Sunday, September 27, 2015

பார்த்திபன் கனவு 49 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 12 -சூரிய கிரகணம் )

சூரிய கிரகணம்


நன்றி :lhttp://www.manithan.com/contents/photos/post/full/2012/11/solar_eclipse_005.w540.jpg

விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர் வழங்கி வந்தது.

மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.

பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக் கூறினான்:-

விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன் புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது. இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப் பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள்.

காஞ்சி நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்ழூகெல்லாம் அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று சூரிய கிரகணம் - சம்பூர்ண கிரகணம் - பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும், அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.

புண்ணிய தினத்தன்று காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள். சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக் கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப் பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும், இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின் மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச் சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.

அப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன், சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன.

பட்டப் பகலில், மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான் அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.

வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி பொன்னனிடம், "எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!" என்றாள். "இவ்வளவுதானா உன் தைரியம்?" என்று பொன்னன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது.

ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத் திறந்தாள். 'குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!" என்று கூவினாள். ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.

பொன்னனும், வள்ளியும் 'ஓ'வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த பரஞ்சோதி அடிகள், "என்ன? என்ன?" என்றார். பொன்னன், "ஐயோ! மகாராணி அலையில் போய்விட்டாரே!" என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும் வள்ளியையும் நோக்கி, "நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!" என்றார்.

அச்சமயத்தில் சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன.

இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் "அப்பா!" "அம்மா!" "மகனே!" என்ற கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், "ஹரஹர" "சம்போ" என்னும் கோஷங்களும் எழுந்தன.

அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக் கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.

தொடரும் 

Tuesday, September 22, 2015

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்!!! பாகம் 12

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

எழுதியது: சிறி சரவணா
டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.
*********************************

நம் பால்வீதியில் மட்டும் 200 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் உண்டு.

காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.
“மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும்? அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ?” இன்றுவரை விடை தெரியாத ஒரு குருட்டு விடயமாக இருப்பது என்னவென்றால், இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்பதே. பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாதிருப்பினும், இந்த பாரிய பிரபஞ்சத்தில் நிச்சம் எம்மைப் போலவே வேறு அறிவுள்ள உயிரினங்கள் இருக்கவேண்டும் என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து.

இப்போதைக்கு இப்படியான வேற்று கிரக நாகரீகங்களை அவதானிக்க முடியாவிட்டாலும், எம்மால் நிச்சயம், நாம் அறிந்த அறிவியல், இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி, ஒரு நாகரீகத்தில் இருக்கக்கூடிய விடயங்களை கணிக்க முடியும். நாம் இப்போது தெரிந்து வைத்துள்ள குவாண்டம் இயற்பியல், பொதுச் சார்புக்கோட்பாடு, மற்றும் வெப்பஇயக்கவியல் விதிகளைப் பயன்படுத்தி, நம்மை விட காலத்தால் முற்பட்ட நாகரீகங்கள் எந்தளவு பெரிதாக இருக்கும் என்றும், அவற்றின் தொழில்நுட்ப எல்லை என்னவென்றும் எம்மால் ஊகிக்க முடியும்.
“பூமியைவிடவும் வேறு எங்கும் உயிர்கள் உண்டா?” எனக் கேட்கப்படும் கேள்வி வெறும் ஊகத்தினால் வந்த கேவியாக இருந்தாலும், இப்போது நாம் நமது சூரியத்தொகுதிக்கு வெளியே பல கோள்களை கண்டறிந்துகொண்டு இருக்கிறோம். சிலவேளைகளில், கூடிய விரைவிலேயே வேற்றுகிரக உயிரினங்களுக்கான ஆதாரங்களையும் கண்டுபிடித்துவிடலாம். வியாழனைப் போல காற்று அரக்கனாக பல கோள்கள் இருந்தாலும், பூமியைப் போல ஒத்த கோள்களையும் நாம் கண்டு பிடித்துள்ளோம். இனிவரும் காலங்களில் நாம் இரவு வானைப் பார்க்கும் போது, அது நமது முன்னோர்கள் பார்த்த பார்வையை ஒத்ததாக இருக்காது. எதிர்காலத்தில் வானில் தெரியும் அந்தப் நட்சத்திரப் புள்ளிகளை சுற்றிவரும் கோள்களில் இருக்கும் உயிரினகளின் அமைப்பைப் பற்றிய கலைக்களஞ்சியம் எம்மிடம் இருக்கலாம்.
சரி, இப்படி இருக்கும் கோள்களில் இருக்கும் முன்னேறிய நாகரீகங்களின் துல்லியமான அம்சங்களை எம்மால் எம்மால் எதிர்வுகூற முடியாவிட்டாலும், அவற்றின் அடிப்படை அம்சங்களை எம்மால் கோடிட்டு காட்டிவிட முடியும். ஒரு நாகரீகம் எவ்வளவுதான் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அடிப்படை இயற்பியல் விதிகளை அவைகளால் மீற முடியாது. நாம் இன்று அணுத்துகள்கள் தொடக்கம், விண்மீன் பேரடை வரை உள்ள இயற்பியல் விதிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், எம்மால் நிச்சயமாக அறிவியல் தளத்துக்கு உட்பட்டு இந்த முன்னேறிய நாகரீகங்கள் எப்படி இருக்கலாம் என்று ஆராய முடியும்.

நாகரீகங்களின் தரப்படுத்தல் – வகை 1, 2, 3 நாகரீகங்களின் இயற்பியல் அடிப்படைகள்.

ஒரு நாகரீகத்தை, அதன் சக்தி தேவைப்பாட்டை கொண்டு பின்வரும் காரணிகளின் அடிப்படையில் எம்மால் வகைப்படுத்த முடியும்.
  1. வெப்பஇயக்கவியலின் (thermodynamics) தத்துவங்களின் அடிப்படையில்: எவ்வளவு முன்னேறிய நாகரீகங்கள் கூட வெப்பஇயக்கவியலை, அதுவும் வெப்பஇயக்கவியலின் இரண்டாவது விதியை மீறிவிட முடியாது.
  2. நிலையான பருப்பொருளின் தத்துவ விதிகள்: பொதுவான அணுக்கள் சார்ந்த பருப்பொருட்கள், கோள்கள், நட்சதிரங்கள் மற்றும் நட்சத்திரப் பேரடைகள் ஆகிய மூன்று அம்சங்களாக இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்றன. ஆக ஒரு நாகரீகத்தின் சக்திமுதலாக ஒன்றில் கோள், அல்லது நட்சத்திரம் அல்லது நட்சத்திரப் பேரடை காணப்படலாம்.
  3. கோள்களின் பரிமாண வளர்ச்சித் தத்துவங்கள்: ஒரு வளர்ந்த நாகரீகத்தின் சக்தித் தேவையானது, அந்த நாகரீகம் இருக்கும் கோளில் ஏற்படும் பாரிய உயிர்ப் பேரழிவுகளை (விண்கல் மோதல், சுப்பர்நோவா போன்றவை) விட அதிகமாக / வேகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடில் அந்த நாகரீகம், முழு உயிரினப்பேரழிவில் மாட்டிக்கொள்ளக்கூடும்.
1964 இல் வெளிவந்த ‘சோவியத் விண்ணியல்’ சஞ்சிகையில், நிகோலாய் கர்டாசிவ், மேற்சொன்ன அடிப்படையில் நாகரீகங்களை பின்வருமாறு மூன்று வகையாக பிரித்தார். வகை 1, வகை 2, மற்றும் வகை 3. இந்த வகையான நாகரீகங்கள், தாங்களின் சக்தித் தேவையைப் பொறுத்து வகைப் படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது நிகோலாய் கர்டாசிவ், இந்த நாகரீகங்களுக்கு இடையிலான சக்தி தேவையின் இடைவெளி பல பில்லியன் மடங்கு இருக்கும் எனவும் கணித்தார்.

