Wednesday, December 31, 2014

எல்லோருக்குமிருக்கும் வானம்

எல்லோருக்குமிருக்கும் வானம்


 
இன்றைக்குத்தான் இப்பிடியொரு கண்றாவிக்குள்ள மாட்டுப் பட்டிருக்கிறன். இதைக் கருமம் என்று சொல்லவும் ஏலாதுதான். சிலர் சொர்க்கமென்று சொல்லுகினம். சரி ஏதோ ஒரு கண்றாவியென்று வைப்பம். அப்பிடியொரு சங்கதி பஸ்சுக்கு வெளியில நடந்து கொண்டிருக்குது. பஸ் யன்னலுக்குள்ளால வெளியில பார்க்கவே சங்கடமாயிருக்குது. எப்பவுமே யஸ் பயணங்களில நான் யன்னல்கரையோடதான் இருப்பன். நல்ல காற்றும் விழும். நாலு புதினத்தை பார்த்ததாகவும் முடியும். முக்கியமாக இன்னொரு காரணமுமிருக்குது. பஸ்சை இடையில மறிச்சு குழந்தைப் பிள்ளையயோட ஏறுற பொம்பிளையளுக்கு சீற் குடுக்க தேவையில்லை. ஆனால் யன்னல்கரையுடன் இருந்ததினால் இன்றைக்கு இந்த கண்றாவியை பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையில நான் ஒரு இரண்டும் கெட்டான் நிலைமையிலதானிருந்தன்.வெளியில நடக்கிற கூத்தைப் பார்க்கவுமேலாமல் கிடக்குது. சரி. பார்க்காமலிருப்பமென்றால் அதுவும் முடியாமலிருக்குது. இருபது இருபத்திரண்டு வயசு மதிக்கத்தக்க ஒரு பொடியனும் பெட்டையும் கீழே நிற்கினம். பஸ் ஸ்ராண்டின் கடைசிக் கட்டடத்துடன் ஒட்டியபடி இந்த பஸ் நிற்கிறது. பஸ்சுக்கும் கட்டடத்திற்குமிடையிலிருந்த இரண்டு மூன்று அடி இடைவெளியில் இருவரும் நிற்கினம். வெளியாட்களின் பார்வைபடாத இடமது.

பொடியன் என்னடாவென்றால், அங்க இஞ்சையென்று பெட்டையின்ர பலபத்து இடங்களிலயும் தொட்டுக் கொண்டிருக்கிறான். ஆன பெட்டையென்றால் தடுக்கிறதுதானே. தடுக்கிற மாதிரி ஒரு அக்சன் போட்டுக் கொண்டு, யாரும் தங்களை கவனிக்கினமோ என்றுதான் பார்க்கிறாள். எத்தனையாயிரம் பேர் வந்துபோற இடத்தில நின்று இந்த கூத்து ஆடுதுகள். என்ன பிறப்புகளோ தெரியயில்லையென்று மனசுக்குள்ள திட்டிக் கொண்டிருந்தன். எங்கட தமிழ்ப் பண்பாடும் பாரம்பரியமும் இந்த மாதிரியான எளிய சீவனுகளாலதான் காற்றில பறக்குது.

இதுகளிற்கு ஒரு மேய்ப்பராக இல்லாவிட்டாலும், கொஞ்சம் நல்வழிப்படுத்த வேணுமென்று என்ர மனம் சொல்லிக் கொண்டிருந்தது. இப்பிடியான கட்டங்களில கப்டன் விஜயகாந்திட்ட இந்த இரண்டு சீவனுகளும் மாட்டுப்பட்டிருக்க வேணும். அரை மணித்தியாலம் அட்வைஸ் பண்ணி அதுகளை கொன்றிருப்பார். எனக்கு இப்படியான ஐடியாக்கள் வராது. எனக்கு தெரிந்த ஒரே வழி, விடாமல் அதுகளை பார்த்துக் கொண்டிருக்கிறதுதான். என்ன தலையா போகப்போகிறதென விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பிடிப்பார்த்தாவது தமிழ்ப் பண்பாட்ட பாதுகாக்கலாமாவென பார்த்தேன். ஆனால் அதுகள் இதைப் பற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கனபேர் பார்க்கிற நடு பஸ்ஸ்ராண்டில நிற்காமல், கொஞ்சப்பேர் பார்க்கிற இதில நிற்கலாமென அதுகள் யோசித்திருக்கலாம்.

அனேகமாக எங்கேயோ தூர இடத்திலயிருந்து ரவுணுக்கு படிக்க வந்ததுகளாக இருக்க வேணும். அறிஞ்ச தெரிஞ்ச சனங்கள் வரமாட்டுதுகள் என்ற துணிவில நிற்குதுகள் போல என யோசிச்சன். முந்தி எங்கட காலத்தில இப்பிடியே நிலைமையிருந்தது? முந்தி எங்கட காலமென்றதும், ஏதோ பல பத்து வருசமென யோசிக்க வேண்டாம். இரண்டு, மூன்று வருசம் முதல்தான். அப்ப நாடு இப்பிடியா இருந்தது?

நானும் அந்த நேரம் பஸ்சேறி ஒரு மணித்தியாலம் பயணம் செய்து ரவுணுக்கு வந்துதான் படிச்சிட்டு போனனான். என்னை மாதிரியே ஏராளம் பொடியளும் வந்தவையள்தான். கனக்க ஏன், இப்பிடியொரு பஸ்சிலதான் கிரிசாவும் வந்தவள். பஸ் நெருக்கத்துக்க கூட அவளோட முட்டுப்பட பயந்து கொஞ்சம் தள்ளித்தான் நிற்பன். பிறகு, தெரிஞ்ச பெட்டையொருத்தியிட்டக் குடுத்துத்தான் அவளுக்கு கடிதம் அனுப்பினனான். அப்ப எங்களுக்கு வீட்டுக்காரருக்கோ, இயக்கத்துக்கோ, ஆமிக்காரருக்கோ பயமில்லை. எங்கட பயமெல்லாம் கலாச்சார சீரழிவென்ற சொல்லுக்குத்தான்.

அந்த நேரம் வந்த பேப்பருகளிலயும், நோட்டீசுகளிலயும் இந்த சொல் அடிக்கடி வரும். கலாச்சார சீரழிவில ஈடுபட்டவர் நையப்புடைக்கப்பட்டார். எச்சரிக்கப்பட்டார். சுடப்பட்டார் என்ற கணக்கில வரும். ஏன் வீண் சோலியை என்றிட்டு, படிக்கிற காலத்தில பெட்டையளில இருந்து மூன்றடி தூரம் தள்ளியே நின்றன்.

