உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை ஆசிரியர் புதினம் முழுவதும் சுவாரசியத்துடன் விரவி வைத்துள்ளார். சுந்தரம்பிள்ளை என்ற அந்த வைத்தியருக்கு அந்த வைத்தியசாலையே வாழ்வின் செம்பகுதியாக விரிகின்றது. அவரே கதைசொல்லியாகவும், அவரே ஒருபாத்திரமாகவும் மாறிமாறிவரும் அவர் அங்கே உள்ள ஏனைய வைத்தியர்கள், தலைமை வைத்தியர், நர்ஸுகள், சிப்பந்திகள் அவர்கள் விதேசிகளை வெறுப்பவர்களோ, நேசிப்பவர்களோ, நடுநிலையாளர்களோ எவ்வகைப்பட்ட சுபாவமுடையவர்களாயினும் அவர்கள் எல்லோருடனும் சுமுகமான உறவையும் மனிதநேயத்தையும் விளையும் நல்ல மனிதராகவே இருக்கிறார். உயர்ந்தபணியில் இருப்பவர்களோ, சாதாரண ஊழியர்களோ ஒருவரின் பணியில் இன்னொருவர் பிழைகள் கண்டுபிடிக்கத் துடிப்பவர்களும், தவறுகள் ஏற்படின் அவற்றைப்பெருமனதுடன் சீர்செய்ய உதவுபவர்களும், குழிபறிப்பவர்களும், சமாதனத்தை விளைபவர்களுமாக அந்த வைத்தியாசாலையே புறவுலகத்தின் அனைத்து அம்சங்களையும்கொண்ட இன்னொரு உள் உலகமாக விரிகிறது. சதா பாலியல் ஜோக்குகள் அடித்துக்கொண்டும், வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் கார்லோஸ் சேரம், அங்கே ஏற்படும் எந்தவொரு பிரச்ச்னையையும் ‘ஜஸ்ட் லைக் தாட்’ என்பதாக புறங்கையால் தட்டிவிட்டு மேற்செல்லும் ஜோவியலான மனிதர். அங்கே நேர்முகத்தேர்வுக்குப் போயிருக்கும் சுந்தரம்பிள்ளையைப் பார்த்தவுடனேயே மேற்கொண்டு வேறெந்தக்கேள்விக்கும் இடம் வைக்காது அவருக்கு வைத்தியர் பதவியை உடனேயே தந்துவிடுகிறார் மனிதர். விதேசிகளை அடியோடு பிடிக்காத ரிமதி பதோலியஸ் எனும் வைத்தியன் சுந்தரம்பிள்ளையையும், கார்லோஸையும் வைத்தியசாலையவிட்டு வெளியேற்ற குழிபறித்துக்கொண்டிருக்கும் வேளையில் கார்லோஸோ ரிமதி பதோலியஸே அவனாக பணிதுறந்துவிடும்படி சாதுரியமாகக் காய்களை நகர்த்தி வைத்துவிடுகிறார்.
