இரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.
ஜெயமோகனின் சிற்றிதழ் குறித்த கட்டுரையில் உள்ள மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்ய இப்போதுதான் நேரம் வாய்த்தது. ஜெயமோகன் என்னைக் கொஞ்சம் கடுமையாகவே அக்கட்டுரையில் திட்டியிருந்தார். அதிலெல்லாம் எனக்கு வருத்தமில்லை. ஒருவகையில் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் வாசிப்பின்மூலம் நான் சென்று அடைய அவருடனான உரையாடல்கள் முக்கியக் காரணம். அவர்களை நெருங்கும் அச்சத்தை அவர்தான் பிடுங்கித் தூர வீசினார். அதேபோல, தமிழில் நான் வாசித்து முடித்த படைப்பிலக்கியங்களோடு இன்னும் அணுக்கமாக இணைய அவரது கட்டுரைகள் பெரும்பான்மையான காரணமாக இருந்துள்ளன. இலக்கிய வாசிப்பு அனுபவத்திற்கு அவரது அறிமுகக் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே ஓர் வரைபடம்.
ஜெயமோகன் முன்வைக்கும் மூன்று இதழ்கள்
தனது கட்டுரையில் ஜெயமோகன் மூன்று இதழ்களைச் சிற்றிதழ்களின் தொடக்கமாகச் சொல்கிறார். அதேபோல இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது என்கிறார்.
முதலில் ஜெயமோகன் சிற்றிதழ் வரலாற்றைக் குறிப்பிடும்போது வில்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோர் உருவாக்கிய ‘பார்ட்டிஸன் ரிவ்யூ’ எனும் சிற்றிதழ் குறித்துச் சொல்கிறார். அமெரிக்காவில் தோன்றிய இவ்விதழ்தான் முதல் சிற்றிதழ் எனவும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.
ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் குறிப்பிடும் (பார்ட்டிஸன் ரிவ்யூ) Partisan Review (1934) என்ற சிற்றிதழைத்lit partison தொடங்கியது அமெரிக்க கம்யூனிசக் கட்சி. அதேபோல John Reed Clubs என்ற மார்க்ஸிஸ எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அமைப்பின் ஆதரவுடன்தான் இவ்விதழ் வெளிவந்துள்ளது. Partisan Review இதழின் நோக்கமாக அரசியல் விழிப்புணர்வே இருந்துள்ளது. அதை மையமாகக் கொண்டே முக்கியமான இலக்கியங்களையும் அதைச்சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. இந்தத் தகவல்களை ஜெயமோகன் விக்கிப்பீடியா மூலமாகவே உறுதி செய்துகொள்ளலாம். மேலும் Hilton Kramer என்ற ஆய்வாளர் இந்தச் சிற்றிதழ் (Partisan Review) பாட்டாளி வர்க்கத்தின் இலக்கியங்களைப் பேசுவதாகவும் உள்ளது என தனது Reflections on the history of “Partisan Review” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் சுவாரசியமான விசயமே, குறிப்பிட்ட காலத்தில் Partisan Review இதழில் வந்த பிளவும் அதன் பின் அவ்விதழ் 1937ல் தன்னை மீண்டும் புதிதாக ‘கட்சி சார்புகளற்ற இடதுசாரிகளின் இதழ்’ என நிறுவிக்கொண்டதும்தான். இந்தப் புதிய துவக்கத்தில் ஸ்டாலினிஸத்தை ஏற்காமல் மார்க்ஸிஸத்தை ஏற்கின்ற போக்கும் உருவானது.
இரண்டாவதாக ஜெயமோகன் குறிப்பிடும் சிற்றிதழ் ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த ‘என்கவுன்டர்’. இதையும் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு தொடக்கம் என்கிறார்.
lit enconter இவ்விதழின் அரசியல் குறித்து Frances Stonor Saunders எனும் வரலாற்று ஆய்வாளர் சொல்லும் தகவல் முக்கியமானது. என்கவுன்டர் (Encounter) எனும் இவ்விதழ் Anglo – American அறிவார்ந்த பண்பாட்டு இதழாகவும் அடிப்படையில் ஸ்டாலினிஸத்தை எதிர்க்கும் இதழாகவும் இருந்துள்ளது என்கிறார். அதோடு CIA எனும் மத்தியப் புலனாய்வுத்துறையின் ரகசிய நிதி உதவியுடன் செயல்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். Giles Scott-smith என்ற பேராசிரியர் இவ்விதழ் 1955ல் 14,000 பிரதிகள் விற்பனையான உண்மை நிலவரத்தை ஆய்வின் அடிப்படையில் சொல்கிறார். அதோடு இவ்விதழின் ஆசிரியரான ஸ்டீபன் ஸ்பெண்டருக்கு ரகசியமான முறையில் CIA மூலம் சம்பளமும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். ஸ்டீபன் அதிகமும் கலாச்சாரம் மற்றும் இடைநிலை சமூகத்துக்கான இதழாக என்கவுன்டரை நடத்தவே அவ்விதழின் இணை ஆசிரியரான Kristol அவ்விதழை அரசியல் மயமாக்கினார். தொடர்ந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்த Melvin Lasky யும் என்கவுன்டர் இதழை முழுக்கவே அரசியல் இதழாக்கி 34,000 பிரதிகள் வரை விற்பனை செய்துள்ளார்.