பஸ் கோர்ண் அடிச்சுது. வெளிக்கிடப் போகுது போல. பஸ் வெளிக்கிட்டால் மறைவிருக்காதுதானே. பொடியனும் அந்தரப்படத் தொடங்கினான். என்ன கருமத்துக்கென்று தெரியவில்லை. நானும் இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன். முன்னுக்கு ஆரோ ஏதோ கேட்டது மாதிரியிருந்தது. என்னைத்தான் யாரும் கதை கேட்கினமோ தெரியவில்லையென திரும்பினன். அது முன் சீற்றில இருக்கிறவை தங்களுக்க கதைச்சுக் கொண்டிருக்கினம். பொடியனை தவறவிடக் கூடாதென ‘டக்’கென திரும்பினேன். இடைப்பட்ட இந்த ஒன்றோ இரண்டோ செக்கனில பொடியன் பாய்ந்து பெட்டையின்ர கன்னத்தில கொஞ்சிப் போட்டான். நான் பார்க்கத்தான் அவனின்ர உதடு பிரிய மனமில்லாமல் அவளின்ர கன்னத்திலயிருந்து பிரியுது. தமிழ் பண்பாட்டை காப்பாற்றும் எனது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. கடைசியில் ஒரு ‘பிட்’டு படம் பார்த்த உணர்வுதான் மிஞ்சியது.

பஸ் மெதுவாக நகர வெளிக்கிடத்தான் நாலைந்து பெட்டையள் அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு ஏறிச்சினம். அவையளும் ரவுணுக்கு படிக்க வந்திருக்க வேணும். கையில புத்தகம் கொப்பியள் வைச்சிருந்தினம். ஓடியோடி ஆட்கள் இல்லாத சீற்றுகளில இருந்திச்சினம். எனக்கு பக்கத்திலயுமொருத்தி இருந்தாள். என்னைப் பார்த்து இலேசாக சிரித்த மாதிரியுமிருந்தது. நானும், சிரிக்கிறனோ இல்லையோ என்று அவவுக்கு டவுட் வரத்தக்கதான அக்சன் ஒன்றை குடுத்தன்.

அவள் பஸ்சேறும் போது நான் வடிவாக கவனிச்சிருக்கயில்லை. இப்பதான் கவனிச்சன். அப்பிடியொரு வடிவு. அவளுக்கு பக்கத்தில நானிருக்க குடுத்து வைச்சிருக்க வேணும். எல்லாம் நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். இப்பிடியொரு சந்தர்ப்பம் வாய்த்தது. நீங்கள் அனேகமாக சாண்டில்யனின் கதையள் வாசிச்சிருப்பியள். அவரின்ர எல்லாக் கதையிலயும் வாற அரசிளங்குமரிகளைப்பற்றி ஏழெட்டுப் பக்கத்தில வர்ணிச்சிருப்பார். அது அப்பிடி. இது இப்பிடியென. ஒரு சிறுகதையில நான் அவளை அவ்வளவு தூரம் வர்ணிக்க ஏலாது. ஆகவே சுருக்கமாக சொல்லுறன். அவர் ஏழெட்டு பக்கத்தில எழுதினதை ஒரு வசனத்தில சுருக்கினாலும் இப்பிடித்தான் வரும்- ‘அந்த மாதிரிச் சரக்கு’.

எனக்கென்றால் இருப்புக் கொள்ளவில்லை. அவளின்ர கவனத்தை என்ர பக்கம் திருப்ப பல முயற்சியள் செய்து கொண்டிருந்தன். அப்பிடி திரும்பினன். இப்பிடி திரும்பினன். செருமினன். நொக்கியா போனை எடுத்து வைச்சிருந்தன். அவள் ஆள் ஒன்றுக்கும் மசியிற மாதிரித் தெரியவில்லை. என்னத்தை பார்க்கிறாள் தெரியவில்லை. முன்னாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இருக்கும்தானே, கண்ணுக்கு இலட்சணமான பெட்டையென்றால் இதுவரை எத்தனை பொடியள் பக்கத்திலயிருந்து இந்த அக்சனுகளை போட்டிருப்பினம்.

கடைசியில உயிரைப் பணயம் வைக்கிற மாதிரி ஒரு ஐடியா வந்தது. என்ர அகராதியில இதெல்லாம் இதுவரை இருக்கவில்லை. இப்பதான் ஆரம்பிக்குது. முந்தி மாதிரி இப்ப இல்லைத்தானே. கலாச்சார சீரழிவு சம்பந்தமாக நடுக்கம் தாற செய்திகளும் வாறதில்லை. உதயன் பேப்பரில மட்டும் கசூரினா பீச்சில நடக்கும் கலாச்சார சீரழிவுகளினால் மக்கள் விசனம் என்பது மாதிரி வரும். முந்தி மாதிரியில்லாமல் இப்ப எங்கட ஆக்கள் விசனமடையிறதோடயே நிறுத்திக் கொண்டுவிடுகினம்.

பெட்டையிட்ட மெல்ல கதை குடுத்தன். பெட்டை ஆரம்பத்தில எல்லாத்திற்கும் சிரித்தது. பிறகுதான் பதில் சொன்னது. என்ர ஐடியாவும் நன்றாக வேலை செய்தது. நானும் ஏதோ பெரிதாக நினைச்சிருந்தன். நினைத்தது மாதிரி ஒன்றுமிருக்கவில்லை. நான் போட்ட அடித்தளமிதுதான்.

“ஹலோ.. மாவிட்டபுரம் கன தூரமோ?..”

சிரித்தாள். பிறகு, “இல்ல .. பக்கத்திலதான்..”
“பக்கத்திலயென்று?..”

சிரித்தாள். “ ம்.. எனக்கு சரியா சொல்லத் தெரியேலை… ஒரு பத்து பன்னிரண்டு கிலோமீற்றர் வரும்..”

“ஓ.. ம்.. அதுசரி..போறதுக்கிடையில ஏதாவது பிரச்சனை வருமே?..”

“பிரச்சனையென்று?..”

“அதுதான் ஆமிச் செக்கிங்…கிக்கிங்..”

“ஒரு இடத்தில ஐ.சி பார்ப்பினம்… அவ்வளவுதான்..”

“பிரச்சினையில்லைத்தானே..”

“ஐயோ இல்லை…நீங்க அங்க வாறது பெஸ்ற் ரைமா?..”

“ம்..”

“நான் மாவிட்டபுரத்தில இறக்கிவிடுறன்..”

“தாங்ஸ்;.. அதுசரி.. உங்கட பேரை இன்னும் சொல்லயில்லை..”

இந்த அத்திவாரத்திலயிருந்து மளமளவென கட்டடம் கட்டத் தொடங்கினேன். வேகமென்றால் சொல்லி வேலையில்லை. கட்டடம் இரண்டாவது மாடிக்கு போக அவள் என்னோட நெருங்கியிருந்து கொண்டு என்ர காதுக்குள்ள குசுகுசுத்துக் கதைக்கத் தொடங்கினாள். என்ர ரெலிபோனை வாங்கி செக் பண்ணினாள். நானும் அவளின்ர ரெலிபோனை செக் பண்ணினன்.

கட்டடம் மூன்றாவது மாடிக்கு வர அவள் இடையிடையே என்ர தோளில சாய்ந்து இருந்த மாதிரியிருந்தது. எனக்கு ஒரு சின்ன சங்கடமாகவுமிருந்ததுதான். பஸ்சுக்குள்ள கன பேரிருக்கினம். என்ன நினைப்பினம். பிறகும் பார்த்தன், இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் வராது. பஸ்சில இருக்கிறதெல்லாம் தெரியாத ஆக்கள்தானே. நானும் அவளின்ர கையை பிடிச்சன்.

