வட்டம் பூ அத்தியாயம் 06
இக்கரையிலிருந்த ஆட்காட்டிப் பறவைகள் சேனாதியின் வரவுகண்டு கலைந்து எழுந்து அவனுக்கு மேலாக வட்டமிட்டுப் பறந்தன. அவை எழுப்பிய குரல் அவனுக்கு அன்று ஏனோ மிகவும் சோகமானதாக இருந்தது. வழமையாக, அவற்றையும் அவற்றின் குச்சிபோன்ற மெல்லிய கால்களையும் காண்கையில் அவனுக்குச் சிரிப்பு வருவதுண்டு. ஏனெனில், அவை நித்திரைக்குச் செல்கையில் தரையில் முதுகை வைத்துப் படுத்து மேலே வானை நோக்கிக் கால்களை வைத்துக் கொள்ளுமாம். ஏனெனில் தற்செயலாக வானம் இடிந்து வீழ்ந்தால் தாங்கிக் கொள்ளலாமே என்றுதானாம்!
ஆனால் இன்று அவனுக்கு அந்தக் கதை நினைவுக்கு வரவுமில்லை, அவன் மனதுக்குள் சிரிக்கவுமில்லை. மாறாக, அவை எழுப்பிய குரல் அவனுக்குச் சோகம் தோய்ந்ததாகத் தோன்றியது. அவன் இதயத்தில் நந்தாவின் பிம்பம் பதிந்த இடத்திலிருந்து ஊமைக் கீதமாக நந்தா நீ என் நிலா!.. நிலா!| என்ற பாடலே சோகத்தில் தோய்ந்து ஒலித்தது.
அவன் நடந்து பரவைக் கடலைக் கடந்து குமுளமுனையை அடைந்தபோது, அங்கு கரையோர மேட்டில் அமைந்திருந்த கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கோவில் முன்றலில், அவனுடைய கல்லூரியில் அடவான்ஸ் லெவல் படிக்கும் காந்தி, கையில் ஏதோ புத்தகம் ஒன்றுடன் அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு விலகிப் போய்விட சேனாதி எண்ணியபோது, காந்தி அவனைக் கண்டுகொண்டு தன்னிடம் அழைத்தான்.
'வாடாப்பா சேனாதி!.. பஸ் இப்பதான் செம்மலைக்குப் போகுது. அது திரும்பிவர இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்குது.. வா!.. நடந்த களையாற இதிலை இரு!.." என்று கூப்பிட்டான்.
காந்தி, ஆசிரியர் கே. பானுதேவனின் பிரியத்துக்கு உகந்த மாணவன். சிவந்த மெல்லிய உடல், எப்போதும் ஒளிரும் தீட்சண்யமிக்க விழிகள். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். அல்லது சிந்தித்துக் கொண்டிருப்பான்.. பேசினால், இன்றைய நாட்டுப் பிரச்சனைகள், சமுதாய முன்னேற்றம் என்றெல்லாம் பேசுவான். அவனோடு கூட இருக்கவே சேனாதிக்குச் சங்கடமாக இருக்கும். காந்தி சொல்வதில் இவனுக்கு அக்கறையுமில்லை, அவன் சொல்பவை இவனுக்குப் புரிவதுமில்லை. எனவே, இவனிடமிருந்து எப்படிக் கழற்றிக் கொள்வது என்று சங்கடப் பட்டுக்கொண்டே அவனருகில் உட்கார்ந்தான் சேனாதி.
'என்ன சேனாதி?.. சனி ஞாயிறிலை பாடப் புத்தகங்கள் படிக்கிறியோ?.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு!.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு!.. சே!.. இந்தக் காலத்துப் பொட்டையளும் பொடியங்களும் நாள் முழுக்க சினிமாப் பாட்டுக் கேக்கிறதுதான் வேலை!.. உனக்குத் தெரியுமேர்? நீரோ எண்ட ராசா தனது ரோமாபுரி பத்தி எரியேக்கை அதைப் பாத்துக்கொண்டு வயலின் வாசிச்சானாம்!.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்!.." காந்தி படபடவெனப் பேசினான்.
சேனாதியின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போன்று காந்தி இப்போது சற்றுத் தணிந்து பேசினான்.
'எங்களுக்கு கே.பி போல ஒரு வாத்தியார் வந்தது நாங்கள் செய்த பெரிய புண்ணியம் சேனாதி!.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே!.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா!.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே? அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும்!" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி! செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும்!... நான் வாறன்" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை! இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது!" என மனமின்றி விடை கொடுத்தான் காந்தி.
அவன் குமுளமுனைச் சந்திக்கு அருகாமையில் இருந்த செல்வன் ஓவசியரின் குவாட்டர்சுக்கு வந்தபோது அங்கு கணுக்கேணி லோயர் சங்கரலிங்கம், தண்ணிமுறிப்பால் வந்த களையாறச் சைக்கிளைப் பிடித்தவண்ணமே செல்வன் ஓவசியருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரை லோயர் என்றுதான் சிநேகிதர்கள் அன்புடன் அழைப்பர். விவாதம் என்று வந்தால் விட்டுக் கழரவே மாட்டார் மனுஷன்.
'நல்லது லோயர் சங்கரலிங்கம்!.. அருமையான கேள்வி! ஏன் இன்னமும் எமது கிராமத்து மக்கள் முன்னேறவில்லை என்பதுதானே உமது வினா?.. நல்லது! சொல்கிறேன் கேளும்!.. காரணம் வேறு என்ன! குடிதான் காரணம் லோயர்!.. நம்மூர் பெருங்குடிமக்கள் முன்னேற்றமடையாததற்குக் காரணம் குடியேதான்!...
... நன்றாகக் கவனியும்... நம்முடைய மக்கள் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் குடிப்பார்கள். பிள்ளை செத்துப் போனால் துக்கத்தில் குடிப்பார்கள்... வயல் நன்றாக விளைந்தால் மகிழ்ச்சியில் குடிப்பார்கள்!... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள்! சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும்!... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்!" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை! உண்மை! நூற்றுக்கு நூறு உண்மை!" என ஏதோ சொல்வதற்கு முனைந்தார் லோயர்.
ஆனால் ஓவசியர் செல்வனா விடுபவர்! 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும்!... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள்! என்ன? நான் சொல்வது சரிதானே!" தன்னைத் தானே மெச்சிக் கொண்ட செல்வன் ஓவசியர், ஏதோ சொல்ல வாயெடுத்த லோயரைப் பேசவிடாது தடுத்து, 'இன்னுமொன்று லோயர்!... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்!... நான் சொல்கின்றேன் லோயர்! நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள்!" என ஆர்ப்பாட்டமாகக் கூறிவிட்டு கண்ணில் நீர் வரும்வரை அட்டகாசமாகச் சிரித்தார் செல்வன் ஓவசியர். லோயர் சங்கரலிங்கத்தின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று.
இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற சேனாதியை அப்போதுதான் செல்வன் ஓவசியர் கண்டார். 'என்ன மருமகப் பயலே! எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா?" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை! அருமை! இங்கிதமான பொருள்! இன்றிரவே ஒரு அரைப்போத்தல் அருந்திவிட்டு இங்கிதமாக அம்பாளிப்போம்! நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர்?" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது! நான் வாறன்!" எனச் சொல்லிவிட்டு, லோயர் சங்கரலிங்கம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
சேனாதியும் செல்வன் ஓவசியரை நினைத்துச் சிரித்துக் கொண்டே பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.
(வளரும்)
********************************************************
வட்டம் பூ அத்தியாயம் 07 - 08
சோனாதிராஜன் ஆண்டாங்குளத்தை விட்டுப்போய் நான்காம் நாள் இரவு சிங்கராயர் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நெடுங்காம்புச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார். தேய்ந்து முக்கால்வாசியாக இருந்த நிலவு காலித்துக் கொண்டுவரும் வேளையில், ஆண்டாங்குளத்துக்குக் கிழக்கே பரவைக் கடலோரமாக அமைந்திருந்த திருக்கோணம் வயலில் எருமைகள் வெருண்டு கதறுகின்ற சத்தம் இலேசாகக் கேட்டது.
'மனுசி!... திருக்கோணம் வயலுக்கை எருமையள் கதறிக் கேக்குது!... நீ படு, நான் ஒருக்காப் பாத்துக்கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டுக் கையில் துவக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் சிங்கராயர்.
திருக்கோணம் வயலை நெருங்கியபோது இரண்டு எருமைகள் உக்கிரமாக மோதிக்ககொள்ளும் ஒலி கேட்டது. பட்டிநாம்பன் கேப்பையானை எதிர்த்துப் போட்டியிட இந்தப் பகுதியிலேயே ஒரு மாடு கிடையாதே என யோசித்துக் கொண்டே அவர் பலப்பரீட்சை நடந்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே நிலவில், பெருங்குன்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோன்று, திம்திம்மென இரண்டு நாம்பன்கள் இடிபட்டன.
கொம்புடன் கொம்பு அடிபடுகையில் பொறி பறந்தது. சற்றுக் கிட்டப்போய் விரட்டுவோம் என எண்ணிக்கொண்டே நெருங்கிச் சென்றபோது, வெருண்டு சிதறி நின்ற எருமைகள் அவரையும் கண்டு வெருண்டன.
அவற்றின் வெருட்சியைப் புதிய ஆபத்தின் சைகையாய் உணர்ந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் கணப்பொழுதில் களத்தைவிட்டு ஓடிக் காட்டில் மறைந்ததைக் கண்டபோதுதான் சிங்கராயருக்கு உண்மை உறைத்தது.
அடடா! அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டோமே என எண்ணிய அவர், மிரண்டு கலைந்த எருமைகளை அமைதிப்படுத்துவதற்காக, ஒருவகை லயத்தில் 'அன்னம்!... ஆரிச்சி!... தாமரை, தம்பிராட்டி ... மாதாளை... ஓ... ஹோ...!" என்று நீட்டிக் குரல் கொடுக்கவும், எருமைகள் கொஞ்சம் கொஞ்சம் அமைதி அடைந்தவையாக ஒன்று சேரத்தொடங்கின.
கலட்டியனைக் காடுவரை சென்று துரத்திவிட்டுக் களைத்துப்போய் எருமைகளை நோக்கி வந்த கேப்பையான் அவர் அருகே வந்தபோது, தனது பட்டி நாம்பனின் வீரத்தை மனதுள் பாராட்டியவண்ணம் அதைத் தடவ முற்பட்டவரின் கண்களில் தென்பட்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ராசமாடு என்று அவர் பெருமையோடு பேசிக்கொள்ளும் அவருடைய பட்டிநாம்பன் கேப்பையானின் பருத்த, அழகிய, வளைந்த கொம்புகளில் ஒன்றைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் சதை பிய்ந்து, அடிக்காம்பு முறிந்து இரணமாக இருந்தது.
சிங்கராயரின் கண்களில் தீக்கனல் பறந்தது. 'என்ன கலட்டியன் புள்ளை என்ரை பட்டீக்கை வந்து மந்தை கலைக்கவோ?... கேப்பையான் மோனை!... நீ கவலைப்படாதே ராசா!... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை!" என்று, கர்ஜிப்பதுபோன்று வஞ்சினம் மொழிந்தார் சிங்கராயர்.
திருக்கோணம் வயல்வெளி மூலையில் நின்ற செம்பு விளாத்தியில் தரித்திருந்த ஆந்தையொன்று சிங்கராயரின் கர்ஜனையைக் கேட்டுச் சடசடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்தது.
8.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி தியாகராஜ ஞாபகபர்த்த மண்டபத்தில் மாணவர் ஒன்றியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கே. பானுதேவன் ஆசிரியர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
மாநிறம், சுமாரான உயரம், ஒட்ட வெட்டிய அடர்த்தியான தலைமுடி, வெள்ளை உள்ளம் என்பவற்றைக் கொண்ட கே.பி உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
'ஆரம்பத்திலே தண்ணீரிலேதான் உயிர் உருவாகியது. அது வளர்ந்து மாற்றமடைந்து தரைக்கு வர முயன்றது. இந்த மாற்றம் சில நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமன்று. ஒவ்வொரு சிறு பரிணாம மாற்றமும் ஏற்படப் பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. தண்ணீரிலே வாழ்ந்த உயிர் தரைக்கு வருவதென்றால் இலேசான காரியமா? சுவாசப் பைகளில் மாற்றம் தேவைப்பட்டது. தரையில் சஞ்சரிக்க அவயவங்கள் அவசியமாயிற்று. இவற்றை அடைவதற்கு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த முன்னோக்கிய பயணம் இந்த இன்னல்களினால் தடைப்படவில்லை.
தரையில் வாழப் பழகிக்கொண்டவை மரங்களில் வாழவும், வானில் சஞ்சரிக்கவும், கூட்டாகச் சீவிக்கவும் பழகிக் கொண்டன. இப்படித் தோன்றிய மனிதன் ஆதியில் குகைகளில் வாழ்ந்தான். இறைச்சியையும், இலைகளையும், கிழங்கு கனி வகைகளையும் பச்சையாகவே உண்டான். பின்பு காட்டு விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். தானியங்களை உரிய பருவத்தில் விதைத்து விளைவிக்கவும் தெரிந்து கொண்டான். இப்படியே கோடானுகோடி ஆண்டுகளின் பின்னர் அவன் இன்றைய நாகரீகமடைந்த மனிதனாக மாறி வந்திருக்கின்றான்.
இன்று நாம் சர்வசாதாரணமாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியவற்றைச் சேர்த்துச் சுவையாக வெற்றிலை போட்டுக் கொள்கின்றோம். ஆனால், இந்தப் பொருட்களைச் சேர்த்து மென்றால் சுவை பிறக்கும், வாய் சிவக்கும் என்றெல்லாம் மனிதன் கண்டுபிடிக்க எத்தனை நூறு வருடங்கள் எடுத்ததோ யாருக்குத் தெரியும்? சொல்லப் போனால் இந்த வெற்றிலை போடுகின்ற விஷயங்கூட ஒரு மாபெரும் கண்டுபிடிப்புத்தான்!
இப்படியே ஒவ்வொரு துறையிலும் மாற்றமடைந்து, வளம்பெற்று சீர்திருத்தம் அடைந்த மனித இனம், இந்த நீண்டநெடும் பயணத்தில் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும். முதன்முதலில் சுண்ணாம்பை அதிகம் சேர்த்துக் கொண்ட மனிதன் வாய்வெந்து மிகவும் அவதிப்பட்டிருப்பான். ஆனால் அவனுடைய அனுபவம், அடுத்தவன் அளவாகச் சுண்ணாம்பைப் பயன்படுத்தப் பாடமாயிருந்திருக்கும்.
இந்த நிமிடத்திலும் நமது கண்களுக்குப் புலப்படாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த நீண்ட பயணத்தின் கடந்தகாலப் பாடங்களை நீங்கள் இங்கே பாடசாலையில் மட்டுமல்ல, திறந்த பல்கலைக் கழகமாகிய அகன்ற உலகிலும் படிக்கலாம். இன்றைய இளஞ் சந்ததியினரான நீங்கள்தான் நாளை இந்த நெடும்பயணத்தின் வழிநடத்துனர்கள் - தலைவர்கள்! எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உன்னதமான பொறுப்பு உண்டென்று நீங்கள் உணர்ந்து கொள்;ளவேண்டும்.
உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். கொடுமைகளும், சுரண்டல்களும், வாழ்க்கையில் துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றன என்பதைத் தீவிரமாக ஆராயுங்கள். அவற்றைக் களைந்தெறிந்து, அமைதியும், சுபீட்சமும், சந்தோஷமும் நிலவக்கூடிய ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கச் செயற்படுங்கள். புத்தம்புதிய வெள்ளை உள்ளங்களுடன், வாலிபத்தின் வீரியமும் வனப்பும் உங்களுக்கு இயற்கை அன்னை அளித்துள்ள அளப்பரிய அற்புத ஆயுதங்கள். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி உன்னதத்தை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதே என் பேரவா!" என ஆசிரியர் கே. பி சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாற்றி முடித்ததும் மாணவர்கள் கரகோஷம் செய்து தமது உற்சாகமான உடன்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலையே ஆண்டாங்குளம் செல்லலாம் என்ற இனிய எதிர்பார்ப்பு நிறைந்த உள்ளத்துடன் சபையில் அமர்ந்திருந்த சேனாதியின் நெஞ்சிற்கூட, கே. பி யின் பேச்சின் புதிய பார்வை ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியதைப் போன்று, அவன் உணர்ந்தான். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த காந்தியைப் பார்த்தபோது அவனுடைய விழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒளிர்வதைச் சேனாதி கண்டான்.
