Thursday, February 28, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 40. நெருப்பும் இருளும் )

பாகம் 3 ,  40. நெருப்பும் இருளும்


தனது இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குகொண்டு தன்னைப்போலவே ஆகிவிட்ட சரக்கொன்றை மரத்தடிக்கு மித்திரையுடன் போய்ச் சேர்ந்தாள் ரோகிணி. அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவளுடைய மனச் சுமை
இரு மடங்காகியது.

சில தினங்களுக்கு முன்பு வரையில் அங்கே பொன் மலர்கள் பூத்துச் சொரிந்தன. செந்தளிர்கள் குறுநகை புரிந்தன. இயற்கைத்தேவி அதில் பொன்னூஞ்சல் ஆடிக்களித்தாள். இப்போது...?

நீண்ட பெருமூச்சு ரோகிணியின் இதயத்தை அறுத்துக் கொண்டு வெளியே வந்தது. நினைவு தடுமாறிய நிலையில் மரத்தின் மீது சாய்ந்தாள். சுருக்கென்று ஏதோ ஒன்று அவள் தோளைக் குத்திக் கிழித்தது. அதிலிருந்து இரத்தமும் பெருக்கெடுத்தது.

ரோகிணிக்கு வலி தெரியவில்லை. இரத்தக் கசிவையும் அவள் கவனிக்கவில்லை.

பதறிக்கொண்டு அதைத் துடைத்துவிடப் போனாள் மித்திரை. அவள் பரிவைக் கண்டு துயரத்துடன் சிரித்தாள் ரோகிணி.

“இரத்தம் கொட்டுகிறது, இளவரசி?’’

“கொட்டாமல் என்ன செய்யும்? நான் ஒடித்த மரக்கிளை என்னையே வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறது! நன்றாக என்னைப் பழிவாங்கிக் கொள்ளட்டும்; -நானே இதயத்தைக் குத்திக் கிழித்துக்கொண்டு விட்டேன்,
மித்திரை! நானே இதன் அழகையெல்லாம் அழித்து விட்டேன்!’’

காய்ந்துபோய்க் கீழே சருகாய்க் கிடந்த மலரிதழ்களை வாரியெடுத்தாள் ரோகிணி. ஒரு சொட்டுக் கண்ணீர் அதில் உதிர்ந்தது.

மித்திரைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சரஞ்சரமாகப் பூத்து நின்ற போது அந்த மரத்தை அவள் பார்த்திருக்கிறாள். “நீங்களா இப்படிச் செய்தீர்கள்?’’ என்று வெகுண்டு போய்க் கேட்டாள்.

ரோகிணியின் நினைவு அதற்குள் மாற்றமடைந்து, “நான் ஒடித்தேனா? யார் அப்படிக் கூறியது. இல்லவே இல்லை. காசிபன் இருக்கிறானே;  அவன்தான் இவ்வளவையும் ஒடித்தான், முறித்தான், அழித்தான்! இந்தச்
சொர்க்கத்தை நரகமாக்கியவன் அவன்தான்!... எனக்கு எதுவுமே தெரியாது மித்திரை!’’ ரோகிணியின் குரல் தழுதழுத்தது; அவள் தொண்டையை அடைத்தது.

மித்திரை பயந்தாள். ‘இளவரசியாருக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு விட்டதா?’

“இளவரசி! திடீரென்று உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?’’

மித்திரையின் கேள்வி ரோகிணியின் செவியில் விழவில்லை.  தன்னுடைய உலகத்தில் மூழ்கியிருந்த அவள், 

“மித்திரை! கொடும்பாளூர் இளவரசரின் இதயம் அன்பு பொங்கும் அருவியாமே! அது மெய்தானா?
பாவம் நங்கையார் கூறியதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு நாள் பழகியும் நானே அவரை அறிந்துகொள்ளவில்லை’’ என்று தனக்குத்தானே பேசுவதுபோல் கூறினாள்.

“நீங்கள் கூறுவதொன்றும் எனக்கு விளங்கவில்லை, இளவரசி’’ என்றாள் மித்திரை.

“போனால் போகிறது! நீ இந்த மரத்தடியை இதற்கு முன்னார் பார்த்திருக்கிறாயா? முன்பு இருந்ததுபோல மீண்டும் இங்கே பசுமை நிழல் பரவுமா? பொன்மலர் சொரியுமா? பூஞ்சிட்டுப் பாடுமா? தென்றல் தவழுமா?
தேன்துளி சிந்துமா-சொல், மித்திரை.’’

மரத்தைப் பார்த்துவிட்டு மங்கையை நோக்கினாள் மித்திரை. “இளவரசி! பட்டமரந்தான் தழைக்காது, ஆனால் இது பச்சைமரம். பேணி வளர்த்தால் இதில் மறுபடியும் மலர் சொரியும்.’’

ஆனந்த வெள்ளப் பெருக்கெடுத்து வழிந்தது, ரோகிணியின் விழிகளில்.

“மித்திரை! நீ என் உயிருக்குயிரானவள். நீ கூறியது மட்டிலும் மெய்யாகிவிட வேண்டுமென்று புத்தபிரானை வேண்டிக் கொள். நான் இனி அதை என் கண்ணீராலேயே வளர்க்கப் போகிறேன். தினந்தோறும் இங்கு வந்து கண்ணீர் சொரிகிறேன்.’’

“இவ்வளவும் எதற்காக இளவரசி?’’

“எதற்காகவா? எல்லாம் என் இளவரசருக்காகத்தான். சோலைவனத்தைப் பாலைவனமாக்கிவிட்டேனல்லவா? அப்பாவத்துக்கு இங்கே கண்ணீர் சொரிந்தால் போதாது. செந்நீர் கொட்டி இதை முதலில் வளர்த்துவிட
வேண்டும். பிறகு இளவரசரை அழைத்து அவர் பாதங்களைப் பற்றிக்  கொண்டு கதறவேண்டும், ‘இளவரசே! இந்தப் பாவியை மன்னித்து ஏற்றுக்
கொள்ளுங்கள். இவளுக்கு உங்கள் அரண்மனையில் புகலிடம் தருவதாக வாக்களியுங்கள். வாக்களித்தால் நான் அதற்காக என்னுடைய எல்லாப் பந்தங்களையும் உதறிவிட்டு உங்களிடம் வருகிறேன். அதன் பிறகு
எனக்குத் தாய் எதற்கு? தந்தை எதற்கு? கடவுள் எதற்கு? எல்லாம் நீங்கள், நீங்கள், நீங்கள்தான் இளவரசே, என்று அவரிடம் மன்றாட வேண்டும்...’’

அம்புபட்ட அன்னப் பறவையென ரோகிணி துடி துடிப்பதைக் கண்டு மித்திரை திக்குமுக்காடிப் போனாள். காசிபனுக்காக அதுவரை துடித்தவள், அருள்மொழியைச் சந்தித்தபின் இளங்கோவுக்காத் துடிப்பானேன்? இதென்ன
விசித்திரமான மாயம்?... எவனைத் துரோகியென்றும், கொடியவன் என்றும் வஞ்சகன் என்றும் தூற்றினாளோ அவனுக்காகவா இப்போது அனைவரையுமே
துறந்துவிடுவதாகச் சொல்கிறாள்? மறந்துவிட மனந்துணிகிறாள்!

தன்னையும் எங்கே மறந்துவிடுவாளோ என்ற பயம் மித்திரைக்கு.

“இளவரசி! என்னையும் மறந்துவிடப் போகிறீர்களா?’’

“ரோகணத்திலிருந்து வந்தவர்களில் நீ ஒருத்திதான் எனக்குச் சொந்தம்! உன்தந்தை கந்துலனை மறந்துவிட்டு வருவதானால் உன்னையும் என்னோடு அழைத்துக் கொள்கிறேன். கொடும்பாளூர் அந்தப்புரத்துக்கு நீ என்
தோழியாக வருகிறாயா?’’

“அது என் பாக்கியம்!’’ என்று முகமலர்ச்சியோடு கூறினாள் மித்திரை.

பொழுது சாய்ந்தவுடன் இருவரும் மாளிகைக்குத் திரும்பினார்கள். நேரம் சென்றது, உணவு முடிந்தது.

ரோகிணி மெல்லத் தனது தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள். கெஞ்சும் பாவனையில் அவர் முகத்தை நோக்கினாள். மகிந்தர் திரும்பினார்,

“என்ன ரோகிணி?’’

“கட்டாயம் நான் சோழபுரத் திருவிழாவுக்குச் செல்லவேண்டும். அப்பா! நீங்களும் அன்னையாரும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும். நானும்
மித்திரையும்
வல்லவரையர் தாத்தா புறப்படும்போது ஒன்றாகச் செல்கிறோம். மறுக்காதீர்கள், அப்பா!’’

மகிந்தரின் முகம் சுருங்கியது. அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

“உனக்குச் சித்த சுவாதீனமில்லையா?’’ என்றார்.

“சோழபுரத்துக்குப் போனால் எல்லாம் சரியாகி விடும், அப்பா!’’

“ரோகிணி!’’ என்று அதட்டிவிட்டு, பேராசையால் விரிந்த கண்களோடு உருக்கி வார்த்த இரும்புத்தகடு போன்ற குரலில் அவளிடம் பேசினார்:

“நீ சோழபுரத்துக்குப் போய்ச் சேர்வதற்குள், சோழபுரமே இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறது. இல்லை, புதுநகர் புதைவிழா நடந்துவிடும். எல்லோரும் மடிந்து போய்விடுவார்கள்!’’

“அப்பா!’’

மகளின் வாயைப் பொத்தினார் மகிந்தர்.

“இப்போது நாம் எதற்குமே வாயைத் திறக்கக்கூடாது ரோகிணி! சோழபுரத்தை நோக்கிக் கூட்டத்தோடு
கூட்டமாய்ப் பாண்டியர்களும் சளுக்கர்களும் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பகைவர்களைக் கொண்டே அவர்களை அழிக்கப் போகிறோம் நாம். நடப்பது வெற்றிபெற்றவர்களுடைய வெற்றி விழாவல்ல; தோல்வியுற்றவர்களின் வெற்றிவிழா! எல்லாம் தலைகீழாக மாறப் போகிறது!’’

ரோகிணி நடுநடுங்கினாள்.

‘எது தலைகீழாக மாறப் போகிறது?  இளவரசர் இப்போது எங்கு இருக்கிறார்? புத்தர் பெருமானே! இளவரசர்
கொடும்பாளூரை விட்டு எங்கும் போய்விடாதிருக்க வேண்டும்; அவரை எப்படியாவது காப்பாற்றிவிடு, கருணை வள்ளலே!’

“ரோகிணி! இனிமேல் முடிவு தெரியும்வரையில் நீ இந்த மாளிகையை விட்டு எங்குமே வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் உன் அன்னையின் அருகிலேயே இருந்துவிடு. தோட்டத்தின் பக்கம்கூட நடமாட வேண்டாம்.
விரைவில் நம் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும்; வழியும் பிறந்துவிடும் -  கவனமாக இரு மகளே’’ என்றார் மகிந்தர்.

ரோகிணியை உறங்கச் சொல்லிவிட்டு, தம்முடைய கட்டிலுக்குச் சென்றார் மகிந்தர். அவர் கூறிய செய்திகளைக் கேட்ட பின்னர் ரோகிணியின் மனதில்
ஆயிரமாயிரம் நினைவுகள் ஒரே சமயத்தில் அலைமோதின. அவளுக்கு உறக்கம் எப்படி வரும்?

அருகில், அடுத்த கட்டிலில் அவருடைய அன்னையார் தமது புதல்வனை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தார். செய்தியைக் கேள்வியுற்ற நாளிலிருந்தே
அந்த மாளிகையில் ஒருவருக்கும் உறக்கமில்லை. கூடத்தின் கோடியில் மகிந்தர் தமது திட்டங்களில் மூழ்கிக் கிடந்தார்.

நள்ளிரவு நேரம் தாண்டியது. மகிந்தர் தமது மகிஷியிடம் ஆறுதல் கூறுவதற்காக எழுந்து வந்தார். எழுந்து வந்தவர் நேரே மகிஷியிடம் செல்லவில்லை. ரோகிணியை உற்றுப் பார்த்துவிட்டு, அவள் உறங்குவதாக நினைத்துக் கொண்டு மகிஷியை அணுகினார் மகிந்தர்.