அவள் என்ர தோளில சாய்ந்திருந்ததினால் காற்றடிக்கும் போது அவளது தலைமுடி என்ர முகத்தில படர்ந்தது. உண்மையில் அது அற்புதமான பொழுதாகயிருந்தது. அவளின்ர கூந்தல் நல்ல வாசம் வேறு. அந்த நேரத்திலயும் எனக்கு பாண்டிய மன்னன்தான் ஞாபகத்திற்கு வந்தான். இப்ப யோசிக்க, அந்த மனுசனுக்கு வந்த சந்தேகத்தில ஒரு பிழை சொல்ல ஏலாமல் கிடக்குது.

நான் அவளிட்டக் கேட்டன் “ உம்மட கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமிருக்குதா..” என. அவள் ஐந்து நிமிடத்திற்கு குறையாத நேரம் விழுந்து விழுந்து சிரித்தாள். தான் இன்று காலையில்தான் நடிகை அனுஸ்க்கா விளம்பரம் செய்யும் சம்போ வைத்து முழுகியதாகவும், இல்லாவிட்டால் விசயம் தெரிந்திருக்குமெனவும் சொன்னாள்.
கட்டடம் இன்னும் கொஞ்சம் வளர, ரெலிபோன் நம்பருகளை பரிமாறிக் கொண்டோம். நம்பரை தந்துவிட்டு. “நைற்றில கோல் பண்ணுங்க..” என்றாள். கன சினிமாவில இப்பிடியான சீனுகளை பார்த்திருக்கிறன். இரண்டு பேரும் கட்டிலில படுத்திருந்து ரெலிபொனை காதுக்கள்ள வைச்சு குசுகுசுக்கிற சீனுகள் இனிமேல் என்ர வாழ்க்ககையிலயும் ஓடப் போகுது.

எங்கட சீற்றுக்குப் பக்கத்தில நிற்கிற ஒரு பொடியன் வைச்ச கண் எடுக்காமல் எங்களயே பார்த்துக் கொண்டிருக்கிறான். எனக்கு கொஞ்சம் சங்கடமாயுமிருந்தது. என்ர பிடியிலயிருந்து அவளின்ர கையை விடுவிச்சிட்டன். அவள் என்ர காதுக்குள்ள முணுமுணுத்தாள்- “நாறின மீனை பூனை பார்த்த மாதிரி ஒரு குரங்கு பார்த்துக் கொண்டு நிக்குது.. என்ன பிறப்புக்களோ.. ச்சா.. கொஞ்சமும் டீசண்ட்டில்லாமல்..”
அவனும் என்ர ரைப் பொடியன்தானோ என்னவோ. தமிழ் பண்பாட்டை காப்பாற்ற முயல்கிறானோ தெரியாது.

நானும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்து பார்த்தன். அவன் விட்டுக் குடுக்கிற மாதிரித் தெரியவில்லை. நானும் கனநேரம் விட்டுக் குடுத்துக் கொண்டு இருக்க ஏலாது. இந்தப் பயணமே பன்னிரண்டு கிலோமீற்றர்தூரப் பயணம்தான். இதுகளை யோசிச்சு சரிவராதென திரும்பவும் அவளின்ர காதுக்குள்ள குசுகுசுக்கத் தொடங்கினன்.
இடையில ஆமிக்காரர் அடையாள அட்டை செக் பண்ணிச்சினம். இறங்கிப் போகேக்க சொன்னாள் - “நீங்க என்னைவிட சரியான உயரம்..” - அவள் எதிர்காலத்தில மாலைமாற்றும்போது எற்படும் சிரமங்களை யோசிச்சிருக்கலாம்.

அடையாளஅட்டை பரிசோதித்த ஆமிக்காரன் ஒரு பொடித்தரவளி. ஒரு ரொமான்ஸ் சிரிப்போடு கேட்டான்- “கேர்ள் பிரண்ட்டா..”
நான் தலையாட்டினன். அவன் என்னைப் பார்த்து கண்ணடிச்சான்.
திரும்பவும் பஸ்சேறி கொஞ்ச தூரம் போனதும் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இவ்வளவு சனத்துக்குள்ளயும் முத்தம் குடுத்து பிரியிற அளவு துணிவு என்னட்டயிருக்கவில்லை. இரவு கட்டாயம் போன் பண்ணுவன் என்ற வாக்குறுதி கொடுத்து இறங்கினன்.

பஸ்சை விட்டு இறங்கியதும், அவள் யன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்து கையசைத்தாள். நான் கண்ணடிச்சன். அவள் தொலைபேசியை எடுத்துக் காட்டினாள்.

பஸ் போய்விட்டது. அவளுக்கு உடனடியாகவே அழைப்பு ஏற்படுத்த வேண்டும் போலிருந்தது. இரவு அழைப்பை ஏற்படுத்துவதாக சொல்லியிருந்தாலும், நான் உடனடியாகவே போன் பண்ணுவேனென அவளும் எதிர்பார்த்திருக்கலாம். அப்போது கொஞ்சம் பலமாக காற்று வீசியது. கண்களை மூடினேன். காற்று முகத்தை வருடியபடி கடப்பது, அவளது கூந்தல் முகத்தில படர்வது போலிருந்தது.

ஏனோ தெரியவில்லை, அந்த பேரூந்துதரிப்பிட பொடியன் என்னைப் பார்த்து சங்கடப்பட்டிருக்க தேவையில்லையென்று அப்போது பட்டது. யாரையும் பற்றி கவலைப்படாமல் அவன் அவளை முத்தமிட்டிருக்க வேண்டும். மிக நீண்ட நேரம். கன்னத்திலல்ல. உதட்டில்.
நன்றி : http://yokarnan.blogspot.fr/2011/06/blog-post_4490.html

Tuesday, December 30, 2014

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 10)

ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்பொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்கள். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன்.

GFCF டயட்


சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரோட்டீன்களை ஜீரணிக்க சிரமப்படும் இவர்களின் குடல் அப்புரோட்டீன்களை சரியாக ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலக்க விடுவதால் அது மூளையை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். இது எல்லாத் தரப்பு ஆராய்ச்சியாளர்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் நிறைய் பெற்றோர்கள் இவ்வகை டயட்டின் பின் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
க்ளூட்டின் என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரோட்டீன். கோதுமையை வாயில் வைத்து மென்று இருக்கிறீர்களா? சவ்வு மிட்டாய் மாதிரி ஒரு பதம் வருமே, அப்படி ஆன நிலையில் வெளிப்படுவது தான் க்ளூட்டின் என்று சொல்லப்படுகிறது.

