வட்டம்பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் - முடிவு -பாகம் 14 -21



வட்டம்பூ அத்தியாயம் 14 
அந்த அகலமான நதியில் முழங்காலளவு நீரில் இறங்கி வருகையிலேயே கே.பி. அக்கரையில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டையும், அதன் பின்னணியில் பூத்துநின்ற வட்டம்பூ செடிகளையும் மிகவும் இரசித்தவராய், அது என்ன பூ என சேனாதியிடம் வினவினார். 'அதுதான் சேர் வட்டம்பூ!" என்று சேனாதி பதிலளித்ததும், அவர் சிரித்துக்கொண்டே 'இதற்கு வட்டம்பூ என்ற பெயரைக் காட்டிலும் இரத்தம் பூவென்று பெயர் வைத்திருக்கலாம்!" என்று சொன்னவர் நடப்பதை நிறுத்தி, 'இந்தப் பூவையும் இரத்தம்போன்ற அதன் நிறத்தையும் பார்த்ததுமே நான் படித்து ரசித்த கதையொன்று எனக்கு ஞாபகம் வருகின்றது!" என்றார். காந்தி ஆவலுடன் 'சொல்லுங்கோ சேர்!" எனக் கேட்டபோது, ஆற்றினூடாக மெல்ல நடந்தபடியே அவர் அந்தக் கதையைக் கூறலானார்.

'ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னே கடலாலும், உயர்ந்த மலைகளினாலும் வளைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பிரதேசத்தில் ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்திருந்தார்களாம். நாளடைவில் அங்கு உணவு, நீர் ஆகியவற்றுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நீண்ட வறட்சியின் காரணமாக இந்த அவலநிலை ஏற்பட்டபோது அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். ஒருபக்கம் ஏறவே முடியாத குத்தென்ற உயர்ந்த மலைகள், மறுபக்கம் அலையடிக்கும் ஆழக்கடல். இன்னொரு பக்கம் அப்பிரதேசத்தை வளைத்துக் கிடந்த பயங்கரமான இருண்ட வனம். இவற்றால் வளைக்கப்பட்ட அந்த மக்கள் மத்தியில் வீரமும், துணிவும் மிக்க ஒரு இளைஞன் இருந்தான். எவருமே இதுவரையில் நுழைந்திராத, நுழைய அஞ்சிய அந்தக் கொடிய வனத்தைக் காட்டி அவன் சொன்னான். 'இங்கிருந்தாலும் நாம் சில நாட்களில் பட்டினியால் இறந்து போவோம்!.. வாருங்கள்! இந்தக் காட்டினுள் நுழைந்து வழி சமைப்போம்!.. இந்தக் காட்டுக்கும் அப்பால் நிச்சயமாக ஒரு புதிய, ஒளிமிக்க, வளம்படைத்த உலகம் இருக்கின்றது!" என அழைத்தான். ஆனால் மக்களோ அந்தக் காட்டினுள் பிரவேசிப்பது என்று நினைக்கவே பயந்தனர். சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுக்கு அந்தக் காட்டின் பயங்கரத்தைக் கூறிப் பயமூட்டியிருந்ததனால், அவர்கள் தாம் செத்தாலும் பரவாயில்லை, அந்தக் காட்டிலாவது போவதாவது என மறுத்தார்கள். ஆனால் அந்த இளைஞனோ தனது எண்ணத்தைக் கைவிடவில்லை. அந்தக் கொடிய வனத்துக்கும் அப்பால் வளமான வாழ்க்கை உள்ளது என நிச்சயமாக நம்பினான். அயராது பேசிப் பேசி, தன் வயதை ஒத்த இளைஞர் சிலரை ஒன்றுகூட்டி, அந்தக் காட்டில் நுழையப் புறப்பட்டான். மக்களில் பலர் இந்த இளைஞர்களைக் கண்டித்தனர். சிலர் கேலி செய்தனர். மற்றும் பலர் ஏனோதானோ என ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தனர்.

ஆனால் அந்த இளைஞனோ நெஞ்சுரம் மிக்கவனாய், முன்னே சென்று அந்தக் காட்டினுள் நுழைந்து, எதிர்ப்பட்ட பற்றைகளையும், செடிகளையும் வெட்டிச் சரித்தவாறு வழி சமைத்துக்கொண்டே சென்றான். வெகுதூரம் அவர்கள் இவ்வாறு வந்துவிட்டபோது, ஒரு பயங்கரமான இருள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அந்த அந்தகாரத்தில் சிக்கிய இளைஞனுடைய நண்பர்கள் திகிலடைந்து போயினர். வந்தவழியே திரும்பிச்சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் எனச் சொல்லிக்கொண்டனர். இந்நேரம் அவர்கள் இதுவரை முன்னர் கேட்டிராத அந்நியமான ஒலிகளும் பயங்கர ஓசைகளும் கேட்கவே, அவர்கள் பின்வாங்கித் தட்டுத்தடுமாறி அந்த இருளைவிட்டு ஓடமுயன்றபோது, அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த இளைஞன் அவர்களைத் தடுத்து, 'இந்த இருளும் அந்தகாரமும் தற்காலிகமானவைதான்! இந்தப் புதிய சத்தங்கள் நமக்கு அந்நியமானதால் எமக்குப் பயத்தை உண்டுபண்ணுகின்றன, வாருங்கள், மெல்ல மெல்ல, சிறிது சிறிதாகவேனும் முன்னே செல்வோம்!" எனக் கூறியபோது, அவர்கள் தங்களுக்குள்ளே ஒன்றுகூடி, இவனைக் கொன்றுபோட்டால் எமக்குப் பிரச்சனையில்லை! வந்தவழியே திரும்பிச்சென்று ஊரை அடைந்துவிடலாம்", என அவனை வெட்டிக் கொன்றுவிட்டனர். ஆனால் அவர்களுடைய வெட்டால் மார்பு பிளந்துபோய் மல்லாக்காகக் கிடந்த அவனுடைய உடலில் இருந்து ஒரு ஒளிக்கீற்று தெரிவதைக் கண்டு, அவர்கள் அண்மையில் சென்று பார்த்தபோது, இளைஞனுடைய மார்புக் கூட்டினுள் கிடந்த அவனுடைய இதயம் ஒளிமயமாய் பிராகாசித்ததாம்! அந்த ஒளியில் அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. அவர்களில் ஒருவன் இறந்துகிடந்த அந்த இளைஞனின் இதயத்தை எடுத்து, முன்னே நடந்து, 'வாருங்கள்! அவனுடைய இதயம் நமக்கு வழி காட்டுகின்றது! இந்த ஒளியிலேயே வழிசமைத்து அந்தப் புதிய உலகத்துக்குச் சென்றுவிடலாம்!" என்று கூறவே, அவர்கள் தைரியத்துடன் வழியமைத்து முன்னேறி, பாலுந்தேனும் பெருக்கெடுத்தோடும் ஒரு புதிய பூமியை வந்தடைந்தனராம். அங்கு, தம்மை வழிநடத்தி வந்த அந்த இளைஞனின் இதயத்தை மண்ணிலே புதைத்தபோது, நாளடைவில் அந்த இடத்தில் ஒரு செடி, இரத்தத் துளிகள் போன்ற சிவப்புப் பொட்டுக்கள் உடைய இதயவடிவத்தில் அமைந்த இலைகளுடன் தோன்றியதாம். அந்தச் செடியை இன்றும் பிளீடிங் ஹாட், அதாவது இரத்தம் பாயும் இதயம் என்ற பெயரில் அழைக்கின்றார்கள்", எனக் கே.பி கதையைக் கூறி முடித்தபோது, அவர்கள் பாலையடியிறக்க வெண்மணல் திட்டை அடைந்திருந்தனர்.

ஆசிரியர் கே.பி க்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகவே, அவர்கள் அந்த வெண்மணலில் சற்றுநேரம் ஆறி அமர்ந்துகொண்டனர். கே.பி கூறிய கதையில் ஆழ்ந்து தன்னை மறந்திருந்த சேனாதி, அந்த வெண்மணலில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்ணுற்றபோது களிப்பில் அவனுடைய இதயம் துள்ளியது. அவை நந்தாவினுடையவை, சில நிமிடங்களுக்கு முன்னராகத்தான் அவை இங்கே பதிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்த அவன், நந்தா தனக்காக இங்குவந்து காத்திருந்துவிட்டு, அந்நியர் வருகைகண்டு மறைந்திருக்க வேண்டும் என அனுமானித்துக் கொண்டான். அவளுடைய அழகிய பாதச்சுவடுகள் ஓடிச்சென்று வட்டம்பூச் செடிகளின் பின்னே மறைவதை அவதானித்துக் கொண்டே, அவன் நந்தாவின் காலடி மண்ணை கைகளில் ஆசையுடன் அளைந்துகொண்டான். கே.பியின் கதையைக் கேட்டுத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த காந்தியின் நெஞ்சில் ஒரு வினா உதயமாகியிருந்தது. அமைதியாக அமர்ந்திருந்து அந்த அழகிய சுற்றாடலை இரசித்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் அவன் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

'எனக்கென்னவோ இந்த அற்புதங்களில் நம்பிக்கை இல்லை சேர்! எங்காவது செத்துப்போனவனின் இதயம் ஒளி வீசுமா?" எனக் கேட்டபோது கே.பி சிரித்துவிட்டுப் பதில் சொன்னார்.

'காந்தி!.. அந்தக் காலத்தில் ஏடோ, எழுத்தாணியோ இருக்கவில்லை.. அவர்கள் தங்கள் கதைகளை எழுதிவைப்பதற்கு!.. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு, பின் அவர் தன் பிள்ளைகளுக்கு அந்தக் கதையைக் கூறி, இப்படிக் கர்ணபரம்பரையாகவே இந்தக் கதைகள் நம் முன்னோர்கள் மத்தியில் பரவி, நிலவி வந்திருக்கின்றன. உண்மையில்.. அந்த வழிகாட்டியான தலைவன் தன் இதயத்தில் உதித்த உயர்ந்த, புதிய, முற்போக்கான கருத்துக்களைத் தனது மக்கள்முன் வைத்தபோது, அவர்கள் அவனை நம்பாது கொன்றுவிட்டிருந்தனர். பின்னர், அவனுடைய உயிர்த்தியாகம், அவனுடைய உன்னத கருத்துக்களை அவர்கள் பின்பற்றி நடக்கச் செய்திருக்கின்றது. இந்தக் கதை பரம்பரை பரம்பரையாகச் செவிவழிக் கதையாக வருகையில், கற்பானா சக்தி உiடையவர்களும், அந்தக் கருத்துக்கள் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவேண்டுமென விழைந்தவர்களும், அந்தக் கதைக்கும், கருவுக்கும் கற்பனையான தெய்வீகங்களை இணைத்திருப்பர். எல்லா அவதார புருஷர்களின் கதைகளும் இவ்வாறுதான் காலப்போக்கில் மாற்றமடைந்தன என நான் எண்ணுகின்றேன். நாளடைவில் அவர்கள் சொன்ன உயர்ந்த, உன்னதமான கருத்துக்களையும், கொள்கைகளையும் கோட்டை விட்டுவிட்டு, அந்த அவதார புருஷர்களைத் தெய்வங்களாக்கி, கண்மூடித்தனமாய் சாரத்தை நழுவவிட்டு, வெறும் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் முதலிடம் கொடுத்து வாழ்கின்றனர் மக்கள்!" எனச் சொல்லிக்கொண்டே, செடியிலிருந்து தான் பறித்துக் கையில் வைத்திருந்த வட்ம்பூவைப் பார்த்த கே.பி சிந்தனையில் ஆழ்ந்துபோனார்.

பின்பு சட்டென்று முகத்தில் ஒளிதோன்ற, 'காந்தி! இந்தப் பூவுக்கு வட்டம்பூ எனப் பெயர் வந்தது மிகவும் பொருத்தமே!" எனச் சிரித்தபோது, 'ஏன் சேர்?" என ஆவலுடன் கேட்டான் காந்தி.

'சொல்கிறேன் கேள்!" எனச் சுவாரஷ்யமாகத் தொடர்ந்தார் கே.பி.

'வாழ்க்கை வட்டம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உனக்குத் தெரியும், மனித இனத்தின் ஆரம்பகாலந் தொட்டே அவர்கள் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும் மாறி மாறி சகடமாக, சக்கரம்போல வந்திருக்கின்றது. சுரண்டலும், துன்பமும், தன்னலமும் மிக்க இருளான காலகட்டத்தினுள் அவர்கள் வருகையில், திசை தெரியாமல், ஒளியில்லாமல், வழிதெரியாமல் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து பீறிப்போடுகின்றார்கள். இந்த அவலமும் துன்பமும், அவர்கள் மத்தியில் ஒரு தலைவனை, வழிகாட்டியை உருவாக்குகின்றன. அந்தக் காலத்தின் அவசர, அவசியத் தேவை அப்படியானதொரு தலைவனை உருவாக்குகின்றது. அதேசமயம் அவனுடைய உன்னதமான, பொதுநலம் பயக்கும் கருத்துக்களும், கொள்கைகளும் அவன் காலத்தில் வாழும் சமுதாயத்தையும் மாற்றவே செய்கின்றன. அனேகமாக இந்த ஒப்பற்ற தலைவன் தன் உயிரைத் தியாகம் செய்தே தனது கொள்கைகளை நிலைநாட்டி ஒரு புதிய மார்க்கத்தைக் காட்டுகின்றான். அவன் காட்டும் வழிழயைப் பின்பற்றி புதியதொரு நல்ல மாற்றத்தை அடையும் மனித இனம் காலப்போக்கில் அவனது கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் இருளுக்குள்ளும் அவலமிக்க அந்தகாரத்தினுள்ளும் சிக்கிக்கொள்கின்றது. ஆனால் அந்த அவலமே மீண்டும் ஒரு தலைவனை அவதரிக்க வைக்கின்றது அல்லது உருவாக்குகின்றது. இதுதான் வாழ்க்கை வட்டம் என்பதை மனித இன வரலாறு எமக்குச் சொல்கின்றது. ஆனால், நிச்சயமாக யாரோ ஒருவரோ, ஒரு இனமோ கொடுமையான துன்பங்களை அனுபவித்து தமது இரத்தத்தைச் சிந்தித்தான் ஒரு புதிய உலகம் பிறக்கின்றது. எனவே வாழ்க்கை வட்டத்தை எமக்கு ஞாபகப்படுத்தி நிற்கும் இந்த இரத்தவண்ண மலருக்கு, வட்டம்பூ என்ற பெயர் மிகப் பொருத்தமே!" எனச் சொல்லி முடித்தார் கே.பி.

'இனிப் போவம் சேர்!" எனச் சேனாதி அழைத்தபோது அந்த இரம்மியமான இடத்தைவிட்டு அகலவே மனதில்லாமல் ஆசிரியர் கே.பி, காந்தி உடன்வர கிராமத்தை நோக்கி நடந்தார். நந்தாவதி எங்கு சென்றிருப்பாள் என்ற எண்ணமே மனதில் மேலோங்கி நிற்கச் சேனாதி, ஆசிரியரையும், காந்தியையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

மலைக்காட்டு ஓரமாக உயர்ந்து நின்றதொரு பட்டமரத்தில் இரவைக் கழித்து, இப்போதும் சுகமாக வெய்யில் காய்ந்தபடி இருந்த மயில் தோகையன் ஒன்று அகவியபோது கே.பி நின்று அதைப் பார்த்தார். பின்னர் மேலே தொடர்ந்து அவர்கள் நடந்போது, மலைக்காட்டுப் பக்கமாக மான் ஒன்று குய்யிட்டது. அது என்ன சத்தம்? என்பதுபோல் கே.பி சேனாதியைப் பார்த்தார். 'இதுதான் சேர், மான் குய்யிடுற சத்தம்!" என அவன் பதிலளித்தான். 'ஆகா! மானும் மயிலும், கானும் கடலும் சூழ்ந்த இந்தக் கிராமம் உண்மையில் அழகுதான்!" என அவர் மனம்விட்டுப் பாராட்டியபோது, சேனாதிக்கு மனதினுள் சிரிப்புத்தான் வந்தது.

ஏனெனில் மலைக்காட்டினுள் குய்யிட்ட மான் நிஜ மானல்ல! நந்தாதான் மான்போலக் குய்யிட்டவள் என்பது சேனாதிக்குத் தெரிந்திருந்தது. ஆசிரியரும், காந்தியும் காணாதவண்ணம் அவர்கள் பின்னே வந்த சேனாதி மலைக்காட்டுப் பக்கமாக கையை அசைத்து, நந்தா அங்கே மறைந்து நிற்பது தனக்குத் தெரியும் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு, ஒன்றும் அறியாதவன்போல் அவர்களைப் பின்தொடர்ந்தான் சேனாதிராஜன்.

மலைக் காட்டினுள் ஒரு சிறிய பாறையின் பின்னே ஒளிந்து நின்று, சேனா கம்பீரமாக நடந்து செல்வதையே கண்கொட்டாது பார்த்து நின்ற நந்தாவதி, தனது இரகசிய சமிஞையை அவன் புரிந்துகொண்டு கையை அசைத்தபோது மகிழ்ச்சியில் மிதந்தாள்.

பாலைக் கறந்து கொண்டுபோய் செல்லம்மா மனைவியிடம் கொடுத்துவிட்டு நின்ற சிங்கராயர், நாய்கள் குரைப்பதைக் கேட்டுப் பனைகளின் பக்கம் பார்த்தார். யாரோ ஒரு புதிய மனிதர் சேனாதியுடனும், காந்தியுடனும் வரவே, நாய்களை அதட்டி அடக்கிவிட்டு வளவு வாசலுக்கு வந்தார்.

அதற்குள் அவர்கள் நெருங்கி வந்துவிட்டனர். 'அப்பு! இவர்தான் எங்களைப் படிப்பிக்கிற பானுதேவன் சேர்! ஆண்டாங்குளம் பாக்க வந்திருக்கிறார்!" என அறிமுகப்படுத்தினான் சேனாதி. 'அப்பிடியோ! அச்சா!.. வாருங்கோ வாத்தியர்!" என அன்புடன் அதிர்ந்த சிங்கராயரைச் சற்று வியப்புடனேயே பார்த்தார் கே.பி.

