வட்டம் பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் பாகம் - 01 - 05

வாசகர்களுடன் ..............................


எனது நான்காவது நாவலான வட்டம்பூவை வீரகேசரி பதிப்பகத்தாரிடம் வெளியிடுவதற்காகக் கொடுத்திருந்தேன். 1977ம் ஆண்டு இலங்கையில் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழர் அழிப்பு, திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்தின் பன்முகப்பட்ட அடக்குமுறையாலும், ஆக்கிரமிப்பினாலும் தமிழ் மாணவர்கள் மிகவும் கொதித்துப் போயிருந்தனர். ஆயுதம் ஏந்தினால் மட்டுமே தமிழினம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்மானத்துடன் வாழவும், இழந்த தமது உரிமைகளை மீளப்பெறவும் முடியும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. எனது நாவல் இந்த விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் வீரகேசரியினர் இந்த நாவலை வெளியிட விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் இந்த நாவலை வெளியிடலாம் என்ற எண்ணம் அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால் நாவலின் கையெழுத்துப் பிரதியை விமான நிலையத்தினூடாக எடுத்துச் செல்வதில் ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தினால், சென்னைக்குச் சென்று அங்கேயே நாவலை எழுதி, யாராவது பதிப்பாளரிடம் கொடுத்துப் பதிப்பித்து, அதற்குப் பணமும் பெற்றுக்கொள்ளலாம் என எண்ணும் அளவுக்கு, எனது எழுத்துத் திறமையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டு கழிந்துள்ள இன்றைய நிலையில் எனது அப்பாவித்தனமான முட்டாள்தனத்தை நினைக்கையில் எனக்குச் சிரிப்பாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. 

1982 மார்கழி மாதம் சென்னை சென்று கோடம்பாக்கத்தில் நண்பரொருவர் வீட்டில் தங்கி எழுத ஆரம்பித்தேன். நான் தங்கியிருந்த அறையில் பாய் மட்டுமே இருந்தது. தரையில் அமர்ந்து, முழங்காலில் ஒரு மட்டையை வைத்து எழுதுவது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். போதாக்குறைக்கு, வயலில் நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொட்டாச்சிணுங்கி முள் கிழித்த காயம், மார்கழி மழைக்கால ஈரத்தில் வலியெடுக்க ஆரம்பித்து இலேசாகக் காய்ச்சலும் இருந்தது.

மனதிலே மட்டும் காவி வந்த கதையை, அடித்தல் திருத்தல் இன்றி, இரண்டு நாட்களில் எழுதி முடித்திருந்தேன். 150 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை, இரண்டு நாட்கள் அவகாசத்தில் ஒரு பரீட்சை எழுதியது போன்று எழுதிய அனுபவம்! பக்கத்துப் பிளாட்டில் இருந்த வானொலியில், அச்சமயம் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துகொண்டிருந்த ரெஸ்ற் கிரிக்கெட் ஆட்டத்தில், கவாஸ்கர் 300 ஓட்டங்கள் எடுத்துச் உலகசாதனை புரிந்துகொண்டிருப்பதைக் கேட்கக்கூடியதாகவும் இருந்தது.

மூன்றாம்நாள் நர்மதா பதிப்பகத்துக்கு நாவலை எடுத்துச் சென்றேன். உரிமையாளர் இராமலிங்கம், அப்போதிருந்த சூழ்நிலையில், என்போன்ற அறிமுகமில்லாத எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடுவதற்கு வாய்ப்பு இல்லையென்று அறுதியாகக் கூறிவிட்டார். நான் ஈழத்திலிருந்து பெரும் நம்பிக்கையுடன் வந்து, இதனை இரண்டு நாட்களில் எழுதியிருக்கின்றேன். ஒரு தடவை மேலோட்டமாக எனினும் படித்துப் பாருங்களேன் என நான் கேட்டதற்கு இணங்க அவர் கையெழுத்தப் பிதிதியை வாங்கி வைத்துக் கொண்டார்.

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் திநகரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதுமே ஆரத்தழுவிக்கொண்ட இராமலிங்கத்தார் கூறியதைக் கேட்டபோது எனது இதயம் பூரித்தது. கடந்த இரவு அவர் படுக்கைக்குச் செல்கையில் ஏனோதானோ என்று நாவலைப் படிக்க ஆரம்பித்திருந்தாராம். ஒரு சில பக்கங்கள் படித்ததும் அதை முழுவதுமாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம். முழுவதுமாகப் படித்து முடித்தபின்னரே நித்திரைக்குச் சென்றாராம். 'இது ஒரு சிறந்த நாவல். யுனிவேசல் தீம்!" என அவர் புகழ்ந்து பாராட்டியபோது எனக்கு உச்சி குளிர்ந்தே போய்விட்டது! ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது என்னால் இதனைப் பதிப்பிக்க முடியாது, வசதி வரும்போது பார்க்கலாம், நாவல் என்னிடமே இருக்கட்டும் என வாங்கி வைத்துக் கொண்டார். தனது இல்லத்தினுள்ளே அழைத்து, அவரும் அவரது பாரியாரும் எனக்கு காலையுணவு அளித்து மிகவும் அன்பாக உபசரித்ததை என்னால் எப்போதுமே மறக்கமுடியாது.

ஆனால் இராமலிங்கத்தார் குறிப்பிட்ட அந்த வசதி வரவேயில்லை.                    

1985ல் எனது நண்பரொருவர் நாவலின் கையயெழுத்துப் பிரதியை அவரிடமிருந்து பெற்று, சோமு புத்தகநிலையத்தின் அதிபரான இராமையா அவர்களிடம் தந்து, அதைப் பதிப்பிக்க உதவியிருந்தார். ஆனால், வட்டம்பூ என்ற பெயருக்குப் பதிலாக நந்தாவதி என்ற பெயர் தாங்கியே இந்த நாவல் வெளிவந்தது. இது எனக்குத் தெரியாமல் நிகழ்ந்த சம்பவம். பின்னர் இந்த நாவல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்று, தமிழ்நாட்டின் நூலகங்களில் இடம்பெற்றதாக அறிந்தேன். முகந்தெரியாத எழுத்தாளனான எனது நாவலைப் பெருமனதுடன் பதிப்பித்த பதிப்பாசிரியர் திரு.லெ. இராமையாவுக்கு நான் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அவர் இந்தக் கதைக்கு 1985 ல் எழுதிய பதிப்புரையை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

'ஈழநாட்டின் வளங்களையும், மக்கள் வாழ்க்கை முறைகளையும் சித்திரமாக்குவதில் தலைசிறந்தவர் இந்த நாவலாசிரியர் திரு. அ. பாலமனோகரன் அவர்கள்.

தற்கால ஈழநாட்டுச் சூழ்நிலையில் இனக்கலவரங்களும் அதன்வழி மக்கள் பாதிக்கப் படுகின்றதையும் இந்த நாவலில் சுட்டிக் காட்டுகின்றார் ஆசிரியர்.

ஈழத்தின் வன்னிப்பிரதேச மண்வாசனைக்குள் நாவலைக் குழைத்து நாவலின் பிறிதொரு ஊடகமாக பின்னணியில் சொல்லி, இறுதி வெற்றி மக்களுக்கே என்ற முடிவோடு  நாவலை நிறைவு செய்கின்றார்.

ஒரு சிங்களப் பெண்ணும், ஒரு தமிழ் இளைஞனும். இதன் பின்னணியில் இனக்கலவர நிகழ்ச்சிகள் ஓடுகின்றன. இதற்குள் இந்தப் பாத்திரங்கள் கலங்கி நிற்கின்றன.

குழுமாடுகளை அடக்குவதாக சித்தரிக்கும் இந்த நாவலாசிரியரின் பார்வை அவை வெறும் குழுமாடுகளைக் குறிக்கவில்லை என்பதை நாவலைப் படிப்பவர்கள் இலகுவில் கண்டுகொள்வார்கள்.

அசல் கிராமத்து மக்கள் இந்த இனவாதங்களுக்குள் இருந்து விடுபட்டு தமது உயிர்ப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்களா? இல்லையா? நாவலைப் படித்துப் பார்த்தால்  புரிந்துபோகும்."

லெ.இராமையா

இந்த நாவலை ஈழத்திலுள்ள வாசகர்களில் 99 வீதமானோர் படிக்கவேயில்லை. இந்தக் குறையை அப்பால்தமிழ் தீர்த்து வைக்கும் என எண்ணுகின்றன்.

நிலக்கிளியைப் போன்றே இந்தக் கதையும் வன்னி மண்ணையும், அங்கு வாழ்ந்த மக்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நிலக்கிளியைவிட இன்னுமதிகமானதும், வித்தியாசமானதுமான சங்கதிகளைச் சொல்கின்றது. குழுமாடு பிடிக்கும் கலையும், அதற்காகத் தயாரிக்கப்படுகின்ற 'வார்க்கயிறு" போன்றவையும், இன்றைய வன்னியில் இல்லையென்று கூறலாம். அதேபோன்று அன்று வன்னியில் வாழ்ந்த மக்களின் தனித்துவமான குணாதிசயங்களையும் இன்று வன்னி மக்களில் காண்பது மிக அரிதாகவே உள்ளது.

இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் பலர் உண்மையானவர்கள்தான். நந்தாவதியும், அவள் தந்தையான குணசேகராவும் கற்பனைப் பாத்திரங்கள். இதை எனது பிரதேச மக்கள் இலகுவாகக் கண்டுகொள்வர்கள்.

வட்டம்பூ என்ற மூலப்பெயரிலேயே இந்தக் கதை இணையத் தளத்தில் வெளியாவது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. நிலக்கிளி நாவலை வீரகேசரி தாபனம் பதிப்பிக்க முன்வந்தபோது, அதன் பெயரை மாற்றவேண்டுமென்று கேட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. நாவல் பதிப்பிக்கப்படாது போயினும், நிலக்கிளி என்ற பெயரை மாற்றுவதற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று நான் உறுதியாகக் கூறியிருந்தேன். நல்ல காலம்! எஸ் பாலச்சந்திரன் எனது எண்ணத்துக்கு இணங்கி வந்திருந்தார்.

வீரகேசரி தாபனம் நிலக்கிளியை அக்காலம் பிரசுரிக்க முன்வராதிருந்தால், இன்று நிலக்கிளி நாவலும் தொலைந்து போயிருக்கும், நானும் பெயரில்லாது வாழ்ந்திருக்கக்கூடும்! அதற்காக இன்றும் நான் வீரகேசரி தாபனத்துக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்நாட்களில் ஒரு சாதாரண, வசதியற்ற எழுத்தாளன் தனது நாவலைப் பதிப்பித்து, வெளியிட்டு, வினியோகமும் செய்வதானால் அவன் பெரும் இழப்புக்களைச் சந்திக்க நேரிடுவதுண்டு.

இந்த நாவலை நான் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்த முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின், பல்கலைக்கழக புகுமுகு வகுப்பில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று அங்கு மாணவர் தலைவனாகவும் திகழ்ந்தான். அவனுடைய விழிகளின் ஒளி, சிறுமைகண்டு பொங்கும் இயல்பு, ஒரு நாளைக்குள் உலகைத் திருத்திவிட முயலும் உணாச்சிக் கொந்தளிப்பு என்பனவற்றைத்தான் இக்கதையில் காந்தி என்ற பாத்திரத்தில் கொண்டுவர முயன்றேன். கதையின்படி அவன் தனது இலட்சியத்தை அடைவதற்காக தாயைவிட்டு, ஊரைவிட்டு மறைந்தே போகின்றான். அவன் தன் போராட்டப் பாதையில் நிச்சயம் வெற்றி பெறுவான், தன்னைப்போன்று ஆயிரமாயிரம் இளந்தமிழர்களை உருவாக்குவான் என எண்ணியிருந்தேன்.

நிச்சயமாக அவன் தன் பணியைச் செவ்வனே செய்திருந்தான். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவனும் இன்று எம் மண்ணுக்காக உயிர்தந்த ஆயிரமாயிரம் மாவீரர்களில் ஒருவனாகிவிட்டான். குமுளமுனைக் கிராமத்தில் உதித்து, உதிர்ந்து, இன்று வானத்து நட்சத்திரங்களுள் ஆகிவிட்ட இளைஞர்களில் அவனும் ஒருவன்.

மாணவசக்தி என்பது மிகவும் வலிமையானது. குழந்தைப் பாராயத்தில் தெய்வங்களாகவே இருந்தவர்கள், வாலிபவயதில் உலகாயுதம் சற்றுக் கலந்து, தேவ, தேவியராக ஆகின்றனர். இந்த அற்புதக் குமரப்பருவத்தில் அவர்கள் பிறருக்காகத் தமது உயிரையே அளிக்கத் தயாராக இருக்கின்றனர். இவர்களது குற்றமற்ற இரத்தத்தின் அர்ப்பணிப்பில்தான் உன்னத இலட்சியங்கள் நிறைவேறுகின்றன. இளகிய பசுந்தங்கம் இறுகிய வைரமாவதும் இந்தப் பருவத்தில்தான். இந்தப் பருவம் கடந்தபின் அவர்களை உலகம் முழுவதுமாக ஆட்கொண்டுவிடுகின்றது. அப்போது அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகின்றனர். சுயநலம் அவர்களை இவ்வாறு மாற்றிவிடுகின்றது. இது தவிர்க்கமுடியாத பரிணாம மாற்றங்கள். ஆனால் தமது மனத்தூய்மை;, வைராக்கியம் என்பன காரணமாக மனித நிலையிலிருந்து மாமனிதர்களானவர்களும் உண்டு. அதையும் கடந்த நிலையில், மாந்தருக்குள் தெய்வங்களாக வாழ்ந்தவர்களும் உண்டு.