ரோகிணியின் செவிகள் கூர்மை பெற்றன.

“காசிபனை நினைத்துக்கொண்டு இனி நாம் அழக்கூடாது, தேவி! அவன் உயிரோடிருக்கிறான்; அவனுக்கு ஒரு துன்பமும் நேரவில்லை!’’

“என்ன?’’ வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் மகிஷி.

ரோகிணியின் இதயத் துடிப்பு நின்று மீண்டும் தொடங்கியது.

“ரோகிணிக்கு இப்போது இது தெரியக்கூடாது. பேசாதிரு.’’

“சொல்லுங்கள்!” என்று கத்தினார் மகிஷி.

“அவன் இறந்துவிட்டான் என்றுதான் நானும் முதலில் நம்பினேன். நமக்குச் செய்தி அனுப்பிய வீரமல்லன் சிறிது அவசரப்பட்டுவிட்டான்! அந்த அவசரமும் நமக்கு ஒருவகையில் பெரிய உதவி செய்திருக்கிறது. அதிர்ச்சி
தாங்காமல் ரோகிணி என்னிடம் பல ரகசியங்களைச் சொல்லி விட்டாள். தீமை நிறைந்த செய்தியால் நமக்கு நன்மை விளைந்திருக்கிறது, தேவி!”

“அந்தப் பாதகன் வேண்டுமென்றே பொய்யான செய்தி
அனுப்பியிருப்பான்’’ என்று கூறினார் மகிஷி.


“இருக்கட்டுமே! அதன் பலன் என்ன? பலனை நினைத்துப் பார்!’’

ரோகிணியின் இதயம் போர்முரசு கொட்டத் தொடங்கியது.

மகிஷியின் குரல் எழும்பிற்று, “எங்கே காசிபன்? அவன் இப்போது எங்கே இக்கிறான்? இந்தச் செய்தி ஏன் பொய்யாக இருக்கக் கூடாது?’’

மகிந்தர் மெல்லச் சிரித்தார். “அவன் இப்போது பழிவாங்கும் படலத்தில் இருக்கிறான். நம்முடைய நாட்டிலிருந்து எவன் மணிமுடியை மீட்டுவந்தானோ,
அவனுடைய நாட்டில் இருக்கிறான் காசிபன். அவனுடைய நாட்டை முதலில் காடாக்குவான். அவனை அழிப்பான். அல்லது சிறைப்பிடிப்பான்; பிறகு நம்மைச் சிறை மீட்க வருவான்! அவனுக்குப் பின்னால் ஆயிரமாயிரம்
வீரர்களும் நம் அமைச்சரும் இருக்கிறார்கள்.’’

ரோகிணியின் நெஞ்சில் நெருப்புத் திவலைகள் கொழுந்து விட்டன.

‘கொடும்பாளூர்க் கோனாட்டில் படைகளோடு காசிபன்! என்னுடைய இளவரசரின் நாடாயிற்றே அது! அங்கென்ன இவனுக்கு வேலை? இந்தப் பகைவனுக்கு அவரிடம் என்ன வேலை! காசிபா! நீ என்னைப் பொறுத்தவரையில் இறந்து விட்டாய்! இன்னும் உயிரோடிருக்கிறாயா?
அப்படியானால் நீ என் தம்பியல்ல; என் பகைவன்; பகைவன்!’

பற்களைக் கடித்துக் கொண்டு, கண்ணீரை அடக்கிக் கொண்டு, பெருமூச்சை நிறுத்திக்கொண்டு கட்டிலில் கிடந்து புழுவாய்த் துடித்தாள் ரோகிணி.

மூன்றாம் சாமமாகியது. அதுநாள் வரையில் உறங்காத அவள்  பெற்றோர் அமைதியுடன் உறங்கினார்கள்.

ரோகிணி சந்தடியின்றி எழுந்தாள். சுவர்க்கோழியின் குரல் பயங்கரமாக அவள் செவிகளைத் துளைத்தது. பின்புறத் தோட்டத்தில் ஏதோ பறவைகளின் சிறகொலி எழுந்தது.

அவைகளைத் தவிர எங்குமே நிசப்தம்; எங்குமே அமைதி; எங்குமே இருள்.

அடிமேல் அடிவைத்து நகர்ந்தாள். மாளிகையின் வெளி வாயில் கதவு கிறீச்சிட்டது. அதற்கு வெளியே உற்று நோக்கினாள். நெடுந்தூரத்துக்கு ஒரே இருள் சூழ்ந்திருந்தது.

கோட்டை வாயிலில் தீப்பந்தங்கள் நெருப்புத் துண்டுகள் போல் தெரிந்தன. வேறு புறம் திரும்பினாள். ரோகிணியின் நெஞ்சிலே நெருப்பு நிறைந்திருந்தது; அவள் மெல்லுடலைக் கனத்த இருள் தழுவியது.

தொடரும்


Wednesday, February 27, 2013

யானை கண்ட தமிழ்

யானை கண்ட தமிழ்வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்:

யானை/ஏனை (கரியது)

வேழம் (வெள்ளை யானை)

களிறு

களபம்

மாதங்கம்

கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)

உம்பர்

உம்பல் (உயர்ந்தது)

அஞ்சனாவதி

அரசுவா

அல்லியன்

அறுபடை

ஆம்பல்

ஆனை

இபம்

இரதி

குஞ்சரம்

இருள்

தும்பு

வல்விலங்கு

தூங்கல்

தோல்

கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)

எறும்பி

பெருமா (பெரிய விலங்கு)

வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)

புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)

ஒருத்தல்

ஓங்கல் (மலைபோன்றது)

நாக பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)

கும்பி

தும்பி (துளையுள்ள கையை உடையது)

நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)

குஞ்சரம் (திரண்டது)

கரேணு

உவா (திரண்டது)

கரி (கரியது)

கள்வன் (கரியது)

கயம்

சிந்துரம்

வயமா

புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)

தந்தி

மதாவளம்

தந்தாவளம்

கைம்மலை (கையை உடைய மலை போன்றது)

வழுவை (உருண்டு திரண்டது)

மந்தமா

மருண்மா

மதகயம்

போதகம்

யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)

மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)

கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்:
பிடி

அதவை

வடவை

கரிணி

அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்):
கயந்தலை

போதகம்

துடியடி

களபம்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 39. ஒரு குடம் கங்கை )

பாகம் 3 ,  39. ஒரு குடம் கங்கை  


கங்காபுரியில் வந்து கூடும், ராஜபாட்டைகள், நெடுஞ் சாலைகள், காட்டு வழிகள், ஒற்றையடிப் பாதைகள் அனைத்துமே புதுவெள்ளப் பெருக்கெடுத்த
நதிகளாக மாறி மக்களை அங்கே திரட்டிக் கொண்டு வந்தன. சாலைகள் தோறும் சாரை சாரையாக மனிதர்கள், மாட்டு வண்டிகள் பூட்டிய, ரதங்கள், பல்லக்குகள்!

சோழபுரத்தின் திருவிழாவோ சோழ சாம்ராஜ்யத்தின் புது வாழ்வுப் பொன்விழா! அதற்காக ஐந்து காதம் பத்துக் காதம் தொலைவிலுள்ள நாடு நகரங்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் புறப்பட்டது.

விழாவுக்கு முதல்நாளே கங்கைப் புதுநகரம் அலைமோதும் வங்கப் பெருங்கடலாகிவிட்டது. நகரத்தில் நிறைந்து விட்டவர்கள் ஒரு பகுதி என்றால்,
நிறைவு காண வந்து கொண்டிருந்தவர்களோ ஒன்பது பகுதி. ஒன்பது நாள் விழாவல்லவா!

கோயிலின் கும்பாபிஷேகத் திருவிழா, புதுநகர் புகுவிழா. கங்கை நாடு கொண்ட வெற்றிவிழா!

தெருக்கள்தோறும் ஆடல்கள், பாடல்கள், கூத்துக்கள், குதூகல நிகழ்ச்சிகள்! திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் வசதிக்காக  அன்னசத்திரங்கள், உறைவிடங்கள், மறைவிடங்கள்! எங்கு நோக்கினும் இயல், இசை, நாடகத் தமிழின் இன்ப முழக்கம்!

லட்சோப லட்சம் மக்களின் பக்திப் பரவசக் கண்ணீர் பொழியக்  கங்கை கொண்ட சோழீசுவரருக்குக் கங்கை நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. உயர்ந்த கோயில் கோபுரத்தின் உச்சியைப் போலவே தங்களது
சோழவள நாடும் உலகின் கண் உயர்ந்து விளங்குவதைக் கண்டு பூரிப்படைந்தனர் அங்கு கூடி நின்ற தமிழ்ப் பெருமக்கள்.

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு மாமன்னர் திருச்சிற்றம்பலச் சிற்பியாரோடு அதன் வெளிப் பிரகாரத்தை வலம்வரத் தொடங்கினார்.
சிற்பியாரின் உடலில் அப்போது ஊனில்லை. உயிரும் அதன் ஒளியுமே அவர் கண்களில் ஊசலாடிக் கொண்டிருந்தன. கடுமையான விரதம், ஏகாக்கிரகச்
சிந்தனை, ஓயாத உழைப்பு இவ்வளவுமாகச் சேர்ந்து அவரை நடப்பதற்குக் கூடச் சக்தியற்றவராகச் செய்திருந்தன. மாமன்னரின் கைத்தாங்கலில் அவர்
மெல்ல ஊர்ந்து வந்தார்.

சுற்றுப் பிரகாரத்தில் தோன்றிய ஒவ்வொரு சிற்பமும் மாமன்னரிடம் ஒரு கவிதை பாடியது. ஒவ்வொரு சிற்பத்தின் முன்பும் சிலை போல் நின்றுவிட்டு,
சண்டேசுவர அநுக்கிரக மூர்த்தியின் அருகில் வந்தார் சக்கரவர்த்தி. மெய் சிலிர்த்தது அவருக்கு. கைத்தாங்கலில் வந்த சிற்பியாரின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பேச நா எழவில்லை.

சிற்பியாரே பேசினார், “சக்கரவர்த்திகளே, எம்பெருமானின் தாள் பணிந்து நிற்கும் சண்டேசுவர மூர்த்தியை நான் கற்பனை செய்வதற்கு வித்தாக இருந்தவர்கள் தாங்கள்தாம். இங்கு நான் சிற்பத்தில் தங்களையே
காணுகின்றேன். தங்களுடைய நெடுநாள் ஆட்சியில் தாங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளுக்காகவும், இனிப் பெறவிருக்கும் வெற்றிகளுக்காகவும் இறைவனே
மனமகிழ்ந்து தங்கள் சிரத்தில் வெற்றி மாலை சூடுவதுபோல் கற்பனை செய்திருக்கிறேன். என்னுடைய ஆத்ம நிறைவுக்காகத் தங்களின் கட்டளை
பெறாமல் நான் செய்த சிற்பம் இது. தாங்கள் இதற்காக என்னை மன்னித்தருள வேண்டும்.’’

சக்கரவர்த்தி சிற்பியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

“ஆமாம்! தங்களது திருஉருவத்தை இங்கு செலுக்கி வைப்பதற்குத் தாங்கள் எனக்கு அநுமதி அளிக்கவில்லை. தங்கள் முகத்தைக் காணமுடியாவிட்டாலும் கலையுள்ளம் கொண்டவர்களுக்குத் தாங்கள் அகம்
தெரிய வேண்டுமல்லவா? எதிர்காலத்தில் வரும் கலைஞர்கள் அதைக் கண்டு கொள்வார்கள்.’’

“சிற்பியாரே, நான் எத்தனையோ நாடுகளை வென்றவன்தான். அனால் தாங்கள் என்னையே வென்று விட்டீர்கள். முடிசூடிய மன்னனாக இருந்தாலும்,
மன்னாதி மன்னர்களுக்கெல்லாம் தலைவனான எம்பெருமானுக்கு அடிமைதான் என்ற பேருண்மையை இங்கு நிலைநாட்டி விட்டீர்கள். கலைஞர்கள் கடவுளுக்கு
அடுத்தவர்கள் அல்லவா? என்னுடைய பிறவிப் பயனை என் கண்ணெதிரில் காட்டிவிட்டீர்கள், கலைஞரே!’’

“நான் என் பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்!’’ என்று உள்ள நிறைவோடு பெருமூச்சு விட்டார் திருச்சிற்றம்பலச் சிற்பியார்.

