ராஜ பிரயாணிகளும் பரிவாரங்களும் அந்தக் காட்டாற்றங்கரையில் உணவு அருந்தினார்கள். விதவிதமான பட்சணங்களும் பான வகைகளும் குந்தவி, மகேந்திரன் இவர்கள் முன் வைக்கப்பட்டன. மகேந்திரன் உற்சாகமாகச் சாப்பிட்டான். குந்தவிக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உணவுப் பொருள்களை ஆற்றங்கரைக் காக்கைகளுக்கு வீசி எறிந்து அவை பறந்து வந்து கௌவிக் கொள்வதைப் பார்த்து மகிழ்ந்தாள். இந்த மகிழ்ச்சியும் வெளிப்படையானதுதான். மனத்திலே அந்த காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி மாண்டு போன இரத்தின வியாபாரியின் நினைவு பெரிய பாரமாயிருந்தது. ஆம்; இறந்து போனவன் இரத்தின வியாபாரிதான், - சோழ நாட்டு இராஜகுமாரன் அல்ல என்று குந்தவி ஒருவாறு முடிவு செய்து கொண்டிருந்தாள். தன் உள்ளத்தைக் கவர்ந்த சுகுமாரனுக்கு அத்தகைய கதி நேர்ந்தது என்ற எண்ணத்தை அவளால் சகிக்க முடியவில்லை; ஆகையால் அதில் நம்பிக்கையும் பிறக்கவில்லை.
உணவருந்திச் சற்று இளைப்பாறிவிட்டு எல்லாரும் கிளம்பிக் கரையேறிய போது குந்தவிக்கு ஒரு நினைவு தோன்றியது. அகால மரணமடைந்தவர்களின் ஆவி அவர்கள் இறந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மையா? ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமா? நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ? - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல்,'அம்மா! அம்மா!' என்பது போல் அவளுக்குத் தோன்றியது. குந்தவியின் தேகம் சிலிர்த்தது. அது தன்னுடைய சித்தப் பிரமையா? அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா? அண்ணாவிடம் கேட்கலாமென்று வாயெடுத்தாள். ஆனால் பேசுதவற்கு நா எழவில்லை.
இது என்ன அதிசயம்? பல்லக்கு மேலே போகப் போக, அந்தக் குரல் கெட்டியாகி வருகிறதே? இரத்தின வியாபாரியின் ஆவி தங்களைத் தொடர்ந்து வருகிறதா, என்ன?
இன்னும் சற்று தூரம் போனதும், "அம்மா! அம்மா!" என்னும் அந்த அபயக் குரல் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அது நிஜமான மனிதக் குரலாகவே தொனித்தது.
ஒருவாறு குந்தவி சமாளித்துக் கொண்டு "அண்ணா! ஏதோ தீனக்குரல் கேட்பது போலிருக்கிறதே? உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்டாள்.
"ஆமாம், தங்காய்! யாரோ, 'அம்மா! அம்மா!' என்று அலறும் குரல் கேட்கிறது" என்று மகேந்திரன் சொல்லிக் குதிரை மேலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான்.
"அதோ அந்த மண்டபத்திலிருந்து குரல் வருவது போலிருக்கிறது!" ஆற்றங்கரையிலிருந்து கூப்பிடு தூரத்திலேதான் விக்கிரமன் தங்கிய மகேந்திர மண்டபம் இருந்தது. சாலையில் அந்த மண்டபம் இருக்குமிடம் நெருங்கியதும், குரல் அங்கிருந்துதான் வருகிறது என்று ஐயமறத் தெரிந்தது. குந்தவி பல்லக்கை அந்த மண்டபத்தருகே கொண்டு போகச் சொன்னாள். ஏதோ ஒரு அதிசயத்தைக் காணப் போகிறோம்- என்ற எண்ணத்தினால் அவளுடைய நெஞ்சம் திக்திக் என்று அடித்துக் கொண்டது.
மண்டபத்திலிருந்து வந்த குரல் விக்கிரமனுடையது தான் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள். அன்று காலையில் பொன்னன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, தனக்கு முன்னமே விக்கிரமன் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
"பொன்னா! கிளம்பலாமா?" என்று கேட்டான் விக்கிரமன்.
