Tuesday, December 6, 2016

பார்த்திபன் கனவு 65 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 28 - குந்தவியின் நிபந்தனை )

 குந்தவியின் நிபந்தனை


பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள்.

"சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?" என்றாள் குந்தவி.

விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்."

"வள்ளுவர் பெருமான், 'முயற்சி திருவினையாக்கும்' என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?" என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ...." என்று மேலே பேசத் திணறினான்.

"ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்."

"உண்மையாகவா?"

"ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்."

விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் - மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் - சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?" என்றான்.

"உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?"

"ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது...."

"ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?" என்றாள் குந்தவி.

விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, "நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்...." என்றான்.

"ஆ! இது உண்மையா?" என்றாள் குந்தவி.

"ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்...."

"இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?" என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள்.

"அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்..."

"என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?"

"நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்."

"போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்" என்றாள் குந்தவி.

படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான்.

"இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்."

"எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ...."

"ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!"

விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்" என்றான்.

"அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?" என்று குந்தவி கேட்டாள்.

"முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்."

"கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது."

"நிபந்தனையா?"

"ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்."

விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், "தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!" என்றான்.

குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், "உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்" என்றாள்.

"இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?"

"என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்..."

அப்போது, "மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன.

விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்" என்றான்.

"காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி..."

குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் "என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!" என்றாள்.

பொன்னன், "தேவி" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் "ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!" என்றாள்.

"தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை" என்றான் பொன்னன்.

விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள்.

படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.
தொடரும் 

Thursday, October 20, 2016

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்!!! பாகம் 18 ( கருந்துளைகள் 13-14 )

ஒளி வளைந்து செல்லுமா?

கருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றைப் பார்போம்.
ஒளி எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்று நாம் படித்திருப்போம். அது உண்மைதான். ஆனால் நேர்கோடு என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் சுருக்கமாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய தூரம் என்று எடுத்துக் கொள்ளலாம். அனால் ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரத்தை இணைக்கும் பாதை நேர்கோட்டுப் பாதையாக இருக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. குழப்பமாக இருக்கலாம், விளக்குகிறேன்.
சிறிய பரிசோதனையை செய்து நாம் இந்த குழப்பத்திற்கான முடிவை அடையலாம். ஒரு A4 வெள்ளைக் கடதாசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குறுக்காக ஒரு நேர்கோட்டை வரைந்துகொள்ளுங்கள். இப்போது கடதாசியை மேசையில் வைத்துவிடுங்கள். இப்போது கடதாசியில் ஒரு நேர்கோடு ஒன்று இருக்கும் அப்படித்தானே?
சரி, இப்போது இந்த கடதாசியை எடுத்து அந்தக் கோட்டின் இரு முனைகளும் சந்திக்குமாறு சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது அந்தக் கடதாசி வளைந்துள்ளது. அந்தக் கடதாசியில் வரைந்துள்ள கோடு நேர்கோடாக இருந்தாலும், கடதாசியே வளைந்திருப்பதால், அந்தக் கோடும் வளைந்திருக்கிறது. இங்கு நாம் இரு பரிமாணத்தில் (கடதாசியின் மேற்பரப்பு – இருபரிமாணப் பரப்பு) கோடு வரைந்துள்ளோம். அந்தக் கோடுதான் ஒளி செல்லும் பாதை என்று கொண்டால், கடதாசிதான் வெளி (space). இயற்கையில் இது முப்பரிமாண வெளியில் நடைபெறுகிறது.
நாம் ஏற்கனவே ஈர்ப்புவிசை வெளிநேரத்தை வளைக்கும் என்று பார்த்துள்ளோம். ஆனால் நாம் முன்பு, வெளிநேரத்தில் (space-time), இந்த ஈர்ப்புவிசை எப்படி நேரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றே பார்த்துள்ளோம். இப்போது இது எப்படி வெளியில் செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்க்கப் போகிறோம். இயற்பியலில், வெளிநேரம் என்று சேர்த்து அழைப்பதற்கு காரணமே இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்பதே ஆகும்.
எப்படி ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் நேரம் துடிக்கும் வேகம் குறைகிறதோ, அதேபோல ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் வெளியும் மிக அதிகமாக வளைகிறது. ஆம்! வெளியை ஈர்ப்பினால் வளைக்க முடியும்.
இந்தத் தொடரின் முடிவில், கருந்துளையைப் பற்றி நீங்கள் வியந்ததை விட ஈர்ப்பு விசை எப்படி இந்த பிரபஞ்சத்தை ஆளுகிறது என்றே வியப்படைவீர்கள். இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான ஹீரோ, ஈர்ப்பு விசை தான். கருந்துளை என்பது, ஈர்ப்பு விசையின் பல்வேறு முகமூடிகளில் ஒன்று மட்டுமே! சரி மீண்டும் விடயத்துக்குள் சென்றுவிடுவோம்.
ஈர்ப்பு விசை கொண்ட அனைத்துப் பொருட்களுமே அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. குறிப்பிட்ட பொருட்களின் திணிவிற்கு ஏற்ப இந்த வளைவின் அளவு மாறுபடுகிறது. குறிப்பாக கருந்துளைகளின் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதால், கருந்துளையை சுற்றி வெளியானது மிக அதிகமாகவே வளைகிறது.
சூப்பர் ஜீனியஸ் ஐன்ஸ்டீன் தான் இந்த விளைவைப் பற்றிக் கூறியவர். அவரது பொதுச் சார்புக் கோட்பாடு, இந்த ஈர்ப்பு விசை என்பதே, திணிவானது (mass) அதனைச் சுற்றியுள்ள வெளிநேரத்தை வளைப்பதால் உருவாகும் ஒரு தோற்றம் என்கிறது.
நமது சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அது மிகத் திணிவான ஒரு பொருள். ஆகவே அது தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து வைத்துள்ளது. கோள்கள் எல்லாம் உண்மையில் நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன. ஆனால் அந்தக் கோடே, அதாவது அந்த நேர்கோட்டுப் பாதையே சூரியனது ஈர்ப்பினால் வளைக்கப் பட்டுள்ளதால் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதாவது அந்த A4 கடதாசியை நீங்கள் முதலில் வளைத்தது போல.
திணிவானது எப்படி அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைகிறது என்று மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
இன்னுமொரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஒரு சைக்கில் டயரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெறும் டயரில் ஒரு சிறிய கல்லைப் போட்டு, இப்போது இந்த டயரை வேகமாக சுழற்றினால், அந்தக் கல்லானது அந்த டயரினுள்ளே சுழன்றுகொண்டு இருக்கும். அந்தக் கல்லைப் பொறுத்தவரை அது நேர்கோட்டில் தான் செல்லுகிறது, ஆனால் இந்த டயர் வளைந்து இருப்பதனால், அது வட்டப் பாதையில் செல்வதுபோல நமக்கு தோன்றும். அவ்வளவும்தான்!
இங்கு நாம் கவனிக்கவேண்டியது, ஒளியும் இந்த வெளியில் பயணிக்கும் ஒரு வஸ்துவே! ஆகவே, வெளிநேரமானது வளைந்திருக்கும் பட்சத்தில், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்துதான் பயணிக்கும். ஒளியை ஈர்ப்புவிசை வளைக்கிறது என்று கருதுவதை விட பின்வருமாறு இலகுவில் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துக் கொள்ளலாம்.
Gravitational-lensing-galaxyApril12_2010-1024x768
திணிவு அதிகமான பொருட்கள், தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, வெளியே வளைந்திருப்பதனால், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்து செல்கிறது.
இப்படி ஒளி வளைவதை ஈர்ப்பு வில்லை (gravitational lensing) என்று அழைகின்றனர். அதாவது ஒரு ஒளிமுதலில் (light source) இருந்து வரும் ஒளியை எப்படி ஒரு வில்லை வளைக்குமோ, அதேபோல நட்சத்திரங்களில் இருந்து எம்மை நோக்கி ஒளி வரும்போது, குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் எமக்கும் இடையில் ஈர்ப்புவிசை அதிகமான ஒரு பொருள், அதாவது விண்மீன் பேரடை அல்லது கருந்துளை வரும் போது, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருந்துவரும் ஒளியானது எப்படி ஒரு வில்லையினூடாக செல்லும்போது வளையுமோ அதேபோல இந்த ஈர்ப்பு விசை அதிகமான பொருளும் இந்த நட்சத்திர ஒளியை வளைக்கும்.
220px-Black_hole_lensing_web
நமக்கும், ஒரு விண்மீன் பேரடைக்கும் இடையில் கருந்துளை ஒன்று வரும்போது, அது எப்படி ஒளியை வளைகிறது என்று இங்கே பார்க்கலாம்
இப்படி ஈர்ப்புவில்லை மூலமாக வளைக்கப்பட்ட ஒளியானது பூமியை வந்தடையும் போது, அதை தொலைக்காட்டி மூலம் பார்க்கும் ஒருவருக்கு, சற்று விசித்திரமான வகையில் அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் தெரியும்.
சிலவேளைகளில் ஒரே நட்சத்திரம் அல்லது வேறு ஒளிமுதல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தெரியும். சிலவேளைகளில், ஈர்ப்பு வில்லையாக செயற்பட்ட வின்மீன்பேரடையை சுற்றி ஒரு வளையம் போலவும் தெரியலாம். இது குறிப்பிட்ட ஒளிமுதல், ஈர்ப்பு வில்லை மற்றும் அவதானிப்பவரின் அமைவிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
கருந்துளைகள் மிக மிக அதிகளவான ஈர்ப்புவிசைக் கொண்டுள்ளதால், கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த ஈர்ப்பு வில்லைச் செயற்பாடு மிக அதிகமாக ஒளியை வளைக்கிறது. இப்படி வளைவது மட்டுமின்றி, கருந்துளைக்கு மிக அருகில் வரும் ஒளியானது, ஒரு கோள், எப்படி நட்சத்திரத்தை சுற்றிவருமோ அதேபோல கருந்துளையையும் சுற்றுகிறது – காரணம், அந்தளவுக்கு கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள வேளிநேரத்தை வளைத்துள்ளது.
mod3_q11_4
ஐன்ஸ்டீன் சிலுவை எனப்படும் இந்த நான்கு நீல நிற புள்ளிகள், உண்மையிலேயே ஒரே ஒரு குவேசார் ஆகும். இந்த குவேசாருக்கு முன்னுள்ள விண்மீன் பேரடையால் இது நான்கு வெவேறு நட்சத்திரங்கள் போல தெரிகிறது.
நமது சூரியனும் இப்படி ஒளியை சற்று வளைப்பதை நாம் அவதானித்துள்ளோம். பூமியில் இருந்து சில பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் சில விண்மீன் பேரடைகள் சற்று அதிகமாகவே ஒளியை வளைப்பதைக் கூட நாம் அவதானித்துள்ளோம். ஆனால் இர்துவரை கருந்துளைக்கு அருகில் இப்படியான ஈர்ப்பு வில்லை செயற்பாட்டின் மூலம் ஒளியானது வளைவதை நாம் நேரடியாக அவதானிக்கவோ இல்லை அதை புகைப்படம் எடுக்கவோ இல்லை. அதற்கு காரணம் நாம் இதுவரை அவதானித்த கருந்துளைகள் மிக மிக தொலைவில் இருப்பது, நமது தற்போதைய தொலைக்காடிகள் அவ்வளவு தொலைவில் இருக்கும் கருந்துளைகளை அவ்வளவு தெளிவாக காட்டக் கூடியளவு சக்திவாய்ந்தவை அல்ல என்பதே.
கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது
கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது
இனிவரும் காலங்களில் நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து, அதன்பலனாக இப்படியான கருந்துளையைச் சுற்றி நடக்கும் ஈர்ப்பு வில்லை செயற்பாட்டை அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர்.
**********************************************
சுற்றியிருக்கும் அரக்கன்
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே வெளிநேரத்தில் தான் அமைந்துள்ளது. வெளிநேரம் என்ற ஒன்றே இந்த பிரபஞ்சம் என நாம் கருதலாம். அதாவது வெள்ளை கான்வஸில் ஓவியம் வரைவதுபோல; இந்த கன்வாஸ் தான் வெளிநேரம், அதில் உள்ள ஓவியம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களும். நான், நீங்கள், உங்கள் வீட்டு டோமி நாய்க் குட்டி, உலகம், சூரியன், நட்சத்திரங்கள், விண்மீன் பேரடைகள், கருந்துளைகள் என எல்லாமே இந்த ஓவியத்தில் இருப்பவையே! சரி குழப்பாமல் விசயத்திற்கு வருகிறேன்.
இந்த கருந்துளைகளைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே நாம் பார்த்த வரை, வெளிநேரம் என்ற ஒன்றை அது அளவுக்கதிகமாக இழுத்து வளைக்கிறது. நிகழ்வெல்லை (even horizon) என்ற ஒன்றைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த நிகழ்வெல்லையை நாம் கருந்துளையின் எல்லை என்றும் அழைக்கலாம். அதாவது இந்த நிகழ்வெல்லையிலே தான் கருந்துளையின் உட்பகுதி ஆரம்பமாகிறது. அதாவது இந்த நிகழ்வெல்லையில் ஈர்ப்பு விசை அதிகரித்து, அந்தப் பகுதியின் விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்தை அடைகிறது, ஆக இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து எதுவும் வெளிவர முடியாது. (பொதுச் சார்புக் கோட்பாட்டுப் படி எதுவும் ஒளியைவிட வேகமாக பயணிக்க முடியாதே!).
இந்த நிகழ்வெல்லையை நோக்கி நாம் செல்லும் போது, நம்மை அவதானித்துக் கொண்டு இருப்பவருக்கு, நாம் எதோ ஸ்லொவ் மோசன் படத்தில் வருவது போல தெரியும், நாம் கருந்துளையை நெருங்க நெருங்க, நமது இயக்க வேகம் குறைவது போல தெரியும், அதேவேளை நாம் பார்க்க சிவப்பாகிக் கொண்டே வருவோம். அதற்கும் காரணம் உண்டு.
கருந்துளையை நெருங்க நெருங்க, அது வெளிநேரத்தை இழுக்கும் அளவும் அதிகரிக்கும். அபோது இதில் பயணிக்கும் ஒளியும் விரிவடையும். ஒரு ஸ்ப்ரிங்கை இருகைகளிலும் பிடித்து இழுப்பதைப் போல சிந்தித்துப் பாருங்கள். ஒளியும் ஒரு மின்காந்த அலைதான். அதுவும், நாம் பார்க்கும் நிறங்கள், அதாவது வானவில்லில் தெரியுமே எழு நிறங்கள், அவை இந்த அலைவடிவத்தில் தான் இருக்கிறது. அலைகளுக்கு அலைநீளம் என்று ஒன்று உண்டு. இதையும் இலகுவில் விளங்க வேண்டும் என்றால், கடலில் பார்க்கும் அலைகளை நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சந்தர்பத்தில் 2 செக்கன் இடைவெளியில் இரண்டு அலைகள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். பிறகு சிறிது நேரத்தில் இரண்டு அலைகள் 10 செக்கன் இடைவெளியில் வருகின்றன. இப்போது இவற்றை வைத்துப் பார்த்தால், முன் வந்த அலைகள் அலை நீளம் குறைந்தவை, அதான் வேகமாக வந்துவிட்டதே, பின் வந்த இரு அலைகளும் அலைநீளம் கூடியவை. மிகச் சுத்தமான உதாரணம் இல்லாவிடினும் உங்களுக்கு விளங்குவதற்காக கூறினேன்.
இதே போலதான் ஒவ்வொரு நிறத்திற்கும் அலைநீளம் உண்டு. அதில் மிகவும் அலைநீளம் கூடியது சிவப்பு (அலைநீளம் 620-750 நானோமீட்டர்). மிக மிக அலைநீளம் குறைந்தது ஊதா (அலைநீளம் 380-450 நானோமீட்டர்). இங்கு ஊதா ஒளியின் அலைநீளத்தை படிப்படியாக அதிகரிக்க, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு கடைசியாக சிவப்பு என்று இந்த எழு நிறங்களும் வரும்.
மின்காந்த அலைகளின் முழு அலைக்கற்றைத் தொகுதி. “VISIBLE” என்ற பகுதியில், வலப்பக்கத்தில் ஊதா நிறமும், இடப்பக்கத்தில் சிவப்பு நிறமும் இருப்பதை அவதானிக்க. அலைக்கற்றைக்கு கீழுள்ள பகுதியில், குறிப்பிட்ட மின்காந்த அலையில், அலைநீளத்தோடு ஒப்பிடக் கூடிய பொருட்களை குறித்திருக்கிறார்கள். (படத்தை கிளிக் செய்தது பெரிதாக்கி பாருங்கள்)
சரி, சிவப்பின் அலைநீளத்தை இன்னும் இழுத்து பெரிதாக்கினால் என்ன ஆகும்? அது இப்போது அகச்சிவப்பு (infrared) அலையாக மாறிவிடும். அதேபோல ஊதா ஒளியின் அலைநீளத்தை குறைத்தால் அது புறஊதாக் கதிர்களாக (ultraviolet) மாறிவிடும். இவை எல்லாமே மின்காந்த அலைவீச்சில் இருக்கும் கதிர்களே. அனால் எம்மால், சிவப்பில் இருந்து ஊதா வரையுள்ள அலைவீச்சை மட்டுமே கண்களால் பார்க்க முடியும். இது புலனாகும் நிறமாலை (visible spectrum) / புலனாகும் அலைவீச்சு என்று அழைக்கப்படும்.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன்? கரணம் உண்டு. இங்கு நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் இந்த நிகழ்வெல்லையனது அதனைச் சுற்றியுள்ள வெளியை மிகக்கடுமையாக இழுப்பதனால், வெளி விரிவடைகிறது, அதில் பயணிக்கும் ஒளியும் விரிவடைகிறது, அதாவது அதன் அலைநீளம் அதிகரிக்கிறது (அந்த ஸ்ப்ரிங் உதாரணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்). இப்படி விரிவடைந்து, விரிவடைந்து ஒரு கட்டத்தில் எல்லா நிறங்களும் சிவப்பு நிறத்தின் அலைநீளத்திற்கு வந்துவிடும். அதானால் தான் தொலைவில் இருந்து பார்ப்பவருக்கு நிகழ்வெல்லைக்குள் விழுந்துகொண்டிருக்கும் எதுவாயினும், சிவப்பாக தெரியும். ஆனாலும் இந்த சிவப்பு நிரந்தரம் இல்லை. நிகழ்வெல்லையை நெருங்க நெருங்க ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், சிவப்பின் அலை நீளமும் அதிகரிக்கும், ஒரு கட்டத்தில் அது புலனாகும் சிவப்பில் இருந்து விடுபட்டு, அகச்சிவப்பு கதிர்களாக மாறிவிடும் (அதைத் தொடர்ந்து படிப் படியாக அலைநீளம் அதிகரித்து மைக்ரோவேவ், ரேடியோவேவ் என்று செல்லும்), அதனை நம்மால் பார்க்க முடியாது. ஆக கருந்துளையின் நிகழ்வெல்லையை நோக்கி விழுபவர் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறி, பின் மங்கலாக சென்று ஒரு கட்டத்தில் நிகழ்வெல்லையை கடக்கும் போது மறைந்துவிடுவார். ஆனால் இதெல்லாம் தூரத்தில் இருந்து பார்ப்பவருக்குதான்.
கருந்துளையின் நிகழ்வெல்லையை நோக்கி செல்லுபவருக்கு இப்படி நிறங்கள் மாறுவது தெரியாது, ஏன் என்றால் அவரும் சேர்ந்துதான் வெளியோடு (space) சேர்ந்து இழுபடுகிறாரே!
இப்படி வெளியோடு சேர்ந்து இழுபடுவதில் இன்னுமொரு நிகழ்ச்சியை தூரத்தில் இருந்து அவதானிப்பவர் பார்க்கக்கூடும். அதாவது நீங்கள் (கருந்துளையை நோக்கி செல்பவர்) கருந்துளையை நோக்கி தரையிறங்குவது போல செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கால்கள் கருந்துளையை நோக்கியும், தலை கருந்துளைக்கு எதிர் திசையிலும் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் தலையை இழுப்பதை விட கால்களை கருந்துளையின் ஈர்ப்பு வேகமாக இழுக்கும், இப்படி தலைக்கும் காலுக்கும் வேறுபட்ட ஈர்ப்பு விசையானது, உங்களை அப்படியே நீட்டிவிடும், அதாவது சப்பாத்தி மாவை தயார் செய்து விட்டு, அந்த உருண்டைகளை இழுத்துப் பார்த்து இருகிறீர்களா, அப்படியே இழுபட்டுக் கொண்டே வருமே, அதேபோல நீங்களும் இழுபட்டுக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் வரை இப்படி இழுபட்டு சிதைந்துவிடும்.
blackhole_pastabarbecue_2_0
வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு, நாம் கருந்துளையின் நிகழ்வெல்லையை கடப்பதை பார்க்கவே முடியாது. எப்படி நிகழ்வேல்லை வெளியை இழுக்கிறதோ, அதேபோலே அது நேரத்தையும் அல்லவா இழுக்கிறது. இதப் பற்றி நாம் ஏற்கனவே தெளிவாக பார்த்துவிட்டோம், இருந்தும் இங்கு மீண்டும் சொல்வதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை புரியவைப்பதற்காகவே.
வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, நிகழ்வெல்லையை கடக்க முடிவிலி அளவு நேரம் ஆகும் போல தோன்றும். ஏன் என்றால் கருந்துளையின் நிகழ்வெல்லை வெளிநேரத்தை (space-time) மிக மிக அதிகமாக, கிட்டத்தட்ட முடிவிலி அளவிற்கு இழுத்து வளைத்துள்ளது. ஆனால் நிகழ்வெல்லையை கடப்பவருக்கு இந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை, அவர் சாதாரணமாக நிகழ்வெல்லையை கடந்துசென்றுவிடுவார்.
ஆனால் உள்ளே கடந்து சென்றுவிட்டால் தான் திரும்ப முடியாதே.
கருந்துளைக்குள் என்ன இருக்கும்? அதாவது நிகழ்வெல்லையின் உட்பகுதியில் என்ன இருக்கும் என்று பார்க்கலாம். அதற்கு முதல் ஒரு சிறிய எச்சரிக்கை. இனி நாம் பார்க்கபோகும் விடயங்கள், கணிதவியல் / இயற்பியல் துறையின் ஒரு எல்லையில் இருக்கும் கருத்துக்கள். இவை இன்னமும் பூரணமாக ஆராயப்படாத ஒன்று. நமக்குத் தெரிந்த இயற்பியல் / கணிதவியல் விதிகளைப் பயன்படுத்தி இப்படித்தான் இருக்கலாம் என்று கருதுகிறோம். எதிர்காலத்தில் இவற்றை வாய்ப்புப் பார்க்க சந்தர்பங்கள் அமையலாம்.
சரி செல்வோம் உள்ளிருக்கும் அரக்கனை நோக்கி.
நன்றி :https://parimaanam.wordpress.com/2015/03/03/bh-14-monster-outside/

Friday, September 16, 2016

பார்த்திபன் கனவு 64 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 27 - புதையல்)

புதையல்


கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான்.

விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, "மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்" என்றான்.

அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? - நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.... இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது... செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. "இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?" என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது!

"நாடு என்ன செய்யும்? - மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?" என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்?

"மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி - சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது.

விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்:

"பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. "இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!" என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் - அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது. பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? 'முயற்சி திருவினையாக்கும்!' ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!"

இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது.

பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள்.

நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது.

"இதென்ன, பொன்னா! படகு! எங்கே?" என்றான் விக்கிரமன்.

"ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோ மோ?" என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

"பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?" என்றான் விக்கிரமன்.

"கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான்.
தொடரும் 

Thursday, August 25, 2016

பார்த்திபன் கனவு 63 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 26 - படகு நகர்ந்தது!)

படகு நகர்ந்தது!


படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

விக்கிரமன், "பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு" என்றான்.

பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.

"பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.

"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?"

"வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!"

"அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?"

"ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!"

"மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது..."

"அப்புறம் என்னதான் செய்தாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.

பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான்.

பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது.

"பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது" என்றான் விக்கிரமன். "என்ன மகாராஜா, சந்தேகம்?" "அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று."

"ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!"

"ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?"

"ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்...."

"ஆனால் என்ன, பொன்னா?"

"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்."

"இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான்.

"அது என்ன அபாயம், மகாராஜா?" என்று கேட்டான்.

"ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:-

"உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்."

"மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்."

"பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்."

"ஐயோ, அது என்ன?"

"மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...!"

பொன்னன் குறுக்கிட்டு, "மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்" என்றான்.

"சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?"

"விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?"

"பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்."

"அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?"

"கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளா யிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?"

பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. "விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. "ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான்.

"ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?" என்றான் விக்கிரமன்.

"கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்...."

"பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான்.

"சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!"

"தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?"

"முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான்.

இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.

அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.
தொடரும் 

Thursday, July 28, 2016

பார்த்திபன் கனவு 62 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 25 - வள்ளி சொன்ன சேதி)

வள்ளி சொன்ன சேதி


வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.

"வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.

"நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."

"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன்.

"ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள்.

"சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...."

"என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள்.

"ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..."

"இப்போது எங்கேயிருக்கிறார்...?"

"அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்."

"சரி, அப்புறம் சொல்லு."

"ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்."

"ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!"

"நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி.

"யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"

வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள்.

"நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன்.

வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான்.

வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. 'வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."

இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான்.

"இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள்.

"குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்."

"ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?"

"நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்."

பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.

பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான்.

மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.
தொடரும் 

Friday, July 8, 2016

பார்த்திபன் கனவு 61 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் 24 - பொன்னன் பிரிவு )

பொன்னன் பிரிவுபொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள்.

நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.

சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!

மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!

"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார்.

"ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன்.

சிவனடியார் குறுநகை புரிந்தார்.

"ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன."

"ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?"

"ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."

"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?"

"இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...."

"எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?"

"அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."

"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?"

"ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?"

"ஐயோ!"

"அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்."

"ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது."

"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!"

"என்ன சந்தேகம், சுவாமி?"

"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!"

"தாங்கள் வராவிட்டால்....?"

"அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்."

"அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்.
தொடரும் 

Sunday, July 3, 2016

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்!!! பாகம் 17 ( கருந்துளைகள் 09 - 12)

கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை


நேரம் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? சாதாரண வாழ்வில் எமக்கு நேரம் என்பது தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வஸ்து! என்னதான் நடந்தாலும் நேரம் என்பது அதன் போக்கில் போய்கொண்டே இருக்கும். ஒவ்வொரு செக்கன்களும் கழிந்துகொண்டே இருக்கும். சென்ற நேரத்தை திரும்பி பெற முடியாதில்லையா?
ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ வெளிவரும் வரை அறிவியல், நேரத்தைப் பற்றி இப்படிதான் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாக நியூட்டன், நேரம் என்பது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல அது தொடர்ந்து மாற்றமின்றி பயணிக்கும் என்றார். அவரைப் பொறுத்தவரை, நேரம் என்பது இந்த பிரபஞ்சம் எங்கும் ஒரேமாதிரியாக துடிக்கும் ஒரு விடயம். பூமியல் ஒரு செக்கன் என்பது, செவ்வாயிலும் ஒரு செக்கன், சூரியனிலும் ஒரு செக்கன், அதேபோல பிரபஞ்சத்திலுள்ள ஏனைய இடங்களிலும் ஒரு செக்கனே. வெளியை, சார்பானது என்று கருதிய நியூட்டன் நேரத்தை அறுதியானது என்றே கருதினார்.
ஆனால் ஐன்ஸ்டின் நேரத்தை ஆற்றில் பாயும் நீருக்கு ஒப்பிட்டார். ஆற்றில் இருக்கும் நீர் எப்படி, சிலவேளைகளில் வேகமாகவும், சிலவேளைகளில் மெதுவாகவும், சிலவேளைகளில் வளைந்து நெளிந்து போகுமோ, அதேபோல தான் நேரமும், வெளியும் என்றார் ஐன்ஸ்டின்.
ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு, நேரம், இடம், திணிவு மற்றும் வடிவியலை (geometry) தொடர்பு படுத்திக்கூறும் ஒரு கோட்பாடாகும். ஐன்ஸ்டீனின் இந்த கோட்பாடு, இடம் / வெளி(space), நேரம்(time) என்பவற்றை ஒரே வஸ்துவின் தொடர்ச்சி (continuum) என்று கூறுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தில் வெளியானது, முப்பரிமானதால் ஆக்கப்பட்டுள்ளது – நீளம், அகலம் மற்றும் உயரம், இதைதான் நாம் x,y,z என ஆள்கூற்றுத் தளங்களில் குறிப்பிடுவோம். இத்தோடு, நேரத்தை நான்காவது பரிமாணமாக கொண்டு வெளிநேரம்(spacetime) என்ற கணிதவியல் மாதிரியை உருவாக்கி, பல்வேறு பட்ட இயற்பியல் பிரச்சினைகளுக்கு ஐன்ஸ்டின் விடையளித்தார்.
அதில் மிக முக்கியமான ஒன்று, இந்த வெளிநேரத்தில் ஏற்படும் வளைவுகளால் (curvature) உருவாக்கப்படும் ஒரு பக்கவிளைவே ஈர்ப்புவிசை ஆகும். இதை மாற்றி சொல்லவேண்டும் என்றால், திணிவானது வெளிநேரத்தை வளைக்கவல்லது. வெளி நேரத்தின் தொடர்ச்சியாகவும், நேரம், வெளியின் தொடர்ச்சியாகவும் இருப்பதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு எப்படியெல்லாம் பயணிக்க முடியுமோ, அதைப் போலவே, நேரத்திலும் பயணிக்க முடியும். ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
A என்ற இடத்தில் இருந்து B என்னும் இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். நாம் மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் (அதாவது நத்தையை விட மெதுவாக!), ஒரு மணிநேரத்தில் அல்லது 60 நிமிடங்களில் A என்னும் இடத்தில் இருந்து B என்னும் இடத்தை அடைந்து விடுவோம். இதுவே மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால், 6 நிமிடந்த்தில் நாம் A யில் இருந்து B ஐ சென்றடைந்து விடுவோம் இல்லையா? இதே போலத்தான் நேரமும்! இரண்டு நேர இடைவெளிக்கு உள்ள இடைவெளி எப்போதுமே ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. குழப்புகிறேனோ? தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.
விளக்க முன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி நாம் பார்க்கப் போகும் கோட்பாடுகளும், இயற்கையின் விதிகளும், நமது சாதாரண போது அறிவை (common sense) அசைத்துப் பார்க்கப் கூடியவை. ஆகவே உங்களின் மூளையின் கற்பனைத்திறன் என்ற குதிரையை தட்டி சற்றே ஓட விடுங்கள். நான் சொல்லும் உதாரணங்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக அலசிப் பாருங்கள். அதுவும் முடியவில்லை என்றால் விட்டு விட்டுவிடுங்கள். டேக் இட் ஈசி.
நான் முன்னரே கூறியது போல, திணிவினால் வெளிநேரத்தில் வளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்த வளைவுகளே ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பது போன்ற தோற்றத்தை உருவாகுகிறது. திணிவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதைச்சுற்றியுள்ள வெளிநேரத்தின் வளைவும் அதிகரிக்கும். எந்த அளவுக்கு வெளிநேரம் வளைகிறதோ, அந்த அளவிற்கு வெளியும், நேரமும் வளையும். எந்தளவுக்கு வெளிநேரம் வளைகிறதோ, அந்தளவிற்கு நேரமானது துடிக்கும் வீதமும் மாறுபடும்.
குறிப்பிட்ட புள்ளியில் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அது எவ்வாறு வெளிநேரத்தை வளைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்
குறிப்பிட்ட புள்ளியில் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அது எவ்வாறு வெளிநேரத்தை வளைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்
இப்படி ஒரு உதாரணத்தை பாருங்கள், பூமியை விட சூரியன் 333,000 மடங்கு திணிவானது. ஆக, பூமியைச்சுற்றி வெளிநேரம் வளைந்துள்ளத்தை விட, சூரியனைச் சுற்றி வெளிநேரம் மிக அதிகமாக வளைந்துள்ளது. ஆகவே ஒரே நேரத்தை காட்டும் கடிகாரங்கள் இரண்டை தயாரித்து, ஒன்றை பூமியிலும், மற்றொன்றை சூரியனிலும் (அதில் வைக்கலாம் என்று எடுத்துக் கொள்வோம்) வைத்துவிட்டு, மீண்டும் இரண்டு கடிகாரங்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், சூரியனில் நாம் வைத்த கடிகாரத்தைக் காட்டிலும் பூமியில் இருந்த கடிகாரம் வேகமாக துடித்திருப்பது தெரியும். அதாவது, சூரியனது திணிவின் காரணமாக வெளிநேரத்தில் ஏற்ப்பட்ட வளைவு, பூமியினால் ஏற்பட்ட வளைவைக் கட்டிலும் அதிகம் என்பதால், அது நேரத்தின் வேகத்தை, பூமியோடு ஒப்பிடும் போது குறைத்துள்ளது!  இதை ஈர்ப்புக்கால நேர நீட்டிப்பு (gravitational time dilation) என்று இயற்பியலாளர்கள் அழைகின்றனர்.
இன்னும் சுருங்கக் கூறின், ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்திற்கு அண்மையில் நேரம் மெதுவாகவும், ஈர்ப்புவிசை குறைந்த இடத்தில் நேரம் வேகமாகவும் துடிக்கும்.
ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு இந்த வேறுபாடுகளை அழகாக விளக்குகிறது. நமது நோக்கம் இங்கு கருந்துளைகள் பற்றி ஆராய்வதே என்பதால், அதோடு சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பார்க்காலாம், முடிந்தவரை அதோடு தொடர்புள்ளவற்றையும் விளக்குகிறேன்.
முன்னைய பகுதியல் கூறிய இந்த “உறைந்த நட்சத்திரங்கள்” பற்றி இப்போது பார்க்கலாம், நாம் மேலே பார்த்த கருத்துக்களை இங்கே 3 சூரியத்திணிவை விட அதிகமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு பொருத்திப் பார்கலாம்.
ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியின் திணிவு 3 சூரியத் திணிவைவிட அதிகமாக இருப்பின், இயற்கையில் இருக்ககூடிய எந்தவொரு விதியும், அந்த நட்சத்திரம் சுருங்கி கருந்துளையாவதை தடுக்கமுடியாது என ஓபன்கைமர் நிறுவிக்காட்டினார். அதுமட்டுமல்லாது, ஓபன்கைமருடன் அவரது சகாக்களும் சேர்ந்து சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள அளவிற்கு அந்த நட்சத்திரங்கள் வரும்போது, அந்தக் கோளத்தினுள் துடிக்கும் நேரமும் நின்றுவிடும் என்றும் கூறினார். இதனால் அந்த நட்சத்திரங்களுக்கு இவர்கள் “உறைந்த நட்சத்திரங்கள்” என்று பெயரும் வைத்தனர்.
இப்படி இந்த சுவர்ட்சில்ட் ஆரை வரை வந்த நட்சத்திரமானது மிக மிக அதிகளவான திணிவை ஒரு குறிப்பிட்ட கோள அளவினுள் (பந்து போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கொண்டிருக்கும். இது அந்த சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட கோளத்தினை சுற்றியுள்ள வெளிநேரத்தை மிக மிக அதிகளவாக வளைக்கிறது. எவ்வளவு தூரம் இப்படி வெளிநேரம் வளைகிறது என்றால், நேரம் துடிப்பதே நிற்கும் அளவிற்கு! சுவர்ட்சில்ட் ஆரையின் எல்லையில் நேரம் உறைகிறது. இதுவே ஓபன்கைமர் மற்றும் அவரது சகாக்கள் இந்த நட்சத்திரங்களை “உறைந்த நட்சத்திரங்கள்” என்று கூற வழிவகுத்தது.
இன்னும் சற்று தெளிவாக பார்க்கலாம். சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட நட்சத்திரத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தூரத்தில் இருந்து எம்மை இன்னுமொருவரும் அவதானிக்கிறார். எம்மிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரும் நாமும் புறப்படும் போது கடிகாரங்கள் ஒரே நேரத்தை காட்டுகின்றன. ஆனால் நாம் அந்த நட்சத்திரத்தை நெருங்க நெருங்க அவருக்கு எமது கடிகாரம் வேகம் குறைந்து செல்வதுபோல தோற்றம் அளிக்கும். (ஆனால் நமக்கு கடிகாரம் வேகம் குறைவது போல தென்படாது, காரணம், நேரம் என்பது அதை அளப்பவருக்கு சார்பானது, ஆகவே எமக்கு நேரத்தின் வேகம் குறைவது தெரியாமல் இருப்பதற்கு காரணம், நேரம் துடிப்பது என்பது கடிகாரத்துக்கு மட்டுமல்ல, எமது சிந்தனையின் வேகம், வயதாவதின் வேகம், கலங்கள் (cells) புதுப்பிக்கப்படுவதின் வேகம் என எல்லாமே நேரத்தால் மாற்றமடைவதால், எமக்கு நேரம் மெதுவாக துடிப்பதின் வித்தியாசம் தெரியாது.)
Black_hole_details
நாம் அப்படியே முன்னேறி, அந்த நட்சத்திரத்தின் சுவர்ட்சில்ட் ஆரையை அடையும் போது, நாம் பூரணமாக உறைந்து விட்டதுபோலவே எம்மை அவதானித்துக் கொண்டிருபவருக்கு தெரியும். அவருக்கு நமது கடிகாரத்தின் முள் நின்றுவிட்டதுபோலவே தோன்றும். அவரைப் பொறுத்தவரை நாம் நேரம், காலம் என்ற ஒன்றில் இப்போது இல்லை. அவர் நம்மை இறுதியாக பார்த்தது, நாம் இந்த சுவர்ட்சில்ட் ஆரையை கடக்கும் போது தான். எம்மைப் பொறுத்தவரை, நேரம் ஓடிக்கொண்டே இருக்கும், நாம் சுவர்ட்சில்ட் ஆரையைக் கடந்து அந்த நட்சத்திரத்தின் மையத்தை நோக்கி சென்றுகொண்டிருப்போம். அனால் நம்மால் இனி எப்போதுமே இந்த சுவர்ட்சில்ட் ஆரையை விட்டுவெளியே செல்ல முடியாது.
இதனால் தான் சுவர்ட்சில்ட் ஆரையை கொண்டுள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்பை நிகழ்வெல்லை (event horizon) என்று அழைகின்றனர். இந்த நிகல்வெல்லை, இடத்திற்கும், நேரத்திற்கும் ஒரு வேலிபோல செயற்படுகிறது. நிகழ்வெல்லைக்குள் அதாவது சுவர்ட்சில்ட் ஆரைக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் சுவர்ட்சில்ட் ஆரைக்கு வெளியே அல்லது நிகழ்வெல்லைக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தாது.
