Monday, September 23, 2013

மாமலையும் ஓர் கடுகாம் !

மாமலையும் ஓர் கடுகாம் !


கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன்.

மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை!

தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்!

வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி மிகவும் பெரிது.

இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.

ஒரு காதலர் புலம்புகிறார்..........

கைபேசியில் துவங்கிய
நம் காதல் - உன் அண்ணன்
கை பேசியதால்
முறிந்தது .

# என்னா அடி ???? என்று...இன்னொரு காதலர் புலம்புகிறார்.......

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று.......

காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை.. தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்குவது மட்டும் பெற்றோரின் கடமையல்ல, இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு விலைமதிப்பு மிக்க அரிய பல பொருள்களைக் கூட எளிதாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். பெற்றோர்களால் காலந்தோறும் தம்பிள்ளைகளுக்குத் தரமுடியாத அரியது ஒன்று உள்ளது...

ஆம் நேரம் தான் அது. சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்குக் காதுகொடுத்தால் அவர்கள் நம்மிடம் வழிமுறை கேட்பார்கள். அவர்களிடம் நாம் நேரம் ஒதுக்கிக் காதுகொடுக்காவிட்டால்.. அவர்களுக்கு 20 வருடம் அன்பை ஊட்டி வளர்த்த பெற்றோரைவிட 20 நாட்கள் பார்த்துப் பழகிய காதலர் பெரிதாகத் தெரிவார் இதுதான் மனித மனங்களின் இயற்கை.

இதோ ஒரு சங்ககால காதல் இணையரைப் பாருங்கள்.......

தலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில் சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,

“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய காட்டில் தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும் பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான் இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக் காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன் போரிடாது மறைந்துகொள்வேன்“

என்கிறான் தலைவன். பாடல் இதோ..

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே


மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.
நற்றிணை -362 மதுரை மருதனிள நாகனார்


இப்படி பெற்றோருக்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்தக் காதலை நம் தமிழர்கள் களவு என்றார்கள். இந்தப் பாடலைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன.

கொடிய கள்வர்களுக்குக் கூட அஞ்சாத காதலன், தலைவியின் உறவினர்களுக்கு அஞ்சுவேன் என்று கூறும் பாங்கு நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

கள்வர்களைவிட வலிமையுடையவர்களா காதலியின் பெற்றோர்?

இல்லை..

இந்தக் காதலி பிறக்கும்போதே இப்படிப் பிறந்துவிடவில்லை. இவளும் குழந்தையாகத்தான் பிறந்தாள். இவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோருக்குத் தெரியாமல் இவளை கூட்டிவந்தது எவ்வளவு பெரிய தவறு? அவர்களின் மனது என்ன பாடுபடும்! இவளை எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்கள்? எப்படியெல்லாம் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று கனவுகண்டிருப்பார்கள்?

என்று பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்கும் போது தலைவனால் காதலியின் பெற்றோருக்குமுன் நிற்கமுடியவில்லை. இந்த நிலை நாளை நமக்கும் வரலாம்..

நம் குழந்தை இப்படி நம்மை மதிக்காமல் ஓடிச் சென்றால் நாம் என்ன பாடுபடுவோம் என்று காதலன் எண்ணிப் பார்ப்பதால் காதலியின் பெற்றோருக்கு முன் அவனால் நிற்கமுடியவில்லை. என்ன செய்வது......எது சரி? எது தவறு? எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அப்படி வாழ்வதுதான் எல்லோராலும் முடியாது! அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பாது பெற்றோரின் கடமை! அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!

ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..
முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

நன்றி : முனைவர் இரா குணசீலன் வேர்களைத்தேடி இணையத்துக்காக


Thursday, September 19, 2013

யார் இந்த களப்பிரர்கள்? பாகம் 03 (களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்)

களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்


களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது,

 01.தமிழ் எழுத்துரு மாற்றம் .

02 .இலக்கியத் தோன்றல்கள் .


