நிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 22 - 30)

நிலக்கிளி: அத்தியாயம் - 22-23 


பாலை  மரங்கள் சிதறுபழம் பழுக்கும் சித்திரைமாதக் கடைக்கூற்றில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமன் அயராது உழைத்தான். இப்போ பாலை மரங்கள் வாருபழம் பழுக்கும் வைகாசிமாதம். கதிராமனின் குடிசைக்கு மேற்கே கிடந்த காடு இப்போ வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. சித்திரை இருபத்தெட்டுக் குழப்பம் என்று அழைக்கப்படும் சோளகத்தின் பிரசவத்தின்  முன்பே அவன் கீழ்க்காடு முழுவதையும் வெட்டியிருந்தான். பின் பெருமரங்களைத் தறித்து வீழ்த்தி, அவற்றின் கிளைகளையும் வெட்டி நெரித்து மட்டப்படுத்தியிருந்தான். சதா கோடரியும் கையுமாக வைகாசிமாத இறுதிவரை பிராயசப்பட்ட அவனுடைய உள்ளங்கைகள், இரத்தம் கன்றிச் சிவந்து கரடுதட்டிப் போயின.

தங்களுடைய வாழ்வில் மலையர் தலையிட்டுத் தீங்கு  செய்யாதது பதஞ்சலிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.  நாளடைவில், பழைய குதூகலமான போக்கும் உற்சாகமும்  அவளிடம் திரும்பியிருந்தன.

நிலத்தில் பொந்துகள் அமைத்து அவற்றினுள் கூடுகட்டி  வாழும் நிலக்கிளிகள் மிகவும் அழகானவை! உற்சாகம்  மிகுந்தவை! தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் அதிகமாகக்  காணப்படும் இந்த நிலக்கிளிகள் தாமிருக்கும் வளைகளைவிட்டு  அதிக உயரத்துக்கெல்லாம் பறப்பதில்லை. இவை தம்  பொந்துகளைவிட்டு அதிக தூரம் செல்வதில்லை. அண்மையிலே  கிடைக்கும் பூச்சிபுழுக்களையும், தானியங்களையும் உண்டு  வாழும் இந்தப் பறவைகள் தொடர்ந்தாற்போல் ஓரிடத்தில்  தரித்திருக்காமல் அடிக்கடி நிலத்தை ஒட்டியவாறே பறக்கும்  காட்சி, அவற்றின் அழகையும், குதூகலத்தையும் மேலும்  மிகைப்படுத்திக் காட்டும்.

பதஞ்சலியும் ஒரு நிலக்கிளியைப் போலவே தான் வாழ்ந்த சின்னஞ்சிறு குடிசையையும், கதிராமனையுமே தனது உலகமாகக் கொண்டிருந்தாள். வேலையெதுவுமே இல்லாத சமயங்களில், பக்கத்திலே உள்ள பாலைமரங்களின் தாழ்வான கிளைகளிலே  ஏறிப் பழங்களைப் பறித்துவந்து கதிராமனுக்குக் கொடுத்து  உண்பாள். அவர்களுடைய குடிசையை அண்டிய  காட்டுக்குறையிலே மான்கிளை வந்து நிற்கும்போது அவற்றை  நோக்கிக் களிப்புடன் ஓடுவாள். பிலக்காட்டில் கதிராமன்  பாடுபடுகையில், 'வெய்யிலுக்கை நில்லாதை!" என்று அவன்  ஏசினாலும் அதைப் பொருட்படுத்தாது அவனைச் சுற்றிவந்து  தன்னாலான வேலைகளைச் செய்வாள்.

நாள்முழுவதும் இடுப்பொடிய வேலை செய்துவிட்டு இரவில் ஒருவரின் அணைப்பில் ஒருவர் ஒண்டிக்கொள்ளும் வேளையில், அவன் தன்னுடைய முரட்டு விரல்களால் பதஞ்சலியின் உள்ளங்கைகளைத் தடவிப் பார்ப்பான். கடுமையான  வேலைகளைச் செய்து கன்றிப்போயிருந்த அந்த மென்மையான  கைகளைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்தவாறே அவன்  நித்திரையாய்ப் போவான்.

வைகாசி கழிந்து ஆனி வந்தது. நீர் நிலைகளையும்,  பசுமையையும் வறட்டும் சோளகக் காற்று, கதிராமன்  வெட்டியிருந்த காட்டையும் சருகாகக் காய்ச்சியிருந்தது. ஆடி  பிறந்ததும் காட்டுக்கு நெருப்பு வைக்க வேண்டுமென  எண்ணியிருந்தான். மரங்களையெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி,  தோட்டப்பயிர் செய்வதற்கு அரை ஏக்கரளவு நிலத்தைத்  தயார்ப்படுத்திக் கொண்டான். அவர்களுடைய குடிசையிலிருந்து  சற்றுத் தூரத்திலிருந்த வாய்க்காலில், வயல்விதைக்கும்  காலங்களில்தான் தண்ணீர் பாயும். எனவே அவன் தன்னுடைய  புதிய வளவுக்குள்ளேயே ஒரு கிணற்றையும் வெட்ட  ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்தில், வாய்க்காலில் நீர் வற்றுவதற்கு  முன்பாகவே அவன் வெட்டிய கிணற்றில் துல்லியமான நீர்  சுரக்கத் தொடங்கிவிட்டது. கிணற்றில் நீரைக் கண்டதுமே  தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக  இறங்கினான் கதிராமன்.

உமாபதி இறக்கும்போது பதஞ்சலியிடம் அவர் விட்டுச்சென்ற பணம் இருநூறுருபா வரையில் இருந்தது. அதில் ஐம்பது  ருபாவுக்குமேல் உமாபதியரின் ஈமச்சடங்குகளுக்குச்  செலவாகிவிட்டது. எஞ்சியிருந்த பணத்தில் விதைநெல்  வேண்டுவதற்கென எண்பது ருபாய் எடுத்து வைத்திருந்தான்.  மிகுதிப் பணத்தில் குடிசைக்குத் தேவையான கிடுகு,  பதஞ்சலிக்குச் சேலைகள், தனக்குச் சாறம் முதலியவற்றையும்,  உணவுப் பொருட்களையும் வாங்கியிருந்தான். எனவே வருமானம்  எதுவுமில்லாத நாட்களில் அவர்கள் மிகவும் சிக்கனமாக  வாழவேண்டியிருந்தது. பிறந்ததுதொட்டுப் பச்சையரிசிச்  சோற்றையே உண்டு வளர்ந்த அவர்கள், இப்போ கோதுமை  மாவுடனும், மரவள்ளிக் கிழங்குடனும் காலத்தைக் கழித்தனர்.  பதஞ்சலியின் கைப்பாங்கில் தயார்செய்யப்பட்ட உணவுவகைகள்,  எளிமையாக இருந்தாலும், சுவையாக இருந்தன. நாள்முழுவதும்  வியர்வைசிந்த வேலை, அதனால் ஏற்படும் பசி, அதைத்  தொடர்ந்துவரும் நிம்மதி நிறைந்த நித்திரை, இவையெல்லாம்  அந்த இளந்தம்பதிகளின் அழகுக்கு மேலும் மெருகையும்  ஆரோக்கியத்தையும் அளித்தன.

