Saturday, December 29, 2012

தோற்பதிலும் சுகம் எனக்கு .........

தோற்பதிலும் சுகம் எனக்கு .........


உன்னை முத்தமிட எனக்கு 
விருப்பமில்லை
என் காதலை சத்தமிடுவதிலும்
எனக்கு விருப்பமில்லை
தொடுதலுக்காக மட்டும்
காதலில்லை என்பதில் என் மனம்
என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை
மறதியை வெல்லும் ஆற்றல்
உன் நினைவுக்கு மட்டும்

தானடி உள்ளது

சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப்
போன அத்தனை வார்த்தைகளும்
மௌனத்திற்கு இன்றும் அர்த்தம்
சொல்லிக் கொண்டு தானிருக்கிறது
உன் கண்கள் மட்டும் ஏனோ
அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது
எது வரை …என்பதில் தான் எனக்கும்
உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம்
இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது
என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம்.

நன்றி : http://vinmugil.blog...og-post_29.htmlThursday, December 20, 2012

"சிறுமியும் தேவதையும்"

குருவின் முறுவல் பொன் உதயம்!

குருவின் முறுவல் பொன் உதயம்!

வாழத் தெரிந்த வல்லவருக்கோ
வாழ்க்கை என்பது வரமாகும்
வழிதெரி யாமல் தவிப்பவருக்கோ
வாழ்க்கை முழுதும் வலியாகும்
தாழ்வும் உயர்வும் மனநிலை என்பது
தரணியில் சிலர்க்கே தெளிவாகும்
தாழ்ந்தால் தரிசன மாகும் குருவின்
தாளில் புதைவதே வாழ்வாகும்!

உடலுக் குள்ளே நம்மைத் தேடி
உளுத்துக் களைத்து நின்றோமே
உடலைத் தனது உயிருள் துகளாய்
உடையவன் சன்னிதி சேர்ந்தோமே!
கடலுக் குள்ளே கனலாய் நின்று
கனவை நனவைக் கடைந்தானே!
கட்டி வெண்ணையாய் மிதக்க விட்டுக்
கைகள் கொட்டிச் சிரித்தானே!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி
துரத்தத் துரத்தப் பறக்கிறது
தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம்
தொல்லை யுகமாய்த் தொடர்கிறது
வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே
வேட்டை யாடப் படுகிறது!
வீழும் கணத்தில் விடிந்த ஞானம்
வாழவா துணை வருகிறது?!

புலனால் தொட்டது மனதில் பட்டால்
புதிய உறவு பிறக்கிறது
காத்த உறவே கடுநஞ் சாகிக்
கனவிலும் நீலம் படர்கிறது!

உலகம் விலைமயம்! உறவும் பிரிவும்
ஒரேநர கத்தின் இருகதவம்!
உணர்ந்து நின்றால் உள்ளே விரியும்
குருவின் முறுவல் பொன்னுதயம்!

விண்ட இலைக்கு விதி கிடையாது
விண்ணில் வீதிகள் ஏது!
வெட்ட வெளியின் அப்பட்டத்தில்
வேட ஜோடனை ஏது?
கண்ணில் தெரியும் வானே போதும்
ககனம் அளத்தல் எதற்கு?
ககனம் முழுவதும் கண்ணில் எழுதியோன்
கண்ணில் பட்டது இதற்கு!


நன்றி:http://www.tamilhind...ramanan-poem-3/

அழி றப்பர்

அழி றப்பர்

நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்த பீப்பீக் குழலை எறிந்துவிட்டு மேளக்காரனாக மாறி விட்டான்.

"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.

ஓடத்தொடங்கிய இரண்டு பேரும் போய் நின்றது பள்ளிக்கூடத்தில் நின்ற வேப்பமரங்களின் கீழே. மிச்சப்பேரும் சரியாக ஊகித்து அங்கே வந்து சேர்ந்தார்கள்.

**************************

ரங்கனின் அரைக்காற்சட்டைப் பொக்கற்றில் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும். அதற்குள் நெருப்புக்குச்சி இருக்காது. பதிலாக உயிருள்ள ஒன்று இருக்கும். இன்றைக்கு சில்வண்டு . இவன் நடக்க நடக்க சில்வண்டு "ரீஈஈஈஈஈ, ரீற், ரீஈஈஈஈ" என்று விட்டுவிட்டுச் சத்தம் போட்டது. இவனைக் கண்ட எல்லோரும் சத்தத்தைக் கேட்டு விட்டுக் கேள்விக்குறியோடு பார்க்க, ஒன்றும் நடவாததுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடந்தான். இந்த 'அச்சாப்பிள்ளை' முகம் இவனுக்கு ஒரு கொடை. யார் வீட்டையாவது போய் 'ஆச்சி/அப்பு/மாமி உங்கடை வீட்டை மாங்காய் ஆயலாமா?" என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் களவாக மாங்காய், புளியங்காய் நெல்லிக்காய் ஆய்ந்து தின்பதின் சுகம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவன் முதல்நாள்தான் குஞ்சிப் பெரியாச்சி வீட்டில் மாங்காய் திருடியிடுப்பான். அடுத்தநாள் பெரியாச்சி இவனிடமே "ஆரோ கள்ளப் பெடியள் மாங்காய் ஆஞ்சு போட்டாங்கள். உனக்கு ஆரெண்டு தெரியுமே?" என்று விசாரிப்பா. இவனும் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடையல் பதில் சொல்லிக்கொண்டிருப்பான். அவாவும் "நீ நல்ல பெடியன், பதிவாக இருக்கிற ஒரு மாங்காய் ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்பா. என்றாலும் இவனுக்குக் கனகாலம் ஒரு குழப்பம், "ஆச்சிக்கு என்னிலை சந்தேகமா?" என்று. கடைசிவரை அந்த 'டவுட்' கிளியர் ஆகவில்லை. ஆனால் இந்த அச்சாப்பிளை சொந்த ஆச்சி வீட்டிலேயே அப்பப்ப நெல்லிக்காய் களவாகப் புடுங்கும். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் மட்டும் ஆச்சியிடம் 'அனுமதி' வாங்கி நெல்லிக்காய்கள் பறிப்பான். அன்றைக்கு இவன் பாடு சோகம். ஆச்சி இவனை மரத்தில் ஏறவிடா. நீளத் தடியொன்றைக் கொடுத்துப் 'பத்திரமாகப்' பழுத்த நெல்லிக்காய்களை மட்டும் தட்டி விழுத்தச் சொல்லுவா. 'கிழவி' மறக்காமல் அன்று பின்னேரம் இவன் வீட்டை போய் அம்மாவிடம் 'இவன் நாசமறுவான் பச்சை நெல்லிக்காய்களை நாசம் பண்ணிப்போட்டான் ' என்று புகார் கொடுக்கும். அம்மாவிற்குத் தன்மகனை 'நாசமறுவான்' என்று ஆச்சி சொன்னது பிடிக்காது. அந்தக் கோபத்தையும் இவனிடம்தான் காட்டுவா.

 இதெல்லாம் இப்படி இருந்தாலும், இன்றைய நாயகன் என்னவோ சொறியன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிற சிறியன் தான். சேட்'டுப் பொக்கற்றில் இருந்து "அதை" ஒரு நளினமாக எடுத்துப் போட்டான். அது அப்போதுதான் பிரபலமாகத் தொடங்கிய 'வாசம்' மணக்கிற அழிறப்பர். ஒரு றப்பரால் கெப்பரானது வரலாற்றில் இவனாகத்தான் இருப்பான். அதுக்குப் பின்னால் ஒரு கதை இருந்தது.

"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக. சுகந்தி பள்ளிக்கூடத்தில் புதுப்பெட்டை. புத்தம்புது அரை லேடீஸ் பைக்கில் வருவாள். தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். "நீர்" என்றும் மற்றவர்களை விளிக்கலாம் என்று பட்டிக்காட்டுப் பெடி பெட்டைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள். கொஞ்சம் கறுப்பு என்றாலும் கூடப்படிக்கிற பெடியள் எல்லாருக்கும் அவளில் ஒரு 'இது' இருந்தது. கற்பனையைச் சிறகடிக்க விடவேண்டாம். இப்பதான் இவர்கள் ஆறாம் வகுப்பிற் படிக்கிறார்கள். அக்காலங்களில் ரவுணிலை ஷெல் விழத் தொடங்கிவிட்டது. அதுதான் அவள் ரவுண் கொன்வென்ட் இலிருந்து உள்ளூர் மகாவித்தியாலத்திற்கு வந்த வரலாறு.

"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.

"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.

"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.

"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.

"சத்தியமாக அவள் ரண்டு றப்ப்ர் வச்சிருந்தவள், ஒண்டை எனக்குத் தந்தவள்" என்ற சிறியன் அதை கையில் வைத்து ஒரு சுண்டு சுண்டிவிட்டு ஏந்திப் பிடித்தான். பிறகு பொக்கற்றில் போட்டுவிட்டு ஒரு 'மிதப்புப்' பார்வை பார்த்தான்.

இந்த இடத்தில் சீன் கொஞ்சம் மாறுகிறது. அந்த நாட்களில் இலங்கை வானொலியில் "அடுத்து... நிலைய வித்துவான்கள் வாசிக்கக் கேட்கலாம்" என்றபின் வித்துவான்கள் இஷ்டம்போல வெளுத்துவாங்குவார்கள். அந்த இசையைக் கற்பனை செய்து பார்க்கவும்.

"சிறியன் சொறியன்" என்றன் ரவி

"சொ ஓஓஓஓ றீஈஈஈஈஈஈஈ யன் சீஈஈஈஈறீஈஈஈஈ யன்" என்று டீ.ஆர்.மகாலிங்கம் ஸ்டைலில் இழுத்துப் பாடினான் ரங்கன்.

"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி.
"நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்.

எல்லாரும் "ஹா ஹா" "ஹீ ஹீ.., "ஈ ஈ" என்று வகை வகையாகச் சிரிக்க அழுதுகொண்டு வீட்டை ஓடினான் சிறியன்.

**************************

 குஞ்சிப் பெரியாச்சி வீட்டின் பின்பக்கம் பெரிய மாமரம். மாங்காய்கள் கைக்கெட்டும் உயரத்திலும் இருக்கும். வீட்டின் முன்பக்கம் ஆட்டுக் கொட்டில். உள்ளே ஒரு ஒரே ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது. குட்டிகள் அண்மையில்தான் பிறந்திருக்கவேண்டும். அவை கட்டப்பட்டிருக்கவில்லை. தாயாடு, கூரையிலிருநது தொங்கிய கயிற்றில் கட்டியிருந்த கிளுவங் குழைகளைக் 'கறுக் முறுக்' என்று கடித்துக்கொண்டிருந்தது. குட்டிகளுக்குப் பொழுதுபோகாமல் இருந்திருக்க வேண்டும். ரங்கன் என்கின்ற ரங்கநாதன் வளவுக்குள் நுழைய இவனது கால்களில் ஈரமான மூக்குகளால் உரசிப்பார்த்தன. பிறகு இவனைப் பின்தொடர்ந்தன. ஒரு குட்டியை மட்டும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். மற்றக் குட்டி இன்னும் பின் தொடர்ந்தது.

திண்ணையில் ஆச்சி, அவித்த பனங் கிழங்குகளை உரித்து, நார்க் கடகமொன்றிற்குள் போட்டுக்கொண்டிருந்தா. இவன் ஆட்டுக் குட்டியை இறக்கிவிட்டான். பிறகு அதன் செவிகளைச் செங்குத்தாக உயர்த்திப் பிடித்து. "நீ இப்ப முயல்" என்றான். இம்சை தாங்காத குட்டி ஆடு ஓடித்தப்பியது.

"என்னடா பொறுக்கி இந்தப் பக்கம்?" ஆச்சி வரவேற்றா.

 " ....... " இவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.

"இந்தா பனங் கிழங்கு சாப்பிடு" ஆச்சி பனங் கிழங்கொன்றை சரி இரண்டாகப் பிளந்து நடுவில் இருந்த 'ஈர்க்கை' எறிந்துவிட்டு, பிறகு நுனிப்பக்கதால் சின்னதாக முறித்துத் தும்புகளை இலாவகமாக நீக்கி விட்டுக் கொடுத்தா.

"ஆச்சி ... " இவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு எதையோ சொல்ல வெளிக்கிட்டான். நாக்குக் கொஞ்சம் உலர்ந்தது. நெஞ்சு கொஞ்சம் பட பட என்று அடித்தது.

 "உனக்கு முந்தநாள் மாங்காய் ஆஞ்சது ஆரெண்டு தெரியுமே?" ஒருமாதிரிச் சொல்லத் தொடங்கினான்.

 "அதைச் சொல்லத்தான் துரை வந்திருக்கிறார் போல, சொல்லு ராசா"

 உவன் கள்ளச் சிறியன்தான்!"

ஆச்சி கொஞ்சமும் அதிசயப்பட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சநேரம் வாய்க்குள் இருந்த வெத்திலை, பாக்குச் சமாச்சாரங்களைக் குதப்பத் தொடங்கினா. இவன் பொறுமை இழக்கத் தொடங்கிய நேரத்தில் பொழிச் என்று வெற்றிலைச் சாற்றை திண்ணைக்கு வெளியே எட்டித் துப்பினா.

"அவன் கள்ளன், எனக்கும் அவனிலைதான் சந்தேகம்.... நீ நல்ல பெடியன்; சரி சரி கறுத்தைக் கொழும்பான் காய்ச்சிருக்குது; அதிலை பதிவாக இருக்கிற ஒரு மாங்காயை ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்றாவாம்.