ஆறடி உயரம். தலையில் கட்டுக்குடுமி. சற்றே நரைதிரை தென்பட்டாலும் கருங்காலி மரமாய் மின்னிய வைரம்பாய்ந்த உடல். உறுதியான பல்வரிசையின் வெள்ளைச் சிரிப்பு. அதிரும் குரல். நிமிர்ந்த நடை. நேரிய பார்வை. இவை அத்தனையையும் உள்வாங்கிச் சிங்கராயரை வியந்தபடி அவரின் பின்னால் சென்ற கே.பி, முற்றத்தில் வந்து அக்கினிக் கொழுந்துபோல் நின்று, 'வாருங்கோ!" என்று முகம் மலர்ந்து வரவேற்ற செல்லம்மா ஆச்சியைக் கண்ணுற்றபோது, உன்னதமான சிலவற்றைத் தரிசிக்கும்போது பெறும் உணர்வை அனுபவித்தார் கே.பி ஆசிரியர்.

பசுவின் சாணமும், முருக்கமிலைச் சாறும், கரியும் சேர்ந்து அழுத்தி மெழுகி மினுக்கிய மால்திண்ணை ஆசிரியருக்குச் தண்ணென்று குளிர்ந்தது. பனையோலையால் அறுக்கையாக வேயப்பட்டிருந்த மால். பக்கத்தில், சிறிதாக ஆனால் மிகவும் தூய்மையாகவும் ஒழுங்காகவும் காணப்பட்ட அடுப்படி, வெண்மணல் முற்றத்தில் வேப்பமரத்துக்கு அருகே கம்பீரமாய் நின்ற நெல்போடும் கொம்பறை என்பவற்றின் நேர்த்தியை மனதுக்குள் வெகுவாகச் சிலாகித்த கே.பி., எளிமையும் தூய்மையுமாய் வாழும் இந்த முதிர்வயதுத் தம்பதிகள்தான் எவ்வளவு பாக்கியசாலிகள் என எண்ணிக்கொண்டார்.

'மனுசி! வாத்தியாருக்கும் பொடியளுக்கும் பால் குடு! சேனாதி!.. இப்பதான் மலைக்காட்டுப் பக்கமாய் காட்டுக்கோழிச் சாவல் ஒண்டு கத்திக் கேட்டுது! பன்பையுக்கை நாலம்நம்பர் தோட்டா கிடக்குது.. எடுத்துக்கொண்டுபோய் வெடிவைச்சுக் கொண்டு வா!.. நீங்கள் பாலைக் குடியுங்கோ வாத்தியார்! கிணத்தடிக்குப் போய்க் குளிச்சிட்டு வந்திடுறன்.." என மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, சேனா அகமகிழ்ந்து போனான். இவர்களை எப்படிக் கழற்றிவிட்டு மலைக்காட்டுக்கு நந்தாவிடம் போவது என்று குழம்பிக்கொண்டிருந்த அவனுக்கு சிங்கராயரின் கட்டளை பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.

'இருங்கோ வாத்தியார்! வந்திடுறன்!" என விடைபெற்ற சேனாதி, நாய்களையும் அழைத்தபடி துவக்குடன் மலைக்காட்டுக்கு ஓடினான்.

நாய்களுடன் சேனாதி ஓடிவருவதைக் கண்டுகொண்ட நந்தாவும் கிளைகளை விலக்கிக்கொண்டு மலைக்காடடோரம் இறங்கி வந்தாள். அவன் அருகில் வந்ததுமே ஆசையுடன் அவனுடைய கையைப் பற்றி, 'என்ன சேனா துவக்கோட வர்றீங்க! என்னைச் சுடவா போறீங்க?" எனக் கேலியாகக் கேட்டுச் சிரித்தாள். 'ஓம் நந்தா! நான் அப்போதை வரேக்கை இஞ்சை மலைக்காட்டுக்கை பொட்டைமான் ஒண்டு குய்யிட்டுது! அதைத்தான் வெடிவைக்க வந்தனான்!" என அவன் சிரித்தபோது, 'ஓகோ! அதுதான் நீங்க அந்த மானைப் பாத்து.. நிண்டுக்கோ!.. உன்னைச் சுடறதுக்கு துவக்கு எடுத்திட்டு வர்ரேன் என்று கை காட்டினீங்களாக்கும்!" நந்தா கேட்டபோது, இருவருமே கலகலவெனச் சிரித்துக் கொண்டனர். காரணமின்றியே சிரிக்க வைப்பதும், காரணமின்றியே அழவைப்பதுமான இளங்காதல், இந்த ஜோடிகளையும் விட்டுவைக்கவில்லை.

'ஆரு சேனா ஒங்ககூட வந்த?" என நந்தா கேட்டபோது அவளுக்கு விஷயத்தைச் சொன்ன சேனாதி, சிங்கராயர் இங்கு தன்னைக் கோழி வெடிவைக்க அனுப்பியதையும் கூறினான். 'ஆமா சேனா!.. வாங்க! அதோ அந்தப் பக்கந்தான் கோழி கத்திச்சு!" என்று கூறவே, நந்தாவதி காட்டிய பக்கம் அவளுடைய கையை விடாமலே பற்றிக்கொண்டு காட்டினுள் நுழைந்த சேனாவுடன் அணைந்தவாறே நந்தா சென்றாள்.

சுமார் ஐம்பது யார் தூரம் அவர்கள் காட்டுக்குள் சென்றதுமே நாய்களின் வரவுகண்டு கலைந்து கத்திக்கொண்டே மேலே பறந்த காட்டுக்கோழிச் சேவல், உயரே ஒரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, இனிமேல் உங்களால் என்ன செய்முடியும்? என்று கேட்பதுபோல், தலையைச் சரித்து நாய்களைப் பார்த்தது. அதன் கண்ணில் படாமல் நந்தாவதியையும் இழுத்துக்கொண்டு பதுங்கி வந்த சேனாதி, வெடிவைக்கக்கூடிய தூரத்துக்கு வந்ததுமே, நந்தாவை விட்டு மறைந்து நின்றவாறே துவக்கை உயர்த்திக் குறி பார்த்தான். மறுகணம் வெடியோசையில் அந்த இடமே அதிர்ந்தது. ஒரு வினாடியேனும் தாமதிக்காத சேனாதி மின்னல் வேகத்தில் சேவல் இருந்த மரத்தின்கீழ் ஓடிச்சென்று, குண்டடிபட்டு குப்புற விழுந்த சேவல் தரையில் விழுவதற்கு முன்னரே அதைத் தனது கையில் இலாவகமாக ஏந்திக் கொண்டான். இவையெல்லாம் அவன் சிங்கராயரிடம் கற்றுக்கொண்ட பாடம்! வெடிகேட்டு கோழியைக் கௌவிப் பிய்க்கச் சரேலென்று பாய்ந்து வந்த நாய்கள், ஏமாந்தவையாக சேனாவின் கையிலிருந்த சேவலைப் பற்றுவதற்குத் தொங்கிப் பாய்ந்தன. அவற்றைச் செல்லமாக அதட்டி விலகச் செய்துவிட்டு, சேவலைத் தலைக்குமேல் உயரப் பிடித்துக்கொண்டு வந்த சேனாதி, 'எப்பிடி நந்தா என்ரை வெடி!" என்று பெருமிதம் பேசினான்.

நந்தாவுக்கு அவனுடைய வெடி, அவனுடைய குரல், அவனுடைய உதடுகள், அவற்றுக்கும் மேலே இலேசாக அரும்பத் தொடங்கியிருந்த இளமீசை அத்தனையுமே மிகவும் பிடித்திருந்தன. ஆசையுடன் அவனைப் பார்த்த நந்தாவதியிடம், 'வா நந்தா வீட்டை போவம்!" எனச் சேனாதி அழைத்தபோது, 'நீங்க இப்பிடியே போங்க! நா ஒருக்கா வூட்டுக்குப் போயிட்டு வந்திர்ரேன்!" எனக் கன்னங்குழியச் சிரித்துவிட்டு ஓடிமறைந்தாள் நந்தாவதி.

பழப்புளியிட்டு அழுத்தியழுத்தி தேய்த்துத் தங்கமாய் மின்னிய வெண்கல மூக்குப்பேணிகளில் பசும்பாலை விட்டு செல்லம்மா ஆச்சி மாலுக்குக் கொண்டு வந்தபோது, எழுந்து நின்று இரு கைகளினாலும் மூக்குப்பேணியை வாங்கிக்கொண்டார் ஆசிரியர் கே.பி.

'இருங்கோ வாத்தியர்.. அவர் இப்ப வந்திடுவார்! நான் புட்டு அவிக்கிறன், சாப்பிடிலாம்!" என அவர்களிடம் சொல்லிவிட்டு செல்லம்மா ஆச்சி அடுப்படிக்குள் சென்றபோது, அவள் கொடுத்த பாலையே உற்றுநோக்கிய கே.பி, காந்தியைப் பார்த்து, 'இந்தப் பாலும் இங்கு வாழும் மக்களும் ஒன்றுதான்! இவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், இனிமையானவர்கள். கோபம் வந்தால் பால் பொங்குவது போலக் கொதித்துவிட்டு, பாலைப் போலவே சட்டென்று தணிந்து போவார்கள். அதிகமாக வெளியுலகம் தெரியாத இவர்களுடைய தேவைகளும், ஆசைகளும் எளிமையானவை. அவை எளிமையானவையாக இருப்பதனால் இலகுவில் நிறைவேறுகின்றன. எனவே இவர்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லை!" என்று சொன்னபோது காந்தி சட்டெனக் குறுக்கிட்டான்.

'வெளுத்ததெல்லாம் பாலெண்டு நினைச்சு எல்லாரும் எங்கடை பக்கத்திலை எளிமையாய் இருக்கிறபடியாத்தான் சேர், சில ஆக்கள் லேசிலை எங்களைச் சுறண்டி சீவிக்கிறாங்கள்!.. இவை இப்பிடியே ஒண்டும் தெரியாமல் இருக்க அவங்கள் ஏமாத்தி வாழுறாங்கள்! அதிகாரத்திலையும், பதவியிலையும் இருக்கிறவங்கள் எங்கடை ஆக்களை நெடுகத்தானே அடக்கி ஒடுக்கி அடிமையளாய் வைச்சிருக்கிறாங்கள்! அதுக்கு முதலிலை.. அவங்களுக்கு உதவியாய் இருக்கிற சில கோடாலிக் காம்புகளை அடிச்சு முறிக்கோணும்!.. குட்டக்குட்டக் குனியிறவனும் பேயன்!.. குனியக்குனியக் குட்டறவனும் பேயன்!.. இவங்களையெல்லாம் அழிச்சால்தான் எங்கடை சமுதாயம் உருப்படும்!" என ஆத்திரப்பட்டான் காந்தி.

'உனக்குப் போய் காந்தி எண்டு பேர் வைச்சினமே!" எனச் சிரித்தார் கே.பி. 'எங்களுடைய இலட்சியம் எங்களுக்கு முக்கியந்தான் காந்தி!.. ஆனால் நாங்கள் அந்த இலட்சியத்தைச் சென்றடைகின்ற வழி இன்னமும் முக்கியமானது காந்தி!.. இலட்சியங்களைப் போன்றே எமது வழிகளும் தூய்மையாக இருக்கவேணும்!.. காந்தி மகான் அஹிம்சா வழியைப் பின்பற்றித்தான் போராடி வென்றர்!" என்ற கே.பியை இடையில் மறித்துப் பேசினான் காந்தி.

'சேர்!.. அது விளங்கக்கூடிய, உணரக்கூடிய எதிரிக்குத்தான் பொருந்தும்!.. பன்றிகளுக்கு முன்னால் முத்துக்களைப் போடாதீர்கள்!.. அவற்றின் அருமை அவற்றுக்குத் தெரியாது, அவை முத்துக்களைப் பீறிப்போடும் எண்டு யேசு சொன்னதாய் நீங்கள்தானே சேர் அடிக்கடி சொல்லுவியள்!" என மடக்கினான் காந்தி.

காந்தி இவ்வாறு வினவியபோது, 'உடனேயே பதிலளிக்காது சிந்தனையில் ஆழ்ந்த கே.பி பின்பு சிறிது நேரத்தின் பின்னர் பேசினார்.

'காந்தி! பலகோடி வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த மனிதவாழ்வு எனக்கு ஒரு முடிவில்லாத, நீண்ட நெடும்பயணமாகத் தெரிகின்றது! ஏற்றமும் இறக்கமும், பள்ளமும் படுகுழிகளும் கொண்ட பாதையில் முன்னே நகரும் மனித இனம், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமநிலத்துக்கு வரும்போது துன்பங்கள் அற்றதாய், சந்தோஷம் நிறைந்த ஒரு நிலையை அனுபவிக்கின்றது. இந்த நெடும்பயணம் நின்றுவிட்டதுபோல் தோன்றும் இந்தக் காலத்தில் மறுபடியும் சுரண்டலும், சுயநலமும் தலைதூக்குகின்றன. இந்த நிலையில் அங்கு வாழும் ஒருசிலர், குறிப்பாக இளைஞர்கள், இந்த நிலைக்கு எதிராக, இந்த அவலநிலையை மாற்றுவதற்குக் குரல் கொடுக்கின்றனர். தற்சமயம் வசதியாக வாழ்பவர்களுக்கு இந்த இளைஞர்களின் செயல்கள் பிடிக்காது! இவர்களைப் புரட்சிக்காரர் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் கண்டனஞ் செய்வார்கள். சௌகரியத்தை அனுபவிக்கும் வேறு சிலரும், நமக்கேன் பொல்லாப்பு! என ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் புரட்சி, மறுபடியும் மனித இனம் இன்னும் மேன்மையான நிலையை நாடித் தன் பயணத்தைத் தொடர்கின்றது எனலாம். இரத்தமும், துன்பமும், சித்திரவதைகளும் மலிந்த இந்தப் பயணத்தின் முன்னோடிகள் உனக்காகவும், எனக்காகவும் காத்திருப்பதில்லை காந்தி!.. இயேசு, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர்கிங், இப்படிப் பல சமய, சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களுடைய வழிகளையும் நீ அறிவாய்தானே காந்தி! அஹிம்சைதான் அவர்களுடைய பலமான ஆயுதமாக இருந்தது. உடற்பலம் அற்றவர்கள்கூட அந்தப் புனித ஆயுதத்தைப் பயன்படுத்தி வெற்றிகாணக் கூடியதாகவிருந்தது."

'ஆனால் அவர்கள் யாவரையும் கொன்றுதானே சேர் போட்டாங்கள்!" எனக் குறுக்கிட்டான் காந்தி.

'ஆமாம்! உன்னதமானதொன்றை நாம் அடைவதற்கு அதேயளவு உன்னதமான இன்னொன்றை இழக்க ஆயத்தமாக இருத்தல் வேண்டும். இது இயற்கையின் எழுதா விதிகளில் ஒன்று காந்தி!" என்றார் கே.பி.

காந்தி தனது மெலிந்த உடல்; இலேசாக நடுங்க, 'இவ்வளவு அறிவும், வழிகாட்டக்கூடிய வல்லமையும் கொண்ட நீங்கள் ஏன் சேர் ஒரு இயக்கத்தைத் தொடங்கி வழி காட்டக்கூடாது?" என உணர்ச்சி மேலிடக் கேட்டான்.

காந்தி இவ்வாறு பதட்டப்பட்டுக் கேட்டபோது அமைதியாகவே பதிலளித்தார் கே.பி. 'காந்தி! உண்மையைச் சொன்னால், எனக்கே வழி எதுவெனச் சரியாகப் புலப்படவில்லை. உன்னுடைய இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றேதான்! நான் தீபங்களை ஏற்றி இருளை அகற்ற விரும்புகின்றேன். நீயோ யாவற்றுக்கும் தீ வைத்தே ஒளிகாணத் துடிக்கின்றாய்!" எனக் கே.பி சொல்லிக் கொண்டிருக்கையில் சிங்கராயர் கிணற்றடியிலிருந்து வந்தார். அதேசமயம் சேனாதியும் தான் வெடிவைத்த காட்டுச் சேவலைக் கையில் கொண்டு வந்தான்.

அதைத் தனது கரத்தில் வாங்கிப் பார்த்த கே.பி, 'இந்த வனங்களில் வாழும் பிராணிகள்தான் எத்தனை அழகாக, ஆரோக்கியமாக இருக்கின்றன!" என வியந்தபோது சிங்கராயர், 'நானும் என்ரை வயதுமுழுக்கக் காட்டிலைதான் திரிஞ்சிருக்கிறன். ஆனால் ஒரு நொண்டி மரையையோ, கிழட்டுப் பிராணிகளையோ காணேல்லை!" எனக் கூறினார்.

'ஓமோம் பெரியவர்! காடுகளில் வலிமை குன்றியவை, ஊனமானவை, முதுமை அடைந்தவை யாவும் வேறு விலங்குகளுக்கு இரையாகி விடுவதால் நீங்கள் அவற்றைக் காணவில்லைப் போலும்!.. காட்டில் வாழும் பிராணிகள் சதா எச்சரிக்கையுடனும், இயற்கைக்குக் கட்டுப்பட்டும் வாழ்வதாலேயே அவை இவ்வளவு அழகும், ஆரோக்கியமும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன போலும்!" என விளக்கினார் கே.பி.

