Sunday, December 27, 2015

ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… ( நவீன் )


இரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.

ஜெயமோகனின் சிற்றிதழ் குறித்த கட்டுரையில் உள்ள மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்ய இப்போதுதான் நேரம் வாய்த்தது. ஜெயமோகன் என்னைக் கொஞ்சம் கடுமையாகவே அக்கட்டுரையில் திட்டியிருந்தார். அதிலெல்லாம் எனக்கு வருத்தமில்லை. ஒருவகையில் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் வாசிப்பின்மூலம் நான் சென்று அடைய அவருடனான உரையாடல்கள் முக்கியக் காரணம். அவர்களை நெருங்கும் அச்சத்தை அவர்தான் பிடுங்கித் தூர வீசினார். அதேபோல, தமிழில் நான் வாசித்து முடித்த படைப்பிலக்கியங்களோடு இன்னும் அணுக்கமாக இணைய அவரது கட்டுரைகள் பெரும்பான்மையான காரணமாக இருந்துள்ளன. இலக்கிய வாசிப்பு அனுபவத்திற்கு அவரது அறிமுகக் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே ஓர் வரைபடம்.

ஜெயமோகன் முன்வைக்கும் மூன்று இதழ்கள்

தனது கட்டுரையில் ஜெயமோகன் மூன்று இதழ்களைச் சிற்றிதழ்களின் தொடக்கமாகச் சொல்கிறார். அதேபோல இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது என்கிறார்.

முதலில் ஜெயமோகன் சிற்றிதழ் வரலாற்றைக் குறிப்பிடும்போது வில்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோர் உருவாக்கிய ‘பார்ட்டிஸன் ரிவ்யூ’ எனும் சிற்றிதழ் குறித்துச் சொல்கிறார். அமெரிக்காவில் தோன்றிய இவ்விதழ்தான் முதல் சிற்றிதழ் எனவும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.

ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் குறிப்பிடும் (பார்ட்டிஸன் ரிவ்யூ) Partisan Review (1934) என்ற சிற்றிதழைத்lit partison தொடங்கியது அமெரிக்க கம்யூனிசக் கட்சி. அதேபோல John Reed Clubs என்ற மார்க்ஸிஸ எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அமைப்பின் ஆதரவுடன்தான் இவ்விதழ் வெளிவந்துள்ளது. Partisan Review இதழின் நோக்கமாக அரசியல் விழிப்புணர்வே இருந்துள்ளது. அதை மையமாகக் கொண்டே முக்கியமான இலக்கியங்களையும் அதைச்சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. இந்தத் தகவல்களை ஜெயமோகன் விக்கிப்பீடியா மூலமாகவே உறுதி செய்துகொள்ளலாம். மேலும் Hilton Kramer என்ற ஆய்வாளர் இந்தச் சிற்றிதழ் (Partisan Review) பாட்டாளி வர்க்கத்தின் இலக்கியங்களைப் பேசுவதாகவும் உள்ளது என தனது Reflections on the history of “Partisan Review” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் சுவாரசியமான விசயமே, குறிப்பிட்ட காலத்தில் Partisan Review இதழில் வந்த பிளவும் அதன் பின் அவ்விதழ் 1937ல் தன்னை மீண்டும் புதிதாக ‘கட்சி சார்புகளற்ற இடதுசாரிகளின் இதழ்’ என நிறுவிக்கொண்டதும்தான். இந்தப் புதிய துவக்கத்தில் ஸ்டாலினிஸத்தை ஏற்காமல் மார்க்ஸிஸத்தை ஏற்கின்ற போக்கும் உருவானது.

இரண்டாவதாக ஜெயமோகன் குறிப்பிடும் சிற்றிதழ் ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த ‘என்கவுன்டர்’. இதையும் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு தொடக்கம் என்கிறார்.

lit enconter இவ்விதழின் அரசியல் குறித்து Frances Stonor Saunders எனும் வரலாற்று ஆய்வாளர் சொல்லும் தகவல் முக்கியமானது. என்கவுன்டர் (Encounter) எனும் இவ்விதழ் Anglo – American அறிவார்ந்த பண்பாட்டு இதழாகவும் அடிப்படையில் ஸ்டாலினிஸத்தை எதிர்க்கும் இதழாகவும் இருந்துள்ளது என்கிறார். அதோடு CIA எனும் மத்தியப் புலனாய்வுத்துறையின் ரகசிய நிதி உதவியுடன் செயல்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். Giles Scott-smith என்ற பேராசிரியர் இவ்விதழ் 1955ல் 14,000 பிரதிகள் விற்பனையான உண்மை நிலவரத்தை ஆய்வின் அடிப்படையில் சொல்கிறார். அதோடு இவ்விதழின் ஆசிரியரான ஸ்டீபன் ஸ்பெண்டருக்கு ரகசியமான முறையில் CIA மூலம் சம்பளமும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். ஸ்டீபன் அதிகமும் கலாச்சாரம் மற்றும் இடைநிலை சமூகத்துக்கான இதழாக என்கவுன்டரை நடத்தவே அவ்விதழின் இணை ஆசிரியரான Kristol அவ்விதழை அரசியல் மயமாக்கினார். தொடர்ந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்த Melvin Lasky யும் என்கவுன்டர் இதழை முழுக்கவே அரசியல் இதழாக்கி 34,000 பிரதிகள் வரை விற்பனை செய்துள்ளார்.

ஜெயமோகன் சொல்லும் மூன்றாவது இதழ் ‘பாரீஸ் ரிவியூ’ இவ்விதழ் முழுக்கவே படைப்பிலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு 1953ல் வெளிவந்தது. பெரிய இதழ்களுக்கு மாற்றான முறையில் இவர்களது விமர்சனப் போக்கு இருந்துள்ளது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காண்பதுடன் துதிபாடும் எழுத்தாளர்களை இவ்விதழ் தவிர்த்தது. புதியனவற்றைச் சொல்லும் படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.

ஜெயமோகன் கூறும் சிற்றிதழ் வரைவிலக்கணம்

ஜெயமோகன் கூற்றுப்படி அவர் சிற்றிதழுக்குச் சில வரைவிலக்கணத்தை முன்வைக்கிறார். இவ்வரைவிலக்கணத்தை மேற்சொன்ன மூன்று இதழ்களின் மூலமாக அவர் கட்டமைக்கிறார். அதை கீழ்கண்டவாறு வகுக்கலாம் .

சிற்றிதழ்கள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது. அதுதான் அதன் கொள்கையாம். அந்த நிலைப்பாடுதான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தனவாம். விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி – நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது எனவும் கூறுகிறார்.

சிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு.

சிற்றிதழ் என்பது சிறியதாக தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.

அட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.

ஜெயமோகன் வரையறையில் உள்ள முரண்

ஜெயமோகனே குறிப்பிட்ட, மேலுள்ள மூன்று இதழ்களின் பின்னணியை வாசித்தாலே ஜெயமோகன் கட்டமைக்கும் சிற்றிதழ் வரையறைகள் மிக எளிதாகத் தகர்ந்துவிடும்.

முதலாவது, சிற்றிதழ்கள் மேலை நாடுகளில் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இரண்டாவது, பெரும் நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்பட்டு சிற்றிதழ் நடத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது, அது ஒரு மாற்று அறிவியக்கமாக மட்டும் செயல்படவில்லை. கம்யூனிஸத்தை எதிர்த்தும் ஆதரித்தும் சிற்றிதழ்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் நிலைப்பாடுகள் அதை நடத்தியவர்களுக்கு இருந்துள்ளது.

நான்காவது, அது மாற்று ஊடகமாக மட்டும் இல்லை. அதிகாரத்தின் ரகசியக் கருவியாகவும் செயல்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ‘Trojan Horse’ என ‘என்கௌன்டர்’ இதழைக் கூறுகின்றனர். ஓர் இயக்கத்துக்குள் இருந்து அதை அழிப்பது என அதைப் பொருள் கொள்ளலாம்.