“தாங்கள் பயன் பெற்றுவிட்டீர்கள், மெய்தான். ஆனாலும் தங்களுக்கு என்னுடைய நன்றிக்கடன் ஒன்று இருக்கிறதே! அதை எப்படிச் செலுத்துவது?
தங்களது கலைத்திறனுக்கு ஈடான வெகுமதி எதுவென்றே எனக்குத் தோன்றவில்லை. தங்களுக்கு எது விருப்பமோ அதை இப்போதே கேட்டுப் பெறுங்கள்! இப்போதே கேளுங்கள், சிற்பியாரே!’’

சிற்பியார் ஒருகணம் சிந்தனை செய்துவிட்டுக் கூறினார்.

“என் வாழ்வில் எனக்கு ஒரு குறையுமில்லாமல் தாங்கள் செய்து வைத்திருக்கிறீர்கள். இந்த நகரமும் சிவாலயமும் முடியும் வரையில் நான் உயிர்வாழ விரும்பினேன். அந்த ஆசையும் இறைவன் திருவருளால்  நிறைவேறி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களோ, வாரங்களோ, மாதங்களோதான் என்னுடைய காலம்.’’

“சிற்பியாரே!’’ மன்னாதி மன்னர் பதறினார்.

“மெய்தான்! இப்போதே இறைவனின் அழைப்பு என் செவிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அவருடைய திருவடி சேரும் நாளில், தாங்கள் பெற்றுத்தந்த வெற்றியில் எனக்கும் பங்கு வேண்டும்.’’

மாமன்னர் யோசனை செய்தார். “வெற்றியில் பங்கா?’’

“என் உயிர் பிரிந்தவுடன் என் பூத உடலுக்கு ஒரு குடம் கங்கை நீர் வேண்டும். இந்தப் பிறவியில் நான் தெரிந்தோ
தெரியாமலோ செய்த குற்றங் குறைகளைக் கங்கை நீரால் கழுவிக்கொண்டு நான் இறைவனிடம் செல்ல விரும்புகிறேன். இந்தப் பேராசைக்காரனுக்கு ஒரே
ஒரு குடம் கங்கை நீர் பரிசளிப்பீர்களா?’’

சிற்பியார் சமைத்துவிட்ட சித்திரமாகி நின்றார் சக்கரவர்த்தி. மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், மாபெரும் கற்றளி, கடல் போன்ற ஏரி இவ்வளவையும் தோற்றுவித்த சிற்றம்பலனாரின் ஆசை அவரையே எங்கேயோ வானத்துக்குக் கொண்டு சென்றது; ஒரு குடம் கங்கை நீர்!

“கங்கை நீரின் பெருமையை இப்போதுதான் நான் அதிகமாக உணருகிறேன், சிற்பியாரே. தாராளமாகத் தங்கள் விருப்பம் நிறைவேறும். இந்தப் பரிசளிப்பை ஒரு விழாவாகவே நடத்துவோம். பட்டத்து யானைமீது
கங்கை ஊர்வலமாக வந்து தங்கள் மாளிகைக்குச் சேருவாள்!’’

சிற்பியார் உணர்ச்சிப் பெருக்கோடு சக்கரவர்த்திகளைச் சிரம்தாழ வணங்க முயன்றார். சக்கரவர்த்திகளோ அவரைத் தடுத்து நிறுத்தித் தமது மார்புறத் தழுவிக் கொண்டார்.

கொடும்பாளூர் நகரத்தில் முக்கால் பகுதிக்குமேல் கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றுவிட்டதால் நகரத்தின் தெருக்கள் சந்தடியின்றிக் கிடந்தன. முதியவர்கள், கன்றுகாலிகளைக் கட்டிக் காக்கும் பணியாட்கள்,
நெடுந்தொலைவுப் பிரயாணம் செய்ய முடியாதவர்கள் ஆகியோரே நகரத்தில் எஞ்சியிருந்தனர். காவல் வீரர்களின் நடமாட்டம் மற்ற நாட்களைவிட
மிகுதியாக இருந்தது. நகரத்தின் நான்கு எல்லைகளைச் சுற்றிலும் சிற்சில வீரர்கள் உளவறியச் சென்றிருந்தார்கள். அரண்மனையின் கோட்டையை அடுத்த ஆயிரம் குதிரை வீரர்கள் ஆயுதம் தாங்கிச் சித்தமாக இருந்தனர்.

இளங்கோ அங்கு வந்து சேர்ந்து ஐந்தாறு தினங்களாகி விட்டன. இந்த ஐந்தாறு தினங்களிலும் அவன் மாங்குடி மாறனிடம் ஐந்தாறு முறைகூட முகம் கொடுத்துப் பேசவில்லை.

இரவு வேளைகளில் இளங்கோ உறங்குவதில்லை என்பதும் மாறனுக்குத் தெரியும். எத்தனை தினங்களுக்குத் தான் அவனால் பொறுக்க முடியும்?

ஆறாவது நாள் இரவில் பால் பொழியும் நிலவில் மாறன் மனம் துணிந்து இளங்கோவிடம் பேச்சுக் கொடுத்தான்.

“இளவரசே!’’

தலைதூக்கிப் பார்த்தான் இளங்கோ.

“சோழ சாம்ராஜ்யம் முழுவதுமே சில தினங்களாக ஆனந்தக் களியாட்டத்தில் மூழ்கியிருக்கிறது. நாம் அனைவருமே குதூகலத்துடன் இருக்கவேண்டிய சமயம் இது. மாபெரும் சாதனைகளை நிறைவேற்றி
வந்திருக்கிறார் நம் சக்கரவர்த்திகள். இந்த நிலையில் தாங்கள்...’’

மாறனை அருகில் அழைத்து, அவனுக்குப் புல் தரையைச் சுட்டிக் காட்டினான் இளங்கோ. அதுவரையில் அவனுக்குள் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்கள் அப்போது அவனிடமிருந்து விடுதலை பெறத் துடித்தன.

“மாறா என்னுடைய மனத்திலும் ஓரளவு இந்தக் குதூகலம்
குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் நான் என் கைகளைக் கட்டிக்கொண்டு பொறுமையோடு இருக்கிறேன். இல்லா விட்டால் இதற்குள் ஒருத்தியைச்
சித்திரவதை செய்து எமனுலகுக்கு அனுப்பியிருப்பேன்!’’

“ரோகணத்து இளவரசியாரைச் சொல்லுகிறீர்களா?’’

“ஆமாம்.’’

“நானும் அப்படித்தான் நினைத்தேன். பயங்கரமாக ஏதாவது
நடைபெற்றிருக்க வேண்டுமென்று சந்தேகப் பட்டேன்.’’

“இனி நடப்பதற்கு ஒன்றும் இல்லை, எல்லாமே முடிந்து விட்டது.’’

“என்ன கூறுகிறீர்கள், இளவரசே!’’ என்று துடித்தான் மாறன்.

“ஆமாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் மீண்டும்  நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். அமைதி எனக்குப் போர்க்களத்தில்தான் கிடைக்கும். விழா முடிந்தவுடன் என்னைக் கடாரத்துக்கு அனுப்புவதாக வாக்களித்திருக்கிறார் மாமன்னர். இன்றே அனுப்பி
வைத்தால்கூட நான் மகிழ்ச்சியடைவேன்!”

“தங்களுடைய திருமணம்?’’

வருத்தமுடன் சிரித்தான் இளங்கோ.


“திருமணப்பெண் எனக்குக் கடாரத்தில் காத்திருக்கிறாள். அவள்தான் வெற்றித் திருமகள். வெற்றி  பெற்றால் அவளை மணந்து விடுவேன். இல்லாவிட்டால், அவளுக்காக வீரசொர்க்கம் செல்வேன்.’’

“வேண்டாம் இளவரசே! மனமுடைந்து தகாதசொல் கூறாதீர்கள்.  எதிலும் எப்போதும் தங்களுக்கு வெற்றியே கிடைக்கும்’’ என்றான் மாறன்.

“போர்க்களங்களில் வெற்றி கிடைக்கலாம். ஆனால்...’’ இளங்கோவின் குரல் தழுதழுத்தது.

மாறன் பதறினான். தாவிச் சென்று இளங்கோவின் கரங்களைப் பற்றினான்.

“இந்த நிலையில் தங்களிடம் நான் வந்ததே தவறு. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், இளவரசே! கடாரத்துக்கு என்னையும் மறவாமல் அழைத்துச்
செல்லுங்கள். எப்போதும் தங்களுடன் இருந்து தங்கள் பணியிலேயே செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் செய்யுங்கள்.’’

இந்தச் சமயத்தில்...

அரண்மனையின் வெளிக்கோட்டைக் கதவுகள் அவசர அவசரமாகத் திறக்கப்படும் சத்தம் கேட்டது. குதிரை ஒன்று வேகமாக அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அதிலிருந்து குதித்த ஒருவன் இளங்கோவை நாடி ஓடி
வந்தான்.

அவன் கூறிய செய்திகள் பயங்கரமான செய்திகள்.

அவ்வளவையும் கேட்டுவிட்டு,


“உடனே ஆயிரம் குதிரை வீரர்களையும் சோழபுரம் நோக்கி அனுப்பி வை! மற்ற வீரர்கள் அனைவரையும் ஆங்காங்கே
பிரித்து அனுப்பு! நீங்கள் யாவரும் முதலில் செல்லுங்கள்; இதோ நானும் கிளம்புகிறேன்’’ என்று துடித்துக்கொண்டு எழுந்தான் இளங்கோ.

படைத் தலைவன் கட்டளையைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றான்.

“புறப்படு, மாறா!’’

“நாம் அனைவருமே புறப்பட்டு விட்டால் கொடும்பாளூருக்குக் காவல்?’’

சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பெரிதா, இல்லை, அதற்குள் அடங்கிய இந்தக் கோனாடு பெரிதா?’’

“சித்தம் இளவரசே!’’ என்று தணிந்துவிட்டான் மாறன்.

என்றாலும், ஒரு கடமையை அவன் மறக்கவில்லை.


“சக்கரவர்த்திகள் நம்மை இங்கே இருக்கும்படிக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அவர்களது கட்டளையை மறந்து...’

அவனுடைய சொல்லுக்குச் செவி சாய்க்கும் பொறுமை இளங்கோவுக்கு இல்லை. சோழபுரம் பாதையில் விழாக் கூட்டத்துடன் மாற்றுடையில் செல்லும் பகைவர் கூட்டம்தான் அப்போது அவன் கண்முன் நின்றது. பெயரளவுக்கு  ஒரு சிறு படையை அங்கே நிறுத்திவிட்டுக் கிளம்பிவிட்டான்.

ஆயிரம் குதிரைகள் சென்ற இரண்டு நாழிகைப் பொழுதுக்குப் பிறகு, இரண்டு குதிரைகள் மட்டும் கொடும்பாளூரை விட்டுத் தனியே வடக்கில்
சென்றன. அதைக் கண்ட கோனாட்டின் தலைநகரம் ஏக்கப் பெருமூச்சு விட்டு நின்றது, அந்த இரவு வேளையில்.

தொடரும்

Tuesday, February 26, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 38. திருமொழியாள் )


  பாகம் 3 , 38. திருமொழியாள்  


ரோகிணி தன் தந்தையிடம் சோழநாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களைக் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராதவாறு அங்கு அருள்மொழி வந்து சேர்ந்தாளல்லவா?

அவளைக் கண்டவுடன் பதறி எழுந்த மகிந்தர் தான் போகிற போக்கில் ரோகிணிக்குச் சைகை செய்து, ஒரு முக்கியமான எச்சரிக்கையோடு உள்ளே சென்றார். காசிபனின் மரணச் செய்தியைப் பற்றிய எச்சரிக்கை அது.

அந்தச் செய்தியை வெளியிட்டால் அதனால் தங்களுக்கே ஆபத்து என்பதால், அதை மறைத்து வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தார் மகிந்தர். ‘அந்தச் செய்தி அவருக்கு எப்படி எட்டியது? அப்படியானால் அவருக்கும் சதிக்கூட்டத்துக்கும் தொடர்பு  உண்டா? காசிபனையும் தூண்டிவிட்டது மகிந்தராக இருக்குமோ?’ -இது
போன்ற ஐயங்கள் தஞ்சை அரண்மனையில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மகிந்தரின் கவலை.

