நிலக்கிளி அத்தியாயம் : 31 - 32
சுந்தரலிங்கம் இரண்டாவது தடவையாகக் கதிராமனுடைய வளவுக்குச் சென்றபோது அறுவடை முடிந்திருந்தது. சாயங்கால நேரம், நெற்கதிர்களைச் சூடு வைப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.
சுந்தரம் அங்குபோய், அவர்களுடைய வேலையில் பங்குகொள்ள முயன்றபோது, 'என்ன வாத்தியார், நீங்கள் இந்த வேலையெல்லாம் செய்யிறதே!... பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ.... நாங்கள் செய்வம்!' என்று கதிராமன் அவனைத் தடுத்தான். சுந்தரத்திற்கு வயல் வேலைகளைச் செய்து பழக்கமில்லை. அவன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவனுடைய படிப்புக் கெட்டுவிடுமென அவனுடைய தகப்பனார் அவனை எந்த வேலைக்கும் அழைப்பதில்லை. இருப்பினும் சுந்தரம், கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து செய்த அந்த வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான்.
வெட்டிய கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கயிற்றினால் கட்டி அதைப் பதஞ்சலியின் தலையில் ஏற்றிவிடுவான் சுந்தரம். அவள் தன் கைகளை உயர்த்தித் தலையிலிருக்கும் கதிர்க்கட்டைப் பிடித்தவாறே சூட்டுக்களத்தை நோக்கி நடக்கையில், செப்புச் சிலையொன்று உயிர்பெற்று நடப்பதைப் போன்றிருக்கும். மாவக்கைகளைச் சேர்த்து வைக்கும்போதும், கதிர்க்கட்டைத் தலைக்குத் தூக்கிவிடும்போதும், இடையிடையே பதஞ்சலியினுடைய விரல்களின் ஸ்பரிசம் அவனுக்குக் கிட்டியது. அவளுடைய களங்கமற்ற முகத்தில் ததும்பிய அழகும், ஆரோக்கியமும் சுந்தரத்தினுடைய வாலிப உணர்வுகளையெல்லாம் மீட்டி நாதம் இசைக்கச் செய்துகொண்டிருந்தன.
பொழுது சாய்ந்துவிட்டபோது, சூடுவைக்கும் வேலை முடிந்த திருப்தி நிறைந்த உள்ளங்களுடன் அவர்கள் குடிசைக்குச் சென்றார்கள். கதிராமனும் சுந்தரமும் வாய்க்காலில் இறங்கிக் குளித்துவிட்டு வருவதற்கிடையில், பதஞ்சலி கிணற்றில் குளித்துவிட்டு, சுடச்சுட தேநீரை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் மினுக்கிவிட்ட குத்துவிளக்கைப் போன்று பளிச்சென்றிருந்தது. பகல் முழுவதும் வயலில் கடுமையாக உழைத்திருந்தாலும் பதஞ்சலியின் உடலில் சோர்வென்பதே இல்லை. குசினிக்கு முன்னால் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்துகொண்டு இரவுச் சமையலுக்கான ஏற்பாடுகளை மளமளவென்று செய்த பதஞ்சலி, முற்றத்தில் அமர்ந்திருந்த கதிராமன், சுந்தரம் ஆகியோரின் சம்பாஷணையில் உற்சாகமாகக் கலந்துகொண்டாள்.
காட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலைப் பாகற்காயோடு, இறைச்சிக்கருவாடு, கொச்சிக்காய் சேர்த்துப் பதஞ்சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும், வேலைசெய்து களைத்துப் போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித்தது. தண்ணிமுறிப்புக்கு வந்த நாள்தொட்டு, அவன் தானேதான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சமையற்பாகம் கைவராததால் அரைகுறை வேக்காட்டில் இறக்கிய சோற்றையும், உப்புப்புளி சரிவரப் போடாத கறிகளையும் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்குப் பதஞ்சலியின் பாகற்காய் தேவாமிர்தமாக இருந்தது. அதை எப்படிச் சமைத்தாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், 'இந்தப் பாவக்காய்க் கறி சோக்காயிருக்குது! இதை என்னண்டு சமைக்கறது?" என்று சுந்தரம் கேட்டதும், பதஞ்சலியை முந்திக்கொண்ட கதிராமன், 'வாத்தியார்!... உந்தச் சமையல் வேலையெல்லாம் விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப்பிடுங்கோ!... இனிச் சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லு தாராளமாய் இருக்கும்!" என்று உரிமையோடு சொன்னதும், 'அதுதான் சரி! நான் கேக்கோணும் எண்டு நினைச்சனான்! இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும்?" என்று கதிராமனின் கருத்தை ஆமோதித்தாள் பதஞ்சலி. இதைக் கேட்ட சுந்தரத்தின் இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒருபுறம் வேளக்கு வேளை சுவையான வீட்டுச்சாப்பாடு, மறுபுறம் பதஞ்சலியை அடிக்கடி காணும் வாய்ப்பு என்று எண்ணி அவனுடைய மனம் குதூகலித்தது.
அதன்பிறகு சுந்தரலிங்கம் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குக் கதிராமன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கினான். சுந்தரம் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவன். ஆண்மயில் பேடுகளைக் கண்டதும் தன் வண்ணத் தோகையை விரித்துத் தன் அழகையெல்லாம் காட்டுவதுபோன்று, சுந்தரமும் பதஞ்சலியின் அருகில் இருக்கையில் புதியதொரு மனிதனாகவே மாறிவிடுவான். சுந்தரலிங்கத்தினுடைய அந்தஸ்தும், நேர்த்தியான உடைகளும், சுவையான பேச்சும், கதிராமன் பதஞ்சலி இருவரின் மனங்களிலுமே அவனைப்பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தன. காட்டின் மத்தியிலே தனிமையில் வாழ்ந்த அவர்களுக்கு, சுந்தரத்தைப்பற்றி வேறு எந்த வகையிலும் எண்ணத் தோன்றவில்லை.
எனவே சுந்தரம் தங்களுடைய குடிசைக்கு வரும் சமயங்களிலெல்லாம் பதஞ்சலி விழுந்து விழுந்து உபசரிப்பாள். விளாம்பழங்களை உடைத்துத் தேன்விட்டுக் கொடுப்பாள். அதை உருசித்தவாறே, அவன் பல்வேறு நாடுகளைப் பற்றியும் உருசிகரமாகக் கூறுவான். அவன் கூறுவதைக் கதிராமன் மிக அமைதியாக ஒரு மாணவனைப் போலிருந்து அக்கறையோடு கேட்பான். பதஞ்சலியோ கதைகளின் தன்மைக்கேற்ப வியப்பைக் காட்டுவதும், கலகலவெனச் சிரிப்பதுமாக இருப்பாள்.
மலையர் வளவில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. மெசின் பழுது பார்ப்பதற்கும், சாராயத்துக்குமெனப் பணம் செலவழிந்து கொண்டேயிருந்தது. மணியம் உழவுயந்திரத்தை இயக்கப் பழகிக்கொண்டதன் பின், அவனுடைய குரு சச்சிதானந்தம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டான். ஆனால் மணியனோ தன் குருவை மிஞ்சும் அளவுக்கு இப்போ பல விஷயங்களிலும் முன்னேறியிருந்தான். இதன் காரணமாக, ஆங்காங்கு சில்லறையாகப் பெற்ற கடன்களை மலையர் தன் நெல் முழுவதையும் விற்றுக் கொடுத்தும் அவை தீரவில்லை. விரைவில் தான் கிராமசபை அங்கத்தவராகி, இதுவரை பட்ட கடன்களையெல்லாம் ஒரு கொந்துறாத்து வேலையிலேயே சம்பாதித்து, தீர்த்துவிடலாம் என்று மலையர் தீவிரமாக நம்பினார்.
32.
சுந்தரலிங்கம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கதிராமனிடம் கொடுக்க முயன்றபோது, கதிராமன் அதை பெற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டதால், சுந்தரலிங்கம் ஒவ்வொரு வார இறுதியிலும், தன்னுடைய வீட்டுக்குச் சென்று திரும்புகையில், சீனி, கோப்பிக் கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பான்.
அன்றும், அவன் தன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது ஒரு பலாப்பழத்தையும் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்திருந்தான். தண்ணீருற்றுப் பலாப்பழங்கள் சுவைக்குப் பெயர்பெற்றவை. பலாப்பழத்தைக் கண்ட பதஞ்சலி, குதூகலத்துடன் ஓடோடிவந்து அதைப் பெற்றுக் கொண்டதுடன், உடனடியாக அதைப் பிளந்து கீலங்களாக வெட்டவும் ஆரம்பித்தாள்.
குடிசையின் பக்கத்தேயிருந்த மாலுக்குள் உட்கார்ந்து, கதிராமனுக்கென வாங்கிவந்த பீடிக்கட்டு இரண்டையும் அவனிடம் கொடுக்கையில், பதஞ்சலி பலாப்பழப் கீற்றுக்களுடனும், தேங்காய் எண்ணெய்ப் போத்தலுடனும் உள்ளே வந்தாள். பலாப்பழக் கட்டிகளை அவர்கள்முன் வைத்துவிட்டுத் தன் கையில் தேங்காயெண்ணையை விட்டுக்கொண்டு, அதைக் கதிராமனுடைய உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பதஞ்சலி பூசினாள். அவள் கணவனுக்குச் செய்யும் பணியின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். கதிராமனுக்கு எண்ணெய் பூசி முடிந்ததும், சுந்தரத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட பதஞ்சலி, அவனுடைய கைகளைப் பிடித்து எண்ணெய் பூச ஆரம்பித்தாள். அவள் இவ்வாறு செய்வாளென்று சுந்தரலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. செம்பஞ்சு போன்ற அவளுடைய சிவந்த குளிர்மையான விரல்கள் தன்னுடைய உள்ளங்கைகளைத் தொட்டுத் தடவியபோது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவனுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முகம் குப்பென்று ஓடி வியர்த்தது. ஆனால் பதஞ்சலியின் உடலிலோ, உள்ளத்திலோ ஏதொரு பதட்டமும் இல்லை. ஒரு குழந்தையின் கள்ளங்கபடற்ற வெள்ளை மனதோடு, தன் சகோதரனின் கைகளில் சாதாரணமாகப் பூசி விடுவதுபோல் அவள் ஆறுதலாக எண்ணையைப் பூசிக்கோண்டே, 'நல்லாய் எண்ணை பூசோணும்! இல்லாட்டில் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக் கொள்ளும்!" என்று கூறிச் சிரித்துவிட்டுத் தன்னுடைய பங்கையெடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
இந்த நிகழ்ச்சியினால் வெகுவாகப் பரபரப்படைந்திருந்த சுந்தரம், உள்ளத் தவிப்புடன் கதிராமனைக் கூர்ந்து கவனித்தான். அவனும் அவள் செய்கையை மிகவும் இயல்பானதொன்றாகக் கருதியவன்போல், பலாப்பழச் சுளைகளைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தான். பல நூல்களைப் படித்து, பண்பாடு, நாகரீகம் முதலியவற்றைத் தெரிந்;துகொண்ட சுந்தரத்தின் படபடப்பு அடங்க வெகுநேரமாயிற்று.