கணவனைப்பிரிந்திருக்கும் சக வைத்தியரும் அழகியுமான ஷரன் சுந்தரம்பிள்ளைக்கு தூண்டில் போடுகிறாள். அவளைத் தவிர்த்துப் பலவாறு அவன் விலகிச்செல்லவும் அவனைக்காலால் தடுத்து ‘உன்னைப்போல ஒரு பிறவுண்நிற ஆணிருந்தால் சொல்லேன்’ என்று நேரடியாக விஷயத்துக்கே வருகிறாள். அப்போதும் அவ்வேளையிலும் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டுவிடும் சுந்தரம்பிள்ளை இறுதியில் கொன்ஃபரன்ஸ் ஒன்றுக்காக சிட்னிக்குப் போனவிடத்தில் அவள் புருஷனால் நையப்புடைக்கப்பட்டு மூஞ்சிவீங்கி, முதுகுவெடித்திருக்கும் வேளையில் அவள் விரும்புகிறாளேயென்று அவளோடு சம்போகிக்கிறான். உடலாலோ, உளத்தாலோ வருத்தத்துடன் இருக்கும் ஒருவரைச் சம்போகித்தல் எளிதல்ல. அவ்விடம் சற்றே நெருடலைத் தருகின்றது. பாலியல்சார்ந்த உளவியலில் சில பெண்களுக்கு வல்லுறவுசெய்வதைப்போல் / அல்லது சாட்டையால் அடித்துக்கொண்டு / இரத்தம்வரும்படி கடித்துக்கொண்டு கலவிசெய்வது பிடிக்கும் என்கிறார்கள். இவள் அப்படியான ரசனை உள்ள பெண் அல்ல, ஆனால் தான் சுந்தரம்பிள்ளையோடு ஒரே கட்டிலில் கிடப்பதை அவள் கணவன் கிறிஸ்டியன் காணவேண்டுமென்று வக்கிரமாக விரும்புகின்றாள்.
சுதந்திரமாக வாழப்பழக்கப்பட்ட விலங்குகள் வைத்தியத்துக்காகவோ, கைவிடப்பட்ட நிலையிலோ, கருணைக்கொலை செய்யப்படவோ வைத்தியசாலைக்குள் கொண்டுவரப்பட்டதும் அவற்றின் சுதந்திரம் பறிபோகின்றது. அவை கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. கூண்டுகளில் அடைக்கப்பட யாருக்குத்தான் சம்மதம். ஆனாலும் வைத்தியசாலைக்கு மாற்று வழியில்லை. வானும் கடலும், மண்ணும் மரங்களும் காற்றும் நிறைந்த இவ்வியனுலகம் விலங்குகளுக்கும் சொந்தமெனில் சுதந்திரமும் அவைகளுக்கு உரியதன்றோ. மனிதனை அண்டி வாழப்பழகும் விலங்குகள் அவனாலேயே விதையடிக்கப்படுகின்றன, விலங்குகள் தம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றன. ஒருவகையில் வைத்தியசாலையில் சரணாகதி அடைந்துவிடும் அவ்வுயிர்களின் உலகம் நாவலில் விவரணங்களுடன் காட்சிப்படுத்தப்படுகின்றது.
நாய்களுக்கும், பூனைகளுக்கும் டெம்பிறேசர் பார்க்கப்படுகின்றன, சேலைன் ஏற்றப்படுகின்றன. அன்ரிபயோடிக்ஸ் கொடுக்கப்படுகின்றன, உடைந்தகால்கள் தகடுகள் வைத்துப்பொருத்தப்படுகின்றன, நோய்எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர்ந்த பிறவைத்திய வைத்தியமுறைகள் எதுவும் நுட்பமாகப் பேசப்படவில்லை. எலும்புகளைப்பொருத்தும் ஒபரேசன்களிலாவது என்னவென்ன முன் எச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன, எப்படி விலங்குகள் மயங்கவைக்கப்படுகின்றன, அறுப்பதால் ஏற்படவல்ல காயங்களிலிருந்து அதிகளவு குருதி வெளியேறிவிடாமலிருக்க எடுக்கப்படும் முன்னேற்பாடுகள் என்ன, உடைந்த எலும்புகள் பொருத்தப்பட்டபின்னால் விலங்குகளுக்கு கொடுக்கப்படும் வலிநிவாரணிகள் போன்ற விபரங்களையாவது தந்திருக்கலாம். டாக்டர் அம்மருத்துவ விபரங்கள் வாசகர்களின் கிரகிப்பிற்கு அப்பாற்பட்டவையென எண்ணியிருப்பாரோ?
