Thursday, November 29, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 10. விடிவெள்ளி விழா )


பாகம் 2   , 10. விடிவெள்ளி விழா 


சோழ சாம்ராஜ்யத்தின் ஒன்பது மண்டலங்களிலும் வெற்றி விழாவுக்கான
முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கிராமங்கள்,
கூற்றங்கள், நாடுகள், வளநாடுகள் இப்படித் தன்னகத்தே பல சிறிய பெரிய
எல்லைகள் வகுத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மண்டலமும் விழாவில்
முதன்மை பெறுவதற்காக முயன்று கொண்டிருந்தன. தென்பாண்டி
மண்டலத்தில் மட்டும் ஒரு பக்கம் உற்சாகமும் மறுபக்கம் புகைச்சலும்
காணப்பட்டன.

தஞ்சை அரண்மனை ஆலோசனை மண்டபத்தில் மாமன்னர்
பெரியதோர் ஆசனத்தில் சாய்ந்தவாறு வீற்றிருந்தார். அவர் அருகில்
கொடும்பாளூர் பெரிய வேளார் பணிவோடு அமர்ந்து விழாச் செய்திகளை
விவரிக்கத் தொடங்கினார். சாம்ராஜ்யம் முழுவதும் கோலாகலமாக வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்கான திட்டங்கள் உருப்பெற்றிருந்தன.

“ஆமாம்! ஒருநாள் கூத்தாக இது போய்விடக்கூடாது ஒவ்வொருவரின்
வாழ்விலும் மறக்க முடியாத எண்ணங்களை நாம் அந்த ஒரு நாளில்
ஊன்றிவிட வேண்டும்’’ என்றார் மாமன்னர்.

“சக்கரவர்த்திகள் அளித்துள்ள செய்தியை ஒவ்வொரு கிராமத்
தலைவருக்கும் அனுப்பச் செய்திருக்கிறேன். விழாவுக்கான திட்டங்களும்
அவர்களை எட்டியிருக்கின்றன’’ என்றார் பெரிய வேளார்.

“இந்த விழா நம்முடைய மக்களின் தன்னம்பிக்கை விழாவாக
இருக்கவேண்டும். நாம் எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெற்றுத் தீருவோம்
என்ற துணிவு அவர்களுக்கு இதனால் ஏற்பட வேண்டும். சோர்வும்,
சோம்பலும், கோழைத்தனமும் இனி அணுவளவும் இந்தத் தமிழ் மண்ணில்
ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. இது மக்களின் சக்தியை மக்களுக்கு
உணர்த்தும் விழா. தெரிந்ததா, பெரிய வேளார் அவர்களே?’’

“பாண்டியர்கள் இப்போதே பதறத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றார்
பெரிய வேளார்.

“பாண்டியர்கள் கிடக்கட்டும். வடக்கு எல்லையின் நிலைமை என்ன;
நான் ஈழத்துக்குச் சென்றிருந்தபோது வடக்கு எல்லையில் பகைவர்கள்
ஏதேதோ சிறிய தொல்லைகள் கொடுக்க முற்பட்டதாகக் கூறினீர்களே?’’

“பயங்காட்டி விளையாடுகிறார்கள்’’ என்று அலட்சியமாகச் சிரித்தார்
பெரிய வேளார். “மாதண்ட நாயகர் அரையன் ராஜராஜனுக்கு அவர்களின்
துரோக விளையாட்டுக்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட
வேண்டுமென்ற துடிப்பு. நான்தான் இப்போதைக்கு அமைதியாக இருக்கும்படி
செய்திவிடுத்தேன். பாவம்! இதுவரையில் கால் வயிற்றுக் கஞ்சிகூடக்
கிடைக்காமல் திண்டாடியவர்களுக்கு இப்போது தான் அரைவயிறு நிரம்பத்
தொடங்கியிருக்கிறது. அதற்குள் அவர்களுக்குத் தினவு தாங்கவில்லை.
செருக்கு மிகுதியால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளப்
பார்க்கிறார்கள்.’’

“என்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டியதுதான்’’ என்றார்
சக்கரவர்த்தி. “பகை சூழ்ந்த உலகில்தான் நாம் வாழ்கிறோம். சாவுக்கு
அஞ்சுகிறவர்களுக்கு இங்கு வாழ்வில்லை. இதை நம்மவர்கள் மறந்துவிடவே
கூடாது. நமது எதிர்காலப் புதுமலர்ச்சிக்கு நாட்டு மக்களின் மனத்
திண்மையும் உழைப்புமே மூலாதாரங்கள்.’’

“தாங்கள் ஈழத்திலிருந்து கொண்டுவந்துள்ள மணிமுடி நமது
பொற்காலத்தின் விடிவெள்ளி. இந்த ஒளி காட்டும் நம்பிக்கை வழியில்
கட்டாயம் நம்மவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்’’ என்று பெருமையோடு
கூறினார் பெரிய வேளார்.

“ஆமாம், காஞ்சியிலிருந்து ராஜாதிராஜன் எப்போது இங்கு
திரும்புகிறான்? வந்தவுடன் அவனைப் பார்த்துவிட்டு நான் பழையாறைக்குப்
புறப்படவேண்டும்’’ என்று கூறினார் சக்கரவர்த்தி.

“இரண்டு மூன்று தினங்களில் வந்து சேரக்கூடுமென்று செய்தி
வந்திருக்கிறது. முன்பே காஞ்சிமாநகரை விட்டுக் கிளம்பிவிட்டாராம். வெற்றி
விழாவின்போது தாங்களும் இளவரசரோடு தலைநகரில் இருந்தால்...’’ என்று,
பணிவோடு தஞ்சைமாநகரில் அவரைத் தங்கும்படி வேண்டுகோள் விடுத்தார்
மதுராந்தக வேளார்.

“விழாவின்போது நான் இருக்க வேண்டிய இடம் பழையாறைதான்’’
என்றார் மாமன்னர் “பழையாறையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து
ஐம்பதினாயிரம் போர் வீரர்களுக்கு மேல் ஈழத்திற்கு வந்திருந்தார்கள். ஈழப்
பெரும் படையின் பிறப்பிடமே பழையாறை. அதற்கு வடக்கே இரண்டு மூன்று
காதம் வரையிலிருந்து நாம் வீரர்களைப் பொறுக்கி எடுத்துச்
சென்றிருக்கிறோம். பத்தாயிரம் வீரர்களுக்குமேல் ஈழ நாட்டில் உயிர்
இழந்திருக்கிறார்கள். மேலும் பத்துப் பன்னிரண்டாயிரம் பேர் வரை
படுகாயமுற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வெற்றிக்கு மூலகாரணமான வீரர்கள்
குடியிருப்புக்கு நான் செல்வதுதானே முறை!’’

“சித்தம், சக்கரவர்த்திகளே’’ என்றார் பெரிய வேளார். “இராஜாதிராஜன் தஞ்சையில் இருக்கட்டும். நீங்கள் கொடும்பாளூருக்குச்
சென்று வாருங்கள். காஞ்சியை மாதண்ட நாயகர் அரையன் ராஜராஜன்
கவனித்துக் கொள்வார், மதுரைக்கு... மதுரைக்கு...’’ என்று பேச்சைக் கூட
முடிக்காமல் தயங்கினார் இராஜேந்திரர்.

சிறுபொழுது அப்படியே யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

பணியாள் ஓடிவந்து வல்லவரையரும் ஈராயிரம் பல்லவரையரும்
சக்கரவர்த்தியைக் காண வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். அவனிடம்
அவர்களை அழைத்து வரச் சொல்லிவிட்டு, ஆசனத்தில் நிமிர்ந்து
உட்கார்ந்தார் மாமன்னர். அவர்கள் வந்தவுடன் ஈராயிரம் பல்லவரையரை
உற்றுப் பார்த்தார்.

“பல்லவரையர் அவர்களே! பாண்டியர்கள் மூவரும் என்ன மறுமொழி
கூறியிருக்கிறார்கள்?’’

“விழாவில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. அதை
வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். மக்களது உற்சாகத்தைக் குலைப்பதற்கு
மறைமுகமான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. பாண்டியர்களுக்கு உரிய
முடியை நாம் கவர்ந்து கொண்டு வந்துவிட்டோமாம். சோழர்களுடைய வெற்றி
விழாவில் பாண்டிய நாட்டு மக்கள் கலந்து கொள்வது தவறாகுமாம்.’’

“போகட்டும்! வேறு ஏதேனும் முக்கியமான செய்திகள்?’’

வெற்றி விழாவென்று சிறிய இளவரசன் சுந்தரசோழருக்கு மதுரையில்
நாம் இளவரசுப் பட்டம் கட்டக் கூடும் என்று பாண்டியர்கள்
எதிர்பார்க்கிறார்கள். ஈழத்திலிருந்து கொண்டு வந்த முடியே இளவரசின்
முடியாகப் போகிறதாம். மதுரை புது மாளிகையில் இந்த முடிசூட்டு விழா
நடக்குமானால், அந்த மாளிகையைத் தகர்த்துவிட வேண்டுமென்பது அவர்கள்
திட்டம். விழாவன்று ஏதேனும் இப்படி நிகழக் கூடுமென்று
தெரிந்து,எச்சரிக்கையோடு படைகளையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறேன்.’’

“அவர்கள் ஓரளவு நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’’ என்றார்

சக்கரவர்த்தி. இப்போது மதுரையில் இருக்கும் சுந்தரசோழனை விழாவன்று
சுந்தரசோழ பாண்டியன் என்ற முறையில் பாண்டிய நாட்டு மக்களுக்கு
அறிமுகம் செய்து வையுங்கள். சோழ, சேர, பாண்டியர்கள் அனைவருமே
தமிழர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நம்முடைய
பழைய வரலாற்றில், வடக்கே அசோகரது சாம்ராஜ்யம் பரவி வந்த காலத்தில்
மூவேந்தர்களும் ஒரே வேந்தரின் கீழ் ஒன்றியிருந்து, தங்கள் ஒற்றுமையை
அவருக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள். அசோகரது ஆட்சி இங்கு எட்டாமல்,
அவர் நம்முடன் நட்புறவு பூண்டதற்குக் காரணம் அந்த ஒற்றுமைதான்.
வடக்கு வாயிலில் நம்மை அழிக்கக் காத்து நிற்கும் மேலைச் சளுக்கப்
பகைவரைப் பற்றிப் பாண்டிய நாட்டு மக்களிடம் கூறுங்கள். பகைவர்களோடு
உறவாடித் தமிழ் இனத்துக்கு இழுக்குத் தேடுபவர்கள் தங்களைப் பாண்டியர்
என்று கூறிக் கொள்வதைவிட சுந்தர சோழனுக்கு அந்தப் பெயர் மிகவும்
பொருந்தும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.’’

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, “அன்று ஏதேனும்
தகாத செயல்கள் நடந்தால்...?’’ என்று கேட்டார் ஈராயிரம் பல்லவரையர்.

“நடக்காது; நடக்கவும் விடக்கூடாது!’’ என்றார் மாமன்னர் கடுமையான
குரலில்.

அதுவரையில் அமைதியோடிருந்த வல்லவரையர் ஈராயிரம்
பல்லவரையரை நோக்கிக் கூறலானார்:

“நமது கைக்கோளைப் படை வீரர்களில் பாதிப் பகுதியினரை அன்று
பொது மக்களின் உடையில் மற்றவர்களுடன் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை களியாட்டங்களும் கூத்துக்களும்
நடந்துவோம். பாண்டிய மன்னர்கள் மேலைச் சளுக்கர்களோடும் ஈழத்து
அமைச்சரோடும் சேர்ந்து கொண்டு புரியும் சதிச் செயல்கள் அன்று
அம்பலமாக்கப்பட வேண்டும். இனி சிறிய இளவரசர் சுந்தர சோழரே
மக்களின் எதிர்காலப் பாண்டியர் என்பதை நாம் சூசகமாக அறிவித்து
விடுவோம்.’’

“ஓராண்டு காலமாக அவர்கள் நமக்கு எதிராகப் பொய்க்கூற்றைப் பரப்பி வருகிறார்கள். அதை ஒரே நாளில் மாற்ற முடியுமா?’’
என்றார் பெரிய வேளார்.

“ஓராண்டுப் பொய்யை ஒரு நாள் உண்மை வெல்வதென்றால்
கடினந்தான். ஆனால் உண்மைக்கு வலிமை அதிகம்; நாளடைவில் அது
தானாகக் கிளைத்துத் தழைத்து நாட்டுப்புறங்கள் தோறும் பரவிவிடும்’’ என்று
கூறினார் சக்கரவர்த்தி.

பின்னர், எதிர்பாராத தாக்குதல் நிகழ்ந்தால் எப்படி நடந்து
கொள்வதென்பதைக் கூறிவிட்டு, “ஆத்திர மூட்டக்கூடிய சிறு நிகழ்ச்சிகள்
நடந்தால் பொறுமை இழக்க வேண்டாம். ஆனால் அவற்றுக்குப் பின்னால்
அபாயம் இருந்தால் கவனிக்கத் தவற வேண்டாம்’’ என்றார்.

சிறிய இளவரசன் சுந்தரசோழனும் சேனாபதி கிருஷ்ணன் ராமனும்
அப்போது மதுரையில் இருந்தார்கள். அவர்களோடு ஈராயிரம் பல்லவரையரும்
தமது படைவீரர்களுடன் சேர்ந்து கொள்வதென்று ஏற்பாடாயிற்று.

ஆலோசனை முடிந்தபின்பு அனைவரும் எழுந்து மண்டபத்துக்கு
வெளியே நடந்தார்கள். தூரத்தில் ஒரு தூணின் ஓரமாக இளங்கோவும்
அரண்மனை வைத்தியரும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
பெரியவர்களைக் கண்டவுடன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவப்
பார்த்தான் இளங்கோ.

அவனுடைய தோள் பட்டையைக் கூர்ந்து நோக்கிய வல்லவரையர்,
“இளங்கோ! என்ன இது? திரும்பவும் ஏன் கட்டுப் போட்டிருக்கிறாய்?’’
என்றார்.

அதற்குள் பெரியவர்கள் அனைவரும் அவனுக்கு அருகில் வந்து
விட்டார்கள். எல்லோருடைய கண்களும் அவன் மீது நிலைத்திருந்தன.

“ஒன்றுமில்லை தாத்தா’’ என்றான் இளங்கோ.

“ஒன்றுமில்லையாவது! இவருக்கு வைத்தியம் செய்வதை விடச்
சும்மாயிருக்கலாம்’’ என்று கடிந்து கொண்டார் வைத்தியர். “முக்கால் பகுதிக்கு
மேல் ஆறிப்போய்த் தழும்பாகிவிட்ட காயத்தை இவராகத் திருப்பிக் கொண்டிருக்கிறார்.
எவ்வளவோ சொல்லி வைத்திருந்தேன், கேட்கவில்லை. திரும்பவும்
வாட்பயிற்சி செய்தாரோ, வேலெடுத்து வீசினாரோ, வில் வளைத்தாரோ
தெரியாது. தழும்பெல்லாம் ரத்தம் கசிந்து வீங்கிக் கொண்டுவிட்டது.’’

“நீ என்ன சிறு குழந்தையா, இளங்கோ?’’ என்று செல்லமாய்க்
கடிந்துகொண்டார் சக்கரவர்த்தி.

“பாண்டியநாட்டுப் போர்க்களம் நினைவுக்கு வந்திருக்கும்; ஒரு கை
போனாலும் பாதகமில்லை என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது’’
என்றார் பெரிய வேளார்.

“வைத்தியர் சொல்கிறபடி நடந்து வா, பேசாமல் என்னேடு
பழையாறைக்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லி விட்டு நடந்தார்
இராஜேந்திரர்.

பெரியவர்கள் சென்றவுடன் தனக்குள் மெல்ல நகைத்துக்கொண்டான்
இளங்கோ. அடுத்தாற்போல் அவனுக்கே வருத்தமாகவும் இருந்தது.
வீரமல்லனை அறைந்த அதிர்ச்சியில் தனக்கே இவ்வளவு வலியும்
வேதனையும் ஏற்பட்டிருக்குமானால் பாவம், வீரமல்லனின் கதி என்ன
ஆகியிருக்கும்?

தொடரும்


வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 9. இனி நண்பனல்ல! )

பாகம் 2   , 9. இனி நண்பனல்ல!  

அரண்மனை அந்தப்புரத்தில் இளங்கோவை அவன் அன்னையார்
ஆதித்த பிராட்டி அத்தையார் வீரமாதேவி, பாட்டியார் பெரிய குந்தவை
இவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தங்களது ஆனந்தக் கண்ணீரால்
குளிப்பாட்டினார்கள். அருள்மொழியின் தங்கை அம்மங்கையோ அவன் மீது
தன் பரிகாசச் சொற்களைச் சரமாரியாகப் பொழியத் தொடங்கினாள்.

“ஒரே ஒரு போர்க்களத்துக்குச் சென்று ஒரே ஒரு விழுப்புண்ணோடு
திரும்பியிருக்கிறார் இவர். இவரைப் போய் எல்லோரும் வீராதி வீரர், சூராதி
சூரர் என்கிறார்கள். இவருக்குப் புகழ் தேடிக் கொள்ளவே தெரியவில்லை.
சின்னஞ்சிறு விழுப்புண் தழும்புகள் ஐம்பது அறுபதாவது உடலில் இருக்க
வேண்டாமா?’’