23

ஆனிமாதக் கடைசிக்கூற்றில் ஒருநாள் இருட்டும் சமயத்தில் கோணாமலையர், குமுளமுனையிலிருந்து புறப்பட்டுத் தண்ணிமுறிப்பை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அத்தி பூத்ததுபோல் குமுளமுனைக்குச் சென்று, இருட்டும்  சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மலையரின் முகம்  கோபத்தால் விகாரப்பட்டு இருண்டு கிடந்தது.

கதிராமன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றதன்பின் மலையர் வளவில் இவ்வளவு காலமும் திகழ்ந்த செந்தளிப்பு அழிந்துவிட்டது. எருமைகளை மேய்ப்பாரில்லை. அவை கட்டாக்  காலிய்த் திரிந்தன. தோட்டத்தில் முறைப்படி இறைப்பு  நடக்காததால் புகையிலைக் கன்றுகள் சேட்டமின்ற நின்றன.  இதைப்போலப் பல அன்றாட அலுவல்களிலும் கதிராமன்  இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புத் துலாம்பரமாகத் தெரிந்தது.  இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும். அடுத்துவரும்  ஆவணியில் மணியனுக்கு, குமுளமுனைச் சிதம்பரியருடைய  மகளைப் பேசி முடிக்கவேண்டும். உழவுயந்திரம் வீட்டுக்கு  வந்துவிட்டால் இன்னமும் நான்கு துண்டுக் காணியைக்  குத்தகைக்கு எடுத்து விதைக்க வசதிப்படும் என்றெண்ணிய  மலையர், ஆனி முடிவதற்குள் திருமணப் பேச்சுவார்த்தைகளை  முடித்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் சிதம்பரியரின்  வீட்டுக்குச் சென்றிருந்தார்.

மலையர் எண்ணிப்போன விஷயம் கைகூடவில்லை. 'நீங்கள் கோவிக்கக் கூடாது மலையர்! உங்கடை கதிராமனுக்கு என்ரை பொட்டையைச் செய்வம் எண்டுதான் நான் நெடுக விரும்பி இருந்தனான். ஆனால் அதுக்குக் குடுத்து வைக்கேல்லை.  உங்கடை மணியனுக்கும் என்ரை பொடிச்சிக்கும் ஒரு  வயசுதானே! கடைசி ஒரு மூண்டு நாலு வயதெண்டாலும்  வித்தியாசம் இருக்கிறதுதான் நல்லது!" என்று சிரித்துக்கொண்டே  சிதம்பரியர் கூறி, தனக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை  என்பதை மிகவும் நாசூக்காகத் தெரிவித்துவிட்டார். ஆனால்,  உண்மையிலேயே மணியன், கதிராமனைப்போல் சிறந்த  உழைப்பாளி இல்லை என்பதுதான் அவர் மறுத்ததின் காரணம்  என்பதை மலையர் அறிவார். இந்த வயதுப் பிரச்சனையைக்  கிளப்பிச் சிதம்பரியர், தனது கடைசி நம்பிக்கையையும்  பாழடித்துவிட்டார் என்பது மலையருக்கு நன்கு விளங்கியது.

'அவன்ரை வீட்டு முத்தம் மிதிச்சு நான் போய்க கேட்டதுக்குச் சிதம்பரியான் இப்படிச் சொல்லிப்போட்டான். உழவுமிசின் வைச்சிருக்கிறதாலைதானே இவனுக்கு உவ்வளவு கெப்பேர்!.... சீவனோடை இருந்தால், இந்த விதைப்புக்கு முன்னம் நானும்  ஒரு மிசின் எடுக்கவேணும்!... அப்பதான் என்ரை மனம் ஆறும்!"  என்று மலையர் அந்த இருட்டில் தனக்குத் தானே  சொல்லிக்கொண்டு, நட்சத்திரங்களின் ஒளியில் தண்ணிமுறிப்பை  நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

உழவுயந்திரம் வாங்கவேண்டும் என்று இதுவரை மலையர் எண்ணியது கிடையாது. அவரிடம் இருந்தவை மூன்று ஏக்கர் வயலும், எருமை, பசுமாடுகளுந்தான். அவரிடம் பணமாய்ப் பெருந்தொகை இருக்கவில்லை. வருடா வருடம்  நெல் விற்கும் வகையில் ஐந்நூறோ ஆயிரமோ கிடைக்கும். அதுவும் துணிமணி, நாள் விசேஷங்கள், அவருடைய குடி முதலியவற்றில் செலவழிந்துவிடும். இப்போதும் கையில் ஒரு ஆயிரம் ருபாவரை பணம் இருந்தது. இச் சிறுதொகை, உழவு இயந்திரம் வாங்குவதற்குப் போதாது. இருபத்தைந்து ஆயிரத்துக்குப் புது  இயந்திரம் வாங்கத் தன்னால் முடியாவிடினும், அரைப் பழசாவது  மிசின் ஒன்று வாங்கவேண்டுமென்று  கணக்குப் போட்டுப்  பார்த்தார் மலையர். எப்படியென்றாலும், தன்னுடைய வயலை ஈடு  வைத்தாகிலும், அதுவும் போதாவிடில் மாடுகளை விற்றாவது,  ஒரு உழவு இயந்திரம் வாங்கியே தீரவேண்டுமெனச் சங்கற்பம்  செய்துகொண்ட மலையர், இப்போ தண்ணிமுறிப்பை நெருங்கிக்  கொண்டிருந்தார்.

அவர் குமுளமுனையிலிருந்த சிதம்பரியர் வீட்டுக்குச் செல்லும்போது, கதிராமனுடைய குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் கடந்துதான் சென்றார். ஆனால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்க விரும்பாதவர்போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே சென்றார். இப்போது, தான் எண்ணிச்சென்ற நோக்கமும் கைகூடாமல் போகவே, அவருடைய சினம் எல்லை மீறிவிட்டது. 'இந்தப் பொறுக்கியாலைதானே நான் இண்டைக்குப் போகாத இடமெல்லாம் போய் மொக்கயீனப்பட்டுக் கொண்டு வாறன்! என்று உறுமியவாறே கதிராமனுடைய குடிசை இருந்த திசையில் நின்று நிதானித்து நோக்கினார்.

