Thursday, January 31, 2013

புராதன இலங்கை சரித்திரம்


புராதன இலங்கை சரித்திரம்


புராதன இலங்கை :

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும்.

புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக.

ப. கணபதிப்பிள்ளை

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 20. அரண்மனைத் தென்றல்

பாகம் 3 , 20. அரண்மனைத் தென்றல் 


நட்ட நடு நிசியில், இருளடைந்த கானகத்தில் தள்ளாடித் தடுமாறி வழி
நடக்கும்போது திடீரென்று கண்முன்னே ஒரு பெரிய மின்னல் தோன்றி
மறைந்தால் எப்படியிருக்கும்? இருளுக்குப் பழகிப்போன விழிகளைப் பற்றி
இழுத்து வெளியே வீசுவதுபோல், குபீரென ஒளிக்கற்றைகள் பொங்கி எழுந்து
மறைந்தால் எப்படியிருக்கும்?

அருள்மொழியைப் பற்றிய வரையில் இதுகாறும் அறியாமை இருளில்
உழன்று கொண்டிருந்த இளங்கோ, இப்போது அவளது அன்பின் தீவிரத்தைக்
கண்டவுடன் அயர்ந்து போய்விட்டான். அந்த அன்பாகிய தூய நெருப்பால் துவண்டுபோன இளங்கோ பொறி கலங்கிப்போய், தன் கால்போன போக்கில் நடந்தான். எங்கு செல்கிறோம் என்ற உணர்வுகூட இல்லாமல், அரண்மனையின் மேல்மாடத்து உப்பரிகைக்கு வந்தான். துவண்டு போயிருந்த அவன் உடல் அங்கு ஓர் ஆசனத்தில் சரிந்து விழுந்தது.

மேலே விண்மீன்கள் நீந்தும் வானவெளி; கீழே சுற்றிலும் விளக்கொளி
கசிந்துருகும் அரண்மனைச் சாளரங்கள்.

அண்ணாந்து வானத்தைப் பார்த்த இளங்கோவுக்கு அங்கே குவியல்
குவியலாய்ப் பூத்திருந்த நெருப்பு மலர்கள் அவனை நோக்கிக் கண்சிமிட்டிச்
சிரிப்பது போல் தோன்றின. கீழே பார்த்தான்; அரண்மனையில் கசிந்த ஒளி,
அருள்மொழியின் உள்ளத்தைப் போல் உருக்குலைந்து வழிந்தது.

‘நங்கையாரே!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு பெருமூச்சுவிட்ட
இளங்கோ, ‘நான் உங்களுடைய அன்புக்குத் தகுதி உடையவன் என்றா
நினைத்தீர்கள்?’ என்று குமுறினான். ‘அப்படி நினைத்திருந்தால் அதை ஏன்
நீங்கள் முன்னமேயே என்னிடம் சொல்லியிருக்கக்கூடாது? எதற்காக மறைத்து
வைத்தீர்கள்? வேங்கி நாட்டுத் தம்பியாரின் கைத்தலம் பற்றி அவரது
பட்டத்தரசியாக விளங்கப் போகிறீர்கள் என்றல்லவா நம்பிக்கொண்டிருந்தேன்.
நான் கண்ட காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை, நங்கையாரே!’
அவன் முகத்தில் அதிசயமும் திகைப்பும் அவற்றின் ரேகைகளைப் பதித்தன.

நம்ப முடியவில்லை என்று அவன் சொல்லிக் கொண்டாலும், அவனால்
நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்றென்றோ நடந்த நிகழ்ச்சிகள் யாவும்
அவன் மனக்கண்ணில் இப்போது மீண்டும் தோன்றி வட்டமிட்டன. முன்பு
அவனால் உணர்ந்து கொள்ள முடியாத உண்மை களெல்லாம் இன்று
தெளிவாகப் பளிச்சிட்டன.

முதன்முறை ஈழநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பாகக் கொடும்பாளூர்த்
தோட்டத்தில் அருள்மொழியை அவன் தனிமையில் சந்தித்திருக்கிறான்.
அதற்கு முன்பு எத்தனையோ முறைகள் அவர்கள் சந்தித்திருந்தாலும்,
அன்றுபோல் முன்பெல்லாம் அவள் அவனிடம் பரிவு காட்டிப் பேசியதில்லை. வீரத்துடன் விவேகமும் வேண்டுமெனச் சுட்டிக் காட்டுகிறாள். போர்க்களத்தில் வீரமரண மெய்துவது பெரிதல்ல, வெற்றியுடன் திரும்புவதே பெரிதென வாதாடுகிறாள். ஓர் உயிரின் மேல் மற்றொரு உயிர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றுதலுக்கு என்ன பெயர்?

அடுத்தாற்போல், அருள்மொழி இளங்கோவின் நெற்றியில்
வீரத்திலகமிட்டு அவனைப் போருக்கு அனுப்பி வைக்கிறாள். திலகமிடும்போது
அவளுடைய மென்விரல் ஏன் இப்படி நடுங்குகிறது? அந்த நடுக்கத்துக்கு
என்ன பெயர்?

அவையெல்லாம் இருக்கட்டும், திரும்பி வந்த பிறகு, பழையாறையில்
அவனுடைய விழுப்புண்ணுக்காகத் தானே மருந்து அரைத்துக் கொடுத்தாளே,
அதன் காரணமென்ன? சித்த வைத்தியர் செய்ய வேண்டிய பணியின் மேல்
நங்கையாரின் சித்தம் சென்றது எதற்காக?

இன்னும் அருள்மொழி தன் தந்தையாரையே எதிர்த்துத் தனக்காக
வாதாடியது, சிறைக் கதவின் முன்பாக மயங்கி விழுந்தது, பெற்ற
தாயைப்போல் தனக்குச் சிறைக்குள்ளே உணவளித்தது, இவ்வளவையும்
எண்ணிப் பார்த்தான் இளங்கோ.

இவ்வளவுக்கும் மேலாகத் தோன்றிய ஒரே ஒரு காட்சி மட்டிலும்
அவனைப் புல்லரிக்க வைத்து, உலுக்கி எடுத்து விட்டது. நடுச்சாமத்தில்
சிறைக்கு ரோகிணியைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டுவந்து,
அவளிடம் பரிவு காட்டச் சொல்லித் தன்னிடம் மன்றாடினாளே, அதைக்
காண்பதற்கே அவனது மனக்கண்கள் கூசின.

காதல் என்பது புனிதமான உயர்ந்த உணர்வென்றால் காதலுக்காகக்
காதலையே தியாகம் செய்யும் உணர்வுக்கு என்ன பெயர்?

நினைவுச் சுழல்களிலிருந்து விடுதலை பெற விரும்பியவன் போல்
சட்டென்று இளங்கோ உப்பரிகைச் சுவரின் விளிம்பருகே சென்று சாய்ந்தான்.
அந்தச் சுவருக்கு நேர் எதிரே கீழ்ப்புறத்திலிருந்து அருள்மொழியின் அறையில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. சாளரத்தின் வழியே தென்பட்ட உருவத்தைக் கண்ணுற்றான். கண்கள் இமைப்பை மறந்து விட்டன.

அருள்மொழி தனது முடியை அலங்கரித்திருந்த அணிகலன்களை
ஒவ்வொன்றாகக் கழற்றி மஞ்சத்தில் வீசினாள். அளகபாரம் கார்மேகம்போல்
கீழே படர்ந்து தொங்கியது. சற்றுநேரம் சாளரத்தின் வழியே இருளை
ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சரேலெனச் சென்று மஞ்சத்தில் விழுந்தாள்.
அவளுடைய பொன்னான மெல்லுடல் புயலில் அகப்பட்ட மலரைப்போல்
குலுங்கிக்கொண்டே இருந்தது.

காதலுக்காக அவள் காதலையே தியாகம் செய்துவிட்டவள் என்று
நம்பிய இளங்கோவுக்கு, சாளரத்தின் வழியே அவன் கண்ட காட்சி
ஏமாற்றத்தையே அளித்தது. காதலுக்காக உயிரையே தியாகம் செய்துவிடலாம்;
ஆனால் காதலை மட்டிலும் கொடுத்துவிட முடியாது போலும்.

உப்பரிகையிலிருந்து கொண்டே வெகு தூரத்திலிருந்த
அருள்மொழியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனக்குள் பேசத்
தொடங்கினான் இளங்கோ.

“நங்கையாரே! ஒருவேளை, நான் ரோகணத்துக்குப் புறப்படுவதற்கு
முன்னால் உங்கள் மனத்தின் இரகசியம் எனக்குத் தெரிந்திருந்தால் நான்
ரோகிணியிடம் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ தெரியாது. என்
மனத்தால்கூடத் தொடுவதற்கு முடியாத தொலைவில் நீங்கள் இருந்தீர்கள்.
ஆனால், இப்போது காலம் கடந்துவிட்டது. எனக்காக ரோகிணி எதையுமே,
யாரையுமே துறந்துவிடச் சித்தமாகி விட்டாள். உற்றம், சுற்றம், தாய், தந்தை,
உயிருக்குயிரான சகோதரன் யாவரையுமே மறந்து விட்டாள்...என்னை
மன்னித்துக் கொள்ளுங்கள், நங்கையாரே! என்னால் இனிமேல் ரோகிணியை
மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.’’

தழுதழுத்த குரலில் அவன் புலம்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில்,
அவனுக்கு மறுமொழி கூறுவது போலவே அருள்மொழியும் குமுறலானாள். “உங்களை என்னால் மறக்க முடியவில்லையே, இளவரசே! உலகத்தின்
முன்னிலையில் எவ்வளவுதான் என்னை மறைக்க முயன்றாலும்
என்னிடமிருந்து என்னை மறைத்துக்கொள்ள முடியவில்லையே?’’ என்று
தேம்பினாள்.

அங்கு வீசிக்கொண்டிருந்த அரண்மனைத் தென்றலுக்கு அணுவளவும்
கருணை இல்லை. இருந்திருந்தால் அது இருவருடைய சொற்களையும்
இப்படித் தானே விழுங்கி, ஒருவரிடமிருந்து ஒருவரை விலக்கியிருக்காது.

அரண்மனையின் மற்றொரு பகுதியான பெரிய வேளாரின் கூடத்தில்
அப்போது வல்லவரையரும் பெரிய வேளாரும் அருகருகே அமர்ந்து
உரையாடிக் கொண்டிருந்தனர். முன்பு வல்லவரையர் தம்மிடம் இரகசியமாகக்
கூறிய செய்தியை அவருக்கு நினைவுபடுத்தி, அதைப்பற்றி விளக்கமாகப்
பேசினார் பெரிய வேளார்.

“ஐயா! இளங்கோவைப் பற்றிச் சக்கரவர்த்திகளின் கருத்து
எப்படியிருக்கக்கூடும் என்று முன்பு என்னிடம் தெரிவித்தீர்களல்லவா? நானும்
அதை நன்றாக யோசித்துப் பார்த்தேன். சக்கரவர்த்திகள் எதையுமே ஆழ்ந்த
சிந்தனைக்குப் பிறகுதான் செய்யக்கூடியவர்கள். ஆகவே அவர்களுடைய
விருப்பத்துக்கு இசைந்து விடுவதே நல்லதென்று எனக்கு தோன்றுகிறது’’
என்று கூறினார் பெரிய வேளார்.

“சக்கரவர்த்திகள் என்னிடம் முடிவாக எதையும் கூறிவிடவில்லை.
நானாக யூகித்துச் சொல்கிறேன்’’ என்றார் வந்தியத் தேவர்.

