Saturday, February 28, 2015

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 15, நம்பிக்கை தரும் மனிதர்கள் 01 )

நம்பிக்கை தரும் மனிதர்கள் 01 


பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.
ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது. மேலே படத்தில் இருக்கும் நபரின் பெயர்  ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பது ஆகும்.


உலக அளவில் இவரை கொண்டாடுகிறார்கள். வெறும் பதினைந்து நிமிடங்கள் பார்த்த காட்சிகளை, அதுவும் ஏரியல் வியூ என்று சொல்லப்படுகிற, பறவைப் பார்வையில் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியங்களாக வரைகிறார்.
எவ்வித அவுட்லைனும் இல்லாமல்.. நேரடியாகவே பேனா மூலம் படம் வரைய ஆரம்பிக்கிறார்.

1974ல் லண்டனில் மேற்கிந்தியப் பாரம்பரியம் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த இவர் பொதுவான ஆட்டிசக் குழந்தைகளைப் போலவே பேச்சு, சமூகத் தொடர்பு போன்ற திறன்கள் அற்றவராகவே சிறுவயதில் இருந்தார். ஐந்து வயதாகும் போது பள்ளியில் இவரது ஓவியத் திறமை வெளிப்படத் தொடங்கிற்று.
பேசமுடியாத அவர், படங்கள் வரைவதில் மிகுந்த ஆவமுடையவராக இருந்திருக்கிறார். அந்த ஓவியப் பொருட்களை அவரிடமிருந்து பிடுங்கி வைத்துக் கொண்டுதான் அவரது ஆசிரியர்கள் வில்ட்ஷைரின் முதல் வார்த்தையை வலுக்கட்டாயமாக உச்சரிக்க வைத்தார்கள். ஐந்து வயது வரை எதுவுமே பேசாதிருந்த அவர் முதலில் சொன்ன வார்த்தை “பேப்பர்” என்பதுதான்.
இப்படி ஆரம்பித்து ஒன்பது வயதுக்குள் ஒரளவு முழுமையாகப் பேசக் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் கார்களையும், விலங்குகளையும் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தவரது கவனம் நகரங்களை அச்சு அசலாக வரைவதில் திரும்பியது.
ஹெலிகாப்டரின் மீதிருந்து எந்த ஒரு நகரத்தையும் ஒரு முறை முழுவதுமாகப் பார்த்துவிட்டால் பின்னர் தன் நினைவிலிருந்து அந்த நகரை தத்ரூபமாக வரைந்து விடுகிறார். ரோம், டோக்கியோ, ஹாங்காங்க் என பல நகரங்களை இவர் இப்படி ஓவியமாக்கியிருக்கிறார்.

ரோம் நகரை இவர் ஹெலிகாப்டரில் இருந்து பார்துவிட்டு இவர் வரைவதை முழுவதுமாக வீடியோவில் இங்கே பார்க்கலாம் –http://www.youtube.com/watch?feature=player_embedded&v=a8YXZTlwTAU

2006ல் ஸ்டீபன் பிரிட்டீஷ் அரசவையின் உறுப்பினராக அவரது கலைச்சேவையைப் பாராட்டி நியமனம் செய்யப்பட்டார். MBE (Member of the Order of the British Empire)  எனப்படும் இவ்விருது இங்கிலாந்தின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகும்.  லண்டனிலும், நியூயார்க்கிலும் தன்னுடைய சொந்த ஆர்ட் கேலரிகளை நடத்தி வருகிறார்.

இவரது வலைத்தளம் இது.  http://www.stephenwiltshire.co.uk/biography.aspx

தொடரும் 

நன்றி : http://blog.balabharathi.net/?page_id=25

Saturday, February 21, 2015

பார்த்திபன் கனவு 31 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 21, வள்ளியின் சாபம்)

இரண்டாம் பாகம், அத்தியாயம் 21, வள்ளியின் சாபம்

நன்றி :http://www.noolulagam.com/book_images/9514.jpg

பொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டியவனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப் பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான்.

"பூபதி! இதற்கு என்னச் சொல்கிறாய்?" என்று சக்கரவர்த்தி இடிக் குரலில் கேட்கவும், மாரப்பனுக்கு மறுபடியும் தூக்கிவாரிப்போட்டது. ஆத்திரத்தினாலும், கோபத்தினாலும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

"பிரபோ! இவன் சொல்வது பொய், பொய், பொய்! இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவுதான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்ம பல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்...."

அப்போது, "பாவி! துரோகி!" என்ற மெல்லிய பெண் குரல் கேட்டது.

சக்கரவர்த்தி "யார் அது?" என்று அதட்டிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தக் குரல் வள்ளி நின்ற திசையிலிருந்துதான் வந்தது. ஆனாலும் வள்ளி சக்கரவர்த்தி அந்தப் பக்கம் பார்த்தபோது பரம சாதுவைப் போல் நின்றாள்.

மாரப்பன் சிறிது தைரியமடைந்து, "பிரபோ! விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியும்! சத்தியமாய்த் தெரியும்! சமூகத்தில் கட்டளை பிறந்தால் சொல்லுகிறேன்" என்றான்.

"சொல்லு; தைரியமாய்ச் சொல்லு!" என்றார் சக்கரவர்த்தி.

"ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார் இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்."

இதுவரை மௌனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு "உமக்கு எப்படித் தெரியும்? அந்த கபட சந்நியாசியை நீர் பார்த்திருக்கிறீரா?" என்று கேட்டாள்.

"ஆமாம், தேவி! இந்தக் கண்களாலேயே பார்த்திருக்கிறேன். இதோ சாதுபோல் நிற்கிறானே, இந்தக் ஓடக்காரனுடைய குடிசையில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துச் சதியாலோசனை செய்து வந்தார்கள். அந்தக் கபட சந்நியாசியின் சடையைப் பிடித்துக் குலுக்கி அவனை இன்னாரென்று வெளிப்படுத்த நான் பிரயத்தனம் செய்தேன். இந்தப் பொன்னனும் வள்ளியும் தான் அதைக் கெடுத்தார்கள்."

"என் பேச்சை எடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்" என்று வள்ளி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

சக்கரவர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகையுடன், "பெண்ணே! அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம்! உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாமல் சொல்லு!" என்றார்.

உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, "பிரபோ! இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார் என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும் உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை "இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்" என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தை மாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்...." என்றாள்.

"நிறுத்து பெண்ணே! போதும் சாபம் கொடுத்தது!" என்று சக்கரவர்த்தி சொல்லி, குந்தவியை நோக்கிப் புன்னகையுடன் "பார்த்தாயா அம்மா!" என்றார்.

"பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள்! இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மை சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா! ஒவ்வொருவரும் மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்" என்றாள் குந்தவி.

அப்போது சக்கரவர்த்தி மாரப்ப பூபதியைப் பார்த்து, "பூபதி! உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப் பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்க வேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம்!" என்று மிகக் கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான்.

அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் "ஓடக்காரா! நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு! அவருடைய மந்திரத்தில் அவள் ரொம்பவும் மயங்கியிருக்கிறாள்போல் தோன்றுகிறது" என்றார்.

அப்போது வள்ளியின் முகத்திலே நாணத்தின் அறிகுறி தோன்றியது. திடீரென்று அது புன்னகையாக மாறியது. தலை குனிந்த வண்ணம் சக்கரவர்த்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் பொன்னனைத் தொடர்ந்து வெளியே சென்றாள். சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறிய திசையைப் பார்த்த வண்ணம் "நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் இந்த வள்ளியைப்போல்..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.

"அது இருக்கட்டும், அப்பா! ஏதோ ஓலை வந்ததே? அது என்ன!" என்று குந்தவி கேட்டாள்.

"போலிச் சிவனடியாரைப்பற்றி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியே சென்று அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்" என்றார் சக்கரவர்த்தி.

"அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார்? அப்பா! ஒருவேளை நமது அப்பர் பெருமானோ? அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாக நினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றாள் குந்தவி.

"குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும் மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய்! இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதி அடிகள்."

"யார்? உங்களுடைய பழைய சேனாதிபதியா? உங்களுடன் வாதாபிக்கு வந்து புலிகேசியை வெல்ல உதவி புரிந்தவரா?"

"அவர் உதவி புரியவில்லை, குந்தவி! அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம் செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமது பெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். "சிறுத் தொண்டர்" என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்."

"அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார்? அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதா?" என்று குந்தவி கேட்டாள்.

"இல்லை; அவருக்கு அப்படி ஒன்றும் வயசாகவில்லை. அவர் சேனாதிபதி பதவியை விட்ட காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன். இப்போது அவர் வரும் நேரம் ஆகிவிட்டது" என்றார் சக்கரவர்த்தி.

பிறகு, "குந்தவி! பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும் வருகிறாயா?" என்று கேட்டார்.

"அவசியம் வருகிறேன், அப்பா! அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை!" என்றாள் குந்தவி.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html

Thursday, February 19, 2015

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 14)

ஆட்டிசம்- பத்துகட்டளைகள்


ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சொல்லுவதற்கு பல விசயங்கள் உண்டு. முன்னமே பல முறை சொன்னது போல, ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அதனால் அக்குழந்தைகளை கையாள்வது என்பதற்கு எவரும் இதுதான் வழிகள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது.
அதேசமயம், இன்னொரு ஆட்டிசக்குழந்தையின் பெற்றோரிடம் பேசும் போது, அவர்களின் வாயிலாக பல அனுபவங்களைப் பெறமுடியும். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளையும், அவர்களுக்கு என இயங்கிவரும் பல தெரபிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் எனக்குத்தெரிந்து ஆட்டிசப்பதிப்புக்குள்ளான ஒரு குழந்தையின் பெற்றோர் தம் அனுபவங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவே இருக்கின்றனர். இதுதான் இக்குழந்தைகளின் பெற்றோருக்கு பெரிய ஆறுதலான விசயம்.

Jene Aviram என்ற மேலைநாட்டவர் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான குழந்தையின் பெற்றோருக்கு, பத்துகட்டளைகளை குறிப்பிட்டுள்ளார்.
இதே செய்தியினை நாம் முந்தைய கட்டுரைகளை பார்த்திருக்கக்கூடும். அவை நான் பார்த்த பெற்றோர்களின் வழியாகவும், தெரபிஸ்டுகள், மருத்துவர்கள் வழியாகவும் கிடைக்கப்பெற்றவை. ஆனாலும், இக்கட்டளைகள் எனக்கு மிகவும் முக்கியமானதாகப்படுவதால்.. அதனை தமிழில் தந்திருக்கிறேன்.
++++++

1. வருந்துவதில் தவறில்லை:

உங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்ற விஷயத்தைக் கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும். இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? திருமணமாகுமா? முதலில் பேச முடியுமா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும். உங்கள் குழந்தையைப் பற்றிய கனவுகள் நொறுங்கும் நொடியில் ஏன் என்ற ஒற்றைச் சொல் கதறலாய் உங்களிடமிருந்து வெளிப்படலாம்.