கேசின் என்பது பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் இருக்கும் புரோட்டீன் வகையாகும்.  பால் தன் நிலையில் இருந்து மாறும் நிலையில் கேசின் உற்பத்தி ஆகிறது. இந்த புரோட்டீன்கள்முதலில் பெரிய உருவிலான பெப்ரைட்டுகளாகவும் பின்னர் சிறிய உருவிலான அமினோ அமிலங்களாகவும்   உடைக்கப்பட்டு ஜீரணிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சில ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இக்குறைபாடு உடைய குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்ததில் பெப்ரைட் உருவிலேயே புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த பெப்ரைட்டுகள் ஒரு வகையில் அபினின் தன்மையைக் கொண்டவை. எனவே ஒரு போதைப்பொருள் போல இவை ரத்தத்தில் கலந்து குழந்தைகளின் மூளையை பாதிப்பதன் விளைவே ஆட்டிசக் குழந்தைகளில் காணப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் என்பது இவ்வாய்வாளர்களின் கூற்று. ஆட்டிசம் மட்டுமல்லா ஸ்கீசோபிரினியா (schizophrenia) போன்ற வியாதிகளுக்கும் இந்த முழுமையாக ஜீரணிக்கப்படாத புரோட்டீன்களே காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் எல்லாக் ஆட்டிசக் குழந்தைகளுக்கும் இந்த தீர்வு ஒத்து வருவதில்லை. நாம் முன்பே பார்த்தது  போல எந்த ஒரு குழந்தைக்கும் ஆட்டிசம் ஏற்படுவதின் காரணம் இன்னதென்பதை திட்டவட்டமாகக் கண்டுபிடித்துவிட முடிவதில்லை. அக்குழந்தையின் ஆட்டிசத்திற்கான அடிப்படைக் காரணி இவ்வகை ஜீரணக் குறைபாடாக இருக்கும் பட்சத்தில், இந்த டயட் அவர்களிடம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். அப்படியில்லாது வேறெதேனும் காரணங்களால் அக்குறைபாடு ஏற்பட்டிருப்பின் இந்த டயட்டினால் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.


எது எப்படியிருந்தாலும் ஆட்டிசக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ஜீரணக்குறைபாடுகள் அதிகமாகக் காணப்படுவதும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் உண்மையே. உதாரணமாக ஆட்டிசக் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட சாத்தியக்கூறுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகம் என்று  ஆய்வொன்று நிறுவுகிறது.   இந்த GFCF டயட் நிச்சயமாக அந்த ஜீரணப்பிரச்சனைகளைக் குறைக்கிறது.

ஒரு சில குழந்தைகளுக்கு இது நம்பமுடியாத அளவுக்கு நல்ல பலன்களைத் தருகிறது – நடவடிக்கைகளில் விரும்பத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், பேசாத சில குழந்தைகள் பேசத்தொடங்கியதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர் கூறிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த முன்னேற்றங்கள் உடனடியாக வெளித்தெரிவதில்லை. மனித உடலிலிருந்து மறைய பால் சம்பந்தப்பட்ட கேசினுக்கு சில வாரங்களும், கோதுமை சம்பந்தப்பட்ட க்ளூட்டினுக்கு சில மாதங்களும் தேவைப்படும். எனவே குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இதை முயற்சித்துப் பார்த்தால் மட்டுமே நாம் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கை தேவை:

நம் சமூகத்தில் பால் என்பது குழந்தைக்கான முழு முதல் உணவாக கருத்தப்படுகிறது. குழந்தை சாப்பிட படுத்துகிறான்(ள்) என்றாலும் மல்லுகட்டி ஒரு டம்ப்ளர் பாலையாவது உள்ளே அனுப்புவது நம் குடும்பங்களில் வழக்கம். அதே போல் பிஸ்கெட்டுக்கு நிகரான சத்தான நொறுவைத் தீனி வேறெதும் இல்லையென்பதும் நம் ஆழ்ந்த நம்பிக்கை. எனவே இவ்விரண்டும் தவிர்த்த உணவுகள் மட்டுமே குழந்தைக்கு என்பது முதலில் கொஞ்சம் மருட்டவே செய்யும்.

ஆனால் யோசித்துப் பார்த்தால் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் இனமல்லாத உயிரின் பாலை உண்டு ஜீவிப்பதில்லை. எனவே மாட்டின் பாலை அருந்த முடியாமல் போவதாலேயே குழந்தை பெரிதாக எதையோ இழந்து விட்டதைப் போல் நினைத்து பயப்படத் தேவையில்லை.  அமெரிக்காவின் வீகன்ஸ்(vegan) குழுவினர் பால், முட்டை கூட கலக்காத அதி தீவிர சைவ பட்சிணிகளாக வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் எல்லாம் பால் இல்லாமலே கூட தேவையான கால்சியத்தோடு நல்ல உடல்நலத்தோடு வளரவே செய்கிறார்கள். ராகி போன்ற தானியங்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகள் என மற்ற கால்சியம் மிக்க உணவு வகைகளைக் கொண்டே குழந்தைகளை நல்ல வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம் பாரம்பரிய உணவு:

இணையத்தில் மேலோட்டமாகத் தேடினாலே கூட பாலும், கோதுமையையும் தவிர்த்த நிறைய சமையற்குறிப்புகள் கிடைக்கின்றன. மேலும் நம்முடைய பாரம்பரிய நொறுவைகளான முறுக்கு, தட்டை, சீடை என அரிசி மாவையும், கடலை மாவையும் அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ பலகாரங்கள் உண்டு.
பாலுக்கு மாற்றாக , சோயா பால் , முளை கட்டிய தானியங்கள் கொண்டு செய்யும் சுண்டல், சர்க்கரையில் இருக்கும் க்ளுக்கோஸின் அளவு இக்குழந்தைகளை மேலும் தூண்டி விடும் என்பதால், கருப்பட்டி சேர்த்த சத்துமாவுக் கஞ்சி என மாற்று ஏற்பாடுகளின் மூலம் குழந்தைகளின் சுவையையும் அதே நேரம் ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ள முடியும்.

ஆலோசனை அவசியம்:

எனினும் இந்த டயட்டை தொடங்குவதற்கு முன்னர் தங்கள் குழந்தையின் மருத்துவர்(pediatrician),  தங்களது தெரபிஸ்ட் ஆகியோரை ஒரு முறை கலந்து பேசி விட்டு இதை செயல்படுத்துதல் நலம். மேலும் செயற்கை நிறமூட்டும் பதார்த்தங்கள், சுவையூட்டும் பதார்த்தங்கள், சர்க்கரை,பிரிசர்வேட்டிவ்ஸ்(நீண்ட நாள் கெட்டுப்போகாமலிருக்க உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள்) மற்றும் இனிப்பூட்டும் பதார்த்தங்கள் போன்றவற்றையும் இக்குழந்தைகளுக்கு தவிர்த்தல் நலம்.

SCD – Diet

இதே போல எஸ்.சி.டி(SCD – Specific Carbohydrate Diet) என்றொரு டயட் முறையும் உள்ளது. க்ளூட்டின், கேசின் போன்ற புரதங்களைப் போலவே ஒரு சில கார்போஹைட்ரேட்களையும் ஜீரணிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என்றும், அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்பதுமே இந்த டயட்டின் கொள்கையாகும். உண்மையில் முதன்மையாக இது ஜீரணக் கோளாறுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு டயட் முறைதான். சிலர் இது ஆட்டிசத்திற்கும் பலனளிப்பதாகச் சொன்னாலும் பரவலாக அறியப்படாத ஒரு முறையாகவே இது உள்ளது.

வேதிப்பொருட்கள் – ஒவ்வாமை

உணவுப் பொருட்களைப் போலவே சுற்றுச்சூழலில் காணப்படும் வேதிப்பொருட்களும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பாதிக்கலாம். எனவே சூழலில் கையாளப்படும் வேதிப்பொருட்கள்(chemicals) குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டிற்கு வண்ணமடிக்கப் பயன்படும் பெயிண்ட்கள், துப்புரவுக்குப் பயன்படுத்தும் திரவங்கள் (பாத்திரம் தேய்க்க, வீடு துடைக்க பயன்படுத்துபவை), அலுமினியம் போன்ற சில வகை கன உலோகங்கள், நொதித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட்  போன்ற பொருட்கள் இக்குழந்தைகள் புழங்குமிடத்தில் இருந்தாலே அவை இக்குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உருவாக்க முடியும் என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இத்தகைய பொருட்களையும் நமது இல்லங்களில் குழந்தைகள் புழங்கும் இடங்களில் வைக்காமலிருப்பது நல்லது.