ஐந்தாவது ஜெயமோகன் சொல்வதுபோல சிற்றிதழ் என்பது சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழாகவும் இல்லை.

ஆறாவது தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே வெளிநாடுகளில் கொண்டிருக்கவில்லை.

தமிழில் சிற்றிதழ்கள்
மேற்கண்ட வரையறைகள் தமிழ் சிற்றிதழ்களுக்குத்தான் அது மேலை நாடுகளுக்கு இல்லை என ஜெயமோகன் கூறலாம். அவ்வாறாயின் ‘எழுத்து’ தன்னைச் சிற்றிதழ் எனப் பிரகடனப்படுத்த உருவாக்கிக்கொண்ட வரையறைகள், தமிழ்நாட்டுச் சூழலும் சி.சு.செல்லப்பாவின் தனிப்பட்ட பொருளாதார நிலையும் மட்டுமே காரணமாக இருந்தால், அதை ஒரு வரையறையாக ஏற்பதில் சிக்கல் உள்ளது.

Poetry (1912)

இந்த நிலையில்தான் Harriet Monroe தொடங்கிய இலக்கிய இதழான Poetry எனும் இதழையும் அந்த இதழைத்தொடங்கும் முன் அவர் வெளியிட்ட துண்டறிக்கையும் கவனம் பெறுகிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் நூலகம் சிற்றிதழுக்குக் கொடுத்துள்ள வரையறையும் Harriet Monroe தனது இலக்கிய இதழுக்குக் கொடுத்த இலக்கணமும் ஒத்தே போகிறது.

சக எழுத்தாளர்களுக்கு அவர் அனுப்பிய அந்தத் துண்டறிக்கையில் அவர், ‘பெரிய இதழ்கள் கொண்டுள்ள lit poetry கட்டுப்பாடுகளைத் தாண்டி, பொதுபுத்திக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட படைப்பிலக்கியங்கள் Poetry இதழில் இடம்பெறும்’ என்கிறார். ஆனால் இவ்விதழ், ஜெயமோகன் சொல்லும் 1934க்கு முன்பே உருவான இதழ். தன்னை ‘சிற்றிதழ்’ என பிரகடனப்படுத்தாத இதழ். ஆனால் பிரிட்டிஷ் நூலகம் சொல்லும் சிற்றிதழ் வரைமுறைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் இதழ். பின்னாளில் அவ்விதழ் குறித்து ஆய்வு செய்யும் Ezra Pound (1930) தொடங்கி Robert Scholes (2012) உள்ளிட்டோர், Poetry இதழே சிற்றிதழுக்கான தன்மையுடன் வந்ததாகவும் ஆனால், காலப்போக்கில் அதில் விளம்பரங்கள் இடம்பெற்றது அதன் சிற்றிதழ் போக்கைக் கெடுத்ததாகவும் கூறுகின்றனர். Poetryக்கு முன்பதாகவே பல சிற்றிதழ்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் சிற்றிதழ் சூழலும் அமைப்பிலும் Poetry யைத் தொடக்கமாக Hoffman, Allen & Ulrich ஆகியோரின் ஆய்வு முடிவு முன்வைக்கின்றது. தொடர்ந்து, Partisan Review பற்றி குறிப்பிடும் Paul Bixler சிற்றிதழுக்கென்று தனித்த போக்கை உருவாக்கியதில் Partisan Review பெருவாரியாக கவனம் பெருகிறது என்கிறார். மேலுள்ள அனைத்துக் ஆய்வுக் கூற்றுகளையும் கொலம்பியா மின்னணு கலைக்களஞ்சியம், 6 வது பதிப்பும் உறுதிப்படுத்துகிறது. இப்போது ஜெயமோகன் ‘இல்லை… Partisan Review தான் தன்னைச் சிற்றிதழாக அறிவித்துக்கொண்டது. அதனால் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்பாரா என்ற ஐயம் எழுகிறது.

தொடர்ச்சியற்று வெளிவரும், உடனடி வணிகலாபம் இல்லாமல் வெளிவரும், சமகால இலக்கியத்திற்கு உற்சாகம் கொடுக்கும் (குறிப்பாகக் கவிதை), குறிப்பிட்ட பாணி எழுத்தாளர்களை உள்ளடக்கி சமகால நிகழ்வுகளின் மேல் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அமையக்கூடிய எழுத்துகளை உற்பத்திசெய்யும் ஒன்றே சிற்றிதழ் எனக்கூறும் பிரிட்டிஷ் நூலகத்தின் வரையறைகளோடு, ‘எழுத்து’ உள்ளிட்ட ஜெயமோகன் கூறிய எந்த மேலைநாட்டு இதழ்களும் பொருந்திப்போவதாகத் தெரியவில்லை.

இவ்வாறு சிற்றிதழ் வரலாற்றில் இருக்கும் இந்த முரணைத்தான் நான் ஆறாவது பறை ஆய்விதழில் கட்டுரையாக்கினேன்.

பறை ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் சாரம்
பறை இதழில் நான் இரு சந்தேகங்களை முன்வைக்கிறேன்.

it ezhuthu 38 coverமுதலாவது, ‘எழுத்து’ மேலை நாடுகளில் வெளிவந்த எந்தச் சிற்றிதழ் போக்குடனும் சம்பந்தப்படாமல் உள்ளது. அது தன்னைத்தானே சிற்றிதழ் என சொல்லிக்கொள்வதால் மட்டுமே சிற்றிதழ் அந்தஸ்து பெற்றுவிடுகிறது என ஜெயமோகன் சில உதாரணங்களுடன் சொல்கிறார். அதனால் அதைக் கேள்வி எழுப்ப முடியாததாகவும் கட்டமைக்கிறார். ஜெயமோகனின் இந்தக் கூற்றை நான் இன்னும் விரிவாக்கிப் பார்க்கிறேன். நாளைக்கே நான் புதிய மூலப்பொருளைக் கொண்டு ஓர் உணவை புதுமையாகத் தயாரித்து இதுதான் உலகில் இந்த மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் உணவு என்றால், நான் அவ்வாறு சொன்னதால் அது வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்துவிடுமா? ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா? சி.சு.செல்லப்பா ’எழுத்து’ இதழை முதல் சிற்றிதழாகப் பிரகடனப்படுத்துவது அவரது உரிமை. ஆனால் ஆய்வு என்பது பிரகடனத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.


இரண்டாவது, எழுத்து இதழுக்கு முன்பே சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), என தீண்டப்படாதோரின் இதழியல் பயணமும் 1942 – 1962 வரையிலான காலகட்டத்தில் திராவிட இயக்க இதழ்களாக வெளிவந்த 265க்கும் மேற்பட்ட இதழ்களும் தங்களைச் சிற்றிதழ்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளாததாலேயே அவற்றின் உள்ளடக்கம் குறித்த ஆய்வுகள் தேவை எனவும் அதன்மூலம் அவற்றை சிற்றிதழ் வரையறையின் கீழ் புகுத்த முடியுமா எனவும் ஆராய வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் கூறும் பார்ட்டிஸன் ரிவ்யூ கூட ஒருவகையில் தமிழ் இடதுசாரி இதழ்களுடன் ஒப்பிடத்தகுதியானதே.

