Wednesday, January 28, 2015

சீட்டாட்டம் ( (யோ கர்ணன் )

சீட்டாட்டம்


சந்தியில் பஸ்சால இறங்கேக்க எனக்கு மெல்லிய டிம், மாஸ்ரருக்கு முழு டிம்.  எங்களை இறக்கிப் போட்டுப் போன இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்சைப் பாத்து இரண்டு கையையும் விரிச்சபடி நடுறோட்டில நின்று “என்னயிருந்தாலும் மகிந்த ஒரு நரியன்தான்.  இஞ்ச விட்டான் துரும்பை...  அங்க அடிச்சான் கம்மாரிஸ்...” என்று உரத்த குரலில் சொன்னார்.  போன சனம் நின்று புதினம் பாக்கினம்.  அதால வந்த இரண்டு ஆமிக்காரரும் சிரிச்சுக் கொண்டு நின்று பார்க்கினம்.  அவயளுக்கு தமிழ் தெரியாட்டிலும், ஒரு அங்கிள் வெறியில் நின்று புசத்திறார் என்று நினைச்சிருப்பினம். எனக்கு பெரிய அந்தரமாய் போயிற்றுது. மாஸ்ரரின்ட கையைப் பிடிச்சு இழுத்து “பேசாமல் வாங்கோ மாஸ்ரர்'' என்று மெல்ல உறுக்கினன்.  மாஸ்ரர் பயப்பிடுறாரில்லை.  “டேய்... ஏன் பயப்பிடுகிறாய்... நினைக்கிறதைக் கதை... பயப்பிடாதை சொல்லு... என்ன பிரச்சினை....”

“மாஸ்ரர் சனம் பார்க்குது... தேவையில்லாத கதையை விட்டிட்டு வாங்கோ...”
“எது தேவையில்லாத கதை... ஓ .... மகிந்தவோ.... அடி செருப்பால...” என்றபடி என்ர பிடியிலிருந்த தனது கையை உதறி எடுத்து, கையை உயர்த்தி “மகிந்த ராசபக்ச வாழ்க... கம்மாரிசடிச்ச சிங்களவன் வாழ்க...” என்று விட்டு காறித் துப்பினார்.

எனக்குப் பெரிய அந்தரமாய்ப் போயிற்றுது. பேசாமல் தொட்டியடி றோட்டால நடக்கத் தொடங்கினன்.  எங்கட காணிக்குப் போற பாதை அதுதான்.  மாஸ்ரர் கூப்பிட்டார்.  நான் நிக்கயில்லை.  கெஞ்சினார். நான் நிக்கயில்லை.  ஓட்டமும் நடையுமாக ஏதோ கதைச்சுக் கொண்டு பின்னால வாறார். முந்தின காலமென்டால் மாஸ்ரர் இப்பிடி கோசம் போட்டதுக்கு விசுவமடுச் சந்தியில ஐஞ்சு வெடி விழுந்திருக்கும்.

சந்தியிலிருந்து ஐம்பது மீற்றர்ல இயக்கத்தின்ர அரசியல் துறையிருந்தது.  அதில கடைசியாக சீராளன், போர்ப்பிரியன் ஆக்கள் பொறுப்பாக இருந்தவை.  முதல் வெடியை அரசியல்துறை வைச்சிருக்கும். 

அரசியல்துறை கழிஞ்சு போக, புலனாய்வுத்துறைக்காரர் இருந்தவை.
அதுதான் திருமலை மாஸ்ரரின்ட மெயின்.  ஏரியாவில நடக்கிற நல்லது கெட்டது, மங்கலம் - அமங்கலம், உருட்டுப் பிரட்டு, அடி வெடி எல்லாமே அங்கதான் நடந்தது.  இரண்டாவது வெடி இவையள் வைச்சிருப்பினம்.

இவைக்கு முன் ஒழுங்கையில் காவல்துறைக்காரரும், மாலதி படையணி பெட்டையளும் இருந்தினம்.  மூன்றாவது வெடியை சந்தேகமில்லாமல் காவல்துறை வைச்சிருக்கும்.  நாலாவது வெடிதான் மிச்சமாயிருக்குது.  என்னயிருந்தாலும் அவையள் பொம்பிள்ளையள் தானே.  அவையள் இப்படி வெடி வைச்சு நான் இதுவரைக் கண்டதில்லை. ஐஞ்சாவது வெடிதான் ரிக்ஸ்சான வெடி. கொஞ்சநாளைக்கு முதல் நீங்கள் பேப்பருகளில படிச்சிருப்பியள், மோட்டார் சைக்கிளில வந்து சுட்டவை, காரில் வந்து சுட்டவை, கூரை பிரிச்சு சுட்டவை, மதிலேறிக் குதிச்சு சுட்டவை, தின்னேக்க சுட்டவை, குடிக்கேக்க சுட்டவை என்று.  ஆர் சுட்டது, எப்படிச் சுட்டதென்பது வெடி வைச்ச ஆளுக்கும் வெடி வேண்டின ஆளுக்கும் தான் தெரியும்.

இது மாதிரித்தான் ரவுணுக்குள்ள ஐஞ்சாறு பேர் நிப்பினம்.  நல்லா இயக்கத்தோட ஊறிய ஆக்களுக்கும், சாப்பாட்டுக் கடைக்காரருக்கும் மட்டும் இவையளைத் தெரியும்.  அனேகமாக எல்லாரும் சாப்பாட்டுக் கடைக்காரரோட நல்ல பழக்கம் வைச்சிருப்பினம். ரவுணுக்குள்ள நடக்கிற அசுமாத்தங்களை கவனிச்சுக் கொண்டிருப்பினம்.  இவையளும் ஒரு வெடி வைச்சிருப்பினம்.
எங்கட அப்பா இருக்கிறாரே அந்தாள் ஒன்றுக்கும் உருப்படாத ஆள். அந்தாளால உருப்பட்ட தென்டால் நாலைஞ்சு கள்ளுத் தவறணை முதலாளியள்தான். அந்தாள் தன்ர வாழ்க்கையில செய்த ஒரேயொரு உருப்படியான காரியமென்டால், படிச்ச வாலிபர் திட்டமொன்று அந்த நேரம் விசுவமடுக் காட்டை பிரிச்சுக் குடுக்கேக்க, ஒரு துண்டு காணி வாங்கினதுதான்.  அப்ப கிளநொச்சியே பெரிய காடெண்டு சொல்லி கனபேர் வரவில்லையாம்.  விசுவமடுக்கு வந்த முதல் பஸ்சில அப்பரும் வந்திறங்கியிருக்கிறார்.  கனபேர் தாக்குப் பிடிக்க ஏலாமல் திரும்ப ஓடியிட்டினம்.  அப்பர் நின்றார்.  அந்த நேரம் அப்பரின்ட ‘கோழையாவாக’ சிவம் அண்ணை இருந்திருக்கிறார்.  ஆள் தோட்டக்காட்டான்.  உலகத்திலேயே தோட்டக்காட்டான் மாதிரி நன்றியுள்ளவன் இல்லையென்டு அப்பா வெறியில் புசத்துவார். பிறகு அப்பா யாழ்ப்பாணத்திலயிருக்கேக்க சிவமண்ணைதான் காணியைப் பார்த்தார்.

அப்பான்ட குடிவெறி எனக்குப் பிடிக்கயில்லை.  கொஞ்சநாளாக இரண்டு பேரும் முழுக்கிக் கொண்டு திரிஞ்சம். ஏமஞ் சாமத்தில வந்து புசத்திற வேலையை நிப்பாட்டச் சொல்லச் சொல்லியும், அம்மாட்டச் சொல்லியிருந்தேன்.  அண்டைக்கும் ஆளை கனநேரமாகக் காணவில்லை. நான் கேற்றைப் பூட்டியிட்டன்.  அப்பா கேற்றுக்கு வெளியில நின்று படு தூசணத்தால கத்துகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தன், சரிவரவில்லை.  கேற்றைத் திறந்துபோட்டு, அப்பா உள்ளுக்கு வர, விட்டன் மூஞ்சையைப் பொத்தி ஒண்டு.  மனுசன் மூச்சுப் பேச்சில்லாமல் நிலத்தில.
இதுக்குப் பிறகு அப்பர் வலு திருத்தம்.  ஆனால் நான் வீட்டிலயில்லை.  நான் இயக்கத்துக்குப் போனன்.  எனக்கு இடம் வலம் தெரியேலையோ என்ர காலமோ தெரியாது.  நான் போனது இயக்கத்தின்ர கலை பண்பாட்டுக் கழகத்துக்கு.  இதுக்கு முதல் புதுவை இரத்தினதுரை என்டொரு பேரையே நான் கேள்விப்பட்டதில்லை. துப்பாக்கி தூக்கி சமராடுவதை விடவும் சிரமமான பணி மக்களை அணிதிரட்டுவது. கலைகளின் ஊடாக அவற்றை செய்வதே எமது நோக்கம் என கலை பண்பாட்டுக்கழகம் போட்ட நாடகமொண்டில் நடிக்க அனுப்பினார் புதுவை அண்ணா.