'நல்லாய்ச் சொன்னியள் வாத்தியார்!.. காட்டிலை வாழுற சீவன்கள் மட்டமல்ல.. இந்தக் காட்டுக்கை இருக்கிற நாங்களும் எப்பவும் கவனமாய்த்தான் சீவிக்கவேணும்! கொஞ்சம் கவலையீனமாய் இருந்தால் காடு வீட்டுக்கை வந்திடும்!.. பழையாண்டாங்குளத்துக் குழுவன் ஒண்டு இப்ப எங்களுக்குப் பெரிய இடைஞ்சலாய் வந்திட்டுது! அதைப்போலை ஒரு குழுவனை நான் என்ரை சீவியகாலத்திலை சந்திக்கேல்லை!.. இஞ்சை பாத்தியளே இந்தக் காயத்தை?.. அந்தக் கலட்டியனை நான் மடக்கப் பாத்தபோது அது துடையிலை வெட்டி என்னைக் கொல்லப் பாத்தது!.. என்ரை பட்டி மாப்பிளை நாம்பன்ரை கொம்பை முறிச்சுது!.. வாருங்கோ காட்டுறன்!.." எனக் கே.பியையும், காந்தியையும் அழைத்துச்சென்று, பின் வளவில் ஒற்றைக் கொம்பனாக நின்ற கேப்பையானைக் காட்டினார் சிங்கராயர்.

ஒரு சின்ன யானையளவு பெரிதாய் நின்ற கேப்பையானைப் பார்த்தபோது ஆசிரியர் கே.பிக்கு, அந்தப் பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் எத்தனை அசுரபலமும், மூர்க்கமும் உடையதாக இருக்கும் என்பது புலப்பட்டது.

அங்கே இரண்டு பனைகளில் நீளமாக இழுத்துக் கட்டப்பட்ட மான்தோல் வார்களைக் காட்டிய சிங்கராயர், 'அண்டைக்கு என்ரை வார்க்கயிறு அறுந்தபடியால்தான் கலட்டியன் ஆளிலை வந்திட்டுது!.. அதுக்குத்தான் இண்டைக்கு ஒரு புது வார்க்கயிறு திரிக்கப்போறன்!.. " எனச் சிங்கராயர் சொல்லிக் கொண்டிருக்கையில் நந்தாவதி வந்தாள்.

அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்தே அவள் ஒரு சிங்களப்பெண் என்பதை உணர்ந்துகொண்ட கே.பி, இது யார்? என்பதுபோலச் சிங்கராயரைப் பார்த்தார்.

'இதுதான் வாத்தியார் நந்தாவதி! இஞ்சை சேவையர் பாட்டியிலை வேலை செய்யிற கங்காணி குணசேகராவின்ரை மோள்!.. தாய் செத்தபிறகு கண்டியாலை வந்து இஞ்சை தேப்பனோடை நிக்கிறாள்.. அருமையான பொடிச்சி!.." எனச் சிங்கராயர் நந்தாவதியை அறிமுகப்படுத்தியபோது அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

பருவத்தின் தலைவாசலில் பூரித்து நின்று, ஒரு தேவதைபோல் தோன்றிய அவளுடைய பெயரைக் கேட்டதுமே காந்திக்குப் பொறிதட்டியதுபோல் ஒரு ஞாபகம் வந்தது. அன்று சேனாதிராஜன் மாணவர் ஒன்றியத்தில், 'நந்தா நீ என் நிலா!", என உருகிப் பாடியது நினைவில் பளீரிட்டது. அவன் திரும்பி வேலியருகில் காட்டுக்கோழியை உரித்துக் கொண்டிருந்த சேனாதியைப் பார்த்தான். நந்தாவதியை அவன் பார்க்கும் பார்வையிலேயே காந்தி விஷயத்தைப் புரிந்துகொண்டான்.

'வாத்தியார்! நீங்கள் இண்டைக்கு காந்தியையும் கூட்டி;கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது! வார்க்கயிறு திரிக்க என்னோடை சேர்த்து நாலுபேர் வேணும். நான் கயித்தைத் திரிக்க மூண்டுபேர் மூண்டு புரியைப் புடிக்கவேணும். நீங்கள் இந்த வேப்பமர நிழலிலை சாக்குக் கட்டிலிலை இருங்கோ. நான் கயித்தைத் திரிக்கிறன். நந்தாவதியும் வந்தது நல்லதாய்ப் போச்சுது!.. தம்பி சேனாதி!.. கெதியிலை கோழியை உரிச்சுக் ஆச்சீட்டைக் குடுத்திட்டு வா!.. கயித்தைத் திரிப்பம்!" எனச் சொல்லிக்கொண்டே சிங்கராயர் மளமளவென கயிறு திரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலானார்.

காந்தி, சேனாதி, நந்தா மூவரும் ஆளுப்பொரு வார்புரியைப் பிடிக்க, உறுதியும் பருமனும்கொண்ட வார்க்கயிறு சிங்கராயரின் அனுவபம் மிக்க செயற்றினால் மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.

ஆசிரியர் கே.பி சாக்குக் கட்டிலில் அமர்ந்தவாறே வார்க்கயிறு உருவாவதை அவதானித்துக் கொண்டிருந்தார். சேட்டைக் கழற்றிவிட்டு வெறும் மேலுடன் வெகு எளிமையாகக் காணப்பட்ட அவருடைய தீட்சண்யம் மிக்க விழிகளைக் கவனித்த காந்தி, இவருடைய அறிவுக்கும், கல்விக்கும் எங்கேயோ உயர் பதவியில் இருக்கவேண்டியவர், ஏன்தான் இந்தக் காட்டுப் பகுதியில் வந்து கிராம வாழ்க்கையில் இன்பம் காண்கின்றார் எனச் சிந்தித்தான் காந்தி.

தலைக்கு மேலே வந்துவிட்ட சூரியனின் கிரணங்கள் கடுமையாகத் தகித்தன. அந்த வெய்யில் தனக்குச் சுட்டதேயன்றி, சேனாதிக்கும் நந்தாவதிக்கும் நிலவுபோல் இருப்பதை நேரில்கண்டு வியந்தான் காந்தி. அவர்களின் விழிகள் அடிக்கடி சந்தித்து ஒன்றையொன்று கௌவிப் பின் பிரிந்துகொண்டிருந்தன. நாடு இருக்கும் நிலையில் இந்தக் காட்டுக்குள் இப்படியொரு காதலா? இதன் முடிவுதான் எப்படி இருக்கப் போகின்றது? என அவன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

வார்க்கயிற்றைத் திரித்தவாறே சிங்கராயர், தான் கலட்டியனைப் பிடிக்கப்போகும் திட்டங்களை ஆசிரியர் கே.பிக்குக் கூறிக்கொண்டிருந்தார்.

'வாத்தியார்! எனக்குத் துடையிலை வெட்டின கலட்டியன் இப்ப பழையாண்டாங்குளத்து நடுப் புல்லுக்கை இருக்கிற தண்ணி மோட்டைக்கை கிடக்குது.. சேனாதி அதுக்கு வெடிவைச்ச குண்டு எங்கையோ பட்டு, அந்தக் காயம் ஆறத்தான் அது அங்கை கிடக்குது.. அந்தப் பெரிய குளம் முழுக்க ஆளுயுரப் புல்லு காடாய்க் காஞ்சுபோய்க் கிடக்குது.. கலட்டியன் கிடக்கிற நடுக்குளத்துக்குத் தண்ணி வாற பவுர் மட்டும் புல்லில்லாமல் ஒரு மணல் ஓடையாய் இருக்குது.. என்ரை திட்டம் என்னெண்டால், எட்டுப் பத்துப் பேராய்ப்போய், குளத்தைச் சுத்திவர ஒரே நேரத்திலை புல்லுக்கு நெருப்பு வைக்கவேணும்.. நெருப்பு நல்லாய்ப் பத்தி, மோட்டையைச் சுத்தி எரிய, கலட்டியன் தப்பி ஓடப்பாக்கும்.. எந்தப் பக்கமாய் அவர் ஓடுவார்?.. அந்தத் தண்ணிவாற மணல் ஓடைவழியாலைதான் அவர் ஓடித் தப்போணும்!.. வேறை வழியே இல்லை!.. அவர் அப்பிடி ஓடிவர, அவர் வாற வழியிலை நிக்கிற முதிரை மரத்திலை நான் வார்க்கயித்தோடை இருப்பன்!.. இந்தக் கயித்தின்ரை ஒரு பக்கத்தை முதிரை மரத்திலை கட்டியிருப்பன்.. தலைப்புச் சுருக்காலை கழுத்துக்குப் படுப்பன்!.. கலட்டியன் புள்ளை தப்பவே முடியாது!.. எப்பிடி என்ரை திட்டம்?" எனப் பெருமிதத்துடன் விளக்கினார் சிங்கராயர்.

சேனாதி தன் பாட்டனார் வகுத்திருந்த திட்டத்தைக் கேட்டுப் பிரமித்துப் போனான். சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பழையாண்டாங்குளம் அவன் கண்ணில் தெரிந்தது. ஆளுயுரத்திற்கு வளர்ந்து வைக்கோலாய்க் கிடக்கும் புல்லுக்காடு. அதன் நடுவே ஒரு சிறிய ஒழுங்கைபோல் செல்லும் மணற்பவர்... நாற்புறமும் புசுபுசுவெனப் பற்றிக்கொள்ளும் நெருப்பு, காட்டுத் தீபோலக் கொழுந்துவிட்டு எரிந்து கலட்டியன் கிடக்கும் மோட்டையை வளைத்துக்கொள்ள, அது மிரண்டுபோய், தப்புவதற்காக அந்த மணற்பாதை வழியாக ஓடிவரும் காட்சி அவன் மனதில் அப்படியே தெரிந்தது. அவன் தன்னருகில் நின்றுகொண்டிருந்த நந்தாவைக்கூட மறந்து, தன் பார்வையாலேயே சிங்கராயரைப் பார்த்துப் பாராட்டி மகிழ்நது கொண்டான்.

செல்லம்மா ஆச்சியின் கைப்பாங்கில், எருமை நெய்யில் பொரித்தெடுத்த காட்டுக்கோழி இறைச்சியை வெகுவாக அனுபவித்து உண்டு மகிழந்தார் கே.பி. அவர் வயிறார உண்ட களைதீர, வேப்பமர நிழலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தபின்னர், ஆசிரியரும் காந்தியும் தண்ணீரூற்றுக்குப் புறப்பட்டனர். செல்லம்மா ஆச்சி தன் கையாலே உருக்கிய புத்துருக்கு நெய்யில் ஒரு போத்தலை ஆசிரியருக்குக் கொடுத்தார். சிங்கராயர் சேனாதியை அழைத்து, 'வாத்தியாரை குமுளமுனைமட்டும் கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு, நான் சொன்னதெண்டு சொல்லி குமுளமுனை மணியத்திட்டை மூண்டுபோத்தில் வடிசாராயம் வாங்கிக்கொண்டு வா! நாளைக்கு குழுவனைப் புடிச்சபிறகு குணசேகராவின்ரை ஆக்களுக்குக் குடுக்கவேணும்! அவங்கடை உதவியில்லாமல் ஒரே நேரத்திலை குளத்தைச் சுத்தி நெருப்புக் குடுக்கேலாது!" எனக் கட்டளையிட்டார்.

அவர்கள் புறப்படும் சமயத்தில் மீண்டும் நந்தாவதி வந்தபோது, 'மங் கீல நங்கி!" என அவளுடைய பாஷையிலேயே ஆசிரியர் விடைபெற்றபோது, 'போயிட்டு வாங்க சார்!" என அவள் தான் பழகியிருந்த இனிய இந்தியத் தமிழில் கூறியபோது யாவரும் சிரித்துக் கொண்டனர்.

சிங்கராயர், ஆச்சி, நந்தாவதி மூவரும் தட்டிக்கண்டாயம் வரையில் வந்து வழியனுப்ப அவர்கள் புறப்பட்டனர்.

மாலை வெய்யில் பொன்னாக அடித்துக்கொண்டிருந்த பசும்புற்றரையில் நடந்து பாலையடி இறக்கத்தை அடைகையில் சிந்தனையில் ஆழ்ந்தவனாய் நடந்துவந்த காந்தி திடீரென்று, 'சேர்! சிங்களவரும் தமிழரும் திருமணம் செய்துகொண்டால் இன ஒற்றுமை பிறக்குமா?" எனக் கேட்டபோது சிரித்த கே.பி, 'அப்படித் திருமணஞ் செய்துகொண்டால் பிள்ளைதான் பிறக்கும்!.. இன ஒற்றுமை பிறக்காது என்று ஒரு தமிழ்த் தலைவர் சொன்னது உனக்குத் தெரியுமா?" எனக்கூறி மீண்டும் சிரித்துக்கொண்டார்.

சோனதி சட்டடென உஷாராகி கே.பி மேலே சொல்வதைக் கேட்பதற்காகக் காதைத் தீட்டிக்கொண்டான்.

பாலையடியிறக்க வெண்மணல் மேட்டில் நின்ற கே.பி, 'காந்தி! ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான சில குணாதிசயங்கள் உண்டு. பனையையும் தென்னையையும் நாம் மாங்கன்று ஒட்டுவதுபோல் ஒட்டிவிட முடியுமா? பனை பனையாகத்தான் இருக்க முடியும். தென்னை தென்னையாகத்தான் இருக்க முடியும். அது பனைக்கும் நல்லது, தென்னைக்கும் நல்லது. சிங்களவர்களும் தமிழர்களும் மனித இனமாகிய ஒரே குடும்பம் என்றபோதும் அவரவர் தத்தம் தனித்துவம் கெடாது வாழ்ந்து சமூகத்திற்குப் பயன்தர வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்!" என்றார்.

'ஆனால் எமது தனித்துவம்தான் பதவிவெறி கொண்டவர்களினால் நாளுக்கு நாள் நசித்துக்கொண்டு போகின்றதே சேர்! அப்படி எமது இனத்தையும் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் அழிப்பவர்களை நாம் பொங்கியெழுந்துது அழிப்பதுதான் நியாயம் சேர்!" எனத் துடித்தான் காந்தி.

முகஞ்சிவக்க உணர்ச்சிவயப்பட்டு நின்ற அவனைத் தோளில் தட்டிய ஆசிரியர் கே.பி, 'காந்தி! இனவெறியை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டது யார்? இன்று எல்லா அதிகாரங்களிலும் நாட்டை ஆள்கின்ற அதிகராமே மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள், எமது நாட்டில் குறுக்குவழியில் மிகவிரைவாகப் பதவிக்கு வந்துவிட இனம், மொழி, மதம், சாதி போன்ற உணர்ச்சியைத் தாக்கும் விஷயங்களை மக்கள்முன் வைக்கின்றார்கள். இந்த விஷயங்களில் மக்களுக்கு இயல்பாக உள்ள அபிமானத்தையும், பற்றையும் இவர்கள் வெறியாக்கி அவர்களது வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டின் பொருளாதார அவலம், சமூகச் சீர்கேடு என்பவற்றை மக்கள் கண்டுகொள்ளாதபடி சதா இந்த வெறிக்குத் தூபமிட்டுக்கொண்டே, பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்கமிருந்தாலும் அவற்றைத் தீர்க்க முயலாமலே அப்பிரச்சனைகளில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள்!" எனக் கே.பி கூறியபோது, 'இப்படியான சமூகத் தூரோகிகளை உயிரோடு விட்டுவைக்கக் கூடாது சேர்!" எனக் குறுக்கிட்டான் காந்தி. 'அரசியல் ஒரு துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே ஏமாற்றியும், சுரண்டியும் வாழ்பவர்கள்தான் இன்றைய உலகில் பெரும்பான்மையினராக உள்ளனர்! சுயநலவாதிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் இந்த விஷயத்தில் நெருங்கிய உறவுக்காரரே! இந்த நிலைக்கு உண்மையான காரணம் மக்கள் மத்தியில் நிலவும் வறுமையும், அறியாமையுமே! மனிதன் ஒன்றில் தானாக உணர்ந்து திருந்தவேண்டும் அல்லது இன்னொருவர் சொல்வதைக் கேட்டுத் திருந்த வேண்டும்! இல்லையேல் தண்டனைகளுக்குப் பயந்து, பின்விளைவுகளுக்குப் பயந்து திருந்த வேண்டும்!" என்றார் கே.பி.

ஆற்றைக் கடந்து அவர்களுடன் கூடவே நடந்துகொண்டிருந்த சேனாதிக்கு இவர்களுடைய உரையாடல் ஓரளவு புரிவதுபோல இருந்தது.

கே.பி யை இடைமறித்துச் சட்டென்று சொன்னான் காந்தி: 'மனிதன் தானாகத் திருந்துவது நடக்காத ஒன்று! இன்னொருவர் சொல்லியும் இவர்களைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள்! அப்படியான சமய, சமூக சீர்திருத்தவாதிகளைத்தான் அவர்கள் கொன்று விடுகின்றார்களே!" எனக் கூறிக்கொண்டு வந்தபோது, 'நீ சொல்லும் மூன்றாவது வழியான தண்டனைகூட நெடுநாட்களுக்குப் பயனளித்ததாய் சரித்திரமே கிடையாதே!" என்றார் கே.பி.

'அப்ப என்ன சேர் செய்யச் சொல்லுறியள்? கையைக் கட்டிக்கொண்டு நடக்கிற அநியாயங்களைச் சும்மா பாத்துக் கொண்டிருக்கச் சொல்லறியளே?"

'எனக்கும்கூடத்தான் வழி எதுவென்று இன்னமும் புரியவிலலை காந்தி! மனித வரலாற்றின், இப்படியான இடர்சூழ்ந்த காலகட்டத்தில், பொதுநல நோக்கமும், உன்னத இலட்சியங்களையும் உடைய ஒப்பற்ற ஒரு தலைவன் தோன்றி, மக்களை நல்வழியில் இட்டுச்சென்று சுபீட்சமடைய வைப்பது, நிச்சயமான ஒரு விஷயமாக இருக்கின்றது. உன்னைப்போன்ற உன்னதமான மனம் படைத்த வாலிபர்களினதும், யுவதிகளினதும் இதயங்கள் இந்தக் கொடுமைகளில் கருகி, வதைகளினால் நசுக்கப்படும்போது, அவை வைர நெஞ்சங்களாகின்றன. காட்டுத்தீயில் கருகிய மரம் எப்படிப் பூமியின் அடியில் அழுந்தி அமுக்கத்தால் வைரமாகின்றதோ, அதைப்போன்றே இந்த இளநெஞ்சங்களும், இப்படியான சூழ்நிலைகளில் கறுப்பு வைரங்களாகி விடுகின்றன. வலிமை மிக்க இந்த வைரநெஞ்சங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி எத்தனையோ இலட்சியங்களை அடைந்துவிடலாம்! அவர்களை அப்படியானதொரு புனித போராட்டத்தில் ஈடுபடவைக்கும் ஒரு தலைவன் நிச்சயமாக எம்மத்தியில் உருவாகியே ஆகவேண்டும்! நாம் ஏன் நசுக்கப்படுகின்றோம், எவ்வாறு நசுக்கப்படுகின்றோம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதே, பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதற்கட்டம்! எமது வாலிபர்களுக்கும், யுவதிகளுக்கும் அறிவையூட்டி அவர்களை ஆயத்தம் செய்வதொன்றே இப்போது என்முன் உள்ள ஒரே வழியாக எனக்குத் தோன்றுகின்றது!" எனச் சொன்ன கே.பியின் முகம் சிந்தனையில் இறுகிப்போய்க் கிடந்தது.