வாழ்வில் மனிதர்களுக்குந்தான் எத்தனை விசித்திரமான பிரச்சனைகள். ஜீன் என்கிற பெண்ணுக்கு அவரது செல்லப்பிராணிகளின் இழப்பு அவர்தன் வாழ்வையே முடித்துக்கொள்ளும் அளவுக்கு துன்பம் தருகின்றது. இலேசாக மனநிலை பாதிக்கப்பட்ட அப்பணக்காரச்சீமாட்டி தனது 20 க்கும்மேற்பட்ட நாய்-பூனைகளை வைத்து வளர்ப்பதில் அயலவர்களின் எதிர்ப்புபோன்ற விக்கினங்கள் காரணமாக அவற்றை அந்த வைத்தியசாலையில் கையளித்து அவைகளைப் பராமரிப்பதற்காக அந்த வைத்தியசாலைக்கு ஒரு வீட்டையே எழுதித்தந்துவிடுகிறார். அங்கே அவை கூட்டில் அடைக்கப்பட்டுவிடும். அந்த சூழல் மாற்றத்தை விரும்பாமையால் அல்லது ஒவ்வாமையில் தன் இயல்பான சாதுத்தன்மையை இழந்து வன்முறையும். போர்க்குணமுங்கொண்ட காட்டுப்பூனைகள் போலாகின்றன. இவ்வாறு உளரீதியில் பாதிக்கப்பட்டு பூனைகள் மனக்குழப்பத்துக்காளாகின்றன. வைத்தியசாலையில் தொடர்ந்து அவற்றைப்பராமரிப்பதில் கஷ்டமுண்டாக ஜீனின் சம்மதத்துடனேயே அவை கருணைக்கொலை செய்யப்படுகின்றன. தன் செல்லப்பிராணிகளை இழந்த தவிப்புத்தாங்கமாட்டாமல் ஜீனும் வைனுக்குள் தூக்கமாத்திரைகளை கலந்துகுடித்துத் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார். ஜீனின் வீடு 1960களில் வாங்கப்பட்ட சஞ்சிகைகள், வைன்போத்தல்கள் கூட வீசப்படாமல் எப்படியிருந்தனபோன்ற விஷயங்களையெல்லாம் நுணுக்கமாக விபரிக்கும் ஆசிரியர் எதுக்காக ஜீனின் வீட்டுக்கு போனார் என்பதைச் சொல்ல மறந்துவிடுகிறார்.
நாம் அதிகமும் தெரிந்திராத ஒரு நாட்டில், தெரிந்திராத மிருகவைத்தியசாலைச்சூழலில், பலவித்தியாசமான மனோபாவங்களுடைய மாந்தர்களை இவ்வளவு சிறப்பாகப் படைத்திருக்கும் இந்நாவல் தமிழுக்குப்புதுவரவு. டாக்டர். நடேசனும் போற்றப்படவேண்டியவர்.
ஒரு படைப்பாளி எப்படித்தன் படைப்புகளுடன் திருப்தி அடைந்துவிட மாட்டானோ, அதுபோலவே ஒரு தேர்ந்த வாசகனும் எந்தப்படைப்புடனும் சமாதானமாகி விடமாட்டான். என்னாலும் முடியவில்லை.
இந்நாவலின் கட்டுமானத்திலும், அதன் அழகியலிலும் களைந்திருக்கக்கூடிய சில குறைபாடுகள் எனக்குத் துருத்தித்தெரிகின்றன.
கதைசொல்லியாகவும் தானே ஒரு பாத்திரமாகவுமிருக்கும் சுந்தரம்பிள்ளைக்கு தினம் வேலைக்குப்போவதும், எப்போதோவொருநாள் சக வைத்திய நண்பர்களுடன் அருந்தகங்களுக்குப் போய்த் திரும்புவதையும்விட வேறு துறைகளில் எதிலும் ஈடுபாடோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை.