“அதனால் என்ன? தங்கள் யூகம் சரியாகத்தான் இருக்கவேண்டும்.
சக்கரவர்த்திகளின் ராஜதந்திர உறவுக்காக அந்த ரோகணத்துப் பெண்ணை
நான் மருமகளாக ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றால் அதற்கொன்றும் தடை
கூறவில்லை. ஆனால் இந்தப் புதிய உறவுக்காக நாங்கள் எங்களுடைய
பரம்பரை உறவையும் விட்டுவிட முடியாது. ஏகதார விரதம் என்பது
அரசகுலத்தவர்களாகிய நமக்கு முக்கியமானதல்லவே? அதனால்தான் ரோகிணியையும் நங்கையாரையும் இளங்கோவுக்கு ஒன்றாக மணம் முடிப்பதில் தவறில்லை என்கிறேன். ஆனால் அதிலும் ஆலோசனைக்குரிய விஷயம் ஒன்றிருக்கிறது.’’

“என்ன?’’

“நங்கையார்தான் கொடும்பாளூர்ப் பட்டத்தரசியாக விளங்கவேண்டும்.
இளங்கோவுக்குப் பிறகு இளவரசப் பட்டத்துக்குரியவன் நங்கையாருக்குப்
பிறக்கும் குழந்தையாக இருக்க வேண்டும்.’’

“இப்போது இதற்கெல்லாம் அவசரம் ஒன்றுமில்லை. இடையில் இன்னும்
எத்தனையோ காரியங்கள் நடைபெற வேண்டியிருக்கின்றன’’ என்றார்
வல்லவரையர் வந்தியத்தேவர்.

“எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் அதோடு இதற்காக வேண்டிய
சூழ்நிலைகளையும் நாம் உருவாக்க வேண்டுமல்லவா! மன்னர் மகிந்தருடன்
இனி நான் சிரித்துப் பழகிக் கொள்ள வேண்டும். எப்போதாவது அவர்
குடும்பத்தைக் கொடும்பாளூருக்கு அழைத்துச் சென்று அவர்களை
விருந்தினர்கள் என்ற முறையில் கௌரவிக்க வேண்டும். அரண்மனைப்
பெண்டிரையும் இந்த ஏற்பாட்டிற்கு வளைந்து கொடுக்கச் செய்ய வேண்டும்.’’

“இவ்வளவு காரியங்களையும்கூட நாம் எளிதில் செய்து விடலாம்.
ஆனால் இளங்கோவோ, அருள்மொழியோ இதற்கு எப்படி இணங்கி
வருவார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?’’ என்று கேட்டார் வந்தியத்தேவர்.

“அவர்கள் என்ன இணங்கி வருவது? சக்கரவர்த்திகள் வந்த பிறகு
நாமாகச் சேர்ந்து முடித்து வைக்கவேண்டியதுதான்’’ என்றார் பெரிய வேளார்.

வல்லவரையர் இதற்கு ஏதும் மறுமொழி கூறவில்லை. அரண்மனைத்
தென்றல் இதையும் கேட்டுக் கொண்டு அசையாமல் நின்றது.

தொடரும்

Wednesday, January 30, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 19. இருளில் ஒளி

பாகம் 3 , 19. இருளில் ஒளி 


நரேந்திரனுக்காக அருள்மொழியிடம் தூது சென்ற அம்மங்கை தேவி,
தன் தமக்கையின் மறுமொழியைக் கேட்ட பிறகு, அவளுடன் பழகுவதையே
நிறுத்திக் கொண்டாள். முன்பு, சோழபுரத்தில் நரேந்திரன் அவளிடம் தூது
சொல்லிய போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அருள்மொழியால் ஏற்பட்ட
அதிர்ச்சிக்கு முன் அற்பமானதுதான்.

‘தமக்கையார் நரேந்திரனிடம் நேரில் பேசுவதாகச் சொல்கிறார்களே,
இதற்கு என்ன பொருள்? கொடும்பாளூர் இளவரசருக்குத் தமது மனத்தில்
இடமில்லை என்கிறார்களே, இதற்கு என்ன பொருள்? இந்த இரண்டு
செய்திகளையும் சேர்த்துப் பார்த்தால் அதன் முடிவை என்னால் புரிந்து
கொள்ள முடியாதென்று நினைக்கிறார்களா? தமக்கையாரும் நரேந்திரருமே
நன்றாகப் பேசிக்கொள்ளட்டும்! இவர்களை யார் வேண்டாமென்று தடை
செய்கிறார்கள்? இடையில் நான் ஒருத்தி எதற்குத் தூதுபோய்ப் பலியாக
வேண்டும்?’

இப்படியெல்லாம் நினைத்துத் தவிப்புற்ற அம்மங்கை ஒரு நாள்
நரேந்திரனின் தொல்லை பொறுக்காமல், “நங்கையாரிடமே நேரில்
கேட்டுக்கொள்ளுங்கள்! என்னிடம் எதையுமே வெளியிட மாட்டார்கள்!’’
என்று அழுகையும் ஆத்திரமாகக் கூறிவிட்டாள். அருள்மொழியைச் சந்தித்த
விவரத்தை அவனிடம் தெரிவிக்கவில்லை. சோழபுரத்தில் தூது செல்வதாக ஒப்புக்கொண்டவள் தஞ்சைக்கு வந்தவுடன் திடீரென்று மாறிப்போனதை நரேந்திரனால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. முன்பெல்லாம் கலகலவென்று பேசிச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்த அம்மங்கை இப்போது அவனிடமே எரிந்து விழத் தொடங்கினாள். எதிர்பாராத சந்திப்புக்களின்போது கூட அவள் முகத்தைச் சுளித்துக்கொண்டு விலகிச் சென்றாள்.

ஆகவே, இனி அம்மங்கையை நம்பிப் பயனில்லை என்று கண்ட
நரேந்திரன், தானே அருள்மொழியை அணுக நினைத்தான். ஆசை மிகுதியாக
அச்சமும் அதிகரித்தது. பலமுறை அந்தப்புரத்துக்குச் சென்று
அருள்மொழியின் கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டிடு, உள்ளே நுழையும்
துணிவின்றித் திரும்பினான்.

கடைசியாகத் துணிவை வரவழைத்துக்கொண்டு சென்றபோது அங்கே
அருள்மொழியும் சில பணிப் பெண்களுமாகச் சேர்ந்து இளங்கோவுக்குப்
பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள். இளங்கோ சிறைப்பட்டிருந்ததோ,
சிறை மீண்டதோ நரேந்திரனுக்குத் தெரியாதாகையால், பாண்டிய
நாட்டிலிருந்து திரும்பியதாக நினைத்துக் கொண்டான்.

அருள்மொழி அன்று பகல் இளங்கோவை உபசரித்துக்
கொண்டிருந்தபோது, அவள் கண்களிலிருந்து எந்த இரகசியத்தை
இளங்கோவால் காண முடியவில்லையோ அதை நரேந்திரன் கண்டுவிட்டான்.
‘கொடும்பாளூர்க்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்’ என்று தனக்குள் கூறிக்
கொண்டே திரும்பினான். ஆனால் அதே கொடும்பாளூர்க்காரனையும்
ரோகணத்து இளவரசியையும் அடுத்தாற்போல் ஒன்றாகப் பார்த்தபோது
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இந்த நிலையில்தான் அருள்மொழியே நரேந்திரனைத் தேடிக்கொண்டு
வந்து சேர்ந்தாள். அவளைக் கண்டபோது நரேந்திரனுக்கு ஏற்பட்டது
ஆனந்தமா, அச்சப் பரபரப்பா என்று கூற முடியாது.

“அம்மங்கை தேவி உங்களிடம் வந்து என் மறுமொழியைச்
சொல்லியிருப்பாள். அதன்படி நேரில் வந்து சந்திப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். வெகு நாட்களாகி விட்டன...’’ என்று தொடங்கினாள்
அருள்மொழி.

“உங்களைச் சந்தித்ததாகவே என்னிடம் அம்மங்கை கூறவில்லையே!’’

அருள்மொழி அதன் காரணத்தை யூகித்துத் தனக்குள்ளாகவே
சிரித்துக்கொண்டாள்.

“அவள் கூறாவிட்டால் போகட்டும்; இப்போது நானே வந்துவிட்டேன்.’’

அவளிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று புலப்படாமல்
தவித்துக் கொண்டிருந்த நரேந்திரனிடம் அவள் தன் தங்கையின் பொருட்டுத்
தூது வந்திருப்பதாகக் கூறினாள். “அம்மங்கை அனுப்பவில்லை; ஆனால்
அவள் மனத்தைத் தெரிந்துகொண்டு நானே வந்திருக்கிறேன்’’ என்றாள்.

இவ்வாறு அருள்மொழி தன் தங்கைக்காகப் பரிந்து பேசிக்
கொண்டிருந்தபோதுதான் அந்த வழியே சென்ற இளங்கோ தாழ்வாரத்தின்
ஓரமாகத் தயங்கி நின்றான். இருளில் அவன் மறைந்திருந்ததால் மற்றவர்கள்
அவனைக் கவனிக்கவில்லை.

அருள்மொழி நரேந்திரனிடம் தன் தங்கைக்காக உருக்கத்தோடு
பேசினாள்.

“இளவரசே! பெண்களாகிய எங்கள் மனத்தை தெரிந்து கொள்வதுதான்
கடினமென்று உலகம் சொல்கின்றது. ஆனால், எங்களைவிட ஆண்களாகிய
உங்களைத்தான் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுடன் ஒரு
பெண் பேசுவதிலிருந்து, உங்களிடம் அவள் பழகுவதைக் கொண்டு, உங்களை
அவள் உபசரிப்பதிலிருந்து உங்களால் அவளைப் புரிந்துகொள்ள முடியாதா?
உங்களை அவள் எந்தக் கண்களால் பார்க்கிறாள் என்று கூடவா நீங்கள்
உணர்வதில்லை? பெண்கள் தங்கள் மனத்தில் இருப்பதை வாய் திறந்து
என்றாவது கூறுவார்களா?’’

வெளியே நின்றுகொண்டிருந்த இளங்கோ திகைப்புற்றான். அவன்
உள்ளத்தில் ஏற்பட்ட பரபரப்பு அவன் தலையைச் சுற்ற வைத்தது.

அருள்மொழியோ நரேந்திரனிடம், “இளவரசே! நீங்கள் தஞ்சைக்கு
வந்ததிலிருந்து உங்களது நிழலாகவே தொடர்ந்து வரும் அம்மங்கையை
நீங்கள் அறிந்துகொள்ள வில்லையா?’’ என்று கேட்டாள். “அவள் என்ன,
இன்னுமா விவரந் தெரியாத சிறுமி? அவளிடம் எப்படித்தான் உங்களுக்கு
என்னைப் பற்றிச் செய்தி கூற முடிந்ததோ, தெரியவில்லை’’ என்றாள்.

வேங்கி இளவரசன் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். ஆனால்
அவன் உள்ளம் கொதிப்படைந்து கொண்டிருந்தது. ‘இதையெல்லாம்
என்னிடம் வந்து கூறுவதற்கு இவர்கள் யார். தமக்கு விருப்பமில்லையென்றால்
அதை மட்டும் கூறிவிட்டுப் போகலாமே!’

“நீங்கள் ஒரு நாட்டு இளவரசராக இருக்கிறீர்கள். பற்பல
போர்க்களங்களைக் கண்டிருக்கிறீர்கள். பலரோடு பழகி, பலரைத்
தெரிந்துகொண்டு பாராளப் போகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு
உங்களுக்காகவே வளரும் ஒரு பெண்ணின் மனமா தெரியவில்லை?’’

“இளவரசியார் எனக்கு இவ்வளவு தூரம் அறிவுரை கூறிய பிறகு, நானும்
சில விஷயங்களைக் கூறவிரும்புகிறேன்’’ என்றான் நரேந்திரன்.

“என்ன?’’