ஜெயமோகன் சொல்லும் மூன்றாவது இதழ் ‘பாரீஸ் ரிவியூ’ இவ்விதழ் முழுக்கவே படைப்பிலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு 1953ல் வெளிவந்தது. பெரிய இதழ்களுக்கு மாற்றான முறையில் இவர்களது விமர்சனப் போக்கு இருந்துள்ளது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காண்பதுடன் துதிபாடும் எழுத்தாளர்களை இவ்விதழ் தவிர்த்தது. புதியனவற்றைச் சொல்லும் படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.
ஜெயமோகன் கூறும் சிற்றிதழ் வரைவிலக்கணம்
ஜெயமோகன் கூற்றுப்படி அவர் சிற்றிதழுக்குச் சில வரைவிலக்கணத்தை முன்வைக்கிறார். இவ்வரைவிலக்கணத்தை மேற்சொன்ன மூன்று இதழ்களின் மூலமாக அவர் கட்டமைக்கிறார். அதை கீழ்கண்டவாறு வகுக்கலாம் .
சிற்றிதழ்கள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது. அதுதான் அதன் கொள்கையாம். அந்த நிலைப்பாடுதான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தனவாம். விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி – நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது எனவும் கூறுகிறார்.
சிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு.
சிற்றிதழ் என்பது சிறியதாக தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.
அட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.
ஜெயமோகன் வரையறையில் உள்ள முரண்
ஜெயமோகனே குறிப்பிட்ட, மேலுள்ள மூன்று இதழ்களின் பின்னணியை வாசித்தாலே ஜெயமோகன் கட்டமைக்கும் சிற்றிதழ் வரையறைகள் மிக எளிதாகத் தகர்ந்துவிடும்.
முதலாவது, சிற்றிதழ்கள் மேலை நாடுகளில் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
இரண்டாவது, பெரும் நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்பட்டு சிற்றிதழ் நடத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது, அது ஒரு மாற்று அறிவியக்கமாக மட்டும் செயல்படவில்லை. கம்யூனிஸத்தை எதிர்த்தும் ஆதரித்தும் சிற்றிதழ்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் நிலைப்பாடுகள் அதை நடத்தியவர்களுக்கு இருந்துள்ளது.
நான்காவது, அது மாற்று ஊடகமாக மட்டும் இல்லை. அதிகாரத்தின் ரகசியக் கருவியாகவும் செயல்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ‘Trojan Horse’ என ‘என்கௌன்டர்’ இதழைக் கூறுகின்றனர். ஓர் இயக்கத்துக்குள் இருந்து அதை அழிப்பது என அதைப் பொருள் கொள்ளலாம்.
ஐந்தாவது ஜெயமோகன் சொல்வதுபோல சிற்றிதழ் என்பது சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழாகவும் இல்லை.
ஆறாவது தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே வெளிநாடுகளில் கொண்டிருக்கவில்லை.
தமிழில் சிற்றிதழ்கள்
மேற்கண்ட வரையறைகள் தமிழ் சிற்றிதழ்களுக்குத்தான் அது மேலை நாடுகளுக்கு இல்லை என ஜெயமோகன் கூறலாம். அவ்வாறாயின் ‘எழுத்து’ தன்னைச் சிற்றிதழ் எனப் பிரகடனப்படுத்த உருவாக்கிக்கொண்ட வரையறைகள், தமிழ்நாட்டுச் சூழலும் சி.சு.செல்லப்பாவின் தனிப்பட்ட பொருளாதார நிலையும் மட்டுமே காரணமாக இருந்தால், அதை ஒரு வரையறையாக ஏற்பதில் சிக்கல் உள்ளது.