இப்படியெல்லாம் குமுறுவதில் தவறேயில்லை. ஆனால் அதற்கு ஒரு கால வரையறை செய்து கொள்வது நல்லது. உங்கள் ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காது விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வுக்கு தயார் செய்ய ஆர்மபியுங்கள்.

2. உங்களை நீங்களே நம்புங்கள்:

ஆட்டிசத்திற்கான சிகிச்சையில்  ABA, RDI, Son Rise, OT, PT பேச்சுப் பயிற்சி, விட்டமின்கள், உணவு கட்டுப்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் உண்டு. எதிலிருந்து துவங்குவது என்ற குழப்பம் இயல்பானதுதான். உங்களைப் போன்ற மற்ற பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்து பேசுவது உங்களுக்குத் தெளிவைத் தரக்கூடும். உங்கள் முன்னாலிருக்கும் சிகிச்சை முறைகளைப் பற்றி ஆராயும் முன் ஒரு விஷயத்தை உங்கள் மனதில் பதித்துக் கொள்ளுங்கள் – உங்கள் அளவுக்கு உங்கள் குழந்தையை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர் வேறு யாரும் இல்லை. ஒரு சிகிச்சை முறை உங்கள் குழந்தைக்கு சரியான விளைவைத் தரவில்லை என்று தோன்றினால் அதை உடனடியாக நிறுத்த தயங்க வேண்டாம். அதுவரை அம்முறையில் செலவழித்த காலத்தையும், பணத்தையும் நஷ்டமாக எண்ண வேண்டாம். உங்கள் குழந்தைக்கு எது ஒத்து வரும் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு படி முன்னேறியிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

3. பெருமையடையுங்கள்:

ஒரு பொது இடத்தில் வரிசையில் நிற்கையில் உங்கள் குழந்தை திடீரென அமைதியிழந்து கைகளைத் தட்டவோ குதிக்கவோ செய்யலாம். உடனடியாக நீங்கள் சுற்றியுள்ளோரை மன்னிப்புக் கேட்கும் வகையில் பார்க்காதீர்கள். ஏனெனில் சுற்றியுள்ளவர்கள் அதை வைத்தே உங்கள் குழந்தையை குறைத்து மதிப்பிடுவர். அது உங்கள் குழந்தையின் சுயமதிப்பை குறைக்கும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைப் போல் நடந்து கொள்வதில்லை என்பதனாலேயே அவர்கள் செய்கை தவறானதல்ல. பொறுமையுடன் உங்கள் குழந்தையை நோக்கிப் புன்னகையுங்கள். அதுவே சுற்றியிருக்கும் மற்றவரின் செய்கையை மாற்றும். அவர்கள் உங்கள் குழந்தையை கனிவோடும், உங்களை மரியாதையோடும் பார்க்கத் துவங்குவார்கள். உங்கள் குழந்தை மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் நீங்கள் அதைச் செய்து காட்டுங்கள்.

4. நாட்கள் ஓடுவதை எண்ணிக் கவலை வேண்டாம்:

நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு சில மைல்கற்களை நிர்ணயம் செய்து கொண்டு அதன்படி நடக்காவிட்டால் கவலைப்படுகிறார்கள். ஐந்து வயதிற்குள் பேச வேண்டும், பத்து வயதுக்குள் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் என்பது போன்ற இம்மாதிரியான பதட்டங்கள் தேவையில்லை. இன்று சகஜமான வாழ்வு வாழ்ந்து வரும் எத்தனையோ ஆட்டிச பாதிப்புக்குட்பட்ட மனிதர்கள் பத்து வயது வரை ஏன் அதற்கு மேலே கூட பேச்சு வராமலிருந்தவர்கள்தான். இன்று அவர்கள் ஒரு பயனுள்ள வாழ்வை வாழவும், அர்த்தமுள்ள உறவுகளைப் பேணவும் முடிகிறது.

எதோ ஒரு மாய நொடியில் திடீரென உங்கள் குழந்தை எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம் அல்லது நிதானமாகவும், படிப்படியாகவும் கற்றுக் கொள்ளலாம். உங்கள் கடமை எப்போதும் உங்கள் குழந்தைக்கு துணை நிற்பதும், தான் நினைக்கும் எதையும் தன்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அந்தப் பிஞ்சு மனதில் விதைப்பதும்தான்.

5. தேவையில்லாத குற்றவுணர்வு:

வேலைக்குப் போவது, குழந்தையின் தெரப்பிக்கு அழைத்துப் போவது, வேறு தெரப்பி மாற்ற வேண்டியிருந்தால் முடிவு செய்வது, குழந்தையை குளிப்பாட்டுவது, சமைத்தல், குழந்தையின் உணர்ச்சி வெளிப்பாடுகளை சமாளித்தல் என ஒரு சிறப்புக் குழந்தையின் பெற்றோராக உங்கள் சுமை மிகவும் அதிகம். வேலைகளுக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போது உங்களை குற்றவுணர்வு வாட்டலாம். நான் இப்படி ஓய்வெடுக்கக் கூடாதோ, இந்த நேரத்திலும் கூட குழந்தைக்கு உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் அதே நேரம் மற்ற பெற்றோர்கள் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்ற ஆச்சரியமும் உங்களுக்குள் எழும். சொல்லப் போனால் எல்லாப் பெற்றோருமே இப்படியான சிந்தனைகளோடுதான் போராடுகிறார்கள்.  இந்த தேவையற்ற குற்ற உணர்வை உதறுங்கள். உங்கள் வலிமிகுந்த, சிக்கலான வாழ்வில் சிறிது நேர ஓய்வு உங்களுக்கு அத்யாவசியமானது. உங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டால்தான் உங்கள் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்.

6. பார்வைக் கோணத்தை மாற்றுங்கள்:

நம்மில் பலரும் நல்ல படிப்பு வேலை, நல்ல வேலை, நிறைய சம்பளம், திருமணம், குழந்தை என்பதுதான் ஒரு மகிழ்சியான வாழ்விற்கான சூத்திரம் என்று எண்ணுகிறோம்.  உண்மையில் இந்த பட்டியல் மட்டுமே மகிழ்சியான, நிறைவான வாழ்வு என்பதை வரையறுப்பதில்லை. இதே வரிசையில் நம் குழந்தையின் வாழ்வு அமையாமல் போய்விடுமோ என்றே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் பெரும்பாலும் பயப்படுகின்றனர். நிச்சயமாக உங்கள் குழந்தை தான் விரும்பும் வாழ்வை வாழ முடியும் – ஆனால் அது உங்கள் வரையரைக்குள் வரவேண்டும் என்பதில்லை. நாம் எபப்டி இருக்கிறோமோ அப்படியே நம்மை மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் பொதுவான எதிர்பார்ப்பு. ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்டவர்களும் அப்படியே எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து நம் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காமல் அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு துணை நில்லுங்கள்.

7. வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்:

ஒரு சில நாட்கள் உங்கள் குழந்தை மிக நட்புடன் எல்லோரிடமும் நடந்து கொண்டு, உங்களுக்கு மகிழ்ச்சியூட்டலாம். அன்றைய தருணங்களை ஒரு டைரியில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். என்றேனும் சில நாட்கள் உங்கள் குழந்தை மன அழுத்தத்தால் தாறுமாறாக நடந்து கொண்டு உங்களை சோர்வுறச் செய்யலாம். அத்தகைய நாளில் முன்னால் எழுதி வைத்த நாட்குறிப்பை படித்துப் பாருங்கள் – உங்கள் சோர்வு பறந்து போகும்.

8. சுயமாக வாழக் கற்றுக் கொடுங்கள்:

உங்கள் குழந்தைக்கு சுயமாக வாழக் கற்றுத்தர முயற்சியுங்கள். தன் உடையின் சிப்பை போட குழந்தை தடுமாறும் போது நாமே அதைப் போட்டுவிட கை துறுதுறுக்கும்தான். ஆனால் பொறுமையாக எப்படிப் போடுவது என்பதை சொல்லித்தருவதே சரியான அணுகுமுறை. நீங்கள் எப்போதும் உதவிக்கொண்டே இருந்தால் தனித்து இயங்க முடியாத நிலையில் உங்கள் குழந்தை அவஸ்தைப்பட நேரிடலாம். தேவையான உணவுகளைத் தயாரித்துக் கொள்வதில் தொடங்கி எந்த ஒரு விஷயத்தையும் அதன் நுனி முதல் அடிவரை சரியான முறையில் உங்கள் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாத விஷயத்தை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள். சுயமதிப்புடனும், தைரியமாகவும் உங்கள் குழந்தை வாழ வழி செய்யுங்கள்.

9. அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:

நிபந்தனையற்ற அன்பும், ஏற்றுக் கொள்ளுதலும்தான் நாம் தரக்கூடிய மிகச்சிறந்த பரிசாகும். உங்கள் குழந்தையின் பார்வையிலிருந்து யோசித்துப் பாருங்கள் – தொடர்ந்து அதன் செய்கைகள் திருத்தப் படுகின்றன. குழந்தை பேசும் விதமும், பழகும் விதமும் தவறு என்று சொல்லப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. விரும்பும் செய்கைகள் அனைத்தும் தவறு என்று சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தால் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை என்னாவது? எனவே இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தான் மாற்றப்படுவது எதற்காக என்பதை குழந்தைக்குப் புரியவையுங்கள். குழந்தை செய்வது தவறு என்பதால் அல்ல அது மற்றவர்களுக்குப் புரியாது என்பதால்தான் அப்படிச் செய்ய வேண்டியிருக்கிறது என்று உணர்த்துங்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் மற்றவர்களைப் பற்றி முன்முடிவுகள் கொள்வதில்லை. சுற்றியுள்ள மனிதர்களை அவர்கள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் உலகம் அவர்களை அப்படி எடுத்துக் கொள்வது இல்லை என்பதுதான் எவ்வளவு துயரமானது.