இவன் மினக்கெடாமல் வளவுக்குப் பின்புறம் மாமரத்தடிக்கு வந்தான். நாலைந்து மாங்காய்களைச் கணநேரத்திற் பிடுங்கி வேலிக்குக் கீழே ஒளித்துவைத்தான். பிறகு ஆச்சி சொன்ன 'ஒரு' மாங்காயை ஆயும்போது திரும்ப அந்த டவுட் வந்தது "ஆச்சிக்கு என்னிலைதான் சந்தேகமா?" என்று.
நன்றி:http://www.yarl.com/forum3/index.php?showtopic=113392

நன்றி:http://www.ssakthive...og-post_25.html

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 34. உறவு ஒப்பந்தம்

பாகம் 2 , 34. உறவு ஒப்பந்தம்


ஈழத்திலிருந்து பொதிகை மலைச்சாரலுக்கு வந்து சேர்ந்த
சுந்தரபாண்டியரின் விருந்தினன் வேறு யாருமில்லை. ரோகிணியின் அன்புத்
தம்பி காசிபன். அமைச்சர் கீர்த்தியால் ரோகணத்தின் அரசுரிமை வாரிசாக
வளர்க்கப்பட்டு வந்த இளம் வீரன். இந்த ஓராண்டுக் காலத்துக்குள் அவன்
எவ்வளவு செழுமையாக வளர்ந்துவிட்டான்! ஆம், அவன் எப்படி இங்கு வந்து
சேர்ந்தான்? அதைத் தெரிந்துகொள்ள தஞ்சை மாநகரத்திலிருந்து
ஆனைமங்கலத்துக்குப் பறந்து சென்ற புறாவின் பின் நாமும் பறந்து செல்ல
வேண்டும். அங்கிருந்த ரோகணத்து வீரர்கள் சிலர் தோணியில் ஈழத்துக்கு
இரவோடு இரவாகப் புறப்படுகிறார்கள். பிறகு மறு கரையிலிருந்து காசிபனை
அழைத்துக்கொண்டு தென்பாண்டிக் கடற்கரையோரமாக ஒதுங்குகிறார்கள். பொதிகை மலைச் சாரலுக்கு வந்து சேருகிறார்கள்.

வந்திருப்பவன் யார் என்று தெரிந்தவுடன் வீரமல்லன் அவனைக்
கட்டித் தழுவிக் கொள்கிறான். நெடு நாட்கள் பழகியவன் போல் அவனிடம்
உறவுரிமை பேசுகிறான். அவன் மகிந்தரின் குடும்ப நண்பனாம்! ரோகிணியின்
நம்பிக்கைக்குரிய வீரனாம்! வீரமல்லனிடம் அவள் தன் தம்பியைப் பற்றி நாள்
தவறாது பேசிக் கொண்டிருப்பாளாம்! காசிபனைக் காணவேண்டுமென்று
அவன் செய்து வந்த தவம் பலித்து விட்டதாம்!

காசிபன் என்ன இருந்தாலும் இளம் பிள்ளைதானே? வீரமல்லன்
அவனுக்காக விரித்த வலை வீண் போகவில்லை! அவர்கள் இருவரும்
நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். காசிபனின் முகத்தில் ரோகிணியின்
சாயலைக் கண்டுவிட்ட வீரமல்லன் அவனை நன்றாகச் சுற்றி வளைத்துக்
கொண்டான்.

அமைச்சர் கீர்த்தியும் தஞ்சையிலிருந்த புறாவை அனுப்பியதற்கு
மறுநாளே அங்கிருந்து கிளம்பிவிட்டார். வேடுவன் வேடம் ஒன்றுதான்
அவருக்குப் போடத் தெரியுமென்பதில்லை. எத்தனையோ வேடங்கள்,
எத்தனையோ ஆசைகள், எத்தனையோ திட்டங்கள் அவருக்கு. இளங்கோ
ரோகணத்துக்குக் கிளம்பிவிட்டான் என்று தெரிந்ததும், அவனுடைய
படைபலத்தை அளந்துகொண்டு தாமும் அங்கு போய்ச் சேர்ந்தார். ஆயிரம்
வீரர்களோடு அவனையும் சேர்த்து ஒழிப்பதற்கு ஐம்பது நாட்கள்
போதுமென்ற எண்ணம் அவருக்கு. ஆனால் அங்கு போய்ச் சேர்ந்த பிறகு
தான் இளங்கோ எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொண்டார் அவர். ஒரே
இளங்கோ ஒன்பது இளங்கோக்களை நாட்டில் நடமாட விட்டான்.

பாவம்! அவனுக்குப் பின்னால் இருந்த ஒரு வெகுளிப் பெண்ணின்
ஆசைகளை அவர் அறிந்திருக்கவில்லை. அவள் தங்களைச் சேர்ந்தவள்
என்பது அவர் நம்பிக்கை.

ஒருவகையில் பார்க்கப் போனால் ரோகிணியும் அவரைச்
சார்ந்தவள்தான்- ரோகணத்து மண்ணை இளங்கோ மிதிப்பதற்கு முன்னால் காசிபன் அந்த மண்ணிலிருந் மறைந்து விடுவான் என்பதை அவள் இளங்கோவிடம் சொல்லவில்லை. அவனுடைய சொந்தப் பாதுகாப்புக்கு மட்டிலுமே வழி வகைகளைக் கூறி அனுப்பினாள்.

உணர்ச்சி வயப்பட்ட பெண்ணின் கூற்றை அறிவால் உலகாள விரும்பிய
ஆண்மகன் வேறுவிதமாக எடுத்துக் கொண்டான். ‘கதிர் காமத்துப் பக்கம்
போகவே போகாதீர்கள்’ என்று மட்டும் அவள் எச்சரிக்கை செய்து
அனுப்பினாள். அந்த எச்சரிக்கை ஒன்று போதாதா அவனுக்கு?

பாண்டி நாட்டுப் பகைவர்களைப் பூண்டோடு ரோகணத்தில் களைந்த
பின்னரும் இளங்கோவுக்கு அமைதி ஏற்படவில்லை. அங்கே இல்லாத
காசிபனை அவன் எங்கெல்லாமோ தேடி அலைந்தான். அமைச்சரைக்
கைப்பற்றுவதற்கும் ஆயிரம் முயற்சிகள் செய்து பார்த்தான். இந்த இரண்டுமே
அவனுக்குப் பலிக்கவில்லை.

அவ்வாறே அமைச்சர் கீர்த்தி, இளங்கோவை ஒழிப்பதற்கு வகுத்த
திட்டங்களும் அவருக்கு ஏமாற்றம் தந்தன. இந்த இருவருமே ரோகணத்துக்
காடுகளில் சில தினங்கள் ஒருவரை ஒருவர் பிடிப்பதற்காகக் கண்ணாமூச்சி
விளையாட்டு விளையாடிப் பார்த்தார்கள். இருவருக்கும் இந்த விஷயத்தில்
வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. விளையாட்டு விளையாட்டாகவே
முடிந்தது.

கடைசியில் இளங்கோ தன் வீரர்களுடன் கப்பலேறினான்.

அதற்குள் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரையில் வைகாசி
பௌர்ணமி விழாவும் சிறப்பாக நடந்தேறியது. சோழநாட்டுப் பௌத்தர்கள்
அனைவரும் அந்த நகரத்தில் அன்று குழுமியிருந்தனர். கடற்கரையில் புனித
நீராடி, வெள்ளை உடை உடுத்தி, ஆண்களும் பெண்களும் சாரிசாரியாக
மலர்களைச் சுமந்து வந்து புத்தர்பிரானின் திருவடிகளில் தூவினர்.

அன்று அவர்களுக்குக் கடுமையான விரத நாள். பொய், களவு, கொலை,
சூது, சோரம் இவற்றை அறவே அவர்கள் அன்று விலக்கிவிட்டார்கள். புனித
நினைவுகளைத் தூண்டாத சாதாரணக் கேளிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. சூடாமணி விஹாரையில் பிரார்த்தனைகள் ஒருபுறம்.
நடந்தன! புத்தரது திருஅவதாரத்தைப் பற்றிய கதைகளும் பாடல்களும்
மறுபுறம் நடந்தன.

மகிந்தரின் குடும்பத்தாரும் அந்த விழாவில் கலந்து கொண்டது.
விஹாரையிலிருந்த பிக்குப் பெரியோர்களுக்கும் மற்றவர்களுக்கும் பேரானந்தம்
தந்தது. மலர்க் கூட்டத்தைச் சுமந்துகொண்டு வந்து ரோகிணி தானும் ஒரு
மென்மலராகவே காட்சியளித்தாள்.

அவளது மான்விழிகளில் ஒளிவிட்ட மருட்சியையும் நடையில் தெரிந்த
மயிலின் ஒயில் சாயலையும், அவளது மேனியின் பளிங்கு நிறத்
தோற்றத்தையும் கண்டு வியக்காதவர்கள் அங்கு யாருமில்லை.

பெருங் கருணைப் பேருருவான புத்தர் பிரானின் திருவடிகளிலிருந்து
நெடுநேரம் அவள் தன் சிரத்தை எடுக்கவில்லை. கீழே குவிந்து கிடந்த
தாமரை மலர்களுக்கிடையில் அவள் முகம் புதைந்திருந்தது. தன்
உடன்பிறந்தவனுக்காகவும் தன் காதலனுக்காகவும் அவள் புத்தர்பிரானிடம்
கண்ணீர் உதிர்த்தாள். இருவரிடமும் கருணை காட்டும்படி வேண்டிக்
கொண்டாள்.

பிறகு, குனிந்த தலை நிமிராமல் தனது நினைவுகளை எங்கேயோ
மிதக்கவிட்டு குடும்பத்தாருடன் ரதமேறி ஆனை மங்கலம் சோழ மாளிகைக்கு
வந்துசேர்ந்தாள். மாளிகைக்குள் நுழைந்தவுடன், மகிந்தருக்காக யாரோ ஒருவர்
கூடத்தில் காத்திருப்பது சாளரத்தின் வழியே ரோகிணிக்குத் தெரிந்தது. அவள்
திடுக்கிட்டாள். ஒருகணம் மறைந்து நின்று பார்த்துவிட்டுத் தடுமாறிய
கால்களுடன் தன் அறைக்குப் போய்ச் சேர்ந்தாள். அவள் பார்த்த உருவம்
அவள் கண்களை விட்டு அகல மறுத்தது. சாந்தமும் கருணையும் குடிகொண்டு
விளங்கிய புத்தரைப் பார்த்த கண்களுக்கு இப்படி ஒரு காட்சியா!

அங்கே அந்தக் காளமுகன் கம்பீரச் செருக்கோடு அமர்ந்து சுற்று
முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். திருட வந்த கள்வன் தான் தேடிவந்த
பொருளைக் காணக் கண்களை அலைய விடுவதுபோல் அவன் அலையவிட்டுக்
கொண்டிருந்தான்.

“நண்பா! வரவேண்டும் வரவேண்டும். உன்னைத்தான் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்’’ என்று அவனைத் தமது இரு கரங்களாலும்
தழுவிக்கொண்டார் மகிந்தர். தழுவியவாறே அவனைத் தமது மாளிகையறைக்கு
அழைத்துச் சென்றார்.

“நான் இப்போது காளமுக சமய ஆராய்ச்சியில் முனைந்திருக்கிறேன்.
ஆனைமங்கலத்துக்கு வந்ததிலிருந்து எனக்கு அதுதான் வேலை. அக்கம்
பக்கத்திலுள்ள துறவிகளை அழைத்து விளக்கம் சொல்லச் செய்கிறேன்.’’
இப்படிக் கூறிவிட்டு மகிந்தர் அவனைப் பார்த்து நகைத்தார்.

“பெரிய வேளாரே தங்களிடம் ஒருநாள் விளக்கம் கேட்க வந்தாலும்
வந்து விடுவார், அவருக்கு இதில் அவ்வளவு பக்தி!’’ என்றான் வீரமல்லன்.

“ஈழத்திலிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா? நானும் இங்கு வந்து
இரண்டு மாதங்களாகின்றன; ஒன்றுமே தெரியவில்லை. அங்கிருந்தவர்களையும்
அமைச்சர் தம்மோடு அழைத்துச் சென்று விட்டாரென்று தெரிகிறது.’’

“தங்களுடைய குமாரர் இளவரசர் காசிபன் என்னுடைய பாதுகாப்பில்
பத்திரமாக இருக்கிறார்’’ என்றான் வீரமல்லன்.

“நாங்கள் இருவரும் இப்போது இணைபிரியாத நண்பர்கள்.’’

“என்ன!’’

மகிந்தரிடம் தனக்குத் தெரிந்த விவரங்களையும் தெரியாத
செய்திகளையும் ஆர்வத்துடன் கூறினான் வீரமல்லன். பொதிகை மலைச்
சாரலில் தான் சுந்தரபாண்டியருக்கு வலதுகரமாக விளங்குவது பற்றியும் அவன்
பெருமைப்பட்டுக் கொண்டான். விரைவில் தானே காசிபனை அவரிடம் நேரில்
அழைத்து வந்து அவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும்
வாக்களித்தான்.

“வீரமல்லவா! இதுவரையில் அமைச்சர் கீர்த்தி ஒருவரைத்தான் என்
உயிருக்குயிரானவர் என்று நினைத்திருந்தேன். இன்றிலிருந்து உன்னையும்
சேர்த்து இருவர் என்று நம்புகிறேன். எனக்காக நீ செய்திருக்கும் உதவிகளை
நினைக்கும்போது உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே தோன்றவில்லை.’’

“கைம்மாறு கருதி நான் எதையுமே செய்யவில்லை. ஆனால் தங்களைப்
போல்தான் சுந்தரபாண்டியரும் என்னிடம் நன்றிக்கடன் பட்டிருப்பதாய்ச்
சொல்லுகிறார். அதற்காக அவர் எனக்கு என்ன வாக்களித்திருக்கிறார்
தெரியுமா?’’

என்னவென்று கேட்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்த்தார் மகிந்தர்.

“அவர் தமது முயற்சிகளில் வெற்றி பெற்றவுடன் ரோகணத்தைத்
தங்களுக்கு மீட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்தாற்போல் கொடும்பாளூர்க்
கோனாட்டுக்கு என்னை அரசனாக்கப் போகிறாராம். அவரது
திருக்கரங்களாலேயே எனக்கு முடிசூட்டிவிடப் போகிறாராம்.’’

“அதற்கு முற்றிலும் தகுதியுடைவன்தான் நீ. எப்படியும் அந்த நல்ல
காலம் வந்தே தீரும்.’’

“அரசே!’’ என்று மெல்ல அழைத்து, பிறகு ஒன்றுமே கூறாமல், நெடிய
பெருமூச்சு விட்டு நிறுத்தினான் வீரமல்லன்.

“என்ன?’’

“எனக்கு ஒரு நாட்டுக்கு அரசனாக விளங்க வேண்டுமென்ற ஆசையே
கிடையாது. ஆனால் அப்படி அரசுரிமை கிடைத்தாலாவது தங்களுடைய
பேரன்பும் நல்லுறவும் கிடைக்குமென்றால், அதற்காகவேனும் நான் நாடாள
விரும்புகிறேன். கொடும்பாளூர் எனக்குக் கிடைத்துவிட்டால் பிறகாவது தங்கள்
மதிப்பை நான் பெற முடியுமல்லவா? எப்படியும் நான் தங்களிடம் நெருங்கிய
தொடர்பு கொள்ள வேண்டும்; தங்கள் உறவினனாக வேண்டும்.’’

“நீ என்ன சொல்லுகிறாய் வீரமல்லா?’’

சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டே,
“தாங்கள் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று
தொடங்கினான் வீரமல்லன். “இளவரசி ரோகிணியாரை என்றைக்கு நான்
முதல் முதலில் கண்டேனோ அன்றிலிருந்து என் மனம் அவர்களுக்கு
அடிமையாகிவிட்டது. அதை இனியும் நான் தங்களிடம் மறைக்க
விரும்பவில்லை. அவர்களுக்காகவே நான் தங்களுக்கு உழைக்கிறேன். மீண்டும் தங்களை ரோகணத்து அரியாசனத்தில் அமர்த்திப் பார்த்தால்தான் என் கண்களுக்கு உறக்கம் வரும். அதற்காகவே நான் என் உயிருக்கு வந்த அபாயங்களைப் பொருட்படுத்தாமல் சுந்தரபாண்டியரிடம் சேர்ந்திருக்கிறேன். அதற்காக அமைச்சர் கீர்த்தியோடும் உறவு பூண்டிருக்கிறேன். அதற்காகவே இளவரசர் காசிபனைக் கண்ணிமை போல் காத்து வருகிறேன்! என்னுடைய ஆசைகளுக்குத் தங்கள் ஆசி
கிடைக்குமா அரசே?’’

வீரமல்லனின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார் மகிந்தர்.
அவனுக்கும் ஒரு நாடு கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் அவன் மதிப்பை
அவரிடம் உயர்த்தி விட்டது. அவனைத் தமக்குச் சமமானவன் என்ற
முறையில் மதிக்கச் செய்துவிட்டது.

“வீரமல்லா! என்னுடைய குமாரத்தியிடம் உனக்குள்ள பற்றுதல்
இதுபோன்ற நல்லாசைகளை உன்னிடம் வளர்த்திருப்பது கண்டு நான்
பெருமைப்படுகிறேன். இதுதான் ஆண்களுக்கு அழகு. பகைவர்களை வெல்ல
வேண்டும்; நாடுகளைக் காப்பாற்றி அரசாள வேண்டும்; அந்தப்புரங்களில்
அகமகிழ்ந்திருக்க வேண்டும்! உன் ஆசைகளில் எதுவும் தவறில்லை!’’

“அதில் தங்கள் பங்கை எனக்காக நிறைவேற்றித் தருவீர்களா, அரசே!’’

“கட்டாயம் தருகிறேன்!’’ என்றார்.

வீரமல்லனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கில் அந்தச்
சோழமாளிகையே அவன் கண்முன் பம்பரமாகச் சுழல்வது போலிருந்தது.

“நன்றி அரசே, நன்றி!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினான் அவன்.

“ஆனால் இப்போதே நீ அதற்காக ஆனந்தப்பட்டு விடவேண்டாம்.
பெண்ணாசை கைகூடாதவரையில்தான் நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம்
அது ஒரு மலைபோல் தோன்றும். எளிதில் அது கைகூடி விட்டால்
நம்முடைய மற்ற ஆசைகளை நாம் மறந்தே போய்விடுவோம். அதனால் ஒன்றை நீ மனதில் உறுதியாக வைத்துக்கொள். எனக்கும் உனக்கும் நாடுகள் கிடைத்த பிறகுதான் என் குமாரி ரோகிணி உன்னுடைய பட்டமகிஷியாவாள்.’’

“இப்போதைக்கு இவ்வளவு போதும், அரசே!’’ என்றான் வீரமல்லன்.

“இன்னொரு முக்கியமான விஷயம். ரோகிணி ஒரு வகையில்
ராஜதந்திரங்களை ஓரளவுக்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் பெண்.
அவளுடைய அநுதாபத்தையும் அன்பையும் பெற்றுக் கொள்வது முதலில்
சிரமம்தான். ஆனால் உன்னுடைய இந்த உடையோடு அவளிடம் சென்று பேசி
வெறுப்பைத் தேடிக்கொள்ளாதே. காசிபன் உன்னுடைய பாதுகாப்பிலிருப்பதால்
ஒருவேளை உன்னிடம் அவளுக்கு இரக்கம் பிறந்தாலும் பிறக்கும்.
எங்களையெல்லாம் விட அவளுக்குக் காசிபனிடம் தான் உயிர்.’’

“அப்படியானால் அவருக்காகவே இளவரசரை இங்கு விரைவில்
அழைத்து வருகிறேன். இதை நானே அவர்களிடம் போய்க் கேட்கட்டுமா?’’

“உடையை மாற்றிக்கொண்டு போய் வா!’’ என்றார் மகிந்தர். “நான்
அழைப்பதாக நீயே இங்கு அவளை அழைத்து வா. அவசரப்பட்டுக்கொண்டு
என்னிடம் கூறிய எல்லா விஷயங்களையும் இப்போதே அவளிடம்
வெளியிட்டு விடாதே!’’ என்று எச்சரித்து அவனை அனுப்பி வைத்தார்.

வீரமல்லன் வீரமல்லனாகவே ரோகிணியைக் காணச் சென்றான்.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,33. சூரபத்மன் விழா

பாகம் 2 ,33. சூரபத்மன் விழா 


இளங்கோ சுட்டிக்காட்டிய குன்றை மாங்குடி மாறன் திறந்தவாய்
திறந்தபடியே பார்த்துக் கொண்டு நின்றான். அந்தக் குன்றும் தனக்கெதிரே
அடர்ந்திருந்த மரக்கூட்டத்தைத் திறந்த வாய் திறந்தபடியே பார்த்துக்
கொண்டிருந்தது. தன்னிடம் வருவோரை விழுங்குவதற்குக் காத்திருக்கும்
பசியெடுத்த பூதம்போல் காட்சியளித்தது அது.

தூரத்தில் நின்று அதைப் பார்வையிட்ட பின்னர், இளங்கோவும்
மாறனும் செடிப்புதர்களுக்குள் மறைந்தார்கள். அருகில் சலசலத்தோடிய
அருவியில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு உணவருந்த
அமர்ந்தார்கள். மாங்குடி மாறன் கொண்டுவந்திருந்த கட்டுச்சோறு அந்த
நடுப்பகல் வேளைக்கு அமுதம்போல் இருந்தது.

பிறகு உண்டு களைப்புத் தீருவதற்காகவும் மாலைப் பொழுதை
எதிர்பார்த்துக் கொண்டும் அவர்கள் செடி மறைவில் படுத்துப் பேசத்
தொடங்கினார்கள். காற்றில் இலைகளின் சலசலப்புச் சத்தம் எப்போதும்
கேட்டுக் கொண்டிருந்ததால் அவர்களுடைய குரல்கள் அதில் அழுந்தி
விட்டன.

“மாங்குடி மாறா! நாம் பார்த்த அந்தக் குன்று இப்போது தன் அடி
வயிற்றுக்குள்ளே ஆயிரம் துரோகிகளை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
அக்கம் பக்கத்தில் காவலுக்குப் போனவர்களும் உளவறியப் போனவர்களும்
அந்திப்பொழுதுக்குள் அங்கே திரும்பி விடுவார்கள்... இன்றைக்கு இரவில்
நாம் கோயிலில் விழா நடத்திவிட்டு நாளைக்கு அதிகாலையில் இங்கே
சம்ஹாரத்தைத் தொடங்க வேண்டும்.’’

“ஆமாம், நமக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பவர்கள் இதற்குள்
கதிர்காமத்தை நெருங்கியிருப்பார்கள் அல்லவா?’’

“நெருங்கியிருப்பார்கள். நம்மோடு வந்து திரும்பியவர்களும்
கூட்டத்தோடு கூட்டமாய்ச் சேர்ந்திருப்பார்கள். ஒருவேளை நம்முடைய
திட்டங்கள் கீர்த்திக்குத் தெரியவந்தாலும், அவர் விழித்துக் கொண்டு
தம்முடைய ஆட்களைத் தப்புவிக்க முயலுவதற்குள் நாம் அவர்கள் மீது
பாயவேண்டும்!’’

“எதிர்க்கத் துணிந்தாலும் துணிந்துவிடுவார்’’ என்றான் மாங்குடிமாறன்.

“நன்றாக எதிர்க்கட்டும். எனக்கு இப்போது கீர்த்தியின் மேல்கூட
வெறுப்பில்லை. சொந்த நாட்டினருக்கும் இனத்தவருக்கும் துரோகம்
செய்பவர்களை நினைக்கும் போதுதான் எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது.
தமிழர்களுக்கு எதிராகத் திரண்டிருக்கும் தமிழர்களைப் பூண்டோடு அழித்துத்
தீர வேண்டியதுதான்; உள் பகையே நம் பெரும்பகை.’’

பின்னர் சற்றுநேரம் சென்று, கதிரவன் மேற்கே சரியத் தொடங்கியவுடன்
“மாங்குடி மாறா. நீ கதிர்காமத்துக்குப் போய் விழாவில் கலந்து கொண்டு,
இரவோடு இரவாக அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வா. நானும்
நன்றாகப் பொழுது சாய்ந்தவுடன் அந்த மலைக்குகைக்குப் போய் விட்டுத்
திரும்புகிறேன்’’ என்றான் இளங்கோ.

“பகைவர்களின் இருப்பிடத்துக்கா? தனியாகவா?’’

“ஆமாம், அவர்களுக்கு மத்தியில் ரோகணத்து இளவரசன் காசிபன்
இருக்கிறானா என்று பார்க்கவேண்டும். நம்முடைய கைகலப்பின்போது
அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்க அவனை அங்கிருந்து
அப்புறப்படுத்தியாக வேண்டும்.’’

“இளவரசே! நீங்கள் வேண்டுமென்றே அங்கு போய் அவர்களிடம்
அகப்பட்டுக் கொள்ளப் பார்ககிறீர்கள். அவனைக் காப்பாற்றுகிற முயற்சியில்
நீங்கள் அபாயத்தை வரவழைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்-வாருங்கள்;
இருவரும் ஒன்றாய்க் கதிர்காமத்துக்குப் போவோம். அல்லது இருவரும்
இங்கேயே தங்கிவிடுவோம். உங்களைத் தனியே விட்டுவிட்டு நான் எங்கும்
போகமாட்டேன்.’’

நெடுநேரம் அவனிடம் வாதாடினான் இளங்கோ. மாங்குடி மாறனோ
அவனை விட்டு அசைவதாக இல்லை.

“இதோ பார்! இரவு நேரத்தில் குகைக்குத் திரும்புகிற பாண்டியக்
காவலர்களுடன் நானும் ஒன்றாகி விடுவேன். அவர்களைப் போலவே
உடைமாற்றிக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை.
குகைக்குள்ளேயும் அதிகமான தீவர்த்திகளை அவர்கள் ஏற்றி
வைத்திருக்கமாட்டார்கள். எனக்கு ஒன்றும் நேர்ந்து விடாது, நீ அஞ்சாமல்
போய் வா. நான் இதே இடத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’’
என்றான் இளங்கோ.

அரை மனத்தோடு மாங்குடி மாறன் புறப்பட்டுச் சென்றான்.
புறப்பட்டவன் உடனே திரும்பி வந்து, “நம்முடைய சூரசம்ஹார இரகசியத்தை
அவர்கள் தெரிந்து கொண்டு விட்டால்?...’’ என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“எப்படியும் அது கடைசி நேரத்தில் தெரியத்தானே போகிறது? தெரிந்து
கொண்டவர்களை இந்தப் பக்கம் திரும்பி வர முடியாதபடி செய்துவிடுங்கள்.
அவ்வளவு தான்!’’

மாங்குடிமாறன் கதிர்காமத்துக்குப் போய்க் கொண்டிருந்த நேரத்தில்,
முதல் நாள் அவர்கள் வந்து சேர்ந்த காட்டுவழியில் ஒரு பேரதிசயம் நிகழ்ந்து
கொண்டிருந்தது.

இருநூறு முந்நூறு பக்தர்கள் கதிர்காமத்து முருகனின் பெயரைச்
சொல்லிக்கொண்டே அந்த வழியில் திரண்டு வந்தார்கள். பலரது தோள்களில்
பெரிய பெரிய காவடிகள் தெரிந்தன. தூரத்துப் பார்வைக்குக் காவடிகளாகத்
தோன்றினாலும், அருகே சென்று நோக்குகிறவர்களுக்கு அவை விற்களாலான
காவடிகள் என்று தெரியும். மூன்று நான்கு விற்களையும் கூரிய அம்புகளையும்
கொண்டு அவர்கள் காவடிகள் கட்டியிருந்தார்கள்.

கூட்டத்தின் மத்தியில் பலரது தோளின்மீது சூரபத்மன் தன்
பிரும்மாண்டமான உருவத்துடன் பவனி வந்தான். பெரிய பெரிய
கொள்ளிக்கண்களும், தொங்கவிட்ட நாக்கும் நீண்டு வளைந்த கடைவாய்ப்
பற்களுமாக அவனைப் பார்ப்பதற்கே கோரமாக இருந்தது. அகோர வீர
சூரபத்மன் அவன். உலகத்திலிருந்த தீய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச்
சேர்ந்து அவன் உருவத்தில் திரண்டிருந்தது. சிற்றானைக் குட்டி ஒன்றைப்
பீடத்தில் உட்கார வைத்துச் சுமந்து வருவது போல் அவர்கள் சுமந்து
கொண்டு வந்தார்கள். சங்கநாதம் ‘பூம் பூம்!’ என்று முழங்கியது. சேகண்டிகள் காதுகளைத்
துளைத்தன. புலிக்கொடியை ஏந்திக் கொண்டு வந்திருக்க வேண்டியவர்கள்,
சேவற்கொடிகளை ஏந்தி நடந்தார்கள். மெய்யான பக்தர்களுடைய ஆவேசமே
பலருக்கு அங்கே வந்துவிட்டது. துரோகம் என்ற தீமையை அழிக்கப் பிறந்த
ஆவேசம் அது.

ஆடினார்கள்; பாடினார்கள்; அழுதார்கள்; சிரித்தார்கள்; கொடுமையைத்
தொலைத்து விட வேண்டுமென்று கொக்கரித்தார்கள். அவர்களுடன் மாங்குடி
மாறனும் சேர்ந்துகொண்டு கூத்தாடினான்.

கோயிலுக்கு வந்தவுடன் பூசனைகள் முடிந்தன. சூரபத்மனைச் சுற்றி
வந்து ஆவேசத்தோடு அலறிக்கொண்டு அதன் தலையை வெட்டி
வீழ்த்தினார்கள். கரங்களைத் துண்டித்தார்கள், வயிற்றைக் கிழித்தார்கள்.
என்ன அதிசயம்!

அவன் வயிற்றிலிருந்து வாட்களும் வேல்களும் பொல பொலவென்று
உதிர்ந்தன. உருண்ட தலைக்குள்ளிருந்து கேடயங்கள் எட்டிப் பார்த்தன.
கைகளிலிருந்து கவசங்கள் நழுவி விழுந்தன. பக்தர்கள் அனைவரும்
பயங்கரப் போர் வீரர்களாக மாறினார்கள்.

வழியில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியர்கள் வேடிக்கை பார்க்க
வந்தவர்களைப் பின்பற்றி வந்ததால் அவர்களை மாணிக்க கங்கைக் கரையில்
‘ஏமகூடம்’ என்ற இடத்தில் எமகூடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் வீரர்கள் இரவோடு இரவாகப் புறப்பட்டு வெள்ளி முளைக்கும்
நேரத்தில் இளங்கோவின் இருப்பிடத்தை அடைந்தனர்.

இளங்கோ அங்கே சோர்ந்து போய்த் தனியாக நின்று கொண்டிருந்தான்.
தன்னுடைய வீரர்கள் பத்திரமாக அங்கு வந்து சேர்ந்ததில் அவன்
மகிழ்ச்சியுற்றானென்றாலும் அது அரைகுறை மகிழ்ச்சியாகவே தோன்றியது.

காரணத்தைக் கேட்டான் மாங்குடி மாறன். “போய்ப் பார்த்துவிட்டு
வந்தீர்களா? இல்லை, போக முடியவில்லை என்பதால்
சோர்வுற்றிருக்கிறீர்களா?’’ “நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அங்கே காசிபனும் இல்லை; அமைச்சர் கீர்த்தியும் இல்லை.’’

“அதனால் என்ன? கீர்த்தி இல்லாவிட்டால் அதுவும் நமக்கு நல்ல
வாய்ப்புத்தானே!’’

“வெளியில் கீர்த்தி இருந்தாரென்றால் இதற்குள் நாம் அவர்
கண்களிலிருந்து தப்பியிருக்க முடியாது.’’

“அப்படியானால் தாமதியாமல் புறப்படுங்கள், இளவரசே!’’ என்று
இளங்கோவைத் துரிதப்படுத்தினான் மாங்குடிமாறன். “வேறு என்ன யோசனை
செய்து கொண்டிருக்கிறீர்கள்? யோசனை செய்கிற நேரமா இது?’’

இளங்கோவுக்கு அங்கே காசிபனைக் கண்டுபிடிக்க முடியாமற் போனது
பேரதிர்ச்சியைத் தந்தது. கூட்டத்தில் அவன் இருந்து, தான் சென்றபோது,
அவனைப் பிடித்துக் கொண்டு வர முடியாவிட்டால்கூட, போர் நடக்கும்
குழப்பத்தில் அவனை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று நம்பினான்.

கீர்த்தி மிகமிகத் தந்திரசாலி என்பது அவனுக்கு அப்போதுதான்
தெரிந்தது. ஆயிரம் பாண்டியர்களின் உயிரை விட அந்த ஒரு சிறுவனின்
உயிர் மிகப் பெரியதென்று அவர் மதித்திருக்க வேண்டும். அவனை அவர்
எங்கே வைத்திருப்பார்? அவர் இப்போது எங்கே இருப்பார்?

எதையும் நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு அப்போது நேரமில்லை.
கிழக்கே வெளுத்துக் கொண்டு வந்தது. இன்னும் சில நாழிகைக்குள் பொழுது
பலபலவென்று விடிந்துவிடும்.

வீரர்களை மூன்று பிரிவினராகப் பிரித்து, குன்றின் பின் புறத்திலிருந்தும்
இரு பக்கங்களிலிருந்தும் மளமளவென்று முன்னேறச் செய்தான் இளங்கோ.

எதிர்பாராத தாக்குதலால் மலைக் குகையின் அடிவயிறு எரிமலையின்
அடிவயிறாக மாறியது. வாட்களுடன் வாட்கள் மோதித் தீப்பொறி பறந்தன.
வேல்கள் பாய்ந்தன. வில்கள் அம்புமழை பொழிந்தன. கூக்குரல்களுக்கும்
மரண ஓலங்களுக்கும் குறைவே இல்லை. இளங்கோவும் மாங்குடி மாறனும் குகையின் வாய்ப்புறத்து விளிம்பில் நின்றுகொண்டு போரிட்டனர். உள்ளேயிருந்து வெளியே ஓடுபவர்களைத் தப்பவிடாதபடி சில வீரர்கள் நின்று தடுத்தார்கள். ஒரு நாழிகைப் பொழுதுக்குள் எரிமலை வெடித்துக் கிளம்பி ஓய்ந்து விட்டதுபோல்
தோன்றியது. மனிதர்களின் கூக்குரல்களைத் தவிர, ஆயுதங்களின்
மோதல்களைக் காணோம்.

விளிம்பிலிருந்து உள்ளே நுழைவதற்குத் திரும்பிய இளங்கோவின்
காதருகே எங்கிருந்தோ ஓர் அம்பு ‘விர்’ரென்று பாய்ந்து வந்தது.
நல்லவேளையாக மயிரிழையில் தப்பினான் இளங்கோ. சட்டென்று
இளங்கோவும் மாங்குடிமாறனும் திரும்பிப் பர்த்தார்கள். குன்றின்
அடிவாரத்தில் குதிரையின் மீது ஓர் உருவம் தெரிந்தது. அடுத்த அம்பை
அது குறிபார்த்து நாணேற்றிக் கொண்டிருந்தது.

ஓர் ஒருவம்தானா? அல்லது அதற்குப்பின் மற்றொரு உருவம்
மறைந்திருக்கிறதா? இளங்கோ ஒரு கணம் தடுமாறி விட்டுப் பின்பு வில்லை
எடுக்கப்போனான். அதற்குள் இளங்கோவைத் தன் பக்கமாகப் பின்புறம்
தள்ளிவிட்டான் மாங்குடி மாறன். ஆனால் அவனுடைய முயற்சி இளங்கோவை
ஒதுக்கிவிட்டதே தவிர, மல்லனின் தோளைக் காப்பாற்றவில்லை.
அலறிக்கொண்டே பாய்ந்த அம்பைப் தன் வலது கரத்தினால் பிடுங்கினான்
மாங்குடிமாறன்.

வெறிகொண்டவன் போல் இளங்கோ கீழே இறங்கி ஓடினான். அதற்குள்
குதிரை புழுதியைக் கிளப்பிக் கொண்டு பின்னால் திரும்பி ஓட்டம் எடுத்தது.
அந்தப் பாதையில் யாரும் குதிரையில் ஏறி வரக்கூடுமென்றே அதுவரையில்
இளங்கோ நம்பவில்லை. அப்படியும் ஒரு பாதை உண்டா கீர்த்திக்கு!

குதிரையைப் பின் தொடர்ந்து இளங்கோ ஓடினால் இளங்கோவின் கதி
என்ன ஆகும் என்று மாங்குடிமாறனுக்குத் தெரியாமல் இல்லை. பின்
வாங்குவது போல் பின் வாங்கி இளங்கோவைத் தனித்து இழுக்கத்தானே இந்த
முயற்சி?

அம்பு பாய்ந்த புண்ணோடு ஓடிச்சென்று, பின்புறத்திலிருந்தவாறே
இளங்கோவின் தலையில் ஓங்கி அடித்தான் மல்லன். மல்லர்களின் தலைவனுக்கு எங்கே, எப்படி அடித்தால் என்ன நடக்குமென்று
தெரியாதா? தலை சுற்றிக் கீழே விழுந்தான் இளங்கோ.

மாங்குடி மாறனாலும் அதற்கு மேல் புண்பட்ட தோளோடு அங்கு
நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இளங்கோவின் அருகில் மயங்கி
விழுந்துகொண்டே, “ஓடுங்கள்! முடியுமானால் அந்தக் குதிரையைப் பின்பற்றி,
அவனை வீழ்த்தப் பாருங்கள்!’’ என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

வீரர்கள் மலை அடிவாரத்துக்குப் போய்ச் சேருவதற்குள் அவர்கள்
தேடிச்சென்ற குதிரை எங்கோ மாயமாய் மறைந்து போய் விட்டது. திரும்பிப்
போய் மயங்கிக் கிடந்த இருவரையும் மெல்லத் தூக்கிக்கொண்டு
இறங்கினார்கள் அவர்கள்.

மயக்கத்தோடு மயக்கமாக, “மாங்குடி மாறா! அந்தக் குதிரையின்மேல்
எத்தனை பேர் இருந்தார்கள் என்று நீ பார்த்தாயா? இருளில் எனக்குச்
சரியாகத் தெரியவில்லை. கீர்த்தி மட்டும் இருந்தாரா? அல்லது அவருக்குப்
பின்னால் காசிபனும் இருந்தானா?’’ என்று கேட்டான் இளங்கோ.

மாங்குடி மாறன் அதற்குப் பதிலளிக்கும் நிலையில் அப்போதில்லை.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,32. கதிர்காமச் சூழலில்

பாகம் 2 ,32. கதிர்காமச் சூழலில் 

கந்தவேள் உறையும் கதிர்காமக் கோயிலுக்குச் செல்லும் காட்டுவழி.
கோயில் அரைக்காத தூரத்துக்கப்பால் மாணிக்க கங்கையின் கரையில்
இருந்தது. நேரமோ பிற்பகல்.

பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்து நெருங்கி நின்றன.
கானகத்துக்கே உரித்தான பச்சிலைக் காற்று புழுக்கத்தோடு அவ்வப்போது
தலை நீட்டியது. பகற்பொழுதாக இருந்தாலும் பயங்கரப் பொழுதுதான் அது.

காட்டுக்குள் எங்கோ தொலை தூரத்தில் யானைகள் பிளிறும் ஓசை
எழுந்தது. காட்டு எருமைகள் சில வழியோரத்தில் நின்று எட்டிப்
பார்த்துவிட்டு, வால்களை முறுக்கி விட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தன.

அந்தக் கானகத்துத் தனிமையில்தான் தமிழ்நாட்டு வேலன்
காலங்காலமாகக் குடியிருந்து வருகிறான். கன்னித்தமிழ் பேசுவோரின் கடவுள்,
கற்பனையில் பிறந்த அற்புதச் செல்வன் அவன்.

முருகன் அழகன்; தமிழர்கள் அழகு வழிபாடு கொண்டவர்கள். அவன்
இளைஞன். தமிழர்கள் அவனைக் குமரனென்று போற்றினார்கள். அவன்
வெற்றிவேலன்; வேல் கொண்டு வெற்றி பெற்ற அவனது வீரத்தை
வணங்கினார்கள். அவன் துள்ளித் திரியும் புள்ளி மயிலோன்; தமிழர்கள்
தங்களது கலை உணர்வின் பெருமிதத்தால் அவனுடன் ஆடும் மயிலை
ஒன்றாக இணைத்தார்கள். இன்று நேற்று ரோகணத்துக்குச் சென்ற இளைஞனா அவன்! முன்பு எப்போதோ சூரபத்மனுடன் போர் தொடுப்பதற்கு மாணிக்க கங்கைக் கரையில் அவன் கூடாரம் அமைத்தானாம். போரில் வெற்றியும் பெற்றாகிவிட்டது.
உடனே அவன் அங்கிருந்து திரும்பிவிடவில்லை.

அந்தக் கானகத்தில் திரிந்த மலைநாட்டு வேடுவப் பெண் ஒருத்தி
அவன் மீது கண்வலை வீசிவிட்டாள். வெற்றிபெற்ற மாவீரன். அந்த வள்ளி
என்ற கள்ளியிடம் தோற்றுப் போய்விட்டான். பிறகு என்ன?- ரோகிணியிடம்
அகப்பட்ட இளங்கோவின் கதிதான் அந்த இளங்குமரனுக்கும்!

அவளை மணந்துகொண்டு அதே இடத்தில் தங்கிவிட்டான் அவன்.
காலையிளம் காற்றும் கானகத்துத் தனிமையும், கையில் ஒரு வேலும்,
காதலிளம் பெண்ணும் அருகில் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்
அவனுக்கு? பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அவனை நாடிச் சென்றார்கள்.
வழியில் குறுக்கிட்ட இன்னல்களையெல்லாம் கடந்து சென்று அவனுடைய
இன்னருள் பெற்றார்கள். இராஜேந்திர சோழரின் ஆட்சிக் காலத்தில்
கதிர்காமத்துக்குச் செல்வதென்றால் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.
மனிதனின் வாழ்க்கைப் பாதையை ஒத்திருந்தது அது.

அதன்மூலம் உலக யாத்திரைப் பாதையில் மனிதன் கடந்து
செல்லவேண்டிய மேடுகளையும் பள்ளங்களையும் பயங்கரத் திருப்பங்களையும்
மனிதனுக்குச் சுட்டிக் காட்டினான் முருகன். தன்னம்பிக்கையும், நெஞ்சுறுதியும்
அருளுணர்வும் இருந்தால் எப்படியும் வாழ்க்கையில் முன்னேற முடியும்
என்பதையும் அவன் மனிதனுக்கு உணர்த்தினான். இன்னும் உணர்த்திக்
கொண்டேதான் இருக்கிறான்.

அவனுடைய கோயிலுக்குச் செல்லும் காட்டுவழிப் பாதையில், யாரோ
சிலர் கள்வர்களைப் போல் திருட்டு விழி விழித்துக்கொண்டு
இருமருங்குகளிலும் ஒளிந்து நிற்கிறார்களே அவர்கள் யார்? மரத்துக்கு மரம்
கிளைக்குக் கிளை தாவும் வானரங்களைப்போல தொத்திக்
கொண்டிருக்கிறார்களே யார் அவர்கள்?

வழிபாட்டுக்கு வருகிறவர்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பவர்களா? அல்லது கொலைக் கூட்டத்தைச் சேர்ந்த கொடியவர்களா? அவர்களுக்கு இந்த இடத்தில் இப்போது என்ன வேலை?

ஒரே மரக்கிளையில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் பேச்சை, மறைந்திருந்து கவனித்தால் நமக்குச் சிற்சில விஷயங்கள் புலனாகின்றன. அவர்களும் தமிழர்களே! பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள்; முன்பு சுந்தரபாண்டியரின் படையில் இருந்தவர்கள்.

அவர்கள் கண்ணிமைக்காமல் காவல் புரிவதிலிருந்து அவர்களுடைய
மறைவிடம் எங்கோ இந்தக் கானகத்தை அடுத்துத்தான் இருக்க
வேண்டுமென்று ஊகிக்க இடம் இருக்கிறது. அவர்கள் காவல்தான்
புரிகிறார்களா? அல்லது ஒரு வேளை வருபவர்கள் மீது திடீரென்று பாய்ந்து
தாக்குவதற்காகப் பதுங்கியிருக்கிறார்களா?

அவர்கள் பேச்சிலிருந்து மேலும் சில விவரங்கள் கிடைக்கின்றன:

இளங்கோ தனது வீரர்களுடன் முன்பே ரோகணத்துக்கு
வந்துவிட்டானாம். கொள்ளை - கொலைகள் நடந்த ஊர்களிலெல்லாம்
இப்போது அவனுடைய வீரர்களின் நடமாட்டம். மிகுந்துவிட்டதால், அவன்
வந்ததிலிருந்து ஒருவிதத் தொல்லையும் மக்களுக்குக் கிடையாது. அவனுடைய
பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மக்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.

வியப்புக்கும் திகைப்புக்கும் உரிய மற்றொரு விந்தைச் செய்தியை
வெளியிடுகிறார்கள் அவர்கள். ஒரே சமயத்தில் இளங்கோ பல ஊர்களில்
காணப்படுகிறானாம்! ஒரு மனிதன் எப்படி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட இடங்களில் தோன்ற முடியும்? சித்தர்களிடம் வித்தை பயின்ற
மந்திரவாதி என்கிறான் ஒருவன்; மற்றவன் அதை மறுக்கிறான்.
அவர்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது.

ஆமாம். இவை யாவுமே இளங்கோவின் ஏற்பாடுகள். கூடியவரையில்
தன்னையொத்த உருவமுள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து அவன் மூன்று நான்கு
இடங்களுக்கு அனுப்பிவிட்டான். மக்களில் பலர் இளங்கோவின் வீரத்தை
அறிந்திருந்தார்களே தவிர, அவனை நேரில் பார்த்ததில்லை. அதை இளங்கோ
நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அமைச்சர் கீர்த்தியின் வீரர்களும் ஒற்றர்களும் அவனுடைய அந்த
ஏற்பாட்டினால் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனார்கள். வந்தவர்களில்
உண்மையான இளங்கோ யார்? அந்த இளங்கோக்களில் எவனைக் குறி
வைத்துப் பிடிக்க முயல்வது, எவனைப் பின்பற்றுவது? எவனை விட்டுவிடுவது?

மரத்தின்மீது பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவனுக்கு இளங்கோவைப்
பற்றிய பேச்சு முற்றியவுடன் கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன.
சித்தர்களிடம் இளங்கோ வித்தை பயின்றவன் என்று நம்பியவன் அவன்.

“அண்ணே! இப்படியெல்லாம் செய்கிறவன் ஞான திருஷ்டியால்
நம்முடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது?
திடீரென்று இங்கே வந்து தொலைத்தாலும் தொலைத்து விடுவான்.
எனக்கென்னவோ பயமாக இருக்கிறது’’ என்றான் மிகுந்த பதற்றத்தோடு.

இதைக் கேட்டு மற்றவன் பரிகாசத்தோடு சிரித்தான். “சித்துமில்லை;
விளையாட்டுமில்லை; உன் சித்தத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்’’
என்றான்.

அவன் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் வடக்குத் திசையில் வெகு
தூரத்திலிருந்து, “அரோஹரா’’ என்று சிம்மக் குரல் ஒன்று எழுந்தது. அதைத்
தொடர்ந்து பல குரல்கள், “அருள் முருகா’ என்று கிளம்பின.

பயந்தவன் மரக்கிளையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டு குரல் வந்த
திசையில் திரும்பினான். பயந்தவனைப் பரிகசிக்கத் துணிந்தவனோ,
“ஐயையோ!’’ என்று அலறிக்கொண்டே மரத்திலிருந்து கீழே விழுந்தான்.

பச்சை மரச் சோலைக்குள்ளிருந்து இருபது பேர்களுக்கு
மேற்பட்டவர்கள் வில், வேல், வாட்களுடன் வெளிப்பட்டார்கள். கீழே
விழுந்தவனைத் தூக்கி நிமிர்த்தி, அவனுடைய பயத்தைத் தெளிவித்து,
அவனையும் வெளியில் கொண்டு வந்தான் பயத்தை வெளியிட்டுக்
கொண்டவன். மரத்தின் உச்சியிலிருந்து மெதுவாக இறங்கி வந்த அவர்களுடைய
தலைவன், “காவடிக்கூட்டம் கதிர்காமத்துக்குப் போகிறது; பகைவர்கள்
யாருமில்லை’’ என்றான். பிறகு “வருகிறவர்களின் கண்களில் பட்டுவிடாமல்
முன்போலவே மறைந்து கொள்ளுங்கள்’’ என்று கட்டளையிட்டான்.

“இதுவும் இளங்கோவுடைய சித்து விளையாட்டாக இருந்தால்...?’’ என்று
இழுத்தான் சித்தர்களின் பக்தன்.

“எப்படியிருந்தாலும் நாம் மெதுவாய்ப் போய்க் கவனிப்போம்.
கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு எந்தத் தொல்லையும் தரக்கூடாதென்பது
அமைச்சரின் கட்டளை. நம்மைப் போலவே இந்த நாட்டுப் பௌத்தர்களுக்கும்
இது கண்கண்ட தெய்வம். வருகிறவர்களுக்குத் தொல்லை கொடுத்தால்
அமைச்சர் நம்மைத் தண்டிக்காமல் விடமாட்டார்.’’

அடுத்த சில விநாடிகளில் அந்தக் கானகம் முன் போலவே மனித
சந்தடியற்றது போல் தோன்றியது. வீரர்கள் எல்லோருமே தங்களை எவ்வளவு
அதிகமாக மறைத்துக்கொண்டு பதுங்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு
அதிகமாக மறைத்துக் கொண்டு பதுங்கினார்கள்.

பக்தர்களின் ஊர்வலம் இதற்குள் அந்த இடத்தை நெருங்கிவிட்டது.
‘அரோஹரா!’ முழக்கமும், ‘அருள்முருகா!’ குரல்களும் அந்தப் பிரதேசத்து
மரங்களையே கிடுகிடுக்க வைத்தன. ஆனால் பதினைந்து இருபது பேர்களே
அந்த ஊர்வலத்தில் காணப்பட்டார்கள். வந்தவர்களில் பெரும்பாலோருடைய
தோள்கள் பெரிய பெரிய காவடிகளைச் சுமந்துகொண்டிருந்தன. வழக்கமாக
உள்ள அளவை விட இரு மடங்கு பெரிய காவடிகள்.

வன விலங்குகளிலிருந்து தப்புவதற்காக அவர்களிடம் சில வேல்களும்
இருந்தன.

கூட்டத்தின் மத்தியில் வந்து கொண்டிருந்த ஒருவனுடைய கண்கள்
மட்டிலும் ‘அரோஹரா’ குரலுடன் சுற்றி எதையோ கண்டு கொண்ட
ஆனந்தத்தில் முருகனுடைய தரிசனத்தையே பெற்றுவிட்டவன்போல், அவன்
காவடியோடு ஆடிப்பாடிச் சுழன்றான். அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த மற்றொருவன் கண்களும் அவன் கண்களும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டன.

சிறிது தூரம் சென்றபிறகு அந்தக் கூட்டத்துக்குப் பின்னால் இருவர்
மறைந்து தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டும்
காணாதவன் போல் நடந்து கொண்டான் கூட்டத்துக்குள் இருந்தவன்.

பொழுது சாயும் வேளையில் பூசனைகள் முடிந்தன. பக்தர்கள்
ஆடினார்கள். பாடினார்கள். வெற்றிக்காக முருகன் அருளை வேண்டினார்கள்.

இரவில் அங்கேயே தங்கி உறங்கிவிட்டு, மறுநாள் காலையிலி
புறப்படவேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கொண்டு சென்ற காவடிகள்
அனைத்தும் எங்கோ ஒரு புதருக்குள் மறைந்தன. பிறகு கோயிலுக்கு
அருகிலேயே வெளியில் உறங்கினார்கள்.

உறக்கத்தோடு உறக்கமாக, காதும் காதும் வைத்தபடி எதேதோ
செய்திகளைத் தங்களில் ஒருவனிடம் கூறினான் அந்தப் பக்தர்களின்
தலைவன். தங்களைத் தொடர்ந்து வந்தவர்கள் அடிக்கடி தங்களைக்
கவனிப்பதையும் கவனித்துக் கொண்டான். பிறகு அவர்கள் தங்கள்
உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு சொல்வதையும் பார்த்து விட்டு, மெல்லக்
கூட்டத்திலிருந்து நழுவினான். அவனைத் தொடர்ந்து மற்றொருவனும்
சென்றான்.

மறுநாள் காலையில் பக்தர்களின் கூட்டம் வந்தவழியே திரும்பியது.
அவர்களின் எண்ணிக்கையில் இருவர் குறைந்ததை யாருமே
பொருட்படுத்தவில்லை. அவர்களைக் கண்காணித்தவர்களும் காணத்
தவறிவிட்டார்கள்.

திரும்பும் வழியில் வழிப்போக்கர்களைப் போல் இரு பாண்டிய
ஒற்றர்களும் அவர்களுடன் கலந்து கொண்டு சிறிது தூரம் வந்தார்கள்.
“உங்கள் பூசையெல்லாம், முடிந்ததா!’’ என்று கேட்டான் அவர்களில் ஒருவன். “ஒரு பூசையை முடிக்க வந்தோம். ஆனால் கதிர்காம வேலனுக்கு இது
போதவில்லையாம்; இன்னொரு பூசை வேண்டுமென்கிறார்; சூரசம்ஹாரம்
செய்ய வேண்டுமாம்.’’

“அதைத்தான் அவரே முன்பு செய்து முடித்துவிட்டாரே!’’


இதைக்கேட்டுக் காவடி தூக்கி வந்தவர்களில் ஒருவனான சோழநாட்டு
வீரன் பாண்டிய நாட்டு வீரனைப் பார்த்துப் பரிகாசமாய்ச் சிரித்தான்.
“சம்ஹாரம் செய்துவிட்டால் போதுமா? தமிழ்நாட்டில் விழாக்
கொண்டாடுகிறார்களாமே, அதைப்போல் இங்கேயும் கொண்டாட
வேண்டாமா? நேற்று என் கனவில் தோன்றி இதைத்தான் கட்டளையிட்டுப்
போயிருந்தார்.’’

“நீங்கள் அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’’

“உங்களுக்குச் சொந்த ஊர் கதிர்காமம்தானே? பொறுத்திருந்து
பாருங்கள். பெரிய திருவிழா அது!’’

ஒற்றர்கள் இருவரும் மெல்லக் கூட்டத்திலிருந்து விலகிக் கொண்டார்கள்.
“நேற்றிலிருந்து நாம் வீணாக இவர்கள் பின்னால் அலைந்துதான் மிச்சம்’’
என்றான் ஒருவன்.

“இவ்வளவு தூரம் நாம் போயிருக்க வேண்டாம். யாரைக் கண்டாலும்
கொடும்பாளூரானின் ஆளாக நமக்குத் தோன்றுகிறது’’ என்றான் மற்றவன்.

கொடும்பாளூர் இளங்கோவும் மல்லர் தலைவன் மாங்குடி மாறனும்
அப்போது தாங்கள் கொண்டுவந்த காவடிகளை நன்றாகப் பத்திரப்படுத்தி
வைத்துவிட்டு, காட்டுக்குள் எங்கோ நெடுந்தொலைவு நடந்தார்கள். காவடிக்
கூட்டத்தின் தலைவனாக வந்த இளங்கோவும் அவன் துணைவனான மாறனும்
எப்படியோ தலைமறைவாய்ப் போய் விட்டார்கள்.

சந்தடி செய்யாமல் வெகுதூரம் நடந்த பிறகு, ஒரு மரத்துக்குப் பின்னால்
மறைந்துகொண்டு, மாறனுக்கு ஒரு சிறு குன்றிருந்த திசையைச்
சுட்டிக்காட்டினான் இளங்கோ. மாங்குடி மாறனின் கண்கள் வியப்பால்
விரிந்தன.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,31. வீரமல்லன்

பாகம் 2 ,31. வீரமல்லன்


பொதிகைமலைச் சாரலில், பெரும்பிடுகு முத்தரையர் வசித்து வந்த
வீட்டுக்குக் கூப்பிடுகிற தூரத்தில், ஒருமலைப் பிளவின் மறைவில் சுந்தர
பாண்டியரின் அந்தரங்க மாளிகை அமைந்திருந்தது.

யாரோ எதற்காகவோ பல ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பி வைத்த
பாழடைந்த கட்டடம் அது. பௌத்தர்களுடைய பழம்பெரும் விஹாரைகளில்
ஒன்றாக இருக்கலாம். அல்லது வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும்
கொடுப்பதற்காகச் சமணர்கள் கட்டி வைத்த ‘அஞ்சினோர் புகலிட’மாகவும்
இருக்கலாம். ஒருவகையில் இப்போது அஞ்சி ஒதுங்கியவர்களின்
புகலிடமாகத்தான் பயன்பட்டது.

அதன் சற்றுச் சுவர்களின் சுதைப்பூக்கள் உதிர்ந்து, சுவர் வெடிப்புகளில்
செடி கொடிகள் மண்டிக்கிடந்தன. காற்று, மழை, கதிரொளி, கடும்பனி
யாவுமாகச் சேர்ந்து அதைக் கலகலக்க வைத்திருந்தன. என்றாலும் புகலிடம்
தேடி வந்தவர்களின் தலைகளை நசுக்கிப் புதைத்துவிடக் கூடிய அளவுக்கு
அது அவ்வளவு மோசமாக இல்லை.

சுந்தர பாண்டியர் தமது தற்காலிக ‘அரண்மனை’யான அந்த
மாளிகைக்குள் சுட்டெரிக்கும் கண்களுடன் குறுக்கு நடைபோட்டுக்
கொண்டிருந்தார்.

அவரைப் பின்பற்றி ஒருபுறம் பெரும்பிடுகு முத்தரையரும் மறுபுறம்
வீரமல்லனும் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருந்தனர். சட்டென்று
சுந்தரபாண்டியர் அங்கிருந்த உடைந்த திண்ணையில் உட்கார்ந்தார். மற்ற
இருவரையும் உட்காரச் சொல்லிப் பணித்தார்.

“சேனாபதி! ஈழத்தில் இருக்கும் நமது படைகளுக்கு ஆபத்து
வந்திருக்கிறது. கொடும்பாளூர்ப் பெரிய வேளார் மகன் மீண்டும் அங்கே
போகிறானாம். மைத்துனர் கீர்த்தி நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்.’’

பெரிய முத்தரையர் பேசுவதற்கு முன்னர் சிறிய முத்தரையன்
கொதித்தெழுந்தான். ‘பெரிய வேளாளர் மகன்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அவனுடைய மீசை துடித்து முகம் சிவந்தது.

“அரசே! எனக்கு அனுமதி கொடுங்கள். இப்போது நம்மிடம் இருக்கும்
வீரர்களை அழைத்துக்கொண்டு இன்றைக்கே கிளம்புகிறேன். என்னுடைய
முதற் பகைவன் கொடும்பாளூரான் தான். அவனை அழிக்காமல் நான் இங்கே
திரும்புவதில்லை என்று சபதம் செய்து கொடுக்கிறேன், அரசே!’’

வீரமல்லனின் கண்களிலும் பேச்சிலும் பொங்கியெழுந்த ஆத்திரத்தை
சுந்தரபாண்டியர் கூர்ந்து கவனித்துக்கொண்டார். தனிப்பட்ட முறையில்
அவர்களுக்குள் பகை இருக்க வேண்டுமென்று அவர் முன்பே ஊகித்தது
இப்பொழுது உறுதிப்பட்டது.

“வீரமல்லா! பொறு, அவசரப்படாதே’’ என்று அவனைத் தட்டிக்
கொடுத்துவிட்டு “சோழர்கள் உன்னை ஈழத்துக்கு அனுப்பவில்லை
என்பதனால் அங்கிருந்து ஆத்திரப்பட்டு இங்கு வந்து சேர்ந்தாய். அதேபோல்
நானும் உன்னை அனுப்பாவிட்டால் நீ இங்கிருந்து அவர்களிடம் போய்
விடுவாய் போலிருக்கிறதே!’’ என்று சொல்லிச் சிரித்தார்.

இதைக் கேட்டவுடன் வீரமல்லன் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டான்.
பெரும்பிடுகு முத்தரையருக்குக்கூட அரசரின் இந்தக் கேலிப்பேச்சு ‘சுருக்’
கென்று தைத்தது.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அரசே! நமக்கு அபாயம்
வந்திருக்கும்போது நாம் அதைத் தடுத்துக் கொள்ளவேண்டும் என்ற
துடிப்பால் அப்படிக் கூறினேன். அது தவறானால் என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள். தங்கள் கட்டளை எதுவோ அதன்படி நடக்கச்
சித்தமாயிருக்கிறேன்.’’

பேச்சை மாற்றி, அவனைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற
எண்ணத்தோடு, “சோழர்களிடம் உனக்குள்ள பகைமைக்கு வேறு என்ன
காரணம்?’’ என்று கேட்டார் பாண்டியர்.

பொறாமை உணர்ச்சிக்கு வேறு எந்தக் காரணமுமே தேவையில்லை
என்பதும் தனக்கு உப்பிட்டு வளர்த்தவர்களையே அது உறிஞ்சச் சொல்லும் என்பதும், தனக்கு வழி
காட்டியவர்களுக்கே அது வினைதேடச் சொல்லும் என்பதும்
சுந்தரபாண்டியருக்குத் தெரியாமல் இல்லை. அப்படிப்பட்டவனைத் தனது
அந்தரங்க மனிதனாக வைத்துக் கொள்வதிலுள்ள அபாயங்களையும் அவர்
ஓரளவுக்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அப்படிக் கேட்டு வைத்தார்.

“அரசே! எங்களுடைய பழையகால வரலாறு தங்களுக்குத்
தெரியாததல்ல. விஜயாலய சோழர் காலத்துக்கு முன்பிருந்தே தஞ்சை
மாநகரில் ஆட்சி செலுத்தியவர்கள் நாங்கள். சந்திரலேகையிலும் தஞ்சையிலும்
நாங்கள் தலைநகர்களை அமைத்துக்கொண்டு அரசாட்சி செய்து வந்தோம்.
அப்படிப்பட்டவர்களை வென்றுவிட்டு இவர்கள் எங்கள் ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்டார்கள். அன்றிலிருந்து எங்களுக்குச் சோழநாட்டில்
பெருமையில்லை; வாழ்வில்லை; சலுகைகள் இல்லை. வேண்டுமென்றே
அவர்கள் எங்களை வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள்’’ என்று நெஞ்சம்
கொதித்தான் வீரமல்லன்.

கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார் சுந்தரபாண்டியர். வீரமல்லனின்
கூற்றை அவர் சிறிதும் நம்பவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டிக்
கொண்டார்.

வீரமல்லனின் முகம் சிறுத்து தன் பேச்சை மெய்யாக்க
விரும்பியவன்போல், “கொடும்பாளூர் வேளிர்களுக்குத்தான் இப்போதெல்லாம்
அரண்மனையில் நிறைந்த செல்வாக்கு; பெரிய வேளார் வைத்ததுதான்
நாட்டில் சட்டமாக நடைபெறுகிறது’’ என்று மேலே தொடர்ந்து கூறினான்.

“வீரமல்லா! நீ முத்தரையர்கள் குலத்தில் பிறந்தவன் என்பதால் பழைய
அரசர்கள் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று சொல்லமுடியாது. அந்தப்
பரம்பரையைச் சேர்ந்த பல வீரர்கள் இப்போது சோழநாட்டில் பெரும்
பதவிகளில் இருக்கிறார்கள். ‘கண்டோர் நடுங்கும் காலன்’ என்று பெயர்
பெற்ற அரையன் ராஜராஜன் அவர்களுடைய வடதிசைச் சேனாபதியாக
விளங்குகிறார்; ஈராயிரம் பல்லவரையரோ காவிரி நாட்டைக் காக்கும் மத்திய
படைத்தலைவராக உயர்ந்திருக்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ முத்தரையர்களை நம்பி அவர்களிடம் பல்வகையான ஆட்சிப்
பொறுப்புக்களையும் கொடுத்திருக்கிறார்கள். சோழர்கள் என்னுடைய
பகைவர்கள் என்றாலும் அவர்களுடைய பரந்த ராஜதந்திரப் போக்கில் நான்
குறை சொல்லமாட்டேன். பழி வாங்கும் தன்மையை விட, அவர்களிடம்
வீரத்தையும் தகுதியையும் பாராட்டும் பண்புதான் அதிகம். வேறு ஏதாவது
காரணங்கள் இருந்தால் சொல். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு!’’

வீரமல்லன் தலை குனிந்தான். பெரும்பிடுகு முத்தரையரும்
இரண்டுங்கெட்டான் தொல்லையில் வந்து அகப்பட்டுக் கொண்டவர்போல்
விழித்தார்.

“என்ன யோசிக்கிறாய் வீரமல்லா? சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்திகூடக்
கேட்பதற்குத் தயங்கும் கேள்விகளை இந்த நாடிழந்த பாண்டியர் கேட்கிறாரே
என்று பார்க்கிறாயா? இங்கே வந்ததைவிட அங்கேயே தங்கியிருக்கலாம்
என்று யோசனையா?’’

தன் இனத்தவன் என்ற காரணத்தால் பெரும்பிடுகு முத்தரையரின்
கண்களை மறைத்திருந்த அன்புத் திரை, எங்கே பாண்டியரின் பேச்சால்
கிழிந்துவிடுமோ என்று பயந்தான் வீரமல்லன்.

“அரசர் பெருமானின் நம்பிக்கைக்கு இன்னும் நான் பாத்திரமாகவில்லை
என்று தெரிகிறது; அதுவும் என் துரதிர்ஷ்டம்தான்.’’

“துரதிர்ஷ்டமில்லை, வீரமல்லா! நீ அதிர்ஷ்டம் செய்தவன். நீ,
உன்னுடைய அதிர்ஷ்டம் என்ற ஒரே காரணத்தால் பெரிய முத்தரையரின்
அன்பைப் பெற்றிருக்கிறாய். அவர் வாயிலாக என்னிடம் நெருங்கியதால் நீ
இன்னும் உயர்ந்து விட்டாய். அதைத்தான் இப்போது சொல்ல வருகிறேன்’’
என்றார் சுந்தரபாண்டியர்.

பெரும்பிடுகு முத்தரையருக்கோ திடீரென்று எதையோ மனத்தில்
வைத்துக்கொண்டே அரசர் இப்படிப் பேசுவதாகத் தோன்றியது.
காரணமில்லாமல் அவர் எதையும் பேசுவதில்லை.

காரணமும் இருக்கத்தான் செய்தது. சுந்தரபாண்டியரிடம் தொடர்பு ஏற்பட்ட சிலதினங்களுக்கெல்லாம் அவன் அவரிடம்
நெடுநாட்களாகப் பணியாற்றி வந்த வீரர்களைப் பற்றிக் குற்றம் குறை
சொல்லத் தொடங்கிவிட்டான். விசுவாசமாக உழைத்தவர்கள் மீது
அவதூறுகளைச் சுமத்தினான். தொடக்கத்தில் சிரித்துக்கொண்டே
சுந்தரபாண்டியர் அவனுக்குச் செவி சாய்த்ததால் அவன் துணிவு எல்லை மீறி
வளர்ந்துகொண்டே வந்தது.

மற்றவர்களை மிதித்து முன்னேறிப் பாண்டியருக்கு மதியமைச்சராகப்
பார்த்தான் வீரமல்லன். பெரிய முத்தரையரின் ஆதரவை மட்டும் கொண்டு
வாய்ப்புக் கிடைத்தபோது அவன் பாண்டியரையே ஆட்டுவிக்க முயன்றான்.

பாண்டியர் விழித்துக்கொண்டார். தமது பதவியையும் அவனுடைய
தகுதியையும் அவனிடம் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் அவருக்கு
வந்துவிட்டது. அதைப் பெரிய முத்தரையரின் முன்பாகவே செய்ய
விரும்பினார்; செய்தும் காண்பித்தார்.

“வீரமல்லா, உன்னுடைய நண்பன் என்று முன்பு சொன்னாயே, அந்த
இளங்கோவைப்போல் நீயும் எதிர்காலத்தில் முடிசூடி நாடாள விரும்புகிறாய்.
உனக்கு அரச பதவியும், செல்வமும், செல்வாக்கும், கட்டளையை நிறைவேற்ற
வீரர் கூட்டமும் தேவைப்படுகின்றன. அவனோடு பழகியதால் நீ அரச
வாழ்வின் சுவையைக் கண்டுவிட்டாய். அவனைப் போலவே மாற
விரும்புகின்றாய்- அவ்வளவுதானே?’’

வீரமல்லனுக்கு வந்த ஆத்திரத்தில் சுந்தரபாண்டியரையே இரண்டு
துண்டுகளாக வெட்டி வீழ்த்தி விடலாமா என்று தோன்றியது. ‘முதல் பகைவன்
இளங்கோவல்ல! நீங்கள் தான் என்று நினைத்துக்கொண்டான் அவன்.

அடுத்தாற்போல் அவர் வேறு ஏதாவது கூறியிருந்தால் அவன்
அங்கிருந்து சரேலென்று வெளியில் கிளம்பிப் போயிருப்பான், திரும்பி
வருவதுகூட சந்தேகந்தான்.

ஆனால் அவர் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சிரித்தார்.
மெல்ல இழுத்து அணைத்துக் கொண்டார்.

“நீ விரும்புகிறபடியே நான் உன்னை அரசனாக்குகிறேன், என்
கையாலேயே நான் உனக்கு முடிசூட்டி விடுகிறேன். அதுவும் நீ எந்தக்
கொடும்பாளூரைப் பற்றி நினைத்துப் பொருமுகிறாயோ, அந்தக் கொடும்பைக்
கோனாட்டையே உன்னுடையதாக்குகிறேன்-என்ன சம்மதந்தானா?’’

புண்பட்ட உணர்ச்சி கலந்த புன்முறுவல் வெளிப்பட்டது வீரமல்லன்
முகத்திலிருந்து.

“நன்றாக நினைவில் வைத்துக்கொள்; ஒன்றுமில்லாத உன்னை ஒரு
நாட்டின் தலைவனாக்கப் போகிறேன். என்னுடைய நாட்டை நான் திரும்பவும்
கைப்பற்றிய பிறகு அடுத்தாற்போல் செய்யவிருக்கும் முதற்காரியம் அதுதான்.
உன்னுடைய தகுதியாலல்ல, உன் அதிர்ஷ்டத்தால். நீ இங்கு வந்திருக்கிறாய்.
வீணாக அச்சம் கொண்டு வீரர்களிடம் பிளவை ஏற்படுத்தாதே. இனத்தை ஒரு
காரணமாகச் சொல்லிப் பெரிய முத்தரையரை வளைக்கப் பார்க்காதே,
என்னிடமாவது நீ நன்றியோடு இருந்தால் அது உனக்குப் பலன் அளிக்கும்.’’

“எனக்கு ஒன்றிலுமே ஆசையில்லை! தங்கள் அன்பிருந்தாலே போதும்’’
என்று தணிந்து பேசினான் வீரமல்லன்.

“நானும் உனக்கு நாளைக்கே முடிசூட்டிவிட முடியாது. இடையில்
இன்னும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நமக்குக் காத்திருக்கின்றன.
என்னுடைய கடைசி வெற்றியில் உனக்கு நல்ல பங்கு உண்டு என்பதைத்தான்
இப்போது சொல்லி வைத்தேன். இப்போது நீ போய்த் தெற்கே உள்ள
சாலையில் சில வீரர்களுடன் காத்திரு. நம்முடைய மதிப்புக்குரிய விருந்தினர்
ஒருவரை இன்றையப் பொழுதுக்குள் எதிர்பார்க்கிறேன்; சகல மரியாதைகளுடன்
அழைத்து வா.’’

“விருந்தினரின் அடையாளங்கள்...?’’

“மூன்று பேர் வருவார்கள். அவர்களிடம் சிங்க இலச்சினைகள்
இருக்கும்.’’

அமைச்சர் கீர்த்தி வரப்போகிறார் என்ற மகிழ்ச்சியுடன் வேகமாக
வெளியில் விரைந்தான் வீரமல்லன். ஏற்கனவே அவர் அவனுக்கு
அறிமுகமாயிருந்ததால் அடையாளத்தைப் பற்றிக் கேட்டிருக்கவே
வேண்டாமென்று தோன்றியது. மதுரைப் புது மாளிகை விழாவின் போது அவன் அவரைச் சந்தித்திருக்கிறான்.
தஞ்சையிலிருந்த தன் தாயாரின் பொறுப்பையும் அவரிடமே விட்டிருந்தான்.

அவன் சென்றபிறகு பெரும்பிடுகு முத்தரையர் மெல்லத் தமது
தொண்டையைக் கனைத்தார்.

“உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகத் தான் அவனை
இப்போது எச்சரித்து வைத்தேன். நேர்மையானவன் என்று நம்ப முடியாது.
தந்திரசாலி. ஓரளவு பேராசைக்காரன். என்றாலும் இவனைப் போன்றவர்களின்
துணையும் நமக்குத் தேவையாக இருக்கிறதல்லவா?’’ என்றார்.

“நம்முடைய வீரர்களைப் பற்றி அவன் என்னிடம் குறை
சொல்லவில்லையே!’’

“எங்கு கூறவேண்டுமா அங்கு கூறினான். என்னிடமே சொல்லிக்
கொண்டிருந்தான். நம்முடைய துணைச் சேனாபதியையே குறைகூறும்
அளவுக்கு வந்து விட்டான். குறைகளில்லாதவர்களை நாம் எங்கே
காணமுடியும்? இவனுக்காக நாம் அவரையே பகைத்துக்கொண்டால், நாளைக்கு
இவன் செய்ததுபோல் அவர் நம்முடைய பகைவர்களின் பக்கம் சேர்ந்து
கொண்டால் நம்முடைய நிலைமை என்ன ஆவது? அதற்காகத்தான்
அவனுடைய குறைகளை அவனுக்குக் குத்திக் காட்டுகிறேன்.’’

“சிறு பையன்தான். நான் அவனுக்குப் புத்திமதிகள் கூறி
வழிப்படுத்திவிடுகிறேன்’’ என்றார் பெரும்பிடுகு முத்தரையர்.

“பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வருவதைவிட ஆசை காட்டி வழிக்குக்
கொண்டுவதுவது நல்லது. அவனிடமும் நான் பொய் கூறவில்லை. நமது
கனவுகள் நிறைவேறினால் அவன்தான் கொடும்பாளூருக்கு அரசன். உங்கள்
பெண் திலகவதியும் அதிர்ஷ்டக்காரியாக இருக்க வேண்டும்.’’

பெரிய முத்தரையருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

சற்று நேரம் சென்றபிறகு, “அமைச்சர் கீர்த்தி இங்கு வரப்போகிறாரா?’’
என்று கேட்டார். “கீர்த்தி இப்போது இந்த நாட்டிலேயே இல்லை. இதற்குள் அவர்
ஈழத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பார். அதனால்தான் நம்முடைய படைகளுக்கு
அபாயம் ஏதும் நேராதென்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.’’

‘அப்படியானால் இங்கு வரப்போகும் ஈழத்து விருந்தினர் யார்?’ என்று
கேட்க நினைத்தார் பெரும்பிடுகு முத்தரையர். சுந்தரபாண்டியரே அதைக்
கூறாமல் விட்டுவிட்டதால், அவரிடம் அதைப்பற்றிக் கேட்கும் துணிவு
முத்தரையருக்கு ஏற்படவில்லை.

தொடரும்

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,30. கண்ணீரின் காரணம் )

பாகம் 2 ,30. கண்ணீரின் காரணம் 


இளங்கோவையும் அவனுடைய வீரர்களையும் ஏற்றிச் சென்ற
படைக்கலம் தென்திசைக் கடலைக் கிழித்துக் கொணடு மிதந்தபோது,
அருள்மொழியின் சிந்தையும் அதே திசையில் சிறகடிக்கத் தொடங்கியது.
அந்தப்புரத்துப் பூங்காவில் பயமின்றித் திரிந்த வெண்புறாக்களின்
கூட்டத்துக்கு மத்தியில் அவள் நினைவிழந்ததுபோல் நடந்து கொண்டிருந்தாள்.

அருள்மொழியின் மனமும் அழகியதொரு புறாவாக மாறி கடலுக்குக்
குறுக்கே பறந்து அவன் கப்பலை எட்டிப் பிடித்தது. அதன் கொடி மரத்து
உச்சியில் அமர்ந்துகொண்டு கீழே அங்குமிங்கும் நோக்கித் தன் அன்பனைத்
தேடியது. பிறகு கப்பலைச் சுற்றிப் பலமுறை வலம் வந்தது. ஆனால் சிறகுகள் வலியெடுத்தனவே தவிர, அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கே எந்த மூலையில் என்ன செய்து கொண்டிருந்தானோ?

தேடிக் களைத்தும் காணாமல் கனத்த நெஞ்சோடு கடல் நீரில்
தலைகுப்புற விழுந்துவிட்ட உணர்ச்சியுடன் அருள்மொழியிடமே தத்தளித்துத் திரும்பி வந்தது அவள் மனப்புறா. அதை வாரி அணைத்து ஆறுதல் கூற விரும்பியவள்போல், அருகில் பறந்த புறா ஒன்றை எடுத்து அன்போடு அணைத்துக் கொண்டாள் அருள்மொழி. யாரிடமும் எதையும் வெளியிடாதவள் அந்தப் புறாவிடம் தன் மனச்சுமையை இறக்கினாள்.

“ஒரு வகையில் நீ என்னைவிட எவ்வளவோ பாக்கியசாலி! போருக்குச் செல்வதற்காக யாரும் உன்னிடம் அடிக்கடி விடை பெற்றுப் போக வரமாட்டார்கள். சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அவர்கள் போனபிறகு நீ தேம்பித் தேம்பி
அழமாட்டாய், இல்லையா?’’

தன் தலையைச் சாய்த்து அவளைப் பார்த்துவிட்டு அவளைப் புரிந்து
கொண்டது போல் தலையாட்டி வைத்தது அந்தப்புறா. “ஆமாம்!
போகிறவர்கள் திரும்பவேண்டுமே என்று தினந்தினம் ஏங்க வேண்டும். நம்
பிரார்த்தனைக்கு மனமிரங்கித் தெய்வமாக அவர்களை அனுப்பி வைத்தால், அவர்கள் பெரிய பெரிய விழுப்புண்களுடன் வந்து சேருவார்கள். காயங்கள் ஆறிவிட்டாலோ திரும்பவும் அவர்களுக்கு மற்றொரு போர்க்களம் காத்திருக்கும்! திரும்பத் திரும்ப நாம் அவர்களுக்காகச் சிரிக்க வேண்டும்; அவர்களுக்காக அழவேண்டும். சோழர் குலப்பெண்களுக்கு இருதயமே இருக்கக் கூடாது!’’

புறாவுடன் பேசிக்கொண்டே நடந்தவளுக்கு எதிரில் மரத்தின்மீது
சாய்ந்தபடியே கண்ணீரை வழியவிட்டு நின்ற ரோகிணியின் உருவம் முதலில் தெரியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் திகைப்படைந்தனர். அருள்மொழியின் கண்கலங்கி அதுவரை ரோகிணி பார்த்ததில்லை; ரோகிணியையும் அருள்மொழி அந்தக் கோலத்தில் கண்டதில்லை.