இதற்குள் ஒன்றியத் தலைவர் எழுந்து, 'இப்போது செல்வன் சேனாதிராஜன் அவர்கள் உங்களுக்கு இன்னிசை விருந்தளிப்பார்!" என்றபோது, சேனாதி எழுந்து மேடையை நோக்கி நடந்தான். கே. பியின் உரையாடல் ஏற்படுத்திய தீவிரமான சிந்தனையில் இறுகியிருந்த இதயங்கள் இந்த மாற்றத்தை வரவேற்பதுபோன்று, மாணவ மாணவியர் தம் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சேனாதிராஜன் மேடையில் ஏறித் தலைவருக்கும் சபையோருக்கும் வணக்கம் கூறும் போதுங்கூட என்ன பாடலைப் பாடுவது என அவன் முடிவு செய்திருக்கவில்லை.ஆனால், அவன் மைக்கின் முன்நின்று ஒரு கணம் தாமதித்துத் தன பார்வையை சூன்யத்தில் பதித்தபோது அவன் இதயவானில் முழுநிலவாக எழுந்த நந்தாவதியின் இளையமுகம், பாடுங்க சேனா! என உந்தியது.
மறுகணம் அவன் இதயத்தின் அடியாழங்களில் கிடந்த அந்தப் பாடல், பாசத்திலும் ஏக்கத்திலும் தோய்ந்து கொண்டு சோகம் ததும்பும் இனிமையைச் சிந்திப் புறப்பட்டது. நந்தா நீ என் நிலா ... நிலா! என்ற பாடல் அடக்கமாக ஆரம்பித்து இனிய நாதவெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து அத்தனைபேரின் இதயங்களையும் நிறைத்து, மண்டபம் முழுவதும் தளும்பி வழிந்தது.
இப்படியான உணர்வுகளையெல்லாம் மறக்கடித்துவிட்டேன் என நினைத்து அவற்றை மறந்திருந்த ஆசிரியர் கே.பியின் அறிவார்ந்த இதயங்கூட சேனாவின் பாடலால் நெகிழவே செய்தது. 'ஐ ஆம் சொறி பானுதேவன்... நான் உங்களை மிகமிக அதிகமாகக் காதலிக்கத்தான் செய்கின்றேன்... ஆனால் உங்களுடைய வழி வேறு... அது மிக உன்னதமானது... ஆனால் நானோ மிகவும் சாதாரணமானவள்... வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாகச் சுவைக்க விரும்புவள்... நாங்கள் இருவரும் இணைந்து கணவன் மனைவியாகச் சந்தோஷமாக வாழ்வது சாத்தியம் அற்றதொன்று!... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்!" எனக் கூறிவிட்டு, தன்னைவிட்டு விலகிக் கொண்டவளையும், அவளுடன் கைகோத்து உலவிய பேராதனியப் பல்கலைக்கழகச் சூழலையும், சட்டென கே. பியின் மனதுக்குள் மணக்க வைத்தது சேனாதியின் சோகம் விரவிய அந்தக் கானம்.
இலேசாகப் பனித்துவிட்ட தன் விழிகளை அவர் மாணவர்கள் அறியாது கையால் துடைத்துக் கொண்டபோது, சேனாதியின் பாடல் முடிந்து அவன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுகொண்டிருந்தான்.
மண்டபத்திலிருந்த அத்தனை இதயங்களையும் இளக்கி உணர்ச்சி வயப்பட வைத்த அந்தப் பாடலில் கட்டுண்டிருந்த மாணவ மாணவியர் சுயநிலைக்குத் திரும்பிக் கரகோஷம் செய்து தம் ஏகோபித்த பாராட்டைத் தெரிவித்தபோது சேனாதி கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டு தனது இருக்கையில் இருந்தான்.
கூட்டம் கலைந்து மாணவ மாணவியர் வெளியே வந்தபோது, காந்தி சேனாதியை ஒரு புதுவித அன்புடனும் பக்தியுடனும் பார்த்தான்.
'சேனா! உன்ரை பாட்டு உண்மையிலை சோக்காத்தான் இருந்தது!" என அவன் வாய்விட்டுப் பாராட்டியபோது சேனாதிராஜன் மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டவனாய் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். சினிமாவில் வரும் காதற் பாட்டுக்களையே கண்டுகொள்ள விரும்பாத காந்திகூட சேனாவின் பாடலால் ஈர்க்கப்பட்டிருந்தான். அவனுள் ஆசிரியர் கே. பி யின் கருத்துரைகள் அந்தப் பாடலின் உணர்ச்சிமேலிட்ட இசையுடன் இணைந்து உள்ளத்தை நிறைப்பதுபோற் தோன்றின. நெஞ்சு நிறைய அவனது கடமைகள் கனப்பது போலவும் அவன் உணர்ந்தான்.
(வளரும்)
****************************************************
வட்டம் பூ அத்தியாயம் 09
சனிக்கிழமை அதிகாலை தண்ணீரூற்றில் இருந்து குமுளமுனை நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸில் சேனாதி உற்சாகம் பொங்கும் மனதுடன் உட்கார்ந்திருந்தான். பஸ் வழமையான வேகத்தில் சென்றபோதும் அது என்னவோ நத்தைபோன்று ஊர்வது போலவே அவனுக்குத் தோன்றியது.
ஆறாங்கட்டை மலைவேம்படிச் சந்தியில் இறங்கிச் சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் இருந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டு எட்டி நடை போட்டான் சேனாதி. பரவைக் கடலைக் கடந்து அவன் முதலாவது ஆற்றைக் கடந்தபோது, கழுவைச்ச இறக்கத்துக்கும் அப்பால் இருந்த துண்டித் தீவில் வாழும் மந்திக் குரங்குகள் உற்சாகமாகக் கிளைகளில் பாய்ந்து விளையாடுவது அவன் கவனத்தை ஈர்த்தது.
இருபுறம் பரவைக் கடலாலும், மற்றைய பக்கங்களில் ஆழமான ஆறுகளினாலும் தீவாக்கப்பட்ட அந்தத் தரைப்பகுதியைத் துண்டித் தீவு எனச் சொல்வார்கள். அந்தத் தீவில் எப்படியோ முன்போர் காலம் வந்து சேர்ந்துவிட்ட குரங்குகள் இப்போ இனம் பெருகியிருந்தன. அவற்றின் முழு உலகமுமே அந்தத் துண்டித்தீவுதான்.
சோனாதியின் தகப்பன், தாய் கண்ணம்மாவைச் சில சமயங்களில் நீ, ஆண்டாங்குளத்துத் துண்டித்தீவுக் குரங்குகள் போன்று நாட்டுநடப்புத் தெரியாதவள் எனக் கேலி செய்வது வழக்கம். அவளும் அதற்குச் சிரித்துக் கொண்டே 'அதுக்கென்ன! உங்கடை தனியூத்து பெரிய ரவுண்தான்!" என்று சீண்டுவாள். இவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே சேனாதி ஏறுதுறையான மூண்டாத்துப் பவருக்கு வந்தபோது, ஆற்றின் அக்கரையை ஒட்டிக் கயிலாயர் வள்ளம் செலுத்தி வருவது தெரிந்தது. வள்ளத்தில் ஐந்தாறுபேர் பாற் கலயங்களுடன் உட்கார்ந்திருந்தனர்.
அவர்கள் யாவரும் குமுளமுனை வாசிகள். தங்களுடைய எருமைகளை ஆண்டாங்குளத்துக்கும் அப்பால், சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள வட்டுவன் என்னும் பட்டித்தலத்தில் விட்டு மேய்த்து வளர்ப்பவர்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் அங்கு சென்று, எருமைகளை அடக்கிச் சாய்த்து, இரவை அங்கேயே கழித்துப் பின் காலையில் எருமைப்பாலை பெரிய கலயங்களில் கறந்துகொண்டு குமுளமுனைக்குத் திரும்பும் மாட்டுக்காறர்.
என்ன இவ்வளவு சிக்கிரமாகப் பால் கறந்துகொண்டு திரும்பிவிட்டார்களே எனச் சேனாதி தனக்குள் வியந்தபோது, அவர்களுடைய பாற்கலையங்கள் கனமின்றி வெறுமையாக இருப்பதை அவதானித்தான். இதற்குள் இக்கரைக்குச் சமீபமாக வந்துவிட்ட வள்ளத்தில் இருந்த அவர்களுடைய முகங்களும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த முகங்கள் கலவரமும், கவலையும் தோய்ந்தனவாகத் தோன்றின. விஷயம் என்னவாக இருக்கும் என யோசிப்பதற்குள், மாட்டுக்காரரில் ஒருவரான சிதம்பரப்பிள்ளை வள்ளத்தில் எழுந்து நின்றவாறே சத்தமிட்டுச் சொன்னார், 'தம்பி சேனாதி! நாங்கள் சிங்கராயரிட்டைப் போட்டுத்தான் வாறம்... அங்கை அரில்லை... குணசேகரா ஆக்களோடை காட்டுக்குப் போட்டார்!... ராத்திரி வட்டுவனுக்கை ஒரு பெரிய குழுவன் வந்து நாம்பன்களை அடிச்சுப் போட்டுது!... கலைப்பம் எண்டு பாத்தால் ஆளை வெட்ட வருது!... சொன்னால் நீ நம்பமாட்டாய் கயிலாயர்!... அது ஒரு ஆனையளவு இருக்கும்!.. ராமுழுக்கப் பயத்திலை மரம்வழிய ஏறி இருந்திட்டு இப்ப வெறுங்கலையத்தோடை வாறம்!.. நீ மறந்துபோடாமல் ஒருக்கால் சிங்கராயர் காட்டாலை வந்ததும் சொல்லு!... எக்கச்சக்கமான குழுவன்!... ஆளை வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் மற்றவேலை பாக்கும்!... இனி என்னண்டுதான் மாடுகண்டு பாக்கிறதோ... பட்டிக்குப் போய் வாறதோ?... ஆண்டாங்குளத்து ஐயனார்தான் வழி காட்டோணும்!" எனக் கவலையுடன் கூறியவாறே வள்ளத்தினின்றும் வெறும் கலையத்துடன் இறங்கினார் சிதம்பரப்பிள்ளை.
குமுளமுனையார் சென்றதும் கையிலாயர் இறங்கி வள்ளத்தை ஆண்டாங்குளம் நோக்கித் திருப்பினார். வழமை போலவே அவரிடம் தன் பன்பையைக் கொடுத்துவிட்டு ஊன்றுகம்பை எடுத்து விரவாக வள்ளத்தைச் செலுத்தினான் சேனாதி. அவருக்கு ஒரு கை சற்றுப் பலவீனம். வேட்டைக்குச் சென்ற சமயம் முதல்நாள் வெடியை வாங்கிக்கொண்டு குற்றுயிராகக் கிடந்த சிறுத்தையொன்று கடைசிநேரத்தில் அவரது கையைச் சப்பிவிட்டடிருந்தது. குடும்பத்தைக் காப்பாற் ற இந்த வயதிலும் வள்ளமோட்டி வாழ்ந்த அவரில் சேனாதி அன்பு வைத்திருந்தான். அவன் கண்களில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேடு தென்பட்டபோது அங்கே ஆவலுடன் பார்வையைப் பதித்தான். அங்கே நந்தாவதி வந்து தனக்காகக் காத்திருப்பாள் என்றதோர் எண்ணம். ஆனால் அங்கே நந்தா இல்லை. கொள்ளையாகப் பூத்திருந்த சிவப்பு வட்டடம் மலர்கள் அவன் இறங்கியபோது சிரித்து வரவேற்றன.
பனைகளினூடாக நடந்து பட்டியைக் கடக்கையில், சிங்கராயர் அதிகாலையிலேயே எழுந்து பாலைக் கறந்துவிட்டுக் காட்டுக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்தது. தன்னை அன்புடன் வரவேற்ற செல்லம்மா ஆச்சியிடம் தாய் கொடுத்துவிட்ட பொருட்களை எடுத்துக் கொடுக்கையில், பாடசாலைப் பக்கமாக மான்குட்டியின் மணிச்சத்தம் கேட்டது. நந்தாவாதியும் மான்குட்டியும் ஓடிவருவது தெரிந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்த நந்தா, ' ஆக்காட்டி கத்தக்குள்யையே நீங்கதான் வர்றீங்க எண்டு நினைச்சன்... விட்டைச் சாத்திட்டு ஓடி வர்றன்!" எனச் சிரித்தாள்.
'நீயும் கொஞ்சம் சாப்பிடன் மோனை!" எனப் பரிவுடன் ஆச்சி கேட்டதற்கு, 'நான் சாப்பிட்டாச்சு! நீங்க சேனாவுக்கு கொடுங்க ஆச்சி!" என்றவாறே ஓடிச்சென்று குடத்திலிருந்து நீரைச் செம்பில் நிறைத்துக் கொண்டுவந்து சேனாவிடம் கொடுத்துவிட்டு, அடுப்படித் திண்ணையில் அமர்ந்துகொண்டாள் நந்தா.
சேனாதி சாப்பிட்டுக் கொண்டே, 'ஆச்சி, இண்டைக்குத் திருக்கோணம் வயலுக்கை கோழிப்பொறி அடிக்கப் போறன்!" எனச் சொன்னபோது, 'நானும் வர்ரேன் சேனா! அழைச்சிட்டுப் போறீங்களர்?" எனக் குழந்தைiயாய் நந்தா கெஞ்சியபோது அவனால் மறுக்க முடியவில்லை. செல்லம்மா ஆச்சிதான், 'ராத்திரி பெரிய குழுவன் ஒண்டு வட்டுவனுக்கு வந்திட்டுதாம்!... குமுளமுனைப் பட்டிக்காறர் காலமை வந்து சொல்லிப்போட்டுப் போறாங்கள்!... கவனமாயப் போங்கோ புள்ளையள்!" என அக்கறையுடன் எச்சரித்தாள்.
சேனாதி தண்ணீரூற்றிலிருந்து கொண்டுவந்த மெல்லிய நைலோன் நூல், கொம்புக்கத்தி ஆகியவற்றுடன் தாயார் ஐயன் கோவிலில் கொளுத்தச் சொல்லிய கற்பூரத்தையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டான். ஆச்சி நந்தாவதியிடம் ஒரு பனையோலை உமல் நிறைய முகப்பொலி நெல்லைப் போட்டுக் கொடுத்தாள்.
அவர்களிருவரும் வன்னிச்சியா வயலைக் கடந்து ஐயன் கோவிலுக்குச் சென்றபோது மான்குட்டி மணியும் அவர்களைப் பின்தொடர்ந்தது.
ஐயன் கோவில் வெட்டையை அடைந்ததும் சேனாதி மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்துவிட்டுப் பயபக்தியுடன் கற்பூரத்தை எடுத்தான். சூழவரக் காடாகவிருந்த அந்த வட்டவடிவமான வெட்டைப் புல்தரையின் நடுவே சிறிது மேடிட்ட ஒரு இடத்தில் கற்பூரம் கொளுத்திக் கறுத்துப்போனதொரு கல்லும், அதையொட்டி ஒரு சூலமும் மட்டுமே இருந்தன. இவ்வளவுதான் ஐயன் கோவில். அந்தக் காட்டுத் தெய்வமாகிய ஐயன் தனக்குக் கோவில் கட்டுவதையே விரும்புவதில்லையாம். முன்பு, செல்லம்மா ஆச்சியின் மூதாதையரான கட்டாடி உடையார் ஒரு சிறிய மண்டபத்தை அங்கு அமைத்தபோது, அன்றிரவே யானைகள் வந்து அதைப் பிடுங்கி எறிந்துவிட்டனவாம். அதன்பின் எவருமே ஐயனுக்குக் கோவில் கட்ட நினைக்கவில்லை. ஆனால் மக்கள் அடிக்கடி தமது நேர்த்திக் கடன்களுக்காக அங்கு வந்து வெள்ளைத்துணி விரித்து அதன்மேல் பழம், பாக்கு, வெற்றிலை பரவி மடை போடுவார்கள். மடையில் வைக்கும் பழங்களை ஐயனின் பரிகலங்கள் வந்து உமிந்து போடுமாம். மடையில் வைத்த பழங்கள் இனிமையின்றிச் சப்பென்று இருப்பதைச் சேனாதிகூட ஆச்சி சொல்ல உணர்ந்ததுண்டு.
கற்பூரதீபத்தை ஏற்றிக் கண்மூடி சில கணங்கள் ஐயனே எனப் பயபக்தியுடன் வேண்டிக்கொண்ட சேனாதியின் பின்னால் நந்தாவதியும் தன் தாமரைக் கைகளைக் கூப்பியவாறு விழிகளை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய சிவந்த முகத்தையும், மூடியிருந்த விழிகளுக்கு மேல் கருகருவென வில்லாய் வளைந்து கிடந்த புருவங்களையும் பார்த்துச் சேனாதி ஏதோ நினைத்தவனாகத் திரும்பிக் கற்பூம் கொளுத்தும் கல்லில் ஏறியிருந்த கரியைச் சுட்டுவிரலினால் கொஞ்சம் எடுத்து, நந்தாவதியின் புருவங்கள் சந்தித்த இடத்துக்கு மேலாக நெற்றியில் பொட்டாக வைத்தான். அவனுடைய விரலின் ஸ்பரிசத்தை உணர்ந்த நந்தா விழிகளைத் திறந்து அழகாகச் சிரித்தாள். 'ஆ!... இப்பதான் நந்தாவின்ரை முகம் நல்ல வடிவாய்க் கிடக்கு!" என அவன் சொன்னபோது அவளுடைய முகம் குப்பெனச் சிவந்து போயிற்று. உண்மையிலேயே அந்தக் கன்னங்கரு பொட்டு அவள் நிலவு முகத்தின் எழிலை மேலும் அழகாக்கியிருந்தது. தானும் விரலில் எஞ்சியிருந்த கரியை நெற்றியில் தீற்றிக்கொண்டு, 'வா நந்தா போவம்!" என அவளையும் அழைத்துக்கொண்டு அயலில் இருந்த திருக்கோணம் வயல்வெளிக்குச் சென்றான் சேனாதி.