10.  வித்தியாசமாக இருக்கத் துணியுங்கள்:

உங்கள் குழந்தையின் வித்யாசமான செய்கைகள் முதலில் அதிர்ச்சியூட்டலாம். ஆனால் போகப்போக அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை நீங்கள் உணர முடியும். ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் புதுமையான சிந்தனைகள் கொண்டவர்களாகவே பெரும்பாலும் இருப்பர். நீங்கள் கற்றுத்தரும் அதே அளவு விஷயங்களை அவர்களிடமிருந்து நீங்களூம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மறக்காதீர்கள். அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேஇருங்கள். மிகப் பெரிய விஷயங்களை சாதித்த எல்லோருமே கூட்டத்தில் உள்ளவர்களைப் போலில்லாமல் வித்தியாசமாக இருந்தவர்கள்தான். நீங்கள் மிகச் சிறப்பான ஒரு குழந்தைக்கு பெற்றோராகும் பேறு பெற்றிருக்கிறீர்கள் என உணருங்கள். உங்கள் குழந்தையின் திறமைகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள். அவர்கள் விரும்புவதை செய்ய துணை நில்லுங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்தை குழந்தை கற்றுக் கொள்ளும் போதும் மகிழ்வோடு கொண்டாடுங்கள்.

ஆட்டிசம் என்று கண்டறியப்படுவது முடிவல்ல – ஆரம்பம் என்று உணருங்கள்.
தொடரும் 

நன்றி: http://216.185.103.157/~balabhar/blog/?p=1271

Tuesday, February 17, 2015

ஊரும் உணர்வும். ( பத்தி )

ஊரும் உணர்வும். ( பத்தி ) 


எங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம்.  அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க வேணுமெல்லோ? இல்லாட்டில் என்னத்தையோ பேய் பாத்த மாதிரி இருக்கும். 

சம்மாட்டி எண்டால் பெரிய வள்ளங்களுக்கு சொந்தக்காரராக இருப்பினம்.( கப்பல் எண்டு நினைக்காதையுங்கோ! அதை விடச் சின்னது. கப்பலுக்கும் வள்ளத்துக்கும் இடைப்பட்டது ஒண்டு இருக்கு. அதை றோலர் எண்டு சொல்லுவினம்).
ஆரம்ப காலங்களில "கரைவலை" வைச்சிருந்து மீன்பிடித்தொழில் செய்து கொண்டிருந்த ஆக்களே "சம்மாட்டி" எண்டு பேர் பெற்றவை. பிறகு காலப்போக்கில ஊர்களில வள்ளங்கள் வைச்சிருந்து தொழில் செய்த ஆக்களும் இந்தப் பேரை ஏற்றுக் கொண்டிட்டினம். இந்தச் சம்மாட்டிமார் கொஞ்சம் ஊரில நல்ல வசதி வாய்ப்போட இருப்பினம். (எங்கட அம்மா கொண்டை புறோச் கூடப் பவுணில வைச்சிருந்தவா எண்டால் யோசியுங்கோ எப்பிடி இருந்திருப்பம் எண்டு). 

இவை இந்த வள்ளங்களையும் அதுக்கேத்த பொருட்களையும் வைச்சுக்கொண்டு தனிய ஒண்டும் செய்ய ஏலாது. ஆட்கள் வேலைக்கு வேணும் மீன்பிடித் தொழில் செய்ய. மீன் பிடிக்க வேணும், பிறகு அதை விக்க வேணும். எப்படி விக்கிறது தொகையாக மீன்கள் பிடிச்சால்? அதெல்லாத்தையும் வெட்டி உப்பில ஊற வைச்சு கருவாடாக மாத்த வேணும். அப்பிடிக் கருவாடாக மாத்தினதை லொறிகளில கொழும்புக்கு அனுப்ப வேணும். 

இதில இன்னுமொரு விசயம் இருக்கு. தனியக் கருவாட்டை மட்டும் சனங்கள் விரும்ப மாட்டினம் எல்லோ?  
அப்ப மீனாய் அவ்வளவு தூரம் கொழும்புக்கு எப்படி அனுப்புறது?

ஆஆ.. இருக்கவே இருக்கு ஐஸ். பெட்டிகளில மீன்களை வைச்சு, ஐஸ் போட்டு நிரப்பி, அதைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்ய வேணும். இதில இன்னுமொரு விசயம் இருக்கு. எங்கட ஊரில, கருவாட்டுக்கு "மானமுள்ள" மீன்கள் என்னென்ன, மீனாய் பாவிக்கிறதுக்கு மானமுள்ள மீன்கள் என்னென்ன எண்டு பெரியாக்களுக்குத் தெரியும். அதுக்கேத்த மாதிரி எல்லாம் நடக்கும். இதில "மானம்" எண்டு எழுதியிருக்கிறது என்னெண்டு விளங்கிச்சுதோ? "மானம்" எண்டால் பெறுமதி. ( ஒரு பொருளுக்கான கேள்வி எண்டு எடுக்கலாம்).

இதுக்கு முதல் " கரைவலை" எண்ட ஒரு சொல்லுப் பாவிச்சிருக்கிறன். கனபேருக்குத் தெரியும் அது என்னெண்டு. ஆனால் சில பேருக்குத் தெரியாததால சொல்லுறன். "கரைவலை" எண்டால் கடல்ல வலையை வளைச்சு வீசிட்டு கரையில நிண்டு வலைக்குள்ள அம்பிட்ட மீன்களோட சேத்து வலையை இழுத்து எடுக்கிறது. இந்தக் "கரைவலை" த்தொழிலை சாதாரண கடலில செய்ய ஏலாது. கரையில் நிண்டு வலையை இழுக்கிறது எண்டால் இழுக்கிற பகுதியில பாறைகள் இருக்கக்கூடாதெல்லோ? அப்ப அதுக்கேத்த இடங்கள் தேட வேணும். தேடிச்சினம் எங்கட ஆக்கள் கொலம்பஸ் மாதிரி.

அப்பிடிக் கண்டுபிடிச்ச இடங்கள்தான் மணற்காடு, குடத்தனை, தாளையடி, செம்பியன்பற்று, அப்பிடியே தொடர்ந்து அளம்பில், கொக்கிளாய் என்று முல்லைத்தீவு வரை நீண்டது. எங்கட அப்பா அளம்பில், கொக்கிளாய் பகுதிகளில் ஆக்களை வைச்சு கரைவலை செய்தவர். இப்பிடிக் கண்ட இடங்களில எப்பிடி மீன் பிடிச்சிரிப்பினம் எண்டு நினைக்கிறீங்கள்? அந்தக் கதைகளையே ஒரு புத்தகமாக எழுதலாம். பெப்ரவரி, மார்ச் மாதமளவில் ஊரில இருந்த துணைவி, பிள்ளைகளைப் பிரிய முடியாத சோகத்தோட " கரைவலை" செய்யிற ஆம்பிளையள் வெளிக்கிட்டுப் போவினம். அந்த நேரம் பிள்ளைகளுக்கு கைகளில காசு கிடைக்கும் அப்பாக்களால. அப்படிப் போறவை, அங்கேயே தங்கியிருந்து ஏறக்குறைய மாரி காலத் தொடக்கத்தில, அதாவது ஒக்டோபர் மாதமளவிலதான் திரும்பி வருவினம். இந்த இடைக்காலத்தில ஏதாவது அவசர தேவை எண்டால் வீடுகளுக்கு வந்து போவினம்.

அப்ப, இவ்வளவு வேலைகளையும் தனிய ஒரு ஆளாய் செய்ய முடியுமோ? அதுக்குத்தான் ஆட்களை சம்பளத்துக்கு வைச்சு வேலை செய்விக்கிறது.
அங்கை இருக்கிற காலத்தில தொழில், சமையல் எல்லாமே அந்த ஆம்பிளையள் தான். இந்த இடைக்கால தனிமை வாழ்க்கையைப்பற்றி வீடுகளுக்கு திரும்பி வந்தவுடன கதை கதையாச் சொல்லுவினம்.

இந்த சம்மாட்டிமார் தங்கட தங்கட வசதிக்கேற்றபடி பெரிய அளவிலேயோ சின்னதாகவோ தொழிலைச் செய்து கொள்ளுவினம். 

நான் பிறந்து வளந்த வீட்டுக்கும் கடலுக்கும் இடையில வேற ஒண்டுமே இல்லை கடற்கரை மணலைத்தவிர. ஆருக்கு இப்பிடி ஒரு பாக்கியம் கிடைக்கும்? விடிய எழும்பி முளிக்கிறதே கடலுக்கால எழும்பி வாற சூரியனிலதான். எட்டிப்பிடிக்கலாம் போல அவ்வளவு கிட்டத்தில எழும்பி வரும். அப்பிடியே கடல் பளபளக்கும் பாருங்கோ!!!! அதை சொல்லி விளங்கப்படுத்த ஏலாது.
எத்தினை இரவுகள் கடற்கரை மணலில படுத்து இருந்திருப்பம். ஆரும் இடைஞ்சல் படுத்தாத காலம் அது. 

வீட்டில மீன் வகைகளுக்கு குறைவே இருக்காது. காலத்துக்கு வரும் உடன் ஓரா, ஒட்டி புளியாணமும், சொதியும், நெத்தலிச் சொதியும் தனியக் காணும் சோத்துக்கு. கீரி மீன் பொரிச்ச குழம்பும், சூடைப்பொரியலும், திருக்கை வறையும், சாளை மீன் பொரியலும், சின்னட்டி, கும்புளா, பாரை, கிளி, நகரை மீன், வாளை, சீலா, அறக்குளா, கட்டா, அதள், வௌவால், விளைமீன், சுறா எண்டு நாங்கள் சாப்பிடாத மீன் வகையே இல்லை.  இஞ்ச வெள்ளைக்காரர் கடைகளில விக்கிற நண்டை நாங்கள் அங்கே "பேய்நண்டு" எண்டு தூக்கிக் கடலிலேயே போட்டு விடுவோம். "அட்டாளை நண்டு" என்று ஒருவகை நண்டு வலைகளில் சிக்கும். அதன் உருசியே தனி. இதை விட நீலக்கால் நண்டு.

மத்தியானம் சாப்பிட்டிட்டு கடலுக்குள்ள இறங்கிடுவம். அல்லது வெட்டையில புழுதி பறக்கும் அம்மா தேடும்வரை. எங்கட ஊரில எல்லா வீடுகளிலயும் கிணறு இருக்கும். ஆனால் ஒரு சின்னச் சிக்கல் என்னெண்டால் ரெண்டாப் பிரிச்சுப்போட்ட மாதிரி, காங்கேசந்துறை பருத்தித்துறை வீதியில் கடற்கரைப்பகுதிக் கிணறுகள் உப்புத்தண்ணியாயும் மற்றப்பகுதிக் கிணறுகள் ஏறக்குறைய நல்ல தண்ணியாயும் இருக்கும். எங்கட வீடு கடற்கரைப்பகுதி எல்லோ? குடிக்க ஏலாது. காலமை, பின்னேரம் எண்டு நல்ல தண்ணி எடுக்க சோடி சேத்துக்கொண்டு குடத்தை இடுப்பில வைச்சுக்கொண்டு வெளிக்கிட்டுப் போவம். ஆனால் ஒண்டு எங்கட வீட்டுக் கிணறை நாங்கதான் கிணத்துக்குள்ள இறங்கி துப்புரவு செய்து முடிப்பம்.

