Friday, September 19, 2014

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? 13

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? 13மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத்தொடங்கி, ஜைனமதத்தை வீழ்த்தி, உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம், கி. பி. நான்காம், அல்லது ஐந்தாம் நூற்றாண்டு வரையில், பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது. கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்க்கொலை செய்வதை நிறுத்திக்கொண்டதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட தெய்வங்களைத் தன் மதக்கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. இந்த மாறுதலுடன், ‘பக்தி’ இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப்பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது. சம்பந்தர், மணிவாசகர், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலைநாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், இந்தப் புதிய வைதீக இந்து மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றி பெற்றது.

இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாம். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்தபோதிலும், வைணவமதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில் இந்துமதம் பிரிக்கப்படவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம் சைவம் என்றும், வடகலை தென்கலை என்றும், வீரசைவம் சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே, ஒற்றுமையுடன் போரிட்ட படியால், ஜைன பௌத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்துவிட்டது; தமிழ் நாட்டில் ஜைன மதம் என்றும் தலைதூக்க முடியாதபடியும், ஏற்கனவே ஜைன மதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும் படியும் இதனால் நேர்ந்தது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்து பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி. பி. 1266 -இல் சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷக்களை இலங்கைக்கு வர வழைத்துப் பௌத்த மதத்தை வலியுறச்செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப்படுகின்றதாகலின், கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ் நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம். கி. பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டின் சிற்சில இடங்களில் பௌத்தரும் பௌத்தப்பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர், நாளடைவில், பௌத்தம் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது; மறக்கவும்பட்டது. ஆனால், அதன் பெரிய கொள்கைகள் மட்டும் பல இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன.

பவுத்தக் கோயில்களை அழித்துக் கட்டப்பட்ட ஜைனக்கோயில்கள்!

தமிழ் நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதல்முதல் வெற்றிபெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்தமதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை இரண்டாம் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற்றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்துவந்தது. பௌத்த மதம் முதன்முதல் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன் செல்வாக்கைக் கண்டு ஜைனமதமும் வைதீக சமயமும் பின்னடந்துவிடவில்லை; இவை வாளா இராமல், பௌத்தத்தை எதிர்த்துத் தாக்கிய வண்ணமாய், அதன் வீழ்ச்சிக்கு வழி கோலிக்கொண்டேயிருந்தன. தனது நிலையைக் காத்துக் கொள்ளப் பௌத்தம் இந்த இரண்டு பிறவிப்பகையுடன் போராட வேண்டியிருந்தது. கடைசியாக, நாளடைவில், பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு வழியும் ஏற்பட்டுவிட்டது. ஜைனம், வைதீகம் என்னும் புறப்பகை ஒருபுறமிருக்க, அகப்பகையும் தோன்றிவிட்டது. பௌத்தத்திற்குள்ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈனயானம், மகாயானம் என்னும் இரண்டு பிரிவுகள் தோன்றி அவற்றினின்றும் சில பிரிவுகள் கிளைத்து வளர்ந்தன. சிராவகயானம், மகாயானம், மந்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறிகின்றோம்.
‘ஐயுறுமமணரும், அறுவகைத்தேரரும்’ என்று ஆறுவகைப்பிரிவினரான தேரர்கள் (தேரர்=பௌத்தர்) இருந்ததாகத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகின்றார். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக்குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக்கொண்டனர். இந்த உட்பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றிவிட்டது. உடம்பில் தோன்றிய நோய் நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு முதற்காரணமாயிருந்தன. அன்றியும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வந்தர்களாலும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், தமது பள்ளிகளில் பௌத்த பிக்ஷ¨க்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்த மதிப்புக் குன்றவும், பௌத்தம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவைபோன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவுகளும் ஏற்படாமலிருந்தால், பௌத்த மதம் தனது புறப்பகை மதங்களுடன் போரிட்டுக்கொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறை பாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டபடியால், அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்துவிட்டது.

கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டிற்குப் பின்னர், பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும் வைதீக மதம் உயர்நிலை அடைய முடியாமலே இருந்தது, பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌத்தத்தை முன்னைவிடக் கடுமையாகத் தாக்கி, அதை நிலைகுலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக்கோயில்களாக மாற்றப்பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பௌத்தத்தை வீழ்ச்சியடையச்செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டியபோதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமையிழந்த நிலையில் அந்த மதம் தமிழ் நாட்டில் ஒரளவில் ஊடாடிக்கொண்டிருந்தது.

தமிழகத்திலிருந்து பௌத்தமதம் மறைந்தது எப்படி?

பௌத்தம் தமிழ்நாடு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிப்பட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப்பற்றி இரண்டாம் தொடர்புரையில் காண்க.) இந்த மதங்கள் வட நாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மற்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர்வாழ்ந்திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிற்கு வந்தன. பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் தமிழ் நாட்டில் பரவச்செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைனமதம், அசோக சக்கரவர்த்தியின் பாட்டனான சந்திரகுப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உள்ளன. சற்றேறத்தாழ இதே காலத்தில்தான் வைதீக பிராமண மதமும், ஆசீவக மதமும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கவேண்டும். அக்காலத்தில், வடநாட்டு மதங்களினின்று வேறுபட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர் மதம்.

வட நாட்டினின்று தென்னாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை; ஒன்றோடென்று பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங்கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத்தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழித்துப்பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ் நாட்டில் இந்த வடநாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக் கிளப்பிவிட்டன. தமிழ் நாட்டுப் பெருங்குடிமக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும் செல்வந்தர்களையும் வசப்படுத்திச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக் கொண்டு இந்த வட நாட்டு மதங்கள் தத்தம் கொள்கைகளைத் தமிழ்மக்களுக்குப் போதித்துவந்ததாகத் தெரிகின்றது. இவ்விதச் சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிடவேண்டியதும் ஆயிற்று.,

‘ ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் ;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
சற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் ‘ 


என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவித்தான் என்பதை மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின்றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை.
இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். ‘சங்கம்’ என்றால் பௌத்த பிட்சுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் ‘மும்மணி’ என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்கும் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.

புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின் பற்றியொழுகிய பிட்சுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம்மதக்கொள்கையைப் பரவச்செய்தது போலவே, தமிழ் நாட்டிலும் வந்து, நகரம், கிராமம் என்னும் வேறுபாடின்றி எல்லாவிடங்களிலும் தமது மதக்கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ் நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள்.  தமிழ் நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள்.


மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளருக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்துவந்தார்கள். அன்றியும், தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்துவந்தார்கள்.

பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டு மக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச்செய்து, திரிபிடகம், புத்தஜாதகக் கதைகள், புத்தசரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும், குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர், செல்வந்தர் முதலானோர் உதவிபெற்று நிறுவினார்கள். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்துகொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்துவந்தபடியால், இந்த மதம் தமிழ் நாட்டிலும் நன்கு பரவி வளர்ந்தது.

இவையன்றியும்,


இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம் மதக்கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகின்றது.

இச்செய்திகளெலாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக்கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி, சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிரப்பிரப்பந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.

பௌத்த மதத்தைப் பரப்ப இலங்கையிலிருந்து வந்த மகேந்திரர்!

மகேந்திரர் தமிழ் நாட்டில் வந்து பௌத்த மதத்தைப் போதித்ததாக இலங்கை நூல்கள் கூறவில்லை. பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச்சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையருக்கும் போர் நிகழ்ந்துவந்தபடியாலும், மகேந்திரர் தமிழ் நாட்டில் பௌத்தமதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள் பகைமை காரணமாகக் கூறாமல் விட்டன என்று உவின்சென்ட் ஸ்மித் என்னும் ஆசிரியர் தமது பழங்கால இந்தியா என்னும் நூலில் கூறுகின்றார். இவர் கருத்தையே ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர் கடல் வழியாகக் கப்பலில் பிரயாணம் செய்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச்செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்துப் பேர் பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக் கூடுமென்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப் பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் மேல் நாட்டுக் கீழ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒரு முகமாகக் கூறுகின்றனர். அசோக மன்னர் காலத்தில் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திரரால் தமிழ் நாட்டில் பௌத்த மதம் பரவியது என்பதை வற்புறுத்தும் மற்றொரு சான்றும் நமக்குக்கிடைத்திருக்கின்றது.

யுவாங்-சுவாங் என்னும் சீன தேசத்துப் பௌத்த யாத்திரிகர் கி. பி. 640 – இல் தமிழ் நாட்டிற்கு வந்தபோது, பாண்டியநாட்டு மதுரைமாநகரின் கீழ்ப்புறத்தில் அசோகரது உடன் பிறந்தவராகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு பௌத்தப்பள்ளியும், இந்தப்பள்ளிக்குக் கிழக்கில் அசோக சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட ஒரு விகாரையும் இடிந்து சிதைந்துபோன நிலையில் காணப்பட்டனவாகத் தமது யாத்திரைக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். அன்றியும், காஞ்சீபுரத்திலும் அசோக மன்னர் கட்டிய ஒரு தூபி இருந்ததென்றும் அவரே குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இவர் குறிப்பிடுகின்ற பௌத்தக் கட்டிடங்களைப்பற்றித் தமிழ் நூல்கள் ஒன்றும் கூறவில்லை. மகேந்திரர் இலங்கையில் பௌத்த மதத்தைப் போதித்தபோது, இலங்கையரசனுடைய மாமனாரான அரிட்டர் என்பவர் அந்த மதத்தை மேற்கொண்டு துறவு பூண்டு பிக்குவானார். இந்த அரிட்டர் இலங்கை முழுவதும் அந்த மதத்தைப் பரப்புவதற்கு மகேந்திரருக்கு வேண்டிய உதவி செய்தார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது.

பின்னர் மகேந்திரரும் அரிட்டரும் சேர்ந்து பௌத்த மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பியிருக்கக்கூடும். பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும், அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப்பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் ஒற்றுமையமைப்பைக்கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக்கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டி நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக் கருகில் இருக்கின்றது. அரிட்டாபட்டி என்னும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச்செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனதுபற்றியே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் அரிட்டாபட்டி என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு – அதாவது தமிழ்நாட்டிற்கு – சென்று பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டி நாட்டில் உள்ள அரிட்டாபட்டி என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.

மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, யாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கப்பெற்றோம். அதாவது, தமிழ் நாட்டில் பௌத்த மதம் எந்தக் காலத்தில் வந்தது? இந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ் நாட்டில் வந்ததென்றும், இதனை இங்குக் கொண்டுவந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவர் என்றும் விடை கண்டோம்.