தமிழ் பிராமி (தமிழி கி.மு 5 - கி,பி 3 ம் நூற்றாண்டு) எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாற்று வடிவம் பெற்றது களப்பிரர்கள் காலத்தில் தான். அதாவது தமிழ் பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருக்கும். இந்த வட்டெழுத்துகளிலிருந்து தான் நாம் தற்பொழுது பயன் படுத்தும் நவீன வடிவத்தை தமிழ் எழுத்து முறை பெற்றது என்று கூறுவர். ஆனால் தற்ப்பொழுதுள்ள தமிழ் நவீன எழுத்து முறை வட்டெழுத்துகளிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல அவை தனியாக சோழ மற்றும் பல்லவர்களால் வட்டெழுத்துக்கு பதில் கொண்டுவரப்பட்டது என்றும் கூறுவார்.

கோடு கோடான பிராமி எழுத்துகள் கற்க்களில் செதுக்க ஏதுவாக இருப்பதை கவனிக்கவும். பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருப்பதால் அவை ஓலைச் சுவடிகளில் எழுத கடினமாதலால் (கிழிந்து விடுகின்ற) வட்டெழுத்துகளாக தோற்றம் பெற்றன.
தமிழ் பிராமி எழுத்து- தமிழ் என்பதை பிராமியில் இப்படித்தான் எழுத வேண்டும்


தமிழ் எழுத்து முறை வரலாறுவட்டெழுத்து வளர்ந்த விதம் :


இப்போது நாம் வழங்கிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான இலக்கியங்கள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களே ஆகும்.

இன்று நாம் உலகப் பொது மறையாக கூறிக்கொண்டிருக்கும் திருக்குறள் கூட களப்பிரர் காலத்தில் தோன்றிய முக்கியமான நூல் ஆகும். ஆனால் அதற்க்கு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடுவர். ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தான் திருக்குறளுக்கு உண்மையான வடிவம் பெற்றது.

கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி, முது மொழிக் காஞ்சி, விளக்கத்தார் உத்து (கூத்து நூல்), நரி விருத்தம், எலி விருத்தம், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள் மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.

அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது தான்.

களப்பிரர்கள் காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கியங்களில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.

ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.

ஆனால் இதில் உள்ள ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களில் களப்பிரர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் களப்பிரர்கள் காலத்திற்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன...

ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்கள் பல இருந்தாலும் களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இந்த நூல்களை களப்பிரர்கள் ஆதரித்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயம் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் களப்பிரர்களால் எப்படி தமிழகத்தை முன்னூறு ஆண்டுகள் ஆண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. களப்பிரர்கள் காலத்தில் பல சமூக மாற்றம் ஏற்ப்பட்டதாக கூறுகின்றனர். அதில் விவசாய குடிகளின் நிலை மற்றும் அவர்களின் செல்வாக்கு உயர்ந்ததாகவும், அதே சமயம் பிராமணர்களின் செல்வாக்கு குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல தானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் கூட சமண சமயத்தை சார்ந்தவர் என்ற வாதமும் களப்பிரர்கள் காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு முக்கியமானது என்பதை காட்டுகிறது. மேலும் அக்காலங்களில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி கூட பவுத்த முனிவரால் இயற்றப்பட்டது என்ற வாதமும் களப்பிரர்கள் ஆதரித்திருப்பர் என்பதையே காட்டுகிறது.

ஆனால் களப்பிரர்கள் இதனை ஆதரித்தனர் அல்லது முற்றாக எதிர்த்தனர் என்பதற்கான முறையான சான்றுகள் ஏதும் இல்லை. பிற்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

களப்பிரர்களுக்கும் பிராமினர்களுக்கும் இடையில் என்ன நடந்திருக்கலாம், அவர்கள் ஏன் முற்றாக அழிக்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அடுத்து வரும் தொடர்களில் பார்க்கலாம் .