அவருடைய குமாரத்தி அதை இளங்கோவிடம் வெளியிட்டுவிட்ட  விவரம் அவருக்குத் தெரியாது. ஆகவே, ‘உன் தம்பியின் முடிவு பற்றி இந்தப்
பெண்ணிடம் வாய் திறக்காதே’ என்று ரோகிணியைக் கண்களால் எச்சரித்துவிட்டுச் சென்றார்.

மகிந்தரின் எச்சரிக்கையைப் புரிந்து கொள்ளும் நிலையிலோ அதைப் பொருட்படுத்தும் நிலையிலோ ரோகிணி அப்போது இல்லை. அருள்மொழியைக் கண்டவுடனேயே அவளுடைய முகம் வெளுத்துவிட்டது.
உயிர் குன்றிவிட்டது. செய்யத்தகாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டுவிட்ட உணர்ச்சி ரோகிணிக்கு. நங்கையின் முகத்தில் விழிப்பதற்கு நடுநடுங்கிவிட்டாள் அவள்.

அவளுடைய நடுக்கத்திலிருந்து அதை விடுவிப்பவள் போல், அருள்மொழி ரோகிணியை அன்புடன் அணைத்துக் கொண்டு ரோகிணியின் அறைக்குச் சென்றாள். அருகில் அவளை அமர்த்திக்கொண்டு, குனிந்திருந்த ரோகிணியின் முகத்தைப் பரிவோடு உயர்த்தினாள். அருள்மொழியின்
கரத்தில் ரோகிணியின் கண்ணீர்த் துளிகள பொலபொலவென்று உதிர்ந்து சிதறின.

“ரோகிணி! இருந்தாற் போலிருந்து உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’’

ரோகிணி தனக்குள் பொருமினாளே தவிர, வாய் திறக்கவில்லை.

“சொல் ரோகிணி! நாங்கள் உனக்கு என்ன தீங்கு செய்துவிட்டோம்? எதற்காக நீ எங்களுடைய நாட்டு ரகசியங்களை உன் தந்தையிடம் கூறிக்கொண்டிருந்தாய்? எனக்குக்கூடத் தெரியாத அரசியல் அந்தரங்கச்
செய்திகளை நீ எப்படித் தெரிந்துகொண்டாய்? இப்போது ஏன் அதை

அவரிடம் கூறினாய்? உன்னுடைய நோக்கந்தான் என்ன ரோகிணி?’’

ரோகிணியைப் பற்றிக்கொண்டு உலுக்கினாள் அருள்மொழி. அவள் குரலில் அன்பு மட்டுமல்ல; கண்டிப்பும் கடுமையும் கலந்திருந்தன.

ரோகிணி அதற்கும் வாய் திறக்கவில்லை.

“ரோகிணி! நீ செய்திருப்பது வெறும் குற்றமல்ல, மிகப் பெரிய குற்றம்! பாவம் ரோகிணி! மகாப் பாவம்! கோடிக்கணக்கான மக்களின் உயிர், உடமை,
மானம் இவைகளைக் காற்றில் பறக்கவிட எப்படித்தான் நீ மனம் துணிந்தாயோ?’’

ரோகிணியின் இதழ்கள் துடித்தன. “அக்கா! எல்லாம் அந்தக் கொடும்பாளூர் இளவரசரால் வந்த வினை அக்கா! என் காசிபனை - அவர் கொன்றுவிட்டாரக்கா!’’ என்று குமுறினாள்.

“என்ன, உன் தம்பியைக் கொன்றுவிட்டாரா? இருக்கவே இருக்காது! யாரோ உன்னிடம் பொய் கூறியிருக்கிறார்கள். அவரையா நீ குறை சொல்கிறாய்? உன்னைவிட அவரை எனக்குப் பல ஆண்டுகளாய்த் தெரியும். ஒருக்காலும் அவர் இந்த இழிசெயலைச் செய்திருக்க மாட்டார்!’’

“உண்மைதான், அக்கா!’’

“இல்லை! கொடும்பாளூர் இளவரசரின் வெளித் தோற்றந்தான் கொடுமையானது. கடுமையான பாறைக்கிடையில் கசிந்துருகும் குளிர்
அருவியை நீ பார்த்திருக்கிறாயா? அது போன்று நெக்குருகும் அன்பு மனம் கொண்டவர் அவர். பாறையைக் கண்டு நீ பயந்துவிட்டாய்; அன்பருவியின் அருமையை நீ இன்னும் உணரவில்லை.’’

அருள்மொழியின் கூற்று மெய்யாக இருக்கவேண்டும் என்று தவியாய்த் தவித்தது ரோகிணியின் மனம். என்றாலும் இளங்கோ அவனைக் கொன்றிருக்க
மாட்டான் என்று நம்புவதற்கும் அவள் சித்தமாக இல்லை.

“அவரே அதை என்னிடம் ஒப்புக் கொண்டுவிட்டார், அக்கா! அதன் பிறகுமா நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்த அளவு எனக்கு அவரைத் தெரியாவிட்டாலும் காசிபனிடம் அவருக்கிருந்த வெறுப்பை நான் அறிவேன் அக்கா!’’

அருள்மொழியின் தலையில் அந்த மாளிகையே பெயர்ந்து
விழுந்தாற்போலிருந்தது. அதுவரையில் ரோகிணி தலை குனிந்தது போக, இப்போது அருள்மொழி தலைக்குனிந்தாள். ரோகிணியின் துயரத்தை அவளால்
உணர்ந்துகொள்ள முடிந்தது. அருள்மொழி பேசமுடியாது தடுமாறினாள்.

“என்னுடைய நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்,  அக்கா?’’ என்று கேட்டாள் ரோகிணி.

மறுமொழி கூறத் தயங்கினாள் அருள்மொழி. அந்தத் தயக்கத்தால் துணிவுபெற்ற ரோகிணி, “சொல்லுங்கள் அக்கா? நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?’’ என்று மீண்டும் அவளைக் கேட்டாள்.

அருள்மொழி ஒருகணம் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துச் சிந்தனை செய்தாள். இளகிப் போய்ப் பாகாய் நெகிழ்ந்து கொண்டிருந்த அவள் மனம் திடீரென்று இரும்பாக மாறிவிட்டது.

“ரோகிணி! உன்னுடைய துன்பத்தையெல்லாம் சிறிது நேரம் மறந்து  நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்’’ என்று அருள்மொழி தொடங்கவே, அவளுடைய குரலில் ஒலித்த உறுதி ரோகிணியை என்னவோ செய்தது.

“முதலில் உன்னுடைய நிலையில் நான் இருந்திருந்தால் என் மனத்தை வேற்று நாட்டு ஆடவரிடம் ‘பறிகொடுப்பதற்கு’ முன்பு ஓராயிரம் முறை சிந்தனை செய்திருப்பேன். அதன் பின்விளைவுகளை எண்ணிப்
பார்த்திருப்பேன். தக்கவர்களிடம் ஆலோசனை கேட்டிருப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்திருப்பேன்.’’

“எந்த முடிவுக்கு வந்திருப்பீர்கள், அக்கா?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“முடிவு என்பது இரண்டில் ஒன்றுதானே? ஒன்று அவரை
ஏற்றுக்கொள்ளுவதனால் அவரை அவரது குறைவு நிறைவுகளோடு அப்படியே முழு மனத்தோடு ஏற்றுக்கொள்ளுவது. இல்லையென்றால், நமது பிறப்பு,
வளர்ப்பு, ஆசாபாசங்கள் இவை அவருக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கு மென்றால் அவரை மறந்துவிடுவது. ஆண்கள் மரங்கள்! நாம் கொடிகள். கொடிகள் தான் மரங்களை வளைத்துக்கொள்ளுமே தவிர, மரங்கள்
கொடிகளைச் சுற்றி வளைவதில்லை. அவைகள் வளையவும் கூடாது!’’

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அக்கா?’’ என்று பதறினாள் ரோகிணி.

“நான் இந்த நாட்டுப் பரம்பரை வழக்கத்தைத்தான் சொல்லுகிறேன். ஒருத்தி ஒருவரை மனத்தால் தலைவராக வரித்துவிட்டால், பின்னர் அவருக்கு
எதிராகத் திரும்பி அவருடைய நாட்டு ரகசியங்களை யாரிடமும் வெளியிட மாட்டாள். அவர் அவளுடைய தம்பியைக் கொன்றிருந்தாலும் சரி,  தந்தையைக் கொன்றிருந்தாலும் சரி, நானாக இருந்தால் என் தலைவருக்குப் பின்புதான் நிற்பேன். அவருடைய நலனை நினைப்பவர்கள் என்  உறவினர்கள்; அவரை வெறுப்பவர்கள் யாரானாலும் சரி, அவர்கள் என்
பகைவர்கள்!’’

“அக்கா!’’ என்று அலறினாள் ரோகிணி.

“தெரிந்துகொள் ரோகிணி! இந்த நாட்டில் பெண்ணுக்குக் கடவுள் கூடக் கணவனுக்குப் பிறகுதான். ஆண்கள் இந்த நாட்டில் பெண்களை மறந்து விட்டுத் துறவு பூண்டிருக்கிறார்களே தவிர, பெண்கள் ஆண்களைத்
துறந்துவிட்டுக் கடவுளிடம் கூடச் சென்றதில்லை. அப்படிச் சென்றவர்களை நாங்கள் போற்றுவதில்லை.’’

ரோகிணிக்கு மெய்சிலிர்த்தது.

“ரோகிணி! நான் என்னுடைய நிலையைச் சொல்லி விட்டேன்.  இப்போது உன்னிடம் கேட்கிறேன். நீ மெய்யாகவே கொடும்பாளூர் இளவரசர்
மீது அன்பு வைத்திருக்கிறாயா? அன்பென்றால் பொறுப்பில்லாத கடமைகளில்லாத வெளி மனத்தின் இன்ப உணர்ச்சி என்று பொருளில்லை பொறுமையிருக்கிறதா உனக்கு அவரிடம் அன்பு செலுத்துவதற்கு?’’

“வேண்டாம் அக்கா; இப்போது என்னிடம் ஒன்றுமே கேட்காதீர்கள். என்மீது சிறிது இரக்கம் காட்டுங்கள்’’ என்று கெஞ்சினாள் ரோகிணி.

அருள்மொழிக்கு ரோகிணியின் துன்பம் தெரியாமலில்லை. அவள் குரல் தழுதழுத்தது. “ரோகிணி உன் மீது எனக்கு அன்பில்லாவிட்டால் நீ உன்
தந்தையிடம் கூறிய செய்திகளைக் கேட்ட பிறகும் நான் உன் முகத்தில் விழித்திருக்க மாட்டேன். அந்தச் செய்திகளை உனது நன்மைக்காக நான் இப்போது யாரிடமும் வெளியிடவில்லை. நீயும் உன் தந்தையிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல் - இப்போது உன் முடிவைக் கூறிவிடு. காசிபனை இழந்து விட்டதற்காகக் கொடும்பாளூர் இளவரசரையும் மறந்துவிடப்
போகிறாயா?’’

“முடியாது அக்கா! அவரை மறக்க முடியாது!’’ என்று இரைந்து கத்தினாள் ரோகிணி.

“மறக்க முடியாதென்றால் அவரை வெறுப்பதை அடியோடு நிறுத்திவிடு. பெற்ற இடத்துப் பாசமும் பிறிதோர் இடத்துத் தலைவனின் அன்பும்
ஒன்றாகப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பாக்கியசாலிகள். அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையென்றால், அப்போது இரண்டில் ஒன்றை மறந்து விடுவதே உத்தமம். இரண்டையுமே விரும்பினால் இரண்டுமே கிடைக்காமற்
போகலாம்!’’

மளமளவென்று கண்ணீர் சொரிந்தாள் ரோகிணி. அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ரோகிணி! நீ ஒன்றை இழந்துவிட்ட துன்பத்தில் மற்றொன்றையும் இழந்து விடப் பார்க்கிறாய். வேண்டாம்! வெண்ணெய்
திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்து விடாதே!” என்று கூறினாள் அருள்மொழி.

பாவம் அருள்மொழிக்கு அவள் ஏற்கெனவே தாழியைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டாள் என்பது தெரியாது.

கொடும்பாளூர்க் கோமான் அவளிடம் கொன்றை மரத்தடியில் பட்ட துன்பங்களை அருள்மொழி அறியவில்லை.