“நீ சற்று நேரம் சும்மா இருக்கமாட்டாயா?’’ என்று தமது மகளை
அதட்டினார் வீரமாதேவி. “போங்களம்மா! கவசம் போட்டுக்கொள்ளாமல் இப்படியா போய்ப்
பகைவன் கையில் அகப்பட்டுக் கொள்வது. ஒரு சாண் ஆழம், இரண்டு சாண்
அகலத்துக்கு அவன் இவர் தோளைப் பிளந்து தள்ளியிருக்கிறானே! இதைப்
போல் இரண்டாவது விழுப் புண்ணைத் தேடிக்கொண்டிருந்தால் இவர் கதி
என்ன?’’

“உனக்குக் கவசம் போட்டுவிடுகிறேன். அதோடு சுனைக்குள் இறங்கி
நீந்திச் செல்கிறாயா?’’ என்று கேட்டான் இளங்கோ.

“எனக்கு நீந்தத் தெரிந்தால் நான் மலையைக் கட்டிக் கொண்டு
கடலில்கூடக் குதித்துவிடுவேன்.’’

இதற்குள் பாட்டியார் பெரிய குந்தவை குறுக்கிட்டு, “ஆமாம்,
போர்க்களத்துக்கு நீ இவளை அழைத்துக் கொண்டு போயிருக்கவேண்டும்;
இவள் பேச்சைக் கேட்டு விட்டே பகைநாட்டு வீரர்கள் புறமுதுகு காட்டி
ஓடியிருப்பார்கள்’’ என்றார். அம்மங்கையின் வாய் தானாக அடைத்துக்
கொண்டது.

அங்கிருந்து இளங்கோ திரும்பியபோது, அருள்மொழி ஒரு
கூடத்துக்குள்ளிருந்து வெளிப்பட்டாள்.

“நங்கையாரே! நீங்கள் நெற்றியில் இட்டுவிட்ட வீரத்திலகம் இன்னும்
மறையாமல் என் தோளில் பதிந்திருக்கிறது பார்த்தீர்களா?’’ என்று கூறிச்
சிரித்தான் இளங்கோ. “இனிமேல் என்றைக்குமே இது மறையாது’’ என்று
தனது வலது தோளிலிருந்த செந்தழும்பைச் சுட்டிக்காட்டினான்.

ஏறிட்டு நோக்கிய அருள்மொழியின் விழிகளில் பனித்திரை படர்ந்தது.

“என்னுடைய விரலில் சிறு புண் ஏற்பட்டதாக நினைத்த அன்றைக்கு
நீங்கள் என்ன பாடுபட்டீர்கள். எப்படி உங்களால் இந்த வேதனையைத் தாங்க
முடிந்தது?’’

“நீங்கள்தானா நான்? நீங்கள் மலரைப் போன்றவர்கள், காற்றுகூட
உங்கள்மீது கடுகி வீசக்கூடாது. நான் மலையைப் போன்ற முரடன்,
போர்க்களத்தின் சலசலப்பு என்னை என்ன செய்துவிடும்?’’

“நான் எவ்வளவோ சொல்லி அனுப்பியும் அதையெல்லாம்
மறந்துவிட்டீர்களே!’’ என்றாள் அருள்மொழி.

“மறந்திருந்தால் நான் திரும்பி வந்திருக்கமுடியுமா? எனக்கும் சிறிது
விவேகமிருக்கிறது, இளவரசி!’’

பெருமையோடு புன்னகை பூத்துவிட்டு அந்தப் புரத்துக்குள் நுழைந்து
மறைந்தாள் அருள்மொழி. அவளது புன்னகை தென்றலாக மாறி அவன்
தோளுக்குக் குளுமை தந்தது.

மூன்று நான்கு தினங்களாகவே ரோகிணி இளங்கோவின் கண்களுக்குத்
தட்டுப்படவில்லை. அம்மங்கை தேவியுடன் சேர்ந்து கொண்டோ அல்லது
அருள்மொழியுடன் கூடிக் கொண்டோ அவள் பொழுதைப் போக்கிக்
கொண்டிருந்தாள். அவர்களை விட்டுப் பிரிந்திருக்கும் வேளையில்
அவளுடைய மாளிகை அவளுக்குப் புகலிடம் அளித்தது போலும்.

கமலாலயக் கரையில் ரோகிணி அவனை அந்தரத்தில் விட்டுச் சென்ற
பிறகு அவள் நினைவு அவனுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியளிக்கவில்லை.
அவளுடைய தந்தையார் மாமன்னரின் உறவை நாடி வந்துவிட்டு, பின்பு
திடீரென்று மனம் மாறிவிட்டாரல்லவா? அது போலவே அவளும் செய்து
விட்டாளோ என்று நினைத்தான்.

வீரமல்லன் வாயிலாகத் தன்னை விரும்பி அழைத்துவரச் சொன்னவள்,
‘தன்னிடம் விரும்புகிறேன்’ என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் என்ன
குறைந்துவிடும்? இதற்குப் பெயர் ராஜதந்திரமா? அல்லது சாகசமா?

மகிழ்ச்சியளிக்காத நினைவென்றாலும் அது என்னவோ அவன்
மனத்தின் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டு தானிருந்தது. அந்த
உறுத்தலோடு அவன் தன்னையுமறியாது மகிந்தரின் மாளிகையை நாடிச்
சென்றான். முதன்முறையாக அவர்களுடைய நலத்தைக் கேட்டுவர
வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு!

தோட்டத்துப் புறமாக இருந்த சாளரத்தின் அருகே உட்கார்ந்துகொண்டு
திரைச்சீலையில் ஏதோ சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தாள் ரோகிணி.
அவளறியாமல் மெல்லச் சென்று அதை எட்டிப் பார்த்தான். அவளுடைய தம்பி காசிபனின் உருவம்
அரைகுறையாக அதில் வரையப்பட்டிருந்தது.

“உனக்குச் சித்திரம்கூட வரையத் தெரியுமா, ரோகிணி!’’

“வாருங்கள்’’ என்று அவசர அவசரமாக அருகிலிருந்த வண்ண மைக்
கிண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவனை அமரச் சொன்னாள். திரைச்
சீலையையும் நகர்த்தி வைத்தாள். தூரிகையை விட்டெறிந்தாள் “இந்த
ஏழைகளின் நினைவு உங்களுக்கு மறந்து போகாமல் இருப்பது எங்கள்
பாக்கியந்தான்!’’

“கப்பகல்லகம் அரண்மனையில் நீங்கள் வாழ்ந்த அளவுக்கு உங்களுக்கு
வசதிகள் செய்து கொடுக்க முடியாவிட்டாலும், ஏதோ எங்களால் இயன்ற வரை
செய்திருக்கிறோம். குறைகள் ஏதேனும் இருந்தால் சொல்; தந்தையாரிடம்
கூறிக் கவனிக்கச் செய்கிறேன்.’’

“இந்த நாட்டின் அமைச்சர்தாம் உங்கள் தந்தையா!’’

“ஆமாம்.’’

வீரமல்லன் அவளிடம் கூறிய இதர உறவுமுறைகளைப் பற்றியும்
இளங்கோவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் ரோகிணி. மணவினைத்
தொடர்பு பற்றிய பேச்சை மட்டிலும் அவனிடம் அவள் எழுப்பவில்லை.

“இந்த மாளிகையில் எனக்கு ஒரே ஒரு குறை இருக்கிறது. அதை
உங்களால் நீக்க முடிந்தால் சிறிது அமைதி கிடைக்கும்’’ என்றாள்.

திகைப்போடு, “குறையா? என்ன அது?’’ என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை; இந்த மாளிகையை மேற்பார்வை செய்வதற்கு உங்கள்
நண்பன் ஒருவனை நியமித்திருக்கிறீர்களே, அவனுக்கு வேறு ஏதாவது வேலை
கொடுத்தால் நன்றாயிருக்கும். அவனுடைய அளவுக்கு மீறிய உபசாரங்களையும்
பணிவிடைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு எனக்குத் தயக்கமாக
இருக்கிறது.உபசரிப்பிற்கும் ஒரு வரம்பு வேண்டும் பாருங்கள்!’’

“வீரமல்லனையா சொல்கிறாய்?’’

“நான் அவனைக் குறை கூறவில்லை. கப்பலில் என்னுடைய தனிமையில்
ஒருமுறை நீங்கள் குறுக்கிட்டபோது உங்களிடமே நான் எப்படி நடந்து
கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்த மட்டில்
அவனுடைய குறுக்கீடு எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. நீங்களாகக்
கேட்டதால் சொல்லுகிறேன்.’’

“நான் இப்போது குறுக்கிட்டதுகூடத் தவறுதானா?’’ என்றான் இளங்கோ.

“ஒருமுறை நான் உங்களுக்குத் தவறு செய்துவிட்டேன்; இனி
எப்போதும் அப்படி நடக்காது. தயவு செய்து அதை மறந்து விடுங்கள்’’ என்று
கனிவோடு கூறினாள் ரோகிணி. “ஆனால் வீரமல்லன் உங்களுக்கு நண்பனாக
இருக்கலாம்; எனக்கு அவன் நண்பனல்ல!’’

இளங்கோ தன் கரங்களைப் பிசைந்து கொண்டான். குளத்தங்கரையில்
வீரமல்லன் ரோகிணியைப் பற்றித் தன்னிடம் செய்த உபதேசம் அவன்
நினைவுக்கு வந்தது. அவன் செய்த உபதேசத்தை அவனே மெய்யென்று
நம்பியிருந்தால் எதற்காக ரோகிணியிடம் நெருங்கிப் பழக முற்படுகிறான்?

அவனை அவசியம் அங்கிருந்து மாற்றிவிடச் செய்கிறேன் என்று
கூறக்கூடிய துணிவு இளங்கோவிடம் இல்லை. அவனை அங்கு நியமித்தவர்
அவனுடைய தந்தையார் மதுராந்தக வேளார். அவரிடம் நேரில் நின்று
பேசுவதற்கே இளங்கோ தயங்குவது வழக்கம். அவரிடம் இதைப் போய்
எப்படிச் சொல்வது?

“என்ன யோசிக்கிறீர்கள்?’’

“இல்லை. ஒன்றுமில்லை’’ என்றான் இளங்கோ. இந்த விஷயத்தில்
ஒன்றுமே அவனால் செய்யமுடியாது. ஆயினும் தன் ஆற்றாமையை
அவளிடம் காட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை.

இந்தச் சமயத்தில் சாளரத்துக்கு வெளியே செடி மறைவுக்குப் பின்னால்
இரண்டு குரல்கள் கேட்கவே, அவர்கள் இருவரும் எழுந்து சென்று எட்டிப் பார்த்தார்கள். ஒருவன் வீரமல்லன்,
மற்றொருவன் மல்லர் தலைவன் மாங்குடி மாறன்.

“என்ன மாங்குடியாரே. அநுமார் ராமனைத் தோளில் தூக்கிக்கொண்டு
இலங்கையில் கூத்தாடினாராம்; நீங்கள் இளங்கோவைத் தூக்கிக்கொண்டு
கடற்கரையில் ஆடிய கூத்து, அதைவிடப் பெரிதாக இருந்ததே!’’

“கொடும்பாளூர் இளவரசர் ராமரானால் அவருக்கு நான்
அநுமாராவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தம்பி! ஈழத்துக்கு நான்
போயிருந்தால் அநுமார் செய்ததைத்தான் செய்திருப்பேன். அவருடைய
வீரத்தைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்கிறார்களே, நீ கேட்கவில்லையா?’’

“கேட்டேன், கேட்டேன். அவன் வாயாலேயே சொல்லக் கேட்டேன்!’’
என்று ஏளனமாய்க் கூறிவிட்டு விகாரமாகச் சிரித்தான் வீரமல்லன்.

“என்ன கேட்டாய்!’’ என்று பயங்கரமாய் உறுமினான் மல்லர் தலைவன்.
“நீ சிரிக்கும்படி அதில் என்ன இருந்தது?’’

“வீரத்தினால் அவன் மணிமுடியைக் கொண்டுவந்து விட்டதாக
எல்லோருக்கும் எண்ணம். நடந்தது என்ன தெரியுமா? மகிந்தரின் பெண்
ஒருத்தி இருக்கிறாளே, அவளை ஏமாற்றி அதை வஞ்சமாக எடுத்து
வந்திருக்கிறான் அவன்.’’

“வீரமல்லா!’’ என்று கத்திக்கொண்டே அவன்மீது பாய்ந்து அவன்
தோள்களைப் பற்றிக் குலுங்கினான் மாங்குடி மாறன். “இளவரசரைப் பற்றி நீ
என்ன வார்த்தை சொல்லத் துணிந்தாய்? அவருடைய தோளை நீ
பார்த்தாயா?’’ என்று கூறிக்கொண்டே இருகூறாய்க் கிழிக்க
விரும்புகிறவன்போல் இருபுறமும் பற்றி இழுத்தான்.

செடிகளை விலக்கிக்கொண்டு அங்கு தாவி ஓடிச்சென்றான் இளங்கோ.
இளங்கோவைக் கண்டவுடன் மாங்குடி மாறனின் மரணப்பிடி நழுவியது.

ஆனால் வீரமல்லனின் ஆத்திரம் அடங்கவில்லை. அது இன்னும்
அதிகமாகக் கொழுந்து விட்டெரிந்தது.

“இதோ வந்துவிட்டான். இவனையே கேட்டுப்பாரும் மாங்குடியாரே!
வீரமாவது மண்ணாங்கட்டியாவது! மகிந்தர் இவனுக்கு உயிர்ப்பிச்சை
அளிக்காவிட்டால் இவன் இங்கு மீண்டிருக்க முடியுமா? அவருடைய மகளின்
உதவி இல்லாவிட்டால் இவனை இன்றைக்கு ஊர் உலகம் வீரனென்று
சொல்லுமா?’’

வீரமல்லனா இப்படிப் பேசுகிறான்? அவனுக்கு வெறிபிடித்து விட்டதா
என்ன?

ரோகிணியைக் கடலில் தூக்கி எறிய நினைத்தபோது அவளை உற்றுப்
பார்த்தானே, அதேபோல் இன்று வீரமல்லனைப் பார்த்தான் இளங்கோ.
அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன, புருவங்கள் துடித்தன.

“இளவரசே! எனக்கு அனுமதி கொடுங்கள். இவனை மிதித்தே கொன்று
விடுகிறேன். எந்தச் செடியின் நிழலில் நிற்கிறானோ அதையே வெட்டக்கூடிய
மாபாதகன் இவன். மிதித்துத் துவைத்து இவனை எருவாக்கி இந்தத்
தோட்டத்து மண்ணில் போட்டு உழுது விடுகிறேன், பிரபு!’’ மாங்குடி
மல்லனின் மலைபோன்ற சரீரம் கோபத்தால் நடுங்கியது.

பொறாமை தூண்டிவிட்ட ஆத்திரம் வீரமல்லனிடம் மேலும் பற்றி
எரியத் தொடங்கியது. “ரோகிணியால் நீ வீரனானாய் என்பது உண்மைதானே,
இளங்கோ?’’ என்று கேட்டான.

இளங்கோவால் அதற்குப் பிறகும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள
முடியவில்லை. பளீர் பளீரென்று தனது கை சளைக்குமட்டும் அவன் முகத்தில்
ஓங்கி ஓங்கி அறைந்தான்.

வீரிட்டலறிக்கொண்டே அந்த இடத்துக்கு ரோகிணி ஓடி
வந்திருக்காவிட்டால், வீரமல்லனின் நிலை எப்படி ஆகி இருக்குமோ,
தெரியாது.

கன்றிக் கறுத்துப் போன முகத்தில் பதிந்திருந்த வீரமல்லனின் குரோதம்
மிக்க கண்கள் இளங்கோவை எரித்து விடுவதுபோல் நோக்கின. அதைத் தவிர
எந்தவிதமான எதிர்ப்பு உணர்ச்சியையும் அவன் வெளியில் காட்டிக்
கொள்ளவில்லை. ரோகிணி அங்கு நடந்ததைப் பார்த்து விட்டாள் என்று தெரிந்தவுடன் அவனுடைய வஞ்சம் அவனது நெஞ்சையே தின்றது.

“இளங்கோ...’’ என்று எதையோ சொல்வதற்கு வாய் திறந்தான்.

“இனிமேல் பெயர் சொல்லி அழைக்க உனக்கு உரிமையில்லை.
நட்புரிமை கொண்டாடினாயே, அதை இந்தக் கணத்துடன் மறந்துவிடு. இனி நீ
ஓர் ஆயிரவர் படைத்தலைவன்.’’

இளங்கோ அதற்குப்பின் அங்கு நில்லாமல், சட்டென்று திரும்பி
அரண்மனைப் பக்கம் நடந்தான்.

“உன்னை உயிரோடு விட்டுவிட்டுப் போகிறாரே!’’ என்று மாங்குடி
மாறன் பதற்றத்தோடு வீரமல்லனிடம் கூறிய சொல், இளங்கோவின் செவிகளில்
விழாமல் இல்லை.

இந்தக் காட்சி முழுவதையும் மேல்மாடத்திலிருந்து ஆர்வத்தோடு
பார்த்துக் கொண்டு நின்றார் மகிந்தர். நண்பர்களைப் பகைவர்களாக மாற்றிய
அந்தக் காட்சி அவர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. தமது
கண்களை இடுக்கிக்கொண்டு அவர் மௌனப் புன்னகை புரியலானார்.