இன்று ஈழத்தில் மாணவர்களின் உணர்வுகள் மிகவும் கொந்தளித்த நிலையில் இருக்கக் காண்கின்றோம். அன்று, மாணவசக்தியின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட அத்திவாரங்களில்தான் இன்றைய ஈழம் எழுந்து நிற்கின்றது. நாளை ஈழம் மகுடம் சூட்டிக்கொள்ளப் போவதற்கு ஆதாரசக்தியாக இருக்கப்போவதும் மாணவர் சக்திதான்!

வட்டம்பூ கதையிலும் இந்த மாணவ சந்ததியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தி என்ற மாணவன் வந்த போகின்றான். அவனைப் போன்று எமது மண்ணிற்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த புண்ணியர்களில் அவனும் ஒருவன்.

இக் கதையை எழுதிய காலத்தில் எனக்கிருந்த அறிவு, அனுபவம் என்ற வரையறைகளுள்தான் இந்தப் படைப்புக் கட்டுப்பட்டு நிற்கின்றது. எனவே அவற்றையொட்டிய குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும், அந்தக் கால வன்னி மண்ணையும், மக்களையும் இந்தக் கதை நிச்சயம் இன்று நம் கண்முன் நிறுத்தும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

வன்னி மண்ணைத் தளமாகக்கொண்டு; உருவாகிய 'வட்டம்பூ" என்ற எனது நாவலைத் தொடர்கதையாக அப்பால்தமிழில் வெளியிடுவதற்கு மனமுவந்து இடமளித்த கி.பி.அரவிந்தனுக்கும்; அப்பால்தமிழ் குழுமத்துக்கும் முதலில் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதோ உங்கள் பார்வைக்கு வட்டம்பூவைச் சமர்ப்பிக்கின்றேன்!

பணிவன்புடன்

நிலக்கிளி பாலமனோகரன்
டென்மார்க்
14.01.2006

**************************************************************
 வட்டம் பூ அத்தியாயம் 01 

பழையாண்டாங்குளத்துக்கும் மேற்கே காட்டின் மேலாகச்  சூரியன் சரிந்துகொண்டிருந்தான். பலநூறு ஆண்டுகளுக்கு  முன்னர் நல்ல நிலைமையிலிருந்த அந்தச் சின்னக்  குளத்தின் கட்டுகள் உடைந்தும், சிதிலமடைந்தும் கிடந்தன.  ஒருகாலத்தில் ஸ்திரமாக இருந்த பெரிய குளக்கட்டில்  பாலையும், வீரையும், வேறு மரங்களும் வளர்ந்து  விசாலித்துக் கிளைபரப்பி நின்றன. அந்தக் காட்டு  மரங்களின் வேர்களும், மேல்கைக் காடுகளிலிருந்து மழைக்காலத்தில் பெருகிவரும் காட்டாற்று வெள்ளமும், குளக்கட்டை உடைத்துச் சிதைத்திருந்தன.

அப்படியானதொரு உடைப்பிலே, உயரே கற்களின் இடையே தன்னை மறைத்துக்கொண்டு கிடந்தது ஒரு பெரிய  கருஞ்சிறுத்தை. மூக்கு நுனியிலிருந்து வால் முனைவரை  பதினான்கு அடிகள் நீளமான அந்தச் சிறுத்தை, தன்னைச்  சுருக்கி ஒரு பந்துபோல ஆக்கிக்கொண்டு, இரண்டடி  அகலாமான பாறை இடுக்கினில் பதுங்கிக் கிடந்தது. பல  நாட்களாகவே இரை கிடைக்காது வெம்பசியில் வாடியிருந்த  அந்தச் சிறுத்தையின் விழிகள், ஆள் உயரப் புற்கள் மண்டி  வளர்ந்துகிடந்த குளத்தின் மையப்பகுதியையே கவனித்துக்  கொண்டிருந்தன.

அங்கே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் தம்  செவிகளை மடித்து நிமிர்த்துவதுகூட, அவற்றைக்  கடந்துவந்த காற்றில் சிறுத்தைக்குக் கேட்டது. நண்பகலில்  இருந்தே அவற்றைக் குறிவைத்துப் பதுங்கியிருந்த அந்தச்  சிறுத்தை, பொழுது கருகையில் அவை தம் தலத்துக்குச்  செல்லும் வழியில் காத்துக் கிடந்தது.

காட்டு விலங்குகளிலேயே மிகவும் மூர்க்கமானது  காட்டெருமைதான்! அசுரபலமும், அதிவெருட்சியும்  கொண்ட காட்டெருமைகள் எப்பொழுதும் சிறு  மந்தைகளாகவே சேர்ந்து வாழும். அந்த மந்தைகளுக்குத்  தலைமை தாங்கும் ஆண் எருமையைக் கலட்டி நாம்பன்  அல்லது கலட்டியன் என்பார்கள்.
இப்போ, பழையாண்டாங்குளத்தில் மேய்ச்சலை  முடித்துக்கொண்டு தமது தலத்தை நோக்கிப் புறப்பட்ட  எருமைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலட்டியன்,  ஒரு சின்ன யானை அளவுக்குப் பெரியதாக, பருத்து  அகன்று வளைந்த கூரிய கொம்புகளுடன், ஒரு தானைத்  தளபதிக்கேயுரிய மிடுக்கான கம்பீரத்துடன், தன் கூட்டத்தை  வழிநடத்தி வந்துகொண்டிருந்தது. மெல்லோட்டமாக முன்னே ஓடிவந்து, செல்லும் பாதையைச் சுவடிப்பதும்,  பின்பு தனது மந்தையைச் சுற்றிவந்து கண்காணிப்பதுமாக  கலட்டியன் வந்துகொண்டிருந்தது. காட்டெருமைகள் அருகே  வருவதற்குக் காத்துக்கிடந்த சிறுத்தையின் கவனம்  முழுவதும், அந்தக் கூட்டத்தின் பின்னே, கீரைப்பூச்சி  பிடித்துச் சோகையான காரணத்தினால், தயங்கித் தயங்கிப்  பின்தங்கி வந்துகொண்டிருந்த ஒரு எருமைக் கன்றில்  குவிந்திருந்தது. பெரிய எருமைகளில் வாய்வைத்துத்  துவம்சமாகிப் போவதற்கு அதற்கென்ன பைத்தியமா!

அசைந்து அசைந்து வரும் கருங்குன்றுகள் போன்ற  எருமைகள், அந்த உடைப்பின் வழியாக நெருங்கி  வருகையில், சிறுத்தை தனது வாலை அசைத்து, உடலைச்  சுருக்கி, எருமைக் கன்றின்மேல் பாய்வதற்குரிய  சமயத்தைக் கணித்துக் கிடந்தது. முன்னே வழிநடத்திச்  செல்லும் எருமைகளுக்குச் சிறுத்தையின் மணம் காற்றில்  தெரிவதற்கு முன்னர் அது கன்றைப் பிடித்தாக வேண்டும்!

இதோ, மிகவும் பின்தங்கிவரும் எருமைக்கன்று, இன்னமும்  சில கணங்களில் சிறுத்தையின் இலக்குக்குள் வந்துவிடும்.  அதன்மேல் பாய்ந்து, அதன் குரல்வளையைத்  துண்டிப்பதுடன், மார்புக்கூட்டையும் அறைந்து  பிளந்துவிட்டு, சட்டென மறுபடியும் உயரே பாறைக்குத்  தாவி விடவேண்டும்! சிறுத்தையைக் கண்ட எருமைகள்  வெருண்டு கலவரமடைந்து அந்த இடத்தையே திமிலோகப்  படுத்திவிட்டு, இருட்டியதும் தமது தலத்துக்குச்  சென்றுவிடும். அதன்பின் ஆறுதலாகக் கீழே இறங்கிவந்து,  அதன் ஈரலையும், குடல் போன்ற மென்மையான  பாகங்களையும் குருதிதோயச் சுவைத்து..

நாவில் ஊறிய நீர் சொட்ட, வில்லிலிருந்து விடுபட்ட  அம்புபோல் எகிறிப் பாயந்த சிறுத்தை, நொடிப்  பொழுதுக்குள் கனகச்சிதமாகத் தன் வேலையை முடித்து  விட்டுச் சட்டென உயர எம்பிப் பாறையில் தாவியபோது,  அசந்தர்ப்பமாக அந்தச் சிறுபாறை பெயர்ந்து  சிறுத்தையுடனேயே தரையில் வந்து விழுந்தது.
இதற்குள் அந்த இடத்திற்குப் புயலாக விரைந்து வந்த  கலட்டியன், சிறுத்தை சுதாரித்துக்கொண்டு எழுவதற்கு  முன்பே, வஜ்ஜிராயுதம் போன்ற தன் கொம்புகளால் அதைத்  தாக்கியது. அடிக்கடி ஆற்றுமணலிலும், கடினமான  கறையான் புற்றுக்களிலும் உராய்ந்து கூர்மை பெற்றிருந்த  கலட்டியனின் கொம்புகள், நீண்ட உடலைக்கொண்டிருந்த  சிறுத்தையைக் குத்திக் கிழித்துக்கொண்டு மறுபுறம் குருதி  கொப்பளிக்கப் புறப்பட்டன.
பயமும், வெருட்சியும், மூர்க்கமும், வெறியும் கொண்ட  கலட்டியன், தன் கொம்பிரண்டிலும் சிக்கிக்கொண்ட  சிறுத்தையை அகற்றிவிடுவதற்காகத் தனது மத்தஜம்  போன்ற தலையை உலுப்பியபோது, உயிரற்ற சிறுத்தையின்  உடல், இன்னும் வசமாகவே சிக்கிக்கொண்டது.

இந்தப் போராட்டத்தில் சிறுத்தையின் ஆக்ரோஷமான  உறுமல்களும், கலட்டியனின் வெருட்சி நிறைந்த  முக்காரமுமாக அந்த இடமே திமிலோகப்பட்டது.  கலட்டியனின் எருமைக்கூட்டம் சிதறியோடிவிட்டது.  கலட்டியனோ தன் கொம்புகளில் சிக்கிக்கொண்ட அந்தக்  கருஞ்சிறுத்தையின் நெடிய உடலைச் சுமந்தவாறே காடு  கரம்பையெல்லாம் பாய்ந்து, அதை அகற்றிவிடப்  படுபிரயத்தனம் செய்துகொண்டது.

(வளரும்)

*******************************************************
வட்டம் பூ  அத்தியாயம் 02 

தண்ணீரூற்றில் இருந்து காலை ஆறுமணிக்குப் புறப்பட்ட பஸ், குமுளமுனை மலைவேம்புச் சந்தியை ஆறரை மணிபோல் வந்தடைந்தபோது, சோனாதிராஜன் இறங்கிக்கொண்டான்.

குமுளமுனைக்குக் கிழக்கே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால், அவனுடைய தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் குக்கிராமத்துப் பனைகளின் தலைகள் தொலைவிலே தெரிந்தன.
செல்வன் ஓவசியர் வாயில் வேப்பங்குச்சியுடன் வயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். சோனாதிராஜனைக் கண்டதுமே, 'என்ன மருகனே ஆண்டாங்குளத்திற்கா பயணம்? அடியேன் உமது பேரன் சிங்கராயரை மிகவும் விசாரித்ததாகக் கூறும்! நல்ல வெய்யில் வீழ்ந்து நீவீர் உடும்பு வேட்டையாடினால் என்னையும் மறந்துவிடாது இருக்கும்படி கூறும்! யான் செல்கின்றேன்!" எனச் சொல்லிவிட்டுப் போனார் செல்வன் ஓவசியர்.

செல்வன் ஓவசியர் மிகவும் தமாஷான பேர்வழி! அவர் இலக்கண சுத்தமாகவும், அதேசமயம் நையாண்டியாகவும் பேசுகையில் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.
சென்றவருடம் இதேபோன்று ஒரு தை மாதத்திலே அவர் ஆண்டாங்குளத்துக்குப் பனங்கள் குடிப்பதற்காக வந்திருந்தார். காலைப் பனங்கள் என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை! சீவல்காரக் கந்தசாமியைக் கையில் முட்டியுடன் கண்டதுமே அவர் சினிமாப் பாணியில், 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்!" என அட்டகாசமாகப் பாடினார். கந்தசாமி கள்ளுச் சீவ ஆரம்பித்துச் சிலநாட்களே சென்றிருந்தன. 'இன்னும் அஞ்சாறு நாள் போகவேணும் ஓவசியர்!" என்றதுமே, ஓவசியர் சட்டென்று, ''ஆ.. ஐந்தாறு நாட்கள் போகட்டும்!" என்ற சினிமாப் பாடலைத் தொடர்ந்து பாடி ஆர்ப்பாட்டமாகச் சிரித்து மகிழ்ந்ததை, ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்த சேனாதிராஜன் இப்போதும் நினைத்துச் சிரித்தான்.