காந்தியின் மனதில் காலையில் ஆசிரியர் கே.பி, வட்டம்பூவைப் பார்த்துவிட்டுக் கூறிய அந்த வழிகாட்டியான வாலிபனின் கதை நினைவுக்கு வந்தது. இரத்தம் சிந்தித் தன் உயிரையே இழந்து தன் இனத்தை வாழவைத்த அந்த இளைஞனின் ஞாபகம் காந்தியின் மனதில் இறுகப் பதிந்து போயிற்று.

ஆசிரியர் கே.பியையும், காந்தியையும் குமுளமுனையில் வழியனுப்பிவிட்டு சேனாதி ஆண்டாங்குளம் திரும்பியபோது கிராமத்தை இருள் கவ்விக் கொண்டிருந்தது.

நந்தாவின் குடிசைப் பக்கமாகப் பார்த்தான். குப்பி விளக்கின் ஒளி தெரிந்தது.

சிங்கராயரும் அவனுமாக அன்று பகல் திரித்திருந்த பருமனான வார்க்கயிற்றில், கொக்கை போன்ற பலமான ஒற்றை மரைக்கொம்பை அடுத்துக் கட்டிவிட்டுப் படுக்கையில் சரிந்தபோது இரவு பத்து மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது.

வளரும் 

00000000000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 15

அடுத்தநாட் காலையில் சிங்கராயர் மிகவும் உற்சாகத்துடன் தோளில் புதிய வார்க்கயிற்றுடன் அடர்ந்த காட்டினூடாகப் பழையாண்டங்குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். கூடவே சேனாதி கையில் துவக்குடன் பின்தொடர, குணசேகராவும் அவனுடைய ஆட்களும், புல்லுக்குத் தீ வைப்பதற்காக கட்டிய தென்னோலைச் சூள்களை கொண்டு சென்றனர். அன்று வேட்டை நாய்கள் வேண்டாம் எனச் சிங்கராயர் அவற்றைக் கூட்டிச் செல்லவில்லை.

பழையாண்டங்குளத்தை அடைந்து, அதன் கட்டில் ஏறிநின்று பார்க்கையில் பகல் பன்னிரண்டு மணியாகி விட்டிருந்தது. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. வைக்கோலாய்க் காய்ந்து கிடக்கும் புற்காட்டையும், அதன் அகன்ற பரப்பின் நடுவே சற்றுப் பச்சனவாகக் காணப்பட்ட நீர் மோட்டையையும், தீர்க்கமாகக் கவனித்த சிங்கராயர், விடுவிடென ஒரு உயர்ந்த மரத்தில் ஏறி, மோட்டையை அவதானித்தார். கலைவு ஏதுமின்றி அங்கே கலட்டியன் தண்ணீரில் படுத்துக் கிடந்தது. திருப்திப் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தவர், காற்று விழுந்து வெம்மை அனல்விட்ட அந்தச் சமயமே தீ மூட்டுவதற்குச் சிறந்த நேரம் எனக் கணித்துக்கொண்டு, குணசேகராவையும் அவன் சகாக்களையும் அழைத்து, தணிந்த குரலில், செய்யவேண்டிய பணியை அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள், தமது கையில் வைத்திருந்த தென்னோலைச் சூள்களுடன் குளத்தை வளைத்துச் சென்று, சிங்கராயர் குறிப்பிட்ட இடங்களில் நின்றுகொண்டனர். காற்று வீசாதபடியினாலும், உயர்ந்த புற்களின் நடுவே கலட்டியன் நீரில் கிடந்ததாலும், அது வரும் ஆபத்தை அறியாதிருந்தது. சிங்கராயர் தான் ஏற்கெனவே குறித்து வைத்திருந்த முதிரை மரத்தில் ஏறி, தனது புதிய வார்க்கயிற்றை அந்த மரத்தின் பருமானான கிளையொன்றில் சிக்கராகக் கட்டிவிட்டு, சைகையைக் காட்டினார். குணசேகராவும் அவனது ஆட்களும் ஒரே சமயத்தில் பற்றவைத்த நெருப்பு கிசுகிசுவென, கலட்டியன் கிடந்த மோட்டையைச் சுறு;றிப் பரவிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கொழுந்துவிட்டு எழுந்த தீ, மோட்டையை அண்மிக்க முன்னரே நெருப்பின் நெடியை உணர்ந்துகொண்ட கலட்டியன் வெகுண்டெழுந்து நாலாபக்கமும் ஓடி, தலையை உயர்த்தி சுவடித்தது.

இதற்குள் மளமளவென ஆளுயுரத்திற்குப் பரவிய தீ மோட்டையடிக்கும் வந்துவிடவே, திகிலடைந்த கலட்டியன், சிங்கராயர் கணித்தபடியே மணற்படுக்கையாகக் கிடந்த ஆற்றுப்பவரில் வேகமாக ஓடியது. அதன் பின்னங்கால்களில் ஒன்று நொண்டுவதை அவதானித்துக் கொண்டே, மரத்தின்கீழ் கலட்டியன் வந்ததும் வீசுவதற்கு சித்தமாகச் சிங்கராயர் உஷார் நிலையில் இருந்தார்.

இதோ அவர் இருந்த மரத்திலிருந்து சுமார் பத்து யார் தொலைவில் வந்துவிட்ட கலட்டியனுக்கு மரத்திலிருந்த சிங்கராயரின் வாடை விழுந்திருக்க வேண்டும். அது தன் பாதையில் சட்டெனத் தன் முன்னங்கால்களை ஊன்றி வேகத்தைக் கட்டுப்படுத்தித் தலையை உயர்த்தி, விழிவெள்ளை புரள சிங்கராயரைப் பார்த்தது. மறுகணம் கலட்டியன் சிங்கராயர் கற்பனை செய்யாதிருந்த ஒன்றைச் செய்தது.

அவர் தனது உயரத்துக்கு, அகலமாக, மரங்களை தறித்து தானிருந்த முதிரை மரத்தின் இருபக்கங்களிலும் அரண்போல அமைத்திருந்தார். கலட்டியனை மரத்தின் கீழாக வரச்செய்வதற்கு அவர் அந்த வெட்டுவேலியை அமைத்திருந்தார். நன்றாகக் காய்ந்துகிடந்த அந்த அரண்போன்ற அமைப்பும் இப்போது தீப்பிடித்துத் திமுதிமுவென எரிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வியப்பு மேலிட்டவராய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கலட்டியன் தனது அசுரப் பலத்தைப் பிரயோகித்து, எரியும் அரணை மோதிப் பிளந்துகொண்டு கண்ணிமைக்கும் பொழுதினில் காட்டினில் பாய்ந்தது. அதன் உடலில் இருந்த முரட்டு உரோமம் தீயில் பற்றிப் பொசுங்கி மணத்தது.

'சே! தப்பீட்டுது!" என உறுமிய சிங்கராயர் மரத்தால் இறங்கி, யாவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினார். கலட்டியன் தீக் காயங்களுடன் பழையாண்டங்குளத்துக்கு மேற்கே காடுகலங்க ஓடிக்கொண்டிருந்தது.

சிங்கராயரின் முகத்தைப் பார்த்ததுமே செல்லம்மா ஆச்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்த நேரம் அவரிடம் எதாவது கேட்டால் கொதித்துச் சீறுவார். எனவே ஒரு செம்பு நிறைய சில்லென்ற மோரை எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்கி மடக்கு மடக்கென பருகிமுடித்த சிங்கராயர் சற்றுக் கொதிப்பு அடங்கியவராய், 'மனுசி!.. இண்டைக்கும் கலட்டியன் தப்பீட்டுது! எப்பிடியும் அடுத்த விதைப்புக்கு முன்னம் அதை நான் புடிச்சுப்போடுவன்!.. இனி நாயளைக் கொண்டுபோய் கலட்டியனிலை ஏவிவிட்டுத்தான் புடிக்கப்போறன!" என உரத்துச் சொன்னார். அப்படியான முயற்சியில் உள்ள பேராபத்தை அறிந்த செல்லம்மா ஆச்சி உடனே வெளியே எதுவும் கூறாவிடினும், தன் மனதுக்குள் ஆதி ஐயனே! என வேண்டிக்கொண்டாள்.

சேனா தண்ணீரூற்றுக்குப் புறப்படுகையில் மான்குட்டி மணியுடன் பனைகளினூடாக ஓடிவந்த நந்தாவதி, தன்னால் இப்போது பாலையடி இறக்கம்வரை வந்து வழியனுப்ப முடியாததையிட்டுக் கூறிவிட்டு, குடிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையிடம் ஓடிவிட்டாள்.

சேனாதிக்கும் அன்று அவர்கள் கலட்டியனைப் பிடிக்க முயாமற்போனது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அடுத்த சனிவரை நந்தாவைக் காணமுடியாது என்ற எண்ணமும் அவனை உள்ளுக்குள் வருத்தியது. இத்தகைய மனநிலையில் உற்சாகம் குன்றியவனாய் குமுளமுனைக்கு வந்து, பஸ்சேறி தண்ணீரூற்றை வந்தடைந்தான்.

வளரும் 

000000000000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 16

தண்ணீரூற்றில் சேனாதியின் தந்தை பூதன்வயல் தெருவில்; கடந்த ஆண்டு வெட்டித் வெளியாக்கிய செய்த ஐந்து ஏக்கர் காணி இருந்தது. அந்தப் புதுப்பிலவில் இம்முறை கச்சான் பயிர்செய்ய அவன் திட்டமிட்டிருந்தான். ஆடியில் பெய்கின்ற முதல் மழைக்க கச்சானை விதைத்தால் மூன்று மாதங்களில் அது விளைந்துவிடும். அதிற் கிடைக்கும் பணம், நெல்வயல்களுக்கு பசளை முதலியவற்றை வாங்க உபயோகப்படும் என்ற எண்ணத்தில், மந்துகள் வளர்ந்திருந்த அந்தக் காணியை அவன் மீண்டும் துப்பரவு செய்ய ஆரம்பித்திருந்தான். எனவே சேனாதியும் மாலையில் பாடசாலை விட்டதும் வந்து அந்த வேலைகளில் பங்குகொள்ள வேண்டியிருந்தது. அதனால் அடுத்தடுத்து இரண்டு சனிஞாயிறு அவனால் ஆண்டாங்குளம் செல்ல முடியவில்லை. வானொலியை வைத்துக்கொண்டு சினிமாப் பாடல்கள் கேட்பதில் பொழுதை ஒருவாறு போக்கிக்கொண்டான்.

காந்திக்கும் பல்கலைக்கழகப் பிரவேசப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் தன் முழுக் கவனத்தையும் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதில் செலுத்திக்கொண்டான். ஆசிரியர் கே.பிஇ பரீட்சை எடுக்கின்ற மாணவர்களை இரவிலும் பாடசாலைக்கு அழைத்து இலவசமாகவே பாடம் நடத்தினார்.

மூன்று வாரங்களில் பூதன்வயல் புதுப்பில வெளியாக்கும் வேலைகள் முடிந்திருந்தன. இனிமேல் முதல்மழை விழுந்ததுமே பாத்தியமைத்து கச்சானை நடவேண்டியதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அந்த வேலைகள் யாவும் முடிவடைந்திருந்தன. வேலையைச் சிறப்பாகச் செய்துமுடித்த திருப்தியில், சிறிது கொண்டாட்ட மனநிலையில் இருந்த சேனாதியின் தந்தை அவனிடம் மாலை ஏழு மணியளவில் போத்தலையும் காசையும் கொடுத்து சாரயம் வாங்கி வரும்படி அனுப்பினான்.

அவர்களுடைய வீட்டுக்குச் சற்றுத் தொலைவில்தான் சாரயம் விற்கும் சின்னையரின் வீடு இருந்தது. அவருக்கும் சிங்கராயரின் வயதுதான் இருக்கும். ஆனால் சிங்கராயரைவிட சின்னையர் தளர்ந்தவராய், பல் விழுந்து பொக்கை வாயுடன் காட்சியளிப்பார். உடலால் வருந்தி உழைக்க முடியாமையால், அவர் தினமும் காலையில் முல்லைத்தீவுக்கு பஸ்ஸில் சென்று இரண்டு போத்தல் சாராயம் வாங்கிவந்து இலாபம் வைத்து விற்பார். சாராயம் வாங்கி வருவதுதான் அவருடைய வேலை. விற்பனைசெய்வது அவருடைய மகள்தான். சுமார் முப்பத்தைந்து வயதான அவளுக்குச் சிறுபிராயத்தில் இருந்தே இடுப்புக்குக் கீழே கால்களிரண்டும் வழங்காமல் போய்விட்டிருந்தன. இருப்பினும் தரையில் அரக்கி அரக்கிச் சென்றெ அவள் எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்துவிடுவாள்.

இப்போ சேனாதி அங்கு சென்றபோது சின்னையர் தனது சிறிய ஓலைக் கொட்டிலுக்குள், தொய்ந்து போனதொரு சாக்குக் கட்டிலில் தளர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் அவர் மாலைக் குளியலை முடித்திருக்க வேண்டும், நெற்றியில திருநீறு பளிச்சிட்டது. அவருடைய மகள் சேனாதியைக் கண்டதும்,'தம்பி இண்டைக்குச் சாரயம் முடிஞ்சுது! சில்வா மாமா பின்னேரமே சைக்கிளிலை முல்லைத்தீவுக்குப் போட்டுது! இப்ப வந்திடும்.. இருந்து வாங்கிக்கொண்டு போ!" என்றபோது, சேனாதி நன்கு பெருக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய முற்றத்தில் அமர்ந்துகொண்டான். தரையில் சின்னையரின் மகள் வீட்டுக்கும் அடுக்களைக்குமாய் கால்களை இழுத்துப் போய்வந்த அடையாளங்கள் தெரிந்தன.

குப்பிவிளக்கின் ஒளியில், சாக்குக் கட்டிலில் தொய்ந்துபோய் இருந்த சின்னையர் தனது மடியில் கிடந்த உடுக்கைத் தனது கையினால் மெல்ல வருடிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் அவர் இந்தப் பகுதியிலேயே பெயர்பெற்ற அண்ணாவியாய் இருந்தவராம். சதா காத்தான் கூத்தும், அரிச்சந்திராவும் போட்டுப்போட்டு நாடகங்களையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருந்த அண்ணாவியாருக்கு இப்போ எஞ்சியதெல்லாம் ஊனமாகிய அவர் மகளும், அவருடைய உடுக்குந்தான்.

தனது வேலை முடிந்ததுமே சாக்குக் கட்டிலுக்கு வந்துவிடும் அவர் சிறிதுநேரம் கண்களை மூடிக்கொண்டே இருந்துவிட்டு பின் உடுக்கை எடுத்து அடித்துக் கொண்டே பாட ஆரம்பிப்பார். பற்கள் விழுந்துவிட்டதனால் பாடலின் சொற்கள் யாவருக்கும் எளிதில் புரியாது. அந்தப் பாடல்கள் தெரிந்த பழையவர்களுக்குத்தான் அவற்றை இரசிக்கமுடியும்.

சேனா இப்போது சாராயம் கொண்டுவரச் சென்ற சில்வா மாமாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, சின்னையர் தனது மடியில் வைத்து ஆசையுடன் வருடிய உடுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்.

தாளலயம் தப்பாது மெல்ல எழுந்த உடுக்கின ஓசை உயர்ந்தும், தாழ்ந்தும், பம்மியும் ஒலிக்கையில், அந்த இசையில் ஒன்றிப்போனான் சேனா. அவனுக்கு அந்த உடுக்கின் ஓசையில், சின்னையர் தனது இளமைக்காலத்தை நினைத்து மகிழ்வதை, மீட்பதை உணர்ந்தான். பின்பு, கால் வழங்காத தன் பெண்ணின் வெறுமையான வாழ்க்கையை நிநை;து அழுவதை உணர்ந்தான். சின்னையரின் உடுக்கு ஓசை அவனுக்குப் பல சங்கதிகளை சொல்வதுபோன்ற மயக்கத்தில் இருந்தான் சேனாதி.

அந்த மனமயக்கத்தில் நந்தாவின் இனிய மழலையும், இளந்தேகத்தின் நறுமணமும், இனிமையாகச் சுவைத்த அவளுடைய சிவந்த இதழ்களும் மறுபடியும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. கூடவே ஆசிரியர் கே.பியும் காந்தியும் பேசிக்கொண்ட விஷயங்களும் நெஞ்சில் வந்த நின்றன. இந்த சங்கதிகள் யாவுமே, உடுக்கோசையின் பின்னணியில் வார்த்தையில் சொல்லி விளக்கமுடியாத எல்லையற்ற சோகத்தில் தன்னை ஆழ்த்துவதை சேனாதி உணர்ந்தான்.