இப்பிடித்தான் ஒருநாள் என்ர அக்கா கிணத்துக்குள்ள. நான் வெளியில நிண்டு தண்ணி முழுதையும் கப்பி வாளியால இறைச்சுக் கொண்டு நிக்கிறன். அக்கா உள்ள நிண்டு துப்புரவாக்கி வாளியை நிரப்பிட்டு "இழு" எண்ட நான் இழுத்து வெளியில ஊத்திக்கொண்டிருந்தனான். எனக்குக் கொஞ்சம் பஞ்சி வரத் தொடங்கிட்டுது. " வாளியை விடு" அக்கா கத்த, நான் வாளியை கிணத்துக்குள்ள இறக்க, அது கணக்கா அக்காவின்ர தலையில போய் "டங்"..... அக்காவின்ர தலையால ரத்தம் ஓடுது. எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. "ஐயோ" எண்ட, எல்லாரும் வந்து சேந்திட்டினம். அக்கா எண்டாலும் தைரியசாலி. ஒருமாதிரி பிடிச்சுக்கொண்டு மேல ஏறி வந்திட்டா. பிறகென்ன? எல்லாரும் என்னைச் சுத்தி நிண்டு அர்ச்சனைதான்.
நாங்கள் ஒண்டும் கோடீஸ்வரரா வாழேல்லை.

ஆனா நிறைவாக வாழ்ந்து வந்தனாங்கள் ஒரு காலத்தில.  நானும் படிச்சேன். யுனிவர்ஸிற்றிக்குப் போறது எங்கட அப்பத்தைய கனவெல்லோ? அங்கையும் போனன். பட்டமும் வாங்கினன். பிறகென்ன? வேலையும் கிடைச்சது.
நல்லா வாழ்ந்தமா? பொறுக்கேல்லை அவங்களுக்கு.  நாசமாய்ப் போனவங்கள் வேலி பிரிச்சு வந்தாங்கள் முதல்ல.  பிறகு அமைதி எண்டு வந்து துரத்தி விட்டாங்கள்.
அப்பிடியே ஊரூராய் அலைஞ்சோம். வெறுத்துப்போய் நாட்டையே தொலைச்சோம்.
இப்ப, எல்லாமே தூரமாப் போச்சு.

நன்றி :  வி. அல்விற்.
16.02.2015.

https://www.facebook.com/alvit.vincent/posts/912584908774964:0

Sunday, February 15, 2015

ஊடகங்களின் நாயகர்கள் யார்?


ஊடகங்களின் நாயகர்கள் யார்?


புலம் பெயர் நாடுகளில் இருக்கும் ஊடகங்கள், அமைப்புகள் பற்றி எனக்கு ஓர் தெளிவான பார்வை உள்ளது. அதை எனக்கு ஏற்படுத்தியது ,ஏறத்தாழப் பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ( 2005 அல்லது 06) நண்பர் சாத்திரியின் "ஐரோப்பிய அவலங்கள்" தொடர் நாடகமே. அந்த நாடகம் ,பலரின் பித்தலாட்டங்களை சாடி நின்றது. ஐரோப்பிய அவலங்கள் தொடர்நாடகம் ஏறத்தாள 13 அங்கங்களைக் கொண்டு அன்றைய காலகட்டத்தில் யாழ் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதில் சாத்திரியின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. அதாவது தான் ஓர் சிறந்த நாடகாசிரியர் என்பதனை அது வாசகர்களுக்கு காட்டியது. அதற்கு அப்பொழுது அவர் ஓர் ஊடகவியலாளராக கொடுத்த விலைகள் அதிகம். அன்று "ஐரோப்பிய அவலங்கள்" எதிர்வு கூறிய விடயங்கள், இன்று எமது கண்முன்னே விரிகின்றன. காலத்தின் கோலத்தால் ஐரோப்பிய அவலங்கள் தொடர் நாடகத்தின் சேர்வர் இன்று யாருடமே இல்லை. அந்த சேவர்கள் சிலரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?? என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அந்தவகையில் புலம்பெயர் ஊடகங்களின் சித்துவிளையாட்டுக்கள் பற்றி இன்று வாசிக்க கிடைத்தது. இது சிலருக்கு கசக்கலாம் ஆனால் புலம் பெயர் நாடுகளில் அதிக காலம் இருந்தவர்களுக்கு இதன் உண்மை நிலைகள் கட்டாயம் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக நான் யாழ் இணையத்தில் வாசித்த பகுதி இது . நான் இப்பொழுது யாழ் இணையத்தில் எழுதாவிட்டாலும், இப்பொழுதும் அதன் வாசகன் தான். இதை வெளியிட்ட யாழ் இணையத்திற்கும் மிக்க நன்றி.

நேசமுடன் கோமகன்
******************************************************************

இவ் ஈட்டி குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்களை சுட்டிக் காட்டி வருகின்றது. இப்பத்தியாளர் தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராயினும் அவரது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் போது இவ்வாறு பெயர்கள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்க வியலாதது என்பதனை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. எனினும் இவ் ஈட்டி தொடர்பில் உங்கள் மறுப்புக்கள், மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.

தற்போது ஐரோப்பாவிலும் சரி இலங்கையில் அதாவது கொழும்புத் தமிழ் ஊடகங்களிலும் சரி நாயகர்களாக விளங்குபவர்கள் ஊடகங்களின் அறிவிப்பாளர்களே. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் எமக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அளவுக்கு அறிவிப்பாளர்கள் எம்மவர் மனங்களின் கனவு நாயகனாக , கனவு நாயகியாக மாறியுள்ளார்கள். ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயமே. எனினும் இந்த நாயகர்களினதும் , நாயகிகளினதும் திறமையால் இந்தநிலையை அடைந்திருந்தால் பாராட்டலாம் , வரவேற்கலாம். ஆனால் இவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள் என்று பார்த்தால், அனேகமாக பந்தம்தான் இத்தனை உயர்ச்சிக்குக் காரணமாகிறது. அல்லது ஐரோப்பா வந்தவுடன் பெரிய புழுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்கள். அது யாதெனில் "நான் றேடியோ சிலோனில் வேலை செய்தேன் , சக்தி ரீவியில் வேலைசெய்தேன் , அல்லது சக்தி றேடியோவில் வேலை செய்தேன், அல்லது போனால் சூரியனில் வேலை செய்தேன் என்று மூட்டையை அவிழ்க்க எங்களது ஊடகங்களும் ஓடிப்போய் புழுகு கூட்டத்தின் காலே கதியென்று விழுந்து விடுவார்கள். பின்னர் வானலைகளில் வந்து தங்கள் புகழ்பாடநேயர்களெல்லாம் அப்படியே கரைந்து விடுவார்கள்.

இப்படித்தான் தேசிய வானொலி ஐபீசி ஆரம்பமான பொழுது எஸ்.கே.ராஜன் என்ற அறிவிப்பாளர் ஒருவர் வந்து புழுகியிருக்கிறார் தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதாக. ஆனால் ராஜன் கூறிய காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்கு பணி புரிந்துள்ளார். ஆனால் அவரும் ராஜனைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு பிரச்சனை வந்தபோது உண்மையாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து ஐபீசியில் பணிபுரிந்தவரால் ராஜனின் பொய் வெளிவந்தது. ஆனால் அது அப்படியே மூடி மறைக்கப் பட்டு விட்டது. எஸ்.கே.ராஜன் என்கின்ற அறிவிப்பாளர் யாழ் மணிக்குரல் சேவையில் கடமையாற்றியவர் என்பது பலருக்குத் தெரிந்த விடயம். எஸ்.கே.ராஜனுக்கு நேயர்களுடன் கதைக்கத் தெரியாது , நிகழ்ச்சியை நேயர்களுக்கு ஏற்ப வழங்கத் தெரியாது என்பது பலரது கருத்து. அது ராஜனுக்குத் தெரியுமோ தெரியாது. அவரது நிகழ்ச்சிகளைக் கேட்போருக்கு அது புரியும். தனக்குப் பிடித்த நேயர்களென்றால் ராஜன் அவர்களைத் தூக்கிப் பிடிப்பார். தனக்குப் பிடிக்காத அல்லது , தனது நிகழ்ச்சிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய ஒருவர் அவரது நிகழ்ச்சியில் வந்தாலோ அவர்களை மதிக்க மாட்டார். ஒரு இரவு ஐபீசியில் நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி JAFFNA ஸ்ரோர் ஆதரவில் நடந்து கொண்டிருந்தது. நீங்களும் பாடலாம் என்பதன் பொருள் நீயும் பாடலாம் , நானும் பாடலாம் , யாரும் பாலடாம் என்றே யாவரும் கருதுவர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலர் ராஜன் எதிர் பார்த்த சுருதிச் சுத்தமோ , குரல் இனிமையோ கொண்டிருக்கவில்லை. அப்படியான சிலரை உடனடியாக ராஜன் நிறுத்தி பாடுபவர்கள் மட்டும் வாருங்கள் நான் பாடுபவர்களை மட்டும்தான் அழைக்கிறேன் என்றார். இந்த வார்த்தைகள் அந்த நேயர்களை எந்தளவுக்கு மனவேதனைப் படுத்தியிருக்கும் என்பதை ராஜன் நினைத்துப் பார்க்கவில்லை.

ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அந்த நிழக்ச்சியில் பாட வந்து ராஜனிடம் அடி விழும் வார்த்தைகளை வாங்கிய நேயர்கள் வேலை தவிர்ந்து மற்ற நேரமெல்லாம் இந்த ஊடகங்களே தங்களது உலகம் என வாழும் அறியாமை மனிதர்கள். பாவம் அவர்கள். அதுவும் இந்தநாடுகளில் வேலைவேலையென ஓடிவிட்டு கிடைக்கும் நேரத்தை இனிமையாக்க நினைப்போருக்கு இந்த ஊடக நாயகர்கள் கொடுக்கும் இனிமை இதுதான். சிலவேளை இக்கட்டுரையை ராஜன் வாசிக்க நேர்ந்தால் யாரிவர் என்னை இப்படி எழுதியது எனக் கொதிப்பார். தயவு செய்து ராஜன் இதனை வாசிக்க நேர்ந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னுமொரு சம்பவம் ஒரு விளம்பரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து சினிமாப்பாடல் சிடிக்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம் வரிசையில் அரிசி , பருப்பு என எல்லாம் சொல்லப் பட்டது ஆனால் அந்த விளம்பரத்துக்காகப் போடப் பட்ட பாடல் விடுதலைப்பாடல். விடுதலைப் பாடலுக்குத் தொடர்பேயில்லாத ஒரு விளம்பரத்துக்கு ஏன் விடுதலைப் பாடல் போட்டீர்கள் அதற்குப் பொருத்தமான வேறுபாடலைப் போட்டிருக்கலாம் என நேயர் ஒருவரால் சொல்லப்பட்ட போது அந்த நேயரை ராஜன் அவமானப்படுத்திப் பேசியது மட்டுமல்ல , உங்களுக் கெல்லாம் கனக்கத் தெரியுமா ? நாங்கள் எத்தனை இடங்களைத் தாண்டி வந்தனாங்களெண்டு தெரியுமா ? என்றெல்லாம் தனது அருமை பெருமைகளை யெல்லாம் சொல்லி அந்த நேயரை வானொலியின் பக்கமே போகாது செய்தவர். விமர்சனங்கள்தான் இலக்கியவாதியை , கலைஞனை வளர்ப்பது. ஆனால் விமர்சனங்கள் தங்களது தகுதிக்கு தேவையில்லை யென்று தான்தோன்றித் தனமாக எழுந்துள்ள இப்படியான கலைஞர்களிடம் இருப்பது திறமையா ? தலைக்கனமா ? துள்ளிற மாடு பொதிசுமக்கும் எனும் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதே ஊடகத்திலிருந்து இன்னொருவர் கலா புவனேந்திரன். இவரை ஆரம்பத்தில் ஐபீசியில் அனேகமான அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லையென்று தள்ளி வைத்திருக்க எப்படியோ நிகழ்ச்சியொன்றில் கால்வைத்தார். அதன் பின்னர் செய்தி வாசிப்புக்கும் வந்து. தற்போது பலநிகழ்ச்சிகளின் நாயகியாகயும் அனேகமாக செய்தியும் அவரிடமே. செய்தி வாசிப்பதற்கு சிலரால்தான் முடியும். சுத்தமாக சொல்லை உச்சரித்து , நிகழ்ச்சிக்கு பாவங்கள் காட்டுவது போலன்றி , உணர்வுக் கொட்டலாகவோ இன்றி இருக்க வேண்டும். நேயர்களுக்கு செய்தி சென்றடைய வேண்டுமேயன்றி செய்தி வாசிப்பாளரிடம் நேயர் லயித்து விடக் கூடாது. ஆனால் கலாபுவனேந்திரனின் செய்தி வாசிப்பு தாயகம் வரையும் போகிறது. உச்சரிப்புகள் அதிகம் விழுங்கப் பட்டு , சொற்பிழைகள் , உணர்ச்சி பாவ வெளிப்பாடுகளே செய்தியில் வருகிறது. அனைத்துலக ஒலிபரப்பு என்பதை கலாவின் உச்சரிப்பில் அணைத்துளக ஒளிபரப்பு என்றுதான் வருகிறது. கலாவிடம் திறமை இருக்கிறது. நாடகத்துக்கு ஏற்ற திறமையிருக்கிறது. ஆனால் செய்திக்கோ நல்லதொரு நிகழ்ச்சிக்கோவுரிய எந்தத் திறமையும் இல்லை.

அக்கினி என்றதொரு பெண்ணிய நிகழ்ச்சியை நடாத்துகிறார். அக்கினி என்பதை அக்ணி என்றுதான் வருடக் கணக்காக உச்சரித்து வருகிறார். இந்தப் பெண்ணியத்தில் கலாவுக்கு உரிய விழிப்பு எத்தனையளவு தெளிவென்று பார்த்தால் பூச்சியமே விடையாகிறது. இப்படித்தான் ஒருதரம் நிகழ்ச்சியில் புலவர் சிவநாதன் என்பவரிடம் கலா பெண்ணியம் தொடர்பாக செவ்வியொன்று எடுத்துப் போட்டது. ஆனால் அந்தப்புலமைவாதி பச்சையாக பெண்ணியவாதிகளையே தனது திறமை மூலம் கொச்சையாயும் , பச்சையாயும் சொல்ல அதைக் கலா அப்படியே வானலையில் போட்டுவிட பலரிடமிருந்து சர்ச்சை கிழம்பி கலாவைப் பலர் கேள்வி கேட்க கலா அவர்களுக்குச் சொன்ன பதில் புலவரெண்டு ஏதோ நல்லது சொல்லுதெண்டு போட்டுட்டன் அந்தாள் பச்சையாப் பேசியிருக்கெண்டு எனக்கு விளங்கேல்லை என்று சொன்னது. ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வரும்போது அந்த நிகழ்ச்சியில் வருகின்ற குறை நிறைகள் , தரம் எல்லாவற்றையும் தானே புரிந்து வைத்து அதற்கேற்பவே தனது நிகழ்ச்சியைத் தரவேண்டும். அதுதான் அந்த நிகழ்ச்சியையும் , அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரையும் முன்னேற்றும். தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதமாம்'' புரியுமா கலாவுக்கு ? இது காலாவுக்கு மட்டுமல்ல அனைத்து ஊடகங்களில் இருக்கும் அனைத்து அறிவிப்பாளருக்கும்தான்.

காலையில் தேடிவரும் தென்றலென்றதொரு நிகழ்ச்சி ஐபீசியில் வருகிறது. அதில் நேயர்களின் பெயரில் அறிவிப்பாளரின் தேர்வில் பாடல் கேட்பது. காலையில் தொலைபேசியெடுத்து நேயர்கள் தங்களது பெயர்களைச் சொல்ல பாடல் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை அனேகமாக ஒலிபரப்பும் பராபிரபா செய்யும் கு------த்தனம் ஒன்று அடிக்கடி பலரை ஆத்திரமடையவும் அதேசமயம் அனுதாபப் படவும் வைக்கிறது. யாரேனும் தெரிந்தவர்களின் அல்லது அவரது நண்பர்களின் நண்பர்களின் தொலைபேசியிலக்கத்தை எடுத்து காலையில் எழுப்பி வைத்து அறுப்பது. சிலர் இரவு வேலைக்குப் போய்விட்டு வந்து படுத்திருப்பார்கள் , சிலர் அப்போதுதான் வேலைக்குப் புறப்படுவோராக இருக்கும் தான் யாரென்பதைச் சொல்லாமல் ஏதோ வேண்டிய ஒருவர் போலக் கதைப்பர். தேவையில்லா அரட்டையாக , வம்பாக இருக்கும். சிலர் தமக்கு வேண்டியவர் என நினைத்து தனிப்படக்கதைக்க வேண்டிய விடயங்களைக் கூடக் கதைத்து விடுவார்கள். இறுதியில்தான் ஐபீசியில் இருந்து கதைக்கிறேன் பராபிரபா என்று சொன்னவுடன் தொலைபேசித் தொடர்பில் நிற்பவர் திகைத்துப் போவார். இது தேவையா ? இப்படி ஏன் கு-----த்தனம் செய்ய வேண்டும் ? தனது திறமையையை வெளிக் காட்டுவதாக நினைத்து தனது நல்ல திறன்களையே முட்டாள்த் தனமாக்குவதேன்?

அடுத்து சிலர் தாயகம் தாயகம் என்று வானலையில் வந்து நின்று முழங்குவார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சி கேட்கநேர்ந்தது. அதுவும் ஐபீசியில்தான் நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை. கௌசி ரவிசங்கரும் , எஸ்.கே.ராஜனும் செய்தார்கள். புலம்பெயர்ந்த யாருக்குமே தாயகப்பற்றோ கடமையுணர்வோ இல்லையென்பது போலவும் புலம்பெயர்ந்தோர் எல்லாம் சுயநலவாதிகள் என்பது போலவும் இருவரும் கதைத்துக் கொண்டார்கள் வானலையில். தெரியாமல்தான் கேட்கிறோம் இந்தக் கௌசியும் , ராஜனும் நாட்டுக்காக தங்களது பணத்தில் அதாவது தங்களது உழைப்பில் எத்தனை சதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? தாயகத்துக்குப் போய்வந்தவுடனும் இவர்கள்தான் தலைவரின் ஆணையின் பேரில் அனுப்பப் பட்டிருப்பது போன்றதொரு நினைவும் , தாங்களே தேசபக்தி மிகுந்தவர்கள் என்ற திமிரும் இவர்களுக்குள் ஏனோ வந்து விடுகிறது !?! ராஜனின் திமிர்க்குணம் அதாவது நேயர்களை தமக்குப் பிடித்தவர்களைத் தூக்கி வைத்து வணங்குவது கௌசி ரவிசங்கருக்கும் தொற்றியுள்ளது. இந்தத் தொற்று நோய் கௌசியிடம்இருக்கும் திறமையை அழித்து விடும்.

இன்னொருவர் சந்திரா ரவீந்திரன். இவரது சகோதரர்கள் இருவர் மாவீhர்கள். அதனையே சொல்லிச் சொல்லி தன்னையும் தனது குடும்பத்தையும் ஐபீசிக்குள் வெற்றிக்கொடி நாட்டியுள்ள அறிவிப்பாளர். இவர் ஒரு எழுத்தாளர். அந்தக் காரணத்தைக் காட்டியே இரவி அருணாசலத்தால் ஐபீசிக்குள் அறிமுகப் படுத்தப் பட்டவர். இவரிடம் திறமையிருக்கிறது. ஆனால் அதை நல்ல விதமாகப் பயன்படுத்தத் தெரியாது தத்தளிக்கிறார். இவரது நிகழ்ச்சி ஐபீசி நேயர்களுக்கு என்றுதான் சொல்லப் படுகிறது. ஆனால் இவர் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளும் இவரது அக்கா சந்திரவதனா , அத்தான் செல்வகுமாரன் , அண்ணன் தீட்சண்யன் , சந்திரா ரவீந்திரனுக்காகவுமே நடாத்தப் படுகிறது. இவரது நிகழ்ச்சியில் மூனாவைத்தவிர ஒருவரும் நாடகம் எழுத முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் யாரிடமும் நாடகம் எழுதும் திறமையில்லை யென்பது இவரது கருத்து. தான் ஒரு எழுத்தாளர் தனக்குத்தான் இலக்கியமே சேவகம் செய்கிறது என்ற கோட்பாடு கொண்ட அறிவிப்பாளர். இவரை போற்றிப் பாடினால் தன்னுடன் சேர்ப்பார். அதாவது அவர்களது சுயவிளம்பரம் செய்ய முன் வருவோரை மட்டுமே நண்பர்க ளாக்குவார்கள். மற்றவர் எல்லோரும் தேசத்துரோகிகள். நாகரீகமாக கதைக்க எழுதத் தெரியாதவர்கள். இந்தச் சந்திரா ரவீந்திரன் தாயகத்துக்கே திரும்ப மாட்டேன் என்கிற லட்சியத்துடன் லண்டனே சொர்க்கம் என வாழுபவர். ஏசி இல்லாமல் காறில் ஏறமாட்டாதவர். இவர்கள்தான் தேசத்தை நேசிக்கும் அறிவிப்பாளர்கள். மாவீரர்கள் எங்கள் மண்ணின் சொத்து மாவீரர் குடும்பங்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அந்தத் தியாகங்களைச் சொல்லியே தங்களது பெயரை நிலை நாட்டுபவர்களை எப்படி மதிக்க முடியும் ? போற்ற முடியும் ? அந்தப் புனிதமானவர்களே இந்தப் புல்லுருவிகளை மன்னிக்க மாட்டார்கள்.