பரவைக் கடலை அடைந்ததும் சேனாதிராஜன் நடப்பதற்கு வசதியாகச் சாறத்தை உயர்த்தி மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் கொண்டுவந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டான்.
அவனுக்குப் பதினாறுவயது இளங்குமரப் பருவம். தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் உடல்வாகைக் கொண்டிருந்த அவன், கம்பீரம் மிக்க காளையாக நடைபோட்டான்.

சிங்கராயரைப் பார்ப்பவர் யாரும் அவருக்கு வயசு அறுபத்தைந்துக்கும் மேல் என்று சொல்லவே மாட்டார்கள். கருங்காலி வைரம் போன்ற நெடிய உடல்வாகு. தலையில் கருகருவென்ற கட்டுக்குடுமி. இப்போதும் ஒரு முழுக்கொட்டைப் பாக்கைக் கொடுப்பினுள் வைத்து மடுக்கெனக் கடிக்கும் பல்வன்மை.
அவருடைய இளைய பதிப்பாகிய சேனாதிராஜன், பரவைக் கடலினூடாக ஆண்டாங்குளம் செல்லும் ஒற்றையடிப் பாதையில் தரித்து, அந்த அழகிய சுற்றாடலை நோக்கினான்.
தைமாதப் பனி இன்னம் முழுதாக அகன்றிருக்கவில்லை. ஆண்டாங்குளத்துக்கு மேலே வெகுதூரம், இப்போது சிங்களக் கிராமமாய் ஆகிப்போன பதவியாவரை, வியாபித்திருந்த காட்டை வருடிவந்த காலையிளங்காற்று அவனுடைய முகத்தில் மோதியது.

கிழக்கே எழுந்த இளஞ்சூரியனின் கதிர்கள் அச் சூழலையே பொன்னிறமாக அடித்துக் கொண்டிருந்தது.
மூலிகைகளின் சுகந்தம், கடல்நீரின் வாசம், பனியின் சீதளம், இவையனைத்தும் கலந்த காற்றை நெஞ்சார இழுத்துச் சுவாசித்த சேனாதிராஜனின் உடலெங்கும் புத்துணர்வு பாய்ந்தது. அவனுடைய இளநெஞ்சம் எம்பித் துள்ளியது.

'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக" என உற்சாகமாக வாய்விட்டுப் பாடியபடியே நடந்தான் சோனாதிராஜன். சினிமாப் பாடல்கள் என்றாலே அவனுக்குக் கொள்ளை ஆசை. இனிய குரல்வளமும், கம்பீரமான சாரீரமும் கொண்ட சேனாதிராஜன், தனக்குப் பிடித்த பாடல்களை இரசித்துப் பாடிக்கொள்வான். முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அவனுக்கு, சனிஞாயிறு வந்துவிட்டாலே உற்சாகம் கரைபுரளும். அவனுடைய தாய் கண்ணம்மா, ஆண்டாங்குளத்திலே வசிக்கும் தனது பெற்றோருக்கு, மகன் சேனாதி மூலமாகத் தேவையான பொருட்களை அனுப்பி வைப்பாள்.
இந்த முதிர்வயதிலும் அவர்கள் அந்தச் சின்னஞ்சிறு காட்டுக் கிராமத்தில் தனியே வசிப்பது அவளுடைய மனதுக்கு மிகவும் கஷடத்தைக் கொடுத்தது. அவர்களுடைய ஒரே பிள்ளையான அவள், தன் கணவனுடைய கிராமமாகிய தண்ணீரூற்றில் வாழ்ந்து வந்தாள். அவளும் அவளுடைய புருஷன் சுப்பிரமணியமும் எவ்வளவோ வற்புறுத்தியும், சிங்கராயர் ஆண்டாங்குளத்தை விட்டு வரவிரும்பவில்லை. பிறந்த மண்ணிலும், அவருடைய கறவையினத்திலும் அவருக்கு அத்தனை பிடிப்பும், பாசமும் இருந்தன. எனவே தன் மகன்மூலம், சனிஞாயிறில் அந்தத் தம்பதிகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்புவதில் ஆறுதல் கண்டாள் கண்ணம்மா.

சேனாதிராஜனின் வருகை கண்டு கடலில் மேய்ந்துகொண்டிருந்த சிறகைக்கூட்டம் ஜிவ்வென்ற இரைச்சலுடன் மேலெழுந்து ஆண்டாங்குளத்தை நோக்கிப் பறந்தன.

அவன் அரையளவு ஆழமும், ஏறத்தாழ அறுபது யார் அகலமுமாகக் கிடந்த முதலாவது ஆற்றை அடைந்தபோது, அங்கு வள்ளக்காரக் கயிலாயரைக் காணவில்லை.
பொருட்கள் நிறைந்த பையைத் தரையில் வைத்துவிட்டு, கையிரண்டையும் வாயருகே வைத்துக் குவித்து, 'ஓ..ஹோ...." என நீட்டிக் குரல் கொடுத்தான் சோனாதிராஜன்.

பாதையின் கடைசியில் இருந்த நித்தகை ஆற்றையும், சேனாதிராஜன் நின்றிருந்த தண்ணிமுறிப்பு ஆற்றையும் இணைக்கும் சிற்றாறுப் பக்கமாகக் கயிலாயரின் பதில் குரல் கேட்டது.
கரையெங்கும் காடாய் மண்டிக்கிடந்த காட்டுப் பூவரசுகள் உதிர்த்த மலர்கள், மஞ்சளும் சிவப்புமாய் ஆற்றில் மிதந்தன. அவற்றை விலக்கிக்கொண்டு வள்ளம் கரைக்கு வரமுன்னரே தண்ணீரில் இறங்கி வள்ளத்தில் தொத்திக் கொண்டான் சேனாதிராஜன்.

நெற்றி நிறைய ஐயன்கோவில் திருநீறும், வாய் நிறையச் சிரிப்புமாக வரவேற்றார் கயிலாயர். பையை வள்ளத்தினுள் வைத்துவிட்டுக் கயிலாயரிடமிருந்து கம்பை வாங்கி இலாவகமாக வள்ளத்தைத் திருப்பினான் சேனாதிராஜன்.

'இண்டைக்குச் சனிக்கிழமை, கட்டாயம் நீ வருவாய் எண்டு நந்தாவதி சொன்னவள்"  ஆசுவாசமாக அமர்ந்துகொண்ட கயிலாயர் சொன்னார்.

'நந்தாவோ!?.. எப்ப வந்தவள்?" ஒருகணம் கம்பு ஊன்றுவதை நிறுத்திய சேனாதிராஜன் வியப்புடன் கேட்டான்.
'அவள் அங்கை கண்டியிலை மாமன் மாமியோடை நிக்கப் புறியமில்லை எண்டு தேப்பனோடை புதன்கிழமை வந்திட்டாள்.. .. என்ன இருந்தாலும் சொந்தத் தாயிருக்கிறதுபோலை வருமே!"

தொடர்ந்து கம்பையூன்றி வள்ளத்தைச் செலுத்திய சேனாதிராஜன் நந்தாவை நினைத்துக் கொண்டான்.

வளரும் 

***********************************************************

 வட்டம் பூ அத்தியாயம் 03 

ஆண்டாங்குளத்துக்கு மேலே ஏழெட்டு மைல் தூரத்தில் கிடந்த புராதனக் குளமாகிய நித்தகையைப் புனருத்தாரணம் செய்யும் திட்டங்களுக்கு முன்னோடியாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் நில அளவைப் பகுதியின் சிறு குழுவொன்று ஆண்டாங்குளத்துக்கு வந்து முகாமிட்டிருந்தது.

அனைவரும் சிங்களவராக இருந்த அந்தக் குழுவுக்குத் தலைமைக் கங்காணியாக இருந்தான் குணசேகரா. அவன் அங்கு வந்து சில மாதங்களுள் கண்டியில் அவனது மனைவி, இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிடவே, அவன் தன் மகள் நந்தாவதியை ஆண்டாங்குளத்துக்கே அழைத்துக்கொண்டு வந்திருந்தான். அப்போது பதின்மூன்று வயதாக இருந்த நந்தாவதி தகப்பனுக்கு வேண்டிய வேலைகளைக் கவனித்துவிட்டு, சிங்கராயரின் வீட்டுக்கே வந்துவிடுவாள்.

அவருடைய மனைவி செல்லம்மாவுக்கு நந்தாவதி என்றால் அபாரப் பிரியம். வயோதிபத்தின் வாசலுக்கு வந்துவிட்ட அவளுக்கு, தன் மகள் கூடவே இல்லாத குறையை நந்தாவதியின் வரவு போக்கியது. சனிஞாயிறில் சேனாதிராஜன் ஆண்டாங்குளத்துக்கு வரும்போதெல்லாம் நந்தாவதியும் அவனுடன் கூடவே மாடு சாய்க்கவும், காட்டில் கரம்பைப்பழம பிடுங்கவும் செல்வாள். அப்போதுதான் தமிழைப் பேசப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்த நந்தாவதி, அடிக்கடி சேனாதிராஜனின் பரிகாசத்துக்கும், கேலிக்கும் இலக்காவது வழக்கம். அவளோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே சேனா! சேனா! என்று அவனையே சுற்றிவருவாள்.

'அங்கை பாத்தியே தம்பி அந்தக் கரையை!" எனக் கயிலாயரின் குரல் சேனாதிராஜனைச் சிந்தனையிலிருந்து விடுவிக்க, அவன் திரும்பி அவர் காட்டிய திசையில் கவனித்தான்.

ஆற்றின் வடக்கே ஒரு புல்மேட்டில் வெகுசுகமாக வெய்யில் காய்ந்துகொண்டு கிடந்தது ஒரு பெரிய முதலை. அத்தனை பெரிய முதலையை சேனாதிராஜன் இதுவரை கண்டதில்லை.

'உது செம்மூக்கன் முதலை சோனாதி! முதலையளுக்கை மகாகெட்டது இந்தச் செம்மூக்கன்தான்! .. உதுகளுக்கு மூக்கிலை கோவமாம்! .. ஆனால் உவற்றை வேலையொண்டும் இஞ்சை சரிவராது!.. .. ஆட்டைக் கடிப்பார்.. .. மாட்டைக் கடிப்பார்.. .. ஆனால் ஆளைக் கடிக்கமாட்டார்! .. .. ஆண்டாங்குளத்து ஐயன் சும்மா லேசுப்பட்டதே என்ன!" எனக் கயிலாயர் கூறிக்கொண்டார்.

அவர் கூறியதிலும் உண்மை இருக்கவே செய்தது. அந்தக் காட்டுக் கிராமமாகிய ஆண்டாங்குளத்தின் ஐயன் அந்த வட்டாரமெங்கும் பிரசித்திபெற்ற காட்டுத்தெய்வம். அக்கம்பக்கத்து ஊர்களில் களவுபோனால் சந்தேகநபரை ஆண்டாங்குளத்துக்கு அழைத்துவந்து, ஐயன் சந்நிதியில் எரியும் கற்பூரத்தை அணைத்து,  'நான் களவாடவில்லை!" என்று சத்தியம் செய்யச் சொல்வார்கள்.

ஒருமுறை, தங்கச் சங்கிலியொன்றைத் திருடிய ஒருவன், இங்கே வந்து தான் திருடவில்லை என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கின்றான். முதற் தடவையிலேயே, எரிகின்ற கற்பூரம் அணையாமற் போனதில் நாகாத்தைப் பூசாரிக்குச் சந்தேகம். 'மோனை!.. .. நீ சங்கிலியை எடுத்தா அதைக் குடுத்திடு!.. வழக்குக் கணக்கில்லாமல் நான் பாத்துக்கொள்ளுறன்!.. பொய்ச் சத்தியம் மட்டும் செய்யாதை!" என்று எச்சரித்திருக்கின்றாள். அவன் அதற்கும் மசியாமல் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கின்றான். அன்று மாலை அவன் ஆண்டாங்குளத்தை விட்டுச் செல்வதற்கிடையிலேயே, நாகந்தீண்டி மரணமான சங்கதியை அவனுடைய பாட்டி செல்லம்மா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றான் சேனாதி.

இறுதி நதியான தண்ணிமுறிப்பு ஆற்றின் இறங்குதுறையான பாலையடி இறக்கம் இப்போ கண்ணில் தென்பட்டது. அந்த இடம் ஆண்டாங்குளத்திலேயே சேனாதிக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். கரையை வளைத்தோடும் காட்டாறு ஆண்டுதோறும் பெருக்கின்போது குவிக்கும் மணல்மேட்டில் ஒரு ஒற்றைப் பாலைமரம் நின்றது. அந்த வெண்மணல் திட்டின் ஓரங்களில் மண்டிக் கிடக்கும் வட்டம்பூச்செடிகளில் எப்போதுமே பூக்கள் இரத்தச் சிவப்பாய்ச் சில்லென்று பூத்து நிற்கும்.