மங்கலான நிலவொளியில் கதிராமன் வெட்டியிருந்த காடு வெளிப்பாகத் தெரிந்தது. 'நான் நினைச்ச காரியங்களுக்கெல்லாம் மண்விழுத்திப்போட்டு, அந்த வம்பிலை பிறந்தவளோடை இவன் இஞ்சை காடுவெட்டி வயல் செய்யவோ?" என்று கோணாமலையரின் நெஞ்சு கொதித்தது. உழவு இயந்திரம், நாலுபேரின் மதிப்பு என்றெல்லாம் மலையர் கட்டியெழுப்பிய ஆசைகளைக் கதிராமன் சிதைத்துவிட்டான். குமுளமுனைச் சிதம்பரியர் வீட்டில் அவர் பட்ட அவமானம், அவருடைய மனதை நிலைகுலையச் செய்துவிட்ட இந்த வேளையிலே, அவருடைய நெஞ்சில் குருரமானதொரு எண்ணம் உதித்தது. 'இவனுக்கு இண்டைக்குச் செய்யிறன் வேலை!" என்று உறுமியவாறே மலையர் தன் மடியைத்தடவினார். அங்கு நெருப்புப்பெட்டி  தட்டுப்பட்டது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த  ஒற்றையடித் தடத்தில் இறங்கி, கதிராமன் வெட்டியியிருந்த  காட்டை நோக்கி நடந்தார் மலையர்.

காட்டை வெட்டி வீழ்த்தி நெரித்து, அது நன்றாக வெய்யிலிலும், காற்றிலும் காய்ந்து சருகான பின்புதான் நெருப்பு வைப்பார்கள். காட்டுக்குத் தீ வைக்கும்போது மிகவும் பயபக்தியுடன்தான் செய்வார்கள். பங்குனி, சித்திரை மாதங்களில் காட்டை வெட்டினால் அது நன்றாக உலர்ந்து, ஆடி மாதத்தில் நெருப்புக்  கொடுப்பதற்குத் தயாராக இருக்கும். ஐயனை வேண்டிக்கொண்டு  கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து, அந்தக் கற்பூரச்  சுடரிலேயே தென்னோலைச் சூழ்களைக் கொளுத்தி, அவற்றைக்  கொண்டு காற்றின் திசைக்கேற்ப காட்டுக்குத் தீ வைப்பார்கள்.  வெட்டிய காடு நன்றாகப் பற்றிப் பிடித்து எரியாமல் ஆங்காங்கு  ஊடுபற்றி எரிந்துவிட்டால், சருகுகள் மட்டும் கருகிப்போய்  பெருமரங்களும், கிளைகளும் எரியாது எஞ்சிவிடும். பின்னர்  அவ்வளவு மரங்களையும், கிளைகளையும் தறித்து அப்புறப்  படுத்துவதற்கு மிகவும் செலவாகும். பலரைக் கூலிக்கமர்த்தி  வேலைவாங்கப் பணவசதி உள்ளவர்களால்தான் முடியும்.  எனவேதான் கதிராமனும் ஆடி பிறக்கட்டும், காட்டுக்கு நெருப்பு  வைக்கலாம் என்றெண்ணி, அதற்கு வேண்டிய பொருட்களையும்  சேகரித்துக் கொண்டு சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.

மகனுடைய எண்ணத்தில் மண்போட வேண்டும், அவன்  படுகாடு வெளியாக்க முடியாமல் அவதிப்பட வேண்டும் என்று  கறுவிக் கொண்டு, வஞ்சம் தீர்ப்பதற்குக் கோணாமலையர் துணிந்துவிட்டார். வேண்டுமென்றே வெட்டிய காட்டின்  மேல்காற்றுப் பக்கமாய்ப் போய் ஓரிடத்தில் குந்திக்கொண்டு,  சருகுகளைக் கூட்டிக்குவித்து அதற்கு நெருப்பு வைத்தார். நாள்  முழுவதும் பாடுபட்டு உழைக்கும் கதிராமனும், பதஞ்சலியும்  வேளைக்கே நித்திரைக்குச் சென்றிருந்தனர். எனவே மலையர்,  நிதானமாக நாலைந்து இடங்களில் காடு ஊடுபற்றி எரியும்  வகையில் நெருப்பு மூட்டிவிட்டுக் குருரமாகச் சிரித்துக்கொண்டே  தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய நெஞ்சில்  கொழுந்து விட்டெரிந்த சினமென்னும் தீ, இச் செயலின் பின்,  பெருமளவு தணிந்து காணப்பட்டது. ஆனால் அவர், கதிராமன்  வெட்டிய காட்டுக்கு வைத்த தீ, ஆங்காங்கு வளர்ந்து பற்றிக்  கொண்டிருந்தது.

வளரும் 

***********************************************************
நிலக்கிளி: அத்தியாயம் - 24-25 

மலையர் தான் பெற்ற மகனுக்கு வஞ்சனை செய்யதபோதும், அவனை வளர்த்த செவிலித் தாய் முல்லையன்னை அவனை வஞ்சிக்க மனமில்லாதவளாய், வெட்டுக் காட்டிலே மலையர் இட்ட நெருப்பை நன்றாகவே பற்றவைத்துக் கொண்டாள்.

இந்தச் சமயம் காற்றும் விழுந்துவிடவே, உலர்ந்து கிடந்த அந்தக் காட்டில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. தாவியெழுந்த செந்தீயின் நாக்குக்கள் காட்டை நக்கியெடுத்தன. சுள்ளிகள் சடசடவென வெடித்தன. உய்யென்ற இரைச்சலுடன் தீச்சுவாலை உயரே எழுந்தது. அந்தச் சுற்றுவட்டாரத்தையே ஒளிமயமாக்கிக் கொண்டு எரிந்த காடு புகை கக்கியது.

கதிராமன் புகைநெடியை உணர்ந்து விழித்தபோது, எங்கோ நெருப்புப் பிடித்துக்கொண்டது என்பதைப் புரிந்து கொண்டான். சரேலென்று எழுந்தவன், பதஞ்சலியை அப்படியே கையிரண்டிலும் வாரித் தூக்கிக்கொண்டு, குடிசைப் படலையை உதைத்துத் திறந்து வெளியே வந்தான். அவன் நினைத்ததுபோல் குடிசையில் நெருப்புப் பிடித்திருக்கவில்லை. அவன் வெட்டியிருந்த காடு, குடிசையிலிருந்து ஏறக்குறைய நூறு பாகத் தொலைவில் இருந்தபடியால் குடிசைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட இடமிருக்கவில்லை.