அன்றிரவு கதிராமன் வீட்டில் உணவருந்திவிட்டுச் சென்ற சுந்தரத்திற்கு உறக்கம் வரவில்லை. வெளியே சென்று உலாவினால் நல்லதுபோற் தோன்றியது. பாடசாலை அறையைவிட்டு வெளியே வந்து, வாய்க்காலோரத்தில் விழுந்துகிடந்த ஒரு பட்ட மரத்தில் அமர்ந்து கொண்டான். வானவெளியெங்கும் ஒரே நட்சத்திரக் கூட்டமாக இருந்தது. அந்த விண்மீன்களில் பல மெல்லப் பறந்துவந்து அந்தக் காட்டுக் கிராமத்தின்மேல் இறங்கியதைப் போன்று, ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.
சுந்தரம் தன் உள்ளங்கைகளை ஒருதடவை பார்த்துக் கொண்டான். உள்ளத்தைக் கிளறச் செய்யும் அந்த மென்மையும் கதகதப்பும் நிறைந்த ஸ்பரிசம் தன்மேல் படர்வது போன்றதொரு உணர்வு! அந்த உணர்வு அவனுடைய உணர்ச்சிகளையெல்லாம் அலைக்கழித்தது. மேலே சட்டை அணியாமல், பூரித்திருக்கும் இளமார்புக்கு மேலே குறுக்குக் கட்டாகச் சேலையை உடுத்திக்கொண்டு, பதஞ்சலி தன் கைகளைப் பிடித்து எண்ணெய் பூசிய அனுபவம் மீண்டும் அவன் நெஞ்சில் ஒரு நிகழ்ச்சியாகத் தெரிந்தது. பலாப்பழத்தின் இனிமை கலந்த நறுமணம் காற்றில் வந்து பரவுவது போன்றொரு பிரமை. இனிமேல் ஆயுட்காலம் முழுவதுமே எப்போதாவது பலாப்பழத்தை நுகரநேர்ந்தால் அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் தன் நெஞ்சில் இனிக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.
தூரத்தே இராக் குருவியின் குரல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது. விட்விட்டு இசைக்கும் அந்த ஓசை ஏறத்தாழக் குயிலினது போலவே இருந்தாலும், அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அந்த ஒற்றைக்குரல் எல்லையற்றதொரு சோகத்தைச் சுமந்துகொண்டு, மின்மினிகள் ஒளிசிந்தும் அந்த இரவிலே அலைகளாய்ப் பரவுவது போன்றிருந்தது. 'அந்த இராக்குருவியின் கீதம் ஏன் இவ்வளவு சோகம் ததும்புவதாய் இருக்கின்றது? அதன் துணைதான் எங்கே?"
'எனக்கென்று ஒருத்தி இந்த உலகில் எங்கோ பிறந்திருப்பாள். அவளை ஒருநாள் நான் நிச்சயம் கண்டுகொள்வேன். கவிதைகளிலும், கதைகளிலும் சுவைத்த இன்பப் பொருளை, அவை எழுப்பிய நளினமான கனவுகளை, அவள் துணையுடன் நனவாக்கிச் சுவைக்க வேண்டும்.... அந்த வேளை எப்போது வரும்?" என ஏங்கியிருந்த சுந்தரம், இன்று பதஞ்சலியைக் கண்டபின், 'தனக்கென்றே பிறந்தவள் இன்று பிறனொருவன் மனைவியாய் இருக்கும் நிலையிலா தன் வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்?" என்று வெகுவாக வேதனைப்பட்டுக் கொண்டான். இராக் குருவியின் சோகீதம் கேட்கும் அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அவனுடைய கண்கள் கலங்கிக் கொண்டன.
'என்னுடைய விதி!" என்று தன்னையே நொந்துகொண்ட சுந்தரத்திற்குத் தான் படித்த கதைகளிலும், பார்த்த சினிமாப் படங்களிலும், காதல் கைகூடாத காதலனோ காதலியோ, தாம் காதலித்தவர் வேறு ஒருவரை மணமுடிக்கும் சந்தர்ப்பத்தில், 'இனி அவள் என் தங்கை" என்றோ, அல்லது 'இனி அவர் எனக்கு அண்ணன்" என்றோ காதலைச் சகோதர பாசமாக்கிக் கொள்ளும் கட்டங்கள் நினைவுக்கு வந்தன. ஆம்! ஏன் அவ்வாறே நானும் அவளை என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படுத்திப் பழகக் கூடாது?.... எனக்குச் சகோதரிகள் எவரும் இல்லைத்தானே! பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நான் எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவிடை செய்வதுபோல் எனக்குச் செய்வதில்லையா? அவளால் அது முடியும்போது, கதிராமனால் அவள் அப்படிப் பழகுவதை இயல்பாக ஏற்க முடிந்தபோது, என்னாலும் அது நிச்சயமாக முடியும். ஆம்! பதஞ்சலி என் தங்கை! மீண்டும் மீண்டும் அந்தச் சொற்றொடரை வாய்விட்டுக் கூறிக்கொண்டு எழுந்த சுந்தரம், பாடசாலை அறைக்குட் கிடந்த தன் படுக்கையை நோக்கிச்சென்றான்.
விளக்கை அணைத்துவிட்டுப் படுத்த அவனுக்கு உறக்கம் வரவேயில்லை. இருளில் விழிகளைத் திறந்து கொண்டிருந்தவனுக்கு மீண்டும் பலாப்பழத்தின் இனிய மணம் வீசுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்மையின் மென்மையும் கதகதப்பும் நிறைந்த பதஞ்சலியின் விரல்களின் ஸ்பரிசம் அவன் கைகளுக்குள் குறுகுறுப்பதைப் போன்றதொரு பிரமை! விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு, தன் கைகளை ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். 'பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை!" என்று உரத்த குரலில் கூறியும், அந்தச் சொற்றொடர் அவன் உள்ளத்திற்குள் புகுந்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.
வளரும்
***************************************************
நிலக்கிளி அத்தியாயம் 33-34
இந்தச் சம்பவத்திற்குப் பின் சுந்தரலிங்கம், பதஞ்சலி வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாலும் முன்போல் அங்கு அதிகம் தங்குவதில்லை. சிலவேளைகளில் அந்தச் சமயங்களில் கதிராமன் அங்கு இருக்கமாட்டான். பதஞ்சலி வழமைபோலவே அந்த நேரங்கிளலும் சுந்தரத்தை அன்போடு வரவேற்று உணவைப் பரிமாறுவாள். அவன் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவ வேண்டுமென்று பறிப்பாள். காட்டின் அமைதியான சூழலில் அந்தச் சின்னக் குசினிக்குள் அவனுக்கு மிக அண்மையிலிருந்து பதஞ்சலி உணவளிக்கையில் அவனுடைய மனம் அலையாய ஆரம்பித்துவிடும். அவளை நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வந்துவிடுவான். படித்து நாலுபேருடன் பழகி நாகரீகமடைந்திருந்த சுந்தரத்திற்குத் தன்மீதே நம்பிக்கை இருக்கவில்லை. 'ஏன் வாத்தியர் சாப்பிட்ட உடனை ஓடுறியள்?" என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். 'வாத்தியார் கனக்கப் படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானாக்கும், நெடுக யோசிச்சுக்கொண்டு திரிவினம்!" என்று பதஞ்சலி தனக்குள் நினைத்துக் கொள்வாள். தண்ணீருற்றில் அவள் படித்த சைவப்பாடசாலையின் பெரியவாத்தியார் அப்படித்தான் எந்தநேரமும் சிந்தனை வாய்ப்பட்டிருப்பார்.
பொழுதும் போகாமல் புத்தகங்களிலும் சிரத்தை செல்லாமல் மனப்போராட்டங்களில் சதா உழன்றுகொண்டிருந்த சுந்தரம், இப்படியான சமயங்களில் கோணாமலையரின் வீட்டுக்குச் செல்வான். பாலியார் சுந்தரத்தைத் தன் மகனாகவே எண்ணிப் பாசங்காட்டினாள். தினம் கதிராமன் வீட்டிற்குச் சாப்பாட்டுக்குச் சென்றுவரும் சுந்தரத்தைப் பார்ப்பதே, கதிராமனையும் பதஞ்சலியையும் காண்பது போலிருந்தது பாலியாருக்கு. மலையர் அங்கு இல்லாத சமயங்களில் சுந்தரம் அங்கு வந்தால், இன்றைக்கு என்ன கறி? என்பது தொட்டுப் பதஞ்சலி முழுகாமல் கொள்ளாமல் இருக்கிறாளா என்பது வரையில் துருவித்துருவி அறிந்துகொள்வாள். எல்லையற்ற பிரிவுத்துயரில் ஆழ்ந்திருந்த அவளுக்குச் சுந்தரத்தின் வருகை மிகவும் ஆறுதலையளித்தது.
34.
நாட்கள் கழிந்தன. வயலிலே வேலையில்லை. கதிராமன் அடிக்கடி காட்டுக்கு நாய்களையும் கூட்டிச் சென்று உடும்பு, தேன் முதலியவற்றைக் கொண்டு வருவான். இன்றும் அவன் மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் காட்டுக்குப் புறப்படும் சமயம் சுந்தரமும் பாடசாலைவிட்டு சாப்பாட்டுக்காக வந்திருந்தான். சுந்தரத்தின் கையில் மாதசஞ்சிகை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட பதஞ்சலி ஆவலுடன் வாங்கிப் பார்த்தாள். வழவழப்பான அதன் அழகிய அட்டைப்படத்தைப் பார்த்தவள், வாய்க்குள் எழுத்துக்கூட்டி அந்தச் சஞ்சிகையின் பெயரை வாசித்தாள். அதைக் கண்ட சுந்தரம், 'பதஞ்சலிக்குப் புத்தகம் வாசிக்கத் தெரியுமே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'ஓ! அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள்!" என்று கதிராமன் பெருமையோடு பதில் கூறினான்.
கதிராமனின பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, 'நீ படிக்கேல்லையோ கதிராமு?" என்று சுந்தரம் கேட்டான். 'நான் கைக்குழந்தையாய் இருக்கேக்கை அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம். இஞ்சை எங்காலை பள்ளிக்குடம்! இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்குடம்!" என்று சிரித்தபடியே பதில் சொல்லிய கதிராமனை ஏறிட்டுப் பார்த்தான் சுந்தரம். கள்ளமில்லாத உள்ளம். அமைதியான குணம். ஆரோக்கியம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்தப் பல்கலைக்கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள்தானா இவனுக்கு இத்தனை சிறப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்று ஒருகணம் வியந்துபோனான் சுந்தரம்.