ஒருவர் இந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்துவிட்டால், அவர் இந்த நிகழ்வெல்லையை கடக்கும் போதே, அவரை நிகழ்வெல்லைக்கு வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, நிகழ்வெல்லையை கடப்பவரது நேரம் துடிப்பது நின்றுவிடும். இனி அந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்தவரால் இந்தப் பிரபஞ்சத்தின் வெளிநேரத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர்தான் நேரத்துக்கும் அப்பார்ப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுவிட்டாரே!
இந்த நிகழ்வெல்லைக்குள்ளே தான் கருந்துளை என்னும் இயற்கையின் இனம்புரியா விந்தை ஒன்று ஒழிந்துள்ளது. காலம், நேரம், இடம், வெளி என்பவற்றை கடந்து நிற்கும் இந்த இயற்கையின் விந்தை, நம் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியல் தேடலில் ஒரு தொடக்கமே!
அடுத்ததாக கருந்துளைகளை நோக்கி பயணிப்போம்.
*****************************
கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?
சாதாரண வாழ்வில், இங்கு பூமியில், நாம் அனுபவிக்கும் அல்லது பார்க்கும் விடயங்கள் அனைத்தும் பிரபஞ்சத்த்சில் நடக்கக்கூடிய, அல்லது அனுபவிக்ககூடிய விடயங்களில் ஒரு துளியளவே. நாம் பிறந்ததிலிருந்தே இந்த பூமியில் வாழ்வதால் நமக்கு தெரிந்த அனைத்தும், நமது “போது அறிவு” உட்பட, எல்லாமே நமது மூளையால் பூமியின் இடத்தில் இருந்தே ஒப்பிடப்படும். நமது சந்திரனைப் பொறுத்தவரை, அதன் ஈர்ப்பு விசையானது பூமியைப் போல ஆறில் ஒரு பங்கு மட்டுமே. அதாவது இங்கு ஒரு மீட்டார் துள்ளக்கூடிய ஒருவரால் சந்திரனில் 6 மீட்டர்கள் துள்ளலாம். கற்பனை செய்து பாருங்கள், 6 மீட்டர் உயரத்துக்கு ஒருவர் அசால்ட்டாக தாவினால் எப்படி இருக்கும். ஸ்பைடர்மேனே தோற்றுவிடுவார் போல! நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயம் போலத்தான் ஏனென்றால் பூமியில் அப்படி பாய்ந்த ஒருவரும் இல்லை. நமது அறிவு, பூமியை சார்ந்தே இருக்கிறது!
இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியை விட சிறிதாக இருக்கும் எம்மை விட பல்வேறு பட்ட வித்தியாசமான உண்மைகள்/நிகழ்வுகள் உண்டு. எமக்கு அது அதிசயமாக இருந்தாலும், இயற்கையைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான்! இப்படி இருக்கும் பல்வேறு வித்தியாசமான வஸ்துக்களில், எமது இயல்பறிவுக்கு மிக மிக தொலைவில் இருக்கும் ஒரு விடயம் தான் இந்த கருந்துளைகள்.
சென்ற பதிவுகளில் நாம் விரிவாக, நேரம், காலம், இடம், ஈர்ப்பு சக்தி என்பனவெல்லாம் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வீதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்று பார்த்தோம். அவை நமது வழமையான, காலம், நேரம், இடம் என்பவற்றைவிட வேறுபட்டு தெரிந்திருக்கலாம். இயற்கையின் விளையாட்டில் இதுவும் ஒன்று. சரி கருந்துளைகளைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, நட்சத்திரத்தின் மையப் பகுதி, 3 சூரியத் திணிவை விட அதிகமாக இருப்பின், நட்சத்திரப் பெருவெடிப்பின் பின் எஞ்சும் மையப் பகுதியானது தனது சொந்த ஈர்ப்புசக்தியால் சுருங்கிச் செல்வதை இயற்கையில் உள்ள எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது. இப்படி சுருங்கி செல்லும் இந்த கோளவடிவான மையப்பகுதி ஒரு கட்டத்தில், சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள கோளமாக சுருங்கியவுடன், அங்கு கருந்துளை பிறக்கிறது.
கருந்துளைக்கு இவ்வாறு நாம் வரைவிலக்கணம் கூறலாம்.
வெளிநேரத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம், இங்கு ஈர்ப்பு விசையின் அளவு மிக மிக அதிகமாக இருப்பதனால், ஒளியினால் கூட இவ்விடத்தில் இருந்து தப்பிக்க முடியாது. ஒளியை இங்கு குறிப்பிடக் காரணம், பிரபஞ்சத்தில் மிக மிக வேகமாக செல்லக்கூடியது ஒளிமட்டுமே, ஆக, அதனாலேயே இந்த கருந்துளையின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால், பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதனாலும் தப்பிக்கமுடியாது! நட்சத்திரங்களில் முடிவில் கருந்துளை ஒன்று பிறக்கலாம்.
கருந்துளையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக அதிகமாக ஈர்ப்புவிசையை கொண்டிருப்பதனால், இவ்விடங்களில் இருக்கும் வெளிநேரத்தின் பண்புகள் மிக மிக விசித்திரமாக இருக்கின்றன. இவற்றை கருத்தில் வைத்தே இந்த அளவுக்கு அதிகமான ஈர்ப்புவிசை கொண்ட பொருளை, “கருந்துளை” (Black hole) என முதன் முதலில் ஜான் வீலர் (John Wheeler) 1967 இல் அழைத்தார். அதுவே நல்ல கவர்சிகரமான பெயராக இருந்ததால், தொடர்ந்து அந்தப் பெயரே பிரபல்யமாகி விட்டது.
சுவர்ட்சில்ட் ஆரையில் என்னவிதமான மாற்றங்கள் இடம்பெறும் என்று நாம் ஏற்கனவே பார்துவிட்டபடியால், நாம் மேற்கொண்டு கருந்துளைகளைகளின் இயல்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
கருந்துளைகள் கருப்பா? ஒரு சின்ன கேள்வி தான்! கருந்துளைகள், நட்சத்திரங்களைப் போல, ஒளியை வெளிவிடுவதில்லை ஆக, அவற்றை தொலைக்காட்டிகளை கொண்டு பார்க்கவோ, அறியவோ முடியாது. அவை கண்களுக்கு புலப்படாதவை. ஆனால் அவை ஒன்று தங்களை முழுதாக மறைத்துக் கொள்ளவில்லை. இந்த கருந்துளைகளின் அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை, அதை சுற்றியுள்ள பொருட்களின் மீது செலுத்தும் செல்வாக்கை வைத்துக்கொண்டு எம்மால் இலகுவாக இந்த கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.
எப்படி இந்த கருந்துளைகளை, வானியலாளர்கள் கருவிகளைக்கொண்டு அறிகிறார்கள் என்று பார்ப்போம்.
கருந்துளைகளை நேரடியாக அவதானிக்க முடியாவிட்டாலும், அதனருகில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி, எக்ஸ்கதிர் மற்றும் ரேடியோ கதிர்களைக்கொண்டு அவதானிக்கும் வானியலாளர்கள், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வேகத்தை அளக்கின்றனர். பின்னர் இந்த வேகத்தை, ஈர்ப்புவிசை தொடர்பான சமன்படுகளோடு ஒப்பிட்டு பார்த்து, இந்த நட்சத்திரத்தின் வேகத்தில் இருக்கும் மாறுதல்களுக்கான காரணத்தை கண்டறிகின்றனர். அதாவது, இந்த நட்சத்திரம் ஒரு கருந்துளையை சுற்றி வருகிறது என்றால், இந்த நட்சத்திரத்தின் வேகம் எவ்வாறு இருக்கும் என இந்த சமன்பாடுகள் நம்மக்கு சொல்கின்றன, இதை வைத்து குறிப்பிட்ட நட்சத்திரம் ஒரு கருந்துளையை சுற்றி வருவத்தை வானியலாளர்களால் துல்லியமாக கூறமுடியும்.
அதுமட்டுமல்லாது, கருந்துளைகளை சுற்றி அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை இருப்பதனால், கருந்துளையின் ஈர்ப்பினால் அதனை நோக்கி வரும் பிரபஞ்ச தூசு துணிக்கைகள், வளைவுந்த்தின் காரணமாக கருந்துளையைச் சுற்றி ஒரு தட்டுப் போல ஒரு அமைப்பை (accretion disk) உருவாக்குகின்றது, இந்த துணிக்கைகள் மற்றும் வாயுக்களால் ஆனா அமைப்பு மிக மிக வேகமாக சுழன்றுகொண்டே கருந்துளையை நோக்கி விழுவதால் உருவாகும் அழுத்த சக்தியால் இந்த துணிக்கைகளும் வாயுவும் அளவுக்கதிகமான வெப்பநிலையை அடைகின்றன. இப்படி கருந்துளையின் மேற்பரப்புக்கு அண்மைய பகுதியில் உருவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் எக்ஸ்-கதிர்களாக வெளியிடப்படுகின்றன. இந்த எக்ஸ்-கதிர்களை அவதானிப்பதன் மூலமும் எம்மால் கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.
கருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சு
கருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சு
சரி கருந்துளையின் பண்புகள் என்று பார்த்தால், ஒரு திடமான கருந்துளை ஒன்றுக்கு மூன்றுவிதமான அடிபடிப் பண்புகள் உள்ளன.
  1. திணிவு (mass)
  2. மின் ஏற்றம் (electric charge)
  3. சுழல் உந்தம் (angular momentum) – அதாவது எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
ஒரு கருந்துளைக்கு இந்த மூன்று பண்புகள் மட்டுமே உண்டு என “முடியில்லாக் கோட்பாடு” (no-hair theorem) கூறுகிறது. அதாவது இதைத் தவிர மேலதிகமான பண்புகள் இந்த கருந்துளை உருவாகும் போது இருந்திருந்தாலும், இந்த வஸ்துக்கள் அனைத்தும் இப்போது இந்த கருந்துளையால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதால், அதாவது கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் (even horizon) அவை சென்றுவிட்ட பின்னர், கருந்துளைக்கு வெளியில் இருக்கும் வெளிநேரத்தில் அவை எந்தவிதமான செல்வாக்கும் செலுத்துவதில்லை. ஆக, இந்த மூன்று பண்புகள் மட்டுமே கருந்துளை ஒன்றுக்கு இருக்கக்கூடிய நாம் அவதானிக்கக்கூடிய பண்புகளாகும். எப்படி இருந்தாலும் இந்த முடியில்லாக் கோட்பாடு இன்னும் பூரணமாக கணித ரீதியாக நிருபிக்கப்படவில்லை. அதேபோல இது தவறு என்றும் ஒருவராலும் நிருபிக்கப்படவில்லை. ஆகவே இது கொஞ்சம் சிக்கலுக்குரிய விடயம் தான். இருந்தும் அதிகமான இயற்பியலாளர்களும், கணிதவியலாலர்களும் இந்த முடியில்லாக் கோட்பாடுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.
இந்தக் கோட்பாட்டின் படி, நாம் இரண்டு கருந்துளைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இரண்டும், ஒரே அளவான திணிவையும், ஒரே ஏற்றத்தையும் மற்றும் ஒரே மாதிரியான சுழல் உந்தத்தையும் கொண்டிருப்பின், அவை இரண்டும் ஒத்த கருந்துளைகள் எனப்படும் – அதாவது ட்வின்ஸ் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றை வேறுபடுத்தி பிரித்து இனங்கான முடியாது!
ஒரு பொருள் கருந்துளைக்குள் விழுந்தால் என்ன நடக்கும்? அந்தப் பொருளுக்கு என்ன மாற்றம் நடக்கும்? அந்தக் கருந்துளைக்கு என்ன மாற்றம் நடக்கும்? பார்க்கலாம்.
படங்கள்: இணையம்
*****************************
கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை
நாம் இதுவரை பார்த்த மாதிரிகளில், கருந்துளை ஒன்று நட்சத்திரத்தின் முடிவில் உருவாகலாம் என்று பார்த்தோம். நட்சத்திரங்களில் முடிவில் தான் ஒரு கருந்துளை உருவாகவேண்டும் என்று ஒரு விதியும் இல்லை, ஆனால் மிகத் திணிவான நட்சத்திரத்தின் (சூரியனைப் போல 20 மடங்குக்கு மேல்) முடிவானது ஒரு கருந்துளை உருவாகுவதற்கு தேவையான காரணிகளை உருவாகுகிறது. சிலவேளைகளில், மிக மிக அடர்த்தியான பிரபஞ்ச வஸ்துக்கள், தங்களின் ஈர்ப்பு விசையால் நெருங்கி வரும் போது, அவற்றின் மொத்த திணிவினால் உருவாகிய ஈர்ப்புவிசை அந்த வஸ்துக்களால் கட்டுப்படுத்த முடியாவிடில், அவை சுருங்கத்தொடங்கி கருந்துளையாக மாற சந்தர்ப்பமும் உண்டு.
கருந்துளைகளைப் பொறுத்தவரை, அளவை அடிப்படையாக கொண்டு நாம் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.
  1. நட்சத்திரத்திணிவு கருந்துளைகள் (stellar mass black holes)
  2. மிகப்பாரிய கருந்துளைகள் (supermassive black holes)
  3. நுண்ணிய கருந்துளைகள் (miniature black holes)