அங்கு சென்றதும், அவன் உடனேயே அவ் வயல்வெளியில் நுழையாது, ஒரு பெரிய காயாம் பற்றைக்குப் பின்னால் தன்னையும் நந்தாவதியையும் மறைத்துக்கொண்டு, கிளைகளை விலக்கிக்கொண்டு வெட்டையைக் கவனித்தான். அவன் நந்தாவை மெல்ல அழைத்து எதிரே தெரிந்த காட்சியைக் காண்பித்தான். அங்கே ஒரு கூட்டம் காட்டுக்கோழிகள் தரையைக் கிண்டி மேய்ந்துகொண்டிருந்தன. காலை வெய்யிலின் ஒளியில் காட்டுச் சேவல்;களின் அழகு கண்ணைப் பறித்தது. 'அனே! போஹோம லஸ்ஸணாய்!" என அவள் தன் தாய்மொழியில் சற்று உரக்கவே வியந்தபோது கலைவு கண்ட காட்டுக்கோழிகள் யாவும் சடசடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்தன. அவர்களிருவரும் கலகலவெனச் சிரித்துக்கொண்டே காயா மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டபோது, சற்றுத் தொலைவில் தளிர்மேய்ந்த மான்குட்டியும் துள்ளிக்கொண்டு வந்தது.
சுமார் இருபது ஏக்கர் விஸ்தீரணத்தில் வெட்டையாய்க் கிடந்த திருக்கோணன் வயல்வெளியைச் சுற்றி இருண்ட காடு அடர்ந்து கிடந்தது. அந்தக் காட்டில் பெய்யும் மழைநீர், சிறு சிறு ஓடைகளாக, பள்ளப் பாங்காய்க் கிடக்கும் வயலை நோக்கி ஓடிவரும். இந்த ஓடைகளையே சிறு மிருகங்களும், காட்டுக்கோழிகளும் மேய்ச்சலுக்கு வரும் வழிகளாகப் பயன்படுத்தும்.
காட்டுக்கோழிகளின் காலடிகள் பதிந்திருந்த ஒரு ஓடையைத் தேர்ந்தெடுத்த சேனாதி கோழிப்பொறி அடிக்க ஆரம்பித்தான். முதலில், கோழிகள் வரும் வழியின் அருகில் விறைப்பாக, பெருவிரல் பருமனில் நின்றதொரு சிறு மரத்தினைத் தன் மார்பளவு உயத்தில் வெட்டி, அதன் நுனியில் ஒரு துண்டு நைலோன் நூலைக் கட்டினான். இந்த மரந்தான் பொறியின் விசைக்கம்பாகச் செயற்படும். அதை வளைத்துச் சிறியதொரு தடையில் நிற்கக்கூடியதாகச் செய்துவிட்டு, கட்டிய நைலோன் நூலின் மறுநுனியை வட்டச் சுருக்காகப் பொறியின்மேல் பரப்பி வைத்தான்.
நந்தா அவனருகிலேயே முழங்கால்களைத் தரையில் ஊன்றியவண்ணம் அவன் பொறி அமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பொறியைத் தனது திருப்திக்கு இசைய அமைத்து முடித்த சேனாதி தனக்கருகில் இருந்த நந்தாவைப் பார்த்தான். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை ஒன்று உதித்தது. 'எங்கே நந்தா.. இதிலை தொடு பாப்பம்!" எனப் பொறியின்மேல் வட்டமாய்க் கிடந்த நூலின் உள்ளே ஒரு இடத்தைக் காட்டினான். நந்தாவதி எவ்விதத் தயக்கமுமின்றி தனது வலதுகைச் சுட்டுவிரலை சட்டென அவன் குறித்த இடத்தில் வைத்தாள். அவ்வளவுதான்! சட்டடெனப் பொறிக்கம்பு இமைக்கமுதல் நிமிர்ந்தது. சுருக்கில் இறுகிய நந்தாவின் சுட்டுவிரலையும், கையையும் விண்ணென்று மேலே இழுத்தது. நந்தா பயத்தில் வீலென்று அலறிவிட்டாள். வலியில் துடித்த நந்தாவதியின் விரல்நுனி அப்படியே கன்றி இரத்தம் கட்டிக்கொண்டது.
சோனதி பயந்து போனான். அவசரமாக அவள் விரலில் இறுகியிருந்த சுருக்கை அவிழ்த்தவன், 'நல்லாய் நோகுதே நந்தா!" எனத் துடித்துப் போனான். கண்களில் நீர்மல்க 'ஆமா சேனா!" என அவள் தலையை அசைத்தபோது தான் பிடித்திருந்த அவளுடைய சுட்டுவிரலை மீண்டும் பார்த்தான் சேனாதி. செவ்விளை நிறத்தில்; மெலிதாக நீண்டிருந்த அவளுடைய விரலின் நுனி சிவப்பாய்க் கன்றிக் காணப்பட்டது. சட்டென அந்த விரலைப் பிடித்துத் தன் வாயினுள் வைத்துக்கொண்டான் சேனா. அவனது வாயின் ஈரமான வெம்மையும், நாவின் இதமான ஸ்பரிசமும் வலியைக் குறைத்தபோது நந்தாவதி மெல்லத் தன் விரலை விடுவித்துக் கொண்டாள்.
'இப்ப நோ குறைஞ்சிட்டுது இல்லையே?.. நான் ஒரு மடையன்.. தப்பித்தவறி விசைக்கம்பு உன்ரை கண்ணிலை பட்டிருந்தால்!.." என அவன் பயந்தபோது, 'ஒரு கண் போனா மற்றக் கண் இருக்குதானே சேனா!" என நந்தா சிரித்தாள். சேனா குனிந்;து அவளுடைய அகன்ற காயம்பூநிற விழிகளைப் பார்த்தான். மழைக்கால வெள்ளம் சந்தணஞ்சுட்ட பரவையில் பெருகும்போது துள்ளியெழுந்து பிறழும் ஆண்டாங்குளத்துக் கயல்மீன்கள் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கரிய கண்களில் இப்போதும் கட்டிக்கொண்டு நின்ற கண்ணீர், அவள் சிரிக்கையில் முத்துப்போல் விழியோரங்களில் திரண்டபோது, 'உனக்கு எப்போதும் சிரிப்புத்தான் நந்தா!" எனச் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டே அவன் அந்தக் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கையில், 'ஏன் சேனா, நான் சிரிக்கக்கூடாதா?" என மீண்டுஞ் சிரித்தபடி குறும்பாகக் கேட்டாள் நந்தாவதி. 'நந்தா எப்போதுஞ் சிரித்துக் கொண்டுதான் இருக்கவேணும்!.. அதுதான் எனக்கு விருப்பம்!" என்று சேனாதி சொன்னபோது அழகாகக் கன்னங்குழிய மீண்டும் சிரித்தாள் நந்தா.
முதலாவது பொறியை மீண்டும் விசையேற்றிவிட்டு மேலும் இரண்டு மூன்று பொறிகளை ஆங்காங்கே அவர்கள் அமைத்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்ற மான்குட்டி சட்டென உஷாராகிச் செவிகளைப் புடைத்துக் காட்டுப் பக்கமாகக் குவித்துச் சுவடு எடுத்தது. மறுகணம் அந்த இடத்தைவிட்டு மின்னலெனத் துள்ளி ஊர்ப்பக்கமாக மறைந்தது. இதைக் கவனித்த சேனா சட்டென்று எழுந்து நின்று மான்குட்டி பார்த்த திசையில் காட்டைக் கவனித்தான்.
ஏதோவொரு பெருமிருகம் ஓடிவரும் ஒலி இலேசாகக் கேட்டது. சேனாதி அவசரமாக நந்தாவையும் இழுத்துக்கொண்டு அருகாமையில் சற்றே சாய்ந்து நின்ற பெரிய நாவல் மரமொன்றில் ஏறிக்கொண்டான். காட்டிலே பெரிய மிருகங்கள் ஓடுவதுபோலத் தடிகள் முறியும் சப்தங்களும் கிளைகள் உராயும் ஒலியும் வரவர மிக அண்மையில் கேட்டது. நந்தா பயத்தினாலும், மரத்தால் விழுந்துவிடாமல் இருக்கவும் தனக்கு முன்னே இருந்த சேனாதியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தாள். சேனாதி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருந்த நாவல் மரத்துக்குக் கீழாக, சிங்கராயரின் பட்டியைச் சேர்ந்த எருமை நாகு ஒன்று வெகுவேகமாகத் திருக்கோணம் வயலைக் குறுக்குவைத்து ஓடியது. அதன்பின்னே சுமார் பத்துயார் இடைவெளியில் பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மூர்க்கமாகத் துரத்திக்கொண்டு ஓடியது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனைப் பார்த்த நந்தாவின் விழிகள் பயத்தினாலும் வியப்பினாலும் அகன்றுபோய் அவள் இன்னமும் இறுக்கமாகச் சேனாதியைப் பிடித்துக்கொண்டாள்.
கலட்டியன் துரத்திய எருமைநாகு எதிர்ப்பட்ட பற்றைக் காட்டைப் பிய்த்துக்கொண்டு, பரவைக் கடலில் எருமைகள் கடக்கும் பாதையில் ஓடியது. அதை விடாது பின்தொடர்ந்த கலட்டியனால் கடலில் வேகமாகப் போகமுடியவில்லை. ஆயினும் அது தன் திசையை மாற்றாது எருமைநாகை விடாப்பிடியாகத் தொடர்ந்தது.
கண்கொட்டாது இதைப் பார்த்துக்கொண்டிருந்த சேனாதிக்கு இப்போ சில விஷயங்கள் புரிந்தன. தலையில் புலியைக் காவிக்கொண்டு கலட்டியன் திரிந்ததால் அதன் கூட்டம் அதனைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். பின்னர் அது தன் வழக்கமான இடத்தைவிட்டுத் தலம் மாறி நாவற்கேணிப் பக்கமாக வட்டுவனுக்கு நேற்று வந்திருக்க வேண்டும். அங்கு குமுளமுனையாரின் பட்டிக்குள் புகுந்து அவர்களைப் பீதியுறச் செய்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தவனாய் சேனாதி சுயநிலைக்குத் திரும்பியபோது, நந்தா தன்னை இறுகக் கட்டிக் கொண்டிருப்பதையும், அவளுடைய இளமார்பு தன் முதுகில் அழுந்தியிருப்பதையும் உணர்ந்தான். அவளுடைய நெஞ்சு பயத்தில் வெகுவேகமாக அடித்துக் கொள்வதைக்கூட அவனால் உணர முடிந்தது. அவன் திரும்பி நந்தாவதியின் முகத்தைப் பார்த்தான். அவளுடைய சிவந்த முகம் வெளுத்துப் போயிருந்தது. விழிகள் விரிந்து இமைகள் படபடவென அடித்தன. அவளுடைய வாலிப உடலின் இறுக்கமான அழுந்தலும் நெருக்கமும் அவன் நெஞ்சுக்குள்ளும், உடலிலும் ஏதேதோ புதிய உணர்வுகளைப் பிறப்பித்தன. எச்சிலைக் கூட்டி விழுங்கிவாறே, 'என்ன நந்தா நல்லாய்ப் பயந்து போனியே!.. இதுதான் பழையாண்டங்குளத்துக் காட்டிலை கொம்பிலை புலியைக் கொண்டு திரிஞ்ச குழுவன்!" எனச் சொன்னபோது நந்தாவதி பயம் சற்றுத் தணிந்தவளாய் தனது பிடியைத் தளர்த்திக் கொண்டாள்.
சேனாதி மரத்திலிருந்து குதித்தான். நந்தா அவசரத்தில் சோனவின் உதவியுடன் மரத்தில் ஏறிக்கொண்டாளாயினும், இப்போ இறங்கமுடியாமல் தவித்தாள். அவளுடைய தவிப்பைக் கண்ட சேனாதிக்கு ஒரே சிரிப்பாகவிருந்தது. அன்று முதல்நாள் அவள் பாலையடி இறக்கத்தில் பொன்னாவரசம் பற்றைக்குப் பின்னால் ஒளிந்து நின்று தன்னைப் பயப்படுத்தியதை நினைத்தவன், 'நந்தா! அண்டைக்கு என்னைப் பயப்புடுத்தினாய் என்ன?.. இப்ப அதுக்காய் இப்பிடியே மரத்திலையிரு!.. நான் வீட்டை போறன்!.." எனச் சொல்லியபோது அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அதைக் கண்ட சேனாதி மனமிளகியவனாய் மேலே ஏறி அவளுடைய கையைப் பிடித்து இறங்குவதற்கு உதவினான். கீழே இறங்கியதுமே அவள், 'இன்னிக்கு நான் பயந்தது உண்மையான குழுமாட்டுக்குத்தான்!.. ஆனா நீங்க.. அன்னிக்குப் பயந்தது எனக்குத்தானே!... பெரிய ஆம்பிளை!" எனக் கைகளைத் தட்டிக் கேலிசெய்யவே சேனா அவளுடைய தலையில் குட்டு வைப்பதற்குக் கையை உயர்த்தினான். மிக இலாவகமாக அவனுடைய கைக்குத் தப்பியவள், 'ஓ! பயங்! சரியான பயங்!" எனக் கேலி செய்துகொண்டே ஊரை நோக்கி ஓடினாள். சேனாதியும் சட்டெனக் கொம்புக் கத்தியையும் எடுத்துக்கொண்டு அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான். அவர்கள் அந்தக் காலை வேளையில் பசும்புற்றரையைக் குறுக்கறுத்து ஓடுகையில் இளமானும் கலைமானும் ஓடி விளையாடுவபோல் இருந்தது.
சோனாதியினால் ஏற்கெனவே முன்னால் ஓடிவிட்ட நந்தாவதியைப் பிடிக்கமுடியவில்லை. கிணற்றடியில் கால்கையைக் கழுவிக்கொண்டு வீட்டை அடைந்தபோதுதான், அயல் வளவில் ஒரு மரத்துக்குக் கீழே ஒற்றைக் கொம்பனாக நின்ற பட்டிக்; கேப்பை நாம்பனைக் கண்டான். அவனுடைய நெஞ்சு திக்கென்றது. ஓடிச்சென்று செல்லம்மா ஆச்சியை விசாரித்தபோது விஷயம் புரிந்தது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனை நினைக்க அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. மிகவும் துயரத்துடன் கேப்பையாiனிடஞ் சென்று வெகுநேரமாக அதைத் தடவிவிட்டுக் கொண்டான்.
அன்று மாலை, அவன் எருமைகளைச் சாய்த்துப் பட்டிக்குக் கொண்டு வருவதற்காக சுரைப்படர்ந்த குடாப் பக்கமாகச் சென்றபோது எருமைகள் அந்தக் குடாவின் கோடியில் நிற்பது தெரிந்தது. அங்கே எருமைகள் மத்தியில் உயரமாக, அகன்ற கொம்புகள் கொண்ட ஒரு எருமையைக் கண்டதும் அவன் நடப்பதை நிறுத்தி எருமைக்கூட்டத்தைக் கவனமாகப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உர்ஜிதமாயிற்று. ஆமாம்!... அந்தப் புதிய பெரிய நாம்பன் நிச்சயமாகப் பழையயாண்டங்குளத்துக் கலட்டியனேதான்! பட்டி நாம்பனான கேப்பையான் அங்கே கட்டி வைக்கப்பட்டிருப்பதால் இங்கே கலட்டியனுக்குப் போட்டி எதுவுமிருக்கவில்லை. எனவே அது சிங்கராயரின் எருமைகளோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தது. சேனாதி சட்டெனத் திரும்பி ஊருக்கு ஓடினான்.
அங்கே, குணசேகராவுடன் காலையில் காட்டுக்குச் சென்றிருந்த சிங்கராயர் வீடு திரும்பியிருந்தார். சோனதி விஷயத்தைக் கூறியதுமே அவர் உற்சாகமாகத் தன் தொடையில் தட்டி, 'அச்சா!... இண்டைக்கு மடக்கித்தாறன் கலட்டியன் புள்ளையை!" என்று அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, மால் பரணில் ஏறி உயரே கட்டியிருந்த பெரிய வார்க்கயிற்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
மால் திண்ணையில் அமர்ந்துகொண்டு வார்க்கயிற்றைப் பரிசீலித்தார் சிங்கராயர். மான் தோல்களை நாடாவாக வெட்டி, முறுக்கிப் பின்னப்பட்ட அந்த வார்க்கயிறு மிகவும் பாரமாகவும், மொத்தமாகவும் இருந்தது. அதன் ஒரு நுனியில், கவையுடன் கூடிய மரைக்கொம்பு அடுத்துக் கட்டப்பட்டிருந்தது. மற்ற நுனியில் சுருக்கு வளையமாகக் கிடந்தது. பொழுதுசரிந்து இருள் பரவும் வேளையில் வார்க்கயிற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, சேனாவை வரச்சொல்லிவிட்டு சுரைப்படர்ந்த குடாவை நோக்கி நடந்தார் சிங்கராயர்.