நன்றி : மயிலை சீனி. வெங்கடசாமி

http://fourladiesfor...தைப்-பரப்ப-இலங/
 

Wednesday, September 10, 2014

நர்மதாவின் கடிதங்கள் - தாட்சாயிணி ( சிறுகதை )

நர்மதாவின் கடிதங்கள்


நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது.ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும் வேறு எவரையும் இன்று மட்டும் நான் காணவில்லை.அவளிடமிருந்து கடிதம் வருவது  நின்று பத்து வருடங்களுக்கு மேலாய் ஆகியிருக்கும்.அவள் எங்கேயிருக்கிறாள்…? எப்படியிருக்கிறாள்…? என்பதொன்றும் எனக்குத் தெரியாது.இருந்தாலும் அவளைப் பற்றி அறியும் ஆவலும்,ஆர்வமும் என்னுள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதானிருக்கிறது.
நான் தேவமஞ்சரி. ரொறண்டோவில் குடியேறிப் பன்னிரண்டு வருடங்கள்.அதற்கு முன் நான்கு வருடங்கள் கொழும்புவாசி.அதற்கும் முன்னால் இருபது வருடங்கள் பிறந்ததிலிருந்து யாழ்ப்பாணத்தின் கல்வயல் மண்வாசத்தில் திளைத்துக் கிடந்தவள்.எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் எந்த ஒரு எதிர்வு கூறலுமின்றி கொழும்புக்கு இடமாற்றப்பட்டு,அதேபோல எந்தவித அபிப்பிராயங்களுக்கும் இடமில்லாமல் கனடாவிற்குப் பொதி செய்யப்பட்டவள்.இப்போது கணவனதும்,குழந்தையினதும் அன்பில் தோய்ந்து உலகை மறந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த சாதாரண ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்.அப்படிச் சொல்வது இனி எவ்வளவிற்கு சாத்தியமாகுமோ தெரியவில்லை.யாழ்ப்பாணத்தில் வசித்திருந்த இருபது வருடங்களை மேவிக் காலம் பறக்கின்றபோது,கனடாவின் சூழ்நிலை எனக்கு அதிகம் பரிச்சயமானதாகக் கூட மாறிவிடலாம்.பனிப் பாளங்களை வழிக்கும் குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சடைப்பு ஒன்றுதான் இந்த மண் எனக்கு அந்நியம் என்பதை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.

நிற்க,நர்மதாவைப் பற்றிச் சொன்னேன்.நர்மதாவைப் பற்றிச் சொல்வதைவிட அவள் கடிதங்களைப் பற்றிச் சொன்னால் அதிகம் புரிந்து கொள்வீர்கள்.அவள் கடிதங்களுக்கான காலஎல்லை நான்கு வருடத்திலிருந்து,ஐந்து வருடங்களுக்குள் இருக்கலாம்.ஊரிலிருந்தபோது அப்படிக் கடிதம் எழுதுவதற்கான தேவை எமக்குள் ஏற்பட்டதில்லை.அதனால் அவளது எழுத்தாற்றலும் எனக்குத்  தெரிந்திருக்கவில்லை.தெரிந்திருந்தால் அவளை அப்போதே எழுத்துத் துறையில் ஊக்குவித்திருப்பேன்.

திடுமென்று கொழும்புக்கு இடம்பெயர்க்கப்பட்ட காலத்திலிருந்து,பிறகு கனடாவிற்கு வந்து இரண்டொரு வருடங்கள்வரை அவளது கடிதங்கள் தொடர்ந்தன.
எங்களுக்கிடையிலான கடிதங்கள் எவ்வளவு இடைவெளிக்குள் இருக்கும் என்றுமட்டும் கேட்காதீர்கள்.ஒரு கடிதத்தை அவள் தொடங்கியிருந்தாள் என்றால்,அதற்கு நான்  கொஞ்சம் விடயம் சேர்த்து,சோம்பல் தெளிந்து பதில் எழுதி,அது அவளுக்குக் கிடைத்தவுடனேயே அவளது அடுத்த கடிதம் ஆரம்பித்துவிடும்.எப்படிச் சொல்கிறேன் என்றால்,அவளது கடிதத்தில் ஒவ்வொரு தடவையும் அவள் எழுதும் வரிகள் ‘உனது கடிதம் இன்று கிடைத்தது’
என்பதாகத் தான் இருந்தது.அதில் தான் கடைசிவரை அவளுக்குச் சலிப்புத் தட்டவில்லை.அப்படி இருந்தும் சிலவேளைகளில் ‘இன்று கடிதம் மதியத்திற்கு மேல்தான் கிடைத்தது.இரவின் நிலவொளிக்குள் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்…’ என மாற்றுவாள்.

எனது கடிதம் கிடைத்தவுடன் அவள் எழுதி,அவளுடையது கிடைத்து,நான் கொஞ்சம் யோசித்துப் பதில் எழுதி…அது அவள் கையைச் சேர்ந்த உடனேயே அவள் மீண்டும் பதில் எழுதி…இந்தச் சங்கிலி வட்டம் எப்போது நின்றது…?

நல்லவேளையாக அன்றைய காலகட்டத்தில் ஒருகடிதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச்சேர,ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம்வரை கூட சிலவேளைகளில் எடுத்தது.இல்லாவிட்டால் என்ன எழுதுவதென்று எனக்குத் திண்டாட்டம் ஆகியிருக்கும்.சமயங்களில் அதிர்ஷ்டவசமாக ஒரு கிழமையில் கடிதம் வந்துசேர்ந்ததும் உண்டு.(கவனியுங்கள்,ஒரு கிழமையில் கடிதம் போய்ச் சேர்வதே அந்தக் காலத்தில் அதிர்ஷ்டம் தான்.)

அதிகமில்லை…எங்கள் கடிதங்களில் அனேகமாக இரண்டு விடயங்கள் மேலோங்கியிருக்கும்.
ஒன்று வயல்கரைப் பிள்ளையார்…
இரண்டாவது அவளது குட்டித்தம்பிகள்.
பிள்ளையார் மீதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு.அவளானால் முருகனின்  பக்தை.
நான் முதலிலேயே சொன்ன மாதிரி கடித ஆரம்பத்தில் நலம் கோரும் பகுதிகளில் பின்வருமாறு எழுதுவாள்.
‘நான் நலம்…நீ நலமா…’ என எழுதிச் சலித்தவள்,
‘நீ நலமென்று நம்புகிறேன்…’
‘நீ நலமாக என முருகனை வேண்டுகிறேன்…’
‘நீ நலமாக உன் வயல்கரை பிள்ளையார் துணையிருப்பாராக..’
‘இங்கே நானும் முருகனும் நலம்.உன்னை உன் பிள்ளையார் நலமாக வைத்திருக்கிறாரா…?’
எனப் படிப்படியாக அவளது கடிதங்கள் வளர்ச்சியுறும்.

எழுத்தென்றாலும்,கட்டுரை என்றாலும் பெரும் அலேர்ஜிக்குள்ளாகின்ற நான்,அவளது கேள்விகளுக்கூடாக பதில் எழுதும் ஆற்றல் தூண்டப்பட்டவளானேன்.அவளது கேள்விக்கான பதில்களாய் எனது கடிதங்களும் நீளும்.
வயல்கரைப் பிள்ளையார் என்னில் செலுத்திய செல்வாக்கு ஆழமானது.அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவள் அவள்.பிள்ளையாரைச் சுற்றியிருந்த சணல்வயல் மஞ்சளாய்ப் பூத்துக் கொட்டும் காலத்தில் இருவருமாய் மஞ்சள் துளிர்க்கும் வரப்புகளில் ஓடியாடியிருக்கிறோம்.நான் இங்கு வந்தபிறகு எத்தனை பனி மூடிய அழகு மரங்களைப் பார்த்திருந்தாலும் அந்த மஞ்சள் வயலின் மயக்கும் அழகு இன்றுவரை என மனத்திலிருந்து விலகவேயில்லை.

கடிதங்களில் நான் கேட்டிருக்கிறேன்.
‘எங்கள் வீட்டுப்பக்கம் போனாயா நர்மதா…?’
‘இன்னமும் அங்கே சணல் பூத்திருக்கிறதா…?’
‘இன்னமும் வயல்கரைப் பிள்ளையார் தனித்துத்தான் இருக்கிறாரா…?’
நர்மதாவிடமிருந்தான பதில்கள் கேலியும்,கிண்டலுமாய் இருந்தாலும் அவள் பதில்கள் எனக்கு ஆறுதல் ஊட்டும்.
‘உன்னுடைய பிள்ளையாரை நான் ஒன்றும் பிடித்துக் கொள்ளவில்லை.’
‘நீ போன பிறகு இங்கு யாரும் சணல் விதைக்கவேயில்லை…’
என்பன போன்றெல்லாம் தொடரும் அவள் கடிதத்தின் இறுதிப் பகுதியில் எனக்கான ஆறுதல் மொழி ஏதேனும் இருக்கும்.
‘கவலைப்படாதே…நீ மறுபடி இங்கே வருவாய்…’
‘அந்தச் சணல்காட்டில் மறுபடியும் நாம் திரியும் காலம் வரும்…’
‘வயல்கரைப் பிள்ளையாரும் என்னைப்போல் தான் உனக்காகக் காத்திருக்கிறார்…’
என்றெல்லாம் ஆறுதல் தொக்கும் வரிகளைத் தீர்த்தமாய்த் தருவாள்.
பிள்ளையாருக்கு அடுத்து அவள் என்னிடம் பரிமாறிக் கொண்ட விடயம் அவளது குட்டித் தம்பிகள்.நான் அவளை விட்டுப் பிரிந்தபோது,அவர்களுக்கு வயது ஒன்பதே ஒன்பதுதான்.இரட்டைத் தம்பிகள்.அவளுக்கு அடுத்து இன்னொரு தங்கை இருந்தாள்.நர்மதாவிற்கும்,தம்பிகளுக்கும் இடையில் பதினோரு வயசு வித்தியாசம்.அதனால் எங்கள் வகுப்பில் எல்லோருக்கும் அவள் தம்பிகள் மீதில் அதிகச் செல்லம் இருந்தது.

நான் கொழும்பு போகிற காலம் வரை அவள் அவர்களில் ஒருவனைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் இருப்பாள்.மாறி,மாறி நானும் அவர்களில் ஒருவனைத் தூக்குவேன்.தூக்கி வைத்துக் கொண்டு பக்கத்து வளவுகளுக்குள் அலைவோம்.ஷெல்லடி,விமானத் தாக்குதல் நடக்கின்ற காலம் அப்போது.அடுப்படிப் புகைக்கூடு,மரத்தடி பங்கர் என அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவோம்.