அப்போது படலையைத் திறந்து தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் மீன்வியாபாரி சில்வா. இந்தப் பகுதியில் சற்று வயதான எல்லா சிங்களவரையுமே மாமா என்றுதான் அழைப்பார்கள். கிராமத்துக்கு இப்படி ஒரு சிங்களவர் இருப்பதே மிகவும் அபூர்வம். இப்போது, சில்வா மாமாவை ஏதோ முதன்முதலில் பார்ப்பதுபோன்று சேனாதி ஏறிட்டுப் பார்த்தான். நந்தாவின் உறவு இப்போ தமிழ்சிங்கள உறவுகளில் அவனை அக்கறை காட்டத் தூண்டியது. இதுவரை அவன் அரசியலையோ அல்லது உலோகாயுதமான விஷயங்களையோ சிரத்தையுடன் சிந்தித்ததே கிடையாது. வீட்டுக்கு வந்தால் சினிமாப் பாட்டு, பாடசாலைக்குச் சென்றால் படிப்பு, ஆண்டாங்குளம் போனால் மாடுகண்டு, வேட்டை எனக் காடும், மாடும், பாட்டுமே முக்கியமாக இருந்த அந்த இளங்குமரப் பருவத்துச் சேனாதிக்கு, உணர்வுகளை அனுபவிக்க முடிந்ததேயன்றி, அவற்றின் காரண காரியங்களைப் பகுத்தறியும் பக்குவம் இருக்கவில்லை.

இந்தச் சில்வா மாமாவும் ஒரு சிங்களவர்தானே! இவருக்குத் தனது ஊர், குடும்பம், மனைவி, பிள்ளைகுட்டி என எதுவிதத் தொடர்புகளோ உறவுகளோ இல்லையா? எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் சில்வா மாமா சின்னையர் வீட்டில்தானே இருக்கின்றார். யாருடனும் அதிகம் பேசாது ஒரு சன்னியாசிபோன்று தானும் தன்பாடுமாய் இருக்கும் இந்தச் சில்வா மாமாவின் வாழ்க்கையின் இரகசியம் என்ன? சின்னையரின் சப்பாணி மகளுக்கும் சில்வா மாமாவுக்கும் எதாவது உறவு இருக்குமா?.. அது சாத்தியமானதா?.. என, பல வடிவம் புரியாத வினாக்கள் அவனுடைய மனதை அலைக்கழிக்க, சேனாதி சாராயத்தை வாங்கிக்கொண்டு போனான்.

சின்னையரின் உடுக்கின் ஒலி வெகுநேரமாய் அவன் நெஞ்சுக்குள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அது சின்னையரின் மகளுக்காகவும், சில்வா மாமாவுக்காகவும், தனக்காகவும், நந்தாவதிக்காகவும் அழுது அரற்றுவது போன்று அவனுக்குத் தோன்றியது. வெதும்பிய இதயத்துடன் அவன் நித்திரையாயப் போனான்.

சின்னஞ்சிறு காட்டுக் கிராமமாகிய ஆண்டாங்குளத்தில் சிட்டுக்குருவி போன்று வாழ்ந்த நந்தாவதி, சேனாவைவிட வயதிற் குறைந்தவளாய் இருந்ததாலும், இன்னமும் குழந்தைத்தன்மை அவளிடம் குடியிருந்ததனாலும், தன் இயல்புக்கேற்ப எப்போதும் சந்தோஷமாகவே இருந்தாள். சேனாவின் அண்மைக்கும், அணைப்புக்கும் இயல்பாகவே ஏங்கிய அவளுடைய இதயத்தில் துன்பத்தின் சுவடே விழவில்லை.

அவள் தன் தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு ஓடோடிப்போய் செல்லம்மா ஆச்சியுடன் இருந்துகொள்வாள். அவள் சொல்கின்ற பழையகாலக் கதைகளைக் கேட்டுச் சிரிப்பாள். சிலசமயம் ஆச்சியின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டே, சின்ன வயதில் சேனா செய்த குறும்புகளை ஆச்சியிடம் துருவித் துருவிக் கேட்டு மகிழ்வாள்.

ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டுக்கு வந்து, மான்குட்டி மணியைக் கட்டிக்கொண்டு சேனாவுக்காக் காத்திருப்பாள். அவன் வராததுகண்டு, ஆச்சி கூறியதுபோல் அவன் கச்சான் பிலவில் வேலை இருப்பதனால்தான் வரவில்லை, அடுத்த சனி நிச்சயம் வருவான் என ஆறுதல்பட்டுக் கொள்வாள். சேனாவந்துவிடுவான், விரைவில் வந்துவிடுவான் எனக் குதூகலிக்கும் உள்ளத்துடன், கலகலவெனக் கிளுகிளுக்கும் காட்டு நதிபோல அவள் செல்லம்மா ஆச்சிக்கும், சிங்கராயருக்கும் வேண்டியவற்றைச் செய்வதிலே பெரும் இன்பத்தை அனுபவித்தாள்.

வளரும் 

00000000000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 17

அடுத்த சனிக்கிழமை மாலையில் தாய் கண்ணம்மாவே சேனாவை ஆண்டாங்குளம் அனுப்பியிருந்தாள். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக பஸ்ஸில் இருந்து இறங்கித் துடிக்கம் மனதுடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தவனுடைய விழிகள் தற்செயலாகத் தரையைப் பார்க்கவே, அவன் அதிர்ந்து போனான். பரவைக் கடலோர ஈரத்தில் பதிந்திருந்தத அந்த அழகான சிறிய பாதச்சுவடுகள்? 

ஆம்! அவை நிச்சயமாக நந்தாவினுடையவைதான்! முன்னே குணசேகரா நடக்கு அவனைத் தொடர்ந்து அவள் நடந்துவந்த தடத்தைக் கண்டு, எங்கு போயிருக்கிறாள் நந்தா? இன்று காலையில்தான் அவர்கள் போயிருக்கின்றனர் என்பதை அடிச்சுவடுகள் புலப்படுத்தின. அவர்கள் திரும்பிவந்த அடிகள் தெரிகின்றனவா என அவன் தரையையே கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 'என்ன தம்பி தேடுறீங்க?.. ஏதாவது தொலைச்சிட்டீகளா?" என அந்தக் கடற்கரையோர மேட்டில் குடிசைபோட்டு வாழும் சாகுல்கமீது, கையில் இறால் வலையுடன் வந்துகொண்டிருந்தான். சேனாதி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, 'ஒண்டுமில்லை காக்கா! ஆண்டாங்குளத்தாலை ஆரோ கனபேர் காலமை போய்க் கிடக்கு.. அப்புவும் எங்கையோ போட்டாரோ எண்டு அடிப் பாக்கிறன்!" என்றான். 'அவங்க காலையிலை போகல்லை தம்பி!.. மத்தியான பஸ்சிலைதான் போறாக.. ஒங்க அப்பு போகலை!.. குணசேகராவும், மவளும் மக்கைய பொடியளுந்தான் போறானுக... அடுத்த கிழமை எலச்சன் வரூதில்லை!... அதுக்கு வோட்டுப் போடத்தான் தங்க ஊருக்குப் போறாகபோல!" எனச் சாகுல்கமீது விளங்க்கப் படுத்தியபோது, வானமே இடிந்த தலையில் விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனான் சேனாதி. கமீதுவிடம் சொல்லிக்கொண்டு அவன் கனக்கும் இதயத்துடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தான். வழமைபோல் அவனால் இன்று காலை பஸ்சில் வரமுடியவில்லை. அவனுடைய தகப்பனார் முள்ளியவளையில் விதைக் கச்சான் கட்டுவதற்கு அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். காலையிலேயே வந்திருந்தால் நந்தாவை அவள் ஊருக்குப் பொவதற்குமுன் கண்டிருக்கலாம்... கண்டிக்குப் போய்விட்டவள் ஒருவேளை இனிமேல் ஆண்டாங்குளத்திற்கே வராமல் இருந்துவிட்டால்!... என நினைக்கவே சேனாவின் இதயம் கலங்கியது.

அவனுடைய உள்ளத்தைத் துன்பம் கௌவிக்கொண்டது போன்றே, ஆண்டாங்குளத்தை அவன் அடையும்போது இருள் கவிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வீட்டிலும் எவரையும் காணாதது மேலும் திகைப்பை ஊட்டியது. பன்பையைத் திண்ணையில் வைத்துவிட்டு, தட்டிக் கண்டாயத்தடி மணலைக் கவனித்தான். சிங்கராயரும் செல்லம்மா ஆச்சியும் விண்ணாங்கம்வெளிப் பக்கம் போயிருப்பதை அவர்களுடைய காலடிகள் தெரிவித்தன.

நந்தா போய்விட்டாள், அவள் இனி இங்கு வரவே மாட்டாள் என்ற எண்ணம் வளரவளர, அவனுடைய கால்கள் அவனையுமறியாமல் நந்தாவின் குடிசைப்பக்கமாக அவனை இட்டுச்சென்றன. குடிசையின் படலையில் ஒரு ஆமைப்பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. கால் போனபோக்கில் நடந்தவன், கிணற்றடியைக் கடந்து செல்கையில், அன்று நந்தா குளித்துவிட்டு நீர்முத்துக்கள் உருளும் நிலவு முகத்துடன் சந்தணமாய் மணத்ததும், இவன் நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்னபோது கன்னங்குழியச் சிரித்ததும் நினைவில் வந்து தீய்த்தன.

காட்டு எல்லையின் மேலாகத் தெரிந்த கீழ்வானை நோக்கினான் சேனாதி. ஆம், இன்றும் அங்கு பூரணநிலவு ஒளிரக்கண்டு அவன் இதயம் அழுதது. அவன் மெல்ல நடந்து ஐயன்கோவில் வெட்டைக்குச் சென்று, அங்கே கிடந்த பாறையொன்றில் அமர்ந்தபடி, வானில் சிரித்துக்கொண்டே எழுந்துவரும் நந்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'நந்தா! நீ என் நிலா! நிலா!" என்ற அவனுடைய பாட்டு இதயத்தில் சோகம் சொட்டச்சொட்ட ஒலித்துக் கொண்டேயிருந்தது.

குணசேகரா தேர்தலில் வோட்டுப் போடுவதற்கு செல்லும் தனது சகாக்களுக்குச் சம்பளப் பணத்தை எடுத்துக் கொடுப்பதற்காகவே அன்று முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தான். நந்தாவதிக்கு அன்று காலையும் சேனா ஆண்டாங்குளம் வராதது பெரும் ஏமாற்றமாகப் போயிற்று. தந்தையுடன் தானும் முல்லைத்தீவுக்குச் சென்றால் ஒருசமயம் அவனைத் தண்ணீரூற்றுத் தெருவிலாவது பார்க்கலாம் என்ற ஆசையில், தானும் முல்லைத்தீவுக்கு வருகிறேன், சில துணிமணிகள் வாங்கவேண்டி உள்ளது எனத் தந்தையிடம் கேட்டபோது, அவனும் சம்மதித்து நந்தாவைத் தன்னுடன் கூடவே முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

குணசேகரா தானும் கண்டிக்குச் சென்று தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. அவனுடைய அருமை மனைவியின் இழப்புக்குப் பின்னர் அவனுக்குக் கண்டியே பிடிக்காமல் போய்விட்டது. அவர்கள் சென்ற பஸ் தண்ணீரூற்றைக் கடந்து சென்றபோது ஆவலுடன் வெளியே பார்த்திருந்த நந்தாவதியின் கண்களில் சேனாதி தென்படாதது அவளுக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது. எனவே அவள் சுரத்தில்லாமல், முல்லைத்தீவில் தனது அலுவல்களைக் கவனித்து, சம்பளப் பணத்தை எடுத்துப் பகிர்ந்து தனது சகாக்களுக்குக் கொடுத்து வழியனுப்பிய குணசேகராவுடன் இருந்தாள்.

சேவையரைச் சந்திக்கவும், இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கவும் வெகுநேரம் எடுத்தமையால், அவர்கள் மாலை பஸ்சைத் தவறவிட்டிருந்தனர். எனவே குணசேகரா ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, அளம்பில் கிராமத்தினூடாகக் குமுளமுனையை நந்தாவதியுடன் வந்தடைந்தபோது, பொழுது கருகிக் கொண்டிருந்தது. ஆண்டாங்குளத்துக்கு வந்தபோது இருட்டிவிட்டது. விண்ணாங்கம் வெளியில் விறகு சேர்க்கப் போயிருந்த சிங்கராயரும் மனைவியும் அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழமைபோலத் தனது சம்பள நாளன்று ஒரு சாராயப் போத்தலை வாங்கிக் கொண்டு வந்திருந்த குணசேகரா, அதைச் சிங்கராயருடன் சேர்ந்து அனுபவிக்கும் அவசரத்தில் தனது குடிசைக்குச் செல்லாமலே, சிங்காராயர் வீட்டுக்குச் சென்றுவிட்டான். நந்தாவதி கொண்டுவந்த பொருட்களைக் குடிசையில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வருவதாக ஆச்சியிடம் சொல்லிச் சென்றாள்.

அவள் வன்னிச்சியாவயல் வளவுக் கிணற்றடிக்கு வந்தபோது, முழுநிலவு மேலே எழுந்து கொண்டிருந்தது. குளிப்பதற்காக துண்டை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவள் அந்த நிலவையும், அன்று நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்ன சேனாவையும் நினைந்து மனம் கசிந்தாள். மனம் சோர்ந்தவளாய், குளிக்கவும் மனதில்லாமல் அங்கு கிடந்த துணிதுவைக்கும் கல்மேல் அவள் துவண்டு போய் இருந்தபோதுதான் ஐயன் கோவிலடிப் பக்கமாகக் காற்றில் மிதந்துவந்த அந்தப் பாடல் அவளுக்குக் கேட்டது. சரேலென எழுந்து காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தபோது, 'நந்தா, நீ என் நிலா நிலா!" எனச் சேனாவின் குரல் கேட்டதுமே அவள் அந்தத் திக்கில் பறந்தாள்.

விரைந்து ஓடிச்சென்று அந்த இடத்தை அடைந்தபோது, அடக்கமாக ஆனால் அழுத்தமாக உள்ளத்தை உருக்கும் வகையில், நந்தா நீ என் நிலா, நிலா! என்ற சொற்கள் மனதை ஈர்க்கவே, அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு பாறையில் அமர்ந்து, வானத்து நிலாவைப் பார்த்தவாறே தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த சேனாவைக் குழப்ப மனதின்றி, தான் சென்ற பாதையிலே அப்படியே நின்றுவிட்டாள் நந்தாவதி.

சேனாதியின் கம்பீரமான இனிமைசெறிந்த குரல் இந்த உலகத்தின் சோகத்தையெல்லாம் சுமந்துகொண்டு, பாலாய்ப் பொழியும் அந்த இரவின் தனிமையில் இசையாய்ப் பிரவகித்தபோது, நந்தாவதி தனது ஊனும் உயிரும் உருகும் ஒரு புதிய உணர்வில் அப்படியே நெகிழ்ந்து போனாள். அவளுக்கு அந்தப் பாடலின் முழு அர்த்தமும் புரியவில்லை. ஆனால் அடிக்கடி, பாசமும் சோகமும் தோய இசைத்த, நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரிகள் மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தன. சேனா தன்மேல் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தினை அந்நேரம் இதயம் பூரிக்கப் புரிந்துகொண்ட நந்தாவதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள். நிலவில் பளபளத்த அவளுடைய அகன்ற கருவிழிகளில் கண்ணீர் குளமாகத் தேங்கிப் பின் செழுமையான கன்னக்கதுப்புக்களில் உருண்டோடி நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது. மிகவும் உன்னதமானதொரு உணர்வை அனுபவிக்கும் இன்பவேதனையைத் தாங்க முடியாதவளாய் அவள் உடல் நடுங்கியது. இதயத்தின் ஆழத்திலிருந்து தனக்காகவும், சேனாவுக்காகவும் வெடித்துக் கிளம்பிய விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் அழுதபோது, அந்த அழுகையின் ஒலிகேட்டுப் பாட்டை நிறுத்திச் சட்டெனத் திரும்பிய சேனாதி திகைத்துப் போனான். அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

பூரணநிலவின் ஒளியிலே மார்புக்குக் குறுக்கே வெறும் துண்டு மட்டும் அணிந்து பளிங்குச் சிலைபோன்று நின்றிருந்த நந்தா அழுது கொண்டிருக்காவிட்டால் அது தன் மனப் பிரமையே என்றுதான் அவன் எண்ணியிருப்பான்.

அது நந்நதாவேதான் எனக் கணத்தினுள் கணித்தவன் பாறையிலிருந்து குதித்து ஓடிவந்து அவளை இறுகத் தழுவிக் கொண்டான். அடக்கமுடியாத ஆதங்கத்துடன் அவனை ஆரத்தழுவிய நந்தாவதியின் கண்ணீரில் நனைந்த கண்களையும் கன்னங்களையும் தன் இதழ்களால் அழுத்திய சேனா, 'நந்தா! ஏன் நந்தா என்னை விட்டிட்டுப் போனனீ?" என மெல்ல முணுமுணுத்து பின் விசும்பி வெடித்துக் கதறியபோது, அவன் முகத்தை அப்படியே தன் மார்பில் சேர்த்து அழுத்திய நந்தாவதியின் இதயத்தில் தாய்மையுணர்வு சுரந்தது. அப்படியே அவனை இழுத்துத் தரையில் அமர்ந்துகொண்டே தன் நெஞ்சில் முகம்புதைத்து அழுது வெடித்தவனின் முதுகை ஆதரவாக வருடிய நந்தா, 'நா ஒங்களை விட்டுப் போகலையே சேனா! நா ஒங்களைவுட்டு போகவே மாட்டன்!" என அவனுடைய முகத்தை நமிர்த்தி, சின்னக் குழந்தையைத் தேற்றுவதுபோல் அவனுடைய ஈரமான விழிகளைத் தன் செவ்விதழ்களால் நந்தா அழுந்தத் துடைத்தபோது அமைதியடைந்த சேனாதி, அவளுடைய இளம் மார்பில் மறுபடியும் முகம் பதித்துக்கொண்டான். அவனை அப்படியே நெஞ்சார அணைத்துக்கொண்ட நந்தாவதி அந்தக் கணத்திலேயே, தாய்மையின் இயல்பெல்லாம் இயற்கையாகவே ஊற்றெடுத்து அவளுள் சுரந்து பெருக, அவனைக் குழந்தையாக்கித் தான் தாயாகிப் போனாள். இதுவரை காலமும் குழந்தையாக இருந்த நந்தா இப்போ சட்டென வயசுக்கு வந்துவிட்ட முதிர்ச்சியுடன், 'வாங்க சேனா! வூட்டுக்குப் போகலாம்! அவங்க தேடுவாங்க!" என அமைதியாக எழுந்து அழைத்தாள். அவளுடன் சேர்ந்து கிணற்றடியை நோக்கி நடந்தான் சேனாதி.