நேரம் சென்றது. இரண்டு பெண்களுமே இரண்டு சிலைகளாக அமர்ந்து தங்கள் மனத்தைத் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அருள்மொழி வேறு
ஏதேதோ விஷயங்களை ரோகிணியிடம் பேசவேண்டுமென்று நினைத்துக்கொண்டு வந்தாள். ரோகிணியின் மனப்போக்கில் தெளிவற்ற
நிலையைக் கண்ட பிறகு அவளிடம் வேறு எதுவுமே பேசத் தோன்றவில்லை.


‘விதி என்பது இப்படித்தான் குறுக்கிடும் போலும்!’ என்று தங்களுக்குள் இரண்டு பெண்களும் ஒரே சமயத்தில் நினைத்துக் கொண்டார்கள்.

அறைக்கு வெளியே கூடத்தில் ஏதோ குரல்கள் கேட்டன. இருவருமே ஒன்றாக எழுந்து வந்து பார்த்தனர்.

சக்கரவர்த்திகளே அங்கே நேரில் வந்து மகிந்தரைச் சோழபுர விழாவிற்குக் குடும்பத்தோடு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். மகிந்தர் தனது மகிஷியாரின் உடல் நலனைக் காரணமாகக் கூறிப் பணிவோடு மறுத்துக்
கொண்டிருந்தார்.

ரோகிணியைக் கண்ட மாமன்னர், “அப்படியானால் நங்கையோடு ரோகிணியையாவது அனுப்பி வைக்கலாம்’’ என்றார். ரோகிணியும் அனுமதி வேண்டி ஆவலோடு தன் தந்தையின் முகத்தை நோக்கினாள்.

“ரோகிணியின் துணை இங்கு அவள் அன்னைக்கு ஆறுதல் தரும். மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்திகளே!’’ என்றார் மகிந்தர்.

“அப்படியானால் ஒன்பதாவது நாள் விழாவுக்காவது அனைவரும் வந்து சேருங்கள். வல்லவரையர் இங்குதான் இருக்கிறார், அவரோடு புறப்பட்டு வாருங்கள்.’’

மகிந்தர் மறுக்கவுமில்லை; உடன்படவுமில்லை. 
மறுநாள் பொழுது புலரும் சமயத்தில் தஞ்சையிலிருந்து அரச குடும்பங்கள் அனைத்தும் சோழபுரத்துக்குக் கிளம்பின. இந்தக் காட்சியைக் கண்ணுற்ற ரோகிணி தன் உள்ளக் குமுறலை அடக்க முடியாதவாறு வேதனையுற்றாள்.

ரதத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அருள்மொழியின் விழிகளிலும் ரோகிணிக்காகக் கண்ணீர்த்திரை படர்ந்திருந்தது.

தொடரும்
                           

Monday, February 25, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 37. பெண் செய்த பெரும் பிழை )

பாகம் 3 ,   37. பெண் செய்த பெரும் பிழை 


ரோகணத்துப் பெண்புலியின் ஆத்திரம் கொடும்பாளூர் கொடு வேங்கையின் மீது சீறிப் பாய்ந்து அவன் இதயத்தை இருகூறாகக் கிழித்த பின்னரும் அடங்கவில்லை.

தன்னை விட்டுப் பிரிந்து சென்ற இளங்கோவை ரோகிணி வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் தன்னிடம் திரும்பி வருவான் என்று நினைத்தாள். ஆனால் இளங்கோவோ அதற்குள்
வெகுதூரம் போய்விட்டான்.

ரோகிணி வாய்விட்டுக் கத்தினாள்.

“இளவரசே! உங்களுடைய வீரம் இப்போது எங்கே போய்விட்டது? நீங்கள் கூறியதுபோல் என்னைக்
கொன்றுவிட்டுப் போவதுதானே? துணிவில்லையா உங்களுக்கு?’’

எவனுடைய கரம் தன்மீது பட்டால் தனக்கு நரகம் கூடக் கிடைக்காது என்று சற்று முன்பு கூறினாளோ அவனையே தன்னை வந்து சொல்லச் சொல்லி அழைத்தாள் ரோகிணி.

ஆனால் இளங்கோ அவளுக்குச் செவிசாய்த்துக் கொண்டு அங்கு நிற்கவில்லை. அவளுடைய குரலைக் கேடடுக்கொண்டு, ஒன்றும் கேளாதவனைப்போல் அவன் நடந்தான். அவனுடைய அலட்சியம் ரோகிணியின் விழிகளில் நெருப்பைக் கொட்டியது.

‘காசிபனைக் கொன்று குவித்துவிட்டு அதற்காக என்னிடம் ஒரே ஒரு ஆறுதல்மொழி கூடத் கூறாதிருக்க வேண்டுமானால் இவர் மனித இதயம் படைத்தவர்தானா? மனிதரா இவர்? அல்லது கொலையையே தொழிலாகக்
கொண்ட எமதூதரா?’

விநாடிக்கு விநாடி வெறுப்பும் கசப்பும் மிகுந்தன ரோகிணிக்கு. மொட்டையாய் நின்ற சரக்கொன்றை மரத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு மௌனமாகத் தனது மாளிகையை நோக்கி நடந்தாள்.

மாளிகையில் மித்திரையிடம் கூட அவள் முகம் கொடுத்துப்  பேசவில்லை. அவளுடைய தந்தையார் காசிபனைப் பற்றிய செய்தி கேட்டதிலிருந்து அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தன் அறையில்
கிடக்கப் பிடிக்காமல் வெளி வாயிலுக்குச் சென்றாள் ரோகிணி. மித்திரையும் மெல்ல அவளோடு நடந்தாள்.

அரண்மனை முகப்பில் வரிசையாகப் பல குதிரை வீரர்கள்
அணிவகுத்துச் சித்தமாக இருந்தனர். அவர்களுக்கு முன்னே இளங்கோ புரவியின் மீது சிலைபோல் வீற்றிருந்தான்! குதிரைகள் மெல்ல நகர்ந்தன.

“இளவரசர் கொடும்பாளூருக்குச் செல்கிறார். இளவரசி!’’ என்று இளங்கோவை ரோகிணிக்குச் சுட்டிக் காட்டினாள் மித்திரை.

இளங்கோவின் முகம் ஒருமுறைகூட மகிந்தர் மாளிகைப் பக்கம் திரும்பவில்லை. அவனும் அவனுடைய வீரர்களும் சென்ற பின்பு  அரண்மனைக் கதவுகள் மூடிக்கொண்டன. இளங்கோவின் மனக்கதவும் அவ்வாறே ரோகிணிக்கு மூடப்பட்டு விட்டதா?

“அகந்தையைப் பார்த்தாயா மித்திரை? இளவரசரின் இறுமாப்பைப் பார்த்தாயா?’’ என்று பொங்கிவரும் கண்ணீரை அடிக்க முடியாமல் கேட்டாள்
ரோகிணி. “நான் ஏமாந்துவிட்டேன் மித்திரை! நடந்ததெல்லாம் நடிப்பென்றும் துரோகமென்றும் எனக்கு இதுவரையில் தெரியவில்லை. துரோகம், துரோகம்,
மன்னிக்க முடியாத துரோகம்’’ என்று கதறினாள்.

“துரோகி அவனல்ல!’’ என்ற குரல் தலையிலடிப்பது போல்
பின்புறமிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள். மகிந்தர் அருகே நின்று கொண்டிருந்தார்.

“அப்பா!’’ என்று கத்தியபடியே அவர் கரங்களைப் பற்றினாள். அவர் அவளை உதறிக்கொண்டு விலகிச் சென்றார். ஆனால் ரோகிணி அவரை விடவில்லை. மித்திரை மெல்ல அங்கிருந்து நழுவிச் சென்றாள்.

“அப்பா! என்னை மன்னித்து விடுங்களப்பா! அவர்களுடைய வாழ்க்கையே பல ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை என்று எனக்குத்  தெரியாமல் போய்விட்டதப்பா! கொடும்பாளூர்ச் சுரங்கவாயிலைப் போலவே
அவர்களுடைய சொந்த வாழ்க்கையும் பயங்கரமானது அப்பா! எல்லாம்  எனக்கு இப்போதுதான் தெரிகிறது.’’

மகிந்தரின் நெற்றிப் புருவங்கள் வளைந்தன.


“கொடும்பாளூரில் சுரங்கவாயில் ஏது ரோகிணி? அந்தப்புர உள்வாயிலைச் சொல்கிறாயா?’’

“அவர் என்னெதிரிலேயே அன்றைக்கு உங்களை ஏமாற்றி விட்டார். உண்மையில் அதுதான் சுரங்கவாயில். மூவர் கோயில் வடக்கு மூலைப் பிரகார ஆலயம்தான் அதற்கு வெளியே செல்லும் வழி.’’

“என்ன?’’

“இவ்வளவுதான் அவர்களுடைய ரகசியமென்று நினைக்கிறீர்களா! உலகத்தையே ஏமாற்றுவதற்காக அவர்கள் எத்தனை எத்தனையே
வித்தைகளைச் செய்து வைத்திருக்கிறார்கள் கங்கைகொண்ட சோழபுரமென்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே, அதன் பாதுகாப்பெல்லாம் ஏரிக்கு
மத்தியிலுள்ள வசந்த மண்டபத்திற்குள்ளேதான் இருக்கிறது. அந்த மண்டபத்தின் நடுத்தூணை உடைத்து விட்டால் பிறகு கங்கை கொண்ட சோழபுரம் கங்கை வெள்ளத்துக்குள் முழுக வேண்டியதுதான். வீரமாம் வீரம்!
இவர்களிடம் வீரம் ஏது? மறைந்திருந்து பாறையை உருட்டி நம்முடைய காசிபனைக் கொன்றதனால்தான் இவர்களுடைய வீரம் வெளிப்பட்டிருக்கிறது.
நன்றி கொன்றவர்கள்! அன்றைக்கே ரோகணத்தில் நீங்கள் மரண தண்டனை விதித்தபோது நான் தடுத்தேன் பாருங்கள், அது என் தவறு! என் தவறு!”

மகிந்தரின் கரங்கள் தமது மகளை அன்போடு தழுவிக் கொண்டன.


‘பழிக்குப் பழி!’ என்று அவர் நெஞ்சு துடித்தது. காசிபனின் பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைக்கூட அந்தக் கணப்பொழுதுக்கு அவர் மறந்து விட்டார். ஒரே சமயத்தில் இரண்டு மாபெரும் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து
விட்டன.

“மகளே! உனக்கு மட்டிலும் துயரம் இல்லாமலா இருக்கும்?’’ என்று ரோகிணியின் கண்ணீரை மெல்லத் துடைத்தார் மகிந்தர்.

இந்தச் சமயத்தில் வாசற்கதவு நடுங்கியது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அங்கே அருள்மொழி திகைப்புடன் நின்று கொண்டிருந்தாள். நின்றவள் உள்ளே நுழையவில்லை.

எத்தனை நேரமாக அவள் அங்கு வந்து நின்றாளோ?

“அக்கா!’’ என்று ஓடிப்போய் அலறிக்கொண்டே அவளைக் கட்டிக் கொண்டாள் ரோகிணி.

“ரோகிணி! நான் அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்’’ என்றாள் அருள்மொழி.

அதற்குள் மகிந்தரும் கந்துலனும் தங்கள் மத்திராலோசனையைத் தொடங்கிவிட்டார்கள். “பழிக்குப் பழி தெரிந்ததா, கந்துலா’’ என்று அவன் காதோடு காதாகச் செய்தி கூறிக் கொண்டிருந்தார் மகிந்தர்.

ரோகிணி! அடிப்பாவி! நீ என்னசெய்து விட்டாய்? நீ என்ன
செய்துவிட்டாய்?’ என்ற அலறித் துடித்தது அருள்மொழியின் மனம்.

தொடரும்


Sunday, February 24, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 36. அரசகுல தர்மம் )

பாகம் 3 ,  36. அரசகுல தர்மம் 


இளங்கோவை மணந்துகொள்ளும்படி அருள்மொழியிடம் இராஜேந்திரர் முதல் முறையாகக் கூறியபோது, அவள் அதை அவ்வளவு பிடிவாதமாக மறுத்துவிடுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தயங்குவாள், யோசனை
செய்வாள், பின்பு காரணம் கூறித் தனது நிலையை விளக்க முன் வருவாள் என்றே அவர் நினைத்தார்.