எனக்கு கிடைச்சது ஆமி வேசம்.  ஐஞ்சு பேரில ஓராளாக வந்தன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு என பல பகுதிகளில் நாடகம் நடந்தது.  எம்.ஜி.ஆர், சிவாஜி ஆக்களும் இப்பிடித்தான், ஸ்ராட்டில் சின்னச்சின்ன வேசங்களில் நாடகம் நடிச்சுத்தான் பேமசானவை என்று அதில நடிக்கிற எல்லோருமே கதைப்பினம். கொஞ்சநாள் போக மெல்ல மெல்ல நானும் இப்பிடி கதைக்கத் துவங்கினன்.

அப்பதான் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்து தென்மராட்சி மட்டும் சனம் ஓடி வந்து நின்று யோசிக்குது.  கிளாலிக் கடல் கடக்கிறதோ, திரும்பிப் போறதோ எண்டு. வீட்டுக் காரரையெல்லாம் திருப்பி அனுப்பிப் போட்டு, அன்ரி ஆக்களோட நான் கடல் கடந்து வன்னி போனன்.  

அன்ரியின்ர மூத்தமகன் அப்பவே இயக்கத்தில பெரும்புள்ளி. இரண்டு பொடி காட்டோடதான் வீட்டுக்கு வருவான்.  அதால அன்ரி வன்னிக்குப் போக வேண்டியிருந்தது. அவவுக்கும் வன்னி தெரியாது. அப்பரின்ட காணியை தடவிப் பிடிச்சு விசுவமடுவில குடியேறினம். அந்த நேரம் இடப்பெயர்வு சம்பவங்களை வைச்சு குருத்தோலை அழுவதேன், வெள்ளைப் புறா சிவப்பானதேன், யாழ் தேவி என்றது மாதிரியான பேமசான நிறைய நாடகங்களை பலதரப்பும் போட்டினம்.  சும்மா சொல்லக்கூடாது.  நாங்களும் வலுதிறமான நாடகங்கள் சிலது போட்டம்.  அவையளோட சேர்ந்து தொடர்ந்து நாடகம் நடிக்கிறன்.  இடம்பெயரேக்கையும் சேர்ந்து வந்திட்டன் என்டது மாதிரியான காரணங்களாலோ அல்லது என்ர திறமையாலயோ தெரியாது எனக்கும் புரமோசன் கிடைச்சது.  ஆமிக் கூட்டத்தில வந்த ஆள் இப்ப தனிப் பாத்திரம் ஏற்கத் தொடங்கிற்றன். இப்பவும் சிவாஜி, எம்.ஜி.ஆரின்ட கதைதான் என்ர மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்குது.

ஒருநாள் இப்பிடித்தான், செவ்வானம் சிவந்ததேன்’ என்றொரு நாடகம் பழகிக் கொண்டிருக்கிறம். எனக்கும் ஒரு முக்கியப் பாத்திரம் தந்திருக்கினம். அப்ப அன்ரியிட்டயிருந்து ஒரு அவசர மெசேஜ் வருது “எங்கயிருந்தாலும் உடனே வா.  அவசரம்”.  நானும் விழுந்தடிச்சுப் போறன்.  வீடு பேயறைஞ்சு போய்க் கிடக்குது. அன்ரி சொன்னா, “உன்ர தங்கச்சி... உவள் தான் சுமி. அவளுக்கு ஆம்பிளை கேட்டிருக்குது.  ஆரோடையோ ஓடிற்றாள்....”

சுமி அன்ரியின்ர இரண்டாவது பெட்டை.  எனக்கென்டால் விசர் எழும்பிற்றுது.  இந்த தோறை பார்த்த வேலையால தெருவில தலைநிமிந்தே நடக்கேலாமல் போகப் போகுது.  ஆர் பொடியன் என்று பாத்தால், சந்தியில சலூன் வைச்சிருக்கிறவனிண்ட பொடியன்.  கடைசியில் எங்கட குடும்பத்துக்குள்ள ஒரு அம்பட்ட மாப்பிள்ளையும் வந்திட்டான்.

நான் நேரே காவல்துறைக்குப் போனேன்.  நான் ஆர், என்ன செய்யிறன், இன்ன இன்னாரைத் தெரியும் என்டதுகளை விளங்கப்படுத்திப் போட்டு, சுமியின்ர பிரச்னையைச் சொன்னேன். படிச்சுக் கொண்டிருந்த பெட்டையைக் கொண்டு போயிருக்கிறான். இன்ன இன்ன செக்சன்களில் இது குற்றம்.  இன்ன இன்ன அக்சன் எடுக்கலாமென்டு  நாலைஞ்சு பிளானும் குடுத்தன்.  அதில் ஒன்று, சந்தியில கடை வைச்சிருக்கிற தகப்பன்காரனைப் பிடித்து அடைக்கலாம்-  மகன் சரணடையுற வரை.  காவல்துறைப் பெரியவனும் வலு இன்ரஸ்டிங்காக என்ர பிரச்சினையை கேட்டிட்டு, “இப்பிடித்தானண்ணை நல்ல குடும்பங்களை சில பொம்பிளையள் தலைகுனிய வைக்கிறாளுகள்.  எதுக்கும் நீங்கள் ஒரு என்ட்ரி எழுதித் தந்திட்டுப் போங்கோ... நான் கவனிக்கிறன்...” என்றான். நானும் ஒரு என்ட்ரி எழுதிக் குடுத்திட்டு வந்தன்.

கொஞ்ச நாளில் ஓட்டமெற்றிக்காக இந்தப் பிரச்சினை மறைஞ்சிட்டுது.  காவல்துறையும் ஒரு அக்சனும் எடுக்கவில்லை. மல்லாவியில ஒருநாள் நாங்கள் நாடகம் போட்டம். கூட்டத்துக்குள்ளயிருந்து கைக்குழந்தையொட ஒரு பெட்டை எழும்பி 'அண்ணை' என்று கூப்பிடுது.  ஆர் என்னைக் கூப்பிடுறது என்டு யோசிச்சுக் கொண்டு திரும்பினன்.  சுமி. அதுவரை அவளைப் பற்றி வேசை, தோறை என்டது மாதிரியான கொமன்ட்ஸ் அடிச்சுக் கொண்டு திரிந்தாலும், அந்த ரைமில எல்லாம் மறந்து போச்சுது. அந்தக் குடும்பத்தில என்னை மட்டும்தான் அண்ணனாக நினைக்கிறன் என்றும் சொன்னாள்.
அன்றிரவு வீட்டுக்கு போய் அன்ரியோட கதைச்சன். என்னயிருந்தாலும் அவள் உங்கட மகள்தானே.  எப்பிடியாவது உங்களோட சேருங்கோ என்டன்.  அன்ரிக்கு விளங்குகின்றது.  “ஏன் அவளை எங்கயாவது கண்டனியோ...” என்றா.  நான் ஓமென்டன். அன்ரி ஒரு வெடிச் சிரிப்பு சிரிச்சுப் போட்டு “துரும்பு அடிச்சுப் பாத்திருக்கிறாள்...” என்டா.
அன்ரி பொம்பிளைதான்.  ஆனால் நல்லா சீட்டடிப்பா. அவ ஆம்பிளையளோட இருந்து சீட்டடிக்கிறதை கண்டிருக்கிறன்.  நான் திறமையான விளையாட்டுக்காரனென்டில்லை.

சிலருக்கு சீட்டென்றால் உயிர்.  காலையில் இருந்து பின்னேரம் மட்டும் இருப்பினம்.  அவையளிட்ட ஏதேனும் அலுவலாகப் போறவைக்கும், பிரச்சினைதான். எழும்ப விடமாட்டினம். என்னயிருந்தாலும் உந்த மன்னார்ப் பக்கத்து கடற்றொழிலாளியள் இதில ராசாக்கள்தான்.  இப்பிடியான கொஞ்சப் பேரை பார்த்துமிருக்கிறன்.  என்ன மந்திரமோ, மாயமோ தெரியாது.  ஆர் ஆர் என்னதான் வைச்சிருக்கினமென்டதை பிசகில்லாமல் சொல்லுவினம்.  இப்ப பாருங்கோ, இதில ஓராளிட்ட ஸ்கோப்பன் ராசாவும், பெட்டையும் வருதென்டு வையுங்கோவன்.  அந்தாள் என்ன செய்யுது, அதில கம்மாரிஸ் குத்திது.  இதென்னடா இந்தாளுக்கு பைத்தியமா பிடிச்சிட்டுதென்டு யோசிப்பியள்.  அப்ப அந்தாள் ஒரு விளையாட்டுக்  காட்டும்.  துரும்பில சின்னத் தாளை இழுத்துவிடும்.  அப்படியே தாள் விழுந்து கொண்டு போக இவரின்ட பாட்னர் அடிப்பான்.  வீத்தை வீறு, மணல் எல்லாம் அவன்தான் வைச்சிருப்பான்.  இப்ப அவன் விளையாட்டை கையில எடுப்பான். இதுக்கு அடுத்தடுத்த அடியில வெட்டிக் கம்மாரிசென்டோ, எங்கட ஆள் கம்மாரிஸ் அடிக்கும்.  கம்மாரிசில ஒரு குருவி பிழை பிடிக்க ஏலாது.  இப்ப நீங்கள் அந்தாளிட்டக் கேப்பியள்... “எப்பிடியண்ணை இது....”