நன்றி : http://216.185.103.157/~balabhar/blog/?p=1187

பார்த்திபன் கனவு 24 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 14, "வயதான தோஷந்தான்!")

அத்தியாயம் 14, "வயதான தோஷந்தான்!"அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள்.

அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.

முதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர் சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்று ஆசி கூறினார்.

அவரைப் பார்த்துக் குந்தவி, “சுவாமி! இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும்? தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா? எங்கே போயிருந்தீர்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு அப்பர், “குழந்தாய்! தில்லைப்பதி வரையிலே தான் போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான் என்ன? இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா! அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான் என்னவென்று வர்ணிப்பேன்! அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாமே!” என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப் பாடினார்:-

“குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!”

பாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம் மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கியிருப்பாள். ஆனால் இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில் ஈடுபடவில்லை.

அப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை நோக்கி “சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒரு சிவனடியார் புதிதாகத் தோன்றி ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று வினவினாள்.

அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார், “என்ன குழந்தாய்! சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா? ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன்? நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்கு ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயர் எவ்வளவு பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள் வாக்கு! அவர் தாய்ப் பால் குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை! - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?” என்றெல்லாம் அப்பர் பெருமான் வர்ணித்துக் கொண்டே போனார்.

குந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு, “சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன். தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசை முளைக்காதவரல்ல் ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்” என்றாள்.

“குழந்தாய்! நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது! ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!” என்றார் நாவுக்கரசர்.

“நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம் தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாராம்...”

“என்ன சொன்னாய், அம்மா! அதிசயமாயிருக்கிறதே! அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை! நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும்? அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா? வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால், அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்.”

“நான் போய் வருகிறேன் சுவாமி!” என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:-

“முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், அதுதான் கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!”
தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

Thursday, December 25, 2014

" வேங்கையின் மைந்தன் " முன்னுரை

" வேங்கையின் மைந்தன் " முன்னுரை “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ”
- பாரதி 


ஆம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு
பெற்றிருந்த பேற்றை நினைக்கும் போது நம்முடைய மனம் பொங்கிப்
பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால் விம்முகின்றது. ‘எந்தாய் வாழ்க!
எந்தாய் வாழ்க!’ என்று உள்ளம் குளிர வாய் வாழ்த்தத் துடிக்கின்றது.
கங்கை வளநாட்டிலே தமிழரின் புகழ் மண்டி வளர்ந்தது. கடல் கடந்த
கடாரத்திலும், ஸ்ரீவிஐயத்திலும், பழந்தீவு பன்னீராயிரத்திலும், ஈழத்தின்
எண்திசையிலும் அவர் பெருமையே பேசப்பெற்றது. தமிழகத்தின் தனிக்
கொடியாகச் சோழர்களின் புலிக்கொடி இந்தப் பாரெங்கும் பட்டொளி வீசிப்
பறந்த நம்முடைய மாபெரும் பொற்காலம் அது.
பிற்காலச் சோழர்களில் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல்
திகழ்ந்த மாவீரர் இராஜராஜ சோழர், வீரத்தில் வேங்கையாகவும் அரசியல்
பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர். வேங்கையின் மைந்தன்
இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக
உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்ய மாளிகைக்
கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் பொற்கலசங்களை ஏற்றி வைத்தவர். தமிழ்ச் சாதி இந்தத் தரணி எங்கும் செருக்கோடு மிடுக்கு நடைபோட்ட
உன்னதமான காலம் அது.

மாமன்னர் இராஜேந்திரரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய
பொற்காலமும், எனக்கு இந்தக் கதையை எழுதுவதற்கு உற்சாகம் தருகின்றன.
அந்தப் பேரரசர்தாம் இந்தக் கதையின் நடு நாயகமாக விளங்குகிறார்.
என்றாலும் இதன் கதாநாயகன் சரித்திரச் சான்றுகளின் இடைவெளிக்குள்
மறைந்து கொண்டிருக்கும் ஒரு வீர இளைஞன், கொடும்பாளூர் வேளிர் குலக்
கொழுந்தான தென்னவன் இளங்கோவேள்.

சரித்திரச் சான்றுகள், இராஜேந்திரர் தம் தந்தையிடமிருந்து ஆட்சிப்
பொறுப்பேற்று மணி மகுடம் புனைந்து கொண்ட காலத்தில் அவருக்குச் சுமார்
ஐம்பது வயதென்று கூறுகின்றன. அவர் ஆட்சியின் மாபெரும் வரலாற்று
நிகழ்ச்சிகள் இன்னும் சில ஆண்டுகள் சென்றே நடைபெற்றிருக்கின்றன.
ஆகவே அந்த மன்னர் பெருமகளை இளம் கதைத் தலைவராக வைத்துக்
கொண்டு கற்பனைகளைச் சூழவிட்டால், அவருடைய பெருமைக்கு மாசாகுமே
என்று அஞ்சுகிறேன். எனினும் இந்தச் சரித்திரக் கற்பனையின் பின்னணியில்
தமக்கே இயல்பான இமயத்தின் கம்பீரத்துடன் அந்த வேங்கையின் மைந்தன்
பவனி வருகிறார்.

சோழர்களின் புலிக்கொடியைத் தமிழகத்தின் பொதுக்கொடியாக
ஏந்திக்கொண்டு திக்கெட்டிலும் பாய்ந்து சென்றனர் லட்சக்கணக்கான
மாவீரர்கள். அத்தகைய வீரர்களில் ஒருவனே இளைஞன் தென்னவன்
இளங்கோவேள். சோழர்களுக்காகவே போராடித் தியாகம் புரிந்த
கொடும்பாளூர்ப் பரம்பரையின் வழித்தோன்றல் அவன். இராஜேந்திரரைப்
பெற்றெடுத்த வீரத்தாய் வானவன் மாதேவியை எந்தக் கொடும்பாளூர்
வேளிர்குலம் பெற்றெடுத்ததோ அதே குலம்தான் இளங்கோவையும்
பெற்றெடுத்தது.

இளங்கோவேளின் இலட்சியக் கனவுகள், அவன் புகுந்த
போர்க்களங்கள், அவனது வீரம், காதல் முதலிய அகப்புறப் போராட்டங்கள் இவற்றையே நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

இராஜேந்திரரின் முதற் புதல்வி அருள் மொழி நங்கை அவனுக்கு முறைப்
பெண்தான். ஆனால் உறவு முறையும் அசர முறையும் ஒன்றாகுமா? மற்றொரு
பெண், சோழர் குலத்தையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வெறுத்து
ஒதுக்கும் குலத்தில் பிறந்த ரோகிணி. அப்படியிருந்தும் ஏன் அவளால்
இளங்கோவை வெறுக்க முடியவில்லை? ஏன் ஒதுக்க முடியவில்லை?

சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பிருந்தே பெருமையுடன் திகழ்ந்த பெரும்
நகரம் கொடும்பாளூர். சோழநாட்டிலிருந்து பாண்டியநாடு செல்லும் சாலையில்
இரண்டு நாடுகளுக்கும் எல்லையை வகுத்து விட்டு. இடையில் வளர்ந்த
சிற்றரசன் தலைநகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டு வந்த வேளிர்
குல மக்கள் எத்தனை எத்தனையோ வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக வாழ்ந்தபோதெல்லாம் தமிழ் மொழியும் வாழ்ந்தது. வள்ளல்
தன்மையும் வளர்ந்தது; புலவர் பெருமக்களும் பெருகினர்.

சங்க காலம் தொட்டு இலக்கியத்திலும் பிற்காலத்தின் வரலாற்றிலும்
அழியாப் பெயர் பெற்ற கொடும்பை மாநகரையும், இராஜேந்திரரின் வெற்றிச்
சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தையும், சரித்திரக் கற்பனைகளைக்
கிளறும் வேறு சில இடங்களையும் நேரில் சென்று பார்த்தேன்.
கொடும்பாளூரில் வேளிர்குல வீரர்கள் உலவிய இடங்களில் உலவினேன்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர மாமன்னர் மிதித்த தமிழ்
மண்ணை மிதித்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரங்கள்
எப்படியிருந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து பார்த்தேன். எங்கோ
வானத்தின் உச்சியில் நான் மிதப்பது போல் தோன்றியது. இன்றைய நிலையை
உற்று நோக்கினேன். இரண்டு சொட்டுக் கண்ணீர் மணிகள் என் விழிகளில்
திரண்டன. அவற்றை அரும்பாடுபட்டு என் இதயத்திலே தேக்கி வைத்துக்
கொண்டேன். அந்தக் கண்ணீர் சொல்லும் கதையே இந்த ‘வேங்கையின்
மைந்தன்.’ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கதையாக இதை
எழுதப்புகுந்தாலும் இன்றைய வாசகர்களுக்காக எழுதுவகை நான் மறந்து
விடவில்லை. முற்றிலும் வரலாற்றுப் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும்
மட்டிலுமே கொண்ட சரித்திரக் கதையல்ல இது. வரலாறு தழுவிய கற்பனைக்
கதை. கதாபாத்திரங்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். இன்னும்
சிலர் இக்கதையில் மட்டும் வாழ வந்திருப்பவர்கள். சரித்திரச் சான்றுகளை
என் கற்பனைக்குத் தேவையான அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும்
சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகள் கிடைக்காமையால் சிற்சில
இடைவெளிகளை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களல்லவா? அந்த
இடைவெளிகளின் வழியே இக்கற்பனையின் சில கொடிகளைப் படரச்
செய்திருக்கிறேன். வரலாற்று ஆசிரியர்களும் மாணவர்களும் கதாசிரியரின்
மனோ தர்மத்துக்கு மதிப்பளித்து இதை வரவேற்பார்கள் என்றே நம்புகிறேன்.

தமிழ்த் திருநாட்டை மீண்டும் பொன்விளையும் பூமியாக. புகழ் பெருக்கும்
தாயகமாக, அன்பும் அறிவும், அருளும் மலரும் கலைச் சோலையாக
உருவாக்க வேண்டுமென்ற ஆவலை வாசகர்களில் சிலரிடமாவது இந்தக் கதை
தூண்டிவிடுமானால் அதுவே எனது நோக்கத்தின் பயனாகும்.

அகிலன் 

Monday, December 22, 2014

பார்த்திபன் கனவு 22( இரண்டாம் பாகம், அத்தியாயம் 12, ராணியின் துயரம்)

அத்தியாயம் 12, ராணியின் துயரம்சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று.

"சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில் அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச் சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.

"அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா, அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார்.

மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம் நிறைந்து தோன்றின.

மாளிகை முன் மண்டபத்திலே புலித்தோல் விரித்திருந்த உயரமான பீடத்தில் சிவனடியார் அமர்ந்தார். அருள் மொழி கீழே வெறுந் தரையில் உட்கார்ந்தாள்.

"அம்மா! உன் மனத்தைக் கலங்க விடக் கூடாது" என்று சிவனடியார் ஆரம்பித்தபோது, அருள்மொழி அவரைத் தடுத்து துக்கம் பொங்கும் குரலில் கூறினாள்:

"ஐயோ! மனத்தைக் கலங்கவிடக் கூடாது என்கிறீர்களே? மனத்தைத்தான் நான் கல்லாகச் செய்து கொண்டு விட்டேனே? என் தேகமல்லவா கலங்குகிறது? குழந்தையை நினைத்தால் வயிறு பகீரென்கிறதே! குடல் எல்லாம் நோகிறதே! நெஞ்சை இறுக்கிப் பிழிவது போல் இருக்கிறதே! நான் என்ன செய்வேன்? - சுவாமி! விக்கிரமனைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்தீர்களே, அந்த வாக்கை நிறைவேற்றினீர்களா?"

"ஏன் நிறைவேற்றவில்லை அருள்மொழி நிறைவேற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனுடைய உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் என்று உனக்கு வாக்குக் கொடுத்தேன். அவனுடைய உயிரைக் காப்பாற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனை வீரமகனாகச் செய்வதாக அவனுடைய தந்தைக்கு வாக்களித்திருந்தேன். அதையும் நிறைவேற்றியே இருக்கிறேன். அம்மா! நீ மட்டும் அன்று காஞ்சியில் பல்லவ சக்கரவர்த்தியின் நீதி சபையில் இருந்திருந்தாயானால், உடல் பூரித்திருப்பாய்! பொய்யாமொழிப் பெருமான்,

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்று சொன்னது உன் விஷயத்தில் மட்டும் பொய்யாகப் போகுமா? சக்கரவர்த்தி எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னார் விக்கிரமனுக்கு. 'பல்லவ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிக் கப்பங்கட்டிக் கொண்டு வருவதாயிருந்தால் உன்னுடைய துரோகத்தை மன்னித்து சோழ நாட்டுக்கும் பட்டங் கட்டுகிறேன்!' என்றார். விக்கிரமன் அணுவளவாவது மனம் சலிக்க வேண்டுமே? மலையைப்போல் அசையாமல் நின்றான். அதுமட்டுமா? சக்கரவர்த்தியையே தன்னுடன் சண்டைக்கு அழைத்தான். 'நீர் வீரன் என்பது உண்மையானால் என்னுடன் வாட்போர் செய்ய வாரும்; என்னை ஜெயித்து விட்டுப் பிறகு கப்பம் கேளும்' என்றான். அவனுடைய கண்களிலேதான் அப்போது எப்படித் தீப்பொறி பறந்தது? அருள்மொழி! அதைப் பார்க்க நான் கொடுத்து வைத்திருந்தேன்; நீதான் அந்தப் பாக்கியத்தைச் செய்யவில்லை!"

ஆவலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள்:- "நான் பாக்கியமற்றவள்தான் அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி கொடுத்து விட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப் பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப்போகிறார் என்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து 'என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி விடுங்கள்!" என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்...."