இருவரும் கலந்து யோசித்து, வெய்யிலுக்கு முன்னால் புறப்பட்டுச் சாலையோடு நடந்து போவது என்றும், வழியில் வண்டி கிடைத்தால் வைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்கள். ஆனால், கிளம்பிய விக்கிரமன் சில அடி தூரம் நடப்பதற்கு முன்னமே அவன் தள்ளாடுவதைப் பொன்னன் கவனித்தான். "மகாராஜா...." என்று அவன் ஏதோ கேட்க ஆரம்பிப்பதற்குள்ளே விக்கிரமன் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். பொன்னன் பரபரப்புடன் விரைந்து விக்கிரமனை அணுகி, "ஐயோ! என்ன மகாராஜா? உடம்புக்கு என்ன?" என்று கேட்டான்.
"தலையை அசாத்தியமாய் வலிக்கிறது, பொன்னா! ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை!" என்றான் விக்கிரமன்.
பொன்னன் அவனுடைய உடம்பைத் தொட்டுப் பார்த்து விட்டு, "ஐயோ! மகாராஜா! உடம்பு கொதிக்கிறதே! இராத்திரி நன்றாய்த் தூங்கினீர்களா?" என்று கேட்டான்.
"இல்லை; என்னவெல்லாமோ ஞாபகங்கள். சரியாகத் தூக்கம் வரவில்லை."
"ஜுரந்தான் காரணம், மகாராஜா! பாவி நான் கும்பகர்ணனைப் போல் தூங்கினேன். என்னை எழுப்பியிருக்கக்கூடாதா? - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள்!" என்று சொல்லி விக்கிரமன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு அணைத்துக் கொண்டபடியே மீண்டும் மண்டபத்திற்குள் கொண்டு சேர்த்தான்.
பிறகு, பொன்னன் நதிக்கரைப் பக்கம் ஓடிச் சென்று அங்கே சிந்திக்கிடந்த வைக்கோலையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்தான். வைக்கோலைப் பரப்பி அதன் மேல் விக்கிரமனைப் படுத்துக் கொள்ளச் செய்தான்.
மேலே என்ன செய்வது என்று இருவரும் யோசனை செய்தார்கள். சாலையோடு போகும் மாட்டு வண்டிக்காகக் காத்திருந்து, ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு அடுத்த ஊருக்குப் போவதென்றும், அங்கே வைத்தியம் பார்த்துக் கொண்டு கொஞ்சம் உடம்பு தேறியதும் கிளம்புவதென்றும் தீர்மானித்தார்கள். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
"ஐயோ! இச்சமயம் வள்ளி இங்கே இல்லாமல் போனாளே? ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா?" என்று பொன்னன் அடிக்கடி எண்ணமிட்டான், ஜுரமாகக் கிடக்கும் விக்கிரமனுக்கு வேண்டிய சிசுருஷை செய்ய அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் 'தாகம்தாகம்' என்று பறந்தான். அந்த மண்டபத்தின் பின்புறத்தில் பிரயாணிகள் சமையல் செய்துவிட்டு எறிந்திருந்த மண்சட்டிகள் சில கிடந்தன. அவற்றில் ஒரு சட்டியைப் பொன்னன் எடுத்துக் கொண்டு போய் நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். பொற்கிண்ணத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய மகாராஜா இந்தப் பழைய மண்சட்டியில் குடிக்க வேண்டியதாயிற்றே என்று பொருமினான்.