சரி நமது நாகரீகத்தை இந்த அடிபடையில் பொருத்திப் பார்ப்போமா?
நமது பூமியானது சூரியனது மொத்த சக்தியில், ஒரு பில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது, அதிலும் மனிதன், மில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறான். இது டான் கோல்ட்ஸ்மித் என்ற வானியலாளர் கூறியது. அதாவது நாம், 1/1,000,000,000,000,000 பங்கு சூரிய சக்தியையே பயன்படுத்துகிறோம். அதிலும் நாம் பூமியில் மொத்தமாக உருவாகும் சக்தி ஒரு செக்கனுக்கு நூறு பில்லியன் ஜூல்ஸ்.

நமது இந்த சக்தி தேவையும், உற்பத்தியும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது, இதிலிருந்து எம்மால் வகை 2, வகை 3 நாகரீகங்களை எப்போது அடைவோம் என்று கணக்கிடமுடியும்.
வானியலாளர் கோல்ட்ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார், “நாம் இன்று படிம-எரிபொருட்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுள்ளோம், நீரில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்று அறிந்துள்ளோம். இந்த குறுகிய காலத்தில் எவ்வளவு முன்னேறி உள்ளோம் என்பது நாம் கண்கூடாக அவதானித்த ஒன்று. சில நூற்றாண்டு காலமாக தான் எமக்கு இந்த சக்தி முதல்கள் எல்லாம் தெரியும், சிந்தித்துப் பாருங்கள், நம் பூமி அண்ணளவாக 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது, மனித இனம், சில லட்சம் ஆண்டுகளாக இருக்கிறது, நாகரிக மனிதன் என்றால் கூட ஐந்தில் இருந்து பத்தாயிரம் வருடங்கள் வரை இருக்கும், ஆனாலும் கடந்த சில நூற்றண்டுகளாகத்தான் எம்மால் இந்த அளவுக்கு சக்தியை உருவாக்கவும் பயன்படுத்தவும் முடிந்துள்ளது. இதே போன்ற கருத்தை நாம் வேற்றுகிரக நாகரீகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.”

இயற்பியலாளர் ப்ரீமன் தய்சன் (Freeman Dyson), நமது நாகரீகத்தின் சக்தித் தேவையும், சக்தி உற்பத்தி செய்யும் அளவையும் வைத்து, நாம் இன்னும் ஒரு 200 வருடங்களில் வகை 1 நாகரீகமாக மாறிவிடுவோம் என்று கணக்கிட்டுள்ளார். இதுமட்டும் இல்லது, வருடத்துக்கு 1% படி சக்தி உற்பத்தியில் நாம் வளர்ந்தால், இன்னும் 3200 வருடங்களில் வகை 2 நாகரீகமாக மாறிவிடலாம் என்றும், அதுவே 5800 வருடங்களில் வகை 3 நாகரீகமாகவும் மாறிவிடலாம் என்று நிகோலாய் கர்டாசிவ் கணக்கிட்டார்.

தொடர்ந்து வேற்றுகிரக நாகரீகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தொடரும் 

நன்றி : https://parimaanam.wordpress.com/2015/02/10/extraterrestrial-civilizations-part-one/Saturday, September 19, 2015

எலியம் (சிறுகதை உமா வரதராஜன்)

எலியம்  (சிறுகதை உமா வரதராஜன்)


கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில் அதிக வித்தியாசமிருப்பதாக இது வரை தெரியவில்லை. பாண் வேகும் முறுகலான மணம் அவ்வப்போது வீசிச் கொண்டிருக்கும்.

இவையெல்லாம் அந்த வீட்டுக்கு குடிவந்த அவனை சந்தோஷமடையச் செய்தன. ஆனால் அந்த வீட்டில் எலிகள் இருக்கும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

எலிகளை அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. இவனைப் போலவே எலிகளைப் பிடிக்காத ஒருவன்தான் உயிரியல் பயிற்சி வகுப்புக்கு எலிகளை வெட்டி ஆராயும் முறையைக் கொணர்ந்திருக்க வேண்டும். எலிகளை மாத்திரமல்ல-பல்லி, கரப்பான் பூச்சி, பூரான், நத்தை... எல்லாவற்றுக்கும் மேலாக மிக அவதியுடன் கழிப்பறைக்குள் நுழையும் போது வழி மறித்துக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தபடி காத்துக் கொண்டிருக்குமே அந்தத் தேரை... இவற்றையெல்லாம் அவனுக்கு கண்ணில் காட்டக் கூடாது.

எலி பிள்ளையாரின் வாகனம் என அம்மா அடிக்கடி செல்லுவா அதனால் எலியை துன்புறுத்துவது தெய்வ நிந்தனையாம். ஆனால் பள்ளி நாட்களில் எலி வேண்டும் என உயிரியல் வாத்தியார் சொல்லியதைத் தெரிவித்த போது அம்மா மௌனமே சாதித்தாள். அன்று மாமா என்னமாய்க் கஷ்டப்பட்டு எலிபிடித்துத்தந்தார். எதிர்காலத்தில் ஒரு பெரிய வைத்திய கலாநிதியாக ஆஸ்பத்திரி விறாந்தையில் இவன் உலாவருவது போலவும், இவன் பின்னால் இவனுடைய 'ஸ்டெதெஸ்கோப்'பை ஏந்திய படி தான் வருவது போலவும் மாமா எலியை அமுக்கிப் பிடித்த அந்தத் தருணத்தில் கனவு கண்டிருக்கக் கூடும்.


எலிகள் என்றதும் அந்தத் திருட்டு முழிகள்தான் முதலில் மனதில் தோன்றுகின்றன. தேங்காய், மாங்காய், அரிசி, பருப்பு...... எவற்றை இந்த எலிகள் விட்டுவைக்கின்றன? நேற்று வாங்கிய புத்தம் புது மணச்சவர்க்காரத்தை இன்று காணவில்லை. எலிக்கு எதற்கு மணச் சவர்க்காரம் என அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை எலிஸாவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காவிட்டால் முகத்தைத் திருப்பிக் கொள்ளுமோ? (எலியின் மனைவி அல்லது காதலியின் பெயர் எலிஸாவாக இருக்க வேண்டும் என்பது அவனது ஊகம்)

எலிகளுக்கும் அவனுக்குமிடையே யுத்தப்பிரகடனம் நேற்றிரவு ஏற்பட்டுவிட்டது. லதா மங்கேஷ்காரின் மீராபஜனையை அவன் நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தான். எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பஜனுக்கும், இதற்கும் உள்ள பிரத்தியேக விசேஷங்கள் குறித்து அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது தொப்பென்று ஓர் எலி கட்டிலில் வீழ்ந்தது. அது வழி தடுமாறி அவனுடைய கால் வழியாய்க் கடக்க முற்படுகையில், அவன் காலை உதறிக் கட்டில்மீதேறித் துள்ளிக் குதித்தான். கட்டில் என்பதைத் செய்யும் தச்சர்கள் படுப்பதை உத்தேசித்தே செய்திருப்பார்கள். அவன் இவ்விதம் துள்ளிக் குதிப்பான் என முன்னரே தெரிந்திருந்தால் இன்னமும் பலமான மரத்தை கட்டில் செய்த தச்சன் இவனுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். கட்டிலின் குறுக்குப் பலகை சடசடவென்ற ஒலியுடன் முறிய அவனுடைய ஒற்றைக் கால் பள்ளத்தில் இறங்கிப் தரையைத் தொட்டது. கைகளை மெல்ல ஊன்றியவாறு வெகு பிரயாசையுடன் அவன் தன் காலை விடுவித்தான். முழங்கால் வலித்தது. தீக்குச்சி அளவில் முழங்காலில் ரத்தக்கீறல் ஒன்று.