இதற்குள் விழித்துக் கொண்ட பதஞ்சலி, 'என்ன காடு எரியுது?" என்று பதறிப்போய்க் கேட்டாள். 'ஆரோ காட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் பதஞ்சலி!" என்று அமைதியாகக் கூறிய கதிராமன், மேலே வானத்தையும், சுற்றாடல் காடுகளையும் ஒருதடவை கூர்ந்து கவனித்தான். நெருப்பின் ஒளியில் அவனுடைய முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகை பிறந்ததைப் பதஞ்சலி கண்டாள். 'ஆரோ வேணுமெண்டுதான் நெருப்பு வைச்சிருக்கினம் பதஞ்சலி! ஆனால் காட்டுக்கு நெருப்பு வைக்கிறதுக்கு இதைவிட நல்லநேரம் தேடினாலும் கிடையாது!... பார்!... காடு என்னமாதிரி எரியுதெண்டு! விடியுமுன்னம் முழுக்க எரிஞ்சுபோடும்!" என்று உற்சாகமாக விஷயத்தை விளக்கினான் அவன். பயம் அகன்ற பதஞ்சலி, எரியும் காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.

கதிராமன் தங்கள் குடிசைக்கு வரும் ஒற்றையடிப் பாதையருகில் சென்று குனிந்து கவனமாகப் பார்த்தான். அந்தப் பாதையில் காணப்பட்ட காலடித்தடங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றைப் பார்த்துவிட்டுப் புன்முறுவலுடன் வந்த கதிராமன், 'நான் நினைச்சதுபோலை அப்புதான் காட்டுக்கு நெருப்பு வைச்சிருக்கிறார். அதுதானே காடு இப்பிடி முளாசி எரியுது!" என்று சிரித்தான்.

முற்கோபக்காரர் மூட்டும் தீ உடனே பற்றி நன்றாக எரியும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே மலையரைவிட இந்த வேலையைச் செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்தப் பகுதியிலேயே கிடையாது. அதை எண்ணித்தான் கதிராமன் சிரித்துக் கொண்டான். அதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பதஞ்சலியும் உடனே கலகலவெனச் சிரித்துவிட்டாலும், மறுகணம், மலையர் ஏன் காட்டுக்கு நெருப்பு வைக்கவேண்டும் என்பதை நினைத்துக் கலவரப்பட்டுப் போனாள். அதைக் கண்ட கதிராமன், 'எல்லாம் நன்மைக்குத்தான் நடக்குது! வா நாங்கள் படுப்பம்" என்று அவளை அணைத்துக் கொண்டான்.

மலையர் என்ன நினைத்துக் கொண்டு காட்டுக்குத் தீ வைத்தாரோ அதற்கு நேர்மாறாகக் காடு நன்றாகவே எரிந்திருந்தது. அடுத்த நாள் மாலையில் திடீரென வானம் இருண்டு நல்லதொரு மழையும் பெய்யவே கதிராமன்பாடு கொண்டாட்டமாய் விட்டது. ஏனெனில எரிந்த காட்டின் மண்ணின் கீழ்க் கிடக்கும் வேர்கள் நன்றாக வெந்த நிலையில் இருக்கையில், மழைபெய்து அவை திடீரெனக் குளிர்ந்தால், அந்த வேர்களிலிருந்து மீண்டும் தளிர்கள் கிளம்பாது. இது கதிராமனுக்கு எவ்வளவோ நன்மையாக இருந்தது. அவன் மறுநாளே பில வெளியாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டான்.

  
25.

கதிராமனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தையிட்டுப் பொறமைப் படுவதற்குக்கூட நேரமின்றிக் கோணாமலையர் உழவு இயந்திரம் வாங்குவதற்காகத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். நல்லதொரு நாளிலே முல்லைத்தீவுக்குச் சென்று, அங்கு வாழும் செல்வந்தரான சின்னத்தம்பியரிடம், தன்னுடைய வயலை ஈடாக வைத்து மூவாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார்.

தண்ணீருற்றில் இருக்கும் மெக்கானிக் நாகராசாவுடன் கலந்து ஆலோசித்ததில் உருப்படியாக ஒரு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்குவதற்கு இன்னமும் மூவாயிரம் ருபாய் வேண்டியிருந்தது. எனவே கையோடு நீராவிப்பிட்டி இப்றாகீமைக் கூட்டிக் கொண்டுவந்து தன் எருமை, பசு மாடுகளில் முக்கால் பங்கை விற்று இரண்டாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார். ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த ஆயிரம் ருபாவுடன் இப்போ மொத்தமாக ஆறாயிரம் ருபா தேறியது. அதை எடுத்துக் கொண்டு மெக்கானிக் நாகராசாவின் உதவியோடு, முள்ளியவளையிலுள்ள ஒருவரிடம் ஆறாயிரம் ருபாவுக்கு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்கிக் கொண்டார் மலையர். அவர் வாங்கிய உழவு இயந்திரம் சற்றுப் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்குந்தோறும் கோணாமலையருக்குப் பெருமை பொங்கி வழிந்தது. நாகராசா ஒரு றைவரையும் மலையருடன் கூட அனுப்பி வைத்தான். அவருடைய அறியாமையையும், ஆசையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மெக்கானிக் நாகராசாவுக்கு இந்த பிசினசில் ஒரு கணிசமான தரகுத்தொகை கிடைத்திருந்தது.

தண்ணமுறிப்பை நோக்கிக் கடபுடாச் சத்தங்களுடன் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மட்காட்டைப் பிடித்துக்கொண்டு பெரும் பிரயத்தனத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தார் மலையர். றைவர் அடிக்கடி பீடி புகைத்துக் கொண்டும், அலட்சியமாக உழவு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டு சென்றதும் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 'மிசின் றைவர்மார் எல்லாரும் இப்பிடித்தானாக்கும்.... கெதியிலை மணியனை மிசின் ஓடப் பழகிக்கிப் போட்டால் பிறகேன் இவனை..." என்று தனக்குள் திட்டம் போட்டுக்கொண்டார்.

குமுளமுனையை நெருங்கியதும், மணியனுக்குப் பெண்தர மறுத்த சிதம்பரியர் வீட்டுக்கு முன்னால் வேண்டுமென்றே உழவுயந்திரத்தைச் செலுத்தச் செய்து அபாரத் திருப்திப்பட்டுக் கொண்டார் மலையர்.

உழவுயந்திரம் கதிராமனுடைய குடிசையிருந்த இடத்தைக் கடந்து செல்கையில், மலையர் அந்தப்பக்கம் திரும்பி ஒரு பெருமிதப் பார்வையைப் படரவிட்டார். தனது ஆசை நிறைவேறிய களிப்பில், கதிராமன்மேல் அவருக்கிருந்த கோபங்கூடச் சற்றுக் குறைந்து விட்டதுபோல் தோன்றியது.

வண்டில் விடுவதற்கெனப் போடப்பட்டிருந்த கொட்டகையினுள் உழவுயந்திரம் பக்குவமாக நிறுத்தப்பட்ட பின்னர்தான் மலையருக்கு நிம்மதி ஏற்பட்டது.