கடைசி அத்தியாயத்தில் ஒரு இடத்தில் தன் பிள்ளைகளுக்கு செல்லப்பிராணியொன்று வாங்கவேண்டுமென்று ஆவல் இருப்பதையும் அப்படி ஒரு கைவிடப்பட்ட சிறிய இன நாயொன்றை எடுத்துசெல்வது, அதற்குப்பொன்னி என்று நாமகரணம் செய்வது, அந்நாய் அவரது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு மதியமணி அடிக்கும்வேளைகளில் அடிக்கடி சென்றுவிடுவது போன்ற விஷயங்கள் சொல்லப்படுகின்றன. கடைசியில் அந்நாய் தெருவில் வீதியில் காரொன்றினால் அடிபட்டுச்செத்துவிடுகிறது.
ஷரன் டில்டோ வாங்கப்போகும் அடல்ட் ஷொப் வைத்திருக்கும் பெண்ணின் அங்கலாவண்யங்களைக்கூட நத்தாருக்காக ஊட்டிவளர்க்கப்பட்ட பன்றியைப்போல கொழுத்திருந்தாள் என்று அக்கறையுடன் விபரித்துச்செல்லும் சுந்தரம்பிள்ளை அவருடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டும் தினம் அவருக்கு ஆக்கிப்போட்டுக்கொண்டும் மனைவியென்றொருத்தி வீட்டில் இருப்பதையும் அவரது திறமைகள், குணவியல்புகள் ,ஆசாபாசங்கள், விருப்புவெறுப்புக்கள், நம்பிக்கைகள், ஈடுபாடுகள், எவற்றையும் வேண்டிய அளவு இப்புதினத்தில் சொல்லவில்லை.
அன்ட்ரூ என்று உடன்பணிபுரிபவன் அவனது பிறந்ததினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்படும் விருந்துக்கு சுந்தரம்பிள்ளையையும் அவர் மனைவியையும் அழைக்கின்றான், அதன்போதும் அப்படியான இடங்கள் அவளுக்கு ஆகாது என்று அவர் அழைத்துச் செல்லப்படவில்லை, அப்படி அழைத்து வராததே நல்லது என்கிறார். தம்பதி குடும்பத்துடன் வெளியே எங்கும் போன அனுபவங்கள் எதுவும் பதிவாகவில்லை. கடைசி அத்தியாயங்கள் (பக் 337) ஒன்றில் தான் பணிவிடுப்புள்ள நாட்களில் சமையல் செய்வதாக ஒற்றைவரியில் சொல்கிறார்.
மெல்போனின் மேற்காகவுள்ள ஒருஇடத்திலுள்ள மருத்துவமனையில் சாருலதா பணிபுரிவதாகக் குறிப்பிடும் சுந்தரம்பிள்ளை [இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில்] மனைவியும் இப்போது வேலைக்குப்போவதால் குடும்பம் வசதியாக வாழ முடிவதாகவும், சாருலதாவின் பெற்றோரும் மழைக்காலஅட்டைகள்போல தங்களுடன் ஒட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும் சொல்கிறார். அதுவொரு கூட்டுக்குடும்பமென்றால் அது எவ்வளவு ஆரவாரமானதாக கலகலப்பானதாக இருந்திருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எல்லாம் வேறேங்கும் சுந்தரம்பிள்ளை மூச்சேவிடுவதில்லை.