கே.வி.நந்தன். இவர்பாணி இன்னொருபாணி. இங்குள்ள எல்லா ஊடகத்துப் புத்திஜீவிகளை ஏப்பம் விட்ட சாதுரியன். பஞ்சாயத்து என்றதொரு நிகழ்ச்சி இவரது சீதனம். பஞ்சாயத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் தலைப்புகள் நந்தனின் தலையில் என்ன இருக்கிறது என்பதைச் சிந்திக்க வைக்கும். அத்தனை பிற்போக்குத்தனமான விவாதங்களும் , கருத்துக்களும். இன்று புலம்பெயர் நாடுகளில் பெண்கள் ஓரளவு தம்மைப்பற்றிச் சிந்திப்பவர்களாக , பெண்ணியச் சிந்தனையுள்ளவர்களா , உலகைப் பார்ப்பவர்களாக வளர்ந்துள்ளார்கள். ஆனால் நந்தனின் விவாதத் தலைப்புகள் அத்தனையும் கே.பாக்கியராஜ் அவர்களின் பிற்போக்குத்தனம் மிகுந்துள்ளது. தேவையா பஞ்சாயத்து ? இங்குள்ள எத்தனையோ பிரச்சனைகளுக்கு யதார்த்தமான தீர்வுகள் தேவைப்படும் இக்காலத்தில் பஞ்சாயத்து என்று சொல்லி ஆண் பெண் மோதலை வளர்த்துவிடும் சாதுரியம் ஏனோ ?

நான்தான் நான்தானென்று அரட்டையரங்கு செய்து திரிந்த விசுவுக்கு அண்மையில் நடந்தது அறிவோம்தானே. நந்தனுக்கும் அதுதான் கதியோ தெரியாது. தனது திறமையை நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தினால் நந்தனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பந்தம் பிடித்து ஊடகத்தினுள் நுளையும் ஆட்களால் உண்மையான திறமையாளர்கள், நேர்மையாக ஊடகத்தின் பலத்தை உணர்ந்து , ஒரு ஊடகவியலாளனுக்குரிய கடமையைச் செய்ய வரும் நல்லவர்கள், ஊடக உள்வீட்டுச் சதியால் எப்படியும் வெளியேற்றப் பட்டு விடுவார்கள். அல்லது குறிப்பிட்ட நபர்மீது ஏதாவது குற்றத்தையாவது சுமத்தி வெளியேற்றி விடுவார்கள். தற்போது ஓரு ஊடகத்தில் நிலைப்பதானால் ஒன்றில் அந்த நிர்வாகம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் , இல்லது நிர்வாக உரிமையாளருக்கு வேண்டியவராக , இல்லது நிர்வாகிக்கு பிரியமான அறிவிப்பாளருக்கு வால் பிடித்தால் மட்டுமே நிலைக்க முடியும்.

இப்படித்தான் ஊடக உள்வீட்டுச் சதிசெய்து ஐபீசியில் பல திறமையானவர்களை வெளியேற்றி வீணான பழிக்கும் பலரை உள்ளாக்கிய இரவி அருணாசலம் இன்று ஆடி , அடங்கி , ஒடுங்கிப் போயிருக்கிறார். எந்தச்சதி எப்படியிருப்பினும் காலம் இந்தத் துரோகத்தனங்களை தண்டித்தே தீரும்.தமிழ் அலையென்றொரு கூட்டம் குகநாதனின் தலைமையில் பெரும் எடுப்பில் மக்களின் பணத்தைத் தனது வானொலிக்காகவும் தொலைக் காட்சிக்காகவும் கொட்டுவித்துக் கூத்தாடுகிறது.

முன்பொரு காலம் குகநாதன்தான் ஐரோப்பியத் தமிழர்களின் தலைவர் பிரபாகரனாய் இருந்தவர். இவரது தமிழ் அலையில் ஏ.எஸ்.ராஜா என்றொரு நாயகன் அந்த நாயகனது மச்சான் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த கப்டன்.லோலோ. அந்தவீரனின் பெயரைச்சொல்லித் தனது பெயரை பிரபலமாக்கியவர். கே.எஸ்.ராஜா தானே என்றதொரு இறுமாப்பு இவருக்கு. விளம்பரம் ஒரு கடை விளம்பரமென்றால் தொடர்புத் தொலைபேசியிலக்கம் சொல்லுவார் உதாரணத்துக்கு ஆச்சிதுணையென்றால் கல்லோ ஆச்சிதுணை என்றே சொல்வார். விளம்பரத்தைக் கேட்போருக்கு ராஜாவின் அறியாமை தெளிவாகப்புலப்படும். ராஜாவுக்கென்று ஒரு மகளீர் கூட்டமே உண்டு. நண்பனொருவன் சொன்னான் எங்கடை பெண்களுக்கு ஏ.எஸ்.ராஜாவெண்டா ------------------------------ அந்த அளவுக்கு வளியும் ஒரு கூட்டம். ராஜாண்ணா என்றால் பலருக்கு உயிரே உருகும். தமிழ் அலைக்குள் ஒரு தர்சன். இவரது தம்பியார் போராளியாம். அவரது பெயர் தர்சனாம். அந்தப்பெயரைத் தனதாக்கி ஊடகத்துக்குள் வந்தவர். நல்ல குரல் வளம் உண்டு. விவாத நிகழ்ச்சிகளை நடாத்த தகுதியாக சாதுரியம் வெட்டிப்பேசும் திறம் எல்லாம் இருக்கிறது. தன்னைவிட்டால் யாருமே இல்லையென்ற தலைக்கனம் அதிகம். இதனால் பலநேயர்களை இழந்துள்ளார்.

குகநாதன் சனத்தை ஏமாற்றி பணத்தை வாங்கி ஊடகம் என்ற பெயரில் அழிக்கிறார். இதற்கு உடந்தையாக எங்களது சனமும் சிலதுகள் வட்டிக்கும் காசெடுத்துக் குடுத்து குநநாதண்ணாவே கோவில் என்று வாழ்கிறது. இப்போ ரீவியும் தொடங்கி தமிழன்ரை பணத்தை வெள்ளையனுக்குத் தாரை வார்க்கிறார். ரீபீசியென்றொரு கூட்டம் கொஞ்சக்காலம் எங்களையெல்லாம் ஆட்டிப்படைத்தது. 

மேற்சொன்னவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வன்னியுடன் நேரடித்தொடர்பு , தலைவருடன் நேரடிப்பேச்சு , அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு , புலிகளின் குரலுடன் நேரடித்தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி பெரும் முழக்கமிட்டது. ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்துபோனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகி யிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகி விட்டார்கள் என்பது நிதர்சனம்.

தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக் கேட்டார். கடிக்கேள்விக்கான பதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனை பேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்று விட்டிருந்தது.

இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக் கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள்!!! எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன் படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.

தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத் தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ? புரியவேண்டும். எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக் காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது

ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 

- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

ஊடகங்களின் நாயகர்கள் யார்? தாயகனின் பதில்

எழுநாவில் ஈட்டிப்பகுதியில் வெளியான ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற கட்டுரை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததை நீங்கள் அறிவீர்கள். இறுதியில் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் மெய், பொய் நிலையினை எழுநா அறிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழலில் அதனை வெளியிட்டது தவறு என்னும் கருத்தில் உள்ள நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு அக்கட்டுரையை எழுநா நீக்கியிருந்தது. இந்நிலையில் குறித்த அக்கட்டுரைக்கான மறுப்புக்களுக்கு, தனது பதிலினை அவ் ஊடகத்திற்கு எழுதுவதற்கான உரிமையினை கட்டுரையாளர் கொண்டுள்ளார் என்பதனாலும் அதனை வெளியிடுவதற்கான கடமையை அவ் ஊடகம் கொண்டுள்ளது என்பதனாலும் கட்டுரையாளரது பதில் இங்கே தரப்படுகின்றது. விடுதலை என்ற பொது நோக்கில் நாமெல்லோரும் இணைந்து நிற்போம்.