கோணாமலையர் உழவுயந்திரம் வாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் பற்றிக் கதிராமன் அறிந்திருந்தான். அதையிட்டு அவன் அதிகம் பொருட்படுத்தாவிடினும், தானும் மணியனும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பெருக்கிய கறவையினத்தை, மலையர் மிசின் வாங்குவதற்காக இறைச்சிக்கு விற்றுவிட்டார் என்பதை அறிந்தபோது ஒருகணம் அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆனால் அடுத்த நிமிடம், உழவுயந்திரம் வாங்கியதன் மூலம், தன் பெற்றோர்களின் வாழ்க்கை சிறப்புற்றால் அதுவும் நல்லதுதானே என எண்ணிக்கொண்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினான் கதிராமன்.

வளரும் 

*************************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 26

கதிராமனுக்கும் பதஞ்சலிக்கும் இப்போ அந்தப் புதுக்காடுதான் உலகமாக இருந்தது. ஆவணி முடியுமுன்னர் அவர்களுடைய புதுப்பிலவு நிலம் வெளியாக்கப்பட்டு, நாற்புறமும் உறுதியான வெட்டுவேலியுடன் விளங்கியது. சுமார் மூன்று ஏக்கர் பரப்பான அந்தக் கன்னி நிலத்தில் சாம்பர் படிந்த இருவாட்டி மண் பூத்துப்போய்க் கிடந்தது

புரட்டாதி பிறந்ததும் நெல் கொத்தும் வேலைகள் ஆரம்பமாகியது. நல்லதொரு வித்துநாளின் விடிகாலைப் பொழுதிலே கற்பூரம் கொளுத்தி ஐயனை வேண்டிக்கொண்டு விதைநெல்லைச் சிறிது விதைத்தான் கதிராமன். இந்த நெல்லுக் கொத்தும் வேலையில் கதிராமனுக்குச் சமமாகப் பதஞ்சலியும் ஈடுபட்டாள். நெல்லுக்கொத்து பத்து நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. புரட்டாதி எறிப்பில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் புழுதி குடித்தவாறே மழையைக் காத்துக் கிடந்தன. இந்நாட்களில் கதிராமன் கடுமையாக உழைத்து அந்தக் காணியைச் சுற்றிக் கிடந்த வெட்டுவேலியின் வெளிப்புறத்தே ஒரு பாகம் அகலத்திற்கு நிலத்தை வெளியாக்கி, சாமம் உலாத்துவதற்கு வசதியும் செய்துகொண்டான். ஆங்காங்கு தீவறைகள் மூட்டுவதற்காகப் பட்ட மரங்களையும், எரிந்த கட்டைகளையும் குவித்து வைத்துக் கொண்டான்.

ஆடி உழவு தேடி உழு என்பார்கள். மலையரின் வயலிலே இந்த வருடந்தான் ஆடி உழவு தவறிவிட்டது. உழவு நடக்க வேண்டிய சமயத்தில் எருமைக் கடாக்களை விற்றுப் பணமாக்கியிருந்தார் மலையர். உழவுயந்திரம் அவருடைய வீட்டுக்கு வருமுன்னரே ஆடி மாதம் ஓடி மறைந்துவிட்டது.

எனவே இப்போது ஈரம் காய்ந்து, நிலம் உலர்ந்துபோன மலையரின் வயலிலே, அவர் வாங்கிய உழவுயந்திரம் புற்களை விறாண்டி வலித்துக் கொண்டிருந்தது. பழைய கலப்பையாதலால், கொழுக்கள் ஆழமாக உழாமல், மண்ணையும் புல்லையும் விறாண்டிக் கொண்டிருந்தன. மணியன் றைவருக்குப் பக்கத்தில் மட்காட்டைப் பிடித்தபடி புட்போட்டில் நின்று கொண்டிருந்தான்.

மலையருக்கு உழவைப் பார்க்கையில் எரிச்சலாக வந்தது. மாடுகட்டி உழுதாலும் இந்நேரம் வயல் முழுவதையும் பாடுபாடக உழுது புரட்டியிருப்பார். அவரது கையிலிருந்த மீதி பணமும், உழவுயந்திரத்துக்கு டீசல் அடிக்கவும், ஒயில் வாங்கவும் கரைந்து கொண்டிருந்தது. அவருடைய உழவுயந்திரமும், கலப்பையும் சரியில்லாததால் வேறு எவரும் கூலிக்கு அவரைக் கேட்கவில்லை. ஏதோ தானும் விதைத்தேன் என்ற சாட்டுக்கு புழுதிவிதைப்புப் போட்டிருந்தார் மலையர்.

இப்போதெல்லாம் மணியனுக்குத் தோட்ட வேலைகளிலோ, வீட்டு வேலைகளிலோ ஈடுபாடில்லை. முன்பெல்லாம் தானுண்டு, தன்பாடுண்டு என்றிருந்தவன், இப்போது முற்றிலும் மாறிப்போயிருந்தான். உழவுயந்திரத்துடன் கூடவே வந்த றைவர், மணியனுடைய நெருங்கிய நண்பனாகவும், மரியாதைக்குரிய குருவாகவும் இருந்தான். உழவுயந்திரத்தை இயக்கும் பாடத்தை மட்டுமல்ல, நாகரீகமடைந்த இளசுகள் விரும்பிப் பயிலும் பல்வேறு பாடங்களையும் இந்தக் குருவிடமே மணியன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டான். இதன் முடிவு, மலையரின் பணம் முற்றாகக் கரைந்து போயிற்று.

வளரும் 

****************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 27-28

ஐப்பசி பிறந்தது. கூடவே முதல்மழையும் பெய்தது. மண்ணில் மறைந்துகிடந்த நெல்மணிகள் முளைவிட்டன. ஈரஞ்சுவறிக் கடுமையாய்க் கிடந்த வளமான மண்ணின் மடியில் பயிர் முனைகள் தோன்றின. கார்த்திகை முற்பகுதிக்குள் கதிராமனின் புதுப்பில இளம்பச்சைப் போர்வையால் தன்னை மூடிக்கொண்டது. திரும்பிய திசையெல்லாம் ஈரம் குளித்த பசுமை! புதுக்காடு செய்யவேண்டும் அல்லது புதையல் எடுக்க வேண்டுமென்பர். இம்முறை அதிக மழை பெய்யாதிருந்துங்கூட புதுக்காடு சேட்டமாகத்தான் இருந்தது. மண்ணின் வளத்தையுண்டு மதர்த்து வளரும் நெற்பயிரின் மத்தியில் கதிராமனும் பதஞ்சலியும் கைகோர்த்துத் திரிந்தனர். கண்ணை இமை காப்பதுபோல் தன் வயலைக் காத்துவந்த கதிராமனின் கைதேர்ந்த பராமரிப்பில் அவன் வயல் செழித்தது. குடலைப் பருவங் கடந்து, பார்த்த கண்ணுக்குக் கதிராகிப், பின் கலங்கல் கதிராக்கி, இறுதியில் ஒரே கதிர்க் காடாகக் காட்சியளித்தது. அத்தனையும் பதரில்லா அசல் நெல்மணிகள்!