'வாத்தியார்! சாப்பிட்டிட்டுப் பதஞ்சலிக்கு உந்தப் புத்தகத்தை வாசிக்கக் காட்டிக் குடுங்கோ! அவளெண்டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே!" என்ற கதிராமன், 'சரி எனக்கு நேரமாகுது! நான் காட்டுக்குப் போறன்!" என்று விடைபெற்றுக் கொண்டான்.
சுந்தரத்திற்கு சோறு பரிமாறும் வேளையிற்கூடப் பதஞ்சலி அந்தச் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, படங்களைப் பார்ப்பதும் எழுத்துக்கூட்டிப் படிப்பதுமாக இருந்தாள். புதியதொரு விளையாட்டுப் பொம்மையைக் கண்ட குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. சாப்பிட்டானதும் மால் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டான் சுந்தரம். மண்போட்டு உயர்த்தி, பசுஞ்சாணமும் முருக்கமிலைச் சாறும் கலந்து மெழுகப் பெற்றிருந்த அந்தத் திண்ணை தண்ணென்றிருந்தது.
சட்டிபானையை மூடிக் குசினியைச் சுத்தப்படுத்திக் கைகளை அலம்பிக்கொண்டு, மாலுக்கு வந்த பதஞ்சலி, திண்ணையின் கீழே அமர்ந்துகொண்டாள். மிகவும் ஆர்வத்துடனும் பயபக்தியுடனும் புத்தகத்தைத் திண்ணையின்மேல் வைத்து விரித்த அவளைக் கூர்ந்து கவனித்தான் சுந்தரம். தற்போதுதான் கழுவப்பட்ட அவளுடைய சிவந்த கைகள், கரும்பச்சை நிறமான திண்ணையின்மேல் செந்தாமரை மலர்களைப் போன்று விரிந்திருந்தன. படங்களைப் பார்த்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் இது பாடப்புத்தகமே?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். 'இல்லை பதஞ்சலி! இது கதைப் புத்தகம். சின்னக் கதையளும், வேறை, பாட்டுக்கள், கட்டுரையளும் உதிலை கிடக்கு!" என்று சுந்தரம் சொன்னதும், ' ஆ! கதைப் புத்தகமே! எனக்கு ஒரு கதையை வாசிக்கக் காட்டித் தாருங்கோ வாத்தியார்! கதை கேக்கிறதெண்டால் எனக்குச் சரியான விருப்பம்!" என்று களிப்புடன் கூவினாள் பதஞ்சலி.
சுந்தரம் அந்தச் சஞ்சிகையை வாங்கி அதில் இருந்த ஒரு கதையைக் காட்டி, 'எங்கை இதை வாசி பாப்பம்!" என்றான். அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மணத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம்செய்து மனதில் பதிக்கமுயன்ற 'பதஞ்சலி என் தங்கை!" என்ற சொற்றொடரை அறவே மறந்துபோனான்.
அவள் மனதுக்குள் எழுத்துக்கூட்டிக் கதையின் தலைப்பைப் படித்தாள். 'இரண்டு உள்ளங்கள்" என்று ஒருதரம் சொல்லிப் பார்த்தவள், 'அதென்ன வாத்தியார் உள்ளங்கள்?" என்று வினவினாள். 'எங்கடை மனம் இருக்கெல்லே! அதுக்கு இன்னொரு பேர்தான் உள்ளம்!" என்று சுந்தரம் விளக்கியதும், அவள் மேலே தொடர்ந்து எழுத்துக்கூட்டி உரத்து வாசிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் அவள் வாசிப்பதையே கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தான். இளமை கொழிக்கும் அவள் முகத்தின் வண்டுபோன்ற கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்த அழகு அவன் மனதை ஈர்த்தது.
கதையின் முற்பகுதி எளிமையான சொற்களால் ஆக்கப்பட்டிருந்ததால், வசனங்களைப் படிக்கையிலேயே அவள் ஒரளவுக்கு அர்த்தங்களைப் புரிந்துகொண்டாள். இரண்டாவது பந்தியில் காதல் என்ற வார்த்தை வந்தபோது, அவள் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்து, 'காதலெண்டால்?" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தொயவில்லை. அவனையே பார்த்த அவள், அவனுடைய பதில் வரத் தாமதமானதும், 'என்ன? வாத்தியாருக்கே தெரியாதோ!" என்ற கேலியாகச் சிரித்தாள். 'காதல் எண்டால் கலியாணம் முடிக்கமுதல் ஆம்பிளையும் பொம்பிளையும் ஒருதரை ஒருதர் விரும்பியிருக்கிறதுதான்!" என்று சுந்தரம் விளக்கியபோது, 'எல்லாரும் கலியாணம் முடிக்கமுதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே?" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட்டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்தபின் பாலியார் மூலமாகக் கதிராமன் பதஞ்சலியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், ' ஏன்? நீயும் கதிராமனும் கலியாணம் முடிக்கமுதல் ஒருத்தரையொருதர் விரும்பியிருக்கேல்லையே! அதைத்தான் காதல் எண்டு சொல்லுறது!" என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப் போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவிபோலக் கலகவென்று சிரித்தாள் பதஞ்சலி! 'இல்லை வாத்தியார்! நாங்கள் கலியாணம் முடிக்கமுதல் இப்ப உங்களோடை கதைக்கிறது, சிரிக்கிறது போலைதான் அவரோடையும் கதைக்கிறனான்.... பின்னை அவரைக் கலியாணம் முடிக்கோணும் எண்டு நினைச்சுப் பழகேல்லை!" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சலி. அவளுக்குத் தான் கதிராமனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனோடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்குப் பெரிய புதிராக இருந்தது. அப்படியென்றால் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்கவில்லையா என்று எண்ணியவன், 'அப்ப உனக்குக் கதிராமனிலை விருப்பம் இல்லாமலே அவனை முடிச்சனி?" என்று கேட்டதற்கு, 'இல்லை வாத்தியார்! எனக்கு அவரிலை விருப்பம், விருப்பமில்லை எண்டில்லை.... அவர் வந்து தன்னை முடிக்க விருப்பமோ எண்டு கேட்டார். நான் ஒண்டும் பேசாமல் நிண்டன்.... பிறகு கலியாணம் முடிஞ்சுது!" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம் நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலைமையைக் கவனிக்காது குதூகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். 'வாத்தியார்! நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லைத்தானே? நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளையை இப்ப விரும்பிக் கொண்டிருக்கிறியளே?" எனப் பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளை மலர்த்திக்; கேட்டபோது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனாள். 'என்ன வாத்தியார் அழுறியள்?" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளை மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கரகரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி! நானும் ஒருத்தியை விரும்பிறன்தான்.... அது அவளுக்குத் தெரியாது..." என்று கூறிவிட்டு, வயல்வெளிக்கு அப்பால் தெரிந்த இருண்ட காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கலங்கிய கண்களையும், கவலை தோய்ந்த முகத்தையும் கண்ட பதஞ்சலியின் விழிகளும் கலங்கிவிட்டிருந்தன. இயற்கையாகவே குதூகலமும், உற்சாகமும் நிறைந்தவளாய்ப் பதஞ்சலி இருந்தாலும், அவள் மிகவும் இளகிய இதயம் படைத்தவள். தன்னுடன் பழகும் எவர்மீதும் பாசத்தைச் சொரியும் அவள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அழுதுவிடக் கூடியவளாக இருந்தாள்.
சில நிமிடங்களுக்குள்ளேயே தன் உணர்ச்சிகளைச் சாதுரியமாக மறைத்துக்கொண்ட சுந்தரம், அவளுடைய கலங்கிய விழிகளைக் கவனித்துவிட்டு, 'இதென்ன பதஞ்சலி குழந்தைமாதிரி!" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. 'ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது, பயப்பிடக்கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார்... நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்?" என்று பதஞ்சலி தனக்குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், 'சிச்சீ! எனக்கென்ன கவலை! ... நாளைக்கு மிச்சக் கதையை வாசிக்கக் காட்டித் தாறன்.... இப்ப எனக்கு வேறை வேலை இருக்குது ... நான் போறன்" என்று கூறிவிட்டு அவன் சென்ற பின்பும், 'வாத்தியார் ஏன் அழுதவர்?" என்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டாள் பதஞ்சலி. தன்னுடைய சின்னஞ்சிறு உலகத்தைவிட வெளியுலக விஷயங்களை அறிந்திராத பதஞ்சலியின் வினாவுக்கு விடையெதுவும் கிடைக்கவேயில்;லை. அதன்பின் அவள் அந்த நிகழ்ச்சியை மறந்துபோய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எழுத்துக்கூட்டிப் படிப்பதில் உற்சாகமாக ஆழ்ந்து போனாள்.
வளரும்
****************************************************
நிலக்கிளி அத்தியாயம் 35-36
வார இறுதியில் சனிஞாயிறு விடுமுறைக்கு வழக்கமாகத் தன் வீட்டுக்குச் செல்லும் சுந்தரலிங்கம், இம்முறை போகவில்லை. அன்று காலையில் கதிராமனுடன் கூடிக்கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பும் வேளையில் மழைபிடித்துக் கொள்ளவே இருவரும் தெப்பமாக நனைந்துவிட்டனர். கிராமத்தை நெருங்கியதும், 'நீ வீட்டை போ, நான் சாறத்தை மாத்திக்கொண்டு வாறன்" என்று கதிராமனை அனுப்பிவிட்டுத் தன் இருப்பிடத்திற்குச் சென்ற சுந்தரத்திற்குத் தேகம் ஒரே அலுப்பாகவிருந்தது.
பகல் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் அலைக்கழிந்த அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அன்றிரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன், அடுத்தநாள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியவில்லை. பேசாமற் படுத்திருந்த அவனைத் தேடிவந்த கதிராமன், அவனுடைய உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனான். அனலாகக் கொதித்தது சுந்தரத்தினுடைய உடம்பு. 'இஞ்சை தனியக் கிடந்து என்ன செய்யப் போறியள்?... வாருங்;;;;கோ வீட்டை போவம்!" என்று அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான் கதிராமன்.
மாலுக்குள் படுக்கையைப் போட்டு அவனைப் படுக்கவைக்க உதவிசெய்த பதஞ்சலி, அவனுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தபோது நெருப்பாகத் தகித்தது. அவள் தயாரித்த கொத்தமல்லிக் குடிநீரை வாங்கிக் குடிக்கும்போது சுந்தரத்தின் விரல்கள் குளிரால் நடுங்கின. தன்னுடைய சேலையொன்றைக் கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டு, பதஞ்சலி வீட்டுவேலையைக் கவனிக்கச் சென்றாள். கதிராமன் அன்று முழுவதும் எங்கும் செல்லாமல் சுந்தரத்துடனேயே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டான்.