சட்டென்று தங்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு இருவரும்
ஒரே சமயத்தில் சிரிக்க முயன்றனர். அந்த முயற்சி ஒருவர் தோல்வியை
மற்றவருக்கு எடுத்துக் காட்டுவதாக இருந்ததே தவிர, இருவருக்குமே
வெற்றியளிக்கவில்லை. ரோகிணி தன் தந்தையார் தன்னிடம் இரகசியமாகச் சொல்லியிருந்த செய்தியை நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

‘எப்படியாவது இந்தக் கொடும்பாளூரானின் கொட்டத்தை அடக்கி,
அவனுக்கொரு முடிவு கிடைக்க வழி செய்துவிடுகிறேன், பார்’ என்று உறுதி
கூறியிருந்தார் அவள் தந்தை. அந்தச் சொற்கள் அவளை உறுத்திக் கொண்டேயிருந்தன. அபாயத்திலிருந்து தப்புவதற்கு அவனுக்கு வழிகளைச் சொல்லி அனுப்பிய பின்னரும் அவள் மனம் அமைதியடையவில்லை.

“என்ன ரோகிணி! கண்ணீருடன் உன்னை நான் ஒரு நாள் கூடப்
பார்த்ததில்லையே? இப்போது உனக்கு என்ன வந்துவிட்டது?’’ என்று
கேட்டாள் அருள்மொழி.

“இளவரசியாரிடமும் நான் இதே கேள்வியைக் கேட்கலாமோ?’’

கைப்புறாவைப் பறக்க விட்டுவிட்டு, அவளை அணைத்த படியே,
“சொல்லமாட்டாயா, ரோகிணி!’’ என்று கேட்டாள் அருள்மொழி.

“நீங்கள் சொல்லமாட்டீர்களா, இளவரசி?’’ என்று திருப்பிக் கேட்டாள்
ரோகிணி.

உடனே இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அந்தச் சிரிப்பில்
மலர்ச்சியில்லை. மீண்டும் தங்களது வேதனையை மூடி மறைக்கத்தான்
பார்த்தார்கள்.

“ரோகிணி, எந்த நேரத்தில் என் தந்தையார் இந்த சாம்ராஜ்யத்துச்
சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார்களோ; தெரியவில்லை.
அவர்களுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு
என்னவோ செய்கிறது. எப்போதும் எங்கேயவாது போர் நடந்து
கொண்டேயிருக்கும் அல்லது வேறு ஏதாவது துன்பங்கள் அடுக்கடுக்காக
வந்துகொண்டேயிருக்கும். அமைதியாக அவர்கள் அரண்மனையில் தங்கிய
நாட்கள் மிகவும் குறைவு. எங்களுடன் இன்பமாகப் பேசி மகிழ்ந்த நாட்களை எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம், ரோகிணி! இப்போதுகூட அவர்கள் மீண்டும் எங்கோ வடக்கே போகிறார்களாம்.’’

ரோகிணி அருள்மொழியின் பேச்சை உண்மையென்றே நம்பிவிட்டாள்.
மேலைச் சளுக்க நாட்டைப் பற்றிய வதந்திகள் ஏற்கனவே அரண்மனைக்குள் உலவிக் கொண்டிருந்தபடியால், ரோகிணிக்கு அருள்மொழியை நம்ப வேண்டியிருந்தது. “சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் குமாரத்தியாகிய நீங்களே இதற்கெல்லாம் கலங்கினால், என்னுடைய நிலைமையில் நான் உயிரோடு இருக்கலாமா, இளவரசி?’’ என்று குமுறினாள் ரோகிணி.

அருள்மொழியின் அன்பணைப்பு ரோகிணியின் மனத்துக்குள்ளே
குமுறிக்கொண்டிருந்த உண்மைகளை வெளியில் கொண்டுவந்து கொட்டிவிடும் போலிருந்தது. இருவரும் புல்தரையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள். அருள்மொழி தன் துன்பத்தை அறவே மறந்துவிட்டு ரோகிணியைப் பரிவோடு பார்த்தாள். அவள் தலையைத் தன் மடிமீது கிடத்திக்கொண்டு மெல்லத் தன் தளிர் விரல்களால் அவள் கேசத்தை அன்புடன் கோதிவிட்டாள்.

“பெண்களாய்ப் பிறந்தாலும் அரசகுலத்தில் பிறக்கவே கூடாது, ரோகிணி!
எப்படியோ நாம் பிறந்துவிட்டோம். பிறந்த பிறகு நடப்பதை நினைத்து என்ன பயன்...? ஆமாம்! திடீரென்று நீ இன்றைக்கு எதை நினைத்துக் கொண்டு கண்கலங்கினாய்?’’ என்று கேட்டாள்.

ரோகிணிக்கு அங்கே வேங்கி இளவரசன் விருந்தினராக வந்திருப்பது
தெரியும்; அவன் வந்திருக்கும் சமயத்தில் அருள்மொழி அவனோடு பேசி
மகிழாமல் தனித்து நின்று கலங்கியது விந்தையாகத் தோன்றியது.
இல்லாதிருந்தால் தன் மனத்தில் இருந்ததை ரோகிணி அவளிடம்
மறைத்திருக்க மாட்டாள்.

“என் தம்பி காசிபனையும் ரோகணத்தையும் நினைத்துக் கொண்டேன்,
அக்கா!’’ என்றாள் ரோகிணி.

“உன் தம்பிக்கு ஒரு குறைவும் வராது’’ என்று தேற்றினாள்
அருள்மொழி. “எங்கேயிருந்தாலும் அவன் பத்திரமாக இருப்பான். ஒருவேளை அவன் எங்கள் வீரர்களிடம் அகப்பட்டாலும் அவனைக் கவனமாகக் கொண்டு வந்து இங்கே சேர்ப்பார்கள்.’’

அருள்மொழியின் மெய்யான அன்பு ரோகிணியின் உள்ளத்தைத் தொட்டது. என்றாலும் அது நெகிழ்ந்து கொடுத்து உண்மையை
வெளியிடவில்லை.

“அக்கா, உங்களுடைய தமிழ் வருடப் பிறப்பின்போதுதான் எங்களுக்கும்
புத்தாண்டு பிறக்கிறது; அதை நாங்கள் எங்கள் நாட்டில் எவ்வளவு
குதூகலமாகக் கொண்டாடுவோம், தெரியுமா? பெரிய பெரிய தென்னை
மரங்களிலும் கமுகு மரங்களிலும் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வோம்.
புத்தாடைகள் உடுத்திச் சென்று, புத்தர்பிரானின் திருவடிகளுக்குப் புதுமலர்கள் தூவுவோம். நாடு நகரமெங்கும் ஒரே ஆடலும் பாடலும் கேளிக்கையுமாக இருக்கும். இந்தப் புத்தாண்டு நெருங்கும்போது எனக்குச் சென்ற ஆண்டின் நினைவுகள் வந்துவிட்டது. காசிபனை ஊஞ்சலில் வைத்து நான் என் கை ஓயுமட்டும், கால் ஓயுமட்டும் ஆட்டிவிட்டேன், அக்கா!’’

ரோகிணி கூறியதும் உண்மைதான். ஓர் உண்மையைக் கொண்டு
மற்றொரு உண்மையை அவள் மறைத்தாளே தவிர பொய்யைக் கொண்டு
மறைக்கவில்லை. மேலும் அவள் புத்தாண்டின் புதுச்சோற்றுச் சுவையையும், தேன்பாகு, தயிர்க்கட்டி, ரபனா என்ற வாத்தியத்தோடு கலந்த மெல்லிசை இவற்றைப் பற்றியும் குழந்தைபோல் சொல்லத் தொடங்கிவிட்டாள்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி, “இந்த
ஆண்டுக்கு உன் தம்பி இங்கில்லை என்பதால் விழாவை நிறுத்திவிடாதே!
அவனுக்குப் பதிலாக அம்மங்கையும் நானும் உன்னுடன் இருப்போம்’’
என்றாள்.

“இப்படிச் சொல்ல எனக்கொரு தமக்கையார் கிடைத்தது என் பாக்கியம்!’’
என்று மனம் நிரம்பிச் சொன்னாள் ரோகிணி.

“இதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கே பணியாட்களிடம் சொல்லி
ஊஞ்சல் அமைத்துவிடச் சொல்கிறேன். அங்காடி வணிகர்களைப்
புத்தாடைகளுடன் அரண்மனைக்கு வரவழைக்கிறேன். உனக்கும் வீட்டாருக்கும் வேண்டியவைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். நானும் அம்மங்கையும் அன்றைய விருந்துக்கு உன்னிடம் வந்து விடுவோம். பிறகு நீ ஊஞ்சலில் அமர்ந்துகொள். நானும் அம்மங்கையும் ஆளுக்கொரு புறமாக நின்று பாட்டிசைத்துக்கொண்டே உனக்கு அலுக்கும் வரை ஊஞ்சலாட்டுகிறோம்!’’

அருள்மொழியின் மடியில் படுத்துக் கிடந்ததே ரோகிணிக்கு மலர்
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இன்ப உணர்வைக் கொடுத்தது. சற்றுநேரம்
மெய்மறந்துவிட்டு, “ஏனக்கா! வேங்கியிலிருந்து யாரோ இளவரசர்
வந்திருக்கிறாரே, அவர்கூட உங்களுக்கு...’’ என்று இழுத்தாள் ரோகிணி.

“என்ன சொல்கிறாய், ரோகிணி’’ என்று சிறு பதற்றத்துடன் கேட்டாள்
அருள்மொழி.

“இல்லை அவர் உங்களுடைய அத்தையாரின் புதல்வர் என்று யாரோ
கூறினார்கள். அதனால்...!’’ என்று பேச்சை முடிக்காமலே மழுப்பிச் சிரித்தாள் ரோகிணி.

“அத்தையாரின் புதல்வர் தாம், அதனால் என்ன?’’

அருள்மொழியின் குரலில் தென்பட்ட பரபரப்பு ரோகிணியின்
உற்சாகத்தைக் குறைத்தது. என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“உங்களுக்கும் அவர்களுக்கும் திருமணம் நிகழக்கூடும் என்று நினைக்கிறேன்’’
என்று மென்று விழுங்கிக்கொண்டு கூறி முடித்தாள்.

“நீயாக அப்படி நினைத்துக் கொண்டிருந்தாலும் சரி, யாராவது உனக்குச்
சொல்லியிருந்தாலும் சரி, அது தவறு. நாடு இருக்கும் நிலைமையில் இப்போது என்னுடைய திருமணத்துக்குத்தானா அவசரம் வந்துவிட்டது?’’

“அப்படியானால் வேறு யாரையோ நீங்கள் உங்கள் மனத்துக்குள்
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.’’

“ஒருவரையுமே நினைக்கவில்லை. எப்போதும் என் தந்தையாரைப்
பற்றிய நினைப்புதான் எனக்கு.’’

ஒரு பெரிய பாரம் தன் நெஞ்சியிலிருந்து இறங்கியது போல் நீண்ட
பெருமூச்சு விட்டாள் ரோகிணி. “எனக்கும் அப்படித்தான் அக்கா! என் தம்பி காசிபன் என் கனவிலும் நினைவிலும் என்னை விட்டு அகலமாட்டேனென்கிறான்.’’

நேரம் சென்றது. தனது மாளிகைக்குச் சென்ற ரோகிணி மகிந்தரிடம்
அடுத்தாற்போல் வரப்போகும் புத்தாண்டுத் திருவிழாவைப் பற்றி
மகிழ்ச்சியுடன் பேசலானாள். மகிந்தரும் அவளிடம் மற்றொரு புதுச்செய்தியைக் கூறினார்.

“ரோகிணி புத்தாண்டைவிட நமக்குப் புத்தர் பிறந்த புனித தினம்
மிகவும் முக்கியமானது. அதை நாம் நாகைப்பட்டினத்தின் சூடாமணி
விஹாரத்தில் கொண்டாடப் போகிறோம். அதற்காக நாம் அடுத்த மாதம்
பிறந்தவுடனேயே ஆனைமங்கலத்துக்குச் செல்ல வேண்டும், சக்கரவர்த்தியிடம் அனுமதியும் பெற்றுவிட்டேன்!’’

“சக்கரவர்த்தி எங்கோ புறப்படப் போகிறாராமே?’’

“அதற்காகத்தான் இப்போதே கூறி அனுமதி பெற்றிருக்கிறேன். பெரிய
வேளாரிடம் சொல்லி நாம் விரும்பியபோது நம்மை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறாராம். அவர்களுடைய ஆனைமங்கலம் சோழ மாளிகையிலேயே நாம் தங்கியிருக்கலாம்.’’

ரோகிணி தன் தந்தையின் கண்களைக் கூர்ந்து நோக்கினாள்.
நாகைப்பட்டினத்துக்கு அவர் புறப்பட விரும்பியதன் காரணத்தை அவள்
நம்பவில்லை.

“இங்கேயே அதைக் கொண்டாடலாமே, அப்பா! நமக்கு வேண்டிய
வசதிகளையெல்லாம் அவர்கள் தாராளமாகச் செய்து தருவார்களே!’’

“நல்ல காலம் வரும்போது அதைத் தடுத்துப் பேசாதே ரோகிணி!
அவர்களுடைய தாராளத்திலிருந்துதான் நாம் நம்முடைய நல்ல காலத்துக்கு வழி தேடிக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார் அவர்.

ரோகிணி பதிலளிக்காது மகிந்தரிடமிருந்து விலகிச் சென்றாள்.

தொடரும்