தொடரும்

நன்றி : இரவின் புன்னகைகாக வெற்றிவேல்


நன்றி:    http://iravinpunnagai.blogspot.com/2013/09/blog-post_19.html 
Tuesday, September 17, 2013

இந்து மதம் எங்கே போகிறது????????? (11 - 16)

11. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.


நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.

அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘படம் பார்த்து தெரிந்துகொள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

‘என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள்’ என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான் பதிலை ஆரம்பிக்கவேண்டும்.

சொல்லிக் கொடுத்தவுடனேயே ‘பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல’; ‘பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது -

அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன் வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர். இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக ‘நல்லவர்’ என எழுதப்பட்டிருக்கிறது

ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.

பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத் தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.

“அய்யர் - நல்லவர்” மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.

எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.

இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.

அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும். சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம் அதாவது தூக்கம்.

பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.

இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.

இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.

தொடரும்

12 பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு.

பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.

பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.

உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து “நாயக- நாயகி - பாவ”த்தை காட்டியது தமிழ் வழிபாடு.

பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்

இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.

வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.

ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.

இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.

விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.‘நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா’என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.

ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்...ஒரு குரல் எழுந்தது.

இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.

“வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான். விஷ்ணுவை அல்ல...” என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் ‘ஷிவோத் கிருஷ்டம்’ என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் - சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான் மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.

தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா...’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...

சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர்.


தொடரும்.....

13. ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’

எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.

இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.

யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே... அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி... தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இயற்கை செழிப்பான இந்த காலடியில்...ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.

அப்பாவும்... அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.

அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.

அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.

அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். “அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே...” அம்மாவிடம் சொல்லி விட்டு...பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.

அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.

புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.

புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்... அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.

நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.

வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர... என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.

அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார்.

உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே... தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்...‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது.
14. சந்யாசிகள் எப்படிஎப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...

வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரை அழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே - அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.

வைதீகர்கள் வந்தார்கள். ‘பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே...’ என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.

‘இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...’ என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.

சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.

பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.

சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.

சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்ற சங்கரர்... சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.
 
சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச ஸ்மிருதி.

‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...’ -- சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.

எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது பல்லக்கில் போகவேண்டும்.

இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.

“வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது...”என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.

பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என ‘வாகன’த் தீட்டு பற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.

இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.

தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).

இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.

மூடமதே... அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் - ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக... அறிவூட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்? என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்

ஆதிசங்கரர். அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம்.

15. பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர்.

பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். சங்கரர் அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்

பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் சொன்ன சேதிகளை யெல்லாம் அவரைப் பின்பற்றக் கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா? கடை பிடிக்கிறார்களா? பானை சோற்றுக்கு பதச் சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம். .

‘அர்த்தம் அனர்த்தம் பாவைய நித்யம் நாஸ்தி தகஹா சுக வேஸஹா சத்யம்’

இதுவும் “பண” பக்தி பற்றிய ஸ்லோகம் தான். பணம் என்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும்.

உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட அதைக் காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன். ஆனால், மித்ரன்கூட சத்ரு ஆகி விடுவான். அதாவது நண்பன் கூட பகைவன் ஆகிவிடுவான் என்ற ஆதிசங்கரர்,

‘புத்ராதபி தனபாஜாம் பீதிஹி’ என்றும் சொல்லுகிறார். இதற்கென்ன அருஞ்சொற் பொருள்? பணக்காரனுக்கு தன் மனைவி மக்களால் கூட ஆபத்து, பீதி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு, மண்ணாசை, பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தளமான, பணத்தை பற்றி குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும் ஆதிசங்கரர் அடுத்து முக்கியமாக... பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தாற் போல ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

“நாரீஸ் தனபர நாபீதேசம்த்ரிஷ்டவா மாதாமோஹாவேஸம்...” என்று போகிற இந்த சமஸ்கிருத கவிதையின் சாராம்ஸமே. ‘பெண்களை நம்பாதே’ என்பதுதான்.