Poetry (1912)
இந்த நிலையில்தான் Harriet Monroe தொடங்கிய இலக்கிய இதழான Poetry எனும் இதழையும் அந்த இதழைத்தொடங்கும் முன் அவர் வெளியிட்ட துண்டறிக்கையும் கவனம் பெறுகிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் நூலகம் சிற்றிதழுக்குக் கொடுத்துள்ள வரையறையும் Harriet Monroe தனது இலக்கிய இதழுக்குக் கொடுத்த இலக்கணமும் ஒத்தே போகிறது.
சக எழுத்தாளர்களுக்கு அவர் அனுப்பிய அந்தத் துண்டறிக்கையில் அவர், ‘பெரிய இதழ்கள் கொண்டுள்ள lit poetry கட்டுப்பாடுகளைத் தாண்டி, பொதுபுத்திக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட படைப்பிலக்கியங்கள் Poetry இதழில் இடம்பெறும்’ என்கிறார். ஆனால் இவ்விதழ், ஜெயமோகன் சொல்லும் 1934க்கு முன்பே உருவான இதழ். தன்னை ‘சிற்றிதழ்’ என பிரகடனப்படுத்தாத இதழ். ஆனால் பிரிட்டிஷ் நூலகம் சொல்லும் சிற்றிதழ் வரைமுறைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் இதழ். பின்னாளில் அவ்விதழ் குறித்து ஆய்வு செய்யும் Ezra Pound (1930) தொடங்கி Robert Scholes (2012) உள்ளிட்டோர், Poetry இதழே சிற்றிதழுக்கான தன்மையுடன் வந்ததாகவும் ஆனால், காலப்போக்கில் அதில் விளம்பரங்கள் இடம்பெற்றது அதன் சிற்றிதழ் போக்கைக் கெடுத்ததாகவும் கூறுகின்றனர். Poetryக்கு முன்பதாகவே பல சிற்றிதழ்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் சிற்றிதழ் சூழலும் அமைப்பிலும் Poetry யைத் தொடக்கமாக Hoffman, Allen & Ulrich ஆகியோரின் ஆய்வு முடிவு முன்வைக்கின்றது. தொடர்ந்து, Partisan Review பற்றி குறிப்பிடும் Paul Bixler சிற்றிதழுக்கென்று தனித்த போக்கை உருவாக்கியதில் Partisan Review பெருவாரியாக கவனம் பெருகிறது என்கிறார். மேலுள்ள அனைத்துக் ஆய்வுக் கூற்றுகளையும் கொலம்பியா மின்னணு கலைக்களஞ்சியம், 6 வது பதிப்பும் உறுதிப்படுத்துகிறது. இப்போது ஜெயமோகன் ‘இல்லை… Partisan Review தான் தன்னைச் சிற்றிதழாக அறிவித்துக்கொண்டது. அதனால் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்பாரா என்ற ஐயம் எழுகிறது.
தொடர்ச்சியற்று வெளிவரும், உடனடி வணிகலாபம் இல்லாமல் வெளிவரும், சமகால இலக்கியத்திற்கு உற்சாகம் கொடுக்கும் (குறிப்பாகக் கவிதை), குறிப்பிட்ட பாணி எழுத்தாளர்களை உள்ளடக்கி சமகால நிகழ்வுகளின் மேல் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அமையக்கூடிய எழுத்துகளை உற்பத்திசெய்யும் ஒன்றே சிற்றிதழ் எனக்கூறும் பிரிட்டிஷ் நூலகத்தின் வரையறைகளோடு, ‘எழுத்து’ உள்ளிட்ட ஜெயமோகன் கூறிய எந்த மேலைநாட்டு இதழ்களும் பொருந்திப்போவதாகத் தெரியவில்லை.
இவ்வாறு சிற்றிதழ் வரலாற்றில் இருக்கும் இந்த முரணைத்தான் நான் ஆறாவது பறை ஆய்விதழில் கட்டுரையாக்கினேன்.
பறை ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் சாரம்
பறை இதழில் நான் இரு சந்தேகங்களை முன்வைக்கிறேன்.
it ezhuthu 38 coverமுதலாவது, ‘எழுத்து’ மேலை நாடுகளில் வெளிவந்த எந்தச் சிற்றிதழ் போக்குடனும் சம்பந்தப்படாமல் உள்ளது. அது தன்னைத்தானே சிற்றிதழ் என சொல்லிக்கொள்வதால் மட்டுமே சிற்றிதழ் அந்தஸ்து பெற்றுவிடுகிறது என ஜெயமோகன் சில உதாரணங்களுடன் சொல்கிறார். அதனால் அதைக் கேள்வி எழுப்ப முடியாததாகவும் கட்டமைக்கிறார். ஜெயமோகனின் இந்தக் கூற்றை நான் இன்னும் விரிவாக்கிப் பார்க்கிறேன். நாளைக்கே நான் புதிய மூலப்பொருளைக் கொண்டு ஓர் உணவை புதுமையாகத் தயாரித்து இதுதான் உலகில் இந்த மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் உணவு என்றால், நான் அவ்வாறு சொன்னதால் அது வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்துவிடுமா? ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா? சி.சு.செல்லப்பா ’எழுத்து’ இதழை முதல் சிற்றிதழாகப் பிரகடனப்படுத்துவது அவரது உரிமை. ஆனால் ஆய்வு என்பது பிரகடனத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.