கரையை அண்மித்ததுமே துள்ளிக் குதித்து இறங்கிக்கொண்ட சேனாதி, பன்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக நடந்தான். வெள்ளை மணலாய் நீண்ட வண்டில் பாதையின் இரு ஓரங்களிலும், குட்டையான பொன்னாவரசம் செடிகள் பொன்னிறப் பூக்களைச் சுமந்து நின்றன. அருகே பரந்துகிடந்த பச்சைப் புல்வெளியில் ஆங்காங்கே வாகை மரங்கள் ரோஜா வண்ணப் பூக்களைப் புஷ்பித்து நின்றன. இவற்றின் அழகை மாந்தி நடந்த சேனாதி, திடீரென மிக அருகில், அடர்த்தியான ஒரு பொன்னாவரசுஞ் செடிக்குப் பின்னாலிருந்து 'ம்பா!" என்ற ஒலி கேட்டபோது விக்கித்துப் போனான். அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள், பூத்துக் குலுங்கிய அந்தச் செடிக்குப் பின்னாலிருந்து கலகலவெனச் சிரித்துக்கொண்டே நந்;தாவதி எழுந்தபோது சேனாதி, பயப்படுத்தி விட்டாளே என்ற அவமானமும், நந்தாவா இது என்ற வியப்பும் கலந்த ஒரு உணர்வுடன் அவளைப் பார்த்தான்.

'ஆ!.. பயங் .. பயம்.. நல்லாப் பயந்திடடீங்க! .. இல்லையா சேனா!" என மீண்டும் சிரித்தாள் நந்தா.

இயல்பாகவே சிவந்த முகத்தையுடைய நந்தாவதி சிரித்தபோது அவளுடைய கன்னங்களில் செம்மை படர்ந்தது. அவளுடைய அகன்ற கருநாவற் கண்கள் காலைக் கதிர்களின் ஒளியை வாங்கி இறைத்தன. முருக்கம்பூ இதழ்களுக்கு இடையே முத்துக்கள் மின்னின.

இதற்குள் சுயநிலைக்குத் திரும்பி விட்டிருந்த சேனாதி, 'நந்தா! என்னட்டைக் குட்டு வாங்கினதெல்லாம் மறந்து போச்சுது போலை!.. இண்டைக்கு முதல் நாள் எண்டபடியால் சும்மாவிடுறன்!.." எனச் சிரித்தவனாய்த் தொடர்ந்து, 'அதுசரி.. என்ன இப்ப நந்தாவுக்கு தமிழ் கொஞ்சம் நல்லாய் வருது?" எனக் கேட்டான்.

சேர்த்திருந்த விறகுக் கட்டைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுடன் நடந்த நந்தாவதி, 'அப்படியா!..ஸ்துதி!.. மிச்சங் நன்றி சேனா!.. கண்டியிலை நம்ம மாமி வூட்டுக்குப் பக்கத்திலை இருக்கிறது ஒரு இந்தியா அக்காதானே!.. அவங்களோடை நான் தினம் பேசிப் பழகினது!" எனப் பெருமையுடன் கூறிக்கொண்டாள்.

அவர்களிருவரும் சேர்ந்து நடந்து வந்த பாதை கிராமத்தருகில் கிளைவிட்டுப் பனைகளுக்கூடாகப் பிரிந்தபோது, 'நா அப்புறமா வர்றேன் சேனா!" என விடை பெற்றுக்கொண்டாள் நந்தா.

சேனாதிராஜன் பனகளினூடாக நடந்து சென்று எருமைகள் அடைக்கும் பட்டியை அடைந்தபோது, அவன் பிரியமாக வளர்க்கும் மான்குட்டி அவனைக் கண்டு, அதன் கழுத்தில் கட்டியிருந்த சிறிய மணி சப்திக்க அவனிடம் துள்ளிக்கொண்டு வந்தது. அதனைத் தடவிக் கொஞ்சிவிட்டுப் பட்டியினுள் பிரவேசித்தபோது, இளங்கன்றுடன் நின்ற தம்பிராட்டி எருமை சற்று வெருண்டது. 'ஓ..ஹோ!.." என ஒரு குறிப்பிட்ட ஓசை லயத்தில் அவன் குரல் எழுப்பியபோது அது அவனை இனங்கண்டுகொண்டு மீண்டும் தன் சொரசொரத்த நாவினால் கன்றை நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது.

மாதாளை எருமையில் கோவணத்துடன் பால் கறந்துகொண்டிருந்த சிங்கராயர் பேரனின் வரவுகண்டு மனைவியை அழைத்தார்.

'மனுசி! மனுசி!.. தம்பி வந்திட்டான்.. பாலைக் கொண்டுவந்து குடு!" என்று குரல் கொடுத்தார்.

சிங்கராயர் சாதாரணமாகப் பேசினாலே அதிரும். அவருடைய அந்தத் தொனியே அவருக்கு ஒரு தனிக் கம்பீரத்தைக் கொடுத்தது. சுண்டக் காய்ச்சிய பசும்பாலை, புளிபோட்டுத் துலக்கிய வெண்கல மூக்குப்பேணியில் கொண்டுவந்து பேரனிடம் கொடுத்துவிட்டு அவன் கையிலிருந்த பன்பையை வாங்கிக்கொண்டு, சேனாதியைப் பெருமையுடனும், வாஞ்சையுடனும் பார்த்தாள் செல்லம்மா ஆச்சி.

சிங்கராயர் கன்னங்கரேலென்று கருங்காலி மரம் போன்றிருந்தால், அவருடைய மனைவி அக்கினிக் கொழுந்து போலிருந்தாள். முதுமையினால் தேகம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் அவளுடைய உடலில் மான்கொடியின் வலிமை உள்ளுர ஓடியது.

'ராசா! கொம்மா, கொப்பா, தங்கச்சி எல்லாரும் சுகமே?" என அன்புடன் விசாரித்தாள் செல்லம்மா ஆச்சி.

'தம்பி! பாலைக் குடிச்சிட்டுச் சேட்டைக் கழட்டி ஆச்சியிட்டைக் குடுத்திட்டுத் தாமரையைக் கற!.. இண்டைக்கு நல்ல வெய்யில் எறிக்கும்!.. உடும்புக்குப் போவம்!" என அதிர்ந்த சிங்கராயர் தொடர்ந்து, 'மனுசி!.. நாயளுக்கு சோத்தைக் கீத்தை வைச்சிடாதை! வயிறு காஞ்சால்தான் உடும்பிலை போவினம்!" எனக் கட்டளையிட்டுவிட்டு மிகத்துரிதமாகப் பாலைக் கறந்துகொண்டார்.
  
பருத்த பாற்கலயங்கள் நிறைந்து நுரைக்க, அவற்றின் பாரம் கைகளை இழுக்க, பாட்டனும் பேரனும் ஆச்சியிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு, கிணற்றடிக்குச் சென்று கைகால் அலம்பிக்கொண்டனர்.

ஆச்சி கொடுத்த அரிசிப் பிட்டையும், ஆடை தடித்த தயிரையும் அவசரமாகச் சாப்பிட்டு முடித்த சேனாதி, வேட்டைக்குக் கிளம்புவதற்காக சிங்கராயரின் பழைய ஸ்ரீவன்ஸ துவக்கை எடுத்து முறித்தான். அந்தச் சப்தம் கேட்டதுமே சிங்கராயரின் வேட்டைநாய்கள் நான்கும் வீட்டைச் சுற்றிவந்து வேட்டம் பாய்ந்து உறுமி, மயிரைச் சிலிர்த்து வேட்டைக்குச் சன்னத்தம் செய்துகொண்டன.

அந்த நாய்கள் அத்தனையுமே சிங்கராயர் தேடித்தேடிக் குட்டிகளாகவே கொண்டுவந்து வளர்க்கப்பட்டவை. வேட்டை நாய்களுக்குரிய இலட்சணங்களான, காலில் கொடித்தடக்கு, விறைத்த வால், நிமிர்ந்த காதுகள் போன்ற அம்சங்கள் இருக்கின்றனவா என அவர் தேர்ந்து தேடியவை. முதன்முதலில் அந்தக் குட்டிகளுக்கு வேறு யாரையும் பால் வைக்கவிடாது தானே ஊட்டுவார். யார் கையில் முதலில் பால் குடிக்கின்றதோ, அவருடைய குணத்தைக் கொண்டதாகவே அந்த நாய்க்குட்டி வளரும் என்று ஓர் எண்ணம் இப்பகுதியில் உண்டு. அதை நிறுவுவது போலவே அவருடைய நாய்களான ரைகர், ஐயர், யோசே, ஜெயக்கொடி ஆகிய நான்குமே அஞ்சா நெஞ்சமும், வினைமுடிக்கும் திறனும், கூர்மையான மதிநுட்பமும், நன்றியும் மிக்கவையாகப் பிரசித்தி பெற்றிருந்தன.

மான்கொம்புப் பிடியிட்ட நீண்ட வில்லுக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் காட்டுக்கத்தி சகிதம் வாயில் நெடுங்காம்புச் சுருட்டுப் புகைய, சிங்கராயர் முன்னே நடக்க சேனாதி அவரின் பின்னே, தோளில் துவக்குடன் நடந்தான். நாய்கள் ஆர்ப்பாட்டமாக உறுமிச் சிலிர்த்துக் கொண்டு காடேறும் இடத்தை நோக்கி ஓடின.

சோனாதி திரும்பி, பழைய பாடசாலைக் கட்டிடம் இருக்கும் பக்கமாகப் பார்த்தான். அந்தக் கட்டிடத்துக்கு அருகே, புறம்பாக பட்டாப்பத்து ஓலைகளினால் அமைக்கப்பட்ட அழகியதொரு சிறு குடிசைக்கு முன்னே நந்தாவதி நிற்பது தெரிந்தது. நாய்களின் அரவங்கேட்டு அவள் வெளியே வந்திருந்தாள். அவளைக் கண்ட சேனாதி கையை அசைத்து விடைபெறவே, அவளும் சிரித்தவாறே கையை அசைத்து விடைகொடுத்தாள்.

அவர்கள், பழையாண்டாங்குளத்திலிருந்து மாங்குளம் விதானையார் மரம் இழுத்த லொறித் தெருவால் பழையாண்டாங்குளக் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நாய்கள் நான்கும் அவர்களோடு பின்னே செல்லாது காடுலாவி வந்து கொண்டிருந்தன. அரைமைல் தூரத்திற்கும் அப்பால், பனையடி மோட்டைக்கு அருகே ஐயர் நாய் சட்டென்று விரைந்து ஓடியது. அத்துடன் நாய்களைக் காணவில்லை.

சில நிமிடங்களின் பின்னர் ஒரு பக்கமாகச் சந்தடி கேட்கவே, உற்றுக் காதுகொடுத்துக் கேட்ட சிங்கராயர், 'ஓடு தம்பி! நாயள் உடும்பைப் புடிச்சுப் போட்டுதுகள்!" என்று சொல்லவும் சேனாதி கையில் துவக்குடன் காட்டினுள் பாய்ந்தான். உடனேயே செல்லாவிடின் பிடித்த உடும்பை நாய்கள் கடித்துக் குதறிச் சிதைத்துவிடும். முதலில் பிடிக்கின்ற எந்த உயிரையும் அவை தமக்கிடையில் பிய்த்தெடுத்துவிடும்.

ஒவ்வொரு பக்கமாக உடும்பைக் கௌவிக்கொண்டு நின்று உறுமிய நாய்களை அதட்டி, உடும்பின் வால் தண்டையை ஒரு கையினாலும், தலையை மறுகையினாலும் பிடித்து, நாய்களுக்கு எட்டாது மேலே உயர்த்திப் பிடித்தவாறே சேனாதி பாதைக்கு வந்துபோது, அங்கு சிங்கராயர் பாதையில் பழையாண்டாங்குளப் பக்கமாகப் பார்த்தவாறே தரையில் குந்தியிருந்தார்.

'என்ன கவுறனோ? பொட்டையோ?" எனக் கேட்டுக்கொண்டே அவனிடம் உடும்பை வாங்கி, அதன் வாலை ஒரு பாதத்தினாலும், தலையை மறு பாதத்தினாலும் மிதித்தவாறே, வில்லுக்கத்தியை உடும்பின் கெட்டித்திருந்த அலகுகளுக்கிடையில் செலுத்தி அகலச்செய்து, அதன் கீழ்த் தாடையை கையினால் முறித்தார் சிங்கராயர். இவ்வாறு செய்யாவிடில் உடும்பு கடித்துவிடும். குந்தியிருந்தவாறே, உடும்பைக் கையில் வசதியாக எடுத்துச் செல்வதற்காக, அதன் வால் தண்டையை வளைத்து வேட்டை கட்டினார். அதன்பின், வளையாமகக் கிடந்த உடும்பைத் தரையில் ஒரு இடத்தில் மூன்று தடவைகள் சுற்றிவிட்டு, அதன்மேல் அருகில் கிடந்த இலைச் சருகுகள் சிலவற்றை எடுத்துப் போட்டு, மூன்று முறை துப்பிவிட்டுத் தரையில் உட்கார்ந்திருந்த சேனாதியை நோக்கி, 'தம்பி! நீ எழும்பு!" என்றார். யார் முதலில் இருந்த இடத்தைவிட்டு வேட்டைக்கென முதலில் எழுகின்றார்களோ அவர்களுடைய ராசிக்கு ஏற்பவே மேற்கொண்டு வேட்டை கிடைக்கும் அல்லது கிடைக்காது. இவையெல்லாம் இங்கு வேட்டைக்குச் செல்கையில் அனுஷ்டிக்கப்படும் வழக்கங்கள். சிலவற்றுக்கு விளக்கமுண்டு.