தொடரும்வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 8. தந்திரம் வெல்லுமா? )

பாகம் 2   , 8. தந்திரம் வெல்லுமா?


வீரமல்லன் மதுரை மாநகரை விட்டுத் தஞ்சைத் தலைநகருக்குப்
புறப்பட்ட அன்று பெரும்பிடுகு முத்தரையரின் மகள் திலகவதியிடம் சென்று
விடைபெற்றுக்கொண்டு வந்ததோடல்லாமல், அவள் வாயிலாக அவள்
தந்தைக்கும் கூறிவிட்டு வந்தான்.

அவன் அப்படிச் செய்ததற்குப் பல காரணங்கள் இருந்தன.

திடீரென்று அவன் மதுரையைவிட்டு மறைந்து போனால் திகலவதி
வீணாகச் சந்தேகப்படுவாள். அவளுடைய சந்தேகம் அவள் தந்தைக்குப்
பரவாமல் இருக்காது. வீரமல்லன் இதைச் சிறிதும் விரும்பவில்லை.

பெரும்பிடுகு முத்தரையர் சுந்தரபாண்டியரின் சேனாபதியாக இருந்தாலும்
அவர் வீரமல்லனின் குலத்தைச் சேர்ந்தவர்; அவனும் ஒரு முத்தரையன்
என்பதாலேயே அவனை எளிதில் நம்பியவர். அவருடைய நம்பிக்கை,
சுந்தரபாண்டியரிடம் அவனுக்குப் பரிச்சயம் ஏற்படுத்தி வைக்கும் அளவுக்கு
வளர்ந்துவிட்டதை நினைத்து வீரமல்லன் வியப்படைந்தான்.

முத்தரையரைப் பகைத்துக் கொள்ளவும் அவனுக்கு எண்ணமில்லை; தான்
ஓர் ஒற்றன் என்று காட்டிக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை. மேலும்
அவருக்கு ஓர் அழகான அசட்டுப் பெண் இருந்தாள். பெண்களுக்கு அறிவு
தேவை என்று அப்போது வீரமல்லன் நினைக்கவில்லை. அவளிடம் அழகு
இருந்தது; கண்கவரும் பேரழகுடன் அவள் அவனுக்குத் தோற்றம் அளித்தாள்.

தந்தையும் மகளும் சேர்ந்து அவன் வீரத்தைப் புகழ்ந்தார்கள்;
வித்தையைப் பாராட்டினார்கள். சோழர்களால் அவன் அலட்சியப்
படுத்தப்பட்டதாகக் கூறியவுடன், அவனிடம் அன்பு காட்டி ஆறுதல்
அளித்தார்கள். அவர்களது வீட்டில் அவனுக்கு அறுசுவை விருந்தும்,
ஆர்வமிக்க உபசாரமும் கிடைத்தன. வளம் நிறைந்த ஓர் எதிர்கால
வாழ்வுக்கே அவர்கள் வழிவகுத்துக் கொடுப்பார்கள் போல் தோன்றியது.

இவ்வளவுக்குப் பிறகும் வீரமல்லன் எப்படி அவர்களை மறக்க முடியும்?
கடமை மறவாத சோழ நாட்டானாக இருந்தால் அது வேறு விஷயம். தனது
நண்பன் இளங்கோவைப்போல் வாழமுடியவில்லையே என்று மனத்தில்
குறைக்குழி தோண்டிக்கொண்டவன் அவன். அந்தக் குழிக்குள் பொறாமையின்
வித்தை ஊன்றிக் கொண்டவன்.

சோழப் பேரரசின் செஞ்சோற்றுக் கடனை அவன் மறந்துவிட்டானா?
நன்றி உணர்ச்சியை அவன் மென்று விட்டானா? அதிகார வெறியால் ஆடிச்
சுழன்ற எத்தனை எத்தனையோ மனிதர்களை இந்த மண்ணுலகம்
பொறுமையோடு தாங்கி வந்திருக்கிறதே!

முத்தரையரின் வீட்டுக்குள் வீரமல்லன் நுழைந்தபோது, அவன்
விரும்பியது போலவே அவர் வெளியில் சென்றிருந்தார். யாரோ தன்னைத்
துரத்தி வருவது போன்ற பாவனையில் அவன் பரபரப்போடு சென்று
வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தான்.

“திலகவதி! உன் தந்தையார் இருக்கிறாரா? அவசரமாக ஒரு செய்தி
சொல்லிவிட்டுப் போக வந்தேன்.’’

“அவசரம் எதற்கு? இப்படி வந்து அமர்ந்து பேசுங்கள்’’ என்று
ஆசனத்தைச் சுட்டிக் காட்டினாள் திலகவதி. மாலையில் அவனுடன்
திரும்பியவர் மீண்டும் எங்கோ சென்றதாகக் கூறினாள்.

“விவரமாகச் சொல்வதற்கு இப்போது பொழுதில்லை. நான்
மெய்யப்பரின் அங்காடியில் பணியாற்றுவதை எப்படியோ சோழ நாட்டு
ஒற்றர்கள் கண்டுவிட்டார்கள். என்னால் மெய்யப்பருக்குத் தொல்லை
வரும்போல் தெரிகிறது. நான் இனி மதுரையில் தங்குவது நல்லதல்ல.
உடனடியாகத் தென்பாண்டி நாட்டுப்பக்கம் புறப்படுகிறேன். உன் தந்தையார்
வந்தால் நான் விடைபெற்றுக் கொண்டதாகக் கூறிவிடு’’ என்றான் வீரமல்லன்.

இதைக் கேட்டவுடனேயே கண்கள் கலக்கமுற்றன திலகவதிக்கு.
“வீரர்களை எந்த விநாடியிலும் ஆபத்துச் சூழ்ந்து கொண்டிருக்கும் என்று
என் தந்தை அடிக்கடி கூறுவார்கள். உங்கள் விஷயத்திலும் அது உண்மையாகி விட்டது. கனவில் தோன்றுவது
போல் தோன்றிவிட்டு இப்போது மறையப் பார்க்கிறீர்களே.’’

“எனக்கு விடை கொடுத்து அனுப்பு திலகவதி!’’

“முடியாது! நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள். தந்தையார் வந்தவுடன்
உங்களுடைய பாதுகாப்புக்கு அவரை ஏற்பாடு செய்யச் சொல்லுகிறேன்.
பகைவர்களுக்கு அஞ்சிக்கொண்டு நீங்கள் வேறெங்கும் போகவேண்டாம்.
நம்முடைய வீட்டுக்கடியில்கூட நிலவறைகளும் சுரங்கப் பாதைகளும் நிறைய
இருக்கின்றன.’’

முத்தரையர் திரும்பி வருவதற்குள் திலகவதியிடமிருந்து எப்படியாவது
தப்பிச் செல்லப் பார்த்தான் வீரமல்லன். திலகவதியோ அவனை
விடுவதாகவே இல்லை. கடைசியில் தனக்கு அவளிடம் அளவற்ற அன்பும்
பற்றுதலும் இருப்பதாகவும் அவளை மறக்கவே முடியாதென்றும், விரைவில்
திரும்பி வந்துவிடுவதாகவும் கூறி மன்றாடினான்.

“திலகவதி! இப்போதுதான் நம்மவர்கள் போருக்குச் சித்தமாகிக்
கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நான் இங்கிருப்பது பகைவர்களுக்குத்
தெரிந்துவிட்டால் திடீரென்று என் பொருட்டுப் போர் தொடங்கினாலும்
தொடங்கிவிடும். என்னால் உன் தந்தையாருக்கோ, உனக்கோ உடனடியாகத்
துன்பம் வரக்கூடாதல்லவா? ஒற்றர்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு எப்படியும்
சில மாதங்களில் திரும்பி வந்து விடுகிறேன். உன்னைக் காணாமல் என்னால்
வெகு நாட்கள் பிரிந்திருக்க முடியுமா?’’

பிரியாவிடை கொடுத்து அனுப்பினாள் பேதைப் பெண். அவள்
உள்ளத்தை உருக்கி வழியச் செய்துவிட்டு, வில்லினின்று விரைந்த அம்பென
வெளியேறி வந்தான் வீரமல்லன். ‘சிறு துரும்பும் சமயத்தில் உதவி செய்யும்;
அதேபோல் ஒரு நாளைக்கு இவர்களுடைய உதவியை நாட
வேண்டியிருந்தாலும் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.


தஞ்சை அரண்மனையில் இருப்பது வீரமல்லனின் வேலை. மகிந்தரின்
குடும்பத்தாருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் கவனிப்பதாகும்.

அரண்மனைக் கோட்டைக்குள் அரசமாளிகைக்குப் பின்புறம் இருந்த
மாளிகைகளில் ஒன்றை மகிந்தருக்கு ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். அந்த
மாளிகையின் மேற்பார்வைப் பொறுப்பு அப்போதைக்கு வீரமல்லனிடம்
ஒப்புவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவுக்குப் பழக்கமானவன் என்பதால் அவன்
தந்தை மதுராந்தக வேளார் இந்த ஏற்பாட்டைத் தாமே செய்து
வைத்திருந்தார்.

“தோல்வியுற்ற மன்னர் என்ற அலட்சியம் இருக்கக் கூடாது;
விருந்தினர்போல் நடத்த வேண்டும்; அதே சமயம் அவருக்குச் சந்தேகம்
ஏற்படாத வண்ணம் அவருடைய நடவடிக்கைகளையும் கவனித்துச் சொல்ல
வேண்டும்’’ என்றார். “மதுரையில் உனக்கு ஒற்றனாக இருந்து பழக்கம்
இருக்கிறதல்லவா? அந்த அநுபவத்தையும் பயன்படுத்திக் கொள்.’’

இதைக் கேட்ட வீரமல்லன் கொடும்பாளூர் வேளிர்கள் மிகவும்
தந்திரசாலிகள் என்று எண்ணலானான். மதுரையில் அவன் ஒற்றனாக
இருந்ததை அவர் நினைவூட்டிய போது அவனுக்குச் சிரிப்பு வந்தது.
‘கொடும்பாளூர் வேளிரைவிடச் சந்திரலேகை முத்தரையர்கள் தந்திரத்தில்
சளைத்தவர்கள் அல்லர்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

மகிந்தரின் குடும்பம் மாளிகையில் குடியேறிய இரண்டு
தினங்களுக்குப்பின் ஒருநாள் மாளிகைத் தோட்டத்தைப் பணியாட்கள் திருத்தி
அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்புறக் கூடத்தில் நின்றவாறு அதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரோகிணி. பணியாட்களை
மேற்பார்வையிடும் சாக்கில் அவர்களிடம் சிறுபொழுது நின்றுவிட்டு மெல்லக்
கூடத்தை நோக்கி வந்தான் வீரமல்லன்.

“இளவரசி! திருவாரூரில் அன்றைக்கு இரவு நீங்கள் இட்ட பணியை
நான் செய்யவில்லை என்று என்மேல் உங்களுக்குச் சினம் இருக்கும். ஆனால்,
உண்மையில் அவனைத் தேடிக்கொண்டுதான் போனேன்.’’

“மிகவும் நன்றி’’ என்று அலட்சியப் புன்னகை உதிர்த்தாள் ரோகிணி.

“ஆனால் நான் போய்ச் சொல்வதற்குள் அவனே உங்களிடம்
வந்துவிட்டானென்று தெரிந்தது.’’

அவள் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

“நான் மறுத்துச் சொல்வதற்குக் காரணம் உங்களிடம் இருந்த அநுதாபம்.
மாமன்னர் எதை விரும்புவாரோ, அதை மட்டுமே நாங்கள் செய்யவேண்டும்.
அவர்களுக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் எங்களுக்குத்தான் ஆபத்து.’’

‘இவன் எதற்காக இங்கு வந்து உளறிக்கொண்டு நிற்கிறான்?
மாமன்னருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று நினைத்தாள் ரோகிணி.

“மாமன்னருடைய சொந்த மைத்துனர்தாம் கொடும்பாளூர்ப் பெரிய
வேளார் என்பதும், மைத்துனரின் மகன் இளங்கோ என்பதும் உங்களுக்குத்
தெரியுமா, இளவரசி?’’

கண்களை அகலத் திறந்துகொண்டு அவனை வியப்போடு ஏறிட்டுப்
பார்த்தாள் ரோகிணி.

“மகாராணி வீரமாதேவி இளங்கோவுக்குச் சொந்த அத்தையார்
முறைவேண்டும். அவர்களது பெண் இளவரசி அருள்மொழி இருக்கிறார்களே,
அவர் இளங்கோவுக்கு முறைப்பெண். காலங்காலமாகவே கொடும்பாளூருக்கும்
தஞ்சைத் தலைநகருக்கும் மணவினைத் தொடர்பு உண்டு. அப்படியிருக்கும்
போத தமது பெண் அருள்மொழியை இளங்கோவுக்குக் கொடுக்க
வேண்டுமென்பது சக்கரவர்த்திகளின் நோக்கமாக இருக்கலாமல்லவா?’’

இதைக் கேட்டவுடன் காரணத்துடனோ, காரணமில்லாமலோ
ரோகிணியின் முகம் சினத்தால் சிவந்தது. “யாருக்கு யார் என்ன உறவுமுறை
என்று நான் உன்னிடம் கேட்டேனா என்ன? யார் எப்படியிருந்தால் எனக்கு
என்ன? இதையெல்லாம் எதற்காக என்னிடம் வந்து கூறுகிறாய்?’’ என்று
வெகுண்டு வினவினாள்.

“அதற்கில்லை, இளவரசி! நீங்களும் இளங்கோவும் சந்தித்து
உரையாடுவது சக்கரவர்த்திகளுக்குத் தெரிந்தால், அதைத் தவறாக நினைத்து
விடுவாரோ என்று நான் அஞ்சினேன். அதனால் உங்களுக்கும் தீங்கு
நேரலாம். அதற்குக் காரணமாக இருந்த எனக்கும் கடுமையான தண்டனை
கிடைக்கலாம். இதையெல்லாம் நன்றாக யோசித்துத்தான் முதலில் நான்
மறுத்தேன். இல்லாவிட்டால் உங்களைப் போன்றவர்களின் சின்னஞ்சிறு
வேண்டுகோளுக்கு நான் செவிசாய்க்காதிருந்திருப்பேனா?’’

ரோகிணி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள்.
அவன் கூறிய செய்திகள் அவளுக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தன. அந்தச்
செய்திகளால் அவள் மனம் எதற்காகக் கலக்கமுற வேண்டும் என்று
அவளுக்கே விளங்கவில்லை.

‘ஆமாம். மாமன்னரின் கருத்து அதுதான் என்று உனக்கு எப்படித்
தெரியும்?’ என்று அவனிடம் திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால்
கேட்கவில்லை ‘இவனிடம் நமக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?’ என்று
பேசாதிருந்து விட்டாள்.

ரோகணத்திலிருந்தவரையில் அவளுக்கு இளங்கோவை கொடும்பாளூர்
இளவரசன் என்ற முறையில் மட்டுமே தெரியும். ஒருவேளை,
சக்கரவர்த்திகளுக்கு அவன் தூரத்து உறவினனாக இருக்கக்கூடும் என்ற
அளவுக்கே நினைத்திருந்தாள். ஆனால் இவ்வளவு நெருக்கமான
உறவினர்களா அவர்கள்? இளங்கோவின் தந்தையார் இந்த மாபெரும் சோழ
சாம்ராஜ்யத்தின் அமைச்சர் போலிருக்கிறதே!

வீரமல்லன் கூறிய செய்திகளில் ஒன்று கூட அவளுக்கு
மகிழ்ச்சியளிக்கவில்லை. பகற்கனவிலிருந்து விழித்துக் கொண்டவள் போல்,
தன்னையே பார்த்துக்கொண்டு நின்ற வீரமல்லனை நோக்கி, “நீ
போகவில்லை? இன்னுமா இங்கு நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று
வேதனையோடு கேட்டாள்.

“சிறிதேனும் நன்றி உணர்ச்சி கிடையாது இந்தப் பெண்ணுக்கு!’’ என்று
முணுமுணுத்துக் கொண்டே வீரமல்லன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இந்த நிகழ்ச்சியால் வீரமல்லன் ஒன்றும் மனம் தளர்ந்து விடவில்லை.
எப்படியாவது அவளுடைய அநுதாபத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பது
அவன் திட்டம். அதற்காக அடிக்கடி அவளுடைய தந்தையார் மகிந்தரிடம்
சென்றான். அவளுடைய கவனத்தைக் கவரும் அளவுக்கு அவருக்கு வசதிகள்
செய்து கொடுத்தான். சமயம் நேர்ந்தபோது இருவரும் உரையாடிக்கொள்ளத்
தவறவில்லை. ஈழநாட்டின் செழிப்பைப் பற்றித் தான் கேள்வியுற்றிருப்பதாகவும்,
தனக்கு புத்தபிரானின் மீது அளவற்ற பக்தியென்றும் அவரிடம் சொல்லிக்
கொண்டான்.