அந்தாள் முகம் கொள்ளாத ஒரு சிரிப்போட சொல்லுவார்.  “ம்...ம்... அது தான் விளையாட்டு... துரும்பை சரியான ரைமில அடிச்சு, அடிச்சன் பார் கம்மாரிஸ்...” சுமி துரும்பை இழுத்து கம்மாரிஸ் அடிச்சாளோ இழுக்காமல் கம்மாரிஸ் அடிச்சாளோ தெரியாது. கொஞ்ச நாளில் இரண்டு பக்கமும் வலு நெருக்கம்.  தாயும் மகளும் ஒரே வீட்டில்தான் இருந்தினம்.  எங்கட விசுவமடுக் காணியிலதான் இருக்கினம்.  முந்தின காலத்தில கடிதம் போட்டாலே அந்த இராச்சியத்துக்கு பத்து நாளைக்குப் பிறகுதான் போகும்.  இப்ப எல்லா இடமும் ரெலிபோன் வந்திட்டுது.  அவளும் இரண்டு நாளைக்கொரு கோல் அடிச்சு “அண்ணா... என்னை மறந்திட்டியோ... என்னை பாக்க வரமாட்டியோ” என்கிறாள்.

சரி போனால் போகுது என்று மாஸ்ரரையும் கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன். மாஸ்ரரும் முந்தி என்னோட நாடகம் நடிச்ச ஆள்தான்.  வவுனியாவில் இருந்து வெளிக்கிடேக்க இரண்டு பேரும் வலு நோமல்.  பிறகு கிளிநொச்சி ரவுணிலதான் கொஞ்சம் குடிச்சம். அதுவும் மாஸ்ரரின்ட ஆய்க்கினையாலதான் நான் குடிச்சன்.  நான் எதிலயும் வலு நிதானம்.  மாஸ்ரர் ஒரு பரதேசி நாய். கேற்றைத் திறந்து உள்ளடேக்க, மாஸ்ரர் தவண்டு வந்த மாதிரியுமிருக்குது. வேலியைப் பிடித்துக் கொண்டு வந்த மாதிரியுமிருக்குது.  நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. 

வீட்டுக்குள்ள இருக்கேக்க மாஸ்ரர் பம்மிக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஆளைப் பார்க்க சிரிப்பாக இருக்குது.  அந்த நேரம் மாஸ்ரருக்கு ஒரு கோல் வருது.  கதைச்சார்.  கதைச்சு முடிச்சுப் போட்டு சொன்னார். “ஒரு குருவி வாலாட்டேலாமல் இருந்த ஏரியாவுக்க புகுந்ததுமில்லாமல்... டிஸ்கோ டான்சும் ஆடினானாம் என்ட கணக்கா... சீ.ரி.பி பஸ்சில வந்திறங்கி இஞ்சயிருந்து போன் கதைக்கிறம்” என்டார்.

பிறகு, “துரும்படிச்சுக் கம்மாரிஸ் அடிச்ச இடமடா இது” என்றார். எனக்கு ஏறிற்றுது.  “மாஸ்ரர் வெறி முறியாட்டில் போய் குளிச்சிட்டு படுங்கோ...” என்றேன்.  மாஸ்ரர் சொன்னார் “எடேய்.. சீட்டில ஒரு ரிக்ஸ் இருக்கடா,  இப்ப உன்னிட்ட துரும்பில்லையெண்டு வை.  உன்ர கூட்டாளியிட்ட இருக்கலாம்.  மெல்ல ஒரு துரும்பை இறக்க வேணும்."

நான் எழும்பினன்.  மாஸ்ரருக்கு விளங்கீற்றுது வாயை மூடிவிட்டார்.  இண்டைக்கு இஞ்ச மாஸ்ரரின்ட மூஞ்சையைப் பொத்திப் போடுவன்.  அவ்வளவு கோபம்.  எப்பப் பார்த்தாலும் துரும்பும் கம்மாரிசுமெண்டு கொண்டு.  கூட்டிக்கொண்டு வந்திட்டு அடிக்கிறது பாவம் எண்டு நான் உள்ளுக்க போனன்.  தங்கச்சியோட கொஞ்சநேரம் ஊர்க் கதையள் கதைச்சுப் போட்டு குளிச்சன். குளிச்சிட்டு வர ஒரு பிளேன் ரீ தந்தாள்.  வெளியில இருக்கிற மாஸ்ரருக்கு குடுத்தாச்சுதோ என்று கேட்டன். மூத்த மகன் கொண்டு போயிற்றான் என்றாள். பிளேன் ரீயை குடிச்சிட்டு வெளியில போனன்.  பிளேன் ரீ கொண்டு போன பொடியனை வைச்சு கதைச்சுக் கொண்டிருந்தார். 

“தம்பி... துரும்படிச்சு கம்மாரிஸ் அடிச்சான் மகிந்த...  இஞ்ச துரும்படிச்சான்... அங்க முள்ளி வாய்க்காலில கம்மாரிஸ் அடிச்சான்”. பொடியன் வெருண்டு போய் நிக்கிறான்.  எனக்கு ஏறிட்டுது.  “என்ர மாஸ்ரர் திரும்பத் திரும்ப புசத்திறியள்... என்ன பிரச்சினையென்டதை சொல்லுங்கோ..”

மாஸ்ரர் ஒரு நிமிசம் வடிவாச் சிரிச்சார்.  அப்பிடியெ அலகைப் பொத்திப் போட வேணும் மாதிரிக் கிடக்குது.  பிறகு சொன்னார். “எடேய் ஜனாதிபதி-எலெக்சன் நேரம் இஞ்ச வைச்சுத் தான்ரா மகிந்த, இயக்கத்துக்கு இருபது கோடி காசு கொடுத்தவன். தனக்கு போடச் சொல்லி” என்றார்.

நன்றி: புது விசை 

நன்றி: http://yokarnan.blogspot.fr/2011/02/blog-post_26.html

Saturday, January 24, 2015

பார்த்திபன் கனவு 29 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 19, மாரப்பனின் மனோரதம்)

அத்தியாயம் 19, மாரப்பனின் மனோரதம்மாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:-

"மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்?"

இதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் "என்ன வள்ளி! என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய்? என்ன சமாசாரம்? என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்ன பாதகம் செய்துவிட்டான்?" என்றான்.

அடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளி வேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம் திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு "உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயா? அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ?" என்றாள்.

இதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை.

"என்ன சொன்னாய் வள்ளி?" என்றான்.

இதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, "பொன்னா! உன்னோடு ஒரு சமாச்சாரம் பேச வேண்டும், வா" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான்.

இருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்" என்றான் மாரப்பன்.

"நானா ஐயா? உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே?"

"உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா!"

"ஐயையோ! அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்!" என்றான் பொன்னன்.

மாரப்பன் சிரித்துக் கொண்டே, "அதுதான் பொன்னா! அதுதான்! வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக்குச் செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால், என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ?"

"ஆமாம் எஜமான் ஆமாம்! தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டை என்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே!" என்றான் பொன்னன்.

"என்ன சொன்னாய்?" என்று மாரப்பன் கத்தியை உருவினான்.

"ஓகோ! கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா? நிஜக் கத்திதானே? கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன். உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான்.

மாரப்பன் கத்தியைப் பக்கத்தில் தரையில் வைத்து விட்டு, "வேண்டாம், பொன்னா! உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார்! விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே? அது பலித்ததா? நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே, காரியம் கெட்டுப் போயிற்று?" என்றான்.

"அப்படியா? மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு? அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா? பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம்?"

"இல்லை, பொன்னா! ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியை நம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே! உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன்! எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்!" இதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது.

ஒருவேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே? என்று சிறிது வெட்கமடைந்தான்.

"சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை...." என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஒரு சுழற்றிச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிக ஆழமாய்ப் பதிந்தது!

மாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெட வென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.

"பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா! இளவரசர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடைய காரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்."

"நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே!"

"எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா! நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா?"

ஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ? என்று பொன்னனுக்கு யோசனை உண்டாயிற்று.

"நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்?" என்று அவன் கேட்டான்.

"பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்க வரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய்? சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா! வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா? எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்!" என்றான்.

குந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம் இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது; உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "அதற்கென்ன? சமயம் நேர்ந்தால் கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்" என்றான்.

"நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா! சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப் போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள் வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரை மீதேறி அதைக் தட்டி விட்டான்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

Wednesday, January 21, 2015

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 12)

ஆட்டிசம் – சிகிச்சை முறைகள் – பாகம் 2

படங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல் – Picture Exchange Communication System (PECS):


மொழியைப் பயன்படுத்த முடியாது போகிற நிலையில் ஆட்டிசக் குழந்தைகளின் தேவைகளையும், எண்ணங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள இன்னொரு வழி இந்த பட அட்டைகளைக் கொண்டு பேசுதல். பிரமிட் என்கிற கல்வி தொடர்பான பொருட்கள் தயாரிப்பாளர்களின்(Pyramid Educational Products) பிராண்ட்தான் பெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பட அட்டை முறையாகும்.முதலில் குழந்தைக்கு மிகவும் பிடித்த பொருட்களின் படங்களை எடுத்துக் கொண்டு இந்த பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் பொம்மையின் படம் கொண்ட அட்டையை கொண்டுவந்து தந்தால் அந்த பொம்மையை குழந்தைக்கு விளையாடக் கொடுப்பது என்று முதலில் பழக்கலாம். எனவே நமக்கு வேண்டிய பொருளின் படம் கொண்ட அட்டையை எடுத்து தந்தால், நமக்கு அந்தப் பொருள் கிடைக்கும் என்ற புரிதலை குழந்தையிடம் கொண்டு வருகிறோம். பிறகு ஒவ்வொரு பொருளையாக இப்படி கேட்க வைக்கலாம். மெல்ல மெல்ல மொழியின் பயன்பாடுகளை குழந்தை உணர்ந்து கொள்ள இந்த முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த பயிற்சியைப் பெற்று தங்கள் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகள் நாளடைவில் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள் என்பது நமக்கு கூடுதல் அனுகூலமாகும்.

உடல் நலச் சிக்கல்கள்:

இது போன்ற அடிப்படைப் பயிற்சிகள் தவிர மேலதிகமாக இக்குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் இருக்கக் கூடும். பெரும்பாலும் இவர்களை பாதிக்கக் கூடிய இருவகை உடல்நலச் சிக்கல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
  1. நரம்பியல் சிக்கல்கள்  – குறிப்பாக வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  2. ஜீரணக் குறைபாடுகள்  – அஜீர்ணம், வயிற்றுப் போக்கு போன்றவை.
இவ்விரு குறைபாடுகளுக்கும் முறையே நரம்பியல் மற்றும் குடலியல் நிபுணர்களிடம் சிகிச்சை பெறுதல் அவசியம். அதிலும் ஆட்டிசம் உறுதிப்படுத்தப் பட்டதுமே ஒரு நரம்பியல் நிபுணரை கலந்தாலோசித்து EEG எடுத்து மூளை மற்றும் நரம்புகளின் நிலையைப் பரிசோதித்துக் கொள்வதும், தேவையான மருத்துவ உதவிகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.

வேறு சிகிச்சை முறைகள்:

இந்த அடிப்படை சிகிச்சை முறைகள் தவிர்த்து மேலதிகமாக வேறு சில சிகிச்சை முறைகளும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு கூடுதல் பலனளிக்கக் கூடும். ஆனால் மேற்சொன்ன சிகிச்சை முறைகளோடு சேர்த்து மட்டுமே இனி சொல்லப் போகும் சிகிச்சை முறைகளை முயற்சிக்க வேண்டும்.
  1. இசை சிகிச்சை
  2. நடன சிகிச்சை
  3. யோகா
இசை, நடனம், யோகா போன்ற பயிற்சிகள் இக்குழந்தைகளின் கவனக் குவிப்பை அதிகரிக்கவும், ஹைப்பர் ஆக்டிவிட்டியை குறைக்கவும் பயன்படுகின்றன. இந்தக் கலைகள் குழந்தைகளின் மனதையும் உடலையும் ஒரு நேர்கோட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் ஆட்டிசக் குழந்தைகளின் நடவடிக்கைகள் சீராக்கம் பெறுகின்றன.

(தொடரும்)

நன்றி: http://216.185.103.157/~balabhar/blog/?p=1258

Sunday, January 18, 2015

பார்த்திபன் கனவு 28 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 18, பொன்னனின் அவமானம்)

அத்தியாயம் 18, பொன்னனின் அவமானம்


சென்ற மூன்று தினங்களாகப் பொன்னன் குடிசைக்குள்ளே இடியும் மழையும் புயலும் பூகம்பமுமாக இருந்தது.

"நான் செய்தது தப்பு என்று தான் ஆயிரந் தடவை சொல்லி விட்டேனே! மறுபடியும் மறுபடியும் என் மானத்தை வாங்குகிறாயே!" என்றான் பொன்னன்.

"தப்பு, தப்பு, தப்பு என்று இப்போது அடித்துக் கொள்கிறாயே, என்ன பிரயோஜனம்? இந்தப் புத்தி அப்போது எங்கே போச்சு?" என்று வள்ளி கேட்டாள்.

"இப்போது என்ன குடி முழுகிப் போய்விட்டதென்று ஓட ஓட விரட்டுகிறாய், வள்ளி! அந்தச் சக்கரவர்த்தி எங்கே போய்விட்டார்! என் வேல் தான் எங்கே போச்சு?"

"வேல் வேறயா, வேல்? கெட்ட கேட்டுக்குப் பட்டுக் குஞ்சந்தான், ஓடம் தள்ளுவதற்கும் கும்பிடுவதற்குந்தான் கடவுள் உனக்குக் கையைக் கொடுத்திருக்கிறார்! கும்பிடுகிற கையினால் எங்கேயாவது வேலைப் பிடிக்க முடியுமா?"

இரண்டு உடலும் ஓர் உயிருமாயிருந்த தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட ஓயாத வாய்ச் சண்டை நடப்பதற்குக் காரணமாயிருந்த சம்பவம் இதுதான்:-

இரண்டு நாளைக்கு முன் இந்தக் காவேரிக்கரைச் சாலை வழியாக நரசிம்ம சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அவர்களுடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, தோணித் துறைக்கு அருகில் சக்கரவர்த்தி சிறிது நின்றார். தோணித்துறையையும், காவேரியின் மத்தியிலிருந்த தீவையும், அந்தத் தீவில் பச்சை மரங்களுக்கிடையே காணப்பட்ட வசந்த மாளிகையின் பொற் கலசத்தையும் குந்தவிக்குச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அச்சமயம் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த பொன்னன், வள்ளி இவர்கள் மேல் சக்கரவர்த்தியின் பார்வை விழுந்தது. பொன்னனை அருகில் வரும்படி அவர் சமிக்ஞை செய்யவும், பொன்னன் ஓடோடியும் சென்று, கைகூப்பித் தண்டம் சமர்ப்பித்து, பயபக்தியுடன் கையைக் கட்டிக் கொண்டு அவர் முன்னால் நின்றான். சக்கரவர்த்தியைப் பழிக்குப்பழி வாங்கப் போவதாகவும், அவருடைய மார்பில் தன் வேலைச் செலுத்தப் போவதாகவும் அவன் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அச்சமயம் அடியோடு மறந்து போய் விட்டது. சக்கரவர்த்தியின் கம்பீரத் தோற்றமும் அவருடைய முகத்தில் குடி கொண்டிருந்த தேஜசும் அவனை அவ்விதம் வசீகரித்துப் பணியச் செய்தன.

"இந்தத் தோணித் துறையில் படகு ஓட்டுகின்றவன் நீதானே, அப்பா!" என்று சக்கரவர்த்தி கேட்கவும், பொன்னனுக்குத் தலைகால் தெரியாமற் போய் விட்டது. "ஆமாம், மகா....சக்ர...பிரபு!" என்று குழறினான்.

"அதோ தெரிகிறதே, அந்த வசந்த மாளிகையில் தானே அருள்மொழி ராணி இருக்கிறார்!"

"ஆமாம்"

"இதோ பார்! நமது குழந்தை குந்தவி தேவி, ராணியைப் பார்ப்பதற்காகச் சீக்கிரத்தில் இங்கே வரக்கூடும். ஜாக்கிரதையாக ஓடம் செலுத்திக் கொண்டு போய் அந்தக் கரையில் விட வேண்டும், தெரியுமா?"

"புத்தி, சுவாமி!" என்றான் பொன்னன்.

பிறகு சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிச் சென்றார்கள். இதையெல்லாம் வள்ளி குடிசை வாசலில் நின்றபடி அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பொன்னன் திரும்பி வந்தபோது, வள்ளியின் முகத்தில் `எள்ளும் கொள்ளும்' வெடித்தது. முழு விவரமும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் வள்ளி பலமாய்ச் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். சக்கரவர்த்திக்குப் பணிந்து மறுமொழி சொன்ன காரணத்தினால் விக்கிரம மகாராஜாவுக்குப் பொன்னன் துரோகம் செய்துவிட்டதாக வள்ளி குற்றம் சாட்டினாள். "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகி!" என்று நிந்தித்தாள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரம் மூன்று தினங்களாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது.