அவர்கள் சுரைப்படர்ந்த குடாவுக்குச் சற்றுத் தொலைவில் வந்ததும், சிங்கராயர் சேனாதியை நிற்கச் சொல்லிவிட்டு, வாயில் புகைந்த சுருட்டை இழுத்துப் புகையை ஊதினார். புகை காற்றில் அவருக்குப் பின்பாகச் சென்றது. 'காத்துவளம் சரி!.. நீ இதிலை இந்த மரத்தடியிலை நிண்டுகொள்.. நான் போய் கலட்டியனுக்கு காலிலை கொழுவிப் பாக்கிறன்.. " என்று சொல்லிவிட்டுப் பதுங்க ஆரம்பித்தார். சில கணங்களுக்குப் பின் சிங்கராயரைக் காணவில்லை. ஆங்காங்கு நின்ற தில்லம் செடிகளுள் மறைந்து, எருமைகளை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார் அவர். இருட்டிவிட்ட போதும், வானம் துடைத்துவிட்டதுபோல் கிடந்ததாலும், பரவைக் கடல் ஓரே வெளியாக இருந்ததாலும் சேனாதியால் எருமைகளை ஓரளவுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
அவனுடைய நெஞ்சு பரபரப்பில் படபடவென அடித்துக் கொண்டது. எருமைகளின் கால்களுக்கு இடையில் பதுங்கிச் சென்று, குழுவன் மாட்டுக்கு காலுக்குச் சுருக்கு வைப்பது என்பது எவ்வளவு கஷ்டமும், அபாயமானதும் என்பதை அவன் அறிந்திருந்தான். அத்துடன் கலட்டியன் சாதாரணமான குழுவன் அல்ல. அது மிகவும் மூர்க்கமும், அசுரப்பலமும் கொண்டதென்பது தெரிந்திருந்ததால், அவன் பயந்தான். குழுவன் மனித வாடையை உணர்ந்துகொண்டு தாக்க முற்படுமேயானால் உயிருடன் தப்பிவரவே முடியாது. சிங்கராயரைப்போன்ற அஞ்சா நெஞ்சமும், அனுபவமும் உடையவர்க்கே அது கஷ்டமான காரியம்.
நிமிடங்கள் கழிந்து மணித்தியாலங்களாகி விட்டிருந்தன. ஒரு அசுகையையும் காணவில்லை. நிலவுகூட கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தது. எனினும் சேனாதி பொறுமையுடன் காத்திருந்தான். காட்டு விலங்குகளுக்குக் காலக் கணிப்பு என்பதே கிடையாது. விலங்குகளை வேட்டையாடுவதற்குரிய சமயமும் வசதியும் வரும்வரை வெகு பொறுமையாக புலி, நரி முதலியவை காத்திருக்குமாம். சிங்கராயர் தன் அனுபவத்தைச் சேனாதிக்கும் பாடமாகப் புகட்டியிருந்தார்.
இவற்றையிட்டுச் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே எருமைக் கூட்டத்தினருகே இருந்த ஆட்காட்டி ஒன்று கிரீச்சிட்டுக் கொண்டே எழுந்து பறப்பதும், எருமைகள் வெருண்டு ஓடுவதும் சேனாதிக்குத் தெரிந்தது. .. சே!.. தப்பிவிட்டது! .. என அவன் வாய்விட்டுச் சலித்துக் கொள்ளும்போதே திருக்கோணம் வயல் பக்கமாக ஒரு உருவம் பரவைக் கடலைக் குறுக்கறுத்து ஓடுவது தெரிந்தது. அது கலட்டியன்தான் என அவன் கணித்தபோது, அதன் பின்னால் எதுவோ நீரில் கோடுபோல இழுபடுவது தெரியவே சேனாதி மகிழ்ச்சியினால் துள்ளினான். ..ஆகா! கலட்டியன் பின்னால் அந்தரத்தில் இழுபடுவது வார்க்கயிறுதான்!.. சோனதி சந்தோஷம் கரைபுரளச் சிங்கராயரை நோக்கி ஓடினான். சிங்கராயர் தனது எருமைகளைக் குரல்கொடுத்து அமைதிப்படுத்;திக் கொண்டிருந்தார். சேனாதியைக் கண்டதுமே, 'கலட்டியனுக்கு பின்னங்காலுக்கு கொழுவியிருக்கிறன்! திருக்கோணம் வயல் காட்டுக்கையே மச்சானுக்கு கொம்பு சிலாவீடும்!" எனச் சிரித்தார் சிங்கராயர்.
வார்க்கயிற்றின் நுனியில் கொக்கை போன்று கட்டப்பட்டிருக்கும் உறுதியான பெரிய மரைக்கொம்பு, எதாவது பெருமரத்தின் வேரில் கொழுவிக் கொள்ளும்போது, கலட்டியன் மூர்க்கமாக இழுக்கும். வேர் உறுதியாகவும், பலமாகவும் இருந்தால் குழுவன் அதைக் கழற்றிக்கொள்ள இயலாமல், மூர்க்கமாக அங்குமிங்கும் சுற்றிப் பாய்ந்து காட்டில் கட்டுப்பட்டு நிற்கும். பின்னர் அங்குபோய், கவனமாகவும், அவதானமாகவும் தலைக்கு கயிற்றை எறிந்து, கொம்பைச் சுற்றிச் சுருக்குவைத்து இழுத்துக் குழுவனை விழுத்திக் கட்டிவைப்பது சோனதிக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் இந்தக் கலட்டியன் இந்தச் சங்கதிகளுக்கெல்லாம் மசியுமா எனச் சேனாதி தனக்குள் சந்தேகப்;பட்டான்.
சேனாதியும் சிங்கராயரும் எருமைகளைச் சாய்த்து வந்து பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அங்கு குணசேகராவும், நந்தாவதியும் வந்திருந்தனர். நந்தாவதியின் தந்தை குணசேகராவுக்கு சிங்கராயரிடத்தில் பெரும் அபிமானம். அவனுக்குக் கீழே வேலைசெய்யும் ஆறு சேவையர் பார்டிக்காரரும், பாடசாலைக் கட்டிடத்தில் தங்கியிருக்க, குணசேகரா, பாடசாலைக் கட்டிடத்துக்கும் சிங்கராயர் வீட்டுக்கும் இடையில் தனது பட்டாப்பத்து ஓலைக் குடிசையை அமைத்து அதில் மகளுடன் தங்கியிருந்தான்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த நாலைந்து குடும்பங்களுக்கு, குமுளமுனைக்கு மேலேயுள்ள ஆறுமுகத்தா குளத்தின்கீழ் நீர்ப்பாசனக் காணிகள் வழங்கப்பட்டபோது, அவர்கள் அங்கு குடிபெயரவே, படிப்பதற்குப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பாடசாலையை மூடிவிட்டிருந்தனர். எனவே பாடசாலைக் கட்டிடத்தை உபயோகிக்க சேவையர் பாட்டிக்கு அனுமதி கிடைத்திருந்தது. குணசேகராவின் கீழ் வேலைபார்க்கும் அனைவரும் சிங்களவர்கள். சிங்கராயரிலும், அவர் மனைவிபேரிலும் மதிப்பும், அன்பும் உடையவர்கள். காலையில் அங்கு வந்து தயிர் வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு எதாவது நோய்நொடி என்றால், ஓடிப்போய்ப் பார்த்துக் கைமருந்து செய்யச் செல்லம்மா ஆச்சி தவறுவதில்லை. அவர்கள் சிங்கராயர் குடும்பத்துடன் அன்பாகப் பழகியபோதும், மரியாதை கருதி அனேகமாக ஒதுங்கியே இருப்பார்கள். வேலைகளை முடித்துவிட்டு இரவுப் பொழுதைச் சீட்டாடிக் கழித்துவிடுவார்கள். குணசேகராவுக்கு சீட்டு விளையாடுவதே பிடிக்காது. அதனால் பொழுதைப் போக்குவதற்காக நந்தாவதியையும் கூட்டிக்கொண்டு சிங்கராயர் வீட்டு முற்றத்துக்கு வந்துவிடுவான். நந்தாவதி செல்லம்மா ஆச்சியிடம் ஒண்டிக்கொள்வாள். ஆச்சியிடம் உலக்கையைப் பறித்து நெல் குற்றிக் கொடுப்பாள். தன் தாயை இழந்திருந்த அவளுக்கு செல்லம்மா ஆச்சியிடம் நிறையவே அன்பு கிடைத்தது.
குணசேகராவைக் கண்டதுமே சிங்கராயர் கலட்டியனுக்கு வார்க்கயிறு படுத்ததையிட்டுக் கூறிவிட்டு, காலையில் குழுவனுக்கு தலைமந்து வைக்கச் செல்கையில் குணசேகராவையும் கூடவரும்படி அழைத்தார்.
'அதுக்கென்ன! ஐயா சொன்னா நாங் வாறதுதானே!" என அவன் ஆர்வமுடன் பதில் சொன்னான். மூன்று வருடங்கள் அவன் இங்கு தொழில் புரிந்தும் இன்னமும் அவனுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை.
செல்லம்மா ஆச்சியும் நந்தாவதியும் முற்றத்து நிலவில், தெல்லுக்கொட்டைகளை வைத்துப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சேனாதி சாப்பிட்டுவிட்டு மால் திண்ணையில் படுத்திருந்தவாறே நந்தாவதி பாண்டி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். குப்பி விளக்கின் ஒளியில் அவளுடைய சிவந்த முகத்தின் கருவிழிகள் அடிக்கடி அவனிடத்தில் பாய்ந்து திரும்புவதைப் பார்த்தவாறே அவன் உறங்கிப்போனான்.
வளரும்
***************************************************
வட்டம் பூ அத்தியாயம் 10
அடுத்தநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து பாலைக் கறந்துவிட்டு, பழையாண்டங்குளத்துக் கலட்டியனைப் பிடிக்கப் புறப்பட்டனர். சிங்கராயர் கையில் சிறிய வார்க்கயிற்றுடனும், குணசேகரா காட்டுக் கைக்கத்தியுடனும், சேனாதிராஜன் துவக்குடனும் சென்றனர்.
காலில் சுருக்கு இறுகியதுமே பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மிரண்டுபோய் பரவைக் கடலைக் குறுகறுத்துப் பாய்ந்து, திருக்கோணம் வயலைக் கடந்து அப்பால் இருந்த அடர்ந்த காட்டினுள் புயலாய்ப் பிரவேசித்தது. இருப்பினும் காலுடனே இழுபட்டுவந்த நீண்ட வார்க்கயிற்றினை அதனால் கழற்றிக்கொள்ள முடியவில்லை. இன்னும் சற்றுத்தூரம் செல்ல முன்பே வார்க்கயிற்று நுனியில் கட்டப்பட்டிருந்த மரைக்கொம்பு, ஒரு பாலைமர வேரில் மாட்டிக் கொண்டது. அதன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அதன் சுதந்திரம் தடுக்கப்பட்டபோது அது மிரண்டு, மூர்க்கத்தனமான வீரியத்துடன் கயிற்றை இழுத்தது. அப்படியிருந்தும் முடியாமற் போகவே, ஆவேசம் வந்ததாய் அந்த இடத்தையே சுற்றிப் பாய்ந்து, தன்னை விடுவித்துக்கொள்ளப் பிரயத்தனம் செய்தது. அந்த முயற்சியில் வார்க்கயிறு பாலைமரத்தைச் சுற்றிக்கொண்டது. மிகுதிக் கயிறு இடங்கொடுத்த மட்டிலும் கலட்டியன் இழுத்துப் பாய்ந்ததால், அங்கிருந்த செடிகள், சிறுமரங்கள் யாவும் பிடுங்கப்பட்டும், மிதியுண்டும் துவம்சம் செய்யப்பட்டு, அந்த இடமே வெட்டையாகி விட்டிருந்தது. இரவுமுழுவதும், தன்னைப் பிணைத்திருந்த அந்தக் கயிற்றிலிருந்து விடுபட முயற்சி செய்ததனால் இப்போது கலட்டியன் சற்றுக் களைத்த நிலiயில் நின்றது.
சிங்கராயர் திருக்கோணம் வயலை ஒட்டியிருந்த பரவைக் கடற்கரையில் கலட்டியனின் பெரிய காலடிகளையும், வார்க்கயிறு இழுபட்ட தடத்தையும் கண்டு அவ்வழியே தொடர்ந்து வந்தார். அவருக்குப் பின்னே மிகவும் கவனத்துடன் குணசேகராவும், சேனாதியும் வந்துகொண்டிருந்தனர்.
சிங்கராயருக்குக் குழுமாடுகளின் குணம் நன்கு தெரியும். மரைக்கொம்பு கெட்டியாக வேரில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால், அல்லது மாட்டிக்கொண்ட குழுவன் நெடுங்கயிற்றில் நின்றால், மனிதரைக் கண்டதுமே அது மின்னல் வேகத்தில் தாக்கும். துவக்கு வெடிகூட அதனை ஒன்றும் செய்ய இயலாது. எனவேதான் அவர் தனது சகல புலன்களும் விழப்படைந்த நிலையில், மிகவும் உஷாராகக் கொஞசம் கொஞ்சமாக முன்னே சென்றார்.
அப்பொழுது அவர்களுக்குச் சற்றுத் தொலைவில், கலட்டியன் வார்க்கயிற்றை இழுத்துச்சென்ற தடத்தின் திசையில் எதுவோ ஒரு சத்தம் கேட்டது. சிங்கராயர் குணசேகராவையும் சேனாதியையும் அவசியமானால் மரத்தில் ஏறுவதற்கு ஆயத்தமாக இருக்கும்படி பணித்துவிட்டு, தான் மட்டும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி செல்லலானார்.
மேலே சிறிது தூரம் சென்றதும், கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைச் சிங்கராயர் கண்டுகொண்ட அதே சமயத்திலேயே கலட்டியனும் அவரைக் கண்டுகொண்டு, மூசியவாறே முன்னே பாய்ந்தது. அதனால் மனிதவாடை வந்த இடத்தை நோக்கிச் செல்ல முடியாததால், வேகமாகச் சுழன்று ஓட முயற்சித்தது. இந்த முஸ்தீபுகளை ஒரு மரத்தை ஒட்டியவாறே நின்று அவதானித்த சிங்கராயரின் முகத்தில் மென்னகை படர்ந்தது. மெல்ல மெல்ல கலட்டியன் கட்டுப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிவந்து பின்பு அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி, கலட்டியனையும் அது கட்டுப்பட்டு வெட்டையாகிய வட்டத்தையும், கொம்பு சிலாவியிருந்த பாலைவேரையும் கவனமாகப் பார்த்துத் திருப்தி அடைந்தவராய்க் கீழே இறங்கிய சிங்கராயர், உரத்துக்; கர்ச்சித்து, குணசேகராவையும் சேனாதியையும் 'பயப்பிடாமல் வாருங்கோ!.. கலட்டியன் புள்ளை நல்ல சிக்காரய்த்தான் கட்டுப்படடிருக்கிறார்!" எனக் கூவி அழைத்தார். இவருடைய சத்தம் கேட்டு கலட்டியன் மிரண்டு துள்ளியது.
குணசேகராவும், சேனாதியும் வருவதற்கிடையில், வசதியாக நின்று கொம்புக்கு சுருக்கு எறிய வேண்டிய இடத்தையும் தெரிவு செய்துகொண்டார் சிங்கராயர். கலட்டியனை நெருக்கமாகக் கண்டபோது அவர் அதனுடைய முரட்டு அழகையும், அசுரபலத்தையும் மிகவும் ரசித்துக்கொண்டார். மற்றைய குழுவன்கள் போலல்ல இது, தலைக்குக் கயிறெறிந்து அசையமுடியாமல் இழுத்துக் கட்டிவிட்டு, இரை தண்ணீர் இல்லாமல் பலவீனமடைய வைத்து, அதன் பின்னரே ஒரு சுபாவியான எருமையுடன் அதைப் பிணைத்துக் கிராமத்துக்குக் கொண்டு போகவேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டார் சிங்கராயர். இவ்வளவு விரைவில் கலட்டியன் தன் கையில் சிக்கும் என்று அவர் எதிர்பார்க்காததால், அவர் மனதில் திருப்தி கலந்த பெருமிதம் அரும்பியது.