சாதி மறுப்பைத் தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியாரால் தொடங்கப்பட்டு குத்தூசி குருசாமியால் நடத்தப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு அவற்றின் உள்ளடக்கம் எவ்வாறான தன்மையைக் கொண்டுள்ளன என்ற புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யாமல் ‘எழுத்து’ இதழே தமிழின் முதல் சிற்றிதழ் என்பது தமிழ்நாட்டில் அனைத்தையுமே பார்ப்பனியத்தில் தொடங்க வைக்கும் அரசியலுடன் சம்பந்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளேன்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இது சி.சு.செல்லப்பாவின் அரசியல் எனச் சொல்ல வரவில்லை. இலக்கியத்திற்கான அவரது உழைப்பை மலினப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிஞ்சிற்றும் இல்லை. அதற்குப் பின் வந்த ஆய்வாளர்கள் அவ்வாறு தொடங்குவதிலும் அந்தத் தொடக்கத்தைக் கேள்வி எழுப்புவதிலும் ஏன் கவனம் செலுத்தவில்லை? அவ்வாறு செலுத்துவதில் உள்ள மெத்தனத்தின் அரசியல் என்ன என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

சுருக்கமாக
Partisan Review (1934) முதல் சிற்றிதழ் என ஜெயமோகன் கூறியது தவறு. Poetry (1912) இதழே சிற்றிதழுக்கான தன்மைகளைக் கொண்டு வெளிவந்த முதல் சிற்றிதழ் எனப் பல ஆய்வுக் கட்டுரைகள் சான்றுகளுடன் நிறுவுகின்றன. Poetry என்ற இதழ் இன்று ஜெயமோகனால் சிற்றிதழுக்குத் திட்டவட்டமாகச் சொல்லப்படும் சில அம்சங்களைக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது இவ்விதழ் முதல் பிரசுரத்தில் ஆயிரம் அச்சடிக்கப்பட்டு அடுத்த 9 ஆண்டுகளில் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று இவ்விதழின் காத்திரம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் அது 30 000க்கும் குறையாமல் அச்சாகிறது. இரண்டாவது ஜெயமோகன் சொன்னது போல சிற்றிதழ் அறிவுத்துறைக்கு மாற்றாகவெல்லாம் இருப்பதாக Poetry இதழ் வழி சொல்லமுடியாது. அவ்விதழ் இளம் கவிஞர்களுக்கும் இலக்கியத்தில் நுழையும் புதிய படைப்பாளிகளுக்கும் வழி கொடுத்துள்ளது . இவ்விதழின் வரலாறு குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சொல்லியுள்ளது போல இவ்விதழ் அரசியல் நீக்கமெல்லாம் செய்து படைப்புகளை வெளியிடவில்லை. அதன் நோக்கம் படைப்பின் தரம் குறித்து மட்டுமே குவிந்துள்ளது.

அதேபோல ஜெயமோகன் கூறியதுபோல மூன்று ஆங்கில இதழ்களைப் பின்பற்றியெல்லாம் இங்கு சிற்றிதழ்கள் உருவாகவில்லை என்பது தெளிவு. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வகையிலான தொழில்நுட்ப வசதிகளையும் சிந்தனையாளர்களையும் அரசியல்சூழலையும் இவற்றால் உண்டாகும் நெருக்கடிகளையும் உள்வாங்கியே தங்களுக்கான சிற்றிதழ் முயற்சிகளைத் தொடங்கின. எனவே இந்த ஒப்பீடே தவறு. அது முறையியல் சிக்கல் கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப சிற்றிதழ் போக்கை நிர்ணயம் செய்யும் போது தமிழிலும் அதுபோன்ற ஆய்வுகள் தேவை. அப்படி ஆய்வு செய்யப்பட்டால் ‘எழுத்து’ முதல் சிற்றிதழ் எனும் நிலை மாறலாம்.
இறுதியாக
ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்து கட்டுரை முடிக்கலாம் என நினைக்கிறேன். முடிந்தவரை நான் இந்தக் கட்டுரையில் சொல்லும் தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்கிறேன். ஜெயமோகன் வரலாற்றை தொட்டு எழுதும்போது மட்டும் மிக எளிதாக சில விடயங்களை எந்த ஆதாரமும் காட்டாமல் சொல்லிவிட்டுச் செல்வார். இந்தக் கட்டுரையிலும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான் எழுதினார்கள் என்றும் டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான் என்கிறார். எந்த இதழ்? எந்த ஆண்டு என ஒரு விபரமும் இல்லை. போகிற போக்கில் சொல்லிச் செல்வதால் உழைப்பற்ற வாசகர்கள் ‘சரிதான் போல’ என கடந்துவிடுவார்கள். எனவே அடுத்தமுறை வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்லும்போது அதன் துணைத்தகவல்களையும் இணைத்தால் மேல் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உதவும்.

அதேபோல ஜெயமோகன் சிற்றிதழ் என்பதை அமெரிக்க இதழ்களிலிருந்து கணக்கில் கொள்கிறார். அது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்ஸிலும் சிற்றிதழ் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இனவாதத்தையும் சமூகப்புரட்சியையும் மையப்படுத்தி பாரிஸில் இருந்து வெளிவந்த L’Étudiant noir(1935) என்ற இதழாகட்டும் அல்லது நைஜிரிய நாட்டின் இக்பு தொல்குடி கலாச்சாரத்தைக் காக்க உருவான Okeki (1967) என்ற ஆப்பிரிக்கச் சிற்றிதழாக இருக்கட்டும் அனைத்துமே சமூக மாற்றத்துக்கான அரசியல் முன்னெடுப்புகளோடு சம்பந்தப்பட்டே வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் போக்கு சமூக அரசியல் தளத்தில் வலுவாக இயங்கியுள்ளது தெளிவாகிறது.

ஆனால் தமிழில் ‘பிரக்ஞை’ மாத இதழின் ஆசிரியர் ஆர். ரவீந்திரன் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்,” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அன்றைய கால இலக்கியச்சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையே அக்கால சிற்றிதழ்கள் எப்படி அரசியல் வயப்படாமல் சமூகத்திலிருந்து தள்ளி நின்றன என்பதற்குச் சான்று.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் எழுத்து ஜனவரி 1959ல் தொடங்கப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு. ஜெயமோகன் குறிப்பிடும் மேற்கத்திய சிற்றிதழ்கள் அனைத்தும் சமகால அரசியல் சூழலில் சாதகமாகவே எதிர்ப்பாகவோ இயங்கிய சூழலில் ‘எழுத்து’ அக்கால அரசியலுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் தள்ளி இருந்ததன் அரசியலையே கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.

இவற்றின் அடிப்படையில் புதிய ஆய்வாளர்கள் மீண்டும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வை எழுத்து இதழுக்கு முன்சென்று உழைப்பைச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். இலக்கியத்தையும் உள்ளடக்கி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவான இதழ்களின் தன்மைகளை உலக சிற்றிதழ் தன்மையுடன் ஒப்பிட்டும் அப்போதைய இந்திய /தமிழ் நாட்டின் அரசியல் சூழலுடன் ஆய்வு செய்தும் அவை வெளிவந்த நோக்கம் மற்றும் அதன் புறக்கட்டமைப்பு ஆகியவற்றைக் கவனித்தும் புதிய வரலாற்றை எழுத வேண்டியுள்ளது. அந்தத் தொடக்கத்துக்கான நோக்கங்களைத் தொகுத்தே பறையில் நான் எழுதிய கட்டுரையும் இந்த எதிர்வினையும் பேச விழைகின்றன.

நன்றி : http://vallinam.com.my/navin/?p=2344#more-2344

Saturday, December 19, 2015

அரசனின் வருகை – உமா வரதராஜன்

அரசனின் வருகை 


மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.
ர த்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக்; குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.

ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.

ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.

கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்ற வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.

ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்நத சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில்; நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். ‘அம்மா’ என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.

மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனா.; தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். ‘என்ன நடந்தது, என்ன நடந்தது’ என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. ‘என்ன நடந்தது, என்ன நடந்தது’ என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.

