Wednesday, January 29, 2014

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்!!!

வணக்கம் கள உறவுகளே !!

ஒரு சிறு அறிவியல் தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எங்கள் மனமானது இரவில் தெளிவான நீல வானில் தெரியும் பௌர்ணமி நிலவையும் , அதன் தொடர்ச்சியான நட்சதிரங்களையும்  பர்த்து பல கற்பனைகளையும் மேற்கொள்ளும் . ஏன் இவைகளையெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாதா ?? என்றுகூட சில வேளைகளில் எமது மனம் நினைக்கத் தோன்றும் . எமது பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கோ அதற்கும் அப்பால் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளிக்கும் மனிதன் பயணம்  செய்யமுடியுமா ??  என்ற அறிவியல் கேள்விக்கு இந்த தொடர் விடையளிக்கும் என்றே நினைக்கின்றேன் . வழமை போல் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்.


******************************************************************

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்


சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது  ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?

இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக கிளம்பலாயின.

உலகத்தின் மிகப்பிரசித்தமான தத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது.  அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன.

,'எப்பிசைக்கில்ஸ்' எனப்படும்  வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.
6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றி வலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு

1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி

விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமி அவற்றை சுற்றி வலம் வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.

பரலக்ஸ் எனப்படும் அசையும் பொருட்களில் ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண்  பொருட்களை சுற்றி வருவதும்,  தன்னை தானே சுற்றுவதும், தெளிவாக நிரூபிக்கப்படும். ஆனால் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களின் அசைவில் ஏற்படும் தடுமாற்றம் மிகச்சிறியதாக இருப்பதானால் இதை நிரூபிக்க வழியில்லை. கிரகங்களின் இயக்கத்தை கொள்கையளவில் வரையறுப்பது அக்காலத்தில் கடினமான காரியமாக இருந்தது.

வானத்தில் நிலையாக நிற்கும் நட்சத்திரங்களுடன் கிழக்குத்திசையில் பயணிக்கும் கிரகங்களின் இயக்கம், அவற்றின் வேகம் என்பன கேத்திரகணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.

கிரகம் என்ற சொல், 'வேண்டரர்' (Wanderer)  என்ற கிரேக்க பதத்தில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.

இக்கிரகங்களின் இயக்கத்தினை நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வானவியல் கருவிகள் எதன் துணைகொண்டுமல்லாது கணித ரீதியாக மட்டுமே ஆராய்ந்து, இப்படியான  தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள்தானே.

அரிஸ்டோடில்

அக்காலத்தில் இந்த வானவியல் கோட்பாடுகளை மையமாக கொண்டு வரையப்பட்ட கணித சூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்ப முடிகிறது.

தொடரும்

02 நவீன வானவியலின் பிறப்பு

modernasronomyastro2.jpg

உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்
பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.
சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.

சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.

copernicusastro2.jpg

கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடரும்

பிரபஞ்சத்தின் தோற்றம் - பகுதி 1 

நமது கண்ணுக்கு தெரியும் பிரதான வான் பொருட்களான சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் பூமி அல்ல சூரியனே என்ற முடிவுக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் பிண்ணனியில் சென்ற தொடரில் நவீன வானவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என வரலாற்றுக் குறிப்புக்களுடன் ஆராய்ந்தோம்.  இத்தொடரில் பிரபஞ்சம் எவ்வாறு தோற்றம் பெற்றது? என்பதைப் பற்றி அலசுவோம். பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது என்ற கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. ஆயினும் 21ம் நூற்றாண்டில் அறிஞர்களால் விவாதிக்கப் பட்டு வரும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்களில் ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் முக்கியமான கொள்கைகள் இரண்டு.

  1.  அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை.
  2.  அடுத்தது குவாண்டம் கொள்கை.

einsteinastro3.jpg
அல்பேர்ட் ஐன்ஸ்டீன்:

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவம். அதே போல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம்,காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக் கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.

இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்னவென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லி மீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன்,ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள்,கருந்துளைகள், குவாசர்கள்,நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன. மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும் எல்லையற்ற காலப் பெருவெளியில் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.

darkmatteraastro3.jpg

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு சடப்பொருள் மற்றும் சக்தி வீதங்கள்
இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்டவெளியிலுள்ள விண் பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவை ஒவ்வொரு கணமும் துரிதப்படுத்திக்  கொண்டிருக்கும் ஒப்புக் கொள்ள முடியாத சக்தியாகும்.

இவற்றுடன் பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.

பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெரு வெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன்போதே  விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான  மின்காந்தவிசை, நுண்ணிய அணு விசை, கடின அணு விசை,ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.

அடுத்தது கிராண்ட் யுனிfபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்பு நிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே  விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது.

மேலும் கடின அணு விசையும் நுண்ணிய அணு விசையும் இணைந்து ஹிக்ஸ் போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறு மூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ் போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

அடுத்த கட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்fப்ளேசனரி இப்போ எனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர்.

இன்fப்ளேசனரி இப்போவின் போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த தொடங்கியது. மேலும்  எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது  வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்கு கெல்வின் வரை குறைவடைந்ததால் கதிரியக்கம் ஆரம்பமாகி அணுக்களின் அடிப்படைத் துணிக்கைகளான குவார்க்குகள்,எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.

மேலும் தற்போது பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் பின்புலக் கதிர்வீச்சு இதன் போதே உருவானது. இக் கதிர் வீச்சே பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமாக பெரு வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என இன்று விஞ்ஞானிகள் கருதக் காரணமாகும்.

இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின் போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.

இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிக மிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாகவில்லை. அடுத்து வரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போ காலப்பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.

அதாவது குவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த் துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம் பெறுகின்றன. இதன்மூலம் பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழி ஏற்பட்டது.

தொடரும்

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 02
Big%252520Bang%252520Timeline.jpg

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - 2 (பெருவெடிப்பின் ஒரு செக்கனுக்கு பின்)
முந்தைய தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அலசுகையில் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு நிகழ்ந்த முதலாவது செக்கனில் நிகழ்ந்த மாற்றங்களை கருக்கள் மற்றும் துணிக்கை ரீதியாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந்தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெரு வெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க் குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு  உருவாகி பிரபஞ்ச வெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.

இதை அடுத்து பெரு வெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக பட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன்  எதிர்த் துணிக்கையான ஆண்டிஹெட்ரோன்களும் தமக்கிடையே தாக்கமுற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவை பிரபஞ்சத்தின் அதிக பட்ச நிறையை தமதாக்கி விடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டிலெப்டோன்களும் தாக்கமுற்று ஒன்றையொன்று அழித்த பின் மிகச்சிறிய லெப்டோன்களே எஞ்சி நிற்கும்.

இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்ட தாக்கம் நடைபெறுகிறது. இக் காலப்பகுதி போட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருதமுடியாத எனினும் துணிக்கையின் இயல்பும்,மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக்கற்றை போன்ற பொருள் அணுக்கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனுடனும் தாக்கமுற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்துகின்றன.

முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின் போதே பிரபஞ்சத்தின் வெப்ப நிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றன.  பெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்த கருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி,வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம்4 அணுக்களும் அதை விட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிக பட்சமாக நிரம்பியிருக்கும்.

bigbangtimeline2astro4.jpg

பிரபஞ்ச தோற்றத்தின் காலகட்டங்கள்:

பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக் கருக்களின் அடர்த்தியும்,போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில் ஈர்ப்பு விசை மற்றும் சடப்பொருளின் அழுத்தம் என்பவற்றின் போட்டி காரணமாக நிகழும் மிகச்சிறிய அணுக் கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும். இது ஜீன்ஸ் லெந்த் எனப்படுகின்றது.

அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்கு பின்னர் பிரபஞ்சத்தின் அடர்த்தி வீழ்ச்சியடைவதால் ஐதரசன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் உருவாகின்றன. மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன.ஆரம்பத்தில் ஐதரசன்,மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தை விட இது வேகமாக நிகழ்வதுடன் மறு இணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப்படுகின்றது.

அணுக் கருக்கள் நடு நிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி,ஊடகம்,பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.

இன்னும் எஞ்சியிருக்கும் கட்டங்களாக, பிரபஞ்சத்தின் இருண்ட யுகம், கட்டமைப்பின் தோற்றம், மறு அயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம்,அண்டங்களின் தோற்றம்,அண்டங்களின் கூட்டு,கிளஷ்டர்ஸ்,சுப்பர் கிளஷ்டர்ஸ் என்பவற்றின் தோற்றம்,சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து இன்றைய நிலை என்பன பற்றி அடுத்த தொடரில் ஆராயப்படும்.