நாளடைவில் ரோகிணியிடம் மகிந்தர் வீரமல்லனைப் பற்றிப் புகழ்ந்து
பேசும் அளவுக்கு அவர்களுடைய தொடர்பு வளர்ந்து கொண்டு வந்தது. அந்த
வளர்ச்சி ரோகிணியின் தனிமையில் வீரமல்லன் குறுக்கிடும் நிலைக்கு
வந்தபோது தான் அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

தொடரும்


வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 7. மலர் தூவிய மங்கையர் )


பாகம் 2   , 7. மலர் தூவிய மங்கையர் 


அவள் சென்று மறைந்த இருள்வெளியைப் பார்த்துக் கொண்டு நின்ற
இளங்கோ, சட்டென்று படிகளில் ஏறிக் கரையோரமாக நடந்தான். இனம்
புரியாத வேதனையால் அவன் மனம் புழுங்கத் தொடங்கியது. விரும்புகிறேன்
என்று ஒரே ஒரு சொல் அவள் சொல்லிவிட்டுப் போகக்கூடாதா?
வெறுப்பையாவது அவனால் ஒருவகையில் தாங்கிக் கொள்ள முடிந்தது. விருப்பும் வெறுப்புமற்ற சூனியத்தை எப்படித் தாங்குவது?

ஒன்று சொர்க்கத்தில் மிதக்க வேண்டும். அல்லது நரகத்தில் உழல
வேண்டும். சொர்க்கமும் நரகமுமற்ற ஓர் அந்தரத்தில் தலைகீழாகத்
தொங்கவிட்டுப் போய்விட்டாளே!

குனிந்த தலை நிமிராமல் அவன் நடந்து கொண்டிருந்த போது,
“இளங்கோ’ என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டான். குளத்தங்கரைச் சுவரில் ஓர்
உருவம் சாய்ந்து கொண்டு நின்றது.

“யாரது?’’

“பாவம்! குரல்கூட உனக்கு மறந்துவிட்டது. இந்த ஏழை நண்பனை நீ
அதற்குள்ளாக மறந்திருக்க முடியாது இளங்கோ!’’

வீரமல்லனின் கரம் உரிமையோடு இளங்கோவின் தோளை வளைத்துக்
கொண்டது. இளங்கோவுக்கு அது பிடிக்கவில்லை. மெதுவாக அவன் கரத்தைத்
தன்னிடமிருந்து எடுத்துவிட்டுக் கொண்டே, “ஓ, நீயா?’’ என்று ஏதோ
கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போலக் கேட்டான்.

“ஆமாம்! நான்தான்; உன்னுடைய துர்ப்பாக்கியசாலியான நண்பன்.
கப்பலைவிட்டு நீ இறங்கியவுடனேயே ஓடி வந்து உன்னைத் தழுவிக்கொள்ள
வேண்டுமென்று நினைத்தேன். அது கைகூடவில்லை. நீயோ மிகப்
பெரியவனாகி விட்டாய். பெரியவர்களிடமிருந்து உன்னைப் பிரித்துக் காண
முடியவில்லை. போகட்டும்! உன்னுடைய வெற்றி என் வெற்றி! நீ வெற்றியுடன்
திரும்பி வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொள், இளங்கோ!’’

“நமக்குள் இந்த உபசார மொழியெல்லாம் எதற்கு?’’ என்று கேட்டுச்
சிரிக்க முயன்றான் இளங்கோ. சிரிப்பு வரவில்லை. சிரிப்புக்குப் பதிலாகச்
சினம் கொப்பளிக்கத் தொடங்கியது. “வீரமல்லா! களைப்பாக இருக்கிறது;
மாளிகைக்குப் போய் உறங்கவேண்டும். காலையில் மீண்டும் சந்திக்கலாம்.’’

“உன்னிடம் ஒரு செய்தி சொல்வதற்காகத் தேடிக் கொண்டிருந்தேன்.
அதை மட்டும் கேட்டுவிட்டுப் போய் விடு.’’ என்றான் வீரமல்லன்.

“என்ன!’’

“ரோகணத்திலிருந்து வந்திருக்கும் அந்த அடிமைப்பெண் உன்னைத்
தனியே சந்திக்கவேண்டுமென்று கூறினாள். எனக்கு அது பிடிக்கவில்லை.
என்றாலும் செய்தியைச் சேர்த்துவிட வேண்டியது என் கடமையல்லவா?’’

“அடிமைப் பெண்ணா! யாரது?’’ இளங்கோவின் கண்கள் எரி
நெருப்பாக மாறின. வீரமல்லனை நன்றாக உற்றுப் பார்த்தான். அவன்
தன்னைத் தேடி எங்கும் போகவில்லை யென்பதும், தானும் ரோகிணியும்
சந்தித்து விட்டதால் தன்னிடம் நல்லவனென்று பெயரெடுப்பதற்காக இப்படிச்
சொல்கிறானென்றும் இளங்கோவுக்கு விளங்கி விட்டது.

“வீரமல்லா! யார் அந்த அடிமைப்பெண்?’’ என்று மீண்டும் அவனைக்
கேட்டான் இளங்கோ.

“சக்கரவர்த்திகள் சிறைப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்களே, அந்த
மகிந்தரின் மகள்!’’

“ஓ!’’ என்று வினயமான வியப்பொலி கிளம்பியது இளங்கோவிடமிருந்து.
“ரோகிணியைப் பற்றிச் சொல்கிறாயா? அவள் உன்னிடம் என்ன கூறி
அனுப்பினாள்?’’

“இளங்கோ! நீண்டநாள் பிரிவுக்குப்பின் சந்திக்கும் நாம் இப்போது நல்ல
விஷயங்களைப் பற்றிப் பேசலாம். ரோகணத்துப் போர்க்களம் எப்படி
இருந்ததென்று சொல். நீ எப்படி அந்த மணிமுடியை எடுத்துக்கொண்டு
வந்தாய்?’’

‘ரோகிணையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாய்...’’

“எனக்கென்னவோ அவளைப் பற்றிப் பேசவே பிடிக்கவில்லை,
ரோகணத்துப் பெண்கள் எல்லோருமே இவளைப் போல்தான் இருப்பார்களா?
சிறிதுகூட நாணமில்லாமல் என்னை உன்னிடம் இந்த வேளையில் தூது
அனுப்பத் துணிந்தாளென்றால், அவளைப் பற்றி என்ன சொல்வது?
குளத்தங்கரையில் உன்னிடம் ஏதோ தனித்து ரகசியம் பேச
வேண்டுமென்றாள். காத்திருப்பதாய்ச் சொன்னாள். இதைக் கேள்வியுற்றால்
மாமன்னர் உன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வார்?’’

“ஒன்றுமே நினைக்க மாட்டார்; மாமன்னருக்கும் அவளைத் தெரியும்.
அந்த நாட்டின் மற்ற பெண்களைப் போலவே அவளும் கள்ளம் கபடமின்றிப்
பழகக் கூடியவள்.’’

“உன் பேச்சைப் பார்த்தால் நீ கூட அவளுடைய சாகசத்துக்கு
அடிமையாயிருப்பாயென்று தெரிகிறது’’ என்று கூறி நகைத்தான் வீரமல்லன்,
“நண்பனென்ற முறையில் உன்னைச் சற்று எச்சரித்து வைப்பது என் பொறுப்பு.
இன்னும் தன்னை ஒரு நாட்டின் இளவரசி என்றே நினைத்துக்
கொண்டிருக்கிறாள். அவளைப்போல் அகந்தை கொண்ட சாகசக்காரியை நான்
பார்த்ததே இல்லை. நீ மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
இளங்கோ!’’

“மிகவும் நன்றி வீரமல்லா, எனக்கும்அவளைப் பற்றி ஓரளவு தெரியும்.
இரண்டு மூன்று மாதங்களாக நான் அவளுடன் பழகியிருக்கிறேன்.’’

“என்ன!’’

“ஆமாம்; ஒரு முறை என் உயிரைக் காப்பாற்றியவள். மணிமுடி
இந்நாட்டுக்கு வந்து சேர்வதற்கே ஒரு வகையில் காரணமாக இருந்தவள்.’’

“வீரனாக ஈழத்துக்குப் புறப்பட்டவன் கோழையாகத் திரும்பி
வந்திருக்கிறாய், இளங்கோ!’’ என்றான் வீரமல்லன். “அடிமைப் பெண்ணுக்காக
நீ பரிந்து பேசுவதைப் பார்த்தால் ஏதோ அங்கே விபரீதம்
நடந்திருக்குமென்று தோன்றுகிறது. கேவலம் ஒரு பெண் பிள்ளை உன்
உயிரைக் காப்பாற்றுவதாவது; மணிமுடியை எடுத்து வந்தவன் நீதான் என்று
மாமன்னர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். நீயோ அந்தப் பெருமைக்குரியவள்
அந்த அடிமைப் பெண்தானென்கிறாய். நீ சொல்வது விசித்திரமான கதை
நண்பா!’’

அதற்குமேல் அங்கு நின்றால் தன் பொறுமை பாழாகிவிடும் என்று
தோன்றியது இளங்கோவுக்கு. “சரி, நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுத்
திரும்பிப் பாராமல் விரைந்தான்.

மறுநாள் மாலை தஞ்சை மாநகரத்தின் கிழக்கு வாயிலுக்கு உள்ளேயும்
வெளியேயும் மக்கட் பெருங்கடல் அலைமோதிக் கொண்டிருந்தது. மாமன்னரது வெற்றி ஊர்வலம் செல்லக் கூடிய பிரதான
சாலைகள்தோறும் நகரத்து மாந்தர்கள் வந்து குழுமிய வண்ணமாக இருந்தனர்.
கிழக்கு வாயிலுக்கு வெளியே தனது பரிவாரங்களை நிறுத்தி முறைப்படி
அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.

இதுகாறும் அந்தப் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்த ரதம் ஒன்று
இப்போது அங்கு காணப்படவில்லை. பட்டுத்திரை தொங்கிய அந்தப் புரவிகள்
பூட்டிய ரதத்தை வல்லவரையரின் துணையோடு தெற்கு வாயில் வழியாக
நகருக்குள் அனுப்பிவிட்டார் இராஜேந்திரர். ரதத்துக்குள்ளே வருபவர்கள்
யாரென்று தெரிந்துவிட்டால் ஒருவேளை மக்களின் உற்சாக வெறி
கட்டுக்கடங்காது போய்விடலாம்.

அந்நிய விருந்தினர்களின் மனதைக் கலக்கக்கூடிய அசம்பாவித
நிகழ்ச்சிகள் ஏதும் நடந்துவிடக்கூடாதல்லவா? லட்சக்கணக்கான மனிதர்களில்
யாரோ சிலர் கட்டுப்பாட்டை மறந்து நடந்து கொண்டாலும் அது நாட்டின்
பண்பாட்டைத்தானே பாதிக்கும்?

மகிந்தரின் குடும்பத்தார் பத்திரமாகத் தெற்கு வாயில் வழியே
நகருக்குள் நுழைந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். வல்லவரையரின்
கண் சாடையிலும் கண் அசைப்பிலும் அங்கு அவர்களுக்குச் சற்றும்
எதிர்பாராத உபசாரங்கள் நடந்தன. மகிந்தர் பிரமித்துப் போனார்.
ரோகிணியோ வாயடைத்துப் போய் நின்றாள். விருந்தோம்பல் என்பது
தமிழர்களின் பிறவிக் குணங்களில் முதன்மையானதா?

அருள்மொழி நங்கைக்கு ரோகிணியை அறிமுகப்படுத்திய வந்தியத்
தேவர். “அருள்மொழி! ரோகணத்திலிருந்து உன்னைப் பார்க்க உன் தங்கை
ரோகிணி வந்திருக்கிறாள்! தங்கமான பெண்’’ என்று கூறினார்.

பெண்ணுக்குப் பெண் அழகைக் கண்டு பொறாமைப் படுவது வழக்கம்.
ரோகிணியின் அழகைப் பார்த்து அருள்மொழி பெருமை கொண்டாள்.
அருள்மொழியின் அடக்கம் கண்டு ரோகிணி வியப்புற்றாள். மாபெரும் சோழ
சாம்ராஜ்யத்து மாமன்னரின் மகளா இவள்?

“தாத்தா; அக்காளுக்கு இவர்கள் தங்கை; எனக்கு என்ன வேண்டும்?’’
என்று கேட்டுக்கொண்டே குதித்தோடி வந்தாள் அம்மங்கை தேவி.

“அருள்மொழிக்குத் தங்கை; உனக்குத் தமக்கை’’ என்றார் வல்லவரையர்.
பிறகு ரோகிணியிடம், “ரோகிணி உனக்கு உன் சகோதரிகளைப்
பிடித்திருக்கிறதா?’’ என்று கேட்டார்.

“நான் பாக்கியம் செய்தவள்!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறிக்கொண்டு
இரண்டு பெண்களுக்கும் கரம்கூப்பி வணக்கம் தெரிவித்தாள் ரோகிணி.
ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது, அவளது நீண்ட விழிகளிலிருந்து.

அருள்மொழியும் அம்மங்கையும் அவளை ஆளுக்கொரு புறமாய்ப்
பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

“நான்கு நாழிகைப் பொழுதில் ஊர்வலம் அரண்மனை வாயிலை
அடைந்துவிடும். வரவேற்புக்கு ஆயத்தம் செய்யுங்கள்’’ என்று கூறிவிட்டு
அங்கிருந்து புறப்பட்டு விட்டார் வந்தியத்தேவர்.

ஊர்வலம் ஊருக்குள் நுழைந்தது.

“ஜல் ஜல்! ஜல ஜல ஜல்! ஜல்!’’ என பல்வகைத் தாளங்களான கஞ்சக்
கருவிகள் ஒலி உதிர்த்தன. பெரிய மேளம், முரசங்கள் முதலிய
தோற்கருவிகளெல்லாம் முழக்கம் செய்தன.

இன்னும் துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கண்டக் கருவிகள்
ஆகிய அனைத்தும் அவற்றோடு ஒன்று சேர்ந்து வீரர்களின் புரவிக் கூட்டம்.

பட்டத்து யானையின் அம்பாரி மீது தமிழ் மன்னரின் மணிமுடி தனியே
சென்றது. மாலைக் கதிரவன் அந்தப் பொன் முடிக்குப் புது மெருகு
கொடுத்துக் கொண்டு வந்தான்.

அதற்கடுத்த யானையின்மீது வேங்கையின் மைந்தன் கொடும்பாளூர்
குலக்கொழுந்தோடு சரியாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கம்பீரமான பார்வை தமது குடிமக்கள் கூட்டத்தை அடிக்கடி தழுவிக் கொண்டு வந்தது. இளங்கோவேளுக்கு அங்கு இருக்கை கொள்ளவில்லை. மாமன்னரின் ஆணை என்பதால் அமைதியோடு அமர்ந்து
வந்தான்.

அரண்மனைக் கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நந்தவனத்துச்
செடிக்கொண்டைகள் போல் மங்கையர்கள் மலர்ந்திருந்தனர். அவர்களுக்கு
எதிரில் குவியல் குவியலாக நறுமலர்கள் பொற்தட்டுக்களில் குவிந்திருந்தன.
அருள்மொழி ஒருபுறமும் அம்மங்கை மறுபுறமும் நிற்க, ரோகிணி
அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தாள்.

மணிமுடி தாங்கிய பட்டத்து யானை ஆடி அசைந்து கோட்டை
வாயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. மற்ற இரு பெண்களும் அதை நோக்க,
ரோகிணி மட்டும் அடுத்த யானைமீது வரும் இளங்கோவை நோக்கினாள்.
அவளுடைய கரங்கள் இரண்டுமே அவளையறியாமல் மற்ற பெண்களைப்
போல் எதிரே குவிந்திந்த மலர்களை அள்ளி மணிமுடியின்மீது தூவின.

இளங்கோவின் மீது தூவுவதாக எண்ணம் ரோகிணிக்கு.

இந்த காட்சியைக் கண்ட அருள்மொழிக்குப் புல்லரித்தது. அருள்மொழி
ரோகிணியின் கரங்களைத்தான் கண்ணுற்றாளே தவிர, அவள் கண்களைக்
கவனித்துப் பார்க்கவில்லை.

‘தாங்கள் பறிகொடுத்த முடி என்று கூடப் பாராமல் இந்த
வெற்றிவிழாவில் பங்கு கொள்கிறாளே, இவள். எவ்வளவு பரந்த மனம்
இவளுக்கு.’

அடுத்தாற்போல், மாமன்னரும் இளங்கோவும் வீற்றிருந்த மதக்களிறு
கோட்டை வாயிலை நெருங்கியது. பெண்கள் மூவரும் தங்களை மறந்து
மலர்களை வாரி வாரித் தூவத் தொடங்கினர். அருள்மொழி இப்போது
ரோகிணியின் செய்கையைக் கவனித்தாள். ‘வெற்றி பெற்ற
சக்கரவர்த்தியின்மேல், தோல்வி கண்ட மன்னரின் மகளுக்குச் சிறிதுகூடப்
பகைமையில்லையே! தந்தையார் மீது இவள் சற்றும் தயங்காமல் மலர்மழை
பொழிந்த வண்ணமாக இருக்கிறாளே!’

மூன்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு எதிரில்
பொற்தட்டுக்களில் இருந்த மலர்க் குவியல்களைக் கரைக்க முற்பட்டனர்.

யானையின் மீதிருந்த இளங்கோ தன் தலையைத் தூக்கி மேலே
கோட்டை மாடத்தைப் பார்த்தான். இரண்டு பெண்கள் மட்டிலுமே அவன்
கண்களுக்குத் தெரிந்தனர். ஒருத்தி அருள்மொழி, மற்றொருத்தி ரோகிணி.
அவர்கள் இருவரது கரங்களிலுமிருந்து உதிர்ந்து மலர்கள் அவனுடைய இரு
தோள்களிலும் விழுந்து சிதறின.