சுந்தரத்திற்குக் காய்ச்சல் விடவேயில்லை. எனவே இருட்டும் சமயத்தில் கதிராமன் லைற்றையும் எடுத்துக்கொண்டு குமுளமுனைச் செல்லையாப் பரியாரியிடம் மருந்து வாங்கி வருவதற்காகப் புறப்பட்டான். 'கோடை மழை பெய்தது, காலடியைக் கவனமாய்ப் பாத்துப் போங்கோ!" என்று அவனை வழியனுப்பிவிட்டு, காய்ச்சலில் முனகிக்கொண்டு கிடக்கும் சுந்தரத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் பதஞ்சலி.
காய்ச்சலின் வேகுரத்தில் தன்னை மறந்து கிடந்த சுந்தரம், மறுபடியும் கண்களைத் திறந்தபோது, தன்னருகிலே இருக்கும் பதஞ்சலியைக் கைவிளக்கின் ஒளியிலே கண்டான். அவன் விழிகளைத் திறந்து பார்த்ததைக் கண்ட பதஞ்சலி, அவன் முகத்துக்கு நேரே குனிந்து, 'என்ன வாத்தியார் செய்யுது?" என்று கவலையோடு கேட்டபோது, சுந்தரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.
அவளைத் தன்னருகிலே காண்கையில், துயரம் நிறைந்த அவளுடைய விழிகளைப் பார்க்கையில், காலங்கள்தோறும் தன்னுடன் அவள் தொடர்பு கொண்டவள்போல் அவனுக்குத் தோன்றியது. ஏழு பிறவிகளிலும் என்னைத் தொடர்ந்து வரவேண்டியவள், ஏன் இன்று இன்னொருவன் மனைவியாக என்னைச் சந்தித்தாள்? இந்தச் சந்திப்பு ஏன்தான் என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது? என்று மிகவும் வேதனைப்பட்டான் சுந்தரம். வேதனை முகத்தில் நிறைந்து விழிகள் கலங்கியபோது, பதஞ்சலி இரக்கத்தால் உந்தப்பட்டவளாக அவனுடைய நெற்றியை மெதுவாக வருடிக் கொடுத்தாள். அவளின் குளிர்ந்த ஸ்பரிசம் தன் நெற்றியின்மேல் தவழும் அந்தப் பொழுதிலேயே தன்னுடைய உயிர் போய்விடக் கூடாதா என்று அவன் ஏங்கினான். ஏக்கத்தின் விளைவாகச் சுரம் அதிகமாகிக் குலைப்பன் வந்து உடல் வெடுவெடென்று நடுங்கியது. தூக்கித்தூக்கிப் போடும் அவனுடைய உடலை எப்படியாவது அழுத்திப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற தீவிரத்தில், பதஞ்சலி அவனுடைய உடலை நடுங்கவிடாது அப்படியே தன்னுடனயே சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். சுந்தம் சுரவேகத்தில், 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று வாயோயாமல் பிதற்றிக் கொண்டிருந்தான்.
குமுளமுனையிலிருந்து திரும்பிவந்த கதிராமன் வாங்கிவந்த குளிசையைக் கரைத்துக் கொடுத்ததும் ஒருதரம் வாந்தியெடுத்த சுந்தரத்தின் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து, காலையில் முற்றிலும் விட்டிருந்தது.
அவனுக்கு மிகவும் பரிவோடு பணிவிடை செய்த கதிராமனையும் பதஞ்சலியையும் பார்க்கையில், சுந்தரத்தினுடைய மனம் நெகிழ்ந்தது. இந்தக் காலத்திலே இப்படியும் ஒரு பிறவிகளா? காட்டின் நடுவே மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தும் இவர்களுடைய உள்ளங்கள்தாம் எத்தனை தூய்மையானவை! பாசத்தையும், பரிவையும் தவிர வேறெதையுமே காட்டத் தெரியாத இவர்கள் சாதாரண மனிதர்களல்ல! இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்! இன்றைய உலகின் சாதாரண மக்கள் மத்தியில் பிறந்து, அவர்களிடையே வளர்ந்து, கறைபடிந்த உள்ளங் கொண்டவனாகிய நான், எதற்காக இந்த இளந்தம்பதிகளின் வாழ்விலே வந்து குறுக்கிடடேன்? என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்த சுந்தரலிங்கம், அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தன்னுடைய அறையிலேயே அன்றிரவு போய்ப் படுத்துக்கொண்டான்.
36.
ஒருவார விடுமுறையில் வீட்டுக்குச் சென்று உடலைத் தேற்றிக்கொண்ட சுந்தரலிங்கம், ஞாயிறன்று காலையிலேயே தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டுவிட்டான். 'இன்று லீவுதானே! நாளைக் காலையில் போகிலாமே!" என்று அவனுடைய தாய் தடுத்தபோதும், அவன் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
காலை பத்துமணிபோல் தண்ணிமுறிப்பை வந்தடைந்தவன் நேரே கதிராமன் வீட்டுக்குச் சென்றான். முழுகிவிட்டுத் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டிருந்த பதஞ்சலி இவனைக் கண்டதுமே, 'எப்பிடி வாத்தியார் இப்ப சுகமே!... இண்டு முழுக்கக் காகம் கத்திக்கொண்டிருந்தது... நீங்கள்தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்!" என்று மகிழ்ச்சியுடன் கூறி அவனை வரவேற்றாள்.
வீட்டில் நின்ற விடுமுறை நாட்களில் சுந்தரலிங்கம் தினந்தோறும் ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, 'இறைவா! என்னுடைய உள்ளத்திலிருந்து இந்தக் கீழ்த்தரமான நினைவுகளையெல்லாம் நீக்கிவிடு!" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தான். ஒருவாரம் பதஞ்சலியைக் காணாமல் இருந்ததனால் அவனுடைய உணர்வுகள் ஓரளவு தணிந்துபோய் இருந்தன. ஆனால் இன்று, பதஞ்சலி தன் நீண்ட கருங்கூந்தலைத் தோகைபோல் விரித்து, முகமெல்லாம் மலர அவனை அன்புடன் வரவேற்றபோது, ஊற்றங்கரை வினாயகர் அவனை முழுமுழுக்கக் கைவிட்டுவிட்டார்.
கதிராமன் காட்டுக்குப் போயிருந்தான். திண்ணையில் அமர்ந்து பதஞ்சல தன் கூந்தலை ஆற்றும் அழகையே கண்கொட்டாமல் பார்த்தான் சுந்தரம். அவனுடைய பார்வையைக் கவனித்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் அப்பிடிப் பாக்கிறியள்?" என்று குழந்தைபோலக் கேட்டதற்கு, 'உன்ரை தலைமயிர் எவ்வளவு நீளமாய், வடிவாய் இருக்குது தெரியுமே!" என்று மனந்திறந்து சுந்தரம் கூறியபோது, ஒரு பள்ளிச் சிறுமியைப்போல் பதஞ்சலி வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவளுடைய கள்ளமில்லாத புன்னகையைக் கண்ட சுந்தரம், தான் அப்படிச் சொன்னதற்காகத் தன்னையே நொந்து கொண்டான். இன்று துணிந்து அவளுடைய அழகைப் பாராட்டியவன் நாளைக்கு என்னென்ன செய்வேனோ என்ற தவிப்பில் பேச்சை வேண்டுமென்றே வேறுதிசைக்கு மாற்றினான்.
பதஞ்சலி கொண்டவந்த கோப்பியை வாங்கிப் பருகியவன், 'கதை வாசிக்கிறது இப்ப எந்த அளவிலை இருக்குது?" என்று ஆவலுடன் வினவினான். 'இரண்டு மூண்டு கதை வாசிச்சுப் பாத்தன், ஆனால் சில சொல்லுகள் விளங்கேல்லை வாத்தியார்!" என்றாள் பதஞ்சலி. அவன், 'அதென்ன சொல்லுகள்?" என்று கேட்டபோது, பதஞ்சலி தலையை ஆற்றுவதை நிறுத்தி அச் சொற்களை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தாள். விழிகளைத் தூரத்தே செலுத்தி அப்படித் தீவிரமாகச் சிந்திக்கையில் அவளுடைய முகம் கனவு காண்பதுபோல் மிக அழகாக இருந்தது. திடீரென்று அந்த அழகிய முகத்திலே ஓரு சலனம்! 'கற்பு எண்டு புத்தகத்திலை எழுதிக் கிடக்குது... அப்பிடியெண்டால் என்ன வாத்தியார்?" என்று கேட்டாள் பதஞ்சலி. முன்பொரு நாள் அவள் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டபோது, தான் பெரும் பிரயத்தனப்பட்டு அதை அவளுக்கு விளக்கியது ஞாபகம் வந்தது. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறியதுபோன்று, கற்பு என்பதற்கு, அதுவும் ஒரு இளம்பெண்ணுக்கு விளக்குவது அவனுக்குப் பெரிய சங்கடமாக இருந்தது.
சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்தவன், 'கற்பு எண்டு சொன்னால்.... ஒரு பொம்பிளை தனக்குச் சொந்தமில்லாத வேளை ஆம்பிளையோடை நெருங்கிப் பழகினால்... அவளுக்குக் கற்பில்லையெண்ட சொல்லுவினம்... அப்பிடி நடக்காத பொம்பிளைதான் கற்புடையவள்.." என்று சுந்தரம் இழுத்து இழுத்துக் கூறியபோது, பதஞ்சலியின் முகத்தில் சந்தேகம் கோடிட்டது. மௌனமாக ஆழ்ந்து யோசித்த அவள், 'ஏன் வாத்தியார்.... நீங்கள் எனக்கு ஒரு பிறத்தி ஆம்பிளைதானை... உங்களோடை நான் நெருங்கிப் பழகிறன்தானே! .... அப்பிடியெண்டால் நான் கற்பில்லாதவளே?" என்று கேட்டதும் சுந்தரம் பதறிப்போய், 'சிச்சீ! அப்பிடி இல்லை பதஞ்சலி!.. அன்பாய்க் கதைச்சு உன்னைப்போலை நெருங்கிப் பழகிறதைக் கற்பில்லை எண்டு சொல்ல முடியாது!.... தொட்டுப்பழகி நடந்தால்தான் வித்தியாசமாய்க் கதைப்பினம்!" என்று கூறினான். அப்பொழுங்கூட பதஞ்சலியின் முகத்திலிருந்த சந்தேகமூட்டம் அகலவேயில்லை. 'ஏன்.... நான் உங்களைத் தொட்டுப் புழங்கியிருக்கிறன்தானே!.... நீங்கள் குலைப்பன் காய்ச்சலோடை கிடக்கேக்கை நான் உங்களைப் பிடிச்சுக்கொண்டு பக்கத்திலை இருந்தனான்தானே?" என்று குழந்தைத்தனமாகக் கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்ல இயலாது தவித்தான் சுந்தரலிங்கம். 'ஏன் வாத்தியார் அப்பிடிப் புழங்கினால் என்ன? பொம்பிளையளுக்குக் கட்டாயம் கற்பு இருக்கத்தான் வேணுமே?" என்று சந்தேகம் தீராது பதஞ்சலி பல வினாக்களைத் தொடுத்தபோது சுந்தரம், கற்பின் வரைவிலக்கணத்தை, அதிகம் படித்திராத பதஞ்சலிக்கு எப்படி விளங்க வைப்பதென்று புரியாமல் திகைத்துப் போனான். 'பதஞ்சலி! கற்புடைய பொம்பிளை ஒருத்தி, ஒரு ஆம்பிளையைத்தான் தன்ரை புருசனாய் நினைப்பாள்.... அவனுக்குத்தான் அவள் பெண்சாதியாய் இருப்பாள்.... வேறை ஆம்பிளையோடை அப்பிடியெல்லாம் பழகமாட்டாள்..." என்று ஒருவாறு விளக்கிபோது, பதஞ்சலிக்கு அது புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. எனவே மீண்டும் அவனைப் பார்த்து, 'அப்பிடித்தானை வாத்தியார் எல்லாப் பெண்சாதிமாரும் நடப்பினம்!" என்றபோது, 'ஓ அப்பிடித்தான்!... ஆனால் சில பொம்பிளையள் அப்பிடி நடக்கிறேல்லை.." என்று விடை கூறினான் சுந்தரம். இதைக் கேட்டு மேலும் குழம்பிக்கொண்ட பதஞ்சலி, 'ஏன் வாத்தியார் அந்தப் பொம்பிளையள் அப்பிடி நடக்கினம்?" என்று மீண்டும் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
இதுவரை அவன் தன்னால் முடிந்தமட்டுக்கு பதஞ்சலியின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவகையில் கற்பு என்ற வார்த்தைக்குக் கருத்துக் கூறிக்கொண்டு வந்தான். ஆனால் ஒரு பெண் ஏன் கற்புத் தவறுகின்றாள்? அல்லது ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பு கெடுவதற்குக் காரணமாயிருக்கிறான்? என்ற ரீதியில் பதஞ்சலியிடமிருந்து கேள்விகள் கிளம்பவே அவன் தடுமாறிப் போய்விட்டான். அவனுக்கே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. எனவே அவன், 'நீயேன் இப்ப இதுக்கெல்லாம் கடுமையாய் யோசிக்கிறாய்?... நான் இன்னும் வேறை புத்தகங்கள் தாறன்... அதுகளை வாசிச்சால் எல்லாம் தன்ரைபாட்டிலை விளங்கும்!" என்று பேச்சை மாற்றியபோது, அவள் ஓரளவு சமாதானம் அடைந்ததுபோல் காணப்பட்டாள்.
