அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும் விஷயம் தன் தாயின் நினைவுக்கு வந்து அதன் பயனாகத்தான் அப்படி அவள் வெறிகொண்டு பாய்ந்திருக்க வேண்டும் என்று விக்கிரமன் எண்ணினான்.
பொன்னன், தானும் பரஞ்சோதி அடிகளும் தேவியைத் தேடியதைப் பற்றிச் சொல்லி வந்தபோது விக்கிரமன், "பொன்னா! சீக்கிரம் சொல்லேன்? மகாராணி அகப்பட்டாரா?" என்று கதறினான்.
"இல்லையே, மகாராஜா! அகப்படத்தானே இல்லை! அப்புறம் மகாராணியைத் தரிசிப்பதற்கு இந்தப் பாழும் கண்கள் கொடுத்து வைக்கவில்லையே!" என்று பொன்னனும் கண்ணீர் விட்டான்.
"பின்னே மகாராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சற்று முன்பு சொன்னாயே? எனக்கு ஆறுதலுக்காகச் சொன்னாயா? - ஐயோ! இந்தச் செய்தியைக் கேட்கவா நான் கப்பலேறி கடல் கடந்து வந்தேன்!" என்று விக்கிரமன் புலம்பினான்.
அப்போது பொன்னன், "பொறுங்கள் மகாராஜா! குறையையும் கேளுங்கள். மகாராணி உயிரோடுதான் இருக்கிறார்; சந்தேகமில்லை, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வந்துவிட்டீர்கள், இனிமேல் என்ன கவலை?" என்றான் பொன்னன்.
பிறகு நடந்த சம்பவங்களையும் தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறலுற்றான்.
அலைகளுக்கு மத்தியில் அடர்ந்த இருளில் பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியை வெகுநேரம் தேடினார்கள். மகாராணி அகப்படவில்லை.
"பொன்னா! தேவியைச் சமுத்திரராஜன் கொண்டு போய் விட்டான்!" என்று பரஞ்சோதி அடிகள் துக்கம் ததும்பும் குரலில் கூறினார். பொன்னன் 'ஓ' என்று அழுதான்.
இனிமேல் ஒருவேளை அகப்பட்டாலும் உயிரற்ற உடல்தான் அகப்படுமென்று இரண்டு பேருடைய மனத்திலும் பட்டுவிட்டது. உயிரற்ற உடலை அலைகளே கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். இனியும் தேடுவதில் ஒரு உபயோகமுமில்லை. இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு இரண்டு பேரும் கரை ஏறினார்கள். அவர்கள் கரைக்கு வந்த சமயத்தில் கிரகணம் விட ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தகாரத்தை அகற்றிக் கொண்டு சூரியனுடைய ஒளி நாலாதிக்குகளிலும் ஸ்தாபித்து வந்தது. மாரிக்காலத்து மாலை வேளையைப்போல் தோன்றிய அச்சமயத்தில், பரஞ்சோதியாரும் பொன்னனும் கரையேறியபோது அங்கே வெடவெடவென்று குளிரில் நடுங்கிக் கொண்டு நின்ற பரஞ்சோதியாரின் பத்தினியும் வள்ளியும், "வாருங்கள்! சீக்கிரம் வாருங்கள்!" என்று கூவினார்கள்.