இரண்டாவது, எழுத்து இதழுக்கு முன்பே சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), என தீண்டப்படாதோரின் இதழியல் பயணமும் 1942 – 1962 வரையிலான காலகட்டத்தில் திராவிட இயக்க இதழ்களாக வெளிவந்த 265க்கும் மேற்பட்ட இதழ்களும் தங்களைச் சிற்றிதழ்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளாததாலேயே அவற்றின் உள்ளடக்கம் குறித்த ஆய்வுகள் தேவை எனவும் அதன்மூலம் அவற்றை சிற்றிதழ் வரையறையின் கீழ் புகுத்த முடியுமா எனவும் ஆராய வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் கூறும் பார்ட்டிஸன் ரிவ்யூ கூட ஒருவகையில் தமிழ் இடதுசாரி இதழ்களுடன் ஒப்பிடத்தகுதியானதே.
சாதி மறுப்பைத் தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியாரால் தொடங்கப்பட்டு குத்தூசி குருசாமியால் நடத்தப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு அவற்றின் உள்ளடக்கம் எவ்வாறான தன்மையைக் கொண்டுள்ளன என்ற புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யாமல் ‘எழுத்து’ இதழே தமிழின் முதல் சிற்றிதழ் என்பது தமிழ்நாட்டில் அனைத்தையுமே பார்ப்பனியத்தில் தொடங்க வைக்கும் அரசியலுடன் சம்பந்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளேன்.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இது சி.சு.செல்லப்பாவின் அரசியல் எனச் சொல்ல வரவில்லை. இலக்கியத்திற்கான அவரது உழைப்பை மலினப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிஞ்சிற்றும் இல்லை. அதற்குப் பின் வந்த ஆய்வாளர்கள் அவ்வாறு தொடங்குவதிலும் அந்தத் தொடக்கத்தைக் கேள்வி எழுப்புவதிலும் ஏன் கவனம் செலுத்தவில்லை? அவ்வாறு செலுத்துவதில் உள்ள மெத்தனத்தின் அரசியல் என்ன என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
சுருக்கமாக
Partisan Review (1934) முதல் சிற்றிதழ் என ஜெயமோகன் கூறியது தவறு. Poetry (1912) இதழே சிற்றிதழுக்கான தன்மைகளைக் கொண்டு வெளிவந்த முதல் சிற்றிதழ் எனப் பல ஆய்வுக் கட்டுரைகள் சான்றுகளுடன் நிறுவுகின்றன. Poetry என்ற இதழ் இன்று ஜெயமோகனால் சிற்றிதழுக்குத் திட்டவட்டமாகச் சொல்லப்படும் சில அம்சங்களைக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது இவ்விதழ் முதல் பிரசுரத்தில் ஆயிரம் அச்சடிக்கப்பட்டு அடுத்த 9 ஆண்டுகளில் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று இவ்விதழின் காத்திரம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் அது 30 000க்கும் குறையாமல் அச்சாகிறது. இரண்டாவது ஜெயமோகன் சொன்னது போல சிற்றிதழ் அறிவுத்துறைக்கு மாற்றாகவெல்லாம் இருப்பதாக Poetry இதழ் வழி சொல்லமுடியாது. அவ்விதழ் இளம் கவிஞர்களுக்கும் இலக்கியத்தில் நுழையும் புதிய படைப்பாளிகளுக்கும் வழி கொடுத்துள்ளது . இவ்விதழின் வரலாறு குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சொல்லியுள்ளது போல இவ்விதழ் அரசியல் நீக்கமெல்லாம் செய்து படைப்புகளை வெளியிடவில்லை. அதன் நோக்கம் படைப்பின் தரம் குறித்து மட்டுமே குவிந்துள்ளது.