தொடரும்

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 03

Infant Galaxy : ஹபிள் தொலைக்காட்டியால்  எடுக்கப்பட்ட புகைப்படம்


பிரபசஞ்சத்தின் தோற்றம் 3 - இன்றைய நிலை
நம் நட்சத்திர பயணங்கள் தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக இரு பகுதிகள் ஏற்கனவே பார்வையிட்டோம். இதில் பிரபஞ்சத்தின் தோற்றம் பெருவெடிப்பு நிகழ்ந்து 1 செக்கனுக்குள் மற்றும் 1 செக்கனுக்கு பின்னர் என இரு பகுதிகளாக அலசினோம். இத்தொடரில் பெருவெடிப்பின் பின்னர் இன்றைய நிலைவரை நிகழ்ந்த மூலக்கூறு ரீதியான மாற்றங்களை பார்ப்போம்.
முதலாவதாக பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்கள் பரிணாமமடைந்து உருவாகும் திணிவுடைய துணிக்கைகள்,பின்புலக் கதிர், மூலக்கூறுகள் என்பன பிரிக்க முடியாது ஒரு கலவையாக காணப்பட்ட காலத்தை எடுத்துக் கொள்வோம். இக் காலப்பகுதியில் என்ன என்றே இணங்கான முடியாத திண்மமாக பிரபஞ்சம் இருந்ததாகவும் இது இருண்ட யுகம் எனவும் வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். போட்டோன்கள் அணுக்களுடன் இணைந்து பாய்மமாக காணப்பட்டதால் பிரபஞ்சம் நம் கண்ணால் காணும் ஒளியின்றி இருண்டிருந்தது என்பதே இவர்களின் கூற்று.

பெருவெடிப்பின் 150-800 மில்லியன் ஆண்டுகளில் நிலவிய இக்காலத்தில் போட்டோன்கள் எலெக்ரோன் மற்றும் புரோட்டன்களுடன் இணைந்து
போட்டோன்-பர்யோன் பாய்மமாக சடப்பொருள் திகழ்ந்ததாக கருதப்படுகின்றது. பர்யோனிக் சடம் எனும் இப்பொருள் அயன்களுடன் கூடி உருவாகும் ஐனைசைட் பிளாஸ்மா ரீகம்பினேஸன் நிகழும் போது இலத்திரன்களை கவர்ந்து நடுநிலையாக்கப் பட்ட பின் ஒளியை உண்டாக்கும் போட்டோன்களை வெளிவிடும். பிரபஞ்சத்தை அளவிட உதவும் CMB வரைபடம் இந்த போட்டோன்களாலேயே சாத்தியமாகின்றது.


WMAP

பெருவெடிப்பின் 480 மில்லியன் வருடங்கள் கழிந்த நிலையில் இருண்ட யுகத்தின் பின்னர் உருவானதாக கருதப்படும் சூரியனை விட பல்லாயிரம் மடங்கு ஒளியுடைய UDFY-38135539 எனும் குவாசர் ஜனவரி 2011 அவதானிக்கப்பட்ட போது 13 பில்லியன் வயது உடையது எனும் செய்தி பகிரப்பட்டது.

இருண்ட யுகத்தின் போது மறுஅயனாக்க காலத்தில் பிரபஞ்சத்தின் சிறிய கட்டமைப்பு முதல் மிகப் பெரிய காலக்ஸிகள்,குவாசர்கள்,
கருந்துளைகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன உருவாகின்றன. இதற்கு முன்னர் பிரபஞ்சத்தை கணிப்பிட நுண்கணிதத்தின்
காஸ்மொலொஜிக்கல் நேர்கோட்டு தொடர்கள் முறையை பின்பற்றும் பெட்ருபேசன் தியரி மூலம் விளக்கங்கள் பெறப்பட்டது.

அடுத்ததாக மறு அயனாக்க காலத்தை மேலும் அலசுவோம். பெருவெடிப்பின் 150 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் இடையிலான இக் காலத்தில் பிரபஞ்சத்தில் அதிக பொருள் பிளாஸ்மா எனும் செறிவு கூடிய திண்மமாக இருந்தது. ஈர்ப்பு விசையின் இடையீட்டு தாக்கங்களால் நட்சத்திரங்களும் அவற்றை விட ஒளியில் செறிந்த குவாசர்களும் இக்காலத்தில் தோன்றுகின்றன. இதன்போது 21cm மட்டுமே விட்டமுடைய கதிர்வீச்சு வெளியில் பரவுகின்றது.

மறு அயனாக்கத்தின் போது பெருவெடிப்பின் போது கூடவே தோன்றிய இலகுவான மூலகங்களான ஐதரசன்,ஹீலியம்,லித்திய ஆகியன அடர்த்தி கூடிய மூலகங்களாக மாறி பிரபஞ்ச தோற்றத்தின் ஆதியில் தோன்றிய முதல் பாப்புலேசன் 3 வகை நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக பிரபஞ்சத்தில் அதிக கூடிய கொள்ளளவை எடுக்கும் சடப் பொருள் தமக்கிடையே மோதலுற்று காலக்ஸிகள் உருவாகின்றன. இதன்போது பாப்புலேசன் 2 மற்றும் 3 வகை நட்சத்திரங்கள் தோற்றமுறுகின்றன. வானியல் அறிஞர்களால் மிக அதிகளவான அதாவது 12.7 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள CFHQS 1641-3755 எனும் குவாசர் அவதானிக்கப் பட்டுள்ளது. நாம் தற்போது காணும் அதன் தோற்றம் பிரபஞ்சம் உருவாகி இன்றிலிருந்து 7% வீதம் கடந்த பழையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட கலிபோர்னியாவில் உள்ள கெக் 2 தொலைகாட்டி மற்றும் ஹபிள் விண் தொலைக்காட்டியும் மிக மிக பழைய அண்டங்களை அதாவது காலக்ஸிகளை இணங்கண்டுள்ளன. இவற்றில் சில பிரபஞ்சம் தோன்றி 500 மில்லியன் வருடங்கள் கழித்து உருவானவை. மேலும் சில பிரபஞ்சம் தோன்றி தற்போதைய நிலையிலிருந்து 5 வீதம் கழித்து உருவானவை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி படிக்கும் அணுவரிசை பிரபஞ்சவியல் இன் ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் அண்ணளவாக 8.8 பில்லியன் வருடங்கள் பழையது.

பிரபஞ்ச வெளியில் அடர்ந்துள்ள சடப்பொருள், ஈர்ப்பு விசை மற்றும் மூலக்கூற்று ரீதியான கருத்தாக்கங்கள் மூலம் நட்சத்திரங்கள் மற்றும் குவாசர்கள்,காலக்ஸிகளாக மாற்றமடைகின்றது எனப் பார்த்தோம். இவை மேலும் ஈர்ப்புவிசை காரணமாக ஈர்க்கப்பட்டு அண்டங்களின் கூட்டு, மற்றும் விசேட அண்டங்களில் கூட்டு (கிளஸ்டர்ஸ்,சுப்பர் கிளஸ்டர்ஸ்) என்பன தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக நமது சூரிய குடும்பத்துக்கு வருவோம். பிக்பாங் நிகழ்ந்து சரியாக 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். காலங்கடந்த தலைமுறை நட்சத்திரமான நமது சூரியன் அதைப் போன்ற ஏனைய தலைமுறை நட்சத்திரங்களின் சிதைவுகளில் இருந்து 4.56 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

இறுதியாக பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக அலசுவோம். பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் ஆர்முடுகிக் கொண்டு அதாவது அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றம் தற்போதைய நிலை பற்றி இதுவரை ஆராய்ந்தோம், அடுத்த தொடரில் பிரபஞ்சம் அழிவடைவது என்ன என்ன விதங்களில் சாத்தியம் என்பதை அலசுவோம்.

தொடரும்


Thursday, January 16, 2014

இந்து மதம் எங்கே போகிறது????????? ( 29 - 35 )

29. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா!!!!!!!!!!


ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?  ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே...அப்புறம் எதுக்கு சொத்து? இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா. லோகமே அழியப்போறது ஓய்.

ஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்... பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?..

டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ (-) இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி’ என்றேன் நான் அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா... ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா... அபாண்டமா அபச்சாரமா போயிடும் ’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்...அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் ஸ்திரி தர்மமே பாழாயிடும்

ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய் இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார் அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்’ என்றேன்.

அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து...எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும் சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம் இது மட்டுமா?

திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல  பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.

கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.

கிட்டதட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.இந்த கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிபட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும் அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.

டில்லியில் Constituion Club- இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.

நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது.

சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் பில்லை தள்ளிவைத்த நேரு... பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார்.

‘டில்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியவில்லையே...’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் பில் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக் கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார்.
அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே...அப்புறம் எதுக்கு சொத்து? இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா... -

தொடரும்

30 ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு...

மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சி. ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.

வர்ணாஸ்ரம தர்மத்துக்குட்பட்டு ஜனங்களை ஒற்றுமையாக (!) வாழவைக்கவேண்டும் என மடாதிபதி என்ற முறையில் பல காரியங்களை செய்தார் சங்கராச்சாரியார்.ஆனால், மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய மடங்களே சண்டையிட்டுக் கொண்டு... ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.

வைஷ்ணவ மடங்கள்-சைவ மடங்கள், பிராமண மடங்கள், பிராமணர் அல்லாத மடங்கள் இப்படி மடங்களுக்கிடையே முட்டல், மோதல்கள் மூண்டபடி இருந்தன. ‘கும்பகோண’ மடத்துக்கும், சிருங்கேரி மடத்துக்கும் சகோதரச்சண்டை என்று ஆன்மீக வட்டாரத்திலேயே அழுத்தமான பெயர் உண்டு.

இங்கே இப்படியென்றால்... நம்மூர் மடங்களை ஏதோ புழுபூச்சி போல பார்த்து வந்தார்கள் வட இந்திய மடக்காரர்கள். காரணம், தமிழ்நாடு திராவிடதேசம், சூத்திரதேசம் என்பது அவர்கள் வாதம். இன்னொன்றாக, கும்பகோண மடம் உண்மையான சங்கரமடம் இல்லை என வட இந்தியாவிலுள்ள சங்கர மடாதிபதிகளே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மகாபெரியவர் சங்கராச்சாரியார் யாத்திரை மேற்கொண்ட போது... அவர் காசிக்குள்ளேயே வரக்கூடாது’ என்றெல்லாம் அவர்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்தனர்.

சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என அழைக்கக்கூடாது. அவர் ஜெகத்குரு அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர் குருவே அல்ல. பின் எப்படி “ஜெகத்குரு” ஆகமுடியும்?-என்றெல்லாம் வட இந்தியாவிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் ஏகத்துக்கும் கிளம்பின.

இதுபற்றி சங்கராச்சாரியாரிடமே கேட்டபோது அவர் சொன்னார்.‘என்னே ஜெகத்குரு என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. சொல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டதில்லை. “ஜெகத்குரு” என்றால் என்ன அர்த்தம் தெரியுமோ? ஜெகம்தான் எனக்கு குரு அதாவது லோகம்தான், உலகம்தான் எனக்கு குரு நான் குருவல்ல என பதில் சொன்னார் மகாபெரியவர்.

இப்படியாக உள்ளூரிலிருந்து, தேச அளவில் மடங்கள் முஷ்டி உயர்த்திக் கொண்டு நின்ற சூழலில்.. எந்த மடாதிபதிக்கும் வராத யோசனை மகாபெரியவருக்கு வந்தது.

“மடங்கள் மடத்தனமா சண்டை போட்டுண்டிருக்கா தேஸத்துல இருக்குற எல்லா மடங்களும் ஒரே அமைப்பா வரணும். அது மூலமா... மதவிஷயங்களை, மனு தர்மத்தை இன்னும் வேகமா கொண்டு போகணும்” என என்னிடம் கூறிய மகாபெரியவர்...நான் அடிக்கடி வட இந்தியாவில் யாகங்கள் மதப் பிரச்சாரக் கூட்டங்கள் என சென்று வந்து கொண்டிருந்ததால்.. வட இந்திய மடங்களிடம் பேசி மடங்களுக்கான அமைப்பை உருவாக்க என்னை அங்கே போகச் சொன்னார்.

அயோத்தியில் எக்கச்சக்க மடங்கள் இருக்கின்றன. இதுதவிர பூரி, துவாரகா, பத்ரி போன்ற சங்கரமடங்களுடனும் பேசினோம், சின்னச்சின்ன மடங்களைகூட விட்டுவைக்காமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினோம்

‘Association of Mutts’ என்ற பெயரில் மடங்களுக்கான அமைப்பை சங்கராச்சாரியார் உருவாக்க முனைவதையும், இதற்கான காரியங்கள் நடைபெற்று வருவதையும் கேள்விப்பட்ட குல்ஸாரிலால் நந்தா குறுக்கே வந்தார்.

குல்ஸாரிலால் நந்தா.. வட இந்திய காங்கிரஸ் தலைவரான இவர், நேருஜி காலமான போதும், லால்பகதூர் சாஸ்திரிஜி காலமானபோதும் இரண்டு முறை பாரதத்தின் இடைக்கால பிரதம மந்திரியாக இருந்தவர் அவ்வளவு பெரியவரான அவர்... ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை இணைக்க முயற்சிப்பதை விரும்பவில்லை.

நாங்கள் வக்கீல்களை வைத்து... மடங்களை ஒரு குடையில் ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை தனது அரசியல் செல்வாக்கால் முடக்கிப்போட்டு விட்டார் குல்ஸாரிலால் நந்தா.

எந்த மடத்துக்காரர்களும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை காரணம்... ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை ஒருங்கிணைத்து விடுவாரோ என்ற பயத்தில்... நந்தா வட இந்தியாவில் உள்ள மடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘சாது சம்மேளன்’ என்றொரு அமைப்பை தோற்றுவித்து விட்டார்.சங்கராச்சாரியாருக்கு இத்தகவலை தெரிவித்தேன்.

“பாரதம் பூரா ஒண்ணு சேக்கலாம்னு நெனைச்சேன். அவா பேதம் பாக்குறாளா? சரி... நாம இங்கேயே இருக்கிற மடங்களை சேத்து அஸோஸியேஷன் ஆரம்பிச்சிடலாம்” என சொல்லிவிட தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சியை தொடங்கினோம்.

உடுப்பியில் 8 மடங்கள் இருந்தன. அவர்களிடம் பேசிப் பார்தோம். சங்கராச்சாரியார் எடுக்கும் எந்த முயற்சிக்கும், செய்யும் எந்த காரியத்துக்கும் சிருங்கேரி மடத்துக்காரர்கள் எதிராகத்தானே இருப்பார்கள். அவர்களைத் தவிர பல மடங்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால்... வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களும் பின்வாங்கிவிட்டார்கள்.

கடைசியில்... தமிழ்நாட்டு அளவில் இருக்கிற அத்தனை மடங்களையும் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். சங்கராச்சாரியார் மதுரை ஆதீனம், திருவாடுதுறை, திருப்பனந்தாள், தர்மபுரம் என மற்ற மடத்தின் ஆதீனங்களோடு பேசி அனைவரையும் ஒன்று சேர்த்தார்.

இந்திய அளவில் முயற்சித்து... அது குல்ஸாரிலால் நந்தாவால் தடுக்கப்பட்டுவிட்டது. சரி... தென்னிந்திய அளவில் மடங்களை இணைக்கலாம் என்ற மகாபெரியவரின் முயற்சி சிருங்கேரி கைங்கரியத்தாலோ என்னமோ முடங்கிப் போனது.
கடைசியில் தமிழ்நாட்டில் உள்ள மடங்களை மட்டும் இணைத்த சங்கராச்சாரியார் Association of Mutts ஆரம்பித்தார். நான், செகரட்டரி ஆனேன். சங்கராச்சாரியார் மடங்களுக்கான அமைப்பின் தலைவரானார்.

தொடரும்

31 ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...’

கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...’

ஜலம் நிறைந்திருக்கிற குளத்துக்குள்ளிருந்து சேற்றின் சிக்கல்களை கால்களால் மீறி... தாமரைப் பூவை பறித்து... பாசிபடிந்த படிகளின் மீது பதமாக லாவகமாக ஏறி வழுக்கி விழாமல் பூவுக்கும் சேதாரம் ஏற்படாமல் மேலே வந்த ஒருவன்...

அத்தாமரை மலரை தெய்வத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறானே... அதேபோலத்தான் சங்கராச்சாரியார் கஷ்டப்பட்டு ‘மடங்களுக்கான அமைப்பு’ என்னும் மலரை எடுத்து வந்தார். மலர் வாடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்?

யோசித்தோம். மடங்களுக்கான அமைப்பை கஷ்டப்பட்டு உண்டாக்கிய பிறகு அதை முறைப்படி பதிவு (Register) செய்தோம். இதற்காக அனைத்து மடங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து போட்டார்கள்.

நான் செகரட்டரி என்ற முறையிலும், பரகால மடத்தின் பிரதநிதி என்ற முறையிலும் கையொப்பம் போட்டேன். சங்கராச்சாரியார்கள் எந்த இடத்தில் தங்கள் கையொப்பத்தை போட நேர்ந்தாலும்... பெயரை எழுத மாட்டார்கள் ‘நாராயண ஸ்மிருதி’ என்று தான் கையொப்பம் போடுவார்கள். அஃது போல் மகாபெரியவரும் நாராயணஸ்மிருதி என கையொப்பம் போட்டார்.