அருள்மொழியின் மறுப்பை அவர் முற்றிலும் எதிர் பார்க்காமலும் இல்லை. ஆனால் அது படிப்படியாக இருக்குமென நம்பினார். நங்கையார் எளிதில் உணர்ச்சி வயப்படாத பெண். ஆகவே தக்க காரணங்களைக் கூறி
அவளுடைய மனத்தை மாற்ற முடியும் என்ற எண்ணம் மாமன்னருக்கு இருந்தது.

அந்த எண்ணத்தை அரைநாழிகைப் பொழுதுக்குள் அடியோடு அசைக்கத் தொடங்கிவிட்டாள் அருள்மொழி. உணச்சிகளை மறைக்கத் துணிந்தவளின் உள்ளக்குமுறல் வெளியானால் அது அப்படித்தான் இருக்குமோ? அருள்மொழியின் பிடிவாதமும் மறுப்புமே அவளுக்கு  இளங்கோவிடமிருந்துவந்த ஆழ்ந்த அன்பை மாமன்னரிடம் காட்டிக் கொடுத்துவிட்டன.

ஆனால் எதற்காகவும் இராஜேந்திரர் தம்முடைய முடிவை
மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவருடைய முடிவு இளங்கோ இரண்டு இளரவசிகளையும் மணந்து கொள்ள வேண்டுமென்பதே!

அருள்மொழியிடம் முதலில் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு, அடுத்தாற்போல் ரோகிணியைப் பற்றியும் கூற விரும்பினார். சம்மதம் கிடைக்கவில்லை; மறுத்துவிட்டாள் நங்கை.

அவளுடைய மறுப்பின் காரணம் அவருக்குத் தெரியாததல்ல. அவளுடைய அந்த மன நிலையில் அவளை அதிகமாக வற்புறுத்த வேண்டாமென்பதற்காக நேரே வல்லவரையரிடம் வந்தார்.

அரசியல் இராஜதந்திரிகள் இருவரும் சிறிது நேரத்துக்குக் குடும்பவியல் இராஜதந்திரிகளாக மாறினார்கள். தங்கள் தங்களது வீட்டமைச்சர்களான வீரமாதேவியார், பெரிய குந்தவையார் இவர்களிடம் பெற்று வந்த ஆலோசனைகளையும் அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்து இருவரும் ஒன்றாக அருள்மொழியைக் காணச் சென்றார்கள்.

எத்தனையோ செயற்கரிய செயல்களைத் தனித்து நின்று சாதித்த மாமன்னருக்கு இப்போது வல்லவரையரின் துணை மிக மிக அவசியமாகத் தோன்றியது. இராஜேந்திரரின் தந்தையான அருள்மொழிவர்மரின்
பேத்தியல்லவா இந்த அருள்மொழி! அவளுடைய தாய்வழி கொடும்பாளூர்க் குலவழியல்லவா?

பெரியவர்கள் இருவரும் தனது இருப்பிடம் தேடி வருவதைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரணத்தை அறிந்து கொண்டாள் அருள்மொழி. மாமன்னரிடமிருந்து அவள் பெற்ற அதிர்ச்சி இன்னும் அவளை
விட்டகலவில்லை.

‘அதற்குள் மீண்டும் எதற்காக வந்திருக்கிறார்கள்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“நங்கையாரே! தமது வாழ்வில் தோல்வி என்பதைக் கண்டறியாத சக்கரவர்த்திகள் உங்களிடம் தோற்றுப் போய்விட்டதாக என்னிடம் வந்து கூறினார்கள். இது மெய்தானா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்
வல்லவரையர் வந்தியத்தேவர்.

அருள்மொழி தன் தந்தையாரின் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள். வல்லவரையரின் விழிகளில் தென்பட்ட தெளிவு அவற்றில் காணப்படவில்லை.
அதைக் கண்ட அருள்மொழியின் கண்களும் கலக்கமுற்றன.

நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே அருகிலிருந்த ஆசனத்தில் மௌனமாக அமர்ந்தார் இராஜேந்திரர்.

இனி அவருடைய எண்ணங்கள் வல்லவரையரின் வாய்மொழியாக வெளிவரும் என்று தெரிந்து கொண்டாள் அருள்மொழி. இராஜேந்திரருடைய கடைசி ஆயுதம் மௌனம். அதை அவர் எடுத்த எடுப்பிலேயே பிரயோகம்
செய்து விட்டார்!

ஆகவே அருள்மொழி வல்லவரையரிடம் திரும்பி,


“தாத்தா!
தந்தையாரிடம் நான் கேட்ட வரத்தை மறுப்பதற்காகத் தாங்களும் அவர்களோடு துணைக்கு வந்திருக்கிறீர்கள் போலும்’’ என்றாள். “நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் அது எனக்கு அமைதி தரும். தந்தையாருக்கும் இறைவனுக்கும் பணி செய்துகொண்டே நான் இன்பத்தோடு வாழ்வேன். இதில் யாருக்குமே துன்பமிருக்காது.’’

“நங்கையாரே! நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று
எங்களுக்குத் தெரியும். எங்களுடைய விருப்பத்துக்கும் நீங்கள் சிறிது செவிசாய்க்க வேண்டும்.’’

அருள்மொழியின் நெற்றி சுருங்கியது; “என்ன தாத்தா?’’

“ரோகிணியைக் கட்டாயம் இளங்கோ மணந்து கொள்ளத்தான் போகிறான். அதைத் தடுத்து நிறுத்திவிட்டு

உங்களுடைய திருமணத்தை நடத்துவதற்கு நாங்கள் முன் வரவில்லை. அவன் உங்கள் இருவரோடும் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.’’

“என்ன!’’ என்று பதறித் துடித்தாள் அருள்மொழி.

“முன்பு உங்களிடம் இந்தச் செய்தியைக் கூறவந்த சக்கரவர்த்திகள் முழுவதும் கூறாமலே திரும்பிவிட்டார்கள். இப்போது நான் கூறுகிறேன், -
நமக்கு இனி இருப்பது ஒரே ஒரு வழி! அந்த வழியின்படி ஆலோசனை செய்துதான் முடிவு செய்திருக்கிறோம். அரச குல வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்துவிடவில்லை.’’

துன்பம் தோய்ந்த சிரிப்பென்று வெளிப்பட்டது அருள்மொழியிடமிருந்து. சற்று நேரம் சிந்தனை செய்துவிட்டுப் பிறகு பேசலானாள்.

“தாத்தா! அம்மங்கை தேவி எப்படி என் உடன்பிறந்த தங்கையோ
அதேபோல ரோகிணி என் உடன் பிறவாத தங்கை உடன்பிறந்த தங்கையைவிட, உடன் பிறவாதவள் என்பதாலேயே அவளிடம் நான் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கிறேன். என் தங்கை என்று ரோகிணியைச்
சொல்வதைவிட, என்னையே அவளிடம் காணுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. நான் என்னையே அப்படி நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டு விட்டேன். அவள் பெறும் இன்பமெல்லாம் நான் பெறும்
இன்பம். அவள் பெறும் மகிழ்ச்சியெல்லாம் நான் பெறும் மகிழ்ச்சி; என்னை நான் அவளுக்கே கொடுத்து விட்டேன். அதுவும் எனக்காகவே கொடுத்துவிட்டேன். உங்களுக்கு விளங்குகிறதா, தாத்தா?’’

அருள்மொழியின் சொற்கள் மின்வெட்டுகளைப்போல் தங்கள் நெஞ்சில் பாய்வதைப் பெரியவர்கள் இருவரும் ஒன்றாக உணர்ந்தார்கள். அவர்களுடைய
மனதுக்குள் ஒரே ஒளி வெள்ளம். அந்த ஒளியின் வழியே தெரிந்த அருள்மொழியின் அழகுருவம் வானத்துக்கும் பூமிக்கும் ஒன்றாக உயர்ந்து விளங்கியது.

சாம்ராஜ்யத்துக்காக எத்தனை எத்தனையோ தியாகங்களைச் செய்த சக்கரவர்த்தி தம் புதல்வியின் முடிவுகேட்டு அயர்ந்து போனார். காதலுக்காகக்
காதலையே தியாகம் செய்கிறாளே இவள்! அவளுடைய ஒரே சாம்ராஜ்யம் எதுவோ அதற்காக அதையே தியாகம் செய்துவிடுவதா?

என்றாலும் சக்கரவர்த்தியின் மௌனம் கலையவில்லை.

வல்லவரையர், “நங்கையாரே!’’ என்று எதையோ கூற முன் வந்தார்.

“தாத்தா! நான் கூறியதையெல்லாம் நீங்கள் அப்படியே நம்பவேண்டும், தாத்தா! உணர்ச்சி வயப்பட்டு நான் ஒன்றையும் கூறவில்லை. சிறிது சிறிதாக
அவைகளை வென்ற பின்புதான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.’’

“அத்தனை பெரிய தியாகம் எதற்கு அம்மா அருள்மொழி!’’

“இதில் அணுவளவு கூடத் தியாகமில்லை, தாத்தா!’’ என்றாள் அவள்.

“தியாக உணர்ச்சியைக்கூடத் தியாகம் செய்துவிடப் பார்க்கிறார் நங்கையார்!’’ வல்லவரையர் மாமன்னரைத் திரும்பிப் பார்த்தார். இதுபோன்ற ஓர் அருந்தவப் புதல்வியைப் பெற்றெடுத்த பெருமைக்காக அவர் மாமன்னரை வாழ்த்துவது போன்றிருந்தது அந்தப் பார்வை.

“ரோகிணியும் நானும் ஒன்றாகிவிட்டபோது, அவளுக்குத் திருமணம் நடந்தால் அதுவே என் திருமணம். அந்த விருப்பத்தை மட்டிலும் நிறைவேற்றுங்கள். ஒருத்தியிருக்க வீணே இருவர் எதற்கு?’’

“அரசகுலத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றவர்களுடைய திருமணங்களைப் போன்றவையல்ல அருள்மொழி. அரசகுலத் தர்மம் வேறு.
மக்கள் வழித் தர்மம் வேறல்லவா? ஏகதாரம் என்ற முறையை அரச குலத்தில் பிறக்கும் ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை நங்கையாரே.’’

“அதற்காக நான் சொல்லவில்லை தாத்தா! ரோகிணியைத் தவிர  இன்னும் வேற்று நாட்டுப் பெண் யாரையேனும் நீங்கள் விரும்பினால் கொடும்பாளூர் இளவரசருக்கு மணம் செய்து வையுங்கள். எனக்கு மட்டும்
தனித்திருக்க அனுமதி கொடுத்தால் போதும்!’’

அதுவரையில் மௌனத்தைக் கடைப்பிடித்த இராஜேந்திரர்,
“அருள்மொழி!’’ என்று அதட்டினார்.

அருள்மொழி தன் தந்தையைத் திரும்பி நோக்கினாள்.

“ரோகிணியும் நீயும் ஒன்று என்பது உன் எண்ணம். அதுவே எங்களது எண்ணமாக இருந்திருந்தால் நாங்கள் இவ்வளவு தூரம் உன்னை வற்புறுத்தியிருக்கமாட்டோம். நீ நினைப்பது உண்மையல்ல, அருள்மொழி;
நாங்கள் இப்போது இளங்கோவின் நலனின் கவனம்
செலுத்தவேண்டியிருக்கிறது. எதிர்காலத்துக் கொடும்பாளூர்க் கோனாடு அவனுடையது. அந்தக் கோனாடோ சோழ சாம்ராஜ்யத்தின் அடித்தளம்
போன்றது. நான் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் இந்த நாட்டின் நலனோடு ஒன்றிப் பார்க்கவேண்டியிருக்கிறது. அவனுடைய நல்வாழ்வு இந்நாட்டின்
நல்வாழ்வு என்பதை மறந்து விடக்கூடாது, அருள்மொழி!’’

“அவருடைய நல்வாழ்வுக்கு ரோகிணியால் என்ன குறை வந்துவிடும்? இருவரும் ஒருவரையொருவர் தங்கள் உயிரைவிடப் பெரியதாக மதிக்கிறார்கள்.
அவர்களுடைய அன்பின் ஆழம் எனக்கு நன்றாகத் தெரியும்!’’

“நங்கையாரே! உங்களுக்கு அன்பு மட்டிலும் தெரியும். ஆனால் அதன் ஆழம் தெரியாது’’ என்றார் வல்லவரையர்.

