் வந்ததாக அரசாங்கம் பின்னர் அறிவித்திருந்தது. மாலையில் செல்லடி குறைந்ததும் பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்தோம். ஊரில் ஒரு சனம் இல்லை. நாங்கள் இருவரும்தான். சனங்களின் இரைச்சலாலும் அழுகையினாலும் நிறைந்திருந்த மாத்தளனில் முதன்முறையாக யாருமில்லாத கடற்காற்றின் ஊளையை கேட்டேன்.எங்களுக்கு வலது பக்கமாகயிருந்த சாலைத் தொடுவாயில் புலிகளின் நிலையிருந்தது. முன்னால் மிக
அருகில்ஆமி. இடது பக்க நிலவரம் தெரியவில்லை.பின்னால் கடல். வெளியில் திரிந்து நிலவரத்தை பார்க்கவும் முடியாது. செல்லடி, நெஞ்சு மட்டத்தில் சீறியபடி போய்க் கொண்டிருந்த ரவைகள்,இராணுவம் எங்கு நிற்கிறது எனத் தெரியாத நிலை என பல காரணங்கள் நடமாட்டத்தை தடுத்தபடியிருந்தது. மாலையில் செல்லடி குறைந்ததும் அருகிலிருந்த மாத்தளன் ஆஸ்பத்திரிக்கு போனோம். உறவினர்கள் இல்லாத மிகச் சில காயக்காரர்களும் இரண்டு தாதியர்களும் மட்டுமிருந்தனர்.அந்த காயக்காரர்கள் தங்களை காப்பாற்றுமாறு எங்களை பார்த்து கதறத் தொடங்கினர். ஒரு முதியவர் என் கையை பிடித்துக் கொண்டார்.எம்மிடம் வேறு வழியிருக்கவில்லை.இராணுவம் திரும்பி போய்விட்டது, ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை என பொய் சொல்லிவிட்டு வெளியேறினோம்.இராணுவம் எங்களுக்கும் புலிகளின் பகுதிக்குமிடையில் நிற்க வேண்டும் என நாங்கள் ஊகிக்க முடிந்தது. காரணம் இடையில் துப்பாக்கி சத்தம் கேட்டக் கொண்டிருந்தது.ஆகவே இரவில் அந்த ஆபத்தான பகுதியை கடக்காமல் விடுவதெனவும்,மறுநாள் இங்கிருந்து எப்படியாவது தப்பி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய்விட வேண்டுமெனவும் முடிவு செய்து ஆஸ்பத்திரிக்குப் பின்னாலிருந்த பதுங்குகுழியொன்றில் அன்றிரவைக் கழித்தோம்.மறுநாள் அதிகாலையிலேயே செல்லடி ஆரம்பித்து விட்டது. கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஆஸ்பத்திரிக்கும் கடற்கரைக்குமிடையிலான பகுதியில் மனிதர்களென்றால் அது நாங்கள் இருவரும்தான் என்பது எமது நினைப்பு. காரணம் ஒரு மனித நடமாட்டமும்,சத்தமும் இருக்கவில்லை.அந்த மயான அமைதி பேரச்சம் தருவதாகயிருந்தது. மாத்தளன் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலிருந்த காவல்துறை அலுவலகத்திற்கு நான்காவது வீட்டில் ஒரு சிறுவனின் முனகல் கேட்டுக் கொண்டிருந்தது.நின்று நிதானிக்க அவகாசம் இல்லாத நிலையிலும் அந்த முனகலை கைவிட்டுப் போக முடியவில்லை. நான்தான் படலையை திறந்து பார்த்தேன். அது ஒரு துயரமான காட்சி. அத்தியாவசிய பொருட்களுடன் அந்தக் குடும்பம் வீட்டிலிருந்து வேறு இடத்திற்கு புறப்பட்டிருக்க வேண்டும்.

முதல் தந்தை,பிறகு தாய்,பின்னால் மூன்று பெண்களென ஐந்து சடலங்கள் வரிசையாக நடந்து வந்த ஒழுங்கில் கிடக்கின்றன. பத்து பன்னிரண்டு வயதான சிறுவன் மட்டும் தலையில் காயத்துடன் தப்பியிருக்கிறான். அவர்கள் முதல் நாளே இறந்திருக்க வேண்டும். அவனைப்பிடித்து நிறுத்துவதே மிகச்சிரமமாக இருந்தது.எங்களை கண்டவுடன் பெரிய சத்தமாக அழுது கொண்டு சடலங்களை சுற்றி ஓடத் தொடங்கினான்.