அந்த இடத்துக்குக் குணசேகராவுடன் வந்த சேனாதி மிக அருகிலே கலட்டியனைக் கண்டபோது, பிரமித்துப் போனான். கன்னங்கரேலென்று நீலம்பாரித்த குன்றுபோல நின்றிருந்த கலட்டியனின் தலை, அகன்று பருத்து, யானையின் மத்தஜம் போலிருந்தது. அதில் முளைத்திருந்த பருத்த அகன்ற கொம்புகளின் நுனிகள் கூர்மையாய்ப்ப பளபளத்தன. குருவி இரத்தம்போலச் சிவந்திருந்த விழிகள் மிரண்டு உருண்டன. இடிகுமுதமாய் அது பாலைமரத்தைச் சுற்றிவந்து தாக்குவதற்குத் துடித்தது.
சேனாதிக்கு நா வறண்டு போயிற்று. குணசேகராவோ ஐந்தறிவும் கெட்டுப்போய் ஒரு மரத்தோடு ஒண்டிக் கொண்டிருந்தான். அவர்களுடைய பயத்தைக் கண்ட சிங்கராயர், கடகடவெனச் சிரித்தார். 'ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ! கலட்டியன் வடிவாய்க் கட்டுப்பட்டிருக்கு! .. தம்பி! நீ எதுக்கும் வெடிவைக்க ஆயத்தமாய் நில்லு!.. குணசேகரா!.. நீ ஏதுமெண்டால் டக்கெண்டு மரத்திலை ஏறு!.." எனக் கட்டளையிட்டுவிட்டுச் சேனாதியிடம் துவக்கைக் கொடுத்துவிட்டு, சிறிய வார்க்கயிற்றை வாங்கிக்கொண்டு கலட்டியனை நெருங்கிச் சென்றார். காட்டு மறைவிலிருந்து அவர் வெட்டைக்கு வந்ததுமே, கலட்டியன் சட்டென்று உந்தி, முன்னே சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கயிறு திரும்பவும் சுண்டி இழுக்கவே நிலைதவறி நிலத்தில் தொம்மென வீழ்ந்த கலட்டியன், நம்பமுடியாத மின்னல் வேகத்தில் எழுந்து மறுபடியும் அவரைத் தாக்குவதற்கு மூசியது. சிரித்துக் கொண்ட சிங்கராயர், தான் தெரிவுசெய்த இடத்தில் நின்றபடியே சிறிய வார்க்கயிற்றின் சுருக்கை அகலமாக்கி எறிய உயர்த்தியபோது, மறுபடியும் மூர்க்கத்துடன் கலட்டியன் அவரிடம் பாய்ந்தது. இம்முறையும் கயிறு சுண்டியிழுக்க விழுந்து எழுந்த கலட்டியன், வாலைச் சுழற்றி, முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி எறிந்து பயங்கரமாகத் தலையை அசைத்தது. இதுதான் சமயமெனத் தீர்மானித்த சிங்கராயர், ஒரு எட்டு முன்னே வைத்து கலட்டியனின் கொம்புக்குக் குறிவைத்து சுருக்கை எறிகையில், தன் காட்டுப்பலம் அத்தனையையும் ஒருங்குசேர்த்து அது சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தபோது, படீரென வார்க்கயிறு அறுந்துபோயிற்று! சட்டென விடுபட்டதால் தனது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத கலட்டியன், தன் பாதையிலிருந்து இலாவகமாக விலகிய சிங்கiராயரை ஒரு பக்கத்துக் கொம்பினால் சிலாவியபோது, சிங்கராயர் அப்படியே தூக்கி வீசப்பட்டார். கலட்டியன் புயல்வேகத்தில் சிங்கராயரைத் தூக்கி எறிந்து பாய்கையில் சேனாதியின் கையிலிருந்த துவக்கு முழங்கியது. இதுவரை அப்படியொரு ஒலியை மிக அருகிலே கேட்டிராத கலட்டியன் வெருண்டு ஓடியது. காட்டில் வெகுதூரம் அது பிய்த்துக்கொண்டு போகும் சத்தம் கேட்டது. மற்றக் குண்டுத் தோட்டாவைக் துவக்கினுள் போட்டுக் கெட்டித்துக் கொண்ட சேனாதி, திரும்பி சிங்கராயர் விழுந்த இடத்தைக் கண்டபோது பயந்து போனான்.
தரையில் கால்களை அகல வைத்துக் கொண்டிருந்த சிங்கராயரின் வலதுகால் தொடையின் உட்பகுதியிலிருந்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. துவக்குடன் அவரருகே ஓடிச்சென்ற சோனதியின் உடல் பயத்தினால் வெடவெடத்தது. 'எனக்கொண்டுமில்லை!.. நீ பயப்பிடாதை மோனை!.. குழுவன் இப்ப இனி வராது!" எனச் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் ஓடிவந்துவிட்ட குணசேகரா ஒரு கணமேனும் தாமதிக்காது சட்டெனத் தன் சாறத்தை உரிந்து கையில் எடுத்துக்கொண்டு, சிங்கராயரின் உட்தொடையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் காயத்தைப் பார்த்தான். அரையடி நீளத்தில், மூன்றங்குலத் தாழ்வில் கலட்டியனின் கூர்மையான கொம்பு தொடையைப் பிளந்திருந்தது. சட்டென்று தனது இடுப்பு பெல்றிறினால் காயத்துக்கு மேலாகத் தொடையைச் சுற்றி இறுகக் கட்டிய குணசேகரா, தனது சாறத்தை அளவாக மடித்து நன்றாகக் காயத்தை மூடி இறுக்கமாகக் கட்டினான். அதன்பின்னர் இரத்தம் பெருகுவது நின்றுபோயிற்று. வெகு காலமாக சேவையர் பார்டியில் வேலை பார்த்த அனுபவம் இப்போ அவனுக்குக் கைகொடுத்தது. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் முதலுதவியும் ஒன்று.
சுருதியாகச் செயற்பட்ட குணசேகரா சிங்கராயரிடம், 'இப்பிடியே ஆடாம நீங்க இருக்கிறது.. .. நாங் போய் நம்மடை ஆள் கொண்டு வாறது!.." என்று கூறிவிட்டு கோவணத்துடன் கிராமத்தை நோக்கி ஓடினான்.
இரத்தம் பெருகி வலியெடுத்த அந்த வேளையிலும், அருகில் பயந்துபோய் நின்ற பேரனைத் தடவி, 'எனக்கொண்டும் செய்யாது!.. இந்தக் குழுவனைப் புடிச்சு சிணுங்கிலை போடாமல் நான் சாகமாட்டன்!" என அந்த ஆபத்தான நிலையிலும் சிங்கராயர் வஞ்சினம் உரைத்தார். சோனதிக்கு அவருடைய அஞ்சாத நெஞ்சுத் துணிவைக் கண்டு பெருமையாக இருந்தது. ஆயினும் இவ்வளவு இரத்தம் பெருகியிருக்கிறதே!.. முதிர்வயதில் இந்த இழப்பு இவரைப் பாதிக்குமே என்ற பயம் அவன் நெஞ்சை அலைக்கழித்தது.
கிராமத்துக்கு அருகிலேயே திருக்கோணம் வயலுக்குக் கிட்ட இந்தச் சம்பவம் நடந்ததால் குணசேகராவும் அவனுடைய சகாக்களும் மிகவும் விரைவாக வந்துவிட்டிருந்தனர். கூடவே செல்லம்மா ஆச்சியும், நந்தாவதியும் ஓடி வந்திருந்தனர். சிங்கராயரைக் கண்டதுமே ஆதி ஐயனே எனப் புலம்ப ஆரம்பித்த மனைவியைப் 'பொத்தடி வாயை!" என அடக்கிவிட்டார் அவர். அதன்பின் அவள் வாய்விட்டு அழாமல், அவரைப் பிடித்துக்கொண்டு அவரின் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள். ஆனால் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நந்தாவதி பயத்தில் வெளிறிப் போயிருந்தாள்.
குணசேகராவின் ஆட்கள் கொண்டு வந்திருந்த சாக்குக் கட்டிலில் சிங்கராயரைத் தூக்கிக் கிடத்திவிட்டு, நான்குபேராகச் சேர்ந்து கட்டிலுடன் தோளில் வைத்துக்கொண்டு விரைந்து நடந்தனர். அவர்களில் ஒருவன் ஏற்கெனவே குணசேகராவின் பணிப்பின்பேரில் குமுளமுனைக்கு ஓடிப் போயிருந்தான். அவனை வள்ளத்தை கிராமத்துக்கு மிக அண்மையில் உள்ள சுரிவாய்க்காலுக்கு கயிலாயரைக் கொண்டுவரும்படியும், குமுளமுனையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குச் செல்வதற்கு உழவு மெசின் ஒன்றை ஒழுங்கு செய்யும்படியும் கூறியிருந்தான்.
அவர்கள் ஐயன் கோவிலைக் கடந்து செல்கையில் செல்லம்மா ஆச்சி 'ஐயனே! நீதான் அவருக்குத் துணை!" எனக் கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள்.
இரத்தப் பெருக்கினால் சற்றுச் சோர்ந்துபோன சிங்கராயரை குணசேகராவும் அவனுடைய ஆட்களும் பக்குவமாகத் தூக்கி வள்ளத்தில் இருத்துகையில், 'கவனம்! கவனம்!" என்று பதறிய கையிலாயர் அவரைக் கைத்தாங்கலாக அப்படியே தன்னுடன் சாய்த்து வைத்துக்கொண்டார்.
கரையில் கண்ணீர் மல்க நின்ற நந்தாவிடம் செல்லம்மா ஆச்சி, 'மோனை நந்தா!.. எல்லாம் போட்டது போட்டபடி வாறன்.. வீட்டைப் பாத்துக்கொள் அம்மா!" எனக் கேட்டுக்கொண்டாள்.
குணசேகராவும் சேனாதியும் கம்பூன்றி வள்ளத்தைச் செலுத்த, குணசேகராவின் ஆட்கள் சாக்குக் கடடிலையும் தூக்கிக்கொண்டு மூண்டாத்துப்போர் இறக்கத்துக்கு ஓடினார்கள்.
குணசேகராவும் அவனது சகாக்களும் துடித்துப் பதைத்து உதவுவதைப் பார்த்த சேனாதியின் நெஞ்சு நெகிழ்ந்தது. அவர்கள் யாவருமாகச் சிங்கராயரைச் சுமந்துகொண்டு குமுளமுனைக்கு வந்தபோது, மலைவேம்படிச் சந்தியில் குணசேகராவின் ஆள் காருடன் காத்திருந்தான். முல்லைத்தீவுக் காரொன்று தெய்வச்செயலாக, வைத்தியசாலையில் பிள்ளை பெற்ற பெண் ஒருத்தியைக் குமுளமுனைக்கு அந்தநேரம் கொண்டுவந்து இறக்கிவிட்டுத் திரும்புகையில், அவன் அதை ஒழுங்குபண்ணி வைத்திருந்தான்.
சிங்கராயரைத் தூக்கிக் காரில் ஏற்றுகையில் அவர் தொடையைச் சுற்றிக் கட்டியிருந்த சாறத்தைக் கவனித்தான் சேனாதி. அது இரத்தத்தில் தெப்பமாக நனைந்திருந்தது.
அவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையை அடைந்தபோது, சிங்கராயரை உடனடியாகச் சிகிச்சைக்கு உட்படுத்தினார் பெரிய டாக்டர். சிலமணி நேரத்தில் அவர் சிகிச்சசையை முடித்துக் கொண்டு வந்து, வெளியே நின்ற செல்லம்மா ஆச்சி, சேனாதி முதலியோரிடம், 'நல்ல காலம்! நீங்கள் உடனேயே கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது!.. இனி ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை!.." எனச் சொன்னபோது, அவர்களுக்கெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்தது.
வளரும்
***************************************
வட்டம் பூ அத்தியாயம் 11
சிறந்த ஆரோக்கியமான தேகத்தைக் கொண்டிருந்த சிங்கராயரின் தொடையில் ஏற்பட்ட காயம் பத்து நாட்களுக்குள்ளாகவே ஆறிவிட்டிருந்தது. எனினும், டாக்டரின் சொற்படி அவர் உடல் பூரணமாகத் தேறும்வரையில், தண்ணீரூற்றில் மகள் கண்ணம்மாவுடன் தங்கியிருந்தார். அவளுடைய கணவனும் பிள்ளைகளும் அவரை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டனர்.
மகள் கண்ணம்மா சிங்கராயருக்குக் குழுவன் வெட்டிப் போட்டதாம் என முதலில் அறிந்தபோது மனம் பதைபதைத்துப் போனாள். ஆனால் அவர் நாளடைவில் தேறி, அவள் வீட்டில் வந்து தங்கியபோது இந்தச் சந்தர்ப்பத்துக்காக உள்ளுரச் சந்தோஷப்படவே செய்தாள். இந்த வழியிலாவது தாய்தந்தையருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என அவள் மகிழ்ந்தாள்.
சிங்கராயருக்கோ ஆண்டாங்குளத்தை விட்டு இங்கே தண்ணீரூற்றில் தங்கியிருப்பது நீரில் வாழும் மீனைத் தரையில் தூக்கிப்போட்டது போலிருந்தது. காயம் ஆறிவிட்டதுதானே, இனிப் போகலாம், அங்கே மாடுகன்று, வீடுமனை என்ன பாடோ என அவசரப்பட்டார். ஆனால் கண்ணம்மா அவர்களை விடவே இல்லை. ஒருநாள் மாலையில் அவர்கள் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணம்மா தன் மனதில் இருந்த எண்ணத்தை மெல்ல வெளியிட்டாள். 'அப்பு! நீங்கள் ஏன் இந்த வயதிலும் மாடு கண்டோடை காடு கரம்பையெல்லாம் திரியவேணும்.. அம்மாவும் இப்ப நல்லாய் தளர்ந்துபோனா.. பேசாமல் மாடுகண்டு எல்லாத்தையும் வித்துப்போட்டு இஞ்சை எங்களோடை வந்து இருங்கோ!.. இந்தப் பெரிய வீட்டிலை எல்லா வசதியும் கிடக்க அந்தக் காட்டுக்கை கிடந்து ஏன் அவதிப்படுறியள்?" எனக் கேட்டாள்.
சிங்கராயர் சிலகணம் தன் மகளை ஏறிட்டுப் பார்த்தார். பின்னர், 'தங்கச்சி!.. நீங்கள் வேணுமெண்டால் எனக்குப் பிறகு மாடு கண்டெல்லாத்தையும் வில்லுங்கோ!.. ஆனால் ஆண்டாங்குளத்தை விட்டிட்டு இஞ்சை வந்து இருங்கோ எண்டு என்னைக் கேக்காதை!.. நான் செத்தாலும் அங்கைதான் சாகவேணும்!.. நான் விடுற கடைசி மூச்சு ஆண்டாங்குளக் காத்திலைதான் கலக்கோணும்!.. என்ரை சாம்பலும் ஆண்டாங்குளத்து ஆத்திலைதான் கரையவேணும்!.." என ஆணித்தரமாக தன் முரட்டுக் குரலில் கூறினார் சிங்கராயர்.
இதைக் கேட்ட கண்ணம்மா தன்னருகே அமர்ந்திருந்த தன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். அவள் அமைதியான புன்னகையுடன் இருந்தாள். .. நான் அவற்றை நிழல்தான்!.. அவர் எங்கை இருக்கிறாரோ அங்கைதான் நான் இருப்பன்! .. என்பது போலிருந்தது அவளுடைய புன்னகை.
இருப்பினும் அவர்கள் சீக்கிரம் ஆண்டாங்குளம் செல்லாமலிருக்க கண்ணம்மா ஒரு உபாயத்தைத் தேடிக்கொண்டாள். 'நாளைக்குச் சனிக்கிழமைதானே!.. சேனாதியை ஒருக்கால் ஆண்டாங்குளம் அனுப்பி வீடுவாசலைப் பாத்துக்கொண்டு வரச்சொல்லுவம்.. நீங்கள் இன்னும் இரண்டுமூண்டு நாள் இருந்திட்டுப் புதன்கிழமை அளவிலை ஆண்டாங்குளம் போகிலாம்!.. அப்புவும் நடந்துபோற அளவுக்குச் சுகமாகிவிடுவார்!.." என அவள் ஆவலுடன் கேட்டபோது, சிங்கராயர் கொடுப்புக்குள் சிரித்தபடி, 'சரி! அதுக்கென்ன.. அப்பிடிச் செய்வம்!" எனச் சம்மதித்தபோது கண்ணம்மா மகிழ்ந்து போனாள்.
அவளைவிட அதிகமாக, பாடசாலைவிட்டு வீடு திரும்பிய சேனாதி விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தான்.