அவர்கள் விரைவில் அருகில் நெருங்கியதும், யாரோ ஒரு ஒற்றைக் கை மனிதன் அப்போதுதான் கடலிலிருந்து கரையேறியதாகவும், அவன் அந்த ஒற்றைக் கையினால் ஒரு ஸ்திரீயைக் தூக்கிக் கொண்டு போனதாகவும், மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அருள்மொழி ராணி மாதிரி இருந்ததென்றும், தாங்கள் கையைத்தட்டிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மனிதன் ஜனக் கூட்டத்தில் சட்டென்று மறைந்து போய்விட்டதாகவும் சொன்னார்கள். ஒரே படபடப்புடன் பேசிய அவர்களிடமிருந்து மேற்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே சற்று நேரம் ஆகிவிட்டது. முன்னால் அலைகடலில் அருள்மொழி ராணியைத் தேடிய பொன்னனும் பரஞ்சோதியாரும் இப்போது மறுபடியும் ஜனசமுத்திரத்தில் ராணியைத் தேடத் தொடங்கினார்கள், இதுவும் நிஷ்பலனே ஆயிற்று. மாநிலத்திலுள்ள மாந்தர் யாவரும் திரண்டு வந்திருந்தது போல் தோன்றிய அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் ஒற்றைக் கை மனிதனையும் அவர்கள் காணவில்லை! அவன் ஒரு கையினால் தூக்கிச் சென்ற அருள் மொழி ராணியையும் காணவில்லை. எவ்வளவோ தேடியும் அகப்படாமற் போகவே, திருவெண்காட்டு நங்கையும் வள்ளியும் பார்த்ததாகச் சொன்னதிலேயே அவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. அது ஒரு வேளை அவர்களுடைய பிரமையாயிருக்கலாமென்று நினைத்தார்கள். ஆனால், அம் மூதாட்டியும் வள்ளியுமோ தாங்கள் நிச்சயமாய்ப் பார்த்ததாக ஆணையிட்டுக் கூறினார்கள்.
மேற்கண்ட வரலாற்றைச் சொல்லி முடித்தபிறகு அருள்மொழி ராணி இன்னும் உயிரோடுதானிருக்கிறார் என்று தான் நம்புவதற்குக் காரணம் என்னவென்பதையும் பொன்னன் கூறினான். வள்ளியும் அவனும் சில தினங்கள் வரையில் திருச்செங்காட்டாங்குடியிலிருந்து விட்டு, அருள்மொழி ராணியைப் பற்றிய மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமலே திரும்பி உறையூர் சென்றார்கள். அங்கே போய்ச் சில நாளைக்கெல்லாம் சிவனடியார் வந்து சேர்ந்தார். மகாராணியைப் பற்றிய வரலாற்றைக் கேட்டு அவர் பெருந்துயரம் அடைந்தார். ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய விவரம் அவருக்குப் பெரும் வியப்பையளித்தது. வள்ளியைத் திரும்பத் திரும்ப அவளுக்கு ஞாபகம் இருக்கும் விவரத்தையெல்லாம் சொல்லும்படி கேட்டார். கடைசியில் அவர், "பொன்னா! வள்ளி சொல்லுவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. ராணியை ஒற்றைக் கை மனிதன்தான் கொண்டு போயிருக்கிறான். ராணி உயிருடன் இருக்கிறாள் என்பதிலும் சந்தேகமில்லை. அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றார். பிறகு அவர், "அந்த ஒற்றைக் கை மனிதன் யார், தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாதே சுவாமி!" என்று பொன்னன் சொன்னபோது சிவனடியார், "அவன்தான் கபாலருத்திர பைரவன், கபாலிக மதக் கூட்டத்தின் தலைமைப்பூசாரி. தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை அவன் பரப்பிக் கொண்டு வருகிறான். அதைத் தடுப்பதற்குத்தான் நான் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வருகிறேன். எங்கேயோ ஒரு இரகசியமான இடத்தில் அவன் ரணபத்திர காளி கோயில் கட்டியிருக்கிறானாம். அந்த இடத்தைக் கண்டு பிடித்தோமானால், அங்கே அநேகமாக நமது ராணியைக் காணலாம்" என்றார்.
இதைக் கேட்டுப் பொன்னன் நடுநடுங்கிப் போனான். "ஐயோ! மகாராணியை ஒரு வேளை காளிக்குப் பலி கொடுத்திருந்தால்...." என்று அலறினான். "இல்லை பொன்னா, இல்லை! கேவலம் ஒரு பலிக்காகக் கபால பைரவன் இவ்வளவு சிரமம் உள்ள ஒரு காரியத்தில் தலையிட்டிருக்க மாட்டான். வேறு ஏதோ முக்கிய அந்தரங்க நோக்கம் இருக்கிறது. ஆகையால், ராணியை உயிரோடு பத்திரமாய் வைத்திருப்பான். ரணபத்திர காளி கோயில் இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்' என்றார் சிவனடியார்.
இதன்மேல் பல்லவ, சோழநாடுகளைப் பொன்னனும் சிவனடியாரும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதியை ஒவ்வொருவர் தேடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பொன்னன் வள்ளியைத் தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிட்டு, சோழநாடு முழுவதும் தேடி அலைந்தான். பிறகு, காவேரியின் அக்கரைக்கு வந்து தேடத் தொடங்கினான்.