“நங்கையாரின் மனம் என்னை மறுப்பதற்குக் காரணம் இருக்கிறது.
அங்கே கொடும்பாளூர் இளவரசர் குடியிருக்கக் கூடும் என்று முன்பே நான்
ஐயமுற்றேன். அந்த ஐயம் நான் தஞ்சைக்கு வந்தவுடனேயே உறுதிப்
பட்டுவிட்டது. இன்று பிற்பகலில்தான் அது ஐயத்துக்கே இடமில்லாத உண்மை
என்பதையும் கண்டுகொண்டேன். தங்களுடைய அந்தப்புரத்தில் கொடும்பாளூர்
இளவரசர் கொலுவீற்றிருந்தபோது அவருக்கு நடந்த உபசரிப்புகள் என்
கண்களைத் திறந்துவிட்டன இளவரசி!’’

காவலனால் கைப்பற்றப்பட்ட கள்வனின் நிலை இப்போது
அருள்மொழிக்கு. தன் தங்கையிடம் அதை மறுத்துக் கூறிய அதே துணிவு
ஏனோ அவளுக்கு நரேந்திரன் முன் ஏற்படவில்லை. “இல்லை இளவரசே... தங்களது ஐயம் தவறானது... அப்படி ஒன்றும் இல்லை!’’ அருள்மொழி தடுமாறினாள்.

அருள்மொழியின் தடுமாற்றத்தைத் தன் வாழ்நாளில் முதன் முறையாக
கண்ணுற்றான் இளங்கோ.

நரேந்திரனோ அவளது தடுமாற்றத்தால் துணிவு பெற்று மேலே
பேசினான். “நங்கையாரே! நாமெல்லோரும் உற்றார் உறவினர்கள்.
அதனால்தான் நீங்கள் அம்மங்கையைப் பற்றி என்னிடம் உரிமையோடு
பேசுகிறீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு முன்பு, பிற்பகலில்
தங்கள் கூடத்தில் இளங்கோவைப் பார்த்தவுடனேயே நான் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டேன். கொடும்பாளூர்க்காரர்கள் பாக்கியம் செய்தவர்களே! அதனால்,
தங்களை மணக்க முடியும் என்றிருந்த ஆசையை அப்போதே
களைந்துவிட்டேன். காரணம். அவர் அங்கேயிருந்தது மட்டிலுமல்ல!
தங்களுடைய கண்களில் அவருக்காகச் சுடர்விட்ட கனிவைக் கண்டு
விட்டேன்.’’

“போதும், இளவரசே’’ திரும்பிச் செல்ல முயன்றாள் அருள்மொழி.

“ஒரே ஒரு கணம் நின்று விட்டுச் செல்லுங்கள். நீங்கள் யோசனை
செய்து பார்க்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. தங்களது
பணிவிடைகளையும் உபசரிப்பையும் பெற்றுக் கொண்டு அவர் நேரே எங்கு
சென்றார், தெரியுமா? ரோகணத்து இளவரசியைக் காண...’’

“இளவரசே! எனக்கு எல்லாமே தெரியும். நீங்கள் ஒன்றுமே
கூறவேண்டாம். நான்தான் அவரை அங்கு அனுப்பி வைத்தேன்!’’ என்றாள்.

வெளியில் நின்ற இளங்கோ, கால்கள் தடுமாறத் தூணில் சாய்ந்தான்.

“தெரியுமா? உங்கள் மனத்தில் குடியிருப்பவரையா நீங்களே வேறு
பெண்ணிடம் அனுப்பி வைக்கிறீர்கள்? இதை என்னால் நம்ப முடியவில்லை! அரண்மனையில் மற்றவர்களுக்கு இது தெரியுமா?’’

“இப்போது தெரியவேண்டாம், காலம் வரும்போது தெரிந்து
கொள்வார்கள். அப்போது யாரும் அவர்களைத் தடை செய்யவும்
மாட்டார்கள்.’’

“அதுவரையில் நான் பொறுத்திருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி உங்கள் தங்கைக்காக என்னிடம் வந்தீர்களோ. அதே போல் நான் உங்களுக்காக என் தமையனாரிடம் செல்கிறேன். என்ன இருந்தாலும் இளங்கோ எனக்குத் தமையனார் முறை உள்ளவர்தாமே?’’

“வேண்டாம் இளவரசே! வேண்டவே வேண்டாம். எனக்கு அதன் மூலம்
ஒரு போதும் நன்மை செய்ய முடியாது! அவருடைய இன்பத்தைக் கெடுத்தால்
அது என் அமைதியைக் குலைத்துவிடும். நீங்கள் அவரிடம் போகவும்
வேண்டாம்; ஒன்றும் கூறவும் வேண்டாம். நீங்கள் எனக்குச் செய்யும்
பேருதவி-எதையுமே யாரிடமும் கூறாதிருக்கும் உதவிதான்!
அம்மங்கையிடம்கூட உங்களை மறந்து எதையும் சொல்லிவிட வேண்டாம்,
நான் வருகிறேன்.’’

அருள்மொழி தேவியார் வெளியில் வருவதற்குள், அரண்மனைக்கு
வெளியே சூழ்ந்திருந்த இருள் இளங்கோவை விழுங்கி விட்டது.

தொடரும்


இலங்கையில் சோழர் ஆட்சி

இலங்கையில் சோழர் ஆட்சி


பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.

கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.
ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது இளவரசனான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர்
றுகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான்.காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது. இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது.

தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.
விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான் .

பொலனறுவை மீதான விஜயபாகுவின் மும்முனைத் தாக்குதல்
கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருகுணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலதிகப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது. கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது.


Tuesday, January 29, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 18. தந்தையும் தனயனும்

பாகம் 3 , 18. தந்தையும் தனயனும்


சரக்கொன்றை மரத்தடியை விட்டு இளங்கோவும் ரோகிணியும் பிரிந்து
செல்லும்போது, வானத்தில் கண்ணிமைத்த மீன்களைப்போல் அவர்கள்
உள்ளத்தில் பற்பல இன்பக் கற்பனைகள் பூத்துச் சொரிந்தன. ரோகிணியை
அவளுடைய மாளிகைக்கு அனுப்பிய இளங்கோ தன் குதிரையைத்
தேடிக்கொண்டு வந்தான். பொழுது நன்றாக இருட்டிவிட்டது. இருளில் யாரோ பேசும் குரல் கேட்டதால், சற்றே தயங்கி நின்று உற்றுக்
கவனித்தான் இளங்கோ. குதிரையுடன் மாங்குடிமாறன் ஏதோ அந்தரங்கமாகப்
பேசுவது தெரிந்தது.

அதன் பிடரியைத் தடவிக்கொண்டே, “இதோ பார்! இளவரசரைச்
சுமந்து கொண்டு நீ முதன்முதலில் இங்குதானா வரவேண்டும்? உனக்கு வேறு
வழியே தெரியவில்லையா?’’ என்று கேட்டான் மாறன். “எந்தக் குற்றத்திற்காக
அவர் சிறைக்குச் சென்றாரோ, அதே குற்றத்தைச் சிறையிலிருந்து மீண்டவுடன்
தொடங்கிவிட்டாரே! அவருக்குத்தான் ஆத்திரமென்றால் உனக்குக் கூடவா
தெரியவில்லை? இனிமேல் நாம் இருவரும்தான் அவரைப் பாதுகாக்க
வேண்டும். என்ன நான் சொல்வது விளங்குகிறதா?’’

பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டே தலையை ஆட்டி வைத்தது
குதிரை. மாறனோ அதை முகத்தோடு முகம் தோய அணைத்துக் கொண்டான்.

இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது இளங்கோவின் சிரிப்பொலி.

“குதிரையோடு என்ன சல்லாபம்? நீ எங்கே வந்தாய்?’’

“தாங்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோதே வந்தேன். எனக்கு
முன்னால் ரோகணத்து இளவரசியார் தங்களை வளைத்துக் கொண்டு
விட்டார்கள். சிறையிலிருந்து மீண்ட தங்களை அவர்கள் மீண்டும்
சிறைப்படுத்திக் கொண்டு போகவே எனக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை.’’

“அப்போதிருந்தே இங்கே என்ன செய்து கொண்டிருந்தாய்?’’

“என்ன செய்து கொண்டிருந்தேன்? ராமபிரானும் சீதாப்பிராட்டியும்
தனித்திருந்த போது இளையபெருமான் என்ன செய்து கொண்டிருந்தாரோ,
அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்-காவல் காத்திருந்தேன்; யாரும் இந்தப்
பக்கம் வராதபடி திருப்பிவிடப் பார்த்தேன்.’’

சிறிது அச்சத்தோடு, “யாரேனும் இங்கு வந்தார்களா?’’ என்று கேட்டான்
இளங்கோ.

“தங்களது தந்தையார் பெரிய வேளாரைத் தவிர வேறு யாரும் இந்தப்
பக்கம் வரவில்லை. அவர்களைக் கண்டவுடன்...’’

“என்ன?’’

“ஆமாம், அவர்களைக் கண்டவுடன் இளையபெருமாளாக நின்றவன்
மாரீசனாகி மறைந்தே போனேன். பிறகு என்ன நடந்ததோ தெரியாது.
அப்போது நின்று போன மூச்சு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறது.’’

மாறனிடமிருந்து வேறு செய்திகள் கிடைக்காமல் போகவே, “இதுதான் நீ
காவல் காத்த இலட்சணம்? குதிரையை அழைத்துக் கொண்டு போய்க்
கட்டிவிடு’’ என்று கூறினான் இளங்கோ. மனக் குழப்பத்தைத் தணித்துக்
கொள்வதற்காகப் புல்வெளியில் அமர்ந்தான். ‘தந்தையாரின் முகத்தில் எப்படி
விழிப்பது?’

பின்னர் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு, தந்தையாரின் கண்களில்
படாமல் அரண்மனைக்குள் அவன் நுழைந்தபோது அவன் தந்தையின் குரல்
அவனை அழைத்தது.

“எங்கே போயிருந்தாய் இளங்கோ?’’ என்று கேட்டுக் கொண்டே
அவனை நெருங்கி வந்தார் பெரிய வேளார். “மாலையிலிருந்து உன்னைக்
காணவில்லையே? வா! உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப்
பேசவேண்டும்.’’

தோள்மீது கரம் போட்டு அவனைத் தமது கூடத்துக்குக் கூட்டிச்
சென்றார் பெரிய வேளார். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் வியர்த்துக்
கொட்டியது இளங்கோவுக்கு. அவனைத் தமது அருகிலேயே ஆசனத்தில்
அமரச் செய்து அவனோடு பேசலானார்.

அவருடைய குரலில் கனிவையும் பேச்சின் இனிமையையும்
இளங்கோவினால் நம்ப முடியவில்லை. பெரியவேளார்தாமா அவர்!

“நடந்ததையெல்லாம் அடியோடு மறந்துவிடு. சக்கரவர்த்திகளும் சாமந்த
நாயகரும் உனக்கு என்ன கட்டளையிட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத்
தெரியாது. என்னிடம் அவர்கள் முன்பே கூறியிருக்கலாம். கூறியிருந்தால் நான்
உன்னைத் துன்புறுத்தியிருக்க மாட்டேன்’’ என்றார்.

குனிந்த தலை நிமிராமல், “தங்களுடைய கடமையைத் தாங்கள்
நிறைவேற்றியிருக்கிறீர்கள். எனக்கு அதனால் சிறிதும் வருத்தமில்லை’’
என்றான் இளங்கோ.

“ஆமாம், நீ உன் கடமையைச் செய்திருக்கிறாய்; நான் என் கடமையைச்
செய்திருக்கிறேன். இடையில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; அவ்வளவுதான்.’’