மேலே நோக்கி அவன் கையசைத்துச் சிரிப்பதற்குள் யானை அவனைக்
கோட்டைக்குள் கொண்டு சென்றது.

அருள்மொழிக்கு அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல்
தோன்றியது. ரோகிணிக்கு அவன் தன்னைப் பார்த்துக் கையசைப்பதுபோல்
தோன்றியது.

ஒருகணம் சென்றவுடன் “ரோகிணி! எங்கள் நாட்டுப் பண்புக்கு ஈடு
இணை கிடையாதென்று இதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன்; உங்கள்
நாட்டுப் பண்பும் எங்களுடையதை ஒத்திருக்குமென்று இப்போது தெரிகிறது’’
என்றாள் அருள்மொழி.

ரோகிணிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“முதலில் மணிமுடியின்மீது மலர் தூவினாய், பிறகு மாமன்னரின் மீது
தூவினாய். ரோகணத்து இளவரசியாக இருந்தும் உன்னிடம் வேற்றுமையைக்
காணோம்.’’

‘மாமன்னர் மீது மலர் தூவினேனா?’ என்று நினைத்துத் தனக்குள்
வியப்புற்றாள் ரோகிணி. மறுகணமே நிலைமையை உணர்ந்துகொண்டு அவள்
விழிப்படைந்து விட்டாள்.

“நீங்கள்தாம் என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே!
என்ற சொற்கள் ரோகிணியிடமிருந்து வெளிவந்தன.

“உண்மையில் நீ என் தங்கைதான்!’’ என்று அவளை அன்பின்
மிகுதியால் தழுவினாள் அருள்மொழி.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 6. கூண்டுக் கிளியின் குரல்! )

பாகம் 2   , 6. கூண்டுக் கிளியின் குரல்! குளத்தின் மத்தியில் முளைத்தெழுந்த ஒளித் தீவான நடுவர்
ஆலயத்தைப் பார்த்தவண்ணம் இளங்கோவும் ரோகிணியும் குளத்தங்கரைப்
படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். சந்திப்பு நிகழ்ந்தவுடன் வெடித்துக் கிளம்பிய
பேச்சு அப்படியே பாதியில் அறுந்துவிட்டது. அதை மீண்டும் ஒட்டவைத்து
உரையாடலை முன்போலத் துவங்க வேண்டும். முதலில் யார் பேசுவது?

அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான், அவன் பேசுவான்
என்று அவள் எதிர்பார்த்தாள்.

ரோகிணிக்கு வாயைத் திறப்பதற்கு அச்சமாயிருந்தது. அவனுக்கோ
அவளுடைய மௌனத்தின் காரணம் தெரியவில்லை. பேசக்கூடாதென்று
அழுத்தம் செய்கிறாளா?

பொறுத்துப் பார்த்தான் இளங்கோ. ரோகிணியின் மௌனத்தை
அவனால் மேலும் பொறுக்க முடியவில்லை. குளத்துக்குள் குனிந்து படியருகில்
குவிந்திருந்த ஒரு தாமரையை வெடுக்கெனக் கிள்ளித் தண்ணீரில் வீசிவிட்டு,
கோபத்துடன் எழுந்தான், திரும்பி நடந்தான்.

“எங்கே போகிறீர்கள்?’’ என்று கத்தினாள் ரோகிணி.

“என்னை விரும்புகிறவர்கள் யாரோ அவர்களிடம் போகிறேன்.
மாமன்னர் என்னை விரும்புகிறார்; வல்லவரையர் என்னை விரும்புகிறார்;
இன்னும் இந்த நாட்டில் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக
லட்சோப லட்சம் பேர்கள் என்னை விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது
என்னை விரும்பாதவளின் அருகில் நான் ஏன் இருக்க வேண்டும். என்னை
வெறுப்பவளிடம் எனக்கு என்ன வேலை?’’

“மன்னித்து விடுங்கள்; உங்களுக்கு இரக்கமில்லையா?’’ என்று
மன்றாடினாள் ரோகிணி.

இளங்கோ தயங்கி நின்றான்.

அவனுடைய தயக்கம் அவளுக்குச் சிறிது துணிவு தந்தது. மெல்லத்
தனது வலதுகரம் நீட்டிப் பின்புறம் ஒதுங்கியிருந்த அவனுடைய வலக்கரத்தைப்
பற்றினாள். இளங்கோவின் மெய் சிலிர்த்தது. ரோகிணியின் முகத்தை மெல்லத்
திரும்பிப் பார்த்தான்.

“உங்களைச் சந்திக்க வேண்டுமென்பதற்காகத்தான் நான் இந்த
இடத்துக்கு வந்தேன். வீரமல்லன் என்பவனிடம் உங்களை அழைத்து வருமாறு
கூறினேன். அவன் மறுத்துவிட்டான். நானே அங்கு புறப்பட நினைத்த
சமயத்தில் எதேச்சையாக நீங்களே வந்துவிட்டீர்கள். சற்று நேரம் இங்கு
தங்கிச் செல்ல மாட்டீர்களா?’’

லட்சோப லட்சம் பேர் தன்னை விரும்புகிறார்கள் என்று ஒரு
வினாடிக்குமுன்பு தற்பெருமை பேசிய இளங்கோவுக்கு இப்போது அந்த
ஒருத்தியின் அன்பு மற்ற அத்தனை பேருடைய அன்பையெல்லாம் விடப்
பெரிதாகத் தோன்றியது. வெறுப்புக்கொண்டவள் விரும்பிக் கரம் பற்றுவாளா?

“உன் வெறுப்பு இப்போது விருப்பமாக மாறியிருக்கிறது போலும்!’’
என்று தன் இளகிய மனத்தை இரும்பாக்கிக் கொண்டு கூறினான் இளங்கோ.
“மீண்டும் இது வெறுப்பாக மாறலாம் அல்லவா?’’

ரோகிணியின் அன்புப் பிடி அவன் கரத்திலிருந்து மெல்ல நழுவியது.
“நீங்களும்தான் என்னை வெறுப்பதாய்ச் சொன்னீர்கள். அந்த வெறுப்பு
மெய்யானதாக இருந்தால் நான் உங்களை வற்புறுத்தவில்லை. இனி உங்கள்
சித்தம். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆத்திரத்தில் அறிவிழந்து
சொன்ன சொல் அது. இதை மெய்யென்று நம்பினால் நீங்கள் இங்கு
தங்கலாம்; இல்லாவிட்டால் போகலாம். லட்சக்கணக்கானவர்களின் அன்புக்குப்
பாத்திரமான வீரரை நான் எதற்குத் தடுக்க வேண்டும்?’’

“ரோகிணி! உன்னை நான் மனதார விரும்புகிறேன். ரோகிணி!’’ என்று
உணர்ச்சிவயப்பட்டுக் கூறிக்கொண்டே அவள் அருகில் நெங்கினான், இளங்கோ. “முதல் முறை உன்னைக்
கண்டதிலிருந்து உன்னை நான் மனமார விரும்புகிறேன்.’’

ரோகிணியின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாணம் படர்ந்தது.

“ஓ! நீங்கள் சொல்வது மெய்தானா?’’ என்று பரிகாசக் குரலில் கேட்டாள்.
“உங்களுடைய விருப்பம் அதிகமாகும்போது நீங்கள் என்னைக் கடலுக்குள்
தூக்கி எறிந்து விடுவீர்கள் போலிருக்கிறது! நாள்கணக்கில் என்னைத்
திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்போல் இருக்கிறது. மாமன்னருடன்
யானைமேல் போனபோது ஒருமுறைகூடப் பின்னால் திரும்பிப் பார்க்காமல்
சென்றீர்களே, இதற்கெல்லாம் காரணம், என்னிடம் விருப்பம்
மிகுதியானதுதானா?’’

“நீதான் என்னை நெருப்பாகப் பற்றி எரியச் செய்து விட்டாயே!’’
என்றான் இளங்கோ. “அந்த நெருப்பில் நானும் வெந்துபோய் வீணாக
உன்னையும் வாட்டிவிட்டேன்.’’

“அப்படியானால் உங்கள் தாத்தா சொன்னதெல்லாம் மெய்தான்.’’

“என்ன சொன்னார் அவர்?’’

“நெருப்போடு பழகுவதுபோல் உங்களிடம் பழக வேண்டுமென்றார்.
இருங்கள், சற்று உங்களிடமிருந்து விலகி உட்கார்ந்து கொள்கிறேன்.
நெருப்பிடம் நெருங்கினால் அது என்னைப் பொசுக்கிவிடுமல்லவா?’’

வேண்டுமென்றே சிறிது ஒதுங்கிக்கொண்டு கலகலவென்று சிரித்தாள்
ரோகிணி. மங்கலான அந்த ஒளியில் கூட அவளுடைய முத்துப் பல்வரிசை
மின்னலெனப் பளிச்சிட்டது.

“இவ்வளவு அழகாகச் சிரிக்கத் தெரிந்த நீதானா அன்று அப்படி
என்மீது சீறி விழுந்தாய்? என்ன காரணத்துக்காக நீ என்னைச் சினந்து கொண்டாய்? சொல்ல மாட்டாயா ரோகிணி?’’

ரோகிணியின் முகம் உடனே வாட்டம் கண்டது. “இந்த வேளையில் அதை ஏன் கிளறிவிடுகிறீர்கள்? உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டேனே, அது போதாதா உங்களுக்கு?’’

“போதாது; எனக்குக் காரணம் தெரிந்தாகவேண்டும். அப்போதுதான்
என் மனம் அமைதி பெறும்’’ என்றான் அந்தப் பிடிவாதக்காரன்.

“உங்கள் மன அமைதிக்காக என் மனத்தின் அமைதியை இழக்க
வேண்டியிருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன்’’ என்று துயரம் நிறைந்த
குரலில் கூறினாள் ரோகிணி. சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு அவள்
முகத்தில் நன்றாகத் தெரிந்தது.

“அப்படியானால், அதைச் சொல்ல வேண்டாம் ரோகிணி, விட்டுவிடு’’
என்றான் இளங்கோ.

“இல்லை; அதில் ஒன்றும் ரகசியமில்லை, நீங்கள் தெரிந்துகொள்ள
வேண்டியதுதான்’’ என்றாள் ரோகிணி. “நான் அளவுக்கதிகமாக என்னுடைய
நாட்டின் மீது பற்றுதலும் பக்தியும் வைத்திருக்கிறேன். என் தந்தையாரிடமும்
தம்பியிடமும் ஆழ்ந்த பாசம் வைத்திருக்கிறேன். உண்மையைச்
சொல்லப்போனால் உங்கள் சோழநாட்டுக் கப்பல் என் உடலைத்தான் இங்கே
சுமந்து கொண்டு வந்திருக்கிறது. என்னுடைய உயிரில் பாதி கப்பகல்லகம்
அரண்மனைக்குள் ரோகணத்துக் காட்டுக்குள் என் தம்பியைத் தேடி
அலைந்துகொண்டிருக்கிறது. நான் என்ன செய்வேன்? விதி என்னை இரு
கூறாய்ப் பிய்த்தெடுத்து வேடிக்கை பார்க்கிறது.’’

கண்களைத் துடைத்துக்கொண்டு மேலே கூறினாள் ரோகிணி. “கூண்டில்
அடைப்பட்ட கிளியாக நான் கப்பலில் நின்று துடித்துக்கொண்டிருந்த
வேளையில் நீங்கள் எதிர்ப்பட்டு வந்தீர்கள். விதியின்மேல் பொங்கி எழுந்து
கொண்டிருந்த வெறுப்பு உங்கள்மீது திரும்பியது. நான் விதியை வெறுத்தேன்;
என்னை நொந்து கொண்டேன், உங்களை வெறுக்கவில்லை.’’

“விதி என்கிற சொல்லில் எனக்கும் பங்கு உண்டல்லவோ? நீ இந்த
நிலைக்கு வருவதற்கு நானுந்தானே ஒரு காரணம்’’ என்றான் இளங்கோ.

“காரண காரியங்களை இப்போது ஆராய்ந்து பயனில்லை. முதன் முதலில் உங்கள் சக்கரவர்த்தி தூது அனுப்பியபோது என்
தந்தையார் அதை ஒப்புக்கொண்டிருக்கலாம். அமைச்சரின் உருவில் விதி
குறுக்கே நின்று தடுத்துவிட்டது. அடுத்தாற்போல், அது எங்களுக்குப் போரில்
தோல்வியைத் தந்தது. அதையும் அடுத்து என் தம்பியைப் பிரித்தது. பிறகு
என் உருவத்திலே போய் என் தந்தையைக் காட்டிக் கொடுத்தது; மணிமுடியை
உங்களுக்கு மீட்டுக் கொடுத்தது. எங்களை அடிமைகளாய்க் கப்பலேற
வைத்தது.’’

குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரோகிணி. அவளை எப்படித் தேற்றுவது
என்று இளங்கோவுக்குத் தெரியவில்லை. அன்பான மொழிகள் பல சொல்லிப்
பார்த்தான். ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல் அளிக்க முயன்றான்.
எளிதில் அவளால் தன்னைத் தேற்றிக்கொள்ள இயலவில்லை.

“இளவரசே! நாங்கள் நாடு இழந்து, வீடிழந்து வந்திருக்கும் அநாதைகள்.
தஞ்சைத் தலைநகருக்குப் போன பிறகு எங்களுடைய எதிர்காலம்
எப்படியிருக்குமோ என்னவோ தெரியாது. அரண்மனையில் இருப்பவர்கள்
எங்களை எப்படி நடத்துவார்களோ அது புத்த பகவானுக்குத்தான் தெரியும்
இதுவரை உங்களிடம் மட்டுமே ஓரளவு நெருங்கிப் பழகியிருக்கிறேன். பழகிய
அந்த ஒரே மனிதரின் மனத்தையும் புண்படுத்திவிட்டேன். அதற்காக ஆயிரம்
முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவே உங்களைச் சந்திக்க விரும்பினேன்.
என்னை மன்னிப்பீர்களா?’’

“போதும் ரோகிணி!’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்
இளங்கோ.

“தஞ்சைக்குப் போய்விட்டால் இனி உங்களைச் சந்திப்பது கடினம்;
நீங்கள் ஆண்பிள்ளை, அதிலும் ஒரு நாட்டின் இளவரசர்! தஞ்சையிலிருந்து
சொந்த ஊருக்குப் போனாலும் போவீர்கள் அல்லது இன்னும் எத்தனையோ
போர்க்களங்கள் உங்களுக்குக் காத்திருக்கலாம். அப்படியே நீங்கள் தஞ்சையில்
தங்கினாலும் மீண்டும் உங்களைப் பார்க்க முடியுமோ முடியாதோ?
பெரும்பாலும் இதுவே நம்முடைய கடைசிச் சந்திப்பாக இருந்தாலும் இருக்கும்.
அதனால்தான் இன்று பிரியும்போது மனக்கசப்புடன் பிரியக்கூடாதல்லவா?
நான் உங்களை வெறுக்கவில்லை; இதை நீங்கள் தெரிந்து கொண்டால்
போதும் போய் வாருங்கள்.’’

கரம் கூப்பிவிட்டுச் சரேலென்று எழுந்து சென்றாள் ரோகிணி.

“ரோகிணி!’’ என்று பதறினான் இளங்கோ. “நில்! ஒரே ஒரு கணம்
நின்றுவிட்டுப் போ!’’

“என்ன?’’

“நீ நினைப்பதுபோல் இது நம் கடைசிச் சந்திப்பாக இருக்காது.’’

“எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்று துக்கத்துடன்
கூறினாள் அவள்.

“நீ என்னை வெறுக்கவில்லை என்று மட்டும்தானே சொன்னாய்?
விரும்புவதாகச் சொல்லவில்லையே?’’

ரோகிணி பதில் அளிக்கவில்லை.

“சொல் ரோகிணி! நீ என்னை விரும்புகிறாயா!’’ மீண்டும் கேட்டான்
இளங்கோவேள்.

மௌனமாக அடுத்த அடி எடுத்து வைத்தாள் ரோகிணி.

“சொல்லிவிட்டுப் போ’ என்று வெடுக்கென்று அவள் கரத்தைப் பற்றி
இழுத்தான் இளங்கோ.

“தயவு செய்து இப்போது எனக்குத் துன்பம் தராதீர்கள். நான் போய்
என் தந்தையாரைப் பார்க்க விரும்புகிறேன்.’’

இளங்கோவின் கைப்பிடி நழுவியது. ரோகிணியும் அவன்
பார்வையிலிருந்து நழுவினாள். அவன் எழுப்பிய வினாவுக்கு விடை கொடுக்க
வேண்டிய அவளது உருவம் இருளில் மறைந்து சென்று கொண்டிருந்தது.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 5. தென்னாடு உடையாய் போற்றி! )

பாகம் 2   , 5. தென்னாடு உடையாய் போற்றி! 


மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூம்பொழிற் சோலைகளும்,
நிழல் தரும் சாலைகளுமாக விளங்கியது அந்தக் காலத்துத் திருவாரூர்.
கமலாலயத் திருக்குளத்தில் கமல மலர்க் கூட்டத்தையும், தாமரை இலைகளான
மரகதத்தட்டுக்களையும் காணமுடியுமே தவிர, கண்ணீரைக் காண்பது அரிது.
ஒரே மலர்க்காடு, இலைக்கூட்டம், கொடிப்பந்தல்.