அவள் குளிக்கும்போது, தான் அவனைப் பார்க்கும் ஆசையில் தந்தையுடன் சென்றதை நந்தா சொல்ல, தான் எப்படி மம்மது காக்கா நந்தாவதி ஊருக்குப் போய்விட்டதாகச் சொன்னதைக் கேட்டுத் துடித்துப்போனான் என்பதைச் சேனா சொல்லிக் கொண்டான்.

நந்தா குளித்து ஆடை மாற்றியதும், தண்ணீர்க்குடத்தை இடுப்பில் ஏற்றியபடி, 'நா இப்பிடியே வூட்டுக்குப் போயிட்ட வாறன் சேனா!" என விடைபெற்றுக் கொண்டாள்.

கிணற்றடியிலிருந்து ஒரே பாதையாகப் புறப்பட்ட ஒற்றையடிப் பாதை கிளைவிட்டு இருவேறு திசைகளில் பிரியும் இடத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து நடந்தார்கள். இருவருடைய இளநெஞ்சங்களும்; ஒரு நிறைவான, புனிதமான அமைதியை அடைந்தவையாய் சிலிர்த்துக்கொண்டன.

அடுத்தநாள் முழுவதுமே நந்தா சேனாவைவிட்டுப் பிரியாமல் ஒன்றாகவே இருந்தாள். காலையில் சிங்கராயரும் குணசேகராவும் காட்டுக்குப் போய்விட்டிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று. மாலையில் மான்குட்டி சகிதம் சென்று பாலையடி வெண்மணல் மேட்டில் நின்று, சேனாவின் உருவம் மறையும்வரை பார்த்திருந்து கையசைத்து விடைகொடுத்துக் கண்ணில் நீர்முட்ட வீட்டுக்குத் திரும்பினாள் நந்தாவதி.

வளரும்

00000000000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 18

தேர்தல் முடிந்த அன்று இரவு வானொலியில் தேர்தல் முடிவுகளை இரவுமுழுவதும் விடியவிடிய ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். சேனாதிராஜனுக்குத் தேர்தல் முடிவுகள் முக்கியமாகப் படவில்லை. வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்ட இனிய சினிமாப் பாடல்கள்தான் அவனுடைய மனதை ஈர்த்தன. நிலவைப் பற்றிய பாடல்கள்தான் எத்தனை! அவை அத்தனையும் தன் நந்தாவுக்காகவே பாடப்பட்ட பக்திப் பாடல்கள் என்பதுபோல் சேனாதி இதயம் கனிந்து பரவசப்பட்டுக் கொண்டான்.

எப்போ இந்த வாரம் முடிந்து அடுத்த சனிஞாயிறு வருமென நந்தாவின் நினைவிலேயே காலத்தைக் கழித்த சேனாதிகூடக் கலங்கும் வகையில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்த நாட்களில் செய்திகளும், வாந்திகளும் அடிபடத் தொடங்கின. சிங்களக் காடையர்களினால் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட செய்திகள் உண்மையென உர்ஜிதமாயின.

நாலைந்து நாட்களுக்குள் முல்லைத்தீவுக் கடற்கரையோரங்களில் வாடி அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்கள் தமது வலை வள்ளங்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சாரி சாரியாகச் செல்வதையும் சேனாதி அன்று மாலையில் கண்டான். நந்தாவை நினைக்கையில் அவனுக்கு நெஞ்சு திக்கென்றது. ஒருவேளை குணசேகரா இந்தக் கலவர நிலைக்குப் பயந்து, நந்தாவுடன் முல்லைத்தீவுக்குச் சென்று இந்த லாரி ஒன்றில் ஏறிப் போய்விட்டிருந்தால் என்று நினைக்கவே அவனுக்கு நெஞ்சு பதறியது. கூடவே, ஆண்டாங்குளத்தில் அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்க யார்தான் உண்டு, குணசேகரா பயந்து செல்லவேண்டிய அவசியமே இல்லை, சிங்கராயரும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என அமைதி அடைந்தவனாய் அவன் தங்கள் கச்சான் பிலவை நோக்கிச் செல்கையில், வழியில் மீன்வியாபாரி சில்வா மாமா கையில் ஒரு சிறிய பெட்டியுடன் வருவதைக் கண்டான். அருகே வந்த அவரை வழிமறித்து, 'எங்கை மாமா போறியள்?" எனக் கேட்டான் சேனாதி.

'நாங் ஊருக்குப் போறது தம்பி!.. எல்லா இடத்திலும் கச்சால்தானே!" என்ற சில்வா மாமாவின் முகம் இருண்டு கிடந்தது. 'ஏன் சில்வா மாமா! இஞ்சை உங்களுக்கு என்ன பயம்?.. நீங்கள் கனகாலமாய் இஞ்சைதானே இருக்கிறியள்.. எல்லாருக்கும் உங்களைத் தெரியுந்தானே! பிறகேன் பயந்து போறியள்?" என ஆவலுடன் கேட்டான் சேனாதி. சில்வாவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'ஓவ்! இஞ்சை எல்லாரும் மிச்சங் மிச்சங் நல்ல மனுசன்தானே தம்பி!.. ஆனா நாங் இருக்கிற வூடு சாரயங் விக்கிற வூடுதானே! இந்தச் சாராயத்தைக் குடிச்சிட்டுத்தானே இந்தக் காடையங்க கூடாத வேலை செய்யிறது! அங்க நம்ம ஜாதிக் காடையங்க இந்தமாதிரிக் கூடாத வேலை செய்ய இஞ்சை இருக்கிற நல்லவனுக்கும் கோபங் வர்றதுதானே!.. அதிங்தான் நா இப்ப போறது!" என்றான் சில்வா. 'இப்ப போனால் பிறகு திரும்பி வரமாட்டியளெ?" எனச் சேனாதி வினவியபோது, சோகம் ததும்பச் சிரித்தான் சில்வா. 'நம்மடை ஊரிலை எனக்கு யாரும் இல்லை தம்பி! நா சின்னப் பொடியன் சைசிலை இந்த ஊருக்கு வந்ததுதானே!.. கச்சால் முடிய நா வாறதுதானே!" எனச் சொல்லி விடைபெற்றான் சில்வா.

சோனதியின் மனம் மழைமூட்டம் போட்ட வானமாய் இருண்டு கிடந்தது. அம்மாவுக்கு இந்தப் பிரச்சனையைச் சொல்லி, ஒருக்கால் நாளைக்குக் காலமை ஆண்டாங்குளம் போய்ப் பாத்தால் என்ன? .. ஆமிக்காறரும், பொலிசுக்காறரும் கண்டபடி ஆக்களுக்கு அடிக்கிறாங்களாம்! அவங்கள் சிலவேளை ஆண்டாங்குளத்துக்கும் போவாங்களோ? எதுக்கும் இதைச் சொல்லி அம்மாவிட்டைக் கேட்டுக்கொண்டு காலமை ஆண்டாங்குளம போகவேணும்!.. எனத் திட்டமிட்டு, அந்தத் திட்டம் தற்காலிகமான ஆறுதலில் அமைதியடைந்தவனாய் சேனாதி கச்சான் பிலவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் பொழுதுபட்டு இருண்டு விட்டிருந்தது.

வீட்டை நோக்கி நடந்து வந்தவன், சாரயம் விற்கும் அண்ணாவி சின்னையர் வீட்டருகில் வந்தபோது உடுக்கு அடிக்கும் ஒலிகேட்டு அங்கயே நின்றுவிட்டான். அந்த முன்னிரவுத் தனிமையில், எல்லையற்ற சோகத்தைப் பரவும் அந்த உடுக்கின் ஓசை அவன் மனதை எதுவோ செய்தது. அந்த வளவின் வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தான். முற்றத்தின் நடுவில் ஒரு போத்தல் லாம்பு சிந்தும் வெளிச்சத்தில் சாக்குக் கட்டிலில், கூனிய முதுகும் கவிழ்ந்த தலையுமாய் அண்ணாவி சின்னையர் உடுக்கு அடிப்பது தெரிந்தது. கூடவே முற்றத்தின் ஓரமாக மீன்விற்கும் பக்கீஸ் பெட்டியுடன் நிறுத்தப்பட்டிருந்த சில்வா மாமாவின் சைக்கிளுக்கு அருகில், வெறும் தரையில் அமர்ந்திருந்த சின்னையரின் சப்பாணி மகள், வெறித்த பார்வையுடன் அந்தச் சைக்கிளின் பின் சக்கரத்தை மெதுவாக ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

இந்தக் காட்சி சேனாதியின் மனதைக் கலக்கியது. கூடவே அன்று கே.பி ஆசிரியர் சிங்கள தமிழ்க் கலியாணங்கள் நடந்தால் பிள்ளைகள்தான் பிறக்கும், இன ஒற்றுமை பிறக்காது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. .. இஞ்சை பிள்ளiகூடப் பிறக்கவில்லையே!.. என நினைத்தவன், மெல்லச் சுற்றிக் கொண்டிருக்கும் சைக்கிள் சக்கரத்தைக் கவனித்தான். கே.பி பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டு வட்டம் பூக்களைக் குறித்து எதுவோ சொன்னதும், இப்போது புரியாமல் மனதைக் குழப்பியது.

வீடுசென்றதும் தாய் கண்ணம்மாவிடம் நிலமையை விளக்கி, ஒருவாறு ஆண்டாங்குளம் செல்வதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு, சாப்பிட்டதாகப் பேர்பண்ணிவிட்டுப் படுக்கைக்குச் சென்ற சேனாதி வெகுநேரம் வரையிலும் தூங்காமல் விழித்துக்கொண்டே கிடந்தான்.

தண்ணீரூற்றிலிருந்து மீன் வியாபரி சில்வா தனது ஊருக்குப் புறப்பட்ட அதே மாலைப் பொழுதில், சிங்கராயருடைய வளவில், முற்றத்தில் அமர்ந்திருந்த செல்லம்மா ஆச்சிக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தாவதி.

சிங்கராயர் பெரியதொரு தேங்காய்ச சிரட்டையை அகப்பையாகச் செதுக்கி, அதற்கு மிக நீளமானதொரு பிடியை விண்ணாங்கம் தடியில் செய்துகொண்டிருந்தார்.

சிங்கராயரையும் தாத்தா என்றே அழைக்கும் நந்தாவதி, அதைப் பார்த்து வியந்தவளாய், 'ஏன் தாத்தா.. அகப்பகை;கு இம்புட்டு நீளமான புடி?" எனக் கண்களை அகல விரித்தபோது, 'புள்ளை!.. அந்தக் கலட்டியனைப் புடிச்சு ஆடாமல் அசையாமல் கட்டி வைச்சிட்டு, நாலைஞ்சு நாள் இரை தண்ணியில்லாமல் பட்டினிபோட்டு வாடவிடுவன்!.. அதுக்குப் பிறகு அதுக்குப் பக்கத்திலை போய் இரவு பகலாய்ப் புகைபோட்டு, இந்த நீட்டு அகப்பையாலை அதின்ரை முகத்தைத் தடவித்தடவி அதின்ரை குழுக்குணத்தை மாத்தவேணும்!.. அதுக்குத்தன் இது!".. எனச் சிங்கராயர் விளங்கப் படுத்தும்போதே அவருடைய வேட்டை நாய்கள் ஐயன் கோவிலடிப் பக்கமாகப் பார்த்துக் குரைத்தன. அவற்றின் வித்தியாசமான குரைப்பை அவதானித்த சிங்கராயர் எழுந்துநின்று கண்களை இடுக்கிக்கொண்டு அந்தத் திசையில் பார்த்தார். எதையும் காணவில்லை. ஆனால் அவருடைய கூர்மையான செவிகளுக்கு மாட்டு வண்டிகள் வரும் ஓசை மெலிதாகக் கேட்டது.

'மனுசி! வட்டுவன் தெருவிலை இரண்டு மூண்டு வண்டில் வரூதுபோலை கிடக்குது!.. நான் போய்ப் பாத்துக்கொண்டு எருமையளையும் சாய்ச்சுக்கொண்டு வாறன்!" எனச் சொல்லிவிட்டு, நாய்களையும் அழைத்துக்கொண்டு ஊரை வளைத்துச் செல்லும் அந்த வண்டிப் பாதையை நோக்கிச் சென்றார் சிங்கராயர்.

செல்லம்மா ஆச்சி கண்களை மூடியவாறே நந்தாவதி பேன் பார்ப்பதைச் சுகித்துக்கொண்டிருந்தாள். நந்தாவதியின் உள்ளம் சேனாவை நினைத்து நனைந்து கொண்டிருந்தது. அவளுடைய செவ்விதழ்களில், நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரி மிக இலேசாக ஒலித்துக் கொண்டிருந்தது.

சிங்கராயர் வன்னிச்சியா வயல் பனைகளினூடாக நடந்துசென்று வண்டிப்பாதையை அடைந்தபோது, பாதை வளைவில் நான்கைந்து மாட்டுவண்டிகள் கொடிவிட்டு வரிசையாக வருவது தெரிந்தது. யாராக இருக்கும் என அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே வண்டிகள் அவரை நெருங்கிக் கொண்டிருந்தன. அந்த வண்டிகளில், நெல் மூடைகளுக்கு மேல் பெண்களும், குழந்தைகளும் கைகளில் பொருட்களுடன் அமர்ந்திருக்கக் கண்டார். கூடவே வண்டிகளோடு சில ஆண்கள் நடந்து வருவதையும் கண்டு வியப்படைந்தவராய் நின்றார் சிங்கராயர்.

அவர்களின் முகங்கள் அடையாளம் தெரியுமளவிற்கு வந்ததுமே, .. அட கொக்குத்தொடுவாய்க் கந்தையன்!.. எனச் சிங்கராயர் தனக்குள் சொல்கையில், முதலில் வந்த வண்டி அவரருகில் நின்றது.

'என்ன கந்தையா! நெல்லு 5ட்டை முடிச்சொடை பெரிய பயணமாய்க் கிடக்கு!" எனச் சிங்கராயர் விசாரித்தபோது, 'உங்களுக்கு விசயம் தெரியாதுபோலை! எலெச்சன் முடிஞ்ச கையோடை நாடு முழுக்கச் சிங்களக் கலாதி தொடங்கீட்டுது!.. ஆரோ அறுவாங்கள் எங்கடை பக்கத்திலை சிங்களவங்கள் விட்டிட்டுப்போன மீன் வாடியளுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள்!.. ஆமி பொலிசு முழுக்கச் சிங்களவங்கள்தானே!.. அவங்கள் இணடைக்கு இராவைக்கு வந்து எங்கடை வீடு வாசல் எல்லாத்துக்கும் நெருப்பு வைக்கப்போறாங்கள் எண்டு கதையாய்க் கிடக்கு!.. இதுக்கிடையிலை பதவியாச் சிங்களவரும் வந்து வெட்டுவாங்கள் எண்டு சனம் பயப்பிடுது!.. அதுதான் பொண்புரசுகளையும், புள்ளையளையும், விதை நெல்லையும் ஏத்திக்கொண்டு வாறம்!.. குமுளமுனை பொன்னாற்றை ராசு வீட்டிலைதான் சனமெல்லாம் போய் நிக்குது! 

இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் சினத்தினால் இறுகியது. 'டே கந்தையா! அதுக்கு இப்பிடிப் பயந்து ஊரை விட்டிட்டே ஓடினால் வாறவங்களுக்கு அது வசதியாய் அல்லோ போகிடும்!.. உயிர்போனாலும் உங்கடை இடத்தை விட்டிட்டு ஒரு முழமெண்டாலும் அரக்கக் கூடாது! உங்களுக்கு வெக்கமில்லையோ?".. எனக் கர்ஜித்தார்.

கந்தையரின் பின் நின்ற வாலிபர்களில் ஒருவன் சிங்கராயரைப் பார்த்து, 'நாங்கள் எங்கடை உயிருக்குப் பயந்து ஓடேல்ல அப்பு!.. பொண்டு புள்ளையளைப் பாதுகாப்பாய் ஒரு இடத்திலை விட்டிட்டு, உடனை திரும்பி ஊருக்குப் போகத்தான் போறம்!".. எனச் சற்றுச் சூடாகவே பதிலளித்தான். இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் மலர்ந்தது. 'அச்சா! அதுதான் ஆம்பிளக்கு அழகு!.. பயந்தால் ஒண்டும் சரிவராது! நீங்கள் போங்கோ! பொழுதுபடப் போகுது!" என அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய சிங்கராயர், திருக்கோணம் வயலில் நின்ற மாடுகளையும் சாய்த்துக்கொண்டு வீடு திரும்பினார். மாலையில் குமுளமுனைக்கு சாமான்கள் வாங்கச்சென்ற குணசேகராவை இன்னமும் காணவில்லையே என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது.

அவர் மாடுகளை அடக்கி, ஒல்லைகளுக்குள் எருமைக் கன்றுகளை அடைத்து, பட்டி Nவைலையை முடித்துக்கொண்டு திரும்பியபோது, முற்றத்தில் கவலையும், கலவரமும் மிக்க முகத்துடன் குணசேகரா உட்கார்ந்திருந்தான்.