ஆண்டாங்குளத்தில் செல்லம்மா ஆச்சி இல்லாதது நந்தாவதிக்குப் பெருங்குறையாகத் தெரிந்தது. ஆயினும், அவள் அதிகாலையிலேயே எழுந்து, தகப்பனுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, சிங்கராயர் வீட்டுக்குச் சென்று, முற்றம், மால், குசினி யாவற்றையும் கூட்டித் துப்பரவு செய்வாள். அடுப்பில் உலைவைத்து சிங்கராயரின் வேட்டை நாய்கள் வயிறுவாடாமல் பார்த்துக் கொண்டாள். மான்குட்டி பின்தொடர அவள் இந்த வேலைகளையெல்லாம் மிக மகிழ்ச்சியுடன் செய்தாள். அவற்றைச் செய்கையில் அவளுடைய மனம் சதா சேனாவை நினைத்துச் சுவைக்கும். அன்று அவன், கோழிப்பொறிச் சுருக்கிலே தன் சுட்டுவிரல் அகப்பட்டுக் கொண்டபோது, அதனைச் சட்டென்று அவன்தன் வாயினுள் வைத்து வலியைகை; குறைத்ததை எண்ணிக் கொள்வாள். வெதுவெதுவென்ற ஈரமும், தன் விரலைச் சுற்றி ஸ்பரிசித்த அவனுடைய கதகதப்பான நாவும், அவள் மனதில் ஒரு கிறக்கத்தை உண்டுபண்ணும். வெட்கத்தில் முகம்சிவக்க, அதே விரலைத் தன் வாயினில் வைத்துச் சுவைத்துவிட்டுச் சட்டென எடுத்துக்கொள்வாள் நந்தாவதி. ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையைச் செய்யும்போதும், சேனாவுக்காகவே செய்கின்றோம் என்று மனங்களிப்பாள்.
அன்று சனிக்கிழமை குணசேகரா தனது ஆட்களையும் கூட்டிக்கொண்டு அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். பொழுது விடிவதற்கு முன்பாகவே நந்தாவதி எழுந்திருந்து தகப்பனுக்கு மதிய உணவையும் தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தாள். சிங்கராயர் வீட்டுக்கு வந்து வீடுவாசலைத் துப்பரவு செய்து கொண்டிருக்கையில், பாலையடிப் பக்கமாக ஆட்காட்டிகள் கத்துவது கேட்டது. இன்று சனிக்கிழமை அல்லவா! ஒருவேளை சேனாதான் வருகிறானோ என்ற எண்ணம் துளிர்க்கவே, நந்தாவதி கருங்கூந்தல் காற்றில் பறக்க, பாலையடி இறக்கத்தை நோக்கி, பனைகளினூடாகப் பறந்தாள். அங்கே, அவள் நினைத்தது போன்று, சோனதிராஜன் வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவளால் தன் மகிழ்சியை அடக்கவே முடியவில்லை. ஓடிச்சென்று அவனுடைய கைகளை இறுகப் பற்றியவாறே கூட நடந்து வந்தாள். அவள் தனக்காகவே ஓடிவந்ததைக் கண்ட சேனாவின் நெஞ்சு பூரித்துப் போயிற்று.
தண்ணென்றிருந்த அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே, சேனாதி பனைகளினூடாக நடந்து வந்து பட்டியையும், வீட்டையும் பார்த்தபோது வியந்துபோனான். அவை யாவும் கூட்டித் துப்பரவாகவும் ஒழுங்காகவும் இருந்தன. 'நந்தா கெட்டிக்காறிதான்!" என்று சொல்லிக் கொண்டே அவளுடைய முகத்தை நோக்கிய போதுதான், அவளுடைய அழகிய நெற்றியில் இருந்த கறுப்புப் பொட்டைக் கவனித்தான் சேனாதி. அவன் விழிகள் மகிழ்ச்சியினால் விரிய, 'ஆ.. நந்தா இப்ப எவ்வளவு வடிவு!" என்று பாராட்டியபோது, நந்தாவதி செம்மைபடரச் சிரித்தாள்.
'நந்தா!.. நீ இஞ்சை எல்லாத்தையும் செய்தது எனக்கொரு வேலையும் இல்லாமல் போச்சுது!.. நான் இப்ப வரேக்கை பாத்தனான்.. கடலிலை நல்ல றால் கிடக்கு!.. வாறியே புடிக்கப் போவம்!" என உற்சாகமாகக் கேட்டான். 'ஆமா! எனக்கு இன்னிக்குப் பூரா ஒரு வேலையும் இல்லை!.. தாத்தா அந்திக்குத்தான் வருவாங்க!.." எனக் குதூகலித்தாள் நந்தா.
சோனதி தான் உடுத்துவந்த சாறத்தையும், சேட்டையும் களைந்து வைத்துவிட்டு, சிங்கராயர் வீட்டில் வைத்திருந்த தனது சாறத்தை எடுத்து உடுத்துக் கொண்டான். பரவைக் கடலில் சேற்றில் அளைந்து இறால் தடவ வேண்டுமாதலால் அவன் நந்தாவதியையும் ஓடிச் சென்று பழையதாய் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வரும்படி சொன்னான். அவள் உடை மாற்றிக்கொண்டு வருவதற்கிடையில், இறால் பிடித்துப் போடுவதற்கான பனையோலை உமலையும் எடுத்துக் கொண்டான். அவன் வந்ததிலிருந்தே அவனைச் சுற்றி வேட்டம் பாய்ந்த நாய்களைத் தடவி அன்புகாட்டிக் கொண்டிருக்கையில் நந்தா வந்துவிட்டாள். அவள் மேலே செம்மஞ்சள் நிறத்தில் சட்டையும், கீழே கத்தரிப்பூ நிறத்தில் துண்டுமாகக் கட்டிக்கொண்டு ஓடிவந்தாள்.
அவர்களிருவரும் அந்த இளங்காலைப் பொழுதில், குதூகலமும், உற்சாகமும் மிக்கவர்களாகக் கிராமத்துக்குக் கிழக்கே கிடந்த சுரிவாய்க்காலை அடைந்தனர். நந்தாவதியும மான்குட்டியும் கரையில் நிற்கச் சேனாதி முழந்தாளில் இருந்து சுரிவாய்க்காலில் இறால் தடவிப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். 'இஞ்சை றால் இல்லை!.. நந்தா வா.. துண்டித்தீவுக் கடலுக்குப் போவம்!.." எனச் சொல்லிவிட்டு எழுந்து நடந்தபோது, நந்தாவதியும் சுரிவாய்க்காலில் இறங்கி அவனுடன் கூடவே சென்றாள். இடுப்பளவு ஆழமான நீரில் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்த மான்குட்டி மணி, ஏக்கத்துடன் அவர்களையே சிலநிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, ஊர்ப்பக்கமாக மேயப் போய்விட்டது.
கிராமத்திலிருந்து சுமார் அரைமைல் தூரத்தில் இருந்த துண்டித்தீவு பரவைக் கடலை அவர்கள் அடைந்தபோது, சேனாதி தண்ணீரில் அமர்ந்து இறால் தடவினான். சட்டென்று அவன் முகம் மலர்ந்தது. வெற்றிப் பெருமிதத்துடன் தன் கையிலிருந்த பெரிய இறாலைத் தண்ணீரில் கழுவிவிட்டு நந்தாவுக்குத் தூக்கிக் காட்டினான். 'அனே! எவ்வளவு பெரிசு!" என வியந்த நந்தா, 'ஐயோ சேனா!.. எனக்கும் றால் பிடிக்கச் சொல்லித் தாங்களேன்!" எனச் சிறுபிள்ளைபோற் கெஞ்சினாள்.
அவளை அழைத்து தண்ணீரில் தன்னருகில் முழந்தாள்களில் அமரவைத்து அவள் கையைப் பிடித்து தண்ணீரின் கீழே மெத்தென்று சேறாக இருந்த தரையைத் தடவ வைத்தான் சேனா. சேற்றில் மாடுகளின் காற்குளம்பு பதிந்த பள்ளமான இடங்களுள், இறால்கள் ஆபத்து வருவதைக் கண்டு பதுங்கிக் கொள்ளும். அப்படியே இலேசாகத் தடவிக்கொண்டு போய், இறால் கையில் தட்டுப்பட்டதும் சட்டென்று பொத்திப் பிடித்துவிட வேண்டும். இரண்டொருமுறை காட்டிக் கொடுத்ததுமே நந்தா புரிந்து கொண்டாள். முதன்முதலில் சேனாதி பிடித்த இறாலைவிடக் கொஞ்சம் பெரிதாக ஒரு கருவண்டன் இறாலைப் பிடித்ததுமே, அவள் குழந்தையாய்க் குதித்தாள். 'பாத்தீங்களா! என்னோடைதானே பெரிசு!" எனப் பெருமையடித்துக் கொண்டாள். சேனாதி தன் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருந்த ஓலை உமலுக்குள் பிடித்த இறால்களைப் போட்டுக் கொண்டிருந்தான். நந்தா தனது வயிற்றருகே, உடுத்தியிருந்த துண்டை மடியாகக் கட்டிக்கொண்டு, தான் பிடித்த இறால்களை அதற்குள் கட்டிவைத்துக் கொண்டாள். மடி நிறைந்ததுமே, துள்ளிக்கொண்டு வந்து சேனாதியின் பட்டைக்குள் சேர்ந்த இறால்களைப் போடுவாள்.
நிர்மலமான நீலவானம் மேலே கவிந்திருந்தது. அவர்களைச் சுற்றிலும் அமைதியான பரவைக்கடல். அதன் கரையோரங்களில் பச்சசைப் புற்றரைகளில் மரங்களும், பற்றைகளும் காலை வெய்யிலில் குளித்துக்கொண்டு நின்றன. ஒரேயொரு வெள்ளைக் கொக்கு மட்டும் ஒற்றைக் காலில் மீனுக்காக சற்றுத் தொலைவில் தவமிருந்தது. அவர்களிருவரையும் தவிர அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எந்த ஜீவராசியின் நடமாட்டமே காணப்படவில்லை.
இளம் காட்டுப்பறவை ஜோடிபோல அவர்கள் தமக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொண்டே இறால் தடவிப் பிடித்தனர். சிங்கராயரின் சுகசேமம், அவர்கள் எப்போ வருவார்கள், சேனாவின் தங்கை தாய் எப்படியிருக்கின்றனர், பின்பு கேப்பையான், கலட்டியன், காட்டு வேட்டை என்றெல்லாம் அவர்கள் சலிக்காமலே பேசிக்கொண்டிருந்தனர்.
அந்தப் பேச்சில் நந்தாவதியின் பிறந்த இடமாகிய கண்டியைப் பற்றிப் பேச்சு வந்தபோது, நந்தாவதி மிகவும் பாசத்துடனும், பெருமையுடனும் தனது பிறந்தகத்தைப் பற்றிக் கூறினாள். 'அங்கிட்டு பெரிய பெரிய மலையெல்லாம் இருக்கு சேனா!.. நம்மோடை வூட்டுக்கு கிட்டச்சே மாவலி ஆறு ஓடுது.. அங்கிட்டுக் குளிக்க இறங்கினால் வெளியே வர மனசே இருக்காது சேனா!.. கரையெல்லாம் சந்திரகாந்திப் பூ காடாய்ப் பூத்துக்கிடக்கும்!.. நம்ம மாவலி ஆத்திலே நெறயப் பெரிய பாறைங்க கெடக்கும்.. அதிலே உக்காந்திட்டே குளிக்கலாம்.. மேலேயிருந்து தண்ணி ஜில்லெண்டு கொட்டும்!.. ஆத்துக்கு அடியிலை இப்பிடிச் சேறாகவே இருக்காது.. ரத்ரங் பவுடர்மாதிரி.. ஆமா.. பவுனு பவுடர்மாதிரி மண்ணு மினுங்கிக்கிட்டே இருக்கும்!.." இந்தியத் தமிழின் இனிய வாடையும், சிங்களச் சொற்களுமாய் கன்னி மழலையில் பேசிய நந்தாவதியை சேனாதி இறால் தடவிக்கொண்டே கவனித்தான். அவளுடைய கண்கள் கனவில் மிதப்பனபோல் இருக்க அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். இவளுடைய இந்தத் தங்கநிறமான மேனியும், பூரணச் சந்திரன் போன்ற முகமும், அதன் பின்னே மழைமேகமாய்க் காணும் இருண்ட கூந்தலும், தண்ணென்று ஒளிரும் அகன்ற கரிய விழிகளும், மாவலித்தாய் அவளுக்கு ஆசையோடு வழங்கிய சீதணங்கள் போலும் என அவன் நினைத்துக் கொண்டான். உடனே தன்னுடைய நிறம் அவனுக்கு ஞாபகம் வரவே, தனது மார்பையும் கைகளையும் பார்த்துக்கொண்டான். சிங்கராயரின் மினுமினுக்கும் கருநிறம் கொஞ்சமும் மாற்றுக் குறையாது அவனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது. அவன் அதையிட்டு மேலே சிந்திப்பதற்குள் நந்தாவதி, 'ஆமா சேனா!.. நீங்கதான் ஒருநாளும் மலைநாடு பாத்ததில்லையே!.. அடுத்த பயணம் நாம கண்டிக்குப் போகக்குள்ள வர்ரீங்களா?" என ஆவலுடன் கேட்டாள். 'பாப்பம்!.. அம்மாவைக் கேட்டுப் பாக்கிறன்!.." எனச் சேனா சொன்னபோது, அவளுக்கு இறந்துபோன தன் தாயின் ஞாபகம் வரவே, 'சேனா! என்னோட அம்மா ரொம்ப அழகு!.. நாள்பூராப் பாத்திட்டே இருக்கலாம்!.. இப்ப அவ இல்லை!.." எனக் கண்கள் கலங்கினாள் நந்தா. அவன் அவளைத் தேற்றும் வகையில், 'கவலைப்படாதை நந்தா!.. அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறம்!" எனக் கூறியபோது, 'ஆமா!.. ஆமா!.." என ஆமோதித்துக் கொண்டாள் நந்தாவதி.
சேனாதி கொண்டு வந்த பெரிய பனையோலை உமல் இறால்களினால் நிரம்பி விட்டபோது, அவன் மேலே பொழுதைப் பார்த்தான். சூரியன் தலைக்கு நேரே ஏறியிருந்தது. தண்ணீரில் அமர்ந்து இருந்ததாலும், அதைத் தழுவிவந்த மென்காற்று குளிர்ந்து வீசியதாலும், நந்தாவின் இனிய குழந்தைப் பேச்சினாலும் அவனுக்குப் பொழுது கழிந்ததே தெரியவில்லை. இறால் தடவிக்கொண்டே அவர்கள் சுனையடிக்கு வந்திருந்தார்கள். ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் பரவைக் கடற்கரையருகே இருந்த இந்தச் சுனை எந்தக் கோடையிலுமே வற்றுவது கிடையாது. சில்லென்ற இளநீர்போன்ற தண்ணீர் எப்போதுமே அங்கு நிறைந்திருக்கும்.
'வா நந்தா!.. சுனையிலை இறங்கி கழுவிக்கொண்டு வீட்டை போவம்!.. மத்தியானமாயப் போச்சு.. நல்லாய்ப் பசிக்குது!.." என அவளை அழைத்துக்கொண்டு கரையேறிய சேனாவுடன் சென்றாள் நந்தாவதி. இருவருமாகச் சுனையில் இறங்கி நன்றாகச் சேறு போகும்வரை கைகால்களைக் கழுவிக்கொண்டனர். இருவருடைய உடைகளுமே நனைந்திருந்தன. நந்தா புற்றரையில் ஏறி நின்றவாறே தான் உடுத்தியிருந்து துண்டை அப்படியே பிழிந்துவிட்டுக் கொண்டிருக்கையில், சேனாதி திடீரென வலியில் ஆவென்று அலறியது கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்ச் சேனாவைப் பார்த்தாள். அவன் ஒரு காலை உயர்த்திப் பிடித்தபடி வலியில் துடிக்கவே நந்தாவதி ஓடிச்சென்று அவனைத் தாங்கிக்கொண்டு அவனுடைய பாதத்தைப் பிடித்துப் பார்த்தாள். அங்கே குதிக்காலில் ஒரு மீன்முள் இறுகிக்கிடந்தது தெரிந்தது. நந்தாவின் தோளைப் பிடித்தவாறே சேனாதி அந்த முள்ளை எடுக்க முயன்றபோது, அது அப்படியே குதிமட்டத்தில் முறிந்து போய்விட்டது. அட! என்று அலுத்துக் கொண்டவனை, 'வாங்க சேனா!.. போயி நெழல்ல உக்காந்து.. மௌ;ள நா எடுத்திடறன்!" என்று அவனைக் கைத்தாங்கலாகவே, கரையில் குடைபோலக் கவிந்துநின்ற மரத்தடிக்கு அழைத்துச் சென்றாள் நந்தா.