திருக்குளத்தின் மையத்திலுள்ள தீவுக்குச் செல்ல வேண்டுமானால்
பக்தர்கள் ஓடங்களில் செல்வார்கள். அந்த ஓடங்களும் மலர்களின்மீது
மிதப்பவைப்போல் தோன்றுமே தவிர நீரைக் கிழித்துக் கொண்டு செல்வதாகத்
தோன்றமாட்டா.

கமலாலயக் கரையிலிருந்த சோழ மாளிகையில் அனைவரும் வந்து
இறங்கியிருந்தார்கள். படிக்கட்டுக்கு அருகே இருந்த ஒரு பெரிய கூடம்
மகிந்தரின் குடும்பத்தாருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மாளிகையின் மத்தியில்
தங்கியது மாமன்னரது பரிவாரம்.

சக்கரவர்த்தியும் இளங்கோவும் மேன்மாடக்கூடத்தில் தனித்திருந்தனர்.
சோர்வும் களைப்பும் மிகுந்தவனாக இளங்கோ சுருண்டுபோய் ஒரு மூலையில்
உட்கார்ந்திருந்தான். இராஜேந்திரருக்குக் காரணம் விளங்கவில்லை. கப்பலில்
அவன் அவர் பார்வைக்குத் தட்டுப்படாமல் தப்பிக் கொண்டிருந்தான். கரைக்கு
வந்த பிறகு அவனால் அவரிடமிருந்து விலகிச் செல்ல முடியவில்லை.

“ஏன் ஏதோ சோர்ந்து போய்க் காணப்படுகிறாய்?’’ என்று கேட்டார்
சக்கரவர்த்தி. “என்னோடு இன்று பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதும் என்னவோபோல் இருந்தாய்; முகத்தில் உற்சாகமில்லை.
இங்கு வந்த பிறகு இன்னும் அதிகமாக முகம் வெளுக்கிறதே! காயம்பட்ட
இடம் அதிர்ச்சியுற்றிருக்கிறதா?’’

“அப்படியொன்றுமில்லை’’ என்று கூறிச் சிரிக்க முயன்றான் இளங்கோ.
பரிதாபமாக இருந்தது அவன் சிரிப்பு.

“நேற்று மாலை மக்கள் கூட்டத்தினிடையே அகப்பட்டுக் கொண்டு
விட்டாயல்லவா? பாவம்! உடல் நலமில்லாதவனைப் படாதபாடு
படுத்தியிருக்கிறார்கள். அதனால் பாதகமில்லை. ஆலயத்துக்குச் சென்று
இறைவனை வணங்கி வந்த பிறகு, நன்றாக ஓய்வெடுத்துக்கொள்; படுத்து
உறங்கு.’’

சக்கரவர்த்தி குளித்து முழுகிவிட்டுச் சித்தமாவதற்குள் வல்லவரையர்,
மதுராந்தகர் முதலிய பெரியவர்களும் அங்கு வந்துவிட்டார்கள். இளங்கோவும்
அவர்களுடன் சேர்ந்து புறப்படலானான்.

‘ஆலயத்துக்குச் சென்று வந்தாலாவது அமைதி கிடைக்குமா?’ என்று
ஏங்கியது அவன் மனம். உடல்நிலை பயங்கரமான அளவுக்குச்
சீரழிந்தபோதுகூட அவன் இவ்வளவு சஞ்சலப்படவில்லை. உடலில் ஏற்பட்ட
புண்ணை உதாசீனம் செய்துவிட்டான். உள்ளத்தில் ஏற்பட்ட புண்ணை
அவனால் ஆற்றிக்கொள்ள முடியவில்லை.

‘நான் உங்களை வெறுக்கிறேன்!’ என்று அவனுடைய முகத்துக்கெதிரே
ரோகிணி சொன்ன சொல்லுக்கு, மருந்தைத் தேடி அவன் எங்கு போவான்!
கூரம்போ, வேல் முனையோ நெஞ்சைத் துளைத்திருந்தால்கூட, அவற்றை
நெஞ்சைவிட்டு அகற்றி விடலாம். அவள் சொல்லை எப்படி அகற்றுவது?
எப்படிப் பிடுங்கி எறிவது?

மனத்தின் மருத்துவச் சாலையாகிய ஆண்டவன் ஆலயத்துக்கு அவன்
மாமன்னருடன் போய்ச் சேர்ந்தான். மூடிய விழிமலர்களைத் திறவாமல்
சிறுபொழுது தனக்குள் கசிந்துருகினான்.


அகிலத்தையே ஆளும் வல்லமை பெற்ற சோழ சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி, திருவாரூரில் எழுந்தருளிய தியாகேசன் முன்பாக
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தெண்டனிட்டார். அவர் பூண்டிருந்த பொன்னாபரணங்கள் தரையில் விழுந்து
புரண்டன. அவர் உடுத்திருந்த கலிங்கத்துப் பட்டாடை அடியார்களது காலடி
தோய்ந்த மண்ணிலே தோய்ந்தது.

மாமன்னரின் மலைபோன்ற மேனி மண்ணைத் தழுவி நிற்பதைக்
கண்ணுற்றான் இளங்கோ. வெறும் மண்ணா அது? பெற்று வளர்த்த மண்;
பீடுற வாழச் செய்த மண்; பிறவியை மறைக்கப் போகும் மண்.

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’’

உள்ளங்குழைந்துருக உத்தமனைத் துதித்துப் போற்றினார் சக்கரவர்த்தி.
மளமளவென்று அவர் கண்களில் குளிர் அருவி பெருக்கெடுத்தது. இறைவனது
திருப்பணிக்கென்று அவர் எவ்வளவோ பொன்னும் பொருளும்
காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அவர் வழங்கிய தேவ தானங்களும்,
பள்ளிச் சந்தங்களும் கணக்கில் அடங்காதவை.

எனினும் அவையெல்லாம் கண்ணீராகிய விலைமதிப்பற்ற காணிக்கைக்கு
முன்பு எம்மாத்திரம்? அகத்தின் ஆணவத்தை, மனத்தின் மாசை, சிற்றறிவின்
செறுக்கை அலம்பிக் கழுவும் ஆனந்தப் பொன்னீரல்லவா அது?

மாமன்னரின் மனம் தியாகத்தின் திரு உருவிடம் முறையிட்டது:

‘தியாகப் பெருமானே! போர்த் தொழில் புரிவது நாடாள்பவனின்
கடமை என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். கொலை,
புலை, கொடுமை, வெறித்தனமாகிய குரூரங்கள் நிறைந்த மறத்தொழில் தான்
அது. ஆனால் அறம் என்று நம்பிச் செய்திருக்கிறேன். அதன் புண்ணிய
பாவங்கள் அனைத்தையும் நீயே ஏற்றுக் கொள். போரில் நான் வெற்றி
பெற்றேன்; நட்பு முயற்சியில் தோல்வியுற்றேன். இந்த வெற்றி, தோல்வி
இரண்டையும் நீயே ஏற்றுக்கொள்!

‘பண்பற்ற பகைவர்கள் நாட்டின் வடக்கு எல்லையில் எக்காளமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். உட்பகைவர்களோ  உணர்ச்சிவெறி கொண்டிருக்கிறார்கள். இவர்களது தீமைகளிலிருந்து நாட்டைக்
காக்கும் சக்தியைக் கொடு!

‘என் தங்கத் தமிழ்நாட்டில் வங்கத்தின் கங்கை பாய வேண்டும். நாட்டு
மக்கள் வளம் பெற்ற வாழ்வு வாழ வேண்டும். தென்னாடுடையவனே!
இந்நாட்டைப் பொன்னாடாக்கிவிடு!’

பூசனையை முடித்துக்கொண்டு மன நிம்மதியுடன் மௌனமாகத் திரும்பி
நடந்தார் மாமன்னர்.

இளங்கோவும், ‘தியாகேசா! அந்த அற்பச் சிறுமியின் சுடுசொல்லால் என்
மனம் வேதனையுறுகிறது. அந்தச் சொல்லை மறந்திருப்பதற்கு ஓர் உபாயம்
கற்றுக்கொடு’ என்று வேண்டிக்கொண்டு வந்தான்.

இரவு உணவு முடிந்தவுடன் படுக்கைக்குச் செல்வது போல்
பெரியவர்களிடம் போக்குக் காட்டிவிட்டு, கமலாலயக் குளக்கரை ஓரமாக
நடந்து சென்றான் இளங்கோ. திருவாரூர் தனது உல்லாசக் களியாட்டங்களை
முடித்துக் கொண்டு களைத்துப்போய் உறங்க முற்பட்டது. குளக்கரையைச்
சுற்றிலும் ஆங்காங்கே தீப்பந்தங்கள் எரிந்தன. குளத்தின் மையத்தில்
அமைந்திருந்த நடுவனார் ஆலயத்திலிருந்தும் விளக்கொளி பரவியது.

மகிந்தர் தங்கியிருந்த கூடத்துக்கு எதிரே, குளத்தின் படிக்கட்டில்
யாரோ ஒரு பெண்பிள்ளை தனிமையில் அமர்ந்திருந்தாள். மங்கலான ஒளிக்
கலவையில் முதலில் அவள் யாரென்று இளங்கோவுக்குத் தெரியவில்லை.
யாரென்று தெரிந்துகொண்டவுடன், மேலே நடக்காமல் படிக்கட்டின் சுவருக்குப்
பின்னால் தயங்கி நின்றான். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நீரின் பக்கம்
திரும்பியிருந்தாள் ரோகிணி.

மற்றொரு உருவம் படிக்கட்டில் மெல்ல இறங்கி வந்தது. மெதுவாக
அவளுக்குப் பின்னால் போய் நின்று கொண்டு, “இளவரசி! இந்த
அகாலவேளையில் நீங்கள் இங்கே இப்படித் தனியாக வரலாமோ!’’ என்று
கேட்டது.

அந்தக் குரலையும் உருவத்தையும்கொண்டு, வந்திருப்பவன் வீரமல்லன்
என்பதை அறிந்தான் இளங்கோ. ஒரு கணம் அவன் மனம் துணுக்குற்றது.
பிறகு இளங்கோ தன் வியப்பைக் குறைத்துக் கொண்டான். மகிந்தரின் குடும்பப் பாதுகாப்பு வீரமல்லன்
பொறுப்பிலிருந்தது, அவன் நினைவுக்கு அச்சமயம் வந்தது.

வீரமல்லனின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் அவனைத் திரும்பிப்
பார்த்தாள் ரோகிணி. இளங்கோ மறைவில் இருந்ததால் அவளுக்கோ,
வீரமல்லனுக்கோ, அவன் அருகில் நின்றது தெரியவில்லை.

“உங்களைத்தான் இளவரசி! - தனியாக இங்கு எங்கே வந்தீர்கள்?’’
என்று கேட்டான் வீரமல்லன்.

“ஏன், வரக்கூடாதோ?’’ என்று திருப்பிக்கேட்டாள் ரோகிணி.

“உங்கள் சித்தப்படி நீங்கள் எங்கும் போகலாம், வரலாம். ஆனால்,
நீங்கள் இங்கிருந்தால் நானும் உங்கள் காவலுக்கு நிற்கவேண்டியிருக்கும்.’’

‘எனக்கொன்றும் அச்சமும் இல்லை; எனக்குக் காவலும் வேண்டாம்’
என்று கூற நினைத்த ரோகிணி, அப்படிக் கூறாமல், சிறுபொழுது எதையோ
யோசனை செய்தாள். பிறகு, “வீரமல்லா! இப்படிச் சற்று அருகில் வா’’ என்று
அவனை அழைத்தாள்.

மிகவும் நெருங்கிச் சென்றவனை, “போதும் அப்படியே நில்’’ என்று
கூறிவிட்டு, “உனக்குக் கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவைத் தெரியுமா?’’
என்று மென் குரலில் கேட்டாள்.

இளங்கோவின் செவிகள் அவள் குரலை கிரகித்துக் கொண்டன.

வீரமல்லன் கணப்பொழுது மௌனமாக நின்றான்.
அதிர்ச்சியுற்றவன்போல் காணப்பட்டான்.

“என்ன யோசிக்கிறாய்? உனக்கு அவரைத் தெரியுமா?’’

“ஏன் கேட்கிறீர்கள்?’’

“காரணத்தோடுதான் கேட்கிறேன். உன்னால் எனக்கு அவரிடம் ஒரு
காரியம் ஆகவேண்டும்.’’

“அவனை எனக்குத் தெரியும்’’ என்றான் வீரமல்லன். அவன் குரல்
என்னவோபோல் இருந்தது. “அவனா! உங்கள் நாட்டுப் பழக்கம் விசித்திரமாயிருக்கிறதே! ஓர்
இளவரசரைப் பற்றி நீ இவ்வளவு அலட்சியமாய்ப் பேசுகிறாயே?’’

“அவன் என்னுடைய நண்பன், இளவரசி! இளவரசனாக இருக்கலாம்.
ஆனால் அவனும் என்னைப்போல் ஒரு மனிதன்தானே!’’

“போகட்டும்! அது உன் சொந்த விஷயம்’’ என்று சொல்லி விட்டு,
“எனக்கு நீ ஒரு சிறு உதவி செய்ய முடியுமா?’’ என்று கேட்டாள்.

“நீங்கள் இட்ட பணியைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். சிறு உதவி
என்ன? பெரிய உதவி செய்வேன்.’’

“என் தந்தையார் என்னிடம் ஒரு முக்கியமான செய்தி
சொல்லியிருக்கிறார். அதை நான் கொடும்பாளூர் இளவரசரிடம் நேரில்
சொல்ல வேண்டும். எனக்காக அவரிடம் சென்று நான் அவரை உடனே காண
விரும்புவதாய் சொல்லுகிறாயா? நான் இந்த இடத்தில் காத்திருப்பதாய்ச்
சொல்.’’

வீரமல்லன் அங்கேயே நின்றான். திரும்பிப் போகவில்லை.

“போய் வருகிறாயா?’’ என்று கெஞ்சும் மொழியில் கேட்டாள் ரோகிணி.

“உங்களுக்கு அவனை நன்றாகத் தெரியுமா?’’ என்று திருப்பிக்
கேட்டான் வீரமல்லன்.

“தெரியாமலா வரச் சொல்வேன்?’’


“உங்கள் தந்தையாருக்கு இளங்கோவைத் தெரியுமல்லவா?’’

“தெரியும்.’’

“அவரே அவனிடம் அதை நேரில் கூறிவிட்டால் என்ன? தங்களுக்கு
ஏன் இந்த வீண் சிரமம்?’’

“வீரமல்லா! உன்னிடமிருந்து நான் எவ்விதமான யோசனையையும்
எதிர்பார்க்கவில்லை, நீ போய்ச் சொல்ல முடியுமா? முடியாதா?’’

“முடியாது, இளவரசி! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.’’

“சற்று முன்பு உதவி செய்வதாகச் சொன்ன நீயா அதற்குள்ளாக இப்படி மறுத்துப் பேசுகிறாய்?’’

“வேறு எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்; இந்தக்
காரியத்தை என்னால் செய்ய முடியாது.’’

“ஏன்?’’

“அவனைச் சுற்றிப் பலரும் பேசிக் கொண்டிருப்பார்கள்!’’

“இருந்தால்...?’’

“இது இரவு நேரம்; நீங்கள் இங்குத் தனித்திருக்கிறீர்கள், இந்தச்
சமயத்தில் அவனை இங்கு வரும்படிக் கூறினால் மற்றவர்கள் ஏதும் தவறாக
நினைத்துக் கொள்ளக்கூடும்.’’

“நீ அவரைத் தனியே அழைத்துச் சொல்ல முடியாதா?’’

“முடியாது!’’


“உனக்கு விருப்பமில்லை எனக் கூறு!’’

“அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். நான் தூதுவனல்ல, காவற்படைத்
தலைவன்.’’


“தெரிந்துகொண்டேன்! சரி நீ இங்கிருந்து போகலாம். நான்
தனித்திருக்கும் வேளையில் நீயும் இங்கு நிற்பது தவறுதான்.’’

“கோபித்துக்கொள்ளாதீர்கள், இளவரசி!’’ திரும்பிப் போகாமல்
அங்கேயே நின்றான், வீரமல்லன்.

“நீ போகிறாயா, இல்லையா? இல்லை, உன்னைப் போக வைக்கட்டுமா?’’

வீரமல்லன் திரும்ப மனமில்லாதவன் போல் திரும்பிச் சென்றான்.
மாளிகைக் கூடத்துக்குள்ளே அவன் நுழையும் வரையில் காத்திருந்துவிட்டு,
“யாரது அங்கே?’’ ஏதுமறியாதவன் போல் கேட்டுக்கொண்டே இளங்கோ படிக்கட்டுக் கரைக்கு வந்தான்.

திடுக்கிட்டு எழுந்து நின்று திரும்பிப் பார்த்தாள் ரோகிணி.

“யாரது?’’

ரோகிணி பதிலளிக்கவில்லை. பதிலளிக்காமல்
எங்கே தன் குரலைக் கேட்டுவிட்டு இளங்கோ திரும்பிப் போய் விடுவானோ என்ற அச்சத்தில், பதறிக்கொண்டு அவனிடம் ஓடி வந்தாள்.

“இளவரசே! நிச்சயம் உங்களுக்கு நூறு வயது!’’

மன வருத்தத்துடன் நகைத்தான் இளங்கோ. “பெண்களின் சுடு
சொல்லுக்கு நூறு வயதுக்காரனையும் ஒரே நொடியில் கொன்றுவிடும் சக்தி
இருக்கிறதே, உனக்குத் தெரியுமா?’’