கதிராமனுடைய வளவும் வளங்கொழித்தது. தோட்டத்தில் கத்தரியும், கொச்சியும், வெங்காயமும், வெண்டியுமாகத் தளதளவென வளர்ந்து நின்றன. அவை பிஞ்சுபிடித்துக் காய்த்துக் குலுங்கியபோது பதஞ்சலி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கதிராமனுடைய வயலும் வளவும் எவ்வளவு செழிப்புற்றதோ அதற்கு மாறாக, மலையரின் தோட்டமும், தறையும் வழமையான செழிப்பை இழந்துபோய் ஏதோ கடமைக்கு விளைந்திருந்தன.

இவற்றையெல்லாம் கண்ட மலையர் உற்சாகமிழந்து போனார். அவலநிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சூழலில் துணிவோடு இறங்கி, அவற்றைத் திருத்தும் நோக்கமே இல்லாது, அடிக்கடி கரடியர் வளவுக்குப் போக ஆரம்பித்தார். நல்ல நாள் விசேஷங்களில் குடித்தவர் இப்போ அடிக்கடி சாராயம் வாங்கிவந்து குடிக்கத் தொடங்கினார். போதை மயக்கத்தில், தான் தண்ணிமுறிப்புக் கிராமசபை அங்கத்தினராக வரப்போவதையிட்டுப் பேசி மகிழ்ந்து கொண்டார். கரடியரும் அவருடைய மனதை நன்கு புரிந்து கொண்டவராய் மலையருடைய ஆசைகட்குத் தூபமிட்டுத் தானும் இலவசமாகக் குடித்துக் கொண்டார்.

இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் பாலியார் கவனித்திருந்தாலும், தன் கருத்தைக் கூறும் தைரியம் அவளுக்கு இயற்கையாகவே இருக்கவில்லை. கதிராமனையும், பதஞ்சலியையும் காணாத கவலை அவளுடைய இதயத்தை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய இயல்பான சுறுசுறுப்பையும் இழந்து, இந்தப் பத்து மாதங்களுள் பத்து வயது கூடியவள்போல் தோற்றமளித்தாள். கதிராமனும் பதஞ்சலியும் எப்படி இருக்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? என்பனவற்றை, மலையர் வீட்டிலில்லாத சமயங்களில், அங்கு வருபவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதிலேயே பாலியாரின் கவனஞ் சென்றது. அந்தச் செய்திகள் அளித்த தெம்பினாலேயே அவள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

 28.

ஒருபக்கம் அடர்ந்த காட்டையும், மறுபக்கம் செந்நெல் வயல்களையும் கொண்டிருந்த செம்மண் சாலையிலே தண்ணிமுறிப்பை நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். அவனுடைய நெஞ்சில் உற்சாகமிக்க எண்ணங்கள் நிறைந்திருந்தன.

சுந்தரலிங்கத்துக்கும் கதிராமனின் வயதுதான் இருக்கும். சிவந்த நிறமும், மென்மையான உடல்வாகும் கொண்ட அவனுடைய விரல்கள் பெண்களுடையவை போன்று நளினமாகவிருந்தன. கருகருவென்று தடித்து வளர்ந்த புருவங்களின் கீழே, அகன்றிருந்த அவன் விழிகளில் பளிச்சிடும் ஒளவீச்சு!

அவன் தண்ணிமுறிப்பை நெருங்கிய சமயம் பாதையின் வலதுபுறம் சற்றுவிலகித் தெரிந்த கதிராமனின் குடிசை அவனுடைய கண்களில் பட்டது. கோணாமலையரின் வளவு இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு சாலையோரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாய்க்காலில் இறங்கிக் குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.

பச்சைப் பசேல் என்றிருந்த தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அந்தக் கட்டுக்கோப்பான குடிசையின் எளிமையான அழகு சுந்தரத்தினுடைய மனதை மிகவுங் கவர்ந்தது. சுற்றிவரப் போடப்பட்டிருந்த வெட்டுவேலியின் முற்புறத்தில் இருந்த ஒரு கவட்டை மரத்திலான கடப்பு வழியாக அவன் அந்த வளவுக்குள் நுழைந்தான். அங்கு ஆளரவம் எதுவுமில்லை. சுத்தமாகப் பெருக்கப்பட்டு, ஓரங்களில் வாடாமல்லிகைச் செடிகள் சூழவிருந்த முற்றத்தில் நின்றுகொண்டு, 'வீட்டுக்காறர்' என்று ஒருதடவை சுந்தரலிங்கம் கூப்பிட்டான். அவன் அழைத்த ஒலிகேட்டு, வேலியின் ஓரத்தே ஓங்கி வளர்ந்திருந்த வீரை மரத்திலிருந்த தில்லம் புறாக்கள் சடசவென இறக்கையடித்துக்கொண்டு கலைந்தன.

குடிசையின் பின்புறமாக வெங்காயப் பாத்தியில் களை பிடுங்கிக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதிலும் அவன் அழைத்த குரல் விழவே, 'ஆரது?' என்று கேட்டவாறே எழுந்து வந்தாள்.

அடர்த்தியாக வளர்ந்திருந்த கருங்குழலை அலட்சியமாக அள்ளிச் சொருகியிருந்த அவளுடைய செம்பொன் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. சட்டை அணியாமல் மார்புக்குக் குறுக்காகக் கட்டியிருந்த பச்சைநிறச் சேலை அவளின் மேனிக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. கல்யாணமாகிக் கன்னிமை கழிந்த திருப்தியான வாழ்விலே கிறங்கிப் போயிருந்த பதஞ்சலியின் தேகம் காலை வெய்யிலில் தங்கச்சிலை போன்று காட்சியளித்தது.

 'ஆர் நீங்கள்? ஆரிட்டை வந்தனீங்கள்' என்று அவள் கேட்டபோது பதில் எதுவும் உடனே சொல்லாத அளவுக்கு சுந்தரம் அவளின் அழகைக் கண்டு அசந்து போயிருந்தான். அவளைப் போன்றதொரு கட்டழகியை அவன் இதுவரை சினிமாக்களில்கூடப் பார்த்ததில்லை. நாவற்பழங்கள் போலக் கறுத்து ஈரப் பசுமையுடன் விளங்கிய அவளுடைய விழிகளில் வெளிப்பட்ட காந்த ஒளி, அவனை எதுவுமே பேசாமற் செய்துவிட்டது.