எழுநா நண்பர்களுக்கும் மற்றும் எனது கட்டுரைக்கான கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் வணக்கம்.நண்பர்களே ஊடகங்கள் பற்றிய கட்டுரையை எழுதியதன் நோக்கம் யாரையும் தூற்றவோ அல்லது துதிபாடவோ அல்லது யார்மீதான காழ்ப்புணர்விலோ எழுதவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இங்கு நடக்கின்ற சீர்கேடுகளைத்தான் திருத்தச் சொல்லி எழுதியுள்ளேன். அதுவும் ஏன் ஐபீசியை எழுதியுள்ளீர் எனக்கேட்டுள்ள நண்பர்களே கவனியுங்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும் எனும் நல்ல நோக்கிலேயே எழுதப்பட்டது. இந்தக்கட்டுரையை வெளிவந்த பின்னர் ஐபீசியைக்கவனித்துப் பாருங்கள். அக்ணி அக்கினி என்று சரியாக உச்சரிக்கப்படுகிறது. அணைத்துளகம் அனைத்துலகமாக உச்சரிக்கப்படுகிறது. ஐபீசியை கஸ்ரப்பட்டு வளர்த்துவிட்டவர் திரு.தாசீசியஸ் அவர்கள். அவருடன் இணைந்து சில அறிவிப்பாளர்களும் இரவு , பகல் , தங்கள் சொந்த வாழ்க்கையை , குடும்பம் , குழந்தை என்ற வட்டத்தையே விட்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அவர்களின் அந்த உழைப்புத்தான் இன்று ஐபீசியை இந்தளவுக்கு வளர்த்துள்ளது. அப்படி வளர்க்கப்பட்ட ஊடகத்தை சிலரது சுயநலம் சீரழிக்கக்கூடாது என்றே விரும்புகிறோம்.தனித்து ஐபீசியை மட்டும் நான் சொல்லவில்லை. அனைத்து ஊடகங்களையுமே சொன்னேன். மற்ற 3 ஊடகங்களையும் போல் ஐபீசியும் இருக்கக்கூடாது. பத்தோடு பதினொன்றாக ஐபீசியும் இருக்கக்கூடாது. அது நல்ல , சிறந்த ஊடகமாக வரவேண்டும் என்பதே என் விருப்பமும் , எல்லாத் தமிழரின் விருப்பமும்.தனித்தனியாக சொல்லிக் களைத்துத்தான் தனித்தனிப்பெயராக சுட்டிக்காட்ட வேண்டிய வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இக்கட்டுரையை வாசித்த 17 சமூக அக்கறையுள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நாங்களெல்லாம் சொல்லிக்களைத்து விட்டோம். அதனால் அமைதியாய் இருக்கிறோம். உமது எழுத்து இவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இல்லை என்றார்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும்.

உண்மைகளைப புதைத்து போலிகளை வாழவைக்கும் காலத்தில்தானே நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறலாமென்ற தத்துவத்தை வாழ்வாக்கியிருக்கும் அன்பர்களே ! தேசம் தேசெமென்று சொல்லி தேசியத்தையே விற்கும் உங்கள் போன்ற போலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தேசத்தலைவரும் , அவருடன் இணைந்து போராடும் அந்த மறவர்களையும் உங்களது பக்கம் சேர்த்துப் பேசவராதீர்கள். உங்களுக்கு விசுவாசமாய் எங்கள் சமூகத்துக்கு விசுவாசமாய் பேசுங்கள். அதுதான் சமூகம்மீதான பிரியம். பணத்துக்கு எழுதுவதும் , பணத்துக்கு அறிவிப்பதும் , பணத்துக்கு விமர்சகர்களாவதும் ஒன்றும் பெரியவிடயமல்ல. இவையெல்லாம் சுயநலம்தான்.இறுதியாக எழுநா நண்பர்களுக்கு ! எனது கட்டுரை போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேர்ந்து விட்டது. பெரியதொரு சாக்கடையிலிருந்து உரியவர்களே ஓரளவு எழுந்துவர உதவியமைக்கு நன்றிகள். எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..உங்கள் தொண்டு மிக நெடிது.வாழ்வீர்.புதிய தொரு வரலாறு உமக்காகும்.எழுநாவால் எழுச்சியுறும் உலகு. நாளையிங்கு அழுவோரிலை என்னுமோர் அழகுடையஉலகைச் செய்! உயர்.களக்கவிஞர் புதுவைஇரத்தினதுரையின் வாழ்த்தோடு பிறந்தது எழுநா. அது அந்தக்கவிஞனின் மொழிபோல் எழுச்சியுறும்.

நேசமுள்ள லண்டனிலிருந்து தாயகன்.

Saturday, February 14, 2015

வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-

வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-முதற்காட்சி

1.
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல்
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம்
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை

2.
நாட்களை மூடி காலங்களை மூடி
மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது
நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம்.
போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர
வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை
“எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“
என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்பட்டது ஒவ்வொரு வீட்டுக்கும்
“எங்கேயுன் தலை? கொடு இந்தக் கொலைக் களத்துக்கு“
என்ற சொல் அரச கட்டளையாக்கப்பட்டது

“கருணையிலான யுத்தம் இது“ என்றது அரசு
“மக்களைக் காக்கும் மனிதநேய நடவடிக்கை“ என்று அதை
அமைச்சரொருவர் மொழிபெயர்த்தார்.
“விடுதலைக்கான யுத்தம் என்றது இயக்கம்“
“சுதந்திரப் போராட்டம் இப்படித்தானிருக்கும்“ என்று விளக்கமளித்தனர் போராளிகள்.
“தலைகளைக் கொடுப்பதற்கும் விலைகளற்றுப்போவதற்கும்
உயிரும் மயிரும் ஒன்றா?“ எனக் கேட்டாள் ஒரு கிழவி
“சரியான கேள்விதான் அது“ என்றனர் கஞ்சிக்கு வரிசையாக நின்றோர்.

காடு கடந்து, வெளி கடந்து, முறிந்து சிதைந்த தென்னந்தோப்புகள் கடந்து,
களப்புகள் கடந்து, அழிந்த கொண்டிருந்த ஊர்களைக் கடந்து,
நந்திக் கடலுக்கும் இந்து சமூத்திரத்திற்குமிடையில்
ஒரு மெல்லிய கோடாக ஒடுங்கி நீண்டிருந்த
கடற்கரையில் ஒதுங்கினோம்.
அங்கே காயங்களைப் பெருக்கும் நாட்களுக்கிடையில்
“ஒரு துளி விசத்திலும்
அமுதத்தைக் கடைந்தெடுப்பேன்“ என்றார் மதகுரு
“அந்த அமுதத்தில் ஒரு மரம் துளிர்த்து
நிழலும் கனியும் தரும்“ என்றான் ஒரு போ ரபிமானி.

சிதறிய பிணங்கள் சிரித்தன அச் சொல் கேட்டு.

3.
சாவாடை நிரம்பிய தேவாலயத்தில்
பிணங்களுக்குச் சாட்சியமளித்துக் கொண்டிருந்தனர் குருவானவர்கள்.
அத்தனை குருவானவருக்கும் சேவகம் செய்து கொண்டிருந்தாள்
ஒரேயொரு முதிய கன்னியாஸ்திரி.
தேவாலய வளாகத்தில் ஒரு புறாவும் இல்லை
சனங்கள் ஆண்டவரிடம், குருவானவரிடம், கன்னியாஸ்திரியிடம் மன்றாடினர்
வளாகத்தில் நிறைந்திருந்த எண்ணூற்றிச் சொச்சம் பிள்ளைகளையும் காத்தருளும்படி
மூன்றாவது முறையும் மறுதலித்தனர் குருக்கள்.

அபாயம் எல்லாத்தலைகளையும் சூழ்ந்திருந்தது எக்கணத்திலும்
மலையைச் சுற்றிய பாம்பு கடலையும் குடிக்கத் துடித்தது.
 4.
யாரை விசுவாசிப்பது என்று தெரியாத சனங்கள்
பதுங்கு குழிகளுக்குள் உறைந்திருந்தனர்
எதை ஏற்றுக்கொள்வது என்று தெரியாதோர்
சாவின் பின்னால் சென்றனர்.
பிணவாடையும் மலவாடையும் கன்னத்திலறைந்தன
எல்லோரிடமும் இருந்த எண்ணூறாயிரத்து நானூற்று முப்பத்திநாலு கேள்விகளுக்கும்
ஒருவரிடமும் இல்லை ஒரு பதிலும்.
ஆற்றலுள்ளோரை அழைத்துச் சென்றன பாதைகள்
அவர்களுக்கே கடல் வழிதிறந்தது.
அவர்களுக்கே காடுகள் வழிகாட்டின
அவர்களுக்கே நட்சத்திரங்கள் துணை நின்றன
மற்றவரெல்லாம் பதுங்கு குழியை நெருங்கி வந்த
சாவின் நிழலில் ஆழந்துறங்கினர் உக்கி.

பொறிக்கிடங்காகிய பாதுகாப்பு வலயத்தில் மரண முத்திரை சிரித்தது.
குருட்டு உலகத்தின் இதயக் கதவுகளை
இந்த மாதிரியான போது இறுகச் சாத்தித்தான் வைத்திருக்கிறாள்
கொடிய சூனியக்காரி

புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர் ஐ.நாவின் அதிகாரிகள்
அறிக்கைகளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் சமாதானத் தூதுவர்
வரலாற்றுக் குறிப்புகளைப் பின்னாளில் எழுதவேண்டும் எனத்
தகவல்களைத் திரட்டினார் ஆய்வாளர்
“ஒவ்வொரு சாவும் செய்திகளே“ என்று சொல்லி எழுதித்தள்ளினர் பத்திரிகையாளர்
ஒவ்வொரு சாவுக்கும் விளக்கமளித்தனர் போர்ப்பிரபுக்கள்.

மரணப்பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது அகதிச் சனங்களை.

5.
பிணவாடை எழுந்து மலவாடையை மூடிற்று
மலவாடை எழுந்து பிணவாடையை மூடிற்று
அந்தக் கடலோரத்தில் கடல் வாசம் வீசவில்லை
மீன்  வாசமும் வீசவில்லை.
புதைகுழிகள் எழுந்த சனங்களையும் இருந்த சனங்களையும் மூடின.

சந்தையில்லைக் கடைகளில்லைக் கோயிலில்லை
பள்ளியில்லைப் பாடங்களுமில்லை பாட்டும் கூத்துமில்லை
தெருவில்லை கூடிக்களிக்க ஆட்களில்லை
புணர்ச்சியில்லைக் காதலில்லை உப்பும் புளியுமில்லை….

எழுந்து வந்த சூரியனின் உடலெங்கும் இரத்தம்
துக்கந்தாழாச் சூரியன் வீழ்ந்த இடமும் இரத்தம்
கண்ணீர் பெருகி வீழ்ந்த கடலும் இரத்தம்.
6.
காலையில் பிணங்கள்
மாலையில் பிணங்கள்
இரவில் பிணங்கள்
காலையில் இரத்தம்
மாலையில் இரத்தம்
இரவில் இரத்தம்
சிதறிய பிணங்களைக் கூட்டியள்ளிக் குழியிற் புதைக்க
பிணங்களாலும் புதைகுழிகளாலும் நிறைந்தது “மாத்தளன்“ மணற்பரப்பு
அத்தனைக்கும் சாட்சியாகினர் குருவானவரும் விசுவாசிகளும்.