ரோகிணிக்குப் பேச நா எழவில்லை.


தொடரும்


வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 4. அகந்தைக்கார அழகி )

பாகம் 2   , 4. அகந்தைக்கார அழகி  
இராஜேந்திரசோழப் பெரிய உடையார் தமது பரிவாரங்கள் புடைசூழ
நாகப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு, அருகில் இருந்த ஆனைமங்கலம் சோழ
மாளிகையில் அன்றிரவுப் பொழுதைக் கழித்தார்.

ஜனத்திரளின் பெரும்பகுதி ஆனைமங்கலத்துக்கு அவரைப் பின்பற்றி
வந்தது. ஆனைமங்கலத்தின் வரவேற்பு நாகப்பட்டினத்தின் வரவேற்பையும்
மிஞ்சிவிட்டது. தெருக்கள் தோறும் குலை தள்ளிய வாழை
மரங்களைக் கட்டியிருந்தார்கள். வீடுகள் தோறும் மாவிலைத்
தோரணங்களும், மாவிலைக் குருத்துத் தோரணங்களுமாகத் தொங்கிக்
கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு நெல் குவித்து, அதன் மேல் முளைக்குடம்
வைத்து, சுற்றிலும் தீபச் சுடரொளி பரப்பியிருந்தார்கள்.

பெண்டிரின் கைவண்ணம் அற்புதம் அற்புதமான மாக்கோலங்களாகத்
தெருக்களில் மலர்ந்திருந்தன. மல்லிகை நிற மாவினால் புள்ளிக் கோலங்கள்
தீட்டி, தாமரை நிறச் செம்மண்ணால் அவற்றுக்குக் கரை கட்டியிருந்தார்கள்.
கோலப் புள்ளிகளின் மேலே பறங்கிப் பூக்களும், செவ்வல்லிகளும் சிரித்துக்
கொண்டிருந்தன.

ஆடுவோர், பாடுவோர், சிலம்பம் விளையாடுவோர், கும்மியடித்துக்
குரல் எழுப்புவோர், இப்படியாக ஆனை மங்கலமே ஆனந்தமங்கலமாக
விளங்கியது. வாணவேடிக்கைகளால் ஆகாயமே நந்தவனமாக மாறி
வானவில்லின் நிறத்தாலான நெருப்பு மலர்களைச் சொரிந்த வண்ணமாக
இருந்தது. மறுநாள் அதிகாலையில் அவர்கள் மறுபடியும் பிரயாணத்தைத்
தொடங்கி, பிற்பகலில் திருவாரூரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருகிக் கொண்டே
வந்தது. களைத்துப்போய்ப் பின் தங்கியவர்கள் பலர் என்றால், புதிதாகக்
கூட்டத்தில் சேர்ந்து கொண்டவர்கள் பலப்பலர்.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கு, பரிவாரங்களுக்குப் பின்னால் சென்று
கொண்டிருந்த ரதத்தில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனப்போக்குப்படி நினைத்துக்
கொண்டார்கள். ரதத்தை நெருங்கிச் சென்று அதற்குள்ளே இருந்தவர்களை
யாராலும் பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிலும் கடுமையாக கட்டுக்காவல்
இருந்தது.

குதிரை வீரர்களின் வேல்முனைகள் சக்கரவட்டம் போல் ரதத்தை
வளைத்துக்கொண்டிருந்தன; காற்றில் எப்போதாவது பட்டுத் திரைத்துணி
படபடத்தபோது, கூட்டத்தினரின் விழிகள் அங்கே பாய்ந்து செல்லத்
தவறவில்லை. பெண்களின் தலைகள் தெரிந்தன, பெரியவர் ஒருவரின் உடல்
தெரிந்தது.

வீரமல்லன் மாத்திரமே ரதத்தின் அருகில் நெருங்கிச் சென்றான்.
அடிக்கடி அவன் உள்ளேயிருந்தவர்களிடம் ஏதோ பேசுவதுபோல்
தோன்றியது. ஒருசமயம், அவன் கூட்டத்தினர் கொண்டு வந்து கொடுத்த
இளநீரை ரதத்தில் வந்தவர்களுக்குக் கொடுத்தான். அடுத்தாற்போல்,
அவர்களுடைய சின்னஞ்சிறு தேவைகளையும் கவனித்து உடனுக்குடன் பூர்த்தி
செய்துகொண்டு வந்தான்.

ஒரு தேவையும் இல்லாதபோதுகூட, அவர்களை உபசரிக்கும் சாக்கில்
அவர்களுக்கு அன்புத் தொல்லைகள் கொடுத்து வரத் தொடங்கினான்
வீரமல்லன்.

வழியில் அந்த ரதம் சில விநாடிகள் நின்றபோது அதை நெருங்கிச்
சென்று அதன் திரையை விலக்கித் தலையை உள்ளே நீட்டிக்கொண்டு
கூறினான், “தங்களுக்கு ஒரு குறையும் தோன்றாதவாறு கவனித்துக்கொள்ளும்படி
சாமந்த நாயகர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். விருந்தோம்பும் பணியில்
அணுவளவு நான் என் கடமையில் தவறிவிட்டாலும் அவருடைய கோபத்துக்கு
ஆளாக நேரிடும். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் என்
ஆட்களும் எப்போதும் சித்தமாக இருக்கிறோம்! இப்போது உங்களுக்கு
என்ன வேண்டும் சொல்லுங்கள்?’’

அவனுடைய கண்கள் அப்போது தன் முகத்தை வட்டமிடுவதைக் கண்ட
ரோகிணிக்கு எரிச்சல் உண்டாயிற்று.

“சாமந்த நாயகர் கூறியதைவிடப் பன்மடங்கு நீ எங்களை அதிகமாக
உபசரிக்கிறாய். உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி’’ என்றாள் அவள்.
“ஆமாம்; நீ யார்? சோழ சாம்ராஜ்யத்தில் உனக்கு என்ன வேலை?’’

‘நீ’ என்று ஒருமையிலே ரோகிணி தன்னைக் குறிப்பிட்டது
வீரமல்லனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் வயதில்
சிறியவள், தோற்றுப்போன வேற்றுநாட்டு மன்னரின் மகள். அதற்காக
வீரமல்லன் கவலைப்படவும் இல்லை. முதன் முறையாக அவள் தன்னைப்
பொருட்படுத்திச் சில வார்த்தைகள் பேசியதே அவன் தலையைச் சுற்ற
வைத்தது.

“நான் ஆயிரவர் படைத் தலைவன். என் பெயர் வீரமல்ல
முத்தரையன்’’ என்றான் கர்வத்தோடு. “பொறுப்புள்ள கடமையென்பதால்
இதற்கென என்னைத் தனியாகப் பொறுக்கி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.
முன்பே நானும் ஈழ நாட்டுக்கு வந்திருக்க வேண்டியவன். வந்திருந்தால்
அங்கேயே தங்களைச் சந்தித்து மகிழ்ந்திருப்பேன்.’’

“இந்த மகிழ்ச்சியே உனக்குப் போதும்! இனிமேல் தந்தையாரோ நானோ
அழைத்தால் நீ எங்கள் உதவிக்கு வரலாம். இப்போதைக்கு திரைத்துணியை
மூடிவிட்டு, நீ சற்று உன் முகத்தை வெளியே இழுத்துக் கொள்கிறாயா?’’
என்றாள் ரோகிணி.

‘என்ன அகந்தை இவளுக்கு!’ என்று நினைத்துக் கொண்டே, அவ்விடத்தை விட்டு விலகிக்கொண்டான் வீரமல்லன். குதிரையில் ஏறிக்கொண்டு கூட்டத்தினரைச் சுற்றிப் பார்த்தான். எல்லோருடைய  கண்களும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனைச் சேர்ந்த வீரர்கள்கூட அவனைச் சற்றுப் பொறாமையோடு பார்த்தார்கள்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத பாக்கியம், அவர்களை நெருங்கி
உரையாடும் பாக்கியம், தனக்கு மட்டும் கிடைத்தது பற்றி அவனுக்கு ஒரே
பூரிப்பு. அந்தக் கர்வம் பிடித்த இளவரசி அவனிடம் என்ன பேசினாள் என்று
மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது! வீரமல்லன் தன் தலையைத் தூக்கிக்
கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலட்சியப் பார்வையால்
கூட்டத்தினரின் மனப் புழுக்கத்துக்கு ஆளாகிக் கொண்டு, குதிரையின்
கடிவாளத்தைச் சுண்டிவிட்டான்.

கூட்டத்தில் சிலர் இடித்துப் புடைத்துக் கொண்டு அவனைத் தங்களிடம்
கூப்பிட்டுப் பார்த்தார்கள். “ரதத்தில் வருபவர்கள் யார்? எங்கிருந்து
வருகிறார்கள்?’’ என்று அவனிடம் வினாக்களை வீசினார்கள். வீரமல்லன்
அவர்களைத் திரும்பிப் பார்க்கவுமில்லை, அவர்களுக்கு விடையளிக்கவும்
இல்லை.


“யாரோ ஈழநாட்டு விருந்தினர்கள். சக்கரவர்த்திகளுக்கு
வேண்டியவர்கள். எங்களுக்கு யார் என்று தெரியாது’’ என்று பதிலளித்தான்
முன்னால் சென்ற குதிரைச் சேவகன்.

வீரமல்லனின் குதிரை அவனிடம் விரைந்து சென்றது. “பேசாமல்
வாயை மூடிக்கொண்டு போவதைவிட்டு, அவர்களிடம் என்ன பேச்சு
வேண்டிக் கிடக்கிறது’’ என்று சீறினான்.

“நீங்கள் ரதத்துக்குப் பக்கத்தில் வருகிறீர்கள்; நாங்கள் மக்களிடம்
நெருக்கடி பட்டுக்கொண்டு திண்டாடுகிறோம். அவர்கள் கேள்விக்கு ஏதும்
மறுமொழி சொல்லாவிட்டால் உற்சாக வெறியில் அவர்கள் ரதத்தையே
கூண்டோடு தூக்கிச் சென்று விடுவார்கள் போலிருக்கிறது. நம்முடைய
அதிகாரத்துக்கு இது நேரமல்ல. அதோ பாருங்கள்! யானை மீதிருந்து சக்கரவர்த்திகள் அடிக்கடி இந்தப் பக்கமே திரும்பிப்
பார்த்துக்கொண்டு போகிறார்கள்.’’

வீரமல்லன் முன்னால் சென்றுகொண்டிருந்த யானைகளை ஏறிட்டுப்
பார்த்தான். முதல் யானையின்மேல் அம்பாரியில் ஈழத்திலிருந்து கொண்டு
வந்த மணிமுடி, உடைவாள், இந்திரனாரம் முதலிய அரசுரிமைப் பொருள்கள்
இருந்தன. அடுத்தாற்போல் சென்ற யானையில் மாமன்னர் இராஜேந்திரரும்
இளங்கோவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

ஏற்கனவே வீரமல்லன் கண்டு ஆத்திரப்பட்ட காட்சிதான் அது. அந்த
ஆத்திரம் இப்போது அவன் நெஞ்சில் நெருப்பாய்ப் பற்றியது. ‘சோழ
சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியோடு சரிசமமாக அமர்ந்து செல்லும் அளவுக்கு
இளங்கோவின் புகழ் உயர்ந்து விட்டதா?’

‘போர்க்களத்தில் எத்தனை எத்தனையோ வீரர்கள் மாண்டு
மடிந்திருக்கிறார்கள். எத்தனை எத்தனையோ பேர் அங்க ஈனர்களாக மாறி
இருக்கிறார்கள். கேவலம் ஒரு முடியைத் தேடிச் சென்று எடுத்து வந்து
விட்டான் என்பதற்காகவா இத்தனை ஏற்றம் இவனுக்கு. என்னை ஈழத்துக்கு
அனுப்பியிருந்தால் இந்தக் காரியத்தை நான் செய்திருக்க மாட்டேனா, என்ன?
இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தில் இவன் ஒருவன் மட்டும்தானா வீரன்?’

வீரமல்லன் ஒருவனைத் தவிர வேறு யாருமே இப்படி நினைக்கவில்லை.
ஈழத்துப் போர்க்களத்திலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய்த் திரும்பி
வந்தவர்களும், தங்களது கைகால்களைப் பறிகொடுத்தவர்களும்
இளங்கோவுக்குக் கிடைத்த பெருமையைத் தங்களுக்குக் கிடைத்ததாகவே
நினைத்துக் கொண்டார்கள்.

நெருங்கிப் பழகிய ஒரே காரணத்தால் வீரமல்லனுக்கு இளங்கோவின்
அருமை தெரியவில்லை. மலையின் அருகில் நிற்பவர்களால் அதன்
அழகையும் கம்பீரத்தையும் காண முடியாது. தன்னைப்போன்ற ஒருவனைச்
சக்கரவர்த்தி வேண்டுமென்றே உயர்த்திவிட்டதாக அசூயைப்பட்டான்
வீரமல்லன்.


உயரப் பறந்த பருந்தைக் கண்டு, அதை ஒட்டிப் பறந்த ஊர்க்குருவி
பொறாமை கொள்ளத் தொடங்கியது.

வீரமல்லன் ரதத்தைத் திரும்பிப் பார்த்தான். அதன் பட்டுத் திரை சற்றே
விலகியிருந்தது. அதற்குள்ளிருந்து எட்டிப் பார்த்த ரோகிணி, யானைமேல்
சென்றுகொண்டிருந்த இளங்கோவின் முதுகுப்புறமாகத் தன் விழிகளை
மிதக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

தொடரும்


வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 3. வெறுப்புத்தானா? )

பாகம் 2   , 3. வெறுப்புத்தானா?எத்தனை நாழிகை ரோகிணி அதே இடத்தில் ஆடாத அசையாத
சிலையாக நின்று கொண்டிருந்தாளோ, அவளுக்கே தெரியாது.

கடற்காற்றில் அவளது கருங்குழலின் திவலைகள் நெற்றியில் படர்ந்து
துடித்தன. மேலாடை கதிரொளியில் மினுமினுத்துப் பின்னோக்கிப் பறந்தது.
கொடி மரத்தை வளைத்துக் கொண்டிருந்த பட்டுக் கயிறுபோல், அவள்
துவண்டுபோன பசலைக் கொடியாக அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அதே மேல் தளத்தில் மறுகோடியில், ஒரு தங்கக் கட்டிலில் சாய்ந்து
கொண்டு கிடந்தான் இளங்கோ. அவனால் ஓரளவுக்கு எழுந்து நடமாட
முடிந்ததே தவிர, அவனுடைய உடல் நலம் பழைய நிலைக்கு இன்னும்
திரும்பவில்லை. வேல் பட்ட காயம் வெளிப்புறம் ஆறிக்கொண்டு வந்தாலும்
உள்ளே வேதனையைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

வைத்தியர் ஏதோ தைலம் தடவிய துணியைக் காயத்தின்மேல் போட்டு
வைத்திருந்தார். அதைப் பிய்த்து எடுத்துக் கடலில் வீசி எறியவேண்டும் போல்
இருந்தது. நோய்ப் படுக்கை விவகாரமே அவனுக்குப் பிடிக்கவில்லை. சிற்சில
சமயங்களில் காயத்தின் தொல்லை தாங்காதபோது வேல் எறிந்து
தொலைத்தவன் இன்னும் சிறிது வேகமாக எறிந்திருக்கக் கூடாதா? மணிமுடிப்
பேழையை மாமன்னரிடம் கொடுத்தவுடன் இந்த உயிர் உடலை விட்டுப்
போயிருக்கக் கூடாதா என்றுகூட அவன் நினைத்திருக்கிறான்.


ஆனால், ரோகிணி அவன் அருகே வந்து பேசிக்கொண்டிருந்த
வேளைகளில் அவனுக்குத் தன் உயிரின்மேல் வெறுப்பு ஏற்பட்டதில்லை.
வாழவேண்டும் என்ற அளவுகடந்த ஆசையை அவனுக்கு அவள் கண்கள்
கொடுத்தன. சொற்கள் கொடுத்தன; முகம் கொடுத்தது.

திடீரென்று ரோகிணி மாறிப் போய்விட்டாள். நேற்றிலிருந்து அவள்
அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனுடைய உடல்நிலை பற்றி
முன்னைப் போல் அன்போடு விசாரிக்கவில்லை. கண்டும் காணாதது போல்
பாராமுகமாக நடந்து கொண்டாள்.


இன்று பொழுது புலர்ந்ததிலிருந்து ரோகிணி, ரோகிணியாகவே இல்லை.
இரவெல்லாம் அவள் தேம்பித் தேம்பி அழுதிருக்க வேண்டும். தன்
தாயாரின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மியிருக்க வேண்டும்.
முகம் கன்றிச் சிவந்திருந்தது. கண்கள் கொவ்வைக் கனியாகப் பழுத்திருந்தன.

கப்பலின் மேல்தளத்துக்கு அவன் வந்துகொண்டிருந்த போது
எதேச்சையாக அவள் கண்கள் இளங்கோவைச் சந்தித்தன. பார்வையா அது!
நெருப்பை அள்ளி அவன் மீது வீசிவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக்
கொண்டாள்.

இளங்கோவுக்கு ஏன் இந்த மாற்றம் என்று விளங்கவில்லை. பொறுத்துப்
பொறுத்துப் பார்த்தான். அவன் தன்னிடம் திரும்பி வந்து பேச்சுக்
கொடுப்பாள் என்று நினைத்தான். அன்போடு அவள் பேச வேண்டியதில்லை.
பெயரளவுக்காவது ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போகலாமல்லவா!