'நெடுகத் தெருவாலேயே போனால் உடும்பு புடிக்கேலாது!.. கிழக்காலை விழுந்து பழையாண்டாங்குளத்துக் கிராவலுக்கை மிதப்பம்!" என்ற சிங்கராயர், அடர்ந்த காட்டினுள் கிளைகளையும், செடிகளையும் விலக்கிக்கொண்டு முன்னே நடந்தார்.

அவர்கள் சுமார் ஐந்து மைல் தூரம் காட்டில் நடந்து, வெய்யில் உச்சிக்கும் மேலாகச் சரிந்துவிட்ட வேளையில் பழையாண்டங் குளத்துக் கராவலை வந்தடைந்திருந்தூர்கள். சோனாதிக்குத் தொண்டையை வறட்டியது. சிங்கராயரோ  அசராது இன்னமும் பத்து மைல்கள் தொடர்ந்து நடப்பார் போன்றிருந்தது. சற்;றுப் பின்தங்கிய சேனாதியைப் பார்த்து, 'என்ன மோனை? களைச்சுப் போனியே?.. இன்னும் கொஞ்சத் தூரம் போட்டால் கல்லுமோட்டை வந்திடும்!.. தண்ணி குடிக்கிலாம்!" என சிங்கராயர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, நாய்கள் எதுவோ சுவடு கண்டு முனகின.

அவை தம் பிடரி மயிரைச் சிலிர்த்து முனகிய விதத்தில், ஏதோவொரு வினைமிருகத்தின் சுவடுதான் அவைக்கு விழுந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்ட சிங்கராயர், 'தம்பி! ஆனையோ கறடியோ தெரியேல்லை!.. எதுக்கும் நீ ஒரு பெருமரத்தடியிலை நிண்டுகொள்!" எனச் சொல்லிவிட்டுத் துவக்கை வாங்கிக்கொண்டு, விரலைச் சொடித்து சூ! வென மெல்ல நாய்களை ஏவினார். எதற்கும் துணிகின்ற ரைகரே இப்போதும் முன்னே அவதானமாகச் செல்ல, மற்ற நாய்கள் அதனைத் தொடர்ந்தன.

சிங்கராயர் குண்டுத் தோட்டாவைத் துவக்கில் போட்டுச் சாவலையிழுத்து, துவக்கை நாய்கள் சென்ற பக்கமாக நீட்டிப் பிடித்துக்கொண்டார். அவரது ஆட்காட்டி விரல் எந்த வினாடியும் அழுத்தத் தயாராகக் கள்ளனில் பதிந்திருந்தது.

சில நிமிடங்களுக்குக் காட்டில் ஒரு பயங்கர அமைதி நிலவியது. சோனாதியின் முகத்தில் வியர்வை துளிர்த்தது.

திடீரெனக் காடே அதிரும் வண்ணம் ஏதோ ஒரு பெருமிருகம் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வருவது கேட்கவே, சிங்கராயர் சேனாதியை மரத்தில் ஏறும்படி சைகை செயய்துவிட்டு, நீட்டிய துவக்குடன் உஷாராக நின்றுகொண்டார்.

பெருமரத்தில் ஏறி அதன் கவையொன்றில் நின்றிருந்த சேனாதி, தனக்கு முன் நிகழ்வதை விளங்கிக் கொள்ளமுடியாது திகைத்துப் போனான். இதென்ன? புலி குழுமாட்டைக் கடிக்கின்றதா அல்லது குழுவன் புலியைக் கொம்பில் சுமந்து வருகின்றதா? என்பதைப் புரியாமல் அவன் இருக்கையிலேயே, நாய்களைத் துரத்திவந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன், மனிதவாடை விழுந்ததும் இன்னும் வெருட்சி கொண்டதாகச் சிங்கராயரை நோக்கித் திரும்பியது.

சிங்கராயர் வெடிiவைக்கவில்லை. எதற்கும் இலகுவில் அசந்துபோகாத அவரே அந்தப் பெரிய கலட்டியனைக் கண்டு வியந்துபோனார். இத்தனை பெரிய கரும்புலியைக் கொன்று தன் கொம்பில் கொண்டுதிரியும் அதன் பலத்தையும் அழகையும், துணிவையும் அவரால் சிலாகிக்காமல் இருக்கமுடியவில்லை. சிறு பிராயத்திலிருந்தே பட்டிக்குள் எருமைகளின் கால்களுக்கிடையில் தவழ்ந்து வளர்ந்த அவருக்கு, இத்தகைய ஒரு அரிய நாம்பனைக் கொல்வதா என்ற எண்ணமே அவரைத் தயங்க வைத்தது. அவர் வெடிவைக்காததைக் கண்ட நாய்கள் கணத்தினுள், சிங்கராயரை நோக்கிச் சீறிய கலட்டியனைத் திசைதிருப்பும் முயற்சியில் இறங்கின.

காட்டில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வினைமிருகங்கள் வேட்டையாடுபவரைத் தாக்க வந்தால், வேட்டையில் திறமைமிக்க நாய்கள் அவற்றைக் கடித்துத் தம்பக்கமாகத் திசைதிருப்பி, அவற்றின் பிடியிலோ கடியிலோ சிக்கிக் கொள்ளாது, வேறொரு பக்கமாகப் போக்குக்காட்டி திசைதிருப்பிவிட்டு, வேறு திசையினால் சுற்றிக்கொண்டு மறுபடியும் மனிதரிடத்தில் வந்துவிடும். இது சிங்கராயரின் நாய்களுக்குக் கைவந்த கலை.

சிங்கராயரை நோக்கிப் பாய்ந்த கலட்டியனின் செவியை வெடுக்கெனப் பாய்நது கடித்த ஐயர் நாய், கலட்டியன் திரும்பித் தாக்குவதற்குள் இலாவகமாக ஒதுங்கிக் கொண்டது. இதற்குள் அவற்றுள் மிகப்பெரிதான ரைகர், கலட்டியனின் பின் தொடையைக் கவ்வி இழுத்தது. நாய்கள் நான்கினதும் தொந்தரவு பொறுக்க முடியாது மனிதரை மறந்து, ஓடும் நாய்களைத் துரத்தியது கலட்டியன்.

'இறங்கி வா சேனாதி!" என அவர் அழைத்தபோது சிங்கராயர் இன்னமும் கலட்டியன் ஏற்படுத்திய வியப்பிலிருந்து விடுபடாதவராய் தனக்குத் தானே பேசிக்கொண்டார்.

'என்ரை சீவியத்திலை இப்பிடி புலியைக் கொம்பிலை கொண்டு திரியிற ஒரு குழுவனை நான் காணேல்லை.. .. இதுமட்டும் ஊருக்கை வராமல் இருக்கவேணும்!" என உறுமிக்கொண்டார்.

'ஏனப்பு? இது ஊருக்கை வந்தால் என்ன செய்யும்?" ஆவலுடன் கேட்டான் சேனாதி.

'என்ன செய்யுமோ..? நல்ல கதை! .. எங்கடை பட்டிக் கேப்பை நாம்பனை அடிச்சுக் கொல்லும். எருமையளைத் தலம் மாத்திக் காட்டிலை கொண்டுபோகும்.. ஆக்கள் ஆரும் குறுக்கமறுக்க வந்தால் குடல் சரியக் கொம்பாலை வெட்டிப்போடும்!". சிங்கராயரின் முகம் இறுகிக் கிடந்தது.

'ஏனப்பு எங்கடை கேப்பை மாப்பிளை நாம்பன் இதை இடிச்சுக் கலைக்க மாட்டுதோ?" சேனாதி ஆதங்கத்துடன் கேட்டான்.

சிங்கராயர் சிரித்தார். 'தம்பி! அது என்ன இப்ப குழந்தைக் கண்டுதானே! உருப்படி பெரிசெண்டாலும் அது வேறை இது வேறை.. காட்டிலை குழுமாடு ஒண்டுதான் பெரிய ஆபத்தான முறுகம்! ஆனை கறடி புலியைக்கூடக் கலைச்சுப் போடிலாம்.. ஆனால் இப்பேர்ப்பட்ட குழுவனை மடக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை!"

காட்டுக் குறைக்கும் மேலாகப் பொழுது சாய ஆரம்பிக்கவே அவர்கள் நாய்களையும் அழைத்துக்கொண்டு பாதையை மாற்றி ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தார்கள். வருகின்ற வழியில் மேலும் மூன்று நான்கு உடும்புகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் கிராமத்தை வந்தடைந்தபோது செக்கல் பொழுதாகவிட்டிருந்தது.

(வளரும்)

****************************************************

 வட்டம் பூ அத்தியாயம் 04 

அன்றிரவே சமைப்பதற்காக ஆச்சியிடம் ஒரு முட்டை உடும்பை உரித்துக் கொடுத்துவிட்டு, குளிப்பதற்காகக் கிராமத்தின் ஒரே கிணறான வன்னிச்சியாவயல் கிணற்றடிக்குச் சென்றபோது, அங்கு அப்போதுதான் குளித்து முடித்த நந்தாவதி இடுப்பில் தண்ணீர் தளும்பும் குடத்துடன் நின்றிருந்தாள். சேனாதி வருவதைக் கண்டு அவனுக்காகக் காத்து நின்றாள் நந்தா.

'என்ன சேனா, வேட்டை கிடைச்சுதா?" என அவள் இந்தியத் தமிழின் இனிமை குழைந்த சிங்களக் கன்னி மழலையில் கேட்டபோது சோனாதி அவளைக் கூர்ந்து கவனித்தான். சந்தணச் சவர்க்காரம் போட்டுக் குளித்த அவளுடைய மணம் அந்தக் கிணற்றடியில் மோகனமாக மணத்தது. முழங்காலளவுக்கு மயில் தோகையாய் விரிந்து கிடந்த ஈரக் கருங்கூந்தலின் பின்னணியில் அவளுடைய தங்கமுகம் பளிச்சென்று ஒளிர்ந்தது.

'என்ன சேனா அப்படிப் பாக்கிறீங்க?" அவள் குழந்தையாகக் கேட்டாள்.

பொழுது இருண்டுகொண்டு வரும் அந்தச் சமயத்தில் சேனா காட்டுக்கும் மேலாகத் தெரிந்த கிழக்கு வானைக் கவனித்தான். தங்;கத் தாம்பாளமாக தைமாத முழுநிலவு எழுவது தெரிந்தது.

அவளை மீண்டும் நோக்கிய சேனாதி, 'நந்தா! நிலவுக்கு சிங்களத்திலை என்னண்டு சொல்லுறது?" எனக் கேட்டான். அவனுடைய குரல் சற்றுக் கட்டிக்கொண்டிருந்தது.

'சந்தமாமா!" பட்டென்று பதில் சொன்ன நந்தா சிரித்தாள்.

'இல்லை! நான் சொல்லட்டே?.. நிலவுக்குப் பேர் நந்தா!" என்றான் சேனாதி.

'ஆ.. அப்படியா?" எனக் கலகலவெனச் சிரித்த நந்தாவதி, 'நான் போயிட்டு வாறன்!" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

அவள் அந்த இடத்தைவிட்டு அகன்றபோதும் அவளுடைய செவ்வாழை உடலின் இளமை மணம் இன்னமும் அங்கு நிலவுவதை உணர்ந்த சேனாதி மீண்டும் கிழக்கு வானில் ஒளிர்ந்த முழுநிலவைப் பார்த்தான். அவனை அறியாமலே அவனுடைய உதடுகள் 'நந்தா நீ என் நிலா.. நிலா.." என்ற சினிமாப் பாடலை மெல்ல முணுமுணுத்தன. அந்தப் பாடலை வாய்விட்டு உரத்து அந்தப் பிராந்தியம் முழுவதுமே எதிரொலிக்கப் பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் பிறந்தது. கூடவே, அப்படி வாய்விட்டுப் பாட முடியாதததுபோல் ஒரு தயக்கம் அவனுள் உதிக்கவே, அவன் மௌனமாகக் குளித்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

கல்பகோடி காலமாகவே வாலிபத்தின் வசந்தத்தில் ஜிவராசிகளின் உள்ளுணர்வில் ஏற்படும் ஒர் ஆரம்ப நெகிழ்ச்சி ஏற்பட்டு, அவனுடைய இதயத்தில் முதல் தடவையாக எதுவோ ஒன்று ஊறிச்சுரந்து இன்பமாயும், துன்பமாயும் தோய்த்து எடுத்தது.