வாழ்வதற்கான வரமும,; அதிர்ஷ;டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் ‘எங்களுக்கோர் நீதி சொல்’ என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனா.; அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம்’ என்று முனகியன. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.

ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப்; பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்;.

அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.

அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.

‘மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்…….. கொஞ்சநிமிஷம்……. வெளிச்சம் வந்துவிடும்……’

அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.

‘அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா…… இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம’?….

ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.

‘போர் என்றால் போர்…. சமாதானமென்றால் சமாதானம்…..’

ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.

போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? ‘

அரசன் புன்னகைத்தான். ‘தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ…. எனக்குத் தெரியும்…. எல்லாம் தெரியும்…’

‘நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ‘ என்றான்; ஊமையன்.

அரசனின் நடை திடீரென்று நின்றது. ‘ஆம்….. நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்…..’ இதோ பார்!’ என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.

அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள் இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.

‘கோயில் தந்தான்
எங்கள் மன்னன் ‘கோவில் தந்தான்
இன்னுந்தருவான்
கேட்கும் எல்லாம் தருவான்.
தில்லாலங்கடி……தில்லா….
பிச்சைப் பாத்திரம் இந்தா……’

திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார். ‘கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ‘ என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.

அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பாhர்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.

வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது…… நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்…’ சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். 

இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்pன்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.

வுpடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.

‘ஏய் எழும்புங்கள்… எழும்புங்கள’; என்று அதட்டினான்.

அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்நது.

இடியுன்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர்.

வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

‘ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர…..’ என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள்.
உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.

ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு 
வியப்பளித்திருக்க வேண்டும்.

‘என் உயிரிலும் மேலான மக்களே…..’

மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.
குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.

‘இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.’

காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.

‘கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும.; உடனே கேளுங்கள்.’

ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள.; சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.

‘மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்…… இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்……’

அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.

ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.

பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.

இந்தியா டுடே, ஏப்ரல் 1994

நன்றி:https://thoguppukal.wordpress.com/2011/02/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/

Sunday, December 13, 2015

பார்த்திபன் கனவு 53 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 16 ஆற்றங் கரையில் )

16 ஆற்றங் கரையில்

நன்றி:http://www.gunthorpe.org.uk/pulsepro/data/img/gallery/riverside/riverside_view.jpg

குந்தவியின் முகத்தில் தோன்றிய மாறுதலை மகேந்திரன் கவனித்தான்.

"என்ன தங்காய்! என்ன" என்றான்.

தனித்து வந்த குதிரையை வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தாள் குந்தவி. அவள் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. இதைக் கவனித்த மகேந்திரன், "தங்காய்! அதோ வருகிறது குதிரைதானே புலி, சிங்கம் அல்லவே? எதற்காக இப்படிப் பயப்படுகிறாய்?" என்று கேட்டான்.

குந்தவிக்கு ரோசம் பிறந்தது; பேச்சும் வந்தது. "புலி, சிங்கமாயிருந்தால் தானென்ன, அண்ணா! நீ பக்கத்திலே இருக்கும்போது?" என்றாள்.

"பின் ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்! - பேய் பிசாசுகளைக் கண்டதைப் போல!"

"அண்ணா! அந்தக் குதிரை யாருடைய குதிரை தெரியுமா?"

"தெரியாது; யாருடையது?"

"அப்பாவினுடையது!"

"என்ன?"

"ஆமாம்; இதே மாதிரி உயர் ஜாதிக் குதிரைகள் இரண்டு அப்பாவிடம் இருக்கின்றன. இது புஷ்பகம்; இன்னொன்று பாரிஜாதம்."

"அப்படியா? இது எப்படி இங்கே தெறிகெட்டு வருகிறது? அப்பாவிடந்தான் நாம் காஞ்சியில் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோமே? அவர் இந்தக் குதிரையில் வந்திருக்க முடியாது?"

"செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்கு அப்பா தம் குதிரையை கொடுத்ததாகச் சொன்னார்."

"ஓஹோ!"

இதற்குள் குதிரை மிகவும் நெருங்கி வந்துவிட்டது. மகேந்திரன் கட்டளைப்படி உடன் வந்த வீரர்களில் ஒருவன் குதிரையைப் பிடித்துக் கொண்டான். அதைத் தன்னருகில் வரும்படி குந்தவி கூறி, அதன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது. பிறகு, அக்குதிரையையும் பிரயாண கோஷ்டியோடு கொண்டு போனார்கள்.

"அண்ணா! அந்த இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்திருக்கும்?" என்று குந்தவி மிக்க கவலையுடன் கேட்டாள்.

இரத்தின வியாபாரியை விக்கிரமன் என்பதாகக் குந்தவி சந்தேகிக்கிறாள் என்னும் விஷயம் மகேந்திரனுக்குத் தெரியாது. ஆகையால் அவன் அலட்சியமாக, "பல்லவ சக்கரவர்த்தியைச் சுமந்த குதிரை கேவலம் ஒரு வியாபாரியைச் சுமக்குமா? எங்கேயாவது கீழே தள்ளிக் குழியும் பறித்துவிட்டு வந்திருக்கும்!" என்று சிரித்தான்.

குந்தவியின் உள்ளம் துடித்தது. ஆனால் ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஓர் ஆறுதலான எண்ணமும் உண்டாயிற்று. உண்மையிலே இந்தக் குதிரை அவனைத் தள்ளிவிட்டு வந்திருக்குமானால் அவன் சோழ ராஜகுமாரனாக இருக்க மாட்டான். சாதாரண வர்த்தகனாய்த் தானிருப்பான்- ஆனால் அந்த இரத்தின வியாபாரியின் தீரத்தைப் பற்றியும் போர்த்திறமையைப் பற்றியும் அப்பா ரொம்பச் சொன்னாரே? ஐயோ! அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? - இவ்வளவு அறிவுள்ள பிராணியான குதிரைக்குப் பகவான் பேசும் சக்தி மட்டும் கொடுக்காமல் போய்விட்டாரே? அந்தச் சக்தி இருந்தால் இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்தது என்ற இரகசியத்தை அது வெளியிடுமல்லவா? - புஷ்பகத்துக்குப் பேசும் சக்தி திடீரென்று ஓர் அற்புதத்தினால் வந்து விடாதா என்று ஆசைப்பட்டவளைப் போல் குந்தவி அதன் முதுகை அடிக்கடி தடவிக் கொண்டு வந்தாள்.

இப்படிப் பிரயாணம் நடந்து கொண்டிருக்கையில், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சுற்றுப்புறக் காட்சியின் தோற்றத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. தரை ஈரமாயிருந்தது, அங்கங்கே பள்ளமான இடங்களில் நீர் தேங்கியிருந்தது. மரங்கள் பளிச்சென்று இருந்தன, காற்றும் குளிர்ந்து வந்தது.

"தங்காய்! நேற்று இங்கெல்லாம் பெருமழை பெய்திருக்கிறது. காஞ்சியில் ஒரு துளிகூட விழவில்லையே?" என்றான் மகேந்திரன்.

அதைப்பற்றியேதான் குந்தவியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறு அவளுக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது, நேற்று மாலை திடீரென்று இந்தப் பக்கத்தில் பெரும் புயலும் மழையும் அடித்திருக்கிறது. அதில் புஷ்பகமும் இரத்தின வியாபாரியும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குதிரை எப்படியோ தப்பிப் பிழைத்து வந்திருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ பாவம்! அவனுக்கு என்ன நேர்ந்ததென்பது வழியில் எங்கேயாவது தெரியவருமா? விபத்து நடந்த இடத்தைப் புஷ்பகம் காட்டுமா? ஒருவேளை உயிர்போன அவனுடைய உடலைக் காணும்படியாக நேருமோ? ... சிவசிவ!....அந்தச் சகிக்க முடியாத நினைப்பினால் குந்தவி கண்களை மூடிக் கொண்டாள்.