நேரமாகிக் கொண்டேயிருந்தது. ஜுரமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. பொன்னனுக்கு ஒரு பக்கம் பசி எடுத்தது. இன்னது செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பிற்று. மகாராஜாவுக்கு வைத்தியம் செய்யாமல், தானும் சாப்பிடாமல் இருந்தால் இரண்டு பேரும் அங்கேயே மடிய வேண்டியதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப் போய் வைத்தியனையும் அழைத்துக் கொண்டு ஒரு வண்டியையும் அமர்த்திக் கொண்டு வரவேண்டியது. அதுவரையில் விக்கிரமனைச் சோழரின் குலதெய்வமான முருகக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
விக்கிரமனும் வேறு வழியில்லையென்று இதற்குச் சம்மதிக்கவே, பொன்னன் மீண்டும் மீண்டும் மண்டபத்தைக் திரும்பிப் பார்த்துக் கொண்டு விரைவாக நடந்தான். பொன்னன் போன பிறகு விக்கிரமனுக்கு இன்னும் ஜுரம் அதிகமாயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நல்ல நினைவு தப்பிவிட்டது. மனத்தில் என்னவெல்லாமோ குழப்பமான எண்ணங்கள் குமுறின. வாய் என்னவெல்லாமோ சம்பந்தமில்லாத சொற்களைப் பிதற்றியது. அளவில்லாத வலியினால் உடம்பை முறித்துப் போட்டது. வர வரப் பலவீனம் அதிகமாயிற்று. கடைசியில் வாயிலிருந்து குமுறிய சொற்கள் வருவது நின்று,"அம்மா! அம்மா!" என்ற கதறல் மட்டும் தீனமான குரலில் வரத் தொடங்கியது.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் குந்தவியின் பல்லக்கு அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. குந்தவி அவசரமாகப் பல்லக்கிலிருந்து இறங்கி மண்டபத்தின் வாசற்படியில் வந்து நின்று உள்ளே பார்த்தாள். ஆமாம்; இரத்தின வியாபாரிதான். அவனுடைய பால் வடியும் முகம் தாப ஜ்வரத்தினால் கோவைப் பழம் போல் சிவந்திருந்தது. விசாலமான கண்கள் ஒரு கணம் மேல்நோக்கித் திருதிருவென்று விழிப்பதும் மறுபடி மூடுவதுமாயிருந்தன. "அம்மா! அம்மா!" என்று வாய் அரற்றிற்று.
இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவியின் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிப் புரட்சியை உள்ளபடி விவரிப்பது இயலாத காரியம். வியப்பு, மகிழ்ச்சி, துக்கம், இரக்கம் ஆகிய பல்வேறு மாறுபட்ட உணர்ச்சிகள் ஒன்றோடொன்று கலந்து போராடின. எல்லாவற்றிற்கும் மேலாகப் பரபரப்பு விஞ்சி நின்றது.
"அண்ணா! அண்ணா! இவன் இரத்தின வியாபாரிதான், அண்ணா! இவனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது, வைத்தியரைக் கூப்பிடு" என்று கூச்சலிட்டாள்.
ராஜப் பிரயாணிகளுடன் கூடப் பிரயாணம் செய்த ராஜ வைத்தியர் வந்து பார்த்தார். "கடுமையான விஷ ஜுரம்; உடனே சிகிச்சை செய்ய வேணும். குணமாவதற்குப் பத்து நாள் பிடிக்கும்" என்றார்.
"பாவம்! இவனை நம்முடன் அழைத்துப் போகலாம் அண்ணா! செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா?" என்றாள் குந்தவி.
பிறகு காரியங்கள் வெகுதுரிதமாக நடந்தன. இராஜ வைத்தியர் ஏதோ மருந்து எடுத்துக் கொண்டு வந்து விக்கிரமனுடைய நாவில் தடவினார். பின்னர் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குந்தவியின் பல்லக்கில் போட்டார்கள். குந்தவி குதிரை மீது ஏறிக் கொண்டாள். மறுபடியும் பிரயாணம் ஆரம்பமாயிற்று.
பொன்னன் போன இடத்தில் வெகு கஷ்டப்பட்டு ஒரு வைத்தியனைத் தேடிப் பிடித்தான். வண்டியும் அமர்த்திக் கொண்டு மகேந்திர மண்டபத்துக்கு வந்து, "மகாராஜாவுக்கு எப்படியிருக்கிறதோ?" என்று திக்திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள உள்ளே வந்து பார்த்த போது மண்டபம் சூனியமாயிருக்கக் கண்டான். அவன் தலையில் திடீரென்று இடி விழுந்தது போல் இருந்தது.
தொடரும்
Comments
Post a Comment