வெகுகாலமாக உப்புச் சேற்றில் ஊறியிருந்த கெழுத்திமீன் முள்ளாதலால், சேனாவினால் அந்த வலிக் கடுப்பைத் தாங்க முடியவில்லை. முகம் வேதனையில் கோணியது. 'கொஞ்சம் பொறுத்துக்குங்க சேனா!.. நா எடுத்திடறன்.." என்று அவனைத் தேற்றிய நந்தாவதி, அவனை அடிமரத்துடன் சாய்ந்திருக்கச் செய்துவிட்டு, அவனுடைய காலை மடித்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு, முள் தைத்திருந்த இடத்தைக் கையினால் துடைத்து விரலால் தடவிப் பார்த்தாள். ஒட்டமுறிந்த முள் விரலில் நெருடியது. அந்த இடத்தில் தனது விழிகளைப் பதித்தபடியே மளமளவென்று தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து, ஆழமாகத் தைத்திருந்த முள்ளை எடுக்க முயற்சித்தாள். சேனாதியோ வலியினால் விழிகளை இறுக மூடிக்கொண்டு, 'பாத்து!.. பாத்து!.." எனத் துடித்தான். ஊசியினால் அந்த முள்ளை எடுக்க முடியாதென கண்டபோது, அவள் சட்டெனக் குனிந்து சேனாதியின் பாதத்தில் வாயை இறுகப் பதித்து பற்களினால் முள்ளின் அடிப்பாகத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, மெல்ல மெல்ல முள்ளை எடுத்தாள். முள்ளை எடுத்த இடத்தில் பொட்டுப்போலத் துளிர்த்த இரத்தத்தை அவள் துடைத்தபோது வலி சட்டனெக் குறையவே, சேனாதி விழிகளைத் திறந்தான். இரத்தைத் துடைத்துவிட்டு தன் விரல்களால் அவனுடைய குதிப்பகுதியை நசித்து மேலும் ஒருசொட்டு இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, 'இப்பவும் வலிக்குதா சேனா?" என அன்புடன் கேட்டுக்கொண்டே நிமிர்ந்தவள், சேனாவின் பார்வை தனது உடலில் பதிந்திருந்த இடத்தைக்கண்டு சிவந்துபோனாள். தலையைக் குனிந்துகொண்டு சட்டை பிரிந்திருந்த இடத்தில் ஊசியைக் குத்திக்கொண்டாள்.
சோனாதி தன் உடல் முழுவதும் இளரத்தம் குப்பென்று பாய உடல் தகிக்கும் உணர்வை முதன்முதலில் அனுபவித்தவனாய், என்ன செய்வதென்றே தெரியாமல் அவளுடைய செழுமையான மடியில் அழுந்திக் கிடக்கும் தனது காலை எடுக்க முடியாதவனாய்த் தவித்தான். நந்தாவதி தனது மடிமீது கிடக்கும் அவனுடைய பாதத்தையும் அதைப் பற்றியிருக்கும் தனது கரத்தையும் குனிந்த தலை நிமிராமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பாதத்தைத் தூக்கி அப்பால் வைக்க முடியாதவாறு அவளுள் அலையலையாக எழுந்த புதிய உணர்வுகள் அவளை அலைக்கழித்தன. நீரோட்டத்தோடு மிதந்து செல்லும் தாமரை புஷ்பம்போன்று அவள் அவனுடைய இழுப்புக்கு இசைந்தபோது, அவனுடைய வெம்மையான இதழ்கள் அவளுடைய கன்னத்தின்மேல் சுடச்சுடப் பதிந்தபோது, அவள் தன் விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள்.
அவர்களுக்கு மேலே குளிர்ந்த நிழல் தரும் பச்சைமரம் குடைபிடிக்க, கடல்காற்று அந்த இளைய உடல்களைத் தழுவிச் சிரித்தது. பறவைகள் தேன் குரலில் நீட்டி நீட்டிப் பாடின. வானம் நிர்மலமாய், நீலமாய் அகன்று உயர்ந்து நின்று வாழ்த்தியது. மண்மாதா இந்த இயற்கையின் இளைய ஜோடிகளை மெத்தெனத் தாங்கி ஸ்பரிசித்து மகிழ்ந்தாள். இதுதான் இயற்கை! இதுதான் உண்மை! என்று இயற்கைத்தாய் சிலிர்த்துக் கொண்டாள்.
முதன்முதலாக நீலவானில் இறகுவிரிக்கும் இரண்டு சின்னப் பறவைகள் எழுந்தும் தாழ்ந்தும், வட்டமிட்டும் பறந்து எக்களித்தன. முதன்முதலாக நீரில் பிறந்த மீன்குஞ்சுகள் நழுவியும் வழுவியும், நீரினுள் ஊடுருவிப் பாய்ந்தும் குதூகலித்துக் கொண்டன.
கதிரவனின் சாய்வான கதிர்கள் மரக்கிளைகளின் கீழாக வந்து அவர்களைச் சுட்டுச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தபோது, சட்டென எழுந்துகொண்ட நந்தாவதி, 'நா வூட்டுக்குப் போறன்!.. வாங்க சேனா!.." எனச் சொல்லிப் பறந்துவிட்டாள்.
சேனாதி எழுந்து சுனைக்கரையில் கிடந்த இறால் உமலையும் கையில் எடுத்துக்கொண்டு காலை விந்தி விந்தி ஊரைநோக்கி நடந்தான்.
அவன் வன்னிச்சியா வயல் கிணற்றடியில் குளித்து வீட்டுக்குப் போனபோது, அங்கு நந்தாவதி குளித்துவிட்டுப் பளிச்சென்று புதிய ஆடைகளுடன், வெண்ணிலவு நெற்றியில் கறுத்தத் திலகத்துடன் 'வாங்க சேனா!.. பஸ்சுக்கு நேரமாயிடிச்சி!.. சாப்பாடு கொண்டாந்திருக்கேன்!.. சாப்பிட்டுப் புறப்படுங்கோ!" எனப் பரிவுடன் அழைத்தாள்.
சேனாதியால் அதிகம் பேசமுடியவில்லை. உடைகளை மாற்றிக்கொண்டு அமைதியாக உணவைச் சாப்பிட்டான். என்ன சாப்பிடுகின்றோம் என்பதை உணராமலேயே அவன் சாப்பிட்டான். நந்நதாவே அவனருகில் அமர்ந்து அவன் உண்பதையே வாஞ்சையுடன் பார்த்திருந்தாள்.
அவன் சாப்பிட்டானதுமே உமலில் இருந்த இறாலில் முக்கால் பங்கைத் தனது பன்பையில் வைத்துவிட்டு மிகுதியை, 'இதை உன் தாத்திக்கு எருமை நெய்யிலை பொரிச்சுக் குடு! நீயும் சாப்பிடு.. .. நல்லாயிருக்கும்!" என்று உமலை அவளிடம் கொடுத்தான்.
சேனாதியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு பாலையடி இறக்க வெண்மணல் மேடுவரை அவனுடன் வந்த நந்தாவதி, அவன் விடைபெற்றுக்கொண்டு ஆற்றில் இறங்கி நடந்து, பாதை வளைவைக் கடந்து மறையும்வரை அப்படியே கண்கொட்டாமல் பார்த்து நின்றாள். பாதை வளைவை அடைந்த சேனாதி நின்று திரும்பிக் கையை அசைத்துவிட்டு நடந்து மறைந்தபோது, அவளுடைய அகன்ற கருவிழிகளில் குளமாகத் தேங்கிய கண்ணீர் பொட்டென முத்தாக விழுந்து அவளுடைய கன்னத்தில் வழுக்கிக்கொண்டே போய் மார்பை நனைத்தது.
வாலிப வயதின் வசந்த காலத்தில் அவர்களை அறியாமலேயே அந்த நிர்மல உள்ளங்களில் பூத்த புனிதமான புதிய மலர்கள், பிரிவென்னும் வெம்மைபட்டு வாடிக்கொண்டிருந்தன.
வளரும்
********************************************
வட்டம் பூ அத்தியாயம் 12
அடுத்து வந்த புதன்கிழமையே, மகள் கண்ணம்மாவும் பேத்தி ராணியும் எவ்வளவோ தடுத்தும் கேளாது சிங்கராயர் மனைவியையும் கூட்டிக்கொண்டு ஆண்டாங்குளத்துக்குப் பறப்பட்டவிட்டார். குமுளமுனைக்கு பஸ்ஸிலே வந்து ஆண்டாங்குளத்தை நோக்கி அந்தக் காலை இளம்பொழுதிலே அந்த முதிர்வயதுத் தம்பதிகள் நடந்து கொண்டிருந்தார்கள். சிங்கராயர் கையில் மண்ணெண்ணெய் கலனும், தலையிலே ஒரு பையுமாய் முன்னே வீறு நடைபோட, அவருடைய காலடிகளைப் பின்பற்றியே செல்லம்மா ஆச்சி நிழலாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஓங்கிவளர்ந்த காட்டுமரத்திலே இளசாகாகவே படர ஆரம்பித்த தண்ணிக்கொடி, காலப்போக்கில் அந்த மரத்துடனேயே பிரிக்கமுடியாதபடி சுற்றி இறுகப் படர்ந்து ஒன்றிவிடுவதுபோல அவளும் தனது பதினாறு வயதிலேயே சிங்கராயர் என்ற கருங்காலி மரத்தைச் சுற்றிப் படர்ந்து, அவர் வேறு தான் வேறு என்றில்லாமல் ஒன்றிப்போயிருந்தாள். முன்னரைப்போல் களைப்பின்றி யாவற்றையும் இப்போ அவளால் செய்ய முடியாதிருந்தது. உள்ளுர மகள் கண்ணம்மாவின் வேண்டுகோளைக் கணவர் ஏற்றால் அவளுடனேயே தங்கி, பேரப்பிள்ளைகளின் முகங்களைப் பார்த்துக்கொண்டே மிகுதி வாழ்க்கையைக் கழித்துவிடவேண்டும் என்ற ஆசை இருப்பினும், கணவன் இருக்குமிடமே தனக்குக் கைலாயம் என நினைத்தவண்ணம் அவரின் அடியொற்றி நடந்துகொண்டிருந்தாள் செல்லம்மா ஆச்சி.
அவர்களிருவரும் வள்ளத்திலேறி ஆண்டாங்குளத்தை அடைந்து பனைகளினூடாக வருகையிலேயே தமது எசமானின் வரவுகண்ட சிங்கராயரின் வேட்டை நாய்கள் குதித்து ஓடிப்போய் ஊளையிட்டும், உறுமியும் அவருடைய கரங்களை நக்கின. செல்லமாக அவற்றை அடக்கியவர் அவை யாவும் பட்டினி கிடக்காமல் நன்றாகவே இருப்பதை அவதானித்து நந்தாவதியை நெஞ்சுக்குள் பாராட்டிக்கொண்டார்.
நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு தங்கள் குடிசைக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த நந்தாவதி, செல்லம்மா ஆச்சியைக் கண்டதுமே குதித்துக்கொண்டு ஓடி வந்தாள்.
தங்கள் வளவுக்குள் நுழைந்து செல்லம்மா ஆச்சி முற்றமும் வீடுவாசலும் இருந்த சீர்சிறப்பைப் பார்த்து மலைத்துப் போனாள். அந்த அளவுக்கு நந்தாவதி வீடுவாசலைப் புனிதமாக வைத்திருந்தாள். பால்சட்டிகள் யாவும் துப்புரவாகக் கழுவிப் பரணில் அடுக்கப்பட்டிருந்தன. அடுப்படியும் மாலும் திண்ணைகளும் பசுஞ்சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தன. எலுமிச்சையடியில் குடம் நிறையத் தண்ணீர் இருந்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான விறகு சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. இவை யாவற்றையும் பார்த்த செல்லம்மா ஆச்சிக்குக் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. ஓடிவந்த நந்தாவதியை நன்றிப்பெருக்குடன் அணைத்து முத்தமிட்டு 'என்ரை குஞ்சு!" எனத் தன் பாசத்தைக் காட்டிக்கொண்டார்.
இதற்குள் நந்தாவதி பரபவென்று அடுப்பைப் பற்றவைத்துத் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். செல்லம்மா ஆச்சியும் சிங்கராயரும் விரைவிலேயே திரும்பிவிட்டது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அவளுடைய மலர்ந்த முகத்தில் தெரிந்தது. தாயை இழந்த நந்தா செல்லம்மா ஆச்சியில் மிகவும் பாசம் வைத்திருந்தாள். வேலையில்லாத பொழுதுகளில் ஆச்சியுடன் ஒண்டிக்கொள்ளும் அவளுக்குத் தனிமைச் சுமை குறைந்தது மட்டும் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கவில்லை. சிங்கராயரும் ஆச்சியும் வந்துவிட்டதால் இனிமேல் ஒவ்வொரு சனிஞாயிறும் சேனா ஆண்டாங்குளத்துக்கு வருவான் என்ற நினைப்பே அவளுக்கு அதிகமாகத் தித்தித்தது. தேனீரைத் தயாரித்து ஆச்சிக்குக் கொடுத்துவிட்டு, சிங்கராயருக்கு மூக்குப்பேணியில் தேனீர் கொண்டு சென்றபோது, அவர் மால் பரணிலே ஏறி அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த பெட்டைமான் தோல்களை எடுத்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தார். நந்தாவதி ஏன் இதெல்லாம் என்பதுபோல் அவரைப் பார்த்தபோது, இறங்கிவந்த சிங்கராயர் அவளிடமிருந்து தேனீரை வாங்கிப் பருகிக்கொண்டே, ' என்ன மோனை பாக்கிறாய்?.. இந்தத் தோலை எல்லாம் வாந்துதான் பெரிசாய் ஒரு வார்க்கயிறு திரிக்கப்போறன்!.. அண்டைக்கு அந்த வார்க்கயிறு தண்ணீக்கை கிடந்து ஊறினபடியால்தான் அறுந்து கலட்டியன் ஆளிலை வந்திட்டுது.. ஆனா நான் திரிக்கப்போற இந்த புதுக் கயிறை ஆனைகூட அறுக்கமாட்டுது!" எனப் பெருமையடித்துக் கொண்டார்.மான்தோல்களை முற்றத்தில் போட்டு அவற்றின்மேல் சுடுசாம்பரைப் போட்டு உரோமம் போக்க சிரட்டையினால் அவற்றைச் சிங்கராயர் உரசிக் கொண்டிருந்த போது, குணசேகரா ஒரு கையில் ஒரு மான் தொடையும், மறுகையில் முழுப்போத்தல் சாராயமுமாக வந்திருந்தான்.
'அச்சா! என்ன குணசேகரா எனக்கு இண்டைக்கு விருந்துபோலை கிடக்கு!" எனச் சிங்கராயர் கடகடவெனச் சிரித்தபோது 'இந்த மாதங் சம்பளங் வந்தபோது ஐயா இல்லைத்தானே!.. இதிங் நாங் அண்டைக்கு வாங்கிக் குடிக்க இல்லைத்தானே!" எனச் சிரித்தான்.
ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்றுவருகையில் முல்லைத்தீவிலிருந்து ஒருபோத்தல் சாராயமும் வாங்கி வருவான் குணசேகரா. இம்முறை சம்பள தினத்தன்று சிங்கராயர் ஆண்டாங்குளத்தில் இல்லாததால் தானும் அதைக் குடிக்காது, இன்று அவர் வந்ததும் அதனைக் கொண்டு வந்திருந்தான். காலையில் காட்டுக்கோழி வெடிவைக்கப் போயிருந்தபோது ஒரு மான் அகப்பட்டதால் அதனை வெடிவைத்து சிங்கராயர் வீட்டுக்கும் ஒரு காலைக் கொண்டுவந்திருந்தான்.
'மனுசி!.. உன்னளவிலை ஒரு மான்கால் கொண்டு வந்திருக்கிறான் குணசேகரா!.. நந்தாவதியும் நீயுமாய் சமையுங்கோ!.. குணசேகராவும் புள்ளையும் இங்கையே மத்தியானம் சாப்பிடட்டும்!" என்று சொல்லிவிட்டுத் தனது மான்கொம்புப் பிடிபோட்ட நீண்ட வில்லுக்கத்தியை எடுத்துப் பார்த்தார் சிங்கராயர். பின்னர் மால் தாழ்வாரத்தில் கிடந்த யானைக்கால் எலும்பை எடுத்து முற்றத்தில் போட்டு, அதன்மேல் குருமணல் போட்டு வில்லுக்கத்தியைத் தீட்ட ஆரம்பித்தார் சிங்கராயர். குணசேகரா முற்றத்தில் கிடந்த மான் தோல்களையும், அவர் கத்தி தீட்டுவதையும் புரியாது பார்த்தான். தன் திருப்திக்கு வில்லுக்கத்தியைக் கூராக்கிக்கொண்டு, குணசேகரா அமர்ந்திருந்த முற்றத்து வேப்பமர நிழலுக்கு வந்தார் சிங்கராயர். இதற்குள் நந்தாவதி கொணடுவந்த கிளாசில் சாராயத்தை விளிம்புவரை நிறைத்துக் கொடுத்த குணசேகராவிடமிருந்து கிளாசை வாங்கிய சிங்கராயர் ஒரே மடக்கில் அதை உள்ளே செலுத்திவிட்டு, மடியிலிருந்து நெடுங்காம்புப் புகையிலையை எடுத்து, காப்பிலையைக் கிழித்து நாவினால் தடவி ஈரமாக்கிக் கொண்டு, நீண்டதொரு சுருட்டைச் சுற்ற ஆரம்பித்தார். சிங்கராயர் எதைச் செய்தாலும் அரைகுறையாகச் செய்யமாட்டார். முழுக் கவனத்தையும் செய்யும் வேலையில் செலுத்தி, கச்சிதமாகவும் விரைவாகவும் செய்துமுடிப்பார். அவர் எதைச் செய்தாலும் அவரை மிகவும் இரசனையுடன் கவனிப்பான் குணசேகரா. மண்சட்டியினுள் பழைய சோறு கறியைப் போட்டுக் குழைத்துத் திரணையாக்கிக் கையில் எடுத்து வாயில் போட்டு உருசிக்கும் போதும்சரி, எருமை நாம்பன்களைக் கட்டி விழுத்திக் கிட்டியால் காயடிக்கும் போதும்சரி, அவர் மிகவும் ஈடுபாட்டுடன் முழுக் கவனத்தையும் செலுத்திச் சிறப்பாக வினைமுடிப்பார். அவருடைய இந்தப் பண்பு குணசேகராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சுருட்டைச் செவ்வையாகப் பற்றிக்கொண்ட சிங்கராயர் புகையை நெஞ்சு நிறைய இழுத்து வெளியேவிட்டுச் சிரித்துக்கொண்டே, 'திறமானதொரு வார்க்கயிறு திரிக்கப்போறன் குணசேகரா! அதுக்குத்தான் இந்தத் தோல் எல்லாம்!" என முற்றத்தில் போட்டிருந்த மான்தோல்களைக் காட்டினார். 'இதெல்லாத்தையும் மெல்லிய நாடாவாய் வார்ந்து எடுத்து, பந்துகளாய்ச் சுத்தி தண்ணியிலை ஊறப்போடவேணும்! பிறகு அதுகளை இழுத்து வடியக் கட்டவேணும். அதுக்குப் பிறகு அதுகளை மூணடு புரியாய் புறிச்சு வார்க்கயிறு திரிக்கோணும்!" என அவர் குணசேகராவுக்கு விளங்கப்படுத்தியபோது, குணசேகரா வியப்பினால் விழிகளை உருட்டி, 'ஐயா! ஒங்களை வெட்டின அந்தக் குழு மாட்டைப் புடிக்கிறதுக்கா கயிறு?" என நம்பமுடியாமல் கேட்டான். அவனையறியாமலே அவனுடைய கண்கள் சிங்கராயருடைய வலது தொடையிலே தெரிந்த சிவந்த நீண்ட தழும்பைப் பார்த்தன.