ஆனால் கல்வி, நாகரீகம், பண்பாடு என்ற விஷயங்களையெல்லாம் அறியாது, அமைதியான நீர்நிலை போன்றிருந்த அவளுடைய களங்கமற்ற உள்ளத்திலே, கற்பு என்ற சொல், ஒரு சிறிய கல்லைப்போல் விழுந்தபோது, அங்கு மெல்லிய அலைகள் எழுந்து, விரிந்து, பரந்து பின் மெதுவாக அடங்கிப்போயின. ஆனால் அந்தக் கல் அவளுடைய அந்தரங்கத்தின் அடியிலே மெல்ல இறங்கித் தங்கிக்கொண்டது.
வளரும்
******************************************************
நிலக்கிளி அத்தியாயம் 37-38
என்று சுந்தரம், பதஞ்சலிக்குக் கற்பு என்ற வார்த்தைக்குத் தன்னால் இயன்றவரை விளக்கம் கொடுத்தானோ, அன்றிலிருந்து அவனும் வெகுவாக மாறிப் போனான். ஒரு பெண் எதற்காகக் கற்பிழக்கின்றாள்? அவளை ஏன் ஒரு ஆண் கற்பிழக்கச் செய்கின்றான்? என்ற வினாக்களெல்லாம் அவன் நெஞ்சைக் குடைந்தபோது, அவற்றையிட்டுப் பல நாட்களாக அவன் சிந்தித்திருந்தான்.
என்னுடைய மனம் எதற்காகப் பதஞ்சலியையே சுற்றிச் சுற்றி வரவேண்டும்? அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் உடலிலும், உள்ளத்திலும் பொல்லாத உணர்வுகள் கிளர்ந்து ஏன் என் மனதை கலைக்கின்றன? கள்ளமற்ற வெள்ளையுள்ளம் கொண்ட கதிராமனின் மனைவி அவள் என்றறிந்தும் ஏன் நான் அவளுடைய குரலைக் கேட்டுப் பரவசமடைகின்றேன்? என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் சுந்தரம். அவன் எவ்வளவுதான் ஆழமாகச் சிந்தித்தாலும், தான் ஏன் இந்த உணர்வுகளுக்கெல்லாம் ஆட்படுகின்றேன் என்பதற்குத் தெளிவானதாகவும், ஏற்கக் கூடியதாகவும் விடையெதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தன் மனம் எதற்காகத்தான் அவளை விரும்பியபோதும், அவளை அப்படி விரும்புவதற்கோ அல்லது ஆற்றொழுக்குப்போல் போய்க்கொண்டிருக்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வில் தலையிடுவதற்கோ தனக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்ற ஒன்றைமட்டும் அவன் எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமின்றிப் புரிந்துகொண்டான்.
இயல்பாகவே விவேகமான அவனுடைய மனம், 'இனிமேல் நீ அங்குபோய் பதஞ்சலியுடன் பழகுவது முறையல்ல!" என்று எச்சரித்தது. 'பதஞ்சலியை உன் தங்கைபோல் எண்ணி உன்னால் பழகமுடியாது! உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே! ஆதலால் அங்கு போவதை அடியோடு நிறுத்திவிடு! அவசியமானல் இந்தக் கிராமத்தையே விட்டு எங்காவது போய்விடு! அழகியதொரு கவிதையைப் போன்று இனிக்கும் அந்த இளந்தம்பதிகளின் இன்பவாழ்வைச் சிதைத்து விடாதே!" என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆனால் நுண்ணிய உணர்வுகளைக் கொண்ட அவனுடைய இதயம், 'பதஞ்சலி இந்தப் பிறப்பில்தான் இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள். காலங்காலமாக அவள் உன்னுடையவளாகத்தான் இருந்திருக்கின்றாள். இல்லையேல் இதுவரை கோடுபோட்டு வாழ்ந்த நீ எதற்காக அவளைக் கண்டதுமே உன் இதயத்தைப் பறிகொடுத்து விட்டாய்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தண்ணிமுறிப்பில் இருக்கப் போகின்றாய்? ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைக்குத் தோற்றிய நீ நிச்சயமாக அதில் தேறிவிடுவாய்! அப்படியானால் இந்த வருட இறுதிவரைதானே நீ இங்கிருப்பாய்! இந்த இரண்டு மாதங்களில் நீ அங்கு போய்வருவதில் என்னதான் கெட்டுப்போகும்? இந்தச் சில நாட்களுக்காவது உன்னைப் பிறவிகள்தோறும் தொடர்ந்துவரும் பதஞ்சலியின் அருகிலேயே இருந்துவிடு!" என்று கெஞ்சியது.
சுந்தரலிங்கத்தின் விவேகம் நிறைந்த மனச்சாட்சியும், ஆசைகளில் ஊறிய இதயமும் தர்க்கித்துக் கொண்டபோது, இறுதியில் வெற்றியடைந்தது அவனுடைய இதயமேதான்!
ஒவ்வொரு நாளும் துடிக்கும் நெஞ்சுடன் பதஞ்சலியின் விட்டுக்குச் செல்வான். அவள் பரிமாறும் சோற்றின் ஒவ்வொரு பருக்கையையும் உருசித்துச் சாப்பிடுவான். அவன் கொடுத்த புத்தகங்களை அவள் கொஞ்சங் கொஞ்சமாக வாசித்து விளங்கிக் கொண்டபோது அவளுடைய திறமையைக் கண்டு மகிழ்ந்தான். அவள் அங்குமிங்கும் தங்கத்தேர் போன்று அசைந்து நடக்கையில், மனங்கொண்ட மட்டும் அந்தத் தெய்வீக அழகைத் தன் இதயத்தில் நிறைத்துக் கொண்டான்.
இந்த இரண்டு மாதங்களில் பதஞ்சலியும் அவளையறியாமலே ஒரு மெல்லிய மாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள். அவள் எழுத்துக்கூட்டிப் படித்த புத்தகங்கள், அவளை மெல்ல மெல்ல ஒரு புதிய உலகின் வாசல்களுக்கு அவளை அழைத்துச்செல்ல ஆரம்பித்திருந்தன. அந்தப் புதிய உலகத்தின் நடவடிக்கைகளும், நிகழ்ச்சிகளும் அவளுக்கு மிகவும் புதுமையாகவும், ஏதோ சில உணர்வுகளைக் கிளறிவிடுபவையாகவும் இருந்தன. பூட்டியிருக்கும் ஒரு அறையைப் பார்க்கக் கூடாதென்று உத்தரவிடப்பட்டிருந்த ஒரு குழந்தையின் முன், அந்த அறையின் கதவுகள் திடீரெனத் திறந்துகொண்டது போன்ற உணர்வு. அதற்குள் என்னதான் இருக்கின்றது பார்க்க ஆசைப்படும் ஒருவகை ஆவல்! அப்படி இரண்டொரு தடவை எட்டிப் பார்த்தபோதும், அங்கு கண்டவற்றை இனங்கண்டு கொள்ளமுடியாத ஒரு தவிப்பு! இத்தகைய அனுபவங்களைத்தான் அந்தப் புத்தகங்கள் அவளுக்கு ஏற்படுத்தியிருந்தன.
நிலக்கிளியைப் போன்று, தன் இருப்பிடத்தையும், கதிராமனையும் மட்டுமே இதுவரை சுற்றிப் பறந்த பதஞ்சலியின் களங்கமற்ற உள்ளத்தை, அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்திற்கு வெளியேயும் இடையிடை பறப்பதற்குத் தூண்டின அந்தப் புத்தகங்கள். ஆனால் இந்த எல்லைமீறுதல்கள் யாவும் தெளிவற்றவையாக, ஒருசில நிமிடங்களுக்கு நீடிப்பவையாகத்தான் இருந்தன. இதன் காரணமாகப் பதஞ்சலி தன் வழமையான குறும்பையும், குதூகலத்தையும் ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கிவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்துபோவாள். ஆனால் மறுகணம் தன் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் சிறகடித்துப் பறப்பவளாக, பழைய பதஞ்சலியாக மாறிவிடுவாள்.
38.
அன்று சுந்தரத்துக்கு நல்லூர் ஆசிரியர் கலாசாலையிலிருந்து கடிதம் வந்திருந்தது. பிரவேசப் பரீட்சையில் அவன் தேறியிருப்பதாகவும், தைமாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் அவனை அங்கு வரும்படியாகவும் கூறியது அந்தக் கடிதம்.