அமைப்பு, லெட்ஜரில் பதிவாகிவிட்டது. மக்கள் மனதில் பதிவாக வேண்டுமே, அப்படியென்றால் தனம், செல்வம் சேர்க்கவேண்டுமே.

மகாபெரியவருக்கு செல்வத்தின் மீது பணத்தின் மீது கொஞ்சம் கூட ஆசை கிடையாது. செல்வமோ, நகையோ அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மடத்தில் அன்று நானும் இருந்தேன். வடநாட்டுத் தொழிலதிபர் பிர்லா அன்று மகா பெரியவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். எத்தனை தொழிற்சாலைகளை நிருவகித்துக் கொண்டிருப்பவர். சாதாரணமாகவா வருவார்?

ஒவ்வொரு நிலையிலும் படாடோபம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.வெள்ளித்தட்டு முழுக்க புதுபுஷ்பம் கமகமத்தது. இன்னொரு வெள்ளித்தட்டில் ரகம் ரகமாய் பழங்கள். அடுத்தாக ஒரு வெள்ளித்தட்டு அதன் மேல் கட்டுக்கட்டாய் பணம்... மூன்றாவது தட்டு முழுதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பணம்.

பிர்லா... மகாபெரியவரை தரிசித்துக் கொண்டிருக்கும்போதே அவருடன் வந்தவர்கள் அந்த தட்டுகளை மகாபெரியவர் முன் அர்ப்பணிப்பதற்காக எடுத்து வந்தார்கள்.

புஷ்பத்தட்டை பார்த்த மகா பெரியவர் புன்னகைத்தார். பழத்தட்டை பார்த்ததும் புன்னகைத்தார். மூன்றாவதாக அந்த பணத்தட்டு வருவதை பார்த்துவிட்ட உடனேயே..பிர்லாவை கூப்பிட்டு... ‘என்ன இது’ என்ன இது? என்றார் அவசரமாய்.‘ஸ்வாமிஜி... மடத்து காரியங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை...’ என பிர்லா இழுக்க...

மகாபெரியவரோ சட்டென அந்த தட்டை தூக்கி பார்த்து வெளியே போய் விடுங்கள்’ என்று பொருள்படும்படி கைகளால் சைகை காட்டி விட்டார். பிர்லா எவ்வளவோ சொல்லியும்...’நான் சந்நியாசி... எனக்கே இவ்வளவு பணம் தேவைப்படுமானால்... லோகத்தில் சம்ஸாரிகளாக இருப்பவர்களுக்கு எவ்வளவு தேவைப்படும். அவர்களிடமே கொடுங்கள். பொது காரியத்துக்காக லோக சேமத்துக்காக மடத்துக்கு வெளியே செலவழித்து விடுங்கள்’ என மென்மையாய் மறுத்துவிட்டார் மகாபெரியவர்.

‘அர்த்தம் அனர்த்தம்’ என்ற ஆதிசங்கரரின் கூற்றுக்கு எவ்வளவு உண்மையாக மகா பெரியவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அப்போது அங்கே நான் பார்த்தேன். இப்படிப்பட்ட மகா பெரியவர் மடாதிபதியாக இருந்த மடத்தில் செல்வத்துக்கு அதிகம் வேலையும் இல்லை. தேவையுமில்லை. அதனால் மடங்களுக்கான அமைப்பை ஆரம்பிப்பதிலிருந்து... ஆதீனங்கள் ரொம்ப உதவிகள் செய்தார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் உண்டு. அதுபோல மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு.இவற்றை முறைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள... ஒரு திட்டம் தீட்டினோம். அதாவது... மடங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை வருஷத்துக்கொரு தடவை ‘மடங்களுக்கான அமைப்பு’க்காக கொடுக்கவேண்டும். இந்த நிதியில்தான் அமைப்பு இயங்க வேண்டும்.

இந்த செல்வம் மூலம்... நமது மதத்தில் நிலவும் பிரிவுகளைத் தாண்டி ஒரு பொதுவான ஆன்மீகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என நாங்கள் திட்டம் போட்டோம்.

இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க... அமைப்பின் கூட்டத்தையும் கூட்டினோம். இதில் மகாபெரியவர் தலைமையேற்பார். மற்ற மடங்களின் மடாதிபதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வருஷா வருஷம் கூட்டம் நடந்தது. ஆனால்... சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 சதவிகித பங்கை கொடுக்க முன்வரவில்லை.கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. 5 வதோ, 6வது கூட்டமோ...

அதில்தான் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையை கிளப்பினார்.
கோவில்களை கட்டியது மன்னர்கள், அதற்கு உதவி செய்தது... உழைப்பு கொடுத்தது... வியர்வை கொடுத்தது.. வீர்யம் கொடுத்தது. கல் சுமந்தது மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? 

வடநாட்டில் குறிப்பாக காசியில் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல... இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்.”என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துகளை பேசினார்.

சொன்னதோடு இல்லை. தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியத்தில் கோவிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தை கோவிலுக்கு வெளியே வைத்து... அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில்... மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

(தொடரும்)

32 நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.

ராமானுஜர் எப்படிப்பட்டவர்? பௌத்தம்...புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார்.மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க,,. 

மதுரை பெரிய ஆதீனம் உரிமைப் பிரச்சினை கிளப்பியதும், அதை மகாபெரியவர் சங்கராச்சாரியார் மறுத்ததும், ‘மடங்களுக்கான அமைப்பு’ மேலும் செயல்படுவதில் தடங்கலை ஏற்படுத்தியது. சில வருடங்களில் அமைப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.

சேற்றிலிருந்து பறித்து வந்த செந்தாமரைகள் போல வேததர்ம சாஸ்திர பரிபாலனசபை, ஆகமசிற்ப சதஸ், திருப்பாவை... திருவெம்பாவை மாநாடு, மடங்களுக்கான அமைப்பு... என சமய ஒற்றுமைக்காக மகாபெரியவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் எல்லாம் அவருடனேயே போய்விட்டன.

அவரது காலத்திற்குப் பிறகு மடத்தில் இந்த ஸ்தாபனங்கள் பற்றி கவலைப்பட, அக்கறைப் பட யாரும் இல்லை. அந்த செந்தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாடி... இப்போது சுண்டிச் சுருங்கிவிட்டன.

மகாபெரியவர் என்ற மகாபுருஷரோடு என்னுடைய அனுபவங்களை சிலபல அத்தியாயங்களில் படித்திருப்பீர்கள். ஆதிசங்கரரில் ஆரம்பித்து மகாபெரியவருடனான அனுபவங்கள்வரை பகிர்ந்து கொண்டாயிற்று. இப்போதைய சங்கராச்சாரியாருடனான சிலவற்றை தக்க சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்து...?

அடுத்து உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப் போகிறவர் ஆதிசங்கரரின் அத்வைதம் மீது வேதாந்த ஆயுதம் பாய்ச்சியவர்! அவர் யார்?

அதற்கு முன்...சோழச்சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் தனயன் ராஜேந்திரசோழன்... தன் தந்தையின் வெற்றிகளைக் கண்டு பூரித்துப்போனதோடு மட்டுமல்ல... அப்பாபோல நாமும் இந்த தரணி வெல்லவேண்டும். நம்மை பலரும் பரணி பாடவேண்டும். தந்தை தஞ்சையில் கட்டிய கோவிலைப் போன்றே தானும் கட்டவேண்டும் என நெஞ்சுக்குள் வேட்கையை வெறியாக எரியவிட்டான். விளைவு?

படைகளை கிளப்பினான். திக்கெட்டும் வெல்லப் புறப்பட்டவன். வடஇந்தியாவை நோக்கிப் படையெடுத்தான் பலநாட்கள். கடந்த அவனது படை கங்கை கரையை முட்டியது. கங்கை கொண்ட சோழன்... அங்கே ஒரு வேத விற்பன்னரை சந்தித்தான்.

அவரது சாஸ்திர விளக்கங்கள் அறிவு சார்ந்த கருத்துக்களைக் கேட்ட ராஜேந்திர சோழன்... ‘இந்த வித்வானை நம்முடன் அழைத்துச் சென்றால்தான் வெற்றிமுழுமைப்படும்’ என்ற முடிவுக்கு வந்தான். அவர்தான் நாதமுனி இன்றும் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நாதமுனியின் உபதேசத்தைப் பின்பற்றுகிற ‘நாதபந்துக்கள்’ என்ற பிரிவினர் வாழ்ந்து வருகிறார்கள்.

