பார்த்திபன் கனவு -புதினம் 68 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 31 - பைரவரும் பூபதியும்.




பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான்.

"சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு, பின்வரும் சம்பாக்ஷணை நடந்தது.

"அய்யனார் கோவிலில் இருக்கிறார். என்னை இங்கே இருந்து உங்களுக்கு வழிகாட்டி அழைத்து வரும்படி சொன்னார்... ஆமாம், அவன் எங்கே?"

"எவன்?"

"அவன்தான். பல பெயர் கொண்டவன்... இரத்தின வியாபாரி... தேவசேனன்... உம்முடைய தாயாதி....ஹிஹிஹி, என்று குள்ளன் கீச்சுக் குரலில் சிரித்தான்.

"அவனா? ஹா ஹா ஹா!" என்று மாரப்பனும் பெருங் குரலில் சிரித்தான்.

அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் சிரித்த சிரிப்பின் ஒலி பயங்கரமாகத் தொனித்தது. மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த பட்சி ஜாதிகளை எழுப்பி விட்டது. சில பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. வேறு சில பறவைகள் தூக்கக் கலக்கத்தில் பீதியடைந்து தீனக் குரலில் சப்தித்தன.

"அவன் பத்திரமாகயிருக்கிறான் நீ கவலைப்படாதே. அடே! அன்றைக்கு அந்த இரத்தின வியாபாரிக்கு வழிக்காட்டிக் கொண்டு போனாயே, அந்த மாதிரிதான் எனக்கும் வழி காட்டுவாயோ?" என்று கூறி மாரப்பன் மறுபடியும் உரத்த குரலில் சிரித்தான்.

சித்திர குப்தன் கூறிய மறுமொழி பொன்னன் காதில் விழவில்லை. மீண்டும் மாரப்பன், 'ஓஹோஹோ! எனக்கு வழிகாட்டி அழைத்து வரச் சொன்னாரா? எங்கே? அழைத்துப் போ, பார்க்கலாம்" என்று சொல்லித் தன் கையிலிருந்த சவுக்கைச் சடீரென்று ஒரு சொடுக்கச் சொடுக்கினான். சவுக்கின் நுனி சித்திரகுப்தன் மீது சுளீரென்று பட்டது. சவுக்கு சொடுக்குகிற சத்தத்தைக் கேட்டதும் குதிரை பிய்த்துக் கொண்டு பாய்ந்து சென்றது.

குள்ளன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பின்னால் விரைவாகச் சென்றான். அவன் இவ்வளவு வேகமாக நடக்க முடியுமென்பதைக் கண்ட பொன்னனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அவனைச் சற்று தூரத்தில் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாகப் பொன்னனும் போனான்.

ஒரு நாழிகை தூரம் சாலையோடு கிழக்கே போன பிறகு, சாலையில் குதிரை நிற்பதும், பக்கத்தில் மாரப்பன் நிற்பதும் தெரிந்தது. சித்திரகுப்தன் மாரப்பனைப் பார்த்து, "ஏன் நிற்க வேண்டும்? போவதுதானே?" என்று கேட்க, "ஏண்டா, காட்டுப் பூனை! இருட்டு ராஜாவாகிய நீ வழிகாட்டிதான் இனிமேல் போகவேண்டும்" என்றான் மாரப்பன்.

"ஆகா! வழி காட்டுகிறேன், ஆனால் காட்டுப் பூனையிடம் நீ சற்று ஜாக்கிரதையாகயிரு. விழுந்து புரண்டினாலும் புரண்டி விடும்!" என்று சொல்லிவிட்டுப் குள்ளன் சாலைக்கு வலது புறத்தில் புதர்களும் கொடிகளும் மண்டிக் கிடந்த காட்டில் இறங்கிப் போகலானான்.

பொன்னனுக்கு அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது இப்போது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. பாழடைந்த அய்யனார் கோவிலுக்குத்தான் அவர்கள் போகிறார்கள். செடி, கொடிகளில் உராய்வதினால் சத்தம் கேட்கக் கூடுமாதலால் பொன்னன் சற்றுபின்னால் தங்கி அவர்கள் போய்க் கால்நாழிகைக்குப் பிறகு தானும் அவ்வழியே சென்றான்.