‘ஆரூர் எங்கை…?’
‘ஆர்த்தியை நீ தூக்கு…’ என அந்த நேரங்களில் அவளும்,தங்கையுமாய் அல்லோலகல்லோலப்படுவார்கள்.
ஏதாவது வானத்தில் இரைந்தால் அவளது குரல் முதலில் அந்தக் குட்டித் தம்பிகளைக் கூப்பிடுவதாய்த்தானிருக்கும்.

ஒருதரம் பங்கருக்குள்ளிருந்த ஆரூரிற்கு ஏதோ விஷ ஜந்து கடித்துவிட்டது.வலி பொறுக்க முடியாமல் அவன் அழுத அழுகை தாங்கமுடியவில்லை.அவளது அம்மா அவனைத் தூக்கிக் கொண்டு கந்தப்பு அண்ணரிடம் ‘பார்வை’ பார்க்கப் போய்விட்டாள்.ஆனாலும் நர்மதாவால் பொறுக்க முடியவில்லை.ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தீவிரமான வேகத்தில் அன்று மாலை முழுதும் சாணி கரைத்து பங்கரை மெழுகினோம்.தங்கை ஆர்த்திகனைத் தூக்கிவைத்துக் கொள்ள ,
‘இனிமேல் எந்த விஷ ஜந்தையும் உள்ளே வரவிடமாட்டோம்’ என அவனுக்குச் சத்தியம் செய்து கொடுத்தோம்.பொழுது கறுக்கக் கறுக்க பங்கர் மெழுகியிருந்தோம்.
எங்களைக் காணாமல் அவள் அம்மா பங்கருக்குள் வந்து தேடி என்னை வீட்டுக்குப் போகச் சொல்லி வற்புறுத்தும் வரைக்கும் நான் அங்கேயே நின்றது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.
ஆரூரும்,ஆர்த்தியும் பிறந்தது இந்திய இராணுவத்தின் காலம்.அவர்கள்  பிறந்ததிலிருந்து எப்போதும் யுத்தத்தின் நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்ந்திருப்பார்கள்.அதனாலேயோ என்னவோ,மிகவும் அமைதியான சொல் கேட்கும் பிள்ளைகளாய் அவர்கள் இருந்தார்கள்.அது சிலவேளை நர்மதாவின் கைகளுக்குள் வளர்ந்ததனால் வந்ததாகக் கூட இருக்கலாம்.

ஆரூரிற்கு புலமைப் பரிசிலில் பாடசாலையிலேயே முதலிடம் கிடைத்தது…
ஆர்த்திகன் சித்திரப் போட்டியில் முதல் பரிசு பெற்றது…
என அவள் அவர்களது முன்னேற்றங்களை எழுதிக் கொண்டே போவாள்.
எனக்கு அவர்களோடு கடைசியாய்ப் போன  பிள்ளையார் கோவில் தீர்த்தத் திருவிழா நினைவில் வந்துகொண்டேயிருந்தது.

வேட்டியைச் சின்னதாய் மடித்துத் தார் பாய்ச்சி இருவருக்கும் கட்டிவிட்டபோது இருவரும் குட்டிக் கிருஷ்ணர்களைப் போலவேயிருந்தார்கள்.அன்று முழுக்க அவர்கள் எங்களைத் தூக்க விடவில்லை.பெரிய மனிதர்கள் போல் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார்கள்.நாங்களும் அன்று சேலை உடுத்தியிருந்தோம்.அவர்களைத் தூக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.தீர்த்தக்கேணியில் தாமரைப் பூக்கள் மிதப்பதையும்,சுவாமி தீர்த்தம் ஆடுவதையும் ஆவலாகப் பார்த்தோம்.கோவிலுக்கு வந்த காவடிகளுக்குப் பின்னே ஆரூரும்,ஆர்த்தியும் இழுபட்டார்கள்.இருந்தாலும் எங்கள் கைகளை விடவில்லை.காவடியிலிருந்து விழுந்த மயிலிறகுகளைப்  பொறுக்கி அவர்களுக்குச் சேர்த்துக் கொடுத்தோம்.அன்று முழுக்க அவர்களின் குதூகலம் விடாமல் எங்களைச் சுற்றிக் கொண்டேயிருந்தது.

ம்ம்…எங்கள் குட்டித்தம்பியரின் காலம் அது.
திடுமென்று தான் அவளுடனான அந்தப் பிரிவு வந்தது.
யாழ்ப்பாணத்து மக்கள் இடம்பெயர்ந்து தென்மராட்சி முழுக்கவும்,வன்னியுமாய் பரிதவித்தபோது, எங்களுக்கு இடம்பெயர வேண்டி ஏற்படவில்லை.கல்வயலுக்குள்ளேயே எங்கள் காலம் கழிந்தது.ஆறுமாதம் கழித்து,மீண்டும் தென்மராட்சியையும் கைவிட்டுப் போகும் நிலை தோன்றியவுடன் நாங்கள் வவுனியா போய் அப்பால் கொழும்பு போனோம்.ஏற்கனவே அங்கு அண்ணா வேலை செய்துகொண்டிருந்தது எமக்கு மிகவும் வசதியாய்ப் போயிற்று.எங்கள் குடும்பத்தை கொழும்பில் நிலைநிறுத்துவதற்குரிய ஏற்பாட்டை அவன் செய்து கொண்டான்.

நர்மதாவும் அவள் குடும்பமும் ஊரைவிட்டு வெளியேறவில்லை.உள்ளூரிலேயே இரண்டு,மூன்று தினங்கள்,அயலுக்குள் இடம் மாறிவிட்டுப் பின் தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததாகப் பிறகு எழுதியிருந்தாள்.

அவளை நான் கடைசியாகப் பார்க்கப் போனது ஒரு அவசரமான காலமாகவிருந்தது.வீட்டில் எல்லோரும் கொழும்பு போவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தபோது நான் அவள் வீட்டிற்குப் போயிருந்தேன்.எல்லார் முகங்களிலும் கலக்கமே மேலோங்கியிருந்தது.எதிர்காலம் குறித்து யாராலுமே எதுவும் எண்ணமுடியாதிருந்தது.

“இஞ்சை இனி இருக்கிறது அவ்வளவு பாதுகாப்பில்லை.அங்காலை எப்பிடியாவது வரப் பாருங்கோ…”
என்னால் ஊரில் இருக்க முடியாமல் போன ஆதங்கம் அவர்களுக்கு உபரியாக ஒரு அழைப்பை விடுத்தது.
ஆரூரனும்,ஆர்த்திகனும் என்னை வளைத்துக் கொண்டார்கள்.
“எங்கையக்கா போகப் போறீங்கள்…?”
“இனி வரமாட்டீங்களோ…?”
“எப்பக்கா வருவீங்கள்…?”
என்னை மொய்த்த கேள்விகளுக்கு எனக்குப்பதில் தெரியவில்லை.நர்மதா மட்டும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
“இனி எப்ப காணுறமோ தெரியாது…எங்கையிருந்தாலும் நல்லாயிரு…”
அவள் சொன்னமாதிரி அவளை இன்றுவரை காணவும் முடியவில்லை.அவள் வார்த்தை பலித்தமாதிரி இன்றுவரை குறையில்லாமல் தான் இருக்கிறேன்.
தொடர்ந்து அவள் எமது ஊர் நிலவரங்களைக் கடிதங்களில் எழுதுவாள்.தனது குட்டித் தம்பிகளின் காலம் போருக்குள்ளேயே கழிந்துவிட வேண்டும் என்பதுதான் விதியா…? என்பாள்.

நானும் எங்களோடு படித்தவர்களை கிளாலியில், ஓமந்தையில் கண்டது பற்றி எழுதுவேன்.
நான் கொழும்புக்குப் போகமுதல் எங்கள் வகுப்பில் இரண்டு பேர் இயக்கத்திற்குப் போயிருந்தனர்.அவர்களைப் பற்றியெல்லாம் அவள் உருக்கமாக எழுதுவாள்.
‘என தம்பிகளுக்கு வயசு குறைய என்பதற்காக இப்போது சந்தோஷப்படுகின்றேனடி…’ என எழுதுவாள்.

‘ஆனால் அவர்களுக்கும் ஒருநாள் கடகடவென்று வயது வளரும் …அப்போதுஎன்ன செய்வது…?’ என மனம் கலங்கி எழுதுவாள்.
கடைசியாய்  ‘தம்பிகளின் வளர்த்தியைப் பார்க்கப் பயமாய் இருக்கிறதடி…’ என எழுதினாள்.

அந்தக் கடிதங்களுக்கூடேயே அவளும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகி ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
நான்கு  வருடங்களாக நாங்கள் கடிதத்தில் பேசியிருப்போம்.
அப்படி என்னதான் எழுதுகிறீர்கள் மாறி,மாறி…? என அண்ணா என்னை வம்புக்கிழுப்பான்.சிலவேளை ஊரில் எனக்கேதும் காதல் இருந்திருக்குமென்றும்
நர்மதா தூதாகச் செயற்படுவதாயும்கூட அவன் சந்தேகப்பட்டிருக்கலாம்.இல்லாவிட்டால் எதற்கு இருபத்திநாலு வயசு முடிய முதல் என்னைக் கனடாவுக்கு அனுப்ப அண்ணா பிரயத்தனப்பட்டிருக்க வேண்டும்…?

எனது கல்யாணமும் கூடத் திடீர் என்று ஏற்பட்டதுதான்.அதையும் அவளுக்குக் கடிதத்தில் தான் தெரியப்படுத்தினேன்.திருமணம் கொழும்பில் நடந்தது.அழைப்பிதழை அவளுக்கும் அனுப்பியிருந்தேன்.வழமை போலவே திருமணம் முடிந்தபிறகு தான் இந்த அழைப்பிதழ் அவள் கையைச் சேர்ந்திருந்தது.

அதற்குப்பிறகு அங்கே சண்டை வலுத்திருந்தது.அவளும்,அவள் குடும்பமும் எப்படியோ…என நான் தவித்துக் கொண்டிருந்தேன்.அப்போது நான் கனடாவிற்குப் போகக் காத்துக் கொண்டிருந்த நேரம்.

ஆறேழு மாதம் நான் கனடா போகவும் முடியவில்லை.அவளது தொடர்பும் அற்றிருந்தேன்.கனடாவிற்கு விசாக் கிடைத்து விமானத்திற்கு டிக்கெட் ‘புக்’ பண்ணி புறப்படும் தறுவாயில் அவள் கடிதம் வந்தது.

