Monday, July 14, 2014

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? 12

புத்தரின் பெயரே சாஸ்தா!


திருப்பாதிரிப்புலியூர்

இப்பொழுது கூடலூர்க்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பண்டைக்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை.

சங்கமங்கை

இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. பௌத்தராயிருந்து, பின்னர்க் காஞ்சீபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர்ச் சைவ சமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே இது பௌத்தரது ஊர் என்பதைத் தெரிவிக்கும். சங்கம் என்பது, புத்த, தர்ம சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்தப் பிக்ஷ¨களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்க மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானதென்பதைத் தெரிவிக்கின்றது.

கூவம்

இதுவும் தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூரிலும் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்த விக்கிரகம் ஒன்றைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

மதுரை

இந்த நகரத்தில் பௌத்தப்பள்ளிகள் இருந்தனவென்பதை மதுரைக் காஞ்சியில்,

‘திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும் ‘

என வரும் அடிகளுக்கு, ‘திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடைவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையும் கூட்டிக்கொண்டு தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளியும்’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதுகொண்டு அறியலாம்.

அசோக சக்கரவர்த்தி, மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்தப் பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். ஆனால், இந்த விகாரை பள்ளிகளைப்பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவை பிற்காலத்தில் கட்டப்பட்டு, நாளடைவில் கட்டியவர் பெயர் மறைந்து, அசோகரும் மகேந்திரமும் கட்டியதாகத் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். யார் கட்டியதாக இருந்தாலும், மதுரையிலும் பௌத்தர்களும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்ததுமட்டும் இதனால் உறுதிப்படுகின்றது. மதுரையில், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், ‘சிந்தாதேவி’ என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

அரிட்டாபட்டி

மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஒரு ஊர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷ, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்தமதத்தைப் பரவச் செய்தாரென்றும், அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சி வல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக்கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்து, பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கின்றது.

பொதிகை

பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகியவச்சிரபோதி (கி. பி. 661 – 730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

தஞ்சை

பாண்டி நாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்தவூரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு.  பாளி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்ததாகத் தெரிகின்றது.

திருமாலிருஞ் சோலை

‘அழகர்மலை’ என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர் திரு. V. R. இராமச்சந்திர தீக்ஷதர் அவர்கள். இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்.

வஞ்சிமாநகர்

இப்போது மலையாளதேசமாக மாறிவிட்ட கேரளதேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருள்ளவன், இந்த நகரத்தில் சிறந்ததோர் புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரத் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுவதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவான் என்பவனும், மணிமேகலையும், அறவண அடிகள் என்னும் பிக்ஷ¨வும் இந்த நகரத்திற் சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமேகலை கூறுகின்றது.

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே ‘சாத்தன் காவு’ என்றும், ‘ஐயப்பன் கோயில்’ என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். ‘சாத்தன்’ என்பது ‘சாஸ்தா’ என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, ‘சாத்தன்காவு’ என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைக் காலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தகோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் ‘ஆராமம்’ என்பர். ‘ஆராமம்’ என்றால், தோட்டம் அல்லது கா என்பதே பொருள். (தொடர்புரை 3 காண்க.)

இவையன்றியும், மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்க யாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஓர் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை.

புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்ட இந்து மதம்!

இந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்

தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும், அதன் பெரிய கொள்கைகளில் பல நாளது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக்கொள்கைமட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக்கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக்காலத்தில் நடைமுறையிலிருந்து சிறந்த கொள்கைகளை இந்துமதம் தன்னிடத்தில் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்துமதத்தின் உட் பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு, ‘அல்லா உபநிஷத்’ என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க. பௌத்த மதக்கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:-

1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது

இந்து மதம் பௌத்தமதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும். புத்தர் திருமாலின் அவதாரமாக இந்து மதத்தில் புகுத்தப்பட்ட காலம் இன்னது என்று துணிந்துகூற இயலவில்லை. பௌத்த மதத்தவராகிய அமரசிம்மர் தாம் இயற்றிய ‘அமரகோசம்’ என்னும் நிகண்டிலே, புத்தர் மாயாதேவிக்கும் சுத்தோதனருக்கும் பிறந்தவர் என்று கூறியிருக்கிறாரே தவிர, திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று கூறவில்லை. ஆனால், ‘க்ஷமேந்திரர்’ என்பார் தாம் இயற்றிய ‘தசாவதார சரித்திரத்தில்’, புத்தரைத் திருமாலின் ஒன்பதாவது அவதாரம் என்று எழுதியிருக்கின்றார். ஆகையால், அமரகோசம், தசாவதார சரித்திரம் என்னும் இவ்விரண்டு நூல்களும் இயற்றப்பட்ட காலத்தின் இடைப்பகுதியில், புத்தர் திருமாலின் ஓர் அவதாரமாகச் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று துணியலாம். இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர், முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக்கொண்டது. அன்றியும், பௌத்தரின் தாராதேவி முதலான தெய்வங்களைத் ‘திரௌபதி அம்மன்’ என்றும், புத்தரைத் ‘தருமராசன்’ என்றும் பெயர் சூட்டி ஏற்றுக்கொண்டது.

2. வேள்வியில் உயிர்க்கொலை நீக்கியது

யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிடவேண்டுமென்பது பிராமண மதத்தின் கொள்கையாக இருந்துவந்தது. கடைசியாக,. வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்த மதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக்கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டுவந்ததையும் நிறுத்திச் ‘சைவ’ உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்த மதந்தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.

3. அரசமரத்தைத் தொழுதல்

‘போதி’ என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்த காலத்தில்தான் புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது, ‘மருள் அறுத்த பெரும்போதி மாதவன்’ என்றும், ‘பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந்திருநிழற் புனிதன்’ என்றும், ‘பாசடைப்போதிப் பேரருள் வாமன்’ என்றும், ‘வாடாப்போதி மாகதப் பாசடை மாநிழல் அமர்ந்தோன்’ என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்புப் படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் ‘போதியர்’ (அரசமரத்தைத் தொழுவோர்) என்று ‘தேவாரம்’ கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு  ‘இளம்போதியார்’ என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவுகூரற்பாலது. அன்றியும், ‘புத்தர்மேல் பத்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல’ எனவும், ‘புத்த பத்தி நிமித்தமாக போதி விருட்சம் தொழுமாறு போல்’ எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகலாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்து மதம் பௌத்த மதத்தை அழித்து விட்டதெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

4. மடங்கள் ஏற்படுத்தியது

சைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத்தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு ‘மடம்’ என்றும், ‘சிம்மாசனம்’ என்றும், ‘பீடம்’ என்றும் பெயர்கள் வழங்கிவருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்தத் துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் பள்ளி அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி, நாட்டுமக்களுக்கு மதபோதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்துவந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச் சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி, ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு.

5. அத்வைதம் உண்டானது

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கராசாரியாரால் உண்டாக்கப்பட்ட ‘மாயாவாத மதம்’ என்றும் ‘ஏகான்மவாத மதம்’ என்றும், ‘ஸ்மார்த்த மதம்’ என்றும், சொல்லப்படுகின்ற ‘அத்வைத மதத்தின்’ அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற் சிறந்த ஆன்றோர் கூறுகின்றார். அத்வைத மதத்தை உண்டாக்கின சங்கராசாரியார், பௌத்த குரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று; சங்கராசாரியாரின் குரு கோவிந்த பாதர் என்றும், கோவிந்த பாதரின் குரு கௌட  பாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்த மதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக்கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலை சிறந்தவரும் ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் ‘பிரச்சன்ன பௌத்தம்,’ அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாதவாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் ‘பிரச்சன்ன பௌத்தம்’ என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தரகாண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.

மேலே காட்டிய ஐந்து கொள்கைகளும் பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்பதும், அக்கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதினின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்டது; ஆனால், பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டுவருகின்றது என்பதே. பௌத்த மதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றி பெற்றது.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்த புத்த,ஜைன மதங்கள்!

வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால்,  ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும்வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாக, தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்னும் எண்ணமுடையவர்கள். பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதிவைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும்கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும்கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதிவைத்துள்ளார்கள்.

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மையும் கொண்டவர்களான சமணர்கள் தங்கள் மதக்கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மதநூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்துவைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெரும் பாவம் என்பது சமணர்களின் கொள்கை. சமணர்களின் இக்கொள்கையை விளக்கக் கீழ்க்கண்ட வரலாறுகளே போதுமானவை.

பௌத்தர்களுக்குரிய சுல்லவக்க என்னும் பாளி மொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது :-

பௌத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் புத்ததேவரிடம் சென்று, புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற் சென்று போதித்துவருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர்மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக! என்றனர். இங்குச் சந்தம் என்பது சம்ஸ்கிருத சுலோகம். சம்ஸ்கிருத சுலோகத்தில் புத்தர் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து, நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறியவேண்டும் என்றனர்.

இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகின்றது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்துவந்தனர்.

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த கொள்கையுள்ளவர் என்பது பின்வரும் வரலாற்றிலிருந்து அறியலாம் :-

உஜ்ஜைனி தேசத்து அரசனது அவைக்களத்தில், சம்ஸ்கிருதம் கற்றுத்தேர்ந்து பெரும்புகழ் பெற்றுவிளங்கிய சித்தசேன திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப் போலவே கல்விக்கடலைக் கரை கண்டவர் என்று புகழுடன் வாழ்ந்துவந்த விருத்தவாதி முனிவர் என்னும் ஜைனத்துறவி ஒருவரும் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப்பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பின்னர், இவர் ஒருவரையொருவர் நேரில் காணும்படி நேரிட்டது. உடனே இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதில் தோற்றவர் மாணவரும், வென்றவர் குருவும் ஆவர் என்று முடிவு செய்துகொண்டு, வாது செய்யத் தொடங்கினார். அவ்வூர்ப் பொதுமக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடு நிலையாளராயிருந்தனர். சித்தசேன திவாகரர் தமது வட மொழிவல்லமையை விளக்க எண்ணி, சம்ஸ்கிருதத்தில் வாது செய்தார். விருத்தவாதி முனிவரோ, சம்ஸ்கிருதத்தில் நன்கு தேர்ந்தவராயிருந்தும், அந்த மொழியில் வாதம் செய்யாமல், நாட்டுமக்கள் பேசும் தாய்மொழியிலேயே வாதம் நிகழ்த்தினார். இவ்வாதப் போரில் வெற்றிபெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடுநிலையில் நின்றவர் முடிவு சொன்னார். ஆகவே, உடன்படிக்கைப்படி, விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் மாணவர் ஆனார்.

அதன் பிறகு, சித்தசேன திவாகரர், மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்த மாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த ஜைனமத நூல்களைச் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கக் கருதித் தமது கருத்தைத் தமது குருவான விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். ஜனங்கள் பேசியும் கற்றும்வரும் அர்த்த மாகதி பாஷையில் உள்ள நூல்களைப் பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் எழுதி வைத்து, பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தமது குரு சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டுவரையில் வாய்பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார். இவர் கி. மு. முதல் நூற்றாண்டில் இருந்தவர்.

இந்த வரலாற்றினால், ஜைனரும் பௌத்தரைப் போலவே தாய் மொழிகளின் வாயிலாகப் பொது மக்களுக்குத் தங்கள் மதக்கொள்கையைப் போதிக்கவேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பது விளங்குகின்றது.பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச்செய்யுங் கருத்துடையவர்களாய்ப் பௌத்த ஜைனர்களான சமணர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மதநூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு தமிழர்களால் மறக்கற் பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப்பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி,. அவர்களுக்குத் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்பித்துவந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற பள்ளிக்கூடம் என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. பள்ளி என்னும் பெயர்க்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று.  பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ் நாடு வருவதற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள்தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்விகற்பித்த ஆசிரியருக்குக் கணக்காயர் என்ற பெயர் சங்க நூல்களில் காணப் படுகின்றது. பின், ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், சமணர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச்செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.

சமண மதத்தார் தாய்மொழியான தேசபாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றிவைத்ததுபோல, வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள்மட்டும் படிக்க வேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்னும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப்பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அஃதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ் மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் மூன்றையும் பௌத்தரும், சிலப்பதிகாரம், சிந்தாமணி என்னும் இரண்டையும் ஜைனரும் இயற்றினர். அவர் அப்பெருமாட்டிகு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உண்டு.

நன்றி : http://fourladiesforum.com

Saturday, July 5, 2014

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? 11

பவுத்த திருப்பதிகள்!

காவிரிப்பூம்பட்டினம்

சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் ‘கவீரபட்டினம்’ என்று கூறப்பட்டுள்ளது. மிகப்பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ்) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி, அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால், அவரது தவத்துக்கு இடையூறாயிருந்ததுபற்றி அவர் அவ்விடத்தை விட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத்தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், அல்லது மகேந்திரர் என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திர விகாரை என்பவை இவர் கட்டியவைகளே யென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, ‘உவவனம்’ என்னும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கிவந்தார்கள். அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், ‘சக்கரவாளக் கோட்டம்’ என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக்கோட்டத்தினுள் ‘சம்பாபதி’ என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்தென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், ‘சக்கரவாளம்’ என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்ததென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் ‘குச்சரக் குடிகை’ என்றும், ‘முதியாள் கோட்டம்’ என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவுபூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக்கொள்ளும் படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டிடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துகொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம். ‘இரசவாகினி’ என்னும் பாளிமொழியில் உள்ள பௌத்த நூலில், சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. கி. பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுதவிக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளியில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தக் கோயில்களை அழித்து கட்டப்பட்ட வைணவ, கிறித்துவ கோயில்கள்: வரலாற்று சான்றுகள்

பூதமங்கலம்

இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டிதாசர் என்றும், வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் ‘வினய வினிச்சயம்’ என்னும் பாளி மொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.  போதிமங்கை இதுவும் சோழநாட்டில் இருந்தது. ‘சாக்கியர்தம் போதிமங்கை’ என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர்=பௌத்தர்.) இப்பெயரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை  நன்கறியலாம். இவ்வூரில் புத்தநந்தி, சாரிபுத்தர் முதலான பௌத்த தேரர்கள் இருந்தனர் என்றும், இவர்களுடன் திருஞான சம்பந்தர் (கி. பி. ஏழாம் நூற்றாண்டு) வாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. இப் போதிமங்கையும் மேற்கூறிய பூதமங்கலமும் ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், அவர்கள் அதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை.

பொன்பற்றி

இதுவும் சோழ நாட்டில் உள்ளது. இது மாலைக் கூற்றத்தைச் சேர்ந்தது. தஞ்சை ஜில்லாப் புதுக் கோட்டைத் தாலூக்காவில் உள்ளது இந்த ஊர் என்றும், தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் உள்ள ‘பொன் பேத்தி’ என்னும் ஊரே பொன்பற்றி என்பது என்றும் கூறுவர். இவ்வூரில் வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் வாழ்ந்திருந்தார்.

நாகைப்பட்டினம்

இது சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.