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே. அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக... தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின - . அவரது உபதேசங்கள்.இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல... குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே...? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்... இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

மாறாக, வேதபககாரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். “வேதோ நித்யமதிய தாம்ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்காம்யே மதிஹி” அஃதாவது சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்ற ரீதியில் சங்கரர் சொல்லி அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்.

தொடரும்

16. கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.
அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?

வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை. தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க... ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.

ஆகமக்காரர்களா...? முதலில் ஆகமம் என்றால் என்ன? கடவுளை எப்படி வழிபடவேண்டும். என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் பற்றி சொல்வது தான் ஆகமம்.

ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.இதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.

வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.

பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும். அர்ச்சிக்க வேண்டும்... ஆகியவற்றை ‘விகனசர்’ என்பவர் வகுத்தார். எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.

அடுத்ததாக... பெருமாளே இறங்கி வந்து ‘என்னை இப்படி இப்படியெல்லாம் பூஜிக்கவேண்டும். புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும்’ என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர ஆகமம் எனப்படுகிறது.

சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்கள். அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.

சரி... இவைதான் ஆகமங்கள். அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள் தான் ஆகமங்கள். இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்... இதோடு இன்னொன்றையும் கூறின.

‘இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால் தான் மோட்சம் கிட்டும்’ என்பது தான் அது. இங்கே தான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார். கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.

கடவுள் மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் மாயம், பொய். ஆகமங்கள் பொய்களை திரட்டி வந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக் கூட விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம்... ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது. கடவுளின் கடாட்சமும் கிட்டாது. ஆகமங்கள் தவறு. அது அடியொற்றுவதும் தவறு என வாதிட்டார் ஆதிசங்கரர்.

அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?

சொன்னார்.“சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம் நித்ஸங்கத்வே நிர்மோகத்வம் நிர்மோகத்வே நித்ஸலசித்தம் நித்ஸலசித்தே ஜீவன்முக்தி...” இந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?

சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது. உலகியல் பற்று குறையும் போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டுவிட்ட போது உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர். தனது 32 வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்... அவர் இன்ன இடத்தில் தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.

ஒருவேளை கிடைத்திருந்தால்... அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை. அதனால்... ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.

இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க... சங்கரரின் காலம் பற்றியும் பல கணிப்புகள்! தனது “Discovery of India” என்னும் வலுவான வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.

இன்னும் சிலர்... நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள் சகஜமாக.

இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர் தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.

என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள் தானே ஞாபகம் வரும். அவற்றை ப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.

சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகு தானே ஆரம்பிக்கப்பட்டவை. அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.

தொடரும்
நன்றி: http://thathachariya...2010/10/16.html

Friday, September 13, 2013

யார் இந்த களப்பிரர்கள்? பாகம் 02

யார் இந்த களப்பிரர்கள்? பாகம் 02கடந்த பதிவில் களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.


  • களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். 

ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி.  அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய பகுதி. களப்பிரர்கள் காலத்தில் பல்லவர்களும் செழிப்பாகவே இருந்தனர், அதனால் தொண்டை மண்டலத்தின் காட்டுப் பகுதியில் இருந்து களப்பிரர்கள் எழுச்சியடைந்தனர் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

  • களப்பிரர்கள் என்பவர்கள் கலப்பை கொண்டு உழுத விவசாயப் பெருகுடி மக்கள். கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பர் என்று மறுவி பின்னர் களப்பறையர் என மாறியது. களப்பரையர் என்ற பெயர் தான் பிறகு களப்பிரர் என்று மருவியது என்றும் கூறுகின்றனர். தம்முடைய சொந்த நிலத்தில் பயிர் செய்யும் வேளாளர்களை உழுதுண்பர், ஏரின்வளனர், வெள்ளாளர், கரலர், கலமர் என்ற பெயர்களில் அழைத்தனர்.
ஆனால், இந்தக் கருத்தும் ஏற்றுக்கொள்வது போல இல்லை. ஏனெனில் விவசாயக் குடி மக்கள் படை திரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதற்கு சொல்லிக்கொள்ளும் படி ஆதாரங்கள் ஏதும் அறியும் படி இல்லை.