மாதக் கணக்காகத் தேடி அலைந்ததற்குக் கடைசியாக நாலு நாளைக்கு முன்புதான் பலன் கிடைத்தது. அந்தக் காட்டாற்றின் கரையோடு பொன்னன் மேற்கே மூன்று, நாலு காத தூரம் போன பிறகு ஒரு பெரிய மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த மலை அடிவாரத்தில் வெகுதூரம் அடர்த்தியான காடு சூழ்ந்திருந்தது. அவன் வழி பிடித்துக் கொண்டு வந்த காட்டாறானது அந்த மலை உச்சியிலிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டுமென்றும், அந்த மலை கொல்லி மலையின் ஒரு பகுதியாயிருக்கலாமென்றும் பொன்னன் ஊகித்தான். அந்த வனப்பிரதேசத்தைப் பார்த்தவுடனேயே, இதற்குள் எங்கேயாவது ரணபத்திர காளியின் கோயில் இருக்க வேண்டுமென்று பொன்னனுக்குத் தோன்றியது. அந்த மலைக்கு உட்புறத்தில் காட்டுமிராண்டி ஜனங்கள் வசிப்பதாகப் பொன்னன் கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் சில சமயம் மலைக்கு வெளியில் வந்து நரபலி கொடுப்பதற்காக மனிதர்களைக் கொண்டு போவதுண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, பொன்னன் அந்த வனப் பிரதேசத்தில் நாலாபுறத்திலும் தேடி அலைய ஆரம்பித்தான். ஆனால், எந்தப் பக்கத்திலும் அதிக தூரம் காட்டுக்குள் புகுந்து போவதற்குச் சாத்தியப்படவில்லை.
கடைசியாக, காட்டாறு பெருகி வந்த வழியைப் பிடித்துக் கொண்டு போனான். போகப் போக ஆறானது குறுகி சிறு அருவியாயிற்று. அந்த அருவியின் வழியாக மலைமேல் ஏறிச் செல்வது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. சில இடங்களில் பெரிய பெரிய பாறைகள் கிடந்தன. சில இடங்களில் ஆழமான மடுக்கள் இருந்தன. இன்னும் சில இடங்களில் முள் மரங்கள் அடர்த்தியாகப் படர்ந்து, புகுந்து போக முடியாமல் செய்தன. வேறு சில இடங்களில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டியதாயிருந்தது. பொன்னன் இதற்கெல்லாம் சிறிதும் சளைக்காமல் ஏறிச் சென்று கொண்டிருந்தான்.
காலையிலிருந்து மத்தியானம் வரையில் இவ்விதம் ஏறி மிகவும் களைத்துப்போன பொன்னன் கடைசியாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்தான். "இனிமேல் இறங்கிப் போக வேண்டியதுதான்; வேறு வழியில்லை. இராத்திரியில் இந்த வனப் பிரதேசத்துக்குள் அகப்பட்டுக் கொண்டால் காட்டு மிருகங்களுக்கு இரையாக நேரலாம்" என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மனிதப் பேச்சுக் குரல் கேட்டது. அந்த நிர்மானுஷ்யமான காட்டில் மனிதக் குரலைத் திடீரென்று கேட்டதில் பொன்னனுக்கு ஒரு பக்கம் திகிலுண்டாயிற்று. இன்னொரு பக்கத்தில் ஒருவேளை நாம் தேடிவந்த காரியம் சித்தியாகப் போகிறதோ என்ற எண்ணத்தினால் ஆவலும் பரபரப்பும் அளவில்லாமல் பொங்கின. எதற்கும் ஜாக்கிரதையாயிருக்கலாம் என்று பொன்னன் பக்கத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாறைக்குக் கீழே சரேலென்று