வள்ளியின் சொல்லம்புகளைப் பொறுக்க முடியாதவனாய், அன்று மத்தியானம் உச்சிவேளையில் பொன்னன் நதிக்கரையோரம் சென்றான். அங்கே நீரோட்டத்தின் மீது தழைத்து கவிந்திருந்த ஒரு புங்க மரத்தினடியில் அதன் வேரின் மேல் உட்கார்ந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்வது, வள்ளியிடம் மறுபடியும் எப்படி நல்ல பெயர் வாங்குவது? - என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திகை மாதக் கடைசி, ஒரு மாதம் சேர்ந்தாற்போல் அடைமழை பெய்து விட்டிருந்தது. கழனிகளில் நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. பச்சை மரங்களின் இலைகள், புழுதி தூசியெல்லாம் கழுவப்பட்டு நல்ல மரகத வர்ணத்துடன் பிரகாசித்தன. குளுகுளுவென்று குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.

இப்படி வெளி உலகமெல்லாம் குளிர்ந்திருந்ததாயினும், பொன்னனுடைய உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. பத்து வருஷத்துக்கு முன்னால் இந்தக் கார்த்திகை மாதம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பார்த்திப மகாராஜாவும் ராணியும் இளவரசரும் இங்கே அடிக்கடி வருவதும் போவதுமாயிருப்பார்கள். அரண்மனைப் படகுக்கு அடிக்கடி வேலை ஏற்படும். தோணித்துறை அப்போது எவ்வளவு கலகலப்பாயிருந்தது! குதிரைகளும், யானைகளும், தந்தப் பல்லக்குகளும் இந்த மாந்தோப்பில், வந்து காத்துக் கொண்டு கிடக்குமே! அந்தக் காலம் போய்விட்டது. இப்போது ஈ, காக்கை இங்கே வருவது கிடையாது. இந்தத் தோணித்துறைக்கு வந்த கேடுதான் என்ன? பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்து போனார். இளவரசர் எங்கேயோ கண் காணாத தீவில் தவித்துக் கொண்டிருக்கிறார். அருள்மொழி ராணியோ ஓயாமல் கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார். வசந்த மாளிகைக்குப் போவார் இல்லை; ஓடத்துக்கும் அதிகம் வேலை இல்லை.

அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி மட்டும் துரோகம் செய்யாமலிருந்தால், இப்போது விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பார் அல்லவா? பல்லவ சக்கரவர்த்தி இங்கே ஏன் வரப்போகிறார்? வள்ளியிடம் தான் ஏச்சுக் கேட்கும்படியாக ஏன் நேரிட்டிருக்கப் போகிறது?

இப்படிப் பொன்னன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குதிரை வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாலை ஓரத்தில் பொன்னனுடைய குடிசைக்கருகில் மாரப்ப பூபதி குதிரை மேலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

Tuesday, January 13, 2015

பார்த்திபன் கனவு 27 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 17, குந்தவியின் சபதம்)

அத்தியாயம் 17, குந்தவியின் சபதம்


காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

காஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்து பேரிகைச் சப்தம், ஆலாட்ச மணி ஓசை, யாழின் இன்னிசையுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி - எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரிஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர்காற்றுடன் கலந்து இலேசாக வந்து கொண்டிருந்தது.


"குழந்தாய்! ஏன் இப்படி ஒரு மாதிரியிருக்கிறாய்? உடம்பு நன்றாகயில்லையா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.


"எனக்கு உடம்பு ஒன்றுமில்லை அப்பா, மனந்தான் நன்றாயில்லை!"


"மனம் இருக்கிறதே அம்மா! ரொம்பப் பொல்லாதது 'மத்தகஜத்தைப் போன்றது' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் புத்தி என்கிற அங்குசத்தால் அடக்கி ஆளவேண்டும்...."


"அப்பா!"


"ஏன் குழந்தாய்!"


"நான் சமண முனிவரைப் பார்த்துவிட்டு வந்தது தங்களுக்கு எப்படித் தெரிந்தது?"


"என் மகள் என்ன செய்கிறாள் என்பது எனக்குத் தெரியாமல் போனால் இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தை நான் எப்படி அம்மா, கட்டி ஆள முடியும்?"


"அப்பா! நான் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ சார்ந்துவிடப் போகிறேன்."


"ஏன் அம்மா, அப்படி? நமது சைவ வைஷ்ணவ சமயங்கள் என்ன அவ்வளவு துர்ப்பாக்கியத்தைச் செய்து விட்டன?"


"வாழ்க்கையில் எனக்கு வெறுப்பு உண்டாகிவிட்டது. இந்த உலகத்தில் ஏன் பிறந்தோமென்று இருக்கிறது!"


"அடடா! அவ்வளவுக்கு வந்து விட்டதா? அப்பர் பெருமானைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாயே? அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா? தில்லை அம்பலத்தில் ஆனந்த நடனமிடும் பெருமானைத் தரிசிப்பதற்காகவே...."


"நிறுத்துங்கள் அப்பா! வயதாக ஆக அந்தப் பெரியவர் ஒரே பக்திப் பைத்தியமாகி விட்டார். ஆனந்தமாம்! நடனமாம்! இந்த அழகான உலகத்தைப் படைத்த கடவுளுக்கு ஆனந்தம் வேறு, நடனம் வேறு வேண்டிக் கிடந்ததாக்கும்?"


இதைக் கேட்ட சக்கரவர்த்தி கலகலவென்று சிரித்தார். குந்தவி வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.


"நான் ஏன் சிரித்தேன் என்று தெரியுமா, குந்தவி?"


"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு வேளை பைத்தியம், கியித்தியம்...."


"இல்லை குழந்தாய்! இல்லை; பைத்தியம் எனக்குப் பிடிக்கவில்லை! நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது! அதன் காரணம் என்ன தெரியுமா?"


"நான் உங்களுக்குப் பெண்ணாய்ப் பிறந்தது தானோ என்னவோ?"


சக்கரவர்த்தி புன்சிரிப்புடன், "இல்லை அம்மா, இல்லை! நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்.... என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான்! என்றார்.


குந்தவியின் முகத்தில் அவளை அறியாமலே புன்னகை தோன்றியது. இதைப் பார்த்த நரசிம்மவர்மர், "உனக்கு இப்போது வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகியிருப்பதற்கு அதுதானே காரணம்? என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா?" என்றார்.


குந்தவி கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள். தலை குனிந்தபடி, "அப்பா! உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம்? உங்களுடைய தர்ம ராஜ்யத்தில் இப்படிப்பட்ட அநீதி நடந்துவிட்டதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது" என்றாள்.


"இதுதானா பிரமாதம், குந்தவி? இதற்கு ஏன் இவ்வளவு கவலை? அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா? உண்மையில் அநீதி நடந்து விட்டதாக எனக்குத் தெரிந்தால் உடனே அதற்குப் பரிகாரம் செய்து விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி.


"நிஜந்தானே, அப்பா! சோழ ராஜகுமாரனுடைய செயலுக்கு அவன் பொறுப்பாளி இல்லையென்று தெரிந்தால் தண்டனையை மாற்றிவிடுவீர்கள் அல்லவா?"


"நிச்சயமாய் அம்மா!" அப்போது குந்தவி தன் மனத்திற்குள் "அந்த வேஷதாரிச் சிவனடியாரை எப்படியாவது கண்டுபிடித்து, அவருடைய தாடியைப்பற்றி இழுத்துக் கொண்டு வந்து சக்கரவர்த்தியின் முன்னிலையில் நிறுத்தாவிட்டால் என் பெயர் குந்தவி அல்ல!" என்று சபதம் செய்து கொண்டாள்.


"குந்தவி! என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? இன்னும் இரண்டு நாளில் நான் உறையூர்க்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.


"வருகிறேன் அப்பா! அங்கே எனக்கும் ஒரு காரியம் இருக்கிறது; அதற்கு நீங்கள் குறுக்கே ஒன்றும் சொல்லக் கூடாது."


"என்ன காரியம் என்று எனக்குச் சொல்லலாமோ, அதுவும் இரகசியமோ?"


"இரகசியம் ஒன்றுமில்லை, அப்பா! அருள்மொழி ராணியை நான் பார்க்கப் போகிறேன்."


"சரிதான்; ஆனால் அருள்மொழி ராணி உன்னைப் பார்க்கச் சம்மதிக்க வேண்டுமே!"


"அவர் என்னைப் பார்ப்பதற்கு என்ன தடை? எதற்காக மறுக்கிறார்?"


"அவளுடைய பிள்ளையைத் தேசப் பிரஷ்டம் செய்தவன் மகள் ஆயிற்றே நீ? உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா?"


"என்மேல் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? ரொம்ப அழகு தான்! நானா இவருடைய பிள்ளைக்குத் துர்ப்போதனை செய்து சக்கரவர்த்திக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்படி தூண்டினேன்? என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்?" என்றாள் குந்தவி.


இதைக் கேட்ட சக்கரவர்த்தி தம் மனத்திற்குள், "பெண்ணாய்ப் பிறந்தவர்களிடம் தர்க்க ரீதியை எதிர்பார்ப்பதிலேயேயும் பிரயோஜனமில்லைதான்!" என்று எண்ணிக் கொண்டார்.


தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

Saturday, January 10, 2015

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 11)

ஆட்டிசம் – சிகிச்சை முறைகள்


ஆட்டிசத்திற்கான சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஏற்கனவே முந்தைய பல கட்டுரைகளில் சொன்ன ஒரு விஷயத்தை முதலில் நினைவு படுத்திக் கொள்வது நலம். ஆட்டிசக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய சிக்கல்கள் ஓரே மாதிரியானவையே தவிர்த்து ஒன்றேதான் எனச் சொல்ல முடியாது. எனவே எந்தவொரு சிகிச்சையையும் முழுமுற்றான தீர்வு எனக் கொள்ள முடியாமையே இங்க நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

மேலும் பல மருத்துவ நிபுணர்கள் , ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; குறைபாடு (Not a disease it’s a disorder) தான் என்று சொல்லி வருகிறார்கள். இது உண்மையும் கூட! எனவே இதன் சிகிச்சை முறைகள் யாவுமே அப்பிரச்சனையின் தாக்கத்தைக் குறைத்து, இயல்பான ஒரு வாழ்வை வாழ அக்குழந்தையைப் பயிற்றுவிக்கவே முயலும். எனவே இரண்டு மாதம் இந்த சிகிச்சை எடுத்தேன், பிறகு குணமாகி விட்டது என்பது போன்ற அணுகுமுறைகள் சாத்தியமே இல்லை. அதற்காக ஆயுள் பரியந்தம் தெரப்பிகள் தேவைப்படுமோ என்று பயப்படத் தேவையில்லை. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு தன் சொந்த முயற்சியில் அவர்களே தங்களது பிரச்சனைகளை சமாளித்துக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு தயாராகிவிடுவார்கள்.

முதன்மையாக நான்கு வகையான தெரப்பிகள் தேவைப்படுகின்றன.

1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள் – behavioral therapies
2. வளர்ச்சிக்கான பயிற்சிகள் – developmental therapies
3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் – educational therapies
4. பேச்சுப் பயிற்சி – speech therapy

இந்த நான்கு பயிற்சிகளும் அனேக குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இப்பயிற்களின் வழியே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள்:

இவை முக்கியமாக ஆட்டிசக் குணாதிசயங்களைக் குறைப்பதற்காக செய்யப்படுபவை. எடுத்துக்காட்டாக சென்சரி பிரச்சனையில் நாம் பேசிய சில ஆட்டிச குணாதிசயங்களை எடுத்துக் கொள்வோம்.
வாய்பகுதியில் ஹைப்பர் சென்சிடிவிட்டி கொண்ட ஒரு குழந்தைக்கு கீழ்க்கண்ட சிகிச்சைகள் தரப்படும்.

1. சுடுநீராலும், ஐசாலும் மாறி மாறி ஒத்தடம் தரப்பட வேண்டும்.
2. வாயின் உட்பகுதி மசாஜ் செய்யப்பட வேண்டும் – இதற்கு வைப்ரேட்டர் உள்ள ப்ரஷ்கள் பயன்படுத்தப்படலாம்.
3. ஊதல், உறிஞ்சுதல் போன்ற செயல்கள் ஊக்குவிக்கபட வேண்டும்.

அதே போல் தன் உடலின் இருப்பை அறிவதில் இருக்கும் சிரமங்களுக்கு காரணம் மூட்டுகளில் இருக்கும் சென்சரி மையம் பலவீனமாக இருப்பதே காரணம். எனவே மூட்டுக்களை தனிப்பட மசாஜ் செய்வது, பேண்டேஜ் துணி கொண்டு இறுகக் கட்டி வைப்பது போன்றவை இந்த உணர்ச்சியைத் தூண்டும்.

நேர்கோட்டில் நடக்கப் பயிற்சி அளிப்பது, ஒரு செயலுக்கு பாராட்டாக அவர்கள் விரும்பும் ஒரு பரிசு தருவதன் மூலம் பயிற்றுவிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த நடத்தை சீராக்கலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.


2. வளர்ச்சிக்கான பயிற்சிகள்:

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்(Developmental Milestones) அவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் கற்றுக் கொள்ளக்கூடிய செயல்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.  3 மாதத்தில் தலை நிற்பது, 8 மாதத்தில் தவழுதல், 1 வருடத்தில் நடப்பது என்பது போன்ற படிநிலைகள் சாதாரண குழந்தைகளுக்கு இயல்பாகவே நடந்துவிடும். மேலும் கண்ணாடி நியூரான்களின் உதவியோடு தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்த்து அக்குழந்தைகள் தான் செய்ய வேண்டிய செயல்களைக் கற்றுக் கொள்ளும் பண்பையும் கொண்டிருக்கும். ஆனால் ஆட்டிசக் குழந்தைகள் சூழ இருக்கும் மனிதர்களின் செயல்களை கவனிப்பதும் இல்லை, அவற்றைப் போலச் செய்து பார்க்க முயற்சிப்பதும் இல்லை. எனவேதான் இவர்களின் வளர்ச்சிப் படிநிலைகளில் தேக்கம் ஏற்படுகிறது. எனவே தானாகக் கற்றுக் கொள்ளாத இக்குழந்தைகளுக்கு செயல்களை நாமாக கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக மாடிப்படி ஏறுவது, நேர் கோட்டில் நடப்பது, இரு கால்களையும் தூக்கி குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை நம் உதவியோடு முதலில் செய்ய வைத்துப் பழக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவர்களே அவற்றைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

வளர்ச்சிப் படிநிலைகளின் படி ஒரு குழந்தை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள்:

கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் என்பது எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகள், வடிவங்கள், வண்ணங்கள் போன்ற அடிப்படை விஷயங்களைச் இக்குழந்தைகளுக்குப் புரியும் படி சொல்லித் தருவதில் ஆரம்பிக்கும். தொடர்ந்து அந்தந்த வயதுக்குத் தகுந்த விஷயங்களை இக்குழந்தைகளுக்கு மிகுதியும் செயல் முறையில் சொல்லித் தர வேண்டியிருக்கும்.

சாதாரண வகுப்பறைச் சூழலில் கலந்து படிக்கக்கூடிய நிலையை இவர்கள் எட்டும் காலம் வரை இந்த சிறப்புக் கல்வி(special education) முறையையே தொடர வேண்டியிருக்கும். மாண்டிசோரி கல்வி முறை போன்ற செயல்கள் மூலம் கற்பிக்கும் முறையே இவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இதற்கென ஆசிரியப் பயிற்சிக் கல்வியிலும் தனியான பாடப் பிரிவும் இருக்கிறது. எனவே அத்தகைய பயிற்சியுடையோர் மூலம் இக்குழந்தைகளைப் பயிற்றுவிக்கலாம்.

மேலும் சிறப்புக் கல்வி என்பதை நாம் தனியாக அளித்தாலும் கூட வழக்கமான பள்ளிக்கு மற்ற சாதாரண குழந்தைகளுடன் அனுப்புவதும் மிகவும் முக்கியம். (சிறப்பு கல்வி தேவைப்படும் இக்குழந்தைகளை சாதாரண மாணவர்களில் பள்ளிகளில் சேர்ப்பதே சிறந்தது. மேலை நாடுகளில் இந்நிலை இயல்பானதாக இருந்தாலும், இங்கே நம் நாட்டில் அப்படி ஒரு சூழல் இல்லை என்பதும், சிறப்பு பள்ளி என தனிப்பள்ளிகள் செயல்பட்டு வருவதும் வருந்தக்கூடியது)

4. பேச்சுப் பயிற்சி:

ஆட்டிசக் குழந்தைகளில் சிலர் பேச்சுக்கான தூண்டல்களே (speech stimuli) இல்லாது இருப்பர். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சியாளரைக்(Speech-language pathologists ) கொண்டு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும்.

பேச்சுப் பயிற்சி என்று ஒட்டு மொத்தமாக அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் இதில் மூன்று படிநிலைகள் உண்டு.

1. பேச்சுப் பயிற்சி – வாய், தொண்டை, சுவாச உறுப்புகள் போன்றவற்றின் செயல்பாட்டில் உள்ள குறைகளை கண்டறிந்து சீராக்குவது
2. மொழிப் பயிற்சி – மொழியின் அடிப்படைக் கூறுகளை புரிய வைப்பது. வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, இலக்கணம் போன்றவற்றை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லித்தருவது
3. தொடர்பு மொழி பயிற்சி – பேசுவதற்கான ஆவலை உருவாக்குவது, மனிதர்களோடும், சூழலோடும் பொருந்தும் படி பேச பயிற்சி அளிப்பது போன்றவை இதில் அடங்கும்.

(தொடரும்)
நன்றி: http://216.185.103.157/~balabhar/blog/?p=1256

Wednesday, January 7, 2015

பார்த்திபன் கனவு 26 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 16, செண்பகத் தீவு)

அத்தியாயம் 16, செண்பகத் தீவு


விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி செய்தன. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் மாந்தர்களின் குரலில் கிளம்பிய கோஷம் ஒன்று விக்கிரமனுக்கு மயிர்க்கூச்சல் உண்டாக்கிற்று. "வீரவேல்! வெற்றிவேல்!" என்னும் கோஷம்தான் அது.