  • களப்பிரர்கள் என்ற களப்பாளர்கள் பண்டைய தமிழ்க் குடிகளைச் சேர்ந்த சைவ மரபைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
களப்பிரர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அதாவது புதுக்கோட்டை சித்தன்ன வாசல் குகைக் கோயில், குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் களப்பிரர்கள் காலத்திய சமண குகைக் கோயில்களே என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. களப்பிரர்களின் மதம் சமணம் தான், அவர்களின் ஆதரவும் சமண மதத்திற்கே இருந்தது. மாறாக அவர்கள் சைவ மரபைச் சார்ந்தவர்கள் என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்கள் ஆரியர்களை (அய்யர்கள்) ஆதரிக்காமல் இருந்த காரணத்திலிருந்து களப்பிரர்களுக்கும் சைவ மரபிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். 

அக்காலத்தில் ஆரியர்களுக்கு அவர்கள் எடைக்கு எடை பொன், நிலம் ஆகியவை தானங்களாக வழங்கப்படும் நிலை இருந்தது. இவை அனைத்தையும் களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதனாலேயே சைவ ஆராய்ச்சியாளர்கள் இக்காலத்தை இருண்ட காலம் என அவர்கள் அழைக்கின்றனர். சைவத்தையும், ஆரியர்களையும் எதிர்த்த இவர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்க்கவே இயலாது...

  • கர்னாடக மாநிலத்தைச் சார்ந்த நந்தி மலையில் வாழ்ந்த முரட்டுக் குடியைச் சேர்ந்த மக்கள் தான் இந்த களப்பிரர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்வர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது. 

மைசூரில் கிடைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் கர்நாடகத்தின் மலைக் காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் அதில் உள்ளதாக கூறுகின்றனர். 

  • சோழ நாட்டில் களப்பாள் என்ற இனக்குழுவினர் தான் இந்த களப்பிரர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
இது வெறும் வாதமாக மட்டுமே உள்ளதே தவிர எந்த ஆவணங்களும் அப்படிக் கூறவில்லை.
  • களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை கைப்பற்றி மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர் என்றும் கூறுகின்றனர்.
சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது கி.பி.300- கி.பி.600) தென்னகம் முழுவதும் தமிழே வழங்கப் பெற்றது. கி.பி 800க்குப் பிறகுதான் கன்னட மொழியே தோன்றியது. அதிலும் அவர்கள் கன்னட நாட்டிலிருந்து வந்தனர் என்ற கருத்தால் அவர்களும் தமிழர்களே என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் காலம், அவர்கள் வரலாறு என அனைத்தும் அழிக்கப்பட்டு  தமிழகத்திலிருந்தே அவர்கள் விரட்டப் பட்டதற்கு கண்டிப்பாக காரணம் ஏதேனும் இருந்தே தான் ஆக வேண்டும்.
  • களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது. 
களப்பிரர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் விரட்டப்பட்ட பின் எஞ்சியவர்கள் தான் இந்த முத்தரையர் என்று தான் அனைவரும் நம்புகின்றனர். மாறாக முத்தரையர் தான் இந்த களப்பிரர்கள் என்ற கருத்து செயலற்று, களப்பிரர் தான் முத்தரையர் என்ற கருத்து ஓங்கி விடுகிறது.

மேற்கூறிய இடங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து தான் களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியிருப்பனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதிலும் களப்பிரர்கள் என்பவர்கள் கர்நாடகத்தின் வட பகுதியிலிருந்தே வந்தவர்கள் என்றே பலர் நம்புகின்றனர். சிலர் களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை ஆண்டனர் என்றும் குறிப்பிடுவர்.