நள்ளிரவில் அந்தக் காட்டுவழியே போகும்போது பொன்னனுக்கு மனதில் திகிலாய்த்தானிருந்தது. திகிலை அதிகப்படுத்துவதற்கு ஆந்தைகள் உறுமும் குரலும், நரிகள் ஊளையிடும் குரலும் கேட்டன. மரம், செடிகள் அசைந்தாடும் போது, தரையில் கிடந்த இலைச் சருகுகளின் சரசரவென்னும் சத்தம் கேட்கும்போதும் பொன்னனுக்கு என்னவோ செய்தது. ஆனால் ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறது - முக்கியமான இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் - என்ற ஆவலினால் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அய்யனார் கோயில் உள்ள திசையை நோக்கிச் சென்றான்.

சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் ஒரு தீவர்த்தியின் வெளிச்சம் தெரிந்தது. சரி, அதுதான் ஐயனார் கோயில். கிட்ட நெருங்க நெருங்கக் கோயிலுக்கு முன்னால் வைத்திருந்த பிரம்மாண்டமான வீரர்களின் சிலைகளும் மண் யானைகளும், குதிரைகளும் தீவர்த்தி வெளிச்சத்தில், கோரமாகக் காட்சியளித்தன. இந்த ஏகாந்தக் காட்டுப் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கோவிலுக்குப் பட்டப்பகலில் வந்தபோதே பொன்னனுக்குத் திகிலாயிருந்தது. இப்போது கேட்க வேண்டியதில்லை. கோயிலின் வாசற்படிக்கருகில் பொன்னன் கண்ட காட்சி அவனுடைய திகிலை நூறு மடங்கு அதிகமாக்கிற்று. அங்கே, புராணங்களில் வர்ணித்திருப்பது போன்ற கோர ராட்சஸ ரூபமுடைய ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நெடிய கம்பீர உருவமும் வஜ்ரசரீரமும் கொண்ட மகாகபால பைரவர் நின்று கொண்டிருந்தார். தீவர்த்தியின் சிவந்த ஒளியில் அவருடைய நெற்றியில் அப்பியிருந்த சந்தனமும் குங்குமமும் இரத்தம் மாதிரி சிவந்து காட்டின. அவருடைய கழுத்தில் தொங்கிய கபால மாலை பொன்னனுக்குக் குலை நடுக்கம் உண்டாக்கிற்று. அவன் நடுங்கிக் கொண்டே கோயிலுக்குப் பின்புறமாகச் சென்று கோயில் வாசற்படிக்கு அருகில் இருந்த பெரிய வேப்பமரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அதே சமயத்தில் சித்திரகுப்தனும், மாரப்பனும் மகா கபால பைரவரின் முன்னால் வந்து நின்றார்கள்.

"மகாப் பிரபோ!" என்று மாரப்பன் பைரவருக்கு நமஸ்கரித்தான்.

"சேனாதிபதி! மாதாவின் ஆக்ஞையை நிறைவேற்றினாயா? பலி எங்கே?" என்று கபால பைரவரின் பேய்க் குரல் கேட்டது.

அந்தக் குரல் - மகேந்திர மண்டபத்தின் வாசலில் அன்றிரவு கேட்ட குரல் - ஏற்கனவே பயப் பிராந்தியடைந்திருந்த பொன்னனுடைய உடம்பில் மயிர்க்கூச்சு உண்டாக்கிற்று. அடித் தொண்டையிலிருந்து அதற்கும் கீழே இருதயப் பிரதேசத்திலிருந்து - வருவதுபோல் அந்தக் குரல் தொனித்தது. எனினும், உரத்துப் பேசிய மாரப்பனுடைய குரலைக் காட்டிலும் தெளிவாக அக்குரல் பொன்னனுடைய செவிகளில் விழுந்தது.

கபால பைரவரின் கேள்விக்கு மாரப்பன், "மகாப்பிரபோ! பலி பத்திரமாயிருக்கிறது" என்றான்.

"எங்கே? ஏன் இவ்விடம் கொண்டு வரவில்லை? காளிமாதாவின் கட்டளையை உதாசீனம் செய்கிறாயா, சேனாதிபதி!"