அந்தக் கடிதத்தைக் கண்டதுமே, எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது, தானும் இனி ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன், தனக்கும் நிரந்தரமானதொரு தொழில் கிடைத்துவிட்டது என மகிழ்ந்துபோனான் சுந்தரம். மறுகணம் பதஞ்சலியைப் பிரிந்து போகவேண்டுமே என்று அவன் மனம் வேதனைப்பட்டுக் கொண்டது. அன்று மத்தியானம் சாப்பிடச் சென்றபோது அவன் விஷயத்தைச் சொன்னதும், கதிராமனும் பதஞ்சலியும் அச் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. 'என்ன வாத்தியார், நீங்கள் இஞ்சை வந்து ஒரு வரியமாகேல்லை. அதுக்கிடையிலை போக வெளிக்கிடுறியள்!" என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். அவன் விஷயத்தை மேலும் தெளிவாக விளக்கியபோது, 'அப்பிடியே சங்கதி! இரண்டு வரியம் படிச்சு முடிஞ்சதும பெரியவாத்தியாராய் இஞ்சை வருவியள்தானே!" என்று பதஞ்சலி ஆறுதல்பட்டுக் கொள்கையில் சுந்தரத்துக்கு நெஞ்சை எதுவோ செய்தது.
அவன் எந்த முடிவுக்குக் காத்திருந்தானோ அந்த முடிவு வந்துவிட்டது. பதஞ்சலியின் சின்னக் குடிசையைச் சுற்றிப் படர்ந்திருக்கும் தன் ஆசைக் கொடிகளை இனிமேல் அறுத்துக்கொண்டு போகவேண்டுமே என அவன் இதயம் வேதனைப் பட்டது. ஆனால் அவன் மனம், 'இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலும் அது நிகழாமலிருப்பதற்கு இதைவிட வேறு வாய்ப்பும் இல்லை! எனவே வேதனைப்படாதே!" என்று தேறுதல் கூறியது.
அடுத்த நாள் மாலையில் சுந்தரலிங்கம் தான் தண்ணிமுறிப்பை விட்டுச் செல்லும் விஷயத்தை மலையரிடம் தெரிவப்பதற்காக அங்கு சென்றிருந்தான். அங்கே மலையர் முற்றத்தில் மான்தோலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு போத்தல் சாராயம் இருந்தது. தை மாதத்தில் அவன் தண்ணிமுறிப்புக்கு முதலில் வந்தபோது கண்ட மலையருக்கும் இன்று காணும் மலையருக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான். மழை தண்ணியின்றி வரண்டிருந்த அவருடைய வளவைப் போன்றே அவரும் உடற்கட்டிழந்து உருக்குலைந்து போயிருந்தார். சுந்தரம் செய்தியைச் சொன்னதும், அவர் பெரியமனுஷத் தோரணையில் 'அது நல்லதுதானே தம்பி! ஆனால் எம்பியிட்டைச் சொல்லிப் பள்ளிக்கூடத்துக்கு வேறை ஆளைப் போடோணும். நான் அவரிட்டை ஒருக்காப் போகத்தான் வேணும்!" என்று கூறிக்கொண்டார். விஷயத்தை அறிந்த பாலியாரின் மனம் விழுந்துவிட்டது. துயரினால் ஆரோக்கியம் குன்றியிருந்த அவள், 'இனிமேல் ஆர் எனக்கு என்ரை புள்ளையைப்பற்றி அடிக்கடி வந்து சொல்லப்போகினம்!" என்று மனதுக்குள் வேதனைப் பட்டுக்கொண்டாள். இருப்பினும் அதை வெளிப்படையாகக் கூற இயலாமல், 'இவ்வளவு நாளும் தம்பி ராசு நல்ல விருப்பமாயப் படிச்சான். இனி ஆரார் வருகினமோ?" என்று பெருமூச்செறிந்து கொண்டாள். அவர்களிடமிருந்து சுந்தரலிங்கம் விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவனெதிரே ராசு வந்துகொண்டிருந்தான்.
அவனுடைய கைப்பிடியிலே ஒரு நிலக்கிளி காணப்பட்டது. மரகதப் பச்சை நிறமான அதன் இறகுகள் மாலை வெய்யிலில் பளபளத்தன. சுந்தரம் அந்த நிலக்கிளியை ராசுவிடமிருந்து கையில் வாங்கிப் பார்க்கையில், அது மனிதக் கரங்கள் தன்மீது பட்டுவிட்டனவே என்ற துடிப்பில் படபடவெனச் சிறகுகளை அடித்துக்கொண்டது. தன் குண்டுமணிக் கண்களை மலங்க மலங்க விழித்துக்கொண்டே அது அவனைப் பரிதாபமாப் பார்த்தது. 'இதை என்னண்டு ராசு புடிச்சனீ" என்று சுந்தரம் கேட்போது, 'இதுகளைப் புடிக்கிறது வெகு சுகம் வாத்தியார்! இதுகள் தங்கடை நிலப் பொந்துகளுக்குக் கிட்டத்தான் எப்பவும் இருக்குங்கள்! பொந்து வாசலிலை சுருக்கு வைச்சால் சுகமாய்ப பிடிபட்டுப்போடுங்கள்!" என்று ராசு பெருமையடன் கூறினான்.
பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. காட்டுக் கிராமங்களில் வாழ்பவர்கள் இருண்டு சற்று நேரத்திற்குள்ளாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். சுந்தரமும் இரவு ஏழுமணிக்கே பதஞ்சலி வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்கு வந்துவிடுவான். இன்றும் அவ்வாறு சாப்பிட்டுவிட்டு வரவேண்டுமென்ற எண்ணத்தில் அவன் அங்கு சென்றபோது, கதிராமன் இரவு வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
காடியரிடம் துவக்கை வாங்கிக்கொண்டு அவன் இரவு வேட்டைக்குப் போவது வழக்கம். அவன் சென்றபின் பதஞ்சலி குடிசைக்குள் அரிக்கன் லாம்பைக் கொளுத்தி வைத்துக்கொண்டு தூங்கிப் போவாள். அவளுக்குத் தனியே படுப்பதில் பயமெதுவுமில்லை. இன்றும் கதிராமனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் சாப்பாட்டைக் கொடுத்து வழியனுப்பிவிட்டுத் தானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
கதிராமன் பள்ளிக்கூடத்தைக் கடந்துதான் காடியர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமாதலால் சுந்தரத்துடன் சேர்ந்தே சென்றான். அவன் பாடசாலை வாசலடியில் சற்றுத் தாமதித்தபோது, செம்மண்சாலைக்கு மேற்கே கிடந்த காடுகளைத் தழுவிக்கொண்டு குளிர் சில்லென்று வீசியது. 'என்ன இண்டைக்கு காத்து ஒருமாதிரி அடிக்குது?" என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். பாதி நிலவின் ஒளியில் மேகங்கள் என்றுமில்லாத வேகத்துடன் மேற்கிலிருந்து கிழக்கே விரைவதைக் கண்டான். என்ன? இன்று ஒருநாளும் இல்லாதவாறு என்று தனக்குள்ளே வியந்துகொண்டவன், 'நீங்கள் போய்ப் படுங்கோ வாத்தியார், நான் வாறன்!" என்று சொல்லிவிட்டுக் காடியரிடத்தில் போய்த் துவக்கையும் வாங்கிக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தான்.
வளரும்
*****************************************
நிலக்கிளி அத்தியாயம் 39
முன்னிரவு கடந்தபோது, கதிராமன் கூளாமோட்டையை அடைந்தான். அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நின்ற ஒரு பாலை மரத்தில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டபோது, இதுவரை இலேசாக வீசிக்கொண்டிருந்த கச்சான் காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. இடையிடையே வந்துவிழுந்த ஓரிரண்டு மழைத்துளிகள் ஈயக்குண்டுகள் போன்று, வேகத்துடன் வீழ்ந்தன. மழை பலமாகப் பெய்யும்போல் தோன்றியதால் கதிராமன் மரத்திலிருந்து இறங்கி, அந்தப் பெரிய பாலைமரத்தின் அடிப்பாகத்திலிருந்த கொட்டுக்குள் ஒதுங்கிக் கொண்டான். ஒரு ஆள் குந்தியிருக்கப் போதுமான அந்த மரக்கொட்டுக்குள் வசதியாக உட்கார்ந்துகொண்டு எதிரே தெரிந்த கூளாமோட்டையையும், அதைச் சுற்றிநின்ற மரங்களையும் கவனித்தான் கதிராமன். கச்சான் காற்று உக்கிரமாக வீசத்தொடங்கியது. மோட்டையின் கரைகளில் நின்ற வீரைமரங்கள் காற்றில் கிளைகளைச் சிலுப்பிக்கொண்டு பயங்கரமாக ஆடின. பாலைமரக் கொட்டுக்குள் இருளோடு இருளாகப் பதுங்கியிருந்த கதிராமன், 'சூறாவளியுக்கையல்லோ அம்பிட்டுக்கொண்டன்!" என்று எண்ணிக்கொண்டான்.
பாடசாலை அறையினுள் படுத்து நித்திரையாயிருந்த சுந்தரலிங்கம் சட்டென்று விழித்துக் கொண்டபோது, வெளியே சூறாவளிக் காற்றுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டே வீசியது. அவன் எழுந்து அறைக் கதவைத் திறந்தபோது, மழைச்சாரலும், இலைச்சருகுகளும் அவன் முகத்தில் பறந்துவந்து மோதின. வெளியே சென்று பார்க்கமுயன்ற அவனைக் காற்று தள்ளி வீழ்த்திவிடுவது போன்று வேகமாக வீசியது. கதவை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வெளியே பார்த்தபோது, மங்கிய நிலவில் புயலின் கோரப்பிடியில் அகப்பட்டுக் காட்டு மரங்களெல்லாம் தலைவிரி கோலமாகப் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. மரக்கிளைகள் சடசடவென முறிந்து புயலோடு அள்ளுண்டு பறந்தன. மரங்களும் மரங்களும் மோதிக்கொள்ளும் ஓசை! இலைகளும் கிளைகளும் காற்றிலகப்பட்டு எழுப்பும் ஓலம்! இவையெல்லாம், உய்யென்று கூவிய புயலின் கூச்சலுடன் சேர்ந்து, அந்தப் பிரதேசத்தையே கலக்கின. ஒரே பேய்க்காற்று!
சுந்தரம் தன் வாழ்க்கையிலே இப்படியொரு பயங்கரப் புயலைக் கண்டதில்லை. உலகத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்ட ஊழிக்காற்று இதுதானோ என்று அவன் பீதியடைந்து நின்றபோது, ஆங்காரத்தடன் வீசிய புயலில் பாடசாலையின் பாதிக்கூரை பிய்த்துக்கொண்டு பறந்தது. பாடசாலை மேற்கோப்பியம் காற்றின் வேகத்தைத் தாங்கமுடியாமல் கிறீச்சிட்டது. எங்கே பாடசாலைக் கட்டிடம் விழுந்துவிடுமோ என்று பயந்த அவன் மனதில் சட்டென்று வந்தது பதஞ்சலியின் நினைவு!