அருள்மொழியின் கண்கள் சிவந்தன. வல்லவரையரைச் சினந்து நோக்கி, என்னுடைய ரோகிணியையா நீங்கள் குறை கூறத் துணிந்தீர்கள்?’’ என்று ஆத்திரத்தோடு கேட்டாள்.


“ரோகிணியைக் குறை கூறவில்லை அம்மா!
பெண்ணுக்குப் பெண் குண வேறுபாடுகள் நிறைய உண்டு. நீயும் ரோகிணியும் ஒன்றாகிவிட முடியாது. குண வேறுபாடுகளை நான் கவனித்து விட்டுதான்
சொல்கிறேன். குறை கூறவில்லை, அருள்மொழி!’’

அருள்மொழிக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் என்ன  கூறுகிறீர்கள், தாத்தா?’’ என்று கேட்டாள்.

“அவர்கள் நெருங்கிப் பழகத் தொடங்கியதற்கே மூல காரணம் நாங்கள்தான். எங்களுக்கு ஒருவேளையில் அதனால் வெற்றி கிடைத்தது. ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகு அவர்களை நான் பிரிக்க விரும்பவில்லை.
தூரத்திலிருந்து கொண்டே அவ்வப்போது அவர்களை நான் கண்காணித்து வந்திருக்கிறேன். அதனால் எனக்கு ஓரளவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ரோகிணியும் இளங்கோவும் மகிழ்ந்திருந்த நேரத்தைவிட அவர்கள்
ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொண்டே நேரமே அதிகம். நான் எப்படி அதை உணர்ந்து கொண்டேன் என்பதை உன்னிடம் வெளிப்படையாகச்
சொல்லட்டுமா?... ரோகிணி இதுவரையில் இளங்கோவைத் தன்னுடைய அன்பு மிகுதியால் கொடுமைப்படுத்தியே வந்திருக்கிறாள். கொடுமை நிறைந்த குரூரமான அன்பு அவளுடையது.’’

திடுக்கிட்டுப் போனாள் அருள்மொழி. ரோகிணிக்காக இளங்கோ நிலவறைச் சிறைக்குள் புழுங்கிய காட்சி அவள் மனக்கண் முன் வந்தது. என்றாலும் ரோகிணியால் இளங்கோவுக்குக் கிடைத்த வெற்றிகளையும் அவள்
மறந்து விடவில்லை. அவற்றையெல்லாம் வல்லவரையருக்கும் மாமன்னருக்கும்
நினவூட்டினாள் அருள்மொழி. மாமன்னர் இராஜேந்திரர் தமக்குள் நகைத்துக்
கொண்டார்.

ரோகிணிக்காக அருள்மொழி பரிந்து பேசியது முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “மெய்தான் நங்கையாரே’’ என்றார் வல்லவரையர். “ஒரு பாதி ரோகிணியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், மறு
பாதியையும் நான் அறிந்திருக்கிறேன். இளங்கோவுக்கோ சிந்திக்க நேரமில்லை. சிந்தனையை மறைக்கும் அளவுக்கு அவன் அவள்மீது அன்பு கொண்டிருக்கிறான். இன்றைக்கு அவர்கள் பழகும் விதம் வேறு, திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வாழப்போகும் வாழ்க்கை வேறு. அதை
நினைத்துத்தான், உங்களையும் இணைத்து அவன் வாழ்வில் நிறைவுதேடிக் கொடுக்க முயற்சி செய்கிறோம்.’’

‘இளவரசரின் நன்மைக்காகவா என்னை வலிந்து மணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் அருள்மொழி. அவளுடைய உள்ளத்தில் ஓர் இன்ப அருவி ஊற்றுப் பெருக்கெடுக்கத்
தொடங்கியது. என்றாலும் ரோகிணியைப் பற்றி வல்லவரையர் கூறியதை  அவள் முழுவதும் நம்பவில்லை.

வல்லவரையர் கூறலானார்:

“காரணத்தை விதியென்று சொல்வதா, அல்லது அவரவர் பிறப்பு வளர்ப்பென்று சொல்வதா, அல்லது அவர்கள் இருவருக்குமிடையில் ஏதோ எதிர்ப்புச்சக்தி மறைந்திருக்கிறதென்று சொல்வதா என்றே விளங்கவில்லை. இந்த நிலையில் இளங்கோவுக்கு நாங்கள் எதையும் எடுத்துச் சொல்லி
அவனைத் திருப்பிவிட முடியாது. அவனுடைய எதிர்காலக் கனவுகளே அதனால் சிதைந்துவிடக் கூடும். திருமணத்திற்குப் பிறகு, ஒருவேளை
ரோகிணி உங்களுடைய பழக்கத்தால் மாறி விடுவாள் என்று நம்புகிறோம். அல்லது அவன் அவளிடம் தேடிக் காணாத அன்பின் ஆழத்தை நங்கையாரிடம் காண முடியும். அவனுடைய நன்மையைக் கருதியே நாங்கள்
இதைச் செய்கிறோம். ஆழம் நிறைந்திருக்கும் கடல் பகுதியில் அடிக்கடி அலைகள் எழும்புவதில்லை. ஆனால் அவர்களுடைய அன்பில் அடிக்கடி ஆத்திரம் பொங்குவதை நான் கண்டிருக்கிறேன்.’’

வல்லவரையர் இதைக் கூறி முடித்த பின்பு நங்கையாரின் முகத்தை நோக்கினார். நங்கையாரின் தலை கீழே கவிழ்ந்திருந்தது. இளங்கோவுக்காக இரண்டு நீர் மணிகள் அவள் விழிகளில் திரண்டிருந்தன.

“அருள்மொழி! உன் முடிவுதான் என்ன?’’ என்று கேட்டார்
சக்கரவர்த்தி.

“கொடும்பாளூர் இளவரசருக்காக நான் எதையும் செய்யக்
காத்திருக்கிறேன், தந்தையாரே’’ என்றாள் அவள் கலக்கத்துடன். அத்துடன் அவள் நிறுத்தவில்லை.

“எதற்கும் நான் ரோகிணியின் எண்ணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றாள்.
பெரியவர்கள் மெதுவாக அங்கிருந்து எழுந்து சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் அருள்மொழி கண்களைத் துடைத்துக்கொண்டு மகிந்தரின் மாளிகையை நோக்கி நடந்தாள்.

தொடரும்


Saturday, February 23, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 35. புலிகள் பாய்ந்தன

பாகம் 3 ,  35. புலிகள் பாய்ந்தன 


வல்லவரையரிடமிருந்து கொடும்பாளூர் செல்வதற்கான கட்டளைகளைப்
பெற்றுக்கொண்டு, மாங்குடி மாறனிடம் ஆயத்தமாக இருக்கும்படிக் கூறிவிட்டு,
மாலைப்பொழுது வந்தவுடன் மகிந்தர் மாளிகையை நோக்கி நடந்தான்
இளங்கோ.

இளங்கோவின் மனம் இளவேனிற் காலத்து மாலைப் பொழுதைப்போல்
இன்பம் நிறையப் பெற்றிருந்தது. அங்கே பூங்குயில்கள் கூவின; பொன்மலர்கள்
சிரித்தன; நறுமணம் தென்றலில் கமழ்ந்தது.

அவனுடைய வீரத்தை உணர்ந்த மாமன்னர் அவனுக்குக் கடாரம்
செல்வதற்கு அனுமதி அளித்துவிட்டார். அவனது காதலை உணர்ந்து காதலுக்குரியவளையே விழாவின்போது பரிசாகவும்
அளிக்கப்போகிறார்! ஒன்பதாம் நாள் விழாவுக்கு அவர் தன்னை
அழைத்திருப்பதன் காரணத்தை முதலில் ரோகிணியிடம் போய்ச் சொல்ல
வேண்டும். அவளை முன்னேற்பாடாகக் குடும்பத்தோடு கங்கைகொண்ட
சோழபுரத்துக்கு மற்றவர்களுடன் சேர்ந்து புறப்படச் சொல்ல வேண்டும்!

நெஞ்சு நிரம்பும்வரை காற்றை இழுத்துச் சுவாசித்துக் கொண்டு கைவீசி
நடந்தான் இளங்கோ. தனக்க நிகராக யாருமே இந்த உலகத்தில் பிறந்திருக்க
முடியாது என்ற கர்வம் அவனுக்கு.

மகிந்தர் மாளிகைக்குள் நுழைந்து அதன் தோற்றத்தைக்
கண்டவுடனேயே அவனுடைய கர்வத்தில் பாதி கரைந்தது. கந்துலனின் மகள்
மித்திரை அவனைக் கண்ட மாத்திரத்தில் உள்ளே ஓடிவிட்டாள். கந்துலனும்
முகத்தைத் திருப்பிக் கொண்டான். ரோகிணியை அவள் அறையில்
காணவில்லை. இளங்கோவின் படம் வரையப்பட்டிருந்த திரைச்சீலையின்
கிழிந்த துண்டு காற்றில் பறந்து வந்து அவன் காலடியில் சுருண்டது.
காசிபனின் சித்திரம் அங்கு காணப்படவில்லை.

இளங்கோவின் இதயத்துக்குள்ளிருந்து குபீரென்று ஓர் எரிமலை
கிளம்பியது. யார் செய்த தீங்கிது? எங்கே ரோகிணி?

இன்பவெள்ளத்திலே மிதந்து வந்தவன் எரிநெருப்பில் புகுந்து
மீள்வதுபோல் மகிந்தர் மாளிகையின் பின்புறவாயில் வழியாக வெளியில்
சென்றான். அவனுடைய அரண்மனையில் தங்கி, விருந்து உண்டு திரும்பிய
மகிஷியார் அவனைக் கண்டவுடன் உபசாரத்துக்காக ஒரு சிரிப்புக்கூடச்
சிரிக்காமல், பேயைக் கண்டவர்போல் மிரண்டு ஒளிந்தார்.

என்ன நடந்தது? ஏன் இந்தப் புறக்கணிப்பு? ஏன் இந்த அவமானம்?
இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை.

மாளிகையின் பின்புறத் தோட்டத்தை நோக்கி அவன் சாரைப் பாம்பென
விரைந்தான். அவனது காலில் மிதிபட்டு மலர்கள் நசுங்கின; செடிகள்
முறிந்தன. தரையே அதிர்ந்தது.

அவன் கண்ட காட்சியும் அதற்குமேல்தான் இருந்தது.

சரக்கொன்றை மரங்கள் எங்கே? அவற்றில் கொத்துக் கொத்தாய்த்
தொங்கிய பொன்மலர்கள் எங்கே? மரகதப் போர்வைபோல் சூழ்ந்து நின்ற
இளந்தளிர்கள் எங்கே?

பட்டுப்போன பாழ்மரங்களைப்போல் மொட்டை மொட்டையாய் நின்றன
கொன்றை மரங்கள். சிறிய கிளைகள் அனைத்தும் ஒடிக்கப்பட்டு, பயங்கரமான
தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. கொம்பும் கிளையுமாக, இலையும்
பூவுமாக விளங்கிய மரங்கள் மனிதனின் எலும்புக் கூடுகள் போன்று
விகாரமாகக் காட்சியளித்தன.

இளங்கோவுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வெற்றிவிழா
கொண்டாட்டத்தில் தோரணங்கள் கட்டுவதற்காக யாரும் இப்படிச்
செய்துவிட்டார்களோ.’

மறுகணமே அந்தச் சந்தேகம் விலகியது. இலைகளும் மலர்களும்
வேறெங்கும் போகவில்லை. அதே இடத்தில் தரையில் தாறுமாறாகக் குவிந்து
கிடந்தன. அந்தக் குவியல் ஒன்றின்மீது தலைவிரி கோலமாக உட்கார்ந்து
கொண்டு அடிமரத்தில் சாய்ந்திருந்தாள் ரோகிணி. ரோகிணிதானா அவள்?

ஏனோ அந்தக் கோலத்தில் அவளைக் காணப் பிடிக்கவில்லை
இளங்கோவுக்கு. சந்தடியின்றி வந்த வழியாகவே திரும்பிச் செல்ல
நினைத்தான். ஆனால் அவ்வளவு தூரம் வந்தபிறகு, அவளையும் கண்ட
பின்பு, அவனுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை.

“ரோகிணி!’’ என்று குழைவோடு மெல்லக் குரல்கொடுத்தான்.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் ரோகிணி. அவளுடைய கண்கள்
இளங்கோவைக் காணும் கண்களாகத் தோன்றவில்லை. கொலையாளியைப்
பார்த்துவிட்ட குற்றவாளியைப் போல் பதறிக்கொண்டு எழுந்தாள்.