"என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும் பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா! யோசித்துப் பார்!"

"ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போகமாட்டேன்! ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லி விட்டேன். ஆகா! அவர் தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்? கன்னியாகுமரியிலிருந்து இமய பர்வதம் வரையில் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும் இடமில்லாமல் போய்விட்டதே...."

"பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று அவர் ஆசைப்படவில்லையா? இரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்"

"ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்? விக்கிரமன் இன்று கடல்களுக்கப்பாலுள்ள இராஜ்யங்களைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தா போயிருக்கிறான்? எந்த காட்டுமிராண்டித் தீவில் கொண்டு போய் அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?"

"உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக் காட்டுக்குப் போனதில்லையா? இராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும். திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...."

"ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில் காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே? எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்; அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி.

"ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி! என்றைக்காவது ஒரு நாள் அவன் வந்து தான் தீருவான். தாயின் பாசமும் தாய் நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும். இந்த இரண்டு பாசங்களைக் காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை...." என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார்.

"என்ன சொல்லுகிறீர்கள், சுவாமி!"

"ஆமாம்; தாயின் அன்பையும் தாய்நாட்டுப் பற்றையும் காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவனைத் திரும்பவும் இத்தேசத்துக்கு வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளிலுள்ள காந்த சக்தி தான். அம்மா! நான் இன்று பற்றை அறுத்த துறவியானாலும் பூர்வாசிரமத்தில் ஸ்திரீ பிரேமையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்தவன்...."

"இது என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே? விக்கிரமனுக்கும் ஸ்திரீ பிரேமைக்கும் என்ன சம்பந்தம்?" என்று வியப்புடன் கேட்டாள் அருள்மொழி.

சிவனடியார் புன்னகையுடன் கூறினார்:- "ஒவ்வொரு தாயும் மகனைப் பற்றி இப்படித்தான் வெகுகாலம் எண்ணிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் நேருக்கு நேர் உண்மையைக் காணும் போது திடுக்கிடுகிறாள். நீயாவது முன்னாலேயே தெரிந்துகொள், அம்மா! உன் மகன் விக்கிரமன் காஞ்சி நகரின் வீதியில் ஒரு கன்னியைச் சந்தித்தான். அவனைக் குறுக்கும் நெடுக்குமாய்ச் சங்கிலியால் பிணித்துக் குதிரைமீது கூட்டிக்கொண்டு போன போதுதான் அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே அந்தப் பெண்ணும் தன்னுடைய உள்ளத்தை அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள். இது நான் கேட்டும் ஊகித்தும் அறிந்த விஷயம். ஆனால் நேரில் நானே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன். மாமல்லபுரத்துக் கடற்கரையில் விக்கிரமனை ஏற்றிச் சென்ற கப்பல் கிளம்பப் கரையோரமாய்ச் செல்ல ஆரம்பித்த சமயத்தில், அந்தப் பெண் காஞ்சியிலிருந்து ஓடோடியும் வந்து சேர்ந்தாள்; மறுபடியும் அவர்களுடைய கண்கள் சந்தித்தன; உள்ளங்கள் பேசிக் கொண்டன; காதலும் கனிவும் ததும்பிய அந்தப் பெண்ணின் விசால நயனங்களை விக்கிரமனால் ஒருநாளும் மறக்க முடியாது. இரவிலும் பகலிலும் விழித்திருக்கும் நிலையிலும் தூக்கத்திலே கனவிலும் அந்தப் பெண்ணின் மதிவதனம் அவன் முன்னால் தோன்றிக் கொண்டுதானிருக்கும். எங்கே இருந்து எந்தத் தொழில் செய்தாலும், எத்தகைய இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் விக்கிரமன் அந்தப் பெண்ணை மறக்க மாட்டான். என்றைக்காவது ஒருநாள் அவளைப் பார்க்கும் ஆசையுடன் அவன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தே தீருவான்."

இத்தனை நேரமும் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அருள்மொழி "ஐயோ! எனக்கு மிஞ்சியிருந்த செல்வமெல்லாம் என் பிள்ளையின் அன்பு ஒன்றுதான், அதற்கும் ஆபத்து வந்துவிட்டதா? அந்தப் பெண் யார் சுவாமி!" என்று தீனக்குரலில் கேட்டாள்.

"பல்லவச் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி"

"ஆகா! என் பதியினுடைய பரம சத்ருவின் மகளா? சுவாமி! என்னமோ செய்கிறதே! தலையைச் சுற்றுகிறதே!" என்றாள் அருள்மொழி. அடுத்த கணம் தரையில் மூர்ச்சித்து விழுந்தாள்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

Thursday, December 18, 2014

பார்த்திபன் கனவு 23 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 13, சிவனடியார் கேட்ட வரம்)

அத்தியாயம் 13, சிவனடியார் கேட்ட வரம்


ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் "நில்லுங்கள்" என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.

"சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" என்று மெலிவான குரலில் கேட்டாள்.

"உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்" என்றார் சிவனடியார்.

அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!" என்றாள்.

"சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்..."

"ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா? சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கி விட்டான்? விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா....?"

"கொஞ்சம் பொறு அருள்மொழி! அவசரப்பட்டுச் சாபங்கொடுக்காதே!" என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார். அவர் மகா புத்திமானாயிருந்தும் அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை எதிர்பார்க்கவில்லையென்று தோன்றியது.

"இதோபார் அம்மா! உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் பார்த்ததுதான்! அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்!" என்றார் பெரியவர்.

"நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன். சுவாமி! விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும்! ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்!"

"உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார், அருள்மொழி! உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா?"

"அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி! தங்களிடம் சொல்லுவதற்கு என்ன? வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனத்தில் சில சமயம் தோன்றியதுண்டு. `அவ்விதம் ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும் பல்லவ குலத்துக்கும் உள்ள பகை தீர்ந்துவிடுமே!' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!"

"அருள்மொழி! நீ அந்தக் குழந்தை குந்தவியைப் பார்த்ததில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் வெறுப்பாகப் பேசுகிறாய்...."

"தாங்கள் பார்த்திருக்கிறீர்களா, சுவாமி?"

"பார்த்திருக்கிறேன்; நெருங்கிப் பழகியுமிருக்கிறேன். என்னிடம் குந்தவிக்கு ரொம்பவும் பக்தி விசுவாசமுண்டு. அம்மா! சிவஞான இன்பத்தின் சுவை கண்ட எனக்கு இந்தக் காலத்தில் வேறு எதன் மீதும் பற்றுக் கிடையாது. ஆனால் அந்தக் குழந்தையின் பாசம் மட்டும் போக மாட்டேன் என்கிறது. அவளோடு இரண்டு நாள் பழகிவிட்டால் நீயும் அவ்விதந்தான் அவளிடம் பாசம் வைப்பாய்..."

"வேண்டாம்! எனக்கு ஒருவரையும் இனிமேல் பார்க்க வேண்டாம்; பழகவும் வேண்டாம்; இந்த உலகை விட்டுச் சென்று என் பதியை மீண்டும் அடையும் நாளை நான் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்...."