இந்தப் பயங்கரப் புயலில் அவள் எவ்வாறுதான் அந்தச் சின்னக் குடிசைக்குள் இருக்கிறாளோ? கதிராமனும் அவளுடன் இல்லையே! இந்நேரம் குடிசையின் கூரை பிடுங்கி எறியப்பட்டிருக்குமே! என்று எண்ணித் தவித்த சுந்தரம், ஆவேசம் வந்தவன்போல் அந்த இருளிலும், புயலிலும் பதஞ்சலியின் குடிசையை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினான்.
எலும்பின் நிணக்கலங்களையும் உறைய வைக்கும் கடுங்குளிர்! பாதை தெரியாதவாறு மரக்கிளைகள் ஒடிந்து விழுந்து சாலையெங்கும் இறைந்து கிடந்தன. இடையிடையே காற்றின் வேகம் தணியும்போது விழுந்துகிடக்கும் மரங்களிலே மோதிக்கொண்டு ஓடினான் சுந்தரம். மறுபடியும் காற்று பேய்க்கூச்சலுடன் மரங்களைப் பிடுங்கி எறிகையில், சாய்ந்துவிழுந்த மரங்களோடு ஒண்டிக்கொள்வான். சுமார் கால்மைல் தொலைவிலிருந்த பதஞ்சலியின் குடிசையை அடைவதற்குள் அவன் பட்ட பிரயத்தனம் கொஞ்சமல்ல. ஒருவாறு குடிசையை அவன் சென்றடைந்தபோது, முற்றத்தில் இருந்த மால் சரிந்து கிடப்பதைக் கண்டான். குடிசை உயரமில்லாததாலும் உறுதியாகவும் இருந்ததால் ஒருவாறு புயலை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நின்றது.
ஆவேசத்துடன் வீசிய காற்று சற்றுத் தணிந்தபோது அவன் ஓடிச்சென்று குடிசையின் படலையடியில் நின்று, 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று கத்தினான். புயலின் பயங்கர இரைச்சலில் அவன் அழைத்தது அவளுக்குக் கேட்டிருக்க முடியாது. எனவே படலையைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அங்கே அச்சத்தால் அகன்ற விழிகளுடன் பதஞ்சலி குடிசையின் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பது அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.
சுந்தரத்தைக் கண்டதும், பயத்தாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்த அவள் எழுந்து நின்றுகொண்டே, 'நான் நல்லாய்ப் பயந்துபோனன் வாத்தியார்!" என்று கூறுகையில், திறந்திருந்த படலையின் வழியே காற்று குடிசையின் உள்ளும் வேகமாக வீசியது. 'வெளியிலை ஒரே பேய்க் காத்தாய்க் கிடக்கு! இண்டைக்கு உலகம் அழியப் போகுதுபோலை!" என்று சுந்தரம் சொன்போது, 'படலையைச் சாத்துங்கோ வாத்தியார்! காத்து விளக்கை அணைச்சுப்போடும்!" என்றாள் பதஞ்சலி.
அவன் படலையைக் கயிற்றால் கட்டினான். அவனுடைய தலைமயிர் மழையில் நனைந்திருந்ததைக் கண்ட பதஞ்சலி, என்ன வாத்தியார் நல்லாய் நனைஞ்சு போனியள்! முந்தியும் மழையிலை நனைஞ்சுதான் குலைப்பன் காச்சல் வந்தது.. இஞ்சைவிடுங்கோ, நான் இதாலை துடைச்சுவிடுறன்" என்று கூறிக்கொண்டே கொடியில் தொங்கிய தன்னுடைய சேலையை எடுத்துக்கொண்டு அவனருகில் சென்றான். எடுத்த எடுப்பிலே அச் சேலையால் அவனுடைய தலையைத் தானே துவட்டிவிட எண்ணியவள், சட்டென்று ஏதோ நினைத்தவளாய் சேலையை அவனிடமே நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்ட சுந்தரத்தின் விழிகள் பதஞ்சலியின் கண்களை ஒருதடவை சந்தித்துக் கொண்டன. ஒருவகைக் கலக்கத்துடன் மிதந்த அவள் விழிகள் சட்டெனத் தாழ்ந்துகொண்டன. அந்தக் கணப்பொழுதுக்குள் அவளில் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனான் சுந்தரம். நேர்கொண்ட பார்வையும், சுடர்விடும் ஒளியும் கொண்ட அவளுடைய கண்கள் ஏனிப்படித் தன்னுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் குனிந்து கொள்ளவேண்டும் என்று சுந்தரம் குழம்பிப்போனான்.
அவளுடைய சேலையை வாங்கித் தலையைத் துவட்டிக் கொண்ளும்பொழுது, சுந்தரத்துக்கு அந்தச் சேலையில் அவளுடைய உடலின் சுகந்தம் மணத்தது. இதுவரையில் சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் பதஞ்சலிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைத் தவிர, அவனுடைய பிற உணர்வுகளெல்லாம் உறங்கிப் போயிருந்தன. ஆனால் அவளுடைய சேலையால் முகத்தைத் துடைக்கும்போது, அதன் ஸ்பரிசம் அவனுடைய உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிட்டன. அன்றொருநாள் பலாப்பழம் சாப்பிடுகையில் பதஞ்சலி, தன்னுடைய கரங்களையும் பிடித்து எண்ணெய் பூசியது நினைவுக்கு வந்தது. கூடவே அவளுடைய விரல்களின் மென்மையும், கதகதப்பும் நிறைந்த அந்த ஸபரிசம் மீண்டும் அவனுடைய கைகளுக்குள் படர்வது போன்றதொரு உணர்வும் ஏற்பட்டது.
குடிசைக்கு வெளியே புயல் ஓலமிட்டது. தன் கரங்களை உயர்த்தி மேலே கட்டியிருந்த கொடியில் சேலையை விரித்தபோது, பதஞ்சலியின் கட்டுடல் மங்கலான விளக்கொளியில் அற்புதமாகப் பிரகாசிப்பதைச் சுந்தரம் கண்டான். பெண்மையின் பூரிப்பு அத்தனையும் நிறைந்து விளங்கும் அவளின் உடலைப் பார்க்கையில், அவனுடைய நெஞ்சில் எழுந்த உணர்வலைகள் மெல்ல மெல்லப் படர்ந்து உடலெங்கும் வியாபித்தன.
எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் மளார் என்ற ஓசை பயங்கரமாக ஒலித்தது. சுந்தரம் சட்டென்று உணர்ச்சிகளை அடக்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, இதற்குமேலும் இந்தச் சின்னக் குடிசைக்குள் நான் இவளுடன் தரித்திருப்பது நல்லதல்ல என்று எண்ணியவனாய், 'நீ இதுக்கை படுத்திரு பதஞ்சலி! நான் வெளியிலை மாலுக்கை போய்ப் படுக்கிறன்" என்று கூறினான். உணர்ச்சிகளை அடக்கியதால் அவனுடைய குரல் கம்மிப் போயிருந்தது. 'என்னை விட்டிட்டுப் போகாதையுங்கோ வாத்தியார்! எனக்குப் பயமாய்க் கிடக்கு... அப்பிடியெண்டால் நானும் வாறன்!" என்று துடித்துக்கொண்டு புறப்பட முயன்றாள் பதஞ்சலி.
உக்கிரமாக வீசும் இந்தப் புயலில் எப்படித்தான் அவளை அவன் வெளியே கூட்டிக் கொண்டுபோக முடியும்? புயலில் சரிந்துபோய் நிற்கும் அந்த மால் எந்தநேரமும் விழுந்துவிடக்கூடும் என்றெல்லாம் சிந்தித்த சுந்தரம், அந்தச் சின்னக் குடிசையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டான். எனவே தன் மன எழுச்சிகளை ஓரளவு அடக்கிக்கொண்டு, 'பதஞ்சலி! நீ அந்த மூலையிலை படு! நான் இந்தப் பக்கத்திலை படுக்கிறன்" என்று கூறியபோது, பதஞ்சலி தனது பாயில் போய்ப் படுத்துக்கொண்டாள்.
வெளியே புயல் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஒருசமயம் சோவென்று மெல்லிய இரைச்சலுடனும், மறுகணம் காதைச் செவிடாக்கும் பயங்கர ஒலியுடனும், மாறி மாறிக் காற்று சுழன்று சுழன்று அடித்தது.
குடிசையின் ஒரு மூலையில் படுத்திருந்த சுந்தரலிங்கத்தின் உள்ளத்திலும் புயல் வீசியது. பொல்லாத மென்மை உணர்வுகள் ஒருசமயம் புயலைப்போன்று கிளர்ந்தெழுந்து அலைக்கழிப்பதும், மறுசமயம் அடங்கிப் போவதுமாக இருந்தது. அவன் பதஞ்சலி படுத்திருக்கும் பக்கம் திரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டான்.
உணர்வுகளுடன் போராடிக்கொண்டு மெல்ல அயர்ந்து கொண்டுபோகும் சமயத்தில், உக்கிரமாக வீசிய புயற்காற்று, குடிசையின் கூரையிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்துக்கொண்டு போயிற்று. அந்தத் துவாரத்தினூடாக உள்ளே நுழைந்து சுழன்றடித்த காற்றில் அரிக்கன் லாம்பு திடீரென அணைந்தது. கண்களைக் குருடாக்கி விடுவதுபோல் பளிச்சென்று ஒளிவீசிய ஒரு மின்னலைத் தொடர்ந்து, காதைக் கிழிக்கும் ஓசையுடன் அண்மையில் எங்கோ இடி விழுந்தது.
இடியோசை கேட்டு துணுக்குற்று விழித்துக்கொண்ட பதஞ்சலி, விளக்கு அணைந்துபோய் இருள் சூழ்ந்திருந்ததால் திகிலடைந்தவளாய், வீரிட்டு அலறிக்கொண்டு ஓடிச்சென்று சுந்தரத்தின் மேலே விழுந்து அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். பிய்ந்துபோன கூரையின் வழியாகச் சீறிக்கொண்டு நுழையும் சூறாவளியின் பேய்க்கூச்சலும், இடிமுழக்கத்தின் அதிர்வேட்டும் அவளைப் பயத்தால் நடுங்கச் செய்தன. அவள் சுந்தரத்தை இன்னமும் நெருக்கமாகக் கடடிக்கொண்டாள்.