‘ உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய், நற்றவர்க் கிடமாகின்றது நாகையே ‘    என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர். கி. பி. 720 -ஆம் ஆண்டில், நரசிம்ம போத்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயிலைச் ‘சீனா கோயில்’ என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோ-போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். கி. பி. எட்டாம், அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில், முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டுபோய், அப்பொன்னைக்கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது வைணவ நூல்களினால் தெரியவருகின்றது. கி. பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராச இராச சோழன் காலத்தில் நாகையில் ‘ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை’ என்னும் பௌத்தப்பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீவிஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின்படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயோத்துங்கனது தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாகலின், இதற்குச் ‘சூடாமணி விகாரை’ என்று பெயராயிற்று. யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட., அவனுக்குப்பின் அரசாண்ட இராசேந்திர சோழன் செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித்தந்தான். இவன் எழுதிக் கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சி சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச்சாசனங்களுக்கு ‘லீடன் சாசனம்’ (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. (Arch. Sur. Of South India, Vol. IV, Epigraphica Indica, Vol. XXII.) இவை வெளியிடப்பட்டுள்ளன. பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டை (Pegu) பதினைந்தாம் நூற்றாண்டில் அரசாண்ட ராமாபதி ராஜன் என்பவன் அனுப்பிய பதினொரு பௌத்த பிக்ஷக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில் கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக, நற்காலமாக உயிர்  பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த ‘படரிகாராமம்’ என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப்பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் புத்ததேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச்சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி. பி. 1477 -ஆம் ஆண்டில். கி. பி. 1725 -ஆம் ஆண்டில், ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலென்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கின்றார். நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், ‘புது வெளிக் கோபுரம்’ என்றும், ‘சீனா கோயில்’ என்றும், ‘கறுப்புக் கோயில்’ என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார்.

1846-இல் இந்த நிலையில் இருந்தது.  இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள். இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள்.

நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் ‘புத்தன் கோட்டம்’ என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக்காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக் கோயில் இருந்திருக்கவேண்டுமென்றும், பௌத்தக் கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள். நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சி சாலையில் உள்ளன.

பௌத்தர்களின் தாராதேவி கோயிலே காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில்!

புத்தகுடி

இதுவும் சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஒரு ஊர். இவ்வூர் ‘செயங்கொண்ட சோழவளநாட்டுக் குறும்பூர்’ நாட்டில் இருந்ததாகக் குலோத்துங்க சோழனது செப்புப் பட்டயம் (Leiden Grant) கூறுகின்றது. இவ்வூரின் பெயரே இது பௌத்தர் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

உறையூர்

இது சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் ‘உரகபுரம்’ என்பர். பேர் பெற்ற பௌத்த ஆசாரியரும் பௌத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்த தத்ததேரர் (கி. பி. நாலாம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பௌத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.
இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.

காஞ்சீபுரம்

இந்த ஊர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனயாத்திரிகர் எழுதியிருக்கின்றார். ஆனால், அசோகர் கட்டிய தூபியைப்பற்றி மணிமேகலையில் கூறப்படவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில், ‘பைம்பூம்போதிப் பகவற்கு’ ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இந்தச் சேதியத்தைத்தான் பிற்காலத்தவராகிய யுவாங் சுவாங் என்னும் சீனர் அசோகர் கட்டியதாகக் கூறினார் போலும். இளங்கிள்ளி அரசாண்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சீபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும், அது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉவென்றும், அறவண அடிகள் தங்கியிருந்த தெரு (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர் வித்துவான் ராவ்பகதூர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அன்றியும், ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சீபுரத்தில் இருக்கின்றதென்றும், அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉவென்றும் மேற்படி அய்யங்கார் அவர்களே கூறுவர். மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சீபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. இப்பொழுதும் காஞ்சீபுரத்துக்கருகில் ‘மணிமேகலை அம்மன்’ என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பௌத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருக்குமோ என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது.

காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சீபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டார் என்றும் தெரிகின்றது. ஏழாம் நூற்றாண்டில், அதாவது 640-இல், காஞ்சீபுரத்துக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனர் காஞ்சீபுரத்தில் நூறு பௌத்தப் பள்ளிகளும் ஆயிரம் பௌத்த பிக்ஷக்களும் இருந்ததாகவும், பௌத்தப் பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கவில்லையென்பதாகவும் எழுதியிருக்கின்றார்.

காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும், பௌத்த மதம் அழிந்த பிறகு அக்கோயில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் அரசாங்க சிலா சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமாட்சியம்மன் கோயிலில் ஐந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்குங் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும், புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது. இந்தப் புத்த உருவத்திற்கு இப்போது ‘சாத்தன்’ என்று பெயர் சொல்லப்படுகின்றது. ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலில், சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன.

நன்றி : http://fourladiesforum.com