இந்தச் சம்பவத்துடன் எலியை அவன் தன் மாபெரும் எதிரியாகப் பிரகடனம் செய்தான். தேரை, தவளை, பாம்பு, பல்லி, ஓணான், பூரான், கரப்பான் ...... இவற்றைப்பற்றிக் கூட இந்தளவுக்கு அவன் கவலைப்பட்டதில்லை. அவற்றால் இந்தளவு அவஸ்தையை அவன் அனுபவித்தது கிடையாது.

அவனது வீட்டின் பின்புறம் ஒரு பாழ்வளவு இருக்கிறது. குட்டையாகவும், நெட்டையாகவும் பற்றைகள் அங்குண்டு. அந்த வளவுக்குள் வெறுங்காலாய் நடந்தால் உடைந்த போத்தல் ஓடுகளோ, கறள் ஆணிகளோ, முட்களோ காலில் சேதம் விளைவிப்பது நிச்சயம். குப்பை கொட்டும் பிரதேசமாக அயலவர்கள் அதை ஆக்கி வைத்திருந்தனர். அந்த வளவு மூலையில் ஓர் அனாதைக் கார் குப்புறக் கிடந்தது. இந்த நாடு இறக்குமதி செய்த முதல் நூறு கார்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். இந்தக் காரை வாங்கியவனின் பேரனோ அல்லது கொள்ளுப்பேரனோ காலப்போக்கில் இந்தக் காரின் வடிவமைப்பையும், தாத்தாவின் ரசனையையும் சகிக்க முடியாமல் தீ மூட்டிக், கொளுத்தி இப்படிப் போட்டிருக்க வேண்டும்.

தனக்கு அச்சம், அருவருப்புத் தரும் அத்தனை ஜீவராசிகளும் அந்தப் பாழ்வளவுக்குள் இருந்துதான் படையெடுத்துவருவதாக அவனுக்குத் தோன்றிற்று. பாழ்வளவுக்கும், இவன் வீட்டுக்கும் நடுவில் இருக்கும் வேலியில் இரவில் சரசரப்புக் கேட்கும் போது அது பாம்பா, எலியா, வேறெதுவோ எனப் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான். 
அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். அவனுக்கு நல்ல ஞாபகம். பாட்டியுடன் அவன் இருந்த காலத்தில் அவள் ஒர் எலிப்பொறி வைத்திருப்பாள். பாட்டியின் வீட்டு அறையுள் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளைத்தேடி வரும் எலிகள் இவனைப் போலவே பாட்டிக்கும் அந்தக் காலத்தில் பெரும் பிரச்சினையைத் தந்தன. தேங்காய்த் துண்டை நறுக்கியெடுத்து, நெருப்பில் சுடுவாள் பாட்டி. பின்னர் பொறியில் பொருத்திவிட்டு இவனும், பாட்டியும் தூங்கப் போவார்கள். எனினும் எலிகள் ஒரு நாளும் அகப்படவில்லை. பொறியில் தேங்காய்த் துண்டு அப்படியே இருக்கும், ஒவ்வொருநாளும் மூட்டையிலிருந்து கொட்டுப்பட்டு, சிதறிக் கிடக்கும் நெல்மணிகளுக்கு குறைவில்லை.

இப்போது எலிப்பொறியை நம்புவதைத் தவிர இவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. கடைக்காரன் நாலைந்து விதமான எலிப்பொறிகளைத் தூக்கிக் காண்பித்தான். பாட்டியின் வீட்டுப் பொறிக்கும், இந்தப் பொறிக்கும் எவ்வளவு வித்தியாசங்கள். அது வெறும் தகரத்துண்டு. இந்தப் பொறிகளின் வடிவமைப்பே அலாதியானது. இந்தப் பொறிகளைத் தயாரித்த நாட்டின் பெயரைக் கடைக்காரன் தெரிவித்த போது அவனுடைய நம்பிக்கை மேலும் அதிகரித்தது. இந்த உலகுக்கும் அப்பால், பல கிரஹங்களிலும் எவ்வளவு சாதனைகள் புரிந்தவர்கள், புரிகின்றவர்கள் அந்த நாட்டினர். அவர்களுடைய தொழில்நுட்பத்தின் முன்னால் இந்தச் சுண்டெலிகள் எம்மாத்திரம்? அவன் ஒரு பொறியைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டான்.

பாட்டியின் உத்தியை அவன் கையாளவில்லை. தேங்காய்த் துண்டுக்குப் பதிலாக நெத்திலிக் கருவாட்டை சூடு காட்டிப் பொறியில் பொருத்தி வைத்தான். எலிகள் அதிகளவில் புழங்கிய பிரதேசம் எனக் கருதப்பட்ட இடத்தில் பொறி வைக்கப்பட்டது. வாய்திறந்து காத்திருக்கும் முதலை போல அது அப்போது தோன்றியது.

அவன் தூங்கப்போனான். தூக்கம் வரவில்லை. கருவாட்டுக்காக மூஞ்சியை நீட்டி, மரண அடி வாங்கப்போகும் எலியை நினைத்துக் கொண்டதும் குதூகலம் சூழ்ந்துகொண்டது. ஏதோ ஒரு கட்டத்தில் கேட்கப்போகும் எலியின் கீச்சிடலுக்காகக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்த அவன் ஒரு கட்டத்தில் தவறி, அப்படியே தூங்கியும் போனான்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எலிப்பொறியைப் பார்க்க அவன் ஓடிப்போனான். எலிப்பொறியில் இருந்த கருவாட்டுத் துண்டை எறும்புகள் மொயத்திருந்தன. எலிகள் எல்லாம் சைவத்தைத் தழுவிவிட்டனவா என எண்ணி அவன் எரிச்சலடைந்தான்.

மறுநாளும் பொறியில் சுட்ட கருவாடு இடப்பட்டது. பொறி வைக்கப்படும் இடத்தை மட்டும் அவன் மாற்றிக்கொண்டான். படுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது பொறி மேலெழும்பி விழுந்ததற்கு அடையாளமான ஒரு சத்தமும், எலியின் கீச்சிடலும், பொறி இழுபட்டுச் செல்லும் ஓசையும் கேட்டன. அவன் பரபரப்புடன் ஓடிப்போய் விளக்கைப் போட்டான். ரத்தச் சொட்டுக்கள் நிலத்தில் கிடந்தன. கழுத்து நெரிபட்ட எலியின் பற்கள் அகோரமாய் வெளியில் தெரிந்தன. சண்டையிடும் நாய்களின்; வாய் பிளந்து, மேலுதடு விரிந்து பற்கள் தெரியும் தோற்றம்.

'ஹா! முதற்பலி'. 

குரூரமான ஒரு சந்தோஷம், வெற்றிப் பெருமிதம் எல்லாம் அவனை ஆட்கொண்டிருந்தன. வெளியில் வந்து, மண்ணைக் கிண்டி, சின்ன மடுவொன்றைப் போட்டான். எலியைப் பொறியினின்று மெதுவாக எடுத்து, அதன் வாலைப் பிடித்தவாறு கொண்டுபோய் மடுவில் வீழ்த்தினான். பொறியை நன்றாகக் கழுவி, துடைத்து எண்ணெய் தடவினான். எலிகள் சாமர்த்தியம் மிக்கவை. அவற்றுடைய 'ரத்தத்தின்' வாடைகூட 'ரத்தத்தின் ரத்தங்களு'க்கு வீசக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். மறுபடியும் பொறி கருவாட்டுத் துண்டு வைத்து நாணேற்றப்பட்டது. அவன் மிக மகிழ்ச்சியுடன் தூங்கிய நாளது.