இவ்விதம் ஈரமான பிரதேசங்கள் வழியாக அரைக்காத தூரம் போன பிறகு சூரியன் அஸ்தமிக்க ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் காட்டாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். நேற்று மாலை அந்தக் காட்டாறு அளித்த காட்சிக்கு இப்போதைய காட்சி நேர்மாறாயிருந்தது. நேற்று அங்கே ஊழிக்காலத்து மகாப் பிரளயத்தைப் போல, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜலப் பிரவாகமாய்,பிரம்மாண்டமான சுழல்களுடனும் ஹோ என்று பேரிரைச்சலுடன் அலைமோதிக் கொண்டு போன வெள்ளம் பார்க்கப் பீதிகரமான காட்சியை அளித்தது.

இன்று அதே பிரதேசம் பிரளயத்துக்குப் பிறகு ஏற்படும் புது உலக சிருஷ்டியில் நவ மோகனத்தைப் பெற்றிருந்தது. காட்டாற்றின் மத்தியில் முழங்காலளவு ஜலம் சலசலவென்ற சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. அஸ்தமன சூரியனின் பொற்கிரணங்கள் பசுமரக் கிளைகளின் வழியாக வந்து ஓடும் ஜலத்தில் தவழ்ந்து விளையாடி வர்ண ஜாலங்களைக் காட்டின. நதிக்கரைப் பறவைகள் மதுரகானம் செய்துகொண்டு மரங்களில் உள்ள கூடுகளை நோக்கி வந்தன. அழகும், அமைதியும், ஆனந்தமும் அங்கே குடி கொண்டிருந்தன.

ஆனால் குந்தவியின் உள்ளத்திலோ நேற்று அங்கே அடித்த புயலும் மழையும் இப்போது குமுறிக் கொண்டிருந்தன. நேற்று அந்தக் காட்டாற்றில் பெருவெள்ளம் பெருகியிருக்க வேண்டுமென்று அவள் தெரிந்து கொண்டாள். நதிக்கரை மரங்களின் அடிமரத்தில் தண்ணீர்ப் பிரவாகத்தின் புது அடையாளம் நன்றாகப் பதிந்திருந்தது. தாழ்ந்த கிளைகளில் வெள்ளத்தில் வந்த வைக்கோல் முதலியவை சிக்கிக் கொண்டிருந்தன. காட்டாற்று வெள்ளமாதலால் மளமளவென்று பெருகியிருக்க வேண்டும். இரத்தின வியாபாரியின் கதியை ஒருவாறு குந்தவி இப்போது ஊகித்தாள். காட்டாற்று வெள்ளத்தின் சக்தியை அறியாமல் அவன் நதியில் இறங்கியிருப்பான். அல்லது அவன் இறங்கிய பிறகு பிரவாகம் திடீரென்று பெருகியிருக்கும். குதிரை எப்படியோ தப்பி கரையேறியிருக்கிறது. பாவம்! அது வெகுநேரம் கரையிலேயே இரத்தின வியாபாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவன் கரைக்கு வராமல் போகவே காஞ்சியை நோக்கிக் கிளம்பியிருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ! - பிரவாகத்துக்கு இரையாகியிருக்க வேண்டும். அடாடா! தாயாரைப் பார்ப்பதற்காக அவசரமாக உறையூருக்குப் போவதாக சக்கரவர்த்தியிடம் சொன்னானாமே? அவனுக்கு இந்தக் கதியா நேரவேண்டும்?...

இப்படிக் குந்தவி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் பல்லக்கு நீரோட்டத்தின் அருகில் வந்தது. எல்லாரும் ஜலத்தில் இறங்கினார்கள். ஆனால் புஷ்பகம் மட்டும் நீரில் இறங்கத் தயங்கிற்று. நதிக்கரைக்கு வந்ததிலிருந்தே அதனுடைய தயக்கம் அதிகமாயிருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அதைப் பிடித்து வந்த போர் வீரன் நீரோட்டத்தில் இறங்கும்படியாக அதைப் பலவந்தப்படுத்தினான் குதிரையும் இறங்கிற்று. அவ்வளவுதான்; உடனே அது ஒரு திமிறு திமிறிக் கொண்டு போர் வீரனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டது. வந்த கரையை நோக்கித் திரும்பி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடியது. கரையையடைந்ததும் அது நிற்கவில்லை. வேகம் இன்னும் அதிகமாயிற்று. வில்லிலிருந்து கிளம்பிய இராமபாணம் என்பார்களே, அதுமாதிரி நாலு கால் பாய்ச்சலில் பறந்து ஓடி எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே காஞ்சி செல்லும் சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரையில் சென்று மறைந்தது.

"புஷ்பகம் என்று அப்பா பெயர் வைத்தது சரிதான். தரையில் அதன் கால்கள் தொட்டதாகவே தெரியவில்லையே!" என்றான் மகேந்திரன்.
தொடரும் 

Wednesday, December 2, 2015

திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!
நன்றி: http://img.dinakaran.com/Healthnew/H_image/ht3420.jpg


திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூடச் சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்தேனாம்.

அப்புறம் திடீரென ஒரு நாள் கொஞ்சம் பேசத்தொடங்கினேனாம். பேச்சுவராது என்று மருத்துவர்களும் பெற்றோரும் கை விட்டுவிட்ட நிலையில், நான் பேசியதைக்கண்டு மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி முழுமையானது அல்ல என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. என்னால் முழுமையாகப் பேச முடியவில்லை. திக்கித்திக்கித் தான் பேசி இருக்கேன். பேசாமல் இருப்பதற்கு இது மேல் என்று வீட்டினரும் மகிழ்ச்சியை மடைமாற்றிக்கொண்டார்கள்.

இந்தத் திக்குவாய்ப் பழக்கத்தினால் நான் அடைந்த அவமானங்களும், மனவேதனையும் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் படிக்கும் போது திக்குவாயன், அல்லது திக்குவாய் பாலா என்று தான் அழைக்கப்பட்டேன். நான் படித்த பள்ளியில் ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடங்களை எல்லா மாணவர்களும் ஆளுக்கு ஒரு பத்தி வீதம் படிக்க வேண்டும். எல்லோரும் படிக்கும் போது எனக்கும் ஆசை வரும், புத்தகத்துடன் எழுந்து நிற்கும் போது, ‘டேய் நீ படிக்க ஆரம்பிச்சின்னா.. பிரீயட்டே முடிஞ்சு போயிடும் அதனால ஒக்கார்’ என்று ஆசிரியர் உட்கார வைத்து விடுவார். அவர் அப்படிச் சொன்னதும், வகுப்பறையில் எழும் சிரிப்பொலியில் என் கண்கள் நிறைந்துவிடும்.

வீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், வகுப்பறையில் திக்காமல் வாசிக்க முடிந்ததில்லை. பல சமயங்களில் ஆசிரியர்களின் அனுமதியே கிடைக்காது. திக்குவாய் காரணமகாவே சகமாணவர்களின் ஏளனப்பார்வை என்மீது இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ப்..ப்..பா.. பா.. பா.. பாலா…. என்று நான் பேசுவது போன்றே என்னையும் அழைப்பார்கள். (அவர்களும் அப்போது சிறுவர்கள் தானே என்று இன்று புரிகிறது; அடுத்தவரின் வலி, வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அந்த வயதில் எதிர்பார்க்க முடியாதுதான் ) என்னை எந்த விளையாட்டுக்குக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது. சகமாணவர்களை விடப் புத்தகமனிதர்களுடன் பேசத்தொடங்கினேன்.