எது எப்படியோ, களபிறர்கள் முன்னூறு வருடம் தமிழகத்தை ஆண்டுள்ளனர். பிறகு அவர்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டதன் காரணம் என்ன? அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனைதான் என்ன? 

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் பலமாக வளர்ச்சியடைந்ததாக கூறுகிறார்களே, உண்மையில் என்ன தான் நடந்திருக்கும்?

கறுப்பு  வண்ணத்தில் உள்ளவை அனைத்தும் தேடல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள்.


நீல நிறத்தில் உள்ளவை அனைத்தும் எனது அறிவிற்கு உட்பட்ட எனது தேடலின் கருத்துகள்.


தொடரும்

நன்றி : இரவின் புன்னகைகாக வெற்றிவேல்


Wednesday, September 11, 2013

யார் இந்தக் களப்பிரர்கள் ??? பகுதி ஒன்று

யார் இந்தக் களப்பிரர்கள் ???


நான் எனது பாடப்புத்தகத்தில் படித்தது நினைவிற்கு வருகிறது. அதாவது களப்பிரர்கள் காலம் தமிழகத்திற்கு இருண்ட காலம். அவர்கள் காலத்தில் தமிழகத்தில் களவு, சூது, மது போன்ற தீய பழக்கங்களுக்கு தமிழர்கள் அடிமையாகினர், அவற்றிலிருந்து தமிழர்களைக் காக்கவும், களையவுமே அந்த கால கட்டத்தில் தமிழில் ஏராளமான நன்னெறி நூல்களும், பக்தி இலக்கியங்களும் தோன்றின என்று படித்தேன். அதையும் அப்படியே நம்பி விட்டேன். பிறகுதான் அவை அனைத்தும் மாற்றி எழுதப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாறு என்பதை புரிந்து கொண்டேன். 

அதாவது இருண்ட காலம் என்றால், தீய காலம் அல்ல, அது சிலர்களால் குறிப்பாக வேத மதத்தை (இந்து மதம்) சேர்ந்தவர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அது பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத இருண்ட காலம் என அறிந்து கொண்டேன், நம் தமிழக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை தமிழகத்தில் யார் ஆண்டது, எப்படிப்பட்ட ஆட்சி என அவர்கள் பற்றிய தகவல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விட்டது.

அவர்கள் அப்படி என்ன தான் செய்தார்கள், ஏன் அவர்கள் காலம் இருண்ட காலமாக எந்த தகவலும் கிடைக்கப்பெறாமல் உள்ளது என்பதை தேடிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அவற்றை இனி பாப்போம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர், அவர்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளை தேடிப்பார்த்தால் நேரடியாக சில பக்கங்களைக் கூட காண இயலாது அத்தனையும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, களப்பிரர்கள் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப்பட்டினத்தையே (பூம்புகார்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.

அவர்களின் ஆட்சி மொழி பாலி மொழி மற்றும் கிரந்த மொழி ஆகும், இக்காலகட்டத்தில் தான் பல சமண நூல்கள் பாலி மற்றும் சமண கிரந்த மொழியில் வெளிவந்தமையால் தமிழைக் காக்கும் பொருட்டு தமிழில் பல இலக்கியங்களும் நூல்களும் தோன்றின என்று கூறுகின்றனர். திருக்குறள் மற்றும் சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் இக்கால கட்டத்தில் தான் தோன்றின. ஆனால் களப்பிரர்கள் இந்நூல்களை ஆதரித்தனர் என்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.