அந்தத் தீவில் வாழும் மனிதர்கள் என்ன ஜாதி, யாரோ, எப்படிப்பட்டவர்களோ என்ன பாஷை பேசுபவர்களோ, ஒருவேளை நரமாமிச பட்சணிகளாய்க்கூட இருக்கலாமல்லவா? - என்று இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த விக்கிரமனுக்கு அங்கு எழுந்த "வீரவேல், வெற்றிவேல்!" என்னும் சோழ நாட்டின் வீரத் தமிழ் முழக்கமானது அளவிலாத வியப்பையும் மகிழ்ச்சியையும் ஊட்டிற்று.

"இது என்ன அதிசயத் தீவு? இங்கே சோழ நாட்டுத் தமிழரின் முழக்கம் கேட்கும் காரணம் என்ன? எதற்காக இவ்வளவு ஜனக்கூட்டம் இங்கே கூடியிருக்கிறது?" - இம்மாதிரி எண்ணங்கள் முன்னைக் காட்டிலும் அதி விரைவாக விக்கிரமனுடைய உள்ளத்தை அலைத்தன. அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. திடீரென்று உடம்பில் வெலவெலப்பு உண்டாயிற்று. மரக்கட்டை பிடியினின்று நழுவிற்று. தலை சுழலத் தொடங்கியது. கண் பார்வை குன்றியது. அதே சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான அலை வந்து விக்கிரமன்மீது பலமாக மோதியது. விக்கிரமனுக்கு அந்த நிமிஷத்தில் கடலிலுள்ள நீர் அவ்வளவும் புரண்டு வந்து தன்மீது மோதுவதாகத் தோன்றிற்று. ஒரு கணம் மூச்சுத் திணறிற்று. "நமது வாழ்நாள் முடிந்து விட்டது" என்று நினைத்தான் விக்கிரமன். பார்த்திப மகாராஜாவுக்கு அவன் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அன்னை அருள்மொழித் தேவியின் கருணை முகமும், சிவனடியாரின் கம்பீரத் தோற்றமும், கடைசியாக விரிந்து படர்ந்த கண்களுடன் கூடிய அந்தப் பெண்ணின் மதிவதனமும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மின்னலைக் காட்டிலும் விரைவாகவும் தோன்றி மறைந்தன. பிறகு அவனுடைய அறிவை ஒரு மகா அந்தகாரம் வந்து மூடிவிட்டது.

விக்கிரமனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தபோது தான் மணல் தரையில் கிடப்பதாக அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. கண்கள் மூடியபடி இருந்தன. கடல் அலைகளின் 'ஓ' என்ற ஓசை காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யாரோ திருநீறு இடுவது போல் தோன்றியது. மெதுவாகக் கண்ணை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஜனக் கூட்டம் நெருங்கி நிற்பது தெரிந்தது. ஒரு நொடிப் போதில் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவன் கரையை நெருங்கியபோது அந்த ஜனக் கூட்டத்திலிருந்து கிளம்பிய வாத்திய முழக்கங்களும் வாழ்த்தொலிகளும் இப்போது கேட்கவில்லை. இதற்கு மாறாக அசாதாரணமான நிசப்தம் குடி கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்ச தூரத்தில் எங்கேயோ மாஞ்சோலையில் குயில் ஒன்று 'குக்கூ' 'குக்கூ' என்று கூவிற்று. அந்தக் குயிலின் இனிய குரல் அங்கே குடிகொண்டிருந்த நிசப்தத்தை அதிகமாய் எடுத்துக் காட்டிற்று. கரையை நெருங்கியபோது தனக்கு நேர்ந்த விபத்தின் காரணமாகவே அங்கே கூடியிருந்த ஜனங்கள் அவ்வளவு கவலையுடன் நிசப்தமாயிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டான். ஒரு பெரும் பிரயத்தனம் செய்து உடம்பை உதறிக்கொண்டு ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். அவ்வளவுதான், அந்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு மகத்தான ஆனந்த கோஷம் கிளம்பிற்று. வாத்திய முழக்கங்களுடன்கூட, மனிதர்களின் கண்டங்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகள் போட்டியிட்டு ஆகாயத்தை அளாவின.

இவ்வளவு சத்தங்களுக்கும் மத்தியில் விக்கிரமனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற ஒரு பெரிய மனிதர், "விலகுங்கள்! விலகுங்கள்! கஜராஜனுக்கு வழிவிடுங்கள்!" என்று கூவினார். கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த மனிதரை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆமாம்; மாமல்லபுரத்தில் நடந்த கலைத் திருநாளின்போது நரசிம்ம சக்கரவர்த்தியின் சமூகத்தில் செண்பகத் தீவு வாசிகளின் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த தூதர் தான் இவர்!

"விலகுங்கள்" என்ற அவருடைய குரலைக் கேட்டுச் சுற்றிலும் நின்ற ஜனங்கள் விரைவாக விலகிக் கொண்டார்கள். சற்றுத் தூரத்தில் பட்டத்து யானையைப்போல் அலங்கரித்த ஒரு யானை நின்றது. அதை யானைப்பாகன் நடத்திக் கொண்டு விக்கிரமன் நின்ற இடத்தை நோக்கி வந்தான். பட்டணப் பிரவேசத்துக்காக அலங்கரிக்கப்பட்டது போலக் காணப்பட்ட அந்த கஜராஜனுடைய தூக்கிய துதிக்கையில் ஓர் அழகான புஷ்பஹாரம் இருந்தது. விக்கிரமன் மந்திர சக்தியினால் கட்டுண்டவனைப் போல் யானையைப் பார்த்த படி கையைக் கட்டிக் கொண்டு அசையாமல் நின்றான். யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது. யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்த மாலையை அவனுடைய கழுத்தில் சூட்டிற்று.

அப்போது அந்த ஜனக்கூட்டத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் முழக்கத்தையும் வர்ணித்தல் அசாத்தியமான காரியம். "வீரவேல்!" "வெற்றிவேல்!" என்னும் கோஷங்களுடன், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" "செண்பக நாட்டு மன்னர்பிரான் வாழ்க!" என்னும் கோஷங்களையும் கேட்டு, விக்கிரமனுடைய உள்ளம் பெருங்கிளர்ச்சியடைந்தது. மகா ஆச்சரியம் விளைவித்த இந்தச் சம்பவங்களைப் பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவனுக்குத் துடிப்பாயிருந்தது. ஆனால் அருகில் நின்றவர்களிடம் பேசுவதற்குக் கூட அச்சமயம் அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.

ஏக ஆரவாரங்களுக்கிடையில், விக்கிரமனை அந்த யானையின்மீது அமைந்திருந்த அம்பாரியில் ஏற்றினார்கள். யானை கடற்கரையிலிருந்து உள்நாட்டை நோக்கிக் கம்பீரமாக நடந்து செல்ல, ஜனக்கூட்டமும் ஆரவாரத்துடன் அதைப் பின் தொடர்ந்து சென்றது. அம்பாரியின் மீது வீற்றிருந்த விக்கிரமனோ, "இல்லை; இதெல்லாம் நிச்சயமாக உண்மை இல்லை; கனவுதான் காண்கிறோம்; அல்லது இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதாவது இருக்க வேண்டும்" என்று அடிக்கடி எண்ணிக் கொண்டான்.

சுற்று முற்றும் அவன் கண்ணில் பட்ட தென்னந் தோப்புகள், மாஞ்சோலைகள், கழனிகள், கால்வாய்கள் எல்லாம் அவனுக்குச் சோழ நாட்டுக் காட்சிகளாகவே புலப்பட்டன. சிறிது நேரம் போன பிறகு ஒரு கிராமம் தென்பட்டதும் அதுவும் தமிழ்நாட்டுக் கிராமமாகவே தோன்றியது. ஊருக்குப் புறத்திலிருந்த கிராம தேவதையின் கோவிலும் அப்படியே தமிழர் கோவிலாகக் காட்சி தந்தது.

இன்னும் சிறிது தூரம் போனதும் ஒரு பட்டணம் காணப்பட்டது. அதன் வீடுகள், வீதிகள், சதுக்கங்கள் எல்லாம் உறையூரின் மாதிரிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவ்வளவு பெரிய பட்டணமில்லை. அவ்வளவு ஜன நெருக்கமும் கிடையாது. அத்தனை மாட மாளிகைகள், கூட கோபுரங்களும் இல்லை. அப்பட்டணத்தின் வீதிகளில் அவரவர் வீட்டு வாசல்களில் நின்ற ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள் எல்லாரும் சிறந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து மலர்ந்த முகத்துடன் நின்றார்கள். அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு மக்களாகவே காணப்பட்டார்கள். அளவிலாத ஆர்வம் பொங்கிய கண்களுடன் அவர்கள் விக்கிரமனைப் பார்த்துப் பலவித வாழ்த்துகளினால் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

விக்கிரமனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் உதித்தது. ஒருவேளை இதெல்லாம் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் கபட நாடகமாயிருக்குமோ? தன்னைப் பற்றி வந்த கப்பல் பல நாள் பிரயாணம் செய்வதாகப் பாசாங்கு செய்து விட்டுக் கடைசியில் சோழநாட்டின் கடற்கரையிலேயே தன்னை இறக்கிவிட்டிருக்குமோ? இந்த ஆரவார ஊர்வலமெல்லாம் தன்னை ஏமாற்றிப் பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு ஒரு சூழ்ச்சியோ! இவ்விதமாக எண்ணியபோது விக்கிரமனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

இதற்குள் யானையானது அந்தப் பட்டணத்துக்குள்ளேயே பெரிய மாளிகையாகத் தோன்றிய ஒரு கட்டடத்துக்கு வெளியே வந்து நின்றது. விக்கிரமனை யானை மீதிருந்து கீழே இறக்கினார்கள். ஜனக் கூட்டமெல்லாம் வெளியில் நிற்க, முன்னமே நமது கவனத்துக்குள்ளான பெரியவர் மட்டும் விக்கிரமனை அழைத்துக் கொண்டு மாளிகைக்குள் சென்றார்.