"அருள்மொழி! ஒரு காலத்தில் என்னை நீ ஒரு வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய். அதன்படியே உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றினேன். உன் பதியின் மரணத்தறுவாயில் நான் அளித்த வாக்கையும் காப்பாற்றினேன். இதெல்லாம் உண்மையா, இல்லையா?"

"ஆமாம் உண்மைதான்."

"அதற்கெல்லாம் பிரதியாக இப்போது நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கப் போகிறேன். அதை நீ தட்டாமல் கொடுக்க வேண்டும்."

"சிவசிவா!" என்று சொல்லிக்கொண்டு அருள்மொழி எழுந்து கைகூப்பி நின்றாள்.

"சுவாமி! இவ்விதம் என்னை அபசாரத்துக்கு உள்ளாக்கலாமா? அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா? எனக்குக் கட்டளையிட வேண்டியவர், தாங்கள்" என்றாள்.

"சரி கட்டளையிடுகிறேன், அதைத் தட்டாமல் நிறைவேற்ற வேண்டும்."

"தங்களுடைய வார்த்தையை நான் தட்டுவேனா? ஒருநாளும் இல்லை."

"அப்படியானால் சொல்லுகிறேன், கேள்! என்றைக்காவது ஒருநாள் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி உன்னிடம் வருவாள். அவள் தாயில்லாப் பெண், தாயின் அன்பு இன்றி அவளுடைய இருதயம் உலர்ந்து போயிருக்கிறது. அதனால் தான் அம்மா, எனக்குக்கூட அவள்மேல் அவ்வளவு பாசம். அந்தக் குழந்தை உன்னிடம் வரும்போது அவளை நீ நிராகரிக்காதே. அன்புடன் உன் மகளைப் போல் ஏற்றுக் கொள். உன் மனப்புண் ஆறுவதற்கும் அது அனுகூலமாயிருக்கும்!" என்றார் சிவனடியார். அவருடைய கனிவு ததும்பிய குரலும் வார்த்தைகளும் அருள்மொழியின் மனத்தை உருக்கிவிட்டன.

"தங்கள் ஆணைப்படி நடக்க முயற்சி செய்கிறேன். சுவாமி! ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி அன்பு செலுத்துவது எப்படி....?"

"தந்தை செய்த தீங்குக்காக மகளை வெறுப்பது என்ன நியாயம், அம்மா? மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள். விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாள் தெரியுமா? இதுநாள் வரையில் தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசி அறியாதவள், விக்கிரமனுக்காகச் சக்கரவர்த்தியிடம் எவ்வளவோ சண்டை பிடித்தாள்...."

"அப்படியா சுவாமி? அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் ஆசை உண்டாகிறது. ஆனால் அவள் எதற்காக இந்த அபாக்கியசாலியைத் தேடிக் கொண்டு வரப்போகிறாள்?"

"இல்லை, அம்மா! இல்லை நீ அபாக்கியசாலி இல்லை. விக்கிரமனைப் போன்ற வீரப் புதல்வனைப் பெற்ற உன்னை அபாக்கியசாலி என்று சொல்ல முடியுமா? குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்; சீக்கிரத்திலேயே வருவாள்!" என்றார் சிவனடியார்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr

பார்த்திபன் கனவு 21( இரண்டாம் பாகம், அத்தியாயம் 11, பொன்னனின் சந்தேகம்)


( இரண்டாம் பாகம், அத்தியாயம் 11, பொன்னனின் சந்தேகம்)பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதி பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது.

"பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்?" என்று சிவனடியார் கேட்டார்.

"அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்...."

"என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?"

"ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய வேண்டியதுதான். நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா? ஆனால், சுவாமி! என்னத்துக்காக நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? மகாராணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்..."

"மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா? நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா?"

"வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி? ஆகா! அந்தக் கிழவனின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்?"

"வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான் பொன்னா?"

"கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை என்ன நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள் கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும் வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள் கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள். இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார். கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். 'வீரவேல்! வெற்றி வேல்! விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!' என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா! அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி? கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத் தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார். இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக் கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய் விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன் எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்."

"அதில் ஆச்சரியம் என்ன பொன்னா! வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன? சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது" என்றார் சிவனடியார்.

சற்றுப் பொறுத்து, "அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டார்.

"அப்புறம் என்ன? இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோம். அவர் விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் 'ஆகா' என்று கதறிக் கொண்டு அவர் விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, "நிறுத்து பொன்னா!" என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. 'மகாராஜா! உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா?' என்று கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான் கண்ணை விழித்தேன்."

"ஓகோ! காராக்கிரகத்தில் வேறு இருந்தாயா? அப்புறம் எப்படி விடுதலை கிடைத்தது?"

"மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர மற்றவர்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்" என்றான் பொன்னன்.

"சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா? உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும்? அதனால் தானே அவரைச் சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது" என்றார் சிவனடியார்.

"ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்; பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்!" என்றான் பொன்னன். பிறகு, "நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா, சுவாமி?" என்றான்.

"ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான் பிரஸ்தாபம். ஏது பொன்னா! சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே! சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே! இப்போது பார்த்தாயா? உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச் சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது!"

"ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி உண்டாகியிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த வேலை ஒரு கையால் எடுத்தான்.

"இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி; அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான்.

சிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது. "பொன்னா! நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன?" என்றார்.

பொன்னன் வேலைக் கீழே போட்டான்.

"சுவாமி! சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்; மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர் எனக்குப் பரம சத்துரு! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு நேர் காண்பேன் அப்போது...." என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான்.

சிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்" ஏன் பொன்னா! அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா?" என்று கேட்டார்.

"அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்? அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான்? ஆனால் சுவாமி! அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள் எல்லாருமே ஏமாந்துவிட்டோம். வள்ளி ஒருத்தி மட்டும், "பூபதி பொல்லாத வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு" என்றான் பொன்னன்.

"வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா! சந்தேகமேயில்லை, அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்..."

"என்ன சொன்னீர்கள், சுவாமி!"

"வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்றேன்." "நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன் சொன்னதுண்டு."

"யார் அது?"

"மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த காலத்தில் அப்படிச் சொன்னான்."

"ஓகோ!"

"எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா? தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்."

"தாராளமாய்ச் சொல்லு; பொன்னா! நான் சந்நியாசி; ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்."

"நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ - என்று தோன்றுகிறது."

சிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, "இதைப் பற்றி வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா?" என்றார்.

"வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. 'நயவஞ்சகனை நம்பி மோசம் போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்!' என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது. என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்."

"நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள் புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத் தகுந்தவன்தான்!"

"ஆமாம் யார் கண்டது? விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்."

"இரண்டும் நடக்கக் கூடியதுதான்."

"ஆகா! இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி! அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு! அதைக் காட்டிலும் ஒரே அடியாக உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை...."

"நீ சொல்வது தவறு பொன்னா! உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே!" என்று சிவனடியார் வியப்புடன் சொன்னார்.

அப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன் பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, "சுவாமி! ஏதோ நான் தெரியாத்தனமாக உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்" என்று உண்மையான பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.
தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html