பிறமனிதன் தன்னை அப்பிடி உற்றுநோக்குவது பதஞ்சலிக்கு வேடிக்கையாக இருந்தது. 'என்ன அப்பிடிப் பாக்கிறியள்?' என்று கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். சுந்தரம் மேலும் தடுமாறிப் போய்விட்டான். தன்னுடைய பார்வையை இனங்கண்டு கொண்டாளோ என்ற தவிப்புடன், 'இதுதானே கோணாமலையற்றை வீடு?' என்று சமாளித்துக் கேட்டான்.

கள்ளம் கபடின்றி நேருக்குநேர் பதஞ்சலியின் கண்களை நேருக்குநேர் சந்திக்க அவனால் முடியவில்லை. வளவின் ஒரு பக்கத்தில் பூவும் பிஞ்சுமாகக் குலுங்கிய கத்தரிச் செடிகளின்மேல் தன் பர்வையை மேயவிடட்டான்.

'இல்லை! இது அவற்றை மோன் வீடு!' என்ற பதஞ்சலி, 'நிண்டு கொள்ளுங்கோ, அவர் வயலுக்கை நிக்கிறார், நான் போய் அவரைக் கூட்டிவாறன்!' என்று கூறிவிட்டு வயலை நோக்கித் துள்ளிக் கொண்டு ஓடினாள். அவளின் பின்னழகு சுந்தரத்தின் நெஞ்சைத் தளம்ப வைத்தது.

சுந்தரலிங்கம் படித்தவன்தான். அதிலும் நிறையக் கதைகளும், நாவல்களும் முறையாகப் படித்திருந்தான். அவற்றில் அனேகமானவை காதல் என்ற புனிதமான உறவைப் பற்றியும், அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களையுமிட்டு மிக அழகாகச் சித்தரித்திருந்ததுடன் கற்பு, பண்பு என்பனபற்றியும் உயர்ந்த கருத்துக்களைக் கூறுபவையாக இருந்தன. தானும், தன் படிப்பும் என்றிருந்த அவனுடைய வாலிபநெஞ்சில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் மிக ஆழமாகப் பதிந்திருந்தன. பெண்ணழகையும், பெண்ணின் உறவையும் கூறும் பல கவிதைகளும் கதைகளும் அவனுடைய வாலிப உணர்வுகளைக் கூர்மைப் படுத்தியிருந்தபோதும், நற்பண்புகள் என அவன் தன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டிருந்த சில கருத்துக்களின் காரணமாக, எனக்கென்று ஒருத்தி இவ்வுலகில் பிறந்திருப்பாள். அவளைக் காணவேண்டும். கவிதைகளிலும், கதைகளிலும் கண்ட இன்பங்களை அவள் துணையுடன்தான் அனுபவிக்க வேண்டும், என்ற தன் வாலிப ஆசைகட்கு, வரம்பிட்டு வாழ்ந்தவன் அவன்.

எனவே, வேறொருவன் மனைவியாகிய பதஞ்சலியின் கவர்ச்சிமிக்க அழகைக் கண்ட சுந்தரத்தின் உள்ளம் அலைமோதித் தவித்தது. அப்போது பதஞ்சலி கணவனுடன் திரும்பிவரும் காட்சியைக் கண்டான். தான் எங்கோ முன்னர் கண்டு இரசித்த ஒரு ஓவியத்தின் ஞாபகம் அவனுக்குச் சட்டென்று வந்தது.

காட்டுப் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கும் ஒரு காட்டாற்றுக் கரை! அங்கே புற்றரையில் வில்லும் கையுமாகச் சாய்ந்திருக்கும் கார்வண்ண நிறங்கொண்ட சிவன்! அருகே அக்கினிக் கொழுந்துபோற் கையில் வேலுடன் முழங்கால்களை மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் உமையவள்! யாரோ ஒரு ஓவியன் தன் கைத்திறமையெல்லாம் ஒன்றுகூட்டி, சிவன் பார்வதியை வேடுவக்கோலத்தில் வரைந்திருந்த அந்தச் சித்திரத்தைச் சுந்தரலிங்கம் மிகவும் இரசித்திருந்தான்.

இதோ கண்ணெதிரே, இருண்ட காட்டைப்போன்ற கரிய நிறத்தவனான கதிராமன், வலிமையான உடலில் தசைகள் அசையக் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் வழமையாகக் காணப்படும் இளமுறுவல், இப்போ பதஞ்சலி ஏதோ கூறக்கேட்டு மலர்ந்திருந்தது. கருங்காலி மரத்தைச் சுற்றிப்படரும் அல்லைக் கொடிபோலப் பதஞ்சலி அவனை அணைந்து கொண்டே வந்தாள். தன்னுடைய அங்கங்களின் அழகும், கவர்ச்சியும் வேற்று மனிதனுடைய மனதில் விபரீதமான உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கக் கூடுமென்று அறியாத காரணத்தினால் அவள் ஓடி ஒளியவுமில்லை, நாணிக் கோணவுமில்லை.

கதிராமன் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருக்கப் பதஞ்சலி குடிசையை ஒட்டியிருந்த குசினிக்குள் நுழைந்து தேநீர் தயாரித்தாள். சுந்தரம் தண்ணிமுறிப்புக்கு வந்த நோக்கத்தை அறிந்த கதிராமன், தகப்பனுடைய வளவுக்குச் செல்லும் தேவையான உதவிகளைத் தானும் செய்வதாகக் கூறினான். கதிராமனுடைய அமைதி நிறைந்த பண்பும், கம்பீரமும் சுந்தரத்தின் மனதை மிகவும் கவர்ந்தன. 'இந்தாருங்கோ!' என்று பதஞ்சலி தேநீரை நீட்டிபாது, அவளுடைய விரல்களின் அழகை மிக அண்மையில் சுந்தரம் பார்த்தான். பவளம்போன்ற நகங்களுடன் நீண்டு வளர்ந்திருந்த அந்த விரல்கள் அவன் மனதைக் கொள்ளை கொண்டன.

கதிராமனிடமும், பதஞ்சலியிடமும் விடைபெற்றுக் கொண்டு கோணாமலையர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட சுந்தரத்தின் நெஞ்சிலிருந்து, மலையேறி இறங்கியவன்போல் பெருமூச்சு வெளிப்பட்டது.