ஒளிந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் மேலேயிருந்து இரண்டு மனிதர்கள் இறங்கி வருவது தெரிந்தது. ஆனால் எப்பேர்ப்பட்ட மனிதர்கள்? அவர்கள் மனிதர்கள்தானா? ஒருவன் மனிதன்தான், சந்தேகமில்லை. ஆனால், அவ்வளவு பயங்கரத் தோற்றம் கொண்ட மனிதனை அதற்கு முன்னால் பொன்னன் பார்த்ததேயில்லை. அவனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தை அளித்தவை முக்கியமாக அவனுடைய உருட்டி விழிக்கும் பார்வையுடைய சிவந்த கண்கள்தான். இன்னும், அவனது உயர்ந்து வளர்ந்த உடலின் ஆகிருதி, நீண்ட பெரிய மீசை, தலையில் அடர்த்தியாக வளர்ந்து சுருட்டை சுருட்டையாகத் தொங்கிய செம்பட்டை மயிர், நெற்றியில் அப்பியிருந்த செஞ்சந்தனம், அதன் மத்தியில் இரத்தச் சிவப்பான குங்குமப் பொட்டு - இவையெல்லாம் அவனுடைய தோற்றத்தின் பயங்கரத்தை அதிகமாக்கின. அவன் ஒரு கரிய கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்தான். ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டியபோது அந்தப் போர்வை நழுவிற்று. அப்போது பொன்னன் "ஹோ!" என்று கதறி விட்டிருப்பான். ஆனால், பயத்தினாலேயே அவனுடைய தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. பொன்னனுக்கு அவ்வளவு ஆச்சரியத்தையும், பயத்தையும் உண்டாக்கிய காட்சி என்னவென்றால், அந்த மனிதனுக்கு ஒரு கை இல்லாமலிருந்தது தான்! அதாவது வலது தோளுக்குக் கீழே முழங்கைக்கு மேலே அவனுடைய கை துண்டிக்கப்பட்டு முண்டமாக நின்றது.
"அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்றதாக வள்ளியும் திருவெண்காட்டு அம்மையும் கூறியவன் இவன்தான்! 'கபால ருத்திர பைரவன்" என்று சிவனடியார் கூறியவனும் இவன்தான்!" என்று பொன்னனுக்கு உடனே தெரிந்து போய்விட்டது.
கபால பைரவனின் தோற்றம் மட்டுமல்ல, அவனுடன் இருந்த இன்னொரு மனிதனின் தோற்றமும் பொன்னனுக்குத் திகைப்பை அளித்தது. ஆமாம்; அவனும் மனிதன்தான் என்பது அருகில் வந்தபோது தெரிந்தது. ஆனால், அவன் விபரீதமான குள்ள வடிவமுள்ள மனிதன். பத்து வயதுப் பையனின் உயரத்துடன், நாற்பது வயது மனிதனின் முதிர்ந்த முகமுடையவனாயிருந்தான். அவ்வளவு குள்ளனாயிருந்தும் அவன் கபால பைரவனைப் பின்பற்றி அந்த மலைப் பாறைகளில் அதிவிரைவாகத் தாவித் தாவிச் சென்றது, பொன்னனுடைய வியப்புடன் கலந்த திகிலை அதிகரிப்பதாயிருந்தது.
பொன்னன் கூறிய வரலாற்றில் மேற்கண்ட இடத்துக்கு வந்ததும், விக்கிரமனும் அளவில்லாத ஆவலைக் காட்டினான். அந்தக் குள்ளனை நன்றாக விவரிக்கும்படி சொன்னான். பொன்னன் அவ்விதமே விவரித்துவிட்டு, "மகாராஜா! என்ன விசேஷம்? இம்மாதிரி யாரையாவது நீங்கள் வழியில் பார்த்தீர்களா, என்ன?" என்று கேட்டதற்கு, விக்கிரமன், ஆமாம்; பொன்னா, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். உன்னுடைய வரலாற்றைச் சொல்லிமுடி" என்றான்.