 நட்சத்திரத்திணிவு கருந்துளைகள்

இவை சாதாரணமாக நட்சத்திரங்களின் முடிவில் ஏற்படும் சூப்பர்நோவாவின் பின்னர் உருவாகும் கருந்துளைகள். இவை சூரியனைப்போல ஐந்து மடங்கு திணிவில் இருந்து ஐம்பது அல்லது நூறு மடங்குக்குள் திணிவுள்ளதாக இருக்கும். நட்சத்திரங்களின் முடிவில் பிறக்கும் இந்த கருந்துளைகளைப் பற்றி நாம் நிறைய விடயங்களை தெரிந்து வைத்துள்ளோம்.
பொதுவாக இவ்வகையான கருந்துளைகளை அவதானிப்பது மிக மிக கடினம், அதிலும் தனியாக இருக்கும் நட்சத்திரத்திணிவு கருந்துளைகளை அவதானிப்பது என்பது குதிரைக்கொம்பு. ஆக நாம் கண்டுள்ள இந்த வகையான கருந்துளைகள் பெரும்பாலும் இரட்டை நட்சத்திரத்தொகுதில் இருப்பவையே.
இரட்டை நட்சத்திரதொகுதி என்பது இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும் அமைப்பாகும். சூரியனைப் பொறுத்தவரை அது தனிப்பட்ட நட்சத்திரம், அனால் பிரபஞ்சத்தில் பெரும்பாலான நட்சத்திரங்கள் இரட்டைத் தொகுதிகளாகவே காணப்படுகின்றன.
இப்படி இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும்போது, ஒன்று கருந்துளையாகிவிட்டால், எம்மால் இதனை இலகுவாக கண்டுகொண்டுவிட முடியும். அதாவது இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றுவது போல இருக்கும், ஆனால் தொலைக்காட்டி மூலம் அவதானிக்கும் போது, அங்கே ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே தெரியும். எக்ஸ்கதிர் தொலைக்காட்டி மூலம், மற்றைய மறைந்துள்ள நட்சத்திரம் இருக்கும் இடத்தை அவதானிக்கும் போது அங்கே ஒரு எக்ஸ்கதிர் முதல் ஒன்று இருப்பதை காணக்கூடியவாறு இருக்கும். இதன்மூலம் அந்த மற்றைய நட்சத்திரம் ஒரு கருந்துளை என்பதனை அறிந்துகொள்ளலாம்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு, பெரும்பாலும் மற்றைய நட்சத்திரம் ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் ஆகியவை உருவாகும் அடிப்படை ஒரே மாதிரி இருப்பதாலும், அதனைச் சுற்றி இயங்கும் அமைப்புக்கள் ஒரே மாதிரி இருப்பதும் மேலும் அவை ஒரேமாதிரியாக எக்ஸ்கதிர்களை வெளிவிடுவதாலும், மற்றும் இரண்டுமே மிக மிக சிரிதாக இருப்பதாலும் அதிகளவான ஈர்ப்புவிசையை தன்னைச் சுற்றியுள்ள வெளிநேரத்தில் செலுத்துவதால் இந்த குழப்பம் ஏற்படும்.
எப்படி இருப்பினும், கருந்துளையை விட, நியூட்ரான் நட்சத்திரங்களுக்கு என்று சில தனிப்பட்ட பண்புகள் உண்டு.
முதலாவது, அளவுக்கதிகமான காந்தப்புலம், நாம் ஏற்கனவே அளவுக்கதிகமான காந்தப்புலத்தை நியூட்ரான் நட்சத்திரங்கள் கொண்டுள்ளன என்று பார்த்துள்ளோம், அதிலும் மிகையான காந்தபுலம் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்கள் மக்னடார் எனப்படும் என்றும் பார்த்துள்ளோம்.
இரண்டாவது, இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சுழலும்போது, அதன் பாகங்கள் வேறுபட்ட சுழற்சி வேகத்தை காட்டும், அதாவது துருவங்கள் குறிப்பிட்ட வேகத்திலும், மத்திய பகுதி இன்னுமொரு வேகத்திலும் சுழலும், இது differential rotation அல்லது வேறுபட்ட சுழற்சி (அல்லது வேறுபட்ட பகுதிச் சுழற்சி எனவும் அழைக்கலாம்) எனப்படும். (நமது சூரியன், வியாழன் மற்றும் சனியிலும் இந்த “வேறுபட்ட சுழற்சி” இடம்பெறுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.) ஆனால் கருந்துளையைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட வேறுபட்ட சுழற்சி இல்லை. கருந்துளைகளுக்கு வெறும் மூன்று பண்புகளே உள்ளன என முதலில் நாம் பார்த்தோம்.
இப்படிப்பட்ட பண்புகளை இந்த இரட்டை நட்சத்திர தொகுதில் உள்ள அந்த மறைவான நட்சத்திரம் காட்டும்போது, அது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் என உறுதி செய்யப்படும், அப்படி இல்லையேல் அது ஒரு கருந்துளையே!

மிகப்பாரிய கருந்துளைகள்

இவை சூரியனைப் போல பல பில்லியன் மடங்கு திணிவானவை. நட்சத்திரக் கருந்துளைகளைப் போல அல்லாது இவை நட்சத்திரப் பேரடைகளின் மையங்களில் இருக்கின்றன.
பொதுவாக இந்த பாரிய கருந்துளைகள் எப்படி உருவாகின்றது என்று இன்றுவரை ஒரு திடமான ஆராய்ச்சி முடிவில்லை, ஆனால் பெரும்பாலான வானியலாளர்கள் பின்வரும் கருத்தை முன்வைகின்றனர்.
நட்சத்திரப் பேரடையின் மையத்தில் தோன்றும் பெரியளவான நட்சத்திரக்கருந்துளைகள், கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றிவரும் தூசுகள், வாயுக்கள் மற்றும் ஏனைய நட்சத்திரங்களை விழுங்கி கொஞ்சம் கொஞ்சமாக பெருத்துக்கொண்டே வரும். அதுமட்டுமல்லாது, மற்றைய நட்சத்திரக் கருந்துளைகளுடன் ஒன்றிணைந்து ஒரு பெரிய கருந்துளையாக உருவெடுக்கும். இதைவிட வேறுபட்ட மாதிரிகளும் இந்த மிகப்பாரிய கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்று சொல்கின்றன.
நமது நட்சத்திர பேரடையான பால்வீதியின் மையத்தில் தனுசு எ* (Sagittarius A*) எனப்படும் மிக அடர்த்தியான ரேடியோ முதலானது ஒரு கருந்துளையாக இருக்கும் என வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமியில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இதனது விட்டம் (diameter) 44 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இது நமது சூரியனைப் போல கிட்டத்தட்ட 4 மில்லியன் மடங்கு திணிவானது.
முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த தனுசு எ*, மிகப்பாரிய கருந்துளைகள் என்ற வகையினுள் இருக்கும் ஒரு சிறிய கருந்துளை, ஆம் மிகப்பாரிய கருந்துளை என்ற பெயருக்கே இழுக்கு வருமளவு சிறியது இது!
நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரப் பேரடைகளில் இருக்கும் மிகப்பாரிய கருந்துளைகளின் அளவுகளை வானியலாளர்கள் அளந்துள்ளனர், அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
நமக்கு மிக அருகில் இருக்கும், அதாவது நமக்கு 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் அன்றோமீடா பேரடையின் மையத்தில் இருக்கும் பாரிய கருந்துளையானது கிட்டத்தட்ட 150-250 மில்லியன் சூரியத்திணிவு அளவானது. பலே பாஸ்கரா! ஆனால் இதையும் விழுங்கிவிடும் அளவுக்கு மேலும் பெரிய கருந்துளைகள் உண்டு.
இங்கிருந்து 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்சியர் 87 எனப்படும் ஒரு பெரிய நட்சத்திரப் பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளை, 6.4 பில்லியன் சூரியத் திணிவுள்ளது.
M87 - மஞ்சள் புள்ளி, அதன் மையத்தில் இருக்கும் கருந்துளையில் இருந்து வெளிவரும் ஜெட் போன்ற நீளமான பிளாஸ்மா, இது 5000 ஒளியாண்டுகள் நீளமானது
M87 – மஞ்சள் புள்ளி, அதன் மையத்தில் இருக்கும் கருந்துளையில் இருந்து வெளிவரும் ஜெட் போன்ற நீளமான பிளாஸ்மா, இது 5000 ஒளியாண்டுகள் நீளமானது
NGC 3842 என்னும் நட்சத்திரப் பேரடையின் மத்தியில் இருக்கும் பாரிய கருந்துளை 9.7 பில்லியன் சூரியத்திணிவுள்ளது.
நாம் இதுவரை அவதானித்ததிலே, மிகப்பெரிய கருந்துளை S5 0014+81 என்ற குவஸார் எனப்படும் அமைப்பில் இருக்கிறது, இது கிட்டத்தட்ட 40 பில்லியன் சூரியத் திணிவுகளை கொண்டுள்ளதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால் நம் சூரியனைப் போல 40 பில்லியன் மடங்கு திணிவானது. இந்தப் பிரபஞ்சம் கொஞ்சம் பெரிதுதான்!
S5 0014+81 எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை
S5 0014+81 எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை

நுண்ணிய கருந்துளைகள்

இவை மிக மிக சிறிய, அதாவது அணுவைவிட சிறிய கருந்துளைகள். இன்றுவரை இவை எந்தவொரு ஆய்வின் மூலமும் நிருபிக்கப்படவில்லை. குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் அனுமானிக்கப்பட்ட இந்தக் கருந்துளைகள், ப்ரோட்டான் அளவிருக்கலாம்.
நுண்ணிய கருந்துளைகள்
நுண்ணிய கருந்துளைகள்
இந்தப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பெருவெடிப்பின் உருவாகியபோது இருந்த அளவுக்கதிகமான வெப்பநிலையும் அழுத்தமும் இப்படியான கருந்துளைகளை உருவாக்கி இருக்கலாம்.
இன்று வரை இவை இருப்பதற்கான எந்தவொரு சாட்சியங்களும் இல்லதாதிருந்தாலும், கூடிய விரைவிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துவிடும் என இயற்பியலாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது, எம்மிடம் இருக்கும் LHC போன்ற அதி சக்திவாய்ந்த துணிக்கை முடுக்கிகளைப் (particle accelerators) பயன்படுத்தி, இப்படி நுண்ணிய கருந்துளைகள் இருக்கின்றனவா இல்லையா என்ற ஒரு தீர்கமான முடிவை இனி வரும் வருடங்களில் எப்படியும் தீர்மானித்துவிட முடியும்.
1970 களில் ஸ்டீபன் காவ்கிங் (Stephen Hawking) கருந்துளைகள் பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டு, கருந்துளைகள் ஒருவிதமான கர்திவீச்சை வெளியிடும் என அறிவித்தார், இன்று அது ஹாவ்கிங் கதிர்வீச்சு என அழைக்கப்படுகிறது. இந்த நுண்ணிய கருந்துளைகளும் இவ்வாறான கதிவீச்சை வெளியிடவேண்டும். அது மட்டுமல்லாது, காவ்கிங், இப்படியான நுண்ணிய கருந்துளைகள், நமது பால்வீதியை சுற்றி நிறைய இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆக, இந்த காவ்கிங் கதிர்வீச்சை தேடி ஆராய்வதன் மூலமும் இப்படியான் நுண்ணிய கருந்துளைகள் இருக்குமா என எம்மால் அறிந்துகொள்ள முடியும்.
கவ்கிங் கதிர்வீச்சைப் பற்றி நாம் பின்பு இன்னும் தெளிவாக பார்க்கலாம். கவலை வேண்டாம்.
நாம் எப்படி இந்த கருந்துளைகள் அறிவியலாளர்கள் வகைப் படுத்தியுள்ளனர் என்று பர்ர்தோம். இதைத் தவிரவும், சுழலும் கருந்துளைகள், நிலையான கருந்துளைகள் என்றும் சில வகைகள் உண்டு.
கருந்துளைகளின் பண்புகளைப் பார்க்க முன்னர், அவற்றின் வகைகளைப் பார்க்கவேண்டியது கட்டாயம் என்பதனாலேயே நாம் இங்கு வகைகளைப் பற்றிப் பார்க்கிறோம். ஏனென்றால் இந்த வகைகளுக்கு ஏற்ப, கருந்துளைகளின் பண்புகள் மாறும், ஆக இனி இந்தப் பண்புகளைப் பற்றிப் பார்க்கும் போது உங்களுக்கு தெளிவாக எந்தக் கருந்துளைகளைப் பற்றி நான் குறிப்பிடுகின்றேன் என தெளிவாக விளங்கும்.
மேலும் பயணிப்போம் கருந்துளைகளை நோக்கி.
படங்கள்: இணையம்
********************************
கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி
கருந்துளைகளில் சிறியது தொடக்கம் பெரியது வரை வேறுபடுத்தி அதன் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் நுண்ணிய கருந்துளைகள் இன்னமும் கண்டறியப்படாதது. ஆனால் நட்சத்திரதிணிவுக் கருந்துளைகளும், மிகப்பாரிய கருந்துளைகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. இந்த மிகப்பாரிய கருந்துளைகள் ஒரு நட்சத்திரப் பேரடைக்கு ஒன்று என்ற வீதத்தில் காணப்படும். அதாவது பேரடையின் மையப்பகுதியில் இவை காணப்படும். ஆனால் நட்சத்திரத் திணிவுக் கருந்துளைகள் அப்படியல்ல.
நமது பால்வீதியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்கள் உண்டு. இவற்றில் ஆயிரத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் பாரிய நட்சத்திரங்கள் உண்டு, அதாவது பால்வீதியில் இருக்கும் ஒவ்வொரு ஆயிரம் நட்சத்திரங்களுக்கு ஒரு நட்சத்திரம், சுப்பர்நோவாவாகி வெடிக்கும் போது கருந்துளையாகும் அளவுக்கு பெரிதாக இருக்கும். (சரியாக ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு நட்சத்திரம் இப்படி பெரிதாக இருக்கவேண்டும் என்று இல்லை, இது ஒரு அவதானிப்பு கணக்கீடு மட்டுமே.) ஆக, 200 பில்லியன் நட்சத்திரங்களுக்கு, கிட்டத்தட்ட 200 மில்லியன் கருந்துளைகளாக மாறக்கூடிய நட்சத்திரங்கள் இருக்கவேண்டும்.
இங்கு மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், பாரிய நட்சத்திரங்கள், வேகமாக தனது எரிபொருளை முடித்துவிட்டு சுப்பர்நோவாவாக மாறிவிடும். நமது பால்வீதியின் வயது, அண்ணளவாக 13.2 பில்லியன் வருடங்கள். சூரியன் போன்ற சிறிய நட்சத்திரங்களே பில்லியன் கணக்கான வருடங்கள் வாழ்க்கைக் காலத்தை கொண்டுள்ளன. அனால் இந்த பெரிய நட்சத்திரங்கள் பெரும்பாலும் சில நூறு மில்லியன் வருடங்களே வாழும். ஆக இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நமது பால்வீதியில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களில் 90% மேலானவை ஏற்கனவே கருந்துளையாகிவிட்டன! ஆகவே, நமது பால்வீதியில் அண்ணளவாக 180 மில்லியன் நட்சத்திரத்திணிவுக் கருந்துளைகள் உண்டு.
இவ்வளவு கருந்துளைகள் இருந்தால் பூமிக்கு ஆபத்து இல்லாமலா இருக்கும்? கவலை வேண்டாம், பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையானது, பூமியில் இருந்து 1600 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது என்று 1999 இல் வானவியலாளர்கள் கண்டறிந்தனர்! கொஞ்சம் விசித்திரமான பெயர்தான் இதற்கு – V4641 சஜிட்டாரி (Sajittarii). இது ஒரு இரட்டை நட்சத்திரத் தொகுதியில் இருக்கும் கருந்துளை அதனால தான் இதை நம்மால் கண்டுகொள்ள கூடியதாக இருந்தது. அதாவது இந்த கருந்துளை, அதனருகே சுற்றிவரும் நட்சத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருஞ்சிக்கொண்டு இருக்கிறது. இப்படி இருஞ்சுவதால் உருவாகும் எக்ஸ்கதிவீச்சை பூமியில் இருந்து வானவியலாளர்களால் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இந்த கதிர்வீச்சில் இருந்து இந்த இடத்தில் ஒரு கருந்துளையும் இருக்கிறது என்று வானியலாளர்கள் கணித்தனர்.
ஆனால் இது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று மீண்டும் 2001 இல் கணக்கிட்ட வானியலாளர்கள், முதலில் கூறியதைவிட 15 மடங்கு தொலைவில் இந்த கருந்துளை இருப்பதாக இறுதியாக முடிவுக்கு வந்தனர், அதாவது 24000 ஒளியாண்டுகள். இவ்வளவு தூரத்தில் இருக்கும் கருந்துளையால் நமக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆகவே நாம் பயப்படவேண்டியதில்லை. இருப்பினும் சிலபல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.
உதாரணமாக, எம்மால் நேரடியாக கருந்துளைகளை அவதானிக்க முடியாது. நமக்கு தெரிந்த இயற்பியல் விதிகள், கருந்துளைகளை சுற்றி இருக்கும் வாயுக்களையும் தூசுகளையும் எப்படி தன்னை நோக்கி கவரும் என நமக்கு சொல்கின்றன. இந்த செயற்பாட்டின் போது உருவாகும் கதிர்வீச்சுக்கள் எப்படிப் பட்டவை என்பதையும் இந்த இயற்பியல் விதிகள் சொல்கின்றன. ஆக, கருந்துளையை சுற்றி நடைபெறும் செயற்பாட்டை வைத்தே அங்கு கருந்துளை இருப்பதை எம்மால் ஊகிக்க முடியும்.
இரட்டை நட்சத்திரத் தொகுதியில் ஒரு கருந்துளைக்கு மிக அருகில் மற்றைய நட்சத்திரம் இருப்பதால், அதனில் இருக்கும் வாயுவை இந்த கருந்துளை உறுஞ்சி எக்ஸ்-கதிர்வீச்சை வெளியிடும், ஆகவே இவற்றை எம்மால் கண்டு பிடிப்பது சற்று இலகுவான காரியம். ஆனால் தனியாக ஒரு கருந்துளை இருந்தால், அதாவது அது சாப்பிடுவதற்கு அதனைச்சுற்றி வாயுக்களும் தூசுகளும் இல்லாவிடில், இருட்டில் வந்த கறுப்புப் பூனைபோல ஆகிவிடும் இந்த கருந்துளை. இதனைக் கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்பே!
ஆக இப்படி தனியான கருந்துளைகள், நமது சூரியத் தொகுதிக்கு அருகில் இருந்தால் இவற்றை நாம் கண்டுபிடிக்க தவறிவிட மிக அதிகமான வாய்ப்புக்கள் உண்டு. ஆனாலும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அருகில் எந்தவொரு கருந்துளையும் இல்லை என நம்மால் உறுதியாக கூறமுடியும். பூமி என்று இல்லாமல், நமது சூரியத் தொகுதிக்கே ஆபத்து விளைவிக்கும் அளவில் எந்தவொரு கருந்துளையும் அருகில் இல்லை. அப்படி இருந்தால் நிச்சயம் அதன் ஈர்ப்பு விசை நமது சூரியத் தொகுதியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அப்படி ஒரு மாற்றத்தை நாம் இன்றுவரை அளக்கவில்லை. ஆக இப்போது நீங்கள் ஆழமாக மூச்செடுத்துக் கொள்ளலாம். ஆபத்து இல்லை.
இன்னுமொரு மிக முக்கியமான விடயம், கருந்துளைகள் எதோ அரக்கனைபோல பிரபஞ்சத்தில் பயணித்து, ஒவ்வொரு நட்சத்திரங்களாக கபளீகரம் செய்து தன வயிற்ரை நிரப்பும் ஒரு உயிரினம் அல்ல. ஒரு நட்சத்திரம் எப்படியோ அதேபோல்தான் இந்த கருந்துளைகளும். ஒரேஒரு வித்தியாசம், கருந்துளைகள் மிக அதிகமான ஈர்ர்புவிசையை கொண்டன.
நமது சூரியன் இந்த பால்வீதியில் எப்படி பயனிக்கிறதோ, அதேபோல நட்சத்திரங்களாக இருந்து கருந்துளையாக மாறிய நட்சத்திரங்களும் அப்படியே பயணிக்கும். ஒரு நட்சத்திரத்தை கோள்கள் சுற்றுவதுபோல, கருந்துளைகளையும் கோள்கள் அல்லது வேறு பொருட்கள், உதாரணமாக அதை ஆய்வு செய்ய சென்ற விண்கலம் சுற்றிவரலாம்.
சூரியனானது நம் பூமியை அதனை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது, அதாவது வானில் எறிந்த பந்து மீண்டும் நிலத்தை நோக்கி வருவதுபோல பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சூரியனில் போய் முட்டிவிடாமல் தடுப்பது இந்த பூமியின் வேகம். பூமியானது சூரியனை ஒரு செக்கனுக்கு 30 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சுற்றி பயணிக்கிறது. இதனால் சூரியனின் ஈர்ப்பால் பூமி சூரியனை நோக்கி செல்வதற்குள், வேறு இடத்திற்கு சென்றுவிடும், இப்படி தொடர்ச்சியாக நடைபெறுவதால் பூமி தொடர்ந்து சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது.
இது ஒரு அழகான காதல் கதை, இயற்கையின் காதல் கதை. சூரியன் தனது ஈர்ப்பால் பூமியை இழுத்துக் கொண்டே இருக்கும், பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கும், ஆனால் பூமி வேகமாக பயணிப்பதால், சூரியனை நோக்கி விழுவதற்கு முன் அதன் திசை மாறிவிடும், இது அப்படியே சூரியனை பூமி தொடர்ந்து சுற்றிவர காரணமாகிறது. இதேபோலத்தான் நம் சந்திரனும் பூமியை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது ஆனால் சந்திரனின் வேகம் அதிகமாக இருப்பதால் அது பூமியை சுற்றிவருமாறு ஆகிவிட்டது.
இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், ஒருவேளை சூரியனை சுற்றிவரும் பூமியின் வேகம் குறைவாக இருந்தால், சூரியனை சுற்றத் தொடங்கிய பூமி கொஞ்சம் கொஞ்சமாக தனது பாதையை சுருக்கிக் கொண்டு (அதன் பதை ஒரு சுழல் போல தெரியும்) சூரியனில் சென்று மோதிவிடும்.