அத்துடன் அங்கிருந்து எழுந்து, அவரிடமிருந்து தப்பிவிடப் பார்த்தான்
இளங்கோ. அவர் அவனை விடுவதாக இல்லை. ஏதேதோ சுற்றி வளைத்துப்
பேசிவிட்டு, பிறகு “ஆனைமங்கலம் மாளிகைக்கு அன்று வேற்றுருவில்
வந்துபோன இருவர் யாரென்று உன்னால் ஊகிக்க முடியுமா?’’ என்று
கேட்டார். “அமைச்சர் கீர்த்தியும் இளவரசன் காசிபனுமாக
இருக்கக்கூடுமென்பது என் எண்ணம்’’ என்றும் கூறினார்.

ரோகிணியைப்பற்றி எங்கே கேட்டுவிடப் போகிறாரோ என்று தவித்துக்
கொண்டிருந்த இளங்கோ, இதனால் அச்சம் தவிர்த்தான்.

“அமைச்சர் கீர்த்தி எங்கும் நேரடியாகச் செல்வதோ எதிலும்
நேரடியாகக் கலந்து கொள்வதோ இல்லை என்று தெரிகிறது. யாரையுமே
பின்னால் நின்று இயக்கும் சூத்திரதாரி அவர். அன்றைக்கு ஆனைமங்கலம்
மாளிகைக்கு காசிபன் வந்திருந்தது உண்மை. ஆனால் அவனுடன் அமைச்சர்
வரவில்லை.’’

“ஒற்றன் கூறினானே!’’ என்றார் பெரிய வேளார். “ஒற்றர்களும் தவறு
செய்யக்கூடும். சிற்சில இடங்களில் மறைந்திருந்து பார்த்து, சிற்சில
இடங்களுக்குச் சென்று மற்றவைகளை அவர்களாகவே தொடர்பு
ஏற்படுத்திக்கொண்டு சொல்வதும் உண்டல்லவா?’’

“ஆமாம், உன் விஷயத்தில் அப்படித்தான் நடந்துவிட்டது’’ என்று
ஒப்புக்கொண்டார் வேளார்.

“அப்படியென்றால் உடன் வந்தவன் யார்?’’*

“வீரமல்லன்!’’

திடுக்கிட்டார் பெரிய வேளார்.

“ஆமாம். எவன் இறந்து விட்டானென்று தாங்கள்
நம்பிக்கொண்டிருந்தீர்களோ, அவனேதான் வந்திருக்கிறான். அவனுடைய
இறந்துபோன உடலில் தலை இருந்ததா? அந்த உடலையாவது தாங்கள்
நன்றாகப் பரிசீலனை செய்து பார்த்தீர்களா? வீரமல்லன் உயிரோடிருக்கிறான்.
பாண்டியர் பக்கம் சேர்ந்துகொண்டு மகிந்தரையும் கலைக்க முயற்சி
செய்திருக்கிறான். அதற்குள் நாம் தலையிட்டுவிட்டோம். அந்தப் பெண் தனது
தம்பியை நான் கொல்ல வருவதாக நினைத்து என்னைத் தடுத்திருக்காவிட்டால்.
கட்டாயம் இருவரும் அகப்பட்டிருப்பார்கள்; நானும் தவறு செய்திருக்கிறேன்.
தப்பியோட விட்டது தவறுதானே?’’

“இல்லவே, இல்லை! உன்னைவிட நான்தான் பெருந்தவறு
செய்திருக்கிறேன். அற்பத்திலும் அற்பமான ஒரு படைவீரன் என்
கண்ணெதிரிலேயே என்னை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறான்; அவனுடைய
தந்திரம் என்னிடம் பலித்து விட்டது! இதுவே பெருந்தவறு!’’ என்று பெரிய
வேளார் குமுறினார்.

தங்கள் தங்கள் கடமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்த தந்தையும்
தனயனும் இப்போது தங்கள் தங்கள் தவறுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
பெரிய வேளார், எதிரில் இருந்த இளங்கோ தமது குமாரன் என்பதையும்
மறந்து அவனிடம் தமது குறைகளை ஒப்புக்கொண்டார்.

“இளங்கோ! அவன் உயிருடன் இருப்பதை நீதான் கண்டுபிடித்து
என்னிடம் சொல்லியிருக்கிறாய். இனி எப்படியாவது நாம் இருவருமே
அவனைத் தேடிக்கொண்டு வருவதற்கு முயலவேண்டும். அதுவரை இந்த
விஷயம் வேறு யாருக்குமே தெரியாமலிருப்பது நல்லது.’’

அத்துடன் அவர் நிறுத்தாமல், “இந்தச் செய்திகளைல்லாம் உனக்கு
அந்தப் பெண்ணிடமிருந்து கிடைத்தன போலும்; அப்படித்தானே!’’

நாணத்துடன் இளங்கோ சிரிக்க முயன்றான்.

“இனி உன் விவேகத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது இளங்கோ!
அவளுடன் நீ பழகுவதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் பெண்களிடம்
எப்போதும் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம்.’’

முன்னொரு நாள் நாகைக் கடற்கரையில் மாங்குடிமாறன் இளங்கோவைத்
தோளில் சுமந்துகொண்டு கூத்தாடினானல்லவா? அதேபோல் இப்போது
இளங்கோவுக்குத் தன் தந்தையைச் சுமந்துகொண்டு கூத்தாட வேண்டும் என்று
தோன்றியது. ‘அவரைப்போய் முரட்டு வேளார்’ என்று கூறுகிறார்களே, இவரா
முரடர்?’

தந்தையாருக்கு என்ன பதில் அளிப்பது என்று விளங்காமல்
திக்குமுக்காடிப் போனான் இளங்கோ.

அவர் அவன் அருகில் இன்னும் சற்று நெருங்கி வந்து கூறலானார்:
“பெண்களுக்கு விவேகமிருப்பதாகச் சொல்கிறார்களே இதில் எனக்கு
நம்பிக்கையே கிடையாது. அதனால் நீ எந்தப் பெண்ணையும் விவேகி என்று
நினைத்துப் பிரமிப்படைந்துவிட வேண்டாம். பெண்கள் என்றால் பெண்கள்!
அவ்வளவுதான்! அவர்கள் நமக்காகப் பிறந்தவர்கள். எதற்காக இவ்வளவும்
கூறுகிறேனென்றால், நீ உன் விவேகத்தினால் அந்த ரோகணத்துப் பெண்ணை
உன் பக்கம் வளைக்க வேண்டும். ஆனால் அவள் பக்கம் வளைந்து
கொடுத்து விடாதே.’’

இளங்கோவுக்கு அங்கு மேலும் இருக்கப்பிடிக்கவில்லை. மெதுவாக
எழுந்து வெளியே வந்தான். வெளியுலகத்துக்கு வீரராகவும் அந்தப் புரத்தில்
தன் அன்னையாருக்கு அடங்கியவராகவும் இருந்த அவர் கூற்று அவனுக்கு
விந்தையாகத் தோன்றியது.

ஆனால், பெரிய வேளார் அவனிடம் ரோகிணியைப் பற்றிப் பேசுவதாக
எண்ணிக்கொண்டே அருள்மொழியைப் பற்றிய எண்ணங்களை அவனுள்ளே
கிளறிவிட்டுவிட்டார்.

‘விவேகத்தைப்பற்றி நங்கையார் பலமுறை பேசியிருக்கிறாரே! ஆனால்
அவர் பேசிய பேச்சுக்களுக்கும் சிறைப்பட்டபோது மயங்கி விழுந்ததற்கும் தொடர்பே இல்லையே! என்மீது கொண்ட அன்பால்,
பாசத்தால் பற்றுதலால் அவருக்கு விவேகம் பிறந்திருக்குமா? அப்படியானால்
நங்கையாருக்கும் ரோகிணிக்கும் வேற்றுமையே கிடையாது.’

மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்த உணர்வோடு இளங்கோ தாழ்வாரத்தில்
நடந்தான். மேற்கு மூலையில் இருந்த நரேந்திரனின் அறையைத் தாண்டும்
வேளையில் அதற்குள் அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது.
தன்னை மறந்து நின்று விட்டான்.

தொடரும்Monday, January 28, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 17. இருவரில் ஒருவர்

பாகம் 3 , 17. இருவரில் ஒருவர் 


கண்ணிமைக்காது தன்னையே விழித்து நோக்கிய இளங்கோவைப்
பார்த்து, “என்ன யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள்
ரோகிணி.

இளங்கோவின் சிந்தனை கலைந்தது. “உன்னைப் பற்றிய யோசனைதான்;
உன்னைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன் ரோகிணி!’’

“அப்படியென்றால்?’’

“நாம் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய
காலம் வந்திருக்கிறது. நீ என்னை அறிந்துகொள்ள வேண்டும்.’’
அவனுடைய சொற்களின் ஆழத்தில் முழுகாமலே ரோகிணி, “எதற்காக
அறிந்துகொள்ள வேண்டும்? அன்பு செலுத்தினால் மட்டும் போதாதா?’’ என்று
கேட்டாள்.

“போதாது!’’

திடுக்கிட்டாள் ரோகிணி. “நாம் ஒருவர் மீது ஒருவர் உயிரையே
வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அது பொய்யா?’’

“இருக்கலாம்; ஆனால் அறிந்து கொள்ளாமல் செலுத்துகிற அன்பு
ஆபத்திலே முடியுமோ என்று நான் அஞ்சுகிறேன்.’’

“இளவரசே? என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.’’

“எனக்கும் முதலில் புரியவில்லைதான். ஆனால் நிலவறைக்குள்ளே நான்
தள்ளப்பட்ட பிறகு, யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்தது. நாம் பழகத்
தொடங்கிய நாளிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைத்துப்
பார்த்தேன். அந்த நிகழ்ச்சிகளில் மிகுந்திருந்தது இன்பமா துன்பமா என்று
இன்னும் நான் முடிவுக்கு வரவில்லை.’’

தனக்கு வேதனை தரும் விஷயங்களை இளங்கோ சொல்லப் போகிறான்
என்றே ரோகிணி எதிர்பார்த்தாள். என்றாலும் அவனைத் தடுக்கவில்லை.

“ரோகிணி! நாம் முதன் முதலில் ஒருவரையொருவர் சந்தித்ததே
போராட்டத்துக்கிடையில்தான். நான் காசிபனைக் கைப்பற்றப் போன
வேளையில் நீ என் கரத்தைப் பற்றித் தடுத்தாய். என் கடமையிலிருந்து
என்னை நழுவச் செய்துவிட்டாய். அந்த முதற் சந்திப்பில் இருந்து...’’

“இல்லை!’’ என்று குறுக்கிட்டுக் கத்தினாள் ரோகிணி. “நம்முடைய முதற்
சந்திப்பு அதுவல்ல. நீங்கள் தூதுவராக வந்தபோது, என் தம்பியை
வாளெறியாமல் தடுக்க முயன்றேன் நான். நான் ஏற்படுத்திய சலசலப்பை
உங்களுடன் வந்த வல்லவரையர் கண்ட பிறகுதான், உங்களைப் பிடித்துத்
தள்ளிவிட்டார். அதுவே நம் முதற் சந்திப்பு. அதையும் மறந்துவிடாதீர்கள்!’’
“பார்த்தாயா ! நமக்குள் எது முதற் சந்திப்பு என்பதிலேயே போராட்டம்
தொடங்கிவிட்டதல்லவா? இப்படித்தான் ஒவ்வொரு வேளையிலும் நாம்
மோதிக்கொண்டு வந்திருக்கிறோம். நீ உன் தந்தையிடம் தப்பிச் செல்ல
விரும்பினாய்; நான் தடுத்தேன். இதே போல் நமக்குள்ளாகவே பல முறை
போராடியிருக்கிறோம். நாம் நமது போராட்டத்தை மறந்து இன்பமாக இருக்க
நினைத்த போதும் அது முடியவில்லை.’’

“இளவரசே! தயவு செய்து பயங்கரமான விஷயங்களை இப்போது
பேசாதீர்கள்’’ என்று கெஞ்சினாள் ரோகிணி.