"மகாராஜா! இதுதான் இந்தச் செண்பக நாட்டின் மன்னர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த அரண்மனை, தாங்களும் இந்த அரண்மனையில் வசிக்க வேண்டுமென்று இந்நாட்டுப் பிரஜைகளின் விண்ணப்பம்" என்றார் அப்பெரியவர்.

"இந்நாட்டின் பெயர் என்னவென்று நீங்கள் சொன்னீர்?"

"செண்பக நாடு மகாராஜா!"

"இந்தப் பட்டணத்தின் பெயர் என்னவோ?"

"செண்பக நாட்டின் தலைநகரம் இது. இதன் பெயர் குமாரபுரி."

"குமாரபுரிதானே? மாயாபுரி அல்லவே?"

"இல்லை, அரசே! குமாரபுரிதான்."

"நீர் யார் என்று கொஞ்சம் சொன்னால் நன்றாயிருக்கும்."

"அடியேன் பெயர் சித்தார்த்தன். காலஞ்சென்ற விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு நான் முதல் மந்திரி தங்களுக்கு விருப்பம் இருந்தால்..."

"என்ன சொன்னீர், மந்திரி என்றீரா? மந்திரவாதி என்றீரா?"

"மந்திரிதான், மகாராஜா!"

"ஒருவேளை மந்திரவாதியோ என்று நினைத்தேன். ஆமாம் நீர் மந்திரவாதியில்லாவிட்டால் நான் யார் என்பதும், என்னை இன்று காலை இந்தத் தீவுக்கருகில் கொண்டு வந்து இறக்கி விடுவார்களென்பதும் எப்படித் தெரிந்தது?"

"அது பெரிய கதை, மகாராஜா! சாவகாசமாக எல்லாம் சொல்கிறேன், இப்போதைக்கு..."

"இப்போதைக்கு இது உண்மையாகவே அரண்மனை தானா, அல்லது சிறைச்சாலையா என்று மட்டும் சொன்னால் போதும்."

"என்ன வார்த்தை சொன்னீர்கள்? சிறைச்சாலையா? இந்த நாட்டில் சிறைச்சாலை என்பதே கிடையாது! சிறைச்சாலை, இராஜத்துரோகம், மரணத் தண்டனை என்பதெல்லாம் பரத கண்டத்திலே தான், மகாராஜா!"

"அப்படியா? பரத கண்டத்துக்கும் இந்த நாட்டுக்கும் அவ்வளவு தூரமோ?"

"சாதாரணமாய்ப் பன்னிரண்டு நாள் கடல் பிரயாணம் புயல், மழை முதலியவை குறுக்கிட்டால் இன்னும் அதிக நாளாகும்."

"உண்மைதானே சொல்கிறீர்?"

"அடியேன் உண்மையைத் தவிர வேறு பேசுவதில்லை."

"அப்படியானால் தமிழகத்திலிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்திலுள்ள நீங்கள், தமிழ் மொழி பேசுகிறீர்களே, எப்படி?"

"மகாராஜா! இந்தச் செண்பகத் தீவிலே மட்டுமல்ல இன்னும் கிழக்கே தூரத்திலுள்ள தீவுகளிலும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள், தமிழ்மொழி பேசுகிறார்கள். தங்களுடைய மூதாதை கரிகாலச் சோழரின் காலத்தில் சோழ நாட்டுத் தமிழர்கள் வளம் மிக்க இந்தத் தீவுகளில் வந்து குடியேறினார்கள். கரிகாலச் சோழரின் குமாரர் தான் இந்தப் பட்டணத்தை ஸ்தாபித்தார். அதனாலேயே குமாரபுரி என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது. அந்த நாளில் சோழ சேனாதிபதி ஒருவர் சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் பேரில் இந்நாட்டை ஆட்சி புரியலானார். அவருடைய சந்ததியார் பத்து வருஷத்துக்கு முன்பு வரையில் இந்நாட்டின் அரசர்களாயிருந்து செங்கோல் செலுத்தி வந்தார்கள். அந்த வம்சத்தின் கடைசி அரசரான விஷ்ணுவர்த்தனர் சந்ததியில்லாமல் காலமானார். பிறகு இந்த நாடு இன்று வரையில் அரசர் இல்லாத நாடாயிருந்து வந்தது. அடிக்கடி பக்கத்துத் தீவுகளில் உள்ளவர்கள் வந்து இந்நாட்டின் பட்டணங்களையும் கிராமங்களையும் சூறையாட ஆரம்பித்தார்கள்.... வெவ்வேறு பாஷை பேசுவோரும், அநாகரிகங்களும், தட்டை மூஞ்சிக்காரருமான பற்பல சாதியார் இந்தத் தீவை சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு அரசர் இல்லாக் குடிகளாகிய எங்களால் முடியவில்லை. இப்படிப்பட்ட சமயத்தில் முருகக் கடவுளே அனுப்பி வைத்தது போல், சோழர் குலக்கொழுந்தான தாங்கள் எங்களைத் தேடி வந்திருக்கிறீர்கள் எங்களுடைய பாக்கியந்தான்."

கரிகாலச் சோழனைப் பற்றி அந்தப் பெரியவர் பிரஸ்தாபித்தவுடனே விக்கிரமன் மிகவும் சிரத்தையுடன் கேட்கத் தொடங்கினான். அவனுக்கிருந்த சந்தேகம், அவநம்பிக்கை எல்லாம் போய்விட்டது. சித்தார்த்தரின் குரல், முகத்தோற்றம் ஆகியவற்றிலிருந்து, அவர் சொல்லுவதெல்லாம் சத்தியம் என்னும் நம்பிக்கையும் விக்கிரமனுக்கு உண்டாயிற்று. `நமது தந்தை பார்த்திப மகாராஜா எந்தக் கரிகால் வளவனைப் பற்றி அடிக்கடி பெருமையுடன் பேசி வந்தாரோ அந்த சோழர் குல முதல்வன் காலத்திலே தமிழர்கள் வந்து குடியேறிய நாடு இது. என்ன ஆச்சரியமான விதிவசத்தினாலோ அப்படிப்பட்ட நாட்டுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்' என்பதை நினைத்தபோது விக்கிரமனுக்கு மயிர்க்கூச்செறிந்தது, கண்ணில் நீர் துளித்தது.

"ஐயா! உம்மை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எல்லா விஷயங்களையும் விவரமாக அப்புறம் கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன். என்னை நீங்கள் உங்களுடைய அரசனாய்க் கொள்வதாயிருந்தால், இன்னொரு ராஜாவுக்கோ சக்கரவர்த்திக்கோ கப்பம் செலுத்த முடியாது. சுதந்திர நாட்டுக்குத்தான் நான் அரசனாயிருப்பேன். இல்லாவிட்டால் உயிரை விடுவேன். நீங்களும் இந்நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும். எதிரிகள் துஷ்டர்களாயிருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும், யாராயிருந்தாலும் பணிந்து போகிறது என்ற பேச்சே உதவாது. இதற்குச் சம்மதமாயிருந்தால் சொல்லுங்கள்" என்றான் விக்கிரமன்.

"மகாராஜா, தங்களுடைய தந்தை பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் அடைந்த வீர மரணத்தின் புகழ் எங்கள் காதுக்கும் எட்டியிருக்கிறது. எங்களுடைய உடம்பில் ஓடுவதும் சோழ நாட்டின் வீர இரத்தந்தான். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்கள். வீரத்தலைவன் ஒருவன் தான் எங்களுக்கு வேண்டியிருந்தது. தாங்கள் வந்துவிட்டீர்கள் இனி என்ன குறை?"

அச்சமயம் கோயில் சேமக்கலத்தின் ஓசை கேட்டது.

சித்தார்த்தர், "மகாராஜா! தாங்கள் ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு சிறிது இளைப்பாறுங்கள். சாயங்காலம் முருகவேள் ஆலயத்துக்குப் போய்த் தரிசனம் செய்ய வேண்டும். கூடிய சீக்கிரத்தில் முடிசூட்டு விழா நடத்துவது பற்றியும் யோசனை செய்யவேண்டும்" என்றார்.
தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr