Monday, March 25, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 43. குடி புகுந்தாள் )

பாகம் 3 , 43. குடி புகுந்தாள்


இரவில் மூன்றாம் சாமத்தில் மாளிகையை விட்டுத் தனியே கிளம்பிய
ரோகிணி, ஒருகணம் மரத்தடியில் நின்று யோசனை செய்துவிட்டு, நேரே
தஞ்சை அரண்மனையின் உள்முகப்புக்குச் சென்றாள். அந்த நேரத்தில்
அவளை அந்த இடத்தில் கண்ட வாயில்காவலர்களுக்கு ஒன்றுமே
விளங்கவில்லை. பணிவோடு ரோகிணியைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

“வல்லவரையர் தாத்தாவிடம் போய் நான் வந்திருப்பதாகச்
சொல்லுங்கள். மிக மிக அவசரமென்றும் கூறுங்கள்.’’

அவளுடைய குரல் காவலர்களுக்குக் கட்டளையிடும் குரலாக இருந்தது.
விரைந்து சென்று படுக்கையிலிருந்தவரை எழுப்பினார்கள். அவரே வாயிலுக்கு
வந்து ரோகிணி நிற்கும் கோலத்தை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பின்பு
“வா, ரோகிணி! என்ன செய்தி?’’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே
அழைத்துச் சென்றார். “இந்த நேரத்தில் நீ என்னைக் காணும்படியாக உனக்கு
என்ன நேர்ந்தது?’’ என்று கேட்டார்.

“தாத்தா!’’ என்று விம்மினாள் ரோகிணி, பிறகு ஒருவாறு தன்
உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கூறினாள்:

“எனக்கு என்ன நேர்ந்தாலும் நான் இங்கு வந்திருக்க மாட்டேன்.
ஆனால் கொடும்பாளூருக்கும் அதன் இளவரசருக்கும் இப்போது ஆபத்து
நேர்ந்திருக்கிறது. இனித் தாமதிக்க நேரமில்லை. உடனே படைகளுடன்
சென்றால் ஒருவேளை காப்பாற்றலாம்.’’

திடுக்கிட்ட வல்லவரையர் வந்தியத்தேவர், “உனக்கு எப்படித் தெரியும்
ரோகிணி!” என்று கேட்டார்.

“தயவு செய்து என்னிடம் எதையும் கேட்காதீர்கள், தாத்தா! எனக்குத்
தெரியக்கூடாத செய்திகள் எனக்குத் தெரிந்ததனால் வந்த வினைகள்தான்
இவ்வளவும். என் சொல்லை நம்பினால் உடனே புறப்படுங்கள். இல்லா
விட்டால் என்மீது இரக்கம் கொண்டு, எனக்கு ஒரு குதிரை கொடுத்து
உதவுங்கள். இதையாவது உடனே செய்யுங்கள்.’’

வல்லவரையர் ரோகிணியின் முகத்தை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்.
பிறகு எழுந்து சென்று காவலர்களுக்கு ஏதோ கட்டளைகள் இட்டார். திரும்பி
வந்து, “சரி புறப்படு ரோகிணி!” என்றார்.

நொடிப் பொழுதில் நூற்றுக்கணக்கான குதிரை வீரர்கள் அரண்மனை
வாயிலில் அணிவகுத்து நின்றனர்; மகிந்தர் மாளிகையைச் சுற்றிலும்
காவற்படை வளைத்துக் கொண்டு நின்றது. வீரர்களின் அரவம் கேட்டு
விழித்துக் கொண்ட மகிந்தர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தார்.
அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை.

‘என்ன! வல்லவரையரும் ரோகிணியுமா முன்னின்று படைகளை
நடத்திச் செல்லுகிறார்கள்! எங்கே செல்லுகிறார்கள்?’’

பதறியடித்துக்கொண்டு போய்க் கந்துலனைப் பற்றி எழுப்பினார்
மகிந்தர்.

“காரியம் கெட்டுவிட்டது, கந்துலா! காரியம் கெட்டு விட்டது!’’ என்று
தலைதலையாக அடித்துக்கொண்டார்.

பொழுது புலரும் வேளையில் புறப்பட்ட குதிரைப்படை உச்சிப்
பொழுதின் உக்கிரத்தோடு கொடும்பாளூரை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதற்குப் பின்னால் மற்றொரு பெரும்படை பறந்து வருவது அதற்குத்
தெரியாது. நள்ளிரவில் சோழபுரத்திலிருந்து கிளம்பியவர்களும் அங்குதான்
விரைந்து வருகிறார்கள் என்பதை வல்லவரையர் அறியவில்லை.

நகரத்தின் எல்லைக்கு வந்தவுடன் வல்லவரையர் திடுக்கிட்டார்.
ரோகிணி வாய்விட்டு அலறினாள்.

கரிய பெரிய புகை மண்டலங்கள் ரோகிணிக்குக் கொடும்பாளூரிலிருந்து
கொண்டு வரவேற்புக் கூறின. சிதறி ஓடும் மக்களின் கூக்குரல் அவளுக்கு
நாவலித்தது. கன்றுகாலிகளும் முதியோரும் பெண்டிரும் நாலா திசைகளிலும்
பாய்ந்து பரவித் தடுமாறி, அவளுக்கே அவள் செய்கையைச் சுட்டிக்
காட்டினர்.

வந்தியத் தேவரின் விழிகளில் ஒரே இரத்தச் சிவப்பு.

புரவிகளோ கால்கள் தரையில் பாய்வது தெரியாமல் புகைமண்டலத்துக்
கெதிராக புழுிமண்டலம் எழுப்பின. அவைகளின் வாய்களிலே பஞ்சுக்
குவியல் போன்ற நுரை, நாசிகளில் அனல் வீச்சு, கண்களில் செந்நீர்.

கொடும்பாளூர் அரண்மனையோ தன் கோட்டைக்குள்
கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. உச்சிவானில் ஊசலாடிய கதிரவன்
அதன்மீது உடைந்து விழுந்து விட்டானோ?

சங்ககாலத்துக்கு முன்பிருந்தே மங்காப் பெருமை கொண்டு விளங்கிய
மாநகரமே! வீரர்களும் வள்ளல்களுமாக விளங்கிய வேளிர்குல மக்களின்
பொன்னரகமே! சோழ சாம்ராஜ்யத்தையே உருவாக்கி, அதற்குள்ளாகவே
வளர்ந்து, அதற்காகவே வாழ்ந்த அற்புதத் திருநகரே, நீ இப்போது
தமிழகத்தின் பொற்காலத்தைக் கனிய வைத்தவர்களுக்காக வெற்றி விழாக்
கொண்டாடுகிறாயா? கங்கையை வென்று வந்த கங்காபுரியைத் தோற்றுவித்த
வீரர்களுக்காக ஆனந்தம் தாங்காது பொங்கிப் பூரிக்கிறாயா?

கங்காபுரியோடு ஒன்றிவிடுவதற்காக நீ இப்போது தீக்குளித்து
உன்னையே புனிதப்படுத்திக் கொள்கிறாயா?

கொடும்பாளூர் அரண்மனையின் செந்தழல்கள் தங்களது
வாழ்த்துக்களைக் கங்காபுரிக்குக் காற்றின் மூலம் சொல்லியனுப்பிக்
கொண்டிருந்தன.

‘விஜயாலய சோழருக்குப் பின்பலமாக நின்று சோழர் குலத்தின்
வித்தைத் தஞ்சையில் ஊன்றச் செய்தேன் நான். ஈழத்துப்பட்ட சிறிய வேளார்
போன்ற எத்தனையோ அரசர்களை உனக்குப் பலி கொடுத்தேன் நான்.
இப்போது உனக்காக என்னையே அர்ப்பணிக்கிறேன்! நீ கொண்டாடும்
ராஜசூய யாகத்தின் வேள்வித் தீயும் ஆகுதியும் நானேதான்! என்னை
ஏற்றுக்கொள்!’

தீக் கொழுந்துகளின் குரல் ரோகிணியின் செவிகளில் மட்டிலும்
கணீரென்று ஒலித்தது. வெறிகொண்ட விழிகளால் அவைகளிடம்,
“என்னுடைய இளவரசர் எங்கே?’’ என்று கேட்டுவிட்டு, குதிரையினின்றும்
குதித்து, அரண்மனைக்குள் ஓட முற்பட்டாள்.

“இளவரசே! நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் இளவரசே?’’

ஓடிச்சென்று முதலில் அவளை இழுத்து நிறுத்தினார் வல்லவரையர்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, உட்கோட்டை மதில் படிகளின் மீது அவளையும்
பற்றிக் கொண்டு பாய்ந்தோடினார். மதிலின் உயர்ந்த மேற்பகுதி, வீரர்களின்
நடமாட்டத்திற்காக விசாலமாகக் கட்டப்பெற்றிருந்தது. அரண்
மனையையொட்டி நான்குபுறங்களிலும் வளைந்து சென்ற அதன் உச்சியில்
தாராளமான ஒற்றையடிப்பாதை இருந்தது.

உள்ளே சூழன்று வீசிய தீக்கொழுந்துகள் இன்னும் மதிலின் உயரத்தை
எட்டவில்லை, மதிலின் மீது அங்கும் இங்கும் ஓடியலைந்தவாறே, “இளவரசே!
இளவரசே!’’ என்று அலறினாள் ரோகிணி.

அவளுடைய குரலுக்கு எதிர்க்குரல் எங்கிருந்தும் வரவில்லை.

ரோகிணியை விட்டுச் சற்றே விலகி நின்ற வல்லவரையர்
கொடும்பாளூரில் தங்கியிருந்த காவலன் வாயிலாக இளங்கோவும் படைகளும்
அங்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். வெளியில்
நெருப்புத்திவலைகளுக்கு அப்பால் சில ரதங்கள் வந்து நிற்பதை அவர்
கவனிக்கவில்லை.

இளங்கோவைத் தேடி அலைந்தவளிடம் அவன் அங்கில்லை
என்பதைக் கூறுவதற்காக விரைந்தோடி வந்தார் அவர். “ரோகிணி! இளங்கோ
இங்கே இல்லை, ரோகிணி...ரோகிணி!”

“நான் வந்துவிட்டேன் தாத்தா!” என்ற வெண்கலக்குரல் அவருக்குப்
பின்னாலிருந்து திடீரென்று எழுந்தது. சட்டெனத் திரும்பினார் வல்லவரையர்.
கூண்டிலிருந்து விடுபட்ட வேங்கையெனத் தொலைவிலிருந்து ஓடி வந்தான்
இளங்கோ. அவன் முகத்தில் ரோகிணியைக் கண்ட மாத்திரத்தில் குரூரக்களை
தாண்டவமாடியது.

“இளவரசே!” ரோகிணியின் இதயத்தைக் கீறிக்கொண்டு வெளி வந்தது
அழைப்பு. அவன் காலடியில் வீழ்ந்தாள்; அவன் பாதங்களை இறுகப் பற்றித்
தழுவிக்கொண்டாள்.

“துரோகி! துரோகி! துரோகி!” -நெருப்பு அரண்மனையிலிருந்து
இளங்கோவின் விழிகளுக்குத் தாவியது.

“நான் துரோகிதான். இளவரசே! இனி இந்த ஜன்மத்தில் என்
துரோகத்துக்குப் பிராயச்சித்தமே கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்று
கூறுகிறேன்.’’

விம்மலும் விக்கலும் தொடர அவள் கூறி முடித்தாள்:

“இளவரசே நான் இப்போது உங்களைத் தவிர வேறு எல்லோரையும்
மறந்துவிட்டேன். என் இதயமெல்லாம் இப்போது நீங்கள் மட்டுமே
நிறைந்திருக்கிறீர்கள். நீங்கள் அங்கே, நெருப்பாய் எரிவதால், என்
உயிர்நெருப்பையும் நீங்களே உங்கள் கரத்தால் அணைத்துவிடுங்கள்.
இளவரசே உங்கள் கரம்பட்டு இறப்பதுதான் என் பாவங்களுக்கெல்லாம்
மன்னிப்பு - என்னை மன்னித்து மாய்த்துவிடுங்கள்! மன்னித்து
மாய்த்துவிடுங்கள்!”

மளமளவென்று தீக்கொழுந்துகள் கோட்டையின் உயரத்திற்கே வளர்ந்து
கொண்டிருந்தன.

நெருப்பையும் ரோகிணியையும் மாறி மாறிப் பார்த்தான் இளங்கோ.
நெருப்பு, பெருநெருப்பு, அணைக்க முடியாது. ஆனால் ரோகிணி?

அவனுடைய வலது கரம் மெல்ல உடைவாளின் அருகில் சென்றது.
அதைப்பற்றிக் கொண்டது. ஆனால் ஏனோ கரத்தின் நடுக்கத்தை அவனால்
தவிர்க்க முடியவில்லை.

இதற்குள் அங்கு இராஜேந்திரர் பெரிய வேளாரை
அணைத்துக்கொண்டே வந்து சேர்ந்தார். எல்லை கடந்த துயரத்தால்
பெரியவேளாருக்கு நினைவு தடுமாறியது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் தாரை
தாரையாகப் பொழிந்தது.

தந்தையாரின் கண்ணீரைக் கண்டவுடன் இளங்கோவின் கை நடுக்கம்
நின்றது. சரேலென்று வாளை உருவிக் கொண்டு ரோகிணியைப் பற்றி ஒரு
கரத்தால் நிறுத்தினான். வல்லவரையரின் கரம் நிதானமாக முன் வந்து
இளங்கோவின் வாளை ஒதுக்கியது.

“ரோகிணிதான் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்தாள்.
அபாயத்தைத் தடுப்பதற்காகத்தான் இவள் நடுநிசியில் என்னிடம் வந்து செய்தி
கூறினாள்! ஆனால்...’’

ரோகிணி குறுக்கிட்டு, “என்னைக் கொல்லமாட்டீர்களா, இளவரசே?
அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்காதா? கிடைக்கவே கிடைக்காதா?’’ என்று
கதறினாள்.

பிறகு சரேலென யாரும் எதிர்பார்ப்பதற்கு முன்பே “இது என்னுடைய
வீடு! இது என்னுடைய மாளிகை! இது என்னுடைய அரண்மனை! இதை
எரியவிடமாட்டேன்!’’ என்று புலம்பிக் கொண்டே திரும்பி ஓடினாள்.
கோட்டைச் சுவரின் கோடிக்கே விரைந்தாள்.

‘என்னுடைய அரண்மனை!’ என்று அவள் கூறிய சொற்கள், அங்கு
நின்ற அனைவரையுமே நெகிழச் செய்து விட்டன.

மின்னல் கீற்றென அவளைப் பின் தொடர்ந்தான் இளங்கோ. ஆனால்
அவளுடைய கால்களுக்கு எங்கிருந்துதான் அத்தனை வலிமை வந்ததோ...
ஓடினாள்...ஓடினாள்...ஓடினாள்... அவள் நிற்கவேயில்லை.

உட்கோட்டை மூலை வரைக்கும் சென்று அவளுடைய கரத்தை எட்டிப்
பிடித்துவிட்டான் இளங்கோ.

சட்டென்று ரோகிணி அவன் கரத்தை வெறியோடு தன் கண்களில்
ஒற்றிக்கொண்டே, “உங்கள் கரம் பட்டுவிட்டது. இனி நான் கட்டாயம்
சொர்க்கத்துக்குப் போவேன்!’’ என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கக்
கூறினாள்.

அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். வானத்தில் எங்கிருந்தோ திரள்
திரளாக மேகக் கூட்டங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

அதே சமயம் கீழே அரண்மனைப் பகுதியிலிருந்து “ரோகிணி! அடி
துரோகி!” என்ற வெறிக் குரல் ஒன்று கிளம்பியது - ரோகிணியும்
இளங்கோவும் திகைப்போடு திரும்பினார்கள்.

அரண்மனை நெருப்புச் சூழாத பகுதியில் வளைத்துக் கொள்ளப்பட்ட
பாண்டியப் படைகளிடையே, காசிபன் நின்று கொண்டிருந்தான்.

காசிபனைக் கண்ட ரோகிணியின் கண்கள் கோபவெறி கொண்ட
புலிக்கண்களாக மாறின. அதற்கு முன்பெல்லாம் இளங்கோவுக்கு எதிராக
அப்படி மாறிய விழிகள் இப்போது அவள் தம்பியிடமே செந்தீ உமிழ்ந்தன.

“அடப்பாவி, இன்னுமா நீ உயிரோடிருக்கிறாய்?’’ என்று சீறினாள்.

பின்னர் அதே விழிகள் இளங்கோவின் முகத்தை நோக்கித்
திரும்பியவுடன் அவற்றில் நிலவின் குளுமை ததும்பியது. தன் ஆவல் தீர
இளங்கோவைப் பார்த்துவிட்டு வெடுக்கென அவன் பிடியிலிருந்து தன்
கரத்தை உதறினாள் ரோகிணி. மதில் மீதிருந்து மறைந்தாள்.

மதிலின் விளிம்பிலிருந்து தாவிக் குதித்தவள் கீழே கீழே கீழே
போய்க்கொண்டிருந்தாள். நெருப்புத் திவலைகள் மேலே-மேலே-மேலே-
எழும்பிக் கொண்டிருந்தன.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.

“ரோகிணி!” என்று அலறிக்கொண்டு அவளோடு பாயத்துடித்த
இளங்கோவைக் கட்டிப் பிடித்து நிறுத்தினார்

வல்லவரையர். இளங்கோ திமிறினான். வல்லவரையரின் இரும்புப்
பிடியிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. அவரிடம் கெஞ்சினான்,
மன்றாடினான், பதறினான், பயனில்லை.

இதற்குள் ஒருபுறம் வேள்வித் தீ போன்ற நெருப்பு வானுற ஓங்கி
வளர்ந்த வண்ணமாகவே இருந்தது. அதே சமயம் வானத்திலும் பல
திசைகளிலிருந்தும் சூல்கொண்ட மேகங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

எங்கே ரோகிணி? எங்கும் காணவில்லையே! நீராக உருகிப்போய்
நெடுங்காற்றில் நெட்டுயிர்த்து விட்டாளா? நீக்கமற நெருப்பில் நிறைந்து
விட்டாளா?

மின்வெட்டும் நேரத்தில் ஏதேதோ நிகழ்ந்தன. திகைத்துப்போய் நின்று
விட்ட பெரிய வேளாருக்கும் இராஜேந்திரருக்கும் இடையில் அகப்பட்டுத்
தவித்தாள் அருள்மொழி! துடியாய்த் துடித்துக்கொண்டே “சக்கரவர்த்திகளே!
பேசாது நின்று கொண்டிருக்கிறீர்களே!” என்று கதறினாள்.

ஆனால், இராஜேந்திரர் தாம் நின்று கொண்டிருந்தாரே தவிர, அவரது
விழிகள் நெருப்புக்குள் ஊடுருவித் துளைத்தன. பிறகு காவலர்கள் பக்கம்
திரும்பின.

கீழே, நெருப்புச் சூழலில் புகைக் கூட்டத்திற்கிடையில் முதலில்
ஒன்றுமே தெரியவில்லை. காவலர் தங்களது உயிரை மறந்து குதித்தார்கள்.
தேடி அலைந்தார்கள்.

அருள்மொழி தனது சுயநினைவை இழக்கத் தொடங்கினாள்.

அப்போது ரோகிணி குதித்த இடத்திலிருந்து ஏதோ சலனம் தெரிந்தது.
யாரோ ஒருவன் தீப்பற்றிய உடைகளோடும், கருகிய உடலோடும்
ரோகிணியின் மெல்லுடலைச் சுமந்துகொண்டு தீக்குள்ளிருந்து வெளிப்பட்டான்.

நெருப்புக்காக அவன் சிறிதும் அஞ்சவில்லை. நேரே ரோகிணியைச்
சுமந்து கொண்டு கோட்டைச் சுவர்மீது ஓடோடியும் வந்தான். இளங்கோவின்
காலடியில் கிடத்தி விட்டு, “இளங்கோ!” என்று தழுதழுத்த குரலில்
அழைத்தான்.

இளங்கோவின் நெற்றிப் புருவங்கள் சுருங்கின. விழிகளில்
தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ‘யாரது-வீரமல்லனா!”

“இளங்கோ! தீயில் குதித்தெழுந்து ரோகணத்து இளவரசி புதுப்பிறவி
எடுத்துவிட்டார். நடந்த தவறுதல்களுக்கு இவர் காரணமல்ல, என்னை நீ
மன்னிக்க வேண்டாம். இவரை மன்னித்து ஏற்றுக்கொள் - இவர் பிழைத்து
விடுவார்.’’

பிறகு, தட்டுத் தடுமாறிச் சென்று இராஜேந்திரரின் கால்களைப்
பற்றிக்கொண்டு மூர்ச்சையுற்று விழுந்தான் வீரமல்லன். இதற்குள் அருள்மொழி
ஓடோடியும் வந்து ரோகிணியைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.
இளங்கோவும் அருகில் அமர்ந்து ரோகிணியின் கண்களையே உற்று
நோக்கினான். அருள்மொழியும் இளங்கோவும் ஒரே குரலில் “ரோகிணி!
ரோகிணி!” என்று கதறினார்கள்.

இராஜேந்திரர் அருகில் வந்து நின்று ரோகிணியைக் கவனித்தார்.
அவரது இதழ்களில் நம்பிக்கை நிறைந்த புன்னகைக் கீற்றொன்று
இழையோடியது.

“இளங்கோ! எனக்கு அருள்மொழியும் ரோகிணியும் ஒன்றுதான்.
இருவருமே என் புதல்விகள்! விரைவில் கொடும்பாளூரில் புது மாளிகைகள்
எழுப்பிவிடுவோம். அப்போது இருவருமே உன்னோடு ஒன்றாக இங்கு
குடிபுகுவார்கள்.’’

குற்றுயிராய்க் கிடந்த ரோகிணிக்கு சக்கரவர்த்திகளின் இந்தச் சொற்கள்
புத்துயிர் கொடுத்தன போலும்! மெல்லத் தன் விழிகளைத் திறந்தாள்.

“மகளே! உன் தம்பி காசிபனும் விடுதலை பெறுவான். கவலையுறாதே!”

ரோகிணியின் விழிகள் இளங்கோவையும் அருள்மொழியையும் மாறி
மாறிப் பார்த்தன. துடி துடிக்கும் இதயத்தோடு இளங்கோ, “ரோகிணி!” என்று
மெல்ல அழைத்தான்.

அருள்மொழியோ ரோகிணியின் முகத்தோடு முகம் தோய
வைத்துக்கொண்டு, “ரோகிணி! நாம் இருவருமே இளவரசரின் இரு
கண்களாவோம்’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினாள்.

அவர்களுடைய ஆனந்தக் கண்ணீர் ரோகிணியின் முகத்தில்
ஒன்றுகூடியது. தனது வேதனையனைத்தையும் மறந்து மெல்லச் சிரித்தாள் -
வானமும் தனது ஆனந்தப் பெருக்கை வெளியிடுவது போல் அமுத
தாரையைப் பொழியத் தொடங்கியது.

தொடரும்


சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்

சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன

அது கனவு தான் அவை சில நாட்களாக

திரும்பத்திரும்ப என் பார்வையில் பட்ட

காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம்.

அவன் தம்பியைப் போலிருந்ததாகவும்

மகனைப் போலிருந்ததாயும்
அயலானைப் போலுமென

எண்ணிக்கலங்குகின்றனர்

முகப்புத்தக நண்பர்கள்.
எனக்கும் அவனைப் போல மகன் . 
பன்னிருவயதுக் குழந்தை

சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்

பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில்.

சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக

யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம்.

தொலைக்காட்சிச் செய்திகளில் 
முந்த நாள் ஆந்திராவில்

நேற்று பாகிஸ்தானில்

இன்று சிரியாவிலென்று

நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள்.

கண்களைத் திருப்பியபடியே

உணவுத்தட்டிலிருந்து கை வாய்க்குப் போனது.

அடிக்கடி பார்த்தால் கனவு வரும்.

கனவுக்கென்ன பயம் எனக்கு?

-தர்மினி- 

வசந்தி இனிதான் வாழப்போகிறாள்....

வசந்தி இனிதான் வாழப்போகிறாள்....


அந்த கிராம முன்னேற்ற சங்க முன்றலில் வசந்தி நிதானமாக நின்றிருந்தாள். தலைவர் சிவஞானசுந்தரம், அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிபர். செயலாளர் சுப்பிரமணியம், மாதர் சங்கத் தலைவி பிறேமா உட்பட பன்னிரண்டு பேர் ஊர்ப் பிரமுகர்கள் என்ற போர்வையில் வசந்தியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். வசந்திக்கு எதிர்ப்புறமாக முறைப்பாட்டுக்காரனான இராகுலன் உட்கார்ந்திருக்கின்றான். கிட்டத்தட்ட எல்லோரும் கதைத்தாகிவிட்டது. வசந்தியின் பதிலைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அங்கு குழுமியிருக்கின்றவர்களின் கடமை முடிந்துவிடும்.

இந்த வாசிகசாலை, விசாரணை, முறைப்பாடு அவளுக்குப் புதிதல்ல. இந்த முறையுடன் மூன்று தடவைகள் இந்த நாடகம் அரங்கேறிவிட்டது. ஊருக்கும் உலகுக்காகவும் அவள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டு இப்போது ஊரார் முன்னிலையில் வந்து நிற்கிறாள்.

வசந்தி, சாம்பசிவம் யோகேஸ்வரி தம்பதிகளுக்குப் பிறந்த மூத்தமகள். அவளுக்குப் பின்னால் இரண்டு தம்பிமாரும் இரண்டு தங்கைமாரும் இருக்கினம். சாம்பசிவம் ஒரு சாதாரண் விவசாயி. தனது தந்தையார் வழிவந்த 03 பரப்பு தோட்டக் காணியம், குடியிருக்கிற வளவும் தான் இவர்களுடைய சொத்து. தனது சொந்தக் காணியில் செய்கிற சித்துப் பயிர் வருமானம் போதாமையால் பக்கத்திலை யாராவது கேட்டால் பாத்திகட்டுறது, தண்ணி மாறுறது என்று எப்பவாவது போய்க்கொள்ளுவார். வீட்டைச் சுற்றியும் குளிர்மைக்கு எண்டு வைச்ச வாழை, தேசியும் பயன் கொடுத்ததாலை ஏதோ கஸ்ரமில்லாமல் சீவிக்க முடிந்தது. யோகேஸ்வரியும் கெட்டிக்காரி. கோழிமுட்டை, தையல் எண்டு தன்ரை சம்பாத்தியத்திலை சீட்டுக்கள் கட்டி, தன் பிள்ளைகளுக்கும் சின்னச் சின்ன நகைகள் வாங்கி, குடும்பம் சந்தோசமாக ஓடிக்கொண்டிருந்தது.

மூத்தவள் வசந்தா ஓஃஎல் வரை படித்திருக்கிறாள். முதல் தடவை பரீட்சை எடுத்தபோது கணிதம் அவளுக்குச் சவாலாகிவிட்டது. இரண்டாம் முறை அவள் முயற்சிக்கவும் இல்லை. இரண்டு வருடங்கழித்து பொம்பிளைப்பிள்ளை, எதையாவது பழகியிருக்கோணும் எண்ட தாயின் ஆசைக்கு இணங்க பக்கத்திலிருக்கிற பாடசாலையில், பின்னேரங்களில் நடந்த தையல் வகுப்பிற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் தான், விதியின் கண்ணில் அவள் பட்டவிட்டாள். ஆம்… இராகுலனைச் சந்தித்தது அங்கே தான்.

வசந்தி இயல்பாகவே அழகான பெண். பதின்ம வயது அவளுக்கு மேலும் அழகூட்டியிருந்தது. அப்போது இவர்கள் வகுப்பிற்குச் சென்ற பாடசாலையில் கட்டட நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வேலையின் ஒப்பந்த காரருடன் வேலைக்கு வந்திருந்த இராகுலனுக்கும், வசந்திக்குமிடையே நிகழ்ந்த பார்வைகள், சிரிப்புக்கள் காதலாக மாறியது. 18 வயதேயான, வசந்திக்கு இராகுலன் மன்மதனாகவே தெரிந்தான். வசந்தியின் சம்மத சமிக்ஞைகளையும், அப்பாவித்தனத்தையும் புரிந்து கொண்ட இராகுலன், துணிந்து தனது காதலை வெளிப்படுத்தியபோது, அவள் அதை பெரும்பேறாகவே கருதியிருந்தாள்.

அவளைவிட இராகுலன் 9 வயது மூத்தவன். தனது ஊர் மாவிட்டபுரம் என்றும், இடம்பெயர்ந்து இளவாலையில் வசிப்பதாகவும், தனக்கு மூன்று பெண் சகோதரிகள் என்றும், தனக்கு மூத்தவள் ஒருத்தி உட்பட மூவரும் திருமணமாகாதவர்கள் எனவும், தனது காதலையும், திருமணத்தையும் இலேசில் தனது வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனவும், என்றாலும் வசந்தியைத் தான் தன் உயிராய் நினைப்பதாகவும், எக்காலத்திலும் கைவிடப்போவதில்லை எனவும் சொல்லியிருந்தான். மூன்று மாத காலத்துக்குள் இராகுலன் அவளுக்கு உலகமாகவே ஆகிவிட்டிருந்தான். அவன் வார்த்ததைகளுக்கு அவள் கட்டுப்பட்டாள். அவனுக்காக உயிரை விடக்கூடத் தயாராக இருந்நதாள். தனது வாழ்வு இராகுலனுக்காகவே என்று வயது அவளைத் தூண்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் வசந்தியின் மூத்த தம்பிக்கு இவர்களுடைய காதல் விவகாரம் தெரியவந்தபோது, அதை அவன் வீட்டில் போட்டுடைத்துவிட்டான். பிறகென்ன, சாம்பசிவம் ருத்திரதாண்டவமாடத் தொடங்கிவிட்டார். தாயார் அடுக்களைக்குள் சென்று புத்திமதி சொன்னாள். “நீ பொம்பிளைப்பிள்ளை.. கண்டவன் எல்லாம் பல்லிளிக்கிறதைப் பாத்து காதல் எண்டு நம்பி ஏமாறக்கூடாது. அவன் ஆரோ மாவிட்டபுரத்தானாம். நாளைக்கு விட்டிட்டுப் போனா என்ன செய்யிறது. நாங்கள் தாய் தேப்பன், உனக்கு நல்லதுக்குத்தான் சொல்லுறம், இனி அவனுடன் கதைக்காதை என்று அன்பாலும் அதிகாரத்தாலும் கட்டுப்பாடு விதித்தபோது, அதை மீறிச் செல்லவேண்டுமென்று அவளும், தருணம் பார்த்திருந்த ராகுலனும் ஊரை விடடே ஓடிப் போனது தான் வசந்தி செய்த மடத்தனம். அவள் வயசு அவளைச் சிந்திக்க வைக்கவில்லை. பெற்ற தாய், தந்தை, குடும்பம் மரியாதை எண்ட எல்லாத்தயும் விட்டிட்டு, இராகுலனோடு போனவள், இளவாலையில் அவனுடன் தனிக்குடித்தனம் நடத்திய ஒரு மாதத்திற்குள்ளாலேயே அவனது சுயரூபத்தைக் கண்டுகொண்டாள். முதல் நாள் இராகுலன் குடித்துவிட்டு வந்தபோது, மனதளவில் ஆடிப்போயிருந்தாலும், ஏதோ நண்பர்களுடன் சேர்ந்து புதுப்பழக்கமாக்கும், தான் சொன்னால் கேட்டுக்கொள்ளுவான் என்று நம்பியவளுக்கு அதிர்ச்சி தரம் உண்மைகள் தொடர்ந்து வெளியாகியிருந்தன.

பழையபடி அவன் வேலைக்குச் செல்லாது ஊர் சுற்றத் தொடங்கிவிட்டான். எப்பொதாவது கையில் காசு கிடைத்தாலும் அதையம் குடித்துவிட்டு வந்து வசந்தியுடன் சண்டை பிடிக்கத் தொடங்கிவிடுவான். ஏதாவது வாய் திறந்து அவள் பேசிவிட்டால், ஏச்சு, அடி, உதை தான்.

“ ஏன்ரி நீ என்னடீ கொண்டுவந்தனீ எண்டு பெரிசாக் கதைக்க வந்திட்டாய்……??? உன்ரை கொப்பர் தந்ததை நான் குடிச்சு அளிக்கிறனோடி?? சனியன்… கேள்வி கேக்கிறாய் கேள்வி

போடி போய் கொப்பரிட்டைக் காசு வாங்கிக் கொண்டு வா, என்னைப் பேய்க்காட்டலாமெண்டு மட்டும் நினைக்காதை.."

அவன் குடிபோதையில் வந்து சீதனம் கேட்டுத் துன்புறுத்தியபோது, வீட்டுக்காரர் முகத்தில் முழிக்கமுடியாது மறுத்த வசந்தியை ஒரு நாள் அடித்து, றோட்டால் தரதரவென்று இழுத்து வந்து, சந்தியில் வைத்து, “நாயே உன்னை நெருப்பு வைத்து கொழுத்திப்போடுவன்" எண்டு இராகுலன் கர்ச்சித்தபோது, ஊர் கூடி விட்டது. அவன் இழுத்து வந்தபோது, முழங்கை கல்லில் உராய்ந்த இரத்தம் சொட்டப் பரிதாபமாகக் கிடந்த வசந்தியைக் கண்ட அவளின் ஊர்க்காரர் ஒருவர், அவளுடைய தந்தை சாம்பசிவத்துக்கு சொல்லிவிட்டார். பெத்த பாசம், மனம் பொறுக்கமுடியாத தாயும் தகப்பனும் வந்தபோது, வசந்தி அழுத அழுகை அவர்களை உருக்கிவிட்டது. அந்த 90 நாட்களுக்குள்ளாகவே அவள் அலங்கோலப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியாத சாம்பசிவம், எங்கையோ மாறி இரண்டு இலட்சம் காசும், 10 பவுன் நகையும் சீதனமாகத் தருவதாக வாக்களித்து குறித்த தினத்தில் எல்லாவற்றையும் கொடுத்து, கெட்டித்தனமாக அன்றே கல்யாண எழுத்தையும் எழுதிவிட்டார்.

மீண்டும் புது மாப்பிளையாக ஒரு மாதம் தான் இராகுலன் இருந்திருந்தான். தான் கடை போடப்போவதாகக் கூறி ஐம்பது ஆயிரங்களைச் செலவழித்ததேயன்றி கடை போடவேயில்லை. மிகுதிக் காசில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி, கூடிய விரைவில் அதையும் ஒரு குடிகார நண்பனுக்கு கடனுக்கு விற்றுவிட்டு, அதன் பெறுமதியை கொஞ்சம் கொஞ்சமாக அவன் சாராயமாகத் தீர்த்துவிட சீதனக்காசு இரண்டு இலட்சமும் வெற்றிகரமாகச் செலவழிக்கப்பட்டுவிட்டது. சீவியத்துக்கு எதுவும் கொடுக்காத போதும், குடிபோதையில் வாய்க்கு ருசியாக சமைச்சுப் போடச்சொல்லி வசந்திக்கு அடியும் உதையும் தான். தன்னுடைய நகைகளை பக்கத்தில் யாரிடமாவது அடகு வைத்து எத்தினை நாள் தான் அவளால் சீவிக்கமுடியும்.

இந்த நிலையில் வசந்தி கர்ப்பமடைந்தாள். தனது தலைப்பிரசவத்தை விட கணவனின் கொடுமைகளுக்காகவே பயந்தாள். ஆறுதலாயிருக்கவேண்டிய கணவனின் அடி தாங்கமுடியாது தவித்தாள். அன்பு அரவணைப்பு இல்லாமல் தனியாக அந்தச் சின்னப் பெண் படாதபாடு பட்டபோது, அவன் பகலெல்லாம் ஊர் சுற்றித் திரிந்தான்.

வசந்தி நிறைமாதக் கர்ப்பிணியாயிருந்த அன்றொரு நாள், பி.ப 05 மணியளவில், ஒரு குடிகார நண்பனைக் கூட்டிக் கொண்டு வந்த இராகுலன், அவன் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கப்போவதாகவும், அவனுக்கு சாப்பாடு போடும்படியும் கட்டளையிட்டான். அவள் செய்வதறியாது திகைத்து நின்றபோது, அவளைத் தள்ளிவிட்டு அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தான். அங்கே அடுப்பு மட்டுமல்ல சட்டி பானைகளும் காலியாயிருந்ததைக் கண்டு, கோபங்கொண்டான்.

என்னடி சோறு காச்சலையா?

அரிசி இல்லை……….

இல்லை எண்டா??

நீங்கள் தந்திட்டுப் போனதை காச்சி வைக்கலை எண்டு கத்துறீங்களா? அவளின் நிறைமாத வயிறு பசி தாங்க முடியாத வேதனையில் எரிந்தபோது அவளால் பேசாதிருக்கமுடியவில்லை.

என்னடி எதிர்த்துக் கதைக்கிறாய்?? வார்த்தைகள் வருமுன்னே அவள் கன்னம் சிவந்தது.

நண்பனுக்கு முன்பே தான் மானங்கெட்டுவிட்டதாக நினைத்த அவன், வசந்தியைத் தள்ளிவிட்டுப் போனபோது, அவள் நின்றிருந்த நிலையில் தலையும், வயிற்றினில் கதவும் அடிபட அக்கணமே அவளுக்கு வயிற்றுவலி எழுந்துவிட்டது. ஒவ்வொரு தாயும் அனுபவித்த அந்தக் குத்து, அந்த வேதனையை ஒரு தாய் வயிற்றில் பிறந்த அந்தப் போக்கிரி எங்கே உணர்ந்து கொண்டான். அவள் வேதனையால் கதறியதைக் கூடக் கண்டுகொள்ளாது, சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்விட்டான். சத்தம் கேட்ட முன்வீட்டுக்கார கிழவி தான் சத்தம் போட்டு ஊரவர்களையும் கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு சாம்பசிவத்துக்கும் சொல்லியனுப்பிவிட்டாள்.

அழகான பொம்பிளைப்பிள்ளை. அதைக்கூட இராகுலன் ஒருநாளும் வந்து பார்க்கவில்லை. சாம்பசிவம் நேரிலும், வசந்தி ஆள்விட்டும் அவனைக் கூப்பிட்டபோதும் அவன் வரவேயில்லை.

6 மாதங்களின் பின் பிள்ளையம் கையுமாகப் போய் நின்றபோது, வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். அவன் வீட்டு வாடகை கொடுக்காததால், இதுவரை வசந்திக்காக பெருந்தன்மையோடு பொறுத்திருந்த வீட்டுக்காரர், நல்ல தருணம் வரவே, யாரோ ஒருவருக்கு வீட்டைக் கொடுத்துவிட்டார். இராகுலனின் குடிவெறிக்கு இரையாகி நெளிந்தும், உடைந்தும் போன பாத்திரங்கள், பாய் தலையணைகளை அப்புறப்படுத்தி, இன்னொருவரைக் குடியேற்ற அவருக்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. மீண்டும் திரும்பி தாய் வீட்டுக்கு வந்த வசந்தி, அவனுடன் சேர்ந்து வாழ எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. யாரோ தூரத்து உறவுக்கார விதவைப் பெண் ஒருத்தியின் வீட்டில் இராகுலன் சாப்பாடு, படுக்கை வைத்திருப்பதாக சாம்பசிவத்துக்கு யாரோ சொல்லியிருந்தனர். இதைப்பற்றி சாம்பசிவம் வசந்திக்கு எதையும் சொல்லவில்லை. சரி அவன் உன்னைச் சரியாகக் கஸ்ரப்படுத்திவிட்டான். இனி நீ இந்தப் பிள்ளையோடை எங்களுடன் இரு. நாங்கள் பாக்கிறம் எண்ட தாய் தந்தை சகோதரங்களின் அரவணைப்பில், 11 மாதங்கள் சென்றிருந்தன. மீண்டும் இராகுலன் ஒரு நாள் வந்தான்.

தான் வசந்தியைக் கூட்டிக் கொண்டு போவதாக வந்தபோது, வசந்திக்கு எதுவுமே செய்யத் தெரியவில்லை. முதலில் இவன் இவ்வளவு செய்தவன், இனியும் இவனிடம் சென்று கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று ஒரு கணம் சிந்தித்த தந்தை தாயிடம் கேட்டபோது, யாரோ ஒரு பெண்ணுடன் ராகுலனுக்கு தொடர்பிருந்ததை அறிந்திருந்த சாம்பசிவம், வசந்தியை அவனுடன் போகவிடவில்லை.

எப்படியாவது வசந்தியுடன் சேர்ந்துவிடவேண்டுமென்ற இராகுலன், இன்று கூடியிருக்கிற இதே கிராம முன்னேற்ற சங்கத் தலைவரிடம் போய் தான் திருந்திவிட்டதாகவும், வசந்தியை நன்றாக வைத்தப் பார்ப்பதாகவும் நாடகமாடினான். கிராம முன்னேற்ற சங்கக் கட்டடத்தில் ஊர்ப்பிரமுகர்கள் ஒன்று கூடி, அவன் திருந்திவிட்டதாகவும், நீ தான் பொம்பிளைப்பிள்ளை கொஞ்சம் பொறுத்தப் போகோணும் என்றும் தங்கள் ஆணாதிக்க மேலாண்மைகளின் செல்வாக்கில் மிண்டும் அவளை அவனுடன் சேர்த்துவிட்டனர்.

வசந்தியைத் தூரத்துக்கு அனுப்பவிரும்பாத சாம்பசிவம், தனது காணியின் ஒரு ஓரத்திலே ஒரு கொட்டிலைக்கட்டி, அதிலே வசிக்குமாறு சொல்லியிருந்தார். ஓரு 15 நாட்கள் ஒழுங்காக இராகுலன் வேலைக்குப் போய் வந்தான். பெரிதா குடித்ததாகவும் வசந்தி கண்டுகொள்ளவில்லை. சரி திருந்திவிட்டான் என்றிருந்த போது, ஒரு நாள், இவர்களுடைய காணியிலுள்ள மரத்திலிருந்து இறங்கி வந்ததை தற்செயலாகக் கண்டுகொண்ட வசந்தி தனது மூத்த தங்கை அப்போது தான் குளித்துவிட்டு ஈர உடுப்புக்களைக் காயப் போடுவதைக் கண்டவுடன் பதறிப்போனாள். 16 வயதேயான அந்த அப்பாவிப்பிள்ளை நடந்தது எதனையும் அறிந்திருக்கவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், வசந்தி தாய் வீட்டில் இருந்தவள். புருசன் வேலைக்கு எண்டு போனவன் திரும்பி வந்திருக்கவில்லை. பிள்ளையை நித்திரையாக்கிவிட்டு வந்தவள், பிள்ளை அழுஞ் சத்தம் கேட்டு தையல் மெசினில் ஏதோ தைத்தக் கொண்டிருந்தவள், பிள்ளையைத் தூக்கி வரும்படி, மூத்தவள் ராதாவை ஏவியிருந்தாள். அக்காவின் பிள்ளை அவளுக்கும் செல்லம். ஆசையோடு தூக்கப் போன ராதாவோ வசந்தியோ இராகுலன் வீடு திரும்பியிருந்ததை அறிந்திருக்கவில்லை. உள்ளே சென்று பிள்ளையைத் தூக்கிக்கொண்டு திரும்பியவள், குடிசை வாசலில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி, வெற்றிலை வாயுடன் நின்று இராகுலன் சிரித்தபோது, ஒன்றும் விளங்காத ராதா தானும் ஒப்புக்குச் சிரிப்பதாக பாவனை செய்துகொண்டு, அப்பால் போக எத்தனித்தாள்.

இருந்த ஒரேயொரு வாசலை மறைத்துக்கொண்டு நின்ற அவனைப் பார்க்க பயமாயிருந்தது. நிறைந்த போதையில் அருகில் நின்ற ராதாவை அவன் கட்டிப்பிடிக்க முற்பட்டபோது, குழந்தையை இறுக்கப்பிடித்தபடி ராதா கத்திய சத்தத்தில், குழந்தையும் அழத்தொடங்கிவிட்டது. சத்தங்கேட்டு ஏக காலத்தில் ஓடிவந்த வசந்தியும், அவளது மூத்த தம்பி நாதனும் வந்தபோது, ஒரு கையால் ராதாவின் தோளைத் தொட்டுக்கொண்டும், மறுகையால் அவளது வாயைப் பொத்திக்கொண்டும் ராகுலன் நின்றிருந்தான். குடிபோதையில் அவன் அவர்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. நாதன் ஒரு விநாடி தன்னும் பின்நிற்கவில்லை. இராகுலனின் பின்சட்டையைப் பிடித்து மறு கையால் பளார் என்று அறைந்து விட்டு குழந்தையை வாங்கி வசந்தியிடம் கொடுத்துவிட்டு அழுதுகொண்டிரந்த ராதாவைக் கூட்டிக் கொண்ட போய்விட்டான். நிறைந்த வெறியோடு தனது நிறைவேறாத ஆசையை கண்மூடித்தனமாக, வசந்தியின் மேல் காட்டிவிட்டுப் போனவன் தான் அன்று முதல் வீட்டுக்கு வரவேயில்லை. மீண்டும் வசந்தி கர்ப்பமடைந்திருந்தாள். இரண்டாவதும் பெண் குழந்தை. பிறந்தபோது வந்து பார்க்காத இராகுலன் குழந்தைக்கு 6 மாதமான பின்னர் மீண்டும் தான் சேர்ந்து வாழப்போவதாக கிராம முன்னேற்ற சங்கத்தில் வந்து முறையிட்டிருந்தான்.

மீண்டும் கூட்டத்தினர் முன்னே வசந்தி. பின்னுக்கிருக்கின்ற பிள்ளைகளின் நலன்களைக் கருத்திற் கொண்ட சாம்பசிவம், அவர்களை தனது காணியில் குடியிருக்க அனுமதியளிக்கவில்லை. தனதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்ட வசந்தி, தனது அம்மம்மாவின் காணியில் கொட்டில் போட்டுக்கொண்டு இராகுலனுடன் வாழ்ந்துவந்தாள்.

கொஞ்ச நாள் கழித்து பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. இராகுலன் வேலைக்குப் போவதில்லை. குடித்துவிட்டு வந்து குழந்தைகள் குழறக் குழற வசந்திக்கு அடிப்பான். பிள்ளைகள் நித்திரையாவதற்கு முன்பே அவளைத் தன் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்துவான். பிள்ளைகளை வளர்ப்பதற்காக வசந்தி இப்போது வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. அயலிலுள்ள பெண்களுடன் சேர்ந்து தோட்ட வேலைகளுக்குச் சென்று களைப்போடு வரும் வசந்திக்காகவே எதிர்பார்த்து, அவள் கொண்டு வரும் காசைப்பறிக்க காத்திருப்பான். வசந்தி கொடுக்க மறுக்கும் போது,

எங்கையடி போய் ஆடிப்போட்டு வாறாய்??

ஆரடி உன்ரை கள்ளப்புருசன்?? அவன்ரை துணிவிலை தானேடி என்னை நீ மதிக்கிறாயில்லை…

புருஷன் என்ற எல்லையை மீறி அவன் அவளை வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தியதை எப்படித்தான் பொறுத்துக்கொண்டு வசந்தி வாழ்ந்திருந்தாளோ தெரியாது.

அன்றொருநாள் வசந்தியுடன் சண்டை பிடித்துவிட்டு பக்கத்தில் இருந்த கொட்டன் ஒன்றினால் அவளது தலையில் அடித்துவிட்டான். மத்தியான நேரம் இரத்தம் பின்கழுத்து வழியாக ஓட மயங்கிச் சரிந்தவளை விட்டுவிட்டு போயே விட்டான். வயதான அம்மம்மாக்காரி தான், நாதனுக்கு அறிவித்து அவன் சைக்கிளில் ஏற்றிச் சென்று மருந்து கட்டியபோது, அவளைப் பரிசோதித்த பெண் வைத்தியர், அவள் மூன்றாவது பிள்ளைக்குத் தாயாகப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார். இரண்டு மாதங்கழித்து தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி இராகுலன் கோப்பாயில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டதாக சாம்பசிவம் அறிந்துவந்து வசந்தியிடம் சொன்னபோது, ஒரு கணம் தன் விதியை நினைத்து தனக்குள் அழுதுகொண்டாள்.

சரியாக ஒரு வருடம் கழித்து அதே இராகுலன் அதே கிராம அபிவிருத்தி சங்கத்தில் வசந்தியுடன் தன்னைச் சேர்த்துவைக்குமாறு மீண்டும் வந்து முறையிட்டிருக்கின்றான்.

“ஐயா! இனி நான் ஒழுங்கா திருந்தி இருக்கிறன் ஐயா, என்ரை மூன்று பிள்ளைகளையும் ஒழுங்காப் பாக்கிறன் ஐயா” இராகுலன் பவ்யமாகக் கைகட்டி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருந்தான்.

“எடி பிள்ளை வசந்தி அவன் தானே சொல்லுறான் தான் திருந்தியிட்டன் எண்டு… அவனோடை போய் இரடி பிள்ளை. போ.. போ…” தனது மூன்று ஆண்பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்ட ஒரு பெரிசு ஆலோசனை சொன்னது. எப்படியாவது அவளை அவனுடன், அனுப்பிவிடுவதில், தங்களுடைய power ஐ மீண்டும் ஊருக்குள் நிலைநாட்டுவதிலேயே பெரிசுகள் எல்லாம் குறியாயிருந்தன.

“சரி சாம்பசிவம் சமாளிச்சு சேர்த்துவை…… குடும்பமெண்டா அப்பிடி இப்பிடித் தான் இருக்கும்." தலைவர் தனது முடிவை அறிவித்துவிட்டு எழும்புவதற்கு ஆயத்தமானார்.

"கொஞ்சம் பொறுங்கோ ஐயா…" இதுவரை மௌனமாயிருந்த வசந்தி வாய் திறந்தாள்..

"இனியும் இவருடன் என்னாலை சேர்ந்து வாழ முடியாது…”

“இப்பிடி நான் சொல்லுறதுக்கு நீங்கள் என்னை மன்னிக்கோணம்.. ஆனாலும் என்ரை முடிவை நான் இந்த இடத்திலை சொல்லித் தான் ஆகோணும். இனியும் நான் இவருடன் வாழ தயாராயில்லை ஐயா…

ஐயா.. மூண்டு மாதக் காதலிலை முன்னைப்பின்னைத் தெரியாத இவரை நம்பி என்ரை அப்பா, அம்மா, சகோதரங்களை விட்டிட்டு என்னை வாழவைப்பார் எண்ட நம்பிக்கையிலை தான் ஐயா நான் இவருடன் போனன். ஆனா…….அது தான் நான் செய்த முதலாவது தப்பு. என்னை நம்பி எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறாளே எண்டு குடிச்சியா, சாப்பிட்டியா எண்டு ஒரு நாள், ஒருநாள் இவர் கேட்டிருப்பாரா என்னை… இல்லை ஒரு கால் மீற்றர் துணி வாங்கித் தந்திருப்பாரா?? இவரைக் கலியாணம் கட்டி நான் கண்டதெல்லாம், அடியும் உதையும் ஏச்சும் பேச்சும்.. தான்…

வேண்டாம் ஐயா.. இனி எனக்கு இந்த மானங்கெட்ட வாழ்க்கை வேண்டாம்.. ஒவ்வொரு முறையும் ஒரு பொண்ணாப் பிறந்தவளா இவரை நம்பிப் போய் நான் குடித்தனம் நடத்தினதெல்லாம் போதும்.

எனக்கு கைகால் இருக்கு.. இதுவரை பட்ட வேதனைகள் அவமானங்கள் எல்லாம் என்னை மாத்தியிருக்கு ஐயா.. என்னை நம்பி மூண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கு.. அதுகளை நான் நல்லா படிப்பிக்கோணும்…..தன்னம்பிக்கையுள்ள ஒரு தாயா என்னாலை வாழமுடியும்….. இதுவரை நான் பட்ட அனுபவம் எனக்கு இந்த உலகத்திலை வாழுகின்ற பக்குவத்தையும் தைரியத்தையும் தந்திருக்கு..

நானும் இந்த உலகத்தில் வாழுவன் ஐயா… புருஷன் எண்ட எனக்கு கிடைச்ச இந்த கொடுமைக்கார விலங்கு எனக்கு இனி வேண்டாம்… ஒரு பொம்பிளை நினைச்சா எதையும் சாதிக்கலாம்… என்ரை பிள்ளைகள் எனக்கு போதும்… இனி தான் நான் வாழப்போறன்….. அடக்குமுறையும், ஆதிக்கமும் நிறைந்த இந்த பந்தத்தை விட்டிட்டு இனி தான் நான் சந்தோசமா வாழப்போறன்…

என்னாலையும் வாழமுடியும்…….. வாழ்ந்து காட்டுறன்…"

மேலேயிருந்து ஒரு பல்லி சட் சட் என்றது.

உச்சத்திலை பல்லி சொன்னால் அச்சமில்லைத் தானே……

சியாமினி இராசரத்தினம்

நன்றி: 
http://www.keetru.co...ries&Itemid=266

Sunday, March 24, 2013

சங்ககால ஆடை முறைகள்

சங்ககால ஆடை முறைகள்


நலவாழ்வும் உடையும்:

உடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம், நலவாழ்வு நோக்கமாக அமைதல் இன்றியைமையாததாகும். பருத்தி, பட்டு போன்ற இயற்கைப் பொருள்களிலிருந்து உருவாக்கப் படும் ஆடைகள் நலவாழ்வு நல்கும் திறனுடையன.

இன்றைய தமிழர் வாழ்வில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆடைகள், அழகுணர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைவதால், தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் வர வாய்ப்புள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். பழந்தமிழர் வாழ்வில் நிலவிய ‘உடை’ வகைகளைச் சங்க இலக்கியம் வழி ஆராய்ந்தால், அவை, நலம் நல்கும் நன் நோக்கத்தினையும், அழகுணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததை அறியலாம்.

தழையுடைகள்:
சங்ககாலத்தில் மகளிர் தழையுடை, மரவுரி ஆகிய இயற்கை ஆடை அலங்காரங்களையும் பருத்தியாலும் பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளையும் அணிந்திருந்தனர். குறமகள் மாமரக் கொத்துக்களை நடுவே வைத்து இலைகளையுடைய நறிய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய அழகிய தழைகளையுடைய ஆடையை உடுத்தினர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியைக் கொண்ட இத்தகைய தழையுடைகளை இன்றும் கிழக்கு ஆசிய நாடுகளான, பிஜித் தீவு, அவாய், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வாழும் மகளிர் உடுத்துவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

துகில், கலிங்கம்:

செல்வந்தர்களும், அரசர்களும், ‘துகில்’ எனப்படும் ஆடை வகையினை அணிந்திருந்தனர். இன்ப துன்பங்களை உணர்த்தும் வகையிலும் அக்கால ஆடை வகைகள் அமைந்திருந்தன. கணவனைப் பிரிந்த காலத்து மனைவியர் மாசேறிய நூலால் தைக்கப்பெற்ற கலிங்கத்தை உடுத்திப் பிரிவுத் துன்பத்தை உணர்த்தினர். கணவனோடு உறையும் காலத்து பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ‘துகிலை’ உடுத்தி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

பல்வகை ஆடைகள்:
பாம்பின் தோலைப் போன்ற ‘அறுவை’ எனும் ஆடை வகையையும், பட்டாடையையும், தன்னைப் பாடி வந்த பொருநர்க்குக் கரிகாலன் வழங்கினான். மூங்கில் பட்டையை உரித்தாற் போன்ற அழுக்கற்ற ‘அறுவை’ எனும் நீண்ட அங்கியை நல்லியக் கோடன் பாணர்க்கு நல்கினான். பாலாவி போன்ற தூய்மையும் மென்மையும் வாய்ந்த ‘கலிங்கம்’ எனும் உடையைத் தொண்டைமான் பாணர்க்கு அளித்தான்.

காலத்திற்கேற்ப உடை:

காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் பகற்காலத்தில் பட்டு ஆடைகளை உடுத்தினர். இராக் காலத்தில் மென்மையான துகிலை அணிந்தனர். அரசமாதேவியர் மார்பில் ‘வம்பு’ எனும் கச்சினை வலித்துக் கட்டினர்.

வீரர் உடை:

இரவு நேரக் காவலர்கள் இரவில் நீல நிறக் கச்சையை அணிந்தனர். தொண்டை நாட்டுக் காவலர்கள் ‘படம்’ எனும் சட்டையை அணிந்திருந்தினர். அழுக்கேறிய கந்தலாடையை ‘சிதாஅர்’ என்றனர்.

கடவுளர் உடை:

திருமுருகாற்றுப்படையில், முருகனைப் போற்றும் நக்கீரர், முருகன் ‘நலம்பெறு கலிங்கம்’ எனும் ஆடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தே ‘நலம் நல்கும் நன்நோக்கிற்கே ஆடை அணியப்பட்டது’ எனும் கருத்தினைப் பெறலாம்.

முனிவர் உடை:

திருவாவினன் குடியில் முருகனை வழிபட்ட முனிவர் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட உடையை உடுத்திருந்தனர். இசைவாணர்கள், அழுக்கேற்ற தூய உடையினை அணிந்திருந்தனர்.

அர்ச்சகர் உடை:

ஆகம வழிபாடுகளை நெறியுடன் கடைப்பிடிக்கும் ஆலய அர்ச்சகர்கள், ‘புலராக் காழகம்’ உடுத்தி, இறைவனை வழிபட்டனர். காழகம் என்பது அரையில் கட்டப்பெறும் ஆடை. இதனை நீராடியபின் நனைத்து உடுத்தனர்.

அரசர் உடை:

அரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை அணிந்திருந்தான். பேகன் தான் குளிருக்காகப் போர்த்தியிருந்த ‘கலிங்கம்’ எனும் மெல்லிய போர்வையை மயிலுக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.

துகில், அறுவை, கலிங்கம் போன்ற உயர்ந்த மெல்லிய பூ வேலைப்பாடுடன் கூடிய ஆடை வகைகளைச் செல்வந்தர்களும் அரசரும் அணிந்தனர்.
(நன்றி: மூலிகை மணி)


நன்றி: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19006:2012-03-16-05-06-19&catid=25:tamilnadu&Itemid=137

Saturday, March 23, 2013

கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும்

கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும்


காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்! சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது.

“பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி.
“நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை.

“தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல பராக்கிரமங்களைப் பார்த்தாலே தெரியுது.” பயத்துடன் சற்றே ஓரடி பின்வாங்கிய கெளுத்தி சொன்னது.

“அட முட்டாளே, அங்க லட்ஷணம் மட்டுமா? அனைத்துலகளந்த அறிவிலும் உயர்ந்தவன், நான். நீரே தஞ்சமென வாழும் நின்போன்ற நீசர்கள் என்னறிவின் ஆழ அகலம் அறிவரோ? நீரிலும் வாழ்வேன் – நிலத்திலும் வாழ்வேன், நான். பரந்து விரிந்த பல்லுலக சஞ்சாரி, என் பட்டறிவுக்கு நிகரேது? என் பராக்கிரமங்களுக்கு அளவேது?”

அகங்காரத்துடன் வாய் பிளந்து குளமதிரக் கத்தியவாறு, தரையிலும் தண்ணீரிலுமாக மாறி மாறித் தன்னை மறந்து துள்ளித் துள்ளிச் சாகச சமத்காரங்களில் தவளை ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணம் பார்த்து –
திடீரெனப் பாய்ந்து வந்த கொக்கொன்று, அதனை ‘லபக்’ என்று கௌவிச் சென்றது!

தன் வாயால் கெட்ட இந்தத் தவளை போல, காரணமேதுமின்றிக் கத்திக் கத்தியே தம்முயிரைக் காவுகொடுப்போரை எண்ணி வருந்தியபடி, நடுக் குளத்தை நோக்கி நகர்ந்து சென்றது, கெளுத்தி மீன்!

———————–
‘தூறல்’ – ஜனவரி-மார்ச் 2013 (சாரல் 04:01)

நன்றி:http://knavam.wordpress.com/2013/02/16/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/


Wednesday, March 20, 2013

முதியோர் இல்லம் - நல்லதொரு தொழில் !


முதியோர் இல்லம் - நல்லதொரு தொழில் !


இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான், அதனால் ஆண் குழந்தையைப் பெருவது பெருமையானது இல்லை என்று தனிமையில் இருக்கும் பொழுது தான் பெற்றோர் உணரத் துவங்கியுள்ளனர். ஆணைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆணைப் பெற்றவர்களிடம் பிறர் மருமகள் சேர்த்துக் கொள்வாளா என்ற எந்த ஒரு கேள்வியும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்க மகன் வீட்டில் இருக்கலாமே ? என்று கேட்பார்கள், அதன் சிக்கல் பெற்றோர்களுக்கு தெரியும் என்பதால் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கவுரவமாக சொல்லிக் கொள்ள முடியும், பெண்ணைப் பெற்றவர்களுக்கு மருமகன் வீட்டில் இருப்பது இழுக்கு என்று நினைத்துக் கொள்வார்கள், மாமனார் மாமியார்களையும் பெற்றோர்களாக நினைத்து கூட வாழ அனுமதிக்கும் மருமகன்கள் இன்றும் குறைவே, இதிலும் யாரையும் குறை சொல்ல முடியாது, வேலை முடிந்து அலுப்புடன் வந்தால் பணி விடை செய்யும் மனைவி இன்று கிடையாது, அவளும் வேலைக்கு சென்று அதே அலுப்புடன் தான் திரும்பி இருப்பாள், இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனைவியையும் வேலைக்கு அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதால் வயதான பெற்றோர்களை உடன் வைத்திருந்தால் கவனிப்பது யார் என்ற கேள்வி, அதைப் புரிந்து கொண்ட பெற்றோர் தனிமையிலேயே வாழ முடிவு செய்துக் கொள்கின்றனர். வயது ஆனாலும் கணவன் மனைவி இருவரும் இருக்கும் வரை இருவருக்கும் பாதுகாப்பு

உணவு, பணம் பற்றி எந்த ஒரு பிரச்சனைகளும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் அதில் ஒருவர் மறையும் பொழுது சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்றோர் என்ற நிலைக்கு ஆளாகின்றனர், எங்கு செல்வது எங்கு காலம் தள்ளுவது ? என்ற கேள்விகளுக்கு முன்பு விடையாக முதியோர் இல்லங்கள் தான் விடைகளாக இருக்கின்றன.

சென்னைக்கு சென்றிருந்த பொழுது பழைய பெண் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது தாயார் தனிமையில் இருப்பது பற்றி தெரிவித்தார், தாம் கூட வைத்திருக்க விரும்பினாலும் வர மறுப்பதாகவும் கூறினார், அவரது தாயாருக்கு 85 வயதை கடந்து இருந்தது, காலை வேளையில் ஒரு பணிப் பெண் அன்றைக்கு தேவையானதை சமைத்துக் கொடுத்துவிட்டு வீட்டை துப்புறவு செய்துவிட்டு செல்வது தவிர்த்து வேறு யாரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம், இவருக்கு கவலை தாயார் ஏடாகூடமாக கழிவறை செல்லும் பொழுது விழுந்து கிடந்தால் என்ன ஆகுமோ ? ஒருவழியாக முதியோர் இல்லத்தில் சேர தாயார் ஒப்புக் கொண்டாராம், ஆனால் இவர்கள் பார்த்து வைத்துள்ள பெருங்களத்தூர் முதியோர் இல்லத்தில் தற்போதைக்கு இடமில்லை, பதிந்து வைத்துள்ளோம், யாராவது போய் சேர்ந்தால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் யாராவது சீக்கரம் போய் சேரனும் பெருமாளே என்று வேண்டி வருவதாக கூறினார், காரணம் அந்த முதியோர் இல்லம் பல வசதிகளுடன் தனி அறை, தனிக் கட்டில், தனி தொலைகாட்சி மற்றும் விருப்பப் பட்டால் தாம் பயன்படுத்தி வருகின்ற குளிச்சாதன பெட்டி கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று வீட்டில் வசித்தது போலவே வசிக்கலாமாம், பணிவிடைகளும், தனிப்பட்ட கவனிப்புகளும் உண்டாம். சென்னையில் இருப்பதிலேயே நல்ல முதியோர் இல்லம், வாரம் ஒருமுறையாவது சென்று பார்த்து வரவவும் வசதியானது என்று கூறினார், யாராவது போய் சேர்ந்தால் தகவல் சொல்லி அனுப்புவார்கள், இடம் கிடைக்கும் என்று
காத்திருக்கிறார்கள்.


முதிர்கண்ணன்கள் பெருவிட்ட காலத்திலும் முதிர்கன்னி கவிதை எழுதுவோர் உண்டு முதியோர் இல்லம் என்றால் எதோ சமூகம் சீரழிந்து வருகிறது என்று பொங்குபவர்களும் உண்டு, இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முதியோர் இல்லம் குறித்து கண்ணீர் கவிதை எழுதிவருகிறார்கள், தாமும் வயதான பிறகு முதியோர் இல்லம் தான் செல்வோம் என்று நல்ல தெளிவு உள்ளவர்கள் தயங்காமல் பெற்றோர்களை அங்கு அனுப்புகிறார்கள். முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்களை அனுப்புவது அவர்களை புறக்கணிப்பது என்று பலர் புரிந்துள்ளது போல் அல்ல, அவர்களது எஞ்சிய காலம் கவனிக்கப்பட வேண்டும் .

அவர்களை ஒத்த வயதினருடன் பொழுது போக்கிக் கொள்வது மற்றும் தனிப்பட்ட கவனிப்பு, பாதுகாப்பு எப்போதும் இருக்கும் என்பதால் தான் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இவை வெகு சாதாரண நடைமுறை, நமக்கு இவை அதிர்ச்சியாக தெரிகிறது, இன்னும் 30 - 40 ஆண்டுகளில் இவை நடைமுறை ஆகிவிடும். நண்பரிடம் பேசியதில் இருந்து நல்லொதொரு முதியோர் இல்லம் கிடைப்பது தான் தற்பொழுது பெரிய பிரச்சனை மற்றபட செல்லுபவருக்கோ, அனுப்பி வைக்கப்படுவருக்கோ எந்த ஒரு மனத் தடையும் இல்லை.

எல்கேஜி அனுமதிக்கு வயிற்றில் இருக்கும் பொழுதே பதிய வேண்டும் என்பது போல் ஐம்பதாவது வயதில் முன்கூட்டியே பதியாமல் விட்டால் நல்லதொரு முதியோர் இல்லம் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படலாம்.

முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவர்கள் குறித்து புரிந்துணர்வு இன்றி தூற்றுவதும் அவ்வாறு செல்பவர்களை ஆதரவற்றோர் என்று நினைப்பதையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், தாய் மட்டுமல்ல தந்தையும் கூட அங்கு அனுப்பி
வைக்கப்படுகின்றனர், பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கல்லூரி வாழ்கையில் ஆஸ்டல் வாழ்க்கையை நாம் ஏற்கனவே பழகி இருக்கிறோம் அவையெல்லாம் உறுத்தாத போது முதியோர் இல்லங்கள் மட்டும் ஏன் நாம் கலாச்சார சீரழிவாக நினைக்க வேண்டும் ? முடிந்தால் நல்லொதொரு முதியோர் இல்லங்களை அமைப்பது தொழிலாகவும், சேவையாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம்.

நன்றி: http://govikannan.blogspot.fr/2013/03/blog-post_20.html

Tuesday, March 19, 2013

தமிழர் குறியீடுகள்

தமிழர் குறியீடுகள்


ஒவ்வொரு இனமும், குமுகமும் (சமூகமும்) தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களாவோ, கருத்தாகாவோ, கருத்தோவியங்களாகவோ இருக்கலாம். இவற்றுள் சிலவோ பலவோ தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கருத இயலாது, எனினும் தமிழர்கள் அவற்றை தம் பண்பாட்டோடு ஆழமான நெருக்கம் உடையனவாகக் கருதுகிறார்கள்.

நிறங்கள்:

பச்சை, நீலம், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள்

உயிரினங்கள்:

மீன், புலி, யானை, பசு, மாடு, ஆடு, மான், காகம், மயில், கோழி,

பூக்கள்: 

செவ்வரத்தம் பூ, தாமரைப் பூ, மல்லிகை, அந்திப் பூ

கருவிகள்:

ஏர், வேல், வில்

இசைக்கருவிகள்:

யாழ், பறை, சங்கு, வீணை

எழுத்துக்கள்:
ழ, தமிழ், ஓம்

குத்துவிளக்கு

கும்பிடுதல்

கொடிகள்:

மீன் கொடி, விற் கொடி, புலிக் கொடி, சூரியக் கொடி,

இலை, பனைக் கொடி, நெல்

பரதம் ஆடும் பெண்

கை கூப்பும் பெண்

சங்கு ஒலிக்கும் ஆண்

கோபுரம், கோயில்,

நடராஜர் சிலை

குறள், வள்ளுவர்

நூல்

கப்பல், பாய்மரக்கப்பல்

கும்பம்

மாலை

வெற்றிலை பாக்குத் தட்டம்

கோலம்
நிறைகுடம்(பூரணகும்பம்)

அரசானைப் பானை, பானை

பலசரக்குகள்: 

மஞ்சள், மிளகு, சுண்ணாம்பு

தாவரங்கள்:

பனை

நெல்

வாழை

தென்னை
பூவரசு

மா

பலா

வெற்றிலை


நன்றி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Thursday, March 14, 2013

தமிழ்ப் பருவப்பெயர்கள்

தமிழ்ப் பருவப்பெயர்கள்


தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.

ஆண்களின் பருவப்பெயர்கள்:

பாலன் -7 வயதிற்குக்கீழ்

மீளி -10 வயதிற்குக்கீழ்

மறவோன் -14 வயதிற்குக்கீழ்

திறலோன் -14 வயதிற்கும்மேல்

காளை -18 வயதிற்குக்கீழ்

விடலை -30 வயதிற்குக்கீழ்

முதுமகன் -30 வயதிற்கும்மேல்


மற்றொரு பட்டியல்:

பிள்ளை -குழந்தைப்பருவம்

சிறுவன் -பாலப்பருவம்

பையன் -பள்ளிப்பருவம்

காளை -காதற்பருவம்

தலைவன் -குடும்பப்பருவம்

முதியோன் -தளர்ச்சிப்பருவம்

கிழவன் -மூப்புப்பருவம்

பெண்களின் பருவப்பெயர்கள்:

பேதை - 5 வயதிற்குக்கீழ்

பெதும்பை -10வயதிற்குக்கீழ்

மங்கை -16வயதிற்குக்கீழ்

மடந்தை -25வயதிற்குக்கீழ்

அரிவை -30வயதிற்குக்கீழ்

தெரிவை -35வயதிற்குக்கீழ்

பேரிளம்பெண் -55வயதிற்குக்கீழ்

பூவின் பருவங்கள்:

அரும்பு - அரும்பும்நிலை

மொட்டு -மொக்குவிடும்நிலை

முகை -முகிழ்க்கும் நிலை

மலர் -பூநிலை

அலர் -மலர்ந்தமநிலை

வீ -வாடும்நிலை

செம்மல் -இறுதிநிலை

இலைகளின் பருவப்பெயர்கள்:

கொழுந்து -குழந்தைப்பருவம்

தளிர் -இளமைப்பருவம்

இலை -காதற்பருவம்

பழுப்பு -முதுமைப்பருவம்

சருகு -இறுதிப்பருவம்

Thursday, March 7, 2013

இலங்கையில் ஆதிக்குடிகளான தமிழர்களது மூலம்


இலங்கையில் ஆதிக்குடிகளான தமிழர்களது மூலம்


வேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.

இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.

தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.


இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.

ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.

இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.

மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.
நன்றி: http://ta.wikipedia....rg/wiki/வேடுவர்

Sunday, March 3, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , முடிவுரை கடாரம் கொண்டோன் )

பாகம் 3 , முடிவுரை கடாரம் கொண்டோன்  வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!!
இத்துடன் வேங்கையின் மைந்தன் சரித்திர நாவலை நிறைவு செய்கின்றேன் . நாம் யார் ??? எமது பின்னணி என்ன ??? எமது இனம் செய்த வீரதீரங்கள் என்பனவற்றை இந்த சரித்திர நாவலில் அகிலன் சரியாகவே சொல்லியிருக்கின்றார் . நான் இந்த நாவலில் கற்றுக்கொண்டது என்னவென்றால் ,  இந்த நாவல் ஓர் வரலாற்றுப் புதினமாக இருந்தாலும் ,  இதில் வருகின்ற ரோகணத்து ஐந்தாம் மகிந்தர் , அவருடைய சதித்திட்டங்கள் இறுதியில் சோழரிடம் படுதோல்வியில் முடிந்தாலும் , கால ஓட்டத்தில் அதே பெயரை நவீன மகிந்தராக வரித்துகொண்டு  அதே ஈழத்தில் புதுயுகம் படைக்க வந்த சோழசாம்ராஜயத்தின் வாரிசுகளை சூழ்சியால் வென்ற சரித்திரத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . ஒரு கற்பனையான வரலாற்றுப்புதினம் எவ்வாறு எமது மண்ணில் உண்மையானது ???? இங்குதான் நாவலாசிரியர் அகிலனின் இந்தக் கதையின் உயிர்ப்பு எனக்குத் தூக்கலாகத் தெரிகன்றது .  வழமைபோலவே உங்கள் விமர்சனங்களை நாடி நிற்கின்றேன் .

முதலாம் பாகத்தை வாசிக்காதவர்கள் இங்கே நுளையுங்கள் :  http://www.yarl.com/...howtopic=109919

 இரண்டாம் பாகத்தை வாசிக்காதவர்கள் இங்கே நுளையுங்கள் : http://www.yarl.com/...howtopic=112233

மூன்றாம் பாகத்தை வாசிக்காதவர்கள் இங்கே நுளையுங்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=114819

உங்கள் கருத்துக்களைப் பகிர இங்கே நுளையுங்கள் : http://www.yarl.com/...howtopic=109920

நேசமுடன் கோமகன்
********************************************************
முடிவுரை கடாரம் கொண்டோன்

ஓயாது ஒழியாது நிற்காது நிலையாது ஓடிக்கொண்டேயிருக்கும் காலவெள்ளப் பெருக்கின் ஒரே ஓர் அணுத்துளி, அதற்குப் பெயர் ஓராண்டு. அது உருண்டோடி பெருவெள்ளத்துடன் கலந்தது.

அந்தச் சிறு துளிக்குள்ளேதான் எத்தனை எத்தனை பேரலைகள், மாற்றங்கள், திருப்பங்கள், போராட்டங்கள்!

கடல் சூழ்ந்த கடாரத்தில் மாபெரும் கொந்தளிப்பு!

கலமேறிக் களம் நோக்கிச் சென்று விட்டான். காளை காத்திருந்தனர் கன்னியர்; ஆத்தி மாலைகளோடு காத்திருந்தனர். வழி பார்த்திருந்தனர்; விழி பூத்திருந்தனர்.

ஆத்தி மலர் வாடவில்லை; அலை கடலோ ஓயவில்லை. காற்றே! நீ கடாரத்திலிருந்து செய்தி கொண்டுவர மாட்டாயா?

வெள்ளிமுரசம் விம்மியது; வெண்சங்கம் பொங்கியது. கடாரத்தின்  காற்று கன்னித் தமிழரின் கலங்களை களிநடம் புரியச் செய்தது!

அலைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரித்து எழுகின்றது? தமிழ் மக்களது வீரத்தின் எல்லையை அது கண்டுவிட்டதா? கடாரத்திலிருந்து வெற்றியுடன் திரும்பும் கலங்களைச் சுமந்து வருகிறோம் என்ற ஆனந்தமா?

கங்கை கொண்ட மாமன்னரின் திருமுடிக்கு, கடாரம் என்ற மற்றொரு மணமலரையும் கொய்துகொண்டு வந்தான் தென்னவன் இளங்கோ. அத்துடன் அவன் நிற்கவில்லை. வழியிலிருந்த மானக்கவரம் தீவுகளிலும் வெற்றிப்
புலிக்கொடி நாட்டி வந்தான். புகழ் ஈட்டி வந்தான்.

கலங்கள் கரை சேர்ந்தன. நாகப்பட்டினம் துறைமுகத்தில் மணலை எண்ணிவிடலாம்; மனிதர்களை எண்ணிவிட முடியாது. கரையோரத்தில் அரச குடும்பத்துக்காக ஒரே ஒரு கூடாரம் மட்டிலும் கூட்டத்துக்கிடையில்
தலைதூக்கி நின்றது.

கலத்திலிருந்து இறங்கியவுடன் ஓடோடியும் கரைக்கு வந்தான்  இளங்கோ. மாமன்னர், பெரிய வேளார், வல்லவரையர் இவர்களது அடிகளில் முடிவைத்து வணங்கி நின்றான். மாமன்னர் அவனைத் தழுவியவாறு அவன் காதருகில் ஏதோ கூறவே அவன் கண்கள் கூடாரத்தின் பக்கம் திரும்பின.

கூடாரத்திற்குள் அவன் நுழைந்தவுடன் அங்கே இரு பொற்சிலைகள் தங்களது மென்தளிர்க் கரங்களில் ஆத்திமாலைகளோடு நின்று கொண்டிருந்தன. அவற்றைக் கண்டவுடன் இளங்கோவும் சிலையானான்.
அவனது நினைவு திரும்புவதற்குள் அவன் கழுத்தில் மாலைகள் ஒன்றன்பின் னொன்றாக விழுந்தன. இருபுறம் இருவர் நாணத்தோடு தலைகுனிந்து நின்றனர் - இளங்கோ இளமுருகனைப் போல் வெற்றிப் பெருமிதத்தோடு அவர்களை அன்போடு தழுவிக் கொண்டான்.

ஆத்திமாலைகள் போதாவென்று முத்து மாலைகள் தொடுக்கத் தொடங்கினார் இருவரும். கருநீலக் கடலில் விளைந்த நன் முத்துக்களல்ல அவை. அவற்றைவிட உயர்ந்தவை; கண்ணீர் முத்துக்கள்.

இளங்கோவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

அருள்மொழி மெல்ல அவனை ஏறிட்டு நோக்கி, “எந்த நேரமும் ரோகிணிக்கு உங்கள் நினைவுதான்’’ என்றாள்.

“உனக்கு?’’ என்று புன்னகையோடு கேட்டான் இளங்கோ. நங்கையார் நாணித் தலைகவிழ்ந்தாள்.

ரோகிணி தன் முகத்தை உயர்த்தினாள். “தமக்கையார் நான் எழுந்து நடமாடும் வரையில் எப்போதும் என்னருகிலேயே இருந்தார்கள். அவர்கள் அருகிலிருந்த போதெல்லாம் நீங்களும் எங்களுக்கு மத்தியிலேயே
இருந்தீர்கள். இப்போதிருப்பதைப் போலவே இருந்தீர்கள்.’’

இளங்கோ சிரித்தான், “கடாரத்துக் காடுகளில் நான் போரிடும் போதெல்லாம் என் இரு தோள்களுக்கும் வலிமை தந்தவர்கள் நீங்கள்தான்’’ என்றான்.

அவனது சிரித்த முகத்தைக் கண்ணிமையாது கண்டு பெருமிதம் கொண்டனர் பெண்கள்.

கூடாரத்துக்கு வெளியே ஒரே குதூகலம். மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி வான் முகட்டுக்கே உயர்ந்து விட்டது.

“கடாரம் கொண்ட மாமன்னர் வாழ்க.’’

“அதை வென்று வந்த கொடும்பாளூர்க் கோமகன் வாழ்க!”

பட்டொளி வீசிப் பறந்த கொடிகளில் பொறிக்கப் பெற்றிருந்த வேங்கைகளின் கூட்டம் உயிர் பெற்று வீர கர்ஜனை செய்வது போன்றிருந்தது மக்களது மகிழ்ச்சி ஆரவாரம்.

“அடைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்தித்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்டார் கோப்பர கேசரி’’
- மெய்க்கீர்த்தி

முற்றும்Saturday, March 2, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 42. தியாகத் திருமகள் )

பாகம் 3 , 42. தியாகத் திருமகள்


வசந்தமண்டத்தில் இருந்த ஒரு தூணைச் சரித்து விட்டால் மாபெரும் சோழசாம்ராஜ்யத்தையே சரித்துவிடலாம் என்ற துணிவு வீரமல்லனுக்கு. கள்வெறி கொண்டவன்போல் அவன் சுற்றுப்புற உலகத்தையே மறந்து அந்தத் தூணைச் சாடிக் கொண்டிருந்தான்.

உறுதியான வேல் முனையை முறித்து வைத்து, அதை ஆணிபோல் தூணுக்குள் அறைந்து கொண்டிருந்தார்கள் வீரமல்லனும் அவனுடைய  ஆட்கள் இருவரும். தொளையிட்டு நீரை உள்ளே புகுத்திவிட்டால் பிறகு
நீரின் வலிமையின் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாதல்லவா அந்தத் தூண்?

இரும்பு உலக்கைகள் எழுப்பிய சத்தத்தால் அந்த மண்டபம் முழுதுமே அதிர்ந்தது. இளங்கோவின் முடிவைப்பற்றிய ஐயமே வீரமல்லனுக்கு ஏற்படவில்லை.

“முடிந்து போனான் அவன்!”

ஆனால், நீருக்குள் தலைக்குப்புறச் சென்று நினைவை இழந்துவிட்ட இளங்கோ, தன்னைத் தேடிவரும் சுறாமீனைக் கண்டவுடன் சிறிது சிறிதாகச்
சுய நினைவைத் திரும்பப் பெற்றான். கடைசி நேரத்திலும் ஒரு கடும்பகையா? தான் இறந்து போவதற்கு முன்னால் தன்னை அழிக்கவரும் உயிரை அழித்து விடவேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்கு.

உயிர்த் துடிப்பின் கடைசிப் போராட்டம் என்றால் வீரர்களின் வலிமை எங்கிருந்தோ திரும்பி வந்துவிடும் போலும்! சரேலெனத் திரும்பினான்; தன்னை நெருங்கி வரும் மீனின் கண்களையே கவனித்தான். அந்தக்
கண்களில் ஏன் இத்தனை வேதனை? ஏன் இத்தனை கனிவு? திடீரென்று  அதன் செதில்கள் மறைந்து, வாழைக் குருத்துக்கள் போன்ற இரு கரங்கள் தெரிகின்றனவே! நிலவால் வார்த்தெடுத்த மிருதுவான மெல்லுடன் உண்டா
அதற்கு? என்ன! மச்சகன்னிகை என்பவள் இவள்தானா? கனவில் நடப்பவைபோல் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் நடந்த கொண்டிருந்தன.

தனது மென்மையான பொற்கரங்களால் அந்தக் கன்னிகை அவனை வளைத்துக் கொண்டாள். விழுங்குவதற்கு மாறாக அவனை விழிகளால் விழுங்கிக்கொண்டே நீரில் மேற்பரப்புக்குக் கொண்டு வந்தாள்.

நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருந்த தோணி ஒன்று அவர்களை  நெருங்கி வந்தது. அதற்குள்ளிருந்த பெண்கள் இருவர் அவனைப் பற்றி இழுத்துத் தோணிக்குள் கொண்டு வந்தனர். மச்சகன்னியும் தோணியில் ஏறிக்கொண்டாள். மண்டபத்தை நெருங்கிவந்து அதன் மறைவில் ஓர் ஓரமாக
கட்டப்பட்டது தோணி. இளங்கோ அந்தக் கன்னிகையின் மடியில் கிடந்தான். அவன் உட்கொண்ட நீரனைத்தும் வெளியில் வந்தது. சிறிது சிறிதாக அவன்
உணர்வுபெற்றுத் தன்னுடைய விழிகளைத் திறந்தான்.

திறந்த விழிகளை இமைப்பதற்கு அவனுக்கு மனமில்லை. கண்  இமைக்கும் நேரத்தில் தான் காணும் காட்சி கனவாக மறைந்துபோய்விடுமோ என்ற அச்சம் அவனுக்கு பார்த்துக் கொண்டேயிருந்தான்.

மல்லிகை மொட்டுக்களைப் போன்ற கண்ணீர்த்துளிகள் அவன் நெற்றியில் உதிர்ந்தன. அந்தத் துளிகளில்தான் எத்தனை நறுமணம்!

“நங்கையாரே!’’ என்று நெடுமூச்செறிந்தான் இளங்கோ.

அந்தக் குரல் ஒலித்தவுடன் நங்கையார் நங்கையாராக இல்லை. சோழ சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்திகளின் குமாரத்தியாக இல்லை. அவளுக்கே உரித்தான கம்பீரமும் அழுத்தமும், மனத்திண்மையும் எங்கோ மாயமாய்
மறைந்துகொண்டன.

காலமெல்லாம் மூடி மறைத்துவிட முடியும் என்று அவள்
நம்பிக்கொண்டிருந்த இதயத்தின் சாளரங்கள் படீர் படீரெனத் திறந்துகொண்டுவிட்டன. உள்மனத்தின் சோகக் குமுறல் ஒரு பெரும் புயலாக எழும்பிவந்தது. அவளைத் துரும்பாக மாற்றிச் சுழல வைத்தது.

மாமன்னரின் மகள் என்ற முகத்திரையும் ஒருங்கே கிழிந்தது. மனிதப் பெண்ணானாள் அருள்மொழி.

அருகிலிருந்த தோழிகளையும் கவனியாது அவன்மேல் விழுந்து குமுறினாள்; குலுங்கினாள்; புலம்பினாள்.

 “இளவரசே! இளவரசே! இளவரசே”

என்று புழுவாய்த் துடித்துவிட்டாள்.

வேதனைக்கிடையில் வியப்படைந்தான் இளங்கோ!

‘நங்கையார்தானா? இவள்? அல்லது ஆயிரமாயிரம் ரோகிணிகள் ஒன்றாகத் திரண்டு வந்து உருமாறி வந்து அருள்மொழி உருவத்தில் தோன்றியிருக்கிறார்களா?’

பெண்கள் அனைவரையும் பிரம்மன் ஒரே வகைக் களிமண்ணால் உருவாக்கிவிடுவானோ என்னவோ? முகத் தோற்றத்தில் சிற்சில மாறுதல்கள்; அகத் தோற்றத்தில் சிற்சில வளைவு நெளிவுகள்; அடிப்படை ஒன்றுதானா?

கால் நாழிகைப் பொழுதுக்குள் காட்டு யானையின் வலிமை திரும்பியது இளங்கோவுக்கு. நங்கையாரின் அன்பு வெள்ளப்பிரவாகத்தில் அவன் தன்னுடைய அறிவு சுடர்விடுவதைக் கண்டான். கடமை அவன் கண்முன்னே நின்றது.

துள்ளி எழுந்து மண்டபத்தின்மீது தாவி நேரே மையத் தூணுக்குச் செல்லும் படிகளின் பக்கம் திரும்பினான். நிலைமையை அறிந்துகொண்ட அருள்மொழி தன் தோழிகளில் ஒருத்தியை அருகில் அழைத்து அவள்
செவியில் ஏதோ கூறினாள். பிறகு மற்றொருத்தியோடு இளங்கோவைப் பின்பற்றினாள்.

முன்னே ஓடிய இளங்கோவின் கால்களில் மாங்குடி மாறனின் மலைபோன்ற சரீரம் தட்டுப்பட்டவுடன் ஒரே ஒரு கணம் கீழே குனிந்தான் இளங்கோ. பிறகு நெஞ்சில் பற்றிய நெருப்போடு நிமிர்ந்தான். கோடையிடிகள்
தூணருகே இடித்தன. தூணில் தலைகள் மோதிச் சிதறின. சரிந்தனர் இருவர்; பணிந்து நின்றான் பழைய நண்பன்.