“நம்முடைய துன்பங்களின் காரணங்களைத் தெரிந்து கொண்டால்தான்
இனிமேலாவது அவற்றை விலக்கிக் கொண்டு நம் ஆசைகளை நிறைவேற்ற
முடியும் ரோகிணி; அதனாலேயே சொல்கிறேன்’’ என்றான் இளங்கோ.
“எங்களுடைய நாட்டுக்கு நீ வரப்போகிறாய் என்ற ஆனந்தத்துடன் நான்
உன்னை நெருங்கியபோது நீ என்னை வெறுப்பதாகக் கூறினாய். பிறகு
திருமயில் குன்றத்தில் நாம் தனித்திருந்தபோது யாரோ ஒரு காளமுகன்
செல்வதைப் பார்த்துவிட்டு நடுங்கினாய். அடுத்தாற்போல், ஆனைமங்கலம்
மாளிகை மேன்மாடத்தில் அன்றிரவு நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்!’’

வெடவெடவென்று நடுங்கியது ரோகிணியின் மென்னுடல்.

“இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி
மறைவாக நமக்குக் குறுக்கே நிற்பதுபோல் தோன்றுகிறது. ஒன்று நமக்குள்
நாமே போராடிக் கொள்கிறோம். அல்லது நமது இன்பத்திற்குக் குறுக்கே
வேறு யாராவது வந்து போராடுகிறார்கள். இதன் காரணங்களைக்
களைந்தெறியா விட்டால் நம்முடைய அன்பு அழிந்துவிடும் ரோகிணி;
அல்லது அழிக்கப்பட்டு விடும்.’’

“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை; நீங்கள் விரும்புகிறபடி
செய்கிறேன்.’’

“உன் தம்பி காசிபனைக் கருதி நீ வீரமல்லனிடம் அநுதாபம்
கொண்டாய். அவன்மீது கொண்ட அநுதாபம், எனக்கே எமனாக மாறியதையும்
உன் கண்களால் கண்டு கொண்டாய். அன்றைக்கு அவன் செய்த முயற்சி தோற்றுப் போகாமல், அவன் நன்றாக மறைந்து கொண்டு, என்மேல் வேல் எறிந்து வீழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? மரணத்துக்கு நான் அஞ்சியவனல்ல; ஆனால் அந்த மரணம் நான் இன்பக் கனவுகளின் சிகரத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில்தானா வரவேண்டும்? அது என் உயிருக்குயிரானவளின் அறியாமையினால்தானா வரவேண்டும்? நினைத்துப் பார், ரோகிணி?’’

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்; விம்மினாள்; விக்கினாள்.

“வீரமல்லன் எங்கள் படையிலிருந்துவிட்டுப் பிறகு எங்களுக்கு எதிராகத்
திரும்பியிருப்பவன்; என்னுடைய நண்பனாக இருந்து பகைவனாக
மாறிவிட்டவன். என்னைப் பகைப்பவன் மீது நீ இரக்கம் கொண்டால்...’’

“என் தம்பிக்காகச் செய்தேன். இனி ஒரு போதும் அப்படி நடக்காது,
இளவரசே!’’

“உன் தம்பியை நான் இதுவரையில் வெறுக்கவில்லை. அவனைக்
கொண்டு வந்து உங்கள் குடும்பத்துடன் சேர்த்து விடவேண்டுமென்பதே
எங்கள் எண்ணம். அப்படிச் சேர்க்க முடிந்தால் அமைச்சர் தனியாக இருந்து
பகைமையை வளர்க்க முடியாது. அவனை ஒரு கருவியாக வைத்துக்
கொண்டுதான் அவர் தமக்கு ஆதரவு தேடிவருகிறார். அவன் மட்டும் இங்கே
வந்துவிட்டால், பிறகு ரோகணத்தின் ஆட்சி உன் தந்தையாருக்கே
கிடைத்துவிடும். உன் தம்பியே இளவரசன்!’’

“நானும் எவ்வளவோ கூறினேன். சோழ நாட்டின் மேலும் உங்கள் மீதும்
கொண்ட பகைமை குறையவே இல்லை. அமைச்சர் ஊட்டிவிட்ட வெறியால்
அவன் குமுறிக் கொண்டிருக்கிறான்.’’

இளங்கோவின் புருவங்கள் நெறிந்தன. “நீ உன் தம்பியை நன்றாகத்
தெரிந்து கொண்டாயல்லவா? இப்போது சொல்; உனக்கு நான் வேண்டுமா?
உன் தம்பி வேண்டுமா?’’

“இளவரசே! என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்கள். எனக்கு
இருவருமே வேண்டும். என்னால் இருவரையுமே மறக்க முடியாது.’’

“இருவரில் ஒருவரை மறந்துதான் தீரவேண்டும்.’’

“என்னால் முடியவில்லையே!’’

அவளுடைய இயலாமையை அறிந்து கொண்ட இளங்கோ அதற்குப்
பிறகு அவளிடம் சினம் கொள்ளவில்லை. ஓரளவு பொறுமையை
வரவழைத்துக்கொண்டு, உறுதியான குரலில், “ரோகிணி!’’ என்று அழைத்தான்.

ஏறிட்டுப் பார்த்தாள்.

“இந்தக் கணம் வரையிலும் எனக்கு உன் தம்பியின் மேல்
வெறுப்பிருந்ததில்லை. மாறாக, அவன் உன்னோடு பிறந்தவன் என்பதால் நீ
அவன்மீது கொண்டிருந்த அன்பின் காரணத்தால் நானும் அவனிடம் அன்பு
கொண்டிருந்தேன். இனிமேலும் என்னால் அப்படியிருக்க முடியாது. நான்
இந்தக் கணத்திலிருந்து உன் தம்பியை வெறுக்கிறேன்! காசிபனை அடியோடு
வெறுக்கிறேன்!’’

அவன் குரலில் உறுதி அவளை உலுக்கியது. அஞ்சி விலகினாள்
ரோகிணி.

“ஆமாம். இதுவரையில் அறியாத சிறுவன் என்பதால் அவனால்
நாட்டுக்கு ஏற்பட்டு வந்த தொல்லைகளைக் கூடப் பொறுத்து வந்தேன்.
நாட்டால் விளைந்த பகைமையையும் மீறி அவனிடம் பாசங்கொள்ள
முனைந்தேன். இப்போதுதான் எனக்கு உண்மை புலப்பட்டிருக்கிறது.
அவனுடைய உடல்தான் அமைச்சர் கீர்த்தியோடு உலவுகிறதே தவிர, அவன்
உன்னுடைய மூச்சிலும் பேச்சிலும் குருதித் துடிப்பிலும் கலந்து உன்னையே
எனக்கு எதிராகத் திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறான். ரோகிணி! அவன்
வேறெங்குமில்லை; உன் நெஞ்சில்தான் இருக்கிறான்!’’ “இளவரசே! இனியும்
என்னைச் சுடு சொற்களால் சித்திரவதை செய்யவேண்டாம். நான்தான் முன்பே
தங்கள் ஆணை எதுவோ அதன்படி நடப்பதாகச் சொல்லிவிட்டேன். நான்
என்ன செய்யவேண்டுமென்று ஆணையிடுங்கள். அதன்படி நடக்கச்
சித்தமாயிருக்கிறேன்’’ என்றாள் ரோகிணி. “இருவரில் ஒருவரை மறந்துவிடு!’’

அச்சத்தால் நினைவிழந்த ரோகிணி, ‘என்னால் முடியவில்லையே!’
என்று சில விநாடிகளுக்கு முன்பு கூறிய அதே வாயால், “ஆகட்டும்
இளவரசே! காசிபனைக் கட்டாயம் மறந்துவிடுகிறேன்’’ என்றாள்.

“முடியுமா உன்னால்?’’ என்று திரும்பவும் கேட்டான் இளங்கோ.

“உங்களை இழந்துவிட என்னால் முடியாது. உங்களுக்காக அவனை
மறக்கத்தான் வேண்டும். மறந்துவிடுகிறேன்.’’

இதைக் கேட்ட பின்னரே இளங்கோவுக்கு அமைதி ஏற்பட்டது. ஏதோ
மிகப் பெரிய போர்க்களத்தில் வெற்றி பெற்று வாகைசூடியதைப் போல்
நினைத்துக் கொண்டான்.

அதன் பிறகு அவனுடைய பேச்சில் ரோகிணிக்காகக் கனிவு ததும்பியது.
அன்பு பொங்க அவளுடன் உரையாடினான். நோய்வாய்ப்பட்டு மெலிந்து
போயிருந்த அவள் தேகத்துக்காக வருந்தினான். அவளுடைய நெற்றிக்
காயத்தின் தழும்பைக் கண்ணீர் கசிய நோக்கினான்.

ரோகிணியோ காசிபனை மறந்துவிடுவதாக வாய் விட்டுக் கூறியபடியே
மறந்துவிட வேண்டுமென்று உறுதி பூண்டாள். ஆனால், மனிதர்களை
மறந்துவிடுவதும் நினைத்துக் கொள்வதும் யாருடைய ஆணைக்கும் அடங்கிய
விஷயங்கள் அல்லவென்பது இருவருக்குமே அப்போது தெரியவில்லை.
கட்டளைக்குக் கட்டுப்பட்டு யாருமே யாரையும் மறந்து விட்டதுமில்லை;
நினைத்துக் கொண்டதுமில்லையல்லவா?

தொடரும்

    

Sunday, January 27, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 16. நெஞ்சின் ஆழம்

பாகம் 3 , 16. நெஞ்சின் ஆழம் 


சரஞ்சரமாக விழுது இறங்கிய சரக்கொன்றைக் கொத்துக்கள் சித்திரத்து
மலர்களைப் போன்று சிறிதுகூடச் சலனமின்றித் தொங்கின. அவற்றைக்
குலுங்க வைத்துப் பொன்னுதிர்ப்பதற்கு அங்கே தென்றல் தவழவில்லை.
தோட்டத்தைச் சுற்றிலும் பசுமை மண்டிக்கிடந்தது. எனினும் அதன் உயிரைச்
சுமந்து குளிர் பரப்புவதற்கு அங்கே காற்றைக் காணோம்.

அழகான இளம்நெஞ்சுகள் இனம்புரியாத புழுக்கத்தில் அகப்பட்டுத்
தவிப்பதற்கொப்ப, அந்தப் பூங்கா அப்போது வேதனைப்பட்டுக்
கொண்டிருந்தது. ‘தென்றல் வீசாதா? தாபம் தீராதா’ என்று கேட்பனபோல்,
வண்ணமலர்கள் செடிகொடிகளிலிருந்து எட்டிப் பார்த்தன.

மரக்கிளையின்மீது சாய்ந்துகொண்டே, தலைக்கு மேலிருந்த இலைக்
கூட்டத்தை ஊடுருவிக்கொண்டே நின்றான் இளங்கோ. ரோகிணி சற்று முன்பு
கொடுத்த தாமரை மொட்டு அவனுடைய கரத்தில் துவண்டு தொங்கியது.
கண்கள் கலங்கியிருந்தன.

தன் பக்கம் திரும்பச் சொல்லிக் கெஞ்சுகிறவள்போல் ரோகிணி
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது
உள்ளங்களினின்றெழுந்த புழுக்கம்தான் அந்தப் பூங்காவையே சூழ்ந்து
கொண்டது போலும்! நேரம் ஊர்ந்து செல்வது தெரியாமல் அவர்கள்
அப்படியே நிலைத்துப் போய்விட்டார்கள்.

“பேச மாட்டீர்களா, இளவரசே! எனக்கு மன்னிப்பே கிடையாதா?’’
என்றாள் ரோகிணி.