7.“உன்னுடைய வெள்ளாடையைக் களைந்து விடு“ என்று
தலைமைக்குருவானவரைப் பார்த்துக் கேட்டாள் ஒரு தாய்
அக்கணத்திலே தேவாலய வளவினுள்
அரசியல் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன
வெண்ணிற ஆடையோடு கரியதொரு நிழல் வந்து முத்தமிடுவதாக
முந்திய இரவு கண்ட கனவைச் சொன்ன இளைய பாதிரியார்
“போரின் தோல்வி நெருங்குகிறதே?!“ என்று கலங்கினார்.
“நீ போர் வீரனா களத்தில் கொல்லப்படுவதற்கு?“ என்று கேட்டார்
இன்னொரு பாதிரி கேலியோடு.
“சத்தமிடாதே, போர் நம்மை நெருங்குகிறது“ என்றார் இன்னொரு முதிய பாதிரி.
“இல்லை, போரை நாமே நெருங்கினோம்“ என்றார் இளைய பாதிரியார்.

அந்த வாளாகத்தைச் சுற்றி கலங்கிய விழிகளோடு பல்லாயிரம் சனங்கள்
செபமாலை மாதாவின் கால்களிலே கண்ணீர் விட்டனர்
ஒரு கோப்பை கஞ்சிக்காகவும்
இன்னும் பொத்திக் காத்திட முடியாப் பிள்ளைகளுக்காகவும்
போக்கிடமின்றிய விதியைக் கரைத்து வழியேற்றுமாறும் மன்றாடினர் மரியாளிடம்.

பால்மாவும் அரிசியும் கோதுமையும் பொதியிடப்பட்ட மீனும் நிரம்பிய பதுங்கு குழிகளில்
குருவானவர்கள் இருளோடு இருளாகப் பதுங்கியிருந்தனர்.
அவர்களில் யாரும் புசைக்குச் செல்லவில்லை
யாரும் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யவுமில்லை
பதிலாக யுத்தத்தின் விண்ணானங்களைப் பற்றிப் பேசிக் களித்தனர் பொழுதெல்லாம்

அன்பும் கருணையும் அமைதியும் சமாதானமும் செத்துக் கிடந்தன கால்களிடையே.

8.
மரண தண்டனை பற்றிய எச்சரிக்கை
முள்வேலிகளை நிறுத்தியது கடலோடிகளின் முன்னால்.
ஒரு படகும் தப்பிச் செல்ல முடியாதென்று
கரை நீளம் கொத்தித் துளையிடப்பட்டிருந்தன.
விரிந்த கடலும் வானிலே எழுந்த நட்சத்திரமும்
அழைத்த போதும் யாரும் செல்லத் துணியவில்லை
அந்தச் சாவரங்கிலிருந்து.

திசைகளற்ற கடலோடிகள் மணலிற் புதைந்தனர்
தப்பிச் சென்றோரும் கடலிற் புதைந்தனர்.
9.
ஒரு மருத்துவன் புண்ணுக்கு மருந்திட்டான்
இன்னொரு மருத்துவன் புண்ணைத் தோண்டினான்
காயங்களின் பெருவெளியில் ஊனமும் ஈனமும் பெருகிச் சென்றது
நாய்களுமில்லை எதையும் சுத்தப்படுத்துவதற்கு…

பள்ளிக்கூடங்களை மருத்துவமனையாக்கி
மருத்துவ மனைகளைக் கொலைக்கூடங்களாக்கி,
மணல்வெளியைப் புதைகுழிகளாக்கி
வீடுகளை அகதி நிலமாக்கி,
கடற்கரையைக் மலக்காடாக்கி
கண்ணீரை ஏந்தி நின்ற சனங்களை ஏளனம் செய்தனர் யுத்தப் பிரபுக்கள்.

10.
“புசையுமில்லைத் தேவாரமும் இல்லை
புப்பறிக்க வொரு மரமும் இல்லை
தின்பதற்கு காய்கறியும் இல்லை
சீழ்ப்பிடித்த வாழ்விலே பழமொன்றைக் கண்டு பல நாளானதே
கோயிலுமில்லை தெய்வமுமில்லை
கொண்டாட்டமுமில்லை விருந்துமில்லை
குந்தியிருப்பதற்கொரு பொழுதுமில்லை
பேயளைந்த வாழ்விலே உயிரொன்றைக் காக்க விதியில்லையே!“
என்ற புலம்பல் கேட்டது அருகிருந்த அகதிக் கூடாரத்தினுள்ளே…

11.
இரவே நிறத்தை மாற்று பகலே வழியை மாற்று
காற்றே குணத்தை மாற்று கடலே நிறத்தை மாற்று
நிலமே எம்மையெல்லாம் உள்ளிழுத்துக் காப்பாற்று.
போர் வெறியோடும் வெற்றிக் கனவோடும் மோதும் படைகளுக்குத் தேவை
சனங்களின் தலைகள்.
சனங்களின் தலைகளுக்காகவே போரும் வெற்றியும்

ஒருவன் இறந்த தலைகளை எண்ணுகிறான்
இன்னொருவன் உயிரோடு வந்த தலைகளை எண்ணுகிறான்
புள்ளிவிவரங்களால் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.
புள்ளிவிவரங்களே வெற்றிக்கான முதலீடு?!

சனங்களின் புள்ளிவிவரங்கள் இரத்தத்தில் உறைகின்றன
வரலாற்றில் படிகிறது இரத்தக் கறை.

12.
எவ்வளவுதான் வாழ்ந்தபோதும் தெரியவில்லை
போர்ப்பிராந்தியத்தில்
ஒரு பகலை எப்படி வெல்வதென்று
ஒரு இரவை எப்படிக் கடப்பதென்று
ஒரு காலையை எப்படி எதிர்கொள்வதென்று
மாலையில் பீரங்கிகள் முழங்கின
காலையில் பீரங்கிகள் முழங்கின
இரவில் பீரங்கிகள் முழங்கின
இதற்கிடையில் எப்படி வாழ்வதென்று தெரியவில்லை ஒருவருக்கும்
நெருப்புக்கு அடியில் கிடந்தனர் எல்லோரும்.
தீயெழுந்து ஆடியது பெருநடனத்தை.

கையிலே தூக்கிய பிள்ளையிலிருந்து இரத்தம் ஒழுகியது
அவளுட்டிய பால் அப்படிச் சிந்தியது.
சாவுக்கு உயிரைப் பரிசளிக்கும் ஒரு நிகழ்ச்சியில்
தவறாமல் எல்லோரும் பங்கெடுத்தோம்.

மனைவியின் தாலியைப் பிள்ளைக்கு அணிவித்தான் ஒரு தந்தை
பிள்ளையைக் காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து அவளை மீட்பதற்குமாக.
ஒரு தாயாக, தந்தைக்கே மனைவியாகத் தோன்றினாள் மகள்.

யாருடையவோ பிள்ளையை ஏந்தித் தானே தாயென்றாள் ஒரு கன்னி
வழியில் வந்த முகமறியா ஒருவனோடு சேர்ந்திருந்தாள் ஒருத்தி
சாவரங்காகிய போர்க்களத்தில்
ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன.
தனித்திருந்த இளையோரெல்லாம் போருக்கே என்று நாட்டின் விதியுரைத்தபோது
இப்படி நாடகங்கள் ஆயிரம் உருவாகின.

உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது.

13.
சடங்குகளும் இறுதி மரியாதையுமில்லாத
பிணப் புதையலைச் செய்து களைத்தேன்
காட்டில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சாவுடல்களில்
தெரிந்த முகங்களைத் தேடி அலுத்தேன்
“இனி எங்கே செல்ல?“ என்று கேட்டவருக்குப்
பதில் சொல்ல முடியாமற் தவித்த வீரரைப் பார்த்துச் சிரித்தேன்.
“நடந்து வந்த பாதை
நமது காலடியிலேயே முடிந்து போயிற்றுப் போ“
என்று சொன்னவரைக் கண்டு அழுதேன்.

14.
“அந்தக் காலம் ஒரு புண்ணாயிற்று
அதை மருந்திட்டுக் காப்பதற்கு யாருளர்?“ என்று தேடினர் ஞானிகள்
“சிரிப்பென்றால் என்ன அம்மா?“ என்றது குழந்தை
அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது அப்படியொன்று இருந்ததென்று
ஆனால், அவள் சிரிக்க மறந்திருந்தாள்
எவ்வளவோ முயன்றபோதும் அவளிடம் ஒரு சிறு மலரும் முகிழ்க்கவில்லை.

15.
மழையடித்தது வெயில் எறித்தது
மழையடித்ததா? வெயில் எறித்ததா?
அகதிப் பிராந்தியத்தில்
ஓயாது வீசிக்கொண்டிருந்த புயலில்  சிக்கிய தோணியை
மீட்பதற்கென்று தூர தேசத்திலிருந்து
நல்லாயன் வருவார் என்று சொன்னார்கள்.
சொன்னவரைக் காணவில்லை என்றபோது சொன்னார்கள்,
“சிங்கத்தின் குகையில் புலி உறங்கப் போயிருக்கு“ என்று.

16.
தென்னாசியாவின் மிகப் பெரும் சேரி
தென்னாசியாவின் மிகப்பெரிய சிறைக் கூடம்
தென்னாசியாவின் மிகப்பெரிய கொலைக்களம்
நானிருக்கும் இந்த மலக்கரை என்று
மணலில் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி

வெட்ட வெளியிற் சனங்கள் நின்றனர்
பதுங்குகுழியில் தலைவர்கள் இருந்தனர்
பதுங்கு குழியில் மதகுருக்கள் இருந்தனர்
பதுங்குகுழியில் அதிகாரிகள் இருந்தனர்
பதுங்கு குழியில் தளபதிகள் இருந்தனர்.

பிணக்காட்டிடையும் மலக்காட்டிடையும்
முள்ளேறிக் கிடந்து உழலும் மனிதரைக் காப்பதற்கு
ஒரு மீட்பரும் வரவில்லை.

இரண்டாம் காட்சி

“உன்னுடைய தலையை நெருப்புக்குள் ஏன் வைத்தாய்?“ என்று கேட்டான் படையதிகாரி
அவனே ஒரு தீச்சட்டியை வைத்திருந்தான்.

நாங்கள் ஒரு சேரியிலிருந்து இன்னொரு சேரிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தோம்
தென்னாசியாவின் மிகப் பெரிய சேரி
தென்னாசியாவின் மிகப்பெரிய சிறைக் கூடம்
தென்னாசியாவின் மிகப்பெரிய வதை கூடம்
நானிருக்கும் இந்த மலக்குழியருகு என்று
மணலில் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி
மிஞ்சியவரின் கைகளிலெல்லாம் துயரப்பொதியே யிருந்தது.
௦௦௦௦௦௦

கவிஞர் கருணாகரனின் ” ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் ” தொகுதியிலிருந்து  இக்கவிதை பதிவேற்றப்பட்டுள்ளது.

நன்றி: http://eathuvarai.net/?p=2651