தும்பளையில் இருக்கிறாளாம்…
ஊரிலே ஒருவரும் எஞ்சவில்லையாம்…
ஒட்டுமொத்தமாய் ஊர் முழுக்க இடம்பெயர்ந்து வன்னிக்கும்,வடமராட்சிக்கும்,வலிகாமத்திற்குமெனப் போய்விட்டார்களாம்.
தீராத துயரங்களோடு வந்து சேர்ந்திருந்தது அந்தக் கடிதம்.
அதற்கான பதிலை நான் கனடாவிற்குப் போய்த்தான் அவளுக்கு எழுதவேண்டியிருந்தது.
புது வாழ்க்கை தந்த பிரமிப்பிலிருந்து  நீங்கி நான் அவளுக்குப் பதில் போட இன்னும் ஆறேழு மாதங்கள் ஆகின.

அதற்குப் பிறகு அவள் கடிதம் கொஞ்சம் கோபத்தோடு,மனத்தாங்கலோடு வந்திருந்தது.
‘உனக்குப் புது வாழ்க்கை கிடைத்துவிட்டது…’
‘உனக்கு இனி நான் யாரோ தானே…’
‘பரவாயில்லை நன்றாயிரு…’
‘என கடிதங்களுக்குப் பதில் போட்டு நீ உன் நேரத்தை வீணாக்காதேடி…’
என்ற சாரப்பட அந்தக் கடிதம் வந்திருந்தது.
அதிலும் ‘வயல்கரைப் பிள்ளையாரையும்,சணல் வயலையும் …நானும் இப்போது பிரிந்து விட்டேன்…உன் சார்ந்த எல்லா நினைவுகளும் என்னை வெறுமையாக்கிவிட்டது…’ என்ற பின்குறிப்பு வேறு.
என்னால் தாங்க முடியாமல் போனது.
‘எத்தனை உறவுகள் வந்தாலும் உனக்குப் பதில் போடுவதை மறப்பேனா…? எண்பது வயதுக் கிழவி ஆனாலும் ,கண்ணாடி போட்டுக் கொண்டு உனக்குப் பதில் எழுதுவேன்…’ என என பதிலை அனுப்பியிருந்தேன்.
அதற்குப் பிறகு சமாதான காலங்கள் வந்து அவள் ஊருக்குப் போனதைச் சொன்ன கடிதங்கள் வந்தன.
விசுவமடுவில் ஆசிரியர் நியமனம் கிடைத்ததைச் சொல்லி எழுதியிருந்தாள்.
சந்தோஷப்பட்டேன்.
அத்தோடு எனக்கும் குழந்தை பிறந்து அந்த சந்தோஷத்தையும் அவளிடம் கடிதத்தில் பகிர்ந்து கொண்டேன்.
என குழந்தையின் உடல்நலம் விசாரித்து வயல்கரைப் பிள்ளையார் கோவில் திருநீறு வைத்து ஒரு கடிதம் அனுப்பிய ஞாபகம் இருக்கிறது.
எனது மகள் கூட ‘அன்ரீ…தின்நீறு…’என மழலை சொல்லப் பழகியிருந்தாள்.
ஆதலால் அதற்குப் பிறகான ஒரு காலத்தில் தான் அவளது கடிதம் நின்றிருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு என்னால் அவளது அன்பான கடிதங்களைக் காணமுடியவில்லை.
முகநூல்களில் எங்காவது அவளோ…அவளது தம்பிகளோ தென்படுகிறார்களா என நான் தேடித் பார்த்துக் களைத்துவிட்டேன்.அவளை விட ஊரில் என்னோடு படித்தவர்கள் எல்லாம் இப்போது முகநூலுக்கு வந்துவிட்டார்கள்.அவளை மட்டும் எங்கும் காணக்கிடைக்கவில்லை.

***********************

என்னாலும் ஊருக்கு வந்து போக முடியும் என்பதை முதலில் என்னால் நம்பவே முடியவில்லை.என் மாமியார் ஊரில் சுகவீனமாய்க் கிடப்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு தான் அவரால் வேலைக்கு விடுப்பு எடுக்க முடிந்தது.இரண்டு கிழமை யாழ்ப்பாணத்தில் தங்க முடியும் என்பதே மகிழ்ச்சி அளித்தது.இரண்டு நாட்கள் அவரது வீட்டில் தங்கியிருந்தோம்.மூன்றாம் நாள் கல்வயலில் எங்கள் வீட்டுக்கு வந்தோம்.அங்கே எங்கள் சித்தி குடும்பம் இப்போது குடியிருந்தது.எனக்கு நினைவு முழுக்க நர்மதா பற்றியே இருந்தது.மாலை ஆறுதலாக மகளைக் கூட்டிக்கொண்டு நர்மதா வீட்டுக்கு வெளிக்கிட்டேன்.

போகிற வழியில் வயல்கரைப் பிள்ளையார் கோவில் இடிபாடுகளோடு தென்பட்டது.கதவு இன்னும் திறக்கப்படவில்லை.எனினும் பூசை நடப்பதற்கு ஏதுவாய் வாசலில் உலர்ந்த பூக்களும்,மாலைகளும் சிந்திக் கிடந்தன.வாசலில் நின்று குட்டிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு வரலாம் என மகளிடம் சொல்லியவாறு புறப்பட்டேன்.
சணல் வயல் காய்ந்துபோய்க் கிடந்தது.

அவள்சொன்னதுஉண்மைதான்.பிள்ளையாரையும்,சணல்வயலையும்  காண நான் ஊருக்கு வருவேன் என்றாள்.வந்துவிட்டேன்.முக்கியமாக அவளைப் பார்ப்பதற்கு.
இதை அவளுக்குச் சொல்லவேண்டும் என நினைத்தபடி கைவிரலில் மகளது விரல்களைக் கோர்த்தபடி நடந்தேன்.

நான் அவளைப் பிரிந்தபோது அவளது தம்பிகளுக்கும் இதே வயது இருக்குமோ…?
அவர்கள் இப்போது வளர்ந்திருப்பார்கள்.
அவள் எதிர்பார்த்தது போல் ஆரூரன் மருத்துவபீடத்திலும்,ஆர்த்திகன் நுண்கலைப் பீடத்திலும் படித்துக் கொண்டிருப்பார்களா…?
அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமா…?
அவளுக்கும் குழந்தைகள் இருக்குமா…?
வழி வழியாய் மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்த போதும் மனம் முழுக்க நர்மதா பற்றிய கேள்விகளே வியாபித்துக் கிடந்தன.
நர்மதா வீட்டுக்கு வந்த போது அவளது வீட்டு வேலி சிதைந்து போய்க் கிடந்தது.வெறும் கிளுவந்தடிகளை நெருக்கமாக நட்டிருந்தார்கள். கிளுவங்  குருத்துக்கள் காற்றில் ஆடியபோது,இந்தப் பத்து வருடங்களாக அவள் எழுதாத கடிதத்திலிருந்த விடயங்கள் தம்மைக் கேள் கேள் எனப் படபடப்பதுபோல் உணர்ந்தேன்.
உள்ளே போய் அழைத்த போது சிறு பையன் ஒருவன் எட்டிப் பார்த்தான்.எட்டு , ஒன்பது வயது இருக்கும்.கடைசியாய் அந்த வீட்டிற்கு அவளிடம் விடைபெற வந்த போது ஆரூரும்,ஆர்த்திகனும் என்ன கோலத்தில் இருந்தார்களோ அதே தோற்றத்தில் இருந்தான் அவன்.காலம் பின் நோக்கிச் சுழல ஆரம்பித்துவிட்டதா என்ன…?
“ஆர் பிள்ளை ” என்றபடி நர்மதாவின் அம்மா.
நரைத்துக் கொட்டிய தலைமுடி உயிருக்குப் பதிலாக உடலைத் தின்று விட்ட காலம்…
எச்சிலை விழுங்கியபடியே “நான் மஞ்சரி நர்மதாவோடை படிச்சனான்”என்றேன்.
“ஆர் மஞ்சரியோ…” என்ற அம்மாவின் குரலில் ஆச்சரியம் அதிகமாய் இல்லை.
“இரும் பிள்ளை கூப்பிடுறன்…” என்றவள் உள்ளே போனாள்.
உள்ளிருந்து ஈரக்கையைத் துடைத்தபடி எட்டிப் பார்த்த நர்மதா என்னைக் கண்டவுடன் பரபரப்பாய் வெளியே வந்தாள்.
“மஞ்சரி…” என ஆச்சரியமாய் மலர்ந்தாள்.
“இதாரிது குட்டி  மஞ்சரியே…” என மகளை  அணைத்துக் கொஞ்சினாள்.
வேடிக்கை  பார்த்தபடி  இருந்த மகனைக்  கூப்பிட்டாள்l.
“என்ரை  மகன் ,நவீன் …”
அவன் இன்னமும்  ஒதுங்கிக்  கொண்டேயிருந்தான் .அதே சுபாவம் …ஆரூரா…ஆர்த்தியா…யாரது  சுபாவம் ஒட்டி  இருக்கிறது  அவனில் …
“கடைசி  வரைக்கும்  கடிதம்  போடோணும்  எண்டிட்டு  கடைசிலை நீ  கடிதம் போடாமலே  விட்டிட்டியே”  என்றேன்.
“ஒவ்வொரு  பிரச்சினை ..பிரச்சினையாய்  வரத்தொடங்க  கடிதம் எழுத  வேணும் எண்ட எண்ணமே செத்துப் போச்சு..”.அவள் எங்கோ  பார்த்துக் கொண்டு சொன்னாள்.
“எங்கே உன்ரை அவர்…எப்ப கல்யாணம் நடந்தது..?.”
“விசுவமடுவிலை தான் அவரும் படிப்பிச்சவர் …விரும்பித்தான் கட்டினான்.இப்ப அங்கை தான் வீடு பாக்கப் போட்டார்…”
“எங்கை உன்ரை   குட்டித் தம்பிகள் ஆர்த்திகன், ஆரூரன்…”
“ஆர்த்தி…” அவள் சத்தமாய்க் கூப்பிட்டாள்.
நெடு நெடுவென்று நல்ல வளர்த்தியாக அவன் வெளியே வந்தான்.முகம் குழந்தைத்தனத்தோடு இருந்தாலும் அதில் சிந்தனை தேங்கியிருந்தது .
“ஆர் தெரியுதோடா…மஞ்சரியக்கா”
அவன் லேசாய் சிரித்தான்.நர்மதாவின் மகனை வாரியெடுத்து மடியில் இருத்திக் கொண்டான். இது ஆர்த்தியா ஆரூரா…எனும் தயக்கம் அவள் ஆர்த்தி என அழைத்ததில் விலகியிருந்தது.இவன் தான் சித்திரப் போட்டியில் பரிசு பெற்றவன்.அவள் நுண்கலைப் பீடத்திற்குப் போக வேண்டுமென்று எதிர்பார்த்தது இவனைத்தான்.
.”தம்பி கம்பஸ்ஸா…” என்றேன்.
“இல்லை…” எனத் தலையாட்டினான்.
“அப்ப என்ன செய்யிறீர்…”
“ஏதும் வேலை கிடைக்குமோ எண்டு பார்க்கிறன்…”
“ஆரூர் எங்கை…?” அவனாவது மருத்துவ பீடத்துக்குத் தெரிவான செய்தியைக் கேட்க மாட்டேனோ எனும் நப்பாசையில் தான் கேட்டேன்..ஒருவரும் ஒன்றும் பேசவில்லை..கொஞ்ச நேர அமைதி…அதைக் குலைத்தபடி
“இப்பதான் ஏ.எல் எழுதினான் அக்கா…”என்றான் ஆர்த்தி.
“ஏன் இத்தனை வருசமா ஏன் எழுதேல்லை…”
“இப்ப தானை தடுப்பாலை வந்தனான்…” என்றான்.
நான் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தேன்.
“அப்ப ஆரூர்…?”
“அவன் முள்ளிவாய்க்காலிலை எங்களை விட்டிட்டுப் போட்டான்…”
நான் நர்மதாவிடம் திரும்பினேன்.
“என்ன நடந்தது…?”
“லீவு நாளிலை வந்து நில்லுங்கோடா எண்டு நான் தான் இவங்களைக் கூப்பிட்டன்…இவங்கள் வந்த நேரம் பாதை பூட்டி…அவங்கள் என்னோட இழுபறிப்பட்டு கடைசிலை ஆர்த்தி இயக்கத்துக்குப் போய் ஆரூர் முள்ளிவாய்க்காலிலை ஷெல் பட்டுச் செத்து …இவன் இப்பதான் தடுப்பாலை வெளிக்கிட்டவன்…”
நர்மதாவின் எழுதாத கடிதங்களில் இருந்திருக்க வேண்டிய சொற்கள் என் முன்னால் ரத்தம் சொட்ட விழுந்து கொண்டிருந்தன.
நான் ஆர்த்தியைப் பார்த்தபோது அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்,குழந்தைத்தனம் மாறாத அவனதும் ஆரூரினதும் முகங்கள்…
என் உடம்பை யாரோ வெட்டி உப்புக் கண்டம் போட்டாற் போல நான் அந்தக் கணத்தில் உணர்ந்தேன்…