அவளைத் திரும்பிப் பார்த்து அவள் முகத்தில் எதையோ தேடிக்
கண்டுபிடிக்க முயன்றான் இளங்கோ. அவன் தேடிய ஒன்று அவனுக்குப்
பளிச்சென்று புலனாகவில்லை. நீரின் ஆழத்திலோ, புகை மூட்டத்துக்கு
மத்தியிலோ தோன்றும் முகம்போல் மங்கலாகத் தெரிந்தது அவள் முகம்.

“ரோகிணி! நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேனென்று எனக்கே
தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் இப்போது ஒரு வலை பின்னிக் கொண்டிருக்கிறது. அதைக் கிழித்தெறியவும் எனக்கு
வலிமையில்லை; அதற்குள் அகப்பட்டுத் தவிப்பது எனக்கு வேதனையாக
இருக்கிறது.’’

“எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம்’’ என்றாள் ரோகிணி.

“இல்லை. இனி நான் உன்னைக் குற்றங்குறை சொல்லப் போவதில்லை.
நடப்பவை எல்லாவற்றிலும் எனக்கும் பெரும்பங்கு இருக்கிறது. தண்டனை
காலத்தில் நான் தனியாக யோசனை செய்து பார்த்தேன். எனக்குக் கிடைக்க
வேண்டிய தண்டனைதான் அது.’’

“நடந்ததை இனிப் பேசவே வேண்டாம் இளவரசே!’’ என்று குமுறினாள்
ரோகிணி. “நான் செய்த குற்றத்துக்காக நானும் தண்டனையடைந்தேன்;
தங்களுக்கும் அதைத் தேடித்தந்தேன். இனி இந்தப் பிறவியில்
இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது.’’

அவள் பேச்சை நம்பாதவன்போல் வருத்தம் தோய்ந்த புன்னகை
உதிர்த்தான் இளங்கோ. “நீ செய்திருக்கும் கொடுமையின் அளவு உனக்குச்
சரியாகத் தெரியாது. எந்த மனிதனை உன் சொல் கேட்டுப் பகைவனாக்கிக்
கொண்டேனோ, அவனுக்கே நீ புகலிடம் அளித்திருக்கிறாய். அவனிடமே நீ
பரிவு காட்டியிருக்கிறாய், அன்றொரு நாள் என் கை ஓயும் வரையில் இதே
தோட்டத்தில் வீரமல்லனை அறைந்து அனுப்பினேனே, உனக்கு நினைவு
இருக்கிறதா? ஒரு காலத்தில் என் உயிர் காத்தவன் அவன்; அதனால்
நண்பனாகியவன்; அவனையே நான் பகைத்துக் கொண்டேன். யாரால்
தெரியுமா?’’

கரகரவென்று கண்ணீர் உகுத்தவாறு அவன் கால்களைக்
கட்டிக்கொண்டாளே தவிர, ரோகிணி வாய் திறந்து பேசவில்லை.

“ரோகிணி! உன்னுடைய ஒரு சொட்டுக் கண்ணீரின் முன் உயிரையே
துச்சமென நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்தக் கண்ணீர்
பரிசுத்தமானதல்ல, அதில் களங்கம்தான் கலந்திருக்கிறது!’’ என்றான்
ஆத்திரமாக.

“புத்தரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு அவன் மேல்
அன்போ, இரக்கமோ கிடையாது!’’ என்று கதறினாள் ரோகிணி. “புத்தரின் மேல் ஆணையிடாதே! அவரை நினைக்கும் மனத்தில் தாமரை மட்டும் மலரும்; விஷப்பூண்டுகள் முளையா. ஆனைமங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் உன்னைத் தனிமையில் சந்திப்பதற்காக வந்தவனுக்கு நீ என்ன வெகுமதி கொடுத்தாய் தெரியுமா? என்னைக் கொல்ல வந்தவனின் தோற்றத்தைக் கண்டு நான் ஐயமுற்றபொழுதிலும், மாண்டவன் மீண்டிருக்கமாட்டான் என்று அலட்சியமாக இருந்து விட்டேன்.’’

“இளவரசே! இளவரசே! இளவரசே!’’ என்று அவன் காலடியில் முட்டி
மோதிக் கொண்டாள் ரோகிணி.

திடீரெனக் கொடும்பாளூர் குலத்தின் முரட்டுத்தனம் இளங்கோவைப்
பற்றிக் கொண்டது. அடிபட்டுத் துடிக்கும் மானை வனவேடன் பற்றித்
தூக்குவதுபோல் மேலே தூக்கி “சொல்! மறைக்காமல் சொல்லிவிடு!!
இதெல்லாம் எதற்காக நடந்தது? ஏன் நடந்தது?’’ என்று உலுக்கினான்.
“சொல்லுகிறாயா, இல்லையா?’’ என்று கத்தினான்.

எதேச்சையாக வேறு புறம் உலவிக் கொண்டிருந்த பெரிய வேளார்,
மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கண்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பி
நடந்தார். சந்தடியின்றி வந்து கொண்டிருந்தவரின் செவிகளில் தமது
குமாரனின் கோபக்குரல் ஒலித்தது. மறைவில் நின்றவாறே கவனித்தார்.

“என்னை உங்கள் கரத்தாலேயே கொன்றுவிடுங்கள் இளவரசே!
அதுதான் எனக்குச் சரியான தண்டனை’’ என்று விம்மினாள் ரோகிணி..

“ஓ! உன் உயிரைவிட மேலான ரகசியமா அது? ‘கொன்று விடு; ஆனால்
உண்மையைச் சொல்லமாட்டேன்’ என்கிறாயா? ரோகிணி! உன்னைத்
தொடுவதற்குக்கூட என்னுடைய கை கூசுகிறது. தொட்ட கையை வெட்டி எறிய
வேண்டும்!’’

சரேலெனக் கீழே தள்ளிவிட்டு, தன் கால்களை அவள் சுற்றி
வளைக்காமல் விலகிக்கொண்டான். திரும்பிச் செல்ல முயன்றான். அவள்
விடவில்லை.

மறைவில் நின்ற பெரிய வேளார் வந்த சுவடு தெரியாமல் மரங்களுக்குப்
பின்னால் நடந்தார். மைந்தனிடம் தம்முடைய சுபாவத்தின் சாயல் படிந்திருப்பதைக் கண்டுவிட்டதில் அவருக்குத் தாங்கொணாத பெருமை.

‘பகைவரின் பெண்ணைப் பதைபதைக்க வைக்கிறானே அவன்?
அவளைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தி, அவளிடமிருந்து இரகசியங்களைப்
பெறுவதற்கு முயல்கிறானே? இவ்வளவு வித்தைகளை இவன் எங்கிருந்து
கற்றுக்கொண்டான்? யாரிடமிருந்து கற்றுக்கொண்டான்?’

காதல் உணர்ச்சியின் கொடுமைகளை உணராதவர் பெரிய வேளார்.
இந்த நிலையில் இல்லாது, அவர்களை இன்பக் கதைகள் பேசும் வேறு
நிலையில் கண்டிருந்தாரானால் அவருடைய இரத்தம் கொதித்திருக்கும்.
அப்போது அவர்களை அவர் என்ன செய்திருப்பாரோ, தெரியாது.
இப்போதோ அவர் குளிர்ந்த மனதுடன் ஏறுநடை போடலானார்.

இங்கே இளங்கோவை இழுத்து வைத்துக்கொண்டு மளமளவென்று தன்
மனத்திலிருந்தவற்றை அவனிடம் கொட்டத் தொடங்கினாள் ரோகிணி.
அவளுடைய தம்பியைக் காப்பாற்றுவதற்குச் செய்த முயற்சிகள் விபரீதமான
விளைவுகளைத் தரக்கூடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

ஒன்றுவிடாமல் கூறலானாள்:

“நீங்கள் ரோகணத்திலிருந்து திரும்பி நாகைத் துறைமுகத்துக்கு வந்த
தினத்தில்தான் வீரமல்லனும் முதன் முதலாக ஆனைமங்கலத்துக்கு வந்தான்.
வந்தவன் வீரமல்லன் என்று தெரிந்தவுடனேயே நான் கொதிப் படைந்தேன்.
ஆனால், அவனோ என் தம்பி காசிபனை அழைத்துக்கொண்டு அவனுக்குத்
துணையாக வந்திருந்தான். காசிபனை மறுநாள் அழைத்துக் கொண்டு
வருவதாகச் சொல்லிவிட்டு அப்போதே எங்களிடம் விடைபெற்றுக்
கொண்டான். நாம் சந்தித்த அந்த இரவில் அவன் எப்படி அங்கே வந்து
சேர்ந்தானென்று எனக்கே தெரியாது.

“அன்றைக்கு அவனை நீங்கள் கொன்று போட்டிருக்க முடியும்.
அவனிடமிருந்து எப்படி உங்களைக் காப்பாற்ற முயன்றேனோ, அதேபோல்
அவனையும் உங்களிடமிருந்து காப்பாற்றினேன். அவன்மீது எனக்கு அன்போ,
இரக்கமோ, பரிவோ இல்லை. ஆனால் காசிபன் என் தம்பி, என்னுடைய இரத்தத்தின் மறுபாதி அவன். காசிபனை நான் சந்திப்பதற்குத் துணை செய்ய வந்தவன் வீரமல்லன். அவனுக்கு ஏதும் நேர்ந்தால் அது காசிபனைப் பாதிக்கும்.

“உங்களைப்போல் ஒரு நாட்டுக்கு இளவரசனாக இருக்க வேண்டியவன்
அவன். அவனுக்கு இப்போது நாடில்லை, வீடில்லை, தாயில்லை,
தந்தையில்லை, நானுமில்லை. அவனுடைய நிலையில் இருந்து உங்களுக்கொரு
தமக்கையும் இருந்தால், அவர் என்ன செய்வார்?- இளவரசே, நீங்கள்
ஆணோடும் பெண்ணோடும் பிறக்காதவர். அதனால்தான் உங்களால்
என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை.’’

அவள் கூறியவற்றையெல்லாம் கேட்டுவிட்டு நீண்ட பெருமூச்சு விட்டான்
இளங்கோ. ஏதாவது மறுமொழி கூறுவான் என்று ரோகிணி எதிர்பார்த்தாள்.
அவன் அவளுடைய கண்களின் வாயிலாக அவளுடைய நெஞ்சின் ஆழத்தை
அளந்து கொண்டிருந்தானே தவிர, ஒன்றும் பேசவில்லை.

அவளுடைய நெஞ்சமோ ஆழம் தெரியும் அளவுக்குத் தெளிவாக
இல்லை. அது குழம்பிக் கிடந்தது. அங்கே ஒரு தெளிவு காணமுடியுமோ
என்று சிந்தனை செய்தான் இளங்கோ.

தொடரும்

Saturday, January 26, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 15. மலர்ச் சிறை

பாகம் 3 , 15. மலர்ச் சிறை 


இராஜேந்திர சோழச் சக்கரவர்த்தியின் மறைமுகமான ஆதரவின்
பேரிலா இளங்கோவும் ரோகிணியும் ஒன்றிப் பழகினார்கள்! இந்தத் திடுக்கிடும்
செய்தியைக் கொடும்பாளூர் பெரிய வேளாராலும் தாங்க முடியவில்லை.

ஒரே ஒரு அம்பால் இரண்டு பறவைகளை வீழ்த்தும் கொடிய
வேடுவனைப் போன்று, இந்த ஒரு செய்தியைக் கொண்டு இருவரையுமே
பதறித் துடிக்கச் செய்துவிட்டார் வல்லவரையர்.

செய்தியைக் கேட்ட மறுகணமே அருள்மொழி நங்கை, வேல் பட்ட
மானைப்போல் தட்டுத் தடுமாறிக்கொண்டு அந்தப்புரத்துக்குப் போய்ச்
சேர்ந்தாள். இந்தச் செய்தி எதற்காக அவளை அவ்வளவு தூரம்
வாட்டவேண்டுமென்று அவளுக்கே தெரியவில்லை.

தன்னுடைய அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டு கட்டிலில்
சாய்ந்து விம்மிவிம்மி அழுதாள். ‘சக்கரவர்த்திகளே! உங்களைப்போல்
கொடியவர் இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. உங்களுக்கு நான்
வந்து பெண்ணாய்ப் பிறந்தது நான் செய்த பாவம். உங்களுடைய
சாம்ராஜ்யத்தை மட்டும் நீங்கள் ஆட்டிவைக்கவில்லை. அதில் உள்ள
ஒவ்வொரு மனிதரின் உயிரையும் உங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கப்
பார்க்கிறீர்கள். கொடும்பாளூர் இளவரசர் உங்களுக்கு என்ன தீமை செய்தார்?
எதற்காக அவருடைய மனத்தை இப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறீர்கள்?
அவராக விரும்பினார் என்று நினைத்தேன். இல்லவே இல்லை! எனக்கு
இளவரசரை நன்றாகத் தெரியும், அவர் ஒரு குழந்தை. அவரை நீங்கள்
உங்கள் எண்ணப்படி வளைத்துவிட்டீர்கள்!’

அருள்மொழி இப்படி இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில்,
அங்கே பெரிய வேளார் ஆத்திரத்துடன் வல்லவரையருடன் வாதிட்டுக்
கொண்டிருந்தார். அவரால் வல்லவரையர் வந்தியத்தேவரின் கூற்றை நம்ப
முடியவில்லை; ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பொறுக்க முடியவில்லை.

கொடும்பாளூர்க் குலத்துதித்த வேங்கை மரத்தின் மேல் வேற்று
நாட்டுக் கொடியை படரவிடுவதா? காலங்காலமாகச் சோழ சாம்ராஜ்யத்துடன்
கொண்டுள்ள திருமண உறவு இனி என்ன ஆவது? பகை நாட்டவரின் பெண்
வயிற்றில் தோன்றும் குழந்தைக்கா எதிர்காலத்தில் இளவரசுப் பட்டம்?

“ஐயா! சக்கரவர்த்திகள் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்று நான்
நம்பவே மாட்டேன்’’ என்று குமுறினார் பெரிய வேளார். “அப்படியே
அவர்களோடு உடன்பாடு இருந்திருந்தாலும் நான் ஒருபோதும்
உடன்படமாட்டேன். தென்னவன் இளங்கோ என்னுடைய மைந்தன்! என்
இரத்தத்துக்குப் பிறந்தவன்! சிறிய வேளாரைப் பழி வாங்கிய அந்த
ரோகணத்தில் பிறந்தவளையா நான் எனது மருமகளாக ஏற்றுக் கொள்வேன்
என்று நம்புகிறீர்கள்? முடியாது; முடியவே முடியாது!’’

“சக்கரவர்த்திகளின் ஆணைப்படிதான் இந்தச் சாம்ராஜ்யமே நடக்கிறது!’’
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் வல்லவரையர்.

“அவர்களுடைய ஆணை என் சொந்த விஷயத்தில் குறுக்கிடக்கூடாது.
அவர்களுடைய கட்டளைக்கு நான் அமைச்சன் என்ற முறையிலும், சிற்றரசன்
என்ற முறையிலும் பணிகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்.’’

எவ்வளவோ நயமாகவும், காரண காரியங்களோடும் பெரிய வேளாருக்கு
எடுத்துச் சொல்ல முயன்றார் வல்லவரையர். ஆனால் அவரிடம் எதுவுமே
பலிக்கவில்லை.

எதற்கும் சித்தமாக இருப்பதுபோல் பேசினார் பெரிய வேளார்.
“சக்கரவர்த்திகள் இனி கொடும்பாளூருடன் உறவு வைத்துக் கொள்ள
வேண்டாமென்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் சித்தம்
அதுவானால் யாரும் அவர்களைத் தடுக்க முடியாது நங்கையாரை வேண்டுமானால் அவர்கள் இளங்கோவுக்குக் கொடுப்பதற்கு மறுக்கலாம். ஆனால் அதற்காக வேறு பெண்ணைச் சுட்டிக்காட்டுவது அவர்களுடைய அதிகாரத்துக்குப் புறம்பானது.’’

பெரியவேளார் பேசுவதெல்லாம் பேசித் தீர்த்துவிடட்டும் என்று
கருதியவர்போல், ஏதோ வேறு சிந்தனையில் ஈடுபட்டிருந்தார் வல்லவரையர்.
எந்தவிதமாக வேளாரை அணுகினால் அவரை வளைக்க முடியும் என்ற
யோசனை வல்லவரையருக்கு.

அதற்குள் வேளார், “நான் சக்கரவர்த்திகள் திரும்பி வரும் வரையில்
இளங்கோவை விடுவிக்கப் போவதில்லை. விடுவித்தால்தானே மீண்டும்
அவன் ரோகிணியைச் சந்திக்க முடியும்?’’ என்றார்.

“அவனுடைய குற்றம் அதில் ஒன்றுமே இல்லை’’ என்றார்
வல்லவரையர்.

“யார் செய்த குற்றமாக இருந்தாலும் சரி, நான் செய்த குற்றமாகவோ
சக்கரவர்த்திகள் செய்த தவறாகவோ வேண்டுமானாலும் இருக்கட்டும்!’’

“என்ன சொல்லுகிறீர்கள்! சக்கரவர்த்திகள் தவறு செய்கிறார்களா?’’
வல்லவரையர் கண்களை உருட்டி விழித்துக் கொண்டு நெடிய தென்னைபோல்
ஆடி அசைந்து பெரிய வேளாரிடம் நெருங்கி வந்தார்.

வல்லவரையர் வயதில் மூத்தவர். சோழ சாம்ராஜ்யம் அனைத்துக்குமே
சாமந்த நாயகர். சக்கரவர்த்திகளின் மதிப்புக்கும் பேரன்புக்கும்
பாத்திரமானவர். ஆனால் அவருக்கே சக்கரவர்த்திகள் தவறு
செய்யக்கூடுமென்ற எண்ணமில்லை.

கடவுள் எப்படிக் களங்கமற்றவரோ, அவ்வாறே சக்கரவர்த்திகளும்
என்று நம்பியவர் அவர். பெரிய வேளாரும் அதே கருத்தில் ஊறியவர்தாம்.
என்றாலும் ஆத்திரத்தில் தம்மை இழந்து பேசிவிட்டார்.

கோபத்துடன் பெரிய வேளாரை நெருங்கிய வல்லவரையர் அவருக்கு
அருகில் சென்றதும் அப்படியே அவரை

அணைத்துத் தழுவிக் கொண்டார். பெரிய வேளாரின் நிலையில் தாமே
இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்ளமுடியும் என்பது அவருக்கு
விளங்கிற்று. அவருடைய சிந்தனை அதற்குள் கூர்மை பெற்றுவிட்டது.

“வாருங்கள், உங்களுக்கு மட்டிலுமே தெரிந்திருக்க வேண்டிய சில
விஷயங்களைக் கூறுகிறேன்’’ என்று அவரை ஓர் ஆசனத்துக்கு அழைத்துச்
சென்று அமர்த்தினார். தாமும் அருகிலிருந்து மெல்லிய குரலில் பேசினார்.

சிறிது சிறிதாகப் பெரிய வேளாரின் சினம் அகன்றது. அவர்கள் கண்கள்
ஒளிபெற்றன. முகம் மலர்ந்தது. வல்லவரையரின் சொற்களில் ஒன்றைக்கூட
விடாமல் உற்றுக் கேட்டார்.

“இதுதான் நோக்கமென்றால் இதை முன்பே கூறியிருக்கலாமே?’’ என்று
சிரித்துக்கொண்டே கேட்டார் பெரிய வேளார். “இதற்கெல்லாம் தடை
செய்கிறவனல்லவே நான்! ஆத்திரத்தில் சக்கரவர்த்திகளை நான் குறைகூறும்
அளவுக்கு என்னைச் செய்துவிட்டீர்களே!’’

“சக்கரவர்த்திகளின் கருத்து இப்படி இருக்கலாமென்று நான்
யூகிக்கிறேன்.’’

“நிச்சயமாக இப்படித்தான் இருக்கும். என் மேல் ஒரு பெரிய சுமையை
ஏற்றி உடனே இறக்கிவிட்டீர்கள்!’’

இளங்கோவுக்கு மெய்யாகவே ரோகிணியின் மீது அன்பு உண்டு
என்பதை வல்லவரையர் மறந்துகூட வெளியிடவில்லை. அப்படி
வெளியிட்டால் அவனுக்கு ஆயுட் சிறை என்பதையும் கண்டுகொண்டார்.
ஆகவே தாமாகச் சிந்தித்த ஒரு செய்தியைச் சக்கரவர்த்திகளின் மீது சுமத்திக்
கூறினார்.

இதைக் கேள்வியுற்ற பின்னர் பெரிய வேளாருக்கு இருப்புக்
கொள்ளவில்லை. உடனடியாக நிலவறைக்குச் சென்று இளங்கோவை விடுவிக்கத்
துடித்தார்.

“எனக்குத் தெரிந்ததாகவே காண்பித்துக் கொள்ள வேண்டாம். தங்கள்
கட்டளையுடன் அவன் மதுரைக்குச் சென்றிருப்பதாகவே நானும் நம்புகிறேன்.
முதலில் அவனை விடுதலை செய்யுங்கள். என்னுடைய கண்களால் அவனைச்
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நான் பார்க்க வேண்டாம்.’’

வல்லவரையர் விடைபெற்றுக் கொண்டார். பெரிய வேளாரால் தம்மை
உறுதிப் படுத்திக்கொள்ள முடியவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு
தமது குமாரனை ஏறிட்டுப் பார்ப்பது? அவனிடம் என்ன காரணம் சொல்வது?
எப்படி அவனைச் சிறைமீட்பது? குனிந்த தலை நிமிராமல் தாமே தனித்து
நிலவறைப் படிகளில் இறங்கினார். தாமே தாழைத் திறந்தார்; தாமே
சிறைக்குள் நுழைந்தார்.

அருகிலே சென்ற பிறகும் அவனை ஏறிட்டுப் பார்க்காமல், அவன்
கரங்களைப் பற்றிக்கொண்டு “என்னை மன்னித்துவிடு, இளங்கோ’’ என்று நாத்
தழுதழுக்க, உதடுகள் துடிக்கக் கூறினார்.

அவன் ஒன்றுமே பேசவில்லை. அவனை அணைத்தவாறே வெளியில்
அழைத்துக்கொண்டும் வந்தார் பெரியவேளார். தந்தையும் மைந்தனும்
ஒன்றாகப் படியேறி வந்தனர். அவனுக்கு அருள்மொழியின் அறையைச்
சுட்டிக்காட்டிவிட்டு மெதுவாக விலகிக் கொண்டார்.

அருள்மொழி ஆனந்தமிகுதியால் ஏதேதோ பேசினாள். பணியாட்களுக்கு
ஏதேதோ கட்டளையிட்டாள். அவனுடைய ஆடை அணிகள் யாவும் அங்கு
வந்து சேர்ந்தன. ஒரு சில நாழிகைக்குள் அவன் புதிய மனிதனாக மாறினான்.
தேகத்தின் இளைப்பைத் தவிர வேறு எந்த மாற்றமும் அவனிடம்
தென்படவில்லை.

“நீங்கள் உங்கள் தந்தையாரின் ஆணைப்படி பாண்டிய நாட்டில்
இவ்வளவு நாட்கள் சுற்றிவிட்டு வருகிறீர்கள். தெரிந்ததா?’’

“தெரிந்தது!’’ இளங்கோ நகைத்தான்.

“இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்றாள் அருள்மொழி.