இதுவே பூமியின் வேகம் மிக அதிகமாக இருந்தால், சூரியனது ஈர்ப்பு விசை பூமியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், பூமியானது சூரியனை நோக்கி வளைவாக பயணித்து அப்படியே சூரியனது ஈர்ப்பை விட்டு வெளியே சென்றுவிடும்.
இதே போலத்தான் கருந்துளையும், அதனை நாமும் சுற்றிவர முடியும். நமக்கு தேவை அதனைச் சுற்றிவர தேவையான சரியான, துல்லியமான வேகம்.
கருந்துளையை மெதுவாக சுற்றத்தொடங்கினால், சுழல்போல பாதையில் சென்று கருந்துளையில் மோதிவிடுவோம்.
mod3_q13_1
அதேபோல மிக அதிகமான வேகத்தில் சென்றால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து விடுபட்டு அப்படியே சென்றுவிடுவோம்.
mod3_q13_2
ஒரு குறிப்பிட்ட நடுத்தரமான வேகத்தில் பயணித்தால், எம்மால் கருந்துளையை சுற்றிவரமுடியும் ஆனால் அந்த பாதை வெறும் வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ இருக்காது. அது பார்ப்பதற்கு மிக சிக்கலான ஒரு பாதையாக இருக்கும்.
mod3_q13_3
ஒரு குறிப்பிட்ட கருந்துளையை சுற்றிவர ஒரே ஒரு குறிப்பிட்ட வேகம் மட்டுமே உண்டு. அந்த வேகத்தில் பயணித்தால் நிச்சயம் எம்மால் கருந்துளையை வட்டப் பாதையில் சுற்றிவரமுடியும். ஆனால் அந்தப் பாதையிலோ வேகத்திலோ சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஒன்று நாம் கருந்துளைக்குள் சென்று மோதிவிடலாம், சற்று அதிர்ஷ்டம் இருந்தால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்துவிடுபட்டு கருந்துளையை விட்டு சென்றுவிடலாம்.
mod3_q13_4
படங்கள்: இணையம்
**********************************
கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா?
கருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றைப் பார்போம்.
ஒளி எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்று நாம் படித்திருப்போம். அது உண்மைதான். ஆனால் நேர்கோடு என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் சுருக்கமாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய தூரம் என்று எடுத்துக் கொள்ளலாம். அனால் ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரத்தை இணைக்கும் பாதை நேர்கோட்டுப் பாதையாக இருக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. குழப்பமாக இருக்கலாம், விளக்குகிறேன்.
சிறிய பரிசோதனையை செய்து நாம் இந்த குழப்பத்திற்கான முடிவை அடையலாம். ஒரு A4 வெள்ளைக் கடதாசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குறுக்காக ஒரு நேர்கோட்டை வரைந்துகொள்ளுங்கள். இப்போது கடதாசியை மேசையில் வைத்துவிடுங்கள். இப்போது கடதாசியில் ஒரு நேர்கோடு ஒன்று இருக்கும் அப்படித்தானே?
சரி, இப்போது இந்த கடதாசியை எடுத்து அந்தக் கோட்டின் இரு முனைகளும் சந்திக்குமாறு சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது அந்தக் கடதாசி வளைந்துள்ளது. அந்தக் கடதாசியில் வரைந்துள்ள கோடு நேர்கோடாக இருந்தாலும், கடதாசியே வளைந்திருப்பதால், அந்தக் கோடும் வளைந்திருக்கிறது. இங்கு நாம் இரு பரிமாணத்தில் (கடதாசியின் மேற்பரப்பு – இருபரிமாணப் பரப்பு) கோடு வரைந்துள்ளோம். அந்தக் கோடுதான் ஒளி செல்லும் பாதை என்று கொண்டால், கடதாசிதான் வெளி (space). இயற்கையில் இது முப்பரிமாண வெளியில் நடைபெறுகிறது.
நாம் ஏற்கனவே ஈர்ப்புவிசை வெளிநேரத்தை வளைக்கும் என்று பார்த்துள்ளோம். ஆனால் நாம் முன்பு, வெளிநேரத்தில் (space-time), இந்த ஈர்ப்புவிசை எப்படி நேரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றே பார்த்துள்ளோம். இப்போது இது எப்படி வெளியில் செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்க்கப் போகிறோம். இயற்பியலில், வெளிநேரம் என்று சேர்த்து அழைப்பதற்கு காரணமே இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்பதே ஆகும்.
எப்படி ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் நேரம் துடிக்கும் வேகம் குறைகிறதோ, அதேபோல ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் வெளியும் மிக அதிகமாக வளைகிறது. ஆம்! வெளியை ஈர்ப்பினால் வளைக்க முடியும்.
இந்தத் தொடரின் முடிவில், கருந்துளையைப் பற்றி நீங்கள் வியந்ததை விட ஈர்ப்பு விசை எப்படி இந்த பிரபஞ்சத்தை ஆளுகிறது என்றே வியப்படைவீர்கள். இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான ஹீரோ, ஈர்ப்பு விசை தான். கருந்துளை என்பது, ஈர்ப்பு விசையின் பல்வேறு முகமூடிகளில் ஒன்று மட்டுமே! சரி மீண்டும் விடயத்துக்குள் சென்றுவிடுவோம்.
ஈர்ப்பு விசை கொண்ட அனைத்துப் பொருட்களுமே அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. குறிப்பிட்ட பொருட்களின் திணிவிற்கு ஏற்ப இந்த வளைவின் அளவு மாறுபடுகிறது. குறிப்பாக கருந்துளைகளின் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதால், கருந்துளையை சுற்றி வெளியானது மிக அதிகமாகவே வளைகிறது.
சூப்பர் ஜீனியஸ் ஐன்ஸ்டீன் தான் இந்த விளைவைப் பற்றிக் கூறியவர். அவரது பொதுச் சார்புக் கோட்பாடு, இந்த ஈர்ப்பு விசை என்பதே, திணிவானது (mass) அதனைச் சுற்றியுள்ள வெளிநேரத்தை வளைப்பதால் உருவாகும் ஒரு தோற்றம் என்கிறது.
நமது சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அது மிகத் திணிவான ஒரு பொருள். ஆகவே அது தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து வைத்துள்ளது. கோள்கள் எல்லாம் உண்மையில் நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன. ஆனால் அந்தக் கோடே, அதாவது அந்த நேர்கோட்டுப் பாதையே சூரியனது ஈர்ப்பினால் வளைக்கப் பட்டுள்ளதால் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதாவது அந்த A4 கடதாசியை நீங்கள் முதலில் வளைத்தது போல.
திணிவானது எப்படி அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைகிறது என்று மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
இன்னுமொரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஒரு சைக்கில் டயரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெறும் டயரில் ஒரு சிறிய கல்லைப் போட்டு, இப்போது இந்த டயரை வேகமாக சுழற்றினால், அந்தக் கல்லானது அந்த டயரினுள்ளே சுழன்றுகொண்டு இருக்கும். அந்தக் கல்லைப் பொறுத்தவரை அது நேர்கோட்டில் தான் செல்லுகிறது, ஆனால் இந்த டயர் வளைந்து இருப்பதனால், அது வட்டப் பாதையில் செல்வதுபோல நமக்கு தோன்றும். அவ்வளவும்தான்!
இங்கு நாம் கவனிக்கவேண்டியது, ஒளியும் இந்த வெளியில் பயணிக்கும் ஒரு வஸ்துவே! ஆகவே, வெளிநேரமானது வளைந்திருக்கும் பட்சத்தில், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்துதான் பயணிக்கும். ஒளியை ஈர்ப்புவிசை வளைக்கிறது என்று கருதுவதை விட பின்வருமாறு இலகுவில் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துக் கொள்ளலாம்.
Gravitational-lensing-galaxyApril12_2010-1024x768
திணிவு அதிகமான பொருட்கள், தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, வெளியே வளைந்திருப்பதனால், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்து செல்கிறது.
இப்படி ஒளி வளைவதை ஈர்ப்பு வில்லை (gravitational lensing) என்று அழைகின்றனர். அதாவது ஒரு ஒளிமுதலில் (light source) இருந்து வரும் ஒளியை எப்படி ஒரு வில்லை வளைக்குமோ, அதேபோல நட்சத்திரங்களில் இருந்து எம்மை நோக்கி ஒளி வரும்போது, குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் எமக்கும் இடையில் ஈர்ப்புவிசை அதிகமான ஒரு பொருள், அதாவது விண்மீன் பேரடை அல்லது கருந்துளை வரும் போது, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருந்துவரும் ஒளியானது எப்படி ஒரு வில்லையினூடாக செல்லும்போது வளையுமோ அதேபோல இந்த ஈர்ப்பு விசை அதிகமான பொருளும் இந்த நட்சத்திர ஒளியை வளைக்கும்.
220px-Black_hole_lensing_web
நமக்கும், ஒரு விண்மீன் பேரடைக்கும் இடையில் கருந்துளை ஒன்று வரும்போது, அது எப்படி ஒளியை வளைகிறது என்று இங்கே பார்க்கலாம்
இப்படி ஈர்ப்புவில்லை மூலமாக வளைக்கப்பட்ட ஒளியானது பூமியை வந்தடையும் போது, அதை தொலைக்காட்டி மூலம் பார்க்கும் ஒருவருக்கு, சற்று விசித்திரமான வகையில் அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் தெரியும்.
சிலவேளைகளில் ஒரே நட்சத்திரம் அல்லது வேறு ஒளிமுதல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தெரியும். சிலவேளைகளில், ஈர்ப்பு வில்லையாக செயற்பட்ட வின்மீன்பேரடையை சுற்றி ஒரு வளையம் போலவும் தெரியலாம். இது குறிப்பிட்ட ஒளிமுதல், ஈர்ப்பு வில்லை மற்றும் அவதானிப்பவரின் அமைவிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
கருந்துளைகள் மிக மிக அதிகளவான ஈர்ப்புவிசைக் கொண்டுள்ளதால், கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த ஈர்ப்பு வில்லைச் செயற்பாடு மிக அதிகமாக ஒளியை வளைக்கிறது. இப்படி வளைவது மட்டுமின்றி, கருந்துளைக்கு மிக அருகில் வரும் ஒளியானது, ஒரு கோள், எப்படி நட்சத்திரத்தை சுற்றிவருமோ அதேபோல கருந்துளையையும் சுற்றுகிறது – காரணம், அந்தளவுக்கு கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள வேளிநேரத்தை வளைத்துள்ளது.
mod3_q11_4
ஐன்ஸ்டீன் சிலுவை எனப்படும் இந்த நான்கு நீல நிற புள்ளிகள், உண்மையிலேயே ஒரே ஒரு குவேசார் ஆகும். இந்த குவேசாருக்கு முன்னுள்ள விண்மீன் பேரடையால் இது நான்கு வெவேறு நட்சத்திரங்கள் போல தெரிகிறது.
நமது சூரியனும் இப்படி ஒளியை சற்று வளைப்பதை நாம் அவதானித்துள்ளோம். பூமியில் இருந்து சில பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் சில விண்மீன் பேரடைகள் சற்று அதிகமாகவே ஒளியை வளைப்பதைக் கூட நாம் அவதானித்துள்ளோம். ஆனால் இர்துவரை கருந்துளைக்கு அருகில் இப்படியான ஈர்ப்பு வில்லை செயற்பாட்டின் மூலம் ஒளியானது வளைவதை நாம் நேரடியாக அவதானிக்கவோ இல்லை அதை புகைப்படம் எடுக்கவோ இல்லை. அதற்கு காரணம் நாம் இதுவரை அவதானித்த கருந்துளைகள் மிக மிக தொலைவில் இருப்பது, நமது தற்போதைய தொலைக்காடிகள் அவ்வளவு தொலைவில் இருக்கும் கருந்துளைகளை அவ்வளவு தெளிவாக காட்டக் கூடியளவு சக்திவாய்ந்தவை அல்ல என்பதே.
கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது
கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது
இனிவரும் காலங்களில் நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து, அதன்பலனாக இப்படியான கருந்துளையைச் சுற்றி நடக்கும் ஈர்ப்பு வில்லை செயற்பாட்டை அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர்.
படங்கள்: இணையம்
நன்றி: https://parimaanam.wordpress.com