“இதெல்லாம் என்ன ரோகிணி! உனக்கு என்ன வந்து விட்டது?’’

மீண்டும் மறுமொழியில்லை. ஆனால் கண்கள் இரண்டும் இளங்கோவின்
முகத்தில் நிலை குத்திவிட்டன. கண்களா  அவை? பழுக்கக் காய்ச்சிய இரு இரும்பு வேல்கள்! நேரே இளங்கோவின்
நெஞ்சில் பாய்ந்து அங்கிருந்த குருதி நாளங்களைச் சுட்டுப் பொசுக்கின.

அவள் அருகில் கிடந்த காசிபன் படத்தையும் அவளையும் மாறிமாறிப்
பார்த்தான் இளங்கோ. காரணம் முழுமையாக விளங்காவிட்டாலும்,
காரணத்தின் ஒரு பகுதி பளிச்செனப் புலப்பட்டது. ரோகிணி அப்போது
ரோகிணியாக இல்லை. காசிபனின் தமக்கையாக மாறியிருந்தாள்!

காசிபன் என்ற இளம் புலிக்குட்டி அவள் உள்ளத்துக்குள் பதுங்கி
உறுமுவதை அவள் கண்களின் வாயிலாகக் கண்டுகொண்டான் இளங்கோ.
நிலவைப் பொழியும் விழிகள் நெருப்பைக் கொட்டுகின்றனவே!

“ரோகிணி! பேசமாட்டாயா? ரோகிணி! என் மீதுள்ள கோபத்துக்குக்
காரணம் கூறமாட்டாயா?’’

சித்தப்பிரமை கொண்டவள்போல் கலகலவென்று சிரித்தாள் அவள்.
பெண் சிரிக்கும் சிரிப்பல்ல அது. அவனுடைய கேள்விக்கு விடையளிக்காமல்,
“இந்தச் சரக்கொன்றை மரம் ஏன் இப்படி ஆகிவிட்டதென்று நீங்கள்
கேட்கவில்லையே?’’ என்று அவனையே திருப்பிக் கேட்டாள். “நான்தான்
முறித்தேன்! நான்தான் ஒடித்தேன்! நான்தான் அழித்தேன்!’’ மீண்டும் அந்தப்
பயங்கரச் சிரிப்பு.

“காரணமா கேட்கிறீர்கள்? அதுவும் என்னிடமா கேட்கிறீர்கள்? உங்கள்
நெஞ்சைக் கேட்டுப் பாருங்கள்! நெஞ்சு என்று ஒன்று இருக்கிறதா
உங்களுக்கு? இதோ இவனிடம் கேட்டுப் பாருங்கள்!... காசிபா, அவரிடம்
சொல்லடா காரணத்தை!’’

அருகில் கிடந்த காசிபன் படத்தைச் சுட்டிக்காட்டி விட்டு, அவளுடைய
பயங்கரமான விழிகளால் இளங்கோவை மென்று உறிஞ்சத் தொடங்கினாள்.

“வேண்டாம், ரோகிணி! முன்பே உன்னிடம் கூறியிருக்கிறேன்.
உன்னுடைய விழிகளுக்கு இந்தப் பார்வை கூடவே கூடாது! காரணம் எதுவாக
இருந்தாலும் என்னிடம்

மெதுவாக எடுத்துச்சொல். இல்லாவிட்டால் நான் வெறியனாகி விடுவேன்;
முரடனாகி விடுவேன்! உன்னுடைய அந்த விழிகளால் என்னைக்
கொடியவனாக்கி விடாதே ரோகிணி! கொலைகாரனாக மாற்றிவிடாதே!’’

அன்புக்கு மட்டிலும் கட்டுப்பட்ட ஒரு முரட்டு வீரனின் உயிர்,
ஆத்திரத்தில் அறிவிழந்து தடுமாறிய ஒரு பேதையின் உயிரிடம் அமைதி
கேட்டுத் துடித்தது. அவளை மறைமுகமாக எச்சரித்தது.

“ஓ! இன்னும் நீங்கள் கொடியவராக மாறவில்லையா? கொலைபாதகராக
மாறவில்லையா? ஒரு கொலை செய்து விட்டது போதாதென்று, மற்றொரு
கொலை செய்வதற்கு வந்திருக்கிறீர்களா?’’ ஏளனமாக நகைத்தாள் ரோகிணி.

“என்ன?’’ கொடும்பாளூர்க் குலத்தின் பிறவிக் குணம் இளங்கோவின்
இரத்தத்தில் கலந்து விட்டது. ரோகிணியின் கருங்கூந்தல் இளங்கோவின்
பிடியில் இருந்தது. “என்ன கூறினாய்?’’

பெண்ணுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத உத்தமக் குலம் அது.
ஆனால் அதற்காகப் பெண்ணின் ஏளனத்தையோ, வெறுப்பையோ,
அலட்சியத்தையோ அதனால் தாங்கிக் கொள்ள முடியாது. அது ஆளப்பிறந்த
வேளிர்குலம்! அடிமைப் பெண்ணின் ஆத்திரம் அதற்கு முன்?...

ரோகணத்துப் பெண்மட்டிலும் கொடுமை நிறைந்த கொடும்பாளூர்
குலத்தவருக்குச் சிறிதும் இளைத்தவள் அல்லவே! பெரிய வேளாருக்கு அவன்
ஒரே செல்வப் புதல்வனென்றால், அவளும் மன்னர் மகிந்தரின் ஒரே செல்வப்
புதல்வியல்லவா! கொடும்பாளூரை விட ரோகணம் எந்த வகையில் குறைந்து
விட்டது?

“என் தம்பியைச் சித்திரவதை செய்து கொன்று விட்டு இரத்தம்
தோய்ந்த அதே முகத்துடன் என்னிடம் வந்திருக்கிறீர்களே, உங்களுக்குத்
தன்மானமில்லை? அச்சமில்லை? வெட்கமில்லை? மனிதரா நீங்கள்? மனிதராக

இருந்தால் என் முகத்தில் விழிப்பதற்கு உங்களுக்கு மெய்த்துணிவு
ஏற்பட்டிருக்குமா?’’

இளங்கோவின் தலையில் இமயம் பெயர்ந்து விழுந்தது. “காசிபன்
இறந்து விட்டானா?’’

அவன் பூமியின் அதல பாதாளத்துக்குள் அழுந்திக் கொண்டிருந்தான்.
அவனை அழுத்திய பாரம் அவனை தரையோடு தரையாக நசுக்கிய பிறகும்,
அவனை விடுவதாக இல்லை.

ரோகிணி அவன் உணர்ச்சிகளைச் சிறிதுகூடப் புரிந்து கொள்ளாமல்,
அவன் தவிப்பைச் சிறிதுகூடக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும்
நெருப்புமழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“இதற்காகத்தான் என்னிடம் காசிபனை மறந்துவிடச் சொல்லி ஆணை
பெற்றீர்களா? இதற்காகத்தான் திருமயில் குன்றத்தில் என்னிடம் மகிழ்ந்து
பேசிவிட்டுத் திடீரென்று கிளம்பிச் சென்றீர்களா? இதற்காகத்தான் இந்த
நகரம் இத்தனை பெரிய விழாக் கொண்டாடிக் குதூகலிக்கிறதா? கூறுங்கள்!’’

அவளை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோ. அந்தப் பார்வையின்
வேதனையை அவள் அணுவளவாவது உணர்ந்திருந்தால், பேச்சை
நிறுத்தியிருப்பாள்.

அவள் நிறுத்தவில்லை. “காசிபனைக் கொன்றுவிட்ட மாவீரத்துக்குப்
பரிசாக என் கரத்தை உங்களுக்குச் சக்கரவர்த்தி கொடுக்கப் போகிறார்!
இல்லையா?’’

இளங்கோவின் உதடுகள் துடித்தன. அவனது பரந்து விரிந்த மார்பு
வெடித்துவிடும் போல விம்மியது. ‘ரோகிணி வேண்டுமென்றே நான் அவனைக்
கொல்லவில்லை, ரோகிணி! காசிபன் அங்கிருந்தது தெரிந்திருந்தால் நான்
என்னுடைய போர் முறையை வேறுவிதமாக மாற்றி அவனை உயிரோடு
கைப்பற்றி உன்னிடம் கொண்டு வந்திருப்பேன் ரோகிணி! தெரியாமல் நேர்ந்த
தவறுதலுக்காக உன்னிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கிறேன். ரோகிணி!
நடந்துவிட்டதை இனி மாற்றி அமைக்க முடியாது. அதற்காக நான் என்ன
பிராயச்சித்தம் செய்ய வேண்டும், சொல்?’

இப்படி அவளிடம் கூற நினைத்தானே தவிர அவன் வாய்விட்டுக்
கூறவில்லை. கூற நினைத்ததைக் கூறாமல் “காசிபன் இறந்து விட்டானென்பது
எப்படித் தெரிந்தது?’’ என்று கேட்டான்.

பெண்புலி பெண் பேயாக மாறியது.

“கொன்றதை மூடி மறைத்துவிட்டு என்னிடம் குலவி மகிழ்வதற்கு
வந்தீர்கள் போலும்! என்றென்றும் என்னை ஏமாற்றிவிட்டு, நீங்கள்
இன்புற்றிருக்க நினைத்தீர்கள் போலும்! இப்போது தெரிகிறது. உங்கள்
மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் ராஜதந்திரம்! உங்களுடைய அன்புகூட
ராஜதந்திர அன்புதான்! வெறுப்புக்குரிய வெளி அன்பு! எல்லாமே வெளி
வேடம்!’’

அன்புக்கும் ஓர் எல்லை உண்டு. மனித வாழ்வே எல்லைக்குள் அடங்கி
நிற்கும்போது, மனித மனத்தின் உணர்வுக்கும் ஒரு வரையறை உண்டல்லவா?

இளங்கோவின் பிறவிக்குணம் திரும்பிவிட்டது. கொடும்பாளூர்
இரத்தத்தால் அதன் கொதிப்பைத் தாங்க முடியவில்லை.

“ரோகிணி, உன் தம்பியைக் கொன்றதற்காக நான் இப்போது
மகிழ்ச்சியடைகிறேன்! எங்களுடைய நாட்டுக்குத் துரோக மிழைத்தவர்களுக்குக்
கிடைக்கவேண்டிய தண்டனை அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
சதிக்கூட்டத்தாரோடு சேர்ந்ததன் பயனை அவன் அனுபவித்திருக்கிறான்.
ஆனால் அதற்காகக்கூட நான் மகிழ்ச்சியடையவில்லை. உன்னையும்
உள்ளத்தால் என்னிடம் நெருங்கவிடாமல் உன் மனதிலிருந்து கொண்டே
உன்னை எனக்கு எதிராகத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தானல்லவா,
அதற்காக!’’

“இனி நாம் ஈருயிரும் ஓருயிராக ஒன்றிவிடுவோம் இல்லையா?’’
ரோகிணி மிகமிக அலட்சியமாக நகைத்தாள். “இனியும் நான்
கொடும்பாளூருக்கு வந்து வாழ்வேன் என்று நம்புகிறீர்கள்! இல்லையா?’’

“இல்லை! இல்லவே இல்லை! இந்தக் கணத்திலேயே நீ
கொடும்பாளூரான் கையால் மாளப் போகிறாய்!’’ என்று கூறிக்கொண்டே
அவள்மீது பாய்ந்தான் இளங்கோ.

“தொடாதீர்கள்! தீண்டாதீர்கள்! உங்களுடைய கரம் பட்டு மடிந்தால்
எனக்கு நரகத்தில்கூட இடம் கிடைக்காது’’ என்று அலறினாள் ரோகிணி.

நீண்டு சென்ற இளங்கோவின் கரம் வெட்டப்பட்டு வீழ்வதுபோல் கீழே
விழுந்தது. உடல் முழுதும் தீப்பற்றி எரிவதுபோல் உணர்ந்தான். தலையைக்
குனிந்துகொண்டே தட்டுத் தடுமாறியபடி திரும்பி நடந்தான்.

ரோகணத்துப் பெண்புலி கொடும்பாளூர் ஆண்புலியின் இதயத்தைக்
கவ்வி வெளியே இழுத்துப் போட்டுத் தன் கூரிய பற்களால் சல்லடைக்
கண்களாகத் துளைத்து விட்டது!

தொடரும்