அசிங்கப்பட்டாலும் விடாமல் தினமும் ஆசிரியர்களிடம் ’ நானும் வாசிக்கிறேன் சார்’ என்று கேட்பேன். என்னுடைய விடாமுயற்சியின் காரணமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சரி வாசிடா என்று பாடங்களில் ஒரு பத்தியை வாசிக்கக் கணேசன் சார் அனுமதி கொடுத்தார். ஆனால், அன்றும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ள.. அசிங்கப்பட்டு அமர்ந்து கொண்டேன். அன்று வீட்டுக்கு வந்ததும், பெரியதாக அழுது அடம்பிடித்தேன். பள்ளிக்கே போகமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் அந்த ஆயுர்வேத வைத்தியர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரைப்போய்ப் பார்த்தோம். முழுங்கிவிடமுடியாத பெரிய அளவு கூழாங்கற்களை இரண்டோ மூன்றோ கொடுத்து, வாய்க்குள் வைத்துக்கொள்ளச்சொல்லி, அவர் கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல வேண்டும். வாயினுள் இப்படியும் அப்படியுமாக ஓடும் கூழாங்கற்களின் மீது நாக்கு பட்டு, பேச்சுத் தடைபடும். ஆனாலும் பேசியாகவேண்டும். அதோடு அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் Tongue – twister பயிற்சிக்கான சில வாக்கியங்களைக் குண்டு குண்டான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார்.

தினமும் காலையிலயே அவரிடன் போய், கூழாங்கற்களை வாயில் அடைத்துக்கொண்டு, நாக்கு நன்கு சுழலவேண்டும் என்பதற்காக.. அருணகிரி நாதரின், திருப்புகழில் ’முத்தைத்திரு.. பத்தி திருநகை’யை வாசிக்கச்சொல்லுவார். அப்புறம், ’ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி’ன்னு சொல்லச்சொல்லுவார். அதுவும் 80 டெசிபல் அளவில் கத்திச்சொல்ல வேண்டும். இடையிடையே, ’உன்னால பேச முடியும்.. பேசும் போது வேறெதும் யோசிக்காதே.. பேசும் ஒரு வார்த்தையை மட்டும் பேசு. அடுத்தவார்த்தையையும் சொல்லி பார்த்துகிட்டே பேச நினைச்சா.. நாக்கு இழுத்துக்கும். நல்லா.. சத்தமா பேசினா.. திக்குவாய் காணாமப்போயிடும். அதனால சத்தம்போட்டு பேசு.’ என்று இப்படி அவ்வப்போது கவுன்சிலிங்க் வேறு கொடுப்பார். கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே தனியா இப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன்.
சத்தம் போட்டு, பேசப் பேச.. எனக்கு இருந்த திக்குவாய் குறைய ஆரம்பித்தது. வாலு போய்க் கத்தி வந்த கதை மாதிரி, திக்குவாய் போய்ச் சத்தம் போட்டு பேசும் வழக்கத்திற்குள் மாட்டிக்கொண்டேன். பயிற்சியின் போது அந்த வைத்தியர் சொல்லி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ.. இப்போதும் கொஞ்சம் மெதுவாகப் பேசும் போது, நாக்கு இழுத்துவிடுமோ என்ற அச்சத்தினாலயே திக்குவாய் வந்துவிடுகிறது.

இப்போது சிந்தித்தால் ஒரு விஷயம் தெரிவாகப்புரிந்தது, திக்குவாய் என்பது மனவியல் சார்ந்த பிரச்சனை. இதனை இடைவிடாத பயிற்சிகளின் மூலம் சரி செய்துகொள்ள முடியும்.
இதையே தான், திக்குவாய் உள்ளவர்களுக்காக இலவசமாகப் பேச்சுப்பயிற்சியும், தன்னம்பிக்கையும் chennaistammering.com என்ற இணையத்தின் வழியிலும் நேரடியாகவும் அளித்துவரும் மணிமாறனும் சொல்கிறார். (காண்க: கடைசிப்பத்தி செய்தி)
என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்லுவதாக இருந்தால், எந்தச்சொல் பேசுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறதோ, அச்சொல்லின் முன்னால், தொடக்க எழுத்தாக “அ” என்றோ, ”A” என்றோ சேர்த்துச் சொல்லச்சொல்லுங்கள். இது பேசுவதற்குக் கூடுதல் பயன் தரும்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மீண்டுவரக்கூடியதுதான் திக்குவாய் பிரச்சனை. அதனால் குழந்தைகள் மனசு ஒடிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுவதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் பெற்றோராகிய நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலே போதும்.

வல்லுநர் வார்த்தை:-

Manimaranதிரு. மணிமாறன்

மணிமாறன். இவரும் திக்குவாய் பாதிப்புக்குள்ளானவர். அரசுப்பணியில் உயர் பதவியில் பணியாற்றி, இன்று ஓய்வில் இருக்கும் மணிமாறன், தொடந்து, திக்குவாய் குறித்த விழிப்புணர்வுக்காகச் செயலாற்றி வருகிறார். தன்னுடைய அனுபவங்களின் வழி பலருக்கும் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இதோ அவர் கொடுக்கும் டிப்ஸ்:

1. குழந்தையின் பேச்சுத் திறன் பற்றி நீங்கள் ரொம்பக் கவலைப் படுவதைக் அவனிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.

2. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருங்கள். சத்தான உணவு, தேவையான தூக்கம் என அவனது உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.

3. குழந்தை பேசுகையில் கவனமுடன் கேளுங்கள். அவன் என்ன சொல்கிறான் என்பதுதான் உங்களுக்கு முக்கியமே தவிர, எப்படிச் சொல்கிறான் என்பது பற்றிக் கவலைப்படவில்லை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்.

4. மூச்சுப் பயிற்சி, உடல் மொழியில் சில மாற்றங்கள் போன்ற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தொடர்ந்து செய்ய வையுங்கள்.

5. அன்னியர் முன்னால் பேசிக்காட்ட சொல்லாதீர்கள். அதே நேரம் அவனாகப் பேச ஆசைப்பட்டால், அதை ஊக்குவியுங்கள்.

6. குழந்தை எப்படி இருக்கிறானோ அப்படியே, அவனது குறைநிறைகளோடு அவனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

7. குழந்தையின் மீது கொண்ட பரிவால் அவனது இயல்பான பொறுப்புகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை. ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவனது கடமை என்பதை உணர்த்துங்கள்.

8. குழந்தையின் திக்கல் திடீரென அதிகரித்தால் வீட்டிலோ பள்ளியிலோ அவனுக்கு உணர்ச்சி பூர்வமான அழுத்தம் அதிகரிக்கிற்தா என்பதைப் பாருங்கள்.

9. நன்றாகப் பேசும் போது பாராட்டுங்கள். ஆனால் அந்தப் பாராட்டு அவன் பேசும் விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, திக்காமல் பேசுவதற்காகத் தனிப்படப் பாராட்ட வேண்டாம்.

10. ஆரோக்கியமான பொழுது போக்குகளையும், ரசனைகளையும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.

11. ஒரு போதும் வேகமாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்.

12. நிதானமான, சீரான வேகத்தோடு கூடிய பேச்சையே ஊக்குவியுங்கள்.

13. ”பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சுக்கோ”, “மெதுவா/வேகமா பேசு”, “பொறுமையா, முழுசா பேசு” போன்ற தேவையற்ற ஆலோசனைகளைத் தவிருங்கள்.

14. கடினமான வார்த்தைகளுக்குப் பதில் எளிமையான வார்த்தைகளை மாற்றி உபயோகிக்கச் சொல்லாதீர்கள். இதன் மூலம்,  அச்சொற்களை எதிர்காலத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதட்டத்தையும், பயத்தையுமே அதிகரிக்கும்.