'என்ன குணசேகரா, குமுளமுனையிலை என்ன புதினம்?" என்று சிங்கராயர் வினவியபோது, நாட்டில் நடக்கும் சம்பவங்களையிட்டுப் பயந்தவனாய்ப் பேசினான் குணசேகரா. 'நம்ம சிங்கள ஆக்கள் எல்லாங் போனதுதானே ஐயா!.. இனி முல்லைத்தீவுக்கு நாம போறது கஸ்டந்தானே!.. பஸ் ஓட்டமும் இல்தை;தானே!.. நம்ம நந்தாவதியோடை எப்பிடிப் போறது ஐயா!.. நாங் தனிய எண்டால் செத்தாலும் பறுவாயில்லைத்தானே!.. அது பாவங் சின்னப் புள்ளைதானே!" எனக் கலங்கினான் குணசேகரா.

ஆச்சியுடன் அடுப்படியில் சமையலுக்கு உதவி செய்துகொண்டிருந்த நந்தாவதிக்கு நெஞ்சு திக்கிட்டது.

சிங்கராயர் செருமிவிட்டுச் சொன்னார்: 'குணசேகரா! இஞ்சை பார்! நான் குழுவன் வெட்டிக் காயத்தோடை கிடக்க நீயும் உன்ரை ஆக்களுந்தான் என்னை உங்கடை தோளிலை சுமந்துகொண்டு போய் உயிர் தந்தனீங்னள்! ந்ந்தாவதி என்னை புள்ளைபோலை!.. உனக்கோ அவளுக்கோ எங்கடை ஆக்களாலை ஏதும் ஆபத்து வருமெண்டால், என்னைக் கொண்டுபோட்டு என்ரை சவத்திலை மிரிச்சுத்தான் ஆரும் உன்னடிக்கு வரவேணும்!.. ஒரு பெட்டி தோட்டா வைச்சிருக்கிறன்!.. என்ரை நாலு நாயள் காணும்.. நாப்பது பேரைச் சரிக்கட்ட!.. நீ ஒண்டுக்கும் பயப்பிடாமல் இரு!.. இஞ்சை ஆண்டாங்குளத்துக்கு ஆர் வரப்போறாங்கள்!" என உணர்ச்சி மேலிடச் சொன்னார் சிங்கராயர்.

இதைக் கேட்கையில் நந்தாவதியின் இதயம் சற்று ஆறுதலடைந்தது.

'அதிங் இல்லை ஐயா நாங் சொல்லுறது!.. நீங்க எண்டை அண்ணை மாதிரித்தானே!.. நா வாறபோது நாலைஞ்சு மாட்டு வண்டில் போனதுதானே.. அவங்க என்னைப் பாத்திட்டு.. அவங்களுக்கை கதைச்சது எனக்குக் கேட்டதுதானே!.. நாங்க சிங்களவனுக்குப் பயந்து எங்கடை ஊரை விட்டிட்டு போறம்.. இஞ்சை ஒரு சிங்களவன் இருக்கிறான்தானே! எண்டு கதைச்சது எனக்குக் கேட்டதுதானே! ஐயா.. என்னத்துக்கு வீண் கரைச்சல் உங்களுக்கு?" என்று அமைதியாகச் சொன்ன குணசேகரா, தொடர்ந்து, 'ஐயா! எனக்கு ஒரு யோசினை வந்ததுதானே!.. பழையாண்டங்குளம் பக்கம் ஒரு பத்துமைல் காட்டிலை போனால் பதவிய வருந்தானே! அது சிங்கள ஆக்கள் இருக்கிற ஊர்தானே! விடியப் போனால் மத்தியானம் போயிடலாந்தானே!" எனக் குணசேகரா கூறியபோது, நிலைமையை ஆறுதலாக எடைபோட்டார் சிங்கராயர். அவன் பயப்படுவதில் உள்ள நியாயம் அவருக்குப் புரிந்தது. குடிவெறியும் இனவெறியும் கண்ணை மறைச்சால் நல்லவன்கூடச் சிலசமயம் மிருகமாய் மாறிவிடுவான்.. அதோடை நந்தாவதி ஒரு இளம் புள்ளை! எனச் சிந்தித்த சிங்கராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய் கூறினார்:

'நீ சொல்லுறது நாயந்தான்!.. ஆனால் நான் ஆருக்கும் பயந்து உன்னைக் காப்பாத்த ஏலாதெண்டு விடேல்லை!.. ஆனால் இவள் புள்ளையை நினைக்கத்தான் எனக்கு நீ சொல்லுறது போலை செய்யிறதுதான் சரியெண்டு படுகுது!", என்றவர் தொடர்ந்து, 'சரி! நீயும் நந்தாவதியும் இப்பவே போய் உங்கiடை சாமான்களை எடுத்துக்கொண்டு இஞ்சை வந்து சாப்பிட்டிட்டுப் படுங்கோ!.. கிழக்கு வெளிக்க முன்னம் நாங்கள் வெளிக்கிட்டால்தான் மத்தியானமளவிலை பதவியாவுக்குக் கிட்டப் போகிலாம்!.. போய் சாமான் சக்கட்டை எடுத்துக்கொண்டு வாருங்கோ!" என அவர்களை அனுப்பியபோது, நந்தாவதி பயமும், துன்பமும் மிக்கவளாய் கலவரப்பட்டுப் போனாள்.

அன்றிரவு தனக்கு அருகிலேயே குணசேகiராவைப் படுக்க வைத்த சிங்கராயர் சொன்னார். 'இஞ்சை பார் குணசேகரா! நீயா நானோ லெச்சனுக்குத் துண்டுபோடப் போகேல்லை!... ஆனால் எலெச்சன் கலவரம் இந்தக் காட்டுக்கைகூட வந்திட்டுது!... எல்லாம் இந்த லெச்சன் கேக்கிறவங்கள் செய்யிற வேலை குணசேகரா!.. கிராமச்சங்க லெச்சன் வந்தால் சாதிப்புறிவு, ஊர்ப்புறிவு சொல்ல சனத்தைக் கிளப்பிவிடுவாங்கள்!.. யாழ்ப்பாணத்தான் வன்னியான் எண்டு பிரிவினை செய்வாங்கள்!.. பெரிய லெச்சனிலை சிங்களவன் தமிழன் எண்டு சொல்லிச் சனத்துக்கு விசரேத்தி துண்டுபோடப் பண்ணி வெண்டு போடுவாங்கள்!.. இந்தப் பேய்ச்சனம் வெட்டுக் குத்திலை இறங்கி அழிஞ்சுபோகுது!" என்றார். 'அது சரிங் ஐயா! நம்மடை ஆக்களுங் இந்தமாதிரித்தானே!.. ஆனா இந்த றஸ்தியாதிக்காறன்தானே இந்தக் கூடாத வேலை எல்லாங் செய்யிறது!.. எல்லாச் சிங்கள ஆக்களுங் கெட்வங்க இல்லைத்தானே ஐயா!.. மிச்சங்பேர் நல்லவங்கதானே!" எனப் பதிலளித்தான் குணசேகரா.

அடுப்படி மோடையில் நந்தா படுத்திருந்தாள். வாசலில் செல்லம்மா ஆச்சி படுத்திருந்தாள். சேனாதி ஆண்டாங்குளம் வந்தால் வழமையாகப் படுக்கும் இடத்தில்தான் இப்போது நந்தாவும் படுத்திருந்தாள். சேனாவைப் பிரிந்து செல்லப் போகின்றோமே... மீண்டும் அவனை எப்போது காண்பது?... காணத்தான் முடியுமா? என்ற ஏக்கம் அவளுடைய நெஞ்சைப் பிழிந்தது.

மலங்க மலங்க விழித்தவளுடைய கண்களில் மேலே கட்டியிருந்த கொடியில், சேனாதியின் சாறம் தொங்கியது. சட்டென எழுந்து அதை இழுத்துத் தன் முகத்தை அதிற் புதைத்தாள் நந்தாவதி. அவனுடைய வாலிப உடலின் வாடை அந்தச் சாறத்தில் மணக்கவே அதைத் தனது மார்புடன் அணைத்து, ஆறாய்க் கண்ணீர் பெருகப் படுத்துக்கொண்டாள் அவள்.

வளரும் 

000000000000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 19

கீழ்வானில் nவிடிவெள்ளி உதிக்கு முன்னரே சிங்கராயர் அவர்களுடன் புறப்பட ஆயத்தமானார். செல்லம்மா சோறுகறி சமைத்து ஒரு ஓலைப் பெட்டியில் போட்டுக் கொடுத்தாள். கண்ணீர் மல்கத் தன்னைக் கட்டிக்கொண்டு அழுத நந்தாவதியைக் கொஞ்சி, 'நீ போட்டுவா மோனை!.. உன்னை இந்த ஆண்டாங்குளம் ஐயன் எப்போதும் காப்பாத்துவான்!" எனக் கண்ணீருடன் விடைகொடுத்தாள் ஆச்சி.

சிங்கராயர் மறந்துவிடாமல் தனது பெரிய வார்க்கயிற்றை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டார். நீண்ட வில்லுக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு நாய்களுடன் முன்னே நடந்தார். குணசேகரா ஒரு கையில் துவக்கும் மறுகையில் சிறியதொரு தோல்பையுமாக பின்னே வர, நந்தாவதி தலையில் சாப்பாட்டுப் பெட்டியுடன் நடுவே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெட்டிக்கும் கீழ், தன் தலையில் சேனாவின் சாறத்தை நான்காக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அதன் அண்மை அவளுடைய வதங்கிய இதயத்துக்கு ஓர் ஆறுதலை அளித்தது. புறப்படுகின்ற சமயத்தில், தானே அவனுடைய சாறத்தை எடுத்துச் செல்வதை அவனுக்கு உணர்த்தவும், தன் நினைவாக அவனிடத்தில் இருக்கவும், தன் கரங்களில் எப்போதுமே அணிந்திருக்கும் கறுப்பு வளையல்களைக் கழற்றி, அவன் வழமையாகச் சாறத்தைப் போடுகின்ற கொடியில், ஒரு சிறு நூலினால் கட்டிவைத்துவிட்டே வந்தீரந்தாள்.

பொழுது உதிக்கும் சமயத்தில் அவர்கள் பழையாண்டங்குளத்தை அடைந்திருந்தனர். விரைந்து நடந்த சிங்கராயரைத் தொடர்ந்த நந்தாவதி களைத்துப் போனாள். ஆனால் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்து விடவேண்டும் என்ற ஆவல் குணசேகராவை உந்தித் தள்ளியது. நந்தாவோ எதிலுமே ஒரு பிடிப்பு இல்லாதவளாய் இயந்திரமாய் நடந்து கொண்டிருந்தாள்.

காலை பத்துமணி போல வழியில் குறிக்கிட்ட ஒரு நீர்மடுவில் அவர்கள் கைகால் கழுவிக்கொண்டு ஆச்சி தந்துவிட்ட கட்டுச்சோற்றை உண்டனர். சிங்கராயரும் குணசேகராவும் கையில் சமண்டலை இலைகளை வைத்திருக்க, நந்தா பெட்டிச் சோற்றைக் கறியுடன் பிசைந்து அவர்களுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டாள்.

சிங்கராயரும் குணசேகராவும் புகையிலை பிடித்து ஆறிக்கொள்கையில், சாப்பாடு கொண்டுவந்த பனையோலைப் பெட்டியைக் கழுவி, தான் உடுத்திருந்த துண்டின் முனையினால் ஈரம்போகத் துடைத்துவிட்டு, சேனாவின் சாறத்தை அதற்குள் பக்குவமாக மடித்து வைத்தாள் நந்தாவதி. அந்தப் பெட்டி செல்லம்மா ஆச்சி தனது கையாலேயே அழகுற இழைத்தது. அவளுடைய ஞாபகமாகப் பெட்டியும், சேனாவின் நினைவாகச் சாறமும் கிடைத்ததற்கு மகிழ்ந்து, அவற்றைப் பெரும் பொக்கிஷமாய் எண்ணிக்கொண்டாள் அந்தப் பேதைப்பெண்.

கதிரவன் உச்சிக்கு வந்து பின்னர் மேற்காகச் சரிந்தசமயம் அவர்கள் ஆண்டாங்குளத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தனர். சிலநிமிடங்களில் அவர்கள் ஒரு ஒற்றையடிப் பாதையைக் கண்டு அதன்வழி சென்றபோது, ஒரு வயல்வெளியை அவர்கள் கண்டனர். அங்கே தொலைவில் ஒரு உழவுமிசின் தெரிந்தது.

சிங்கராயர் திரும்பிக் குணசேகராவையும், நந்தாவதியையும் பார்த்தார். 'பதிவயா வந்திட்டுது!.. அந்த உழவு மிசினடிக்குப் போனால்.. நீங்கள் ஊருக்கை போகிடிலாம்!.. பிறகு அங்கையிருந்து கண்டிக்குப் போகிலாந்தானே!.. ம்ம்.. நேரம் போட்டுது!.... இருட்டமுதல் நான் ஆண்டாங்குளம் போகவேணும்!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தாவதி கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டாள். சிங்கராயரின் பாதங்களடியில் முழங்காலிட்டு கைகூப்பி, கண்ணீர் ஆறாகப் பெருக அவரிடம் விடைபெற்ற நந்தாவதியின் தலையில் தன் கையை வைத்த சிங்கராயர், 'அழாமல் போட்டு வா அம்மா!" எனச் சொல்லிவிட்டு, குணசேகராவிடமிருந்து துவக்குத் தோட்டாவை வாங்கிக்கொண்டார். குணசேகரா பெண்களைப்; போன்று வாய்விட்டு அழுதான்.

'சரி! வாறன்!" எனச் சொல்லிச் சட்டெனத் திரும்பிக்கொண்ட சிங்கராயர் கண்ணிமைக்கும் பொழுதுக்குள் காட்டில் மறைந்துவிட்டதைக் கண்ணீர்த் திரையிட்ட விழிகளினூடாகப் பார்த்தனர் தந்தையும், மகளும். இபபோதும் முழந்தாளிலேயே நின்றிருந்த நந்தாவதியை ஆதராவாக எழுப்பி அணைத்துக்கொண்டு மேலே நடந்தான் குணசேகரா. அவனைப் பின்தொடர்ந்த நந்தாவின் கண்களில் இப்போதும் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது. அவள் தனது நெஞ்சோடு இறுகச் சேர்த்தணைத்துக் கொண்டிருந்த சின்னப் பனையோலைப் பெட்டியை நனைத்தன.

நந்தாவதியின் பாசம் இரும்பு இதயம் படைத்த சிங்கராயரையே சற்று நெகிழச் செய்திருந்தது. நெஞ்சிலிருந்து அதைச் சட்டென அகற்றிவிட்டு, சாயும் சூரியனைப் பார்த்து ஆண்டாங்குளம் இருக்கும் திசையைத் தீர்மானித்துக் கொண்ட அவர், அந்தத் திக்கில் நேரே காட்டில் நுழைந்தார்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். முன்னே சென்ற நாய்கள் திடீரென எதையோ துரத்துவதையும், பெருமிருகம் ஒன்று காடு கலங்கப் பாய்வதையும் உணர்ந்த சிங்கராயர், மெல்லோட்டமாக முன்னோக்கி ஓடினார். ஓடும்போதே அவருடைய கூர்மையான விழிகள் தரையைக் கவனிக்கத் தவறவில்லை. சொற்ப நேரத்திற்குள்ளாகவே நாய்கள் எகிறிப் பாய்ந்த இடத்தை அடைந்துவிட்ட அவர், அங்கே தனக்கு முன்பாகத் தரையில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்டதும் குந்தியிருந்து அவற்றை மிகவும் கவனமாக அவதானித்தார்.

அப்போது மெல்ல மெல்ல அவருடைய முகம் மலர்ந்தது. ஆமாம்! அத்தனை பெரிய காற்குளம்புகளைக் கொண்ட எருமை வேறு ஏதுமில்லை, பழையாண்டாங்குளத்துக் கலட்டியனே என அவருடைய இதயம் களித்தது. அவருடைய எண்ணத்தை உர்ஜிதம் செய்வதுபோன்று அந்த எருமை பின்னங்காலொன்று ;ழுபட ஓடியிருந்தது. இன்றைக்கு எப்படியும் கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைய, அவர் உற்சாகத்துடன் அடிவழியே ஓடலானார்.

பதுங்கிப் பதுங்கி மறைவில் முன்னேறிய சிங்கராயருக்கு சற்றுத் தொலைவில் நாய்கள் குரைப்பது கேட்டது. அந்த நாய்களின் குரைத்தல் ஒலியிலேயே அங்கு நடப்பது இவருக்கு இங்கு புரிந்தது. கலட்டியன் நாய்களின் தொல்லை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு ஆழமான நீர் மடுவில் இறங்கி நிற்கின்றது. அவருடைய வேட்டை நாய்கள் இச்செய்தியை தமது குரைப்பொலி மூலம் தமது எசமானுக்குத் தெரியப்படுத்தின.

காற்றின் திசையைக் கவனத்திற் கொண்டு, தனது வாடை கலட்டியனுக்குப் போகாத வகையில், மரங்களின் மறைவில் விரைந்து சென்றார் சிங்கராயர். அங்கு நின்ற ஒரு பெரிய காட்டாமணக்கு மரத்தின்பின் மறைந்தவாறு பார்த்தபோது, கலட்டியன் ஒரு பெரிய மடுவில் நின்று நாய்களை முறைப்பதையும், மடுவைச் சுற்றிவந்த நாய்கள் ஆக்ரோமாகக் குரைப்பதையும் கண்டு ஆனந்தத்தில் மிதந்தார் சிங்கராயர்.

தனது ஆவல் நிறைவேறும் நாள் வந்துவிட்டதென மகிழ்ந்த அவர், மறைந்திருந்தவாறே துவக்கை நீட்டிக் கலட்டியனின் தலைக்கு மேலே, அதன்மேல் குண்டு பட்டுவிடாதபடி ஒரு சத்தவெடியைத் தீர்த்தார். வெடி தீரும்போதே சூ வென நாய்களை ஏவியவண்ணம் முன்னே பாய்ந்தார்.