இதுவரையும் சுந்தரலிங்கம் எந்த உணர்ச்சிகளை மறக்கவும், மறைக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தானோ, அந்த உணர்ச்சிகளெல்லாம் பதஞ்சலியின் நெருக்கமான அணைப்பிலே கட்டவிழ்த்துக்கொண்டு கிளம்பிவிட்டன. சட்டை அணியாது, மார்புக்குக் குறுக்கே சேலைமட்டும் கட்டியிருந்த அவளுடைய வளவளப்பான தோள்களும், அங்கங்களும் அவனுடைய மேனியில் நெருக்கமாக இணைந்தபோது, அவன் தன்னை ஒருகணம் மறந்தே போனான். உள்ளத்தின் விழைவை இதுவரை கட்டுப்படுத்தியிருந்தவன், இப்போது தன் உடலின் விழைவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
அந்தக் கொடிய இருளிலே நடுங்கும் தன் கரங்களால் பதஞ்சலியைத் தன்னுடன் கூடச் சேர்த்தணைத்துக் கொண்டபோது அவன் இந்த உலகத்தை மறந்தான். அங்கு உக்கிரமாக வீசிக்கொண்டிருந்த புயலை மறந்தான். தான் யார் என்பதை மறந்தான். பதஞ்சலி யாரென்பதையும் அறவே மறந்துபோனான். காலங்காலமாகப் பிறவிகள்தோறும் தன்னைத் தொட்டும், தொடர்ந்தும் வந்த அதே பதஞ்சலிதான் தன்னுடனே சங்கமித்துவிட்டாள் என்று அவனுடைய இதயம் சொல்லிக் கொண்டது. இவள் என்னுடைய பதஞ்சலிதான்!... என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவன் அவளைத் தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டான்.
பதஞசலியின் நிலையோ வேறு. பயத்தின் காரணமாகவே அவள் சுந்தரத்தைச் சென்று கட்டிக்கொண்டாள். கரைகடந்த துயரம் அல்லது உள்ளத்தைக் கலங்கச் செய்யும் பீதி என்பவை ஏற்படும்போது, அவளுக்கு யாருடனாவது ஒண்டிக் கொண்டால்தான் நிம்மதியாக இருக்கும். அந்த உணர்வின் உந்துதலால்தான் அவள் குழந்தை மனதோடு விகற்பமின்றிச் சுந்தரத்திடம் போய் அணைந்துகொண்டாள்.
ஆனால் அந்த இருளிலே சுந்தரம் தன்னைச் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டபோது, அந்த அணைப்பையும், அதன் தீவிரத்தையும் அவள் இனங்கண்டு கொண்டாள். அந்தக் கணத்திலேயே அவள் இதுவரை அறியாத ஒரு உண்மையையும் புரிந்துகொண்டாள். அவன் யாரை விரும்புகின்றான்... அவன் விழிகளிலே தான் இதுவரை காலமும் அடிக்கடி கண்ட அந்தப் பார்வை..... என்பவையெல்லாம் அவளுக்குச் சட்டென்று வெளிப்படையாகப் புலனாகியது. இருப்பினும் அவளால் அந்த அணைப்பிலிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக்கொண்ள முடியவில்லை. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத ஒரு தவிப்பு.... அந்தத் தவிப்பைத் தொடர்ந்து அவள் மேற்கொண்டு எதையுமே தீர்க்கமாகச் சிந்திக்க முடியாமல் அப்படியே சோர்ந்துபோய் நினறுவிட்ட வேளையில்....
இதுவரை தான் படித்த புத்தகங்கள்மூலம் இடையிடை கண்டுணர்ந்த அந்தப் புதிய உலகத்தின் வாசல்கள் மீண்டும் திறப்பது போலவும், அந்தப் புதிய வாசலின் படிகளில் தான் ஒவ்வொன்றாய் ஏறியேறி மேலே வெகு உயரத்துக்குப் போவது போலவும் அவளுக்குத் தோன்றியது. வெளியே வீசும் கொடிய புயலின் ஓலம் அவளுக்கு எங்கோ வெகுதொலைவில் கேட்பது போலிருந்தது..... ஒரே இரைச்சல்.... ஒரே மயக்கம்.... அவள் தனக்கே உரித்தான சிறிய வாழ்க்கை வட்டத்தை விட்டுவிலகி, வெகுதூரம் பறந்து கொண்டிருந்தாள். எதற்காகத் தான் இப்படிப் பறக்கின்றேன் என்பதையெல்லாம் அவள் சிந்திக்கவேயில்லை. பறப்பதிலே ஒரு சுகம்! ஒரு இன்பம்! அவள் தன்னை மறந்து, பறப்பதற்காகவே பறந்து கொண்டிருந்தாள்.
இரவு மூன்று மணிபோல் கொண்டல் காற்று எழுந்து வீசிக் கச்சான் காற்றை அடங்கிய பின்னர் புயல் ஓய்ந்தது. அந்தக் கொடிய சூறாவளி அந்த இரவிற்குள் தண்ணிமுறிப்புப் பிரதேசத்தை அடியோடு கலக்கிச் சிதைத்திருந்தது.
வெளியே வீசிய புயல் அடங்கிய வேளையில்தான் உள்ளத்திலேயும், உடலிலேயும் கொந்தளித்துக் குமுறிய புயல் அடங்கியவனாய் சுந்தரம் சுயநினைவுக்குத் திரும்பி வந்தான். எங்கேயோ தொலைவில் வானவெளியில் இதுவரை சஞ்சரித்தவன், திடீரெனப் பூமிக்குத் தூக்கி எறியப்பட்டவன்போல் திகைத்துப்போனான். எது நடக்காது, நடக்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அது உண்மையில் நடந்துவிட்டது. அதன் உண்மையை உணர்ந்தபோது அவனுடைய இதயம் வெடித்துவிடும் போன்றிருந்தது. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் கரங்களில் இருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு, அவன் குடிசையைவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே ஒரே ஓட்டமாக ஓடி, அந்த இருளுக்குள் சென்று மறைந்தான்.
தன்னந் தனியனாகப் பாலைமரக் கொட்டுக்குள் புயலடங்கும்வரை பதுங்கியிருந்த கதிராமன், புயலின் கோரத்தைக் கண்டு திகைத்துப் போனான். இரவெல்லாம் பதஞ்சலி என்ன செய்திருப்பாளோ என்றெண்ணி ஏங்கியவன், தங்களுடைய குடிசையின்மேல் விழக்கூடிய மரம் எதுவுமில்லை என ஆறுதல்பட்டுக் கொண்டான். விடியும் வேளையில் புயல் அடங்கியதுமே வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வழியெங்குமே மரங்கள் முறிந்து காடே சிதைக்கப்பட்டிருந்ததால் அவனால் வழக்கம்போல் வேகமாகச் செல்லமுடியவில்லை. தண்ணிமுறிப்பை அவன் அடைந்தபோது, பொழுது நன்றாக விடிந்துவிட்டது.
பகலின் ஒளியில்தான் புயலின் விளைவுகள் தெளிவாகத் தெரிந்தன. மரங்கள் முறிந்து மொட்டையாக நின்றன. வழியெங்கும் காட்டுக் கோழிகளும், வேறு பறவைகளும் புயலில் அடிபட்டுச் சிறகொடிந்தவையாய் இறந்துபோய்க் கிடந்தன. அவற்றைப் பார்த்தவாறே கதிராமன் சென்று கொண்டிருக்கையில், சுந்தரலிங்கம் அவசரமாகத் தன் பெட்டியையும் எடுத்துக்கொண்டு பாடசாலை வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தான்.
கதிராமன் அவனைக் கண்டதுமே, 'வாத்தியார், பாத்தியளே சூறாவளியை! எவ்வளவு மோசமாய் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டுது!" என்று கூற, சுந்தரம், 'ஓம்! எல்லாம் நாசமாக்கித்தான் போட்டுது!" என்று ஏதோ நினைத்தவனாய்ப் பதிலளித்தான். அவனுக்குக் கதிராமனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தைரியமில்லை.
சுந்தரத்தின் கையில் பெட்டியைக் கண்ட கதிராமன், 'என்ன வாத்தியார் வீட்டை போறியளே?" என்று கேட்டான். சுந்தரம், 'ஓம், அங்கை தண்ணியூத்திலை என்ன பாடோ தெரியேல்லை" என்று சுரத்தில்லாமல் பதிலளிக்க, 'சரி வாத்தியார் நடவுங்கோ, உங்கை பதஞ்சலி என்ன செய்தாளோ தெரியேல்லை!" என்று கூறிவிட்டு வேகமாகத் தன்னுடைய வளவை நோக்கி நடந்தான்.
வழியெல்லாம் மரங்கள் முறிந்துபோய்க் கிடந்தன. சிதைக்கப்பட்டுக் கிடந்த வளவை அவன் சென்றடைந்தபோது பதஞ்சலியை வெளியே காணவில்லை. குடிசையின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு மூலையில் படுத்திருந்த பதஞ்சலி, கதிராமனைக் கண்டதும் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கதறியழத் தொடங்கிவிட்டாள். 'என்ன பதஞ்சலி, நல்லாய்ப் பயந்து போனியே!" என்று அவன் ஆதரவாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, அவளின் முதுகை வருடியபோது, பதஞ்சலி எதற்காகவோ கதறிக்கதறி அழுதாள். 'ஏன் என்னை விட்டிட்டுப் போனனீங்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டு அரற்றிக்கொண்டே அழுத அவளை அணைத்திருந்த கதிராமன், 'நான் இனிமேல் உன்னை ஒருநாளும் விட்டிட்டுப் போகமாட்டன்!" என்று அன்புடன் கூறியபோது, அவள் அவனைத் தன்னடன் சேர்த்து இறுகக் கட்டிக்கொண்டாள். அந்த வேளையில், தான் எவ்வளவு தூரம் கதிராமனைக் காதலிக்கிறேன் என்பதைப் பதஞ்சலி தீர்க்கமாகப் புரிந்துகொண்டாள்.
இவ்வளவு காலமும் கள்ளமில்லாத உள்ளத்துடன் குழந்தையாகத் திரிந்த பதஞ்சலிக்கு இன்று எல்லாமே புரிந்துவிட்டது. சுவைக்கக் கூடாதென்ற கனியை உண்ட ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நேர்ந்த கதி இன்று பதஞ்சலிக்கும் நிகழ்ந்து விட்டிருந்தது. கற்பு என்றால் என்ன? தொட்டுப் பழகினால் என்ன? எல்லாப் பெண்களுக்கும் கற்பென்ற ஒன்று இருக்கவேண்டுமா? என்றெல்லாம் கேட்ட பதஞ்சலிக்கு, இன்று இந்தப் பயங்கரப் புயல் வீசிய இரவின் பின்னர், எல்லா வினாக்களுக்குமே விடை தெளிவாகத் தெரிந்துவிட்டது. தொட்டுப் பர்த்துச் சுட்டுக்கொண்ட குழந்தையொன்று நெருப்புச் சுடும் என்று அனுபவப்பட்டுக் கொள்வதுபோன்று, அவளும் தன்னைச் சுட்டுக்கொண்ட பின்தான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலைப் புரிந்துகொண்டாள். இப்போ அந்த விடைகள் தனக்குத் தெரிந்து விட்டனவே என்று அவள் குமுறியழுதாள். கதிராமன் எவ்வளவோ சொல்லித் தேற்றியபின்தான் அவளுடைய அழுகை ஒருவாறு அடங்கியது.
அதற்குமேல் அழுவதற்கு அவளால் முடியவில்லை. ஆனால் அதன்பின் பதஞ்சலி குழந்தையுள்ளத்தோடு சிரிக்கவும் மறந்து போனாள்.
வளரும்
நன்றி : http://www.appaal-tamil.com/index.php
Comments
Post a Comment