நன்றி: தாட்சாயிணி

http://eathuvarai.net/?p=766

Wednesday, September 3, 2014

ராகவி ஆகிய நான்….-தாட்சாயணி ( சிறுகதை )


ராகவி ஆகிய நான்….


முற்றத்து மாவில் ‘குத்’தென்று வந்திறங்கியது ஒரு மைனா.
கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏதோ தன் பாட்டில் கீச்சுக்,கீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.பிறகு தான் தெரிந்தது.அது தன் பாட்டில் பேசவில்லை.சற்றுத் தள்ளி இன்னொரு கிளையிலிருந்த வேறொரு மைனாவோடு பேசிக்கொண்டிருக்கிறதென்று.இரண்டும் கொஞ்ச நேரம் கீச்சு,மாச்சென்று அமளியாய்க் கதை பேசிக் கொண்டிருந்தன.அந்தச் சோடி மைனாக்களின் கொஞ்சநேர சந்தோசம் கூட என் வாழ்வில் அமைந்திருக்கவில்லை.சற்று நேரத்துக்குள் இரண்டும் பறந்துபோய் விட்டன.ஆரவாரம் அடங்கிக் கிடந்தது முற்றம்.

மைனாக்களின் சத்தம் ஓயப் புலுனிகள் மாங்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடின.குழாயடியில் தேங்கியிருந்த நீர்க்குளத்தில் சிறகுகள் நனைத்துச் சிலிர்த்துக் கூத்தாடின.தாங்கள் மட்டும்தான் உலகம் என்பது போல சிரித்துக் களித்துக் கொண்டிருந்த புலுனிகளைப் பார்க்க ஏக்கமாய்க் கிடந்தது.கீரைவிதை போலச் சின்னக்கண்கள்.தலையைச் சரித்து அவை தத்தித் தத்தி இரை பொறுக்குவதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். பார்த்துக்கொண்டேயிருக்க விடாமல் நேரம் துரத்தும்.
புலுனிகளின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து பூனை வந்தது.மெத்து,மெத்தெனக் கால்களை நீட்டி ஆவலோடு புலுனிச் சத்தத்திற்கு அது தலையைக் கொடுத்தபோதுதான் சஜிதா வந்தாள்.அவளுக்கு ஒரு இடத்திற்குப் போனால் முதலில் அவள் கண்களில் தட்டுப்படுவது, நாய்,பூனை போன்ற விலங்குகள் தான் எனச் சொன்னாள்.மனிதர்களைப் பார்க்க முதல் அவளது புலன்கள் அவற்றில் தான் குவியுமாம்.அவற்றின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தான் ரசிப்பதாகவும் அவை வேண்டுமென்றே ஒருபோதும் தீங்கு செய்யாதவை என்றும் சொன்னாள்.அப்படி எனக்கும் சில இருந்தன.ஆனால் நான் தேடுவது மிருகங்களை அல்ல.எனது கண்கள் வானத்தையும்,மரங்களையும் துளாவும்.பறவைகள் தான் என் தேடலுக்குக் காரணமானவை.  பறவைகளைத் தேடத் தொடங்கியபிறகு என் மனம் மிகு இலேசாயிருக்கிறது.

மனிதர்களிடத்தில் எதையும் தேட விரும்பியதில்லை.அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களில்லை ஒருபோதும்.எனது அடி மனதில் என்றைக்கும் அது ஒட்டியபடிதான் இருக்கிறது. அப்படி மனிதர்கள் மீதிருந்த அவநம்பிக்கை தான் அவள் என்னைத் தேடி வந்ததற்கான காரணமாகக்கூட இருக்கலாம்.ஆனால், அவள் என்னை எந்த விதத்தில் நம்பினாள் என்பது எனக்குத் தெரியவில்லை.அவள் தனது வளையல்கள் உள்ளிட்ட நகைகளை காகிதத்தினுள் சுற்றி ஒரு துணிப் பையினுள் பொதிந்து என்னிடம் தந்திருந்தாள்.அவளது வெற்றுக் கைகளைப் பார்க்க எனக்கு ஏதோ போலிருந்தது.ஆசை,ஆசையாய்க் கைகளில் வளையல் போடுவதில் எனக்கும் தான் எவ்வளவு ஆசை இருந்தது.

அவளது மணிக்கட்டை இயல்பாக எனது கை வருடியபோது, அவள் ஏதோ பாம்பு பட்டது போல சட்டென்று தன் கையை உதறினாள்.எனக்கு என்னவோ போலாகிவிட்டது.


“நீ கவலைப்படாதை பிள்ளை, எல்லாத்தையும் மீட்டுப்போடலாம்…” என்றேன் அவளுக்குச் சமாதானமாக.

“இது வரைக்கும் எனக்கு இப்பிடியொரு நிலை வரேல்லை.முதல்முதலா நகையெல்லாம் அடகு வச்சிருக்கிறன்.உங்களிலை உள்ள நம்பிக்கைதான்.ஏமாத்திப்போடாதையுங்கோ அக்கா…”

‘ஏமாத்திப்போடாதையுங்கோ அக்கா…’ என்ற அவளது அந்த வார்த்தைகளில் என் மனம் கொதித்தது.

“ஏமாத்திப்போடுவன் எண்டு நினைச்சால் போ… கொண்டு போய் பாங்கிலை அடகு வை… இப்பதானை சந்திக்குச் சந்தி வங்கி திறந்து வைச்சிருக்கிறாங்கள்…”
எனது எரிச்சலான குரலை மேவி அவள் வறட்சியாகச் சிரித்தாள்.

“நீங்கள் கண்டிப்புக் கறார் எண்டாலும் நேர்மை, நாணயம் எண்டு நம்பினதாலை தான் உங்களிட்டை வந்தனான்…குறையா நினைக்காதையுங்கோ…”

அவள் எழும்பியபோது உள்ளே சென்று அலமாரியைத் திறந்து அவளுக்குக் கொடுக்கவென வங்கியிலிருந்து எடுத்து வைத்த இரண்டு லட்சத்தை எடுத்து வந்து கொடுத்தேன்.

“வீடு கட்ட வெளிக்கிட்டிட்டு, மூளியாயே திரியப் போறாய்.ஏதும் ‘கவரிங்’கெண்டாலும் கழுத்துக்கு,கையுக்கு வாங்கிப் போடு பிள்ளை” என்று மறுபடியும் அவள் கரத்தைத் தடவ முற்பட்டபோது அவள் விலகி எழுந்தாள்.

“வாறன் அக்கா…” சைக்கிளை எடுத்து உழக்கத் தொடங்கினாள்.பத்து மைல் தொலைவிலிருந்து வந்திருந்தாள்.இத்தோடு இரண்டு,மூன்று தரம் வந்திருப்பாளா என்னிடம்.இருக்கலாம்.

வங்கியிலேயே நகையை அடைவு வைத்திருக்கலாம்.பிறகு ஊரெல்லாம் தெரிந்து போனால் அவமானமாம்.கட்டிய குறையில் நிற்கிற வீட்டை முடிக்க அவளுக்குத் தெரிந்த ஒரே  வழி இதுதான்.இரண்டு குழந்தைகளோடு அவள் அல்லாடிக் கொண்டிருந்தாள்.
நான் ராகவி.சந்தைக்கு வியாபாரத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.வட்டிக்குப் பணம் கொடுப்பதுவே என் பிரதானமான வேலையாகவிருந்தது.இந்த நாற்பத்து மூன்று வயதுக்குள் நானாக உழைத்த காசில் ஊருக்குள் நான் கொஞ்சம் வசதியானவளாய்த் தானிருந்தேன்.இருந்துமென்ன எல்லாம் போயிற்று.நான் உழைத்துச் சேர்த்த எல்லாவற்றையும் போன வருஷத்தின் நடுப்பகுதியில் ஒருநாள் இழந்தேன்.எல்லாவற்றையும் இழந்து, வெறுங்கையோடு, வெறுங்கையோடு இருந்தால் மட்டும் பரவாயில்லை.உள்ளே குத்தி ரணமாக்கிய வேதனையோடு செயலிழந்து போய்க் கிடந்த நாலைந்து மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் திரும்பத் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.