சாருலதாதான் மருத்துவமனையில் பணிசெய்கிறாரே, அவரும் என்ன டாக்டரா, எக்ஸ்றே எடுப்பவரா, தாதியா என்னபணி புரிகிறார், என்பதான விஷயங்கள் எதுவும் இல்லை. நடுவில் ஒரு இடத்தில் தன்கூட பணிபுரியும் ஒருத்தரிடம் “ நேரத்துக்கு வீட்டுக்குப்போய் பிள்ளைகளை ஷொப்பிங் சென்டருக்கு அழைத்துப்போகவேண்டும்” என்கிறார். அவ்வளவுதான். அவரது மனைவி எப்படித் தன் வேலைக்குப்போய்வருகிறார் / பிள்ளைகள் எப்படிப்பள்ளிக்கூடம் செல்கிறார்கள், யாராவது அவர்களைக் கூட்டிச்செல்கிறார்களா, இல்லை பொது வாகனங்களில் அவர்களாகவே செல்கிறார்களா, அவர்களின் வளர்ச்சி, படிப்பு, முன்னேற்றங்கள், குறைந்த பக்ஷம் அவர்களின் தமாஷ்கள் குறும்புகளையாவது ஒன்றிரண்டு பகிர்ந்திருக்கலாம். இன்னும் சுந்தரம்பிள்ளை தனது குடும்பம், மனைவி பிள்ளைகளின்மீதான அன்பு, அக்கறை, ஆர்வங்கள், அன்யோன்யமன்ன விபரங்களை இருண்மைசெய்வது எதுக்காகவென்று தெரியவில்லை. அவ்விவரங்கள் இந்நாவலுக்கு அனாவசியம் என்று ஆசிரியர் நினைத்திருப்பாரோ?
ஒரேயொரு இடத்தில் மட்டும் சயன் “ எங்களுக்கு பள்ளிக்கூடம்போக விருப்பமில்லை, பொன்னி எப்பிடிப்பா போகுது” என்பான். இன்னும் ஆஜானுபாகுவான இரண்டு மல்யுத்தவீரர்கள் காதில் கட்டி (சிஸ்ட்)யுள்ள ஒரு பூனையை எடுத்து வருவார்கள். வைத்தியர் அந்தக் கட்டியில் கத்தியை வைப்பதைப்பார்த்ததுமே தடால் தடாலென இருவரும் மயங்கிவிழுவார்கள். இவை இரண்டுந்தான் நாவல் முழுமைக்கும் எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடங்கள்.
அரசு வழங்கும் சமூக உதவிகள் மீதான நடேசனின் பார்வை ஒத்துக்கொள்ள முடியாதது.
//ஷரன் கணவனைப்பிரிந்த மற்றைய பெண்களைப்போல அரசாங்கம் தரும் பிச்சைப்பணத்திலும், மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளைக்கடத்துவதற்குப் பிறந்தவள் அல்ல// [அத்தியாயம் 24]
ஐரோப்பிய நாடுகளிலோ, அவுஸ்ரேலியாவிலோ ஆண்டுதோறும் சமூகசேவைகளுக்கென்று அரசின் வருடாந்த பட்ஜெட்டில் ஒரு குறித்ததொகைப்பணம் ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்துதான் வேலையற்றவர்கள், வருமானம் குறைந்த விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள், முதியவர்கள், விதவைகள், உடல்நலிவடைந்தோர், ஏதிலிக்கான உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அது மக்களின் வரிப்பணம், மற்றும் ஏற்றுமதி அன்னியச்செலவாணிகளால் ஈட்டப்படும் அரசின் திறைசேரிப்பணம். [பிற ஆசிய, ஆபிரிக்க வளர்முகநாடுகளில் அவ்வகை உதவிகள் மக்களுக்கு மிகவும் குறைவாக அல்லது இல்லாமலே இருப்பது துர்லபம்.] தவிர அதை எவரும் பிச்சையாக இடுவதில்லை. பிச்சைப்பணம் என ஒரு நாவலாசிரியன் குறிப்பிடுவது அபத்தம். மேற்சொன்னவரிகளைப் படிக்கும்போது நடேசனின் இயல்புக்கும் புரிதலுக்கும் மாறாக வேறொருவர் அங்கே எட்டிப்பார்க்கிறார், இன்னோரிடத்தில் //வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்கவேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமை சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கைதானே// இவைபோன்ற தேய்ந்ததடங்களாலான சராசரி வசனங்களைப் பொழிவதற்கும் ஒரு நாவலாசிரியன் வேண்டியதில்லை.