நாதமுனியை மிகுந்த மரியாதையோடு தென்னகம் அழைத்து வந்த ராஜேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரம் அமைத்ததோடு... நாதமுனியை தனது ராஜ ஆலோசகராக... உபதேசம் செய்பவராக வழிபட்டான்.

சோழனுக்கு உபதேசங்கள் செய்ததோடு... பல வேத நூல்களையும், உபநிஷதுகளையும் ஆழ்ந்து கற்ற நாதமுனியை வேதமுனி என்றே சொல்லலாம். பல ஸ்லோகங்கள் பண்ணிய நாதமுனியின் பேரன்தான் ஆளவந்தார்.

நாதமுனியின் பரம்பரைக்கும், சோழ ராஜாக்கள் பரம்பரைக்கும் தலைமுறை தாண்டிய சம்பந்தம் தொடர்ந்து ஆளவந்தாரும் தன் காலத்திய சோழ சாம்ராஜ்யத்துக்கு ராணுவ ஆலோசகராக அமர்ந்தார். சோழனின் யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு ஆலோசனை செய்யும் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருந்த ஆளவந்தாரை சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக தாத்தாவான நாதமுனி பலதடவை அழைத்தார்.

புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன் என பல தூதுவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் நாதமுனியின் உபதேசத்தை கேட்க மறுத்துவிட்டார் ஆளவந்தார்.இப்பேற்பட்ட ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான்... அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலைநம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.

ராமானுஜர் எப்படிப்பட்டவர் என உங்களுக்கு அறிமுகப்படுத்த ஓர் வடமொழி கவிதை எவ்வளவு தகவல்களை தேக்கித் தருகிறது பாருங்கள்.

“பாஷண்ட த்ருமஹண்ட தாவதகனாஹாசார்வாக சைலாஹனிஹிபௌத்த த்வாந்த்த நிராஸ வாஸரபதிஹிஜைனேப கண்ட்டீர வஹாமாயாவாதி புஜங்க பங்க கருடஹாத்ரைவித்ய சூடாமணிஹி...” என்று போகும் இந்த கவிதையின் கருத்து என்ன தெரியுமா?

அந்தக் காலத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்துக்கொண்டு பூசை செய்யும் ஒரு ‘பயம்’ தரும் வழிபாட்டுமுறை பரவிக்கிடந்தது. இப்படிப்பட்ட மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க காட்டுத்தீயாக வந்தவர்.

‘சார்வாகன்’ என்பவரின் உபதேசப்படி தெய்வமே இல்லை எல்லாம் மூடர்களின் கற்பனை மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள். தெய்வத்தை கும்பிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்... என்ற கொள்கை பிடிப்பில் வந்த நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.

பௌத்தம்...புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார். அந்த இருட்டை கிழித்து வேத வெளிச்சத்தை ஏற்படுத்திய உதயசூரியனாக வந்தவர். ஜைனம் என்னும் யானையை அடக்க சிங்கமாக புறப்பட்டவர்.

மாயாவாதம் என்னும் துன்பம் தருகின்ற கொடிய மலைப்பாம்பினை கொத்தி கொலை செய்யவந்த வைணவ கருடன்.

இப்படியாக மண்டையோட்டு வழிபாட்டு கலாச்சாரம், நாஸ்திக கூட்டம், பௌத்த இருட்டு, ஜைனம் என்ற யானை, மாயாவாதம், அதாவது ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் என்கிற மலைப்பாம்பு ஆகியவற்றை அடக்கி ஒடுக்க வந்தவர்தான் ஸ்ரீராமானுஜர்.இவர் என்ன சொன்னார்...? செய்தார்.? -

தொடரும்

33. ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது?

காட்டுத் தீயாக... இடியாக, உதயசூர்யனாக, சிங்கமாக, கருடனாக வர்ணிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் தன் சிறுபிராயத்திலேயே வேத, உபநிஷத்துகளை அத்யயனம் செய்ய ஆரம்பித்தார்.

ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்ததாக தகவல்கள் பரவியிருந்தாலும், தான் எழுதியுள்ள எந்த க்ரந்தத்திலும் தன் சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரைப் பற்றியோ அங்கே அமைந்திருக்கும் பெருமாளைப் பற்றியோ எந்த ஒரு தகவலையும் ராமானுஜர் குறிப்பிடவில்லை. இன்னொன்று தமிழ்மொழியில் எந்த க்ரந்தத்தையும் அவர் அருளிச் செய்யவில்லை.

வேத, உபநிஷத்துகளோடு தன் முன்னோடிகளான நாதமுனி, ஆளவந்தார் பற்றியும் கசடற கற்றார் ராமானுஜர். நாதமுனிகளைப் பற்றி ஆளவந்தார் அருளிய ஸ்லோகம் ஒன்று.“ஜனித்வா வம்ஸே மாதிக்யா கேஸதாம்கசீனாம் சுத்தாநாம்சித் அசிது ஈஸ்வர தத்வ விஷதாம்...”

பிறக்கும்போதே புகழ் பொருந்திய வம்சத்திலே வந்த நாதமுனிகள் ‘சித்’ ஆகிய ஜீவாத்மா, அசித்தாகிய ஜடப்பொருளான உலகம், ஈஸ்வரனாகிய ப்ரம்மம் மூன்றும் மெய்யானவை என்றார். அதாவது மாயாவாதத்துக்கு எதிரான சிந்தனையை வெளியிட்டார்...” என அந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆளவந்தார்.

“நஸந்த்ரீசே திஷ்டதீ ரூபமஸ்ய நசக் குஹா பத்யயீகஷ்யனயேனம் ஹ்ருதா மனிஷாமனசா அபிகிருப்தஹா யயேனம் விதுஹீஅமிர்தா ஸ்தே பவந்த்தீ...என்று சொல்கிற உபநிஷத்து ஸ்லோகம் சொல்வது என்னவென்றால்...

பகவானுக்கு உருவம் கிடையாது. அரூபமானவன் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்... உனக்கு வேணுமெனில் உன் மனதுக்குள் அவனை உருவம் உடையவனாக நினைத்துகொள். அவன் உருவத்தை தியானித்துக் கொண்டிரு...” என்கிறது.

நாதமுனிகள் சொன்னதையும், உபநிஷதுகள் சொன்னதையும் ராமானுஜர் தன் வேதாந்த அறிவில் விதைத்து முழுமூச்சாக சிந்தித்து முளைக்க வைத்தார். அதுதான் வசிஷ்டாத் வைதம் இது என்ன சொல்கிறது?

உலகில் எதுவுமே மாயை என்பது தவறு பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தில் வசிக்கிறான். அவன்தான் ஜீவாத்மாவாகிய நம்மையும், உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன். பக்கத்தில் பிராட்டியோடு... வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பதுதான் ராமானுஜ உபதேசம்.

இவ்வாறு... புது தத்துவத்தை முரசறைந்த ராமானுஜர் இதை நிலைநாட்டுவதற்கும்... பரப்புவதற்கும் பல பயணங்கள் மேற்கொண்டார். உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல் இதைப்படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்ணுவது மிகக்கடினமான காரியம். சமஸ்கிருத மேதாவிலாசமும், ஞான சித்தியும் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே இதை பண்ணமுடியும்.

அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்ரத்துக்கு சங்கரரர் உரை எழுதினார். அது சங்கர பாஷ்யம் எனப்பட்டது. மத்வர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் என அழைக்கப்படுகிறது. அதே ப்ரம்ம சூத்ரத்துக்கு ராமானுஜரும் உரை எழுதினார். ஆனால்... அது ராமானுஜ பாஷ்யம் என அழைக்கப்படாமல் ‘ஸ்ரீபாஷ்யம்’ என மேன்மையோடு அழைக்கப்படுகிறது.

இந்த பாஷ்யத்தை படைப்பதற்காக... காஷ்மீர் பயணித்த ராமானுஜர் அங்கே போதாயணரைப் பார்த்தார். இன்றைய தட்பவெப்ப நிலையிலேயே இந்த்ரியங்களை நடுங்கச் செய்யும் காஷ்மீரம்.. பல நூற்றாண்டுகள் முன்பு எவ்வளவு பனிக்கட்டிகளை மடியில் கட்டிக் கொண்டிருக்கும். அப்பேற்பட்ட இடரிலும் போதாயணரை பார்த்து அவரிடத்திலே ப்ரம்மசூத்ரத்தை வாங்கினார் ராமானுஜர். ராமானுஜர் ப்ரம்மசூத்ரத்துக்கு பாஷ்யம் பண்ணப்போகிறார்.