அப்போது இருந்த சாத்தியமான ஒரேயொரு வழியை அவனுக்குச் சொன்னேன். நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு நீரேரியைக்கடந்து போ எனச் சொல்லி விட்டு கடற்கரைக்குப் போய் பாதமளவு தண்ணீரில் இறங்கி முள்ளிவாய்காலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கொஞ்சத்தூரம் போக இன்னும் கொஞ்சப் பேரைக் கண்டோம். இப்பொழுதுதான் ஒரு நம்பிக்கை வருகிறது-எப்படியாவது தப்பித்து விடலாமென. ஓடத் தொடங்கினோம். என்னைப் பார்க்காமல் ஓடு என ஏற்கனவே நண்பனுக்கு சொல்லி விட்டேன். இடைவெளி அதிகரித்து அதிகரித்து இருவருக்குமிடையில் சுமார் நூறு மீற்றர் இடைவெளியாகிவிட்டது. பொக்கணை நெருங்குகையில் ஆமியைக் கண்டேன். வலது பக்க வீதியிலிருந்து கடற்கரையை நோக்கி சுட்டபடி வருகிறார்கள். அனேகமாக எனது நண்பனுக்கு நேராக அவர்கள் வந்து கொண்டிருக்க வேண்டும்.அவர்கள் கடற்கரையை
அடைய முன்பு நாங்கள் கடக்க வேண்டும்.அவர்கள் சுட்டுக் கொண்டிருந்தாலும் குனிந்தபடி ஓடியாவது தப்பிவிடலாமென நம்பினேன். நண்பன் குனிந்தபடி ஓடி கடந்து விடுகிறான்.சிப்பாய்கள் இருவர் வேகமாக வருகிறார்கள். நான் முழுசக்தியையும் திரட்டி ஓடுகிறேன். ஆனால் முடியவில்லை. அவர்கள் வென்று விட்டனர். துப்பாக்கியை தோளில் வைத்து இலக்கு பார்த்தபடி எங்கள் இருவருக்குமிடையில் ஒரு சிப்பாய் புகுந்து விட்டான். என்னை குறி பார்த்தபடி தமது பிரதேசத்திற்கு போகுமாறு சைகை செய்தான். அவன் சுடுவானோ என்ற ஐயம்,இனி இராணுவம் என்ன செய்யும் என்ற சந்தேகம் என விபரிக்க முடியாத உணர்வுடன் மீண்டும் ஊர்மனையை நோக்கி தனியாக நடக்கத் தொடங்கினேன். ஊர்மனைக்குள் எஞ்சியிருந்தவர்களை ஒன்றாக்கி நீரேரியை நோக்கி நடக்கச் சொன்னார்கள். வழியெல்லாம் சடலங்கள்.

அவற்றை என்னால் கணக்கிட முடியவில்லை. இதுதான் கடைசிச் சடலமாக இருக்கலாம் என நினைத்துக் கொள்வேன்.ஆனால் பக்கத்தில் இன்னும் சடலங்கள் இருக்கும். பிரதான வீதியில் ஏற, சில போராளிகளின் சடலங்கள் இருந்தன. தெரிந்த முகங்கள் இருந்தும் வடிவாக பார்க்க முடியவில்லை. இராணுவம் எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. மாத்தளன் சந்தி கடந்து நீரேரிக்கரைக்கு வர, அங்கே ஒரு சடலமிருந்தது. அவ்வளவு பதற்றத்துக்குள்ளும் இதுதான் நான் காணும் கடைசிச் சடலம் என்பது புரிந்தது. சினிமாவில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்க்கர் போன்ற தோற்றமுடையவர். தலையில் சக்தி வாய்ந்த ரவை பாய்ந்திருக்க வேண்டும். தலை பிளந்திருந்தது. பக்கத்தில் வந்தவரிடம் இதுதான் நாங்கள் காணும் கடைசிச் சடலம் என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.அந்த நீரேரிக் கரையில் சில நிமிடங்கள்
தாமதித்ததாக நினைவு. நீரேரியை கடப்பதென்பது தோல்வியின் அடையாளமாக இருந்தது. கை விடப்பட்ட உணர்வே என்னுள் எஞ்சியிருந்தது. முப்பத்தைந்து இலட்சத்துக்குமதிகமான இலங்கைத் தமிழர்கள் இருந்தும், ஆறரைக் கோடிக்குமதிகமான இந்தியத் தமிழர்கள் இருந்தும்,நானுாறு மில்லியனுக்குமதிகமாக இந்த உலகத்தில் மனிதர்கள் இருந்தும்….மிகச் சரியாக இன்றிலிருந்து இரண்டு வருடங்களின் முன்பு ஒரு அநாதை போல உணர்ந்தேன். 

நன்றி: விகடன்

நன்றி : http://yokarnan.com/?p=18#sthash.8cLXiAR7.dpuf


Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…