"இல்லை, இல்லை. மகாப் பிரபோ! இன்று சாயங்காலந்தான் இளவரசனைக் கைப்பற்ற முடிந்தது. உடனே இவ்விடம் கொண்டு வருவதில் பல அபாயங்கள் இருக்கின்றன, பிரபோ! அந்த ஓடக்காரன் இங்கே தான் இருக்கிறான்..."

இதைக் கேட்டதும் மரத்தின் பின்னால் மறைந்து நின்ற பொன்னனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனுடைய அடிவயிறு மேலே நெஞ்சுக்கு வந்துவிட்டது போலிருந்தது. மாரப்ப பூபதியின் அடுத்த வார்த்தையினால் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது.

"...அவனைக் கைப்பற்ற முடியவில்லை. சக்கரவர்த்தியின் மகள் குறுக்கே நின்று மறித்தாள். மகாப்பிரபோ! குந்தவி தேவியும் இன்னும் இங்கேதான் இருக்கிறாள். இளவரசனைத் தப்புவிப்பதில் முனைந்திருக்கிறாள். ஆகையால் நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப் போய் விடும்."

மகா கபால பைரவர் இப்போது ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்த வேளையில் அந்தப் பயங்கரத் தொனியானது நாலா பக்கமும் பரவி எதிரொலி செய்தபோது, பல நூறு பேய்கள் ஏக காலத்தில் சிரிப்பது போலிருந்தது.

"சேனாதிபதி! நீதானா பேசுகிறாய்? காளிமாதாவின் கட்டளையை நிறைவேற்றப் பயப்படுகிறாயா? அதுவும் ஒரு பெண் பிள்ளைக்கும் ஒரு ஓடக்காரனுக்கும் பயந்தா?"

"இல்லை, சுவாமி, இல்லை! நான் பயப்படுவதெல்லாம் காளி மாதாவின் கைங்கரியத்துக்குப் பங்கம் வந்து விடுமோ என்பதற்குத்தான். மகாப் பிரபோ! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை எப்படியும் நிறைவேற்றுவேன். அமாவாசையன்று இரவுக்குள் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்."

"சேர்க்காவிட்டால்....?" என்றது கபால பைரவரின் கடூரமான குரல்.

"என்னையே மாதாவுக்குப் பலியாக அர்ப்பணம் செய்வேன்."

"வேண்டாம். பூபதி! வேண்டாம். உன்னால் மாதாவுக்கு இன்னும் எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டும். இந்தச் செழிப்பான தமிழகத்தில் மகா காளியின் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது நீதான் பிரதம தளகர்த்தனாயிருக்க வேண்டும்."

"மகாப்பிரபுவின் கட்டளையையும், காளி மாதாவின் ஆணையையும் எப்போதும் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்."

"மாரப்பா! மாதாவுக்கு உன் பேரில் பூரண கிருபை இருக்கிறது. மேலும் மேலும் உனக்குப் பெரிய பதவிகளை அளிக்கப் போகிறாள்.... இருக்கட்டும்; இப்போது எந்த இடத்தில் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பாய்?"

"அமாவாசையன்று முன் ஜாமத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டி மகேந்திர மண்டபத்துக்கு அருகில் கொண்டு வந்து சேர்ப்பேன். அங்கே சாலை வழியில் தங்களுடைய ஆட்களை அனுப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்."

"ஏன் அந்த வேலையை எனக்குக் கொடுக்கிறாய்?"

"மகாப்பிரபோ! இங்கே உள்ள ஆட்களிடம் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. சக்கரவர்த்தியின் கட்டளைப் பிரகாரம் இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லித்தான் அனுப்பப் போகிறேன். அவர்களைத் தொடர்ந்து சற்றுப் பின்னால் நான் வருவேன். தங்களுடைய ஆட்கள் வந்து வழிமறித்து இளவரசரைக் கொண்டு போக வேண்டும். ஆனால், நான் அனுப்பும் ஆட்கள் அவ்வளவு அசகாயசூரர்களாயிருக்க மாட்டார்கள். தங்களுடைய திருநாமத்தைச் சொன்னால், உடனே கத்திகளைக் கீழே போட்டுவிட்டு நமஸ்கரிப்பார்கள்."