வளரும் 

********************************************

நிலக்கிளி அத்தியாயம் -29-30

தண்ணீருற்றைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுந்தரலிங்கம், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி தேறியிருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தபோதும், அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி மேற்கொண்டு படிக்க வைக்கும் அளவுக்கு அவனுடைய தகப்பனாரின் பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை. அவன் வேலைக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி, தண்ணிமுறிப்பில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கும்படியாகவும், கூடிய கெதியல் அப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்படி செய்து, அவனை ஓர் ஆசிரியராக்கி வைப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இதன் காரணமாகச் சுந்தரலிங்கம், கோணாமலையரைச் சந்தித்து, அவருடைய உதவியுடன் ஒரு பாடசாலையை அமைக்கும் நோக்கத்துடனே தண்ணிமுறிப்புக்கு வந்திருந்தான்.

கோணாமலையரின் வீட்டையடைந்த சுந்தரலிங்கம், அவரிடம் தன் விருப்பத்தைக் கூறியதும், மலையருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காடியர் அடிக்கடி கூறுவதுபோன்று தண்ணிமுறிப்பும் இப்போ பெரிய இடமாக மாறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் தானே அந்த இடத்திற்குப் பெரியவன் என்பதை அங்கீகரிப்பதைப்போன்று எம்.பீயும், சுந்தரலிங்கத்தை; தன்னிடம் அனுப்பியிருந்தது மலையருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வேளாண்மை சீரழிந்ததால் மனம் புழுங்கிக் கொண்டிருந்த அவருக்கு, பள்ளிக்கூடம் அமைக்கும் விஷயம் மிகவும் ஆறுதலைக் கொடுத்தது. பாடசாலை அமைக்கப்பட்டுவிட்டால் தன் கடைசி மகனான ராசுவுக்கும் கல்வி கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுமென்று எண்ணினார். ஆதலால் வேண்டிய உதவிகளைத் தான் செய்து தருவதாக அவர் வாக்களித்தார்.

சுந்;தரலிங்கம் மறுநாள் கூலியாட்களுடன் வநது பள்ளிக்கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கோணாமலையர் வீட்டுக்கும், கதிராமனுடைய குடிசையிருந்த இடத்திற்கும் நடுவே சாலையோரமாக ஒரு கொட்டகை போடப்பட்டது. ஒரு கிழமைக்குள்ளாகவே கூரையும் கிடுகுகளினால் வேயப்பட்டு, கொட்டகையின் ஒருபக்கம் சிறியதொரு அறையாகவும் வகுக்கப்பட்டு விட்டது. கிராமத்துவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தனர். கதிராமன் பாடசாலைக்கு அரைச்சுவர் வைக்கும் வேலையில் கூடிய பங்கெடுத்து உதவினான். மலையர் அந்தப் பக்கம் அதிகமாக வரவேயில்லை. ஊருக்குப் பெரிய மனிதனான பின்னர் கண்டபடி இவ்வாறான வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வது தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவு என்று எண்ணினார்.

தை மாதத்தில் ஒரு நல்ல நாளில் தண்ணிமுறிப்பில் வாழும் எட்டுப்பத்துக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழெட்டு மாணவ, மாணவியரை வைத்துக்கொண்டு சுந்தரலிங்கம் பாடசாலையைத் தொடங்கினான. கோணாமலையர், காடியர் சகிதம் ராசுவைக் கூட்டிவந்து பாடசாலையில் சேர்த்துவிட்டுச் சென்றார். சுந்தரம் தன்னுடைய செலவிலேயே பிள்ளைகளுக்குப் புத்தகம், சிலேற்று முதலியவற்றை வாங்கிக் கொடுத்து, தன் உத்தியோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளும் துடிப்பில் உற்சாகமாக வேலை செய்தான்.

30.

அறுவடைக் காலம்போல், கமக்காரனுக்கு மகிழ்ச்சி தரும் நாட்கள் வேறில்லை. சிந்திய வியர்வையெல்லாம் செந்நெல்லாக இறைந்து கிடக்கையில், அவர்களுடைய உள்ளங்கள் களிப்பால் நிறைந்திருக்கும்.

அதிகாலையிலேயே அரிவாள் சகிதம் வயலில் இறங்கிவிட்டால் கதிராமனும், பதஞ்சலியும் போட்டி போட்டுக்கொண்டு கதிர்களை அறுத்துக் குவிப்பர். வேகமாக அருவி வெட்டும்போது, பதஞ்சலி எதையாவது கூறிவிட்டுக் கலகலவெனச் சிரிப்பாள். கதிராமன் அவளையும், அவளுடைய குறும்புகளையும் வெகுவாக இரசித்தவனாக அருவி வெட்டிக் கொண்டிருப்பான். தங்குதடையின்றி ஒழுங்கான வேகத்துடன் அவனுடைய கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்.

நண்பகலில் பாடசாலை முடிந்ததும் சுந்தரத்துக்குப் பொழுது போவதே பெரிய பாடாகவிருந்தது. புத்தகங்களைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு வாசித்தாலும், அவனுடைய  மனதில் அடிக்கடி பதஞ்சலியின் அழகிய முகம் தலைகாட்டிக் கொண்டிருக்கும். அவன் எவ்வளவோ தீவிரமாக, அலையும் தன் மனத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டாலும், விஷமம் செய்யும் சிறுவனைப் போன்று அவனுடைய மனம் அடங்கிப்போக மறுத்தது. மனம் முரண்டு பிடிக்கும் நேரங்களில் சுந்தரலிங்கம் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஏகாந்தத்தை நாடி கலிங்குவரை செல்வான். அங்கு குளக்கட்டின்மேல் அமர்ந்துகொண்டு, எதிரே தேங்கிக் கிடக்கும் நீரையும், மரங்களிலிருந்து கீதமிசைக்கும் பறவைகளையும் பார்த்து இரசிப்பான். குளக்கட்டின் கீழே பல சமயங்களில் மான்கள், மரைகள், மயில்கூட்டங்களையும் காண்பான்.

அழகான குழந்தைகள், மலர்கள், விலங்குகள், பறவைகள் அவை யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் நாம் பார்த்து இரசிக்கத்தானே செய்கின்றோம்? பதஞ்சலி இன்னொருவன் மனைவியாய் இருந்தாற்கூட அவளின் அழகை, தான் கண்நிறையப் பார்த்து இரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே கேட்டுக்கொள்வான். ஆனால் அவன் இதுவரை மனதில் வளர்த்த சில கொள்கைகள், அவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறும்.

இவ்வாறான போராட்டங்களை நடத்திய அவன் மனது ஆசை வயப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். நான் என்ன பதஞ்சலியையா பார்க்கப் போகிறேன்? இந்தக் காட்டு ஊரில் என்னுடன் பழகுவதற்கு வேறு யார் இருக்கின்றார்கள். கதிராமனைச் சந்தித்தாலாவது பொழுதுபோகும் என்று நினைத்து, அதன்படி அவனைச் சந்திக்கச் சென்றான்.

வளரும் 

நன்றி : http://www.appaal-tamil.com

Comments