புதினத்தின் அழகியல் சார்ந்து மேலும் சில விஷயங்களைச் சொல்லலாம்.
ஒரு குடும்பம் ஒரு வீட்டை வாங்கத்தீர்மானிப்பதென்பது, அதற்கான அவசியத்தையும், பிள்ளைகளின் பள்ளிகூடங்கள், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், பெற்றோரின் பணியிடங்களுக்கான போக்குவரத்துவசதிகளையெல்லாம் கருத்தில்கொண்ட ஒரு திட்டமிடலாக இருப்பதே இயல்பு.
இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சுந்தரம்பிள்ளைக்கு மனைவியும் வேலைக்குச்சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் ஒருவீடு ஒன்றுக்குச்சொந்தக்காரராக வேண்டுமென்கிற ஆசை தொத்திக்கொண்டதாக வருவது கையொழுங்கை ஒன்று வந்து திடுப்பென பிரதான வீதியில் ஏறுவதைப்போலவும், அது அவர்களுக்கு நள்ளிரவில் உதித்த ஒரு திடீர் யோசனைபோலவும் இருக்கின்றது. வீடுவாங்கும் எண்ணம் அவர்களுக்கு படிப்படியாக உருவானதையும், அதற்கான தேவையையும் கொஞ்சம் விஸ்தரிப்புடன் சொல்லியிருக்கலாம். அதன் பின் அவர்கள் வீடுகளுக்கான ஏலங்களைப்போய் அவதானிப்பது, பின் ஒரு வீட்டை வாங்குவது எல்லாம் நிதானித்தே சொல்லப்படுகின்றன.
நாவலின் தொடக்கம் சுந்தரம்பிள்ளை, ஜோன் என்பவனின் மரணச்சடங்குக்குச் செல்வதுடன் ஆரம்பிக்கிறது. அதனால் நாவலின் பிரதானமான வகிபாகம் அவனுக்கு உண்டோ எனும் ஒரு எதிர்பார்ப்பை வாசகனிடம் ஏற்பட்டுபண்ணிவிடுகிறது. பார்த்தால் அந்த ஜோன் ஏனையவர்களைப்போல அந்த வைத்தியசாலையின் ஒரு மருத்துவச்சிப்பந்திதான். மல்ரிபிள் கிளிறோஸிஸ் எனும் நோய்காணும் அவனால் எழுந்து நடமாடமுடியாதவனாகிப்போய் கடைசியில் இறந்து படுகிறான்.
அவனுக்கு அந்நோய் வந்திருப்பதை சுந்தரம்பிள்ளை முதன்முதல் அறிவதான , அவனுடனான உரையாடல் நிறைவடைவதற்கு முன்னமேயே இடையில் அவசரப்பட்டு //ஜோன் யதார்த்தவாதி. தான் எஞ்சியிருக்கும் காலத்தில் நன்றாயிருக்கும் காலத்தை வேலையில் கழிப்பதற்காக வந்து வேலை செய்கிறான்.// என்று எதிர்வுகூறிவிடுவது சரியல்ல. (பக்கம் 353). இப்படி அமைகிறது.
அத்துடன் அந்நோயுடன் ஜோன் கஷ்டப்படுவதையும், அவன் மனைவி மிஷேலோ அவனைப்பராமரித்துக்கொண்டு தன் புதிய சிநேகிதனுடன் பக்கத்து அறையில் படுத்து எழும்புவதையும் அடுத்துவரும் பக்கங்களில் சொல்லி முடிக்கிறார்.
00000000000000000000000000000000
சுந்தரம்பிள்ளை மனசாக்ஷி மிக்க ஒரு சக ஊழியனாக ஒரு பாத்திரத்தை வார்த்திருக்கலாம், பதிலாக கொலிங்வூட் எனும் பேசும் பூனையை வார்த்திருப்பதன் மூலம் வாசிப்புச்சுவாரஸியத்தை அங்கே அதிகரிக்க வைத்திருக்கிறார்.