அவளுக்கு எந்த அளவிற்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அவள் மீது எனக்கு ஏதோ ஒருவித ஒட்டுதல் வந்திருந்தது.என்னைக் குறித்து அவள் எச்சரிக்கையாக இருப்பது எனக்கு ஒருமாதிரி இருந்தாலும், அவள் வாழ்ந்த, வளர்ந்த சூழல் அவளை அப்படி  வைத்திருப்பதற்கு அவளை எப்படிக் குறை சொல்ல முடியும்.என் தலைவிதி… நான் இப்படி இருக்கிறேன்.வழிய,வழிய வந்து பழகியவர்களின் நடிப்புத்தான் ஒருநாளில் வெடித்துச் சிதறிவிட்டதே.
அதெப்படி,இவ்வளவு மோசமாக நடிக்க முடிகிறது மனிதர்களால்.நான் என்பாட்டில் தானேயிருந்தேன்.நானா வலிந்து போய்ப் பழகினேன் அவர்களோடு.அவர்களாகவே வந்தார்கள்.பழகினார்கள்.வந்தது தான் வந்தார்கள்.என்னில் மிச்சமிருந்த ஜீவனையும் சேர்த்து சூறையாடிக் கொண்டு போய் விட்டார்கள்.

அவர்களைப் பற்றி எனக்கென்ன நினைப்பு இப்போது.நான் கொஞ்சம்,கொஞ்சமாக எல்லாவற்றையும் மறந்து கொண்டு வருகின்றேன்.நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் பெற்றவர்களை, சகோதரர்களை, அவர்களிடமிருந்து என்னைப் பிரித்த விதியை, அண்டி வாழ்ந்த உறவுகளை , புதிசாய்க் கிடைத்த சொந்தங்களை, நான் நம்பி ஏமாந்து என் முதுகுக்குப் பின்னால் சிரித்தவர்களை, என் வாழ்க்கை முழுக்க நான் கண்ட ரணங்களை, நான் தேடித் திரிந்த உண்மை அன்பை, இந்த முரட்டு உடம்புக்குள்ளும் நான் உணர்ந்த மென்மையை… எல்லாவற்றையும் மறந்துவிட நினைக்கிறேன்.

எல்லாம் போதும் எனக்கு…
எந்தவிதமான அன்புத் தேடலுக்கும் நான் அருகதை அற்றவள்.
என்னையொரு கேலிப் பொருளாய் ஆக்கிவிட்டார்கள் அவர்கள்.இந்த மனதுக்குள் இருந்த உணர்வை அவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் ஒரு பாவப்பிறப்பா…?

காதல் உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டது என் தவறா…?
என் மனதைப் புரிந்து கொண்டு என்னைப் பகிர முழுமையாய் ஒருவன் கிடைக்கமாட்டானாவென்று எத்தனை காலமாய்க் காத்திருந்தேன்.
அவன் எனக்கே எனக்கென்று கிடைத்தபோது நம்ப முடியாமல் திணறினேன்.
கடைசியில் என்னை ஒற்றையில் தனித்திருக்கவிட்டு அவன் துரோகத்தோடு காணாமல் போனான்…..

அந்த ஆறேழு மாதங்கள் நான் அவனோடு வாழ்ந்திருந்தேன்.வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்தேன்.அவ்வளவு காலம் இழந்த வாழ்வின் தேன்துளியெல்லாம் அப்போது எனக்குப் பருகக் கிடைத்தது.மனதில் ஒரு ஆறுதல் ஏறி உட்கார்ந்திருந்தது.என்னை எள்ளி நகையாடிய உலகத்தைப் பார்த்து எனக்கு வாழ்க்கை கிடைத்துவிட்டது என உரத்துக் கத்தவேண்டும் போலிருந்தது. சுற்றியிருந்த அந்த அன்பான உறவுகள் போல யாருக்குக் கிடைக்கும்.நான் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தேன்.

0000
ருக்மணி பாதிப் பொழுது ஓய்ந்து போய்க் கிடந்தாள்.பிள்ளைகள் ஓய்ந்து வரும்போதெல்லாம் நான் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.
என் கையெழுத்து எப்போதும் முத்துப் போல அழகாக இருக்கும்.அந்தக் கையெழுத்து இன்றுவரை மாறவில்லை.தமிழிலே எவ்வளவுதான் விருப்பத்தோடும்,கெட்டித்தனத்தோடும் நான் இருந்தாலும் எனக்குத்தான் தொடர்ந்து படிக்கக் கிடைக்கவில்லை.

அப்போது பள்ளிக்கூடக் காலத்தில் என்னுடைய எழுத்தைக் காட்டி சங்கரப்பிள்ளை மாஸ்டர் மற்றப் பையன்களுக்கு உதாரணம் காட்டுவதுண்டு.
“இப்பிடி எழுதோணுமடா , இதெல்லோ எழுத்து…” என்று என்னைப் பார்த்துப் பாராட்டுவார்.ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து தங்களுக்குள் நெளித்துச் சிரிப்பார்கள்.நான் அவர்களோடு அப்போதிலிருந்தே சேர்வதில்லை. அதிலும் தேவன் என் கையைப் பிடித்து முறுக்குவதும்,கிள்ளுவதும் எனக்கு அறவே பிடிக்காது.அப்போதே நான் அவர்களிடமிருந்து விலகித்தானிருந்தேன்.

பக்கத்தில் இப்போது யாருமில்லை.வீடு பூட்டித்தான் கிடக்கிறது.அவர்கள் போய்விட்டார்கள்.ஆறேழு மாதம், அலை எழுப்பிய கடல் மாதிரி குடியிருந்துவிட்டு எந்த அடையாளமும் இன்றிக் கிளம்பிப் போய் விட்டார்கள்.அவர்கள் மட்டுமில்லை.நானும் கொஞ்ச நாள் வாழ்ந்த வீடு அது.

இப்போது அங்கே யாரும் வாடகைக்கு வர ஒத்துக்கொள்கிறார்கள் இல்லையாம்.பக்கத்து வீட்டுச் சொந்தக்காரர் அடிக்கடி வந்து கத்தி விட்டுப் போகிறார்.யாரும் குடிவராததற்கு நானும் ஒரு காரணமாம்.நல்லாய்த்தான் சொல்வார்கள் எல்லாரும்.ஒரு நேரத்தில் அவரது மனைவி ஆஸ்பத்திரியில் இருந்தபோது நான் அவளுக்கு உதவியாய்ப் போய் நின்று பார்த்த கதையெல்லாம்அவர் மறந்து விட்டார் போல.

குடும்பகாரர் அந்த வீட்டுக்கு வரப் பயப்படுகிறார்களாம்.
என்னைக் குற்றம் சாட்டும் தொனி.
என்னை விரட்டுகின்ற ஆங்காரம்.
நான் என் வீட்டில் குடியிருக்கிறேன்.
நான் எதற்குப் போக வேண்டும்…?
நான் வீம்பாகத்தான் நின்றேன்.

ஒரு பெண் பிள்ளைக்கு இத்தனை ஆங்காரம் கூடாதுதான்.ஆனால், நான் அப்படி எதிர்த்து நின்றிராவிட்டால் எங்கேனும் விரட்டியடித்திருப்பார்கள் என்னை. ஆனால் அதற்கும் முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
இரவுகளில் தகர வேலியில் கற்களை எடுத்து எறிவார்கள்.பெரிய,பெரிய சத்தம் இரவில் திகிலை மூட்டும்.

எனக்குத் தெரியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் என்னை விரட்டச் செய்கின்ற சதிதான் என்று.

கிராம அலுவலரிடம் போனேன்.போலிசுக்குப் போனேன்.என்னை என் வீட்டில் இருக்க விடுகிறார்களில்லை என்று முறைப்பாடு கொடுத்தேன்.
கொஞ்ச நாளைக்கு ஓய்ந்திருக்கும்.பிறகு மறுபடி தொடங்கிவிடும்.
சத்தம் தாளாமல் நான் பகல் வேளைகளில் ஆங்காரமாய்க் கத்துவேன்.
எனக்கு மூளைப்பிசகு வந்துவிட்டதாய்ச் சொன்னார்கள்.
அக்கம்பக்கத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றார்கள்.
என்னால் திரும்பவும் அவர்களோடு மோத முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே ஒடுங்கினேன்.திரும்பவும் எந்த நினைப்பும் இல்லாமல் உழைக்கத் தொடங்கினேன்.கையில் மறுபடியும் கொஞ்சம் காசு சேரத் தொடங்கியது.

எனது பணம் அவர்களது அவசரத் தேவைகளுக்குத் தேவைப்பட்டது.வாயை மூடிக் கொண்டார்கள்.

அப்படி என்னிடம் காசு வாங்கிப் பழகியவர்கள் தான் சஜிதாவுக்கு என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.

சஜிதாவுக்கு நல்ல நீளத் தலைமுடி.பார்க்கப், பார்க்க ஆசையாக இருக்கும்.எனக்கு இடுப்புக்குக் கீழ் வளரவேயில்லை முடி.அவளது முடியைப் பார்க்கத் தடவிக் கொடுக்க வேண்டும் போலிருக்கும்.ஆனால், அவள் அருகில் போனாலே விலகிக் கொண்டு விடுவாள்.எனக்குத் தலை நிறையப் பூ வைப்பதில் விருப்பம் இருந்தது.அவளுடைய பின்னலுக்குப் பூ வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.ஆனால், அவள் அதில் அக்கறை காட்டுபவள் போல் தெரியவில்லை.அவளது கழுத்தைச் சுற்றி இறுக்குகின்ற குடும்பப் பிரச்சினைகளுக்குள் அவள் இதில் அக்கறை எடுத்தால் தான் ஆச்சரியம்.
நான் குழாயடியில் இரண்டு மல்லிகைக் கன்றுகள் வைத்திருந்தேன்.அது இப்போது நல்லாய்ப் பூத்துக் கொட்டுகின்ற பருவத்தில் நிற்கிறது.ஒவ்வொரு விதமாய் ஆசைதீர நான் அந்த வாசம் திகட்டும் வரைக்கும் நூலில் கட்டித் தலைக்கு வைத்துக் கொள்வேன்.
யாரேனும் சிறிசுகள் வந்து மல்லிகைப்பூ என்று வாசலில் நின்றாலும் கொடுக்கத் தோன்றாது எனக்கு.மரம் முழுக்கப் பூவாய் இருக்க வாசனையில் குலுங்கும் வீடு.அவளுக்கு நான் அந்த மரத்திலிருந்து கொஞ்சம் பூக்களைப் பிடுங்கிக் கொடுப்பேன்.

“உன்ரை தலைக்கு நல்ல வடிவாக் கிடக்கும், சரம் கட்டி வை பிள்ளை…”

அவள் அதை அசிரத்தையாய் வாங்கிக் கொள்வாள்.
இந்த மல்லிகைப் பூ வாசத்தின் மேலும் ஒருத்திக்கு ஆசை வராமலா இருக்கும், என அவள் மீது எனக்கு ஆச்சரியம் தோன்றும்.

வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை இப்படிப்பட்ட சின்னச்சின்ன சந்தோஷங்களைக்கூட கவனிக்காமல் பண்ணுமா…? எனக்கும் தான் வாழ்க்கையில் எத்தனை அடி. நான் இந்தப் பூக்களை, வளையல்களை, அலங்காரங்களை ரசிக்காமலா இருக்கிறேன்.
அவள் வன்னியில் வேலை பார்த்தவள்.இப்போது இங்கு மாற்றம் எடுத்து வந்திருந்தாள். வன்னியிலே இருந்த சொத்துக்கள் எல்லாம் அழிந்து போக, இங்கேயிருந்த சீதனக் காணியில் வீடு கட்டிக் குடி போகும் எண்ணத்தில் வந்திருந்தார்கள்.சிறிசுகள் படிக்கிற வயதில் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு என்னிடம் நகைகளை அடகு வைக்கக் கொடுத்திருந்தாள்.

என்னிடம் வரமுதல் நாலைந்து இடங்களில் என்னைப்பற்றி விசாரித்திருப்பாள் போல.என் குண இயல்புகள் அறிந்தவள் போல அதற்கேற்ப நடந்து கொண்டாள்.ஆனாலும் கொஞ்சம் தயக்கமாய் விலகியே நின்றாள்.நான் அவளோடு ஒட்டிக் கொண்டது போல அவளால் என்னோடு ஒட்டிக் கொள்ள முடியவில்லை.

இரண்டு,மூன்று பிள்ளைகளைப் பெற்று அதில் ஒன்றை வன்னிக்குள் காவு கொடுத்துவிட்டு, துயரங்களைத் தாங்கும் சக்தியின்றி வந்து நின்றவளை நான் கொஞ்சம் பரிவாகத்தான்  பார்த்தேன்.ஆளுக்காள் துயர் சொல்லி ஆற ஒரு நிழல் கிடைத்தாற் போல.ஆனால் அவள் அதற்கு இசைவாள் போல் தெரியவில்லை. எனக்கும், உனக்கும் இந்தக் கொடுக்கல் வாங்கல் மட்டும்தான்.இது முடிந்தவுடன் எல்லாமும் முடிந்துவிடும்.உனது கண்டிப்பும், கறாரும் இருக்கும் வரைக்கும் எனது காணாமற்போன தம்பிகளைப் பற்றியோ, வன்னிக்குள் குடியேறப் போய் விட்ட தம்பி மனைவியைப் பற்றியோ உன்னிடம் பேசத் தேவையிராது என்றுதானே உன்னிடம் வந்தேன்… என்பது போல எட்டத்தில் இருப்பாள்.மனம் திறந்து எதுவும் கதைத்திருக்கவும் இல்லை.அவளைப் பற்றி அக்கம் பக்கத்திலிருந்து அரசல்,புரசலாய் வந்த கதைகளின் படி அவளது தம்பிகள் இருவர் இயக்கத்தில் கொஞ்சம் பொறுப்பான இடத்தில் இருந்ததாகவும் , இருவரும் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டு விட்டாலும் உண்மை என்னவென்று தெரியாதென்றும், தம்பி மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இவளே பணம் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் இவள் வீட்டுக்கு விசாரணைக்கென சி.ஐ.டி வந்து போவதாகவும் வீடு கட்டுவதற்குப் பணம் எப்படி வருகிறதென அவர்கள் ஆராய்வதாகவும், இந்தக் கதைகளை என் காதுபடவே சனங்கள் கதைத்தார்கள்.ஆனால், நான் எதையும் அவளிடமிருந்து பிடுங்கிக் கேட்கவுமில்லை.

இந்தச் சனங்களின் வாயிலிருந்து வருகின்ற ஈவிரக்கமற்ற சொற்கள் நாளை என்னையும் வேட்டையாடும்.இதுவரை என்னைத் தின்ற சொற்கள் தானே.நான் அவற்றைக் காதில் வாங்கவும் விரும்புவதில்லை.

அவளைப் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை.
எப்போது பணம் தேவை…? எப்போது திருப்பிக் கொடுப்பாள்…? எவ்வளவு தேவை…? போன்ற விபரங்களையும், எனது வட்டிக் கணக்கையும் மட்டுமே அவளோடு பேசிக் கொண்டேன்.அதைத் தவிர எங்களுக்கிடையே பேச எதுவும் இருக்கவில்லை.ஆனால், ஒரு நாள் எனது பூனை மல்லாந்து ராஜ தோரணையில் படுத்துக் கிடந்ததைக் கண்டபோதுதான் அவளது கண்கள் விரிந்து பரிவு வழிந்தோடத் தன் வாய் திறந்தாள்.
“அய்யே… என்ன மாதிரி, சொகுசாப் படுத்திருக்கிறார். பஞ்சு போல எவ்வளவு ஆசையாக் கிடக்கு…”

அவள் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்றதை மறந்து குழந்தையாய்க் குதூகலித்தாள்.அதற்குப் பிறகுதான் அவள் சொன்னாள். எங்கே போனாலும், ஓடித்திரியும் அணில்களையும், பூனை,நாய்களையும் அவள் மனம் பின் தொடர்ந்து செல்வதாக. அவள் சொன்ன பிறகுதான் நானும் யோசித்துப் பார்த்தேன்.எனது மனமும் அப்படித்தானே குருவிகளையும், மரங்களையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் அண்ணாந்து பார்க்கின்ற போது இழந்து போன எனது சந்தோஷங்களைத் தேடுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.ஆனால், நிச்சயமாக நான் தேடுவது தொலைந்து போன மனிதம் மேலே, எங்கேயாவது தொங்கிக் கொண்டிருக்கிறதாவென்றுதான் …

அவள் தங்கள் வீட்டுப் பூனைக்குட்டிகள் பற்றி,வன்னியில் தவறவிடப்பட்ட பூனைக்குட்டியை, அங்கு வந்து போகும் குரங்குக் குட்டிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள்.நானும் எங்கள் வீட்டுப் புலுனிகளையும், மைனாக்களையும் பற்றிச் சொல்வேன்.அப்படித்தான் எங்களுக்கிடையிலான இடைவெளிகளை நாங்கள் நீக்கிக் கொள்ளத் தொடங்கினோம். அவளோடு பழகப் பழக என் மனதில் நிறைந்திருந்த கசந்த நினைவுகள் கொஞ்சம், கொஞ்சமாய்க் கழன்று கொண்டு போயின. நானும், சந்தையும், வியாபாரமும் என் வட்டிக் கடனுமென ஓடிக் கொண்டிருந்தேன்.சைக்கிளை எடுத்து, பாருக்கு மேலால் கால் போட்டு,நான் நிமிர்ந்து சைக்கிள் ஓட்டும்போது ஒழுங்கைக்குள் சிறிசுகள் ஓடி வந்து வேடிக்கை பார்க்கும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்தவள் மறுபடியும் வந்தபோது நான் அவளிடம் கேட்டேன்.
“என்ன, கன நாளாய் ஆளைக் காணேல்லை…”
“நெஞ்சுக்குத்து,ரெண்டு நாள் ஆஸ்பத்திரீலை கிடந்தனான்… இப்ப பறுவாயில்லை…” பரிவாய் அவள் நெஞ்சைத் தடவப் போகப் பட்டென்று விலகிக் கொண்டாள். என் மனம் உடைந்து குமுறியது.

என்ன தான் அன்பு, பாசம் காட்டினாலும், எனக்கும் அவளுக்குமான உறவு வெறும் காசுக் கொடுக்கல்,வாங்கல் தானே.
“ஏன் பிள்ளை இவ்வளவு தூரம் நீ சைக்கிள் ஓடிக்கொண்டு வாறாய்.நெஞ்சுக்குத்துக்காறி.மனிசனை அனுப்பியிருக்கலாம் தானை.நான் குடுத்து விட்டிருப்பன் காசு…” என்றேன்.
“வேண்டாம். நானே வந்து வாங்குறன்” என அவள் முணுமுணுத்தாள்.
“மனிசனை அனுப்பித் தாரை வாக்க இவளுமென்ன ருக்குமணியே…”
தகரவேலிக்கு அப்பாலிருந்து எப்படி அந்தச் சொற்கள் கிளம்பி வந்ததோ தெரியவில்லை.எனது உச்சியிலிருந்து கொதி கிளம்பிக் கொண்டு வந்தது.விறு,விறென்று வீதிக்கு ஓடினேன்.இரண்டு உருவங்கள் ஒழுங்கை முனையில் மறைய தெருவில் கிடந்த கற்களைப் பொறுக்கி எறிந்தேன்.
“என்னடி சொன்னியள்… என்னடி சொன்னியள்…” பைத்தியம் பிடித்தது போல் கத்தினேன்.
சஜிதா திகைப்போடு படலையடிக்கு வந்தாள்.
“அக்கா… உள்ளுக்கு வாங்கோக்கா…எல்லாரும் பாக்கினம்…”
“பாக்கட்டும்… எல்லாரும், இப்ப மட்டுமே பாக்கினம்…நான் பிறந்த நாளிலையிருந்து எல்லாரும் என்னை விசித்திரமாய்த்தானை பாக்கினம்…”
நெஞ்சில் அறைந்தபடி கத்தினேன்.
“உள்ளுக்கு வாங்கோக்கா முதலிலை… ஆக்களை வேடிக்கை பாக்க வைக்காதையுங்கோ…”
“எனக்குப் பைத்தியம்… எல்லாரும் பாக்கட்டும்… அவன் என்னைப் பைத்தியம் ஆக்கிப் போட்டான்…”

நான் எழும்பி அரற்றியபடி உள்ளே வந்தேன். வீதியில் ஆட்கள் குழும,அவள் என்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.இப்போதும் அவள் என்னைப் பிடித்த போது கொஞ்சம் விலகித்தான் நடந்து வந்தாள்.அவள் தோளில் சாயக் கூட எனக்கு உரிமை இல்லை.கொஞ்சம் சாய வேண்டும் போல்தான் இருந்தது.சாய்ந்தால் உதறிவிட்டுப் போய்விடுவாளோ எனும் பயத்தில் நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.

விறாந்தையின் வெளிக் குந்தில் அவள் என்னை அமர்த்திவிட்டுப் பக்கத்தில் இருந்தாள்.

“ஒண்டும் யோசிக்காதையுங்கோ அக்கா.. சனத்தின்ரை கதையை விடுங்கோ…” என்றாள்.

நான் அவளைக் கூர்மையாகப் பார்த்தேன். அவள் தனது கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். என்னைப் பார்ப்பதிலிருந்து விடுபட நினைக்கிறாளோ…?

“நீ உண்மையைச் சொல்லு பிள்ளை, சனத்திண்டை கதையை நீயும் நம்புறியோ…?”

“என்ன…?”