காலையில் எழுந்ததும் ஒரு விரிந்த மலர் போல மறுபடியும் சந்தோஷம் காத்திருந்தது. அடுத்த எலி! வயிற்றுப் பாகம் அரைவாசி பிளந்தபடி பொறியில் கிடந்தது இந்த எலி. பொறியின் உதவிகொண்டு உலகத்தின் அத்தனை எலிகளையும் ஒழித்துக்கட்டுNவுன் என அவன் தனக்குள் ஒரு தரம் சொல்லிக் கொண்டான். கர்ணனுக்குக் கிடைத்த நாகாஸ்திரத்தை ஒத்த இந்த எலிப்பொறியைத் தடவிப் பார்ப்பதில் சந்தோஷமடைந்தான்.

அலுவலகம் சென்றதும், கையெழுத்துக்கூடப் போட மறந்து அங்குள்ள நண்பர்களிடம் மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னான். ''ஒரே இரவில் ரெண்டு எலிகள் குளோஸ்! ஹா.... ஹா....''

அவர்கள் அவனை ஒருவிதமாக உற்றுப் பார்த்தனர். 'இவர்களைப் போன்ற விபரமறியாத பேர்வழிகள் ஒரு காலத்தில் ஆர்கிமிடீஸை கூட அப்படித்தான் பார்த்திருப்பார்கள், பரவாயில்லை' அவனுக்குப் புரியவில்லை.

''நம்பவில்லையல்லவா?...... நம்பமாட்டீர்கள்..... இரண்டு எலிகள்! ஒரே ராத்திரியில் முடித்துவிட்டேன் நண்பர்களே''

நண்பர்கள் அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை. அவர்களுடன் மேற்கொண்டு இது சம்பந்தமாகப் பேச அவனும் விருப்பமில்லாதவனாகவே இருந்தான். 'அப்பாவி உயிர்கள்' என்று கூறி எலிகளுக்காக அவர்கள் வக்காலத்து வாங்கக்கூடும். அல்லது ஜீவகாருண்ய சங்கத் தலைவர் யாருக்காவது இந்த விஷயத்தை இவர்கள் தெரியப்படுத்த முனையலாம். அவரும் தன் கடிதத்தாள் ஒன்றை விரயம் செய்து 'அப்பாவி உயிர்களை கொல்லும் உன்மேல் நாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது' என மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பக் கூடும். எனவே தற்போதைக்கு அவையடக்கம் ரொம்பவும் முக்கியம் என அவனுக்குத் தோன்றியது.

அன்றிரவு மீண்டும் பொறி தயார் நிலையில் வைக்கப்பட்டது. அகழி நிறைய முதலைகளும், கோட்டையின் அரண்கள் தோறும் ஆயுதம் ஏந்திய சிப்பாய்களும் கிடைக்கப்பெற்ற அரசனாகத் தன்னை நினைத்து அவன் படுக்கைக்குப் போனான்.

ஆனால் அன்றிரவு எதிர்பாராத இரு சம்பவங்கள் நடந்தன. ஒன்று. பின்னிரவில் கொஞ்சம் மழை பெய்தது. அந்த மழைச் சத்தத்தைக் கேட்டபடியே அவன் தூங்கிப் போனான். மற்ற சம்பவம் முக்கியமானது. எலியொன்று தன்னிஷ்டத்துக்கு நேரம் எடுத்து, அவனுடைய நேசத்துக்குரிய சட்டையொன்றை குதறிவிட்டுப் போயிருந்தது. வரைபடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாக் கண்டத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கிழிசல் சட்டைப் பையிருக்கும் இடத்தில் தோன்றியிருந்தது.

காலையில் சட்டையைக் கையிலெடுத்து அவன் வெகு நேரம் வரை திகைத்துப் போயிருந்தான். அந்தச் சட்டையை இனி அணிய முடியுமென அவனுக்குத் தோன்றவில்லை. கிழிசல் உள்ள சட்டைகளை அணிகின்ற ஒரு நாகரீகம் இந்த நாட்டில் வரும் வரைக்குமாவது அவன் பொறுத்திருக்க வேண்டும்.

உலகத்தின் கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவன் எலிகளை திட்டினான். வைத்த இடத்தில் பொறி அப்படியே இருக்க, கருவாடு மட்டும் காணாமற்போன மாயம் ஆச்சரியம் ஊட்டியது. எறும்புகள் அபகரித்தனவா அல்லது சாமர்த்தியம் மிக்க எலிகளின் 'தோலிருக்க சுளை முழங்கும்' சாகஸவேலையா என அவன் யோசித்தான். முதல் தடவையாக பொறியின் மீது அவன் நம்பிக்கை இழந்தது அப்போதுதான்.

எலிகளின் தொல்லைகுறித்து யாரிடமாவது கூறி ஆலோசனை கேட்க வேண்டுமென இப்போது அவனுக்குத் தோன்றியது. பக்கத்து வீட்டுக்காரரான லோரன்ஸை நாடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. லோரன்ஸை நாடுவதற்கு சில காரணங்கள் உண்டு.

லோரன்ஸ் கோழிகளைச் சத்தமில்லாமல் அமுக்குவதில் அதிதிறமைசாலி. இரவில் மரக்கிளைகளில் தங்கிவிடும் கோழிகளை எவ்விதச் சத்தமுமில்லாமல் கைப்பற்றுவது எப்படி என்பதை ஒரு தடைவ அவர் காட்டித் தந்திருக்கிறார். பொந்துக்குள் உடும்பொன்று ஒரு நாள் போய்ப் புகுந்து கொண்டது. உடும்பின் வால் மாத்திரம் வெளியிலெடுத்து சுழற்றிய வேகமும் அற்புதம். மறுகணம் நிலத்தில் முகம் மோதி அவருடைய கையில் இருந்து விழுந்தது உடும்பு. கூடுமானவரை அவருடைய வேட்டை அனுபவங்களை கேட்பதை அவன் தவிர்த்தே வந்திருக்கிறான். ஏனெனில் முயல் வேட்டை அனுபவத்தைச் சொல்லி முடிக்க அவர் கிட்டத்தட்ட முப்பது நிமிஷங்களும், வேட்டையாடப்பட்ட ஜீவராசி காட்டெருமையாக இருந்தால் ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களும் எடுப்பார். எனவே சிறிய ஜீவராசிகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் சுருக்கமாக முடிவதால் அவற்றைக் கேட்கவே அவன் பிரியப்படுவான். லோறன்ஸ் மரை இறைச்சி கொண்டு வருவதாகக் கூறி கடந்த இரண்டு வருடங்களாகின்றன தன்னுடைய பற்கள் உதிர்ந்து பொக்கை விழுந்த பின்னராவது அவர் வேட்டையாடி மரையைக் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது நிச்சயம் என அவருக்குத் தெரியும். பெரிய ஜீவராசிகளோடெல்லாம் போராட்டம் நடாத்தும் லோறன்ஸுக்கு எலி ஓர் அற்ப விடயம் என அவன் நினைத்துக் கொண்டான்.

எலிப்பாஷாணத்தை கலந்து வைக்கும் முறையைத்தான் லோறன்ஸ் அவனுக்கு சிபாரிசு செய்தார். எலிப்பாஷாணம் வாங்க மருந்துக் கடைக்குச் சென்ற போது கடைக்காரன் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். இரண்டு வாரமாக சவரம் செய்யாத முகத்துடன் தான் வந்து எலிப்பாஷாணம் கேட்டிருக்கத் தேவையில்லை என அவனுக்குத் தோன்றிற்று.

'எலிக்குத்தானே?' என்ற ஓர் அபத்தமான கேள்வியுடன் கடைக்காரன் மருந்துப் போத்தலைத் தந்தான்.

அன்றிரவு ஒரு கோப்பை உணவுடன் அவன் மருந்தைக் கலந்த போது லோரன்ஸூம் கூட இருந்தார்.

''இன்றைக்கு இரவைக்குப் பாருங்க முசுப்பாத்தியை'' என்றார்.

விடிந்தது.

உணவுப் பாத்திரத்தைச் சுற்றிவர எலிகளின் பட்டாளமொன்று செத்து வீழ்ந்து கிடக்குமென்று நம்பிச் சென்றவனுக்கு காலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. சோற்றுப்பருக்கைகள் இறைபட்டுக் கிடந்தன.

எலிகளின் ஆரவாரம் இப்போது இல்லாத போதிலும் அவன் உற்சாகமிழந்தவனாக ஒவ்வொரு நாளையும் கழித்தான். அவன் மனம் நாடியதெல்லாம் எலிகளின் பிணங்கள்.

சரியாக மூன்றாம் நாள் அலுவலகத்திலிருந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்த போது அவனுடைய மூக்கில் அந்தத் துர்நாற்றம் வந்து மோதியது. அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் போனான். அந்தத் துர்நாற்றத்தின் பிறப்பிடம் மர அலுமாரியின் பின்புறம்தான் எனத் தோன்றிற்று. மெதுவாக அலுமாரியை நகர்த்தியதும் 'அது' அவனுக்குத் தெரிந்தது. 'அதன்' உடலில் உண்டான புழுக்கள் நெளிந்தபடி இருந்தன. ஒரு தடித்த அட்டையில் எலியின் உடலை அள்ளி, வெளியில் கொண்டு வந்து போட்டான். திடீரெனத் தோன்றிய காகம் அதைக் கவ்விற்று.

வீட்டினுள் நுழைந்தவன் மீண்டும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தான். எலிகளின் உடல்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கேற்பட்டுவிட்டதை அவன் புரிந்து கொண்டான். தேடல் வேட்டை ஆரம்பமாயிற்று. எலிப்பாஷாணத்தினால் அங்குமிங்குமாக செத்துப்போன எலிகளை மீட்பது எவ்வளவு கடினமான, வயிற்றைப் புரட்டும் வேலை என எண்ணி அவன் சலிப்புற்றான்.

மூஞ்சி கறுத்த ஒரு எலியின் உடல் பழைய பத்திரிகைகளின் இடுக்கில் கிடந்தது. இன்னொன்று அவனுடைய பழைய சப்பாத்துக்குள். மற்றது மோட்டு வளையுள். எல்லாவற்றையும் நல்லடக்கம் செய்தபின் அவன் தலை முழுகினான்.

அதன் பிறகு கொஞ்ச நாட்களாக எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அவனை யாராவது வந்து இது பற்றிக் கேட்டால் தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டியளிக்கும் பாவனையில் தோள்களை சற்றுக் குலுக்கி கொண்டு '.....ஆம்!

மிகவும் மனவருத்தம்தான். ஆனால் இது தவிர்க்கப்பட முடியாதது. இந்த முடிவைத் தவிர எந்த முடிவும் எடுக்கப்பட முடியாதது' எனச் சொல்வற்கு அவன் தயாராக இருந்தான்.

மூன்று வாரங்கள் போயிருக்கும் அவனுடைய எதிரி மறுபடி தோன்றிற்று. கண்ணாடிக் குவளை ஒன்றை தட்டிவிட்டு கண்ணெதிரே சுவர் ஏறி ஓடியது. தான் முறிந்து விழுவதைப்போல உணர்ந்தான். அடுத்த கட்ட ஆலோசனைக்காக லோரன்ஸ் வீட்டுக்கு மறுபடியும் போக வேண்டி வரும் என அவன் நினைக்கவேயில்லை.

அவன் போன போது லோரன்ஸ் கோழியொன்றை உரித்துக் கொண்டிருந்தார். அரைக்கால் பங்கு உயிருடன் கோழி மன்றாடிக் கொண்டிருந்தது.

விஷயத்தை அவன் லோரன்ஸிற்குச் சொன்னான். தான் சொல்வதை லோரன்ஸ் கவனிக்கிறாரா அல்லது கோழியின் பித்தப்பை அகற்றுவதில்தான் கண்ணுங்கருத்துமாக இருக்கிறாரா எனத் தீர்மானிக்க இயலாத நிலையில் அவன் இருந்தான்.

லோரன்ஸ் சாதாரணமாகப் பதில் சொன்னார். ''ஒரு சுலபமான வழி இருக்கிறது. பூனை வளர்த்தால் எலி கிட்டேயும் வராது. பூனை ஒன்றை வளருங்கள்''.

இது ஒரு புதுவிதமான அணுகுமுறை என்றே அவனுக்கும்பட்டது. பூனையை உடனே அவன் வரவழைத்து விட்டான். அதற்கு ஓர் ஆங்கிலப்பெயரை அவன் சூட்டினான். தமிழ்ப் பெயர்கள் செல்லப் பிராணிகளுக்கு ஏனோ அவ்வளவு பொருந்துவதில்லை. (தேவருடைய படங்களைத் தவிர)

பூனை வந்ததும் வீடு முழுக்க மியாவ் மியாவ் சத்தத்தால் நிரம்பியது. எலிகளின் கீச்சிடலை விட பூனைகளின் மியாவ் மியாவ் எவ்வளவோ மேலானது என அவன் நினைத்துக் கொண்டான். வீட்டின் சகலபகுதிகளுக்கும் சென்று பூனை உரிமை கொண்டாடிற்று. அது தன் கட்டிலில் சில வேளைகளில் சுருண்டு படுப்பதைக் கூட அவன் பொறுத்துக் கொண்டான். ஜேம்ஸ்பாண்ட் படத்து வில்லன் போல மடியில் அதைத் தூக்கி வைத்து, தடவவும், கொஞ்சவும் அவன் தயாராய் இருந்தான்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, அதிகாலையில் தேவாலயம் சென்று பசியுடன் திரும்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கறிச்சட்டியில் இருந்தவற்றைக் காலி பண்ணிய திருப்தியுடன் இவனை நிமிர்ந்து பார்த்து 'மியாவ்' என்றது சனியன்.

வெறிபிடித்தவன் போல் பூனையை அவன் துரத்தினான், சாது வேஷத்துடன் மியாவ், மியாவ் என்று பதிலுக்குக் கத்தியபடி அவனிடமிருந்து தப்பி ஓடியது அந்தப் பூனை. அவ்வளவும் பாசாங்கு! 'திருட்டுப் புனையே, ஒழிந்து போ' என அவன் பொல்லால் எறிந்தான். அதன் பின்பும் கொஞ்ச நாட்கள் வரை அது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் ஒரு நாள் காணாமலே போயிற்று.

லோரன்ஸிடம் இனிப்போனால் நாய் வளர்க்கும் ஆலோசனையை சமர்ப்பிக்கக்கூடும் என அவனுக்குத் தோன்றிற்று. அவன் சுயமாக ஒரு முடிவுக்கு வந்தான். பின்னால் இருக்கும் பாழ்வளவை சுத்தப்படுத்திவிட்டால் எலிகள் மட்டுமல்ல, அவன் அருவருக்கும் எந்த ஜீவராசிகளும் இனி தலை காட்டப்போவதில்லை.

கூலியாட்களை அவன் வரவழைத்தான். பாழ்வளவைத் துப்புரவு செய்யும் வேலை தொடங்கிற்று. வேலியில் படர்ந்திருந்த கல்யாணப்பற்றையில் அவர்கள் ஆரம்பித்தார்கள். வளவை சுத்தம் பண்ணும் போது நிறைய பொந்தெலிகளும், பாம்புகளும் அகப்பட்டதாக கூலிக்காரர்கள் சொன்னார்கள். ஆனால் அவன் பார்க்கவில்லை.

குப்பைகள் ஒரு மூலைக்குக் கூட்டியெடுக்கப்பட்டு அன்று மாலை தீயிடப்பட்டது. நத்தைகளின் ஓடுகள் வெடிக்கும் சத்தம் வெகு நேரம் வரை கேட்டது.

அதன் பின்பே அவன் நிம்மதியடைந்தான். ஒரு நாள் லோரன்ஸிடம் காட்டை அழித்தது குறித்து வேடிக்கையாகச் சொன்னான். ''முதலில் செய்ய வேண்டிய காரியத்தை நாம் கடைசியில் செய்திருக்கிறோம்.''

அதன் பின்னர் அவன் எலிகள் பற்றி மறந்தே போனான். வோல்ட் டிஸ்னியின் படம் பார்க்கும் போது மாத்திரம் எலியின் ஞாபகம் வந்தது. எல்லா எலிகளும் வோல்ட் டிஸ்னியின் மிக்கி மௌஸைப் போல இருந்தால் என்ன என்று அப்போது நினைத்துக் கொண்டான்.

வீட்டின் பின்புறம் ஒருநாள் தற்செயலாக பார்த்தவன் மறுபடியும் உன்னிப்பாக பார்வையை செலுத்தினான் 'பச்சைகள்' மறுபடியும் தலை தூக்கியிருந்தன. 'மண்ணுக்குள் வேர்களை விட்டுவைத்தால்தான் தங்களுக்கு மறுபடியும் வேலை வரும்' என யோசித்த கூலிக்காரர்களின் தந்திரத்தை, சாமர்த்தியத்தை எண்ணி அவன் புன்னகைத்தான்.

அன்றிரவு பத்துமணியளவில் கட்டிலில் அவன் காலடியில் தொப்பென ஏதோ விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் போட்டான். எலியொன்று ஓடி மறைந்தது. 'மறுபடியும் எலி' என அவன் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டான்.

இப்போது எலிகளை அழிக்கும் எண்ணம் அவனிடம் இல்லாமல் போயிற்று. எலிகளிடமிருந்து தன்னை எவ்விதம் காப்பது என்ற பயம் மேலோங்கத் தொடங்கியிருந்தது.

கார்த்திகை 1987
சுபமங்களா

நன்றி : http://umavaratharajan.com/sirukathai/eliyam.html

Thursday, September 10, 2015

பார்த்திபன் கனவு 48 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 11 - பழகிய குரல்)

அத்தியாயம் 11 - பழகிய குரல்


நன்றி : http://img.dinamalar.com/data/uploads/E_1296325339.jpeg

குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான்.

சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. "ஐயோ! அது வெள்ளத்தில் போயிருக்குமே?" என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

"நல்ல வேளை! குதிரையாவது பிழைத்ததே!" என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் 'ஓ' வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்! தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே! அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, "அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்" என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! - அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா! திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், "என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா!" என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? - ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?

விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது... அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்... ஐயோ! மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை.... விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?... இது என்ன பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?.... இது என்ன வீண் பிரமை?... அம்மா! அம்மா!..." விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.

விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், - "மகாராஜா" என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா? கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

"பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?" என்றான் விக்கிரமன்.

"மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா? அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்... உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! - ஆகா! வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்..."

ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது.

விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

"பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் - அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?" என்றான்.

"எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா....!" அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது.

"பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- 'இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?" என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!" என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.

"பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்... இல்லை! இல்லை! காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்... இருக்கட்டும், பொன்னா! என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! - மகாராணி சௌக்கியமா?" என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன்.

மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம்.

"ஐயோ, பொன்னா! என்ன விபத்து நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா" என்று பதைபதைப்புடன் கேட்டான்.

அப்போது பொன்னன், "இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை...." என்றான்.

விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது!

"அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?..."

"மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது."

இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html

Sunday, September 6, 2015

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்!!! பாகம் 11

வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.
1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான, நாசா (NASA) சூரியத்தொகுதியில் இருக்கும் வெளிக்கோள்களான, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை அருகில் சென்று படம்பிடிக்கவும், மற்றும் அதன் பண்புகளை ஆராயவும் என உருவாக்கிய ஒரு திட்டமே, வொயேஜர் (Voyager Mission) திட்டமாகும்.

வொயேஜர் திட்டத்தின் குறிக்கோள்:

வொயேஜர் திட்டத்தை உருவாக்கும் போது நாசாவின் முக்கிய நோக்கம் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஆராய்வதே. வொயேஜர் திட்டம் இரட்டை விண்கலங்களை உள்ளடக்கியது. இரண்டுமே அமைப்பிலும், செயற்பாட்டிலும் ஒன்றையொன்று ஒத்த விண்கலங்கள்.

இவற்றின் முதன்மைக்குறிக்கோளான வியாழனையும் சனியையும் ஆராய்ந்தவுடன், வொயேஜர் 2 வெளிக்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை நோக்கி சென்று அவற்றையும் ஆராய்ந்துவிட்டு, தொடர்ந்து சூரியனுக்கு எதிர்திசையில் பயனிக்கத்தொடகியது. இந்த புதிய திட்டம் இப்போது வொயேஜர் வின்மீனிடைத் திட்டம் (voyager interstellar mission) என அழைக்கப்படுகிறது.

வொயேஜர் திட்டத்தின் ஆரம்பம்:

Gray Flandro என்னும் நாசா பொறியியலாளர், 175 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் வரும் கோள்களின் அமைப்பினை கண்டறிந்தார், இந்த அமைப்பினை பயன்படுத்தி வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் மற்றும் ப்ளுட்டோ ஆகிய கோள்களை ஒரே தடவையில் சென்றடைய முடியும். அதாவது, விண்கலத்தை சரியான பாதையில் செலுத்துவதன் மூலம், இந்தக் கோள்களின் ஈர்ப்பு சக்தியை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்தி படிப்படியாக, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை சென்றடைய முடியும்.

இந்த கோள்களின் அமைப்பு 1970 களின் இறுதியில் வருவதை அறிந்த நாசா, அதனைப் பயன்படுத்தி, வெளிக்கோள்களை ஆய்வுசெய்ய முடிவு செய்தது.

முடிவில்லாப் பயணத்தின் ஆரம்பமும் வியாழனும்:

முதன் முதலில் வொயேஜர் 2 விண்கலமே விண்ணுக்கு ஏவப்பட்டது. 722kg நிறை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20, 1977 இல் தனது பயணத்தை ஆராம்பித்து, ஜூலை 9, 1979 இல் வியாழனுக்கு மிக அருகில் வந்தது. அண்ணளவாக 570,000 km தூரத்தில்! அதுபோல வியாழனுக்கும் வளையங்கள் உண்டு என்று கண்டறிந்தது வொயேஜர் 2.

வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் மார்ச் 5, 1979 இலேயே அது வியாழனை அடைந்துவிட்டது. அண்ணளவாக 349,000 km தூரத்தில் அது வியாழனை நெருங்கியது. மிக அருகில் சென்றதால் அதனால் மிகத் தெளிவாக வியாழனையும் அதனது அமைப்புக்களையும் புகைப்படம் எடுக்க முடிந்தது.

நீங்கள் இங்கு ஒன்றை கவனிக்கலாம், வொயேஜர் 2 ஐ விட வொயேஜர் 1 ஐ விட முதலில் அனுப்பப்பட்டது, ஆனால் வொயேஜர் 1 வேகமாகவும் குறுகிய தூரம் கொண்ட பாதையில் பயனித்த்தாலும் அதனால் வொயேஜர் 2 ஐ விட முதலில் வியாழனைச் சென்று அடைந்தது.

அதேபோல வியாழனின் பாரிய சிவப்புப் புள்ளி ஒரு மிகப்பெரிய புயல் என்பதனையும் எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புயல் எவ்வளவு பெரியது என்பதனை கூறியாகவேண்டும், இந்தப் புயலினுள் அண்ணளவாக மூன்று பூமிகளை புதைக்க முடியும்!

வியாழனும் அதன் துணைக்கோள் Io வும்வியாழனும் அதன் துணைக்கோள் Io வும்

இவை எல்லாவற்றையும் ஓரளவுக்கு கணித்திருந்த ஆய்வாளர்களுக்கு பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்தது, வியாழனின் துணைக்கோளான ஐஓ (Io) வில் எரிமலைச் செயற்பாடுகள் காணப்படுவதே. முதன்முதலாக பூமியைத் தவிர, சூரியத் தொகுதியில் வேறு ஓர் இடத்தில் எரிமலைச் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டது.

வொயேஜர் 1, வொயேஜர் 2 ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக 9 எரிமலை வெடிப்புக்களை அவதானித்தன. அதுமட்டுமல்லாது, அடுத்த துணைக்கோளான யுரோப்பாவில் கோடுகள் இருப்பதும் தெரியவந்தது. இது பாரிய வெடிப்புகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் அப்போது கருதினர். பின்னர் நடைபெற்ற ஆய்வுகள் மூலம், இப்போது நமக்கு யுரோப்பாவைப் பற்றி பலவிடயங்கள் தெரிய வந்துள்ளன.

பனியால் மூடப்பட்டுள்ள யுரோப்பாவின் அகப்பகுதியில் நீர் திரவநிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகப்பகுதியின் வெப்பநிலை காரணமாக மேற்பரப்பில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன, அவையே கோடுகள் போல தென்படுகின்றன.

இப்படி வியாழனையும் அதன் சில துணைக்கோள்களையும் ஆய்வு செய்தபின் இரண்டு வொயேஜர் விண்கலங்களும் சனியை நோக்கி பயணித்தது.

சனியோடு ஒரு மோதல்:

வொயேஜர் 1 நவம்பர் 1980 இல் சனியை அடைந்தது. நவம்பர் 12 இல், சனிக்கு மிக அருகில், அதாவது சனியின் மேற்பரப்பில் இருந்து  124,000 km தூரத்திற்குள் வொயேஜர் 1 வந்தது.
சனியின் வளையங்களைப் பற்றி தெளிவான படங்களும், சனியின் வளிமண்டலம் பற்றிய தகவல்களையும் முதன் முதலில் எமக்கு தெளிவாக அனுப்பி வைத்தது.

அதோடு மட்டுமல்லாது, வொயேஜர் 1, சனியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் 11% ஹீலியம் இருப்பதையும், எஞ்சியதெல்லாம் ஐதரசனாக இருப்பதையும் கண்டறிந்தது. மேலும் சனியின் மத்திய பகுதியில் புயல் மணிக்கு 1700 km வேகத்தில் வீசுவதையும் அளவிட்டது.

800px-Saturn_(planet)_large

வொயேஜர் 2 சனிக்கு மிக அருகில் ஆகஸ்ட் 26, 1981 இல் சென்றது. இது சனியின் வெப்பநிலையை அளவிட்டது. சனியின் மேற்பரப்பு வெப்பநிலை -203 பாகை செல்சியஸ் ஆகவும், ஆழாமான பகுதிகளில் வெப்பநிலை -130 பாகை செல்சியசாகவும் அதிகரித்து காணப்பட்டதை வொயேஜர் 2 அளவிட்டது.

பயனியர் 11 என்ற விண்கலம் சனியின் டைட்டன் என்ற துணைக்கோளில் அடர்த்தியான வாயுவாலான மேற்பரப்பை கண்டறிந்ததால், வொயேஜர் 1 இன் அடுத்த இலக்காக டைட்டன் அமைந்தது. ஆனால் டைட்டனின் ஈர்ப்புவிசை வொயேஜர் 1 இன் பாதையை மாற்றிவிட, அதனது கோள்களை நோக்கிய பயணம் முடிவுக்கு வந்தது எனலாம்.

இரண்டு வேறுபட்ட பயணங்கள்:

வொயேஜர் 2, சனியின் ஈர்ப்பு விசையை துணையாக பயன்படுத்தி, அடுத்த கட்டமாக யுரேனஸ் கோளை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. ஜனவரி 24, 1986 இல் வெறும் 81,500 km இடைவெளியில் யுரேனஸை வொயேஜர் 2 சந்தித்தது.
மற்றைய கோள்களைவிட யுரேனஸ், கிடையாக சுற்றுவதை வொயேஜர் 2 கண்டறிந்தது. மட்டுமல்லாது, யுரேனசின் ஐந்து வளையங்களையும் வொயேஜர் 2 ஆராய்ந்து, இந்த வளையங்கள், சனி மற்றும் வியாழனின் வளையங்களை விட வேறுபட்டதாக இருப்பதையும் கண்டறிந்தது. அத்தோடு யுரேனசின் துணைக்கோள்களையும் ஆய்வுசெய்துவிட்டு அடுத்த கட்டமாக இறுதிக் கோளான நேப்டியுனை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

வொயேஜர் 1 இன் பயணம் மேற்கொண்டு எந்தவொரு கோள்களையும் ஆராயாமல் அது சூரியத் தொகுதியை விட்டு வெளியே செல்லும் வண்ணம் அமைந்தது. 1990 இல் வொயேஜர் 1, அதற்கு முன்னர் செலுத்தப்பட்ட பயனியர் 1 மற்றும் பயனியர் 2 ஆகிய வேகம் குறைவான விண்கலங்களை முந்திச் சென்றது. அன்று அது படைத்த சாதனை இன்னும் வரப்போகும் பல தசாப்தங்களுக்கு முறியடிக்கப் பட முடியாதது. மனிதன் உருவாக்கி, பூமியை விட்டு மிகத் தொலைவு சென்ற பொருள் என்ற பெருமையை அது பெற்றது.

தற்போது புளுட்டோவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நியூ ஹொரைசன் என்ற விண்கலம், வொயேஜர் 1 ஐ விட அதிகமான ஆரம்ப வேகத்தைக் கொண்டிருந்தாலும், வொயேஜர் 1 ஏ மிக வேகமாக பயணிக்கும் விண்கலமாகும். அது வியாழன் மற்றும் சனியின் ஈர்ப்பு விசையை துணையாகக் கொண்டு தனது வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டது (slingshot effect).

பெப்ரவரி 17, 1998 இல், வொயேஜர் 1, சூரியனில் இருந்து அண்ணளவாக 10 பில்லியன் km தூரத்தில், செக்கனுக்கு 17 km என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.

வொயேஜர் 2 இன் நெப்டியூன் சந்திப்பு:

வொயேஜர் 2, ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனுக்கு மிக அருகில் வந்தது. அதுமட்டுமல்லாது, அது நேப்டியுனின் பெரிய துணைக்கோளான ட்ரைடன் அருகிலும் சென்று அதனையும் படம்பிடித்தது.

நேப்டியுனில் இருந்த “பெரும் கரும்புள்ளி”யையும் முதன்முதலில் வொயேஜர் 2 கண்டது. இப்போது அந்தப் புள்ளி மறைந்துவிட்டது. இது நெப்டியுனின் மேல்மட்ட முகில்கூட்டத்தில் இருந்த துவாரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.

நெப்டியுனின் வளிமண்டலத்தில், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகியன காணப்படுகின்றன. நேப்டியுனின் நீல நிறத்திற்கு காரணம், அதிலுள்ள மெதேன் வாயு ஆகும். இது சூரிய ஒளியில் இருக்கும் சிவப்பு நிறத்தை உறுஞ்சிக் கொண்டு, நீல நிறத்தை தெறிப்படைய செய்கிறது.

வொயேஜர் விண்மீனிடை வெளிப் பிரதேச ஆய்வுப் பணி:

நேப்டியுனை ஆய்வு செய்து முடித்தவுடன், வொயேஜர் விண்கலங்களின் பிரதான பணி முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் அதன் இரண்டாவது பணியான, “வொயேஜர் விண்மீனிடை வெளிப் பிரதேச ஆய்வுப் பணி” தொடங்கியது. வொயேஜர் 1 ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுவிட, நேப்டியுனின் ஆய்வை முடித்துக்கொண்டு வொயேஜர் 2 விண்கலமும் தனது சகோதரனின் பயணத்தில் பங்கெடுத்துக்கொண்டது.

interstellar_2

சூரியனது ஆதிக்கம் முடியும் எல்லையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், முதலாவது விடுவிப்பு அதிர்ச்சி எல்லை (termination shock), இரண்டாவது ஹெலியோசீத் (heliosheath), மூன்றாவதாக அதற்கு வெளியில் இருப்பது வின்மீனிடை வெளி (interstellar space), இது சூரியனது கதிர்வீச்சி ஆதிக்கத்திற்கு வெளியே உள்ள பிரதேசமாகும். ஹெலியோசீத் மற்றும் வின்மீனிடை வெளிப் பிரதேசத்திற்கு இடையில் ஹெலியோபோஸ் எனப்படும் பகுதி ஒன்று இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வொயேஜர் எந்தப் பிரதேசத்தில் இருகின்றது என்று பார்க்கலாம்:

வொயேஜர் 1, டிசம்பர் 2004 இல் விடுவிப்பு அதிர்ச்சி எல்லையை தாண்டிச் சென்றது. அப்போது அது சூரியனில் இருந்து 94 AU தொலைவில் இருந்தது. (1AU எனப்படுவது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகும் – 150 மில்லியன் km, AU – astronomical unit எனப்படும் அலகு, சூரியத் தொகுதியில் தூரத்தை அளக்கப் பயன்படும் அலகாகும்).

வொயேஜர் 2, மே 2006 இல் விடுவிப்பு அதிர்ச்சி எல்லையைக் கடந்தது. அப்போது அது, சூரியனில் இருந்து 76 AU தொலைவில் இருந்தது. இந்த வேறுபட்ட தூரத்திற்கு காரணம், வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய இரண்டும் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கிறது. ஆக விடுவிப்பு அதிர்ச்சி எல்லை ஒரே சீராக எல்லாத்திசைகளிலும் இல்லை என்பதனை அறியக்கூடியதாக இருக்கிறது.

interstellar_1

பெப்ரவரி 2015 இல் வொயேஜர் 1, சூரியனில் இருந்து 19.5 பில்லியன் கிலோமீற்றர் (130.5AU) தொலைவிலும், வொயேஜர் 2, 16 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிழும் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

வொயேஜர் 1, அண்ணளவாக ஒரு வருடத்தில் 3.6AU என்ற வேகத்தில் சூரியத் தொகுதியின் மத்திய அச்சுக்கு 35 பாகை வடக்கு நோக்கி பயணிக்க, வொயேஜர் 2, வருடத்திற்கு 3.3AU என்ற வேகத்தில், சூரியத் தொகுதியின் மத்திய அச்சுக்கு 48 பாகை தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருகின்றன.

இந்த இரண்டு விண்கலங்களின் தற்போதைய பிரதான நோக்கம், ஹெலியோபோஸ் பகுதியை சென்றடைவது தான், அதுதான், சூரியனது கதிர்வீச்சு ஆதிக்கம் முழுமையாக முடிவடையும் பிரதேசமாகும். இன்னும் 10 அல்லது 15 வருடத்தில் வொயேஜர் விண்கலங்கள் இந்தப் பிரதேசத்தை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொயேஜர் விண்கலங்கள் தெர்மோஎலெக்ட்ரிக் மின்னாக்கி மூலம் சக்தியை உருவாக்கிக்கொள்கிறது. இதற்கு புளுட்டோனியம் சக்தி முதலாக பயன்படுத்தப் படுகிறது. விண்ணுக்குச் செலுத்தப்படும்போது இந்த மின்னாக்கி 470W சக்தியை உருவாகியது. ஆனால் அக்டோபர் 2011 இல் இந்த மின்னாக்கியின் சக்தி வெளியீடு 268W ஆக குறைந்து விட்டது.

இப்படியாக சக்தியின் அளவு குறைந்து வரும்போது, வொயேஜர் விண்கலங்களில் இருக்கும் சில கருவிகள், மின்சக்தியை சேமிக்கும் நோக்குடன், இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நாசா ஆய்வாளர்கள், வொயேஜர் விண்கலங்கள் 2020 வரையாவது தொழிற்படும் என கணக்கிட்டுள்ளனர். அந்தக் காலப்பகுதிக்குள் நிச்சயம் வொயேஜர் 1 ஹெலியோபோஸ் பகுதியை அடைந்துவிடக்கூடும். அப்போது வொயேஜர் 1, சூரியனில் இருந்து 22.1 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிலும், வொயேஜர் 2, 18.4 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும்.

அதன் பின்னர் அது பூமிக்குத் தகவல்களை அனுப்புவதற்கு தேவையான சக்தி முடிவடைந்துவிட்டாலும், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். காரணம் அதனை நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ அங்கே, அதாவது வின்மீனிடை வெளிப் பிரதேசத்தில் ஒன்றும் இல்லை!

அவை தனது பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கும், இடையில் எதாவது ஒன்று அவற்றைக் கடக்கும் வரை, அப்படி எதுவும் அவற்றைச் சந்திக்கவில்லை என்றால், அவற்றின் விதி, பால்வீதியைச் சுற்றி வலம்வரலாம்!

வொயேஜர் கொண்டுசெல்லும் தங்கத் தகடுகள்:

இரண்டு வொயேஜர் கலங்களும், தங்களுடன், தங்கத்தால் ஆன போனோகிராம் (இசைத் தகடு) தகடுகளை காவிச்செல்கிறது. இவை சாதாரண தகவல் தகடுகள் அல்ல, இவற்றில் பூமியில் இருக்கும் உய்ரிபல்வகமையின் படங்களும் ஒலிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1024px-Voyager_Golden_Record_fx

வொயேஜர் விண்கலங்கள் எந்தவொரு நட்சத்திரத் தொகுதியையும் குறிப்பாக நோக்கிச் செல்லவில்லை, ஆனாலும், இன்னும் 40,000 வருடத்தில், வொயேஜர் 1, Gliese 445 என்ற விண்மீனில் இருந்து 1.6 ஒளியாண்டுகள் தூரத்தினுள் செல்லும். இருந்தும் இந்தப் பரந்த வின்மீனிடை வெளிப் பகுதியில் ஒரு நாகரீகத்தின் கையில் இந்த தகடுகள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிதே.

வானியலாளர் கார்ல் சேகன் தலைமையில் இந்த தகட்டில் உள்ளடக்கப் படவேண்டியவைகளை கவனமாக தெரிவு செய்தனர்.
116 படங்கள், பல்வேறுபட்ட இயற்கை ஒலிகள், காற்றின் சத்தம், மின்னல் இடிச் சத்தம், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சத்தங்கள். உலகில் உள்ள மொழிகளில், 55 மொழிகளில் வணக்கமும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவரின் செய்தியும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, பிரபல இசைக்கலைஞர்களான மொசார்ட், பீதோவன் போன்றவர்களின் இசையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாது, நமது சூரியத் தொகுதியின் அமைவிடமும், ஐதரசன் அணுவின் கட்டமைப்பும் இந்தத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழில்நுட்ப நாகரீகம் இந்த தகட்டை உருவாக்கி அனுப்பியுள்ளது என்ற செய்தியோடு இந்தத் தகடுகளைக் கொண்டு வொயேஜர் விண்கலங்கள் விதிவிட்ட வழியில் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

ஒருவேளை பல்லாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் இந்தத் தகடுகள் ஒரு நாகரீகத்தின் கையில் கிடைக்கலாம், அதனைக்கொண்டு அவை பூமியைக் கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

மனித இனத்திற்காக இந்த மகத்தான சாதனைச் செய்து, வெளிக்கோள்களைப் பற்றி பல அறிய தகவல்களை நமக்குத் தெரிவித்து, இன்று சூரியத்தொகுதியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் இந்த வொயேஜர் விண்கலங்களுக்கு எமது நன்றியையும் சமர்பிக்கலாம்.

நன்றி : https://parimaanam.wordpress.com/2015/05/03/voyager-mission/