அவர்கள் சமண சமையத்தைச் சார்ந்தவர்கள் என்று பலர் கூறுகின்றனர் அதற்க்கு ஆதாரமாக குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது என சிலர் கூறுகின்றனர். மாறாக கிடைத்துள்ள சில களப்பிரர்கள் பற்றிய தகவல்களும் புத்த மதத்தைச் சார்ந்த நூல்களில் மட்டுமே கிடைக்கப் பெறுவதால், அவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது அவர்கள் பார்ப்பணர்களை ஆதரிக்கவில்லை, அதாவது களப்பிரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலம் மற்றும் பொன் தானங்களை தடுத்து நிறுத்தினார்கள். அக்காலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு (அதாவது ஆரியர்கள்- புரிதலுக்கு மட்டும் இச்சொல், மற்றபடி நான் இங்கு ஆரிய- திராவிடம் பற்றி பேசவில்லை) எடைக்கு எடை தங்கம், நிலம், மற்றும் தானியங்கள் போன்றவை தானங்கங்களாக வழங்கப்பட்டன. இவற்றை களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினர் என்பதற்கு மட்டும் சில ஆதாரங்கள் உள்ளன. இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. மேலும் இவர்கள் காலம் கி.பி.300 முதல் கி.பி.600 என்பன போன்ற சில தகவல்கள் இதிலிருந்தே யூகிக்கப்படுகிறது. அவர்கள் காலத்தில் சமயங்களுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை.


 மேலும் அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அவை அழிக்கப் பட்டுவிட்டன என்றே கூறலாம். எப்படி தேடினாலும் இரண்டு பெயர்கள் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. கள்வர் கோமான்- புல்லி என்பவரால் அவர்கள் ஆட்சி தொடங்கியது என்றும், கி.பி. 442ல் ஆட்சி செய்தவன் கோச்சேந்தன் கூற்றன் என்பன ஆகும்.

பிறகு இறுதியாக களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். களப்பிரர்கள் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனாலும் , சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் மற்றும் சாளுக்கியர்களாலும் கிபி 7 நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர் என்பது கூட பாண்டியர்களின் செப்பெடுகளிளிருந்தே கிடைக்கப் பெறுகிறது.


குறிப்பிட்ட இக்காலத்தில் மட்டும் பார்ப்பனார்களின் செல்வாக்கு அறவே இன்றிக் காணப்பட்டதால் அக்காலம் தமிழகத்தில் இருண்ட காலம் என சைவ ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டது என இக்கால நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

களப்பிரர்களின் இருண்டகால தேடல் தொடரும்...

நன்றி: இரவின் புன்நகைக்காக வெற்றிவேல்


லான்ட்மாஸ்ரர்

லான்ட்மாஸ்ரர்


லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர்

விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.

நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.

லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான். கொடுமை கொடுமை.
 

உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.

லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.

சிநேகிதி ஈழத்துமுற்றதுக்காக
நன்றி :  http://eelamlife.blo...og-post_17.html


Friday, September 6, 2013

பசியாறல்

பசியாறல்


அரிசி நன்றாக பூத்திருந்தது

முன் விரிக்கப்பட்ட இலையில்

பக்கத்தில் துணையாக காய்கறிகள்

கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது

அரைத்தும் நிறம் மாறா பருப்புகள்

நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து

நீர் விளாவி உண்ணச் செல்ல

மணம் ஈர்த்தது

மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள்

பசியடங்குதல்

பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல…


ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக
 

Wednesday, September 4, 2013

ஓய்ந்த மழை

ஓய்ந்த மழைபட்சிகளின் அயர்ச்சிகளை
ஒன்றுக்கொன்று
சீண்டிக்களைத்த மேகங்கள்
தன்னிலை மாற்றி ஒழிகிறது
களைகூட்டி காடு செய்த
வானம்
முன்பொருபோதுமில்லாத
சிறகுகளிழந்து
வெறித்துக் கிடக்கின்றது
இரவைக் காத்து
புத்தகங்களுக்குள் மறைத்த
புகைப்படங்கள்
காட்டும் புன்னகையும்
பொருத்தமில்லாது
பொய்த்து விடுகையில்
விடுபட்ட சுவர்களுக்கிடையே
குடிகொண்ட்ட கரப்பான்களின்
ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள்
நிலமூர்கிறது
அங்கொரு மழை ஓய்கிறது..

யாழினி பண்புடன் இணையத்திற்காக

நன்றி : http://new.panbudan....chives/401#more