“பாண்டிய நாட்டில் பகைவர்கள் என்னைச் சிறைக்குள் தள்ளி
விட்டார்கள்! சிறைக்கு வெளியில் உலகம் எப்படி இருக்கிறதென்று பார்த்து வரவேண்டும். என்னுடைய குதிரையைக் கட்டவிழ்த்துக்கொண்டு அதன் கால் போன போக்கில் பறக்கச் செய்ய வேண்டும்.’’

“விரைவில் திரும்பி விடுங்கள்.’’

வெண்புரவியின் மீது தாவி அமர்ந்தான் இளங்கோ. வெகு நாட்களாகவே இளங்கோவைப் போல் கட்டுண்டு கிடந்த அவனுடைய குதிரையும் அவனது மனோவேகத்தை உணர்ந்து கொண்டதுபோல் கிளம்பியது.

வேறு எந்தத் திசையிலாவது அது விரைந்திருக்கக் கூடாதா? மகிந்தரின்
மாளிகைத் தோட்டத்தின் பின்புறம், சரக்கொன்றை மலர்களை அடுத்துத் துரித
நடைபோடத் தொடங்கியது. கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்த
பொன் மலர்களைக் கண்டவுடன் அவனையறியாது அவன் கரம்
கடிவாளத்தைப் பற்றியது.

மலர்க்கொத்துகள் நடுங்கின. செடிகொடிகள் அசைந்தன.

“இளவரசே!’’ என்று எங்கிருந்தோ ஒரு பூங்குயில் கூவியது.

எப்படித்தான் ரோகிணியின் பாதங்கள் வலிமை பெற்றனவோ
தெரியவில்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடோடியும் வந்து அவன் இடது
கால்மீது சாய்ந்தாள். அவளுடைய வலது கரம் ஒரு தாமரை மலரைப்
பற்றியிருந்தது.

குதிரையும் சிலையாக மாறி நின்றுவிட்டது. அவன் காலிலிருந்து தன்
தலையை எடுக்க விரும்பாதவள்போல் அப்படியே நின்றாள். இளங்கோவுக்கும்
அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

“இளவரசே! புத்தர் பிரானுக்கு நாங்கள் தாமரையைக் காணிக்கையாகச்
செலுத்துவது வழக்கம். இந்தாருங்கள்! இந்த மலரை மறுக்காமல் ஏற்றுக்
கொள்ளுங்கள்.’’

மலரையும் மலர்க்கரத்தையும் ஒன்றாகப் பற்றிக் கொண்டேதான் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ.

தொடரும்
                                      

தமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு

தமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்குதமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர் , பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்கள் பல கிடைத்துள்ளன. பொதுவாக நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டும். மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னனின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசர், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது. வைகை , நொய்யல் , தென்பெண்ணை , தாமிரபரணி ,பவானி , காவரி , நதிகளின் ஓரம் மண் அரிப்புக்காரர்களிடமிருந்தும், அமராவதி , ஆந்திரா , சித்தூர் , மைசூரு நகரங்களின் பாழடைந்த கோட்டை , கோவில் போன்ற இடங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், புலி, மீன், குதிரை, காளைமாடு, சிங்கம் போன்ற விலங்குள், பறவைகள், சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். களப்பிரர்கள் காசு அவ்வளவாக தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. ஆந்திராவில் அகஸ்டஸ் டைபீஸ் என்ற ரோமானிய மன்னன் கி.மு.40ல் வெளிவந்த நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் தற்போது அதிகம் கிடைக்கும் தொன்மையான நாணயம் ராஜராஜன் காலத்து காசுகள் தான். கி.மு.ஒன்றாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களையும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன் பார்வதி உருவ நாணயங்கள் வெளிவந்துள்ளன. ஆர்காட் நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள்ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது
இன்றைய நாணயங்கள் போன்றே அக்கால நாணயங்களிலும் தலை, பூ என்ற இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் மன்னர்களின் பெயரையோ பட்டப் பெயரையோ மட்டுமே பொறித்துள்ளனர். காலத்தைப் பொறிக்கவில்லை. கி. மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னம் பொறித்த நாணயங்கள் கோவை மாவட்டத்துப் பள்ளலூரில் சவக்குழிகளில் கிடைத்துள்ளன. இதன் தலைப் பகுதியில் யானையின் சின்னம் பொறித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் கிடைத்துள்ள பல்லவர் கால நாணயங்களின் ஒரு பகுதியில் இரண்டாம் இராசசிம்மனின் பட்டப் பெயரான ஸ்ரீநிதி அல்லது ஸ்ரீபர என்பதும் பல்லவர் முத்திரையான காளைச் சின்னமும் காணப்படுகின்றன. சில நாணயங்களில் ஒன்று அல்லது இரண்டு மீன் சின்னங்கள் பொறித்துள்ளனர். மறு பகுதியில் சக்கரம், பிறைமதி, சைத்திய கோபுரம், குடை, ஆமை முதவற்றுள் ஏதேனும் ஒரு சின்னம் இடம் பெறுகின்றது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொன், காணம், காசு ஆகிய நாணயங்களின் வடிவ அமைப்பு, எடை ஆகியவை குறித்து அறிய முடியவில்லை. சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் கிடைத்துள்ளன. இவை தவிர பிற இடங்களில் கிடைத்துள்ள நாணயங்கள் முழுக்க தங்கத்தால் ஆனவையல்ல. பிற உலோகக் கலப்புடையவை. பிற்காலச் சோழர்கால நாணயங்கள் பெரும்பாலும் செம்பால் ஆனவையே. இம்மாற்றம் அக்காலத்தின் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகின்றது.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது. முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப்பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது. அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.சங்ககால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகள்:

தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப் பயன்படுகிறது. முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து வட இந்தியா வழி முத்திரைக்காசு என்ற கருதுகோள் மாறத்தொடங்கியது. அதற்கு வழுச்சேர்க்குமாறு தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

முதன் முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள். இதைத் தொடர்ந்து செப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயம் சதுர வடிவமானது. முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை காணப்படுகிறது. இதன் தலையின் கீழ் ஆமைகள் இரு தொட்டிகளில் உள்ளன. பின்பக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் உள்ளது. தமிழ் - பிராமி வரி வடிவடிவத்தில் பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று நம்புகின்றனர். இதில் காணப்படும் ஆமை, வேள்வியோடு தொடர்புடையது. இது பாண்டியர் வேள்வியோடு கொண்டிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது

.

பெருவழுதி நாணயம்:

பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும். சிலர் பேரரசர்களான மூவேந்தர்களும் குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களையே பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இதற்கு முன்பு சங்ககால இலக்கிய கூற்றுகள் கற்பனை என்றே வரலாற்றாசிரியர்களால் நம்பப்பட்டு வந்தது. இந்நாணயம் கிடைத்த பிறகு சங்க காலத்தில் பண்டமாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை என்றும் நிலவி வந்த கருத்து மாறியது. சங்ககால பாண்டியர்களின் பட்டப்பெயரான பெருவழுதி என்பது இந்நாணயங்களில் பொறிக்கப் பட்டிருப்பதையும் இந்நாணயங்கள் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதைக் கொண்டும் சங்ககாலம் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியிருந்ததை அறிய முடிகிறது.


வேறொரு சங்க கால சோழர் நாணயம் (முன்பக்கம் யானையும் பின்பக்கம் புலியும் காணப்படுகிறது)

அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர்காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையிலும் பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டும் இருக்கிறது. இந்நீள்சதுர வடிவச் செப்புக் காசில் காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரைக் காசுகளில் உள்ள காளையைப் போலவே உள்ளதால் இக்காசு வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து செய்யப்பட்டுளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு சான்றாகத் திகழ்கிறது.மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்ககாலச் சேரர் நாணயங்கள் விற்பொறி பொறித்தனவாயும், சிலக் காசுகளில் மன்னர்களின் பெயரயே பொறித்ததாயும் உள்ளன. அதில் மன்னரின் தலை வடிவம் கீழும் மேற்பரப்பில் தலையைச் சுற்றி அரைவட்ட வடிவில் அவர்கள் பெயர் பொறித்தும் காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை போன்ற சங்ககாலச் சேர மன்னர்களின் காசுகளை உதாரணமாகக் கொள்ளலாம். மேலும் இவர்கள் வெளியிட்ட முத்திரைக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துளன.மலையமான் காசுகள்:

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.


தமிழகத்தில் கிடைத்த சாதவாகனர் காசுகள்:

சங்ககாலத் தமிழருக்கும் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்களுக்கும் நல்ல உறவு இருப்பது அவர்கள் வெளியிட்ட காசுகள் அதிகளவு தமிழகத்தில் கிடைத்திருப்பதைக் கொண்டு நிறுவலாம். வசிட்டிபுத்திர சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சிவ சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சாதகர்ணி மற்றும் கௌதமி புத்ர சாதகர்ணி போன்ற மன்னர்களின் நாணயங்களே அதிகளவில் உள்ளன. இந்நான்கு மன்னர்களின் நாணயங்களிலும் முன் பக்கத்தில் யானை மற்றும் அம்மன்னனின் தலையும் பின் பக்கத்தில் உச்சயினி குறியீடும் காணப்படும். மன்னனின் தலைப்பகுதியின் ஒரு பக்கம் அவனது பெயர் தமிழிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருதத்திலும் காணப்படும். இவற்றில் காணப்படும் தமிழ் எழுத்துகள் மாங்குளம் கல்வெட்டுகள் உள்ள தமிழ் போல் காணப்படுகிறது. சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் செய்த காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துளன.

அரிக்கமேட்டில் கிடைத்துள்ள உரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்து நாணயங்களும் அவரையடுத்து வந்த மன்னர் காலத்து நாணயங்களும் சங்க இலக்கியத்தில் சுட்டியபடி அயல் நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்து வந்த வணிகத் தொடர்புகளை நிலை நாட்டுகின்றன. கருநாடக மாநிலத்தில் சந்திரவல்லியில் கண்டெடுக்கப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயம் ஒன்று
சீனர்களோடு தமிழகத்துக்கு இருந்த தொடர்பினை விளக்குகிறது.

கரூரில் கிரேக்கக் காசு:


தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத்தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன . இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை
உறுதிப்படுத்தினர்

புதுக்கோட்டையில் அகசிட்டசு மன்னர் நாணயம்:உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது. இத்தகைய தொடர்பால், கருத்துப் பரிமாற்றங்களும், பண்ட மாற்றங்களும், பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது. தமிழகத்தில் கிடைத்த ரோமானிய நாட்டு மன்னர்களான அகசிட்டசு , தைபிரியசு, கலிகுலா, கிளாடியசு , நீரோ ஆகியவர்களின் நாணயங்களைக் கொண்டு, வரலாற்றாய்வாளர்கள் எந்தெந்த மன்னரின் காலத்தில் ரோமானியர் எந்த அளவு தமிழகத்துடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறிகின்றனர். இந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்குச் சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் திரவியங்களகவும் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன எனக் கருதுகின்றனர். இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன. சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் 'ஒலயக் குன்னம்' என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள 'தாலிக்கோட்டை' என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது. சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை. கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தாய்லாந்திலும் சீனாவிலும் சோழக்காசுகள் கிடைத்தைக் கொண்டு கிழக்காசிய நாடுகளுடனான சோழர் தொடர்பும் உறுதிப்பட்டுள்ளது. வரலாற்றாளர்கள், அதே போல் தமிழகத்தில் கிடைத்த பினிசிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும், சசானிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும் அந்தந்த நாடுகளுடனான தமிழகத்தின் தொடர்பையும் அறிய முடிந்தது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல் வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள், கண்ணாடி மணிகள், கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர் அந்நாட்டுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது எனக் கூறுகின்றனர்.
நன்றி: http://ta.wikipedia....தமிழக_நாணயவியல்