அவள் எதையும் செய்யவில்லை.

இளங்கோவுக்கு மனத்தவிப்பு மிகுதியாயிற்று. மெல்லத் தன் கட்டிலை
விட்டு எழுந்து வந்தான்.

கப்பல் மிகப் பெரிய கப்பல். இராஜேந்திரர், வல்லவரையர் முதலிய
பெரியவர்கள் அதன் கீழ்த்தளத்தில் இருந்தார்கள். மீகாமனும் அவனுடைய
ஆட்களும் அடித்தளத்தின் பக்கவாட்டிலிருந்து கலத்தைச் செலுத்திக்
கொண்டிருந்தார்கள். சார்ந்த காற்று வீசியதால் பாய்மரச் சேலைகள்
புடைத்திருந்தன. அதனால் துடுப்பு வலிப்பவர்களுக்கு அதிகமாக
வேலையில்லை.


ரோகிணியின் அருகே சென்று கைப்பிடியில் சாய்ந்து கொண்டே சில
விநாடிகள் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவனுடைய வரவு
அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. எனினும் ரோகிணி அவனைத் திரும்பிப்
பார்க்கக்கூட முன்வரவில்லை.

“ரோகிணி!’’

சட்டென்று திரும்பிப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டாள் அவள்.
சற்றே விலகி நின்றாள்.

“ரோகிணி!’’ என்று கனிவுடன் அழைத்தான் இளங்கோ. “என்னோடு நீ
எங்கள் நாட்டுக்கு வருகிறாய் என்று தெரிந்ததிலிருந்து நான் எவ்வளவு
ஆனந்தமாக இருக்கிறேன் தெரியுமா? என்னிடம் உன் கோபத்துக்குக்
காரணத்தைச் சொல்லமாட்டாயா? ஏன் நீ என்னைத் திரும்பிக்கூடப் பாராமல்
இரண்டு தினங்களாக விலகி விலகிச் சென்று கொண்டிருக்கிறாய்?’’

“இப்போது நீங்கள் விலகிப் போகமாட்டீர்களா?’’ என்று முகத்தில்
அறைவது போல் கூறினாள் ரோகிணி.

பகைவனின் வேல் அவன் தோளில் பாய்ந்தபோது கூட இளங்கோவுக்கு
இவ்வளவு வேதனை ஏற்படவில்லை. ரோகிணி எறிந்த சொல்லம்பு அவனது
நெஞ்சத்தின் நடுமையத்தில் பாய்ந்து விட்டது.

அந்த வலியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, “நான் உனக்கு என்ன
கொடுமை செய்துவிட்டேனென்று கூற மாட்டாயா?’’ என்று கெஞ்சுவது போல்
கேட்டான்.

“இதைவிட வேறென்ன கொடுமை வேண்டும்? அரச கோலத்தில்
இருந்தவர்களை அடிமைகளாக்கி, ஆண்டிகளாக்கி இழுத்துக் கொண்டு
போகிறீர்களே, போதாதா? எங்கள் நாட்டைப் பறித்து வீட்டைப் பறித்து
எங்கள் வாழ்வையே பறித்துக் கொணடீர்களே, போதாதா? பெண்களைச் சிறை
செய்து கொண்டு போவதற்குக் கொஞ்சமும் வெட்கமாக இல்லை?’’

“கடவுளே!’’ என்று அலறினான் இளங்கோ. “ரோகிணி! உனக்கு என்ன
புத்தி தடுமாறிவிட்டதா! நாங்களா உன்னையும்


உன் தாயாரையும் எங்கள் நாட்டுக்கு அழைத்தோம்? உங்களை நாங்கள்
வரச்சொல்லி வற்புறுத்தினோமா? கட்டாயப் படுத்தினோமா? ஏன் இப்படிப்
பேசுகிறாய்?’’

“இனி நீங்கள் எதை வேணடுமானாலும் சொல்வீர்கள்?’’ என்றாள்
ரோகிணி. “நீங்கள் வெற்றி பெற்றவர்கள்; நாங்கள் தோற்றுப் போனவர்கள்.
நீங்கள் சாதாரண வெற்றியா பெற்றிருக்கிறீர்கள். சரித்திரம் காணாத மாபெரும்
வெற்றியல்லவா இது? இந்த வெற்றி மயக்கத்தில் உங்களுக்கு மற்றவர்களின்
மனத் துன்பம் எங்கே புரியப் போகிறது? ஏன், எங்கள் தந்தையாரைக்
கொண்டுபோனால் அப்போது நாங்களும் அவர் பின்னோடு வந்தே
தீருவோம் என்பதற்காகத்தானே இப்படி நீங்கள் செய்திருக்கிறீர்கள்?’’

இதைக்கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று இளங்கோவுக்குத்
தோன்றவில்லை.

“இதில் நான் ஒன்றுமே செய்யவில்லை. மாமன்னரின் கட்டளைப்படி
உன் தந்தையார் எங்களுடன் வருகிறார். நீயோ உன் சொந்த விருப்பத்துக்காக
உன் தாயாரையும் அழைத்துக்கொண்டு வருகிறாய். உனக்கு விருப்பம்
இல்லாவிட்டால் இப்போதே சொல்லிவிடு. உனக்காக நான் சக்கரவர்த்தியிடம்
முறையிட்டு, உங்கள் இருவரையும் திருப்பி அனுப்புகிறேன்; வா, நாம்
இருவருமே சக்கரவர்த்தியிடம் போவோம்.’’

“உங்கள் பேச்சு எனக்கு வெறுப்பைத்தான் தருகிறது’’ என்று
சிடுசிடுத்தாள் ரோகிணி. “உங்களை நான் என் மனதார வெறுக்கிறேன்!’’

“என்ன சொன்னாய்?’’ இளங்கோவின் இளம் மீசை துடிதுடித்தது.
அவன் கண்கள் கொப்பளித்தன.

“நீங்கள் என்னை ஏமாற்றினீர்கள்! என்பதைத் துரோகியாக
மாற்றினீர்கள்! என்னுடைய தந்தையாருக்கு வஞ்சனை செய்யத் துண்டினீர்கள்.
என் தம்பி காசிபனை என்னிடமிருந்து விரட்டினீர்கள்! இவ்வளவும் செய்து
விட்டு, இப்போது கூண்டுக்கிளிபோல் கொண்டுபோய் உங்கள் நாட்டில் ஓர் அறைக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். உங்களுடைய பேச்சு, செயல், சாகசம்
ஒன்றுமே எனக்குப் பிடிக்கவில்லை. நான் உங்களை வெறுக்கிறேன்,
வெறுக்கிறேன், வெறுக்கிறேன்.’’

“பெண்ணல்ல இவள்; பேய்தான்!’’ என்ற முடிவுக்கு வந்தான் இளங்கோ.
அழகான நாகப்பாம்பு தன் அலங்காரப் படம் விரித்து ஆடத்
தொடங்குகிறதா?

“எவ்வளவு அழகான கண்கள், எவ்வளவு அடர்த்தியான புருவங்கள்!
எவ்வளவு எடுப்பான நாசி! அடடா, எத்தகைய செவ்விதழ்கள்-இவ்வளவு
அழகும் கொண்ட ஒருத்தியா இப்படி விஷத்தைக் கக்குகிறாள்?’’

இளங்கோவின் வலது கரம் பரபரத்தது. அவளுடைய முகத்தின் அழகுச்
சேர்க்கையனைத்தும், அவனுடைய ஒரே ஓர் அறையைத் தாங்க
வலிமையற்றவை. ‘என்ன துணிவு இவளுக்கு? யாரிடம் பேசுகிறோம்
என்பதைத் தெரிந்து கொண்டுதான் பேசுகிறாளா?’

இளங்கோவின் முகத்தில் திடீரென்று கோரக் களை தாண்டவமாடியது.
புருவங்கள் நெரிந்தன. விழிகள் குத்திட்டு நின்றன. அவளருகில் நெருங்கி,
அவளைப் பார்த்துப் பயங்கரமாக விழித்துக்கொண்டே, “நீ என்ன
சொன்னாய்?’’ என்று திரும்பவும் கேட்டான்.

“நீங்கள் என் குல விரோதி! நான் உங்களை வெறுக்கிறேன்’’ என்று
கலங்காமல் கூறினாள் ரோகிணி.

மறுகணம் ‘பளீ’ரென்று சத்தம் கேட்டது. ரோகிணியின் மூக்கிலிருந்து
ரத்தத் துளிகள் கசிந்தன. செவிகள் ரீங்காரம் செய்தன.

அத்துடன் அவன் நிற்கவில்லை. வெறிகொண்டவன் போல் அவள்
இடையைப் பற்றி மேலே தூக்கினான். கீழே கடல் அலைகள், மரக்கலத்துடன்
முட்டிமோதிக் கொண்டு பயங்கரப் பேயாட்டம் போட்டன. உணர்ச்சி
வேகத்தில் தான் செய்துகொண்டிருப்பது என்ன என்பதையே அவன்
மறந்துவிட்டான். “உன்னைத் தொலைத்து விடுவேன்! என்னை யாரென்று நினைத்தாய்? யார் என்று நினைத்தாய்?’’ என்று அலறினான்.

அலைகடல் அவன் கரங்களில் அகப்பட்டிருந்த சிறு பிராணியைத்
தனக்கு உணவாகப் போடச் சொல்லிக் கூத்தாடியது. ரோகிணி தன் வாழ்வின்
முடிவு நெருங்கி விட்டதென்ற எண்ணத்தில் தன் பலமனைத்தையும் சேர்த்துக்
கத்தினாள். கைகால்களை உதறிக்கொண்டு பதறினாள். கூக்குரலிட்டாள்.

மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்டது.

“இளங்கோ!’’ என்று அதட்டிக்கொண்டே அங்கு ஓடிவந்தார்
வல்லவரையர். தாவிச் சென்று ரோகிணியை அவனிடமிருந்து பற்றி இழுத்தார்.

அவனுடைய கோலத்தைக் கண்டவுடன், ஏதோ நடக்கக்கூடாதது
நடந்திருக்க வேண்டுமென்று தோன்றியது வல்லவரையருக்கு.

ரோகிணியை ஒரு புறம் நிறுத்திவிட்டு, இளங்கோவிடம் நெருங்கி வந்து,
“நீ என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய்?’’ என்று பதறினார்.
“இப்போது என்ன நடந்து விட்டது?’’

அவன் மறுமொழி கூறாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு கடலின்
பக்கம் திரும்பினான். கண்ணீர்த்துளிகள் வெடித்துச் சிதறின. அவன் முதுகு
குலுங்கி, அங்கம் பதறி நடுங்குவதை ரோகிணி மிகுந்த அச்சத்தோடு
பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன இளங்கோ, இது?’’ வல்லவரையர் மீண்டும் கேட்டார்.

“என்னை இவள் இகழ்ந்து பேசிவிட்டாள் தாத்தா. என்னால் அதைப்
பொறுக்க முடியவில்லை!’’ என்று மீண்டும் குமுறினான். “என்னை இவள்
அலட்சியப்படுத்திவிட்டாள், தாத்தா!’’

‘இந்தச் சிறிய விஷயத்துக்காகவா இவ்வளவு பதற்றம்’ என்று
கேட்பவர்போல் முதலில் விழித்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். உடனே அவருக்கு கொடும்பாளூர்ப் பெரிய வேளாரின்
நினைவு வந்தது. தந்தையைப் போல்தானே மகனும் இருப்பான்!

ரோகிணி ஏதோ தகாத குற்றம் புரிந்துவிட்டவள் போல் முகத்தை
வைத்துக் கொண்டு பரிதாபமாக நின்றாள். வல்லவரையர் அவளை நெருங்கி,
“கொடும்பாளூர்க் குலம் மிகவும் பொல்லாத குலம், ரோகிணி! நெருப்போடு
பழகுவதுபோல் அதனுடன் பழக வேண்டும்’’ என்று கூறினார்.

பதிலளிக்கக்கூடிய தெம்போ, துணிவோ அவளிடம் இல்லை. பயங்கரக்
கனவிலிருந்து விழித்துக்கொண்டவள் போல் காணப்பட்டாள்.

“ரோகிணி! பெற்று வளர்த்த தாயார் ஒரு சுடுசொல் சொன்னால்கூட
அவர்கள் தாங்கமாட்டார்கள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தைக் கட்டி
ஆளும் சக்கரவர்த்திகளே அவர்களிடம் இன்மொழியால் நயந்து உரையாடுவது
வழக்கம். இளங்கோவுடன் நெருங்கிப் பழகும் நீ இதையெல்லாம்
தெரிந்துகொண்டு பழகவேண்டும் அம்மா!’’

“நான் ஒன்றுமே சொல்லவில்லையே!’’ என்றாள் ரோகிணி. “என்னுடைய
துன்பம் தாங்காமல் நான் தனிமையில் புழுங்கிக்கொண்டிருந்த போது
அவர்தாம் வந்து குறுக்கிட்டார்.’’

“பாதகமில்லை, இனியாவது கவனமாக நடந்துகொள். அவன்
கொடும்பாளூர் அரசரின் செல்வப் புதல்வன்; நாடாளவிருக்கும் இளவரசன்.
நயந்து பேசுகிறவர்களுக்கு அவன் நல்லவன். சுடுசொல்லை வீசுகிறவர்களுக்கு
எரிமலை. தெரிந்து கொண்டாயா!’’

அவளிடம் அவர் பேசிய சொற்கள் இளங்கோவின் செவிகளில்
விழவில்லை. அவற்றைக் கேட்க அவன் விரும்பவில்லை.

“இளங்கோவிடம் வந்து, வீராதி வீரனான நீ, கேவலம் ஒரு பெண்
பிள்ளையிடந்தானா உன் வீரத்தைக் காட்டத் துணிந்தாய்!’’ என்று பரிகசித்தார்.
“பாவம் அவளுடைய கவலை அவளுக்கு! வா, வந்து ஓய்வெடுத்துக்கொள்.’’


அவனைத் தள்ளிக்கொண்டுவந்து கட்டிலில் கிடத்திவிட்டு படிகளில்
இறங்கிக் கீழ்தளத்துக்குச் சென்றார் வல்லவரையர். சின்னஞ் சிறுவர்களின்
கோபம் சிலவிநாடிகளில் தீரக்கூடியது என்பது அவர் எண்ணம்.


இளங்கோ தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குப்புறப்
படுத்தான். மலைகளைப் போன்ற பேரலைகள் நான்கு பக்கங்களிலும் எழும்பி
வந்து அவனுடைய கட்டிலைத் தனியே கடலுக்குள் அடித்துக் கொண்டு
போவதுபோல் தோன்றியது. “நான் உன்னை வெறுக்கிறேன்! நான் உன்னை
வெறுக்கிறேன்!’’ என்று எக்காளமிட்டபடியே அவை ஒவ்வொன்றாக அவன்
கண்ணெதிரே சுருண்டெழுந்து நர்த்தனம் புரிந்தன.


அற்பத்திலும் அற்பமான விஷயம் என்று நினைத்து அதைத் தன்
மனத்திலிருந்து ஒதுக்கிவிடப் பார்த்தான் இளங்கோ. அற்பமான சிறு
வித்திலிருந்துதானே மிகப்பெரிய ஆலமரம் முளைத்தெழுகிறது?
எண்ணங்களான ஆல விருக்ஷங்கள் அவனது உடலின் ஒவ்வொரு
அணுவிலும் விழுதுகளையும் வேர்களையும் பாய்ச்சி அவனை ஆட்டுவிக்கத்
தொடங்கின.


முதற் பார்வையிலிருந்து எவளிடம் அவன் தன் மனத்தைப்
பறிகொடுத்தானோ, அவள் அவனைப் பகைக்கிறாள்; வெறுக்கிறாள்;
துரும்பென எண்ணித் தூற்றுகிறாள்.


வெகுநேரம் சென்ற பின்பு, “இளவரசே’’ என்ற மெல்லிய குரலொன்று
அவன் தலைமாட்டில் கேட்டது. அந்தக் குரலை அவன் முதலில்
நம்பவில்லை. தன் மனம் எழுப்பும் பிரமைக் குரலாக இருக்குமோ என்று
சற்றே தயங்கினான்.


இளவரசே!’’ என்று மீண்டும் அதே குரல் ஒலித்தது.

தலையைத் தூக்கிப் பார்த்தான்:

நான்... நான் வந்து...’’ ரோகிணி தடுமாறினாள்.

யாரது? யார் நீ’’ என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டான்
இளங்கோ. “நான் உன்னை வெறுக்கிறேன், நீ என் முகத்தில் இனி
விழிக்கவேண்டாம்!’’ என்று தன் சொற்களில் ஆத்திரத்தின்
வஞ்சத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி வைத்து அவள்மீது வீசினான். அம்பு பட்ட அன்னப் பறவை தன் சிறகுகளைச் சிதற விட்டு, கப்பலின்
கீழ்த்தளத்துக்கு உருண்டோடிச் சென்று அங்கு குற்றுயிர் குலை உயிராக
விழுந்து துடித்தது.

அதன் பிறகு ரோகிணியுடன் இளங்கோ முகம் கொடுத்துப்
பேசுவதையே நிறுத்திவிட்டான். நாகப்பட்டினத்துக்கு அவர்கள் வந்த
பின்னரும், அதைவிட்டு அவர்கள் புறப்பட்ட பின்பும் அவன் அவளை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.


தொடரும்