"இனிமேல் அதிகம் ஒன்றுமில்லை மகாராஜா! அருவிப் பாதையில் அவர்கள் இருவரும் வெகுதூரம் இறங்கிப் போய்விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு நான் மேலே வந்தேன். அவர்கள் இருப்பிடத்தையும் காளி கோயிலையும் கண்டுபிடித்து விடலாம்; ஒருவேளை மகாராணியையே பார்த்தாலும் பார்த்துவிடுவோம் என்ற ஆசையுடன் அந்த அருவிப்பாதையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினேன். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் என் ஆசை பாழாகிவிட்டது. ஏனென்றால், மேலே கொஞ்ச தூரம் போனதும் அருவியானது மூன்று ஆள் உயரத்திலிருந்து செங்குத்தாக விழுந்தது. பாறையும் அங்கே செங்குத்தாக இருந்தது. அவ்விடத்தில் பாறையின் மேலே ஏறுவதோ, மேலே இருந்து கீழே இறங்குவதோ மனிதர்களால் முடியாத காரியம். அப்படியானால் இவர்கள் எப்படி வந்தார்கள்? மேலேயிருந்து யாராவது கயிறு அல்லது நூலேணி தொங்கவிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்துக்கும் நான் ஒளிந்திருந்த இடத்துக்கும் மத்தியில் எங்கேயாவது இரகசிய வழி இருக்கவேண்டும். ஆனமட்டும் தேடிப் பார்த்தேன் மகாராஜா, பிரயோஜனப்படவில்லை. எப்படியும் போனவர்கள் திரும்பி வருவார்களென்று நினைத்து, மலை அடிவாரத்துக்கு வந்து மூன்று தினங்கள் காத்திருந்தேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. அதன்மேல் சிவனடியாரிடம் தெரிவித்து யோசனை கேட்கலாமென்று கிளம்பி வந்தேன். நல்ல சமயத்திலே வந்தேன் மகாராஜா!" என்று பொன்னன் முடித்தான்.
"ஆமாம்.... நல்ல சமயத்தில்தான் வந்தாய், பொன்னா! இல்லாவிட்டால் இத்தனை நேரம் நான் ஒரு வேளை என் தந்தையிருக்குமிடம் போய்ச் சேர்ந்திருப்பேன்" என்றான் விக்கிரமன்.
"எனக்கும் ஒருவேளை அந்தக் கதிதான் நேர்ந்திருக்கும், மகாராஜா! எப்படிப் பெருகி வந்தது பெருவெள்ளம், அவ்வளவும் அந்த மலையிலிருந்துதானே வந்திருக்கிறது? மழை பிடித்தபோது அங்கே நான் அகப்பட்டுக் கொண்டிருந்தேனேயானால்... தங்களை எங்கே பார்த்திருக்கப் போகிறேன்! மகாராணியைத்தான் எப்படித் தேடப் போகிறேன்?"
"மகாராணி அந்த மலையில் இருக்கிறார் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா பொன்னா?" என்று கேட்டான் விக்கிரமன்.
"ஆமாம், மகாராஜா! முன்னே, சிவனடியார் சொன்னபோதுகூட எனக்கு அவ்வளவு நம்பிக்கைப்படவில்லை. ஆனால் அந்த ஒற்றைக்கை பைரவனைப் பார்த்த பிறகு, நிச்சயமாக மகாராணி பிழைத்துத்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டாகிறது."
"எப்படியோ என் உள்ளத்திலும் அந்த நம்பிக்கை இருக்கிறது; பொன்னா! என்னைப் பார்க்காமல் அம்மா இறந்து போயிருப்பார் என்று என்னால் நினைக்க முடியவேயில்லை. சென்ற ஆறுமாதமாக மகாராணி என் கனவில் அடிக்கடி தோன்றி வருகிறார். தை அமாவாசையன்று என் பெயரைக் கூவிக்கொண்டு கடலில் பாய்ந்ததாகச் சொன்னாயே, கிட்டத்தட்ட அந்த நாளிலிருந்துதான் அடிக்கடி அவர் கனவில் வந்து என்னை அழைக்கிறார். அவர் உயிரோடுதானிருக்க வேண்டும். ஐயோ, இந்த நிமிஷத்தில் கூட, அவர் என்னைக் கூவி அழைக்கிறார் பொன்னா! அம்மா! அம்மா!" என்று அலறினான் விக்கிரமன்.
அப்போது பொன்னன் சட்டென்று விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "மகாராஜா! பொறுங்கள்!" என்றான். பிறகு, "அதோ கேளுங்கள், ஏதோ சத்தம் கேட்கிறது, மனிதக்குரல்!" என்று காதோடு கூறினான்.
உண்மையிலேயே அந்த இருண்ட மண்டபத்துக்கு வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
தொடரும்
Comments
Post a Comment