"அப்படியே யாகட்டும், சேனாதிபதி! ஆனால் ஜாக்கிரதை! காளிமாதா அடுத்த அமாவாசை இரவில் அவசியம் பலியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!"

"இன்னொரு விஷயம் தெரிவிக்க வேணும். மகாபிரபோ!"

"சீக்கிரம் சொல்; பொழுது விடிவதற்குள் நான் ஆற்றைத் தாண்ட வேண்டும்."

"இந்த ஓடக்காரப் பொன்னனைச் சில நாளாகக் காணவில்லை. அவன் மகாராணியைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. அவனைப் பற்றி அறிய நான் ஆள் விட்டிருந்தேன். நேற்றுத்தான் அவனைப்பற்றித் தகவல் கிடைத்தது. பொன்னனும் இன்னொரு மனிதனும் குதிரை மேல் காட்டாற்றோடு கொல்லிமலைப்பக்கம் போனதாக என்னுடைய ஒற்றன் வந்து சொன்னான்..."

"ஓடக்காரன் இங்கே இருக்கிறான் என்றாயே?"

"ஆமாம்; இன்றைக்குத்தான் இங்கே வந்து சேர்ந்தான்."

"அவ்வளவுதானே?"

"பொன்னனுடன் போன இன்னொரு மனிதன் யார் தெரியுமா, பிரபோ?"

"யார்?"

"தங்களுக்கும் எனக்கும் ஜன்ம விரோதிதான்."

"என்ன? யார் சீக்கிரம் சொல்!"

"பொய் ஜடாமுடி தரித்த அந்த போலிச் சிவனடியார் தான்."

இதைக் கேட்டதும் மகா கபால பைரவனின் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான மாறுதலைப் பார்த்து பொன்னன் திகைத்துப் போனான். ஏற்கெனவே கோரமாயிருந்த அந்த முகத்தில் இப்போது அளவில்லாத குரோதமும் பயமும் பகைமையும் தோன்றி விகாரப்படுத்தின. அதைப் பார்த்து "ஐயோ!" என்று பொன்னன் அலறிய குரல் நல்ல வேளையாகப் பயத்தின் மிகுதியால் அவன் தொண்டையிலேயே நின்றுவிட்டது.

கபால பைரவரும் சித்திரகுப்தனும் மாரப்ப பூபதியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்ற ராட்சதன் அவர்களுக்கெல்லாம் முன்னால் போனான். சற்று நேரத்துக்கெல்லாம் தீவர்த்தி வெளிச்சம் மறைந்தது. கீழ்வானத்திலே இளம்பிறைச் சந்திரன் உதயமாயிற்று.

அவர்கள் போய்க் கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு தான் பொன்னன் அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய உடம்பு மிகவும் தளர்ச்சியடைந்திருந்தாலும், மனத்தில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டிருந்தது. விக்கிரம மகாராஜாவை இந்த நரபலிக்காரர்களிடமிருந்து தப்புவிக்கும் வழி அவனுடைய மனத்தில் உதயமாகியிருந்தது. மாரப்பனுடைய தந்திரம் இன்னதென்பது அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டது. இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதில் பிரயோஜனமில்லை என்று மகாக் கபால பைரவரின் நரபலிக்கு அவரை அனுப்ப மாரப்பன் எண்ணியிருக்கிறான். ஆனால், தன் பேரில் குற்றம் ஏற்படாதபடி இந்தக் கரியத்தைத் தந்திரமாகச் செய்ய உத்தேசித்திருக்கிறான். அவனுடைய தந்திரத்துக்கு மாற்றுத் தந்திரம் செய்து விக்கிரம மகாராஜாவை விடுவிக்க வேண்டும். விடுவித்து நேரே மாமல்லபுரம் துறைமுகத்துக்கு அழைத்துப் போகவேண்டும். குந்தவி தேவியின் உதவியைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும்... இவ்விதமெல்லாம் சிந்தித்துக்கொண்டு பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் பொன்னன் தோணித் துறையை அடைந்தான்.

தொடரும்

Comments