அவன் வீட்டிற்குச் சென்றபோது, சிங்கராயர் முற்றத்து வெண்மணலில் தனது நெடிய காலொன்றை மற்றதன்மேல் போட்டவாறே அமர்ந்திருந்தார். நந்தாவதியின் தந்தை குணசேகரா, சீவல்காரக் கந்தசாமி, வற்றாப்பளையிலிருந்து கள்ளுக்காலத்தில் மட்டும் தன் பிறந்த ஊருக்கு வந்துபோகும் அப்பாபிள்ளைக் கிழவன்  ஆகியோருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவர் முன்பாக, மணலில் சிறு குழி பறித்துப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த நாலுபோத்தல் கள்ளுமுட்டி இருந்தது. அதில் அரைவாசிக்கு மேல் முடிந்திருந்தது.

அழகாகச் செதுக்கிய பெரிய தேங்காய்ச் சிரட்டை நிறைய, இரையும் பனங்கள்ளை ஊற்றிக் குடித்துவிட்டுச் சுருட்டைப் பற்றிக்கொண்ட சிங்கராயர் தொடர்ந்து பேசவாரம்பித்தார். அவர்கள் இதுவரை அன்று காட்டில் சந்தித்த கலட்டியன் குழுவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

'என்ன அப்பாபிள்ளை?.. இந்தக் கலட்டியனைப் புடிச்சு சுபாவியாக்கேலாது எண்டு சொல்லுறியோ?.. மனிசன் மனசு வைச்சுச் செய்தால் என்னதான் செய்யேலாது? காட்டு முறுகம் காட்டோடை போகட்டும்! உண்மையாய் அது ஒரு ராசமாடுதான்! அதுதான் வெடிவையாமல் விட்டனான்!.. நல்ல உறுதியான வார்க்கயிறும், அஞ்சாத நெஞ்சுரமும் இருந்தால் ஏன் இந்தக் கலட்டியனைப் புடிக்கேலாது!" சிங்கராயரின் குரல் அதிர்ந்தது.

'என்ன இருந்தாலும் சிங்கராயர்.. ஆனைப்பாகனுக்கு ஆனையாலைதான் சா எண்டதுபோலை குழுமாடு புடிக்கிறவனுக்கு குழுமாட்டாலைதான் சா!.. போனவரியம் முள்ளியவளையிலை குழுமாடு புடிக்கிற காடேறி காத்தி குழுமாடு வெட்டித்தானே செத்தவன்!" என அப்பாபிள்ளைக் கிழவன் சொன்னபோது அதை மறுப்பதுபோல் அட்டகாசமாகச் சிரித்தார் சிங்கராயர்.

'உது விசர்க்கதை அப்பாபிள்ளை!.. அவன் கொண்டுபோன வார்க்கயிறு நைஞ்சிருக்கும், இல்லாட்டி அவன் ஏதோ கவனக் குறைவாய்ப் போயிருக்கவேணும்!.. அதுதான் குழுவனுக்கு காலுக்குப் படுத்த வார்க்கயிறு அறுந்து குழுவன் ஆளை வெட்டியிருக்குது!"

இவர்களுடைய சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த நந்தாவதியின் தந்தை குணசேகரா, சிங்கராயர் அன்றைய கலட்டியனைப் பற்றிக் கூறியதைக் கேட்டு ஏற்கெனவே அரண்டிருந்தான். தானும் தன் சகாக்களும் தொழில்புரியும் காடுகளில் இப்படி ஒரு பயங்கர மிருகம் உலவுவது அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. இப்போது சிங்கராயர் கூறியதைக் கேட்கையில் அவரைப் பற்றிய அபிமானம் அவன் மனதில் இன்னமும் அதிகமாகி விட்டிருந்தது. அவன் தன் மனதில் எழுந்ததை அப்படியே அவரிடம் கேட்டான்.

'சிங்கராஜ ஐயா! ஒங்களுக்குப் பயங் இல்லையா?"

காடடித்த களைப்பில் மால் திண்ணையில் மான்தோலைப் போட்டுக்கொண்டு படுத்திருந்த சேனாதி, குணசேகராவின் கேள்விக்குத் தன் பாட்டன் என்ன பதில் சொல்வார் என்ற ஆவலுடன் திரும்பிக் குப்புறப் படுத்து கைகள் இரண்டினாலும் முகத்தைத் தாங்கிய வண்ணமே அவர்களைக் கவனித்தான்.

சிங்கராயர் சிரட்டையில் வாய்வைத்துக் கள்ளைக் குடித்துக் கொண்டிருந்த சமயத்தில் குணசேகரா திடீரெனக் கேட்டபோதும், சாவாதனமாகக் கள்ளைச் சுவைத்துக் குடித்துவிட்டு உதட்டைத் துடைத்துக்கொண்டு குணசேகiராவை திரும்பிப் பார்த்தார் சிங்கராயர்.

'என்ன பயமோ?.." எனக் கேட்டுவிட்டுக் கடகடவெனச் சிரித்தார் சிங்கராயர். 'எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலையிருந்து நான் ஒண்டுக்கும் பயப்பிட்டது கிடையாது குணசேகரா!.. அந்த நாளையிலை சனங்கள் என்னத்துக்குப் பயப்பிட்டுதுகள்?.. பேய்க்குப் பயந்தாங்கள்!.. நோய்க்குப் பயந்தாங்கள்!.. பேய் எண்ட ஒண்டு இருக்கெண்டே நான் நம்பாதவன்!.. அப்பிடியிருந்தால் பேய்தான் எனக்குப் பயப்பிடோணும்!... நோய் எண்டதை நான் இண்டைவரை அனுபவிச்சதே கிடையாது!.... அதுக்கும் பயமில்லை!... வேறை என்னத்துக்கு நான் பயப்பிடோணும்?... முறுகசாதிக்கோ?... காட்டுமுறுகம் காட்டோடை இருக்கும். நாங்கள் காட்டுக்குப் போனால் ஏலுமான அளவுக்கு அதுகளை விலத்திப் போகோணும்! காட்டுமுறுகம் ஊருக்கை வந்தால் அதைப் புடிச்சு மடக்கிப் பழக்கி அதின்ரை குணத்தை மாத்திச் சுபாவியாக்க வேணும்! அப்பிடிச் செய்யேக்கை எங்கடை உயிர் போனாலும் பறுவாயில்லை!... நானே உயிருக்குப் பயந்து ஒதுங்கினால், நாளைக்கு என்ரை மோனோ, பேரனோ அவங்களும் பயந்து பயந்து சாவாங்களே ஒழியச் சந்தோஷமாய் சீவக்கமாட்டாங்கள்!"

சோனாதிக்கு சிங்கராயர் இப்போது கூறியதைக் கேட்கையில், தனது கல்லூரியில் அதிபராக இருக்கும் கே.பானுதேவன் அடிக்கடி வகுப்புக்களில் சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

'... இந்த நாட்டிலே வாழும் மக்களில் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களின் தொகையே அதிகம். கள்ளங் கபடமற்ற இந்த வாலிப உள்ளங்கள்தான் வளமான பூமி! இந்த வயதில்தான் நீங்கள் யாவரும் உங்கள் உள்ளங்களிலே உன்னதமான இலட்சியங்களை விதைத்து, அந்த இலட்சியப் பயிரைக் கண்ணுங்கருத்துமாகக் கவனித்துப் பேணி வளர்க்கவேண்டும்! பொறாமை, கல்மிஷம் போன்ற நோய்கள் தொற்றாவண்ணமும், கீழ்த்தரமான எண்ணங்களான களைகள் வளர்ந்து அந்த இலட்சியப் பயிரை நெருக்கிப் போடாதபடிக்கும் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்!"

... உன்னதமானவற்றை வாசியுங்கள். உன்னதமானவற்றைச் சிந்தித்து, பேசி, உன்னதாமானவற்றையே செய்யுங்கள். சந்தேகம் அப்பயிரை விளையும் வேளையில் மேய்ந்துவிடாது கவனமாக இருங்கள். அப்போதுதான் உங்கள் இலட்சியப்பயிர் வளர்ந்து, உங்களுக்கும் நீங்கள் வாழ்கின்ற சமுதாயத்துக்கும் உதவும் கனிகளைத் தரும். அச்சமின்றி உன்னதமானவற்றைச் செய்ய விழையுங்கள்! இன்றைய எமக்கு வழிகாட்டிகளாகத் திகழும் அன்றைய பெரியோர்கள் யாவரும் உன்னதமான இலட்சியங்களுக்காகத் தமது உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள்தான்! இயேசு, காந்தி, லிங்கன், லுமும்பா என்று இப்படி பலநூறு உதாரண புருஷர்களை உங்களுக்குத் தெரியும்....."

எம். ஏ பட்டதாரியான கே. பானுதேவனின் கருத்துக்களுக்கும், அரிவரிகூடப் படிக்காத தனது பாட்டன் சிங்கராயரின் இப்போதைய கூற்றுக்கும் இருந்த ஒற்றுமை, சேனாதியின் மனதில் சிங்கராயரை மேலும் உயர்த்தியது. அவன் மறுபடியும் அவர்களுடைய சம்பாஷணையைக் காதுகொடுத்துக் கவனித்தான்.

'அப்பாபிள்ளை!... பயம் எண்டதே மனிசனுக்கு இருக்கக்கூடாது!... நீயும் உன்ரை சொந்தக்காறரும் இஞ்சை முந்தி ஆண்டாங்குளத்திலைதானே இருந்தனீங்கள்?.. இஞ்சை காட்டுக்கும், முறுகசாதிக்கும், நோய்க்கும் பயந்து இப்ப இருக்கிற இடங்களுக்குப் போனியள்!.. ஆருக்குமோ இல்லை எதுக்குமோ பயந்து ஒருநாளும் நிரந்தரமாய் உங்கடை இடத்தை விட்டிட்டுப் போகக்கூடாது! இஞ்சை விட்டிட்டுப் போனியள்... இப்ப அங்கை உங்களுக்குப் புதுமாதிரிப் பயங்கள்! பக்கத்து வீட்டுக்காறன் என்ன சொல்லுவானோ, இல்லை உங்கடை சாமானைக் களவெடுத்துப் போடுவானோ எண்டு ஆளுக்காள் பயம்!.. ஆமிக்காறருக்குப் பயம்!.. சாகிறது ஒருநாளைக்குச் சாகிறதுதானே அப்பாபிள்ளை!.. பிறகென்ன மசிருக்கே பயப்பிடவேணும்!" எனச் சிம்மக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார் சிங்கராயர்.

அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருந்த சேனாதி, பகல் முழுவதும் காட்டில் அலைந்த களைப்பில் அப்படியே உறங்கிப் போனான்.

(வளரும்)

****************************************************
வட்டம் பூ  அத்தியாயம் 05

அடுத்தநாள் அதிகாலையிலேயே சேனாதிக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழ மனமில்லாதிருந்தவனுக்கு கோட்டைமுறிப்புக் காட்டிலே மரை ஒன்று கம்முவது கேட்டது. குசினிக்குள் செல்லம்மா ஆச்சி விடிவதற்கு முன்னரே எழுந்து அந்தப் பனியிலும் குளித்துவிட்டு, குத்துவிளக்கின் அடங்கிய ஒளியில் ஆடை நசிப்பது கேட்டது.

ஆச்சிதான் இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், கச்சிதமாகவும் வீட்டுவேலைகளைக் கவனிக்கின்றா என அவன் வியந்து கொண்டான். ஆச்சிக்கு வெளியுலகம் அதிகம் தெரியாது. அவளுடைய உலகம் அந்தச் சின்னக் கிராமமாகிய ஆண்டாங்குளந்தான். அவளுடைய முதல் தெய்வம் சிங்கராயர்தான். அவளுடைய அன்பு சுரக்கும் இதயத்தில் குடியிருப்பது அவளுடைய மகளும், பேரன்பேத்தியுந்தான். இப்போ அங்கே நந்தாவதியும் இடம் பிடித்துக் கொண்டிருப்பாள்போல் சட்டெனச் சேனாதிக்குத் தோன்றவே, அவன் மனதில் மகிழ்ச்சி கொப்பளித்தது.

சட்டெனத் துள்ளியெழுந்தவன், உற்சாகமாகக் காலைக் கடன்கைளை முடித்துக்கொண்டு ஆச்சி அன்புடன் கொடுத்த வெண்ணெய் மிதக்கும் மோரைக் குடித்தான். குத்துவிளக்கின் ஒளியில் நரைதிரையின் ஆரம்ப எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும் ஆச்சியைப் பாசத்துடன் பார்த்தான். அம்மாவும் ஆச்சியைப் போலத்தான். ஆச்சியின் மனம், சதா அவன் தாயான கண்ணம்மாவையும், அவள் பிள்ளைகளையும் சுற்றிவந்தாலும், ஒரு நாளேனும் அவள் சிங்கராயரை விட்டுவிட்டு மகளிடம் சென்றதில்லை. கண்ணம்மாவும் அப்படித்தான். அடிக்கடி, ஆண்டாங்குளத்தில் அப்புவும் அம்மாவும் இந்தப் பனிக்குளிருக்குள் எப்படி இருக்கின்றார்களோ எனத் தவிப்பாள். ஆனால் தன் கணவனைத் தனியேவிட்டுப் பெற்றோரிடத்துக்கு வரமாட்டாள். வாழையடி வாழை என்பது இதுதானோ?... எல்லாப் பெண்களுமே இப்படித்தானா?... என்று எண்ணியவனுக்கு கூடவே நந்தாவின் நினைவும் வந்தது.