சிங்கராயருக்கு அவனுடைய வியப்புக்குக் காரணம் புரிந்தது. 'என்ன குணசேகரா?.. அண்டைக்குக் கலட்டியன் என்னைத் தூக்கி எறிஞ்சதோடை நான் பயந்துபோனன் எண்டு நினைச்சியே! நல்ல கதை! இருந்துபார்! அவரை நான் என் செய்யிறன் எண்டு!" என உறுமினார். குணசேகரா ஏதோ சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'ஐயா! அந்தக் கலட்டியனைப் பொறவு நாங் கண்டதுதானே!" என்றான். சிங்கராயர் ஆவல்பொங்க 'என்ன! எங்கை குணசேகரா? " எனக் கேட்டார். 'ஐயா! பழையாண்டாங்குளங் கட்டிலேதானே நாங்க இப்ப வேலை செய்யுறது.. அந்தக் குளத்துக்கு நடுவில கொஞ்சங் தண்ணி நிக்கிறதுதானே!.. அந்தப் புல்லுக்கைதானே அவங் கிடக்கிறது!.. நாங் பயத்திலை கிட்டப் போக இல்லைத்தானே!" என்றான் குணசேகரா. 'ஓகோ! அப்பிடியே சங்கதி?" என்று கேட்டவ சிங்கராயரின் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டது. அவருடைய மனதில் கலட்டியனைப் பிடிப்பதற்கு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. 'பாப்பம்.. நாளைக்கு நான் பழையாண்டாங்குளத்துக்குப் போய்ப் பாத்திட்டு வந்து சொல்லுறன்.. இப்ப வா சாப்பிடுவம்!" என எழுந்தார் சிங்கiராயர்.
வளரும்
******************************************
வட்டம் பூ அத்தியாயம் 13
தண்ணீரூற்றில, அன்று கிழக்கு வெளுக்கும் வேளையிலேயே எழுந்துவிட்டிருந்தான் சேனாதிராஜன். வெள்ளிக்கிழமை ஆதலால்; வழமைபோலவே, துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தான்.
சதாகாலமும் வெண்மணலில் சுரக்கின்ற தெளிந்த தண்ணீர் ஊறிப்பாயும் அந்த அழகிய சூழலில், பசுமையான வயல்களின் ஓரமாகக் கோவில் கொண்டிருந்த ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிற் சூழல் மிகவும் ரம்மியமானது. மனதுக்கு அமைதியைத் தருவது. அங்கு சில்லென்ற தண்ணீர் தானாகவே ஊறிச் சுரந்து எப்போதுமே பாய்ந்து கொண்டிருப்பதனால், அந்தக் கிராமத்துக்கு தண்ணீரூற்று என்ற பெயர் வந்திருந்தது.
மேட்டில் அமைந்துள்ள அழகிய கோவிலுக்கும், பரந்து கிடக்கும் பச்சை வயல்களுக்கும் இடையே உள்ள பெரிய கேணியில் அமிழ்ந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு ஊற்றங்கரை வினாயகர் சந்நிதியில் போய் நின்றாலே ஒரு சொல்லரிய நிம்மதியும், நிறைவும் நெஞ்சில் தங்குவதை, அங்கு வழிபடுபவர் அறிவர்.
சேனாதி, அறிவார்ந்து அங்கு வழிபடாவிடினும், வெள்ளிதோறும் அங்கு சென்று வணங்குவதில் ஒரு திருப்தியைப் பெறுவதுண்டு. இன்று காலையில் எழுந்திருக்கும் போதே அவன் மனம் ஏனோ குழம்பிக்கிடந்தது. கேணிச் சுவரில் உட்கார்ந்து, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை வெறித்தபடியே வேப்பங்குச்சியைச் சப்பிக் கொண்டிருந்தவனுடைய மனவானிலும் கருமேகங்கள் மூட்டமிட்டிருந்தன.
ஆண்டாங்குளத்தின் அன்றைய அனுபவம் அவன் உணர்வுகளை வெகுவாக அலைக்கழித்திருந்தது. இன்றே ஆண்டாங்குளம் செல்லவேண்டும், நந்தாவைக் கண்டு பேசி இன்புறவேண்டும் என அவனுடைய இதயம் ஒருசமயம் துடிக்கும். மறுகணம் இனிமேல் அங்கு செல்லவே கூடாது, அவளைப் பார்க்கவே கூடாது போன்றதொரு எண்ணமும் தோன்றி அலைக்கழித்தது. அதி தீவிரமாக விரும்பும் ஒன்றை அதேசமயம் அதி தீவிரமாக வெறுக்கும் ஒரு உணர்வும் அவனுள் தோன்றியது. முற்றும் பழுத்த வேப்பம்பழம் கசப்புடனே இனிப்பது போல, அன்றைய அனுபவத்தை நினைக்கும் போதெல்லாம் வெறுப்பும், விருப்பும் சமமாக விரவிக்; கலந்துகாணும் ஒரு வினோத உணர்ச்சிக்கு ஆளாகித் தவித்தான்.
கேணிச்சுவரிலே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த சோனதியின் தோளை ஒரு கரம் தட்டியபோது அவன் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கே சிரித்தபடி குமுளமுனைக் காந்தி நின்றிருந்தான். 'நல்லது!.. நீயும் இப்போது கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக்கொண்டாய்!" என்றவன் சேனாவின் அருகில் அமர்ந்துகொண்டு, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை ஊன்றிக் கவனித்தான். இருண்டு கிடக்கும் எமது சமுதாய வானில் எப்பொழுதுதான் உதயசூரியன் உதிக்கப் போகின்றதோ என் அவன் மனதில் எண்ணியபோதே கீழ்வானம் சிவந்தது. ஆதவனுடைய ஒளிமயமான கதிர்க்கற்றைகள் கால்விட்டு வானக்கோடியைத் தொட்டபோது காந்தியின் மெல்லிய உடல் சிலிர்த்தது. அவன் திடீரெனச் சேனாதியின் கையைப் பிடித்து, 'சேனாதி!.. அந்தப் பாட்டு!.. சீர்காழியின்.. நமது வெற்றியை நாளை சரி;த்திரம் சொல்லும்.. அந்தப் பாட்டைப் பாடு மச்சான்!" என உணர்ச்சிவசப்பட்டு அவசரமாய்க் கேட்டபோது, அவனுடைய மனநிலை சேனாதியையும் தொற்றிக் கொண்டதுபோல், அவன் சட்டென்று அந்தப் பாடலை மனம் ஒன்றிப் பாடினான். கணீரென்ற குரலில் அவன் பாடிய பாடலின் ஒவ்வொரு சொல்லையும் கேட்கையில் காந்தியின் உடல் புல்லரித்தது. கண்களில் நீர்மல்கியவனாய், அந்தப் பாடல் முடியும்வரை, எழுந்துவரும் உதயசூரியனையே பார்த்துக் கொண்டிருந்தான் காந்தி.
பாடல் முடிந்தும், சொற்பநேரம் அது எற்படுத்திய உணர்ச்சி ததும்பும் மனோநிலையிலிருந்து விடுபடமுடியாது அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்கையில் பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது.
காந்தி குமுளமுனையைச் சேர்ந்தவன். தண்ணீரூற்றில், உறவினர் வீட்டில் தங்கி வித்தியானந்தாக் கல்லூரியில், பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பில் கற்றுக் கொண்டிருந்தான்.
அவர்களிருவரும் கேணியில் இறங்கிக் குளிக்கும்போதுதான், காந்திக்கு ஆசிரியர் கே. பானுதேவன் ஒருதடவை ஆண்டாங்குளம் செல்ல விரும்புவது ஞாபகத்துக்கு வந்தது.
ஆசிரியர் கே.பி தனித்துவமான போக்கைக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசிரியர். வரலாற்றுப் பாடத்தில் எம். ஏ பட்டம் பெற்றிருந்த அவர் பழகுவதற்கு இனியவர்.எளிமையான வாழ்க்கை வாழ்கின்ற பிரம்மச்சாரி. யாழ்;பாணத்தில் அளவெட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த அவர், விடுமுறைகளிற்கூட வீடு செல்வது குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தின் காடுகளின் மத்தியில் குளங்களையொட்டி அமைந்திருக்கும் சிறிய கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களோடு தங்கி, அந்த மக்களின் வாழ்க்கையிலும், வேலைகளிலும் சந்தோஷமாகப் பங்கு கொள்வார். கிராமத்து மக்களுடன் சேர்ந்து வயலில் அருவி வெட்டுவார். இரவில் சூட்டுக் களங்களுக்குச் சென்று சூடடிப்பு வேலைகளிலும் கலந்துகொள்வார். அவரைக் கே.பி சேர் என மாணவர்கள் அன்புகலந்த மரியாதையுடன் அழைப்பார்கள்.
காந்தி அவருடைய பிரத்தியேகப் பிரியத்துக்குரிய மாணவன். அவர் அவனுடைய ஆதர்ஷ புருஷர். எனவேதான் அவன் சேனாதியிடம் கே. பி. சேரை எப்போ ஆண்டாங்குளத்துக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கேட்டான்.
அவன் சற்றும் தயக்கமின்றி, 'நாளைக்குச் சனிதானே!.. நான் ஆண்டாங்குளம் போவன்.. காலமை வெள்ளெண பஸ்சுக்கு நீ கே.பி சேரையும் கூட்டிக்கொண்டு வா!" எனச் சொன்னான். அப்படிச் சொல்லும்போதே அவனுடைய இதயம் கொடிகட்டிப் பறந்தது.
000
அடுத்தநாள் சனிக்கிழமை. நேரத்தோடு எழுந்து சமையலை முடித்து தகப்பனுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து அவரைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்கு வந்த நந்தாவதி அவசரம் அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை கிணற்றடியில் நின்ற ஒற்றைப் பனையின் நீண்ட நிழலைக் கவனித்தது. இந்நேரம் குமுளமுனைக்குச் சேனாதி பஸ்ஸில் வந்து இறங்கியிருப்பான் என்ற எண்ணம் அவளுக்குத் தேனாய் இனித்தது.
பத்து நிமிடங்களில் அவள் சீவிமுடித்துச் சிங்காரித்துக்கொண்டு, பாலையடி இறக்கத்து வெண்மேட்டில் அமர்ந்தவாறே தன் செவ்வாழைக் கால்களை ஆற்றுநீரில் அளைந்து விளையாடிக் கொண்டிருந்தாள். கைகொள்ளாமல் அள்ளித் தளர்த்தி முடிந்திருந்த தனது கருங்கூந்தற் காட்டில் ஒரு கொத்து இரத்தநிற வட்டம்பூவைச் சொருகியிருந்தாள்.
மஞ்சளும் சிவப்புமாய்க் காட்டுப்பூவரச மலர்கள் மிதந்த அந்த அகன்ற நதியில் சட்டெனத் துள்ளிய ஒரு கெண்டை மீன் காலை வெய்யிலில் வெள்ளிக் கட்டியாய்ப் பளீரிட்டுவிட்டு நீரில் வீழ்நது மறைந்தது.
நந்தாவதி தன் செவ்விதழ்களை அழகாகக் குவித்துப் புன்முறுவல் பூத்தாள். ஆமாம்! அவளுக்கு அன்று சேனாவுடன், குடைபிடித்து நின்ற மரத்தின் கீழே கிடைத்த அனுபவம் அவளுள் ஆனந்தமாய்க் கிளுகிளுத்தது.
சிறு வயதிலிருந்தே தனிமையில் வாழ்ந்ததாலும், அவளுடைய வயதுச் சினேகிதிகள் கிடையாததாலும் அவளுடைய உள்ளம் நிர்மலமாய் களங்கமின்றி இருந்தது. புஷ்பவதியாகிவிட்டிருந்த அவளே வாலிபத்தின் வாளிப்பில் மலர்க் காடாக இருந்தாள். அன்று சேனா தன்னை ஆசையுடன் அணைத்ததும், தன் வெதுவெதுப்பான இதழ்களால் தன் இதழ்களைக் கவ்விச் சுவைத்ததும் அவளுக்கு விகல்பமாகவே தோன்றவில்லை. அழகியதொரு குழந்தை அவளைக் கட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அவ்வாறே அந்தக் குழந்தைக்கும் முத்தம் கொடுத்திருப்பாள். இயல்பாகவே பெண்களுள் குடியிருக்கும் தாய்மை உணர்வு அவளை அறியாமலே அவளுள் முகிழ்த்திருந்தது. தனக்குச் சொந்தமான ஒன்றை அள்ளவும் அணைக்கவும், பேணவும் பாதுகாக்கவும், அந்த உணர்வு அவளை உந்தியிருந்தது. எனவே எந்தவிதக் கல்மிஷமும் இன்றி, நந்தா நதிக்கரையோரம் தனக்கே சொந்தமானவனுக்காகக் காத்திருந்தாள்.
ஆனால் சேனாவுக்கோ அது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தபோதும் அவன் முற்றும் அறியாத ஒன்றாக இருக்கவில்லை. இன்பமும் துன்பமுமாய் அன்று அவனுள் உயிர்த்தேன் சுரந்தபோது அவன் தன்னையே இழந்திருந்தான். இன்னமும் வாலிபத்தின் பூரணத்தினுள் பிரவேசிக்காத அவனுக்கு அந்த அனுபவம் எல்லையற்ற வேதனையையும், அதேசமயம் வார்த்தையில் வடிக்கமுடியாததான இன்பத்தின் உச்சத்தையும் அவனுக்குச் சிலகணங்கள் காட்டியிருந்தது. வெனை அறியாமல் அவன் அதற்காக மீண்டும் தீவிரமாக ஏங்கிக்கொண்டே, அதை அதேயளவு தீவிரத்துடன் வெறுக்கவும் செய்தான்.
ஆற்றின் அக்கரையில் கிளைவிட்டிருந்த கண்ணா மரங்களுக்கும் அப்பால் ஆட்காட்டிப் பறவைகள் கிர்Pச்சி;ட்டவாறே எழுந்து வானில் வட்டமிட்டபோது, சரேலென எழுந்துகொண்ட நந்தாவதியின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. சேனா வருகிறான் என்று களித்தவளுக்கு, இரண்டு மூன்றுபேரின் பேச்சுக்குரல் கேட்கவே அவள் வட்டம்பூச் செடிகளுக்கூடாகச் சென்று மறைந்துகொண்டாள். சேனா வந்தாலும் தனியே வரவில்லைப்போலும் என அவள் சிந்தித்துக்கொண்டு, யார் வருகின்றார்கள் என்பதைக் கவனித்தாள்.
பாதையின் வளைவில் நடுத்தரவயதான ஒரு கரிய மனிதரும், இன்னுமொரு சிவந்த மெல்லிய வாலிபனும் சேனாதியுடன் வருவதைக் கண்ட நந்தாவின் முகம் மலர்ந்தது. பின் ஏதோ நினைத்தவளாக அவள் அப்படியே பற்றைகளின் மறைவிலே சென்று மலைக்காட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
வளரும்
நன்றி : http://www.appaal-tamil.com/index.php
Comments
Post a Comment