00000000000000000000000000000000
வைத்தியசாலைக்கு வெளியேயான அவுஸ்ரேலியாவை அதன் பூகோள அமைப்பு, அதன் நகரங்கள், காடுகள், சமவெளிகள், இயற்கை, தாவரங்கள், சுவாத்தியம் இவைகளை வாசகர்கண் முன் கொண்டுவர ஆசிரியர் அத்தனை முயற்சிக்கவில்லை. ஒரேயொரு இடத்தில் மட்டும் மனைவியுடன் காரில் செல்லும்போது எதிர்ப்படும் மலையையும் இயூகலிப்ரஸ் மரங்கள் நிற்பதையும் கொஞ்சம் சொல்கிறார். அவுஸ்ரேலியா கண்டம் உலகத்தின் பல்வேறுபட்ட சீதோஷ்ண நிலைக்கான தாவரங்களையும், இதர கண்டங்களிலிருந்து மறைந்துப்போன அரிய மூலிகைகள் போன்ற தாவரங்களையும் கொண்டிருப்பதால் அதனை ‘Living Museum’ என்பார்கள். இன்னும் ஆஸ்திரேலியா கண்டத்தில் முன்பெல்லாம் முயல்கள் இருக்கவேயில்லை, சென்ற நூற்றாண்டில்தான் கடல்வாணிபத்தினர் முயல்களைத் தற்செயலாக கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஆஸ்திரேலியாவின் சீதோஷ்ணம் அவற்குச்சாதகமாக அமைந்துவிடவே அவ்வினம் அங்கே பல்கிப்பெருகி நாட்டின் விவசாயத்துக்குப் பெரும் அழிவை உண்டுபண்ணும் ஒரு இனமாகவே மாறிவிட்டது என்று படித்திருகிறேன். வைத்தியசாலையிலும் எவ்வகை முயலினதும் நடமாட்டம் இருக்காதது, முயல்கள் பற்றிய வேறெத்தகவல்களும் மிருகவைத்தியசாலையை மையமிட்டான இப்புதினத்தில் இல்லாததும் எனக்கு ஆச்சரியம்.
ஆசிரியன் எழுதாததைப்பற்றி விசாரம்கொள்ளுதல் விமர்சன தர்மம் இல்லைத்தான், ஆனாலும் என் ஆதங்கத்தைப்பதிவு செய்யாமலிருக்கவும் முடியவில்லை.
எம்.ஸ்.உதயமூர்த்தி தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் எழுத ஆரம்பிக்கும்போதெல்லாம் அமெரிக்காவிலே என்றுதான் ஆரம்பிப்பார். இந்நாவலின் பகைப்புலம் அவுஸ்ரேலியாவிலுள்ள மெல்போர்ண் என்பது வாசகன் மனதில் பதிவானபின்னும் அவுஸ்ரேலியாவில் செல்லப்பிராணிகளுக்கான சட்டங்கள் இப்படி/ அவுஸ்ரேலியாவில் சொத்துரிமைச்சட்டம் இப்படி என்றும் திரும்பத்திரும்ப அவுஸ்ரேலிய சகஸ்ரநாமாவளி செய்திருக்க வேண்டியதில்லை. இன்னும் ஆஸ்பத்தரியின் தலைமை டாக்டர் கலோஸ் சேரம், சில இடங்களில் அவர் என்று மரியாதையுடனும், சில இடங்களில் அவன் என்று ஒருமையிலும் அழைக்கப்படுகிறார்.