சிங்கராயர் பொழுது பலபலவென விடிகையில் பட்டியைத் துப்பரவு செய்துகொண்டே, 'தம்பி! எருமையள் கொஞ்சத்தைக் காணேல்லை!... விண்ணாங்கம் வெளிப்பக்கமாய் சிறப்பைச் சத்தம் கேக்குது! சாய்ச்சுக் கொண்டுவா!" எனக் குரல் கொடுத்தார்.

சேனாதி வீரையடிப் பிள்ளையார் கோவிலடியில் சென்று, அங்கு வீரை மரத்தடியில் ஒரு சிறிய உருண்டைக் கல் வடிவில் வீற்றிருந்த ஆண்டாங்குளத்துப் பிள்ளையாரை வணங்கிக் கொண்டே திரும்பிப் பாடசாலைக் கட்டிடப் பக்கமாகப் பார்த்தான். அங்கே எவரையும் காணவில்லை.

மலைக் காட்டைக் குறுக்கறுத்துக்கொண்டு விண்ணாங்கம் வெளியை அண்மித்து சேனாதி, காட்டுக் குறையில் மறைந்து நின்றவாறே எதிரே கிடந்த விண்ணாங்கம் வெளியைப் பார்த்தான். அங்கே கதிரவனின் காலைக் ஒளிவெள்ளமாகக் கொட்டிக் கிடந்தது. அந்த வெய்யிலில் காடடோரமாக ஒரு காட்டுக்கோழிச் சேவலும், நாலைந்து பேடுகளும் எருக்கட்டிகளைக் கிளறி மேய்ந்து கொண்டிருந்தன. மஞ்சளும், சிவப்பும், கருநீலமும் கரும்பச்சையுமாய் அழகு காட்டிய சேவலைப் பார்த்;தான். அதன் தலையிலுள்ள இரத்தச் சிவப்பான சூட்டில், சந்தணப் பொட்டு வைத்தது போன்ற மஞ்சள் பொட்டுக்கூடத் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த சனிஞாயிறு ஆண்டாங்குளத்துக்கு வருகையில் கோழிப்பொறி அடிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டு கொன்னாவரசின் மறைவில் இருந்து அவன் வெளிப்பட்டபோது, அவன் வரவுகண்டு காட்டுக்கோழிப் பேடுகள் யாவும் குடுகுடுவென ஓடிக் காட்டுக்குள் மறைந்துவிட்டன. அந்தச் சேவல் மட்டும் நிதானமாக கம்பீரநடை போட்டுப் பேடுகளை தொடர்ந்தது. 'ம்.. பெரிய ஆம்பிளையாம் தான்!..." எனச் சொல்லிச் சிரித்துக்கொண்ட சேனாதி, விண்ணாங்கம் வெளியைக் கடந்து சம்மளங்குடாவை அடைந்தபோது, பட்டி நாம்பனான கேப்பையானும் மற்றைய எருமைகளும் காலை வெய்யிலை அனுபவித்தவாறே புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

இந்த வயதிலேயே சாதாரண நாட்டெருமைகளைவிடப் பெரிதாய் இருந்த அந்தக் கேப்பையானின் ஆபிரிக்கக் காட்டெருமை போன்ற தோற்றத்தைக் கண்டால் புதியவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். பார்வைக்கு அப்படியிருக்கும் கேப்பையான் பழகுவதற்கோ குழந்தை போன்றது. இப்போ அதைக் கண்டவுடன் சேனாதி ஆசையுடன் ஓடிச்சென்று அதன் முதுகின்மேல் துள்ளி அமர்ந்துகொண்டான்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அவன் சிங்கராயருடன் கொக்குத்தொடுவாய்க்கு மாடு பார்க்கச் சென்றிருந்தபோது, அங்கே கொக்குத்தொடுவாய் பழைய விதானையாரின் பட்டியில் கேப்பையானை முதுகன்றாகக் கண்டான். பேரனை நச்சரித்து விதானையாரிடம் அதை வாங்கி வந்திருந்தான். விரைவிலேயே அதன் முதுகில் சாவாரி செய்யுவம் பழக்கியிருந்தான். முதுகிலே தட்டி, போ! என்றால் போகும். நில்! என்றால் நிற்கும். காலால் விலாவில் இடித்தால் அந்தப் பக்கம் திரும்பும்.

இப்போதும் அதன்மேல் ஏறி, எருமைகளையும் சாய்த்துக் கொண்டு கிராமத்துக்குத் திரும்புகையில் ஒரு பட்ட மரத்தில் தனது தோகை நவரத்தினங்களாய் மின்ன, காலை வெய்யில் காய்ந்து கொண்டிருந்த ஒரு மயிலைக் கண்டான். நேற்று மாலை கிணற்றடியில் நந்தாவதி விரித்துவிட்ட ஈரக்கூந்தலுடன் நின்று சிரித்தது நினைவுக்கு வந்தது. கூடவே முன்பு அவளும் தன்னுடன் சேர்ந்து கேப்பையானில் சவாரி செய்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. இப்போது, அந்த நாட்களைப்போல் எனக்குப் பின்னே உட்கார்ந்து என்னைக் கட்டிக்கொண்டு கேப்பையானில் அவள் வருவாளா என்று எண்ணிய சேனாதிக்கு, அப்படிக் கற்பனை செய்கையில் சற்றுக் கூச்சமாகவும் இருந்தது. அன்றைய நந்தாவுக்கும் இன்றைய நந்தாவுக்கும் எத்தனை வித்தியாசம்! சேனாதிக்கு தண்ணீரூற்று ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலருகில் உள்ள ஐயர் வளவில் செழுமையாக நிற்கும் வாழைகளும், செந்நிறக் குரும்பைகள் சுமந்து நிற்கும் செவ்விளைத் தென்னைகளும், செவ்வந்திப் பூஞ்செடிகளும் நினைவுக்கு வந்தன.

கேப்பையான் நின்று, தீர்த்தமாடின இறக்கப் பக்கமாக ஆற்றை நோக்கிச் சுவடித்தது. சேனாதி அதன் பார்வை சென்ற இடத்தை நோக்கினான். அங்கே ஆற்றின் கரையில், பாதி தரையிலும் மிகுதி நீரிலுமாக, ஒரு பெரிய எருமைக் கிடாரி கால்பரப்பி இறந்து கிடப்பது தெரிந்தது. சோனாதி சட்டெனக் கேப்பையானிலிருந்து குதித்து இறங்கி அந்தக் கன்றை நோக்கி ஓடினான்.

நல்ல வளர்ச்சியடைந்த ஒரு முதுகன்றுக் கிடாரி, அதன் தலையின் முன்பகுதி நொறுங்கிப்போய்க் கிடக்கக் கண்டான். ஊதிக்கிடந்த அதன் விலாப்புறத்தில் அவன் கையை வைத்து அழுத்தியபோது உள்ளே எலும்புகள் உடைந்திருப்பது தெரிந்தது. சேனாதி நிமிர்ந்து நின்று அக்கரையைப் பார்த்தான். அங்கே நேற்றுக் காலையில், கயிலாயர் வள்ளத்தில் வரும்போது காட்டிய செம்மூக்கன் முதலை ஒரு மேட்டில் கிடந்து வெய்யில் காய்வதைக் கண்டான். அவனுக்கு நடந்தது புரிந்தது. ஆற்றில் நீர் குடிக்கச் சென்ற கிடாரியை தண்ணீரில் மறைந்து கிடந்த செம்மூக்கன் வாயால் கௌவி மூஞ்சையை நொறுக்கியிருக்கின்றது. அதே சமயம் அது தன் பலம் பொருந்திய வாலினால் அசுர அடிகொடுத்து விலா எலும்புகளையும் உடைத்திருக்கின்றது. பயங்கரமாக வாயை ஆவெனப் பிளந்துகொண்டு கிடந்த செம்மூக்கனை மீண்டும் அவதானித்தவன் விரைந்து எருமைகளைச் சாய்த்துக்கொண்டு பட்டிக்குச் சென்றான்.

பட்டிக்குள் பால் கறந்து கொண்டிருந்த சிங்கராயர் விஷயத்தை அறிந்ததுமே உறுமினார். 'ஓஹோ! அப்பிடியே சங்கதி!... பொறு பாலைக் கறந்துபோட்டு வாறன்!... உந்தச் செம்மூக்கனைச் சும்மா விட்டால் சரிவராது!" எனக் கறுவிக்கொண்டார்.

பால் கலயங்களை வீட்டுக்குக் கொண்டு சென்றதும் கைகால்கூடக் கழுவிக் கொள்ளாமல், மாலுக்குள் கூரையில் செருகியிருந்த மண்டாவை எடுத்தார். சென்ற வருடம் மட்டக்களப்பிலிருந்து ஆண்டாங்குளத்துக்கு முதலை பிடிக்க வந்திருந்த அருச்சுனன் அவருக்குப் பரிசாகக் கொடுத்துச்சென்ற மண்டா அது. தன்னிடமிருந்த மெல்லிய வார்க்கயிற்றை எடுத்து, ஈட்டிபோல் நீண்டிருந்த அந்த மண்டாவின் அடிப்பகுதியில் கட்டிக்கொண்ட சிங்கராயர், 'சேனாதி! துவக்கையும் இரண்டு குண்டுத் தோட்டாவையும் எடுத்துக் கொண்டு வா! நாயள் வேண்டாம்!" எனக் கட்டளையிட்டுவிட்டு, விறுவிறென்று தீர்த்தமாடின இறக்கத்தை நோக்கி விரைந்தார். அவருடைய அந்த நடைக்கு ஈடுகொடுக்க சேனாதி ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியிருந்தது.

குறிப்பிட்ட இடம் நெருங்கியதும், சற்றுத் தொலைவிலேயே ஒரு பற்றை மறைவில் நின்று ஆற்றை அவதானித்தார் சிங்கராயர். செம்மூக்கன் இப்போது ஆற்றின் இக்கரையில் கிடந்த கன்றின் அருகில் கிடந்தது. நரிகள் போன்ற விலங்குகள் தன் இரையைத் தின்றுவிடக்கூடும் என்பதனால் அது காவல் காத்துக் கிடந்தது.

சிங்கராயர் காற்று வீசும் திசை, மறைந்து செல்லவேண்டிய மார்க்கம் யாவற்றையும் சில கணங்களுள் தீர்மானித்துக்கொண்டு, 'நீ இஞ்சை நில்... நான் மண்டாவை எறிஞ்சதும் துவக்கையும் கொண்டு ஓடிவா!" எனப் பணித்துவிட்டு, ஆற்றின் ஓரமாக நின்ற தில்லம் செடிகளுக்கூடாகப் பதுங்கிச் சென்றார்.

சிங்கராயர் பதுங்குவதைப் பார்த்தால் புலி பதுங்குவதைப் பார்க்கத் தேவையில்லை. தனது ஆறடி உயரத்தை அரையடி ஆக்கியதைப்போல் பதுங்கி முதலை படுத்திருந்த இடத்தை அடைந்துவிட்ட சிங்கராயர் சட்டென எழுந்து நின்று, தன் பலமனைத்தையும் ஒன்று குவித்து மண்டாவை முதலையின் கழுத்துக்குக் குறிவைத்து எறிந்தார். இவருடைய திடீர் வரவுகண்டு முதலை சட்டெனத் தண்ணீரினுள் விழுவதற்குள் சிங்கராயரின் கூர்மையான மண்டா சதக்கென்ற ஒலியுடன், செம்மூக்கனின் அகன்ற கழுத்தில் மிக ஆழமாகப் புதைந்துகொண்டது.

சேனாதி கையில் துவக்குடன் அங்கு பறந்து சென்றபோது சிங்கராயர் வெற்றிப் பெருமிதத்துடன் மண்டாவில் தொடுத்திருந்த நீண்ட வார்க்கயிற்றை முதலையின் இழுவைக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். கயிற்றின் முக்கால்பங்கு தண்ணீரினுள் மறைந்தபோது சிங்கராயர் பிடியை இறுக்கிக் கயிற்றை மெல்லச் சுண்டியிழுத்தார். சட்டெனக் கயிறு விண்ணென்று விறைத்துக் கையை வெடுக்கென்று இழுத்தது. வேறு யாருமெனில் முதலையின் அந்த இழுவைக்கு விழுந்தேயிருப்பார்கள். 'ம்ம்.. சேட்டை விடுறீரோ?" என உறுமி, குரூரமாகச் சிரித்தபடியே கொஞ்சங் கொஞ்சமாக முதலையைக் கரையை நோக்கி இழுப்பதும் பின்பு சிறிது விட்டுக் கொடுப்பதும் பின்பு சட்டென வெட்டியிழுப்பதுமாகச் சிங்கராயர் செம்மூக்கனைக் களைக்க வைத்துக் கொண்டிருந்தார். நிறைய இரத்தம் வெளிப்படுவது நீரில் தெரிந்த நிறமாற்றத்தில் தெரிந்தது.