சிங்கராயரின் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்த வேட்டை நாய்கள் மிகவும் சாதுரியமானவை. துவக்குவெடி தீர்ந்ததும் திகிலடைந்த கலட்டியன் மடுவைவிட்டு வெளியே பாய்ந்தது. சிங்கராயரும் உரத்த குரலில் நாய்களை ஏவவே கலட்டியன் புயலெனக் காட்டில் பாய்ந்தது. கலட்டியனுக்குக் குண்டடி பட்டுவிட்டது, இனி மிக இலகுவாகப் மடக்கிப் பிடித்துவிடலாம் என்ற பிரமையை நாய்களுக்கு ஏற்படுத்தவே அவர் அந்தச் சத்தவெடியைத் தீர்த்திருந்தார்.

அவரைக் கண்ட வெருட்சியில் கலட்டியன் மேலும் மிரண்டு பாய, சிங்கராயரும் கூடவே துரத்தி வருவதைக் கண்டு புதிய உற்சாகம் பெற்றனவையாகத் துரத்தின வேட்டை நாய்கள். கலட்டியனுடைய பின்னங்கால் ஒன்று சேனாதியின் வெடிபட்டு பலவீனமடைந்திருந்தது. அதன் காரணமாக அதனால் வேகமாக வெகுதூரம் ஓடமுடியவில்லை. போதாக்குறைக்கு அது ஓடிய காட்டுப்பகுதியின் நிலம் சுனைத்து ஈரமாக இருக்கவே, கலட்டியனின் கால்கள் அதன் இராட்சத நிறையின் காரணமாக புதையத் தொடங்கிவிட்டன. வெகு சுPக்கிரமே வேட்டைநாய்கள் அதன் தொடையைப் கவ்விப் பற்ற ஆரம்பித்துவிட்டன. நான்கு நாய்களும் போட்டி போட்டுக்கொண்டு கடித்துக் குதற, பின்னாலேயே சிங்கராயரும் நிழல்போலவே ஓடிவரக் கலட்டியன் இன்னமும் வேகத்தை அதிகமாக்கி, கண்மண் தெரியாமல் ஓடியது.

சிங்கராயரின் முகம், கலட்டியன் பாய்கின்ற திசையை அவர் அவதானித்தபோது மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஆமாம்! அவருடைய அருமை நாய்கள், கலட்டியனை ஆண்டாங்குளம் பக்கமாகவே துரத்துவதைக் கண்டு அகமகிழ்ந்தவராய், தனது வேகத்தை மேலும் அதிகப்படுத்தி நாய்களையும் உற்சாகமூட்டி ஏவினார் சிங்கராயர். அவருடைய சிம்மக் குரல், நாய்களின் பயங்கர உறுமல்கள், கலட்டியனின் சூறாவளி வேகம் என்பவற்றினால் காடே அதிர்ந்தது. மந்திகள் மரங்களில் பயத்துடன் ஒட்டிக்கொண்டன. பறவைகள் கலைந்து சிதறிப் பறந்தன.

சிங்கராயர் ஒருவரைத் தவிர வேறு யாருமே இப்படியானதொரு முயற்சியில் இறங்கவே தயங்குவார்கள். காலையில் இருந்தே வெய்யிலில் கிட்டத்தட்டப் பதினைந்து மைல்கள், அந்தப் பெரிய வார்க்கயிற்றைச் சுமந்த சிங்கராயர், இப்போது தனது துவக்கையும் தூக்கியவாறு ஓடிக்கொண்டிருந்தார். அடர்ந்த காட்டில் வழியே இல்லாத திசையில் இவ்வளவு பாரத்தையும் சுமந்து, கலட்டியனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட, சிங்கராயர் ஒருவரினாலேயே முடியும். இன்று எப்படியும் கலட்டியனை மடக்கிக் கட்டில் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கை வலுக்க வலுக்க, தனது வேகத்தை மேலும் அதிகரித்து நாய்களை ஏவிக்கொண்டிருந்தார் சிங்கராயர்.

000

தண்ணீரூற்றில் சேனாதிராஜன், 'இந்தக் கலவரநேரம் நீ போகவேண்டாம்!" என்று, காலையில் மனம்மாறிய தாய் கண்ணம்மாவைச் சரிக்கட்டிப் புறப்படுவதற்குள், காலை பஸ்நேரம் கடந்துவிட்டிருந்தது. பத்துமணி பஸ்சுக்காவது போகலாம் எனத் தெருவுக்கு வந்தவனுக்கு, பஸ் ஓட்டம் இல்லையென்பது பன்னிரண்டு மணியளவிலேயே தெரிந்தது. இனி வீட்டிற்குப் போனால் தாய் ஆண்டாங்குளம் போகவே விடமாட்டாள் எனத் தெளிவாக உணர்ந்த சேனாதி, தெருவிலேயே ஏதாவது டிரக்டர் வாகனமாவது குமுளமுனைக்குப் போகாதா எனக் காத்திருந்தபோது, நேரம் நழுவி ஒரு மணியாகி விட்டிருந்தது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என உணர்ந்தவனுக்கு, ஏன் நடந்தே குமுளமுனைக்குச் சென்றால் என்ன என்று தோன்றவும், தன் எண்ணத்தைச் செயலாக்கினான். கொதிக்கின்ற வெய்யிலில் அந்த ஆறுமைல் தூரத்தையும் அவன் நடந்து குமுளமுனை மலைவேம்படிச் சந்தியை அடைந்தபோது, பொழுது சரிந்து நிழல் சாயத் தொடங்கிவிட்டிருந்தது.

மாலை மயங்குவதற்குள் நந்தாவைக் கண்டுவிடலாம் என்ற இனிய எதிர்பார்ப்புக்களுடன், எஞ்சிய இரண்டுமைல் தூரத்தையும் அவன் கடந்து, பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டை மிதித்தபோது, மாலை வெய்யிலின் உக்கிரம் தணிந்திருந்தது. ஆறாகப் பெருகிய வியர்வையைத் துடைத்து ஆற்றுநீரில் முகத்தைக் கழுவிக்கொண்டான் சேனாதி. கடைசியாக ஆண்டாங்குளத்தை விட்டுச் செல்கையில் நந்தா இந்த வட்டம் பூக்களின் அருகே நின்று, அழகாகச் சிரித்துக் கையசைத்துத் தனக்கு விடை தந்ததை நினைத்தவாறே சேனாதி வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்

பனைகளினூடாக விரைந்து வீட்டை அடைந்தபோது செல்லம்மா ஆச்சி தொடுவானத்தை வெறித்துப் பார்த்தவாறு வெறுந்தரையில் அமர்ந்திருக்கக் கண்டு திகைத்துப் போனான். ஆச்சியின் முகம் இப்படி இருண்டுகிடந்ததை அவன் ஒருபோதும் கண்டதில்லை.

அவளை நெருங்கிய சேனாதிக்கு ஆச்சி சொன்ன செய்தியைக் கேட்டதுமே இடி விழுந்தது போலாகிவிட்டது. அப்படியே அதிர்ந்துபோய் அமர்ந்துவிட்டான். ஆச்சிகூடத் தனது வழமைப்படி சேனா வந்ததுமே அவனை அழைத்துச் சாப்பிடச் செய்யாமல், பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். துயரிலும், களைப்பிலும் துவண்டுபோன சேனாதி ஒன்றுஞ் செய்யத் தோன்றாது, தான் வழமையாகப் படுக்கின்ற அடுக்களை மோடையில் போய் விழுந்தான். அந்தத் திண்ணையின் தண்மை அவனடைய கொதிக்கும் மனதுக்கும், உடலுக்கும் சற்று நிம்மதியைத் தந்தது.

வளரும் 

0000000000000000000000

வட்டம்பூ அத்தியாயம் 20 - 21

மத்தியானம் கலட்டியனை விரட்டத் தொடங்கிய சிங்கராயர், இப்போ பொழுது சயாயும் சமயத்திலும் தனது வேகத்தைச் சிறிதும் குறைக்காமல், நாய்களை ஏவியபடியே தொடர்ந்து கலட்டியனின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தார். நாய்களும் வெகுவாகக் களைத்திருந்த போதிலும், ஆண்டாங்குளம் சமீபித்துவிட்டதை உணர்ந்து, கலட்டியனை விடாமல் துரத்தின.

பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் இப்போ நன்றாகக் களைத்து விட்டிருந்தது. வியர்வையில் கன்னங்கரேலென மினுமினுத்த அதன் உடலில், நாய்களின் கோரமான பற்கள் பிடுங்கிய இடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது. செவிகள் இரண்டும் அடிக்கடி நாய்கள் கடித்துப் பிடுங்கியதால் இரணமாய்ச் சிதைந்து காணப்பட்டன. வாயில் நுரைதள்ள, சோர்ந்துபோன கலட்டியன் எங்காவது நீர்நிலை தென்படாதா, அதில் இறங்கியாவது இந்தக் கொடிய நாய்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஏங்கி ஓடிக்கொண்டிருக்கையில், காற்றில் தண்ணீரின் வாடை அதற்கு விழுந்தது.

சரேலென அந்தத் திக்கில் கலட்டியன் தனது பாதையை மாற்றியபோது, பின்னாலேயே வந்து கொண்டிருந்த சிங்கராயர், 'அச்சா!" என மனதுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டார். கலட்டியன், திருக்கோணம் வயலருகில் உள்ள சுனையை நோக்கி ஓடுகின்றது, நாய்களின் கொடுமையும், களைப்பும் தாங்காது அந்தச் சுனையில் போய் விழப்போகின்றது, என்ற அனுமானம் அவருக்கு அசுரபலத்தைக் கொடுக்கவே, பதிய உற்சாகம் பீரிட அவர் நாய்களுக்கும் முன்னே, வார்க்கயிற்றுடன் ஓடவே அவையும்; ரோஷமம் மிக்கவையாக அவரைத் தொடர்ந்தன:

சுனையைக் கண்டதுமே முன்பின் யோசிக்காது கலட்டியன் அதனுள் பாய்ந்தது. அவ்வளவுதான்! ஆடுசுனையாகக் கிடந்த அந்த மடுவின் நடுவே நான்கு கால்களும் குத்தெனப் புதைய, கலட்டியன் அசையமுடியாத வகையில் சேற்றில் சிக்கிக் கொண்டது. நேரத்தைச் சிறிதும் விணாக்காது, துவக்கைத் தரையில் போட்டுவிட்டு, துணிந்து கலட்டியனை நெருங்கிய சிங்கராயர், அதன் தலைக்கு வார்க்கயிற்றின் சுருக்கை எறிந்து இறுக்கி, சுனையருகில் நின்ற மரத்தில் கெட்டியாகக் கட்டினார்.

சுனையில் புதைந்த கலட்டியன் மிரள்வதற்குக்கூடச் சக்தியின்று, சரணாகதியடைந்த பகைவனைபபோல விழித்தது. கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைக் கண்ட நாய்கள் நான்கும் நாக்குகளைத் தொங்கப்போட்டு, அப்பாடா! வேலை முடிந்தது! என்பதுபோல, சுனையருகு ஈரத்தில் நீளமாக நெஞ்சில் கிடந்து வெம்மையைப் போக்கிக்கொண்டன.

இதுவைரை தன்னையே உணராது கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற வெறி உந்த ஓடிவந்த சிங்கராயர், தலையிலிருந்து முகத்தில் ஆறாகப் பாய்ந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு கலட்டியனைப் பார்த்தார். இந்தச் சேற்றிலிருந்தும், தனது வார்க்கயிற்றிலிருந்தும் இனிக் கலட்டியன் தப்பிப் போவதென்றால் இது இயலாத காரியம் என முடிவசெய்த சிங்கராயர், தனது நாய்கள் ஒவ்வொன்றினதும் அருகில் சென்று, அவற்றைப் பாசத்துடன் வருடிப் பாராட்டியபோது, அவை முனகக்கூடப் பலமற்றுக் களைத்தவையாய்க் கிடந்தன.

தனது இலட்சியத்தை நிறைவேற்றிய களிப்பில் சிங்கராயரின் முகத்தில் வெற்றிச் சிரிப்புப் படர்ந்தது. கொல்லன் உலைத் துருத்திபோல எகிறிக்கொண்டிருந்த தனது ஓநாய் வயிற்றை அப்போதுதான் அவர் பார்த்தார். கொஞ்ச நஞ்சத் தூரமா! எனச் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த புல்மேட்டில் அமர்ந்த சிங்கராயர், கலட்டியனைப் பெருமிதத்துடன் பார்த்தார். மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளி பரவ ஆரம்பித்த அவ்வேளையில், அந்த ராஜநாம்பனின் அழகை மனதார மாந்திக்கொண்ட சிங்கராயருக்கு இலேசாகத் தலைசுற்றவது போன்றிருந்தது.

21.

அடுக்களைத் திண்ணையில் படுத்தபடி முகட்டை வெறித்தவாறே கிடந்த சேனாதியின் கண்கள் ஏதேச்சையாக மேலே கட்டியிருந்த கொடியில் பதிந்தபோது, அதில் மெல்லிய நூலினால் பிணைக்கப்பட்டு அசைந்த, நந்தாவின் கறுப்பு வளையல்கள் தென்படவே சட்டென எழுந்து அவற்றைப் பிடுங்கியெடுத்தான் சேனாதி. அதைத் தன் விழிகள்மேலும், இதழ்களிலும் தேய்த்தவனுக்கு, என் நந்தா இங்கே வந்து எனக்காகவே இவற்றை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள் என உணர்ந்து கொண்டான். மீண்டும் அந்தக் கொடியைப் பார்த்த சேனாதி, தனது சாறத்தை எனது நினைவாக எடுத்துச் செல்லும் நந்தா, அவளுடைய ஞாபகமாக எனக்கு இந்த வளையல்களை விட்டுப் போயிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.

உடனேயே, அவளுடைய காலடி உள்ள இடங்களையாவது காணவேண்டும் என்ற தவிப்பில் சேனா எழுந்து நந்தாவின் குடிசைக்கு ஓடினான். அங்கு அவளுடைய அழகிய சிறிய பாதச்சுவடுகள் பதிந்துகிடந்தன. அவற்றைப் பார்த்த சேனாவின் இதயம் ஓவெனக் கதறியது. பொழுது சாய்ந்துவிட்ட வேளையில் அன்று, நிலவொளியில் நந்தா தன்னை தனது இளமார்புடன் இறுக அணைத்து, 'நா ஒருநாளும் ஒங்களைவுட்டு போகமாட்டேன் சேனா!" எனத் தேற்றியது நினைவுக்கு வரவே, சேனாதி வெறிபிடித்தவன் போன்று கையில் நந்தாவின் கறுப்பு வளையல்களுடன் ஐயன் கோவிலடியை நோக்கி ஓடினான்.

அவர்கள் இருவரும் அமர்ந்து ஆரத்தழுவிக்ககொண்ட இடத்தில் அவன் சென்று நின்றுகொண்டு கிழக்கு வானைப் பார்த்தான். அங்கு நந்தாவைக் காணவில்லை.

மாலையும் இருளும் சங்கமிக்கும் அந்தச் செக்கல் பொழுதில், தனியே ஐயன்கோவில் வெட்டையில் நின்ற சேனாதியின் செவிகளில் அந்த ஒலி விழுந்தபோது விக்கித்துப் போனான்.

நாய்கள் பரிதாபமாக ஓலமிடும் அந்த ஒலிவந்த திக்கை நோக்கி ஓடினான் சேனாதி. எதிர்ப்பட்ட பற்றைக் காட்டினூடாகப் பாய்ந்து, அவன் சுனையடி வெட்டையில் திடீரென வெளிப்பட்டபோது, அங்கு கண்ட காட்சி அவனை அப்படியே உலுக்கியது.

பரவைக் கடலுக்கும் அப்பால் குருதியில்; தோய்ந்த பந்தாய் கதிரவன் சரிகையில், அந்த இடம் முழுவதுமே இரத்தச் சிவப்பாய் காட்சியளித்தது. அங்கே, புல்மேட்டின்மேல் சிங்கராயர் நீட்டிநிமிர்ந்து படுத்திருந்தார். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த அவருடைய அருமை நாய்கள், குருதிக் கடலாய்க் கிடந்த வானத்தை நோக்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தன.

சுனையின் நடுவே பொன்முலாம் பூசிய கருங்குன்று போலக் கலட்டியன் வார்க்கயிற்றில் கட்டுண்டு கிடந்தது. அந்தக் காட்சியைச் சில கணங்கள் ஜீரணிக்கமுடியாமல் மலைத்து நின்ற சேனாதி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு சிங்கராயரிடம் ஓடினான்.

சிங்கராயர் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் விழிகள் மூடிப் படுத்திருந்தார். காட்டினூhடாக ஓடிவருகையில் தடியும், முள்ளும் கிழித்த காயங்களிலிருந்து வடிந்த குருதி காய்ந்திருந்தது. மடியும் சூரியனின் செங்கதிர்களில் அவருடைய கரிய உடல் அற்புதமான தேஜசுடன் மின்னியது.

தான் எண்ணியதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் சாதித்து முடித்த வட்டம்பூத் தலைவனுடைய கதை சேனாதியின் நினைவுக்கு வந்தது. போர்க்களத்தில் வீரமணம் எய்திய ஒரு மாவீரன் போன்று, கம்பீரமாய்க் கிடக்கும் அந்த மாமனிதனாம் சிங்கராயரின் வாரிசு நான் என்ற எண்ணம் சேனாதியைச் சட்டென, அந்த ஒரு கணத்தினுள், ஒரு முழு மனிதனாக்கியது!

நந்தாவின் கறுப்பு வளையல்களைத் தனது சேட்டுப்பைக்குள் வைத்து இதயத்தோடு சேர்த்து அழுத்திய சேனாதிராஜன், குனிந்து, சிங்கராயரின் வலது கையில் இறுகப் பற்றியிருந்த துவக்கை மெல்ல விடுவித்துக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நிமிர்ந்து நின்றான்.

ஓரு முழுமனிதனாக மாறியிருந்த சேனாதிராஜன் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்தவனாக வினைமுடிக்கப் புறப்பட்டான்.

முற்றும்

நன்றி : http://www.appaal-tamil.com/index.php






Comments