15. நீங்களாக வார்த்தைகளை எடுத்துக் கொடுக்காதீர்கள். குழந்தையே தன் வார்த்தைகளைத் தானே கண்டடையட்டும்.

16. பள்ளியிலும், வீட்டிலும் பேசுவதை ஊக்குவியுங்கள்.

17. அன்பு, புரிந்து கொள்ளும் பரிவு, பொறுமை – இந்த மூன்றுமே தாரக மந்திரங்கள். இவற்றோடு உங்கள் குழந்தையை அணுகினால் நிச்சயம் அவனாலும் தெளிவாகப் பேச முடியும்.

நன்றி : http://blog.balabharathi.net/?p=1680

Tuesday, December 1, 2015

பார்த்திபன் கனவு 52 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 15 திரும்பிய குதிரை )

15  திரும்பிய குதிரை


நன்றி :http://i.telegraph.co.uk/multimedia/archive/02067/War-horse_2067282b.jpg

குந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் பெறுவாள். சந்தேகம் வந்தால் அவரைத்தான் கேட்பாள்; ஏதாவது குதூகலிக்கக் கூடிய விஷயம் நேர்ந்தாலும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டால்தான் அவளுக்குப் பூரண திருப்தி உண்டாகும். ஒரு கதையோ, கவிதையோ, நன்றாயிருந்தால் அவரிடம் சொல்லி அனுபவிக்க வேண்டும்; ஒரு சித்திரமோ சிற்பமோ அழகாயிருந்தால் அவருடன் பார்த்து மகிழவேண்டும். இப்படியெல்லாம் வெகுகாலம் வரையில் மகளும் தந்தையும் இரண்டு உடம்பும் ஒரே உள்ளமுமாக ஒத்திருந்தார்கள்.

ஆனால், அந்தக் காலம் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையே இப்போதெல்லாம் ஒரு மானசீகத் திரைபோட்டது போலிருந்தது. தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளான சோழ ராஜகுமாரனுடைய ஞாபகம் குந்தவியின் மனத்தை விட்டு அகலவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவனை மறக்க முடியவில்லை. அந்த ராஜகுமாரனைப் பற்றிக் குந்தவி பேச விரும்பினாள். ஆனால் யாரிடம் பேசுவது? இத்தனை நாளும் தன்னுடைய அந்தரங்க எண்ணங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் தந்தையிடமே சொல்லி வந்தாள். ஆனால் சோழ ராஜகுமாரன் விஷயமாக அவரிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எப்போதாவது ஏதாவது கேட்டாலும் தன் எண்ணத்தைச் சிறிதும் அறிந்து கொள்ளாதது போலவே அவர் மறுமொழி சொல்லி வந்தார். தனக்குத் தாயார் இல்லையே என்ற குறையைக் குந்தவி இப்போதுதான் உணர ஆரம்பித்தாள்.

அந்தக் குறையை ஒருவாறு நீக்கிக் கொள்வதற்காக அவள் விக்கிரமனுடைய அன்னையுடன் சிநேகம் கொள்ள விரும்பினாள். ஆனால், அருள்மொழியைக் குந்தவி சந்தித்த அன்றே அவள் பரஞ்சோதியடிகளுடன் தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டதைப் பார்த்தோம். யாத்திரையின் போது ஒரு சமயம் அவர்கள் மாமல்லபுரத்துக்கும் வந்திருந்தார்கள். சில தினங்கள் அந்தக் கலாக்ஷேத்திரத்தில் இருந்தாள். அடிக்கடி அருள்மொழி ராணியைப் பார்த்தாள். ராணி அவளிடம் மிகவும் பிரியமாகவே இருந்தாள். ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கலக்கவில்லை. எப்படிக் கலக்க முடியும்? தன்னுடைய ஏக புதல்வனைக் குந்தவியின் தந்தை கண்காணாத தீவுக்கு அனுப்பிவிட்டதைப் பற்றி அருள்மொழியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. குந்தவிக்கோ தன் தந்தைமேல் அணுவளவேனும் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை. தந்தையினிடத்தில் அவளுக்கு இருந்த ஒப்பில்லாத பிரியத்தோடு அவரைப் பற்றி அவளுக்கு ரொம்பப் பெருமையும் உண்டு. இதிகாசங்களில் வரும் சூரிய, சந்திர வம்சத்துச் சக்கரவர்த்திகளைப் போல் பெருமை வாய்ந்தவர் தன் தந்தை; வடக்கே நர்மதை நதிவரையில் சென்று திக்விஜயம் செய்தவர்; ராட்சஸப் புலிகேசியை வென்று வாதாபியை அழித்தவர்; அப்படிப்பட்டவரின் கீழ் சிற்றரசனாயிருப்பதே அந்தச் சோழ ராஜகுமாரனுக்குப் பெருமையல்லவா? இருநூறு வருஷமாகச் சோழர்கள் பல்லவ சக்கரவர்த்திகளுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வரவில்லையா? இப்போது மட்டும் என்ன வந்தது?

இவ்விதம் அந்த இரண்டு பேருடைய மனோபாவங்களிலும் வித்தியாசம் இருந்தபடியால் அவர்கள் மனங் கலந்து பேச முடியவில்லை. ஒருவரிடம் ஒருவரின் அன்பு வளர்ந்தது. ஆனால் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒரு முக்கியமான பகுதி பூட்டப்பட்டுக் கிடந்தது. ஒருநாள் அருள்மொழி ராணி ஓரளவு தன் இருதயத்தின் கதவைத் திறந்தாள். குந்தவியின் தந்தைக்குத் தன்னை மணஞ் செய்து கொடுப்பதாகப் பேச்சு நடந்ததையும், தான் அதைத் தடுத்துப் பார்த்திப மகாராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டதையும் கூறினாள். விக்கிரமனுடைய பிள்ளைப் பிராயத்தில் அவனுக்குக் குந்தவியை மணம் முடித்து வைக்கத் தான் ஆசைப்பட்டதையும் தெரிவித்தாள். அப்போது குந்தவியின் உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது. ஆனால், பிறகு ராணி, 'அதெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. பாக்கியசாலியான வேறொரு ராஜ குமாரனை நீ மணந்து சந்தோஷமாய் வாழ்வாய்!" என்று சொன்னபோது குந்தவிக்குக் கோபமே வந்தது.

"இல்லை அம்மா! எனக்கு இல்லறத்தில் பற்று இல்லை. உலகத்தைத் துறந்து நான் சிவவிரதையாகப் போகிறேன்" என்றாள் குந்தவி. அவள் அவ்விதம் கூறியதன் கருத்தை ராணி அறிந்து கொள்ளவில்லை.

பிறகு ஒரு சமயம் குந்தவி, இளவரசர் விக்கிரமன் பல்லவ சாம்ராஜ்யத்துக்குக் கப்பம் செலுத்த இசைந்தால் இன்னமும் திரும்பி வந்து சோழ நாட்டுக்கு அரசராகலாமே என்று சொன்னபோது, அருள்மொழி ராணியின் முகம் அருவருப்பினால் சிணுங்கிற்று. "அதைக் காட்டிலும் விக்கிரமன் செத்துப் போனான் என்று செய்தி எனக்குச் சந்தோஷத்தையளிக்கும்!" என்றாள்.

மாமல்லபுரத்தில் அருள்மொழி ராணி தங்கியிருக்கும்போது தான் ஒரு நாளைக்குப் பழைய சிவனடியார் வந்து மகாராணியைப் பார்த்துப் பேசினார். அவர் பேசிவிட்டு திரும்பிப் போகும் சமயத்தில் குந்தவி அவரைப் பார்த்தாள். உடனே பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்துவிட்டன. ராணியிடம் சென்று அந்தச் சிவனடியார் யார் என்று கேட்டாள். யார் என்று ராணியினால் சொல்ல முடியவில்லை. "யாரோ பெரியவர். என் பதி வீரசொர்க்கம் சென்ற பிறகு இவர்தான் எங்களுக்குக் குலதெய்வமாயிருந்து வருகிறார்!" என்றாள்.