தலைக்கு மேலே எறித்த வெய்யிலில் சுமார் இரண்டுமணி நேரம் அந்த இழுவைப் போராட்டம் நீடித்தது. முதலையின் பலம் குறைந்துகொண்டு வந்துவிட்டதை அறிந்த சிங்கராயர் சேனாதிக்குச் சைகை காட்டிவிட்டு மளமளவெனச் செம்மூக்கனைக் கரைக்கு இழுக்கலானார். விறுவிறுவென இழுபட்டு வந்த செம்மூக்கன் கரையில் மனிதரைக் கண்டதும் தன் இறுதிப் பலமத்தனையும் கூட்டி வால் நுனியில் எழுந்து சிங்கராயரை நோக்கிப் பாய்வதற்கிடையில், அவர் சட்டெனச் சேனாதியிடமிருந்து துவக்கபை; பறித்து முதலையின் நெஞ்சடி வெள்ளையை நோக்கி வெடிவைத்தார். ஒற்றைக் குண்டு போட்ட அந்த வெடி அப்படியே அந்தப் பெரும் செம்மூக்கனைத் துளைத்துச் சென்று நீரில் வீழ்த்தியது. துவக்கைச் சேனாதியிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெருமுதலையை அனாயசமாகக் கரைக்கு இழுத்துப் போட்டு, அதன் கழுத்தின்மேல் தன் காலை உறுதியாகப் பதித்துக்கொண்டு, அங்கே ஆழமாகப் புதைந்திருந்த மண்டாவை வெளியே எடுத்தார் சிங்கராயர். கரும் இரத்தம் பீரிட்டு அவருடைய பாதத்தை நனைத்தது. மண்டாவைக் கையில் பிடித்துக்கொண்டு சிங்கராயர் கடகடவெனச் சிரித்தார். இந்தக் காட்டுக்கு நான்தான் ராசா என்பதுபோல் அந்தச் சிரிப்பு அதிர்ந்தது.

மாலை மூன்று மணிக்கெல்லாம் சேனாதிராஜன் தண்ணீரூற்றுக்குப் புறப்பட ஆயத்தமானான். சிங்கராயர், நேற்றுக் காட்டில் பிடித்த உடும்புகளில் பெரிதாக இரண்டை மான்கொடியால் கப்பில் கட்டியிருந்தார். அவற்றைப் பக்குவமாகப் பன்பையினுள் வைத்துக்கொண்டே, 'இதில் ஒண்டை குமுளமுனையிலை செல்வன் ஓவசியரிட்டைக் குடுத்திட்டுப் போ மோனை!.. அந்தப் பொடியன்தான் எனக்குச் சங்கத்திலை தோட்டா வந்தால் எடுத்துத் தாறது!" எனச் சொன்னார். செல்லம்மா ஆச்சி காலையிலேயே தனியாக எடுத்துவைத்த ஆடையும் தயிரையும் ஒரு பேணியில் போட்டு அவனிடங் கொடுத்து, 'சனிக்கிழமை வரேக்கை தங்கச்சி ராணியையும் கூட்டிக்கொண்டு வா ஐயா!" என விடை கொடுத்தாள்.

சேனாதி பன்பையைத் தூக்கிக்கொண்டு தட்டிக் கண்டாயத்தின் அருகே வந்தபோது பாடசாலைப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். அங்கு ஒருவரையும் காணவில்லை. வழக்கமாக அவனைச் சுற்றிவரும் மான்குட்டி மணியையும் அக்கம்பக்கத்தில் காணவில்லை. வெறுமையாகி விட்டதுபோல் தோன்றிய ஒரு உணர்வுடன் அவன் பனைமரங்களினூடாக நடந்து, புல்வெளியையும் பொன்னாவரசம் பற்றைகளையும் கடந்து வட்டம்பூ காடாயப் பூத்திருந்த பாலையடி இறக்க வெண்மணல் மேட்டுக்கு வந்தபோது, அங்கு வள்ளத்தையும் காணவில்லை, கயிலாயரையும் காணவில்லை.

குமுளமுனைக்கு தண்ணீரூற்று பஸ் வருவதற்குப் போதிய நேரம் இருந்ததால் அவன் அவசரமாக ஆற்றில் இறங்கிச் செல்லவில்லை. எனவே வள்ளக்காரரைக் கூப்பிடுவதற்காகச் சேனாதி பன்பையை வெண்மணலில் வைத்துவிட்டு, வாயருகே கைகளைக் குவித்து ~ஓஹோ..| என நீட்டிக் குரல் கொடுத்தான். சில கணங்களில் பதில்குரல் கேட்டது. ஆனால் அது முதலாவது ஆற்றுப்பக்கமாகக் கேட்காது, பின்னே இருந்து மலைக்காட்டுப் பக்கமாகக் கேட்டது. கையிலாயர் மலைக்காட்டிற்குள் என்ன செய்கின்றார் எனச் சிந்தித்த வண்ணமே அவன் ஊர்ப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது, மலைக்காட்டுச் சரிவிலிருந்து நந்தா ஓடி வந்துகொண்டிருந்தாள். அவளை ஒட்டியவாறே அவனுடைய மான்குட்டி மணியும் உற்சாகத்துடன் குதித்துக்கொண்டு வந்தது. மாலைப் பொன்வெய்யில் வெள்ளமாகத் தேங்கிநின்ற அந்த மரகதப் புல்வெளியில் நந்தா ஒரு வனதேவதையாய் ஓடி வந்துகொண்டிருந்தாள். சேனாதியின் உள்ளம் சட்டென விம்பிப்பம்மி விண்ணில் மிதந்தது.

மூச்சிரைக்க ஓடிவந்து அவனருகே சட்டென நின்ற அவளுடைய நெஞ்சு எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தது. கண்டிய சிங்களப் பெண்கள் வழமையாக அணிவதுபோலவே மேலே வெறும் சட்டையும், இடுப்புக்குக் கீழே நாலுமுழ வேட்டிபோலத் துண்டும் உடுத்தியிருந்தாள். சோனாதியின் கண்கள் அவனையுமறியாமல் அவளுடைய சிவப்புச் சட்டைக்கும், கீழே அணிந்திருந்த கருநீல பட்டிக் துணிக்கும் இடையே சற்றுத் தாராளமாகவே தெரிந்த பொன்னிறப் பிரதேசத்தில் பதிந்தன.

'என்ன சேனா, எனக்குச் சொல்லாமலே புறப்பட்டிடடீங்களே!" என மூச்சிரைக்க நந்தா கேட்டபோது, 'நீதானே இண்டுமுழுக்க வீட்டுப் பக்கமே வரேல்லை!.. நான் வரேக்கையும் பாத்தனான்!" சேனாதி, ஓடிவந்ததனால் மேலும் சிவந்திருந்த நந்தாவின் கன்னங்களையும், அந்த நிலவுமுகத்தில் மிதந்த நீலவிழிகளையும் பார்த்தவாறு கூறினான். 'இன்னிக்கு தாத்திக்கு லீவுதானே.. காலையிலை மான் இறைச்சி கிடைச்சதில்லே.. அதைக் கருவாடு போட்டுக்கிட்டு இருந்ததாலை வரமுடியலை சேனா!". தான் அவனிடம் வரமுடியாமைக்கு வருந்தும் தொனியில் நந்தா கூறியபோது சேனாவின் இதயம் கனிந்தது.

தன்னிடம் வந்து உராய்ந்த மணியைத் தள்ளிவிட்டு, நந்தா தனது மடியில் கட்டிக்கொண்டு வந்திருந்த சூரைப் பழங்களைக் கைகள் நிறைய எடுத்தாள். 'இந்தாங்க சேனா சூரைப்பழம்!.. நீங்க வூட்டுக்கு கொண்டு போகத்தான் இதைப் பறிச்சுக்கிட்டிருந்தன்!"

அவள் தன் இரு கைகளிலும் கருகருவென மின்னிய சூரைப்பழங்களைக் காட்டினாள். இரு தாமரை மலர்கள் போன்றிருந்த அந்த உள்ளங்கைகள், ஓடி வந்ததனால் கசகசவென வியர்த்திருந்தன. அந்தப் பகைப்புலத்தில், ஈச்சம் பழங்களைப்போல் கறுத்து மினுமினுத்த அந்தச் சூரைப்பழங்கள் சேனாதிக்கு அவன் இதுவரை கண்டிராத ஒரு புதிய அழகைக் காட்டின. மிகவும் சுயாதீனமாக அவனையொட்டி நின்றுகொண்டே நந்தா அவனுடைய சேட்பை நிறைய அந்தப் பழங்களை நிறைத்தாள். பின்பு, 'சாப்பிட்டுப் பாருங்க சேனா!.. எவ்வளவு ருசி!" எனச் சொல்லியவாறே தனது கைகளில் எஞ்சிய சில பழங்களை அவன் வாயருகில் கொண்டுசென்று ஊட்டிவிட்டாள். அவளுடைய அண்மையும், மிக நெருக்கத்திலிருந்து வீசிய அவளுடைய இளமை மணமும் அவனுக்குப் புதியதோர் அனுபவமாக இருந்தது. நன்கு முற்றிப் பழுத்த சூரைப்பழங்களின் புளிப்பு விரவிய இனிப்பு, அவளுடைய உள்ளங்கை வியர்வைச் சுவையுடன் வாயில் கரைந்தபோது, அவன் இதுவரை சுவைத்திராத புதிய சுவையை அறிந்துகொண்டான்.

'என்ன சேனா, வள்ளக்காரத் தாத்தாவைக் காணலியே?" என்றபோது தன் சுயநிலைக்குத் திரும்பிய சேனா, 'என்னண்டு தெரியேல்லை!.. பஸ் வந்திடும்.. நான் போட்டுவாறன்!" எனச் சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, பன்பையை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினான். தை மாதமானதால் ஆற்றில் வெள்ளம் முழங்காலளவே இருந்தது. அகன்று கிடந்த அந்த நதியில் மிதந்த மஞ்சளும் சிவப்புமான காட்டுப்பூவரசம் மலர்களை விலக்கிக்கொண்டே நடந்தவன் கரையை அடைந்ததும் நின்று திரும்பிப் பார்த்தான்.

அக்கரையில், பாலையடி வெண்மணல் திட்டில், வட்டம் பூஞ்செடிகளின் பின்னணியில் மான்குட்டியை ஒரு கையால் அணைத்தபடியே மறுகையை உயர்த்தி இலேசாக அசைத்தபடியே நந்தா நின்றிருந்தாள். மேற்கிலிருந்து மாலை வெய்யில் அவள் நின்றிருந்த பாலையடி இறக்கத்தைப் பொன்னாக அடித்திருந்தது. மஞ்சளும் சிவப்புமான காட்டுப் பூவரசம் பூக்கள் மிதக்கும் கருநீல நதிக்குமப்பால், வெண்மணல் மேட்டில் தங்கச் சிலையாய் நந்தா சிரித்து நின்ற கோலம், அவனுக்குச் சினிமாக்களில் வரும் கனவுக் காட்சிபோலத் தோன்றியது. அவனுடைய இளைய, புதிய இதயத்தில், வனதேவதையாய் நின்ற நந்தா மிகமிக அழுத்தமாய், இறுக்கமாய்ப் பதிந்துபோனாள். சட்டென அவளை நோக்கிக் கையை அசைத்துவிட்டுப் பாதை வளைவில் திரும்பி மறைந்தான் சேனாதி.

பாதை வளைவில் சோனதியின் உருவம் மறையும்வரை பார்த்தவாறே நின்ற நந்தா, அவன் பார்வையிலிருந்து மறைந்த பின்பும் பாலையடி இறக்கத்தை விட்டுப் போகவில்லை. அப்படியே வெண்மணலில் முட்டுக்காலிட்டு அமர்ந்தவளுடைய விழிகள் சற்றுக் கலங்கிவிட்டிருந்தன. அவளை உரசியவாறு நின்ற அந்தக் கலைமான் குட்டியின் தலையை அவளது விரல்கள் இயல்பாகத் தடவிக் கொடுக்கையில், அதன் தலையில் அப்போதுதான் மொக்குவிடும் பச்சைக் கொம்பு அவளுடைய விரல்களில் தட்டுப்பட்டது. வெல்வெற் போன்ற அதன் மேற்புறத்தையும், அதேசமயம் வஜ்ஜரம் போன்ற அதன் கடுமையையும் அவளுடைய இளந்தளிர் விரல்கள் வருடிச் சுகங்கண்டு கொண்டிருந்தன. இப்படியே கனவில் மிதக்கும் கண்களுடன் நதிக்கரையில் சில நிமிடங்கள் இருந்த நந்தா சட்டென சுயநிலைக்குத் திரும்பியவளாய் துள்ளியெழுந்து, 'ஓடி வாங்கோ!" என மான்குட்டியை நோக்கிக் கூவிவிட்டுக் கிராமத்தை நோக்கிச் சிட்டாய்ப் பறந்தாள்.

(வளரும்)

நன்றி : http://www.appaal-tamil.com/index.php







Comments