அதில் சங்கர பாஷ்யத்துக்கு பதிலடி கொடுப்பார் என கருதிய அத்வைதிகள் சிலர் ராமானுஜருக்கு ப்ரம்மசூத்ரம் கிடைக்காமல் செய்வதற்கான வழிகளையும் காஷ்மீர்வரை சென்று மேற்கொண்டனர்.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமோ? போதாயண வ்ருத்திக்காரர் என்ற காஷ்மீரத்து ஞானியிடமிருந்து மிகவும் கஷ்டப்பட்டு ப்ரம்மசூத்ரத்தை வாங்கி அதற்கு பாஷ்யம் அதாவது உரையெழுதினார் ஸ்ரீராமானுஜர்.

இங்குதான் ராமானுஜரைப் பற்றி இருவேறு கருத்துகள் ஆரம்பிக்கின்றன.

தான் அருளிய ஸ்ரீபாஷ்யத்தின் முதலிலேயே... “பூர்வாச்சாரியார்கள், அதாவது ப்ரம்ம சூத்ரத்தை பண்ணிய ஆச்சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும்” என ‘ஆமாம்’ போட்டுவிட்ட ராமானுஜர்.

ஸ்ரீ பாஷ்யத்தின் அபசூத்ராதிஹிரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்.

“பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத்தான் மோட்சம் நான் சொல்வது மோட்சம் வேண்டும் என்றால்... இந்தப் பிறவியை இப்படியே கழித்து... அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும்.

ஒருவேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாக பிறக்க அவர்களுக்கு ப்ராப்தம் கிடைக்குமானால் வேத, உபநிஷதுகளை கற்று... பகவானை தொடர்ந்து தியானித்து... மோட்சம் பெறலாம்.

அதுபோலவே... ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான் எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்...” என்கிறார் ராமானுஜர். (மோட்சம் என்றால் அடுத்த ஜென்மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண்டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுபவிப்பது.

ஆனால்... ராமானுஜர் திருக்கோட்டியூர் கோவிலில் கோபுரத்தில் மீதேறி... அனைத்து சாதியினருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருமந்திரத்தை கூவிச் சொன்னார் என கெட்டியான தகவல் பரவிக் கிடக்கிறது.

இது ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்திருக்குமானால் தன் க்ரந்தங்கள் எதிலும் இதுபற்றி அவர் குறிப்பிடவில்லையே ஏன்?

ராமானுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வான்... “பிராமணர்களுக்கு மட்டும் மோட்சம் என சொல்வது தவறு... எல்லா வர்ணத்தவரும்தான் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கவேண்டும்...” என சொன்னது ஏன்?

தொடரும்

34 சூத்ரன் அர்த்தம் என்ன?

சூத்திரர்களுக்கு மோட்சம் கிடையாது. (பிராமண) பெண்களுக்கும் மோட்சம் கிடையாது என அபசூத்ராதிஹரணத்தில் ராமானுஜர் அருளியிருந்ததை பார்த்தோம்.

சூத்ரன் என்று அடிக்கடி சொல்கிறோமே?... இச் சொல்லின் அர்த்தம் என்ன? சூசம்+த்ராதி-சூசம் என்றால் கடின உழைப்பால் ஏற்படும் கஷ்டம் என்று பொருள் த்ராதி என்றால்? அதை விரட்டுபவன்.

அதாவது கடின உழைப்பின் கஷ்டத்தை தானே பெற்று... அந்த கஷ்டத்தை உனக்கு வராமல் விரட்டுகிறவன் தான் சூத்ரன். இன்னும் சொல்லப்போனால் தான் உழைத்து உனக்கு சுகம் கொடுப்பவன்’ என்கிறது சமஸ்கிருத மொழி.
 
அப்படித்தான் பெண்களையும் சூத்ர மரியாதை கொடுத்து வைத்திருந்தார்கள். பெண்களுக்கு என்றுமே இந்த நிலைதானா?... இந்த கேள்வியை சற்று ஆழமாகவே அலச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

வேதம் தோன்ற முனைந்த காலகட்டத்திலும், வேத காலத்திலும் பெண்கள் எப்படி இருந்தனர். அவர்கள் ஆரம்பத்திலேயே ஆண்களால் அடக்கப்பட்டனரா?... வழிபடப்பட்டார்களா...?

சமுதாயம், மதம் என கட்டுமானங்கள் ஏற்பட்ட பிறகு பெண்ணின் முக்யத்துவம் எப்படி இருந்தது?... இந்த கேள்விக்கான விடைகள் அன்று முதல் இன்றுவரை என்ன?...

ப்ரிமிட்டிவ் கல்ச்சர் (Primitive culture) காலம் அதாவது நாகரிகத்தின் தொடக்க காலம் (theintitial stage of cvilization)... இதற்கும் முன்னால் நாகரீகம் வளராத காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஆணும், பெண்ணும் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவளால்தான் நாம் பிறந்தோம் என அவனுக்கு தெரியாது. அவனை நாம்தான் பெற்றெடுக்கிறோம் என அவளுக்கு தெரியாது. அதாவது... ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை போட்டு வைத்திருந்த முடிச்சை அவிழ்க்கத் தெரியாத அறியாமைக் காலம் அது.

வெட்கம் கிடையாது. காமத்துக்கு வடிகால் அவள்தான் என்றோ... அவன் தான் என்றோ இருபாலருக்கும் கண்டுபிடிக்கத் தெரியாத காலம்.

இப்படிப்பட்ட காலத்தில் ஆண் கூட்டம் தனியாக அலைந்து கொண்டிருக்கும் மரங்களில் ஏறுவது... பழங்களை பறிப்பது தொப்பென கீழே விழுவது... இப்படி மலை, காடு மேடுகளில் ஊர்ந்து கொண்டிருந்த மனிதன் பெண்ணை முழுதாக நிமிர்ந்து பார்த்தான்.

தன் கை, கால்களை ஒரு தடவை பார்த்துக் கொண்டான். முகத்தை தடவி மூக்கை பிடித்துப் பார்த்தான் தன் வாய்க்குள் கையை விட்டுப் பார்த்தான். காதுகளை சுண்டிக் கொண்டான். கன்னத்தை தட்டிக் கொண்டான். மறுபடியும் தன்னை கால்களிலிருந்து கழுத்து வரை கண்களால் அளந்தான். பிறகு பெண்ணை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தவன், அச்சு அசலாய் தன்னைப் போலவே அவள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.

சில வித்தியாசங்கள்... அவளுக்கு மார்பகங்கள் திரண்டு நின்றன. கேசம் இடுப்பு வரைக்கும் ரோமநார்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. கன்னங்கரேரென முகத்தைச் சுற்றி மறைத்து நின்ற கேஸத்தை பார்த்ததும்... ஆதிமனிதனுக்கு முதலில் வந்தது பீதி.

‘அய்யோ... பேய்... பிசாசு... மிருகம்...’ என அக்காலத்தில் அவன் பயம் கொள்ளத்தக்க விஷயங்களை பட்டியல் போட்டான்.
சத்தம் கேட்டு பக்கத்தில் நின்ற ஒரு சிலர் ஓடி வந்தனர்.

அனைவரும் அவளைப் பார்த்து... அவளின் தலைவிரி கோலத்தை பார்த்து மிரண்ட விழிகளைப் பார்த்து பயந்தனர். ‘அய்யோ பேயை, பிசாசை அடித்து விரட்டணும்’ என்ற முடிவுக்கு வந்து கம்பு, கல், மண் என கண்டதையும் எடுத்து அடித்தான். பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு பயம்தான். ஆனால் இந்த பயம் நீடித்ததா?

கூந்தலை அவள் ஒதுக்கியபோது தான் முகத்தின் அழகு முழுதாய் தெரிந்தது. காலப்போக்கில் இயற்கையின் தத்துவம் விளங்கத் தொடங்கியது. முதலில் பெண்ணைப் பார்த்து பயந்தவன்... பெண்ணை பயமுறுத்தத் தொடங்கினான். அவள் கூந்தலை பிடித்து இழுத்தான். அடித்தான் அவளது மிரட்சி இவனது மிரட்டலை அதிகப்படுத்தியது.

நாகரீகத்தின் தொடக்க காலத்தில் சமவெளிகளில் வாழ்ந்த மனிதன்... விவசாயம் செய்யத் தொடங்கியபோத ஏர் போன்ற கருவி செய்தான். அப்போது விலங்குகளை எல்லாம் கண்டு வெகுவாக பயந்ததால் அவைகளிடமிருந்து விலகியே இருந்த மனிதன் அவைகளை பழக்குவதற்குரிய பரிணாம வளர்ச்சி இல்லாத நிலையில்...

ஏரில் பூட்டி உழவு செய்வதற்கு என்ன செய்வது என யோசித்தபோது தான்... மிரண்டு கிடந்த பெண்கள் அவனது யோசனையில் வர ஆரம்பித்தனர்.