அதேபோல ஜெயமோகன் கூறியதுபோல மூன்று ஆங்கில இதழ்களைப் பின்பற்றியெல்லாம் இங்கு சிற்றிதழ்கள் உருவாகவில்லை என்பது தெளிவு. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வகையிலான தொழில்நுட்ப வசதிகளையும் சிந்தனையாளர்களையும் அரசியல்சூழலையும் இவற்றால் உண்டாகும் நெருக்கடிகளையும் உள்வாங்கியே தங்களுக்கான சிற்றிதழ் முயற்சிகளைத் தொடங்கின. எனவே இந்த ஒப்பீடே தவறு. அது முறையியல் சிக்கல் கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப சிற்றிதழ் போக்கை நிர்ணயம் செய்யும் போது தமிழிலும் அதுபோன்ற ஆய்வுகள் தேவை. அப்படி ஆய்வு செய்யப்பட்டால் ‘எழுத்து’ முதல் சிற்றிதழ் எனும் நிலை மாறலாம்.
இறுதியாகஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்து கட்டுரை முடிக்கலாம் என நினைக்கிறேன். முடிந்தவரை நான் இந்தக் கட்டுரையில் சொல்லும் தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்கிறேன். ஜெயமோகன் வரலாற்றை தொட்டு எழுதும்போது மட்டும் மிக எளிதாக சில விடயங்களை எந்த ஆதாரமும் காட்டாமல் சொல்லிவிட்டுச் செல்வார். இந்தக் கட்டுரையிலும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான் எழுதினார்கள் என்றும் டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான் என்கிறார். எந்த இதழ்? எந்த ஆண்டு என ஒரு விபரமும் இல்லை. போகிற போக்கில் சொல்லிச் செல்வதால் உழைப்பற்ற வாசகர்கள் ‘சரிதான் போல’ என கடந்துவிடுவார்கள். எனவே அடுத்தமுறை வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்லும்போது அதன் துணைத்தகவல்களையும் இணைத்தால் மேல் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உதவும்.
அதேபோல ஜெயமோகன் சிற்றிதழ் என்பதை அமெரிக்க இதழ்களிலிருந்து கணக்கில் கொள்கிறார். அது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்ஸிலும் சிற்றிதழ் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இனவாதத்தையும் சமூகப்புரட்சியையும் மையப்படுத்தி பாரிஸில் இருந்து வெளிவந்த L’Étudiant noir(1935) என்ற இதழாகட்டும் அல்லது நைஜிரிய நாட்டின் இக்பு தொல்குடி கலாச்சாரத்தைக் காக்க உருவான Okeki (1967) என்ற ஆப்பிரிக்கச் சிற்றிதழாக இருக்கட்டும் அனைத்துமே சமூக மாற்றத்துக்கான அரசியல் முன்னெடுப்புகளோடு சம்பந்தப்பட்டே வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் போக்கு சமூக அரசியல் தளத்தில் வலுவாக இயங்கியுள்ளது தெளிவாகிறது.
ஆனால் தமிழில் ‘பிரக்ஞை’ மாத இதழின் ஆசிரியர் ஆர். ரவீந்திரன் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்,” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அன்றைய கால இலக்கியச்சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையே அக்கால சிற்றிதழ்கள் எப்படி அரசியல் வயப்படாமல் சமூகத்திலிருந்து தள்ளி நின்றன என்பதற்குச் சான்று.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் எழுத்து ஜனவரி 1959ல் தொடங்கப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு. ஜெயமோகன் குறிப்பிடும் மேற்கத்திய சிற்றிதழ்கள் அனைத்தும் சமகால அரசியல் சூழலில் சாதகமாகவே எதிர்ப்பாகவோ இயங்கிய சூழலில் ‘எழுத்து’ அக்கால அரசியலுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் தள்ளி இருந்ததன் அரசியலையே கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் புதிய ஆய்வாளர்கள் மீண்டும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வை எழுத்து இதழுக்கு முன்சென்று உழைப்பைச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். இலக்கியத்தையும் உள்ளடக்கி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவான இதழ்களின் தன்மைகளை உலக சிற்றிதழ் தன்மையுடன் ஒப்பிட்டும் அப்போதைய இந்திய /தமிழ் நாட்டின் அரசியல் சூழலுடன் ஆய்வு செய்தும் அவை வெளிவந்த நோக்கம் மற்றும் அதன் புறக்கட்டமைப்பு ஆகியவற்றைக் கவனித்தும் புதிய வரலாற்றை எழுத வேண்டியுள்ளது. அந்தத் தொடக்கத்துக்கான நோக்கங்களைத் தொகுத்தே பறையில் நான் எழுதிய கட்டுரையும் இந்த எதிர்வினையும் பேச விழைகின்றன.
நன்றி : http://vallinam.com.my/navin/?p=2344#more-2344
Comments
Post a Comment