வீரமல்லனின் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் அவனை வெளியே இழுத்து வந்து சிறு தூண் ஒன்றில் கட்டி வைத்தான். பிறகு மாங்குடி மாறனிடம் கதறிக் கொண்டு ஓடோடியும் வந்தான் இளங்கோ.

மாங்குடி மாறனின் அருகில் வாய் திறந்தவாறு அமர்ந்திருந்தாள் அருள்மொழி. மெல்ல அவன் தலையைத் தூக்கி மடிமீது கிடத்திக்கொண்டான்
இளங்கோ. உதடுகள் துடித்தன; சொற்கள் வெளிவரவில்லை.’

“மாறா! மாறா!’

மாறனின் கண்கள் மலர்களென விரிந்தன. பெருமை நிறைந்த புன்னகையொன்று அவன் இதழ்களில் மொட்டு விட்டது.

“இளவரசே, நான் பிழைத்தெழுந்தால் கட்டாயம் என்னைக்
கடாரத்துக்கு அழைத்துச் செல்வீர்களா?’’

இளங்கோவின் இதய நரம்புகள் துடித்தன.

மாறன் தன்னுடைய கேள்விக்கு விடையை எதிர்பார்க்கவில்லை. அது அவனுடைய கடைசிக் கேள்வி; கடைசி ஆசை. இந்தக் கேள்வி பிறந்தவுடன் அவனுடைய ஆவியும் இளங்கோவின் மடியில் பிரிந்தது.

சோழகங்கப் பேரேரி அவர்களோடு சேர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டது.

மெதுவாக அவன் தலையைத் தரையில் வைத்துவிட்டு அருள்மொழியைத் திரும்பிப் பார்த்தான் இளங்கோ. அவள் அவனுடைய கண்ணீரைத் தன் விரல்களால் வழித்துச் சுண்டினாள்.

சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது.

“நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், இளவரசி?’’ என்று கேட்டு மௌனத்தைக் கலைத்தான் இளங்கோ.

“வெளிக் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தோழிகளோடு  ரதத்தில் வந்து கொணடிருந்தேன். ஏரிக்கரையிலிருந்து கொண்டு வசந்த மண்பத்தைக் காணவேண்டும் என்று தோன்றியது. ரதத்தைச் சாலையில்
நிறுத்திவிட்டு நாங்கள் மட்டிலும் ஏரிக்கரைக்கு வந்தோம். மண்டபத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. சாரதியிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டுத் தோணியில்
கிளம்பி வந்தேன்.’’

“இந்த மண்டபத்தைப் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?’’ என்று கேட்டான் இளங்கோ.

“தெரியும்’’ என்றாள் அருள்மொழி. ஆனால் எப்படித் தெரியவந்தது என்பதை அவள் வெளியிடவில்லை. இளங்கோ துணுக்குற்றான். ‘ரோகிணி இவளிடம் கூறிவிட்டாளா?’

அவனுடைய தவிப்பைத் தவிர்ப்பவள்போல்,

“வல்லவரையர் தாத்தா கூறினார்’’ என்றாள் நங்கையார். ரோகிணியை அவள் காட்டிக் கொடுக்கவில்லை.

ஆனால் இளங்கோ வீரமல்லனை அங்கு கண்டவுடனேயே காரணத்தை ஊகித்தறிந்து கொண்டான். ஆனைமங்கலம் மாளிகையில் முன்பொரு நாள் அவன் விட்டுச் சென்ற வளைஎறி இளங்கோவின் ஊகத்தை உறுதிப்படுத்தியது.

அருள்மொழியின் செய்தியோடு தோணியில் கரைக்குச் சென்ற அவள்தோழி அதற்குள் மாமன்னரிடம் செய்தியை எட்டவிட்டாள். ஏற்கனவே கங்காபுரிக்குள் நுழைந்த கொடும்பாளூர்க் குதிரைப்படை அவருக்கு ஒரு பகுதிச் செய்தியை அறிவித்தது. மறுபகுதியும் இப்போது வந்துவிட்டது.

விழாக்களுக்கு விக்கினமில்லாத முறையில் மாமன்னரும்  பெரியவேளாரும் ஏரிக்குக் கிளம்பினார்கள். வீரர்கள் சிலரோடு அரண்மனைப் படகு மைய மண்டபத்தை நோக்கி விரைந்தது.

மண்டபத்துக்குள் மாமன்னர் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, அவரையும் முந்திக்கொண்டு இளங்கோவிடம் ஓடி வந்தார் பெரிய வேளார். தம்முடைய மைந்தனை மார்புறத் தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்தார்.

“இளங்கோ! நீ என்னுடைய குமாரனாகப் பிறந்ததன் பலன்
இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. கொடும்பாளூர்க் குலத்தையே உயர்த்தியிருக்கிறாய். கோனாட்டின் பெருமையையே உயர்த்தியிருக்கிறாய். நம்முடைய படைகளை அனுப்பிப் பகைவர்களை அழித்ததுமல்லாமல், நீயே நேரில் வந்து மண்டபத்தைக் காத்தாயல்லவா? உயிர் கொடுத்துக் கடமை  காக்க முன்வந்தாயல்லவா? இளங்கோ! நான் மிகப் பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன்!’’

தந்தையாரிடமிருந்து அந்த நாள் வரையில் சிறிதளவு பாராட்டைக்  கூடப் பெற்றறியாத இளங்கோவுக்கு அவருடைய பரிவு கண்கலங்கச் செய்தது.

“என்னைவிட மாங்குடி மாறன் உயர்ந்துவிட்டான், தந்தையே!’’ என்று அவனைச் சுட்டிக் காட்டினான் இளங்கோ.

பெரிய வேளார், தமது மைந்தனை விட்டுவிட்டு மாறனின் நிலை கண்டு வெம்பினார்!

சக்கரவர்த்திகளின் குரல் முதல் முதலாக இளங்கோவை நோக்கி எழுந்தது.

“கோனாட்டுப் படைகள் முழுவதையும் நீ இங்கே அனுப்பிவிட்டாய். நீயும் தலைநகரத்தில் இல்லை. உன்னுடைய நாட்டின் பொறுப்பை நீ மறந்துவிடலாமா இளங்கோ?’’

“மன்னித்துவிடுங்கள் சக்கரவர்த்திகளே! செய்தி கேட்டவுடன் எனக்கு வேறெதுவுமே செய்யத் தோன்றவில்லை’’ என்று தடுமாறினான் இளங்கோ.

அதற்குள் பெரிய வேளார் குறுக்கிட்டு , “எங்களுடைய செஞ்சோற்றுக் கடனை நாங்கள் எதற்காகவும், மறக்க மாட்டோம். சோழ சாம்ராஜ்யந்தான் எங்கள் உயிர் மூச்சு. அதைக் கட்டிக் காப்பதுதான் எங்களது முதல் கடமை
பிறகுதான் எங்களுக்குக் கொடும்பாளூர்!’’ என்று குமுறினார்.

இளங்கோவிடம் சென்று அவனை இறுகத் தழுவிக் கொண்டார் இராஜேந்திரர்.

“உன் தந்தை சொல்வதைக் கேட்டாயா, இளங்கோ?
கொடும்பாளூர்க் கோனாடு உங்களுக்கு மிகவும் சிறியதாகிவிட்டது. இனி உங்களுக்கு அது போதவே போதாது. வேளிர் குலமென்றும் சோழர் குலமென்றும் இனிப் பிரித்துப் பேசவேண்டாம். கொடும்பாளூர்ச் சோழர்குலம் இனிக் கங்காபுரிச் சோழர் குலத்துடன் ஒன்றி விடவேண்டியது தான். என்னுடைய காலத்தில் எனக்குப் பெரிய வேளார் இருப்பது போலவே நீயும்
என் மைந்தன் இராஜாதிராஜனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், இளங்கோ!’’

அன்பு வெள்ளத்தில் அகப்பட்டுத் திக்குமுக்காடிப் போனான் இளங்கோ.

இந்தச் சமயத்தில் அகங்கார வெள்ளம் கரைபுரண்டு கொண்டு வந்தது, தூணில் கட்டப்பட்டிருந்த வீரமல்லனிடமிருந்து.

“இளங்கோ, நீ செய்தது மிகப் பெரிய தியாகமடா! மிகப் பெரிய தியாகம்!” என்று கூறி, வெறிகொண்டவன் போல் நகைத்தான் அவன்.

“உன்னுடைய தலைநகரம் அங்கே தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறது; இங்கே நீ உயிர்த்தியாகம் செய்ய வந்தாயா? அறிவீனத்துக்குப் பெயர் தியாகமென்றால்
நீ செய்திருப்பது தியாகந்தான்! இளங்கோ! இனி உன்னால் கொடும்பாளூரைக் காணவே முடியாது; கொடும்பாழூரைத்தான் நீ காணப் போகிறாய்!’’

மாமன்னரின் பிடியிலிருந்து பதறிக்கொண்டு விலகினான் இளங்கோ. இராஜேந்திரரின் விழிகள் கோவைக்கனிகளாக மாறின. பெரியவேளாரின் உடைவாள் மின்னலெனப் பாய்ந்து வீரமல்லனின் நெஞ்சுக்கெதிரே நீண்டது. மாமன்னர் அதைத் தடுக்கவில்லை. ஆனால் இளங்கோ அதன் குறுக்கே பாய்ந்து தடுத்து,

“நீ என்ன சொல்கிறாய், வீரமல்லா?’’ என்று வேதனை
மிகுந்த குரலில் கேட்டான்.

“விஜயாலய சோழன் காலத்தில் அவனோடு சேர்ந்து கொண்டு எங்கள் தஞ்சை தலைநகரைச் சோழர்களுக்குப் பறித்துக் கொடுத்தீர்கள். இப்போது அவர்கள் புதிய தலைநகரத்து விழாக் கொண்டாடுகிறார்கள்! அவர்களுடைய வெற்றி விழாவின்போது, உங்களுடைய தலைநகரமே பறிபோய்க் கொண்டிருக்கிறது. கங்காபுரியைக் காப்பாற்ற வந்தாயே, உன் கொடும்பாளூரைக் காப்பாற்றுவது யார்? யார் இளங்கோ?’’

இளங்கோவின் முகத்தில் ஒவ்வொரு அணுவும் துடிதுடித்தது.

“வீரமல்லா! உன்னை நண்பனென்று நம்பினேனடா! உற்றவனென்று மதித்தேனடா... உனக்கு நான் செய்த நன்மைகளை நினைத்துப்  பார்த்திருந்தால் இதற்கெல்லாம் துணிந்திருப்பாயா? இந்தச் சமயத்தில் உன்
முன்னோர்களின் தலைநகரமாகிய சந்திரலேகைக்கே நீ சிற்றரசனாகியிருப்பாய், வீரமல்லா!... அட பாவி! உன்னையே நீ கெடுத்துக் கொண்டாயடா!”

வீரமல்லன் இதுபோன்ற தவிப்புக் குரலை இளங்கோவிடம்
எதிர்பார்க்கவே இல்லை. அவன் கையால் தன் தலை உருளப் போகிறதென்று நினைத்தவன், அவனது பரிதவிப்பைக் கண்டவுடன் தலை கவிழ்ந்தான்.
பழைய நட்பை இளங்கோ மறந்து விடவில்லையா? தீமைகளை மட்டுமே மறந்துவிட்டானா?

வீரமல்லனின் கண்களில் முதல் முறையாகக் கண்ணீர் கசிந்தது.

“விரைந்து கொடும்பாளூருக்குச் செல், இளங்கோ. பிரான்
மலையிலிருக்கும் பாண்டியப் படைகளைக் கீர்த்தி முன்பே கொடும்பாளூருக்கு அனுப்பியிருப்பார். நகரம் இதற்குள் அழிந்திருந்தாலும் அழிந்திருக்கும். போய் அதைக் காப்பாற்ற முடியுமா என்று பார்!’’

பெரிய வேளார் செயலற்று நெடுநேரமென நின்றுவிட்டார். அவரைப் பற்றிக் குலுக்கினார் இராஜேந்திரர்.

 “புறப்படுங்கள் கொடும்பாளூருக்கு! இங்கே விழா இடையூறில்லாமல் நடந்து கொண்டிருக்கட்டும். நாம் அங்கே போய் வருவோம்.’’

அருள்மொழியையும் தம்முடன் அழைத்துக்கொண்டார் மாமன்னர்.

அரண்மனை ரதங்களும் பல்வேறு குதிரைகளும் இரவோடு இரவாகக் கொடும்பாளூரை நோக்கி விரைந்தன. அப்போது வீரமல்லனும் இளங்கோவின் அருகில் இருந்தான்.

தொடரும்