என்ன சொன்னாலும் கேட்ட பெண்களில் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான்... அந்த சடை முடியை இழுத்து ஏரின் நுனியில் கட்டினான். அவர்களது பின்னங்கழுத்தில் ஏரை சுமத்தி பெண்களைக் கொண்டே உழவு செய்ய ஆரம்பித்தான். மட்டுமா?

கம்பை கொண்டு அடித்து அவர்களை துரிதப்படுத்தினான். கழுத்து வலி தாளாத பெண்கள் கதறினர். ஆனாலும் ஆதிமனிதன் விடவில்லை. அவர்கள் அழுதபடியே உழுதார்கள். ஆணை பார்த்து தொழுதார்கள்.

இதை உங்களால் மனக்கண்ணில் யூகிக்க முடிகிறதா?... முடியவில்லை என்றால்... ‘பழநி’ என்ற பழைய சினிமாவில் ஒரு காட்சி வரும் (என்னடா... தாத்தாச்சாரியார் சினிமாவை எல்லாம் ஆன்மீக தொடரில் சம்பந்தப்படுத்து கிறாரே... என எண்ணாதீர்கள். மக்களுக்கு பல உண்மைகளைச் சொல்ல வேண்டி வரும்போது அவர்களுக்கு எது புரிகிறதோ அந்த வழியில் சொல்லிட வேண்டுமல்லவா?

இனி அந்த சினிமா காட்சி... அண்ணன் தம்பிகள் பாகப் பிரிவினையின்போது சிவாஜிக்கு கரடுமுரடான கட்டாந்தரைதான் வாய்க்கும். அவருக்கோ அதை பண்படுத்த மாடுகள் வாங்கக்கூட முடியாத வறுமை நிலை அப்போது. ஏரில் தன் குடும்பப் பெண்களையே பூட்டி உழவு செய்வார்.

ஏரின் நுகத்தடி பெண்ணின் புரடியில் இருக்கும். சிவாஜி அந்தப் பெண்களை சாட்டையால் அடித்து ஏரை செலுத்துவார். இப்படியாக அமைக்கப் பட்டிருக்கிறது அந்த சினிமாக் காட்சி.

இதே கற்பனைக் காட்சிதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிஜக்காட்சியாக நடை பெற்றிருக்கிறது. கேசத்தை கண்டு பயந்தவனே பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான். பிறகு...?-

தொடரும்

35 பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும். 
நாகரீகம் முளை விடுவதற்கு முன்பு மூளை இருந்தும் சிந்திக்கத் தெரியாத அறியாமை பொந்துக்குள் வாழ்ந்த மனிதன் பெண்களை ஏரில் கட்டி உழுத கொடுங்கதையை பார்த்தோம்.

இந்த காலகட்டம் தாண்டி வேதம் தோன்ற முனைந்த காலத்தில் அவர்மீது கொஞ்சமாய் நாகரீக வெளிச்சம் கொட்டியிருந்தது. ஆனாலும் பெண்ணின் மீதிருந்த பயம் மிரட்டலாய் மாறியிருந்தது.

ஏற்கெனவே பெண்களை பிசாசு, மிருகம் என கர்ணக் கொடூரமாய் வர்ணித்து பார்த்தவன். அவள் கர்ப்பவதியாய் இருப்பதை பார்த்தான். அடிவயிறு புடைத்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததை பார்த்த அவனுக்குள் ‘சரிதான் இவள் ராட்சதப் பிசாசு தான். சில நாள் முன் சப்பையாய் இருந்தாள். இப்போது திடீரென உப்பித் திரிகிறாளே’ என்ற தீர்மானம் பளிச்சிட்டது.

இப்போது கல்லெடுக்கவில்லை. கம்பெடுக்கவில்லை. அக்கினியை மூட்டினான். அவள் அருகில் எரிய வைத்தான் எதற்கு? அவளுக்குள் இன்னொரு பிசாசு புகுந்து வீங்கியிருக்கிறது. அதை விரட்டத்தான் இங்கு அக்னி சூட்டுக்கு பயந்து பிசாசு ஓட்டம் எடுக்கும் என நம்பினான். அதனால் பற்ற வைத்தான்.

இதுவே வேதத்தில் ஜாதகர்மா என்ற ஹோமமாக வடிவம் பெற்றது. முதன்முதலில் கர்ப்பிணியை பிசாசுக்குள் பிசாசு என நினைத்து விரட்ட நெருப்பு பற்ற வைத்த மூடநம்பிக்கையை முழுதாக தத்தெடுத்துக் கொண்டது வேதம்.

வேதம் என்றால் பற்பல ரிஷிகள் சேர்ந்து செய்த நெறிமுறைக்கு கட்டுப்பாடுகள்தான் என்பதை இக்கட்டுரைத் தொடரின் முதலாம் அத்தியாயத்திலேயே பார்த்தோம் அல்லவா?

அப்படித்தான் இந்தப் பழக்கத்தையும் தன்னுள் தரித்துக் கொண்டது வேதம்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜாதகர்மா என்ற ‘தீ வைக்கும்’ பழக்கத்தை இன்றும் தங்கள் பிழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பிராமணர்கள். கல்யாண வைபோகங்களில் ஜாதகர்மா என்றொரு ஹோமச் சடங்கை நடத்துகிறார்கள்.

இங்கே இதன் அர்த்தம் என்ன தெரியுமா? மணமகளாய் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளை பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சடங்கு.

காட்டுக்கு நடுவே அன்றைய மனிதன் தீயின்மீது மூடநம்பிக்கையே இன்னும் நவநாகரீக உலகத்தில் வாழும் அப்படியே பின்பற்ற மனிதன் பார்க்கிறான் என்றால் அந்த வேகத் தீயின் வீச்சைப் பாருங்கள்.

பெண்களை இதுபோல் பயம் தரும் கோபம் தரும் ஜந்துவாய் சித்தரித்தவன் மெல்ல மெல்லதான் அவளது அழகைப் பார்க்க ஆரம்பித்தான்.

இதையும் வேதம் எப்படித் தெரியுமா சொல்கிறது? இந்த உலகம் ஆற்றுப் படுவதற்கு Relaxation இயற்கையும் பெண்களும் தான் மூல காரணம். அவர்கள் இருவரிடமும்தான் உலகை சாந்தப்படுத்தும் சக்தி. அழகு என்ற ரூபத்தில் நிரம்பிக் கிடக்கிறது.

அதனால் அதனால்?புரந்திர் யோஷா ஜாதாம்அப்படியென்றால்? தேவனே பெண்களை எப்போதும் அழகாகவே வைத்திருப்பாயாக. அப்போதுதான் உலகமும் வாழ்க்கையும் அழகாக இருக்கும்.இது பிராமணர்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகளாக வேதம் வகுத்தவற்றில் ஒன்று.அதாவதுஇது ‘Vedic Prayer’ என அழைக்கப்படும் இன்னின்ன வேண்டும் என தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆகவே எஜமானஸ்ய விரோ ஜாயதாம்.நல்ல குணங்கள் கூடிய குழந்தைகள் பிறக்கவேண்டும்.‘சபாயோ யுவர் ஜாயதாம்.’?அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சான்றோர்கள். சிந்தனையாளர்கள் நிரம்பிய சபையிலே மரியாதையுடன் திகழ வேண்டும்.

நிகாமே நிகாமே.பர்தன்யோ வர்ஹது’

நாங்கள் ஆணையிட்டவுடன் வானைவிட்டு மேகம் மழையாய் மண்ணில் இறங்க வேண்டும். அதாவது பெய்யெனச் சொன்னால் மழை பெய்ய வேண்டும்.இப்படிப்பட்ட வேண்டுதல்களில் முக்கியமான ஒன்றாகத்தான் பெண்கள் எப்போதும் அழகாகவே இருக்கவேண்டும். அவர்களால் உலகமும் அழகாகவே அமைந்திருக்கவேண்டும் என்ற பிரார்த்தனையும்,

சரி.. பெண்கள் காலம் முழுவதும் அழகாகவே இருந்து என்ன பண்ணப் போகிறார்கள்? வேதத்திடம் நாம் வினா தொடுத்தால் பதில் கொடுக்கிறது. இந்த ஸ்லோகம் மூலம்,‘பத்னிஹீ பாரீனஷ்யஸ்ய ஏஸேபத்னியைவ அனுமதம் நர்வபதி’

பெண் என்பவள் அனுதினமும் அழகாக இருக்கவேண்டும். எவ்வளவு அழகுடையவளாக இருந்தாலும் அவள் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும். அவள் வீட்டின் அதிகாரி. அதாவது வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் செய்து கொண்டு தன் கணவன் வெளியிடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நேரங்களில் வீட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் தன் புனிதமான அழகை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதே நேரம், கணவன் தன் செலவில் ஏதேனும் யாஹங்கள், ஹோமங்கள் நடத்தப் போகிறான் என்றால், அதற்கு மனைவியிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால் யாகங்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வீட்டில் இருந்து தானே எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்கு வீட்டு அதிகாரியான பெண்ணிடம் கேட்கவேண்டும்.