“நான் உன்ரை புருஷனை வளைச்சுப் போடுவன் எண்டுதானோ நீ தனிய இவ்வளவு கரைச்சல்பட்டு இஞ்சை வந்து போறாய்…”

“உந்தக் கதையை விடுங்கோ அக்கா…”
“உண்மையைச் சொல்லு…”
“அவருக்கு நேரமில்லை…” அவள் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.
“அப்ப நீ என்னை நம்புறியோ…?” அவள் திகைப்போடு திரும்பினாள்.
“என்னத்தை நம்புற…?”
“நான் ஒருத்தரையும் ஏமாத்தேல்லை எண்டதை…?”
“நீங்கள் ஏன் ஏமாத்திறியள்….”
“நீ என்ரை கதையை முழுக்கக் கேட்டிட்டுச் சொல்லு பிள்ளை எனக்கு எல்லாருமாச் செய்த அநியாயத்தை…”

நான் எனது கதையை அவளுக்கு முதலில் இருந்து சொல்லத்தொடங்கினேன்.
சின்ன வயதில் அம்மாவை இழந்து அதற்குப் பிறகு அப்பாவையும் இழந்த பிறகு சகோதரர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் என்னை விலக்கத் தொடங்கினர்.
அக்கா,தம்பிகளின் பிள்ளைகள் வளர,வளர பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளிடையே அவமானமாய்க் கிடந்ததாய்க் கத்துவார்கள்.நானும் எத்தனை நாட்களுக்கென்று தான் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பது…? நான் வட்டிக்குப் பணம் கொடுக்கத் தொடங்கியபின் கொஞ்சம், கொஞ்சமாய்ச் சேமித்தேன்.அதன் பிறகு தான் என் பெயரில் இருந்த சிறிய காணித்துண்டில் எனக்களவான சிறிய வீட்டை அமைத்துக் கொண்டேன்.அங்கு சுதந்திரமாய் வந்த பிறகுதான் சந்தைக்குப் போயும் வியாபாரம் பண்ண முடிந்தது.

நான் கொஞ்சம் காசு புழங்கும் ஆளாக இருந்ததால் எல்லாரும் காசுத் தேவைக்கு என்னிடமே வந்தனர். கொடுப்பதைப் போலவே அதை வசூலிப்பதிலும் நான் கறார் ஆகவே இருந்தேன்.

அப்போது தான் பக்கத்து வீட்டுக்கு ருக்மணியின் குடும்பம் குடி வந்தது. ருக்மணிக்கு நாலு பிள்ளைகள்.எங்கெல்லாமோ மாறி,மாறி இடம் பெயர்ந்து வந்ததாக அவள் சொன்ன போதும், அவளது உண்மையான இடம் எதுவென்பது கடைசிவரை எனக்குத் தெரியவேயில்லை.

வந்த புதிதில் எதற்கெடுத்தாலும் என்னிடமே வருவாள்.
“திருவலையைத் தாங்கோ அக்கா..”
“பிள்ளையளுக்குப் பள்ளிக்கூடத்துக்குக் காசு கட்டவேணும் அக்கா. கொஞ்சம் காசு கடனாத் தாங்கோ…”
என எதற்கெடுத்தாலும் என்னிடமே வருவாள்.அவளது கணவன் பெரிதாக வெளிப்பட மாட்டான். இடைக்கிடை எங்கேனும் வேலை கிடைத்தால் போய் வருவதாக ருக்மணி சொன்னாள்
எப்போது பார்த்தாலும் அவள் கணவனைக் குறை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.அவனைப் பார்க்கப் பாவமாயிருக்கும்.
எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்தும்படி நானும் அவளிடம் இரண்டு,மூன்று முறை சொன்ன ஞாபகம்.
திடீரென்று சில நாட்களில் ருக்மணி தனக்கு ஏலாமல் இருக்கிறதென்று என்னைத் தேநீர் போட்டுத்தரச் சொல்லிக் கேட்பாள்.நாரிப் பிடிப்பென்று அவள் படுத்திருப்பாள்.கஷ்ட காலத்தில் தானே உதவி தேவையென்று நானும் அவளுக்குச் செய்து கொடுப்பேன்.தேநீர் போட்டு அவள் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் நானே கொடுப்பேன்.

அப்படித்தான் ருக்மணி ஒருநாள் என்னைக் கூப்பிட்டாள்.
“அக்கா,இந்த மனிசன் சாப்பாடு வேண்டாமெண்டு படுத்திருக்கு.என்னவெண்டு ஒருக்காக் கேளுங்கோ அக்கா…”
இப்படிக் கூப்பிட்ட போதுதான் எனக்கு வினை ஆரம்பிக்கிறதென்று எனக்கு ஏனோ தெரியாமல் போயிற்று.
“ஏன், என்னத்துக்குச் சாப்பிடாராம்…”
“நீங்களே கேளுங்கோ என்னவெண்டு…”
நான் அவனிடம் ஆறுதலாக என்னவென்று விசாரித்தேன்.
குடும்பக் கவலையைச் சொன்னான்.எப்படியும் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்று சொன்னான்.நான் அவனுடைய கவலைகளைக் கேட்பது மனதுக்கு நிம்மதியைத் தருவதாகச் சொன்னான்.

நான் ருக்குவுக்கும், அவனுக்கும் தேறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு அடிக்கடி அப்படி நிகழ்ந்தது.

“அக்கா நான் குடுத்தா அவர் சாப்பிடாராம்…நீங்கள் வந்து குடுங்கோ அக்கா…” அவள் என்னை வருந்தி,வருந்தி அழைத்தாள். அன்புக்கு ஏங்கிக் கிடந்த நான் அவளது குழைந்த வார்த்தைகளில் எடுபட்டேன்.

நாட்கள் போகப் போக அவன் என்னை அணுகும் முறை வித்தியாசப்பட, என் மீதில் அவன் எடுத்த உரிமை அச்சத்தைத் தர ருக்குவிடம் சொன்னேன்.
“வேண்டாம் ருக்கு,நான் இனிமேல் வரேல்லை….”
“ஏன் என்ன நடந்தது…?”
“இல்லை ருக்கு, இப்பிடி ஒரு பொம்பிளை தன்ரை புருஷனை இன்னொருத்தீற்றை விடக் கூடாது. விட்டால் அது பிழையாப் போம்.”

“ஏன், என்ன பிழை… எனக்கு என்ரை புருசன்ரை சந்தோசம் தான் முக்கியம்.நான் வருத்தக்காறி.உனக்கு விட்டுத்தாறன்… நீ என் யோசிக்கிறாய்…?
ருக்குவிடமிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ந்து போனேன்.ருக்கு என்னை அவனுக்கு இரண்டாம் தாரமாக்குவதாகச் சொன்னபோது எனக்கு இந்த உலகமே என் காலடிக்குக் கீழே வந்தது போலிருந்தது.
அதற்குப் பிறகு நானும் எல்லாத் தயக்கங்களிலும் இருந்து விடுபட்டு அவனோடு குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.எனக்கென்று ஒருவன் இருக்கிறான் என்பதே எனக்குப் போதுமானதாய் இருந்தது.அவன் என்னில் காட்டிய அக்கறையில் நான் நெகிழ்ந்து போனேன்.என் வீட்டுக்கு யாரும் ஆண்கள் காசு விஷயமாக வந்தால் கூட என்னை வெளியே வர விடமாட்டான்.

“ராகவி,நீ உள்ளுக்கை போ…” என என்னை உள்ளே அனுப்பிவிட்டு அவனே எல்லாவற்றையும் பேசிக் கொள்வான்.அவ்வளவு நாளும் என் சுய உணர்வோடு இருந்த என் அறிவு அப்போது தான் முழுசாய் மங்கியது.அவனது அந்த வார்த்தைக்குத் தான் நான் அவ்வளவு காலமும் காத்திருந்தது போல் பட்டது.எனது வீட்டில் சகோதரர்கள் கூட ஆண்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் என்னை உள்ளே போவென்று சொன்னதில்லை.இவன் சொன்னான்.அவன் ஒருவன் என்னைத் தன் மனைவியாக முழுக்க,முழுக்க ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்ற மகிழ்வில் திண்டாடினேன்.

பிறப்பில் ஆணாயிருந்து, வளர வளர உடலின் சுரப்புக்களும்,உணர்வுகளும் மாற, முடி வளர்த்து, சேலை கட்டி, அறுவை சிகிச்சை செய்து முழுதாகப் பெண்ணாக மாறிவிட்டாலும் கூட ‘அலி’என்று பெயர் சூட்டிய இந்தச் சமூகம் என்னைப் பெண்ணாகப் பார்க்கவில்லையே.அவன் என்னை உள்ளே போகச் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் எல்லாவற்றையுமே அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தேன்.வங்கியிலிருந்து என் பணம், நகை எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் கொடுத்தேன்.எட்டு லட்சம் ரூபாய்கள்.அவன் ஏஜென்சிக்குக் கொடுப்பதற்கு அதுவும் உதவுமென்றால் எனக்கு எவ்வளவு சந்தோஷம்.அவனோடு நானும் கொழும்புக்குப் போனேன்.அவன் அந்தப் பணத்தை ஏஜென்சிக்காரனிடம் கொடுப்பதை நான் என் கண்களால் கண்டேன்.போய்ச் சேர்ந்தபிறகு ருக்குவையும், பிள்ளைகளையும் கூப்பிடும் போது என்னையும் கூப்பிடுவதாகச் சொன்னான்.

நான் ஊருக்கு வந்தேன்.இரண்டு மாதங்களில் ருக்குவும் கொழும்புக்குப் போய் அலுவல் பார்த்துக் கொண்டு வருவதாய்ச் சொல்லிக் கொண்டு போனாள்.
போனவர்கள் இரண்டு மாதங்களில்லை நாலு மாதங்கள், ஆறு மாதங்கள் என்று காலங்கள் போன பிறகும் திரும்பி வரவேயில்லை.அவர்கள் ஏதோ ஒரு நாட்டுக்குப் போய் விட்டார்கள் என்று என் முதுகுக்குப் பின்னால் யாரோ கதைத்தார்கள்.ஆனால், அவன் என்னைக் கூப்பிடுவான்,கூப்பிடுவான் என நினைத்துக் காத்திருந்து,காத்திருந்து நான்… எல்லாவற்றையும் இழந்தேன், என் மன நிம்மதியையும் சேர்த்து.இப்போது ஒரு பைத்தியம் போல் அலைந்து கொண்டிருக்கிறேன்.

என் புலம்பல் ஓய்ந்தபோது சஜிதா என்னை வருடிக் கொண்டிருந்தாள்.அவளது கரங்களில் கூச்சம் கொஞ்சமும் இல்லை என்பதைக் கொஞ்சம் தாமதமாகவே நான் உணர ஆரம்பித்தேன்.


***************************

நன்றி தாட்சாயிணி

http://eathuvarai.net/?p=1585