எனக்கு எந்த நாவலையும் வேகமாகப்படிக்க வராது. காரணம் ஒரு வாக்கியம் அழகானதாக அமைந்துவிட்டால் அதைத்திரும்பவும் படித்துச்சுவைப்பேன். இடக்கலானாதாகவோ, தொள்ளலானதாகவோ இருந்தால் இதை எப்படி மாற்றி இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமென்று அவ்விடத்திலேயே நின்று சிந்திக்கத் தொடங்கிவிடுவேன். இந்நாவலிலும் தொள்ளலாக இறுக்கமின்றி அம்மைந்த வாக்கியங்கள் பல என் வாசிப்பின் வேகத்துக்குத் தடுக்குக்கட்டைகள் போட்டன.
உதாரணத்துக்குச்சில:
சுந்தரம்பிள்ளை(யின்?) மனதில்(து?) இந்தசிக்கலை எவ்வாறு போலினுக்கு(ச்?) சங்கடம் கொடுக்காமல் எப்படி(த்) தீர்க்கலாம் (மென?) எண்ணிக்கொண்டிருந்தது.(தான்?) (பக்-95)
அந்த நாய் மீண்டும் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு தனது எஜமானரிடம் மீண்டும் சென்றது (பக் 33).
இன்னும்
ஒரு வாக்கியத்தின் எழுவாய் பன்மையில் அமைந்தால் அதன் வினைமுற்றும் பன்மையாக இருக்கவேண்டுமென்பது அடிப்படை விதி.
கண்கள் உரோமத்தில் புதைந்திருந்தது / உடம்பின் நெளிவுகள் சங்கீதத்துக்கு ஏற்றமாதிரி இருந்தது / அங்கு சென்றது சாமின் கண்கள்/ மூன்று நாள் கடந்துவிட்டது/
என்றெல்லாம் வெகு சாதாரணமாக எழுதிச்செல்கிறார். ஆனால் அவரது முந்திய நாவலான ‘வண்ணாத்திக்குளத்தில்’ பிறிதொருவர் கணனியில் ஏற்றியமையாலோ என்னவோ இத்தகைய வழுக்கள் பெரிதும் களையப்பட்டிருந்தன.
இங்கே அவ்வாறான தவறுகள் பக்கத்துக்கு இரண்டு மூன்றென மலிந்து கிடக்கவும் முதலில் அவற்றை ஒரு டெக்ஸ்மார்க்கர் மூலம் அடையாளப்படுத்தினேன். நாவல் முடிய முன்னரே என் மார்க்கர் தீர்ந்துவிட்டது.
என் ஆதங்கம் என்னவென்றால் ஆசிரியர் அவசரப்படாமல் நூலை அச்சேற்ற முன்பாக இரண்டு மூன்று தடவைகள் பிறிதொருவரைக்கொண்டு செம்மை நோக்கிக்கொண்டு நூலை இதைவிட மெலிதான / நிறைகுறைந்த /ஒளிப்பான தாளில் பதிப்பித்திருந்தால் நூல் இன்னும் கச்சிதமாகவும் கவர்ச்சியானதாகவும் அமைந்திருக்கும்.
அவுஸ்ரேலியாவில் பல தமிழர்கள் வைத்தியர்களாகவும், விலங்குவைத்தியர்களாகவும்பணிசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தோழர் நோயல் நடேசனால்தான் தனது வைத்தியசாலையின் சூழலையும், அங்குள்ள மாந்தர்களையும், விலங்குகளையும், மனிதருடனான அவற்றின் உறவுகளையும் உயிர்ப்போடு எம்முடன் பகிரமுடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்படாத அறியப்படாத பல புதியசேதிகளைத் வாசகர்களுக்குச் சொல்லி நிற்கின்றதென்றவகையில் தமிழில் அண்மைக்காலமாக வெளிவந்துள்ளவற்றுள் வெகு வித்தியாசமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமான நாவல் இது.
கருப்புப்பிரதிகள் + மகிழ் வெளியீடு.
ஆசிரியர்: நோயல் நடேசன்.
நாவல், 402 பக்கங்கள், விலை: 300 இந்திய ரூபாய்கள்.
நன்றி : http://puthu.thinnai.com/?p=31806
Comments
Post a Comment