என “வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களால் நிரம்பியிருந்தது வேதம்” ஒரு பக்கம். இப்படி பெண்களை வீட்டுச் சிறைக்குள் வைக்கச் சொல்லும் வேதத்தின் இன்னொரு பக்கத்தில். இன்று நாம் காணும் காட்சிகளைப் போன்று பெண்களைப் பார்க்க முடிகிறது.

எங்கே? ஸ்த்ரீ சம்ஸாதத்தில் ஸ்த்ரீ சம்ஸாதம் என்றால்? நிறைய பெண்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிறார்கள். ஆமாம் அதாவது பெண்கள் மாநாடு வேதத்தில் பெண்கள் மாநாடா?
Wednesday, January 8, 2014

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? 01 -

தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார் :


1. இளம் போதியார்.

இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ் மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி. பி. முதல், அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:

‘பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை ! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே ! கொண்கன் யான்யாய் அஞ்சுவல் ! எனினும் தானே பிரிதல் சூழான் ; மன்னே ! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும் ! அதனால், புலர்வது கொல்அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே !’

2. அறவண அடிகள்.

இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக் கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்துவந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு, மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தர்மங் கேட்டுச் சீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் மனைவி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறை வீடுசெய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரசகுடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, அங்குச் சிலநாள் தங்கியபின், காஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமா நகரத்திலே நிர்வாணம் பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

இப்பொழுது காஞ்சீபுரத்தில், அறப்பணஞ்சேரி என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அது அறவணஞ்சேரி என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி ( சேரி=தெரு) என்று வழங்கப் பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள்.

அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர்போலும். அறவண அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.

அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாகக் கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகின்றது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை ரித்தி என்பர். ரித்தி எனினும் சித்தி எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில்மட்டுமன்று; இந்து மதத்திலும் சங்கராசாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றது. அதுகொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ? இவற்றை அவ்வச்சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

3. மணிமேகலை.

யாம் அறிந்த வரையில், தமிழ் நாட்டுப் பௌத்தப் பிக்ஷணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வத்திற் சிறந்த கோவலன் என்பவனுக்கும் அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள் மணிமேகலை. இக்குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந்நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமாரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமா நகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்கு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக்கணிகை வாழ்க்கையில் புகுத்த அவளது பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமாரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணி கோலத்தை விட்டுவிடும் படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அது முதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கிவந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்கவேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.

காயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் அந்நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதயகுமாரன் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டுவிடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக்கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு, அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னொரு ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய்,. உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமாரன் மணிமேகலையை விட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையால் தன் மனைவி என்று தவறாகக் கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன் இரவில் வந்த உதயகுமாரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதயகுமாரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.

தவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து, மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமாதேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக்கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.

பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறைகூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடை பெற்றுச் சாவகநாடு சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்த சேர நாட்டின் தலைநகரமான வஞ்சிமா நகர் சென்று, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சிமா நகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம்  பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடு நாள் நோற்று, கடைசியில் அவ்வூரிலேயே காலமானாள்.

மணிமேகலையின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.

மணிமேகலை வரலாற்றிலும், பௌத்தமதக் கொள்கைப்படி, வானத்தில் பறந்து செல்லுதல், அமுத சுரபி என்னும் சிறு பாத்திரத்தினின்றும் நினைத்த போதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல் முதலிய ரித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக்கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.

காஞ்சீபுரத்துக்கு அருகில், மணிமேகலை அம்மன் கோயில் ஒன்று இருக்கிறதாகத் தெரிகின்றது. மணிமேகலைக் காவியத்தில் கூறப்படும் மணிமேகலை காஞ்சீபுரத்தில் உயிர் நீத்ததாகக் கூறப்படுவதிலிருந்தும், காஞ்சீபுரத்தில் இப்போது மணிமேகலை அம்மன் கோயில் இருப்பதிலிருந்தும், இரண்டுக்கும் தொடர்புண்டாயிருக்கக் கூடுமோ என்கிற ஐயம் உண்டாகிறது. மணிமேகலை என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்றுண்டு.

(தொடரும்)

 சங்க மித்திரரைக் கொன்ற இலங்கை மன்னன்! 

4. சீத்தலைச் சாத்தனார்.

இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகின்றது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் சாத்தன் என்று வழங்குகின்றது. சீத்தலை என்னும் அடை மொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையர் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக் கொள்ள, அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் சீத்தலை என்னும் அடை மொழி கொடுக்கப் பட்டதென்று கூறுவார் கூற்று பொருத்தமாகத் தோன்றுகின்றது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகம் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர். சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய சாத்தன் என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை.

சாத்தன் என்னும் பெயர் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில்மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நமது சாத்தனாருக்கும் அவ்வாறே சீத்தலை, மதுரைக் கூலவாணிகர் என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார். எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல்வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ் நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல் நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில், புகார், மதுரை, வஞ்சி, காஞ்சீபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று நன்கு தெரிய வருகின்றது. சேர நாட்டினை அரசாண்டிருந்த செங்குட்டுவனுக்கும், அவனது தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில்தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன். கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான்; இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய மணிமேகலை என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார். மணிமேகலையை இயற்றியதுமன்றி, வேறுசில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

சங்கநூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மேற்படிச் செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவதுகொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச்சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காகமட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது.

தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்கு மட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லா மக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே, பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது. இவர் தாம் இயற்றிய மணிமேகலையில்,

 ’ தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் ‘ 

என்று திருக்குறளை மேற்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. மணிமேகலை நூலின் காலம் என்னும் தொடர்புரை காண்க.

5. சங்க மித்திரர்.

இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழ நாட்டில் வாழ்ந்திருந்த காலத்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேகவர்ணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டுவந்தான். இந்த அரசன் கி. பி. 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில், இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால், அவர்களை அரசன் அக்கரைக்கு, அதாவது தமிழ் நாட்டில், நாடு கடத்தி விட்டான். இலங்கை மன்னன் ஈனயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன், ஆகையால், மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தைத் தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப்பிக்ஷக்களைத் தமிழ் நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர் தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்க மித்திரரையும் ஈனயான பிக்ஷக்களின் தலைவரான சங்கபாலர் என்பவரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றிபெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது.

வாதத்தில் தமிழரான சங்க மித்திரரே வெற்றி பெற்றார். இலங்கை வேந்தன் சங்கமித்திரரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றி, தமது பிள்ளைகளான ஜேத்த திஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர்,. இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், மூத்தவனான ஜேத்த திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டிவந்தான். இவர் அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக்கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

இவ்வாறிருக்க, மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமை மூத்த மகனான ஜேத்த திஸ்ஸன் ஏற்று, அரசு கட்டில் ஏறினான். ஏறினவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்க மித்திரர் தமது மாணவனான இவன் ஏற்கனவே தம்மிடம் பகைமை பாராட்டிவந்தவனாதலின், தம்மையும் கொன்றுவிடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார். பிறகு, பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழிந்த பின்னர், ஜேத்த திஸ்ஸன் இறந்து விட்டான். அப்போது அரசுரிமையை இவரது அன்புக்குரிய மாணவனான மகாசேனன் மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் சிங்களநாடு சென்று, தமது மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயே முடி சூட்டினார். அதுமுதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் வாழும் ஈனயான பிக்ஷக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்கவில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்லைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷக்களுக்கு நகர மக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக்கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷக்கள் உண்ண உணவு கிடைக்கப்பெறாமல் நகரத்தை விட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய் விட்டார்கள். போய்விடவே, மகாவிகாரைப்பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அது அரசனுக்குரிய பொருளாய் விட்டது என்று சங்க மித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்க மித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷக்கள் வாழும் அபயகிரி விகாரையைப் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றையெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி – அவனால் அதிகமாகக் காதலிக்கப்பட்டவள் – இலங்கைத் தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின்,  அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்க மித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த மந்திரி சோணனையும் கொன்றுவிடும்படி சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலை செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36, 37 -ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன் வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக் கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவரென்று அறிகிறோம்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச்செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச்செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகா வம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார். (Tamilian Antiquary Vol I. No. 4. P. 54.). இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை மாணிக்கவாசகர் சைவமதத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்கக்கூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்கவாசகரைப் புத்தபிக்ஷ சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். (The Early History of India : Page 246-7, Third Edition : V.A. Smith.)

இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கொள்கை. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனை சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சங்க மித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

(தொடரும்)