குந்தவி மனதிற்குள், "குல தெய்வமில்லை; குலச் சனியன்!" என்று நினைத்துக் கொண்டாள். பின்னால் அருள்மொழித் தேவி காவேரி சங்கமத்தில் கடலில் மூழ்கிய செய்தியும், அவளை யாரோ தூக்கிச் சென்றதாக வதந்தியும் காதில் விழுந்தபோது, "தூக்கிக் கொண்டு போனவர் அந்தப் போலிச் சிவனடியாராய்த் தானிருக்க வேண்டும். ஏதோ கெட்ட நோக்கத்துடன் அந்த வேஷதாரி இத்தனை நாளாய் மகாராணியைச் சுற்றியிருக்கிறான்!" என்று நிச்சயம் செய்து கொண்டாள்.

இந்தத் துர்ச் சம்பவத்துக்குச் சில காலத்துக்கு முன்புதான் குந்தவியின் தமையன் இலங்கையை வெற்றி கொண்டு திரும்பி வந்திருந்தான். அவன் தன் சகோதரியிடம் அளவற்ற வாஞ்சை வைத்திருந்தான். குந்தவி தன் உள்ளத்தை ஓரளவு திறந்து காட்டுவதும் சாத்தியமாயிருந்தது. தன் சகோதரியின் மனோநிலையை உணர்ந்து மகேந்திரன் தானே செண்பகத் தீவுக்குப் போய் விக்கிரமனை எந்தச் சாக்கிட்டேனும் திருப்பி அழைத்து வரத் தீர்மானித்தான். இந்த எண்ணத்துடனே அவன் சக்கரவர்த்தியிடம் சாவகம், காம்போஜம் முதலிய கீழ்ச் சமுத்திரத் தீவுகளுக்குப் படையெடுத்துச் செல்ல அனுமதி கேட்டான். சக்கரவர்த்தி இதற்குச் சம்மதியாமல், தமக்கே கடற் பிரயாணம் செய்யும் உத்தேசம் இருக்கிறதென்றும், அதனால் மகேந்திரன் யுவராஜ பதவியை வகித்துப் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பை வகிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். மகேந்திரனால் இதை மறுக்க முடியவில்லை.

இந்த நிலைமையில், குந்தவியின் வற்புறுத்தலின் மேல் மகேந்திரன் மாரப்ப பூபதியைச் சோழ நாட்டின் சேனாதிபதியாக்கியதுடன், அவனை மாமல்லபுரத்துக்கும் தருவித்தான். சிவனடியாரை அவன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், அவர் மூலமாக ராணி அருள்மொழித்தேவி இருக்குமிடத்தை அறிய வேண்டு மென்றும் மாரப்ப பூபதிக்குக் கட்டளை பிறந்தது. அதோடு குந்தவியும் மகேந்திரனும் உறையூர் வசந்த மாளிகையில் சில காலம் வந்து தங்கப் போவதாகவும், அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறையூர் போவதற்குச் சக்கரவர்த்தியும் சம்மதம் கொடுக்கவே, மகேந்திரனும் குந்தவியும் மற்றப் பரிவாரங்கள் புடைசூழ ஒரு நாள் பிரயாணம் கிளம்பினார்கள். விக்கிரமன் காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டுத் தப்பிப் பிழைத்த அன்றைக்கு மறுநாள் உச்சிப் போதில், அந்தக் காட்டாற்றுக்குச் சுமார் ஒரு காத தூரத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குந்தவி பல்லக்கிலும், மகேந்திரன் குதிரை மேலும் அமர்ந்து பிரயாணம் செய்தார்கள்.

மகேந்திரன் தன்னுடைய இலங்கைப் பிரயாணத்தைப் பற்றியும் அங்கே தான் நடத்திய யுத்தங்களைப் பற்றியும் தங்கைக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். இலங்கை நாட்டின் நீர்வள நிலவளங்களைப் பற்றியும் வர்ணித்தான். குந்தவி வியப்புடன் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆனாலும் இடையிடையே அவளுடைய ஞாபகம் செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியின் மீது சென்று கொண்டிருந்தது. இது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரத்தின வியாபாரி வராமல் போனதினால்தான் என்ன, எதற்காகத் தன் மனம் அவ்வளவு கவலையுறுகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவன் தனக்குச் செண்பகத் தீவு என்று சொன்னபடியால்,சோழ ராஜகுமாரனைப் பற்றி அவனிடம் விசாரிக்கும் ஆவல்தான் காரணம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

"இல்லை; இல்லை; அவர்கள் இருவருக்கும் உள்ள முக ஒற்றுமைதான் காரணம்!" என்று ஒரு மனம் சொல்லிற்று. "ஆனால் அது உண்மையா? அல்லது நம்முடைய கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டனவா? உண்மையில் அத்தகைய முகஒற்றுமையிருந்தால், அப்பா அதைக் கவனித்திருக்கமாட்டாரா? கவனித்திருந்தால் அவனை வழிப்பறிக்காரர் களிடமிருந்து காப்பாற்றி உறையூருக்கு அனுப்பி வைத்திருப்பாரா? அதெல்லாம் இல்லை; நம்முடைய பிரமைதான் காரணம்!" என்று இன்னொரு மனம் சொல்லிற்று. இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், "உறையூரில் ஒருவேளை அந்த ரத்தின வியாபாரியைச் சந்திப்போமா?" என்ற நினைவும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

இப்படியெல்லாம் குந்தவி தன் மனத்திற்குள் எண்ணமிட்டுக் கொண்டும், ஒரு காதில் மகேந்திரனுடைய பேச்சைக் கேட்டு 'ஊங்' கொட்டிக் கொண்டும் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு எதிரே திடீரென்று தோன்றிய ஒரு காட்சி அவளை ஒரே அடியாகத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனைக்கும் அந்தக் காட்சி வேறொன்றுமில்லை; சேணம் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு உயர்ந்த ஜாதிக் குதிரை முதுகில் ஆள் இல்லாமல் தனியாக வந்து கொண்டிருந்த காட்சிதான்.

அதைக் கண்டு ஏன் அவ்வாறு குந்தவி திடுக்கிட வேண்டும்? - அவளுக்கே தெரியவில்லை. குதிரை இன்னும் அருகில் வந்தது. அது அவளுடைய தந்தையின் குதிரைதான் என்பது ஐயமறத் தெரிந்தது. சில சமயம் சக்கரவர்த்தி அதில் ஏறி வந்திருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே வந்தது? ஒருவேளை, அப்பாதான்...? அவ்விதம் இருக்க முடியாது. அப்பாவிடம் காஞ்சியில் விடை பெற்றுக் கொண்டு தானே கிளம்பினோம்? நமக்கு முன்னால் அவர் எப்படி வந்திருக்க முடியும்? வந்திருந்தாலும் குதிரை ஏன் இப்போது தனியாக வருகிறது? சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இரத்தின வியாபாரிக்குக் குதிரையும் கொடுத்து அனுப்பியதாக அப்பா சொன்னாரல்லவா? குதிரைக்குப் பதிலாக அவன் கொடுத்த இரத்தினங்களையும் காட்டினாரல்லவா? ஆமாம்; இரத்தின வியாபாரி ஏறிச் சென்ற குதிரையாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது ஏன் இப்போது தனித்து வருகிறது? இரத்தின வியாபாரி எங்கே? அவன் என்ன ஆனான்? குந்தவியின் அடிவயிறு அப்படியே மேலே கிளம்பி அவளுடைய மார்பில் புகுந்து மூச்சை அடைத்து விட்டது போலிருந்தது.
தொடரும்